Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 515

இன்போசிஸ் நாய்ச்சண்டை : நாராயணமூர்த்தி vs விசால் சிக்கா !

1

ன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இரண்டு பிரிவாக நின்று நாய்ச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மென்சக்தியை (Soft power) உலகறியச் செய்த, நடுத்தர வர்க்கத்தினரின் கனவான இன்போசிஸ் நிறுவனத்தில் நடக்கும் குடுமிபிடிச் சண்டைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையேப் பின்னுக்கு இழுத்துவிடும் எனப் பூச்சாண்டி காட்டுகின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள்.

”நாங்கள் போற்றி வளர்த்த அறமதிப்பீடுகள் என்னாவது?” எனக் கொந்தளிக்கிறார்கள் இன்போசிஸ் நாராயணமூர்த்தி தலைமையில் திரண்டுள்ள ’நாகப்பதனி’ ஆதரவாளர்கள்.

“ஏய்… நான் சத்ரியண்டா.. அசைக்க முடியாதுடா” என்று ’நாகபதனி’ அணியினரின் கரவொலிகளுக்கிடையே அறிவித்துள்ளார் இன்போசிஸ் தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா. “சோக்கா சொன்னாண்டா” எனச் சிக்காவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஆப்பன்ஹெய்மர் என்கிற முதலீட்டு நிறுவனம்.

’சத்திரியர்கள்’ சண்டைக்கல்லவா போக வேண்டும். விசால் சிக்கா இராணுவத்தில் சேர்ந்து சியாச்சின் பனிமுகடுகளில் தனது சத்திரியப் பெருமையை நிலைநாட்டியிருக்க வேண்டும் – அல்லது குறைந்தபட்சம், லோக்கல் ரவுடியாக இருந்தாவது தனது போர்த் திறமைகளை நிரூபித்திருக்க வேண்டும். ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் தலைமைச்செயல் அலுவலருக்கும் பட்டாக்கத்திக்கும் என்ன சம்பந்தம் என ஐ.டி மக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் நாராயணமூர்த்தி புலம்பிக் கொண்டிருக்கும் ”அறமதிப்பீடுகள்” அவருக்கு எப்போது நினைவுக்கு வந்தது? அமெரிக்க விசா பெறுவதற்காக பிராடுத்தனங்களில் ஈடுபட்டு 35 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் நிலைக்கு 2013-ல் தள்ளப்பட்ட போது கூட அவருக்கு “அறமதிப்பீடுகள்” நினைவுக்கு வரவில்லை. அதே போல் விசால் சிக்கா தலைமைச்செயல் அலுவலராக நியமிக்கப்பட்டவுடன் ஆட்டோமேசன் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் எனும் எந்திர மனிதன், ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்ப நிறுவனங்களைக் கையகப்படுத்தப் போவதாக அறிவித்த போது, அந்நடவடிக்கையால் தமது ஊழியர்களில் 30 சதவீதம் பேர் வேலையிழக்கப் போகிறார்களே என்பதை நினைத்தும் கூட நாராயணமூர்த்திக்கு ”அறமதிப்பீடுகள்” குறித்த சொரணை உணர்ச்சி எழவில்லை.

நடுத்தரவர்க்கத்தின் கனவு இன்போசிஸ். சரியாகச் சொல்வதாக இருந்தால் உலகமயமாக்கலுக்கு முன் பொதுத்துறை வங்கி அல்லது அரசு வேலைகளை (இட ஒதுக்கீடு மற்றும் இடைநிலைச் சாதிகளின் அதிகரித்த ‘திறமையின்’ காரணமாக) ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்த ’அவாள்களின்’ புனித அக்கிரகாரமாக இன்போசிஸ் போற்றப்பட்டது.

எதார்த்தத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சல்லிசான விலையில் அத்துக்கூலிகளை அனுப்பி வைத்து கமிசனடிக்கும் ஆள்பிடி ஏஜெண்டு தொழிலில் (Body shop) தான் ஏராளமான வருமானத்தை வாரிக் குவித்தது இன்போசிஸ். அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், ஹெச்1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்றும் இந்தியர்களால் வேலையிழப்புகளைச் சந்தித்த உள்ளூர் அமெரிக்கர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கோரி வருகின்றனர்.

அமெரிக்காவின் கடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் குடியேற்ற கொள்கைகள் விவாதப் பொருளாக இருந்த நிலையில், குடியேற்ற விதிகளைத் தங்களுக்குச் சாதகமாக திருத்தம் செய்ய வேண்டுமென அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தரகு வேலை(Lobbying) செய்வதற்காக இன்போசிஸ் உள்ளிட்ட எட்டு இந்திய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் அமைத்துள்ளன.

லாபம் சம்பாதிக்க எந்த அளவுக்கும் இறங்கிச் சென்று சட்டவிதிகளை வளைக்கத் துணிந்த இன்போசிஸ் நிறுவனத்தின்  நாராயணமூர்த்தி தான் அரசியல்வாதிகளின் மேல் எங்கெல்லாம் ஊழல் முறைகேடு தொடர்பான புகார்கள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவதரித்து “நீதி நியாயங்களை” உபந்நியாசம் செய்பவர். “லஞ்சத்தை ஒழிக்க அதை சட்டப்பூர்வமாக்கி விடலாம்” (Why Infosys Chairman’s Advocacy of Legalizing Bribe-giving Is So Troubling) என்பது லஞ்ச ஊழலுக்கு எதிராக அன்னார் சண்டமாருதம் செய்த போது உதிர்த்த வேதவாக்குகளில் ஒன்றாகும்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் விஷால் சிக்கா

சமூகத்தில் ”திறமை இருப்பவர்கள் முன்னேறுவார்கள்” என்பது நாராயணமூர்த்தி பல்வேறு சந்தர்பங்களில் இளைஞர்களுக்கு சொன்ன வியாக்கியானம் – எனவே தங்களது நிறுவனத்தில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்கள் தகுதி திறமையின் அடிப்படையிலேயே சேர்த்துக் கொள்ளப்படுவதாக சொல்லியிருக்கிறார். இந்த தத்துவத்தின் அடிப்படையில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த கடைநிலை ஊழியர் எவரையும் தலைமைச்செயல் அலுவலராகவோ நிர்வாகத்தின் உயர்ந்த பொறுப்புகளுக்கோ உயர்த்தப்படவில்லை. நாராயணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்களால் துவங்கப்பட்ட இன்போசிஸ்-ன் உயர்நிர்வாகப் பொறுப்புகளில் சுமார் இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்திருந்தனர்.

அதியுயர் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கையகப்படுத்தி தனது வருமான ஆதாரத்தை விரிவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட போது பங்குச் சந்தை முதலீடுகளைக் கோருகின்றது இன்போசிஸ். தற்போது நாராயணமூர்த்தி தலைமையிலான ‘புரமோட்டர்களிடம்” சுமார் 15 சதவீத பங்குகள் உள்ளது – அதே நேரம், அந்நிய முதலீட்டு நிறுவனங்களிடமே இன்போசிஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன.

இந்நிலையில் மாறி வரும் தொழில் மற்றும் பொருளாதாரச் சூழலில் அந்நிறுவனத்தின் உயர்நிர்வாகப் பொறுப்புகளுக்கு ”தகுதி திறமை” அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே நியமிக்க வேண்டுமென  இன்போசிஸில் முதலீடு செய்த நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கத் துவங்கின. 2004-ம் ஆண்டில் தான் முதன் முதலாக வெளிநபர் ஒருவரை தலைமைச்செயல் அலுவலராக நியமித்தது இன்போசிஸ்.

தற்போது வெடித்திருக்கும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் பேசும் நாராயணமூர்த்தி ஆதரவாளர்கள், தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா மற்றும் சேர்மன் சேஷசாயி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ஏராளமாக சம்பளம் வழங்கப்படுவது இன்போசிஸ் நிறுவனத்தின் அறமதிப்பீடுகளுக்கு எதிரானது என பொங்குகின்றனர். ஆப்பன்ஹெய்மர் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களோ லாப நோக்கை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய நிர்வாக குழு செயல்படுவதாகவும் அதன் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவு உண்டெனவும் அறிவித்துள்ளனர். மேலும் “தகுதி திறமை” கொண்டவர்களை பணிக்கமர்த்தி நிறுவனத்தின் வளர்ச்சியை உந்தித் தள்ள வேண்டுமெனில் சம்பள விசயத்தில் கஞ்சத்தனம் பார்க்க கூடாது என்றும் இத்தரப்பினர் முன்வைக்கின்றனர்.

இன்போசிஸில் நடந்து வரும் நாய்ச்சண்டையானது நீதி நியாயத்துக்கும் லாப வெறிக்கும் இடையிலானதாக நாராயணமூர்த்தியிடம் பரிசில் பெற்ற அவைப் புலவர்களான முதலாளித்துவ ஊடகங்கள் முழங்குகின்றன. இன்னொருபுறம், திறமையான மருமகளைப் பார்த்து பழைய மாமியாருக்குப் பொறாமை என முதலீட்டு நிறுவனங்களுக்கு பக்கவாத்திய கோஷ்டிகளாக செயல்படும் முதலாளித்துவ ஊடகங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வரைந்து வருகின்றன.

ஆனால், இருதரப்பினருக்குமே நிர்வாகத்தைக் கைப்பற்றுவதைத் தாண்டி வேறு எந்த நோக்கமும் இல்லை. சண்டையின் போக்கில் இருதரப்பினருமே மாறி மாறி எதிர்தரப்பினரைக் குறித்த உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கார்ப்பரேட் புனித பசுவாக போற்றப்பட்ட இன்போசிஸின் சாயம் வெளுத்து வருவது ஒன்றே இதன் மூலம் நடந்திருக்கும் ஒரே நல்ல விசயம்.

– சாக்கியன்

மேலும் படிக்க:

விவசாயி பயிரை வளர்க்கவில்லை பிள்ளையை வளர்க்கிறான் !

0
போர்வெல் தோண்ட 40,000 ரூபாய் செலவழித்தும் தண்ணீர் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட அரவிந்தின் (புகைப்படம்) தந்தை ஆசைத்தம்பி.

டெல்டாவில மழை பெஞ்சும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்” என்றார் வேளாண் துறையைச் சேர்ந்த ஒரு இடைநிலை அதிகாரி. கடந்த சம்பா பருவத்தின் (டிசம்பர் 2015) இறுதியில் பெய்த பெருமழையால் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 1.22 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி, மகசூலுக்கு வரவேண்டிய 10 இலட்சம் டன் நெற்கதிர்கள் நாசமானதால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 1,600 கோடி ரூபாய். அந்த ஆண்டில் பெய்து கெடுத்த மழை, இந்தப் பருவத்தில் பெய்யாமல் கெடுத்துவிட்டது.

டெல்டா மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போனதைப் பிரதிபலிக்கும் நாங்குடி கிராம வயல்கள்.

டெல்டா என்றழைக்கப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் இந்த ஆண்டு 3.29 இலட்சம் ஹெக்டேர் பரப்பிலும், இம்மாவட்டங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த மேட்டூர் அணை பாசனப் பகுதிகளையும் சேர்த்து 4.65 (3.29+1.36) இலட்சம் ஹெக்டேர் பரப்பிலும் சம்பா பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போயிருக்காது. ஏனென்றால், சம்பா பயிரிடும் பரப்பு குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே, சம்பா தொகுப்புத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளை வயலுக்குள் இறங்க வைக்கும் ஒரு கவர்ச்சித் திட்டத்தை அறிவித்தது, அ.தி.மு.க. அரசு. ஆனால், நடவு செய்யப்பட்ட மொத்தப் பரப்பில், ஒரு பத்து சதவீத பரப்பிலாவது விவசாயிகள் கண்டு முதல் எடுத்திருப்பார்களா என்றால், நிச்சயமாக இல்லை.

திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கீவளூருக்கு அருகேயுள்ள நாங்குடி கிராமத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட 300 ஏக்கரில், ஒரு பத்து ஏக்கரில் அறுவடை நடந்தால் அதிசயம் என்கிறார்கள் அக்கிராம மக்கள். அந்தப் பகுதி விவசாயம் முழுவதும் வடகிழக்குப் பருவ மழையையும், வெண்ணாற்று வாய்க்காலில் வரும் நீரையும் நம்பித்தான் நடைபெறுகிறது. நிலத்தடி நீர் உப்புத் தன்மை கொண்டதாக இருப்பதால், அப்பகுதியில் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறுகள் கிடையாது.

அதே நெடுஞ்சாலையில் கீவளூருக்கு முன்பாக, வடக்குத் திசையில் ஐந்தாறு கிலோமீட்டர் உள்ளே சென்றால் அமைந்திருக்கும் வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த நேரு நகர் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு ஓடம்போக்கி ஆறையும், அதிலிருந்து பிரியும் வாய்க்காலையும் ஒட்டி அமைந்திருக்கிறது. ஆறும் வாய்க்காலும் வறண்டு போய்க்கிடப்பதால், அந்தப் பகுதியில் நடவு நட்ட வயல்களில் எல்லாம் ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன.

‘‘ஒரேயொரு மழை பெய்தா போதும், இந்தப் பயிரைக் காப்பாற்றிவிடுவேன்’‘ என நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் கீவளூர்−நேரு நகரைச் சேர்ந்த வல்லரசன்.

“ஒரு மழை பெய்தால், ஒன்றரை ஏக்கர் குத்தகை நிலத்தில் வளர்ந்து நிற்கும் பயிரை ஓரளவிற்காவது காப்பாற்றி விடுவேன்” என்றார் நேரு நகரைச் சேர்ந்த வல்லரசன் என்ற இளைஞர். நான் அவரைச் சந்தித்தது ஜனவரி 15-இல்; ஜனவரி 28-இல்தான் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறினார், விவசாயத் துறை அதிகாரி. வல்லரசனின் நம்பிக்கையும், அவரது பயிரும் என்னவாயிருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை.

பத்து ஏக்கர் குத்தகை நிலத்தில் மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்த நேரு நகர் வல்லரசனுக்கு, அடுத்த மழையை நம்பியிருக்கும் பயிர்கள் சாவியாகாமலிருந்தால் 50,000 ரூபாய் தேறும்; மழை இல்லையென்றால், அந்தச் சொற்பத் தொகையும்கூடக் கிடைக்காது. வயலில் போட்ட முதலீடு மொத்தமும் நட்டம்தான்.

2.5 ஹெக்டேர் குத்தகை நிலத்தில் மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து நட்ட பயிர்கள் காய்ந்து போனதாகக் கூறுகிறார், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குழிமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி. இந்த நட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டான் ஆசைத்தம்பியின் மகன் அரவிந்த்.

அகால மரணமடைந்த அரவிந்தின் வயது இருபத்தைந்து. சம்சாரி வாழ்வைத் தொடங்க வேண்டிய வயதில், அவன் வாழ்வு முடிந்து போனது. தகவல் தொழில்நுட்ப அறிவியலில் பட்டயப் படிப்பு முடித்திருந்த அரவிந்த், விவசாயத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக வேறு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவன் விரும்பிய தொழில் அவனை வாழவைக்கவில்லை.

இப்படி ஒவ்வொரு குறு, சிறு விவசாயியின் தலையிலும் இருபத்தைந்தாயிரம் தொடங்கி இரண்டு இலட்சம், மூன்று இலட்சமெனக் கடன் சுமை இந்த ஆண்டில் மட்டும் ஏறியிருக்கிறது. நாங்குடி கிராமத்தில் 100 ஏக்கரில் பயிர் செய்யும் ஜீவானந்தம் போன்ற பெரிய பணக்கார விவசாயிகளும் இந்த வறட்சியால் நட்டமடைந்திருக்கிறார்கள் என்றாலும், சிறு, குறு, குத்தகை விவசாயிகளின் பாடுதான் மிகவும் பரிதாபகரமானது. தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் இறந்து போன டெல்டா மாவட்ட விவசாயிகளின் பட்டியலைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் சிறுவிவசாயிகளாகவே இருப்பது தற்செயலானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

போர்வெல் தோண்ட 40,000 ரூபாய் செலவழித்தும் தண்ணீர் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட அரவிந்தின் (புகைப்படம்) தந்தை ஆசைத்தம்பி.

விவசாயிகளின் தற்கொலைக்கும் அதிர்ச்சி சாவுகளுக்கும் இந்தக் கடன் சுமை ஒரு காரணம் என்றாலும், இந்தப் பொருளாதார விவகாரத்தைத் தாண்டியும் உணர்ச்சிகரமான காரணிகளும் உள்ளன. “விவசாயி பயிரை வளர்ப்பதில்லை, பிள்ளையை வளர்க்கிறான்” என்று அந்த உணர்ச்சியை எடுத்துச் சொன்னார், வல்லரசன்.

இதோ, வல்லரசனின் கதையைக் கேளுங்கள். அந்த உணர்ச்சியை நாமும் புரிந்துகொள்ள முடியும். வல்லரசனுக்குத் தந்தை கிடையாது. அவரது தாய்க்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்த சகோதரர் மாற்றுத் திறனாளி, இரண்டாவது வல்லரசன், கடைசிப்பிள்ளை சந்திரபோஸ். கீவளூரில் உள்ள பெரிய அக்ஷய கோவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறது, அவரது குடும்பம்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கடனை இந்த ஆண்டு விளைச்சலைக் கொண்டு ஈடுகட்டிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த வல்லரசனுக்கு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதும், அரசு அறிவித்த சம்பா தொகுப்புத் திட்டமும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குத்தகைக்கு எடுத்துள்ள பத்து ஏக்கர் நிலத்திலும் பயிர் செய்வது என முடிவு செய்த வல்லரசன், துணைக்குத் தனது தம்பி சந்திரபோஸை அழைத்தார்.

இரண்டு முதுகலைப் பட்டப் படிப்பும், ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்பும் முடித்துத் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த சந்திரபோஸ், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விவசாயத்திற்குத் திரும்பினார். பத்து ஏக்கரிலும் பயிர்கள் முளைத்து வந்துகொண்டிருந்த நிலையில், காவிரியில் தண்ணீர் வருவது நின்று, ஓடம்போக்கி ஆறு வறண்டு போனது. பருவ மழையும் ஏமாற்றிவிட்டது. 10 ஏக்கரில் ஒன்றரை ஏக்கரில் வளர்ந்து நின்ற பயிர்கள் மட்டும்தான் கொஞ்சம் நம்பிக்கை தருவதாக இருந்தன. அந்தப் பயிர் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என முடிவு செய்த இரண்டு சகோதரர்களும் துணிந்து ஒரு முடிவை எடுத்தனர்.

ஓடம்போக்கி ஆறில் ஊறும் தண்ணீரை டீசல் இன்ஜினை வைத்து இறைத்து, ஹோஸ் பைப் மூலம் எடுத்துவந்து பயிரைக் காப்பாற்றுவது என்பதுதான் அந்த முடிவு. இது எளிதான காரியமல்ல. ஓடம்போக்கி ஆற்றுக் கரையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தள்ளியிருக்கிறது அந்த ஒன்றரை ஏக்கர் நிலம். அத்துணை தொலைவிற்கு ஹோஸ் பைப் தேவை. மேலும், டீசல் என்ஜின் செட், அதற்கான டீசல் எனச் செலவும் எகிறிப் போகும்.

குத்தகை பாக்கி அனைத்தையும் உடனடியாகக் கட்டச் சொல்லி கீவளூர்−நேரு நகரைச் சேர்ந்த குத்தகை விவசாயிகளுக்கு இந்து அறநிலையத் துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸ்

செலவைப் பற்றி அந்தச் சகோதரர்கள் கவலை கொள்ளவில்லை. பயிரைக் காப்பாற்ற வேண்டும், அதற்குத் தண்ணீர் வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கவலையாக இருந்தது. அவர்களிடம் சொந்தமாக டீசல் என்ஜின் இருந்தது. ஓடம்போக்கி ஆற்றுக்கும் அவர்களின் வயலுக்கும் இடையே இருந்த வயல்கள் அனைத்திலும் பயிர்கள் காய்ந்து போய்விட்டதால், ஹோஸ் பைப்புகளின் வழியாகத் தண்ணீரைக் கொண்டுவருவதிலும் பிரச்சினையில்லை. ஆனால், ஆற்றில் தண்ணீர் ஊறும் போது இறைக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுக்குச் சவாலாக இருந்தது.

இதனால் சகோதரர்கள் இருவரும் மாறிமாறி 24 மணி நேரமும் ஆற்றின் கரையிலியே காத்துக்கிடந்தனர். தங்களால் முடியாதபோது, ஒரு கூலியாளை அமர்த்தினார்கள். ஒரு நாளல்ல, இரண்டு நாள் அல்ல, இப்படி பதினைந்து நாட்களுக்கு ஆற்றில் தண்ணீர் ஊறும்போது, அதனை எடுத்துப் பயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஓடம்போக்கி ஆறில் தண்ணீர் ஊறுவது நின்றுபோனது.

“ஒரேயொரு மழை வந்தால் போதும், இதுகள காப்பாற்றிவிடுவேன்” என அந்தப் பயிரைக் காட்டி வல்லரசனும் சந்திரபோஸும் கூறியபோது, ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கம் மட்டுமே அவர்களது முகத்தில் தெரிந்தது.

தற்கொலை செய்து கொண்ட அரவிந்தும் பயிர்களைக் கருகி விடாமல் காப்பாற்ற புதிதாக இரண்டு போர்வெல்லைத் தோண்டினார். அவரது தந்தை ஆசைத்தம்பி தடுத்தும் கேளாமல், புதிய போர்வெல் தோண்ட 40,000 ரூபாய் செலவழித்தார். இரண்டிலும் தண்ணீர் கிடைக்கவில்லை, பயிரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த வேதனையில்தான் பூச்சிமருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார், அரவிந்த்.

பெத்த பிள்ளையைக் காப்பாற்ற யாரும் கணக்குப் பார்ப்பதில்லை. அதுபோலத்தான் விவசாயிகளும். மற்ற தொழில் செய்பவர்கள் கடன்பட்டு நொடித்துப் போவதற்கும், ஒரு விவசாயி மேலும் மேலும் கடன்பட்டு நொடித்துப் போவதற்கும் இத்தகைய வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையிலும் வல்லரசன் உள்ளிட்டு, நேரு நகரைச் சேர்ந்த குத்தகை விவசாயிகளுக்குப் பழைய குத்தகையை உடனடியாகக் கட்டச் சொல்லி இந்து அறநிலையத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. குத்தகை பாக்கியையும் கடனையும் எப்படி அடைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டேன். “கஷ்டம்தான் சார்… கடன்காரன் வந்து வீட்டு வாசல்படியில் நின்று கத்தும்போது நாண்டுகிட்ட சாகலாம் போலத் தோணும். வேறு வேலைக்குப் போவோம், அல்லது வீட்டை விற்று, கடனை அடைத்துவிட்டு வாடகை வீட்டுக்குப் போவோம்” என அண்ணனைத் தேற்றிவருகிறேன் என்றார், சந்திரபோஸ்.

நம்பிக்கையும் எதார்த்தமும் ஒத்துப் போவது மிகவும் அரிதானது. கீவளூருக்கு அருகிலுள்ள திருவாரூரிலும் நாகப்பட்டினத்திலும் மாற்று வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவு. திருப்பூருக்கு வேலை தேடிப் போன நேரு நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சுவற்றில் அடித்த பந்து போல, வேலை கிடைக்காமல், போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் தங்களின் உழைப்பு மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக எதிர்காலம் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைதான் விவசாயிகளின் மரணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறதேயொழிய, அரசு அறிவித்திருக்கும் நிவாரணமோ, அவர்கள் போடும் இலவச அரிசியோ அல்ல.

நுண்கடன் நிறுவனங்கள் : தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள் !

0
நுண்கடன் வலைக்குள் சிக்கியிருக்கும் கீவளூர்-நேரு நகரைச் சேர்ந்த பெண்கள்.

நுண்கடன் நிறுவனங்கள் – மகளிர் சுய உதவிக் குழுக்கள்: தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள் !

நாகை மாவட்டம் கீழ்வேளுர் வடக்குவெளி கிராமம். சுமார் 200 தலித் குடும்பங்கள் மட்டும் வாழும் இக்கிராமத்தினர் அனைவரும், இங்குள்ள கோயில் நிலங்களை நீண்டகாலமாகக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2015-டிசம்பரில் பெய்த பெருமழையில் பகுதியளவு மகசூலைப் பறிகொடுத்த இப்பகுதி விவசாயிகள், நடப்பு வறட்சியில் முழு விவசாயத்தையும் பறிகொடுத்துவிட்டுப் பரிதாபமாக நிற்கிறார்கள்.

“ஒவ்வொரு வருசமும் புதுநெல் அரிசியில்தான் பொங்கல் வைப்போம். அடுத்தநாள் கறிசோறு ஆக்குவோம். இந்த வருஷம் புது அரிசியும் இல்ல. பொங்கலும் இல்ல. கறியும் இல்ல. சாம்பார் சோத்துக்கே வழியில்லைங்க” என்று கண் கலங்குகிறார் 63 வயதான மணி என்ற விவசாயி.

“போன அறுவடையில் கிடைத்த நெல்லை வைத்து இந்த மாதத்தை வேண்டுமானால் சமாளிப்பாங்க. அதற்குப் பிறகு ரேசன் அரிசியிலதான் உயிர்வாழ முடியும். வேற வழியில்ல” என்கிறார் பக்கத்து கிராமத்தின்  விவசாயி  ஜீவானந்தம். நாகை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வறட்சியை கீழ்வேளூர் ஒன்றியம் பிரதிபலிக்கிறது.

“அடுத்த விவசாயம் செய்வதற்கு வரவிருக்கும் பருவமழைக்காக பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரையில் இந்த வறட்சியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?” என்ற கேள்விக்கு பெண்களிடமிருந்து வரும் ஒரே பதில் “தெரியலைங்க” என்பது மட்டும்தான். “எங்களுக்கு தெரிஞ்சது விவசாய வேலை மட்டும்தான். வேற வேலைக்குப் போகணும்னா இனிமேல் அதை பழகிட்டுத்தான் போகணும்” என்கிறார்கள் ஊர் மக்கள்.  தங்கள் வாழ்க்கையின் ஒரே ஆதாரமான விவசாயம் பொய்த்துப் போனதால், இன்று தெருவில் வீசியெறியப்பட்ட குப்பையாகச் சீரழிந்து கிடக்கிறது இவர்களின் வாழ்க்கை.

நுண்கடன் நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கான தவணையை வாராவாரம் கட்டுவதற்குத் திணறித் திண்டாடி நிற்கும் கீவளூர்-நேரு நகரைச் சேர்ந்த வள்ளி.

சராசரியாக, ஒரு ஏக்கரில் நெல் பயிரிட 25,000 ரூபாய் செலவாகிறது. இதில் நேரடி விதைப்பிற்கு 2,000 ரூபாய், எந்திர நடவுக்கு 1,000 ரூபாய், களைக்கொல்லிக்கு 600 ரூபாய் – என அரசு தரும் மானியங்களைக் கழித்தாலும், ஏக்கருக்கு 20,000 ரூபாய்க்கு மேல் விவசாயிகள் கையிலிருந்து செலவழித்தாக வேண்டும். “1,000 ரூபாய் செலவழித்து பட்டா, சிட்டா, அடங்கல் வாங்கிட்டு பயிர்க் கடன் கேட்டுக் கூட்டுறவு வங்கிக்கு ஓடினால், நாலுநாள் அலையவிட்டு அஞ்சாவது நாளில் 10 பேருக்கு மட்டும் கொடுத்துட்டுப் பணமில்லைன்னு கடையை மூடிருவான். அதன் பிறகு ஸ்டேட் பேங்க் மேனேஜரிடம் கெஞ்சினால், ஏக்கருக்கு 8,000 ரூபாய்தான் தருவாரு. மீதிப் பணத்தை மாத வட்டிக்கோ, மைக்ரோ பைனான்சிலோ வாங்கிச் சமாளிப்போம்” என்று விவசாயம் செய்வதற்கு தாங்கள் படும்பாட்டை விவரிக்கிறார் வள்ளி என்ற பெண் விவசாயி!

பயிர்க் கடனாக ஏக்கருக்கு 25,000 ரூபாய்வரை கடன் தரலாம் என்பது பொதுவிதியாக இருந்தாலும், நெல் விவசாயம் லாப உத்திரவாதம் இல்லாதது என்பதால் 10.000 ரூபாய்க்கு மேல் எந்த வங்கியும் பயிர்க் கடன் தருவதில்லை. சிறு, குறு விவசாயிகளுக்கு வெறுங்கையை விரிக்கும் கூட்டுறவு வங்கிகள், பணக்கார விவசாயிகளுக்கும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கும் பல இலட்சங்ககளை பயிர்க் கடனாக வாரிக் கொடுக்கத் தவறுவதில்லை. இதன் மூலம் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகளைக் கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ் கும்பலிடம் திட்டமிட்டே தள்ளிவிடுகிறது அரசு.

ஈக்விடாஷ் என்ற நுண்கடன் நிறுவனத்தில் 30,000 ரூபாய் கடன் வாங்கிய ஈஸ்வரி குடும்பம், தங்களது 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருக்கிறது. “வாங்குன பணத்தையெல்லாம் நிலத்துலத்தான் போட்டோம். வர்ற வருமானத்துல கடனை அடைச்சுரலாம்னு மூக்குத்தி, தோடுகளை வித்து 21 தவணை அடைச்சுட்டோம். போனவாரத் தவணை கட்ட கையில காசில்ல. 420 ரூபா தவணையைக் கட்டினாத்தான் போவேன்னு எங்களை கூட்டி உக்கார வச்சுட்டான். என்ன மாதிரி நாலுபேரு காசில்லாம அழுவுறதப் பாத்துட்டு அக்கம் பக்கத்துக்காரங்க கொடுத்து உதவுனாங்க. அடுத்த தவணைக்கு என்ன ஆகுமோ தெரியல” என்கிறார் கண்களில் பீதியுடன்!

கடன் தவணையைக் கட்டுவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை அடகு வைக்கிறோம் எனக் கூறும் திருவாரூர் மாவட்டம், கரப்பூர் கிராம விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.

குடவாசல் அருகிலுள்ள பரத்தியூர் கிராமத்தின் வீ.கீதா, விவசாய செலவுகளுக்காக தனது நிலத்தை முத்தூட் பைனான்சில் ஈடுவைத்து 25,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு மாதவட்டி கட்டமுடியாத நிலையில், கிராம விடியல் என்ற நுண்கடன் நிறுவனத்தில் 15,000 ரூபாய் கடன்பெற்று முத்தூட் கடனுக்கு வட்டி கட்டியுள்ளார். “இப்போ வைத்த விவசாயம் கருகிப்போனாலும், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியும், தவணையுமா மாதம் 2,500 ரூபாய் நாங்க கட்டியாவனும். அதுக்கு இந்த பைனான்ஸ்காரங்களையும், மாத வட்டிக்காரங்களையும் விட்டா வேற வழியில்ல எங்களுக்கு” என்று தனது எதார்த்த வாழ்க்கையின் அவலத்தை விளக்குகிறார் கீதா.

திருவாரூர் மாவட்டம் கரப்பூர் கிராமத்தின் 50 வயதான முத்துலட்சுமியோ, தான் “சுய உதவிக்குழுவில் வாங்கிய கடன் தவணைக்காக, திருமணச் சீராகத் தனது பெற்றோர் போட்டுவிட்ட மூக்குத்தியை 7,000 ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், இனி வீட்டிலுள்ள சில்வர், பித்தளை பாத்திரங்களை உள்ளூர் அடகுக்கடையில் விற்றால்தான் அடுத்தடுத்த தவணையைக் கட்டமுடியும்” என்று கூறுகிறார்.

கீழ்வேளூர் ஒன்றியத்தில் மட்டும் இதுபோல 160 குழுப் பெண்கள் ஈக்விடாஷ் நிறுவனத்தின் கடன் வலையில் சிக்கியுள்ளனர். ஈக்விடாஷ்,  கிராம விடியல், ஹெச்.எஃப்.சி.,  போன்ற நிறுவனங்கள் திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டும் 5,000 குழுக்கள் மூலம் ஒரு லட்சம் பெண்களைத் தங்களது கடன்வலையில் சிக்க வைத்துள்ளன. இந்த நுண்கடன் நிறுவனங்களைத் தனியார் சிறு வங்கிகளாக (SMALL BANKS)  ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது. சிறுவிவசாயிகளுக்கு 8,000 ரூபாய்க்குமேல் பயிர்க்கடன் தரமறுக்கும் பொதுத்துறை, தனியார் வங்கிகள், இந்தத் தனியார் நிறுவனங்களில் பலநூறு கோடிகளை முதலீடு செய்துள்ளன. உதாரணமாக, தனியார் பயிர்க் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., ஈக்விடாஷ் நிறுவனத்தில் ரூ.105 கோடியை சமீபத்தில் முதலீடு செய்துள்ளது. நேரடியாக விவசாயிகளுக்கு கடன்கொடுத்துக் கிடைப்பதைவிட, அதிக வட்டியும், அசல் உத்தரவாதமும் இருப்பதுதான் இந்த முதலீடுக்குக் காரணம்.

நுண்கடன் வலைக்குள் சிக்கியிருக்கும் கீவளூர்-நேரு நகரைச் சேர்ந்த பெண்கள்.

இவை தவிர, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்தும் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களையும் இயக்கி வருகிறார்கள். கிராமத்துப் பெண்களை விவசாய வேலைகள் தவிர்த்து தையல், சிறுவியாபாரம் போன்ற  சுயவேலையில் ஈடுபடுத்தும் நோக்கில் அமலாகிவரும் இத்திட்டத்தில், குழுப் பெண்களுக்கு வங்கிகளில் கடன்வசதி செய்து தருகிறார்கள். இவ்வாறு, நாகை மாவட்டத்தில் மட்டும் 15,000 சுயஉதவிக் குழுக்களில்  2,33,400 பெண்கள் இணைந்துள்ளதாக மாவட்டப் புள்ளிவிவரம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகக் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்குவது ரூ.4,000 கோடி என்று கூறுகிறது தமிழக அரசு.  ஆனால், மகளிர் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்களுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கியதோ 7,600 கோடிரூபாய்.

நேரடியாக விவசாயத்திற்கு வழங்கும் கடனை விட,  விவசாயமற்ற வேறுவகையினங்களுக்குக் கடன் வழங்குவதிலேயே அரசு தீவிர அக்கறை காட்டிவருகிறது. இதன் விளைவாகவே, விவாயிகள் தங்கள் சராசரி வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மைக்ரோ பைனான்ஸ், சுயஉதவிக் குழு, கந்துவட்டி கும்பலின் கடன்வலையில் சிக்கிவிடுகின்றனர்.இந்தக் கடன் நெருக்கடிதான் டெல்டா விவசாயிகளின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

டெல்டா மாவட்ட வறட்சி மற்றும் விவசாய மரணங்கள் குறித்து ஆய்வு செய்த உண்மை கண்டறியும் குழுவொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்டுபோன ஒவ்வொரு விவசாயியும் நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து 120% வட்டிக்குக் கடன் வாங்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது.

டெல்டாவில் எழவு விழுந்த பிறகு, பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதுபோல, கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றுவதாக அறிவித்த தமிழக அரசு, நுண்கடன் நிறுவனங்கள் உள்ளிட்டுத் தனியாரிடம் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் குறித்துக் கண்டுகொள்ளாமல் நழுவிக் கொண்டுவிட்டது. விவசாயிகள் செத்தாலும், தனியாரின் முதலீடுக்கும் இலாபத்திற்கும் பங்கம் வந்துவிடக் கூடாது எனக் கருதும் இந்த அரசுதான் மக்கள் நல அரசாம்!

  • மாறன்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2017

ரோஹித் வெமுலா முதல் நஜீப் வரை : தீவிரமடையும் பார்ப்பன பாசிசம்

0
கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்

17 ஜனவரி 2016, ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பைச்((Ambedkar student Association) சேர்ந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா பார்ப்பன பாசிசத்துக்கு பலியான நாள். முன்னர் சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை, பின்னர் ரோஹித் வெமுலாவின் மரணம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கைது என்ற கல்விக்கூடங்களின் மீதான இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதல் இப்போது மேலும் தீவிரமடைந்து பல்வேறு கல்வியிடங்களிலும் தன் தலையைக் காட்டுகின்றது. மூன்று மாதங்களுக்கு முன்னர், ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பு ஏபிவிபி-யால் தாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது அடுத்த நாள் காணாமல் போயுள்ளார். இவ்வாறு நாட்டை இறுகப்பற்றி வரும் பார்ப்பன பாசிசத்தையும், உயர்கல்வி நிறுவனங்களில் ஜனநாயகத்திற்கான வெளி குறைந்து வருவதையும் எதிர்த்துக் கண்டனப் பேரணி ஒன்றை 17 ஜனவரி 2017 அன்று அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சென்னை ஐ.ஐ.டி-யில் ஒருங்கிணைத்திருந்தது. இக்கண்டன பேரணியில் 45 பேர் கலந்துகொண்டனர்.

மாலை 5:15-க்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலில் பேசிய ஆராய்ச்சி மாணவர் அனைவரையும் வரவேற்ற பின்னர், ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கான நீதிக்கான போராட்டத்தைப் பற்றி பேசினார், “ஒரு வருடம் கடந்த பின்னும் கூட ரோஹித்தின் மரணத்திற்கு காரணமான பாஜக-வின் ஸ்மிருதி இராணி, பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ராமச்சந்திர ராவ் மீதோ துணைவேந்தர் அப்பா ராவ் மீதோ சம்பந்தப்பட்ட ஏபிவிபி மாணவர்கள் மீதோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு நீதிகோரும் நம் போராட்டத்தில் இன்னும் பெரிதும் அவநம்பிக்கையே நிறைந்துள்ளது. மேலும், நஜீபைக் கண்டுபிடிப்பதிலும் பெரிதும் மர்மம் நீடிக்கிறது. டெல்லிக் காவல்துறை தன் விசாரணையைத் தீவிரப்படுத்தக் கோரி நஜீபின் தாயார் பேரணி சென்ற போது, அவர் இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டார். மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் நாட்டின் பல்வேறு உயர்கல்வி நிலையங்களிலும் இப்போது அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. இந்துத்துவத்தின் இத்தகைய தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும், ரோஹித்தின் மரணத்துக்கு நீதியைப் பெறவும் இந்நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்கள் தீரவும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.”

மாணவர்கள் பேரணி

பின்னர் பேசிய ஐந்தாம் ஆண்டு பொறியியல் மாணவர் “மாணவர்கள் மீது தொடுக்கப்படும் இந்த தாக்குதல்களை வெறும் சமூகரீதியான தாக்குதல்களாக மட்டும் பார்க்கக் கூடாது. இங்கு பொருளாதாரத் தளத்திலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விழுப்புரம் எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலைச் செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் மிக அதிகமான கட்டணமுந்தான்.” அங்கு வந்திருந்த ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு முன்னும் பின்னும் அங்கு நடந்து வருவன பற்றி பேசினர். இன்னொரு மாணவர், அப்போது ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்து வந்த ரோஹித் நினைவு தின நிகழ்ச்சியில் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததைத் தெரிவித்தார். “ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு பின், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மணவர்களைக் கைது செய்த பின், பாஜக அரசும் அதன் சார்பான தேசிய ஊடகங்களும் ‘தேசியவாத – தேசவிரோத’ என்ற போலி விவாதத்தைக் கட்டமைத்தன. ஆனால் இவர்கள் சொல்லும் தேசமானது, பார்ப்பனிய ஒற்றைக் கலாச்சார இந்து-இந்தி-இந்துராஷ்ட்ரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இது உண்மையில் ‘பார்ப்பனிய – பார்ப்பனியத்திற்கு எதிரான’ என்ற விவாதம் தான் என்பதை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இப்போது கூட பண மதிப்பிழப்பினை நியாயப்படுத்தும் மோடி அரசு இத்திட்டத்தை விமர்சிப்பவரை எல்லாம் கருப்புப் பணம் வைத்திருப்போர் எனப் பழிபோடுகிறது. ‘தூய ஆட்சி செய்வோர் – கருப்புப் பணம் வைத்திருப்போர்’ என்ற விவாதத்தை உருவாக்குகிறது. ஆனால் உண்மையில் அந்த விவாதத்திற்குள் ஒளிந்திருப்பது என்ன?”

இவ்வாறு மாணவர்கள் பேசிய பின் பேரணி புறப்பட்டது. “மனுவாதத்திடமிருந்து ஆசாதி(விடுதலை)!” “பார்ப்பனியத்திடமிருந்து ஆசாதி!”, “ஆர்.எஸ்.எஸ். ஒழிக!”, “பாஜக ஒழிக!” “இன்குலாப் ஜிந்தாபாத்!” ஆகிய முழக்கங்களுடனும் பறையோசையுடனும் பேரணி நடந்தது.

தகவல்: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை ஐ.ஐ.டி

விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறோம் ! திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்

0

கீழ்க்கண்ட பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: விரிவாக படிக்க:

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி என்ன செய்யப் போகிறோம் ! பொதுக்கூட்டம்

நாள் : 26.02.2017 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 5.00 மணி.
இடம் : புதிய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி.

ன்பார்ந்த விவசாயிகளே, பொதுமக்களே !

எடப்பாடி நீடிப்பாரா? மாட்டாரா? மறு தேர்தல் வருமா? வராதா? அடுத்த முதல்வர் யார்? என்பதல்ல தமிழக மக்களின் முக்கியப்பிரச்சினை. நமது வாழ்வாதரங்களும், வாழ்வுரிமைகளும் நாளுக்கு நாள் பறிபோகின்றன. கலாச்சாரம், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக சிந்தனை ஆகியவை காட்சிப் பொருளாக்கப்பட்டு, காடுகளில் வாழும் மிருகம் போல் ஒருவரை ஒருவர் அடித்துத் தின்னும், பேரவலம் நம்மை எதிர் நோக்கியிருக்கிறது. பெண்குழந்தைகள் மீதான பாலியல் வண்கொடுமைகள், கொலை, கொள்ளை இவை அபாயகரமாக அதிகரித்திருக்கின்றன. இது தான் தமிழகத்தின் இன்றைய அசாதரனமான பிரச்சினை.

தமிழக விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலையாலும் செத்துமடிகின்றனர், வங்கி கடனும், கந்துவட்டி கடனும் அவர்களுக்கு தொடர்ந்து எமனாக நிற்கிறது. கருகிய பயிற்களுக்கும், இறந்த உயிர்களுக்கும், அறிவித்த தமிழக அரசின் நிவாரணம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிறது.

விவசாயம் செய்வது குற்றமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது. தப்பிக்க வழிதெரியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். சிறைச்சாலையில் கூட கைதிகளுக்கு உணவு, உடை, மருத்துவம், என குறைந்த பட்சம் அரசு பொறுப்பேற்றுக் கொள்கிறது. விவசாயியோ, எந்தவித உத்திரவாதமும் இல்லாமல், திறந்த வெளிச்சிறைச் சாலையில் சிக்கிய கைதியாக செத்துமடிகின்றான். அழிந்துவரும் டெல்டா விவசாயத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், எந்த உருப்படியான திட்டமும் மத்திய மாநில அரசுகளிடம் இல்லை.

விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கும், சொசைட்டியில் வாங்கிய பாலுக்கு பணம் தராத அரசு. நூறு நாள் வேலைத்திட்டத்தில் செய்த வேலைக்கு சம்பளம் தராத அரசு. செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. முழுமையான நிவாரணம் இல்லை. ஆனால் அம்பானி, அதானி, போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 37 லட்சம்கோடி வரி தள்ளுபடியும், இரண்டுலட்சம் கோடி கடன்தள்ளுபடியும் செய்துள்ளது.

மேலும் பல லட்சம் கோடி கடனும் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றும் என்று எப்படி நம்புவது? ஏழு கோடி தமிழர்களை ஆள்வதற்கு, இந்த ஜனநாயக அமைப்பு முறையில் சசி-ஓபிஎஸ் போன்றவர்களைத் தான் முன்னிறுத்த முடிகிறது. இது அதிமுக-வின் நெருக்கடி மட்டுமல்ல. அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி. நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் எல்லா நிறுவனங்களும் இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வுகாண முடியாத நிலைக்கு வந்துள்ளன.

மங்காத்தா ஆட்டம் போல் தேர்தல் சூதாட்டத்தில் ஆளை மாற்றுவது தொடர்ந்தால் இன்று ஓபிஎஸ் – சசி நாளை சிம்பு தனுஷ் தான் கதி. காவிரி உரிமை, நீட்தேர்வு, சமஸ்கிருதத் திணிப்பு, என தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை நசுக்கி வரும் மோடி அரசு, அதிமுகவை பிளந்து தமிழகத்தை அடக்கியாள முயல்கிறது. மறைந்த ஜெயா தலைமையிலான மன்னார்குடி சசி கொள்ளைக்கும்பலுக்கு 10 ஆண்டுகளாக வருவாய் துறை, பொதுப்பணி, நிதி அமைச்சர் என வசூலை அள்ளிக்கொடுத்த ஊழல் தளபதிதான் ஓபிஎஸ் வகையறா. சேகர் ரெட்டியோடு சிறைக்கு அனுப்பப்படவேண்டிய பன்னீர் செல்வத்தை மோடி அரசு ஆதரிப்பதில் இருந்து பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் ஊழல் எதிர்ப்பு யோக்கியதைதெரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் தமிழகத்தில் நடப்பது என்ன? ஆறுகள், ஓடைகள், நீர்நிலைகளில் ஆலைக்கழிவுகள், பெருநகரகழிவுகள் கொட்டப்படுகின்றன. வரன்முறையில்லாத மணற் கொள்ளையால் ஆறுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர்தர மறுக்கும், கேரளத்திற்கும், ஆந்திரத்திற்கும் கர்நாடகத்திற்கும், தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் இங்கிருந்து மணல் கடத்தப்படுகிறது. சாக்கடைக் கழிவுகளால், முள்காடுகளால் நமது ஆறுகள் மூடிக்கிடக்கின்றன. நீர் நிலைகள், புறம்போக்கு நீர்பிடிப்பு பகுதிகள் பெருமளவில் தனியார் கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் மாஃபியாவினாலும் அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இந்த அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதோ, நிவாரணத்தொகையைக் கூடுதலாகக்கேட்டு மன்றாடுவதோ பொருளற்றது. உணவுப்பொருள் இறக்குமதி மானியம் ரத்து, கொள்முதல் நிறுத்தம், நீர்நிலை பராமரிக்காமல் கைவிடுவது என திட்டமிட்டு விவசாயத்தை இந்த அரசு அழிக்கிறது. விவசாயிகள் தானாக விவசாயத்தை விட்டு ஓடட்டும் என்றுதான் அரசு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்?

இத்தகைய பேரழிவுகளுக்கு காரணம் ஏற்கனவே ஆண்ட – ஆளும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்தான். தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, ஒட்டுமொத்த கட்டமைப்பும் மக்களுக்கெதிரானதாக மாறிவிட்டது.

தீப்பிடித்து எரியும் வீட்டைப் போன்ற நிலையில் இருக்கிறது நாடு. எரிகிற வீட்டுக்கு உள்ளேயிருந்து தீயை அணைக்க முடியாது. இந்த அரசுக்குகட்டமைப்புக்கு உள்ளேயிருந்து கோரிக்கை வைத்தோ, மன்றாடியோ விவசாயத்தைக் காப்பாற்றமுடியாது. அப்படி மட்டுமே சிந்தித்து சிந்தித்துதான் இந்தநிலைக்கு வந்திருக்கிறோம்.

மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு மெரினா போராட்டம், எப்படி போராட வேண்டும் என அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாததை ஐந்து நாட்களில் செய்யவைத்தது தமிழக மக்கள் போராட்டம்.

டெல்டாவில் மட்டுமல்ல ஒட்டு மொத்த விவசாயிகளையும் காப்பாற்ற அத்தகைய போராட்டங்களை தமிழகம் கோருகிறது. காவிரி, ஜல்லிக்கட்டு, கல்வி, மருத்துவம், மீத்தேன், கெயில், கரும்பு, நெல்லுக்கு விலை என ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனி தனிப் போராட்டம் என்பதை மாற்றி மக்கள் அதிகாரத்திற்கான போராட்டமாக மாற்றுவதைதவிர வேறுவழியில்லை.

இந்த அரசுக் கட்டமைப்பில் விவசாயிகளின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. நமக்கு தேவை மக்கள் அதிகாரம் என்பதை விளக்கும், இந்த பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தாருங்கள். உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள்.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
திருச்சி – தஞ்சை -திருவாரூர் – நாகை மாவட்டங்கள்.
94454 75157, 94431 88285, 96263 52829, 89037 36020.

நாட்டை விற்கும் மோடி – கழனியை அழிக்கும் ஜக்கி – பேச மறுக்கும் ஊடகம்

80
கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

ர்மயோகி ஜக்கி வாசுதேவ் கம்பெனி தயாரித்துள்ள வானுயர்ந்த சிவன் சிலையைத் திறந்து வைக்க வரும் 2017 பிப் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோவைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஈஷா ஆசிரமம் என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ் என்னும் கார்ப்பரேட் சாமியார் பல பத்தாண்டுகளாக இயற்கையின் மீதும் மக்களின் மீதும் நடத்திவரும் யுத்தம் இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மோடியை வரவேற்பதற்காக மட்டுமே கோவையில் 6000-த்துக்கும் அதிகமான விளம்பர ஹோர்டிங்ஸ் வைக்கப்பட்டுள்ளது என்றால் மொத்த ஏற்பாட்டின் பணமதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஆனால் இந்த ஈஷா யோகா மையம் பற்றியும், சத்குரு என்னும் இந்த மோசடி பேர்வழியின் ஆசிரமத்துக்குப் பிரதமர் வருவதற்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பு குறித்தும் எந்த ஊடகமும் பேச மறுப்பது ஏன்? ட்விட்டரில் கமல்ஹாசன் ஆய் போனால் கூட பிரேக்கிங் நியூஸ் போடும் இவர்கள் அதேச் சமூக வலைதளங்களில், சத்குரு-மோடி-கோவை வருகைக் குறித்து எண்ணற்ற எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதுகுறித்து கண்டுகொள்ளாதது ஏன்? ’அதற்கான தகுதி தங்களுக்கு இல்லை’ என உளப்பூர்வமாக உணர்ந்து குற்றவுணர்ச்சியில் குனிந்துகொண்டே கடந்து செல்கிறார்களா? அப்படி அவசரப்பட்டு தப்புக்கணக்குப் போடத் தேவையில்லை. அவர்களின் ஒரிஜினல் கணக்கு வேறு.

கழனியை அழித்த சிவன் – கட்டுமானத்திற்கும் முன்பும் பின்னும்

ஏன் மீடியா பேச மறுக்கிறது? விளம்பரங்களை அள்ளித் தருகிறார்கள் என்பது ஒரு கோணம். அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் இப்போது மோடியின் வருகையை ஒட்டிதான் ஜக்கி விளம்பரம் டி.வி.யில் வருகிறது. இதற்கு முன்பு ஈஷா நிகழ்ச்சிகளுக்கான அவ்வப்போதைய விளம்பரம்தானே தவிர, அட்டிகா கோல்ட் கம்பெனி போலவோ, லலிதா ஜூவல்லரி போலவோ தொடர் விளம்பரங்கள் ஈஷாவில் இருந்து வருவது இல்லை. எனவே விளம்பரம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மாறாக இந்த கார்ப்பரேட் சாமியார் முன்வைக்கும் யோகா ஆன்மீகத்தில் இவர்கள் லயித்துப் போகிறார்கள். அதில் உண்மையாகவே மன அமைதி கிடைப்பதாக நம்புகின்றனர். அப்படி நம்ப வைப்பதற்காக வெள்ளியங்கிரி ஈஷா ஆசிரமத்தில் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்பு யோகா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதனால் தான் சத்குரு மனைவியின் மர்ம மரணம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அதைப்பற்றி எந்த மீடியாவும் பேச மறுக்கிறது. ஈஷாவில் தங்களின் இரண்டு மகள்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக கடந்த ஆண்டு வெளிவந்த ஒரு பெற்றோரின் கண்ணீர் பேட்டிகள் பரபரப்பான ஊடக விவாதமாக மாறாமல் அந்த நேரத்து துணுக்குச் செய்தியாக மாறிப்போனதன் பின்னே உள்ளது இதுதான்.

எனவே தற்போது ஜக்கி வாசுதேவின் அட்டகாசம் குறித்தும், விதிகளை மீறி காடுகளை ஆக்கிரமித்து அழித்துள்ளது குறித்தும், யானைகளின் வழித்தடம் அழிக்கப்படுவது குறித்தும் எந்த ஊடகமும் பேசப்போவது இல்லை. நேர்ப்பட பேச்சு, ஆயுத எழுத்து, கேள்வி நேரம், காலத்தின் குரல் என எந்த நிகழ்ச்சியிலும் ஜக்கியைக் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். மோடி என்னும் பெரிய கேடியே ஆசீர்வாதம் செய்ய வரும்போது சின்னக் கேடியைப் பற்றி இவர்கள் வாய் திறப்பார்களா என்ன? அப்படி வாய் திறக்கும் யோக்கியத் தன்மை எந்த மீடியாவுக்காவது இருக்கிறதா?

கங்கைக் கரையில் டபுள் ஸ்ரீ ரவிசங்கரின் இயற்கை அழிப்பு மநாட்டிற்குச் சென்ற மோடி, கோவைப் பகுதியில் காடு கழனிகளை அழிக்கும் ஜக்கியின் நிகழ்ச்சிக்கு வருகிறார்.

தென் தமிழ்நாட்டு கடலோரத்தின் மணல் வளத்தை வெட்டி கூறுபோடும் கொள்ளையன் வைகுண்டராஜன் நடத்தும் நியூஸ் 7 சேனலுக்கு அந்தத் தகுதி இருக்கிறதா, வைகுண்டராஜனின் தேசிய வெர்ஷன்; நாட்டை கொள்ளை அடிப்பதில் இரண்டு தலைமுறை அனுபவம் கொண்ட ரிலையன்ஸ் அம்பானி நடத்தும் நியூஸ் 18, பொத்தேரி என்னும் பத்து ஏரிகள் நிறைந்த ஊரை கபளீகரம் செய்து எஸ்.ஆர்.எம் கல்வி கொள்ளை வளாகத்தை நிறுவி இன்று அதை நாடு தழுவிய அளவில் விஸ்தரித்துள்ள புதிய தலைமுறை, ஆளும் வர்க்கத்துக்கு கூழை கும்பிடு போட்டு அண்டிப் பிழைப்பதைப் பெருமையென கருதும் தந்தி டி.வி… என யாரும் இதுகுறித்துப் பேசப் போவது இல்லை.

மற்ற நேரத்தில் தங்களுக்குள் போட்டி இருப்பதைப் போலக் காட்டிக்கொள்ளும் இவர்கள், டி.ஆர்.பி.யை பிக்-அப் செய்யும் நோக்கத்தில் கூட ஜக்கியின் பக்கித்தனத்தைப் பற்றிப் பேசமாட்டார்கள். நொடிக்கு ஒரு தரம் பிரேக்கிங் நியூஸ் போட்டு பார்வையாளர்களை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் இவர்கள், பல புதிய பிரேக்கிங் செய்திகளுக்கு வாய்ப்பு இருந்தும் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள். மாறாக வரும் 24-ம் தேதி மோடியின் கோவை வருகையைப் போட்டிப் போட்டுக்கொண்டு லைவ் கவரேஜ் செய்வார்கள். தங்கள் ஓபி வேன்களை நிறுத்தி நிருபர்களை லைவில் கதறவிட்டு அந்த பரபரப்பின் வெளிச்சத்தில் ஜக்கியின் மொத்த பித்தலாட்டங்களையும் மறக்கடிப்பார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி தினத்தில் நடுக்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்குள் புகுந்த போலீஸ் வெறியாட்டம் நடத்தியது. அதற்கு முந்தைய கணம் வரைக்கும் இடைவிடாமல் லைவ் செய்தவர்கள், போலீஸ் அடிக்கத் தொடங்கிய அந்த நொடி முதல் கேமராவை வேறுபக்கம் திருப்பிவிட்டார்கள். ஒரு வார காலமாக மல்டி கேமரா செட்-அப்புடன், ஜிம்மி-ஜிப் எல்லாம் போட்டு கடற்கரையே கதி என கிடந்த தமிழக தொலைகாட்சிகள், குப்பத்து மக்கள் அடித்து நொறுக்கப்படுவதைக் காட்ட மறுத்தன. போலீஸ், லத்தியால் மக்களின் மண்டையைப் பிளந்தது என்றால் மீடியாக்கள் தங்களின் கேமராக்களை வேறுபக்கம் திருப்பி அந்த மக்கள் அடிபட்டு சாவதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. அந்தச் சதியின் கூட்டுப் பங்காளிகளாக இவர்கள் இருந்தார்கள். நடுக்குப்பம் வன்முறையை ஒட்டி மீடியாவில் வெளிவந்த காட்சிகள் மிக, மிகக் குறைவு. மாறாக அங்கே இருந்த தனிநபர்கள் தங்கள் செல்போன் வழியே எடுத்து பதிவேற்றிய காட்சிகளே அதிகம். அவற்றைக் கூட எந்த தொலைகாட்சியும் எடுத்து ஒளிபரப்பவில்லை.

122 அடி சிலை உருவாக்குவதற்கு அழிக்கப்பட்ட மக்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன?

எனவே இந்தத் தொலைகாட்சிகள் காட்டும் பரபரப்பின் பரப்பு மிகவும் ஆபத்தானது. அது நம்மை பரபரப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. மாறாக உண்மையாகவே மக்கள் பாதிக்கப்படும் காட்சிகள், அது எவ்வளவு பரபரப்புத் தன்மை கொண்டதாயினும் இவர்கள் அதைக் காட்டப்போவது இல்லை.

ஜக்கி வாசுதேவ் என்னும் ஆன்மிகக் கொள்ளைக்காரனின் வன ஆக்கிரமிப்பை, ஈஷா என்ற பெயரில் தமிழகத்தில் நடத்திவரும் ஒரு கருத்தியல்-பொருளியல் சூறையாடலை வெளிப்படையாக விவாதிக்கும் துப்பு தமிழகத்தின் எந்த மீடியாவுக்கும் இல்லை. ஜெகத்குரு, சங்கர்ராமனை கழுத்தறுத்தபோது மௌனம் காத்த இவர்கள், இப்போது சத்குரு வெள்ளியங்கிரி மலைக்காட்டை வெட்டி கூறுபோடும் போதும் தங்கள் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட மீடியாக்கள் தாங்கள் மக்களின் பக்கம் இருப்பதாகவும், நடுநிலையோடு நட்ட நடு சென்டரில் நிற்பதாகவும் அடித்துக்கொள்ளும் ஜம்பம் மட்டும் தாங்க முடியவில்லை.

ஆனால் இது பேச வேண்டிய தருணம். இன்னும் இரண்டு நாட்கள். இன்று தேதி 22. வரும் 24-ம் தேதி மோடி கோவை வருகிறார். இப்போது தொடங்கி இன்னும் இரண்டு நாட்களுக்கு நாம் ஜக்கி வாசுதேவ் என்னும் கொள்ளைக்காரனின் திருட்டுப் பக்கங்களையும், இதற்கு ஆசீர்வாதம் அளிக்கவரும் பெரிய கேடி மோடியைப் பற்றியும், இவை எவற்றையும் பேசாத தமிழக ஊடகங்களையும் அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதுவோம்; பேசுவோம்; விவாதிப்போம். இதை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாற்றுவோம். மெய்நிகர் உலகின் சூடு மெய்யுலகை தழுவட்டும்.

ஜக்கியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்! மோடியே திரும்பிப் போ! பேச மறுக்கும் மீடியாவே பேசு!

– முத்து

ஓசூரில் குற்றவாளி ஜெயா படத்தை நீக்கிய பள்ளி மாணவர்கள் !

0

சூரில் பாடப் புத்தகங்களில் உள்ள தண்டனைக் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் உருவப்படம் பொருந்திய ஸ்டிக்கர் ஒட்டி மாணவர்கள் எதிர்ப்பு!

21-02-2017 செவ்வாய் மாலை 4 மணியளவில் ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாணவர்களின் பாடப் புத்தகங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் உருவப் படத்தை ஒட்டி மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பினர்எதிர்ப்புத் தெரிவித்தனர். பிறகு திரளான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

திருட்டுத்தனமாக சொத்து சேர்த்த வழக்கில் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டவர்களின் குற்றம் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனைக் குற்றவாளி என்பது உச்சநீதிமன்றத்தாலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் அவரது படம் நீக்கப்பட வேண்டும்; அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற பெயர்கள் நீக்கப்பட்டு அரசு பெயரில் மாற்றப்படவேண்டும். ஆனால், இந்த அரசு குறைந்த பட்சம் இந்த நியாயத்தைக் கூட கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. நீதிமன்றமும் இந்த விசயத்தை தானாக முன்வந்து வலியுறுத்தவோ, நிலைநாட்டவோ போவதில்லை.

காரணம், இந்த அரசுக் கட்டமைப்பு ஊழல் மயமாகிவிட்டது. அதனால், தண்டனை குற்றவாளி கிரிமினல் ஜெயலலிதாவின் படத்தை மக்களே அணிதிரண்டு அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பினர் முழக்கமிட்டு ஆர்ப்பாடம் செய்தனர். இன்று மாலை ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பாக மாணவர்களுக்கு அறிவித்து மாணவர்களின் பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் ஸ்டிக்கர் ஒட்டினர்.

மாணவர்களும் திரளாக நின்று தங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயா படத்தின் மீது திருவள்ளுவர் ஸ்டிக்கரைக் கேட்டு பெற்று ஒட்டினர். வியாபரிகளும் பொதுமக்களும் இதுதான் சரியான போராட்டம் என்று ஆதரித்தனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு.வின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னணித் தோழர்கள் காந்தராஜ், ராமசாமி, செல்வி மற்றும் பலரும் பங்கேற்றனர்.

ஆர்பாட்டம் துவங்குவதற்கு முன்பு பள்ளியின் அருகிள் உள்ள கடைகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது, பிரசுரத்தை பார்த்தவுடன், யாரும் இப்படி சுட்டிகாட்ட முன்வரவில்லை நீங்கள் செய்வது எடுத்துக்காட்டாக உள்ளது என ஆதரித்தார்கள். பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

நாம் ஒருசில மாணவர்களின் நோட்டு, புத்தகங்களில் திருவள்ளுவர் உருவப் படத்தை ஒட்டினோம், பின்னர் மாணவர்களே முன் வந்து மூன்று, நான்கு என திருவள்ளுவர் படத்தை நம்மிடம் கேட்டு வாங்கி தனது பாட புத்தகம், நோட்டுகளில் உள்ள ஜெயா உருவப் படத்தை மறைத்து அதன்மீது திருவள்ளுவர் உருவப் ஒட்டினார்கள். மேலும், கடைகாரர்கள், ஆசிரியர்கள், பேருந்தில் செல்லும் பொது மக்கள், மாணவர்கள் என அனைவரும் இந்தப்போராட்டத்தை கவனித்து ஆதரவு கொடுத்துச்சென்றார்கள். முன்னதாக, கடந்த இரண்டுநாட்களாக “குற்றவாளிக்கு அரசு மரியாதையா?” என்ற தலைப்பில் முழக்கவடிவில் துண்டறிக்கை அச்சிட்டு மக்களிடையே வீடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
செய்தியாளர், புதிய ஜனநாயகம்,
ஓசூர். செல்-9944958840.

மெரினாவை அழகுபடுத்துவோம் ! கருத்துப் படங்கள்

0

அ.தி.மு.க -வும் 135 திருடர்களும் !

__________

அம்மாவின் ஆட்சி தொடரும்… – எடப்பாடி பழனிச்சாமி.

__________

மெரினாவை அழகுபடுத்துவோம் வாருங்கள் !

படங்கள் : துரை

இணையுங்கள்:

சென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு !

1
தருண் விஜய் – கேலிச்சித்திரம் : முகிலன் (கோப்புப் படம்)

ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு…..

அன்பார்ந்த மாணவர்களே வணக்கம்….

முன்னால் எம்பி தருண் விஜய் நமது பல்கலைக்கழகத்திற்கு (சென்னை பல்கலைக்கழகம்) வருகிறார். யார் அவரை அழைத்தது? எதற்காக வருகிறார்? ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி தான் அவரை அழைத்து வருகிறது. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து பாசிச அடக்குமுறைகளை ஏவி வருகிறது. வரலாற்றுக்கு மாறான பொய்களையும் மதவெறி கற்பனைகளையும் பாட நூல்களில் திணித்து வருகின்றது.

கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஏபிவிபி மூலம் நுழைந்து மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களைச் சாதி, மத அடிப்படையில் பிரித்து வருகிறது. குறிப்பாக இவர்கள் உயர்கல்வி நிறுவனங்களைக் குறி வைத்திருக்கின்றனர். உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே இயல்பாக உள்ள முற்போக்கு, ஜனநாயக கருத்துக்களை ஒழித்துக்கட்டிவிட்டு மதவெறி கொள்கைகளைத் திணிப்பது தான் இவர்களின் நோக்கம். இதை எதிர்த்துப் போராடும் மாணவர்களைத் தேச விரோதிகளாகச் சித்தரிக்கிறது பா.ஜ.க. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா கொள்கைக்கு எதிராகவும், மாணவர்களின் உரிமைக்காகவும் போராடிய ரோஹித் வெமுலாவை ஏபிவிபி தூண்டுதலின் பேரில் நிறுவனப் படுகொலை செய்தது ஹைதராபாத் பல்கலைக்கழகம்.

ஜேஎன்யு-வில் இடதுசாரி கருத்துக்களைப் பேசி வந்த மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்து சிறையில் அடைத்தது பா.ஜ.க அரசு. இந்த நடவடிக்கைக்கெதிராக மாணவர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும் போராடினர். பா.ஜ.க தனிமைப்படுத்தப்பட்டு அம்பலமானது. அதன் பிறகு நஜீப் என்கிற மாணவர் திடீரென்று காணாமலடிக்கப்பட்டார். இன்று வரை அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு பின்னாலிருப்பது ஏபிவிபி கும்பல் தான்.

  • நஜீப்

    அதே போல பெரும்பான்மை ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமூகநீதி கொள்கையை ஒழித்துக்கட்டும் நோக்கில் நீட்  NEET நுழைவுத்தேர்வைத் திணிக்கிறது.

  • புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் நவீன குலக்கல்வியை திணிக்கிறது.
  • நீட் தேர்வுக்கு இணையாக பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வைத் திணிக்கவிருக்கிறது.
  • நாடு முழுவதுமுள்ள பிராந்திய மொழிகளை ஒழித்து செத்துப்போன சமஸ்கிருதத்தை திணிக்கிறது. அதற்காக 1500 கோடி மக்கள் பணத்தை ஒதுக்குகிறது. கல்வித்துறையில் அன்னியமுதலீட்டை அனுமதித்து ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்க முயற்சிக்கிறது.
ரோகித் வெமுலா

பா.ஜ.க அரசின் இந்த நோக்கங்களை எல்லாம் தடையின்றி அமல்படுத்துவதற்காகத் தான் ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இயங்கி வருகிறது. சுயமரியாதை மண்ணான தமிழகத்தில் கால் பதிக்கப் படாதபாடு படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழ் மொழியின் உயர்வையும், திருக்குறளின் மேன்மையும் பேசி, கொல்லைப்புற வழியாக காலூன்ற முயற்சிக்கிறது. இந்த வேலைக்காக ஒதுக்கப்பட்டிருப்பவர் தான் தருண் விஜய். தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை மென்மையான முறையில் பேசிவரும் நரி தான் இந்த தருண் விஜய். நமது பல்கலைக்கழகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்குவதற்காக தான் தருண் விஜயை அழைத்து வருகிறது ஏபிவிபி இவர்களை பல்கலைகழகத்தில் அனுமதிப்பது வரலாற்றுப் பிழையாகும்.

எனவே சென்னைப் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் நோக்கத்துடன் நுழையும் ஆஎஸ்.எஸ் தருண் விஜய்யை மாணவர்களாக ஒன்றிணைந்து விரட்டி அடிப்போம்.

இடம்: சென்னைப் பல்கலைக்கழக நுழைவுவாயில், நாள்: 22.02.2017,  நேரம்: 01.15pm

தகவல்: STUUNOM,
STUDENTS UNION UNIVERSITY OF MADRAS

ஒவ்வொரு நாளும் தனியே அழுது கொண்டிருக்கிறேன்

1

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள்  – பாகம் 2

நந்த கிஷோர், (22 வயது, தற்போது வேலையின்றி இருக்கும் முன்னால் ஆலைத் தொழிலாளி) – இது தான் அரசு கொள்கைகளை வகுக்கும் முறையா?

நான்கு வருடங்களுக்கு முன் பீகாரின் கயாவிலிருந்து வேலை தேடி லூதியானா வந்தவர் நந்த கிஷோர். கம்பளித் தொழிற்சாலை ஒன்றில் 7,500 ரூபாய் மாதச் சம்பளத்தில் அவருக்கு வேலை கிடைத்தது – தற்போது அதை இழந்து விட்டு வேறு வேலை தேடி வருகிறார். தொழிலாளிகள் அடர்த்தியாக வசிக்கும் சுந்தர் நகரில் தனது நாட்களை கழித்து வருகிறார்.

அவருக்கு வேறு வேலைகள் ஏதும் கிடைக்கவில்லை – கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவரது துன்பத்தை அதிகரித்துச் செல்கின்றன. “நான் சொந்த ஊரிலிருக்கும் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை. அங்கே எனது வயதான பெற்றோர் இருக்கின்றனர். நான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நானே வேலையற்று இருப்பதைக் காண அவர்களுக்கு வருத்தமாக இருக்கும்” என்கிறார் நந்த கிஷோர்.

இப்போதைக்கு அவரது சொந்த ஊரிலிருந்து வந்து இங்கே தங்கியிருக்கும் வேறு நான்கு பேரின் அறையில் தங்கிக் கொள்ளும் முடிவில் இருக்கிறார். ஊரிலிருக்கும் பெற்றோருக்கு மாதா மாதம் பணம் அனுப்பி வந்தார் நந்தா. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஏதும் அனுப்ப முடியவில்லை. “அவர்களது ஒரே மகனான எனக்கு இது பெரும் மனவலியை அளிக்கிறது” என்கிறார் அவர்.

தொழிலாளிகளை ஆலை முதலாளிகள் சுரண்டினார்களென ஆத்திரப்படுகிறார் – “இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு நாங்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்ததற்கு பாதி சம்பளத்தில் வேலை தருவோம் என்கிறார்கள். வேறு வழியில்லாத பலரும் அப்படி வேலைகளை ஏற்றுக் கொண்டனர், வேறு சிலர் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டார்கள்” என்கிறார்.

ஆனால், அரசைத் தான் அறுதியிட்டு குற்றம் சாட்டுகிறார் – ”ஏ.டி.எம் வாசலில் நிற்கும் துன்பம் மட்டும் என்றால் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், எனது வேலையைப் பறித்து விட்டார்கள்” வானத்தை வெறித்தபடி பேசுகிறார் கிஷோர். “இப்படித் தான் அரசு முடிவுகளை எடுக்குமா? எனக்கு அரசாங்கம் எப்படி இயங்குகின்றது என்பது தெரியாது. ஆனால் எனது வாழ்க்கையை சீரழிவுக்குள் தள்ளிவிட்டார்கள் என்பது மட்டும் தான் புரிகின்றது”

***

பர்மிந்தர் சிங், (30 வயது. தொழிற்சாலை சூப்பர்வைசர்) – ”பணமதிப்பழிப்பினால் எனது தாயார் இறந்து விட்டார்”

னது தாயைக் குறித்து பேசும் போது பர்மிந்தரின் கண்களில் கண்ணீர் வழிகின்றது. ஏ.டி.எம் இயந்திரத்தின் முன் வரிசையில் நின்று கொண்டிருந்த போது பர்மிந்தர் சிங்கின் தாயார் இறந்துள்ளார். அவரது மகளின் திருமணத்திற்கு பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் சென்ற பர்மிந்தர் சிங்கின் தாயாருக்கு வயது 50.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக வங்கி வரிசையில் காத்திருக்கும் போதோ அல்லது ரூபாய்த் தாள் கட்டுப்பாட்டின் விளைவாக போதிய பணம் கட்டமுடியததால் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டோ சுமார் 80 பேர் வரை இறந்துள்ளார்கள் என அறியப்பட்டுள்ளது.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாகவே எனது தாயார் இறந்தார். இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அவரைத் திரும்ப கொண்டு வர முடியாது” என்கிறார் பர்மிந்தர்.

ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரியும் பர்மிந்தருக்கு மாதச் சம்பளம் 13,000. தனது மனைவி, மகள் மற்றும் தங்கையுடன் நடுத்தரவர்க்க குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். இருபத்தைந்து வயதான சகோதரி தனது தாயின் மரணத்துக்கு தன்னையே பழித்துக் கொள்வதாக கூறுகிறார் பர்மிந்தர் – “எனது தங்கையை இந்த நிலையில் பார்ப்பதற்கு இதயமே நொறுங்குகிறது. அவளுக்கு முன் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறேன்; ஆனால், ஒவ்வொரு நாளும் எனது அறையில் தனியே அழுது கொண்டிருக்கிறேன்” என்கிறார் பர்மிந்தர்.

பர்மிந்தர் அரசின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் – “அது எனது தாயின் பணம். தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக எனது தாய் இறந்திருக்க கூடாது. எந்த இடையூறும் இன்றி தனது பணத்தை எடுக்கும் உரிமை அவருக்கு உண்டு”

***

யமுனா பிரசாத் (29 வயது, ஆலைத் தொழிலாளி) – ”ஒரு பணக்காரனால் தனது தாயை மருத்துவமனையில் சேர்க்க வங்கிக் கடனட்டையைத் தேய்க்க முடியும். என்னைப் போன்றவர்கள் என்ன செய்ய முடியும்?

முனா பிரசாத் உடைந்து போயிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் 70 வயதான தனது தாயை இழந்ததில் இருந்து இதே நிலையில் தான் இருக்கிறார் அவர் – “ இறந்து போன எனது தாயை இரண்டு நாட்களாக அடக்கம் செய்யக் கூட முடியவில்லை. அந்த சமயம் கையில் காசில்லை”

டிசம்பர் 25ம் தேதி வயிற்று வலி என்று சொன்ன தனது தாயாரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் யமுனா பிரசாத் – “அரசு மருத்துவமனைகள் எவ்வளவு கேவலமான முறையில் நடத்தப்படுகின்றன என்பது இங்கே எல்லோருக்கும் தெரியும்”

தனியார் மருத்துவமனைக்கு தனது தாயாரை அழைத்துச் சென்றிருந்தார் சிறப்பான மருத்துவம் கிடைத்திருக்கும் என்று யமுனா பிரசாத் நம்புகிறார். தனியார் மருத்துவமனை என்றால் நிறைய பணம் செலவாகும் – அந்த சமயத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தின் முன் பணத்திற்காக காத்திருக்கும் அளவுக்கு அவருக்கு நேரமில்லை.

பணமில்லாத நிலையில் தனது தாயின் இறுதிச் சடங்கைக் கூட அவரால் உரிய நேரத்தில் செய்ய முடியவில்லை – “இப்போது எல்லாம் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், எனது அம்மாவுக்கு ஒரு கௌரவமான இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாமல் தவித்ததை என்னால் எப்படி மறக்க முடியும்?” என்கிறார் யமுனா பிரசாத்.

உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இவருடைய தாயின் இறுதிச் சடங்கிற்காக பத்தாயிரம் ரூபாய்கள் கொடுத்து உதவியுள்ளார். அருகிலிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் 12 மணி நேர ஷிப்டில் வேலை செய்யும் யமுனா பிரசாத்துக்கு மாதச் சம்பளம் வெறும் எட்டாயிரம் ரூபாய் தான். இந்தச் சம்பளத்தில் அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பிழைப்பு நடத்தியாக வேண்டும். எந்தச் சேமிப்புக்கும் வழியில்லாததால் தன்னுடைய குழந்தைகளும் தன்னைப் போலவே தொழிலாளியாகவே ஆவார்கள் என கவலைப்படுகிறார் யமுனா பிரசாத்.

அரசாங்கம் பணக்காரர்களுக்கு பயன்படும் திட்டங்களைத் திணிப்பதாகவும், தன்னைப் போன்ற ஏழைகளைக் கண்டு கொள்வதில்லை எனவும் சொல்கிறார் யமுனா பிரசாத் – “ஏழைகளின் மீது ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் கவலையே படாமல் ஏன் திட்டங்களை வகுக்கிறார்கள்? ஒரு பணக்காரன் தன்னுடைய அம்மாவை மருத்துவமனையில் சேர்க்க வங்கிக் கடனட்டையைத் தேய்க்க முடியும். என்னைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள்?”

***

அனிஷா கத்தூன், (48 வயது இல்லத்தரசி) – ”அந்தப் பணத்தைச் சேமிக்க பல வருடங்களானது எனக்கு”

த்தாயிரம் ரூபாயைச் சேமிக்க தனக்கு பல ஆண்டுகள் ஆனதாகச் சொல்கிறார் அனிஷா கத்தூன். தனது கணவருக்குத் தெரியாமல் சேமித்து வந்த அந்தப் பணத்தைக் கொண்டு எப்படியாவது தனது மகளின் திருமணத்தை நடத்தி விடும் திட்டத்தில் இருந்திருக்கிறார் அனிஷா.

அனிஷா கத்தூனின் கணவர் புது தில்லியை அடுத்துள்ள நோய்டாவில் ரிக்சா இழுக்கிறார். அவர்கள் நோய்டாவின் செக்டார் 16-ல் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள குடிசை ஒன்றில் வசிக்கிறார்கள். அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அனிஷா சேமித்திருந்த பத்தாயிரமும் செல்லாக்காசுகளாகி விட்டன. வேறு வழியின்றி தனது கணவரிடம் சொல்லியிருக்கிறார். தனக்கே தெரியாமல் தனது மனைவி காசு சேர்த்திருப்பதை அறிந்த அந்தக் கணவன் ஆத்திரப்பட்டுள்ளார் – தன்னால் வங்கியின் முன் வரிசையில் நிற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

“இதே பகுதியில் இருந்த ஒரு பையனின் உதவியோடு தான் பணத்தை மாற்ற முடிந்தது – மாற்றித் தருவதற்கு அவன் இரண்டாயிம் ரூபாயை கமிஷனாக எடுத்துக் கொண்டான்” என்ற அனிஷா, ”பலருக்கும் நான் சேர்த்திருந்த தொகை பெரியதாகத் தெரியாது. ஆனால் அது மட்டும் தான் எனது சேமிப்பு. கமிஷனுக்காக நான் இழந்த இரண்டாயிரம் ரூபாய் எனக்குப் பெரிய தொகை” எனக் குறிப்பிட்டார்.

கணவர் சம்பாதிக்கும் ஒன்பதாயிரம் ரூபாயில் குடும்பத்தை நடத்தி வரும் அவர், அரசாங்கம் தன்னை ஏமாற்றி விட்டதாக குறிப்பிடுகிறார் – “பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏழைகளுக்கு நல்லது நடக்கும் என்று அரசாங்கம் சொன்னது. எனக்கோ அந்தப் பணத்தை சேர்க்க வருடக்கணக்கானது. அதில் கொஞ்சத்தை இழந்ததை நினைத்தால் எனது இதயமே நொறுங்கிப் போகிறது”

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

தமிழாக்கம்: முகில்
நன்றி : அல்ஜசிரா
100 days of demonetisation: Stories of hardship

பயிர்க் காப்பீடு : விவசாயிக்கு சுண்ணாம்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வெண்ணெய் !

0

டெல்டா மாவட்டங்களில் இரு நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் சாவுகளுக்கு நீதி கேட்டு, நிவாரண உதவி கேட்டு அனைத்து விவசாயிகள் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, அரைவேக்காட்டு அமைச்சர்களை அனுப்பி ஒப்புக்கு ஆய்வுசெய்து, போனால் போகட்டும் என்று சில நிவாரண அறிவிப்புகளையும் வெளியிடிட்டிருந்தார், முன்னாள முதலமைச்சர் ஓ.பி.எஸ்.

“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5,465 ரூபாய்  வறட்சி நிவாரணமாக வழங்கப்படும். மேலும், காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் 25,000 ரூபாய் பெற்றுத் தரப்படும். தற்கொலை செய்துகொண்ட 17 பேருக்கு தலா மூன்று இலட்சம் வழங்கப்படும்” எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கண்முன்னே பயிர் கருகுவதைக் கண்டும், கடன் சுமையாலும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செத்துவிட்ட செய்தி வந்த பிறகும், வெறும் 17 பேருக்கு மட்டுமே நட்டஈடு வழங்கியிருப்பது அயோக்கியத்தனம் என்றால், நிவாரணத் தொகையும் அற்பத்தனமாகவே உள்ளது.

“ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 வரை விவசாயிகள் முதலீடு செய்திருக்கும்போது 5,465 ரூபாய் என்பது மிகவும் குறைவு. வறட்சி நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய்க்கு மேல் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இதனடிப்படையில்தான் மாநில அரசு இந்த இழப்பீடை முடிவு செய்துள்ளது. தனது விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது” என்று ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலை எதிரொலிக்கிறார், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொருளாளர் நாகை எஸ்.சிறீதர்.

“இந்த ரூபாயும் மொத்தமா கிடைக்காது. ரூ.4000 தான் எங்கள் கைக்கு வரும். மீதியெல்லாம் லஞ்சமாப் போயிரும். அந்த நாலாயிரமும் எப்போ வரும்னு தெரியலையே” என்று புலம்புகிறார்கள் விவசாயிகள். அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணத்தின் இலட்சணம் இதுவென்றால், அரசு வாங்கித் தருவதாகக் கூறும் காப்பீட்டுத் தொகையின் கதையோ பெரும் மோசடியாக இருக்கிறது.

1999 முதல் 2014 வரை நடைமுறையில் இருந்துவந்த பழைய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி, அரசு காப்பீடு நிறுவனங்கள் நேரடியாக இழப்பீடு வழங்கி வந்தன. ஆனால், மோடி அரசு அந்நிய மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய “தேசிய வேளாண் காப்பீட்டு”த் திட்டத்தை கடந்த 2015 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது.  மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்த இடத்தில், தற்போது 16 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதித்துள்ளது மோடி அரசு.   இதற்கு வசதியாக பழைய விதிமுறைகளை நீக்கப்பட்டு, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் சாதகமான புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளன.

பயிர்க் காப்பீடு செய்த வயலை ஸ்மார்ட் போன், ஜி.பி.எஸ். கருவி ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யும் அதிகாரிகள். (கோப்புப் படம்)

சிறுவிவசாயிகளுக்கு 2.5%, பிற விவசாயிகளுக்கு 1.5% என்றிருந்த பிரிமியத் தொகை, தற்போது 16% என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 25,000  ரூபாய் காப்பீடு செய்ய 4,000 ரூபாய் பிரிமியமாகச் செலுத்த வேண்டும். இதற்கு எதிராக விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்திய பின்,  2% பிரிமியத்தை மட்டும் விவசாயிகள் செலுத்துவது என்றும், மீதியை மத்திய-மாநில அரசுகள் மானியமாக வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, தற்போது விவசாயிகள் 800  ரூபாயும், மத்திய, மாநிலஅரசுகள் ரூ.3,200-ஐயும் செலுத்தி வருகின்றன. உர மானியம் ரத்தானது போல, இந்த மானியமும் நாளை பறிக்கப்படலாம்!

பழைய காப்பீட்டுத் திட்டப்படி, 100% இழப்புக்கு  5%-ஐக் கழித்து  95% இழப்பீடு பெறமுடியும். விவசாயிகள் காப்பீடு செய்துள்ள தொகைக்கு மேல் இழப்பானாலும், அதை மத்திய, மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளும் விதிமுறைகள் இருந்தன. ஆனால், புதிய திட்டப்படி 100 இழப்பீட்டிற்கு நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு  70%, பிற மாவட்டங்களுக்கு 60% மட்டுமே இழப்பீடு பெறமுடியும். மேலும் 150%க்குமேல் இழப்பு ஏற்பட்டால், (அதாவது ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய்  என விவசாயிகள் காப்பீடு செய்திருக்கும்போது, இழப்பு 37,500 ரூபாய்க்கு மேல் இருந்தால்)  முழு இழப்பீட்டையும் மத்திய-மாநில அரசுகளே ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில்தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இறங்கியுள்ளன.

இதன்படி, “ தற்போது 25,000 ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ள நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ரூ.17,500-ம், பிற மாவட்ட விவசாயிகள்  ரூ.16,000-ம் தான் இழப்பீடாக பெறமுடியும். அரசு கூறுவதுபோல 25,000 ரூபாய் பெறுவதற்கு புதிய திட்டத்தில் இடமில்லை. தமிழக அரசு நாடகமாடுகிறது” என்று சாடுகிறார் திருவாரூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் திரு.காவிரி தனவேல்.

இழப்பீட்டைக் கணக்கிடுவதிலும் புதிய திட்டம் விவசாயிகள் நலனுக்கு எதிராகவே உள்ளது. பழைய திட்டத்தில், 5  வருட சராசரி மகசூலில் குறைந்த மகசூல் உள்ள 2 வருடத்தை நீக்கி விட்டு, மீதமுள்ள 3 வருட மகசூலில் இருந்து உத்தேச மகசூல் தீர்மானிக்கப்படும். ஆனால், புதிய திட்டத்தில், 7 வருட சராசரியில், அதிக மகசூல் உள்ள 2 வருடத்தைக் கழித்து மீதியுள்ள 5 வருட சராசரியிலிருந்து உத்தேச மகசூல் கணக்கிடப்படுகிறது. எனவே, பழைய திட்டத்தைவிட புதிய திட்டத்தில் இழப்பீடு குறைவாகவே இருக்கும்.

இவ்வாறு எல்லாவகையிலும் விவசாயிகளை விட, ஐ.சி.ஐ.சி.ஐ.,லாம்போர்டு, ஹெச்.டி.எஃப்.சி., இஃப்கோ-டோக்கியோ போன்ற 16 தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டதுதான் மோடியின் தேசிய வேளாண் காப்பீட்டுக் கொள்கை.

கடந்த வருடம் தமிழக அரசு செலுத்த வேண்டிய  பிரிமியத் தொகை ரூ.19 கோடி, மற்றும்  பங்குத் தொகையான ரூ.198 கோடியையும் இன்றுவரை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 2015-ஆம் ஆண்டிற்கான  இழப்பீடே கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கும் நிலையில், நடப்பு வறட்சி நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.  பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்ட டோல்கேட் கட்டண வசூலை, ஒரே வாரத்தில் அந்த நிறுவனங்களுக்கு இழப்பீடாக வழங்கிய மோடி, தமிழக வறட்சிக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்து வருகிறார்.

பழைய காப்பீடு திட்டப்படி, அடுத்த பருவம் தொடங்குவதற்கு முன் இழப்பீடு தரவேண்டும். புதிய திட்டப்படி, இழப்பு ஏற்பட்ட 30 நாட்களில் இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும்  என்று அரசு விதி இருக்கிறது. தான் இயற்றிய விதிமுறைகளுக்கு தானே கட்டுப்படாத தான்தோன்றி அரசு, தனது குடிமக்களை காப்பாற்றும் என நம்புவது ஏமாளித்தனமல்லவா!

– கதிர்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2017

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள்

0

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

லூதியானா மற்றும் நோய்டா, இந்தியா – கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று நள்ளிரவுக்குச் சில மணிநேரங்கள் முன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்காக தொலைக்காட்சியின் தோன்றினார். உயர்மதிப்புக் கொண்ட பணத்தாள்களான 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்பதை அவர் அறிவித்தார்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பிடித்திருக்கும் ”கருப்புப் பணம்” அல்லது கணக்கில் வராத வருமானத்தை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை இது என அவர் தெரிவித்தார். ஆனால், பெரும்பான்மையாக பணப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகமோ திடீரென நின்று போனது. குறிப்பாக தினக்கூலிகளும் ஏழை இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதோ, ஏழு இந்தியர்கள் பணமதிப்பழிப்பு தொடர்பாக தங்கள் கதைகளை விவரிக்கின்றனர் –

மோனிகா, இல்லத்தரசி (48 வயது) – பணமதிப்பிழப்பு எங்களை பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது.

இந்தியாவின் 86 சதவீத பணத்தாள்களைத் தடை செய்யும் மோடியின் முடிவைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாகத் தனது குடும்பம் அனுபவித்த துயரங்களை மோனிகாவால் மறக்க முடியவில்லை.

மொடியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டின் விளைவாக லூதியானாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் தனது கணவருக்கு தொடர்ந்து இரண்டு மாத சம்பளம் நிறுத்தப்பட்டதை வீட்டில் உள்ள ஒடுங்கிய சமையலறையில் நின்றவாறே விவரிக்கிறார் மோனிகா.

இருபத்தோரு வயதான மகளையும் பதினான்கு வயதான மகனையும் சேர்த்து நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. மோனிகாவின் கணவருக்குக் கிடைக்கும் ஒன்பதாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தை நம்பியிருந்த அக்குடும்பம் சில சமயங்களில் உணவுக்கே வழியின்றித் தவித்துள்ளது.

”எனது குடும்பத்தினர் பல நாட்கள் சாப்பிடாமல் உறங்கினர்” என்கிறார் அவர். ”இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை எங்களைப் பிச்சையெடுக்கும் நிலையை நோக்கித் தள்ளி விட்டது. இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்கிறார் மோனிகா. ”தெருவில் இறங்கி மக்களிடம் கைநீட்டி காசு கேட்பதற்கு நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை” என சமயலறை ஜன்னலில் நிலைகுத்திய பார்வையோடு சொல்கிறார்.

அப்படியே ஒருவேளை கேட்டிருந்தாலும் கூட அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கூட உதவும் நிலையில் இல்லை என்பதை விளக்கிய மோனிகா, “இந்தப் பகுதியில் எல்லோருமே ஏழைகள் தான். எல்லோருமே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்” என்கிறார்.

பணத்தடை மோனிகாவின் அக்கம்பக்கமாக வசிக்கும் ஏழைகளையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. தனது கணவருக்கு தற்போது தவணை முறையில் சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட மோனிகா, இப்போதும் நிலைமை சீரடையவில்லை என்கிறார். சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் பணப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட நாட்டில், பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக செல்லாக்காசாகிப் போன பழைய பணத்தாள்களை மாற்ற கோடிக்கணக்கானவர்கள் வங்கிகளின் முன் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.

ஆனால், மோனிகாவுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை, “நாங்கள் ஏழைகள், எங்களுக்கு வங்கிக் கணக்கெல்லாம் கிடையாது” என்கிறார். மேலும் கூறுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை எங்களது எதிர்காலத்துக்கு எப்படி நன்மை செய்யும் எனத் தெரியாது – ஆனால், தற்போதைய வாழ்க்கையை அது கொடுங்கனவாக்கி விட்டது” என்கிறார்.

***

ஹேமலதா (தையல் தொழிலாளி, 29 வயது) – கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் காலி வயிற்றோடு உறங்கினார்களா?

லூதியானாவின் சாம்ராலா சௌக்கில் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களுக்காக அரசு நிர்மாணித்த வீடுகளின் தொகுப்பில் வசிக்கும் மோனிகாவின் கதை மட்டும் தனித்துவமானதல்ல. அதற்கு இணையான கதைகளும் அங்கே நிறைய இருக்கின்றன.

மோனிகாவின் அண்டை வீட்டைச் சேர்ந்தவர் 29 வயதான ஹேமலதா. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அருகிலிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவரது கணவருக்கு வேலை பறிபோயிருக்கிறது. தொகுப்பு வீடுகள் கொண்ட அந்த காலனியின் மையத்தில் வேறு சில பெண்களுடன் அமர்ந்திருக்கிறார் ஹேமலதா. மிக நெருக்கமாக கட்டப்பட்ட சுமார் 30 கான்க்ரீட் வீடுகளைக் கொண்ட அந்தக் காலனியில் அவர்கள் அமர்ந்திருந்த பகுதி தான் ஓரளவுக்கு பொதுப் புழக்கத்திற்கு பயன்படும் பகுதியாகும்.

கணவரின் வேலையிழப்பைத் தொடர்ந்து வருமானம் நின்று போனதை ஈடுகட்ட பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார் ஹேமலதா.

”சால்வைகளை வெட்டிக் கொடுக்கும் இந்த வேலையை பக்கத்து வீட்டினர் தான் எனக்கு கொடுத்தனர். ஒரு சால்வையை வெட்டிக் கொடுத்தால் ஐம்பது பைசா கிடைக்கும். ஒவ்வொரு நாளும் 50-லிருந்து 60 சால்வைகள் வரை வெட்டிக் கொடுக்க முடியும்” என்ற ஹேமலாதாவைச் சுற்றி சால்வைகள் குவிந்திருக்க, அவரது மூன்று வயது பெண் குழந்தையும் அமர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவர் சம்பாதிக்கும் முப்பது ரூபாய்களை வைத்துக் கொண்டு அந்தக் குடும்பத்தின் மிக அடிப்படையான தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது.

”இது மிகக் குறைவான தொகை. இதை வைத்துக் கொண்டு ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது. நான் வாடகை கட்ட வேண்டும், மின்சாரக் கட்டணம், பள்ளிக் கட்டணமெல்லாம் வேறு இருக்கிறது” எனச் சொல்லும் போதே அவரது குரல் உடைகிறது. “வேறு வழியில்லை. எனது கணவர் இன்னொரு வேலையைத் தேடிக் கொள்ளும் வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும்” என்கிறார் ஹேமலதா.

இத்தனை செலவுகளைத் தாண்டி பிறந்ததில் இருந்தே பல நோய்களால் அவதிப்படும் தனது இரண்டு வயது குழந்தைக்கும் அவர் மருந்துகளை வாங்க வேண்டும். “எனது மகளுக்கு தினமும் மருந்து கொடுத்தாக வேண்டும். வேறு வழியில்லாமல் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ கந்து வட்டிக்காரர்களிடமோ தான் கடன் வாங்க வேண்டியிருக்கிறது” என்ற ஹேமலதா, “அதையெல்லாம் எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ?” எனக் கேட்கிறார்.

இந்தியாவின் சராசரி மாதச் சம்பளமான 16,660 ரூபாயை விட ஹேமலதாவின் கணவர் பெற்று வந்த மாதச் சம்பளமான 7000 குறைவு தான் என்றாலும், நால்வர் கொண்ட அந்த குடும்பத்தை எப்படியே கரையேற்றி வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அவரது கணவருக்கு வேறு வேலையும் கிடைக்கவில்லை.

ஆயத்த ஆடைகளுக்குப் பெயர் போன லூதியானா ஒரு பெரிய தொழில் நகரம். லூதியானாவில் மட்டும் சுமார் 12,000 ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. ஆனால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அடுத்து இந்நிறுவனங்களில் சுமார் எழுபது சதவீதத்துக்கும் மேல் மூடப்பட்டு சுமார் நான்கு லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

அரசின் முடிவால் தனது கணவரின் வேலை பறிபோனதென அவர் ஆத்திரப்படுகிறார் – “அரசின் எல்லாத் திட்டங்களும் பணக்காரர்களுக்கானவை என்றே நினைக்கிறேன்; அவர்கள் ஏழைகளைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை” என்ற ஹேமலதா, ”தயவு செய்து பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் வைத்திருந்த ஒருவராவது பட்டினியோடு தூங்கினார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா” எனக் கேட்கிறார்.

தங்களைப் போன்ற ஏழைகளுக்கு அரசு ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டுமெனச் சொல்லும் ஹேமலதா, “இது மாபெரும் பேரழிவு. மீண்டும் எனது வாழ்கை சீரடையும் எனத் தோன்றவில்லை” என்கிறார்.

***

ராஜ்விந்தர் சிங் (34 வயது, தொழிற்சங்கத் தலைவர் ) – இந்த நடவடிக்கை மக்களை வேலையற்றவர்களாக்கி பட்டினியிலும் நம்பிக்கையற்ற நிலைக்கும் தள்ளியிருக்கிறது.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கை எந்த வகையில் பயனுள்ளது என்பது எனக்குத் தெரியாது; ஆனால், முறைசாராக் கூலித் தொழிலாளிகளுக்கு அது ஒரு மாபெரும் பேரழிவு” என்கிறார் ராஜ்விந்தர் சிங். கர்கானா மஸ்தூர் யூனியனின் (ஆலைத் தொழிலாளர் சங்கம்) தலைவர் ராஜ்விந்தர். லூதியானாவில் உள்ள அரசு தொகுப்பு வீடுகள் காலனியில் இருக்கும் ஒரு சிறிய நூலகத்தில் அமர்ந்திருந்தார் ராஜ்விந்தர்.

பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வந்த உடனேயே மொத்த விலைச் சந்தை சுமார் 20 நாட்களுக்கு மூடப்பட்டதாக குறிப்பிடும் ராஜ்விந்தர், “அது மக்களின் வேலைகளைப் பறித்து பட்டினியிலும் நெருக்கடியிலும் தள்ளிவிட்டது” என்கிறார். மேலும் பேசும் போது, “சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து விற்பனை நின்று போனது. இதனால் ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு எஞ்சிய ஆலைகளில் 50 சதவீத அளவுக்கு ஆட்குறைப்பும் செய்யப்பட்டது” என்கிறார்

”எனக்குத் தெரிந்து 250 தொழிலாளர்களுடன் இயங்கி வந்த ஆலைகள் எல்லாம் இப்போது பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெறும் ஐந்து தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகின்றது” எனக் குறிப்பிட்ட ராஜ்விந்தர், பீகார், மேற்குவங்கம், உபி போன்ற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்த கூலித் தொழிலாளிகள் வேறு வழியின்றி சொந்த ஊர்களுக்கே சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

“கடந்த பல நாட்களாக வீட்டில் உணவில்லாமல் அல்லாடிய பல தொழிலாளர்களைப் பார்த்து விட்டேன் – ஏன் அவர்களுடைய குழந்தைகளும் கூட பட்டினி தான் கிடந்தார்கள்” என்ற ராஜ்விந்தர், சில ஆலை முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களுக்கு செல்லாத நோட்டுகளில் சம்பளம் வழங்கியதாக குறிப்பிடுகிறார் – “அந்தக் காசை வாங்கிக் கொண்டு வங்கிகளின் முன் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதைத் தவிற ஏழைகளுக்கு வேறு வழியில்லை. இவர்கள் தினக்கூலிகளாகவும் இருப்பதால் இந்த வாய்ப்பை விட்டால் அன்றைய கூலியும் கைக்கு வராது” என்றவர் தனது கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

தொழிலாளிகளின் துன்பதுயரங்கள் அவரையும் வெகுவாக பாதித்திருந்தது. “தொழிலாளிகளிடம் இருந்து வசூலிக்கும் சந்தாவில் இருந்து தான் எனக்கு சம்பளம் தரப்படுகின்றது. தொழிலாளியிடமே பணமில்லை என்றால், தொழிற்சங்கத்துக்கு யார் தான் சந்தா கட்டுவார்கள்?”

– தொடரும்

தமிழாக்கம்: முகில்
நன்றி : அல்ஜசிரா
100 days of demonetisation: Stories of hardship

களவாணி ஜெயா படங்களை அகற்று ! தடையை மீறி தமிழகமெங்கும் போராட்டம் !!

10

விழுப்புரம்

குற்றவாளி ஜெயாவின் படங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயாவின் சமாதியை அகற்று ! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் இன்று -20.02.2017 திங்கள் காலை 10.00 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை  அருகே குவிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர். மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழக்கங்கள் எழுப்பினர். பீதியடைந்த போலிசு வழக்கம் போல  குற்றவாளி ஜெயாவுக்கு ஆதரவாக களமிறங்கி போராடிய மக்கள் அதிகார அமைப்புதோழர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததனர்.

கைது செய்யும் போது அதைப் பார்த்த கூடி நின்ற மக்களில் பெண்கள் கோபமாக பேசிக்கொண்டார்கள்….
“ஆமாமாம் அவள உடக்கூடாது. அவ போட்டோ இருக்கக்கூடாது. மிக்சி, கிரைண்டர்ளல இருக்கறத எடுக்கனும். அத வேற ஊட்ல போய் சொரண்டனுமா. அவ இருக்கும்போதும் நமக்கு தொல்ல. போனபிறகும் தொல்ல. சே.. சனியன். அந்த இன்னொருத்தி இருக்கா பாரு சசிகலா அவள ஜெயில்ல போடக்கூடாது. தூக்குல போட்டு அவகதையும் முடிக்கணும். அப்பத்தான் நம்மள புடிச்ச தொல்லவுடும்.”


( படங்களைப்பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம். தொடர்புக்கு: 99441 17320.


மதுரை

க்கள்  அதிகாரம் மதுரை  மண்டலம் சார்பில் சொத்துகுவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட களவாணி ஜெயாவின் படத்தையும் பெயரையும் அரசின் அத்தனை திட்டங்களிலிருந்தும் பாடநூல்களிலிருந்தும் நீக்க வேண்டும். மேலும்
மாணவர்களின் மகத்தான போராட்டத்தால் அடையாளம் பெற்ற மெரினா கடற்கரையில் குற்றவாளி ஜெயாவின் கல்லறை அதுவும் அரசின் செலவிலேயே இருப்பது  வெட்கக்கேடு! ஆகவே குற்றவாளி ஜெயாவின் கல்லறையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்!

என்ற முழக்கத்தோடு 19.2.2017 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி காலை 11 மணிக்கு வாசக அட்டைகள், கொடிகள், மெகா ஃபோனுடன் தோழர்கள் அங்கே கூடினர். கூடியவுடனே  தோழர்களை விட அதிக எண்ணிக்கையில் காத்திருந்தது போலீஸ் படை. அனுமதி இல்லை கைது செய்வோம் என்று கூறினர் மிரட்டினர். கைது செய்தாலும் பரவாயில்லை நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று கூறி தோழர்கள் முழக்கம் போட ஆரம்பித்தனர். முழக்கம் முடித்தவுடன் பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி பேட்டி கொடுத்தார்.

அதன் பிறகு மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது உரையாற்றினார். அவர் பேசும் போது ஜெயா முதல் முறையாக முதல் அமைச்சராக இருந்த 1991- 96 வருடகாலகட்டமானது தமிழகத்தின் இருண்ட காலம். அந்த அளவுக்கு அது காட்டாட்சியாக இருந்தது. அரசு சொத்துக்கள் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்பட்டது, அரசு நிலங்கள் ஜெயாவின் பெயரில் சர்வசாதாரணமாக மாறியது. இதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

21 வருடத்திற்கு பிறகு தற்போது உச்சநீதிமன்றம் தண்டணையை உறுதி செய்துள்ளது. அதற்குள் ஜெயா இறந்துவிட்டார். இவ்வளவு தாமதமான‌ தீர்ப்பு வருவதற்கு ஜெயாவின் இழுத்தடிப்பு ஒரு முக்கியமான காரணம். இதனால் வாய்தாராணி என்றே பெயர் பெற்றவர் ஜெயலலிதா. 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி குன்ஹா ஜெயாவின் களவானிதனத்தை 1500 பக்க அறிக்கையில் விவரித்து தண்டனை அளித்து தீர்ப்பு தந்தார். ஆனால் அதன் பிறகு அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தத்து உடனடியாக பினை வழங்கினார். களவானி ஜெயா நீதிமன்றத்தை 20 ஆண்டுகாலம் வாய்தா வாங்கி அலையவிட்டாலும் பரவாயில்லை ஜெயாவின் மேல்முறையீட்டை மட்டும் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத ஒரு சட்டமாக ஒரு குற்றவாளியின் மேல் முறையீட்டை உடனே ஏற்றுக்கொண்டு 2 மாதத்தில் பைசல் செய்யப்படும் என்று சொன்ன ஒரே நீதிபதி தத்துதான். அதன்படி குமாரசாமி ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டல் கணக்கை தீர்ப்பாக வழங்கினார். ஜெயாவை விடுதலை செய்தார்.

தற்போது உச்சநீதிமன்றம் குமாரசாமியின் தீர்ப்பை நீதிமன்ற தீர்ப்பின் வரலாற்றிலேயே இல்லாததாக முழுவதுமாக ரத்து செய்துள்ளது. ஜெயாவை முதல் குற்றவாளியாக அறிவித்துள்ளது. சட்டப்படியும் நியாயப்படியும் பார்த்தால் ஜெயாவின் படத்தையும் பெயரையும் அத்தனை அரசு கோப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும். ஆனால் ஓ.பி.எஸ். அம்மாவி ஆட்சி மீண்டும் வரும் என்கிறார், எடப்பாடி அம்மாவின் ஆசியோடு ஆட்சி தொடரும் என்கிறார்.

தங்கத்தாரகை, புரட்சித்தலைவி என்கின்றனர்.  ஒரு குற்றவாளியை போற்றும், அவரின் படங்களை  சட்டைப்பையில் வைத்துக் கொண்டு திரியும் எவரையும் கிரிமினல் போலத்தான் நாம் பார்க்க வேண்டும். ஒரு களவாணியின் ஆசியோடு ஆட்சி நடத்துவோம் என்று மந்திரிகள் தைரியமாக கூறுவார்கள் என்றால் அவர்கள் மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள். எனவே முதல் கட்டமாக களவானி ஜெயாவின் பெயரையும் படத்தையும் அரசின் பள்ளி பாடநூல்களிலிருந்து நீக்க வேண்டும். அங்கே திருவள்ளுவர் படத்தை ஒட்டவேண்டும்.

… என்று பேசிக்கொண்டிருக்கும் போதே  காவல் துறை  கைது செய்ய ஆரம்பித்துவிட்டது.

அதன்பிறகு கைது செய்யப்பட்ட தோழர்களை மண்டபத்தில் அடைத்து வைத்துவிட்டு ஒட்டு மொத்தமாக மண்டபத்தில் தோழர்கள் பேசிக்கொள்வதை வீடியோ ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தார்கள் காவல் துறையினர். தோழர்கள் தட்டிக் கேட்கவே எங்களை புதிதாக இப்படி வீடியோ எடுக்க சொல்லியுள்ளார்கள் என்றது போலீஸ். எந்த சட்டத்தில் இது உள்ளது சொல்லுங்கள் என்று கேட்டு நீங்கள் இதை நிறுத்த வில்லை என்றால் நாங்கள் அனைவரும் இங்கேயே உண்ணாவிரதம் இருப்போம், யாரும் பெயரை பதிவு செய்யமாட்டோம் என அறிவித்தவுடன் அதை கைவிட்டது காவல்துறை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.


கோவில்பட்டி

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 20.02.2017 அன்று கோவில்பட்டியில் குற்றவாளி ஜெயாவின் சின்னங்களை அகற்று ! எனும் தலைப்பின் கீழ் ஆர்ப்பாட்டமானது நடத்தப்பட்டது.

( படங்களைப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவில்பட்டி.


கோவை

கோவையில் 18.02.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் காந்திபுரம் பேருந்துநிலைம் எதிரில் குற்றவாளி ஜெயாவின் சமாதியை மெரினாவில் இருந்து அகற்று என்ற ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காந்திபுரம் பேருந்து நிலையத்தின் முன்பு கொடிகள், பதாகைகள், தட்டிகள் என விண்ணதிரும் முழக்கங்களுடன் அங்கு குவிந்திருந்த போலீசின் முன்னிலையிலேயே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இதில் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றினார். சுமார் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நீடித்தது இதில் கோத்தகிரி, உடுமலைப் பேட்டைத் தோழர்களும் பங்கேற்றனர். பெருந்திரளான மக்களும் நின்று ஆர்ப்பாட்டத்தை கவனிக்க ஆரம்பித்தனர். இதனால் காவல்துறை தோழர்களைக் அவசர அவசரமாகக் கைது செய்ய ஆரம்பித்தது. தோழர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.

அங்கும் தோழர்கள் மதியம் 1:00 மணி முதல் 5:30 வரை விவாதம், பேச்சு, புரட்சிகரப் பாடல்,  என கருத்தரங்கம் போல நிகழ்சி நடத்தினர். பின்னர் மாலை 6:00 மணிக்கு பதாகைகளை போலீசு வழக்கு ஆதாரமாக வாங்கிக் கொண்டு அனைவரையும் விடுதலை செய்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவை. 95858 22157.

( படங்களைப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவை.

அரசு மிக்ஸியில் குற்றவாளி ஜெயா படம் அகற்றப்பட்டது !

1

மிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொதுச் சொத்துக்களில் மற்றும் மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களில் குற்றவாளியின் படத்தை ஒட்டிவைத்திருப்பது அவமானம், அவற்றை அகற்ற வேண்டும் என்ற தலைப்பின் கீழ் பிரச்சாரம் மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 20.02.2017 அன்று விருத்தாச்சலத்தில் அரசு மக்களின் வரிப்பணத்தில் வழங்கியுள்ள விலையில்லா மிக்ஸியில் உள்ள குற்றவாளி ஜெயா படத்தின் மீது திருவள்ளுவரின் படம் ஒட்டப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் கவனித்தனர். மேலும் பொது மக்களிடமும் அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் பள்ளிப்பாட புத்தகங்கள், நோட்டுக்களில் ஜெயாவின் படங்களை நீக்கச்சொல்லி பிரச்சாரம் செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
விருத்தாச்சலம்.

சீர்காழி விவசாயத்தை சிதைத்த அரசு – நேரடி ரிப்போர்ட்

0

நாகை மாவட்டம் காவிரி டெல்டாவின் ஒரு பகுதி. காவிரி ஆற்றில்  கட்டப்பட்டுள்ளது கல்லணை. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்டகாவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்புவில்  உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.

கல்லணைக் காவிரி பின்னர் காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம் என 4 ஆகப் பிரிகிறது.  பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புதுஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

அதாவது வெள்ளக் காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடதுபுறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில்  திருப்பிவிடப்படுகிறது. காவரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம் என்ற பெயர்க்காரணமும் சொல்லப்படுவதுண்டு. கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் கனஅடி  நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரைத் தேக்கிப் பாசனத்துக்கு திருப்பி விட்டால் இந்த ஆண்டு சம்பா நடவுக்கு தேவையான நீர் கிடைத்திருக்கும்.  வாடி- பணங்காட்டான்குடி அருகே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை இந்த அரசு அலட்சியப்படுத்தியதால் தண்ணீர் முழுவதும் வீணாகக் கடலில் கலக்கிறது.

வாடி- பணங்காட்டான்குடியில் தடுப்பணைக் கட்டுவதன் மூலம் சீர்காழி, கொள்ளிடம், சிதம்பரம் உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் முப்போகமும் விவசாயம் செய்ய முடியும். ஆனால் அரசு திட்டமிட்டே இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறது.

சீர்காழி ஒன்றியத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனத்தை நம்பி சுமார் இருபத்து ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயம் முற்றிலும் பாழாகியுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்க சென்றோம். நாங்கள் செல்லும் வழியெல்லாம் பாதி நிலங்கள் கரம்பாகவும், மீதி நிலங்கள் கதிர் வரும் நிலையில் பயிர்கள் காய்ந்தும் அவற்றில் கால்நடைகள் மேய்ந்து கொண்டும் இருந்தன.

ஒரு காலத்தில் இப்பகுதியில் கணிசமான அளவு வாழை, மல்லிப்பூ உள்ளிட்டவை எல்லாம் செழிப்பான முறையில் விவசாயம் செய்து வந்தனர்.  ஆனால் தற்பொழுது காடும் காய்ந்து, வீடும் வாழ்விழந்து தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

விவசாயி இமயவரம்பன்

இமயவரம்பன்  65 வயது விவசாயி. பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இன்றும் பல போராட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்பவர். அவர் கூறுகையில் இருபது வருசத்துக்கு முன்னாடி விவசாயம் செய்யும் போது ஏர் உழுவ வேண்டும்’ன்னா வீட்ல இருக்கற எல்லோரும் கழனிக்கு சென்று விடுவோம். இயற்கையான விவசாயம்.

ஏர் உழுவதற்கு முன்னாடி எருவு அடிப்போம், தழை வெட்டிப் போடுவோம்,  அறுவடை முடிஞ்சதும் மாட்டை எல்லாம் கழனில கட்டிடுவோம். அது அங்கேயே சாணியப் போடும். அது தான் கழனிக்கு ஊட்டச்சத்து மாதிரி. மாட்டை விக்கவே மாட்டோம். சூடு அடிக்கனும்’ன்னா மாட்டை கட்டி தான் அடிப்போம்.

நாலு மடையிலும் தண்ணி வரும். அந்தத் தண்ணிய பாக்கும் போதே அள்ளி மொண்டு குடிக்கணும் போல இருக்கும். தண்ணி வர வேகத்துல மீன்கள் எல்லாம் துள்ளி குதிக்கும். மூணு போகமும் சுகபோகமாகத்தான் இருக்கும். விவசாயத்தை அவ்ளோ ஆர்வமா செய்வோம். இப்ப விவாசாயம் செய்யவே மனசு இல்லை.

இப்ப ஏன் விவசாயம் செய்வதில்லை?

தண்ணி இல்ல தம்பி, காவிரித் தண்ணியும் வரல. நிலத்தைடி நீரை நம்பியும் பயிர் வைக்க முடியல. நீர் மட்டம் சுத்தமா  கொறஞ்சிடுச்சி. பத்து அடிக்கு மேல போர் போட்டா, உப்பு தண்ணி தான் வருது. இந்த நெலமையில எப்படி விவசாயம் பண்றது?

பல வருசமா கல்லணையில இருந்து தண்ணியத் தொறக்க சொல்லி போராடுறோம். அதிகாரிங்க காதுலையே போட்டுக்க மாட்றாங்க. ஒவ்வொரு வருசமும் கொள்ளிடத்துல தண்ணி வீணாப் போய் தான் கடல்ல கலக்குது. பணங்காட்டாங்குடில தடுப்பணைக் கட்டச் சொல்லி எத்தனை மனு, எத்தனை போராட்டம். இந்த அரசு கண்டுக்கவே இல்லை என்றார்.

விவசாயி காந்தி

அருகாமை கிராமத்தில் உள்ள காந்தி என்பரைச் சந்தித்தோம்.

அவர் கூறுகையில், எழுநூத்து ஐம்பது கோடியில ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்  திட்டத்துக்கு ஒதுக்குறாங்க. நாங்க காமராஜர் ஆட்சில இருந்தப்பவே வடரங்கத்தில் ஒரு பெட்டேம்  கட்ட சொல்லி மனு கொடுத்தோம்.  இது வரைக்கும் இந்த அரசாங்கம் கண்டுக்கவே இல்ல. திமுக ஆட்சில இருக்கும் போது வந்து அளந்துட்டு போனதோட சரி.. அந்தம்மா இருந்தப்ப 400 கோடி ஒதுக்குனதா சொன்னங்க. சொல்லி ரெண்டு வருஷம் ஆகுது ஒரு கால் கூட நடவே இல்லை.

இப்ப தண்ணி இல்லாம பயிர் எல்லாம் காயுது. குடிக்க தண்ணி இல்லாம நாங்க படாத அவதிப்படுறோம். 25 வருசமா இந்த கொள்ளிடத்துல ஆத்து மணலை ராவும் பகலுமா கொள்ளையடிச்சி  தண்ணியப் பூரா உறிஞ்சிட்டானுங்க. அப்புறம் எங்கத் தண்ணி இருக்கும்.  நாங்க போர் போட்டு தண்ணி எப்படி எடுக்க முடியும்.? மீறி போட்டா எல்லாம் உப்பு தண்ணியா தான் வருது. இந்த உப்பு தண்ணி உள்ள வர்றதைக் கூட இந்த அரசால தடுக்க முடியல. அப்புறம் நாங்க எங்கிருந்து விவசாயம் செய்யறது, என்ற ஆவேசமான பேச்சில் தென்பட்டது. அவர் அகிம்சைவாதி காந்தியல்ல.

விவசாயி சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம் 85 வயது. கொள்ளிடம் பாசன சங்கக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தோம். விவசாயிகளின் நலனுக்காக இந்தத் தள்ளாத வயதிலும் தளராமல் போராடி வருகிறார். மேட்டூர்ல இந்த வருஷம் 85 அடி தண்ணீர் இருந்தது. ஞாயமாக எங்களுக்கு 10 சதவீதம் தண்ணிய திறந்து விடனும். ஆனால் இந்தத் தண்ணிய  திறந்து விடாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது அரசு.

திருச்சியில் உள்ள செயற்பொறியாளரைத் தொடர்பு கொண்டு பல முறைப் பேசியும் தண்ணீரை திறந்து விடவில்லை. அப்படியே திறந்து விட்டாலும் ஆச்சாலபுரம் வரைக்கும் போய் சேராது. எந்தக் கிளை வாய்க்காலும் தூர் வாராமல் மேடும் பள்ளமாவும் இருக்கு. எப்படி தண்ணீ போய் சேரும். தூர் வாரச் சொல்லி எத்தனையோ போராட்டம் நடத்தியாச்சு. இதையும் கூட இந்த அதிகாரிங்களால செய்ய முடியல.

விவசாயத்துக்கு மானியம் கொடுக்கிறோம்னு சொல்றாங்க. ஆனா எந்த மானியமும் எங்களுக்கு வரதே இல்லை. சென்ற ஆண்டு இன்சூரன்ஸ் கட்டினோம். இதுவரைக்கும் அந்தத் தொகை வரவில்லை. முதலைமேடு கூட்டுறவு சங்கம் இங்கு இருக்க கூடிய விவசாயிகளை எல்லாம் ஏமாற்றுகிறது. மொத்தமாக இந்த அதிமுக அரசே எங்களுக்கு எதிரியா தான் இருக்கு. இந்த அரசை நம்பி எங்க வாழ்க்கை எல்லாம் வீணானது தான் மிச்சம் என்றார்.

பல ஆண்டுகாலமாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அணை கட்டுவதற்கும், நீரை திறந்து விடுவதற்கும் ஏன் இந்த அரசு தயங்குகிறது.  விவசாயத்தை திட்டமிட்டே ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது தான் இவர்கள் நோக்கம். குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் நடந்து வரும் மணற்கொள்ளை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் விவசாயிகளின் கோரிக்கை இத்தனை ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.அது மட்டுமில்லாமல், இறால் பண்ணை முதலாளிகளின்  நலனும் அடங்கியுள்ளது.

கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் திட்டமிட்டு  நிராகரித்துள்ளார்கள். அளக்குடி முகத்துவாரம்  வழியாக  கொள்ளிடம் ஆற்றில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர்  தூரத்திற்கு கடல் நீர் மேலேரியுள்ளது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு அதனைச் சுற்றயுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்படைந்துள்ளது.  நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்துள்ளதால் குடிதண்ணீருக்கு கூட இப்பகுதி மக்கள் கடுமையாக திண்டாடி வருகிறார்கள்.  சுமார் 10 ஆயிரம் ஏக்கர் உவர்நிலமாக மாறி விவசாய நிலங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளது.  அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்வதையே நிறுத்தியுள்ளார்கள்.

நல்லூர் உப்பனாறு வழியாக கடல் நீர் வருதல்

நல்லூர், முதலைமேடு அதனைச் சுற்றியுள்ள  கிராமத்தில் விவசாய நிலத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இறால் பண்ணை  அமைத்துள்ளார்கள். இந்த பண்ணைகளுக்குத் தேவையான கடல் நீரை நல்லூர் உப்பனாறு வாய்க்கால் வழியாகக் கொண்டு வந்துள்ளார்கள். இந்த மோசடித் தனத்தை எதிர்த்து அப்பகுதி மக்களைத் திரட்டி விவசாயிகள் விடுதலை முன்னணியினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக இறால் பண்ணைகள் அகற்றப்பட்டு, அங்கு கடல் நீர் உட்புகுவதை தடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் விளைவாக தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமில்லாமல் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் வழியாக சுமார் சீர்காழி நகரம் வரை கடல் நீர் உட்புகுந்துள்ளது. இந்த ஆற்றினை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கரில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணைகளுக்கு தேவையான நீர் இந்த ஆற்றில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. எடமணல், திருணகிரி இதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில்  கடல் நீர் ஏறியதன் விளைவு சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் செய்வதற்கான தகுதியை இழந்துள்ளது. ஆழ்குழாய் மூலம் நீரை எடுத்து வயலுக்கு பாய்ச்சுவதால் நீரில் உள்ள நச்சுத்தன்மை  மண்ணை மாசாக்குகிறது. இதே பகுதியில் ONGC நிறுவனம் இரண்டு பிளாண்ட்களை நிறுவியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வட்டப்பாதையில் சீர்காழி முழுவதும் திட்டமிட்டே சிதைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. முதலாளிகளின் கொள்ளை சூரையாடளுக்காக சீர்காழி நகர மக்களின்  வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

தற்பொழுது நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த பெரும் அபாயத்தை முறியடிக்க  அரசிடம் மனு கொடுப்பதோ, அல்ல பன்னீரையோ, சசிகலாவையோ  முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதன் மூலமோ இந்த அயோக்கியத்தனங்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனென்றால், கொள்ளிடத்தை கொள்ளையடித்தது பன்னீர்  தான். இது மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு தெரிந்து தான் நடந்தது. இவர்களால் இதை தடுக்க முடியாது. நம் வாழ்வை சூறையாடியது இந்த அரசும், ஓட்டுக்கட்சிகளும் தான். யாரைத் தேர்ந்தெடுப்பது என யோசிக்காமல் நாமே நம் அதிகாரத்தை கையில் எடுப்பது மட்டும் தான் தீர்வு. விவசாயிகள் ஒருங்கிணைந்து போராடினால் தான் இதனை வீழ்த்த முடியும். போராடுங்கள்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்