privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்மாணவர்களின் பிணை மறுக்கும் நீதிமன்றத்தை கண்டிக்கும் வழக்கறிஞர்கள்

மாணவர்களின் பிணை மறுக்கும் நீதிமன்றத்தை கண்டிக்கும் வழக்கறிஞர்கள்

-

டாஸ்மாக்கை மூடு எனப் போராடிய மாணவர்களை உடனடியாக எந்த நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம் 02-09-2015 அன்று நடைபெற்றது!

posterதமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாவட்டநீதிமன்றங்கள் பிணை மறுத்தன. அதைத் தொடந்து உயர்நீதிமன்றத்தில் பிணை போட்டபோது நீதிபதி வைத்தியநாதன் “மேலப்பாளையூர் விவசாயிகள் ரூ 10,000 முன்பணம் (Deposit) கட்ட வேண்டும் என்றும் விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் ரூ 50,000 கட்ட வேண்டும் என்றும் இந்தத் தொகையை புகார்தாரரான டாஸ்மாக் நிறுவனத்திடம் இப்போதே கொடுத்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டார். இது குற்றவியல் நீதி வழக்கு நெறிகளுக்கே எதிரானது.

மாணவர்களை விடுதலை செய்யக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
மாணவர்களை விடுதலை செய்யக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவனுக்கு 5 நாட்களில் எந்த நிபந்தனையும் இன்றி பிணை வழங்கும் நீதிமன்றம் சாராயத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு 30 நாட்களாகியும் பிணை வழங்காததையும், அபராதம் விதித்ததையும் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் சங்கத்தின் சார்பாக

  1. தமிழகம் தழுவிய மாணவர்களின் இந்த போராட்டம் என்பது நியாயமானது மற்றும் பாராட்டுக்குரியது. எனவே சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் இந்த போராட்டத்தை ஆதரிப்பதோடு அவர்களோடு துணைநிற்கும்.
  1. மாணவர்களை விடுதலை செய்யக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
    மாணவர்களை விடுதலை செய்யக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழகம் முழுவதும் சிறையில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

என தீர்மானம் இயற்றினர்.

இந்த தீர்மானத்தை தொடர்ந்து 02-09-2015 அன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாசலில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர் சு. மில்ட்டன் தலைமை தாங்கினார். பெருத்திரளான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத்
மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத்

முதலில் கண்டன உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத் “டாஸ்மாக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், மாணவர்களுமே. ஒரு நியாயமான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை 30 நாட்களுக்கு மேலும் சிறையில் வைத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. உண்மையில் இந்த மாணவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள். நீதிமன்றம் உடனடியாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். மக்களுக்கு எதிரான இந்த பிரச்சனையில் கட்டாயம் அனைவரும் போராட வேண்டும். வழக்குரைஞர்களாகிய நாம் மக்களோடு இணைந்து போராட வேண்டும். இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இளம் வழக்குரைஞர்களை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டாஸ்மாக்கை மூடும் வரை தொடந்து போராட வேண்டும்” என தனது கண்டன உரையை முடித்தார்.

அடுத்ததாக பேசிய மூத்த வழக்குரைஞரரும் Lawyers for Democracy என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு.விஜயகுமார் அவர்கள்

 மூத்த வழக்குரைஞரரும் Lawyers for Democracy என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு.விஜயகுமார்
மூத்த வழக்குரைஞரரும் Lawyers for Democracy என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு.விஜயகுமார்

“மது அது குடியை கெடுக்கக் கூடிய மாபெரும் போதைப் பொருள் என்பதை இன்றைக்கு தமிழம் முழுவதும் நடக்கும் போராட்டங்கள் மூலம் அனைவருக்கும் தெரியும். இது ஒரு மாபெரும் இயக்கமாக இன்று தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகள் தொட்டு மாணவர்கள், பெண்கள் என அனைவரும் சுயமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்திற்கு எதிரான அடக்குமுறை ஒருபக்கம். காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் ஒரு பக்கம். அந்த சுயமான போராட்டங்களின் தொடர்ச்சியாக நடந்தது தான் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களின் போராட்டம். போராடிய மாணவர்களை கைது செய்த போது தாக்கியிருக்கியிருக்கிறார்கள். காவல் நிலையத்தில் தாக்கியிருக்கிறார்கள். சிறையில் வைத்து தாக்கியிருக்கிறார்கள். இதை மாவட்ட நீதிபதியும் உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார்.

 மூத்த வழக்குரைஞரரும் Lawyers for Democracy என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு.விஜயகுமார்இந்த அறிக்கை வந்தவுடனேயே அரசு விழித்துக்கொள்ள வேண்டாமா? உடனடியாக தாக்கிய போலீசு மீதும், சிறை அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்து ஒரு சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து அவர்களை தண்டிக்க வேண்டாமா? அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இந்த பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டாமா? அவர்களை உடனே பிணையில் விடுதலை செய்ய வேண்டாமா? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் முன்னால் இருக்கிறது. இந்த அறிக்கை டிவிசன் பென்ச் முன்னால் இருக்கும் போது உயர்நீதிமன்ற டிவிசன் பென்ச்க்கு ஒரு கடமை இருக்கிறது.

டாஸ்மாக்கை மூடு - உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்மனித உரிமை மீறல் என்பது வெளிப்படையாக வந்துவிட்டதற்கு பின்னால் இந்த வழக்கை விசாரிக்கின்ற டிவிசன் பென்ச் இதில் முழுமையாக அக்கறை எடுத்து சுனில் பத்திரா வழக்கில் அன்று கிருஷ்ணய்யர் 80-களிலே போட்ட உத்தரவை பின்பற்ற வேண்டும். உடனடியாக அவர்கள் மீது FIR பதிவு செய்வது, துறைரீதியான நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு அளித்து விடுதலை செய்ய வேண்டும். ஆனால் விடுதலை செய்வது என்பது ஜனநாயகபூர்வமான அலுவலகத்தில் இருந்து சென்ற நீதிபதியிடம் உள்ளது. ஆனால் அவரோ ரூ 50,000 அபராதம் விதித்ததாக தெரிகிறது. ஆனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் போது ஜாமின் மறுப்பது என்பது கூடாது. இது மக்களுக்கான போராட்டம் என்பதை நீதித்துறையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் மில்டன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர் மில்டன்

நீதித்துறை என்பது சமூகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. நீதித்துறை என்பது நாட்டிலே ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய துறை. மக்களுடைய அடிப்படை உரிமைகளை காப்பாற்ற வேண்டிய துறை. இதனை கணக்கிலே கொண்டு தமிழகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நிபந்தனையற்ற ஜாமின் அளிக்க வேண்டும். போராடியவர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள், மாணவர்கள், ஏழை, எளியோர். எந்தப் போராட்டத்திலும் பணம் படைத்தவர்கள் உள்ளே செல்வதில்லை. எனவே இந்த நீதிமன்றம் இந்தப் போராட்டத்தை கணக்கில் கொண்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக வைக்கிறோம்.

இரண்டாவது கோரிக்கை இப்போது மாவட்ட நீதிபதியின் அறிக்கை நம் கையில் இருக்கிறது. எனவே உடனடியாக FIR பதிவு செய்து உத்தரவிட்டு CBCID IG தலைமையில் விசாரணை நடத்தி மனித உரிமையை மீறிய G7 போலீசு அதிகாரிகளையும், சிறையில் தாக்கிய சிறை அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும், அவர்கள் மீது உடனடியாக துறைரீதியான விசாரணை செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். இந்தப் போராட்டம் என்பது மறுபடியும் மறுபடியும் வெடிக்கும். தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்” என்பதை தமிழக அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக தெரிவித்து அவர் உரையை முடித்தார்.

சென்னை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் வழக்குரைஞர் அறிவழகன்
சென்னை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் வழக்குரைஞர் அறிவழகன்

அவரை தொடர்ந்து சென்னை வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. அறிவழகன் தனது உரையில் “டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் போலீசால் கைது செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வன்முறையை அப்போதே சங்கத்தின் சார்பாக கண்டித்தோம். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் மாணவர்கள், இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கைது செய்து 30 நாட்களுக்கு மேலாக மாணவர்கள் சிறைபடுத்தப்பட்டிருப்பது என்பது கொடூரமான செயல். நேற்றைக்கு கூட்டப்பட்ட சங்க கூட்டத்திலே மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்ததோடு உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இங்கு வலியுறுத்துகிறேன்” என்று அவர் உரையை முடித்தார்.

பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் நளினி
பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் நளினி

அடுத்ததாக பேசிய பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் நளினி அவர்கள் தனது உரையில் ”இது வழக்குரைஞர்கள் கோரிக்கை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த தமிழக மக்களின் கோரிக்கை, ஆனால் அரசு ஏன் இவ்வளவு மெத்தனமாக நடந்து கொள்கிறது என தெரியவில்லை. டாஸ்மாக்கினால் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் தான் இதனால் பாதிக்கப்பட கூடியவர்களாக உள்ளனர். சாப்பாட்டிற்கு காசில்லை என்றால் கூட குடிப்பதற்கு பணத்தை செலவழிக்கிறார்கள். இதற்காக போராடிய மாணவர்களை தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூட வேண்டும்” என கூறி தனது உரையை முடித்தார்.

முழக்கத் தட்டிகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பெருந்திரளாக வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை