தூத்துக்குடியில் மக்களின் எதிரியான காவல்துறைக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து விழா எடுத்த மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் !
இந்த வெற்றிவிழா யாருக்கு?
ஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், 2017 பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. சிபிஐ மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.
பிரம்மாண்டமான மேடை, மைதானத்தில் பெரிய பரப்பளவில் உட்காருவதற்கான ஏற்பாடு, பேனர், சுவரொட்டி, அழைப்பிதழ், பொழுது போக்குவதற்கான ஏற்பாடுகள் என இந்த வெற்றிவிழாவுக்கான செலவுகள் எப்படியும் சில லட்சங்களைத் தாண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
சரி, இந்த வெற்றிவிழா யாருக்கு? அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததை கூறுகிறோம். போராடிய மாணவர்கள், பொதுமக்களுக்கு என்று தொடங்கும் வாக்கியம் அதன்பின் மாணவர்களுக்கு நல்லமுறையில் பாதுகாப்பளித்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி என்று முடிகிறது. விழா சுவரொட்டிகள் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழுவின் பெயரில் கடைத்தெருக்களில் வசூலும் நடந்தது.
நாம் மக்களின் எதிரியான அரசுக்கும், அதன் நகங்களான போலீசுக்கும் நன்றி தெரிவிக்கும் SFI – யின் மானங்கெட்ட செயலை கண்டித்து பிரசுரம் போட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அம்பலப்படுத்தினோம்.
SFI – யின் மானங்கெட்ட செயலை கண்டித்து பிரசுரம் போட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக அம்பலப்படுத்தினோம்
அரசே இயக்கும், போலீசே வழிநடத்தும் விழாவுக்கு பள்ளி மாணவர்கள் சிலரை வரவழைத்திருந்தனர். சிறுவர்களை மேடையேற்றி சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடவிட்டனர். பகல் முழுவதும் இப்படி பாட்டு, விளையாட்டு என்று ஒப்பேற்றினர்.
மாலை 7.00 மணியளவில் மேடையில் SFI யின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் தலைமை உரையாற்றினார். “நாங்க கோவில்பட்டியில் காவல்துறையினருக்கு லட்டு தந்தோம். அதிகாரிகளிலிருந்து ஊர்க்காவல் படையினர் வரை 200க்கு மேற்பட்டோருக்கு லட்டு தந்தபோது அடைந்த சந்தோசத்தை என்ன வென்பது! ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களுக்கு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி” என்று இருகரம் விரித்து மனமுருகி சிலாகித்தார்.
இப்படி அவர் பேசி முடித்து அடுத்ததாக வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பிரதிநிதி மைக்கை பிடித்தார். அவர் பேச தொடங்கியவுடன் இளைஞர்கள் கூட்டம் ஒன்று மேடையை முற்றுகையிட்டது. “ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? வெற்றிவிழா நடத்த உங்களுக்கு என்ன உரிமை? போராடியது நாங்கள்! வசூல் வேட்டையில் நீங்களா?” என்று உலுக்கி எடுத்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் மைக்கை வைத்துக்கொண்டு பேச்சாளர் தவிக்க, காவல்துறை ஓடோடி வந்தது.
வாங்க ஒரமா போய் பேசிக்கலாம் என்று ஆய்வாளர் இழுத்துச் சென்றார். அங்கு கூடிய இளைஞர்களிடமிருந்து பேசுபவர்களை மட்டும் தனிமைப்படுத்த காவலர்களுக்கு உத்தரவிட்டார். எனினும் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் சூழ்ந்து வந்து கேள்விகளால் ஆய்வாளரை திணறடித்தனர். “ஒரு நிமிசம் மட்டும் மைக்கை வாங்கி குடுங்க! இங்கு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் இப்ப விழா நடத்துற SFI க்கும் எந்த தொடர்பும் கிடையாதுங்கறத மட்டும் அறிவித்துவிட்டு வெளியேறி விடுகிறோம்” என்றனர்.
பேச அனுமதி மறுத்த காவல்துறை, விழாவை முடித்துக்கொள்ள வலியுறுத்தியது. உடனே போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசளிப்பு தொடங்கியது. வணிகர் சங்கத்தை சேர்ந்த வெள்ளையன் உள்ளிட்டோர் பேசாமலே விழா முடிந்தது.
இந்த விழாவிற்கு என்ன தேவை வந்தது?
தமிழக காவல்துறையின் அராஜகம் நாடு முழுவதும் அம்பலப்பட்டு நாறியுள்ளது. காக்கிகள் யாருக்கானவர்கள் என்று சென்னை மேடவாக்கத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI தோழர்கள் பட்ட காயம்கூட ஆறவில்லை; அதற்க்குள் அடித்தவனுக்கு பாராட்டு விழா!
கால்தான் எட்டி உதைத்தது ! நாங்கள் கைக்குதான் முத்தம் தருகிறோம் !! என்பதாக நடந்துகொள்கிறது SFI. ஒருவேளை இவர்கள் தமிழக காவல்துறைக்கு விழா எடுக்க வில்லை ! தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்குதான் நன்றி கூறுவதாக விளக்கம் அளிக்கலாம்.
சரி தூத்துக்குடி காவல்துறையின் யோக்கியதை என்ன?
ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கு போட்டியாக சிவாலய ஓட்டம் நிகழ்ச்சிக்கு வரவேற்று சுவரொட்டி போடும் DYFI
அன்று நடைபயணம் புறப்பட்ட DYFI யினரை இதே போலீசார்தான் தெற்கு காவல்நிலையம் முன்பு அடித்து துவைத்தது. ஜனவரியில் தேவாலயத்திற்க்கு அசன விருந்து சாப்பிட வந்த இளைஞனை எதிர்த்து கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இரவு முழுவதும் லாக்கப்பில் வைத்து அடித்தே கொன்றதும் இதே போலீசுதான். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் இந்த கொட்டடி படுகொலையை கண்டித்து, காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பிரச்சாரம் செய்தது. ஆனால் மார்க்சிஸ்டு கட்சியோ பாதிக்கப்பட்டவரிடம் “அரசு வேலை வாங்கித் தருகிறோம்; இழப்பீடு வாங்கித் தருகிறோம்” என்று பேசி உடலை வாங்க வைத்து, காவல்துறைக்கு “உடுக்கை இழந்தவன் கையாக” நின்றது !
மாவட்ட செயலர் சுரேஷ் பாண்டியிடம் லட்டு வாங்கிய காவலர்களுக்கு தனிப்பட்ட முறையில் பழக்கம் உண்டு ! இவரை நள்ளிரவில் இழுத்துச்சென்று அடித்து துவைத்து அச்சில் ஏற்றமுடியாத வக்கிர தாக்குதல்களை நடத்தியதும் இதே காவல்துறைதான் ! இவர்களை கண்டிக்க, எதிர்க்க துப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை; இப்படியா மானங்கெட்டு சரணடைவது !
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசின் அராஜகம் வெளிவந்து தமிழகமே கொதித்திருந்த சூழலில் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? மக்கள் அதிகாரம் சார்பாக “போலீசு ராஜ்ஜியம்; எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்” என்ற பிரசுரத்தை வ.உ.சி. கல்லூரி வாயிலில் தந்தபோது SFI-யினர் பணமதிப்பு நீக்கத்தை கண்டித்து மனித சங்கிலிக்கு வரும்படி பிரசுரம் தந்தனர். பணமதிப்பு நீக்கம் குறித்து போராடுவது சரியென்றாலும் இப்போது தமிழகமே கொந்தளிக்கற பிரச்சினையை விட்டுட்டு இது தேவையா? என்று கேட்டோம். “நாங்க ஜனநாயக அமைப்பு தோழர். உங்கள மாதிரி தீவிரமா சொல்ல முடியாது ! இந்த முறைக்குள்ள இப்படித்தான் இருக்கணும்” என்று இதே சுரேஷ் பாண்டி மழுப்பினார். அதாவது நாம் தீவிரவாத அமைப்பு போலவும் இவர்கள் ஜனநாகயமாக செயல்படுவதாகவும் கூட இதை புரிந்து கொள்ளலாம். ஜனநாயக ரீதியாக போராடிய மாணவர்களை தாக்கிய போலீசைக் கண்டிப்பது தீவிரவாதம்; தாக்கிய போலீசை பாராட்டுவது ஜனநாயகம் என்றால் இந்த புதிய புரட்சி தத்துவ விளக்கத்தை யாரிடம் சொல்லி அழ?
போலீசுடன் மட்டுமல்ல பா.ஜ.க-வுடனும் ஒத்துப்போகிறார்கள். குமரி மாவட்டத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவில்களுக்கு இரவில் ஓடி வழிபடும் வழக்கம் உண்டு. இந்த சிவாலய ஓட்டத்தை இந்துமதவெறியர்கள் பயன்படுத்தி சுவரொட்டி ஒட்டுவர். தற்போது இவர்களுக்கு போட்டியாக சி.பி.எம் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் வரவேற்பு சுவரொட்டியை ஒட்டுகின்றனர். . “யாராக இருந்தாலும் நம் விவேகானந்தரை, இந்துத்துவாவை ஏற்றே தீரவேண்டும். இதோ CPM காரர்கள் அப்படி நமக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்” என்று நாகர்கோவிலில் எள்ளி நகையாடியுள்ளது பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான ABVP.
இதற்க்கு மேலும் இவர்களிடம் இருக்கலாமா செங்கொடி !
தகவல், படங்கள்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
துத்துக்குடி
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது சீர்காழி போலீசு. அடுத்ததாக ஜெயா சமாதியை அகற்றக் கோரி சுவரொட்டி ஒட்டியதற்காகவும் மக்கள் அதிகாரம் அமைப்பின் இரண்டு தோழர்கள் மீது வழக்கு போட்டது. தற்போது இந்த வழக்கை கண்டித்தும் காவல் துறையின் ஜனநாயக மீறலையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தக் கோரினால் அதற்கு அனுமதி மறுத்திருக்கிறது சீர்காழி போலிசு. இந்த சுவரொட்டி ஒட்டினாலும், ஒட்டியவர்களை கைது செய்ததைக் கண்டித்தாலும் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாம்! என்ன பிரச்சினை? சொத்து திருட்டு வழக்கில் ஏ 1 ஆன ஜெயலலிதாவைப் பேசினால் அல்லது அவரது சமாதியை அகற்றுவதுதான் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று பொருள். மாறாக அந்த குற்றவாளியின் பெயரை அரசு அலுவலங்களில் எடு என்று சொன்னால் அதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தோற்றுவிக்கும் என்றால் சீர்காழி போலீசு யாருக்கு வேலை செய்கிறது? அரசியல் சட்டத்திற்கா இல்லை திருட்டு அதிமுகவிற்கா? குற்றவாளி ஜெயாவை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாம்!
சீர்காழி காவல்துறையின் ஜனநாயக மீறலை கண்டித்து 02/03/2017 நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்கு அனுமதி மறுத்த காவல்துறையின் ஆணவ ஆவணம்:
ந.க.எண் – 37/D1 PS/2017
நாள்: 28.02.2017
சீர்காழி காவல் நிலையம்
நாகப்பட்டினம் மாவட்டம்
குறிப்பாணை
மக்கள் அதிகாரம் சார்பில் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க அனுமதி கேட்டு, அனுமதி காவல்துறையில் மறுக்கப்படுவதை கண்டித்தும், சுவரொட்டி, ஒட்டினால் வழக்கு போடுவதை கண்டித்தும் வருகின்ற 02.03.2017 ந் தேதி சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 4.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டு 25.02.2017 ந்தேதி மனு கொடுத்துள்ளீர். மேற்கண்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாலும் சீர்காழி காவல் சரகத்தில் 30(2) Police Act நடைமுறையில் உள்ளதாலும் தங்களுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என்பதனை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இக்குறிப்பாணையை பெற்று கொண்டமைக்கு ஏற்பளிப்பு அளிக்கவும்.
பெறுநர் : T.ரவி
மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர்,
அரசாலமங்கலம்,
பச்சபெருமாள் நல்லூர்.
நகல்:
கனம் துணைகாவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
சீர்காழி உட்கோட்டம், சீர்காழி.
தகவல்
மக்கள் அதிகாரம், சீர்காழி
தொடர்புக்கு 9843480587
மருத்துவ உலகம், குறிப்பாக அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசிகள் பற்றிக் கூறும் போது உடனே அலெக்சாண்டர் பிளெமிங்கையும் அவரின் பென்சிலின் தடுப்பூசியையும் நன்றியோடு நினைவூட்டுவார்கள். ஆம்! அலெக்சாண்டர் பிளெமிங்கின் பென்ஸிலின் தடுப்பூசி மானுட குலத்திற்கு ஒரு கொடை தான் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. ஆனால் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றால் உருவாகும் நோய்களுக்கு மட்டுமன்றி கடந்த இருபது ஆண்டுகளாக இம்யூனோகாண்டிராசெப்டிவ் எனப்படும் கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகளும் உபயோகத்தில் உள்ளன. அலோபதி மருத்துவத்தில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கான சிறந்த வழியாக தடுப்பூசி முறை முன்னிறுத்தப்படுகிறது.
இந்தியாவில் டாண்டன் என்ற ஆராய்ச்சியாளர் பல பத்தாண்டுகளாக இத்தடுப்பூசிகளை உருவாக்கும் திட்டத்தில் வேலை செய்கிறார். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இத்திட்டத்திற்கு பல கோடிகளை இதுவரை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் 2014 வரை உரிமம் பெற்ற கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகள் எதுவுமில்லை.
கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படும்? இத்தடுப்பூசி நரம்பு வழியாக இரத்தத்தில் வழங்கப்படும். இத்தடுப்பூசியினால் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்கள் இரண்டு வகையாக வேலை செய்கின்றன. பெண்களில் கருவுறுதலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதை இத்தடுப்பூசி உருவாக்கும் எதிர்ப்பணுக்கள் தடுத்து விடுவதால், கருவுறுதல் நடைபெறுவதில்லை. இரண்டாவதாக உயிரணுக்களை உடலே நோய்க்கிருமியாக நினைத்து எதிர்ப்பணுக்களைக் கொண்டு அழித்து விடும். இதன் மூலம் கருவுறுதல் தடுக்கப்படும். ஆண்களுக்கும் ஹார்மோன்கள் சுரப்பதை தடுப்பதிலும், உயிரணுக்களை அழிப்பதிலும் இத்தடுப்பூசி உபயோகிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஆண்களையும் பெண்களையும் இத்தடுப்பூசிகள் மலடாக்குகின்றன. செல் வழியாக உருவாக்கப்படும் கருத்தடைகள் மற்ற எல்லா முறைகளையும் விட வெற்றிகரமானதென மக்கட்த்தொகைக் கட்டுப்பாட்டின் பிரச்சாரகர்கள் கொண்டாடுகிறார்கள். தற்போது டி என் ஏ தடுப்பூசி எனப்படும் நோய்க்கிருமிகளின் ஜீனோமை எடிட் (genome edited) செய்யப்பட்ட சொட்டுமருந்துகள் மூக்கு/வாய் மூலம் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி வடிவங்களும் ஆராய்ச்சி நிலையில் உள்ளன.
உலக சுகாதார நிறுவனம், கென்ய அரசுடன் இணைந்து பல இலட்சம் பெண்குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கிய இரண்டாம் கட்ட டெட்டனஸ் தடுப்பூசிகள் அனைத்தும் பீட்டா human chorionic gonadotropin எனப்படும் ஹார்மோன் கலந்திருந்ததாக கென்ய நாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் குற்றம் சாட்டினர்.
மார்ச் – அக்டோபர் 2014 காலகட்டத்தில் கென்ய நாட்டில் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம், கென்ய அரசுடன் இணைந்து பல இலட்சம் பெண்குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கிய இரண்டாம் கட்ட டெட்டனஸ் தடுப்பூசிகள் அனைத்தும் பீட்டா human chorionic gonadotropin எனப்படும் ஹார்மோன் கலந்திருந்ததாக கென்ய நாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் குற்றம் சாட்டினர். கருத்தரிப்பு சிகிச்சையில் hCG ஹார்மோன் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அது நரம்பு வழியாக தடுப்பூசி வடிவில் கொடுக்கப்படும் போது அது கருத்தடையை உருவாக்குகிறது. கென்யாவில் hCG கலந்த டெட்டனஸ் தடுப்பூசி வழக்கத்துக்கு மாறாக இரண்டாண்டுகளில் 5 முறை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல ஆப்பிரிக்க நாடுகளிலும் இதற்கு முன்னர் இதுபோன்ற பாரிய அளவிலான கருத்தரிப்புத் தடுப்பூசிகள் போடப்பட்டதை கேள்விப்பட்ட பாதிரிகள் கென்ய சுகாதார அமைச்சகத்திடம் முறையிட்டு தேவையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியும் அரசு பாராமுகமாக இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதிரியார்களே உள்நாட்டு மருத்துவர்களின் உதவியுடன் இத்தடுப்பூசிகளின் மாதிரிகளை பன்னாட்டு சோதனை சாலைகளுக்கு அனுப்பி சோதித்துப் பார்த்ததில் அனைத்து vial களிலும் hCG எனப்படும் கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன் இருந்துள்ளதை உறுதி செய்தனர். கென்னிய அரசாங்கமும் அதன் சுகாதாரத்துறையும் இக்குற்றச்சாட்டுகளை விசாரிக்க மறுத்தன. ஏனென்றால் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தைப் போன்றே கென்ய அரசும் கூட்டுக் குற்றவாளியாக இருந்து கருத்தரிக்கும் வயது வந்த பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசியைப் போட்டுள்ளது. இம் மீப்பெரு கருத்தடையை ஒரு ’நிறவெறிப் படுகொலை’ என்றே குற்றம்சாட்டுகின்றனர்.
ஏனென்றால் உலக மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கை (depopulating the world) என்ற பெயரில் மூன்றாம் உலக ஏழை நாடுகளின் குழந்தைகளை பெண்ணின் கருப்பையில் உருவாகும் போதே அழிக்கும் கொடூரமான திட்டமிது. இதற்கான நிதி போதிய அளவு கென்னிய அரசிடம் இல்லாத நிலையில், இத்தடுப்பூசிகளுக்கான உதவியை GAVI vaccine alliance (கவி) என்னும் அமைப்பு வழங்கியுள்ளது. இது போன்ற பாரிய அளவிலான போலியோ சொட்டுமருந்தை கடந்த காலத்தில் பிலிப்பன்ஸில் 5 இலட்சம் குழந்தைகளுக்கும், சிரியாவில் 17 இலட்சம் குழந்தைகளுக்கும் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம் மூலம் கவி வழங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
யார்இந்தகவி?
பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்
2000-ஆம் ஆண்டில் பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய 750 மில்லியன் டாலர் நிதியில் உருவாக்கப்பட்ட அரசு-தனியார் கூட்டான இவ்வமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், ஆராய்ச்சி மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்கள், குடிமை சமுதாயங்கள், பில் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகியவை.
இதன் மையக் குறிக்கோள் மூன்றாம் உலக நாடுகளின் அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளை வழங்குவது. குறிப்பாக கருப்பை புற்று நோய்க்கான பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, மஞ்சள் காமாலை, தட்டம்மை-ரூபெல்லா, தட்டம்மை இரண்டாவது டோஸ், ஐந்துகூட்டுத் தடுப்பூசிகள், ரோட்டாவைரஸ், மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றிற்கான தடுப்பூசிகளை மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கு கட்டாயமாக வழங்குவது. தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி முதல், கிளினிக்கல் ட்ரயல், உரிமம் வழங்குவது, பாரிய அளவிலான உற்பத்தி, கொள்முதல், விநியோகம் வரை அனைத்தையுமே உள்ளடக்கிய மாபெரும் வலைப்பின்னலைக் கொண்ட அமைப்பிது.
இதன் முக்கியமான இயங்குதளம் மூன்றாம் உலக நாடுகளான தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் 49 நாடுகள். இந்நாடுகள் கவி நாடுகள் என்றே அழைக்கப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டு வரை கேட்ஸ் ஃபவுண்டேஷன் இவ்வமைப்பிற்கு 1.5 பில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது. இதுவரை 370 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை இவ்வமைப்பு வழங்கியுள்ளது. அடுத்து 7 மில்லியன் குழந்தைகளைக் குறிவைத்துள்ள இவ்வமைப்பு இதுவரை உதவி என்ற பெயரில் தடுப்பூசி மற்றும் அடிப்படை மருத்துவத்திற்கு மூன்றாம் உலக நாடுகளுக்கு செலவிட்ட தொகை சுமார் 10 பில்லியன் டாலர்கள். இதில் சுமார் 2 பில்லியன் டாலர் கேட்ஸ் ஃபவுண்டேஷனின் முதலீடு. மேலும் இவ்வமைப்பின் உறுப்பினர்களில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் தவிர எந்த நிறுவனங்களின் பெயரும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்பதிலிருந்தே கவி தடுப்பூசிக் கூட்டமைப்பே மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளையும் பெண்களையும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் எனும் ஆக்டோபஸின் மாயப் பிடிக்குள் கொண்டுவருவதற்கான ஒரு கருவி மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இதே கவி மூலம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் தான் தற்போது நமது குழந்தைகளுக்கு வழங்கப் போகும் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் உரிமம் வழங்கி கொள்முதல் செய்து யூனிசெஃப் வழியாக உலகெங்குமுள்ள மூன்றாம் உலக நாடுகளின் அப்பாவிக் குழந்தைகளுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும் வழங்கப் போகிறார்கள். அதன் முன்னோட்டம் தான் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கும் பாரிய அளவிலான தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம். அதன் பின் தற்போது தேசிய நோய்தடுப்புத் திட்டத்தின் கீழ் 9-வது மாதத்திலும் 16-24-வது மாதத்திலும் வழங்கப்படும் தட்டம்மை தடுப்பூசியை முழுவதுமாக நிறுத்திவிட்டு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை மட்டுமே அரசு வழங்கும்.
ஏற்கனவே தேசிய தடுப்பூசித் திட்டத்தில் வழங்கப்படும் டிபிடி மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுடன் எச்ஐபி சேர்க்கப்பட்டு பெண்டாவாலெண்ட் என்ற ஒரே தடுப்பூசியாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 2011-ல் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 54 குழந்தைகள் இத்தடுப்பூசியால் இறந்ததால் குழந்தை நல மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் இத்தடுப்பூசிக்கெதிராக அரசிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லை. சாந்தா பயோடெக் எனும் ஹைதராபாத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பாளர் உற்பத்தி செய்யும் இத்தடுப்பூசியை இந்திய அரசு தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த 165 மில்லியன் டாலரை கவி வழங்கியுள்ளது. ஐந்து வருடங்களுக்குப் பின் இத்திட்டத்தை அரசே முழுமையாக முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். 2013-இல் ரூ 312.7 கோடியை செலவழித்த இந்திய அரசு 2017-இல் ரூ 3587.1 கோடி மக்கள் பணத்தை பெண்டாவாலண்டுக்கு மட்டும் செலவிடப் போகிறது. பெண்டாவாலெண்ட் உற்பத்தி சாந்தா பயோடெக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்திலும் மெர்க் நிறுவனத்திலும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் முக்கியமான பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-13 ஆண்டுகளில் மானுடகுலத்திற்கெதிராக கேட்ஸ் ஃபவுண்டேஷன் நடத்திய மனிதத் தன்மையற்ற பல கொடிய குற்றங்களும் அம்பலப்பட்டு தேசிய நாளிதழ்களில் செய்திகளாகியது.
மெலிண்டா கேட்ஸ்வுடன் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி.நட்டா
கென்யாவில் நடத்தப்பட்ட ’மீப்பெரு கருத்தடை’ தடுப்பூசி நடவடிக்கையின் போது உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், கென்ய அரசு ஆகியவை அம்பலப்பட்ட அளவிற்கு கவி மற்றும் அதன் பின்னாலிருக்கும் கேட்ஸ் ஃபவுண்டேஷனின் குற்றம் அம்பலப்படவில்லை. ஆனால் 2009-2010 ஆண்டுகளில் பாத் (PATH) என்னும் தொண்டு நிறுவனம் மூலம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவு இந்தியாவை மட்டுமன்றி சர்வதேச அறிவியல் சமூகத்தைக் கூட குலைநடுங்கச் செய்தது.
2013 இல் இக்கொடிய அழிவைப் பற்றி விசாரித்த இந்திய பாராளுமன்ற கமிட்டி, இக்குற்றத்தின் பின்னணியில் இருந்த அத்தனை சக்திகளையும் பெயர்சொல்லி அம்பலப்படுத்தியது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR), இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு பொது மேலாளர் (DCGI) போன்ற அரசு நிறுவனங்கள் எவ்வாறு தானே உருவாக்கிய சட்டங்களை மதிக்காமல் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் அமெரிக்க தொண்டு நிறுவனம் மூலம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளான கிளாக்ஸோ ஸிமித் கிளைன் மற்றும் எம் எஸ் டி ஃபார்மஸ்யூடிகல்ஸ் தயாரித்த இத்தடுப்பூசிகளை இப்பழங்குடிப் பெண் குழந்தைகளில் சோதிக்கத் துணை நின்ற மாபெரும் குற்றத்தை செய்தன என இவ்வறிக்கை வெளிப்படுத்தியது. மத்திய அரசின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தைப் பயன்படுத்தி கேட்ஸ் மற்றும் அதன் கூட்டுக் குற்றவாளிகள் இச்சோதனைகளை நடத்தியது. இதனாலேயே இத் தடுப்பூசி சோதனைக்கு மரியாதையும் அதிகார பூர்வ ஒப்புதலும் ஏற்பட ஆந்திர குஜராத் மாநில அரசுகள் வழிவகை செய்தது. 15 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்கின்ற மிகக் குறைந்த பட்ச நடைமுறையைக் கூட பின்பற்றாத இத்தடுப்பூசி நடவடிக்கையில், பெரும்பாலான ஒப்புதல்கள் சோடிக்கப்பட்டவை என அம்பலமாகியது.
இத்தடுப்பூசியின் மிகக் கொடூரமான விளைவு, இது தற்கொலை எண்ணத்தைத் தூண்டும். ஆனால் ஆந்திர மற்றும் குஜராத் மாநில அரசுகள் இத்தடுப்பூசியின் பின்விளைவுகளால் இறந்த/தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை கூட செய்யாமல் கேட்ஸ் ஃபவுண்டேஷனை தப்பிக்க வைத்தன. அரசு நிறுவனங்களான ICMR & DCGI ஆகியவை இந்திய நாட்டின் சட்டங்களுக்கும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கும் விரோதமாக இந்த சோதனைகளுக்கு ஒப்புதலை வழங்கி, நடைமுறைப்படுத்தவும் உதவி செய்ததோடு, அரசு நிதியை தகாத வழியில் உபயோகித்தது, தனியார் நிறுவனத்தின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைக்கு அரசு ஊழியர்களையும் அரசாங்க உட்கட்டமைப்பையும் (infrastructure) வழங்கி இக்குற்றத்தில் கூட்டு பங்காளிகளாகவும் செயல்பட்டுள்ளன.
கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சட்டபூர்வ சோதனைசாலையானது இந்தியா .
இந்திய நாட்டின் குழந்தைகளை சோதனை சாலை எலிகளைப் போல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் உபயோகிக்க அரசின் அவ்வளவு துறைகளையும் அதுவே வகுத்த சட்டங்களை மதிக்காமல், அவற்றை இந்நிறுவனங்களின் ஏவலாளியாக்கி ஒரு கொடூரக் குற்றத்தை செய்ய வைக்க வேண்டுமென்றால், கண்ணுக்குத் தெரியாத எவ்வளவு பெரிய வலைபின்னலை நம் மக்களைச் சுற்றி கேட்ஸ் ஃபவுண்டேஷன் பின்னியுள்ளது? இதே போன்ற சோதனைகளை பெரு, வியட்நாம், உகாண்டா ஆகிய நாடுகளின் 2006-ஆம் ஆண்டு கேட்ஸ் ஃபவுண்டேஷன் இதே தொண்டு நிறுவனம் மூலம் நடத்தியுள்ளதை அந்நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய தொகை 27.8 மில்லியன் டாலர்.
பாராளுமன்ற கமிட்டி இக்குற்றம் குறித்து இந்நாடுகளின் அரசுகளுக்கு இராஜாந்திர உறவுகள் வழி உடனடியாக அறிவித்து இதன் மேல் அந்த அரசாங்கங்களையும் நடவடிக்கையெடுக்கப் பரிந்துரைக்க வேண்டும் என இந்திய அரசிற்கு கட்டளையிட்டது. இதை விட முக்கியமான குற்றசாட்டு, இக்குற்றவாளிகள் இதே பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கட்டாயமாக்கி பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்க அரசிடம் இலாபி செய்துள்ளது. பாராளுமன்றக் கமிட்டியின் 72-ஆவது அறிக்கை இதை மிகப்பெரியதொரு சதித் திட்டமென்றே குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது கவியின் குறிக்கோளை நினைவு படுத்திப் பாருங்கள். பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி மட்டுமல்ல, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியையும் இந்திய மக்களுக்கு மட்டுமன்றி கவி நாடுகள் எனப்படும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கும் கட்டாயமாக அந்நாட்டு அரசுகள் மூலம் வழங்குவதே அதன் திட்டம். எதற்காக இதை செய்கிறார்கள்; அவர்கள் யாரை எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் பாராளுமன்ற கமிட்டியால் மிகப்பெரும் நெறிமுறையற்ற, சட்டத்தை மீறிய குற்றச் செயலாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த வழக்கு என்னானது என்பதைப் பார்ப்போம்.
2015-இல் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இம்மண்ணின் இதுவரையான சட்டங்கள் எதைக் கொண்டும் இக்குற்றங்களைச் செய்த இத்தொண்டு நிறுவனத்தையோ அதற்கு நிதியுதவி வழங்கிய கேட்ஸ் ஃபவுண்டேஷனையோ இதற்கு துணைபோன ICMR, DCGI, மாநில அரசுகள் ஆகியவற்றையோ தண்டிக்க முடியாது எனக்கூறி வழக்கை வாபஸ் வாங்கியது மோடி அரசு. அதுபோலவே பாராளுமன்றக் கமிட்டியின் மற்ற வழிகாட்டுதல்களும் குப்பைத் தொட்டிக்கு சென்றன. ஆம்! இதன்பின்னர்இந்தியாகேட்ஸ்ஃபவுண்டேஷனின்சட்டபூர்வசோதனைசாலையானது, குழந்தைகளும்பெண்களும்எலிகளெனசெத்துமடிகின்றன.
நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொண்ட 9-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி பூமிகா இரு நாட்களுக்கு முன் உயிரிழந்தார் என நக்கீரன் ஏடு பிப்ரவரி 27, 2017 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெற்றோரின் சம்மதமின்றி குழந்தைகளுக்கு கட்டாயமாக தடுப்பூசி போடுவதாகக் கூறி ஈரோட்டில் பொதுமக்கள் சுகாதாரத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிப்ரவரி 6ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டத்தால் எவ்வளவு குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியே வரவில்லை. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் இது போன்ற பல செய்திகள் ’பரபரப்பு’ என்ற தகுதியை இழந்து விட்டன. ஒருசில சமூக வலைதளப் பகிர்வுகள் கூட தக்க ஆதாரம் இல்லாததால் புரளி என்ற அடிப்படையில் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் தடுப்பூசி விவகாரத்தில் ஊடகங்களின் கள்ளமௌனம் முதுகெலும்பைச் சில்லிடச் செய்கிறது.
ரூபெல்லா போன்ற அம்மை நோய்கள் ஒருமுறை வந்தால் இயல்பாகவே இந்நோய்க்கிருமிக்கெதிரான எதிர்ப்பணுக்களை உடலே உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் இரண்டாவது முறை இவை வருவது அபூர்வமானது.
ஜனவரி 29 ஆம் தேதி தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டினார். அடுத்த நாள் தேசிய நாளிதழ்கள் உட்பட அனைத்து பத்திரிகைகள் வாயிலாகவும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இதே மிரட்டலை விடுத்தது. இத்தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்கள் வழியாக பரப்புபவர்களைக் கண்காணிக்க சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசையும் அரசே களத்தில் இறக்கியுள்ளதாக பொது சுகாதார இயக்குநர் மரு. குழந்தைசாமி அறிவித்தார்.
அதுவரை சமூக வலைதளங்களில் இது குறித்து வந்த செய்திகள், எச்சரிக்கைகள் மீது பாராமுகமாக இருந்தவர்களுக்குக் கூட தமிழ்நாடு அரசின் இவ்வறிக்கைகளால் ”ஒரு தடுப்பூசி எதிர்ப்புக்குப் போய் சிறையா?” என்ற கேள்வி எழத் தொடங்கியது. எனவே இதுகுறித்த கட்டுரை எழுத அரசின் இணைய தளம், பல்வேறு உயிர் அறிவியல் தொழில்நுட்ப பதிப்பகங்களின் இணைய தளங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள், கவி தடுப்பூசி கூட்டமைப்பு (GAVI VACCINE ALLIANCE), பில் மெலிண்டா கேட் ஃப்வுண்டேஷன், உலக சுகாதார நிறுவனம், USAID, இந்திய குழந்தைநல மருத்துவர்களின் கூட்டமைப்பு, சீரம் இன்ஸ்டியூட் இந்தியா போன்றவற்றின் இணையதளங்கள், அறிக்கைகள், செயல்திட்டங்கள், ஆண்டறிக்கைகள் மற்றும் பல்வேறு பத்திரிகை செய்திகள், துறைசார் வல்லுநர்களின் கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.
தட்டம்மை–ரூபெல்லாதடுப்பூசியின்அவசியம்என்ன?
தட்டம்மை மற்றும் ஜெர்மன் தட்டம்மை எனப்படும் ரூபெல்லா போன்ற அம்மை வகைப்பட்ட நோய்கள் தாக்கினால் 3-7 நாட்கள் காய்ச்சல் மற்றும் தோலில் தடிப்புக்கள் ஏற்படும். இந்நோய்கள் ஒருமுறை வந்தால் இயல்பாகவே இந்நோய்க்கிருமிக்கெதிரான எதிர்ப்பணுக்களை உடலே உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் இரண்டாவது முறை இவை வருவது அபூர்வமானது. இதனால் முதலாளித்துவ நாடுகளில் ஒருவருக்கு ரூபெல்லா வந்தால் அவர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக் குழந்தைகளை விருந்துக்கு அழைப்பார். இதற்கு பேர் ஜெர்மன் மீசெல்ஸ் பார்ட்டி. இது வழியாக நோயைப் பரப்பி இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வார்கள்.
இந்தியாவில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தடுப்பூசிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு முதல் முறை 9 மாதத்திலும் பின்னர் இரண்டு வயதிற்குள் இரண்டாவது முறையும் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளும் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லாவிற்கான முத்தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ரூபெல்லாவிற்கான தடுப்பூசிகள் பெரும்பாலும் கருத்தரித்தலுக்கு முன் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜனவரி 29 ஆம் தேதி தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டினார்
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் ஏற்கனவே முழுஅளவில் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் போது தான் பாரிய அளவிலான தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் நடத்தப் போவதாக டிசம்பர் மாதம் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கோவா, கர்நாடகா, அந்தமான், இலட்சதீவு ஆகிய மாநிலங்களின் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் – சுமார் 5 கோடி குழந்தைகள்- தடுப்பூசி பிப்ரவரி 6 முதல் 28 வரை பள்ளிகள் வழியாக கட்டாயமாக வழங்கப் போவதாக நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து பல இதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் இத்தடுப்பூசி குறித்து எதிர்மறைக் கருத்துக்கள் பரவத் தொடங்கியதும், தேசிய நாளிதழ்களும் தமிழ் இந்து போன்ற தமிழ் பத்திரிகைகளும் தடுப்பூசிக்கு ஆதரவாக தலையங்கங்களையும் கட்டுரைகளையும் தீட்டின.
இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது இம்முதற்கட்ட தடுப்பூசி திட்டத்தில் தமிழ்நாடும் கர்நாடகாவும் மட்டுமே பெரிய மாநிலங்கள். மற்றவை குறைந்த மக்கள் தொகை கொண்ட பிராந்தியங்கள். இதில் கர்நாடகாவின் பெரும்பான்மையான தனியார் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களுடன் கருத்துக் கேட்கும் சந்திப்புகளை நடத்திய பின்னர் எழுத்துப்பூர்வ ஒப்புதலைக் கேட்டுள்ளனர். அதில் 90%-ற்கும் மேல் எதிர்மறைக் கருத்தை வெளியிட்டதால், பள்ளி நிர்வாகமே இத்திட்டத்தை பள்ளிவளாகங்களில் நடத்துவதற்கு பதில் ஆரம்பசுகாதார நிலையங்களில் நடத்த வேண்டும் என சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளன. அதனால் தற்போதைய நிலவரப்படி கர்நாடக அரசு இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் அரைகுறை மனதுடன் இருப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன.
ஆனால் மோடியின் பினாமி – ஓபிஸ், ஏபிஎஸ் அரசாங்கங்கள், தமிழ்நாட்டு மக்களை அழிக்க துணிந்து இறங்கியதாலோ என்னமோ, எங்குமே பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தைப்பட்டதாகவோ, பெற்றோர்களின் அச்சத்தை போக்க அறிவியல்பூர்வமான விளக்கத்தை அளித்தாகவோ ஆதாரமே இல்லை. இதுகுறித்தான அரசாணைகளோ, சுற்றறிக்கைகளோ அரசாங்க இணையதளத்தில் இதுவரை தரவேற்றவுமில்லை. ஆனால் இதற்கெதிராக பேசினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அனைவரும் கண்காணிக்கப்படுவதாகவும் பத்திரிகை செய்திகள் வாயிலாக அரசு தரப்பிலிருந்து மிரட்டல்கள் மட்டும் விடப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தை சுகாதாரத்துறையும், சுகாதார அமைச்சகமும் நடைமுறைப்படுத்தும் விதம் சிறிதளவாவது மூளை செயல்பாட்டில் இருக்கும் எவராலும் செரிக்க முடியாததாக உள்ளது.
தமிழ்நாட்டில் 1.8 கோடி குழந்தைகளுக்கு 22 நாட்கள் தடுப்பூசி போட மொத்தம் 1000 மருத்துவர்களும் 12,000 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் 3 அறைகளை இவர்களுக்கு ஒதுக்க வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன் 9-15 வயதிலான குழந்தைகளை முதல் அறையில் உட்கார வைத்து 15-45 நிமிடங்கள் இத்தடுப்பூசியின் வல்லமை குறித்து விளக்கமளிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் அடுத்த அறைக்கு இட்டு செல்லப்பட்டு ஊசி போட்டபின்னர், கையில் மை வைக்கப்பட்டு மூன்றாவது அறையில் 15 நிமிடம் கண்காணிக்கப்படுவர். காய்ச்சலுக்கான மாத்திரை வழங்கப்படும். ஏற்கனவே காய்ச்சல் இருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ, மோப்-அப் டிரைவ் எனப்படும் துடைத்தழித்தல் இயக்கத்தின் போது அவர்களுக்கும் போடப்படும். இப்படி 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?
15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?
எதிர்ப்பாளர்கள் பொதுவாக பாரிய அளவிலான இத்தடுப்பூசி ஏற்படுத்தப்போகும் பின்விளைவுகள் குறித்து முதன்மையாக அச்சத்தை வெளியிடுகின்றனர். குறிப்பாக ஆட்டிஸம் போன்ற நீண்டகால பாதிப்புகளும் ஒவ்வாமை போன்ற உடனடி பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர். இத்தடுப்பூசி ஏற்கனவே கிளினிக்கல் ட்ரயல் எனப்படும் மருத்துவ முன்னோட்டம் செய்யப்பட்டது என்பதற்கான சான்றிதழை தமிழக அரசு வழங்க வேண்டும் என்கின்றனர். அதாவது நம் குழந்தைகள் சோதனை சாலை எலிகளல்ல என்பதை நிறுவ அரசாங்கத்தைக் கோருகின்றனர்.
அடுத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று அன்னிய நிறுவனங்களின் இலாபத்திற்காக இத்தடுப்பூசி போடப்படுகிறது என்பது தான். கடைசி கேள்வி தவிர மற்றவற்றிற்கான பதில்கள் தடுப்பூசி ஆதரவு அலோபதி மருத்துவர்களின் கட்டுரைகளில் நிரம்பி வழிகின்றது. கடைசி குற்றச்சாட்டான அன்னிய நிறுவனங்களின் இலாப வேட்டை என்னும் குற்றசாட்டை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் இன்னும் அலாதியானது.
இத்தடுப்பூசியை உலகிலேயே ஒரே ஒரு நிறுவனம் மட்டும் தான் கடந்த 17 ஆண்டுகளாக தயாரிக்கிறது. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்கிற இந்திய தரகு முதலாளியின் நிறுவனம் தான் அது. உலக சுகாதார நிறுவனத்திடம் 2000-த்தில் பிரீ-குவாலிஃபைட் எனப்படும் முன் – அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி இது. ஒரு டோஸ் ரூ. 125 விலையுள்ள இம்மருந்தை வெறும் ரூ. 25-ற்கு அரசிற்கு வழங்கும் அளவிற்கு நல்லுள்ளம் படைத்தவர் இந்நிறுவனத் தலைவர் பூனாவாலா.
மேலும் உலக சுகாதார நிறுவனத்துடன் இந்நிறுவனம் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி கவி நாடுகள் எனப்படும் 49 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இம்மருந்தை யூனிசெஃப் வழியாக குறைந்த விலைக்கு எதிர்காலத்தில் வினியோகிக்கப்போகிறது. போதாக்குறைக்கு இதே தடுப்பூசியை சீரம் நிறுவனத்திடம் யூனிசெஃப் வாங்கி வியட்நாம் அரசு வழியாக வியட்நாம் குழந்தைகளுக்கு ஏற்கனவே கொடுத்துள்ளது. அப்படியிருக்கையில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் பெரும்பாலான அச்சங்களுக்கும் கேள்விகளுக்குமான விடைகள் ஏதோ ஒரு விதத்தில் கிடைத்துவிட்டது என நடுநிலையாளர்கள் நினைக்கலாம் அல்லவா? எனில், இவ்வளவு எளிமையான விடைகளை ஏன் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டு மக்களின் மிகசாதாரண அச்சத்தைக் கூட போக்க முன்வரவில்லை என்பதும் எதிர்மறைக் கருத்துக்களுக்கு இவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் என்பதுமே இங்கு விவாதிக்கப் போகும் முக்கியமான பொருட்கள்.
சோலைவனத்தை கருக்க வரும் HELP – திட்டத்தை முறியடிப்போம்!
புதுகை – நெடுவாசல் மண்ணையும், மக்களையும் பாதுகாப்போம்!
நெடுவாசல் அருகே இருக்கும் நல்லாண்டார் கொல்லையில் உள்ள எரிவாயு போர் எந்திரத்தில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்!
புதுக்கோட்டை – நெடுவாசலில் அமுல்படுத்தவிருக்கும் ஹைட்ரோ-கார்பன் திட்டம் என்பது முற்றிலும் புதிய திட்டம் அல்ல. ‘ புதிய மொந்தையில் பழைய கள்ளு ‘ போன்றதுதான். டெல்டா பகுதியில் அமுல்படுத்த முயன்று தோற்றுப்போன மீத்தேன் திட்டத்தில் உள்ள அனைத்துவித பாதிப்புகளும் இத்திட்டத்தில் ஒருங்கே அமைந்துள்ளன.
புதுக்கோட்டை என்றாலே வறட்சி மாவட்டம். ஆனால் அதற்குள்ளேயும் முப்போகம் விளையும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. டெல்டா பகுதி கருகிய சூழலில் அதன் எல்லையோரத்தில் கற்பாறைகள் அற்று, மணல் திட்டுகள் மட்டுமே கொண்ட நீர்பரப்பு பகுதி அது. விளைச்சல் மிகுந்த பசுமை நிறைந்த சோலைவனம்தான் அந்த நெடுவாசல்.
விவசாயிகள், சிறுதொழில் செய்வோர், பெட்டிக்கடை, பழக்கடை வைத்திருப்போர், IT, மருத்துவ, பொறியியல், சட்டக்கல்லூரி மாணவர்கள், வெளிமாவட்டத்தில், வெளிமாநிலத்தில் வேலை செய்வோர் என 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் நெடுவாசல் வட்டாரத்தில் வாழ்கின்றனர். விவசாயிகளின் வாரிசுகளான மாணவர்கள் – இளைஞர்கள் தான் இத்திட்டத்தின் பாதிப்பை தமது ஊர் மக்களுக்குத் தெரிவித்து பின் உலகுக்கும் தெரியப்படுத்தினர்.
ஹைட்ரோ-கார்பன் திட்டத்தின் பாதிப்பை உணர்ந்த மறுகணமே போராட துவங்கிவிட்டனர் அப்பகுதி மக்கள். கடந்த ஒரு வார காலமாக நெடுவாசலைச் சுற்றியுள்ள கிராமங்கள் மத்திய-மாநில அரசுக்கு எதிராக ‘கருப்பு’ கொடிகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு கம்பெனி மற்றும் மத்திய-மாநில அரசின் வஞ்சகத்தால் தம்முன்னோர்கள் ஏமாற்றப்பட்டதையும், இனி நாங்கள் ஏமாற மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் உள்ளக் குமுறலை உங்கள் முன் வைக்கிறோம்.
கடந்த 10-3-16 அன்று மோடி அரசு ஹைட்ரோ கார்பன் (Hydrocarbon Exploration and Licensing Policy – HELP) திட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவித்தது. 11 மாதம் கழித்து 15-2-17 அன்று நெடுவாசல் பகுதியில் இனி வெளிப்படையாக திட்டத்தை அமுல்படுத்தி ஹைட்ரோ-கார்பன் எடுக்க போவதாக அறிவித்தது.
“ தஞ்சை டெல்டா பகுதியில் விரட்டியடிக்கப்பட்ட மீத்தேன் திட்டம் வேறு பெயரில் அதே டெல்டா பகுதியின் கடைகோடி பகுதியில் மீண்டும் தொடங்க இருக்கின்றது. எங்க ஊர் புள்ளைங்க சென்னை IT யில படிக்கிறாங்க, வெளிமாநிலத்தில, வெளிநாட்டுல வேலை செய்யுறாங்க, இவங்கதான் இதன் ஆபத்தை புரிஞ்சுக்கிட்டு wattsapp, Facebook மூலம் எங்களுக்கும் தெரியபடுதினாங்க, அதுக்கப்புறம் தான் போராட்டத்தை தொடங்கினோம் “ என்கிறார் அப்பகுதி விவசாயி செல்வம் என்பவர்.
நல்லாண்டார் கொல்லையில் மக்கள் போராட்டம்.
“ 16 வருசத்திற்கு முன்பே அரசாங்கம் அனுமதி வழங்கிருச்சி சார், எங்களுக்கு தெரியல. எங்க ஊருலேயும் 16 வருசத்துக்கு முன்னால வெள்ளையும் சொள்ளையுமா இருக்குறவங்க வந்து உங்க ஊருல மண்ணெண்னை புதைஞ்சிருக்கு, அதை எடுத்தா உங்களுக்கு இலவசமா மண்ணெண்னை கிடைக்கும், தார்ரோடு போட்டுதருவோம் என ஆசைக்காட்டி நிலத்த வாங்குனானுவ, அதுக்கப்புறம் அந்த எடத்துல என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. இந்தி காரங்க வாட்ச்மேனா இருப்பாங்க. எங்கள உள்ளேயே விட மாட்டாங்க. உள்ளுர்காரங்கள வெளி வேலைக்குதான் வச்சிக்குவாங்க ! அதிகாரிங்க வெளிநாட்டுகாரனுங்க காருல வரும்போது எங்க வயலுக்குள்ள இருக்கும் பயிர் மேல வுட்டு ஏத்திட்டு வருவாங்க.எதுத்து கேள்வி கேட்க முடியாது. அப்படி கேட்டதால பக்கத்து வயகாரங்கள அடிச்சிருக்காங்க. இப்பதான் தெரியுது இவங்களோட சதிவேலை, எவன் வந்தாலும் எங்க இடத்த விட்டுக் கொடுக்க மாட்டோம் சார்.
இந்த பூமியில எது போட்டாலும் மொளைக்கும் சார். இந்த ஊருல இருந்து 20 கி.மீ சுற்றளவில் நெல், சோளம், வேர்கடலை, பலா, முந்திரி, வாழை, தென்னை, பூ , உளுந்து, மிளகு என எங்க திரும்பினாலும் சோலைவனமா காட்சியளிக்கும். இத அழிக்கிறதுக்கு எப்படி சார் மனசுவருது அரசாங்கத்துக்கு, இந்த இடம் வேணுமுன்னா மொதல்ல எங்கள கொல்லட்டும் இந்த அரசாங்கம், அதுக்கப்புறம் எரிவாயுவ உறிஞ்சிக்கட்டும் “ என்றார் ஆதங்கத்துடன் ஒரு விவசாயி.
“ எங்கள் ஊர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தோட சேர்ந்தது. இப்போ புதுக்கோட்டை மாவட்டத்தோடு இணைச்சிட்டாங்க . இங்குள்ள நெடுவாசல மையமா வச்சி கருக்கா குறுச்சி, வாணகண்காடு, மாங்காடு, வடகாடு, புள்ளான் விடுதி, கணியன் கொல்லை, நல்லாண்டார் ஆகிய கிராமங்களிலேயும் போர்போட்டு ஆராய்ச்சி செஞ்சிருக்காங்க. அதனையும் இணைச்சி ஹைட்ரோ-கார்பனை உறிஞ்சப் போறாங்களாம். அப்படி உறிஞ்சா இப்பகுதியை சுற்றி வாழும் 5 லட்சம் மக்களின் வாழ்வு கருகிப் போய்விடும் “ என அச்சப்படுகின்றனர்.
நல்லாண்டார் கொல்லையில் எரிவாயு சோதனையின் போது வந்த எண்ணெய்க் கழிவுகள் பல ஆண்டுகள் ஆகியும் அழியாமல் அதே நாற்றத்துடன் தேங்கி இருக்கிறது.
10 வருசத்துக்கு முன்னால 30, 40 அடியில தாராளமா தண்ணீர் கிடைக்கும், இப்ப வறட்சி கடுமையாக இருக்கு, 100, 200 அடி போர் போட்டாத்தான் தண்ணீர் கிடைக்குது. எரிவாயு எடுத்தா மொதல்ல நிலத்தடி நீரத்தான் வெளியேற்றுவாங்களாம். தண்ணீர் இல்லன்னா நாங்க எங்க சார் போவோம். எங்க புள்ள, பொண்டாட்டி, ஆடு, மாடு எல்லாம் எங்கத்தான் போறது. அந்த காலத்துல இலவச மண்ணெண்ணை தரோமுன்னு எங்க முன்னோர்கள ஏமாத்துனாங்க. இப்ப பி.ஜே.பி அமைச்சர் H.ராஜா பேசும்போது மத்திய அரசோட திட்டம் அமுல்படுத்தியே தீருவோம் என்கிறார். அ.தி.மு.க கட்சிகாரனுங்க இந்த திட்டத்திற்க்கு ஒப்புதல் அளிச்சிட்டாங்க. ஆனா நாங்க இந்த திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம். எங்க உசுரே போனாலும் எங்க நிலத்த தரமாட்டோம் சார் என மத்திய அரசின் மீதான தனது வெறுப்பை உமிழ்ந்தார்கள் அக்கிராம மக்கள்.
மத்திய – மாநில அரசின் உதவியோடு காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க போய் தோற்றுப்போன பன்னாட்டு கம்பெனி வேறுபெயரில் டெல்டாவையும் சேர்த்து உறிய நெடுவாசலை நுழைவு வாயிலாக பயன்படுத்த பார்க்கிறது, ஜெம் லேபாரட்ரீஸ் என்ற பன்னாட்டு துபாய் கம்பெனி. இக்கொலைகார கம்பெனியை விரட்டியடுக்கும் வீரமிக்க போராட்டத்திற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்போராட்டத்தை செழுமைப் படுத்தும் வகையில் நம் கண்முன்னே ஏராளமான அனுபவத்தை விதைத்து சென்றுள்ளது ஜல்லிக்கட்டுப் போராட்டம். அதே சமயம் தனது போராட்டத்துக்கு தலைமை சக்தியை ஏற்படுத்திக் கொள்ளாததால் இறுதியில் இழப்புகளை சந்தித்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்று இங்கும் என் ஜி வோ எனப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்த முயல்கின்றன.
NGO தலைமையை ஏற்றுக் கொண்ட அனைத்து போராட்டங்களும் தோற்றுப்போய் இறுதியாக ஆளும் அரசுக்கு சாதகமாக கொண்டு சேர்த்ததற்கு பல சான்றுகள் உள்ளன. மத்திய, மாநில ஆளும் கட்சிகளை நம்பக் கூடாது என்று உறுதியாக இருக்கும் நெடுவாசல் அதே போல இத்தகைய NGO குழுக்களையும் போராட்ட தலைமைக்கு வரவிடாமல் விரட்டியடிக்க வேண்டும்.
சாதி – மதம் கடந்து ஜனநாயக – முற்போக்கு சக்திகள் விவசாயிகள் , மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து தமக்கான தலைமையை தானே நிறுவிக்கொண்டு போராடும் போதுதான் வாடிவாசல் திறக்காமல் வீடுவாசல் மிதிக்க மாட்டோம் என்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல மாற்றுப் பெயரில் வரும் மீத்தேன் திட்டத்தை நெடுவாசலை விட்டு விரட்டாமல் எம் தெருவாசலை மிதிக்கமாட்டோம் என்ற போராட்ட அறைகூவலை முன்னெடுத்து செல்வதுதான் நம்முன் உள்ள ஒரே வழி.
கரூர் – தும்பிவாடி கிராமம், சிவன் காலனி பகுதியில் வசிக்கும் சுமார் 100 தலித் மக்கள், கவுண்டர், நாடார் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். தும்பிவாடி, 5 ரோடு, டீ கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனியாக டம்ளர் பயன்படுத்தும் முறை இன்றளவும் உள்ளது. பெஞ்சில் உட்காரக்கூடாது தள்ளித்தான் நிற்கவேண்டும்.
சிவன் காலனியில் உள்ள பால் சொசைட்டியில் கூட தலித் குழந்தைகளுக்கு பால் ஊற்றுவது இல்லை. அங்க பக்கத்தில் செல்லக்கூட அனுமதியில்லை. இந்த தீண்டாமை காரணமாக, சிவன் காலனியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது பாக்கெட் பால்தான்.
சிவன் காலனியில் நாடார் சமூகத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். மேற்படி பெட்டிக்கடைக்கு கடந்த 18.02.2017 அன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கஜேந்திரன், கண் மை வாங்குவதற்கு சென்றுள்ளான். அப்பொழுது கையில் வைத்திருந்த 6 ரூபாய் காசை கடையில் உள்ள மிட்டாய் டாப்பாவின் மீது வைத்தபோது அது தவறி கடைக்குள் விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்காக கடைக்குள்ளே காலை வைத்திருக்கிறான் அந்தச் சிறுவன். உடனே, “சக்கிலிய நாயே, எதுக்குடா கடைக்குள் வர்றே”, என கெட்ட வார்த்தைகளால் திட்டி, இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்து, தலையை பிடித்து சுவரில் மோதியிருக்கிறார் கடை முதலாளி சரத்குமார். வலி பொறுக்க முடியாமல் கஜேந்திரன் கத்தவே, “அடித்ததை வெளியே சொன்னால் கல்லாவிலிருந்து காசை திருடினாய் என்று கம்ப்ளெயின்ட் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன்” என்றும் மிரட்டியிருக்கிறார். “கிழக்குத் தெருக்காரன் மேற்கு தெருவிற்கு வரக்கூடாது. சக்கிலி பசங்க இந்த பக்கம் வந்தால் செருப்பாலேயே அடிவிழும்” என்று சரத்குமாரின் பெரியப்பா கணேசன், மனைவி அன்புமலர் ஆகியோர் சேர்ந்து கொண்டு அடித்திருக்கின்றனர்.
மேற்படி சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த கஜேந்திரனின் பெரியம்மா வளர்மதி, “எதற்காக எங்கள் மகனை அடிக்கீறீர்கள்” என கேட்க, “உங்களால் என்னடி செய்ய முடியும்” என்று எகத்தாளமாகப் பேசியிருக்கின்றனர்.
தலித் மக்கள் ஒன்று கூடி சின்னதாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பயனில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு தகவல் வந்தவுடன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.சக்திவேல் மற்றும் தோழர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மறுநாள் 19.02.2017 அன்று அப்பகுதி மக்களுடன் சின்னதாராபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று சரத்குமார் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர். புகாரை பதிவு செய்யாமல் சமரசம் செய்து திருப்பி அனுப்ப முயன்றது போலீசு. மக்களும் மக்கள் அதிகார தோழர்களும் உறுதியதாக இருந்ததால், வேறு வழியின்றி அரவக்குறிச்சி DSP வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். அடுத்த கணமே கஜேந்திரன் மீது சரத்குமார் திருட்டுப் புகார் கொடுக்க, அந்த பொய்ப்புகாரையும் பதிவு செய்து கொண்டது போலீசு. சரத்குமாரும் கணேசனும் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நாடார் சமூகத்தினர் எண்ணிக்கையில் குறைவானவர்களே என்ற போதிலும், அந்த வட்டாரத்தில் கவுண்டர் சாதியினர் செலுத்தும் ஆதிக்கத்தின் பின்புலத்தில்தான் தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. கடைக்குள் கால் வைத்த குற்றத்துக்காக ஒரு தலித் சிறுவனுக்கு இப்படிப்பட்ட கொடுமை! கோகுல்ராஜ் கொடூரமாக கொல்லப்பட்டதன் பின்புலம் இதுதான்.
இந்த கொங்கு மண்டலத்தின் தனியரசுதான் சபாநாயகர் தனபாலுக்காக தொலைக்காட்சிகளில் பொங்கினார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். முதல்வர் நாற்காலியில் உட்கார்வதற்காக எடப்பாடி பிடித்த கால்கள் சசிகலாவின் கால்கள் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.
அப்புறம் அந்த மளிகைக் கடை முதலாளியின் பெயரைக் கவனித்தீர்களா? “சுயமரியாதைச் சிங்கம்” விரட்டி விரட்டி அடித்தாலும் அம்மாவின் காலையே சுற்றி வந்த சரத்குமார்!
அவருடைய கட்சியின் பெயர் “சமத்துவ” மக்கள் கட்சி!
கஜேந்திரனின் பெரியம்மா வளர்மதி அளித்த புகார்
கஜேந்திரனின் பெரியம்மா வளர்மதி அளித்த புகார்
பதிவு செய்யப்பட்ட FIR
பதிவு செய்யப்பட்ட FIR
பதிவு செய்யப்பட்ட FIR
சாதி வெறியர்களின் கொலை வெறித்தாக்குதலை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டி
நெடுவாசல் வட்டாரத்தில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும் என்று எகத்தாளமாய் கேலி செய்கிறார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். குரங்குகள் கல்லால் இலங்கைக்கு பாலம் கட்டியதாகவும், அதற்கு நாசா புகைப்படம் இருப்பதாகவும் பேசியது மட்டுமல்ல, வழக்கு போட்டு உச்சநீதிமன்றத்தையும் அப்படி பேச வைத்த இந்த அடி முட்டாள்கள் அறிவியல் பற்றி பேசுவது மிகவும் எரிச்சலூட்டுகிறது.
தற்போது கல்வித்துறை நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என விதம் விதமாக பலரையும் இறக்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தக் கேடும் இல்லை, மக்களுக்கு விளக்கமளித்தாலே போதும் என்று வகுப்பு எடுத்து வருகிறார்கள். இது சதி என்பதற்கு போபால் முதல் திருப்பூர் வரை ஏராளம் சான்றுகள் ரத்தமும் சதையுமாய் இருக்கின்றன. இருப்பினும் ஆளும் வர்க்கங்கள் இப்படி பிரச்சாரம் செய்யும் போது அதே அறிவியலை வாழ்வியலோடும், மக்களோடும் இணைத்து நாமும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அறிவியல் என்பது யாருடைய விருப்பு வெறுப்புக்கும் ஏற்ப திரியும் ஒன்றல்ல. அது இயற்கை குறித்து மனிதன் ஆய்வு நடத்தி கண்டறிந்து வரும் ஒரு துறை. இயற்கையின் விதிகளோடு ஆய்வு செய்து நிரூபிக்கப்படும் அல்லது வளர்க்கப்படும் உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. அதே நேரம் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாரால் எதற்காக பயன்படுத்த்தப்படுகின்றது என்பதற்கேற்ப இந்த உலகமும், மக்களும் அழிவையோ முன்னேற்றத்தையோ சந்திக்கிறார்கள். இன்றையே வாழ்வின் பல்வேறு வளர்ச்சியினை அறிவியல் சாதித்திருப்பது உண்மை போலவே முதலாளிகளின் இலாபவெறி அணுகுண்டு, புவி வெப்பமடைதல் உள்ளிட்டு பல அழிவுகளுக்கும் அறிவியலை பயன்படுத்துகிறார்கள்.
முதலாளித்துவ சுரண்டலுக்காக உலகமெங்கும் பல தொழிலாளிகள் சுரங்கங்களிலும், கட்டுமானப்பகுதிகளிலும், ஆலைகளிலும், தொற்று நோயாலும் சாகின்றனர். அறிவியல் உண்மை பேசும் பாஜக கட்சியினரோ இல்லை தூய அறிவியல் பேசும் ஆல்பர்ப்பஸ் அங்கிள்களோ எவரும் இந்த சாகும் பட்டியலில் இல்லை. அமெரிக்காவில் தேசபக்தி பேசும் குடியரசு – ஜனநாயகக் கட்சியின் காங்கிரசு உறுப்பினர்களின் பிள்ளைகளோ இல்லை இந்தியாவில் தேஷபக்தி பேசும் பாஜக – காங்கிரசு எம்பிக்களின் பிள்ளைகளோ போர்வீரர்களாக போரில் சாவதில்லை.
இங்கே இரண்டு வீடியோக்களை பாருங்கள். முதல் வீடியோவில் நெடுவாசலைச் சேர்ந்த சுரேஷ் என்பதவர் குவைத்தில் எண்ணெய் எரிவாயுத் துறையில் பணியாற்றுகிறார். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அவர் தொழில்நுட்ப ரீதியாக விளக்குகிறார். மக்கள் வாழாத இடங்களில் இத்திட்டங்களை கொண்டு வந்தால் அதை எதிர்க்க போவதில்லை என்று கூறும் அவர் நெடுவாசல் போன்ற விவசாயம் செழிப்பாக இருக்கும் இடங்களில் அத்திட்டங்கள் ஏற்படுத்தும் அழிவை விளக்குகிறார். இதை மத்திய அரசிற்கும் அதன் துறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். ஆகவே இவரை ஐ.எஸ் சதிகாரர் என்று ஆர்.எஸ்.எஸ் முத்திரை குத்த முடியாது.
இரண்டாவது வீடியோ இது குறித்து முழுமையான பார்வையையும், அனுபவத்தையும், அழிவையும் ஆதாரங்களுடன் தருகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஜோஷ் ஃபாக்ஸ் 1972-ல் தனது வீடு கட்டப்பட்டதையும் அங்கே தானும் தனது குடும்பத்தாரும் வாழ்ந்ததை விவரிக்கிறார். அதே ஆண்டில் அமெரிக்க அதிபர் நிக்சனால் “சுகாதாரமான குடிநீர் சட்டம்” முதன்முறையாக கொண்டு வரப்படுகிறது. அதாவது குடிநீர் என்பது மனிதனின் அடிப்படை குடியுரிமையாக ஏற்கப்படுகிறது. அந்தக் காலம்தான் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் ஆரம்பம் என்கிறார் ஜோஷ். 2009-ம் ஆண்டில் அவரது நிலம் ஒரு எண்ணெய் எரிவாயு நிறுவனத்திற்கு தேவைப்படுவதாக கடிதம் வருகிறது. ஒரு ஏக்கருக்கு 4750 டாலர் கிடைக்கும் என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது. அவரிடம் இருக்கும் 19.5 ஏக்கரை விற்றால் ஒரு இலட்சத்திற்கும் நெருக்கமான டாலர் கிடைக்கும். இது அவ்வளவு எளிமையானதா என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறார் ஜோஷ்.
அமெரிக்காவில் இருக்கும் இயற்கை எரிவாயு வளத்தை பயன்படுத்தினால் அந்நாடு எந்த நாட்டையும் எரிசக்திக்காக சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றகிறார் முன்னாள் துணை அதிபர் டிக் சென்னி. இதையேதான் வானதி சீனிவாசன் போன்ற தேஷ்பக்தர்களும் டிவி விவாதங்களில் கூறுகிறார்கள். 2005-ம் ஆண்டு துணை அதிபர் டிக் செர்னியால் தயாரிக்கப்பட்டு காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட எரிசக்தி முன்வரைவுச் சட்டம் பல்வேறு சுற்றுச்சூழல் சோதனைச் சட்டங்களிலிருந்து விலக்கு பெறுகிறது. எண்ணெய் எரிவாயுத் துறை எதற்கெல்லாம் விலக்கு பெறும்? பாதுகாக்கப்பட்ட குடிநீர் சட்டம், சுத்தமான காற்று சட்டம், சுத்தமான நீர் சட்டம், என பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஜனநாய முறைகளில் இருந்து எண்ணெய் எரிவாயுத் துறைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
ஜோஷ்ஃபாக்சின் ஆவணப்படம் – கேஸ் லாண்ட் GAS LAND
அதன் பிறகு அமெரிக்காவின் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய ஹாலிபர்ட்டன் தொழில்நுட்பத்தை வைத்து அமெரிக்கா எங்கும் துளைத்தெடுக்கிறார்கள். தற்போது 34 மாநிலங்களில் இந்த துளைகள் பரவி இருக்கின்றன. பூமியை குதறும் இந்த நுட்பத்திற்கு பெயர் “ஹைட்ராலிக் ஃபிராக்சரிங்”. இது நீரையும் சில வேதிப்பொருட்களையும் கலந்து சுமார் 8000 அடி வரை நிலத்தில் அனுப்பி குடைந்தெடுக்கிறது. இதை ஏதோ ஃபோர்வெல் போடும் பணியாக நினைக்க கூடாது. கிட்டத்தட்ட சிறு நிலநடுக்கங்கள் அல்லது வெடிப்பு கீறல்களை இந்த துளைப்பு பூமிக்குள் நடத்துகிறது. இந்தக் கலவையின் அதியுயர் அழுத்தம் எந்தப் பாறைகளையும், தடைகளையும் தகர்த்து தூளாக்கும்.
இந்தக் கலவையில் பயன்படுத்தப்படும் 500-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்களில் பல நமக்கு தெரியாது, உச்சரிப்புக்கு கூட வாயில் வராது என்கிறார் ஜோஷ். தெரிந்த வேதிப்பொருட்களும் கூட பல சக்தியும் வீரியமும் அழிவும் வாய்ந்தவை. இதற்காக ஏராளமான நீரையும் பயன்படுத்துகிறார்கள் என்று அதன் அளவையும் மதிப்பிடுகிறார் ஜோஷ். அமெரிக்காவில் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் 4,50,000 எரிவாயு கிணறுகளை பதினெட்டால் பெருக்கி, அதை 127 மில்லியன் காலன்ஸால் பெருக்கினால் 40 டிரில்லியன் காலன்ஸ் நீர் 595 வேதிப்பொருட்களோடு சேர்ந்து………………..
ஜோஷ்ஃபாக்ஸ்
இது குறித்து அவர் அனைத்து நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார், யாரும் பதிலளிப்பதில்லை. ஆவணப்படத்தின் கடைசியில் இந்த படத்திற்காக நேர்காணலை மறுத்த நிறுவனங்கள் டைட்டிலாக வந்து போகின்றன. ஒருவேளை நாமும் அரசுத் துறைகளிடம் நமது நிபுணர்களை அனுப்பி நெடுவாசல் குறித்து கேள்வி எழுப்பினால் இதேதான் நிலைமை.
மேறகொண்டு முழு படத்தையும் நீங்களே பாருங்கள், வாய்ப்பிருப்பின் இந்தப் படம் குறித்து முழுமையாக எழுத முயல்கிறோம். இணையத்தில் எண்ணைய் எரிவாயு குறித்து ஏராளமான கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு அறிவாயுதத்தோடும் நெடுவாசல் போராட்டத்தை முன்னெடுப்போம். வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று உளறும் பாஜக பண்டாரங்கள்தான் மக்கள் என்ன அறிவியலாளர்களா என்று திமிருடன் கேட்கிறது. அதற்கு உலகெங்கும் போராடிய மக்களும் அறிவியலாளர்களும் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு பாஜக மட்டுமல்ல அவர்களது ஆண்டையான அமெரிக்காவிடம் கூட பதிலில்லை.
இவ்வளவு அழிவுகளோடு எடுக்கப்படும் எரிபொருள் யாருக்கு பயன்படுகிறது? இன்னமும் மண்ணெண்ணைக்காக ரேசன் கடைகளில் இருக்கும் இந்திய மக்களுக்கா, இல்லை அமெரிக்காவின் ஏழைகளுக்கா? குடிநீர் பஞ்சம், தட்டுப்பாடு, வறட்சி ஆகியவை ஏதோ இயற்கை சார்ந்த துயரமாக பார்க்கப்படுவதால் இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம் தப்பிக்க நினைக்கிறது. ஆனால் உலக மக்களுக்கு எதிரி இயற்கையின் அழிவு அல்ல. இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்தான்.
நெடுவாசல் போராட்டத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.
பிப்ரவரி 21 2017 அன்று மும்பை மாநகராட்சிக்கானத் தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி மும்பையின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளைப் பற்றி ஸ்க்ரோல் இணையதளம் வெளியிட்ட கட்டுரைத் தொடர்களின் சுருக்கப்பட்ட வடிவம். இது மும்பை கிழக்கு வார்டில் உள்ள தியோனர் குப்பைக் கிடங்கின் நிலைக் குறித்தக் கட்டுரை. வளர்ச்சி என்றால் அது அனைத்து மக்களுக்கென்றும், அதன் பொருட்டு சிலரோ சில மாநிலங்களோ தியாகம் செய்ய வேண்டும் என்றும் உளறும் பாஜக கும்பல்கள் ஒருபுறம். மறுபுறம் வளர்ச்சியை அறிவியலின் சாதனை என்றும் அதை எதிர்ப்போரை பழமை வாதிகள் என்றும் சித்தரிக்கும் அறிவுவீங்கிய கும்பல்கள். இன்னும் ஏழ்மையை மறைத்து விட்டு சூழலியல், இயற்கை நேசம், ஆர்கானிக் என்று சுத்தபத்தமாக பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் மறைக்கும் உண்மை என்ன? இந்தியாவில் வசதிபடைத்தோர் வாழ்வதற்காக ஏழைகளே அனைத்து அவலங்களையும் ஏற்குமாறு விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மீத்தேன் திட்டமோ, குண்டலினி யோகமோ, ஷாப்பிங் மால்களோ, அதி உயர் சாப்பாட்டுக் கடைகளோ, மல்டி பிளக்ஸ் திரையரங்கோ, சாட்டிலைட்டு சாதனைகளோ எதுவாகவும் இருக்கலாம். இதற்கான கழிவுகளை ஏழைகளும்- விவசாயிகளும், இதில் கிடைக்கும் செல்வங்களை பணக்காரர்களும், ஓரவளவு நடுத்தர வர்க்கமும் பகிர்ந்து கொள்கின்றனர். மறுப்பவர் கொஞ்சம் மூக்கை அடைத்துக் கொண்டு மும்பை தியோனர் கிடங்கில் குதியுங்கள்! – வினவு
தியோனர் குப்பைக் கிடங்கு
ஒன்பது வயது அஷ்ரபும் பதினோரு வயது ஷாருக்கும் நண்பர்கள். அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற சிறுவர்களைப் போல இவர்களும் நினைவு தெரிந்த நாள் முதல் வேலை செய்து வருகின்றனர். அது கிழக்கு மும்பை புறநகரான தியோனர். அந்தப் பகுதிச் சிறுவர்கள் சில நேரம் தங்களுடைய தந்தை, தாய் அல்லது வேறு உறவினர்களுடன் வேலைகளுக்குச் செல்வார்கள் – சில நேரம் தனியாகச் செல்வார்கள். வேலை இல்லாத ஒருசில நாட்கள் பள்ளிக்கூடத்திற்கும் செல்வதுண்டு.
பள்ளிக் கட்டிடம் சிதிலமடைந்து நொறுங்கி விழும் நிலையிலிருப்பதால், வேலைக்குச் செல்வதே உயிருக்கு பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். அவர்களது வேலையிடம் தியோனரில் அமைந்துள்ள பழமையான திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு. அது தான் அவர்களுக்கு வீடு -. ஏன் அவர்களின் உலகமே அது தான். தியோனரின் குப்பைக் கிடங்கு எப்போதும் பொங்கி வழிந்து கொண்டிருக்கும்.
தங்களுடைய சின்னக் கைகளால் அஷ்ரபும், ஷாருக்கும் அந்தக் குப்பைக் கிடங்கைக் கிளறுகின்றனர். சில நேரம் அந்த மாபெரும் குப்பைக் கடலின் மையப்பகுதி வரைக்கும் சென்றும் விடுகின்றனர்.
“மொத்த மும்பையின் கழிவுகளும் இங்கே வந்து எனது கைகளைக் கடந்து தான் செல்கின்றன” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் ஷாருக். அவனுக்கு தன்னுடைய பெயரோடு இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
”எனது கையைப் பாருங்கள்.. எப்படி நாற்றமடிக்கிறது. அவரெல்லாம் எனது கைகளைப் பிடித்துக் குலுக்குவாரா?” ஒரு பழிப்புச் சிரிப்புடன் குறிப்பிடுகிறான்.
இங்கே உள்ள மற்ற பையன்களைப் போல அஷ்ரபும் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்க்கும் விலையுயர்ந்த செண்டுகள், அழுகுக் களிம்புகளின் பெயர்களை உதிர்க்கிறான்… “ஆனால் அவையெல்லாம் வேலை செய்யாது… நாங்கள் நாறிக் கொண்டு தான் இருப்போம்” அவனது குரலில் ஒரு உறைந்த தன்மைக் காணப்பட்டது.
அந்தப் பகுதியே கடுமையாக நாறுகின்றது. குடலைப் பிடுங்கும் நாற்றத்திற்குக் காரணமான அந்தக் குப்பைக் கிடங்கு ரஃபீக் நகர் சேரி மற்றும் நல்லா (nallaah) பகுதிகளுக்கு இடையில் அமைந்திருக்கின்றது. நாற்றம் தான் அந்தச் சேரிகளின் அடையாளம். அங்கே செல்லும் எவராலும் மலை மலையாகக் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைக் கழிவுகளைக் காணாமல் இருக்க முடியாது. இங்கே தான் மும்பை மாநகரம் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யும் 9,600 மெட்ரிக் டன் குப்பையில் சரிபாதி கொட்டப்படுகின்றது.
தினோனர் திறந்தவெளிக் குப்பைக் கிடங்கு 1927-ல் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின் முலுந்த் மற்றும் கோராய் பகுதிகளில் வேறு இரண்டு குப்பைக் கிடங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தியோனர் குப்பைக் கிடங்கு சுமார் 111 ஹெக்டேர்களில் அமைந்துள்ளது. சுமார் எட்டு மாடிக் கட்டிடம் அளவுக்கு உயரமாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இங்கே கொட்டப்பட்டுள்ள அழுகிய மற்றும் காய்ந்த வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் என மொத்தக் கழிவுகளின் அளவு சுமார் 160 கோடி டன்கள் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
ரபீக் நகர் சேரியிலிருந்து தியோனர் குப்பைக் கிடங்கிற்கு செல்லும் வழி
தியோனர் குப்பைக் கிடங்கில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள் மொத்த மும்பையையும் அடர்த்தியான புகையால் மூடிவிடும். கழிவுகளுக்கு இடையே கலந்திருக்கும் இரசாயனப் பொருட்கள் மற்றும் அதிலிருந்து உற்பத்தியாகும் மீத்தேன் போன்ற அபாயகரமான வாயுக்கள் நெருப்புப் பிடித்துக் கொள்ளும் போது அவற்றை அனைப்பதற்கு பலநாட்கள் ஆவதுடன், ஒட்டுமொத்த மும்பையின் நுரையீரலுக்கும் கான்சரைப் பரிசளித்துச் செல்கின்றன. மேலும் தற்போது கழிவுகளின் காரணமாக நிலத்தடி நீரும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ரஃபீக் நகர் வாழத்தகுதியற்ற இடமாக இருப்பினும், மும்பைக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளிகள் வேறு எங்கும் தங்குமிடம் கிடைக்காத நிலையில் கிழக்கு மும்பைச் சேரிகளான இந்தப் பகுதிகளில் ஒதுங்குகின்றனர். அதே போல் கிழக்கு மும்பை சேரிகளில் சில ஆண்டுகளாக வசிப்பவர்கள் பின்னர் வேறு பகுதிகளில் இடங்களில் வீடு தேடினாலும் ”கச்ராவாலாக்கள்” (குப்பை பொறுக்குபவர்) எனச் சொல்லி வீடுமறுக்கப்படுவதாகச் சொல்கிறார் 45 வயதான சவுக்கத் சயீத்
கிழக்கு ‘மும்பை’ எனச் சொல்லப்பட்டாலும் மும்பையின் ’அடையாளங்களென’ சொல்லிக் கொள்ளப்படும் பளபளப்பான ஷாப்பிங் மால்களோ, வழுக்கும் சாலைகளோ, நீச்சல் குளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளோ இந்தப் பகுதியில் இல்லை. தாராவியைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் இந்தப் பகுதியை ஏழ்மையான தாராவி எனப் புரிந்து கொள்ளலாம். மும்பை கிழக்கு வார்டின் 78 விழுக்காடு மக்கள் தொகை சேரிகளில் தான் வசிக்கின்றது.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமெனப் பீற்றிக் கொள்ளப்படும் மும்பையில் தான் 28 பில்லியனர்களும், 45,000 மில்லியனர்களும் வசிப்பதாகவும் அவர்களது மொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 820 பில்லியன் டாலர்கள் (53.30 லட்சம் கோடி ரூபாய்) என மதிப்பிடப்படுகின்றது (New World Wealth Report – 2016). இந்தப் பணக்கார மும்பையின் ஆசன வாயாகவே மும்பையின் சேரிகளை அரசு நிர்வாகம் மதிக்கின்றது.
இது வெறும் குப்பைக் கிடங்கு பற்றிய பிரச்சினை அல்ல. கடுமையான வறுமை, கீழ்த்தரமான வாழும் சூழல், சிவில் நிர்வாகப் பணிகள் புறக்கணிப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு, கல்வி நிலையங்களோ மருத்துவ வசதிகளோ இல்லாத நிலை, ரியல் எஸ்டேட்டிலிருந்து குடிநீர் சப்ளை வரை கட்டுப்படுத்தும் மாபியா கும்பல்கள், அந்த மாபியா கும்பல்களின் போதை வியாபார வலைப்பின்னல் என மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மும்பையின் சேரிகளைப் பராமரிக்கிறது அரசு நிர்வாகம்.
மோசமானவற்றில் முதலாவதாக நிற்கின்றன மும்பைக் கிழக்கு வார்டில் அமைந்துள்ள சேரிகள். குறிப்பாக தியோனர் குப்பைக் கிடங்கின் இருபுறமும் அமைந்துள்ள சேரிப் பகுதிகளின் நிலை விவரிக்கவொண்ணாததாக உள்ளது. 90 ஆண்டுகளுக்கு முன் தியோனர் பகுதியைக் குப்பைக் கிடங்கு அமைப்பதற்காக உருவாக்கிய போது, அங்கே இருந்த குடியிருப்புப் பகுதிகள் இவ்வளவு அடர்த்தியானதாக இல்லை என்பதோடு அந்தக் காலகட்டத்தில் மும்பை உற்பத்தி செய்த கழிவுகளும் குறைவாகவே இருந்துள்ளது.
புதிய பொருளாதாரக் கொள்கைகள் நகரங்களை மட்டுமே – குறிப்பாக அதில் உள்ள பணக்காரர்களின் பகுதியை மட்டும் – குறிவைத்து வளர்த்தெடுத்த அதே சமயம், ஆகப் பெரும்பான்மையான மக்கள் ஈடுபட்டிருந்த விவசாயம், கிராமப்புற நெசவு உள்ளிட்ட தொழில்களை அழித்தொழித்தது. ஊரகப் பகுதிகளில் பிழைப்பை இழந்த மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்தனர். நாடெங்கும் பிழைப்புத் தேடி அலைந்தவர்களை மும்பை ஈர்த்ததில் எந்த வியப்புமில்லை. அவ்வாறு வந்து குவிந்த உழைக்கும் மக்களைக் கொண்டு பணக்காரர்களின் உலகத்தை அழகுபடுத்துவதும், அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொள்வதும் நடந்தது. அதே சமயம், இவ்வாறு வந்து குவிந்த மக்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வசதிகளைப் புறக்கணித்தது – மக்கள் தியோனர் போன்ற சேரிகளில் வந்து விழுந்தனர்.
ஒரே ராக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சாட்டிலைட்டுகளை அனுப்பியதாக இந்தியா பெருமை பீற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் தியோனர் குப்பைக் கிடங்கில் சிறுவர்கள் வெறும் கைகளால் கழிவுகளுக்கு இடையே ஏதாவது கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கழிவுகளைக் கையாள்வது, அவற்றை மட்கும் / மட்காத குப்பைகள் எனத் தரம் பிரிப்பது, மறுசுழற்சி செய்வது என அனைத்தும் இயந்திரமயமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் “வல்லரசு” இந்தியாவின் எதிர்கால மன்னர்களோ குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயக நாடு ஒன்றில் விவசாயிகளின் தற்கொலை குறித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்கிறீர்கள். அந்நாட்டு ஜனநாயகத்தை காக்கும் பொறுப்புள்ள போலீசு அந்த அனுமதியை ஆய்வு செய்து, விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசுவது வன்முறைக்கு வழிவகுக்கும், சீருடையுடன் கொடியும் தடியும் முதலான ஆயுதங்களை வைத்துள்ளீர்கள், ஏற்கனவே விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அளித்து விட்டதால் நீங்கள் கூட்டம் நடத்துவது தேவையற்றது என்று பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கிறது. இது கற்பனை இல்லை. திருத்துறைப்பூண்டியில் மக்கள் அதிகாரம் நடத்த இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசு இப்படித்தான் எழுதிக் கொடுத்திருக்கிறது. இதுதான் இந்தியா – தமிழகத்தில் நிலவும் அதி உயர் ஜனநாயகத் தரம். செத்துப் போன விவசாயிகள் குறித்து நீங்கள் கூட்டம் நடத்த தேவையில்லை என்று அலட்சியமாகவும் சாதரணமாகவும் கூறும் இந்த ஜனநாயகத்தின் பெயர் சர்வாதிகாரமா காட்டாட்சியா போலீஸ் ராஜ்ஜியமா? கீழே போலீசு எழுதிக் கொடுத்திருக்கும் ஆணவ ஆவணத்தை படியுங்கள்!
– வினவு
திருத்துறைப்பூண்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரின் செயல்முறை ஆணை
முன்னிலை :
திரு.M.கண்ணதாசன்
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
திருத்துறைப்பூண்டி உட்கோட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
பொருள்:- காவல் – திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் – திருத்துறைப்பூண்டி காவல் சரகம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலையம் அருகில் விளக்க பொதுக்கூட்டம் நடத்தக்கோரி மனு செய்தது – காவல் துறை அனுமதி மறுப்பது தொடர்பாக
பார்வை:- திரு முரளி, மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம் அமைப்பு, அம்மையப்பன், திருவாரூர் என்பவரின் மனு…
தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கும், இறந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் கோருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி காவல் சரகம், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் எதிர்வரும் 26.02.17 அன்று மாலை 17.00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் திரு.காளியப்பன் அவர்கள் தலைமையில் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதாக சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள் அச்சடித்து தாங்கள் அமைப்பு வெளியிட்ட தகவலின் பேரிலும், மாவட்ட செயலாளராகிய தாங்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் அணுகி பொதுக்கூட்டம் நடத்த கோரியிருந்த மனுவின் பேரிலும், பரிசீலனைக்கு பிறகு தங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அறிவிக்கப்பட்டு, தாங்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகின்றது
1) தாங்கள் வலியுறுத்தியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான நிவாரணம் குறித்து ஏற்கனவே தமிழக அரசு கடந்த வாரம் நிவாரணம் அறிவிப்பு செய்துள்ளது. மேற்படி கோரிக்கைகளுக்காக தங்களது அமைப்பு நடத்தும், விளக்க பொதுக்கூட்டம் தேவையற்ற ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலையில் தாங்கள் நடத்தும் பொதுக்கூட்டம் பொதுமக்கள் மத்தியில் வன்முறை போராட்டத்தினை தூண்டும் விதமாகவும், பொதுக்கட்டம் குறித்து வெளியிட்டு வரும் அறிக்கைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும் உள்ளதால் இதனால் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
2) மேலும் இதே போன்று விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிவாரணம் கோரி கடந்த 11.01.17 அன்று திருவாரூர் நகர காவல் சரகம், திருவாருர் புதிய இரயில் நிலையம் அருகில் தொடர் முழக்க ஆர்பாட்டம் நடத்த தாங்கள் திருவாருர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரியிருந்த மனுவின் பேரில் தங்களுக்கு நிபந்தனையுடன் செயல்முறை ஆணை வழங்கிய நிலையில் தாங்கள் நடத்திய தொடர்முழக்க ஆர்பாட்டத்தில் நிபந்தனைகளை மீறி உரை நிகழ்த்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாகவும், மேலும் போராட்டத்தின் போது தங்களது அமைப்பினர் சீருடை அணிந்து பெரிய அளவில் தடி மற்றும் கம்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தமாறு அறிவுறுத்தியும் மீறி அத்தகைய ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளீர். இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலைய குற்ற எண். 08/17 u/s. 143, 188, 504, IPC r/w 109 IPC-ன் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடதக்கது
3) மேலும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடமானது மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாகும். தங்களது பொதுக்கூட்டத்திற்கு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களிலிருந்து அமைப்பினர் வாகனங்களில் வரும் சமயத்தில் திருத்துறைப்பூண்டி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கண்ட காரணங்களால் தாங்கள் கோரிய விளக்க பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகின்றது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போன பயிர்கள்.
“காவிரிக்காக கர்நாடகவோடு மல்லுக்கட்டுகிறோம். ரொம்ப சரி, ஆனால், இங்கே என்ன செய்கிறோம்?” _ நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தனைச் சந்தித்து வறட்சியையும் விவசாயிகளின் சாவுகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, இப்படியொரு கேள்வியை அவர் என்னிடம் கேட்டார்.
செக்கானுர் கதவணை உடைந்து வீணாக வெளியேறும் காவிரி நீர்.
“காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் வாய்க்கால்களும், டெல்டா மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளும் தூர் வாரப்படாமல் புதர்ச் செடிகள் மண்டியும், சிதிலமடைந்தும் கிடப்பது; தூர் வாருவது என்ற பெயரில் நடந்துவரும் ஊழல்; மேட்டூருக்குக் கீழே நீரைச் சேமித்து வைக்க போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாமல் இருப்பது; தமிழகத்தின் காவிரிப் படுகையில் நடந்துவரும் மணல் கொள்ளை” – என நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு காட்டிவரும் அக்கறையின்மை, அலட்சியம் என்ற கிரிமினல்தனத்தைச் சாடுவதாக இருந்தது, அவரது கேள்வி.
இந்தக் கேள்வி தமிழகம் முழுவதற்குமே பொருந்தக்கூடியது என்ற போதும், காவிரிப் படுகையைப் பொருத்தமட்டில் மிகுந்த முக்கியத்துவமுடையது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மொத்த காவிரி நதி நீரில் தமிழகத்தின் பங்கு 419 ஆயிரம் மில்லியன் கனஅடி (டி.எம்.சி.) ஆகும். இதில், கர்நாடகா தமிழகத்திற்குத் தர வேண்டிய பங்கு 192 ஆ.மி.க.தான். மேட்டூருக்கு மேல் பகுதியில் கிடைக்கும் நீரின் அளவையும் சேர்த்தால், மேட்டூருக்கு ஆண்டொன்றுக்கு வந்து சேரும் நீரின் அளவு 217 ஆ.மி.க. மீதமுள்ள 202 ஆ.மி.க. நீரும் மேட்டூருக்குக் கீழே தமிழகத்தின் பகுதிகளில் கிடைக்கும் நீர் ஆகும். (ஆதாரம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை வெளியிட்டுள்ள மேட்டூர் அணை பாசனப் பகுதி – பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும் – 2013-14) நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகா மறுத்துவரும் இன்றைய நிலையில், தமிழகத்திலுள்ள காவிரிப் படுகையில் கிடைக்கும் நீரை முடிந்த அளவு சேமித்தும், சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்திக் கொண்டால்தான், மேட்டூர் அணை பாசனப் பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடியையாவது உத்தரவாதப்படுத்த முடியும். ஆனால், தமிழக அரசின், ஆளுங்கட்சிகளின் செயல்பாடுகளோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது.
” சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட கொள்ளிடம் ஆறு மழைக்காலத்தில் வெள்ள நீர் ஓடும் வடிகாலாகவே உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அணை எதுவும் இல்லாததால்,2013-ஆம் ஆண்டில் மட்டும் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் நேராகக் கடலுக்குச் சென்றுவிட்டது. எனவே, தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்து, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ” 2014-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில், காவிரியின் துணை ஆறுகளில் 117 கோடி ரூபாய் செலவில் 61 சிறு அணைகளைக் கட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்தது.
ஆற்றுப் படுகைகளில் நடைபெறும் மணல் கொள்ளையால் ஆற்று வழித்தடம் பள்ளம், மேடாகி நீரோட்டம் தடைப்பட்டு வீணாகும் நீர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இவற்றுள் எத்துணை அணைகள் கட்டி முடிக்கப்பட்டன, கட்டி முடிக்கப்பட்டவை எந்த அளவிற்குத் தரமாக உள்ளன என்பதெல்லாம் பெரும் புதிராகவே உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு மூத்த வேளாண் பேரவையினர், “மேட்டூருக்குக் கீழே கல்லணை வரையிலும் இருபத்து மூன்று தடுப்பணைகள் கட்டத் திட்டமிடப்பட்டு, அதில் மூன்று தடுப்பணைகள் மட்டும்தான் இதுவரை கட்டப்பட்டுள்ளது என்றும், அப்படிக் கட்டப்பட்ட மூன்றில் செக்கானுர் தடுப்பணை கடந்த டிசம்பர் இறுதியில், அதாவது பல பத்தாண்டுகளில் காணப்படாத வறட்சி நிலவிய நேரத்தில் உடைந்துபோய், அரை டி.எம்.சி. தண்ணீர் வீணாகிப்போனதாக”க் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
கும்பகோணம் அருகே காவிரியின் கிளை நதியான அரசலாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து போனதால், 2015-இல் பெய்த பெருமழையின் நீரையும் சேமிக்க முடியவில்லை. இந்த ஆண்டும் அந்தத் தடுப்பணை சீர்செய்யப்படவில்லை எனக் குற்றம் சுமத்துகிறார்கள், அப்பகுதி விவசாயிகள்.
மேட்டூர் அணையை மிக நீண்ட காலமாகத் தூர் வாராததால், அதன் முழுக் கொள்ளளவான 93.4 அடிக்கு நீரைச் சேமிக்க முடியாதென்றும், அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும்போது அணையில் 74 அடி மட்டுமே நீர் தேங்கியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
காவிரியின் கிளை நதியான வெட்டாறு கடலில் கலக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி ஆற்றின் வடிகாலில் ஒரு கதவணையை அமைப்பதன் மூலம் கீவளூர் பகுதியைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் 25,000 ஏக்கரில் கோடைப் பயிர் செய்ய முடியும் என்றொரு யோசனையை விவசாயத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை பலர் இடத்தில் சொல்லிய பிறகும், அந்தத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து ஆய்வு செய்யக்கூட மறுக்கிறது, தமிழக அரசு எனக் குற்றஞ்சுமத்துகிறார், நாங்குடியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆங்காங்கே தடுப்பணைகளைக் கட்டி பருவ மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைப்பதன் மூலம், 10 டி.எம்.சி. தண்ணீரைப் பெற முடியும் எனக் கூறுகிறது, தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையினர் வெளியிட்டுள்ள கையேடு.
இயற்கையின் வழியாகக் கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்க மறுப்பதில் மட்டுமல்ல, காவிரியின் நீர்வழித் தடங்களைப் பராமரிப்பதிலும் தமிழக அரசு பெரும் கிரிமினல் குற்றத்தையே இழைத்து வருகிறது. அதிலொன்று மணல் கொள்ளை. ஆற்று மணல் கொள்ளை ஒருபுறம் நிலத்தடி நீரை வற்றச் செய்துவிடுகிறது என்றால், இன்னொருபுறம் ஆற்றில் நீர் ஓடுவதைத் தடுத்துக் குட்டை போலாக்கி, எதற்கும் பலன் இல்லாமல் வீணடிக்கிறது.
காவிரி – கட்டளைக் கால்வாயின் அவலமான நிலை.
“காவிரி நீர் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சென்றடைய வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டால் போதும் என்ற நிலையில், மணல் கொள்ளையால் ஆற்றின் வழித்தடம் பள்ளமும் மேடுமாகித் தண்ணீர் செல்வது தடைப்பட்டுப் போவதால், 10,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டிய நிலையில் பொதுப்பணித் துறை உள்ளது. இந்த வேறுபாடு – வினாடிக்கு 3,000 கன அடி நீர் – எதற்கும் பயன்படாமல் வீணாகிறது” எனக் கூறுகிறார், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி.
மணல் கொள்ளைக்கு அடுத்து காவிரியின் நீர்வழித் தடங்களைத் தூர் வாருவது என்ற பெயரில் நடந்து வரும் ஊழல். “ஐந்து இலட்ச ரூபாய்க்குள் இருக்கும் தூர் வாரும் வேலைகளை உள்ளூர் கட்சிக்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் மேலே இருக்கும் வேலைகள் அமைச்சரின் மச்சான், மாமன் – என உறவு முறைகளை வைத்து அமைச்சரின் குடும்பமே எடுத்துக் கொள்கிறது. காண்டிராக்டு எடுப்பதில் இப்படியான தில்லுமுல்லு என்றால், தூர் வாரும் வேலையோ கண் துடைப்பாகவே நடைபெறுகிறது. பத்து இலட்ச ரூபாய் வேலையில், ஒண்ணரை இலட்ச ரூபாய் பொக்லைன் மிஷினுக்கு, ஒரு இலட்ச ரூபாய் ஆபீசுக்கு, மீதியெல்லாம் காண்டிராக்டு எடுத்திருக்கும் கும்பல் சுருட்டிவிடும். எங்கள் ஊரில் இப்படித்தான் நடந்தது. நாங்கள் பொக்லைன் டிரைவருக்கும், மேனேஜருக்கும் சோறு கொடுத்து, படிக்காசும் கொடுத்து மேலும் இரண்டு கிலோ மீட்டர் வெட்டினோம்” என்கிறார், நாங்குடியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
இது மட்டுமல்ல, எப்போது தூர் வார வாருவார்கள் எனக் கிராம மக்களுக்கே தெரியாது. தண்ணீர் வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, ராத்திரியோடு ராத்திரியாக வந்து வெட்டிவிட்டுப் போவார்கள். தாலுகா ஆபிஸில் இரண்டு பொக்லைன் மிஷின் இருந்தால், விவசாயிகளே டீசல் போட்டு உருப்படியாக வெட்டிவிடுவோம் என்கிறார், அவர்.
“நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் தூர்வாரும் பணிகள் “பேட்ச் ஓர்க்” பார்ப்பது போல நடைபெறும். வாய்க்கால்களை முறையாகத் தூர் வாருவது பற்றி அரசியல்வாதிகள் மட்டுமல்ல, இப்பொழுதெல்லாம் குடியானவர்களும் அக்கறை கொள்வதில்லை” என்கிறார், வேளாண் துறையைச் சேர்ந்த இளநிலை அதிகாரி.
நீர் வழித்தடங்களைப் புதர்ச் செடிகள் அண்டாமல், மணல் திட்டுகள் உருவாகாமல் முறையாகப் பராமரிப்பது, நீர் தடையின்றி ஓடுவதற்கு அவசியமானது என்ற பொதுப் புரிதல் அனைவருக்கும் இருக்கும் என்ற போதும், காவிரி டெல்டாவைப் பொருத்தவரை இந்தப் பராமரிப்புப் பணி இன்னும் கூடுதலாகக் கவனம் கொடுத்துச் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
வெட்டாறு கடலில் கலக்கும் இடமருகே ஒரு கதவணையை அமைக்கக் கோரி வரும் நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம்.
கல்லணைக்குக் கீழேயுள்ள டெல்டா பகுதியில் காவிரி 38 கிளை நதிகளாகப் பிரிந்து 724 கி.மீ. தூரத்திற்கு ஓடி, கடலில் கலக்கிறது. காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்களின் எண்ணிக்கை 25,228. இந்த வாய்க்கால்கள், ஏ வகுப்பு, பி வகுப்பு எனத் தொடங்கி ஜி வகுப்பு என ஏழு விதமாகப் பிரிக்கப்பட்டு, 28,360 கி.மீ. தூரத்திற்கு நீரை எடுத்துச் செல்லுகின்றன. (ஆதாரம்: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை வெளியிட்டுள்ள மேட்டூர் அணை பாசனப் பகுதி கையேடு, 2016-2017, பக்.12)
டெல்டா பகுதி முழுவதுமே கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமையாத பூகோள காரணத்தால், அதாவது, 2,000 அடிக்கு ஒரு அடிவீதம் உயர்ந்து கிட்டதட்ட சமநிலையில் உள்ளதால், காவிரி, அதன் துணை நதிகள், வாய்க்கால்களில் ஓடும் நீர் மெதுவாகவே கடலை நோக்கிப் பாய்கிறது. இந்தப் புவியியல் காரணம், ஆற்று வழித் தடங்களையும் வாய்க்கால்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினாலும், தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாகவே அலட்சியமாகவே நடந்து வருகிறது. அதுவும் கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நிலைமை படுமோசம் என்கிறார்கள் டெல்டா பகுதி விவசாயிகள்.
இந்த அலட்சியம் இரண்டு விதங்களில் விவசாயத்தை, விவசாயிகளை நேரடியாகப் பாதிக்கிறது. ஒருபுறம், தண்ணீர்ப் பற்றாக்குறை காலங்களில் நீர் சீராகப் பாய்வதற்கு ஏற்படும் தடைகளால் தண்ணீர் வீணாகிறது. பெருமழைக் காலங்களிலோ வாய்க்கால்கள் நிரம்பி, உடைப்பு ஏற்பட்டு, வயல்களுக்குள் புகுந்து விவசாயிகளுக்கு நட்டமேற்படுத்துகிறது. 2015-இல் வெள்ளத்தினால் டெல்டா மற்றும் கடலூர் பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு 1,600 கோடி ரூபாய்.
“டெல்டா பகுதியிலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாததால், அதன் மொத்த கொள்ளளவில் 60 முதல் 65 சதவீத நீரை மட்டுமே எடுத்துச் செல்லும் அளவிற்குத் திறன் குறைந்து போயுள்ளன. இந்தத் திறனை 80 முதல் 85 சதவீதமாக அதிகப்படுத்தினால், பெருமளவு நீரைச் சேமிக்க முடியும். இதற்கு வாய்க்கால்களை முழுமையாகச் செப்பனிட்டுப் பராமரிப்பதற்கு, ஆண்டுக்கு 200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினால் போதும்” என்கிறார், ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி.
டெல்டா மாவட்ட வாய்க்கால்கள் மட்டுமல்ல, சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையிலுள்ள ஏரிகளும், குளங்களும், ஆற்று வழித் தடங்களும் மணல் கொள்ளையாலும், ஆக்கிரமிப்புகளாலும் சீரழிந்து கிடப்பதை, 2015-இல் பெய்த பெருமழை அம்பலப்படுத்திக் காட்டியது. நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்திக் கொள்ள நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துவிட்டுப் போன பழைய கட்டுமானங்களைச் சீரழித்ததோடு மட்டுமின்றி, புதிதாக உருவாக்குவதிலும் தமிழக அரசு அக்கறையற்றுதான் நடந்து வருகிறது என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். கரூர் அருகேயுள்ள மாயனூரில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையிலிருந்து ஒரு ஈர்ப்பு கால்வாயை அமைத்து, வெள்ளக் காலங்களில் காவிரியில் பாயும் நீரை இக்கால்வாயின் வழியாகக் கொண்டு சென்று, அதனைக் குண்டாற்றில் இணைத்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 3.37 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசனம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம். இத்திட்டத்திற்கு 3,516 கோடி ரூபாய் செலவாகும் எனப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டாலும், இந்தத் திட்டம் இன்னும் காகித அறிக்கையாகவே இருந்து வருகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போன பயிர்கள்.
இது போல கடந்த தி.மு.க. ஆட்சியில் தயாரிக்கப்பட்ட திட்டமான தாமிரபருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
காவிரியின் முக்கிய துணை ஆறான பவானி நதியில் குறுக்கே கதவணைகளே இல்லை என்பதோடு, சிறுமுகை, சத்தியமங்கலம், பவானிசகார் உள்ளிட்ட 11 இடங்களில் கதவணைகள் கட்ட மைய அரசின் மரபுசாரா எரிசக்தித் துறை முன்வைத்த பரிந்துரைகளும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
2012-இல் அமைக்கப்பட்ட காவிரி தொழில்நுட்பக் குழு, தடுப்பணைகளும் கதவணைகளும் கட்ட முன்வைத்த பரிந்துரைகள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்கிறது மற்றொரு செய்தி.
ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு நிலம், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட கட்டுமான வசதிகள் எந்தளவிற்கு முக்கியமானதோ, அதுபோல விவசாயத்திற்குப் பாசன வசதி அடிப்படையானது. தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளை இலவசமாகவோ, மானியமாகவோ செய்து கொடுத்து, அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துவரும் ஆட்சியாளர்கள், விவசாயிகளைத் தம் சொந்தக் கையை ஊன்றி கரணம் போடும்படிக் கைகழுவி விடுகிறார்கள்.
வெறும் 650 கோடி ரூபாய் முதலீட்டைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்த நோக்கியா நிறுவனத்திற்கு, அது தொடங்கப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளில் தமிழக அரசும், மைய அரசும் வாரிக்கொடுத்த பல்வேறு சலுகைகளின் மதிப்பு மட்டும் 10,000 கோடி ரூபாயாகும். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட வரி விலக்கோ பல பத்து இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டுகிறது. இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பொதுப் பணத்தை வாரிக்கொடுக்கத் தயங்காத ஆட்சியாளர்கள், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்து, டெல்டா வாய்க்கால்களைச் சீரமைக்க மறுக்கிறார்கள். காவிரி-குண்டாறு இணைப்பு, தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு உள்ளிட்டு பல்வேறு திட்டங்களை மட்டுமல்ல, உரிய இடங்களில் கதவணைகள், தடுப்பணைகளை முறையாகக் கட்டிப் பராமரிப்பதில்கூட அக்கறையற்று இருக்கிறார்கள்.
இந்தியாவெங்கிலுமே விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், விவசாயிகள் மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதும் அரசுகளின், ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றபோதும், விவசாயத்தைப் புறக்கணிப்பதில் தமிழக அரசோ இன்னும் மூர்க்கமாக நடந்துவருகிறது. ஆற்று மணல், தாது மணல், கிரானைட், நிலம் (ரியல் எஸ்டேட்) ஆகிய இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பல்தான் ஆளுங்கட்சி உள்ளிட்டு அனைத்து ஓட்டுக் கட்சிகளிலும் நிரம்பியிருப்பதால், தலைமைச் செயலர் தொடங்கி தலையாரி வரையிலான அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் இந்தக் கும்பலின் கையாளாக இருப்பதால், தமிழக விவசாயத்தின் அழிவை இந்தக் கும்பல் நாலுகால் பாய்ச்சலில் துரிதப்படுத்துகிறது. விவசாயத்திற்கு ஆதாரமான நீர் ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதை, புறக்கணிக்கப்படுவதை இந்தப் பின்னணியிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீராதாரங்களைத் தூர்வாரிப் பராமரிப்பதற்கு 3,400 கோடி ரூபாய் ஒதுக்கப் போவதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையைத்தான் நினைவுபடுத்துகிறது.
சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர்-தமுக்கம், கோவை வ.உ.சி. மைதானத்தில் திரண்ட மாணவர்கள், இளைஞர்களின் வீரம் செறிந்த போராட்டம், தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மீட்பதற்கானது. அப்போதே அதை விவசாயப் பெருமக்களின் வாழ்வுரிமைக்கான எழுச்சியாக வளர்த்தெடுப்பதற்கான முயற்சியை தீவிரவாத சமூகவிரோதிகளின் ஊடுறுவல் என்ற பெயரால் போலீசு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி ஒடுக்கியது. ஆனால் அடங்காது, அத்துமீறும். இது வேறு தமிழகம்.
இன்று நெடுவாசலில் இயற்கை எரிவாயுக் கொள்ளை-அழிவுத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் கொதித்தெழுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைய முடியாதவாறு, மெரினாவையும், தமுக்கத்தையும், வ.உ.சி மைதானத்தையும் முற்றுகையிட்டு எவ்வாறு தாக்கினரோ, அதே போல நெடுவாசல் கிராமத்தை சுற்றிவளைத்து போலீசும் அதிரடிப்படையும் உளவுப்படையும் குவிக்கப்பட்டுள்ளன. சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். நகரங்கள், கிராமங்கள் என்று பாராது தமிழகத்தின் அனைத்து முக்கியப் புள்ளிகளையும் போராட்டக்களமாக மாற்றுவதன் மூலம் சதிகாரர்களையும் அடக்குமுறை சக்திகளையும் முறியடிக்க முடியும்.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, இயற்கையான நீர் நிலைகளை அழித்து, டெல்டா மாவட்டங்களை குடிநீருக்கே அலையும் பாலைவனமாக்கி, இந்திய கார்ப்பரேட் தரகு முதலாளிய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக விவசாயப் பெருமக்களை பஞ்சம் பிழைக்கும்படி வெளியேற்றியும், பேரழிவில் தள்ளியது. அதோடு நிற்காது, கீழே தள்ளியதோடு குழியும் பறிக்கும் விதமாக, வளர்ச்சி என்ற பெயரால், மக்களுக்கு பேராபத்து விளைவிக்கும் நாசகரத்திட்டங்களைத் திணிக்கின்றனர். நாடு முழுவதற்குமான கார்ப்பரேட் தொழில்களுக்கான மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நமது காட்டுவளம், கடல் வளம், நீராதாரம் அனைத்தையும் சூறையாடுகின்றனர். இதற்காக கடற்கரை நெடுக அணு உலைகள், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. உள் மாவட்டங்களில் சிறு, குறு மின்னுற்பத்தி நிலையங்கள் நிறுவப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் கொட்டப்பட்டு, நீர், நிலம், காற்று அனைத்தும் நஞ்சாக்கப்படுகிறது. இந்த அழிவுகளையும் ஆபத்துகளையும் எதிர்த்து அண்டைமாநிலங்களில் மறுக்கப்படும் திட்டங்கள் எல்லாம் இங்கு மட்டும் இரகசியமாகவும் நைச்சியமாகவும் மூர்க்கமாகவும் திணிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே மீத்தேன் ஷேல் கேஸ் போன்ற பெயர்களில் நுழைய முயன்று மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்த நிலையில் ஹைட்ரோகார்பன் என்று பெயரை மாற்றிக்கொண்டு நாசகரத்திட்டம் திணிக்கப்படுகிறது. தமிழர்களின் வாழ்வுரிமை பறிப்பு, மற்றும் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தனித்தனியே தன்னெழுச்சியாக நடத்தும் நம் மக்கள், ஆட்சியாளர்களின் துரோகங்களாலும் பிற ஓட்டுக்கட்சிகளின் சமரசங்களாலும் ஏமாற்றப்படுகின்றனர். ஜல்லிக்கட்டு அனுமதி, மீத்தேன் ஷேல் கேஸ் கிணறுகள் மூடல் போன்ற ஒருசில தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் போல, நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு தற்காலிகப் பின்வாங்குதல், ஆபத்தில்லாமல் திட்டம் என்ற உறுதிமொழி, விவசாயிகளின் பாதிப்பிற்கு நிவாரணம் போன்ற குறுக்குவழிகள் மூலம் முடிவு கட்ட ஆட்சியாளர்கள் எத்தணிக்கிறார்கள். அமைப்பு சாரா நிறுவனங்களும் ( NGO –க்கள் ), சமரசவாத ஓட்டுக்கட்சிகளும், விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினைகளையும் மக்கள் போராட்டங்களையும் குறுக்கி சிதைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
மக்கள் தங்கள் பாதிப்புகளை எதிர்த்து உறுதியாக போராடினால் சமூகவிரோதிகள், தேசவிரோதிகள் என்று பூச்சாண்டி காட்டுவதும், போலீசே தீ வைப்பது, பின்லேடன் போன்ற பொய்ச்சாட்சியங்களை உருவாக்குவது, தடியடி – கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மட்டுமல்லாது, பெண்கள் குழந்தைகள் உள்பட போராளிகள் மீது வர்மப்பிடி – வக்கிர தாக்குதல்களை ஏவி ஆக்கிரமிப்பு இராணுவத்தைப்போல் ஒடுக்குகின்றனர். டெல்லியின் நேரடி எடுபிடியாக கொடூர தாக்குதல்களை நடத்துகிறது எடப்பாடியின் போலீசு.
நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்பதற்கு தடை போடும் போலீசு!
பின்குறிப்பு: புதுக்கோட்டையிலும், நெடுவாசலிலும் நடந்து வரும் போராட்டத்தில் பகுதி வாழ் மக்கள், பல்வேறு அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் ஆகியோரோடு மக்கள் அதிகாரம் அமைப்பினைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்று வருகின்றனர். ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் சேர்வதற்காக திரண்டு வரும் மக்கள் அதிகாரம் தோழர்களை போலீஸ் தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறது. நேற்று 26.02.2017 ஞாயிறு அன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூன்று வாகனங்களில் நெடுவாசல் சென்ற போது போலீஸ் அடாவடியாக அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியது. பிறகு சில தோழர்கள் பேருந்தில் சென்ற போதும் இறங்குமிடத்தில் அவர்களை அடையாளம் கண்டு கிட்டத்தட்ட கைது செய்து போலீசு வாகனத்தில் கொண்டு சென்று புதுக்கோட்டையில் இறக்கியது. நெடுவாசல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று போலீசு வெளிப்படையாக கூறுவதோடு அமல்படுத்தியும் வருகிறது.
இந்த வருடம் முதல் மருத்துவப் படிப்பிற்கு இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 1 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் அவசியம். ஆதார் இல்லாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் புதிய அட்டைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்க்காகச் சிறப்பு மையங்கள் அரசாங்கத்தால் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என்று நீட் தேர்வுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்து இருந்தாலும் அதில் உள்ள விவரங்கள் மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களோடு ஒன்றிப் போக வேண்டும் இல்லையென்றால் ஆதார் அல்லது மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்த பின்னரே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேற்கூறியவை அனைத்தும் நீட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள். இது குறித்து ஏற்கனவே ஒரு சிறு பதிவினை முகநூலில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் எழுதி இருந்தவை எனக்கு நேரிடையாக நிகழும் என்று அப்பொழுது எண்ணவில்லை.
இந்த வருடம் எனது தங்கை 12 ம் வகுப்புத் தேர்வினை எதிர்கொள்ள உள்ளார். அதன் பிறகு மருத்துவம் பயில வேண்டும் என்று அவருக்கு விருப்பம். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் அதற்க்கான விண்ணப்பிக்கும் வேலைகளைத் தந்தை தொடங்கினர். இந்தத் தேர்வுக்கு இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஒரு இணையச் சேவை மையத்தை அணுகினார். விண்ணப்பத்தின் முதல் பக்கத்திலேயே தேர்வரின் பெயர், பிறந்த தேதி போன்ற விபரங்களுடன் ஆதார் எண்ணும் நிரப்பப்படவேண்டும். விண்ணப்பத்தின் இரண்டாம் பக்கத்திற்குச் செல்வதற்கு முன்பு கொடுக்கப்பட்ட விபரங்கள் ஆதார் விபரங்களுடன் ஒப்பிடப்பட்டு எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல அனுமதிக்கும். எனது தங்கையின் ஆதார் அட்டையில் அவர் பெயருக்குப் பின் தந்தையின் பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. மற்ற சான்றிதழ்களில் தந்தை பெயரின் முதல் எழுத்து மட்டுமே இருக்கும்.
தமிழகத்தில் பெரும்பான்மையாக இந்த முறையில் மட்டுமே பெயர்கள் எழுதப்படும். ஆனால் கொடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் தந்தையின் முழுப்பெயர் விண்ணப்பதாரரின் பெயருக்குப் பின்னால் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர மற்ற பெரும்பான்மையான மாநிலங்களில் தனது பெயருக்குப் பின்னால் தான் சார்ந்திருக்கும் ஜாதியின் பெயரை இணைத்து எழுதும் பழக்கம் இன்றும் உள்ளது. தமிழகத்தில் பெரியார் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாகச் சாதி பெயரை இணைத்து எழுதும் வழக்கம் மறைந்தது. ஆனால் சமீப காலமாக மீண்டும் அந்த வழக்கம் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆளும் காவி அரசு நேரிடையாக மதவாத சாதிய பிரிவினைகளை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆதார் அட்டைகளில் தமிழத்தில் வழக்கத்தில் இல்லாத கடைசிப் பெயர் இணைக்கும் முயற்சியும் அதன் ஒருவகையே. இந்தப் பிரச்சனையின் காரணமாக விண்ணப்பம் முழுமை பெறாத நிலையில் எனது தந்தை ஆதார் விபரங்களைத் திருத்தும் முயற்சிகளைத் தொடங்கினார்.
எங்கள் ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அரசு ஆதார் மையம் ஒன்று உள்ளது. காலை 9 மணிக்கு முகாமை அடைந்தவர் மதியம் 3 மணிக்கு தான் வெளியே வருகிறார். இதே போல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் விபரங்கள் மாற்ற, புதிய அட்டை பெற என அங்கே கூடியிருந்த கூட்டம் மிக அதிகம். ஒரு வழியாக விபரங்கள் மாற்ற விண்ணப்பித்தாயிற்று, இரண்டு நாள் கழித்து அதே மையத்திற்குத் தொலைபேசி மூலமாக அட்டை பெற எப்பொழுது வர வேண்டும் என்று கேட்ட பொழுது, குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்குமே என்று அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள். அப்பொழுதான் அந்தக் குறுஞ்செய்தியைத் தேடி படிக்கிறார்கள். விண்ணப்பித்த அன்றே ஆதார் விபர மாற்றத்திற்கான தங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு செய்தி வந்து இருந்தது.
இந்த மாதிரி செய்தி வரும் என்று சொல்ல வேண்டியக் கடமை யாருக்கானது என்று தெரியவில்லை. அலைபேசிகளை வெறுமனே பேசுவதற்க்காக மட்டும் பயன்படுத்துபவர்கள், ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள், அலைபேசி இல்லாதவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. சரி இந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டு விட்டது, மீண்டும் அதே முகாமிற்கு மீண்டும் விண்ணப்பிக்கச் செல்கிறார். விண்ணப்பித்துவிட்டு வீடு வந்து சேர்கிறார். இந்த முறை அலைபேசி குறுஞ்செய்திக்காகக் காத்திருக்கிறார். அன்று மாலைக்குள் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி வருகிறது. அடுத்த நாள் அந்த முகாமிற்கு அழைத்துக் கேட்கிறார், எதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று? அந்த முகாமில் இருப்பவர்களுக்கும் தெரியவில்லை.
இப்போது என்ன செய்வது, யாரைப் போய்க் கேட்பது? இணையம் மூலமாகவும் இந்த விபரங்களை மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று நான் சொன்னேன். அங்கிருந்து சான்றிதழ்களை எனக்கு அனுப்பி நான் இங்கே விண்ணப்பிப்பதற்குப் பதில் அங்கேயே ஏதெனும் ஒரு தனியார் இணையச் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்து, ஒரு இணையச் சேவை மையத்தை அணுகினார். காலை விண்ணப்பம் பூர்த்திச் செய்யப்பட்டு அந்தச் சேவை மையத்திற்கு 50 செலுத்திவிட்டு வீடு வந்து சேர்கிறார். வந்து சேரும் முன்னரே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகச் செய்தி வந்து சேர்கிறது. மீண்டும் அந்த இணையச் சேவை மையத்தை அணுகி விசாரிக்கும் போது கொடுக்கப்பட்ட சான்றிதழ் தவறு என்று வந்துள்ளது. அதாவது வங்கி கணக்குப் புத்தகம் சான்றாக இணைக்கப்பட்டு இருந்தது. அதுவும் பாரத வங்கி கணக்குப் புத்தகம். அரசங்கத்தால் நடத்தப்படும் ஒரு தேசிய வங்கி கணக்குப் புத்தகம் ஆதார் அட்டை பெற ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் ரேஷன் அட்டையைச் சான்றாக வைத்து விண்ணப்பிக்கப்பட்டது. இந்த முறை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அலைபேசிக்கு செய்தி வரவில்லை. அதே வேளையில் நிராகரிக்கப்பட்டது என்றும் செய்தி வரவில்லை. ஒருவழியாக ஆதார் பெயர் மாற்று விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அனுமானித்துக் கொண்டு நீட் தேர்வுக்கும் விண்ணப்பிக்க இணையச் சேவை மையத்திற்குச் செல்கிறார்.
ஆதார் குறித்த மயக்கம் : படித்தவர்களும் பாமரர்களே
முதலில் ஆதார் பெயர் மாற்ற விண்ணப்பத்தினைப் பார்க்கிறார்கள், ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. புதிய ஆதார் மின்னணு அட்டையும் கிடைத்து விட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்குகிறது. முதல் பக்கம் முடிவில் பெயர் விபரங்கள் ஆதார் விபரங்களோடு ஒப்பீடு நடக்கிறது. ஒப்பீட்டின் முடிவில் கொடுக்கப்பட்ட பெயரும் ஆதார் விபரமும் ஒத்து போகவில்லை என்று வருகிறது. அப்படி என்றால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விபரங்கள் அதாவது பழைய அட்டையில் உள்ள விபரங்கள் மட்டுமே இந்த இணையத்தில் உள்ளீடு செய்யப்ட்டுள்ளது. புதிய விபரங்கள் இணைக்கப்படவில்லை. புதிய விபரங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலான வசதி செய்யப்படவில்லை. இப்போது என்ன செய்வது?? இதற்கிடையே நீட் அலுவலகத்தை அலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ள நடந்த கூத்துகள் வேறு உள்ளது. அதைப் பின்னர்ப் பார்ப்போம். இப்போது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை முதலில் முடித்து விடுவோம்.
இந்த முறையும் தோல்வி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே அமர்ந்து இருக்கத் தெரிந்த நபர் ஒருவர் அவருடைய பெண்ணுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிறார். அவருக்கும் ஆதார் பெயரில் மாற்றம் செய்யப்படவேண்டி இருந்ததால் அந்தப் பணிகளை எல்லாம் ஏற்கனவே முடித்து வைத்து இருந்தார். அந்தப் பெண்ணுக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. சரி, அவர்கள் என்ன முறையைப் பின்பற்றிப் பெயர் மாற்றம் செய்தார்கள் என்று விசாரித்தார். அவர்கள் பெயர் மாற்றம் செய்யவில்லை, புதிதாக ஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்துப் பெற்று இருக்கிறார்கள். அதாவது பழைய அட்டையில் உள்ள விபரங்களை மாற்ற முயற்சிக்கும் பொது அவர்களுக்கு இதே போல் பிரச்சனைகள் வந்து உள்ளது. ஆகையால் பெயர் மாற்றம் செய்ய மீண்டும் முயற்சிக்காமல் புதிய அட்டை விண்ணப்பித்துப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் புதிய யோசனை ஒன்று வந்தது. அதாவது விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை கொடுக்காமல், ஆதார் பெயர் மாற்றத்திற்குக் கொடுக்கப்பட்ட விண்ணப்ப எண்ணை கொடுத்து முயற்சிக்கலாம் என்று. விபரங்களைச் சரி பார்க்கும் போது இந்த விண்ணப்ப எண்ணை வைத்து தேடும் போது புதிய விபரங்கள் கொடுக்கப்படும் அப்பொழுது எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு வழியாக இந்த யோசனை மூலம் முதல் பக்கத்தைத் தாண்டி அடுத்தடுத்த பக்கங்கள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு வழியாக விண்ணப்பம் பணம் செலுத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. தேர்வு கட்டணம் ரூ.1400 ஆனால் இணையச் சேவை மையம் பெற்றுக் கொண்டது ,ரூ.1600 . நல்லது… ஒருவழியாக விண்ணப்பம் முடிந்தது. இன்று இரவு அவருடன் அலைபேசியில் உரையாடும் போது அவர் சொன்னதுதான் முக்கியம். இரண்டு வாரத்திற்குப் பிறகு இன்று நிம்மதியாகத் தூங்கப் போகிறேன் என்று. அதன் பிறகும் ஒன்றைச் சொன்னார் இதுக்கு மேல விண்ணப்பத்தை நிராகரிக்க மாட்டார்கள் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டார், நானும் அதையே நம்புகிறேன்.
இதற்கிடையே நீட் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள நான் முயன்றேன். அவர்களது இணையதளத்தில் 5 தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று மாலை வரை 1000 முறைக்கு மேல் முயற்சி செய்து விட்டேன் ஒரு முறை கூட என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்நேரமும் பிஸி என்று தான் வந்தது. சனி ஞாயிறு விடுமுறை வேறு, வேலை நாட்களிலும் காலை 9 30 மணி முதல் மாலை 5 மணி வரைதான் சேவை. 5 மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது, ஒன்றுக்கு கூட இது வரை பதில் இல்லை.
இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது. அவர்களால் முடியாத பட்சத்தில் தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் மாணவன் நேரடியாக இந்த வேலைகளைச் செய்ய இயலுமா என்பது கேள்விக்குறிதான். நீட் தேர்வு இல்லாமல் இருந்தால் மட்டும் இவர்களுக்கு இடம் கிடைக்குமா என்றால் அதுவும் இந்தக் கல்வி சந்தையில் கேள்விக்குறியே? ஆனால் நீட் தேர்வு இல்லாத சமயத்தில் கிடைக்கும் ஒன்று இரண்டு இடங்கள் கூட இப்போது கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
திருச்சியில் அரசு உணவகத்தில் “அம்மா” பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.
சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்கள், பாடப்புத்தகங்கள், விலையில்லாப் பொருட்கள், உப்பு முதல் உணவங்கள் வரை அனைத்திலும் வைத்திருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும், மெரினாவில் அவரது சமாதியை அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கடந்த 15.2.2017 -ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. அதன் பின்பு கடந்த 18, 20 தேதிகளில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது.
குற்றவாளியின் பெயரால் ஆட்சி நடத்துவது, அரசு திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மாணவர்களுக்கு, இளைய தலைமுறைக்கு நாம் என்ன கற்றுத்தரப் போகிறோம் ? தீண்டாமை, குடி, போதைப்பழக்கம் ஆகியவை தவறென்றும் குற்றமென்றும் போதிக்கின்ற நாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைப் போற்றுவது சரியா ? குடி குடியைக் கெடுக்கும், புகைப்பழக்கம் உடல் நலத்துக்குக்கேடு, வாய்மையே வெல்லும் என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி விட்டு அதற்கு எதிராக செயல்படுவது சரியா ? என்று கேள்வி எழுப்பியதோடு, குற்றவாளி ஜெயலலிதாவின் படங்கள், சின்னங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றும் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெயா படத்தை மக்களே அழித்து வருகின்றனர். இதைக்கண்டு அதிர்ந்துபோன திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ’அம்மா’ என்ற பெயரையும், ஜெயா படத்தையும் தாங்களே மறைத்துள்ளனர்.
( படங்களை பெரிதாக பார்க்க அதன்மேல் அழுத்தவும் )
தகவல் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
***
சென்னையில் குற்றவாளி ஜெயாவின் படங்கள் அகற்றம்
( படங்களை பெரிதாக பார்க்க அதன்மேல் அழுத்தவும் )
தகவல் பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
***
திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது – பத்திரிகை செய்திகள்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எலிக்கறியைத் தின்று வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவல நிலையை உணர்த்தும்விதமாக தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
வறட்சியால் காய்ந்து போன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 முதல் 7,287 ரூபாய் வரை இழப்பீடு, பயிர் காப்பீடு மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 21,500 முதல் 26,000 ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு, நூறு நாள் வேலைத் திட்டத்தை நூற்றைம்பது நாட்களாக அதிகரித்துத் தரும் வாக்குறுதி – இவைதான் வறட்சியால் விளைச்சலை இழந்து நிற்கும் விவசாயிகளுக்குத் தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம்.
விளைச்சல் பொய்த்துப் போனதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணமடைந்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளுக்கு மட்டும்தான் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீதி மரணங்களைப் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை வாங்கப்படும் எனக் கூறி, வாய்க்கரிசி போட்டுவிட்டார் முதல்வர் ஓ.பி.எஸ்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியால் மரணமடைவதும் நவம்பர் மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டபோதும், அ.தி.மு.க. அரசு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில்தான் நிவாரண அறிவிப்பை வெளியிட்டது. இந்த அலட்சியத்திற்கும் தாமதத்திற்கும் காரணம், ஜெயாவின் உடல் நிலை, அவரது மரணம், அ.தி.மு.க.விற்குள் இருந்த அதிகாரப் போட்டி என்பது ஊரே அறிந்த உண்மை. ஊருக்கே சோறு போடுகின்ற பல இலட்சக்கணக்கான விவசாயிகளின், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையைவிட, ஒரு தனிநபரின் உயிர் எந்தவிதத்தில் உயர்ந்ததாக இருந்துவிட முடியும்? தனிநபர் துதி, ஊழல், கொள்ளை, வன்முறை என்பதையே கொள்கையாகவும் நடைமுறையாகவும் கொண்ட அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதற்குத் தமிழகத்திற்குக் கிடைத்த தண்டனை என்றே இதனைக் கொள்ளலாம்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எலிக்கறியைத் தின்று வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவல நிலையை உணர்த்தும்விதமாக தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
தாமதமாக அறிவிக்கப்பட்ட நிவாரணமும் விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லை என்பதோடு, இந்த நிவாரண அறிவிப்பு மோசடியாகவும் முடியக்கூடிய வாய்ப்புகளே அதிகமுள்ளன. ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டு எடுப்பதற்கு ஏறக்குறைய 25,000 ரூபாய் செலவாகும் சூழலில், இதற்குத் தமிழக அரசு கொடுக்கவிருக்கும் இழப்பீடு தொகை ரூ.5,465/- தான். மீதித் தொகையைக் காப்பீடு நிறுவனங்களின் வழியாகக் கிடைக்க ஏற்பாடு செய்வது என அறிவித்து, நழுவிக்கொண்டுவிட்டது, அ.தி.மு.க. அரசு.
தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகையை வழங்குவதற்கான கணக்கீடும்கூடப் பொங்கலுக்குப் பிறகுதான் தொடங்கவுள்ள நிலையில், அந்தச் சொற்பத் தொகைகூட விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கான காப்பீடு தொகையே இன்னும் முழுமையாக வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டுக்கான காப்பீடு தொகை உடனடியாகக் கைக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
மேலும், இதற்கு முந்தைய பயிர் காப்பீடு திட்டம் அரசு காப்பீடு நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மோடி அரசு அறிவித்திருக்கும் புதிய பயிர் காப்பீடு திட்டமோ தனியார் காப்பீடு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்திடம்தான் பெரும்பான்மையான காப்பீடு தொகை செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார், வேளாண் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இழப்புத் தொகையை வழங்குவதில் தனியார் காப்பீடு நிறுவனங்கள் காட்டும் அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் சந்தி சிரித்துவரும் நிலையில், விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு தொகை முழுமையாகவும் விரைவாகவும் கிடைப்பது குதிரைக்கொம்புதான்.
மேட்டூர் பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்கான நடவு ஜூன், ஜூலையில் நடந்து முடிந்துவிடும். சம்பா சாகுபடிக்கான நடவு ஆகஸ்டு இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் தொடக்கம் வரையிலும்கூட நடைபெறும். பெரும்பாலான விவசாயிகள் கையில் காசு வைத்துக்கொண்டு நடவு வேலைகளைத் தொடங்குவதில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கு மோடி அரசு தடை விதித்துவிட்ட நிலையில், கந்து வட்டிக் கும்பலும், தனியார் நிதி நிறுவனங்களும்தான் விவசாயிகளின் “ஆபத்பாந்தவனாக” உருவெடுத்தன. நகை தொடங்கி அண்டா குண்டா வரை அடகு வைத்து இந்த முறை வயலில் இறங்கியதாகக் கூறுகிறார்கள், வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர்.
விளைச்சலோ பொய்த்துவிட்டது. கிராமத்தை விட்டு வெளியேறிப் போனாலும், வேறு வேலைகள் கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை. டீ குடிக்கக்கூடக் கையில் காசில்லாத அவலம் டெல்டாவின் கிராமப்புறங்களில் உருவாகி வருகிறது. இப்படிபட்ட நிலையில் அரசின் நிவாரணத் தொகையும், காப்பீடு தொகையும் கைக்கு வருவது தாமதமாகத் தாமதமாக, கடனுக்கான வட்டியே விவசாயிகளை விழுங்கிவிடும்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து ஆய்வு செய்யும் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
வடகிழக்குப் பருவ மழை பொய்க்காமல் பெய்து, காவிரியிலும் ஓரளவிற்காவது தண்ணீர் வரத்து இருந்தால், டெல்டா மாவட்டங்களில் ஜூன் தொடங்கி மார்ச் வரையிலும் விவசாயப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். மே-ஜூனில் குறுவை பயிரிடுவதைத் தொடங்கும் விவசாயிகள், அதனை ஆகஸ்டு-செப்டம்பரில் அறுத்த பிறகு, தாளடி பயிரைப் பயிரிடுவார்கள். ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் தொடங்கும் சம்பா பட்டம் தையில் முடிவடையும். இம்மூன்று பருவப் பயிர்களும் முடிவடைந்த பிறகு, அதே வயலில் மண்ணின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி உளுந்து அல்லது பயறு வகைகள் பயிரிடப்படும். நிலத்தடி நீர் வாய்ப்புள்ள காவிரி ஆற்றுப் படுகையில் மட்டும் கோடை கால நெற்பயிர் மார்ச்சுக்குப் பின் பயிரிடப்படும்.
சம்பா நெற்பயிரும், அதனைத் தொடர்ந்து உளுந்து, பயறு வகைகளும் பயிரிடும் வாடிக்கை கொண்டது, நாகப்பட்டினம் மாவட்டம், கீவளூருக்கு அருகிலுள்ள வடக்குவெளி கிராமம். ஓடம்போக்கி ஆறும், அதன் வாய்க்காலும் ஓடும் அக்கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சம்பா அறுப்பு வேலைகள் ஜனவரியில் தொடங்கி நாற்பது நாட்களுக்கும் மேலாக நடைபெறும் எனக் கூறுகிறார்கள், அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள். அறுப்பு சமயத்தில், காலையில் ஆறு மணிக்கு வயலில் இறங்கி மாலை ஆறு மணிக்கு வயலைவிட்டு வெளியேறும் ஒரு விவசாயக் கூலி, ஒரு மூட்டை நெல்லை ஒருநாள் கூலியாக எடுத்துவிடுவார் எனக் கணக்குச் சொல்லுகிறார்கள்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரசு அரசும், மைய பா.ஜ.க. அரசும் தமிழகத்திற்கு இழைத்த அநீதியும் வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனதும் இந்த வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டது. விவசாயிகளுக்காவது ஒரு கண்துடைப்பு நிவாரண உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்திலுள்ள ஏறக்குறைய 90 இலட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்களை அம்போவென்று கைகழுவிவிட்டது, அ.தி.மு.க. அரசு.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 7.15 இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மற்ற இரு டெல்டா மாவட்டங்களையும் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை நிச்சயமாக பத்து இலட்சத்தையும் தாண்டக் கூடும். இவர்களுக்கும் விவசாயம் பொய்த்துப் போய் கடனாளியாக நிற்கும் சிறு விவசாயிகளுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை கொடுப்பதற்கு அம்மாவட்டங்களில் என்ன கட்டுமானம் இருக்கிறது?
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி வசுதா மிஸ்ரா தலைமையில் வந்த மையக் குழு, தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை வட்டப் பகுதிகளில் நடத்திய ஆய்வு.
குறுவையும், சம்பாவும் பொய்த்துப் போனதால், பொங்கலுக்கு சட்டி, பானை வியாபாரம்கூடப் பெரிதாக நடக்கவில்லை என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத தஞ்சாவூரைச் சேர்ந்த நெல் அரவை ஆலை அதிபர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் விவசாய இழப்பும் டெல்டா மாவட்டங்களில் இரட்டை இடியாக இறங்கியதால், தஞ்சாவூரிலுள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவருவதாகவும் கூறுகிறார், அவர். டெல்டா மாவட்டங்களைச் சுற்றி இயங்கி வந்த நெல் அரவை ஆலைகளில் ஏறக்குறைய 90 சதவீத ஆலைகள் ஏற்கெனவே மூடப்பட்டு, அந்த ஆலைகளில் வேலைபார்த்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ஏஜெண்டுகள் மூலம் அவர்கள் கிராமத்திற்குத் திருப்பியனுப்பப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
பட்டப்படிப்பு முடித்துவிட்டு குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் பார்த்துவரும் வடக்குவெளியைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்று கட்டிட வேலை தேடி நாகப்பட்டினத்திற்கு சென்று வருகிறார். இந்த வேலையும் தினந்தோறும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறார், அவர். திருப்பூருக்கு வேலைதேடிச் சென்ற இளைஞர்கள் போன கையோடு திரும்பி வந்துவிட்டதாக அக்கிராமப் பெண்கள் கூறுகிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தைத் தமிழக அரசு எப்பொழுது தொடங்கும் என்றுதான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
பாலைவனத்தில் தெரியும் கானல் நீரைப் பார்த்து ஏமாந்து போவதைப் போல, நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த விவசாயத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போகுமோ என ஐயப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நூறு நாள் வேலைத் திட்டத்தையே ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, அத்திட்டத்திற்குரிய நிதி ஆதாரங்களை மோடி அரசு வெட்டிவரும் சூழ்நிலையில், இத்திட்டத்தை நூற்றைம்பது நாட்களுக்கு நீட்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. விலையில்லா அரிசி வழங்குவதையே நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசிற்கு நெருக்கடி கொடுத்துவரும் மோடி அரசு, நூறு நாள் வேலையை நூற்றைம்பது நாட்களாக நீட்டிப்பதற்கு உடன்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
வறட்சியைக் கருத்தில்கொண்டு நூறு நாள் வேலைத்திட்டத்தின் கூலியை நானூறு ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி ரூ.203/-தான். கூலி கூட்டிக் கொடுக்கப்படுமா, இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். இத்திட்டத்தின் கீழ் கூலி உடனடியாகக் கைக்குக் கிடைக்குமா என்பதே சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும் மற்றைய கவர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகளுக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. இத்திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு, சட்டத்தின் வழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அச்சட்டம், இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் அவர்களுக்குரிய கூலியைக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 2016 தொடங்கி இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகளுக்குக் கூலி வழங்கப்படவில்லை என்றும், கிட்டதட்ட 2,954 கோடி ரூபாய் பெறுமான கூலி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. (தமிழ் இந்து, ஜனவரி 11, பக்.8)
மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியமர்த்தப்படும் கூலித் தொழிலாளர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் கூலி கொடுக்கமால் இழுத்தடிப்பது வாடிக்கையாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறது, இந்து இதழ். மோடி பதவியேற்ற 2014-15 ஆம் ஆண்டில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் மொத்தக் கூலியில் 27.43 சதவீதக் கூலிதான் பதினைந்து நாட்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இது 2015-16 ஆம் ஆண்டில் 31.97 சதவீதமாகச் சற்று உயர்ந்து, 2016-17 ஆம் ஆண்டில் 11.71 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.
வறட்சியால் விளைச்சலை இழந்த விவசாயிகளுக்குத் தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீடும் உடனடியாகக் கிடைக்காது, பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய காப்பீடு தொகை எப்போது கிடைக்கும் என்பதும் தெரியாது, நூறு நாள் வேலைத் திட்டம் தொடங்கி, அதில் வேலை கிடைத்தாலும் கூலி உடனடியாகக் கைக்குக் கிடைப்பதற்கும் உத்தரவாதம் கிடையாது என்றால், இதற்குப் பெயர் நிவாரணமா?
அழும் குழந்தைக்குப் பஞ்சு மிட்டாய் கொடுத்து சமாதானம் செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அ.தி.மு.க. அரசோ, பஞ்சு மிட்டாய் எனக் காகிதத்தில் எழுதிக் கொடுத்து, அதனை நக்க வைத்துச் சமாதானப்படுத்த முயலுகிறது.