130-வது உலகத் தொழிலாளர் தினமான மே-1 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் “விவசாயம் – நெசவு, சிறுவணிகம், சிறுதொழில்களை அழித்து, காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!” என்கிற தலைப்பின் கீழ் கும்மிடிப்பூண்டியில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தலைக் காரணம் காட்டி, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் மட்டும் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பின்னர், தலைமை உரையாற்றினார். “நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து கட்டி காண்டிராக்ட் முறையை அமல்படுத்தி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்துச் சுரண்டிக் கொழுக்கின்றனர், முதலாளிகள். இந்த சுரண்டலுக்கு அரசு துணை நிற்கிறது. ஆளத் தகுதியிழந்துவிட்ட இந்த அரசுதான் நம்மை கட்டிக் காப்பதாகவும், நமக்காக இருப்பதாகவும் கூறி நம்மை ஏமாற்றி வருகின்றனர். நாம் போராடுவதன் மூலமே நமது உரிமைகளைப் பெற முடியும்” என உரையாற்றினார்.
SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஆறுமுகம், லைட்விண்டு ஸ்ரீராம் கிளையின் தலைவர் தோழர் பிரவீன், பாரத் டெக்ஸ்டைல்ஸ் கிளையின் தலைவர் தோழர் ஆனந்தன் ஆகியோர் தங்களது சொந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்து அரசென்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே உள்ளது என்பதை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்ட எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார், தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்தியும், விவசாயம் நெசவு, சிறுதொழில், சிறுவணிகம் என ஒவ்வொரு துறையும் எப்படியொரு தாக்குதலை எதிர்கொண்டுள்ளது என்பதையும், இதைத் தீர்க்க உழைக்கும் மக்களாக நாமனைவரும் ஒன்றிணைவதைத் தவிர வேறேதும் தீர்வில்லை என்பதை ஆணித்தரமாக பதியவைத்தார்.
மாவட்டப் பிரச்சாரக் குழுவின் சார்பாக புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டன. கூட்டத்தின் இடையிடையே ஆர்ப்பாட்ட முழக்கமிடப்பட்டது.
இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகுமார் நன்றியுரையாற்றினார். உழைக்கும் மக்கள் தொழிலாளிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம், பாட்டாளி வர்க்க சர்வதேசகீதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
6. ஒசூர்
தேர்தல் ஓட்டுச்சீட்டு அரசியல் என்பது மக்களின் பிரச்சனைகளுக்கு எந்தவகையிலும் தொடர்பற்றது மட்டுமல்ல, அவை, அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புபவையும் கூட. ஒசூரில் இதனை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது இந்த ஆண்டு மே நாள். வழக்கமாக மே நாள் என்றவுடன் போலிகளின் சி.ஐ.டி.யூ.-ஏ.ஐ.டி.யூ.சி சங்கங்கள் சில பல தொழிலாளர்களை கொண்டு ஒரு அடையாள ஊர்வலமும் ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்துவார்கள். பிற ஓட்டுக் கட்சிகள், உதிரி அமைப்புகளும் இந்த நாளைக் கடைப்பிடிப்பார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். ஆனால், இவை எதையும் இன்று ஒசூரில் காணவில்லை. மே நாளுக்கு தொழிற்சங்கங்கள் சுவரொட்டி ஒட்டக் கூடாது என தேர்தல் கமிசன் சொல்லவில்லை என்றாலும், இவை அனைத்தும் ஓட்டு போதைக்குள் அடங்கிவிட்டன. தேர்தல் ஓட்டு வேட்டைக்குக் கூட மே நாளைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்த ஓட்டுச்சீட்டு தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன போலும்!
இன்று மே நாளும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்து வந்ததால், ஒசூரில் பல ஆலைகளில் விடுமுறை வழங்கவில்லை. குறிப்பாக, சண்டே ஒர்க் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டுதான் இருந்தார்கள். இதனை எதிர்த்துக் கேட்டதற்காக வேலைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்கள். இவை ஒப்பந்தத் தொழிலாளர்கள் படும் துன்பம்! பு.ஜ.தொ.மு. தலைமையில் இன்று ஒசூரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் இத்துன்பத்திற்கான காரணங்களையும் தீர்வுகளையும் முன்வைத்து தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டு வகையில் அமைந்தது.
பேருந்துகளின் உறுமல், போக்குவரத்து நெரிசல், வியாபாரிகளின் கூவல் என ஓயாத பேரிரைச்சலால் சூழப்பட்ட ஒசூர் பேருந்து நிலையமும் அதன் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகமும் எழுச்சிகரமான பறை முழக்கத்தால் கவரப்பட்டது. பறை முழக்கமும் அதனைத் தொடர்ந்து உயிரைக் கொடுத்து தோழர்கள் எழுப்பிய வின்னைக் கிழிக்கும் ஆர்ப்பாட்ட முழக்கங்களும் பாதசாரிகள் முதல் பயணிகள் வரை அனைவரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தது; பலரையும் நின்று கேட்க வைத்தது.
சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கில் தோழர்களும் தொழிலாளர்களும் திரண்டிருந்த மே நாள் ஆர்ப்பாட்டத்தை பு.ஜ.தொ.மு.வின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேநாளின் தியாக வரலாற்றையும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களின் வரலாற்றையும் நினைவுகூர்ந்த தோழர், பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேர் இரட்டை ஆயுள்தண்டனை அனுபவித்து வருவதையும் மாருதி தொழிலாளர்கள் 3 ஆண்டுகளாக சிறையில் வாடுவதையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார். பிறகு இங்கே ஓசூரில் உள்ள லேலாண்டு, டி.வி.எஸ், டைட்டான், குளோபல் ஃபார்மாடெக், ஆவ்டெக், எக்ஸைடு போன்ற கம்பெனிகளில் தொழிலாளர்கள்மீதான நிர்வாகத்தின் ஒடுக்குமுறை, சி.எல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என்ற முறையில் இளம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கசக்கிப் பிழிந்து வேலைவாங்கி உற்பத்தியிலக்கை எட்டியபிறகு அவர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியேற்றும் கொடுமைகளை பட்டியலிட்டு சாடினார். ஆலைநிர்வாகம் தங்கள் ஆலையில் உள்ள தொழிற்சங்கங்களில் தனக்கு பாதசேவைசெய்யும் தொழிற்சங்கங்களை மட்டும் அங்கீகரித்து வைத்துக்கொண்டு மற்ற நேர்மையானதொரு தொழிற்சங்கம் உருவாவதை தடைசெய்துவருகின்றன. பாதுகாப்பற்ற வேலைமுறையினால் விபத்துக்குள்ளாகி இறக்கின்ற தொழிலாளர்களை தனதுக்கணக்கில்கூட கொண்டுவராமல் தட்டிக்கழித்து தனதுக் கொலையை மறைத்துவிடுகின்றன, இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் அல்லது சங்கங்களை மிரட்டி பணியவைக்கின்றன. இதுபோன்ற கொடூரமான கார்ப்பரேட் சுரண்டல்களை, கொலைகளை கோடிக்கால் பூதமான தொழிலாளர் வர்க்கம் தியாகத்திற்கு அஞ்சாத நெஞ்சுரத்துடன் புரட்சிகர சங்கமாய் எழுந்து முறியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அறிவித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மண்ணைத் தோண்டி “வெட்டி எடுத்த தங்கம் யாருக்கு” என்ற புரட்சிகர பாடலை பென்னாகரம் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் இசைத்து மக்களுக்கு உணர்வூட்டினர். தொடர்ந்து, கோலார் தங்கவயல் தொழிலாளர்கள் குறிப்பாக, பெம்மல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நகராட்சி ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களின் அண்மைகால போராட்ட அனுபவங்களைத் தொகுத்து தோழர் ரமேஷ் எடுத்துரைத்தார். குறிப்பாக கே.ஜி.எப் ஒப்பந்தத் தொழிலாளர்களின் இன்றைய அவல வாழ்க்கை நிலைமைகளை விவரித்துக்கூறி அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள புரட்சிகர தொழிற்சங்கத்தின் தேவையை வலியுறுத்தி உரையாற்றியது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து விவசாயத்திலும் சிறுதொழில்கள், சிறுவணிகத்திலிருந்தும் மக்கள் வெளியேற்றக் காரணமாக உள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கம், காண்டிராக்ட்மயம் குறித்து விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் வட்டச் செயலாளர் தோழர்.கோபிநாத் விளக்கிப் பேசி விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு மேநாளை உருவாக்குவோம் என அறைகூவி பேசினார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டமைப்பு முழுவதும் இன்று இல்லை; குறிப்பாக தொழிலாளர் நலத்துறையை எடுத்துக் கொண்டால் அது முழுக்க முழுக்க முதலாளிகளின் நலனைப் பேணுகின்ற துறையாக வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது. இதனை தொழிலாளர்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் ஊடாகவே காணமுடியும். பார்ப்பனர்களின் மனுதர்ம படிநிலைகளைப்போலவே தொழிலாளர்கள் சி.எல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என பல படிநிலைகளாக பிரித்துவைத்து அடிமைகளாக்கி கார்ப்பரேட் முதலாளிகளால் சுரண்டப்பட்டுவருகின்றனர். அரசுத் துறை என்று சொல்லப்படு்பவை அனைத்துமே கார்ப்பரேட் முதலாளிகளின் அலுவலகமாக மாறிப்போயுள்ளது. மொத்தத்தில் அரசுக் கட்டமைப்பு முழுவதுமே கார்ப்பரேட்மயமும் காண்டிராக்ட்மயமும் இணைந்த ஒரு கலவையாக உள்ளது.” எனவே, ஆளத் தகுதியிழந்த அரசுக் கட்டமைப்பு என்பதையும் மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.முத்துக்குமார் உரையாற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இறுதியாக, பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜூ நன்றியுரையாற்றினார்.
இப்படிக்கு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தொடர்புக்கு : 9788011784, ஓசூர்.
7. திருச்சி
திருச்சியில் மே தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள்:
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் தொகுப்பு!
அய்யா நம்மாழ்வார் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் நம் அரசியல்வாதிகளுக்கு திடீர் அக்கறை முளைத்திருக்கிறது. நம்மாழ்வார் பெயரில் விவசாயத் திட்டம், இயற்கை விவசாயத்திற்கு மானியங்கள், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாயக் கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதிகளை பல கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. காதல்-காமெடி-டூயட்-சென்டிமென்ட்-சண்டை-குத்துப்பாட்டு-என மசாலா படத்தின் வெற்றி பார்முலா போல இருக்கும் இவர்களின் தேர்தல் அறிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, விவசாயத்தின் மீது இவர்களின் திடீர் அக்கறைக்கு காரணம் என்ன? இவர்கள் கூறுவது நடைமுறை சாத்தியமானதா?
நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர்
50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயன்படுத்திய ரசாயான உரங்களால் மேல்மண்ணில் உள்ள உயிர்ச்சத்துக்களை முற்றிலுமாக இழந்து நிலமே மலடாகிவிட்டது! பிள்ளைக்கு புட்டிப் பால் ஊட்டுவதைப் போல, அவ்வப்போது ரசாயான உரம் போட்டால்தான் எதுவும் விளையும் என்கிற அளவுக்கு சீரழிந்து கிடக்கிறது விவசாயம்! இந்நிலையில், எருவையும்-மண்புழு உரத்தையும் போட்டு ஒரே நாளில் இயற்கை விவசாய நிலமாக மாற்ற முடியுமா?
“ரசாயன உரத்தின் பாதிப்பிலிருந்து நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டுமானால், குறைந்தது3 வருடமாகும். முதல் வருடத்தில் ரசாயன உரம் 75 சதவீதம், இயற்கை உரம் 25 சதவீதம், அடுத்த ஆண்டில் 50:50, அடுத்து 25:75 என்று படிப்படியாக இயற்கை உரப் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாகவே இயற்கை விவசாயத்திற்கு உகந்ததாக நிலத்தை மாற்றமுடியும்! இந்த 3 வருடத்திலும் சராசரியை விட குறைந்த விளைச்சலே கிடைக்கும்!” என்கிறார்கள் நிபுணர்கள்! இவ்வாறு முறையான பரிசோதனைக்கும்,கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்ட நிலத்திற்குத்தான் ‘அபெடா’ நிறுவனம் ‘ஆர்கானிக்’ சான்றிதழ் வழங்குகிறது! இச்சான்றிதழ் இருந்தால்தான் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும்!
ஏற்கனவே உரம் முதலான இடுபொருட்கள் விலை உயர்வு, விளைபொருட்கள் விலை வீழ்ச்சி என்று கடனில் மூழ்கி நிலத்தை விட்டு ஓடும் நிலையில் உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு இதுவெல்லாம் ஒத்துவருமா?
நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர். 10ஏக்கர் நிலம் இருந்தால், 9 ஏக்கரில் ரசாயன உரம் போட்டுவிட்டு, ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயமும் செய்கிறார்கள். இவர்களுக்கு 3 வருட இழப்பு அல்லது வருமானக் குறைவு என்பது பெரிய பாதிப்பாக இருக்காது. மேலும் நம்மாழ்வார் முன்வைக்கும் இயற்கை விவசாயம், நம் பாரம்பரிய விவசாயத்தோடு தொடர்புடையது. இது பன்னாட்டுக் கம்பெனிகளின் வீரியரகப் பயிர்களுக்கு பயன்படாது என்பதே உண்மை! ஏனெனில், வீரியரகப் பயிர்கள் அனைத்தும் ரசாயன உரங்களின் தன்மைக்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன.
ரசாயனப் பாதிப்புகளில்லாத இயற்கை உணவுப் பொருள்கள் என்பது நடுத்தர வர்க்கத்தின் விருப்பம் என்பதையும் தாண்டி பேஷனாகி விட்டது. உடனே முதலாளிகளும் மூலிகை-இயற்கை ஆர்வலர்களாக உருமாறத் தொடங்கி விட்டனர். இதனால்தான் பப்பாளி-வேம்பு சோப்பு, கற்றாழை கிரீம், மூலிகை பற்பசை, துளசி மிட்டாய், புதினா பிஸ்கட்டுகள் போன்றவை சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன, மேலும், உலக நாடுகளின் ஏற்றுமதி சந்தையில் இது அதிக லாபம் ஈட்டக் கூடியதாகவும் இருக்கிறது. அதிகரித்துவரும் இதன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது நம்நாட்டு விவசாயத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
“நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்படும்” என அறிவித்துள்ள பிஜேபி அரசு, நடப்பு பட்ஜெட்டில் இதற்காக 412 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது!
‘வேளாண் மின்னணு மேடை, வேளாண் சந்தைகளை இணையதளம் மூலம் இணைப்பது, வேளாண் பொருள்களுக்கான ஆன்லைன் சந்தை ஆகியவை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம்” என்று நடப்பு பட்ஜெட்டில் மோடி அரசு தம்பட்டம் அடித்ததையே தி.மு.க, ம.ந.கூ, பா.ம.க ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளும் வழிமொழிகின்றன.
இதன் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, நம்நாட்டில் ஒரு பொருளை அதிகளவில் கொள்முதல் செய்வதன் மூலம் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் விலையை உயரவிட்டு, பிறகு அதிக விலைக்கு சந்தையில் விற்றுக் கொள்ளையடிக்க முடியும்! ஏற்கனவே இத்தகைய பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் வர்த்தக சூதாட்டத்திற்காக வேளாண் பொருள்களின் மீதான ஆன்லைன் வர்த்தகத்தை ஏற்கனவே அனுமதித்துள்ளது மத்திய அரசு! அண்மைக் காலங்களில் உப்பு, புளி, மிளகாய், மஞ்சள், பயறுவகைகள், எண்ணெய் வகைகள் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வுக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகமே முக்கிய காரணம்!
வேளாண் பொருள்கள் விற்பனைச் சந்தையில், பெரு முதலாளிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும் நுழைவதற்கு வழிவகுப்பதுதான் ஆன்லைன் வர்த்தகத்தின் உண்மையான நோக்கம்.! பொட்டலம் மடித்துக் கொடுக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள் இருந்த இடத்தில், சூப்பர் மார்க்கெட்டுகளும், சலுகை விலையில் விற்கும் பெரும் மால்களும், வணிகப் பெயரிட்ட மளிகைச் சாமான்களின் விற்பனையும் அதிகரித்து வருவது, ஆன்லைன் வர்த்தகத்தின் மற்றுமொரு கோர முகம்தான் !
அந்நியக் கம்பெனிகள் சில்லறை விற்பனையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு தேவையானதை மொத்தமாக ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதற்கு வசதியாக தற்போது வேளாண் சந்தைகளையும் ஆன்லைனில் இணைக்கும் திட்டத்தில் மோடி அரசு இறங்கியுள்ளது!. அரைகுறையாக இன்னமும் நிலத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு-குறு விவசாயிகளை, நிலத்திலிருந்து விரட்டியடிக்கவும், சிறுவணிகர்களை முற்றாக ஒழித்துக் கட்டவுமே இது உதவும்!
இவ்வாறு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!
வெயிலில் விவசாய மக்களை வம்படியாக அழைத்து வந்து கொல்லும் அ.தி.மு.கவின் தேர்தல் கூட்டங்கள் ஒரு புறம். இன்னொரு புறம் நம்புகின்ற அப்பாவிகளுக்கு, “தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த, முதலீட்டாளர்களின் நீண்டகால நண்பனாக அரசு செயல்பட, அரசியல் சாராதவர்களைக்!! கொண்ட மாநிலபொருளாதாரவளர்ச்சிவாரியம் அமைக்கப்படும்” என்று முதலாளிகளுக்கு ஆதரவாக ஆப்படிக்கிறார் கலைஞர்! தி.மு.க, அ.தி.மு.க வுக்கு மாற்று தேடுபவரா நீங்கள்? இதோ, “பெரும்முதலீட்டாளர்களுக்குஒற்றைச்சாளரமுறையில்அனுமதிவழங்கப்பட்டும்” என்கிறது மாற்று அரசியல் புகழ் ம.ந.கூட்டணியின் தேர்தல் அறிக்கை! நீங்கள் ஓடி ஒதுங்குவதற்கு சட்டமன்ற ஜனநாயகத்திற்குள் பாதுகாப்பான இடம் எதுவுமில்லை!
ஆயத்த ஆடைத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் பெண்கள்
விவசாயம்-நெசவு-சிறுவணிகம்-சிறுதொழில்களை அழித்து
காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம் !
அன்பார்ந்த நண்பர்களே,
மே தினத்தின் 130வது ஆண்டு இது. 1886-வது ஆண்டில் தொழிலாளி வர்க்கம் எத்தகைய அடக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8 மணி நேர வேலை என்கிற உரிமைக்காகவும் போராடி இரத்தம் சிந்தியதோ, அந்த கொடியநிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், அடக்குமுறையும், சுரண்டலும் அப்போது இருந்ததைவிட பன்மடங்கு கொடூரமானதாகவும், நவீனப்படுத்துப்பட்டும் அமுல்படுத்தப்படுகிறது.
கார்ப்பரேட்மயம் – காண்டிராக்ட்மயம்!
எந்த ஒரு ஆலையிலும் நேரடி உற்பத்தி சாராத வேலைகளில் மட்டும் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நேரடி உற்பத்தி நடக்கிற வேலையிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. எந்த ஆலையிலும் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கையை விட காண்டிராக்ட் தொழிலாளர்களது எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காண்டிராக்ட் தொழிலாளர்கள் இல்லை என்றால் ஆலையே ஓடாது என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த ஆலையுமே காண்டிராக்ட் தொழிலாளிமயமாகிவிட்டது.
நெருப்புக்குழம்பு ஒடுகின்ற இரும்பு உருக்காலையானாலும், தூசும், மாசும் மூச்சை முட்டுகின்ற சிமெண்ட் ஆலையானாலும், பாறைகள் சரிந்து சாகடிக்கின்ற சுரங்கமாக இருந்தாலும் நுரையீரல் திணற நூல் நூற்கும் பஞ்சாலையாக இருந்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி இல்லாமல் ஒரு துரும்பு கூட நகரமுடியாது. கல்லூரி பேராசிரியர் நியமனம் கூட காண்டிராக்ட் முறையில் நடக்கிறதென்றால் இதைவிட அவலம் வேறென்ன இருக்க முடியும்?
தொழிற்துறையின்உயிர்த்துடிப்பு! ஆனால், உயிராதாரம்பறிப்பு!
தொழிலின் உயிர்த்துடிப்பாகிவிட்ட காண்டிராக்ட் தொழிலாளிக்கு உயிர்வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. வேலை நிரந்தரம் கேட்டால் கேலி பேசுகிறான், முதலாளி. ஆபத்துகள் மிகுந்த வேலைகளில் கூட எந்த பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தம். அப்போது ஆலை விபத்து ஏதேனும் ஏற்பட்டு உயிரே போனாலும் அற்பப்பணத்தை வீசி எறிந்துவிட்டு அடுத்த காண்டிராக்டுக்கு மாறி விடுகிறான், முதலாளி. ஆலைவிபத்துக்களில் செத்துப்போன பல்லாயிரக்கணக்கான காண்டிராக்ட் தொழிலாளர்களது கதியும், கதையும் இப்படித்தான் ‘முடிக்கப்பட்டது’.
காண்டிராக்ட் தொழிலாளிக்கு முறையான சம்பளம் கூட கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளிக்கு கிடைக்கின்ற சம்பளத்தில் பாதிகூட கிடைப்பதில்லை. இரண்டு பேரும் ஒரே வேலையை செய்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி என்றால் கொத்தடிமை தான். சம்பளத்தில் மட்டுமல்ல சாப்பிடும் சோற்றில்கூட இரண்டாம்தரமாக நடத்தப்பட்டு, அவமானத்தில் குன்றிப்போகிறான், காண்டிராக்ட் தொழிலாளி. இதனை நிரந்தரத் தொழிலாளியும், அவர்களது தொழிற்சங்கமும் கண்டும், காணாமலும் இருப்பது மானக்கேடு. இன்னும் ஒருபடி மேலே போய் நிரந்தரத் தொழிலாளிக்கு சம்பள உயர்வு கொடுத்து காண்டிராக்ட் தொழிலாளி மீதான சுரண்டலைப் பாதுகாத்துக் கொள்கின்றனர், முதலாளிகள். ஊழல்படுத்தப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களோ, முதலாளிகளின் இளைய பங்காளிகளாக மாறி காண்டிராக்ட் தொழிலாளிக்கு எதிரியாக மாறி, தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்கின்றனர்.
மறுகாலனியாக்கத்தால்தீவிரமாகும்நிலைமை!
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் – மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாக விவசாயம் நாசமாகிப்போன நிலையில் தற்கொலை செய்து கொள்வதைவிட நகரத்துக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடிவருகின்ற விவசாயிகளுக்கும், விவசாயக்கூலிகளுக்கும் வேறென்ன வழி இருக்கிறது? நெசவும், நூற்பும் பன்னாட்டுக்கம்பெனிகளது ஏகபோகத்துக்குப் போய்விட்டதால் நவீன எந்திரங்களுடன் போட்டிப்போட முடியாமல் என்ன இருக்கிறது?
செய்து வந்த சிறுதொழிலை நவீன எந்திரங்கள் முழுங்கி விட்டன. சிறுவணிகத்தை கார்ப்பரேட் கடைகளும், ஆன்லைன் வர்த்தகமும் காவுவாங்கி விட்டன. இதனால் பிழைப்புத் தேடி அலைபவர்கள் வேறெங்கு போக முடியும்? இவர்கள் அனைவரையும் தொழிற்பேட்டைகள் நரகத்துக்கு தள்ளிவிடுகின்ற நிலையில், காண்டிராக்ட் புரோக்கர்களைத் தவிர வேறு யாரும் கைகொடுப்பதில்லை. காண்டிராக்ட் கூலிகளில் பெரும்பாலானோர் இப்படி வந்தவர்கள் தான். எந்த மலிவான கூலிக்கும் உழைப்பது, எத்தனை ஆபத்தான வேலையையும் செய்வது என்கிற நிர்ப்பந்தத்தில் வாழ்கின்ற இவர்களை வைத்துத் தான் கார்ப்பரேட் உலகம் தன்னுடைய இலாப வெறியை தீர்த்துக் கொள்கிறது.
20 காண்டிராக்ட் தொழிலாளருக்கு மேல் வைத்துக் கொண்டால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்கிற விதிமுறையினை மாற்றி, 100 பேர் வரை லைசென்ஸ் இல்லாமலேயே வைத்துக் கொள்ளலாம் எனவும், எந்த வேலையிலும், எத்தனை மணிநேரத்துக்கும் காண்டிராக்ட் தொழிலாளியை ஈடுபடுத்தலாம் எனவும் சட்டத்திருத்தம் செய்வதற்கு மோடியின் அரசு தயாராகி வருகிறது. சட்டத்தின் பெயரால் கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதே கசக்கிப்பிழிகின்ற முதலாளிகள், சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் சட்டபூர்வமாகவே அங்கீகாரம் கிடைத்து விட்டால் எப்படி நசுக்குவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.
தொழிலாளர்களது உரிமைகளை உத்திரவாதம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற தொழிலாளர் நலத்துறையானது, முதலாளிகள் நலத்துறையாக அப்பட்டமாக செயல்படுகிறது. தொழிலாளர்களது சட்டபூர்வமான கோரிக்கைகளைக்கூட பரிசீலிக்க மறுப்பதோடு, நாங்கள் முதலாளிகள் பக்கம் தான் நிற்போம் என்று பகிரங்கமாகச் சொல்லுகின்றனர், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு முதலாளிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்துகிற, முன்னாள் தொழிலாளர் இணை ஆணையரான ரவீந்திரன், இதற்கொரு எடுத்துக்காட்டு.
பெங்களுரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டத்தில் பெரும்பகுதியினர் பெண்கள்
தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோதப்போக்குக்கு அரியானாவில் மாருதி ஆலை, ராஜஸ்தானில் ஹோண்டா மோட்டார்ஸ், மராட்டியத்தில் பஜாஜ் ஸ்கூட்டர்ஸ், குஜராத்தில் நானோ, கர்நாடகத்தில் டயோட்டா, தமிழகத்தில் ஹூண்டாய், நோக்கியா, ஜி.எஸ்.எச். என பலநூறு உதராணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கு எதிர் நிலையாகவும், செயல்படுவதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ள நிலையில் தொழிலாளர் நலத்துறையானது ஒரு சுற்று அதிகமாக நாறுகிறது.
மூடப்பட்டகதவுதானாகத்திறக்காது; உடைத்தெறி!
சமீபத்தில் பெங்களுருவில் ஆயத்த ஆலைத்தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தொழிலாளர்கள் தங்களது பி.எப். சேமிப்பினை பெறுவதற்கு மத்திய அரசு போட்ட புதிய விதிமுறைகளை தகர்த்தெறிந்தது, பெங்களுரு பெண் தொழிலாளர்கள் முன்னின்று நடத்திய போராட்டம். தினம் தினம் தீவிரமடைந்து வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு மென்மையான வார்த்தைகளோ, சாந்தமான சட்டபூர்வமான போராட்டங்களோ புரியாது. அவற்றை நசுக்கத்தான் செய்யும். 1886-ல் மேதினத்தில் தொழிலாளி வர்க்கம் சிந்திய இரத்தமும், மேதினத் தியாகிகளது உயிர்ப்பலியும் நமக்கு திரும்பத் சொல்லிக் கொடுப்பது ஒன்றைத் தான். தொழிலாளி வர்க்கமே, அடங்கிக்கிடக்கின்ற உனது குரலையும், கைகளையும் உயர்த்து! மூடப்பட்டுள்ள நெடுங்கதவை நொறுக்கு. காட்டுத்தீயாய் பரவிடு. கார்ப்பரேட் கொட்டத்தைப் பொசுக்கிடு!
நிகழ்ச்சி நிரல்:
நேரம்: மாலை 4:30 பேரணி : பவர் ஹவுஸ் – சிவானந்த காலனி நேரம் : மாலை 5:30
ஆர்ப்பாட்டம் : சிவானந்தா காலனி தலைமை:தோழர் M. கோபிநாத், அமைப்பு செயலாளர் பு.ஜ.தொ.மு கோவை. பேரணி துவக்கம் : தோழர் C.திலீப், மாவட்ட செயலாளர், பு.ஜ.தொ.மு கோவை. கண்டன உரை:தோழர் விளவை இராமசாமி, மாநில துணைத்தலைவர், பு.ஜதொ.மு. தோழரை:தோழர் பாலன், பு.ஜ.தொ.மு, நீலகிரி மாவட்டம் நன்றி உரை:தோழர் நித்தியாநந்தன், இனைச்செயலாளர், பு.ஜ.தொமு கோவை.
தொடர்புக்கு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி க.எண்.137 முதல் தளம், K.R.R.காம்ப்ளக்ஸ்,
தடாகம் சாலை, K.N.G.புதூர் (பிரிவு), கோவை – 641 108.
90924 60750
28-04-2016 நள்ளிரவு 12.45 மணியளவில் விருத்தாசலம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் நேர்முக காவல் ஆய்வாளர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் செல் போனில் பேசி உங்கள் வீட்டுக்கு அருகில் நிற்கிறோம். வெளியே வாருங்கள் என அழைத்துள்ளனர். அதற்கு ராஜு “நான் வெளியூரில் இருக்கிறேன் இந்த நேரத்தில் பேசுவதும் வீட்டுக்கு வருவதும் அவசியமில்லை” என பேசினார்.
“இன்று விழுப்பரத்தில் ஜெயலலிதா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, நீங்கள் போராட்டம் நடத்த போவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதனால்தான் டி.ஐ.ஜி, எஸ்.பி சொல்லி நாங்களே இந்த நேரத்தில் வந்துள்ளாம். நேரில் பேச வேண்டும் வாருங்கள்” என அழைத்தனர். “அறிவிக்காமல் எந்த போராட்டமும் எங்கள் அமைப்பினர் செய்ய மாட்டார்கள். இன்றைய தினம் எந்த போராட்டமும் அறிவிக்கவில்லை. க்யூ பிரிவு போலீசார் வேண்டுமென்றே வதந்தியை கிளப்புவார்கள் நீங்கள் போங்கள்” என போனில் பேசி அனுப்பி விட்டார்.
அதிகாலை 4.30 மணியளவில் வெளியூரில் இருந்து வீட்டிற்கு ராஜு வந்துள்ளார். வீட்டிற்கு செல்லும் அனைத்து வழிகளிலும் போலீசு ஜீப்போடு காவலுக்கு போட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலைமை. பத்திரிக்கையாளர்களும். மக்கள் அதிகார தோழர்களும், பல்வேறு கட்சி பிரமுகர்களும் பொது மக்களும் செய்தி கேள்விப்பட்டு கூட்டம் கூடிய பிறகு காலை 8-00 மணியளவில்தான் போலீசார் கல்லூரி நகரை விட்டு சென்றனர். ஆனால் வெளிப்பகுதியில் மப்டியில் அதிகாமான போலீசாரை தற்போதும் கண்காணிப்புக்கு அனைத்து வழியிலும் போட்டுள்ளனர்.
விழுப்பரத்தில் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், தோழர் ரஞ்சித் ஆகியோரை காலை 6-00 மணிக்கு வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். ஜெயா பொதுக்கூட்டம் நடத்தினால் போலீசு பாதுகாப்பு கொடுக்கட்டும் மக்கள் அதிகார தோழர்களை கைது செய்வது காவல் துறையின் ரவுடித்தனம். சுதந்திரம் ஜனநாயகம், சட்டம் மனித உரிமை எதுவும் ஜெயா ஆட்சியில் கிடையாது. தேர்தல் ஆணையம் ஜெயா கட்டுபாட்டில் இருப்பதால் அது தொடர்கிறது. மக்கள் அதிகாரம் சார்பில் காவல் துறையின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மதுவிலக்கை தேர்தல் வந்ததால் அனைத்து கட்சிகளும் வாக்குறுதி அளிக்கின்றனர். மக்கள் அதிகாரம் ஒரு வருடமாக மதுவிலக்கை மக்களே அமுல்படுத்த போராடி வருகிறது. தேர்தலுக்கும் மக்கள் அதிகார அமைப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தேர்தலினால் மக்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேறாது. அதனால்தான் மக்கள் அதிகாரம் அமைப்பினைக் கண்டு அரசு பயப்படுகிறது, அடக்குமுறையை ஏவிவிடுகிறது. இதனால் எங்களது போராட்டம் ஓயாது, முன்னிலும் அதிகமாக போராடுவோம். டாஸ்மக் கடைகளை நிரந்தரமாக மக்கள் மூடுவார்கள்!
இந்தியாவில சுமார் 33 கோடி மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த மாரத்வாடா பகுதியில் வறட்சியோ தலைவிரித்தாடுகிறது. மோடி அரசு முன்வைக்கும் “வளர்ச்சி” அரசியலின் உண்மை முகம் காண விரும்புவோர் மராட்டிய மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இந்த வறட்சியும் அந்த வறட்சியை எதிர் கொள்ளாமல் போகும் மத்திய மாநில அரசுகளும் சேர்ந்து மராட்டியத்தின் மராத்வாடா பகுதியில் யாரும் வாழ முடியாத நிலையை கொண்டு வந்துள்ளது.
அங்கே சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசையும் தாண்டி மக்களை வதைக்கிறது. வெயிலின் கொடுமையால் கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள் எங்கெல்லாம் நீர் ஆதாரங்கள் கிடைக்கின்றதோ அதை அலைந்து திரிந்து பருகி உயிர் வாழும் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இங்குள்ள கிணற்று நீரை பருகுவதினால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வேறுவழியின்றி மேலும் மேலும் கிணற்றை தோண்டி அதே நீரை குடித்து அவதிக்குள்ளாகின்றனர். மருத்துவ துறை தனியார் மயமாகி, அரசு கைவிடும் போக்கினால் இம்மக்கள் வாழ்வில் மட்டுமல்ல, நோயிலும் தாக்கப்படுகின்றனர்.
வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
யானைப்பசிக்கு சோளப்பொறி போல, மகாராஷ்டிரா அரசு இரயில்களின் மூலம் தண்ணீரை சொட்டு சொட்டாக அளிக்க முயல்கிறது. அதுவும் கிடைக்காத மக்கள் தண்ணீருக்கு அவ்வட்டாரம் முழுவதும் அலைகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருப்போர் கொஞ்சம் மராட்டியத்தின் அவலத்தை பாருங்கள்! தமிழகமும் இந்நிலை நோக்கித்தான் செல்கிறது.
நன்றி: Al Jazeera, புகைப்படங்கள் Neha Tara Mehta
தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: கலா
மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பெல்குந்த் கிராமத்தில் பாதுகாப்பற்ற குடிநீரை பருகுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரக கல் உருவாகின்றன. இந்தியா ஒலிம்பிக்கில் கிழிப்பது இருக்கட்டும், நம் குழந்தைகளுக்கு குடிநீர் கூட கொடுக்க இங்கே வக்கில்லை.வறட்சியின் காரணமாக கால்நடை விவசாயிகள் தமது மாடுகளுக்கு குடிநீர் கூட அளிக்க முடியவில்லை. அதே நேரம் அவற்றை விற்கவும் முடியவில்லை காரணம் மாட்டுக்கறி மீதான தடை. இடையில் அரசு, மேற்கண்ட படத்தில் இருப்பது போல சில கோசாலைகளை வைத்து கணக்கு காட்டி தனது கோமாதா பக்தியை காட்டுகிறது. குடிக்க தண்ணி இல்லை, இதில் கும்பிடுவது ஒரு கேடா?உளுத்தம் பருப்பை காயவைக்கிறார் ஜீனத் ஷேக் தஜூதின். உள்ளூர் கிணறுகள் வற்றிவிட்டதால் அண்டை வீட்டார் பலர் வெளியேறி விட்டனர். அப்படி வெளியேறுவதற்கு வழியில்லை என்றாலும் ஜீனத்தின் குடும்பமும் ஏதாவது ஏற்பாடு செய்து வெளியேற வேண்டும், வேறு வழியில்லை.சுனந்தா பவார் (நீலம் – ரோஸ் சேலையில் இருப்பவர்): எங்கள் குடும்பம் தண்ணிருக்காக பக்கத்து கிராமத்திற்கு சென்று மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படி கஷ்டப்படுவதால் என்னுடைய மாமியார் (மஞ்சள் துப்பட்டா) தண்ணிருக்காக அடிப்பட்டு பின்னர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றார்.அருகில் மாமியார் கைக்குழந்தையுடன் இருக்க படுக்கையில் இருக்கும் அடோலத்தி கிராமத்தை சேர்ந்த 24 வயது ஸ்வமா விலாஸ் சாப்தே, குழந்தை பெற்றெடுத்த 10 நாட்களுக்குள்ளேயேஅசுத்தமான நீரினால் வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.3 குழந்தைகளுக்கு தாயான நிர்மலா தாகே வயது 45, லட்டூர் நகரின் அருகில் உள்ள கங்காபுரி கிராமத்தில் வசிக்கிறார். கடந்த 4 மாதங்களாக அசுத்தமான நீரை குடித்ததால் இவருடைய சிறுநீரகத்தில் கல் உருவாகி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் சிகிச்சைக்காக சுமார் 34 000 ரூபாய் வரை செலவழித்துள்ளார்.லட்டூரை சேர்ந்த மஞ்சிரா கிராமத்தின் ஆற்றை ஆழப்படுத்தும் பணி தற்போது மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் இக்கிராமத்திற்கு தேவையான தண்ணீரை அளித்த இந்த ஆற்றில் இப்போது சகதி மட்டுமே இருக்கிறது.வறட்சியால பலர் இந்த ஊரை விட்டு போகிறார்கள் – ராம் சந்திர ஏக்நாத் ஷிண்டே , லட்டூர் பகுதி கிராமம் ஒன்றின் தலைவர்சுத்தமான நீருக்கு வரிசையில் நிற்கும் மக்கள். அதுவும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்படும். ஒரு குடும்பத்திற்கு 50 லிட்டர் மட்டுமே. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் ஒரு நபர் இந்த தண்ணீரை சராசரியாக ஒரு நாளைக்கு அரை லிட்டர் மட்டுமே பயன்படுத்த முடியும். இது நாடா இல்லை சுடுகாடா?மராத்வாடா பகுதியில் இருக்கும் சோலாப்பூர் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் அருகிலிருக்கும் வறண்ட கிணறு.பருவமழை ஜூன் மாதத்திற்கு பின்பு தான் வரும். இருப்பினும் விவசாயிகள் இப்போதே தங்களின் நிலங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். தண்ணீருக்காக வருத்தத்துடன் ஒரு முன்தயாரிப்பு!சில வருடங்களுக்கு முன் இந்த தோட்டத்தில் பசுமையான இலைகளோடு கொத்துக் கொத்தான திராட்சைக் குலைகள் காணப்படும். இப்போதோ சிறு இலைககள் கூட இல்லை. பேய்கள் நடமாடும் வனாந்திரம் போல இருக்கிறது.ஷிவ்குமார் நக்ரால்: கடுமையான வறட்சி தொடங்கி மூன்று வருசம் ஆகுது ஆனா யாரும் எதுவும் எங்களுக்கு பண்ணல.வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பக்கத்தில் உள்ள அணையிலிருந்து 2.5 லிருந்து 5 மில்லியன் லீட்டர் தண்ணீர் இங்கு கொண்டுவந்து வினியோகம் செய்யப்பட்டாலும், இன்னும் அங்கு தண்ணிர் பற்றாக்குறை இருந்துக்கொண்டு தான் இருக்கிறது.
தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன்? இதையே வலிந்து பேசிக் கொண்டிருப்பதால் நீங்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட மாட்டீர்களா என்று ஒவ்வொரு தேர்தலின் போதும் சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
இதையே இன்னும் விரித்துக் கூறுகிறார் வாசகர் சுகதேவ்.
“உணர்ச்சிப்பூர்வமான ஒரு காரணம் இருந்தால் மட்டும் தான் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். உடனடி நலன் சார்ந்த ஒன்றை மட்டுமே அவர்கள் நெருக்கமாக உணர்கிறார்கள். அரசுக் கட்டமைப்பின் செயல்படாத தன்மைக்காக தேர்தல் புறக்கணிப்பில் அமைப்புகள் ஈடுபடலாம். மக்கள் ஈடுபடுவது கடினம்.
ஒரு பிரச்சினையின் நீண்ட பரிமாணத்தை மக்கள் புரிந்து கொள்வது சிரமம். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் வேட்டந்திட்டை என்ற கிராமத்தில் மக்களின் போராட்டத்தை கடுமையாக நசுக்கி உள்ளது போலீஸ். அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஜூ.வி நிருபரை பார்த்து ஒரு பெண்மணி எம்.ஜி.ஆர் தான் அவரை அனுப்பி வைத்ததாக சொன்னாராம்.
தேர்தலில் ஈடுபடாத கட்சிகளை மக்கள், ஊடகங்கள் மற்றும் அரசு கூட பொருட்படுத்துவதில்லை. மக்களுக்கு அவநம்பிக்கை. ஊடகங்களுக்கு சுவாரசியமின்மை. அரசுக்கு கையாள்வது எளிதாக இருக்கிறது. நா.த.க, பா.ஜ.க ஆகியவை பேராபத்தாக தமிழ்ச் சமூகத்தில் வளர்ந்து வருகின்றன. இதனை தேர்தல் புறக்கணிப்பு உத்தி தடுத்து விடுமா என்று சிந்திப்பது நல்லது. இன்னொரு பக்கம் அரசு மேலும், மேலும் மக்களை வதைத்து வருகிறது. தனது தோல்வியை மறைக்க இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாய ஆணை பிறப்பிக்கப்படலாம். குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை அமலில் இருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்ய முடியும்? நீதிமன்ற ஆணைக்கிணங்க மனித உரிமை பாதுகாப்பு மையத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மையமாக மாற்றியது போன்று மக்கள் அதிகாரமும் அப்படி ஒரு நெருக்கடிக்கு பிறகு முடிவை மாற்றிக் கொள்ள நேரிடும். அப்படி செய்தால் அது பெரும் இழப்புக்கு பிறகு எடுக்கும் முடிவாக இருக்காதா?
காஷ்மீர் மக்களாலேயே புறக்கணிக்க இயலாத தேர்தலை இந்தியாவின் பிற பகுதிகள் புறக்கணிக்க இயலுமா?” – சுகதேவ்
“மனித உரிமை“ பெயரை மனித உரிமை அமைப்புக்கள் பயன்படுத்தக் கூடாது எனும் நீதிமன்ற ஆணைக்கிணங்க மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்பதாக மாற்றியிருக்கிறார்கள். இது வெறும் பெயர் மாற்றமே அன்றி கொள்கை மாற்றமல்ல. ஒரு வேளை அனைவரும் வாக்களிப்பது கட்டாயம் என்று அரசு உத்தரவு போட்டால் அதை ஏற்கத்தானே வேண்டுமென நினைக்கிறார் சுகதேவ்.
இந்த வாதத்தை நீட்டித்தால் ஆளும் வர்க்கம் சட்டபூர்வமாக அனுமதித்தால் மட்டுமே ஒரு நாட்டில் புரட்சி நடத்த நினைக்கும் கம்யூனிசக் கட்சிகளின் விருப்பம் ஈடேறும் என்றாகிறது. அரசு, நீதிமன்றங்களை எதிர்த்துக் கொண்டு என்ன அரசியல் வேலை செய்யமுடியும் என்று ஐயப்படுகிறார் நமது வாசகர்.
முதலாளித்துவ ஜனநாயகம் நிலவும் நாடுகளில் அந்த “ஜனநாயகம்” வழங்கும் வாய்ப்புக்களை ஒரு புரட்சிகர கட்சி பயன்படுத்திக் கொள்கிறது, அவ்வளவே. மாறாக அந்த வாய்ப்புதான் மக்களிடையே வேலை செய்யவும், புரட்சியை நிறைவேற்றவும் நிபந்தனை என்று புரிந்து கொள்வது பாரிய பிழை. புரட்சி என்பது ஆளும் வர்க்கங்களை தூக்கி எறியும் ஒரு மாபெரும் நடவடிக்கையென்றால் அதை ஒருக்காலும் முதலாளித்துவ அரசு அனுமதிக்கவே அனுமதிக்காது.
எனவே அவர்களது ஜனநாயகம் எந்த அளவு அனுமதிக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு மேல் மீறுகிறோம். அந்த வகையில் ஒரு கம்யூனிசக் கட்சி வெளிப்படையாக மட்டுமல்ல இரகசியமாகவும் செயல்படுவதற்கு தயாராக இருக்க வேண்டும். புரட்சி நடந்த நாடுகளில் கம்யூனிசக் கட்சிகள் மேற்கண்ட இருமுறையிலும் வேலை செய்திருக்கின்றன.
நமது நாட்டைப் பொறுத்தவரை இங்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்பது அரசு வடிவத்தில்தான் உள்ளது. சமூக உள்ளடக்கத்திலோ அரை காலனியாதிக்கமும், அரை நிலபிரபுத்துவமுமே நிலவுகிறது. அதனால்தான் இதை போலி ஜனநாயகம் என்று அழைக்கிறோம்.
இன்றைக்கு கட்டமைப்பு நெருக்கடியின் காலத்தில் இந்த போலி ஜனநாயகத்தை மக்களே உணர்ந்து கொண்டு பேசுகிறார்கள். அரசு உறுப்புகள் எதையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. கடைசியாக நடந்த பெங்களூரு தொழிலாளிகளின் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மத்திய அரசின் பி.எஃப் நிதியை முடக்கும் உத்திரவுக்கு எதிராகப் போராடியவர்கள் சாதாரண தொழிலாளிகள் மட்டுமே. அவர்களில் கணிசமானோர் பகுதி நேரத் தொழிலாளிகளும் கூட. இந்த அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வர அவர்கள் மனு தாக்கல், மந்திரிகளிடம் முறையீடு, கலெக்டரிடம் கருணை மனு இன்னபிறவெல்லாம் வேலைக்காகாது என்பதை புரிந்து கொண்டவர்கள். அதனால்தான் மத்திய அரசு ஒரிரவில் உத்திரவை ரத்து செய்யும் வண்ணம் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தினார்கள்.
பி.ஆர். பழனிச்சாமி கிரானைட் கொள்ளை முதல் அம்பானியின் இயற்கை எரிவாயு கொள்ளை வரை அனைத்தையும் இந்த அரசமைப்பே காப்பாற்றுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். தற்போதைய தேர்தலில் அ.தி.மு.கவின் ஊழல் பணம் கோடி கோடியாய் கைப்பற்றப்பட்டாலும் அந்தக் கட்சியை தடை செய்ய வேண்டும், குறைந்த பட்சம் தேர்தலிலாவது போட்டியிடத் தடை செய்ய வேண்டும் என்று இங்கே ஏதோ ஒரு ஊடகத்தில் கூட பேசப்படாததற்கு என்ன காரணம்? அதுதான் போலி ஜனநாயகம்.
இருப்பினும் இதெல்லாம் தெரிந்த மக்கள் வாக்களிக்கத்தானே போகிறார்கள் என்று சுகதேவ் கேட்கிறார். ஆம், வாக்களிக்கத்தான் போகிறார்கள். ஆனால் அது அவர்களது தலையெழுத்தை மாற்றும் என்றோ, பாரிய மாற்றம் வரும் என்பதாலோ அல்ல. சாதாரண மக்களைப் பொறுத்த வரை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பது என்பது மாதம் ஒரு முறை ஆண்டவனை வழிபடுவது போலத்தான். தனது பிரச்சினைகளை எள்ளளவு கூட சாமி குறைக்காது என்றாலும் இந்த வழிபாடு மாற்ற முடியாத ஒரு சடங்கு போல நிலவுகிறது, அவ்வளவுதான்.
தேர்தல் பரபரப்பு என்பது மக்களைப் பொறுத்தவரை அதிக பட்சம் ஒரிரு வாரங்களுக்கு மட்டுமே. அதற்கு முன்னும் பின்னும் இந்தத் தேர்தல் அரசியல் குறித்து அதாவது இதுதான் தமது வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதாக ஒரு குழந்தை கூட நினைக்காது. இன்னும் எளிமையாகச் சொன்னால் தோற்றுப் போன இந்த அரசு என்பது ஏதோ ரேசன் கார்டு, சாதிச் சான்றிதழ், இலவசங்கள் அளிப்பது போன்ற சில்லறைச் சமாச்சாரங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.
எங்கே தேர்தல் புறக்கணிப்பு செய்தால் அந்த உரிமைகளை பெறமுடியாமல் போய்விடுமோ என்பதைத் தாண்டி மக்களுக்கு இந்த தேர்தலின் மீது எந்தக் காதலும் இல்லை. இல்லையென்றால் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற முதன்மைத் தேவைகள் இந்த தேர்தல் மாற்றத்தால் மாறிவிடுமா என்று கேட்டுப் பாருங்கள்! எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார் கல்வியின் கொள்ளையோ, தனியார் மருத்துவமனைகளின் வழிப்பறியோ முடியாது என்பது தெரிந்த மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை மாபெரும் அரசியல் நடவடிக்கையாக கருதுவதில்லை. நாம் ஏன் கருத வேண்டும்?
முதலாளி என்ற முறையில் பாரிவேந்தர் பச்சைமுத்துவையும், காமடி என்ற பெயரில் நடிகர் கார்த்திக்கையும் தேர்தலுக்காக நேர்காணல் செய்யும் புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் போலவோ இல்லை இந்த ஊடகங்கள் கிளப்பும் இப்பேற்ப்பட்ட அக்கப் போர்களில் மண்டிக் கிடக்கும் அரதப்பழசான அபத்தக் காமடிகளை மாபெரும் அரசியல் விவாதமாக கருதும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் போலவோ மக்கள் தேர்தலை அணுகுவதில்லை.
தேர்தலுக்கு முந்தைய மாதத்திலோ, இல்லை தேர்தலுக்கு பிந்தைய மாதத்திலோ மக்கள் யாரும் சீமானின் பிளிறலையோ, வைகோவின் கண்ணீரையோ, ஜெயாவின் ஹெலிகாப்டரையோ, கருணாநிதியின் தேர்தல் அறிக்கை குறித்தோ நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.
யார் யாருடன் கூட்டணி, யார் யாருக்கு துரோகம் செய்கிறார்கள், யார் யார் குறித்து இரகசியங்கள் தெரிவிக்கிறார்கள், தொகுதி கிடைக்காமல் ஜனநாயகம் குறித்து புலம்புவர்கள் யார், எந்த தொகுதியில் யார் வெல்வார்கள், அந்தக் கணிப்பை யார் திறம்பட செய்கிறார்கள் இவைதானே ஒவ்வொரு தேர்தலின் போதும் பரபப்பாக பேசப்படுகிறது? இதில் ஒரு தேசத்தையோ இல்லை அந்த தேசத்து மக்களின் தலைவிதியையோ தீர்மானிக்கும் எதுவுமில்லை.
ஆக மக்களே சடுதியில் மறந்து போகும் தேர்தல் பரபரப்பை சுகதேவ் போன்றவர்கள் கொஞ்சம் தத்துவப்படுத்தி பார்க்கிறார்கள். அந்த ‘தத்துவம்’ சமூக இயக்கத்தின் விதிகளை மறந்து விட்டு சென்சேஷனில் சிக்கிக் கொள்கிறது, இதுதான் பிரச்சினை!
ஒவ்வொரு தேர்தலின் போதும் சில அறிஞர் பெருமக்கள் எமது தேர்தல் புறக்கணிப்பு குறித்து புள்ளிவிவரங்கள் கேட்பார்கள். அதாவது தமிழகத்தில் எத்தனை சதவீத மக்கள் தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள், தேர்தல் புறக்கணிப்பை எவ்வளவு வருடமாக செய்கிறீர்கள் என்றெல்லாம் மடக்குவார்கள்.
தேர்தல் புறக்கணிப்பை மதிப்பிடும் அளவு கோல் வெறுமனே தேர்தலில் பதியப்படாத வாக்குகளை வைத்து மட்டுமல்ல. ஏனெனில் முந்தைய காலத்தில் இது போலி ஜனநாயகம் என்று நாம் மட்டும் பேசி வந்தோம். அப்போது ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு இந்த அமைப்பு மீது கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தது. இன்று அது துளியளவும் இல்லை. துறை சார்ந்து பார்த்தால் பல்வேறு பிரிவினர்களிடையே இந்த புரிதல் வளர்ந்து வருகிறது.
சட்டத்தை வைத்து பிழைக்கிறார்கள் என்று தூற்றப்பட்ட வழக்கறிஞர்களே இன்று நீதிமன்றங்களையும் ஊழல் நீதிபதிகளையும் அம்பலப்படுத்துகிறார்கள். அந்த அளவு நீதித்துறை திவாலாகியிருக்கிறது. வழக்கறிஞரை விடுங்கள், ஒரு ஏழையிடம் கேட்டால் கூட, குமாரசாமி கணக்குதான் நீதிமன்றத்தின் கணக்கு என்பதை சட்டென்று கூறிவிடுவார்.
மாருதி தொழிலாளியோ இல்லை கோவை பிரிக்கால் தொழிலாளியோ இந்த அரசும், நீதித்துறையும் யாருக்கு ஆதரவானது என்று கேட்டால் என்ன சொல்வார்? இந்துமதவெறியர்களையும், ரன்வீர் சேனா போன்ற ஆதிக்க சாதி குண்டர் படைகளையும் விடுதலை செய்து ஏராளமான தீர்ப்புகள் சமீப காலத்தில் வந்துள்ளன. கயர்லாஞ்சி போட்மாங்கே குடும்பத்தினரிடமோ இல்லை சுண்டூர் தாழ்த்தப்பட்ட மக்களிடமோ இல்லை முஃசாபர் நகர் முஸ்லீம்களிடமோ இந்த அமைப்பு மீது நம்பிக்கை இருக்கிறதா என்றால் கோபப்படமாட்டார்களா?
ஜனநாயகத்திற்கு செல்லும் பாதை – கேலிச்சித்திரம் நன்றி Cartoon Movement
ஆனால் இந்த பிரிவு மக்கள் தேர்தலில் வாக்களிப்பார்களா என்றால் நிச்சயம் வாக்களிப்பார்கள். ஏன்? காசுமீரிலேயே தேர்தல் புறக்கணிப்பு சாத்தியமாகாத போது மற்ற பகுதிகளில் எப்படி சாத்தியமாகும் என்று சுகதேவ் கேட்பதை எடுத்துக் கொள்வோம். இங்கே தேர்தல் நடந்து விட்டதாலேயே காஷ்மீர் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்ததா பொருளா? இல்லை இலட்சக் கணக்கில் துருப்புக்களை நிறுத்தியிருக்கும் இந்திய இராணுவம்தான் இனி போராட்டம் இல்லை, ஜனநாயகம் வந்து விட்டது என்று காலி செய்து வெளியேறுமா? காஷ்மீர் மாணவி ஒருவரின் நேர்காணலை சுகதேவ் படித்திருப்பார். அதில் இந்த அமைப்பு குறித்து ஏதாவது கடுகளவாவது நம்பிக்கை தெரிகிறதா?
டாஸ்மாக் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். சசி பெருமாள் எதற்காக உயிர் துறந்தார்? ஒரு கடையை இடம் மாற்றவேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவைக் கூட இந்த அரசு செயல்படுத்த மறுத்ததால்தானே? மக்கள் அதிகாரம் நடத்திய திருச்சி மாநாட்டின் மக்கள் உரைகளைக் கேளுங்கள்! வழக்கமாக தோழர்கள் பேசுவதைக் காட்டிலும் வீரியமாக மக்கள் பேசுகிறார்கள். காரணம் இந்த அமைப்பு திவாலாகி வருகிறது என்பதை நடைமுறை அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை தேர்தல் பங்கேற்பு – புறக்கணிப்பு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்க வேண்டாம் என்கிறோம்.
அதே நேரம் இந்த தேர்தல் பங்கேற்பினால் ஏதோ ஒரு நம்பிக்கையை வைத்திருக்கவும் மக்கள் பயிற்று வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நாம் தேர்தல் புறக்கணிப்பையும் விடாது செய்ய வேண்டும். தோற்றுப் போன இந்த சமூக அமைப்பிற்கான மாற்று தோன்றி வளர்வதற்கேற்ப தேர்தல் புறக்கணிப்பும் வீச்சாக நடக்கும். இதைத்தாண்டி இதில் குறுக்கு வழி ஏதுமில்லை.
எவ்வளவு ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு செய்கிறீர்கள் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு, டாஸ்மாக் பிரச்சனையை இந்த அமைப்பு முறையால் தீர்க்க முடியாது என்ற உண்மையை மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் கொண்டு வரவில்லையா? அ.தி.மு.க தவிர அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை கொள்கையளவிலாவது ஏற்கவில்லையா? அடுத்த அரசாங்கம் அது அ.தி.மு.க அல்லது தி.மு.க என்று யார் வந்தாலும் டாஸ்மாக்கை மூடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது உறுதி என்பதாக இந்த சமூக நிலைமை மாற்றப் பட்டிருக்கிறதா இல்லையா?
தேர்தல் புறக்கணிப்பை ஊடகங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை என்பதால் என்ன பிரச்சினை? நாம் சொல்லும் கட்டமைப்பு நெருக்கடி ஊடக உலகிற்கும் பொருந்தும். தேர்தல் குறித்த கட்சி மற்றும் வேட்பாளர் செய்திகள் பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியிடப்படுகின்றன, பெரும் முதலாளிகளே ஊடகங்களை ஏற்று நடத்துகிறார்கள்..இவையெல்லாம் என்ன? பச்சமுத்துவுக்கு கட்சி இருக்கிறது, கல்லூரி இருக்கிறது, ஊடகமும் இருக்கிறது அதே போல வைகுண்டராசனுக்கு, அம்பானிக்கு.. முதலாளி மல்லையா மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். பொதுத்துறை வங்கிகளுக்கு பட்டைநாமம் போட்டுவிட்டு அதிகாரப் பூர்வமாகவே வெளிநாடு செல்பவராகவும் இருக்கிறார்.
அவரது கடன் குறித்த செய்திகள் வந்த போது மல்லையா சவால் விட்டார். தனது விருந்துபுசாரத்தில் புரண்ட பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்களின் பட்டியல் எல்லாம் பக்காவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று பகிரங்கமாகவே பேசினார். அதை எந்த ஊடகமாவது மறுத்ததா?
இறுதியாக தோற்றுப் போன இந்த அமைப்பு முறையை எப்படி நீக்க வேண்டும் என்பதே கேள்வி. அதில் தேர்தல் புறக்கணிப்பு ஒரு முறை என்கிறோம். மாறாக மக்கள் எப்படியும் தேர்தலில் பங்கேற்பதால் நாமும் பங்கேற்ற வேண்டும் என்றால் அது எங்கே போய் முடியும்?
சந்தர்ப்பவாதம் அங்கேதான் தன்னை தவிர்க்க இயலாமல் ‘நியாய’ப்படுத்திக் கொள்கிறது. எது முடியுமோ அதைச் செய், எது சாத்தியமோ அதை எடுத்துக் கொள் என்பதெல்லாம் நாகரீகமான முறையில் முன்வைக்கப்படும் காரியவாதம். துவக்கத்தில் புரட்சி கூட சாத்தியமில்லைதான். எனவே புரட்சியை மறுக்க இயலுமா? இந்துமதவெறியை எதிர்த்து இந்துக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியாது என்றால் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர் கொள்வது எப்படி? வன்னிய சாதிவெறியை அம்பலப்படுத்தாமல் இளவரசனின் மரணத்திற்கு நீதியை எப்படி பெற முடியும்?
இதனாலெல்லாம் இவை சுலபமான அரசியல் நடவடிக்கைகள் என்று சொல்லவில்லை. கடினமானதுதான். ஆனால் நீங்கள் உறுதியாக இருக்கும் வரையிலும் முயற்சியை விடாது தொடரும் போதும் அந்த மாற்றங்கள் நடந்தே தீரும். வெல்ல முடியாத அமெரிக்காவை வியட்நாம் மக்கள் வெல்லவில்லையா? ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்தாலும் சோவியத் யூனியனில் சோசலிசம் குறிப்பிட்ட காலம் வரையிலாவது வெற்றி பெறவில்லையா?
இந்த அமைப்பு திவாலாகி விட்டது, இது ஒரு போலி ஜனநாயகம் என்பதை நண்பர் சுகதேவ் மறுக்கமாட்டார் என்று நம்புகிறோம். எனில் இதை மக்களிடம் விளக்குவதற்கு தேர்தல் பங்கேற்பு சரியாக இருக்குமா இல்லை தேர்தல் புறக்கணிப்பு சரியா இருக்குமா?
உலகமயம் என்பது உலகை அரிப்பதுதான்,
புதிதாக உருவாக்குவதல்ல!
நன்றி: Cartoon Movement ஓவியர்: Gatis Sluka
உலகமயமாக்கல்
————————————————————
முதலாளிகளின் தயவில் இருக்கும் ஜனநாயகம் என்பது இதுதான்!
நன்றி: cartoon movement
ஜனநாயகம்
———————————————
முதலாளித்துவம் – மீள முடியாத புதை குழி
கடைசி மரம் வெட்டப்படும் போதும், கடைசி மீனை சாப்பிடும் போதும், நச்சாக்கப்பட்ட கடைசி நீர் காலியாகும் போதும் மட்டும்தான் நீ உணருவாய், பணத்தை சாப்பிட முடியாது என்று!
நன்றி: cartoon movement ஓவியர்: Maram Heshan
முதலாளித்துவம்
———————————————–
அகதிகள் இரு வகை!
வாழ வழியற்ற ஏழைகள்,
செலவு வழியற்ற செல்வந்தர்களின் பணம்!
Brandan Reynolds
நன்றி: cartoon movement
அகதிகள்
——————————————————
உலக ஏழைகளின் உழைப்பில் உலக பணக்காரர்கள் பறித்துப் பதுக்கிய – பனாமா லீக்ஸ்
கேலிச்சித்திரம்: Alfredo Martirena
நன்றி: cartoonmovement
பனாமா லீக்ஸ்
வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.
ஏப்ரல்-22, மாமேதை லெனின் அவர்களின் பிறந்த நாள். லெனின் பிறந்த நாளை தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் மக்களும் ஏன் கொண்டாட வேண்டும்? என தொழிலாளர்களுக்கு விளக்கிப் புரட்சிக்கு அறைகூவி அழைக்கும் விதமாக ஆசான் லெனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மன்னராட்சி நிலவிய ரசியாவில் ஜார் மன்னனின் ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பரந்துபட்ட உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் கேள்விக்கிடமற்ற வகையில் நிலவி வந்தது. மனிதனை மனிதன் சுரண்டும் இந்த சுரண்டல் முறையை ஒழிக்க அதே தொழிலாளர்கள், விவசாயிகளை அணிதிரட்டி ஜாரின் காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் தோழர் லெனின். உலகில் முதன் முதலாக பாட்டாளி வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்திக் காட்டியவர். மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டியவர். தேசத்தின் வளங்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் ஏதேச்சதிகாரத்திற்கு முடிவு கட்டியவர். உழைக்கும் மக்களுக்கு எதிரான சர்வாதிகாரத்தை ஒழித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியரவர் என்ற வகையில் லெனினும் அவருடைய வழியும் நமக்கு இன்றும் தேவைப் படுகிறது. குறிப்பாக ரசியாவில் இருந்த நிலை தான், இந்தியாவில் இன்றைய முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல் முறையில் மக்களின் நிலையாக உள்ளது.
தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் முதலாளிகளால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் அதையும் முழுவதுமாக துடைத்துவிடவும், சில மாற்றங்கள் என்ற வகையில் முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தமும் செய்து வருகிறது மோடி தலைமையிலான அரசு. இதனால், தொழிலாளி வர்க்கம் வறுமையில் வாடுவதும், தற்கொலைக்கு ஆளாவதும் நடக்கிறது. சட்ட்திருத்தத்திற்கு எதிராகப் போராடினால் தொழிலாளர்கள் மீது வழக்கு, காவல்துறையினரை வைத்துத் தாக்குதல் நட்த்துவது என காட்டுமிராண்டித் தனமான செயல்களை மாணவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் ஜனநாயக ரீதியான கருத்துக்களை தேசவிரோத பேச்சுகள், கருத்துக்கள் என்று தேசபக்த முலாம் பூசி அவர்களைத் தற்கொலைக்கு ஆளாக்கியும், படுகொலையும் செய்து வருகிறது.
விவசாயிகளின் மானியம் ரத்து செய்யப்படுவதும், படிப்படியாக குறைக்கப் படுவதும், கடன்கள் மறுக்கப்படுவதும் செய்து வருகிறது அரசு. இன்னொரு பக்கம் முதலாளிகளுக்கு மானியத்தைத் திறந்துவிடுவதும், கடன்களைத் தள்ளுபடியும் செய்கிறது இதே அரசு தான். இதையே நாட்டின் வளர்ச்சி என்று கூறி, தனது தவறுகளை மூடி மறைத்து நியாயம் கற்பித்து வருகிறது. தனது உழைப்பின் மூலம் மக்களுக்குச் சோறு போடும் விவசாயிகளை இழிவாகப் பார்ப்பதும், மக்களுடைய வரிப்பணத்தை விழுங்கி, தொழிலாளர்களின் உழைப்பினை விழுங்கி ஊதாரித்தனமாக மது, மாது என செலவு செய்யும் முதலாளிகளை உயர்வாய்ப் பார்த்து சலுகைகளை வாரி வாரி வழங்குவதும் தான் இன்று நாம் காட்சியாக உள்ளது.
இவற்றை எல்லாம் மூடி மறைத்து ஓட்டுக்கட்சிகளில் நேர்மையானவர் களுக்கு, அதுவும் நியாயமானவர்களுக்கு வாக்களித்தால் நமது நிலைமைகள் மாறிவிடும் என்றும், எனவே, அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் எனவும் தேர்தல்துறை பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் உழைக்கும் மக்களின் வாழ்வில் மாற்றம் பெற்று ஏற்றம் வரவில்லை.
எனவே, உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக தங்களின் போராட்டத் தலைவராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழிகாட்டியுள்ளார் என்பதை நெஞ்சிலேந்தி நமது நாட்டிலும் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்திக் காட்டத் தயாராக வேண்டும் என தற்போதைய அரசியல் சூழல் கோருகிறது. ஆம்! அது தான் தற்போது பெங்களூருவில் தொழிலாளர்கள் நடத்திய பி.எஃப் வயது வரம்பிற்கான போராட்டமும் உணர்த்துகிறது.
எனவே, உலகில் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற பெருமைக்குரியவரான மாமேதை லெனின் பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைத்திட உறுதியேற்பு திருபுவனை கிளை அலுவகத்தில் கொண்டாடப்பட்டது. மாமேதை லெனின் அவர்களின் உருவப்படத்தை வைத்து, இன்றைக்கு ஏன் லெனின் நமக்குத் தேவைப்படுகிறார் என்பதை விளக்கி, பு.ஜ.தொ.மு புதுச்சேரி தலைவர் சரவணன் பேசினார்.
ஏற்கனவே, பிறந்தநாள் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது, அந்தப் பக்கம் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போலிசு, வெடி வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டிருக்கும் போது, அவ்வழியே வந்த தேர்தல் ‘பறக்கும் படை’ போலிசை ஏவி விட்டுச் சென்றது. ஏற்கனவே, பாயக் காத்து நின்ற போலிசு, உடனடியாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து, “அனுமதி வாங்கினீர்களா? அனுமதி இல்லாமல் நடத்தக் கூடாது, யாரு வெடி வெடித்தது? யாரு தலைவர்? உடனே ஸ்டேசனுக்கு வாங்க!” என்றது. மேலும், “விசயம் தெரிந்த நீங்களே இப்படி அனுமதி வாங்காமல் செய்யலாமா?” என்ற வழக்கமான டயலாக்கையும் எடுத்து விட்டது.
“எங்களது ஆசான் லெனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை. மேலும், ஒலிபெருக்கி, வைக்கவும் இல்லை. அதனால், அனுமதி வாங்கத் தேவையில்லை.” என்று கூறிய நமது தோழர்களிடம், “ஸ்குவாடு வந்து சொல்லிட்டுப் போயிட்டாங்க, ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போயிடுங்க” என்று கெஞ்சிய போலிசிடம், “இதோ வருகிறோம்” என்று சொல்லி ஸ்டேசனுக்குச் சென்று பார்த்த போது, “இது மாதிரி செய்யும் போது, ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுத்துட்டு அனுமதி வாங்கிச் செய்யுங்க” என்று சொல்லி அனுப்பியது போலிசு.
அவ்வழியாகச் சென்ற மக்களிடம், இனிப்பு வழங்கியும், யார் லெனின் என்பதை பிரசுரம் கொடுத்து விளக்கும் விதமாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கும் தொழிற்பேட்டைப் பகுதியில் வெடிவெடித்தும் கொண்டாடியது தொழிலாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி. தொடர்புக்கு: தோழர். பழனிசாமி, 95977 89801.
தமிழக மக்கள் முன் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க., மக்கள் நலக் கூட்டணி என நீளும் பட்டியலில் எந்தவொரு கட்சியும் மக்களின் முழுநம்பிக்கைக்குரியதாக, மாற்று எனக் கூறுவதற்குத் தகுதியுடையதாக இல்லையென்றாலும், அக்கட்சிகளுக்குள்ளேயே நல்லக்கண்ணு போன்ற நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தோ, அல்லது போட்டியிடும் வேட்பாளர்களிலேயே படித்தவர்களாக, செயல்துடிப்புமிக்கவர்களாக, சாதி, மதம், பணத்திற்கு மயங்காதவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அனுப்பினால், அரசு நிர்வாகத்தை ஊழலற்றதாக, மக்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையை முதலாளித்துவ அறிவுத்துறையினர் விதைத்து வருகின்றனர். ஓட்டுக் கட்சிகள் சீரழிந்து போய்விட்டன; அதிகாரிகள் மட்டத்திலும் ஊழல் மலிந்துவிட்டது. ஆனாலும், இந்த அரசுக் கட்டமைப்பைத் தேர்தல்கள் மூலமும், லோக்பால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற சட்ட சீர்திருத்தங்களின் மூலமும் சீர்படுத்திவிட முடியும். இதைத்தவிர வேறு மாற்று இல்லை என அவர்கள் வாதிடுகின்றனர்.
100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை முன்னிறுத்தி தேர்தல் கமிசன் தமிழகமெங்கும் நடத்திவரும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஊர்வலம்
அவ்வாறு சீர்படுத்திவிடக் கூடிய நிலையில் இந்த அரசுக் கட்டமைப்பு இருக்கிறதா அல்லது அரசும் அதன் உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது எதிர்நிலை சக்திகளாக மாறி, நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப் போய்விட்டதா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் உரியது. அக்கடமைகளை நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளித்துதான், ஓட்டுக்கட்சிகள் தேர்தல்களில் வென்று, அதிகாரத்தில் அமர்கின்றன. அதிகார வர்க்கமும் அக்கடமைகளை நிறைவேற்றும் பொருட்டுதான் நியமிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தொடங்கி கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அதிகார வர்க்கத்திற்கும் போலீசிற்கும் நீதிபதிகளுக்கும் இக்கடமையை நிறைவேற்றத்தான் அதிகாரமும் சம்பளமும் சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கற்கள் விற்பனையில் நாம் காண்பதென்ன? வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் கொள்ளை! அதற்குத் தலைமைச் செயலர் தொடங்கி தலையாரி வரை, முதலமைச்சர் தொடங்கி உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் வரை அதிகாரவர்க்கமும் ஆட்சியாளர்களும் துணை நிற்பதையும்; இக்கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு கோரியவர்கள் கொல்லப்பட்டதையும் சிறையில் அடைக்கப்பட்டதையும்; கிரானைட் கொள்ளையை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் மிரட்டப்பட்டதையும், அவர் சுடுகாட்டில் படுத்துக் கிடந்த அவலத்தையும் தமிழகம் மட்டுமல்ல, நாடே பார்த்தது.
கிரானைட் கொள்ளையின் சாட்சி : சிதைந்து போன நிலையில் காணப்படும் மதுரை மாவட்டம், மேலூர் மாவட்டத்திலுள்ள சர்க்கரை மலை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தாது மணல் கொள்ளை பற்றி விசாரித்த ககன்சிங் தீப் பேடியின் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்திருப்பதன் மூலமும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி மாவட்டங்களில் நடந்த அக்கொள்ளை பற்றிய அறிக்கையை பேடியிடமிருந்து பெற்றுக் கொள்ளாமல், சதித்தனமான முறையில் கிடப்பில் போட்டு வைத்திருப்பதன் மூலமும், அவ்விசாரணைகளைப் பொருளற்றதாக்கிவிட்டது, அ.தி.மு.க. அரசு.
சென்னை உயர்நீதி மன்றமோ அந்நான்கு மாவட்ட அறிக்கையை வெளியிடக் கூடாதென்று வைகுண்டராஜனுக்குச் சாதகமாக முதலில் உத்தரவிட்டது. அதன் பின்னர், ககன்சிங் தீப் பேடியின் விசாரணைக்கு எதிராக வைகுண்டராஜன் தொடுத்த வழக்கில் அவரது விசாரணையை ரத்து செய்துவிட்டு, நீதிபதி குமாரசாமியை ஒத்த வேறொரு அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து, நீதி கிடைக்கும் என நம்பியிருந்தவர்களின் முதுகில் குத்தியும்விட்டது.
கிரானைட் கொள்ளையிலும் நீதி இதே போலத்தான் வளைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் நடந்துள்ள கிரானைட் கொள்ளை பற்றி விசாரிக்குமாறு முதலில்உத்தரவிட்ட உயர்நீதி மன்றம், அந்த உத்தரவின் மை காய்வதற்குள்ளாகவே, ‘புத்தி தெளிந்து அவ்விசாரணையை மதுரை மாவட்டத்தோடு சுருக்கிக் கொண்டது.
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தூத்துக்குடியில் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் கொள்ளையால் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சகாயம் குழு, இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. சகாயம் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திடம் அளித்து நான்கு மாதங்கள் ஓடிவிட்ட பிறகும் நீதியரசர்களின் நெற்றிக் கண் திறக்கவில்லை. சகாயத்தின் பரிந்துரை பற்றி கருத்துக் கூறுமாறு தமிழக அரசிடம் நீதிமன்றம் கேட்க, தமிழக அரசோ ஒவ்வொரு வாய்தாவின் போதும் கூடுதல் அவகாசம் கேட்க, நீதிமன்றமும் அதற்குத் தலையாட்டி வர, இப்படியாக இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு சென்னை உயர்நீதி மன்றமும் அ.தி.மு.க. அரசும் கண்ணாமூச்சி ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, மேலூர் மாஜிஸ்டிரேட் மகேந்திர பூபதி, பி.ஆர். பழனிச்சாமியின் மீது தொடுக்கப்பட்டிருந்த 98 வழக்குகளில் மூன்று வழக்குகளை மட்டும் தனியாகப் பிரித்து, அதில் அவர் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளித்திருக்கிறார். மேலும், பி.ஆர்.பி. மீது வழக்கு தொடுத்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நீதிமன்றத்திடம் பொய் சொல்லிவிட்டதாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடுக்க பரிந்துரை செய்திருக்கிறார். இந்த நீதிபதி இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டார். ஆனால், இவரைப் போல இல்லாமல், பி.ஆர்.பி.க்கும் வைகுண்டராசனுக்கும் சாதகமாக நைச்சியமான முறையில் தீர்ப்பளித்துள்ள உயர்நீதி மன்ற நீதிபதிகள் பதவியில் நீடிக்கிறார்கள்.
கிரானைட் கொள்ளை குறித்த விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் தலையிட்டவுடன், குற்றவாளிகள் இனி தப்ப முடியாது என உருவேற்றப்பட்டதெல்லாம் மெல்லமெல்ல நொறுங்கி விழுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன. அதேபொழுதில், கெயில் குழாய் பதிப்பு வழக்கிலோ சாமானிய விவசாயிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளிக்கின்றன. வைகுண்டராஜனும், பி.ஆர்.பழனிச்சாமியும் சட்டவிரோதமான முறையில், குண்டர்களை ஏவி விவசாயிகளின் நிலங்களை அபகரித்துக் கொள்கிறார்கள் என்றால், நீதிமன்றங்கள் சட்டபூர்வமாக, போலீசை ஏவி, விவசாய நிலங்களை அபகரித்துக் கொள்கின்றன. சாமானிய மக்களின் உரிமைகளை, வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கொண்டதாகக் கூறப்படும் நீதித்துறை, அதற்கு எதிராகத் திரும்பிவிட்டதை இத்தீர்ப்பு வெளிப்படுத்திக் காட்டுகிறது.
கிரானைட் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சுடுகாட்டில் படுக்க வைக்கப்பட்ட அவலம் : அரசு மக்களுக்கு எதிராகத் திரும்பி விட்டதற்கான சான்று.
சாமானிய மக்களின் சொத்துரிமை மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனம் உத்தரவாதப்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் சட்டபூர்வமாக அரசாலும், நீதிமன்றத்தாலும் முற்றிலுமாகப் பறிக்கப்படுகின்றன; அல்லது வெட்டப்பட்டு ஊனமாக்கப்படுகின்றன.
தரம் வாய்ந்த, அனைவருக்கும் பொதுவான இலவசக் கல்வி வழங்கும் தனது கடமையைப் படிப்படியாகக் கைகழுவி வரும் அரசு, இன்னொருபுறத்தில் தனியார் கல்வி வியாபாரிகள் கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களைக் கொள்ளையடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஏஜெண்டாகவும், அக்கும்பலின் அனைத்து கிரிமினல்தனங்களுக்கும் – உரிமம் பெறாமலேயே கல்லூரிகளை நடத்துவது, கட்டுமான வசதிகளைச் செய்து தராமல் மாணவர்களை ஏமாற்றுவது உள்ளிட்டவை – பாதுகாப்பு கொடுக்கும் அடியாள் படையாகவும் மாறி நிற்கிறது. கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் சாவு தொடங்கி கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் கொல்லப்பட்டது வரையில் அரசு-கல்வி வியாபாரிகளின் கூட்டுக் களவாணித்தனத்திற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
அரசு மருத்துவமனைகளில்கூட காப்பீடு திட்டத்தைப் புகுத்தியிருப்பதன் மூலம் பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளிப்பதைக் கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும் மருத்துவ சேவையையும் இலாப நோக்கம் கொண்டதாக மாற்றியமைத்திருக்கிறது, அரசு. மருத்துவக் காப்பீடு திட்டம் என்ற போர்வையில் காப்பீடு நிறுவனங்களும், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கொழுப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை, உரிய சிகிச்சை அளிக்காமல் நோயாளிகளைச் சாகடிப்பது உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கும் கையாளாக அரசு இருப்பதை சென்னை மியாட் மருத்துவமனையில் நடந்த சாவுகள் அம்பலப்படுத்தின.
பொதுமக்களுக்குக் குடிநீரைக்கூடக் கட்டணமில்லாமல் வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. தரமான சேவை கிடைக்க வேண்டுமென்றால், அதற்குரிய கட்டணத்தைப் பொதுமக்கள் வழங்க வேண்டும் எனக் கூறி, அரசு வழங்க கடமைப்பட்டுள்ள அனைத்து சேவைகளையும் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளாக மாற்றிவிட்டனர். கட்டணத்திற்கு மேல் ஒவ்வொரு சேவையின் மீதும் சேவை வரி விதித்து, அரசு வழிப்பறி கொள்ளைக்காரனாக உருமாறி நிற்கிறது.
தமிழகத்தின் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்ய முடியாது, சங்கம் அமைக்கும் உரிமை கிடையாது என்றவாறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாகத் திருத்தப்படுகின்றன. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தொழிலாளர் நலத் துறை, அதன் எதிர்நிலையாக, கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலித் துறையாக மாறி நிற்கிறது.
விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து தனியார் மற்றும் பொதுத்துறை கார்ப்பரேட் நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலும் அபகரித்துக் கொள்வதற்கு ஏற்றவாறு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உருவாக்கி, விவசாயிகளுக்கு எதிரானதாக அரசு உருவெடுத்திருக்கிறது.
பிரதம மந்திரியும், மாநில முதலமைச்சர்களும், காபினெட் அமைச்சர்களும் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களின் பிரதிநிதிகளாக நடந்து கொள்வதில்லை. மாறாக, அவர்கள் அனைவருமே ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியத் தரகு முதலாளிகள் ஆகியோரின் விருப்பத்தையும் நலன்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும் ஏஜெண்டாக மாறிவிட்டனர். இந்தக் கைக்கூலித்தனத்தை மறைப்பதற்கு வளர்ச்சி, நல்ல நிர்வாகம் என்ற முகமூடிகளை அணிந்து கொள்கின்றனர்.
அரசு இயந்திரம் ஊழல் மற்றும் கிரிமினல்மயமாகியிருப்பது மட்டுமல்ல, அதனின் பொருளாதாரக் கொள்கையே ஊழல்மயமாகிவிட்டதுதான் தனியார்மய காலத்தின் தனிச்சிறப்பு. எடுத்துக்காட்டாகச் சொன்னால், ஒரு லிட்டர் அம்மா குடிநீர் பாட்டிலைப் பொதுமக்கள் பத்து ரூபாய் கொடுத்து வாங்கும்பொழுது, கோக் நிறுவனம் ஒரு லிட்டர் தாமிரபரணி ஆற்று நீரை மிகச் சல்லிசாக சில்லறை காசுகளுக்கு வாங்கி வரு கிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் நட்டத்தை யாரும் ஊழல் என்று கூறுவது கிடையாது. மாறாக, அதனைத் தொழிற்கொள்கை என்று கௌரவமாக அழைக்கிறார்கள்.
இப்படித்தான் நிலக்கரி, இரும்புத் தாது, அலைக்கற்றை, தாது மணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளங்களை அரசு அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்த்து வருகிறது. வரிச் சலுகை, வரி விலக்கு என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான அரசின் வரிப் பணம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மொய்யாக எழுதப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களை, வாராக் கடன் பட்டியலில் சேர்த்து வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன. விரைவுச் சாலைகளில் சுங்க வரி என்ற பெயரில் வழிப்பறியை கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
அரசு மற்றும் சட்டத்தின் துணையோடு கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திவரும் இந்தப் பகற்கொள்ளை, தாலுகா ஆபீசில் புழங்கும் இலஞ்சத்தைவிட அபாய கரமானது. இயற்கை வளங்களை, அரசின் வரி வருவாயைச் சூறையாட கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் அதற்குப் பிரதிபலனாக வீசியெறியப்படும் எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் பின்னதற்கு எதிராக மட்டும் கூச்சல் போட்டுவிட்டு, முன்னதைத் தப்ப வைப்பதுதான் நடந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அம்பானி தொடங்கி பி.ஆர்.பி. வரை பல நூறு திடீர் கோடீசுவரர்கள் உருவாகியிருப்பதற்கு, நாம் மேலே குறிப்பிட்டுள்ள கார்ப்பரேட் பகற்கொள்ளைதான்- அதாவது, பொதுச் சொத்துக்களைச் சட்டபூர்வமாகச் சூறையாடுவதுதான் அடிப்படையாக அமைகிறது. டாடா, அம்பானி போன்ற பழைய வகைப்பட்ட தரகு முதலாளிகள், பி.ஆர்.பி., வைகுண்டராசன், ரெட்டி சகோதரர்கள் போன்ற மாஃபியா வகைப்பட்ட புதுத் தரகு முதலாளிகளின் கொள்ளைக்குச் சட்டபூர்வமாக ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் இப்பொழுது அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கத்தின் கடமையாகிவிட்டது.
இது என்ன மாமாப்பயல் வேலை என நீங்கள் முகம் சுளிக்காலம். ஆனால், இப்படி ஏற்பாடு செய்து கொடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள்தான் வளர்ச்சி நாயகனாக பட்டம் சூட்டப்படுகிறார்கள். டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி கொடுப்பது தொடங்கி சகல வேலைகளையும் கண் இமைக்கும் நேரத்தில் செய்து கொடுத்த பிறகுதான் கொலைகாரன் மோடி, வளர்ச்சி நாயகன் ஆனார்; பின்னர் இந்தியப் பிரதமராகவும் முடிசூட்டப்பட்டார்.
போலி கம்யூனிஸ்டுகள் உள்ளட்டு, அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களோடு நெருக்கமாகவோ மறைமுகமாகவோ உறவு வைத்திருக்கிறார்கள். பி.ஆர்.பி.யிடம், வைகுண்டராஜனிடம் காசு வாங்காத கட்சிகள் ஒன்று உண்டா? எனச் சவால் விடுகிறார், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான். எனவே, கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் ஓட்டுக்கட்சிகளின் ஊழல் ஒழிப்பு பல்லவி ஒருவிதத்தில் மோசடியானது, இன்னொரு விதத்தில் சாத்தியமற்றது.
ஊழல் ஒழிப்பு மட்டுமல்ல; தமிழக மக்கள் எதிர்கொண்டுள்ள எந்தவொரு பிரச்சினையையும் – காவிரி, முல்லை பெரியாறு, மீனவர்கள் தாக்கப்படுவது, கூடங்குளம் அணு உலை, நியுட்ரினோ திட்டம், மீத்தேன் மற்றும் பாறை எரிவாயு திட்டம் – ஓட்டுக்கட்சிகளால் தீர்த்துவிட முடியாது. இப்பிரச்சினைகள் குறித்து வாய்ப்பந்தல் போடுவதைத் தாண்டி, இவற்றைத் தீர்ப்பதற்கு ஓட்டுக்கட்சிகளிடம் மாற்று வழிகள் கிடையாது.
நீதிமன்றத்திடம் மனு போட்டோ, மைய அரசிற்குக் கடிதம் எழுதியோ இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்டது. நீதிமன்றங்களும் அரசுகளும் ஒன்று இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் முட்டுச்சந்துக்குள் சிக்கிக் கொண்டுள்ளன அல்லது மக்களுக்கு எதிராகத் திரும்புகின்றன. மேலும், 1989-ஆம் ஆண்டு தொடங்கி தமிழகத்தில் நடந்து முடிந்த ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு, பிரதான எதிர்க்கட்சியிடம் ஆளும் உரிமை அளிக்கப்படுவது தவறாது நடந்து வந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் நடந்திராத மாற்றங்கள், இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியைத் தோற்கடித்து, அதனிடத்தில் வேறொரு கட்சியிடம் அல்லது கூட்டணியிடம் அதிகாரத்தை அளிப் பதன் மூலம் நடந்துவிடும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. எப்பேர்பட்ட நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் மக்களுக்கு எதிராக மாறிவிட்ட இந்த அரசமைப்பைச் சீர்திருத்திவிடவும் முடியாது என்ற நிலையில் வேறு மாற்றுக் களைத்தான் நாம் தேட வேண்டியிருக்கிறது.
தோற்றுப் போய்விட்ட, மக்களுக்கு எதிராகத் திரும்பிவிட்ட இந்த அரசுக் கட்டமைவைத் தூக்கியெறிந்துவிட்டு, அதனிடத்தில் மக்கள் அதிகாரத்தை நிறுவுவதுதான், அம்மாற்று. தேர்தல்கள், ஓட்டு குறித்து தொடர்ந்து உருவாக்கப்படும் பிரமைகளையும், அவற்றின் மீதான குருட்டு நம்பிக்கைகளையும் புறந்தள்ளுவதும், கைவிடுவதும்தான் மக்கள் அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான முதல் படியாகும்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆசான் லெனினின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
“ஆசான் லெனினினின் பிறந்த நாளில் உறுதியேற்போம்” என்கிற வகையில் மாவட்டத்திற்குட்பட்ட கிளை மற்றும் இணைப்புச் சங்கங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி ஆசான் லெனினுடைய உருவப்படத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ், மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர், ஆலைவாயிலின் முன்பு கொடியேற்றி, ஆசான் லெனினுடைய பிறந்த நாளில் தொழிலாளிகள் உறுதியேற்க வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினர். இன்றைய மறுகாலனியாக்க சூழலில் தொழிலாளி வர்க்கமாக நாம் அனைவரும் ஒன்று திரண்டு, ஆளத் தகுதியிழந்த இந்த அரசை தூக்கியெறிய வேண்டும் என்றும், அதற்கு புரட்சிப் பாதை தான் தீர்வு எனவும் உரையாற்றினர். தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆசான் லெனின் பிறந்த நாளை சிறப்பித்தனர்.
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 9444461480
2. CPI, CPM கட்சிகளில் வர்க்க உணர்வும், கம்யூனிசத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட அணிகளின் சிந்தனைக்கு!….
(தோழர்களே, என்னதான் கோபமின்றி சிந்திக்கத் தூண்டும் வகையில் எழுத முயற்சி செய்தாலும், கம்யூனிசத்திற்கு உங்கள் தலைமை செய்யும் துரோகத்தை சகித்துக் கொண்டு மென்மையாக எழுத முடியவில்லை. இது எங்கள் தவறில்லை.)
தரகு முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் சர்வாதிகாரத்தை மறைக்க நடத்தும் தேர்தல் பாதையில் இறங்கி இத்தனை ஆண்டுகாலம் கண்ட பலன் ஏதாவது உண்டா?
தேர்தலுக்கு தேர்தல் ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடத்தி நாலு சீட்டுக்காக தன்மானத்தையும், கொள்கையையும் அடகு வைப்பது நியாயம்தானா?
மக்கள் நலக்கூட்டணி அமைத்து ஊழல் எதிர்ப்பு, திராவிட கட்சிகளை ஒழிப்பது என்று பேசிக்கொண்டே கல்விக்கொள்ளையன், சினிமா கழிசடை விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பது வெட்கக் கேடு இல்லையா?
தி.மு.க குடும்ப ஆட்சி, அ.தி.மு.க ஊழல் ஆட்சி என்பதெல்லாம் சரிதான்! தேமுதிக கும்பல் ஜனநாயக கட்சியா? தனிநபர் துதி, குடும்ப அரசியல் – வாரிசு அரசியலில் இருந்து தே.மு.தி.க எந்த வகையில் மாறுபட்டு நிற்கிறது?
தலைவர்களின் பதவி சுகத்திற்காக, நமது நாட்டின் வரலாற்றை திரித்து ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டிய ‘பாண்டவர்களை’ தமது அணிக்குப் பெயராக சூட்டி, பாண்டவர் அணி என்று மகிழ்வது வரலாற்றுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா?
ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், விவசாயிகளின் இரத்தத்தில் சிவந்த செங்கொடியை கேவலம் ஒரு சினிமா கழிசடை, கல்வி வியாபாரிக்காக உயர்த்திப் பிடிப்பது பச்சைத் துரோகம் இல்லையா? கம்யூனிசத்திற்கு செய்யும் துரோகம் இல்லையா?
கொள்கையோ, கோட்பாடோ, தனிநபர் ஒழுக்கமோ ஏதும் அற்ற குடிகாரன் தான் சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் உங்களுக்கு வழிகாட்டியா?
கூட்டணி பேரத்தில் சமரசம் செய்து கொள்வது தவறில்லை என்கிறார், தா.பா. ஆரம்பத்தில் மக்கள் ஜனநாயகப் புரட்சி தான் எங்கள் கொள்கை என்று தொடங்கி, இன்று விஜயகாந்த் முதல்வர் என்பது வரை எத்தனை சமரசம்? இதற்குப் பெயர் சமரசமா? சந்தர்ப்பவாத சதிராட்டமா?
ஊழலை ஒழிப்பது தான் முதல் வேலை என்கிறது தலைமை. ஆனால், அரசு அலுவலகம் தொடங்கி, மின்வாரியம், வங்கி வரை லஞ்சத்தைப் பெறும் அணிகளை கண்டித்தது உண்டா? அல்லது ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தியது உண்டா?
இது கூட்டணி அல்ல! தேர்தல் கூட்டு தான், ஒப்பந்தம் தான் என்று பல வார்த்தை ஜாலங்களிலும், செப்படி வித்தைகளிலும் ஈடுபடும் தலைமையை நம்பி இனியும் காலத்தை வீணடிப்பது மார்க்சிய துரோகம் இல்லையா?
வி.சி.க.வுடன் கூட்டணி சேர்ந்தவுடன் ‘தலித் முதல்வர்’ என்று ஏய்த்தது தலைமை. இப்போது ஆதிக்க சாதி வெறி மனநிலை கொண்ட விஜயகாந்துடன் கூட்டு சேர்ந்தவுடன் இவைகளைப் பற்றி பேச மறுத்து ஓட்டு வேட்டைக்கு மட்டும் உங்களை அழைப்பது அணிகளுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?
ஆந்திராவில், என்.டி.ஆர்., தமிழகத்தில் எம்.ஜி.ஆர். வழியில் கவர்ச்சிவாதமும், பாசிச–இந்து மதவெறியர்களின் பங்காளியுமான விஜயகாந்துக்கு கொடி பிடிப்பதும் கோஷம் போடுவதும், ‘கிங்’ ஆக்குவதுமா மாற்றத்தைக் கொண்டு வரும்?
தமிழக அரசியலில் முதலில் கவர்ச்சிவாத, பாசிச கோமாளி எம்ஜிஆரை உயர்த்திப் பிடித்த இடது சாரிகள், தனக்கென்று தனிப்பாதையை அமைத்துக் கொள்ளாமல், மீண்டும் விஜயகாந்தை முன்னிறுத்துவது, வெட்கக் கேடு என்று முதலாளித்துவ ஊடகங்களே காறித்துப்புகின்றன! ஆனால், ஓட்டுப்பொறுக்கி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று துடைத்துப் போட்டுவிட்டு பிரச்சாரத்திற்கு கிளம்புவது தன்மானத்திற்கு இழுக்கு இல்லையா?
இறுதியாக, ஈழப்பிரச்சினை முதல் சமீபத்தில் உடுமலையில் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட சங்கர் மரணம் வரை எந்தப் பிரச்சினையிலும் போராடாத, வாயே திறக்காத விஜயகாந்த் முதல்வர் என்றால், குறைந்தபட்சம் மக்கள் பிரச்சினைக்குப் போராட வேண்டும் என்று செயல்படும் உங்களுக்கு மனசாட்சி உறுத்தாதா?
இந்தப் பிரசுரம், CPI, CPM கட்சியில் செயல்படும் உங்களை அவமானப் படுத்துவதற்காகவோ, கோபப்படுத்துவதற்காகவோ இல்லை. இந்தியாவில் 1925-ல் கம்யூனிச இயக்கம் தொடங்கியது முதல் இன்று வரை இலட்சக்கணக்கான தோழர்கள், இரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து, தியாகம் செய்து வளர்த்த இயக்கத்தை இப்படி நாசம் செய்வதற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காகவே!
முதலாளித்துவத்திற்கு காவடி தூக்கும் போலி கம்யூனிச கட்சிகளை தூக்கியெறியுங்கள்! புரட்சிகர கம்யூனிச அமைப்புகளில் அணிதிரண்டு செயல்படுங்கள்!
CPI, CPM கைவிட்டு விலகிப் போன இந்தியப் புரட்சியை முன்னெடுப்போம்!
விவசாயிகள் – தொழிலாளர்கள் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
தொடர்புக்கு
திருச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம் – 9095604008
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – 9943176246
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 9791692512
பெண்கள் விடுதலை முன்னணி – 9750374810
புதுச்சேரி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
எண்-5, காவல்நிலையம் சாலை, ஆரம்ப சுகாதார நிலையம் அருகில்,
திருபுவனை, புதுச்சேரி.
செல்: 9597789801
3. தேர்தல் ஆணையத்திற்கு சவால்!
தேர்தல் ஆணையத்திற்கு சவால்!
தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை 100% நடத்திக் காட்ட முடியுமா? ரூ 1 கோடி பரிசு.
இலவசக் கல்வி தர வக்கில்லாத இந்திய ஜனநாயகத்திற்கு தேர்தல் ஒரு கேடா?
தேர்தல் ஆணையத்திற்கு சவால்! தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை 100% நடத்திக் காட்ட முடியுமா? ரூ 1 கோடி பரிசு.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
புரட்சிக மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி தொடர்புக்கு 99431 76246
சொத்துக்குவிப்பு வழக்கிலும், டான்சி நில ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டவர் ஜெயா என்ற போதும், இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் விடுதலையை வாங்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்ற போதும், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, 2ஜி வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே தி.மு.க.வையும் கருணாநிதியையும் மன்னிக்கவே முடியாத குற்றவாளியென மக்களின் மனதில் பதிய வைப்பதில் ஜெயா, துக்ளக் சோ, பா.ஜ.க., உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் வெற்றி பெற்றுவிட்டது.
2ஜி விற்பனையில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தணிக்கைத் துறையின் அனுமானம்தான். அந்த இழப்பு குறித்து இந்தத் தொகையைவிடக் குறைவான அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத் துறை. அவ்விற்பனையில் விதிமுறையை மீறி நடந்துகொண்டு, சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ.ராசா மீதான வழக்கு; அதற்காக, கலைஞர் டி.வி.க்கு இருநூறு கோடி ரூபாய் இலஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கொள்ளையோ தி.மு.க. மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஊழலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது.
பதவியேற்றவுடனேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த பார்ப்பன ஜெயா அரசைக் கண்டித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை அணிதிரட்டி நடத்திய சாலை மறியல் போராட்டம் (கோப்புப் படம்)
2ஜி ஊழல் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் விவாதிக்கப்பட்ட அளவிற்கு அம்மா அடித்திருக்கும் இந்தக் கொள்ளை பேசப்படவில்லை. அப்படி விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம், “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிய கட்சிகள், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளை வீழ்த்தினால்தான் தமிழகம் உருப்படும்” என சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஒரு நரித்தனமான வாதத்தைக் கிளப்பி அதற்குள் புகுந்து கொண்டு, பார்ப்பன ஜெயாவைப் பாதுகாக்கிறது. பார்ப்பனக் கும்பலின் இந்தக் கிரிமினல்தனத்தை ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., நாம் தமிழர் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் வழிமொழிந்து வருகின்றனர்.
அரைகுறையாகவாவது சமச்சீர் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க.வையும், அக்கல்வித் திட்டத்தைப் பதவியேற்றவுடனேயே குழிதோண்டிப் புதைக்க முயற்சி செய்த ஜெயாவின் அ.தி.மு.க.வையும்; அனைத்துச் சாதியினரும் அரச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்த தி.மு.க.வையும், அரசியல் தரகன் பார்ப்பன சு.சாமியோடு கைகோர்த்துக்கொண்டு அச்சட்டத்தை வேரறுத்த அ.தி.மு.க.வையும்; மோடி அரசின் இந்தி, சம்ஸ்கிருத திணிப்புகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும், அத்திணிப்புகளை மௌனமாக இருந்து அங்கீகரித்து வரும் அ.தி.மு.க.வையும்; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடியின் இயற்கை கூட்டாளியான ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத நோக்கில் பா.ஜ.க.வோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலைச் சாக்காக வைத்துக் கொண்டு அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது.
1992-ம் ஆண்டு நடந்த கும்பகோணம் மகாமகத்தின்போது, ஜெயாவும் சசியும் புனித நீராடுவதற்காகப் பலியிடப்பட்ட அப்பாவி பக்தர்கள் (நன்றி : ஜூனியர் விகடன்)
மார்க்சிஸ்டுகள் தலைமையில் மேற்கு வங்கத்தில் நடந்துவந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி சிங்கூரில் தரகு முதலாளி டாடாவின் நானோ கார் திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; நந்திகிராமத்தில் இந்தோனேஷிய பெருந்தொழில் நிறுவனமான சலீம் குழுமத்திற்காக நிலங்கள் பறிக்கப்பட்டன. இதனாலேயே,போலி கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் ஒன்றுதான் எனக் கூறினால், அதனைப் போலி கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வார்களா?
தி.மு.க.வும் இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகளில் ஊறிப்போன கட்சிதான். ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளைகள் தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடந்திருப்பதையும், அதற்குரிய பங்கை தி.மு.க. பெற்றிருப்பதையும் மறுக்க முடியாதுதான். தினகரன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல், திருமங்கலம் ஃபார்முலா என தி.மு.க.விற்கு இருண்ட பக்கங்கள் இருப்பதும் உண்மைதான். இவை போல இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் தி.மு.க. மீது சுமத்த முடியுமென்றாலும், பார்ப்பன-பாசிசத்தைத் தனது கொள்கையாகவே கொண்டிருக்கும் அ.தி.மு.க.வும், பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ், தமிழினம் என்ற திராவிடக் கொள்கைகளின் வாசம் வீசுகின்ற – அது காலிப் பெருங்காய டப்பாவாக இருந்தபோதும் – தி.மு.க.வையும் ஒரேவிதமாக மதிப்பிடுவது அறியாமை அல்ல, கபடத்தனம்.
பகுத்தறிவு, சுயமரியாதை உள்ளிட்ட திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொண்டர்களை அடித்தளமாகக் கொண்டிருந்த தி.மு.க., தேர்தல் அரசியலின் ஊடாக பிழைப்புவாதக் கட்சியாகச் சீரழிந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வோ சினிமா கவர்ச்சியையும், அவரது ரசிகர்களான உதிரித் தொழிலாளர்களையும் அடித்தளமாகக் கொண்டு உருவானது. தனது பிறப்பிலேயே எந்தக் கொள்கையும் இன்றி, பிழைப்புவாதத்தையும் அடிமைத்தனத்தையும் மட்டுமே கொண்ட கட்சியாக உருவெடுத்து, அதனின் பரிணாம வளர்ச்சியில், ஜெயாவின் தலைமையில் பார்ப்பன-பாசிசக் கட்சியாக உருமாறி நிற்கிறது.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே தேர்தலின்பொழுது பணப்பட்டுவாடாவில் இறங்கக்கூடிய கட்சிகள் என்றாலும், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடா ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது. இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகள், பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது ஆகிய வழிகளின் மூலம் கோடிகோடியாகக் கொள்ளையடிப்பது, அதில் ஒரு சிறுபகுதியை வீசியெறிந்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குவது, இதன் மூலம் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக நீடிப்பது என்பதுதான் ஜெயலலிதாவின் அரசியல். கடத்தல், கொலை, விபச்சாரம் போன்ற அனைத்து கிரிமினல்தனங்களையும் ஒரு தொழிலாக நடத்திக் கொண்டே, ஒரு கொடை வள்ளலைப் போல ஏழை மக்களுக்குக் காசை அள்ளி இறைப்பதன் மூலம் அவர்களுடைய ஆதரவைத் திரட்டிக் கொள்வதுடன், அவர்களையும் ஊழல்படுத்தி, அவர்களையே தனது கூலிப்படையாக மாற்றி வைத்துக் கொள்வதைப் போன்றது இந்த அரசியல்.
அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவிற்குத் தேர்தல் ஆணையமே துணை நின்ற அநீதியைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது தமிழகம் கண்டது. 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது, தேர்தல் விதிமுறைகளை மீறி நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர் ஜெயா. இம்முறைகேடு தொடர்பாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக இழுவையில் இருக்கிறது. இவ்வழக்கை இழுத்தடிப்பதன் மூலமே ஊத்தி மூடிவிட எண்ணும் ஜெயாவின் சதிக்குத் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றன. பார்ப்பன ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட இந்த ‘வீட்டோ’ அதிகாரம் கருணாநிதி உள்ளிட்ட வேறு யாருக்கும் ஓட்டுக்கட்சி அரசியலில் வழங்கப்படவில்லை.
பார்ப்பன மூடநம்பிக்கை: அம்மாவின் நலன் வேண்டி, அம்மாவின் அடிமைகளான தமிழக அமைச்சர்களால் கோயம்புத்தூர் சுகுணாபுரத்திலுள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 17 நாட்கள் நடத்தப்பட்ட அஸ்வருதா தேவி மகா யாகம் (கோப்புப் படம்)
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, அத்தேர்தல் பிரச்சாரங்களில் எவ்விதத் தடையுமின்றி ஜெயா ஈடுபடுவதற்கும், அத்தேர்தல் முடிந்த பிறகு நடைபெறக்கூடிய பேரங்களில் அவர் பங்கு பெறுவதற்கும் ஏற்ப அச்சமயத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, உச்சநீதி மன்றம். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயாவிற்கு சட்டத்தை மீறி சலுகை அளித்துப் பிணை வழங்கியது, அவருக்குச் சாதகமாக அவ்வழக்கை விரைந்து முடிந்து கொடுக்க ஏற்பாடு செய்தது, கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்த அம்மேல்முறையீட்டு வழக்கில் காணப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக தி.மு.க.வின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பூசிமெழுகியும், இரண்டுங் கெட்டான்தனமாகவும் தீர்ப்புகளை அளித்தன நீதிமன்றங்கள். தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க. தரப்புக்கு மட்டும் வாதிடுவதற்கான அனுமதியை மறுத்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனுமதி மறுப்பதாக வெட்கமே இல்லாமல் கூறுகிறார்கள். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றங்கள் வழங்கி வரும் இத்தகைய சலுகைகள், வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியாவில் வழங்கப்பட்டதேயில்லை என்பதே உண்மை.
கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை ஒரு இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததையும், அப்பொழுது நிலவிய மின் தட்டுப்பாட்டையும் காட்டி கருணாநிதியை நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சராகப் பார்ப்பனக் கும்பலும், ஊடகங்களும் குற்றஞ்சாட்டின. கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியிலோ தமிழக அரசின் கடன் சுமை மேலும் 1,40,000 கோடி ரூபாய் அதிகரித்து, 2,47,031 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிவிட்டதாக ஜெயா அடித்துவரும் தம்பட்டம் கடைந்தெடுத்த மோசடி என்பதைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அம்பலப்படுத்துகிறது. ஆனாலும், எந்தவொரு ‘நடுநிலை’ ஊடகமும் ஜெயாவின் நிர்வாகத் திறமையைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, அவர் அடிமுட்டாள்தனமாகவும் அடாவடித்தனமாகவும் எடுக்கும் முடிவுகளைக் காட்டி, அவரைத் தைரியலட்சுமி எனத் துதிபாடி வருகின்றன.
ஜெயா-சசி கும்பலால் வளைத்துப் போடப்பட்ட லக்ஸ் தியேட்டர், இந்த ஐந்தாண்டுகளில் அக்கும்பல் நடத்திவரும் சொத்துக்குவிப்பு கிரிமினல்தனங்களை எடுத்துக்காட்டும் துவக்கப் புள்ளியாக அமைந்தது. இதனையடுத்து, ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் மிகப்பெரும் பொருளாதாரக் குற்றங்களிலும், கிரிமினல் சதி வேலைகளிலும் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி வருகிறது. எனினும், அந்த அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவில்லை. மாறாக, அவர்களது ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலக்கப்படுவதே தண்டனையாகக் காட்டப்படுகிறது.
80 விழுக்காடு அமைச்சர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் பாதிப்பேர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு துறையின் அமைச்சர் எனப்படுபவருக்கு அந்தத் துறையைக் கொள்ளையடிக்கும் உரிமை அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கிறது என்பதும், அடித்த கொள்ளையின் உண்மையான கணக்கை ஒப்படைக்காத நேர்மையற்ற அமைச்சர்கள்தான் நீக்கப்பட்டுப் பின்னர் மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை.
சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து, அந்த மகன் தனக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருந்த திருட்டுச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக அந்த மகன் மீது கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிய வரலாற்றுப் பெருமை கொண்டவர் ஜெயா. இப்பொழுது ஐவரணி கூட்டாளிகளுள் ஒரு சிலரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, வன்கொடுமைத் தடைச் சட்டத்தையும் எள்ளி நகையாடியிருக்கிறார்.
இதற்கும் மேலாக, அமைச்சர்களை போயசு தோட்டத்திற்கு வரவழைத்து, மிரட்டி, வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி, அவர்கள் சட்டவிரோதமாகக் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களைத் தனது பெயரில் பட்டா போட்டு வருகிறது, ஜெயா-சசி கும்பல். அரசின் கஜானாவிற்குப் போகவேண்டிய சொத்துக்கள் போயசு தோட்டத்தில் பதுக்கப்படுகின்றன. திருடர்களிடமிருந்து கைப்பற்றப்படும் திருட்டு நகை, பணம் ஆகியவற்றில் பெரும்பகுதியைச் சுருட்டிக் கொண்டு, கொஞ்சத்தை திருடனுக்கும், மிச்சத்தைப் பறிகொடுத்தவனுக்கும் பிரித்துக் கொடுக்கும் கிரைம் பிராஞ்சு போலீசின் நேர்மைகூட ஜெயாவிடம் இல்லை.
ஜெயா கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால், அவரது விசுவாச ரவுடிக் கூட்டம் தமிழகத்தையே ரணகளமாக்கத் துணிகிறது. மூன்று மாணவிகளை உயிரோடு எரித்து சிவில் சமூகத்தைப் பீதிக்குள்ளாக்குகிறது. இன்னொருபுறமோ, இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகள், காமக் களியாட்டங்கள் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களைப் புரியும் தனது அமைச்சர்களைத் தண்டிக்கும் உரிமையைச் சட்டத்திடம் விட மறுத்து, அவர்களின் தலைவி என்ற மமதையோடு அதனைத் தானே எடுத்துக் கொள்கிறார். மக்கள் நலப் பணியாளர், நடைபாதைகளில் பேனர்கள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தனது அரசுக்கு எதிராக நீதிமன்றம் இடும் உத்தரவுகளை அமல்படுத்த மறுக்கிறார். நீதிபதிகளை விலைக்கு வாங்குவதன் மூலம் அல்லது மிரட்டுவதன் மூலம் தனக்குச் சாதகமான உத்தரவுகளைப் பெறுகிறார். இதன் வழியாக, சட்டத்திற்கு மேலான சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியாக, அரசியல் கட்சித் தலைவர்களிலேயே தனிச் சலுகை படைத்தவராகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார், ஜெயலலிதா.
அரசு என்பதை தனது அந்தப்புரமாகவும், போலீசை அங்கு காவலிருக்கும் திருநங்கைகளாகவும், அமைச்சர்களைக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் காவலர்களாகவும் கருதி நடத்துகிறார் ஜெயலலிதா. இப்படிபட்ட ஒரு அரசு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தனிச்சலுகை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. காரணம், தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் மரபை வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வந்த அவதாரமாக ஜெயலலிதாவைக் கருதுகிறது பார்ப்பன-பனியா ஆளும் கும்பல்.
பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, இந்தி-சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு ஆகிய திராவிடக் கருத்தாக்கங்கள் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருவதற்கு கருணாநிதியையும், தி.மு.க..வையும் காரணமாகக் கருதி வருகிறது, பார்ப்பனக் கும்பல். அதனால்தான் தி.மு.க. தீயசக்தி என அவாள்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது. தி.மு.க.வை அடுத்தடுத்த தேர்தல்களில் தோற்கடிப்பதன் மூலம், வழக்குகளை ஏவி நிலைகுலையச் செய்வதன் மூலம், இதனையும் கருணாநிதி உயிரோடு இருக்கும்பொழுதே செய்து முடிப்பதன் மூலம், அக்கட்சிக்கு மங்களம் பாடித் தமிழகத்தை மீண்டும் பார்ப்பன தேசியத்திற்குள் முழுவதுமாக மூழ்கடித்துவிடலாம் என முனைந்து வருகிறது, அக்கும்பல். கருணாநிதி எத்தனை அரசியல் சமரசங்களைச் செய்து கொண்டு இந்திய தேசியத்திற்கும், பார்ப்பனக் கும்பலுக்கும் விசுவாசமிக்கவராக நடந்து கொண்டாலும், பார்ப்பன பாசிசக் கும்பல் எதையும் பொருட்படுத்துவதில்லை.
இந்த நோக்கத்துக்காகப் பல்வேறு திசைகளிலும் காய்கள் நகர்த்தப்படுகின்றன. துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி, “அ.தி.மு.க. அரசு வந்ததால்தான் ஒரு குடும்ப ஆட்சி போனது. குடும்ப ஆட்சி திரும்ப வந்துவிட நமது ஓட்டு பயன்பட்டுவிடக் கூடாது” என தி.மு.க.விற்கு எதிராகப் பார்ப்பன ஜெயாவை ஆதரித்து வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்கிறார். “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிப் போன ஒரேமாதிரியான கட்சிகள்” எனச் சமப்படுத்தும் மக்கள் நலக் கூட்டணியும்; “திராவிடக் கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டதாக”ப் பழிபோடும் பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் ஆழ்வார்கள் வேலையில் இறங்கியிருக்கின்றன.
தேர்தல் அரசியலுக்கு வெளியேதான், மக்கள் விடுதலைக்கும் அதிகாரத்துக்குமான தீர்வு இருக்கிறது என்று நாம் கூறுவதனாலேயே, தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அனைத்தும் சமமானவை என்று பொருளல்ல. பாரதிய ஜனதா, காங்கிரசு முதலான ஆளும் வர்க்கக் கட்சிகளாகட்டும், போலி கம்யூனிஸ்டுகள், தலித் கட்சிகள் போன்றவைகளாகட்டும், அவை ஒவ்வொன்றின் தன்மையையும் பிரித்துப் புரிந்து கொள்வது அவசியம்.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமம் எனப் பார்ப்பனக் கும்பல் முன்வைக்கும் வாதம், அதற்கு வால்பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது.
வினவு செய்தியாளர் குழு ஜே.என்.யு சென்று திரும்பி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. அப்போது கண்ணையா குமார் சிறையிலும் உமர் காலித், அனிர்பான் உள்ளிட்ட தோழர்கள் தலைமறைவாகவும் இருந்தனர். நாங்கள் திரும்பி வந்ததற்கு இடைப்பட்ட நாட்களில் கண்ணையா பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார். தலைமறைவாக இருந்த உமர் காலித் உள்ளிட்ட தோழர்கள் சரணடைந்து பின் அவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். தற்போது கண்ணையா குமார் மீது அபராதமும், உமர், அனிர்பான் மீது தற்காலிக நீக்கமும், இன்னம் 14 மாணவர்கள் மீது அபராதமும் விதித்துள்ளனர். பல்கலையின் உயர்மட்ட விசாரணைக் குழு இந்த அறிவிப்பைச் செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பை கடுமையாக கண்டித்திருக்கின்றனர்.
கண்ணையா குமார்
சிறையில் இருந்து விடுதலையான கண்ணையா குமாரின் உரையின் மேல் பலரும் பலவாறாக பொருள் விளக்கம் எழுதி விட்டனர். அவரது உரையில் இருந்து ஒரு சில பகுதிகளை இங்கே சுட்டிக் காட்டுவது இந்த இறுதிக் கட்டுரையின் பேசு பொருளுக்கு நெருக்கமானதாக இருக்கும் என்று கருதுகின்றோம்.
“எனது சிறை அனுபவத்திலிருந்து சிலவற்றைச் சொல்ல நினைக்கிறேன். இது எனது சுயவிமரிசனம். ஒரு வேளை நான் சொல்லப் போவது உங்களுக்கும் பொருந்தும் என்று கருதினீர்களென்றால் அதே உணர்வோடு புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜே.என்.யுவைச் சேர்ந்த நமது உரையாடல்கள் வடிகட்டப்பட்டு தூய்மையானதாகவும், நாகரீகமானதாகவும் உள்ளன. ஆனால் நாம் சாதாரண மக்களுக்குப் புரியாத சிக்கலான வார்த்தைகளைக் கொண்டு நமது வாதங்களைக் கட்டமைக்கிறோம். இது மக்களின் தவறல்ல. அவர்கள் நேரிடையானவர்கள். நேர்மையானவர்கள். நிச்சயம் அவர்களால் விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். நம்மால் தான் அவர்களுக்கு விசயங்களை எளிமையான முறையில் விளக்க முடியவில்லை”
”எனக்கு ஏ.பி.வி.பியினர் மேல் எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில், வெளியில் இருக்கும் ஏ.பி.வி.பியினரை விட வளாகத்திற்குள் இருக்கும் ஏ.பி.வி.பியினர் பகுத்தறிவு மிக்கவர்கள்”
“எனது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஏ.பி.வி.பி நண்பர்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சுப்பிரமணியம் சுவாமியை இங்கே அழைத்து வாருங்கள். நாங்கள் அவரோடு விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்”
ஜே.என்.யுபேசும்அரசியலும் – வெகுமக்களும்
கண்ணையா குமாரின் உரையிலிருந்து சுட்டப்பட்ட மேற்கோள்களில் இறுதியாக உள்ளவைகளை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வோம்.
ஜே.என்.யுவில் தற்போது நடந்து வரும் மொத்த சர்ச்சைகளுக்கும் வித்திட்ட பிப்ரவரி 9ம் தேதி நிகழ்வுகளின் சூத்திரதாரியே ஏ.பி.வி.பி தான். அப்சல் குரு அநியாயமாக தூக்கிலிடப்பட்ட பின் ஒவ்வொரு வருடமும் ஜே.என்.யு வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஏ.பி.வி.பி அறியாத ஒன்றல்ல. எனினும், இந்த ஆண்டு திட்டமிட்ட ரீதியில் வெளியிலிருந்து ரவுடிகளையும் பார்ப்பன ஊடகங்களையும் அழைத்து வந்ததோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தவர்களும் ஏ.பி.வி.பியினர் தான்.
ரோகித் வெமுலா
ஜே.என்.யு என்றில்லாமல் ஜே.என்.யு விவகாரத்தைத் தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கருத்துரிமைக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல்களை ஏ.பி.வி.பி கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஜனவரி மாதம் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ”தி வயர்” இணையப் பத்திரிகையின் ஆசிரியரான சித்தார்த் வரதராஜன் நிகழ்த்த இருந்த உரையைத் தடுத்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா படுகொலை, கண்ணையா குமாரை அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது, தில்லி மதரசா மாணவர்கள் சிலரை “பாரத் மாதா கீ ஜேய்” சொல்லுமாறு கட்டாயப்படுத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியது, ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஜே.என்.யு பேராசிரியர் நிகழ்த்த இருந்த உரை ஒன்றைத் நிர்வாகத்தின் துணையோடு தடுத்தது, ஜே.என்.யு பேராசிரியர்கள் நிவேதிதா மேனோன், பாணினி உள்ளிட்டோரை தேச துரோகிகளாக சித்தரித்துக் கொண்டிருப்பது – இது கடந்த சில மாதங்களில் மட்டும் ஏ.பி.வி.பி தீவிரவாத கும்பல் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதல்களின் ஒரு சிறிய பட்டியல் தான்.
கருத்து சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின் மேல் வெறி நாய்களைப் போல் பாய்ந்து பிடுங்கிக் கொண்டிருக்கும் ஏ.பி.வி.பியினரை நோக்கிய கன்னையா குமாரின் அணுகுமுறையைப் புரிந்து கொள்வதற்கு அவரது உரையின் முதல் பகுதியை விளங்கிக் கொள்வது அவசியம்.
மக்கள்அரசியல்vs ஜே.என்.யுஅரசியல்:
மாணவர் சங்கங்களின் அரசியல், பொதுவாக பல்கலைக்கழகங்களின் அரசியல் போக்குகள் மற்றும் குறிப்பாக ஜே.என்.யுவின் அரசியல் விவகாரங்களை கடந்த பல ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்து வரும் ஜே.என்.யுவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் ஒருவரிடம் உரையாடினோம்.
தில்லி பல்கலைகழகம்
“தோழர், தில்லியில் உள்ள இரண்டு முக்கிய பல்கலைக்கழகங்களில் செல்வாக்கு செலுத்தும் அரசியல் போக்குகள் குறித்து சொல்லுங்கள்”
”தில்லி பல்கலைக்கழகத்தில் எப்போதும் ஏ.பி.வி.பிக்கும் காங்கிரசின் என்.எஸ்.யு.ஐக்கும் நேரடியான போட்டி இருக்கும். இந்தப் போட்டிகளில் ஏ.பி.வி.பி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது. தில்லி பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர்கள் சங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே செல்வாக்கிழந்து விட்டன”
“தில்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி பெற்று வரும் வெற்றியை எப்படிப் புரிந்து கொள்வது?”
”தில்லி பல்கலைக்கழகத்திற்கும் ஜே.என்.யு.விற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முதலில் விவாதச் சூழல். இங்கே எமது அரசியல் விவாதச் சூழலில் இடதுசாரி அரசியலுக்கு மிக முக்கியமான இடமுண்டு. அதே போல் இந்த வளாகத்தின் கலாச்சாரத்தில் ஐரோப்பிய பாணி லிபரல் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. தில்லி பல்கலைக்கழகத்தின் சூழல் வேறு. பெரும்பாலும் நிலவுடைமைச் சமூக சூழலில் இருந்து வரும் மாணவர்கள் தில்லி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பின்னும் பெரிதளவில் கலாச்சார தளத்தில் மாறுதலுக்கு உள்ளாவதில்லை. தனது பிற்போக்கான கருத்து நிலைகளை எந்த மாற்றமும் இன்றி தொடர தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எந்த தடைகளும் இருப்பதில்லை. மேலும், பல்கலைக்கழக தேர்தல்களை ஏ.பி.வி.பியும் சரி காங்கிரசு சங்கமும் சரி, சாதி கணக்குகளின் அடிப்படையிலேயே அணுகுகின்றன. குஜ்ஜார் மற்றும் ஜாட் சாதியினரின் நன்மதிப்பை பெறும் சங்கங்கள் சுலபத்தில் வெற்றி பெற்று விடலாம். ஏ.பி.வி.பி தில்லி பல்கலைக்கழக தேர்தல்களில் தொடர்ந்து வென்று வருவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்”
”சரி, ஜே.என்.யு வளாகத்தில் ஏ.பி.வி.பியின் செல்வாக்கு எப்படி உள்ளது? வெளியே ஊடகங்களின் கருத்துப்படி பார்த்தால் ஜே.என்.யு ஒட்டுமொத்தமாக இடதுசாரிகளின் கோட்டை என்றாகிறது…”
”இந்த வளாகத்தை இடதுசாரிகளின் கோட்டை என்று பீற்றிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த செப்டெம்பரில் நடந்த மாணவர் தேர்தலில் மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் ஏ.பி.வி.பியினர் 11 இடங்களில் வென்றுள்ளனர். நான்கு முக்கிய இடங்களுக்கான போட்டியில் ஒன்றில் ஏ.பி.வி.பி வென்றுள்ளது. இந்த வெற்றிகளின் பின்னே அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுக்கள் கிடைத்துள்ளது என்பதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்”
”எனினும், ஜே.என்.யுவின் பாரம்பரியத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தற்போது இந்துத்துவ பாசிஸ்டுகள் ஜே.என்.யுவின் மேல் தொடுத்திருக்கும் தாக்குதல்களை எதிர்கொள்வதைப் பொருத்தமட்டில் இந்த வளாகம் ஒரே அணியில் நின்று அவற்றை எதிர் கொள்கிறது என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா?”
“அப்படியும் சொல்ல முடியாது. தற்போதைய பிரச்சினையில் இங்கே உள்ள ஊழியர்கள் சங்கம் (Non teaching Staff association) ஏ.பி.வி.பிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே போல், வளாகத்தில் தோட்ட வேலை மற்றும் இதர உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சங்கம் ஏ.பி.வி.பி நடத்திய பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்”
“இடதுசாரி மாணவர்களுக்கு தொழிலாளர்களே ஆதரவு தரவில்லையா? கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதே? நீங்கள் அவர்களோடு எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லையா?”
”தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. ஊழியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை நாங்கள் தான் அவர்களுக்கு போராடிப் பெற்றுக் கொடுத்தோம். அதே போல் தொழிலாளிகளின் கூலிப் பிரச்சினைகளுக்கும், இங்கே உள்ள தாபாக்களுக்கு வழங்கப்படும் மானியத்திற்காகவும் நாங்கள் போராடி இருக்கிறோம்”
“நான் கேட்பது வேறு. பொருளாதார கோரிக்கைகள் தவிர்த்து அவர்களோடு அரசியல் ரீதியான தொடர்புகளை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்களா? அல்லது அவர்களை அரசியல் ரீதியில் வென்றெடுக்க முயற்சித்துள்ளீர்களா?”
நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த தோழர் ஒரு கணம் திகைத்து பேசுவதை நிறுத்தினார். அருகிலிருந்த மற்ற தோழர்களும் அவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சில நிமிட அமைதிக்குப் பின்,
”அவ்வாறான ஒரு தேவை இருப்பதையே நாங்கள் இது வரை பரிசீலிக்கவில்லை என்பது தான் உண்மை.. சொல்லப் போனால் நாங்கள் அந்த துறையில் தோற்றுவிட்டதாகவே எடுத்துக் கொள்ளலாம்”
”சரி நீங்கள் அவ்வாறான ஒரு உரையாடலுக்கு முயற்சிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. ஆனால், உழைக்கும் வர்க்கம் என்ற முறையில் இவர்கள் இடதுசாரி மாணவர் சங்கங்களுக்கே நெருக்கமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா. எப்படி ஏ.பி.வி.பிக்கு ஆதரவான நிலையை அவர்கள் எடுக்கிறார்கள்?”
”உண்மை தான். ஆனால் நீங்கள் அவர்களது கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமைச் சமூகப் பின்னணியில் இருந்து வருகின்றவர்கள். அவர்களது வருமானத்தைக் கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு முறையான பள்ளிக் கல்வி அளிப்பதற்கே போராட வேண்டும். பெரும்பாலும் அவர்களது பிள்ளைகள் பள்ளி இறுதியோடு படிப்பிலிருந்து விலகிக் கொள்பவர்களாக இருப்பார்கள். இங்கே வளாகத்தில் மாணவர்களின் உலகமோ வண்ணங்களால் நிறைந்தது. ஆராய்ச்சி மாணவர்கள் தாபாக்களில் அமர்ந்து மணிக்கணக்கில் விவாதங்களில் ஆழ்ந்திருப்பார்கள். அவை அனைத்தும் அரசியல் விவாதங்கள் என்று சொல்ல முடியாது – பல நேரங்களில் தங்களது ஆராய்ச்சிகள் குறித்தும் கூட பேசிக் கொள்வார்கள். அடுத்து மாணவர்களின் அரசியல் செயல்பாடுகள்.
JNU வளாகம் நன்றி: தி இந்து
இதையெல்லாம் பார்க்கும் தொழிலாளர்களும் ஊழியர்களும் என்ன நினைப்பார்கள்? படிப்பதற்காக அரசு செலவு செய்யும் காசையெல்லாம் தின்று தீர்த்து விட்டு இப்படிக் கூத்தடிக்கிறார்கள் என்றே அவர்களுக்குத் தோன்றும். ஆனால், மாணவர்களின் படிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளுமே கூட சமூக அடிப்படைகளில் இருந்தும் அது சார்ந்த செயல்பாடுகளில் இருந்துமே கிளைத்தெழுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. இங்கே பொலிடிகல் சயன்ஸ், அறிவியல் துறை, சமூகவியல் துறை, சட்டம் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அரசியல் பேசுவம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிக இயல்பானது தானே?
இப்போது யோசித்துப் பார்க்கும் போது, எமது அரசியல் செயல்பாடுகள் இதே மக்கள் அங்கம் வகிக்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கானதே என்பதை அவர்களுக்கு விளங்கச் செய்யும் முயற்சிகளில் தவறி விட்டோம் என்று புரிகின்றது. அந்த வகையில் அடித்தட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பேசுவதில் இருந்து நாங்கள் மிகவும் விலகி இருக்கிறோம்”
”இந்த விவகாரங்களுக்குப் பின் வளாகத்திற்குள் ஏ.பி.வி.பியின் நிலை எப்படி இருக்கும்?”
”சொல்லப் போனால் மோடியும் அமித்ஷாவும் அவசரப்பட்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏ.பி.வி.பி வளர்ந்து வந்த வேகத்தைப் பார்த்தால் அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் அவர்கள் வளாகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்திகளாக வளர்வதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன. ஆனால், பா.ஜ.க அவரசப்பட்டு மூக்கை நுழைத்ததில் வளாகத்திற்குள் ஏ.பி.வி.பி தனிமைப்பட்டு விட்டது”
”அப்படியென்றால் ஏ.பி.வி.பியின் வளர்ச்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ள அதே நேரம், எதிகாலத்தில் அவர்கள் வளர்வதற்கான சமூக அடிப்படை அப்படியே இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா?”
“முழுமையாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில், இப்போது எழுந்திருக்கும் விவாதத்தின் போக்கில் அந்த சமூக அடிப்படை சர்வ நிச்சயமாக உடைந்து போவதற்கான எல்லா சாத்தியங்களும் எழுந்து வருகின்றன. ஏ.பி.வி.பியின் சில முன்னணியாளர்களே அமைப்பிலிருந்து விலகிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா”
மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் ‘ஜெண்டில்மேன்’ அரசியல் குறித்த கண்ணையா குமாரின் சுயவிமரிசனத்தை இவ்விடத்தில் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகின்றோம். உண்மையில் இடதுசாரி அரசியல் என்பதற்கும் மக்களுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
ஜே.என்.யு : ’இடதுகளும்’ லிபரல்ஜனநாயகமும்
ஜே.என்.யு வளாகத்தில் நிலவுவது ஒரு வகையான லிபரல் ஜனநாயகச் சூழல். அந்தச் சூழலில் எல்.ஜி.பி.டி இருக்கிறது. ஏ.பி.வி.பி இருக்கிறது, அம்பேத்கரியவாதிகள் இருக்கின்றனர், ஆம் ஆத்மி இருக்கிறது – தவிற, ஆம் ஆத்மியின் அரசியலைப் பேசும் பிற குழுக்கள் இருக்கின்றன காங்கிரஸ் இருக்கிறது. இவர்களுக்கு மத்தியில் இடதுசாரிகளும் இருக்கின்றனர் (இவர்களின் ’இடது’ தன்மை குறித்து தனியே விளக்க வேண்டும்).
மேலே குறிப்பிட்டுள்ள சிந்தனைப் போக்கோடு இன்னும் பல வண்ணங்களில் பல அமைப்புகளைச் சேர்ந்த தனிநபர்கள் இருக்கிறார்கள். பல ஒருநபர் ’அமைப்புகள்’ இருக்கின்றன. இப்படியான ஒருநபர் ‘அமைப்புகள்’ கொண்ட கூட்டமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருக்கும் ஏதோவொரு அரசியல் கண்ணோட்டம் இருக்கின்றது. அந்தக் கண்ணோட்டங்கள் அனைத்துக்கும் அந்த வளாகத்தில் இடம் இருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லாமல் “அல்லாஹு அக்பரும்” “பாரத் மாதா கீ ஜெய்யும்” “நக்சல்பாரி லால் சலாமும்” அக்கம் பக்கமாக ஒலிக்கும்.
இந்தத் தொடரின் முதல் பகுதியில் அனைத்து அமைப்புகளின் கூட்டம் நடந்த போது அதில் “முழக்கங்கள் எழுப்பும் உரிமை” குறித்து நடந்த விவாதம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த விவாதத்தின் போது மாவோயிஸ்ட் சார்புள்ள அமைப்பைச் சேர்ந்த ஒரு மாணவர்,
”தோழர், ‘நக்சல்பாரி லால் சலாம்’ நமக்கு எப்படி புரட்சிகரமான முழக்கமோ அதே போல் தான் பாரத் மாதா கி ஜெய் ஏ.பி.வி.பிக்கும், அல்லாஹு அக்பர் முசுலீம்களுக்கும் புரட்சிகரமான முழக்கங்கள். எனவே, அவரவர் அவரவரது முழக்கங்களைச் சொல்லிக் கொள்ளட்டுமே?” என்று மிக சீரியசாக வாதிட்டுக் கொண்டிருந்தார்.
இப்படி ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஒன்றுக்கும் மேற்பட்ட “சரியானவைகள்” இருக்க முடியும் என்பதும், இருக்க வேண்டும் என்பதும் ஜே.என்.யு வளாகத்தின் அரசியல் சூழல் அம்மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளது. இதன்படி ஏ.பி.வி.பியின் அரசியல் மக்கள் விரோதமானது எனவே எதிர்க்கப்பட்டு வேரோடு கிள்ளியெறியப்பட வேண்டியது என்கிற கண்ணோட்டத்திற்கு பதில் “இன்னுமொரு” மாற்று தத்துவம் என்கிற அளவில் சம உரிமை கொடுக்கப்படுகிறது.
ஜே.என்.யு மாணவர்களுக்குத் தெரிந்த கம்யூனிசம் கடுமையான வாழ்க்கைச் சூழலின் பின்னணியில், ஒரு போராட்டக் களத்தில் அறிமுகமான ஒன்றல்ல. அல்லது மக்களின் துன்ப துயரங்களால் சலனமுற்ற, சமூகத்தின் விடுதலைக்கான தத்துவ தேடலின் விடையும் அல்ல. அது ஒரு படிப்பறையில், ஒரு அறிவியல் பூர்வமான விவாதம் நிலவும் சூழலில் அறிமுகமானது. முற்போக்கு அறிவுஜீவிகள் வலிந்து காட்டிக் கொள்ளும் கம்யூனிச தோற்றப்பாடும் (Pretentions) ஜே.என்.யு வளாகத்தில் மாணவர்களின் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும் கம்யூனிச அரசியலுக்கும் இடையிலான தூரம் மிகவும் குறைவு.
புதிய தாராளவாதக் கொள்கைகளின் வெறிபிடித்த ஆதரவாளர்களும் மோடியை முன்மொழிந்தவர்களுமான ஆளும் வர்க்க அறிவுத்துறையினரே கூட கோமாதா, பாரதமாதா, விநாயகனின் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அபத்தங்கள் எல்லை மீறிச் செல்வது கண்டு நெளிகிறார்கள். அவ்வாறிருக்கையில் முற்போக்கு அறிவுஜீவிகள் எனப்படுவோர், (முற்போக்கின் விழுக்காடு எவ்வளவு குறைவாக இருந்தாலும்) இதனை எதிர்ப்பதில் வியப்பில்லை. ஏனென்றால், சங்க பரிவாரம் அறிவுஜீவிகளின் அடிப்படையான அடையாளத்தையே குலைத்துப் போட்டு விடும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றது.
இன்னொரு புறம் இடதுசாரி புரட்சிகர அரசியல் செயலுக்கு அழைக்கின்றது. துன்ப துயரமான வாழ்க்கை நிலைமைகளை எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதை விடுத்து உள்ளே இறங்கித் தீர்வுக்காக போராட வலியுறுத்துகின்றது. இருக்கும் நிலையில் இருந்து காலச் சக்கரத்தை முன்னோக்கிச் சுழற்றும் அசுரத்தனமான உடல் மற்றும் மனோ உழைப்பைக் கோருகின்றது. உடன் விளைவாக ஒட்டுமொத்தமான அரசுப் பொறியமைவின் விரோதத்தை சம்பாதித்தும் கொடுக்கின்றது.
லிபரல் ஜனநாயகம் இந்த இரண்டு ’அபாயங்களுக்கும்’ மிகப் பாதுகாப்பான தீர்வை வழங்குகின்றது. முன்னே போய் ’அபாயத்தை’ வரவழைத்துக் கொள்ள வேண்டியதுமில்லை, பின்னே போய் அசிங்கப்பட வேண்டியதுமில்லை. நிலவுகின்ற அமைப்பு வழங்கியுள்ள வசதிகளை துய்த்துக் கொண்டே முற்போக்கு பேசிக் கொள்ளலாம். சோசலிசம் பேசலாம். கம்யூனிசம் பேசலாம். எல்லாம் பேச்சு பேச்சாக இருக்கும் வரைதான். அதைத்தாண்ட நேரும்போதுதான் பிரச்சினையே.
எம்மிடம் பேசிய விஷ்மய், ஜே.என்.யு வளாகத்திற்குள் காவிக் குரங்குகள் புகுந்து அலப்பறையைக் கூட்டிய பின் ஏற்பட்ட மாற்றமாக ஒன்றைக் குறிப்பிட்டார். அதுவரை இடதுசாரி மாணவர் சங்கங்கள் ஒழுங்கு செய்த உரையாடல் நிகழ்வுகளுக்கு சிலபத்து பேர்கள் வந்து கொண்டிருந்த நிலை மாறி சில ஆயிரங்களில் மாணவர்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள் என்றார். அதே போல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்களும் அதுவரை அரசியலற்ற போக்கை கடைப்பிடித்து வந்த மாணவர்களும் இடதுசாரி அமைப்புகளின் கூட்டங்களில் அதிகம் தென்படத் துவங்கியுள்ளனர் என்றார்.
அதே போல் சுயநிர்ணய உரிமை, காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டங்கள் மற்றும் பிப்ரவரி 9ம் தேதியன்று எழுப்பப்பட்டதாக சொல்லப்படும் முழக்கங்கள் குறித்த கேள்விகளுக்கு சி.பி.எம், சி.பி.ஐ மாணவர் சங்கங்களைச் சேர்ந்த முன்னணியாளர்கள் மட்டுமின்றி சி.பி.எம் (எம்.எல் – விடுதலை) கட்சியைச் சேர்ந்த AISA அமைப்பின் முன்னணியாளர்களும் ஒரே விதமாக பதிலளித்தனர். அதாவது, இந்த விவகாரங்களில் தமது நிலைப்பாடு தங்களது கட்சியின் நிலைப்பாட்டுடன் ஒத்தது என்றனர். எனினும், தமது நிலைப்பாட்டுக்கு மாறான முழக்கங்களை (காஷ்மீர் விடுதலையை ஆதரித்து) எவரேனும் எழுப்பினால் அப்படி எழுப்புவதற்கான உரிமையை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
AISF அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் “தோழர் நக்சல்பாரி லால் சலாம் என்று முழக்கமிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றார். கூடவே, பாரத் மாதா கீ ஜெய் என்கிற முழக்கத்தை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அதுவும் இருக்கட்டும் இதுவும் இருக்கட்டும் என்கிற கூட்டுக்கலவையான அரசியலே ஜே.என்.யு வளாகத்தில் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை செல்வாக்கோடு இருந்தது.
லிபரல் ஜனநாயகம் வழங்கியிருந்த இந்த ‘பாதுகாப்பை’ பிப்ரவரி ஒன்பதாம் தேதியோடு காலாவதியாக்கி இந்திய சமூகத்திற்கு மிகப்பெரிய “வரலாற்று சேவை”யாற்றி இருக்கிறார் திருவாளர் மோடி. இதற்கு மேல் ஒவ்வொருவரும் இந்தப்பக்கமா, அந்தப்பக்கமாக என்று தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தை திணித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
நீங்கள் தேசபக்தரெனில் பாரத் மாதாகி ஜெய் சொல்லுங்கள், சிரீ சிரீ நடத்தும் ஆன்மீக குத்தாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள், அதானிக்கு சல்லிசாக அள்ளி வழங்கப்படும் வளங்கள் நாட்டின் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று உரக்கச் சொல்லுங்கள், கவுச்சி தின்னாதிருங்கள், கவுச்சி தின்பவர்களை பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லுங்கள், வேதகாலத்திலேயே வானத்தில் ரிவர்ஸ் கியர் போடும் விமானம் இருந்ததை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்ளுங்கள், எப்படியும் மீட்கப்பட்ட கருப்புப் பணத்தில் தலைக்கு பதினைந்து லட்சம் கிடைக்கும் என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள், மோடி பிரதமரானபின் ஒரு முறை கூட பாகிஸ்தான் எல்லை மீறி வந்து தாக்கவில்லை என்று நம்புங்கள். முருகனின் பன்னிரு கைகளும் யானைமுகத்தானும் புராண பாரதத்தின் பிளாஸ்டிக் சர்ஜரி அதிசயங்கள், சஞ்சையன் திருதிராஷ்டிரனுக்கு மகாபாரத போர்க்கள காட்சிகளை சாடிலைட் தொலைக்காட்சியில் பார்த்து நேரடி வர்ணனை செய்திருக்கிறான், நாட்டை ஆள்வதற்கு அறிவு தேவையில்லை 56 இன்ச் மார்பு தான் தேவை, செல்பி எடுத்துக் கொண்டால் பெண் சிசுக் கொலைகள் தடுக்கப்படும், ஸ்வச்ச பாரத் வரி கட்டிய பின் நாடெங்கும் சாம்பிராணி மணக்கிறது…. என்று நம்புங்கள்.
இதில் ஏதாவது ஒன்றைக் குறித்து சந்தேகம் தெரிவித்தீர்கள் என்றாலும் நீங்கள் தேச துரோகிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பல் அங்கீகரிக்கவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது?
ஜே.என்.யு வளாகத்தை தங்களுடைய மிக மோசமான எதிரிகளாக உருமாற்றிக்கொண்ட பெருமை ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கே உரித்தானது. மற்றொருபுறம், ஜே.என்.யு மாணவர்கள் இந்த வரலாற்றுத் தருணம் வழங்கியுள்ள பொன்னான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாசிசத்துடனான முரண்பாடு தீர்மானகரமான ஒரு கட்டத்திற்குள் நுழைந்து வருகிறது. அப்போது, ”முழக்கங்கள் எழுப்பும் உரிமையை ஆதரிப்பது” என்ற பெயரில் பாசிசத்தின் கருத்துரிமையை ஆதரிப்பதோ, ”எங்களது பாரத மாதா சோனி சோரி”, “எங்களது தேசியத்தில் பெரியாரும் அம்பேத்கரும் இருக்கிறார்கள்” , ”நாங்களும் இறையான்மையையும், அரசியல் சாசனத்தையும் உயர்த்திப் பிடிப்பவர்கள் தான்” என்றெல்லாம் சொல்லி பாசிசத்துடனான மோதலை சாமர்த்தியமாகத் தவிர்ப்பதோ இனி இயலாது. பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்று கொண்டு பாசிசத்தை எதிர் கொள்ள முடியாது.
லிபரல் ஜனநாயக கருத்துரிமை மயக்கங்களிலிருந்து விடுபட்டு, பௌதிக சக்தியாக நம் முன்னே எழுந்து நிற்கும் பாசிசத்துக்கு எதிராக போராடும் மக்களோடு நேரடியாக கைகோர்க்கும் நேரம் வந்து விட்டதை ஜே.என்.யு உணரத் துவங்கியுள்ளது. லிபரல் ஜனநாயகவாதிகளை உண்மைக்கு நெருக்கமாக அழைத்து வந்ததற்குரிய பெருமையை நாம் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கே வழங்க வேண்டியிருக்கிறது.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்பு ஊர்வலம். (கோப்புப் படம்)
ஆர்.எஸ்.எஸ். கும்பல் தனக்கு எதிராகச் சமரசமின்றிப் போராடுபவர்களைக் கொன்றொழிக்கிறது. ராம்விலாஸ் பஸ்வான், உதித் ராஜ் போன்ற தாழ்த்தப்பட்ட பிழைப்புவாதிகளை விலைபேசித் தன்வயப்படுத்திக் கொள்கிறது. மூன்றாவதாக, தனது ஜென்ம விரோதிகளை அணைத்துக் கொல்லவும் முயற்சிக்கிறது.
தீண்டாமைக் கொடுமைக்கு மூல முதற்காரணம் பார்ப்பன இந்துமதம்தான் என்பதை நிலைநாட்டி, நான் இந்துவாகச் சாக மாட்டேன் என்று கூறி, புத்த மதத்துக்கு மாறியவர் அம்பேத்கர். இந்து மதம் குறித்தும், ராமன் – கிருஷ்ணன் முதலான கடவுளர்கள் குறித்தும் அம்பேத்கர் செய்திருக்கும் விமரிசனங்களில் கால்பங்கைப் பேசினால்கூட, அவ்வாறு பேசுபவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் இந்து மதவெறிக் கும்பல், இன்னொரு பக்கம் அம்பேத்கரைத் துதிபாடுகிறது.
இந்து மதத்தின் தீமைகளைக் களைந்து, அதனை எப்படியாவது சீர்திருத்தவேண்டும் என்பதற்காகத்தான் அம்பேத்கர் கடுமையாக விமரிசித்தார். ஆர்.எஸ்.எஸ்.-இன் நோக்கமும் தீண்டாமை முதலான கொடுமைகளைக் களைவதுதான். அம்பேத்கருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் நோக்கம் ஒன்றுதான். கருத்தைச் சொல்லும் முறையில்தான் வேறுபாடு என்ற பொய்யைப் பரப்புகிறது, இந்து மதவெறிக் கும்பல்.
இதனை உண்மையாக்குவதற்காக அம்பேத்கரின் கூற்றுகளைத் திரித்துப் பிரச்சாரம் செய்கிறது. அம்பேத்கர் தங்கள் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்ததைப் போன்ற பொய்க்கதைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.
1980-களில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முறையாக பெரும் கலகம் ஒன்றை நடத்திய மாநிலம் குஜராத். அதனைத் தலைமை தாங்கி நடத்தியது ஆர்.எஸ்.எஸ். அன்று அதன் முன்னணி செயல்வீரராக இருந்த மோடி, அம்பேத்கர் மட்டும் இல்லையென்றால், நான் இந்நேரம் டீ ஆற்றிக் கொண்டிருப்பேன் என்று சென்டிமென்ட் வசனம் பேசுகிறார். அம்பேத் கருக்குச் சிலை வைக்கிறார்கள், விழா எடுக்கிறார்கள். கடைசியாக, இந்துத்துவ அம்பேத்கர் என்ற தலைப்பில் ஒரு நூலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பொய்களை மறுப்பதற்கு உண்மை விவரங்களை அறிந்திருப்பது அவசியம். மனித உரிமை, மதச் சார்பின்மை செயற்பாட்டாளரும் மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி அவர்கள் அம்பேத்கரின் சித்தாந்தம் – மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள இக்கட்டுரை அதற்குப் பயன்படும். கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கத்தை இங்கே தந்திருக்கிறோம்.
– ஆசிரியர் குழு
பரவலான மக்களின் நம்பகத்தன்மையைப் பெறும் பொருட்டு ஆர்.எஸ்.எஸ். பலவிதமான சரக்குகளை அவிழ்த்து விடுகிறது. காந்தி, ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டால் ஈர்க்கப்பட்டார் என்று கூறியது. சமீபமாக, அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்ததில் நம்பிக்கை வைத்திருந்தார் எனப் புளுகியிருக்கிறார் மோகன் பகவத்.
இந்து மதவெறி பயங்கரவாதத்தைத் தனது எழுத்துக்களின் மூலம் அம்பலப்படுத்திவரும் டாக்டர் ராம் புனியானி.
அம்பேத்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தங்கள் நேரெதிரானவை. அம்பேத்கர், இந்திய தேசியம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தமோ பார்ப்பனியத்தன்மை வாய்ந்த இந்துமதக் கருதுகோள், இந்து ராஷ்டிரம் என்ற இரு தூண்கள் மீது நிற்கிறது.
இந்து மதத்தின் சித்தாந்தம் பற்றிய அம்பேத்கரின் கருத்து என்ன? அவர் இந்து மதத்தை பார்ப்பனிய இறையியல் என் கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடும் துன்பத்தை அளிக்கின்ற சாதி அமைப்புதான் தற்போது நிலவும் இந்துமதம் என்பதன் சாரம் என்கிறார், அவர்.
ஆரம்ப காலத்தில், இந்து மதத்தினுள் இருந்தபடியே சாதிய அமைப்பின் தளைகளை உடைக்க அவர் முயற்சி செய்தார். சவதார் தலாப் இயக்கம் (தலித்துகள் பொதுக் குடி நீரை உபயோகப் படுத்தும் உரிமை), கலராம் மந்திர் போராட்டம் (கோயில் நுழைவுப் போராட்டம்) போன்றவற்றை முன்னெடுத்தார். பார்ப்பனிய, சாதிய, பாலின படிநிலை ஆதிக்கத்தின் அடையாளமான மனு ஸ்மிருதியை எரித்தார். இந்துமதம், பார்ப்பனியத்தின் மீதான அவரது விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. அதன் பயனாக, வெகு சீக்கிரத்தில் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதென்ற முடிவை எடுத்தார். இந்து மதத்தின் புதிர்கள் என்ற நூலில், (மகாராஷ்டிர அரசால் 1987-இல் வெளி யிடப்பட்டது) இந்து மதத்தைப் பற்றிய அவரின் புரிதல்களை, குறிப்பாக அதன் பார்ப்பனியத் தன்மையை விளக்குகிறார். இந்த நூலில் அம்பலப்படுத்தப்படும் நம்பிக்கைகளை நாம் பார்ப்பனிய இறையியல் என்று அழைக்கலாம். இந்து மதம் என்பது காலத்தால் அழியாதது அல்ல என்பதை நான் மக்களுக்குப் புரிய வைக்க விரும்புகிறேன். பார்ப்பனர் களால் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்பது குறித்து சுயமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதும், அவ்வாறு ஏமாற்றுவதற்குப் பார்ப்பனர்கள் பயன்படுத்தும் உத்திகளின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதுமே இந்த நூலை எழுதுவதற்கான இரண்டாவது நோக்கம்.
1935-களில், தான் ஒரு இந்துவாக இறக்கப் போவதில்லை எனப் பகிங்கரமாக அறிவித்த காலத்திலிருந்தே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து விலக ஆரம்பித்திருந்தார். 1936-ல் சீக்கிய மிஷனரி நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார். அக்காலகட்டத்தில் அவர் சீக்கியத்தைத் தழுவும் யோசனையில் இருந்தார். 1936-ல் அம்பேத்கர் சாதி ஒழிப்பு எனும் நூலையும் எழுதி வெளியிட்டார். அது லாகூரில் நடந்த சாதி ஒழிப்பு இயக்க (ஜாத் பத் தோடக் மண்டல்) மாநாட்டில் பேசுவதற்காகத் தயாரிக்கப்பட்ட, ஆனால், பேசுவதற்கு மறுக்கப்பட்ட தலைமையுரையாகும். அதன் கடைசிப் பகுதியில், அம்பேத்கர் இந்து மதத்தை விட்டுவிட இருக்கும் தீர்க்கமான முடிவை வலியுறுத்தியிருப்பார்.
பொதுக் குளம் மற்றும் கிணறுகளில் தாழ்த்தப்பட்டோர் நீர் எடுப்பதை மறுத்த தீண்டாமைக்கு எதிராக 1927-இல் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில், மஹத் எனுமிடத்திலுள்ள சாவ்தார் ஏரியில் குடிநீர் பருகும் போராட்டத்தை அம்பேத்கர் தலைமையேற்று நடத்தியதைச் சித்தரிக்கும் ஓவியம்.
அவர் சொல்கிறார், “நான் முடிவு செய்துவிட்டேன். என்னுடைய மதமாற்றம் என்பது எதைவிடவும் உறுதியானது. எனது மதமாற்றமானது எந்த பொருள் ஆதாயத்துக்குமானது அல்ல. தீண்டத்தகாதவனாக இருப்பதன் காரணமாக, நான் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. எனது மதமாற்றமானது முழுக்க முழுக்க எனது ஆன்மீக நோக்கிலானது. இந்து மதம் எனது மனசாட்சிக்கு உகந்ததாக இல்லை. இது எனது சுயமரியாதைக்கும் ஏற்றதாக இல்லை. எவ்வாறாயினும், உங்களின் (அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தின்) மதமாற்றம் என்பது பொருள் மற்றும் ஆன்மீக ஆதாயத்திற்கானது ஆகும். பொருள் ஆதாயத்திற்காக மதம் மாறுவது குறித்துச் சிலர் பரிகசித்துச் சிரிக்கலாம். அவ்வாறு சிரிப்பவர்களை முழுமுட்டாள்கள் என்று அழைப்பதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” (Ambedkar – Salvation).
ராமன், ஆர்.எஸ்.எஸ். சொல்லிக்கொண்டிருக்கும் கலாச்சார தேசியத்தின் அடையாளமான கடவுளாக இருக்கிறார். கடவுள் ராமனைப் பற்றி அம்பேத்கர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். “சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. தன்னுடைய பேரும் புகழுமே பெரிதென அவன் நினைத்திருக்கிறான். அரசாளும் மன்னன் என்ற முறையில் அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ, அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. மேலும், காட்டிலுள்ள வால்மீகியின் ஆசிரமத்தில் அந்தச் சிறுவர்கள் (லவா, குசா) 12 ஆண்டுகள் வளர்ந்து, வாழ்ந்து வந்தனர். வால்மீகியின் ஆசிரமம் ராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந்தொலைவில் ஒன்றுமில்லை. இந்த 12 ஆண்டுகளில் ஒரு தடவையாவது இந்த உதாரண புருஷனான ராமன், பாசமிக்க தந்தை, சீதை என்னவானாள், அவள் செத்தாளா, பிழைத்தாளா என்பதைப் பற்றி விசாரிக்கக்கூட இல்லை; காட்டுமிராண்டியைக் காட்டிலும் கேவலமாய் நடந்து கொண்ட இந்த இராமனோடு மீண்டும் மனைவியாய் சென்று வாழ்வதைக் காட்டிலும் சாவதே நல்லது என்று சீதை முடிவு செய்திருக்கிறாள்.”
அம்பேத்கரின் கனவான சாதி ஒழிப்பு என்பது இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் நிறைவடையாமலேயேதான் இருக்கிறது. இந்தியாவில் சாதி என்பது ஒரு முக்கியமான அம்சமாக நீடிப்பதற்கு சமூகத்தின் இயங்கும் பல்வேறு காரணிகளும் பாத்திரமாற்றுகின்றன. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்ற கருத்துக்கு மாறாக, ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் பல்வேறு சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் என்பதை வலியுறுத்துகிறது. இதன் பொருட்டு, அவர்கள் சமாஜிக் சமஸ்தா மன்ச் (சமூக நல்லிணக்க மன்றம்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். சமூகப் பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸ்.-ன் அணுகுமுறை அம்பேத்கரின் அணுகுமுறைக்கு நேரெதிரானதாக இருப்பதைக் கவனியுங்கள்.
ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் சித்தாந்தத்திற்கு இதயமாக இருப்பது இந்துத்துவம் அல்லது இந்திய தேசியமாகும். அம்பேத்கர், தனது பாகிஸ்தான் குறித்த கருத்துகள் எனும் நூலில் இப்பிரச்சினை குறித்து ஆழமாக எழுதியுள்ளார். அதில், இந்து தேசம் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தாக்கத்தின் மூலவரான சாவர்க்கர் மற்றும் முசுலீம் தேசியம் எனும் சித்தாந்தத்தின் மூல வரும் பாகிஸ்தானை முன்னிறுத்தியவருமான ஜின்னா ஆகிய இருவரின் கருத்துகளையும் அம்பேத்கர் விசாரணைக்கு உட்படுத்துகிறார்.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். நடத்திய அணிவகுப்பு ஊர்வலம். (கோப்புப் படம்)
இது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு தேசமா, இரு தேசங்களா என்ற பிரச்சினையில் திரு சாவர்க்கரும், திரு ஜின்னாவும் எதிர்நிலையை எடுக்கவில்லை. இரண்டு பேருமே முழுவதுமாக உடன்படுகிறார்கள். உடன்படுவது மட்டுமல்ல, ஒரு முஸ்லிம் தேசம், ஒரு இந்து தேசம் என்று இரண்டு தேசங்கள் இருப்பதாக இருவருமே வலியுறுத்துகிறார்கள். எத்தகைய நிபந்தனைகளின் அடிப்படையில் இரண்டு நாடுகளும் உருவாக்கப்படவேண்டும் என்பதில் மட்டும்தான் இருவரும் வேறுபடுகிறார்கள்.
ஜின்னா, இந்தியாவை பாகிஸ்தான், ஹிந்துஸ்தான் என இரண்டு துண்டுகளாகப் போட்டு, முசுலீம் தேசம் பாகிஸ்தானையும், இந்து தேசம் ஹிந்துஸ்தானையும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். சாவர்க்கரும், இந்தியாவில் இரண்டு தேசங்கள் இருப்பது உண்மைதான் என்று ஏற்றுக்கொண்ட போதிலும், அதை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்கிறார். இரண்டு தேசத்தவரும் ஒரே நாட்டில், ஒரே அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டு தலில் வாழலாம். ஆனால், அந்த அரசியலமைப்புச் சட்டமானது இந்து தேசம் தனக்கே உரித்தான மேலாண்மையைக் கொண்டிருக்கும் வகையிலும், முஸ்லிம் தேசம் அதற்குக் கீழடங்கி ஒத்துழைக்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்பது சாவர்க்கரின் கருத்து. (பாகிஸ்தான் மீதான கருத்துகள், மூன்றாம் பிரிவு, 7-ம் அத்தியாயம்).
ஆனால், அம்பேத்கர் ஒருங்கிணைந்த இந்தியாவை முன்மொழிந்தார். “1920 முதல் 1937 வரையில், மாண்டேக் செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் கீழ் இந்தியாவின் பெரும்பான்மையான பிராந்தியங்களில் இசுலாமியர்களும் பார்ப்பனரல்லாதவர்களும் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஒரே குழுவாக ஒன்றுபட்டு சீர்திருத்தத்துக்காகப் பணியாற்றவில்லையா? இந்து, முஸ்லிம் சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற் படுத்தவும் இந்து ராச்சியம் என்ற அபாயத்தை ஒழிக்கவுமான பயனுள்ள வழி இதில் இருக்கிறது. திரு ஜின்னா எளிதாக இந்தப் பாதைக்கு வந்திருக்கலாம். இதில் வெற்றி பெறுவதென்பது அவருக்கு கடினமாக இருந்திருக்காது.” (பாகிஸ்தான் மீதான கருத்துகள், பக்.359 )
இந்து ராஜ்ஜியம் என்ற கருத்தை அம்பேத்கர் முழுமையாக எதிர்த்தார். பாகிஸ்தான் அவசியமா? என்ற அத்தியாயத்தில் அவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இந்து ராச்சியம் என்பது வரும் பட்சத்தில், அது இந்நாட்டிற்கு ஆகப்பெரும் பேரழிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்துக்கள் என்னதான் சொன்னாலும், இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலாகத்தான் இருக்கும். இதன் காரணமாக அது ஜனநாயகத்துடன் பொருந்தி வரவே முடியாது. இந்து ராஜ்ஜியத்தை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்.” (http://ecumene.org/IIS/csss101.htm)
______________________________________________ புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________________________