“உலக நாடுகள் அனைத்தும் இராணுவத்திற்காக செலவிடும் மொத்த தொகையில் பாதிக்கு மேல் தனது பங்காக செலவிடும் அளவுக்கு தன்னை அமெரிக்கா வளர்த்துக் கொண்டது எப்படி?”
“ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் விற்பனை பொருளாக்கப்பட்டதும், அவர்களது கட்டாய உழைப்பும், அவர்களது துயரமும்தான் அமெரிக்காவின் வல்லாண்மைக்கும் வளத்துக்கும் காரணம். இந்த உண்மையை கேட்பது பலருக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும் அதுதான் உண்மை.”
கார்னல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராபர்ட் பர்ஷோச்சினி அமெரிக்க வல்லரசின் இராணுவ வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தும் தனது பதிவை மேற்கண்ட கேள்வி பதிலுடன் தொடங்குகிறார்.
அமெரிக்காவின் மொத்த இராணுவ செலவீனத்தை ($61,000 கோடி) இரண்டாக பிரித்தாலும் கூட, அதில் ஒரு பகுதி மட்டுமே (அதாவது $30,500 கோடி), உலக நாடுகளில் சீனா ($21,600 கோடி) மற்றும் ரசியா ($8,400 கோடி) அல்லது சவுதி அரேபியாவின் ($8,100 கோடி) ஒட்டு மொத்த இராணுவ செலவீன தொகைக்கு ஈடாகிறது. இதில் சவுதி அரேபியாவின் இராணுவச் செலவுகள் அமெரிக்க ஆதிக்கத்தின் நீட்சிதான் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இதைத்தாண்டி ஐரோப்பிய வல்லாதிக்கங்களான ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி தத்தமது இராணுவ ஆதிக்கத்துக்கு முறையே $4,600 கோடி, $6,000 கோடி, $6,200 கோடி, $3,100 கோடி செலவிடுகின்றன.
வடகொரியாவின் இராணுவ சர்வாதிகாரம் என்று ஊளைச்சவுண்டு விடும் ஊடக பயங்கரவாதிகளுக்கு மத்தியில் அதன் இராணுவ செலவீனம் உலகவரைபடத்தில் தேடிக்கண்டுபிடிக்க இயலாத வண்ணம் திருஷ்டி பொட்டு அளவில் இருக்கிறது. அதற்கு எதிராக நிறுத்தப்படும் ‘ஜனநாயக’ தென்கொரியா தனது இராணுவத்திற்காக ஆண்டுக்கு $3,600 கோடி செலவிடுகிறது.
அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு அடை கொடுக்கும் இலக்கியவாதி.
ஈரானின் இராணுவ செலவீனமோ உலக வரைபடத்தில் குறிப்பிட இயலாத அளவிற்கு மிக மிகச் சிறியதாக உள்ளது. அதாவது 2009 கணக்கின் படி $1,000 கோடி. ஆனால் இவர்கள் தான் ஆயுதங்களை குவித்து உலகை மிரட்டுவதாக $61,000 கோடி செலவு செய்யும் அமெரிக்கா சீன் போட்டது.
போகிற போக்கில் இன்னொரு குண்டையும் போட்டுத்தாக்குகிறார் ராபர்ட் பர்ஷோச்சினி. அதாவது அமெரிக்கா லாவோசில் போட்ட வெடிக்காத குண்டுகளை அகற்றுவதற்கு $1,600 கோடி தேவைப்படுகின்றது. இந்தக் குண்டுகளை அப்புறப்படுத்த முடியாததால் ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக, குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். ஆனால் அமெரிக்கா இன்னமும் லாவோசிற்கு $1,600 கோடி தொகையை வழங்க மறுக்கிறது.
அமெரிக்க வல்லரசின் ரகசியம் இது!
பின் குறிப்பு:
இதை வெண்முரசு வேந்தர் ஜெயமோகனிற்கு சமர்ப்பிக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி போன்ற காமடி பீஸ் அரசர்களின் புகழ்பாடி உண்டி வளர்க்கும் கவிராயர்கள் இல்லாமல் இலக்கியம் இல்லை. அதுவே மோடி, ஹிட்லர், அமெரிக்கா என்றால் இலக்கிய ஆளுமைகள் சிலிர்த்து எழும்; அறம், இலட்சியவாதம், மரபு, வரலாறு என்று கண்டதை உமிழும். அதாவது வேதக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதையே இவர்கள் உள்ளொளி தத்துவமாக இழுத்து விடுவார்கள்.
அர்ஜுன் சம்பத் எனும் கைக்கூலியுடன் அமெரிக்காவில் மேடையேறியது குறித்து கொஞ்சம் வெட்கப்பட்டிருந்தார், ஜெயமோகன். அதற்கே அவரது அமெரிக்க என்.ஆர்.ஐ அம்பிகள் சிலிர்த்து எழுந்து அர்ஜுன் சம்பத் மற்றும் அவரை மேடையேற்றிய தமிழ் பெயரில் இருக்கும் இந்துமதவெறி சங்கத்துக்காக வாதாடினார்கள். உடனே தான் பட்டது வெட்கமே அன்றி, கோபமல்ல என்று மற்றுமொரு இழுப்பை விட்டிருந்தார் ஜெயமோகன். குசுக்கள் கூட சூறாவளி போல சித்தரித்துக் கொள்ளும் இக்காட்சிகளை இதுவரை வரலாறு கண்டதில்லை.
இப்படி பச்சையாக பாசிசத்தை ஆரத்தழுவி வெண்முரசு என்று மச்சகந்தியை பராசரன் சீரழித்த கதையை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்திலும், தான் அமெரிக்க டூர் போனதை முன்னிட்டு ‘அமெரிக்க இலட்சியவாதம்’ எனும் அடையை இலக்கிய உலகிற்கு நல்கியிருந்தார்.
“அது என்ன சார் அமெரிக்க இலட்சிய வாதம்” என்று ஒரு வாசகர் அப்புராணியாய் கேட்கப் போக, கேட்பது ஒருவேளை இடதுசாரியாக இருக்குமோ என்ற ஐயத்தில் கம்யுனிஸ்டுகளை விளாசியிருந்தார். அதாவது ‘கம்யுனிஸ்டுகள் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று சொல்லி பாட்டாளி வர்க்க சவுண்டு விடுகிறார்கள். இந்தக் கூச்சலுக்கு மத்தியில் உனக்கெல்லாம் அமெரிக்க இலட்சியவாதம் குறித்து எதாவது தெரியுமா’ என்ற தொனியில் விளக்கியிருந்தார். அமெரிக்காவை எதிர்க்கும் கம்யூனிச வகைமாதிரிகளுக்கு போலிக் கம்யூனிஸ்டுகளை ஆதாரமாய் குறிப்பிடுகிறார். அமெரிக்கா ஆராதிப்பதே இத்தகைய போலிக் கம்யூனிசத்தைத்தான். இந்த உண்மை இலக்கிய மேதைக்கு தெரியவில்லை.
ஜெயமோகனின் விளக்கத்திற்கு ராபர்ட் பர்ஷோச்சினி வரைபடத்தோடு பொழிப்புரை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். அமெரிக்காவின் புகழ், வளர்ச்சி, தொழில் நுட்பம், சுத்தம், சுகாதாரம், கவர்ச்சி அனைத்திலும் கோடிக்கணக்கான ஏழைநாட்டு மக்களது ரத்தம் கலந்துள்ளது. சுந்தர ராமசாமி தனது இறுதி காலத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே மறைந்தார். ஜெய மோகன் போலவே அமெரிக்காவையும் கொண்டாடினார். சு.ரா வழியில் எழுத்தும் எண்ணமும் அமெரிக்காவில் செட்டிலாவதையே “அமெரிக்க இலட்சியவாதம்” என்கிறார் ஜெயமோகன். பரவாயில்லை, பாணபத்திர ஒணாண்டிகள் மகிழ்ச்சியடைவதையே சோகமுற்றிருப்பதாக காட்டுவதற்கு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிங்கமுத்துவுக்கு கிடைத்தது அ.தி.மு.க. ஜெயமோகனுக்கு கிடைத்தது அமெரிக்கா!
அடக்குமுறையை ஏவும் அரசு! குதறும் காவல் துறை! துணை நிற்கும் நீதிமன்றம்!
மதுரையில் கண்டன கருத்தரங்கம்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் சார்பாக 22-08-2015 சனிக்கிழமை மாலை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது.
டாஸ்மாக் சாராயக்கடை எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாய்ப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தீயை மூட்டியவர்கள், மேலும் அதை அணையவிடாமல் பாதுகாப்பதில் முன்னணியாய் இருப்பவர்களை இனம் கண்டு ஒடுக்குவதில் பாசிச ஜெயா அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. புறக்காவல் நிலையங்களாக மாறி, காவல்துறை சொல்வதை வழி மொழியும் இழி செயலில் இறங்கி இருக்கும் நீதி மன்றங்கள். இந்த மக்கள் விரோதக் கூட்டணியை அம்பலப்படுத்தவும், இதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், அறிவுத்துறை சார்ந்தவர்கள் கலகக்குரல் எழுப்ப வேண்டும் என்ற நோக்கில் தான் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
கருத்தரங்கத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் குழுவின் அமைப்பாளர் தோழர் மு.திருநாவுக்கரசு தலைமையேற்றார். கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் ப.திருமலைராஜன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தலைமை ஏற்ற வழக்கறிஞர் மு. திருநாவுக்கரசு பேசும்போது, “ டாஸ்மாக் ஒரு நோய். அரசு மக்களுக்கு நோயைத் தருகிறது . இத்தகைய சூழலில் வாழ்வதே அவலம். பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப் போராடுவதே சரியானது. ஓட்டுப் போடுவதற்கு மட்டும்தான் மக்கள் என்று ஓட்டுக்கட்சிகள் கருதுகின்றன. இலவசங்களை மக்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏய்க்கிறார்கள். உழைப்பின் மூலம் வரும் வருமானத்தில் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும். உரிமைக்காகப் போராடுகிறவர்களை அடக்குமுறையைக் கையாண்டு கைது செய்கிறது அரசு. ஒரு ராஜுவைக் கைது செய்வதால் பல ராஜுக்கள் உருவாகிப் போராடும் நிலை ஏற்பட அனைவரும் போராட வேண்டும்” என்றார்.
டாஸ்மாக் நடத்துவது சட்டப்படியானது, எதிர்த்துப் போராடுவது சட்ட விரோதமானதா? – மூத்த வழக்கறிஞர் ப.திருமலை ராஜன்:
”நீதிபதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது வழக்காடிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர் எங்கிருந்து வந்தார், எப்போது வீடு வாங்கினார்? எப்போது கார் வாங்கினார். எந்தெந்த பேங்குகளில் கணக்கு வைத்துள்ளார் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.
நீதித்துறையில் மேலிருந்து கீழ்வரை லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. வன்னியர் ஜாதிக்கு நீதித் துறையில் அதிக ஒதுக்கீடு கேட்டுப் போராட என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். நீதித்துறையில் இரண்டே ஜாதிகள் தான் உள்ளன. ஒன்று யோக்கியர்கள், மற்றொன்று அயோக்கியர்கள். எந்த ஜாதியில் இருந்து வந்தாலும், இந்த இரண்டு ஜாதியில் தான் அடக்கம். இதில் யோக்கியர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அயோக்கியர்கள் சுலபமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றேன்.
நிதி கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மர்க்கண்டேய கட்ஜு சென்னை தலைமை நீதிபதியாக இருந்த போது சில நீதிபதிகள் மீது ஊழல் புகார் கொடுத்தோம். அவர் விசாரணை கமிசன் போட்டார். நாகப்பன், கற்பக விநாயகம், சதாசிவம், ஆகிய மூன்று நீதிபதிகள். அவர்களை நாங்கள் சந்திக்கச் சென்றபோது அவர்கள் மூன்று பேரும் நீதித்துறை அதிகாரி ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தார்கள். அந்த அதிகாரி முதல் தரமான அயோக்கியன். இவர்களிடமிருந்து எப்படி நீதி கிடைக்கும்.?
போரடிப் பெற்ற உரிமைகள் நீர்த்துப் போய் சட்டமே பிற்போக்குத்தனமாக மாறிக்கொண்டு இருக்கிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சட்டப்படி நோட்டீஸ் கொடுத்தால் சட்ட விரோதம் என்கிறார்கள். ரிலையன்ஸ் அம்பானி, அண்ணன் – தம்பி சொத்துப் பிரச்சனைக்கு 3 நாட்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமரசம் பேசுகிறார்கள். எழுத்தாளர் அருந்ததிராய் ”நீதிமன்றங்கள் மக்களுக்காக இல்லை” என்று சொன்னார். சொன்னதை வாபஸ் பெற முடியாது என்றதால் ஒரு நாள் திகார் சிறைக்குள் அவரைத் தள்ளியது நீதிமன்றம். இப்படித்தான் இருக்கிறது நீதிமன்றம்.
தமிழ் நாட்டில் அரசே சாராயக்கடை நடத்துகிறது. டாஸ்மாக்கின் கொடுமைகளைச் சொல்லித் தீராது. அண்மையிலே ஒரு இளம் பெண் குடித்துவிட்டு போதையிலே வீதியில் சுரணையற்று விழுந்து விட்டாள். அவளுடைய கைக்குழந்தை பக்கத்திலே உட்கார்ந்து தாய்ப் பாலுக்காக அழுது அழுது இறந்துவிட்டது. குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டிய தாய் சாராயம் குடித்து சரிந்து விட்டாள். இதற்கு யார் பொறுப்பு ? அரசுதான் பொறுப்பு !
இந்திய தண்டனைச் சட்டம் 324-ன் கடைசிப் பகுதி ’ஒருவரின் உடல்நலத்தைக் கெடுக்கும் ரசாயனப் பொருளும் ஆயுதம்தான்’ என்று வரையறுக்கிறது. டாஸ்மாக் நடத்தும் அரசு சட்டப்படி குற்றவாளி. ஆனால் அதனை எதிர்த்துப் போராடுவது சட்டப்படியானது. அரசியல் சட்டம் 47 மது போன்ற போதைகளை ஒழிக்க வலியுறுத்துகிறது . 750 மிலி ஆல்கஹாலை ஒருவன் ஒரே நேரத்தில் குடித்தால் அவன் செத்துவிடுவான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குடிகாரர்களின் கல்லீரல், மூளை, தசைகள் மெல்ல மெல்லக் கெட்டுவிடும். இதைத் தெரிந்தே அரசு செய்கிறது .
அரசு சாராயம் விற்பதைத் தடை செய்யவேண்டும் என்று வழக்கு போட்டால் அது அரசின் கொள்கை முடிவு என்கிறது நீதிமன்றம். அப்படியானால், உடல் உறுப்புகளை விற்கவும், கஞ்சா, பிரவுன் சுகர், போன்ற போதை வஸ்துக்களையும், விபசாரத்தையும் கூட அனுமதித்து அரசாங்கம் வருமானத்தைப் பெருக்கலாமே. டாஸ்மாக்குக்கு எதிராக உறுதியாகப் போராடிக்கொண்டு இருக்கிறவர்கள் சிறைகளில். வதைபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றும் பொறுப்பு நம் அனைவர் கையிலும் இருக்கிறது.”
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசியது.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்துக்கு எதிராகத் தமிழகம் முழுக்க ஆளும் கட்சி போராட்டம் நடக்கிறது. இளங்கோவன் ஒரு கருத்தைச் சொன்னால் அதை எப்படி எதிர் கொள்வது ? கண்டன அறிக்கை, அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம், அவமதிப்பு வழக்கு இப்படித்தான் எதிர் கொள்ள வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது?
அ.தி.மு.க. காலிகள் காங்கிரஸ் அலுவலகங்களை அடித்து நொறுக்குகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள். முச்சந்தியில் கொடும்பாவி கொளுத்துகிறார்கள். தமிழக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர், இந்நாள் நாடளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். நெல்லை மாநகரப் பெண் மேயர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏறி தற்கொலை செய்வேன் என்று மிரட்டுகிறார். பாதுகாப்புக்கு வரும் போலீசைக் கூட கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றனர் அ.தி.மு.க. காலிகள். இது வன்முறை இல்லையா? சட்ட விரோதமில்லையா?
ஆனால் ஒரு மாதம் முன்பாக டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மாணவர்களை போலீஸ் என்ன செய்தது. இரும்புக் கம்பிகளைக் கொண்டு குறிவைத்துத் தாக்கி மண்டையை உடைத்து இரத்தக் காட்டேரியாகத் தாண்டவமாடியது. மாணவிகளை பூட்ஸ் கால்களால் உதைக்கிறார் சென்னை உதவி கமிஷனர் மோகன்தாஸ். காவல் நிலையத்தில் வைத்தும், உளவுத்துறை போலீஸ் சிறைக்குள் சென்றும் கொடுரமாகத் தாக்குகிறது. பொய் வழக்குகளை அடுக்கடுக்காய்ப் புனைகிறது. யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு அதிகாரம்?
விருத்தாசலம், மேலப்பாளையூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலே டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் மற்றும் ஊர் பொதுமக்களைச் சிறையில் அடைத்து பிணை தர மறுக்கிறது அரசு. மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகளைப் போட்டு குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி செய்கிறது ஜெயாவின் போலீஸ். சாராயத்துக்குப் பாதுகாப்பு, எதிர்த்துப் போராடுபவர்களுக்குச் சிறை வைப்பு. இது என்ன நியாயம்? அவர்கள் ஏற்படுத்திய சட்டத்தை அவர்களே மதிப்பதில்லை.
மக்கள் சாராயம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். குடிக்கத் தண்ணீர், மருத்துவம், கல்வி போன்ற அடிபடைத் தேவைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அரசு சாராயத்தைத் தருகிறது. நீதிமன்றங்களுக்குப் போனால் சாராயம் விற்பது அரசின் முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடாது என்கிறார் தலைமை நீதிபதி. அரசிடம் மக்கள் பல ஆண்டுகளாகக் கெஞ்சுகிறார்கள். ஆனால் அரசு மயிரளவுகூட செவி சாய்க்கவில்லை. உடைப்பதைத் தவிர வேறு என்ன வழி?
அ.தி.மு.க ரௌடிகள் அடித்து நொறுக்கினால் நடவடிக்கை கிடையாது. மற்றவர்கள் போராடினால் காட்டுமிரண்டித்தனமான ஒடுக்குமுறை. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பது உண்மையா?
பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது தருமபுரியில் 3 மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்டனர் . சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்காவை சொல்லக் கூசும் வார்த்தைகளால் வசைமாறிப் பொழிந்த வானரக் கூட்டங்கள் பல நாட்கள் தமிழகத்தையே நிலைகுலையச் செய்தது. இவர்கள் எல்லாம் குவாட்டரும் கோழிப் பிரியாணியும் கூலியும் கொடுத்துக் கூட்டி வரப்பட்டவர்கள் தான். இவை அனைத்தையும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைத் தமிழ் நாடே அறியும்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார் . அங்கே நடந்தது என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு கள்ள ஓட்டு போட்டு வந்ததை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. ஒரு வாக்குச் சாவடியில் மொத்தம் 800 ஓட்டுக்கள்தான். ஆனால் 900 ஓட்டுக்கள் பதிவாகியது எப்படி? தேர்தல் கமிசன் எங்கே இருக்கிறது? என்ன செய்கிறது ? அரசியல் சட்டத்தைக் கழிப்பறைக் காகிதமாகக் கூட மதிப்பதில்லை. ஆனால் மக்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்று சொல்லி மிதிக்கிறது காவல் துறை.
மதுவினால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் ஏழை மக்கள் மடிவதுடன் இப்போது நிமிடம் தோறும் நடைபெற்று வரும் அனைத்துக் குற்றச் செயல்களுக்கும் மதுதான் அடிப்படையாக இருக்கிறது என்று அரசே ஒத்துக்கொள்கிறது. ஆனால் எதிர்த்துப் போராடுகிறவர்களை மண்டையைப் பிளக்கிறது. சிறைக்குள் தள்ளி சித்திரவதை செய்கிறது.
டாஸ்மாக் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தில் தான் நலத்திட்டங்கள் நடக்கின்றது. 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார்கள் சாராயக் கம்பேனி முதலாளிகள், அவர்களின் ஊதுகுழல்கள். இலவசங்கள் எல்லாம் குப்பை; ஒன்றுக்குமே உதவாது என்று சொல்லி மக்கள் வீதியில் வீசுகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணியாக மலிவு விலை உணவகம், மருந்தகம் போன்றவற்றை அரசு நிறைய திறந்து வேலை தரலாமே?
அரசும் காவல்துறையும் இப்படி இருக்கிறது என்றால் ’சுதந்திரமான’ நீதித்துறை எவ்வாறு இருக்கிறது? ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க சென்னை உயர்நீதிமன்றதிற்குள் காவல்துறையினர் சட்டவிரோதமாகப் புகுந்து நீதிபதிகள் முதல் வழக்கறிஞர், பொதுமக்கள் வரை அனைவரையும் அடித்து மண்டையை உடைத்தனர்.அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜரானது செல்லாது என்று சொன்ன உச்ச நீதிமன்றம் குமாரசாமி தீர்ப்புச் சொல்லத் தடை இல்லை என்றது. ஜெயா கும்பலின் ஜாமீன் மனு மீது உடனடி விசாரணை. வழக்கை 6 மதத்திற்குள் முடிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு. குமாரசாமியின் தப்புக் கணக்குத் தீர்ப்பு. 10 சதவீதம் கொள்ளையடிக்கலாம் என்ற அனுமதி. இவையெல்லாம் எந்த சட்டத்தில் உள்ளது. நீதிமன்றங்களை லஞ்ச ஊழல் மற்றும் பார்ப்பனீய மனுதர்ம சாத்திரங்கள்தான் ஆட்சி செய்கின்றன.
இலட்சக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நமது மண்ணின் கனிமங்களைக் கொள்ளையிடும் கூட்டங்களுக்கு ஆதரவாக நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் நிற்கின்றன. கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி ,தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசன், ஆற்று மணல் கொள்ளையர்களிடம் பங்கு வாங்கிக்கொண்டு அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளை ராஜா, சி.எஸ்.கர்ணன், சி.டி.செல்வம் போன்ற நீதிபதிகள் தருகின்றனர். பாதிக்கப்படும் மக்களையும் வழக்காடும் வழக்கறிஞர்களையும் மக்களையும் இந்த நீதியரசர்கள் கேவலப்படுத்துகின்றனர் .
அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றவர்களைச் சட்டவிரோதமாகவும், தார்மீக நெறிமுறைகளை மீறியும், நரித்தனமாகவும் நம்ப வைத்துக் கழுத்தறுத்துக் கொலை செய்வதற்கு நம்முடைய பார்ப்பனீய நீதிமன்றங்கள் அப்பட்டமாக ஒத்துழைத்துள்ளன. இது பார்ப்பனீய இந்து மனசாட்சிக்கு அவர்கள் அளிக்கும் மதிப்பும் மரியாதையும். அரசியல் சட்டத்துக்கு அவமரியாதை. அதே நேரத்தில் 2002-ல் குஜராத்தில் 3000 இசுலாமியர்களைக் கொன்ற மோடியும் ஹரேன் பாண்டியா, செராபுதீன் ஷேக் போன்ற பலரின் கொலைக்குக் காரணமான அமித்ஷாவும் எந்த சட்டத்தாலும் தண்டிக்கப்படவில்லை. இசட் பிளஸ் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்கள். அமித்ஷாவை வழக்கிலிருந்து விடுவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்குக் கேரளா கவர்னர் பதவியைப் பரிசாக வழங்கி இருக்கிறது மோடி அரசு.
குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் கான் என்ற நடிகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம் சட்டத்திற்குப் புறம்பாக அவனுக்கு ஜாமீன் வழங்கி வெளியே விடுகிறது. இதுதான் நீதி மன்றத்தின் லட்சணம்.
அன்னா ஹசாரே, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்கள் லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினால் லஞ்ச ஊழல் முறைகேடுகள் ஒழிந்து நாடு முன்னேறிவிடும் என்று சொல்கிறார்கள். கர்நாடக மாநிலத்திலே லோக் ஆயுக்தா நீதிபதியின், மகன் அரசு அதிகாரிகளை மிரட்டியே 180 கோடிகளை லஞ்சமாகப் பெற்றுள்ளான். எனவே இந்த அமைப்பு முறையே தோற்றுப் போய் மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக மாறிவிட்டது என்பதே உண்மை.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர் தேர்வு, உயர்கல்வித் தேர்வுகளில் நடைபெற்றுள்ள பல்லாயிரம் கோடி ஊழலில் இதுவரை 48பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்புடைய முதலமைச்சர்,அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார்கள் இவற்றையெல்லாம் பார்க்க மறுக்கின்ற விழிகண் குருடாக நீதிமன்றங்கள் இருந்து வருகின்றன.
இந்தச் சூழலில் தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து வருகின்ற மக்களால் என்ன செய்ய முடியும்? அதற்கு மாற்று வழி சொல்லுங்கள்.” இவ்வாறு தோழர் வாஞ்சிநாதன் பேசினார் .
கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் அனைவருக்கும் நன்றி சொல்ல கருத்தரங்கம் நிறைவடைந்தது.
கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ்
தென்மாவட்டங்களில் இருந்தும் மதுரை நீதிமன்றங்களிலிருந்தும் கணிசமான அளவில் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அறிவுதுறையினர், பெண்கள், சிறுவர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கீழைக்காற்று வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
கருத்தரங்கம் நடைபெற்ற செய்தியாளர் அரங்கத்தைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட உளவுத் துறையினர் குவிந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். கிளைச் செயலாளர் அவர்களை அணுகிக் கேட்டபோது ஒருவரும் பதில் சொல்லாமல் முகத்தை மறைத்துக் கொண்டனர். டாஸ்மாக்கை வாழவைப்பதில் அவர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை.
ஜெயா அரசு இரண்டை நம்பிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்று போலீஸ், இரண்டாவது டாஸ்மாக். டாஸ்மாக்கில் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட அம்மாவுக்குக் கிடைக்கும் கமிஷன்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் மறுநாள் 23-8-2015 ஞாயிறன்று மதுரை உளவுத்துறை சப் இன்ஸ்பெக்டர் சுந்தர் என்று பெயர் சொல்லிக்கொண்டு ஒருவர் கிளைச் செயலாளர் வீட்டுக்கு வந்துவிட்டார். மக்கள் அதிகாரம் பற்றி விபரம் வேண்டுமாம் அவருக்கு. ”யாரைக் கேட்டு வீட்டுக்குள் வந்தீர்கள் ? எந்த அனுமதியும் ஆதாரமும் இல்லாமல் ஒருவரின் வீட்டுக்கு வந்து விசாரிப்பதற்கு எந்த சட்டத்தில் இடமிருக்கிறது” என்று கேட்டபோது “சாரி சாரி” என்று மழுப்பி விட்டுச் சென்றுள்ளார் அந்த உளவுத் துறை.
அதோடு நில்லாமல் ம.உ.பா மையத்தின் உறுப்பினர் தோழர் கணேசன் வீட்டுக்கும் உளவுத்துறை சென்றுள்ளது. மக்கள் அதிகாரம் பற்றியும் ஆகஸ்ட் 31 கெடு பற்றியும் அவரிடம் கேட்டுள்ளனர். மேலும் அவரைப் புகைப்படம் எடுத்துள்ளார். உளவுத் துறையினரை புகைப்படம் எடுக்க தோழர் முயன்ற போது இல்லை உங்கள் படத்தை அழித்து விட்டோம் நீங்கள் எங்களை எடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டுச் சென்று இருக்கின்றனர்.
இது போல தோழமை அமைப்புத் தோழர்களிடமும் உளவுத்துறை “மக்கள் அதிகாரம், ஆகஸ்ட் 31 கெடு” பற்றி துழாவிக் கொண்டு இருக்கிறது.
ஜெயாவின் கொத்தடிமைகளான இவர்கள் ஈடுபடும் இவ்விதமான சட்டவிரோத அச்சுறுத்தலுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளை 98653 48163, 9443471003
ஜனநாயகம் என்ற கருதுகோளை உலகிற்கு வழங்கிய கிரேக்கமும், ஜனநாயகத்தின் தொட்டிலாகச் சித்தரிக்கப்பட்ட அதன் தலைநகர் ஏதென்சும் இன்று ஜனநாயகத்தின் கல்லறையாக மாற்றப்பட்டுள்ளன. அனைத்துலக நிதி நிறுவனங்களின் ஆணைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று கிரேக்க நாடே கிளர்ந்தெழுந்து வாக்களித்த போதிலும், அந்த ஜனநாயக முடிவை ஏற்க மறுத்து அந்நாட்டை அடிமையாக்கியுள்ளன ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள். ஏற்கெனவே வேலையின்மை, ஊதியவெட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் கிரேக்க மக்கள், தற்போது ஏகாதிபத்தியங்கள் விதித்துள்ள நிபந்தனைகளால் ஓட்டாண்டிகளாகி கஞ்சித்தொட்டிகளின் முன்னே உணவுக்காக கையேந்தி நிற்கும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கிரீஸ் நாடானது இந்தியா போன்ற பின்தங்கிய ஏழை நாடல்ல. ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கட்டமைப்பிலுள்ள முதலாளித்துவ நாடுதான். இருப்பினும் அந்த நாட்டில் ஏன் இந்த அவலநிலை?
சமூகரீதியான உற்பத்தியும், உற்பத்தியின் பலன்களை தனிநபர் சுவீகரிப்பதுமான முதலாளித்துவக் கட்டமைப்பானது, இந்த அடிப்படையான முரண்பாட்டின் காரணமாக முதலாளித்துவத்தின் நெருக்கடியாக அவ்வப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நெருக்கடியில் சிக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவக் கட்டமைப்பைத் தூக்கிநிறுத்த, மறுகாலனியாதிக்கம் என்ற புதியதொரு காலனியாதிக்க வடிவத்தைக் கொண்டு உலகை மேலாதிக்கம் செய்து கொள்ளையிடுவதை ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கை, இம்மறுகாலனியாதிக்கத்தின் பொருளாதாரக் கொள்கையாகப் பின்பற்றப்படுகிறது. உலகளாவிய அளவில் மூலதனத்தை மையப்படுத்தி ஒன்றுகுவிப்பது, உழைப்பை உச்சபட்சமாகச் சுரண்டுவது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் செல்வாக்கு மண்டலங்களைக் கைப்பற்றிக் கொள்வது, மூலதனத்தையும் வளங்களையும் கைப்பற்றிக் கொண்டு மேலாதிக்கம் செலுத்துவது – என்ற திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய வல்லரசுகள் இந்நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முயன்றன. இதற்காக காட் ஒப்பந்தத்தை திணித்து, உலக வங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தகக் கழகம் முதலானவற்றை ஆயுதங்களாகக் கொண்டு உலகமயமாக்கலைப் பிரம்மாண்ட பரிமாணம் கொண்டதாக மாற்றி, புதிய உலகப் பொருளாதார ஒழுங்கமைவைக் கட்டியமைத்தனர். இந்த உலகமயமாக்கத் திட்டத்துக்குப் பொருத்தமாக அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப திட்டத்தை வகுத்தனர். மேலாதிக்க வல்லரசுகளின் இத்திட்டங்களுக்கு ஏற்ப உலக நாடுகளின் அரசியல் – பொருளாதாரங்கள் மறுவார்ப்பு செயப்பட்டன. இவற்றை ஏற்காத நாடுகளின் அரசுகள் கவிழ்க்கப்பட்டு, விசுவாச அரசுகள் ஏகாதிபத்தியவாதிகளால் நிறுவப்பட்டன.
கிரீஸ் நாட்டின் வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாலும், ஓய்வூதியக் குறைப்பினாலும் வாழ வழியின்றி வங்கி வாசலில் கதறியழும் முதியவர் கியார்கஸ்
ஐரோப்பிய கண்டத்திலுள்ள கிரேக்க நாட்டில் அதன் சுயசார்பு பொருளாதாரத்தை வீழ்த்தி, ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது, யூரோ பொது நாணயமுறையின் கீழ் அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பிணைத்து, மூலதனத்தைத் திரட்டிக் கொண்டு உலகமயமாக்கலை விரிவுபடுத்துவது; ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்க வல்லரசாக உள்ள ஜெர்மனியின் திட்டத்துக்கு ஏற்ப கீரீசை மறுவார்ப்பு செய்வது, இதனை வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்துவது – என்பது ஏகாதிபத்தியவாதிகளின் திட்டமாக இருந்தது. இதற்கான கருவிகளாக “டிராய்கா” எனப்படும் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐ.எம்.எஃப். ஆகிய மும்மூர்த்திகளைக் கொண்டு கிரீசில் மேலாதிக்கம் செலுத்தும் திட்டத்தை ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்தினர். இத்தகைய உலகமயமாக்கம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் ஒருங்கிணைந்து வருவதாகவும், இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்க நாடும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையும், வேலைவாப்பு பெருகும், வாழ்க்கைத்தரம் உயரும், இதுதான் வளர்ச்சிக்கான பாதை என்றும் கதையளந்தனர்.
இருப்பினும், இந்தப் பாதையில் கடந்த 2001 முதலாகப் பயணப்பட்ட போதிலும் கிரேக்கப் பொருளாதாரம் எந்த வளர்ச்சியையும் சாதிக்க முடியாமல் போனதோடு, கடன் சுமை எனும் தீராத நெருக்கடியால் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆதிக்க சாதியினரின் ஊரும் தாழ்த்தப்பட்டோரின் சேரியுமாக கிராமங்கள் ஏற்றத்தாழ்வுடன் பிளவுபட்டுள்ளதைப் போலவே, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வளர்ச்சியடைந்த ஏகாதிபத்தியங்களாகவும், கிரீஸ் போன்ற நாடுகள் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளாகவும் ஏற்றத்தாழ்வாக ஐரோப்பிய ஒன்றியம் பிளவுபட்டுப் போயுள்ளது. இருப்பினும் தாராளமய – உலகமய மறுசீரமைப்புத் திட்டங்களை முழு வீச்சில் நடைமுறைப் படுத்தாததால்தான் இந்த ஏற்றத்தாழ்வும் நெருக்கடிகளும் ஏற்பட்டதாகவும், அவற்றைத் தீர்க்கப் போவதாகக் கூறிக்கொண்டு மனிதவளத்தையும், இயற்கை வளங்களையும் வரைமுறையின்றி ஏகாதிபத்திய வல்லரசுகள் சூறையாடின.
ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்களின் நிபந்தனைகளுக்கு அடங்க மறுத்து கிரேக்க மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.
கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் அதன் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டதுதான். ஏற்கெனவே கிரீசின் அரசியல்வாதிகள் நடத்திய வீட்டுமனை ஊழலும், முதலாளிகள் நடத்திய வரி ஏய்ப்பும் அரசின் கஜானாவைக் காலி செய்து விட்டன. தனது பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள சர்வதேச நிதிச் சந்தையில் கடன் பெறுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு கிரீஸ் விழுந்தது. பட்ஜெட் பற்றாக்குறையை மூடிமறைத்து, அந்நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக வெளியுலகுக்குக் காட்ட கிரீஸ் அரசும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் வங்கியும் இணைந்து தில்லுமுல்லுகளில் ஈடுபட்ட விவகாரம் அம்பலமானதும், தனது கடன் பத்திரங்களை விற்கக் கூட முடியாத நிலைக்கு கிரீஸ் தள்ளப்பட்டது. இவற்றின் காரணமாக அந்நாடு மீண்டும் “டிராய்கா” மும்மூர்த்திகளிடம் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்கம் செலுத்தும் ஜெர்மனி, கிரேக்கத்துக்குக் கடனாகக் கொடுத்த தொகையை, அந்நாட்டுக்குப் போர் ஆயுதங்களை விற்று பறித்துக் கொண்டது. கிரேக்கத்துக்கு எவ்வித போர் அச்சுறுத்தலும் இல்லாத போதிலும், உலகிலேயே அதிகமாக ஆயுத இறக்குமதி செயும் நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு கிரேக்கம் மாற்றப்பட்டது. கிரேக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வைத்தும், சுற்றுலாத்துறையில் பெருமளவு முதலீடு செய்ய வைத்தும் அந்நியக் கடன்களை ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் திணித்தன. கடனையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமல் கிரேக்கம் நிதி நெருக்கடியால் தடுமாறிய நிலையில், ஓய்வூதியம் குறைப்பு, அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகள் அதிகரிப்பு, கல்வி-மருத்துவம் உள்ளிட்டு பல்வேறு மக்கள்நலத் திட்டங்களுக்கான மானியம் வெட்டு உள்ளிட்டு பல்வேறு தாக்குதல்களை அந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் மிருகத்தனமாகத் திணித்தன. அதன் பிறகே ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எப்.பும் பற்றாக்குறை நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கிரீசுக்குக் கடன் கொடுத்தன. அந்தக் கடனில் 85 சதவீதம் பழைய கடன்களுக்கும் அதற்கான வட்டியுமாகப் பறித்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக, கிரேக்கம் மேலும் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கத் திட்டத்தின்படி, கடன் பொறியில் சிக்கவைக்கப்பட்ட கிரேக்கம் இவ்வாறுதான் திவாலாக்கப்பட்டது.
தமது வாழ்வுரிமை பறிப்புக்கும் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடி வந்த கிரேக்க மக்கள், அப்போராட்டத்தின் ஊடாக சிரிசா கட்சியைத் தெரிவு செய்து ஆட்சியில் அமர்த்தினார்கள். முந்தைய கிரேக்க ஆட்சியாளர்கள் வாங்கிய கடனை அசலும் வட்டியுமாக திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடையும் கடன் ஒப்பந்தத்தை நீட்டிக்குமாறும், திவாலாகிவிட்ட பொருளாதாரத்தை மீட்க புதிதாக 29.1 பில்லியன் யூரோ டாலர் கடன் தருமாறும் சிரிசா ஆட்சியின் பிரதமர், “டிராய்கா”விடம் கோரினார். கிரேக்க அரசாங்கத்துக்கு மீண்டும் கடன் தருவதற்கு, “டிராய்கா” மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து கிரேக்கத்தின் சிரிசா கூட்டணி அரசு, மக்களின் கருத்துக் கணிப்பைக் கோரும் தேர்தலை அறிவித்தது.
இந்நிபந்தனைகளை ஏற்க மாட்டோம் என்று வாக்களிக்குமாறு சிரிசா கூட்டணிக் கட்சியினரும் பல்வேறு இடதுசாரிகளும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதற்கெதிராகத் திரண்ட ஏகாதிபத்தியவாதிகளும் வலதுசாரி பிற்போக்குக் கட்சிகளும் அவற்றின் ஊடகங்களும், “வேண்டாம் என்று வாக்களித்தால் நாடு திவாலாகிவிடும்; எல்லோரும் பிச்சைக்காரர்களாகிவிடுவோம்; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கம் வெளியேற்றப்பட்டுவிட்டால் அதோகதிதான்” என்றெல்லாம் பயபீதியூட்டும் பிரச்சாரத்தை வெறியோடு நடத்தி கிரேக்க மக்களை எச்சரித்தன. ஆனால், அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, பட்டினி கிடந்து செத்தாலும் ஏகாதிபத்திய கட்டளைக்கு அடிபணிய மாட்டோம் என்று கடந்த ஜூலை 5-ம் தேதியன்று நடைபெற்ற கருத்துக் கணிப்புக்கான தேர்தலில் “டிராய்கா”வின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து ஏறத்தாழ 62 சதவீத மக்கள் வாக்களித்து உரத்த குரலில் முழங்கினர்.
இத்தேர்தல் முடிவுகளின் மூலம் “டிராய்கா” மூம்மூர்த்திகளால் திணிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், நாட்டின் இறையாண்மையும் ஜனநாயகமும் பாதுகாக்கப்படும் என்றும் கிரேக்க மக்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனாலும் கிரேக்க மக்களின் ஜனநாயக முடிவையும், கிரேக்க அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சலுகைகளுக்கான பரிந்துரைகளையும் நிதியாதிக்க கும்பல்கள் கடுகளவும் ஏற்க மறுத்தன. “டிராய்கா”வைப் பொருளாதாரப் பயங்கரவாதிகள் என்று சாடி, யூரோ பொது நாணயத்துக்குப் பதிலாக கிரேக்க நாடு சொந்த நாணயமுறையை உருவாக்க வேண்டுமெனக் கோரிவந்த கிரேக்க நிதியமைச்சர் கட்டாயமாக பதவியிலிருந்து விரட்டப்பட்டார். “கடன் கட்ட முடியவில்லை என்றால் நாட்டை அடமானம் வை” என்று கட்டளையிட்டு, கிரேக்கத்தின் இறையாண்மையையும், கிரேக்க மக்களின் அரசியல் உரிமைகளையும் காலனியாதிக்க முறையில் பச்சையாகவே நசுக்கி ஏகாதிபத்தியவாதிகள் அந்நாட்டை அடிமைப்படுத்தியுள்ளனர்.
“மதிப்புக் கூட்டு வரியை மேலும் உயர்த்த வேண்டும்; அரசுத்துறை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதோடு, முதியோர்களின் ஒவூதியத்தையும் குறைக்க வேண்டும்; விமான நிலையங்களும் துறைமுகங்களும் மின்துறையும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட வேண்டும்; பொருளாதாரத்துறையில் ஐரோப்பிய ஒன்றியம் நியமிக்கும் குழுக்கள் மற்றும் ஐ.எம்.எப்.பின் அதிகாரத்தையும் கண்காணிப்பையும் நிறுவ வேண்டும்; தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்; ஐம்பது பில்லியன் யூரோ டாலர் அளவுக்கான அரசின் சொத்துக்களை பிணைத்தொகையாக ஐரோப்பிய ஏகபோக முதலாளிகளின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்; கடந்த 6 மாதங்களில் சிரிசா அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முற்றாக ரத்து செய்ய வேண்டும்” – என்றெல்லாம் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு சிரிசா அரசாங்கம் சரணாகதி அடைந்துள்ளது. கிரேக்க மக்களுக்கு இது பேரழிவு மட்டுமின்றி பெருத்த அவமானமுமாகும்.
நிதியாதிக்கக் கும்பல்களுக்கு எதிரான போராட்டத்தில் கிரேக்க மக்கள் வெற்றி பெற்றுவிட்டால், அது பிற நாட்டு உழைக்கும் மக்களிடம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துவிடும் என்று ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுகின்றனர். ஏனெனில், கிரீசுக்கு அடுத்ததாக ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் எப்போது வேண்டுமானாலும் இதேபோல கலகங்கள் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் விலகினால், அதைத் தொடர்ந்து இதர ஐரோப்பிய நாடுகளும் விலகி ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பே கலகலத்துப் போவிடும் என்று அஞ்சும் ஏகாதிபத்தியவாதிகள், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் விலகிச் செல்வதைத் தடுத்து, கிரேக்க மக்களின் அடங்க மறுக்கும் போர்க்குணம் ஐரோப்பிய கண்டத்தில் பரவி விடக் கூடாது என்ற வெறியோடு மிருகத்தனமாக ஒடுக்கியுள்ளனர்.
நிதியாதிக்க பயங்கரவாதிகளை எதிர்த்து கிரேக்க மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களும், ஆகப் பெரும்பான்மையான மக்களின் பேராதரவும் சாதகமாக இருந்த போதிலும், சிரிசா கட்சியின் 149 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் இச்சரணாகதி ஒப்பந்தத்தை எதிர்த்த போதிலும், இடதுசாரிகளாகச் சித்தரிக்கப்படும் சிரிசா கட்சியானது, வலதுசாரி கட்சிகளின் ஆதரவோடு இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் துரோகமிழைத்துள்ளது. ஏகாதிபத்தியங்களின் நிதிக் கொடுங்கோன்மைக்கு எதிராக சவடால் அடித்த போதிலும், கிரேக்கத்தில் சுயசார்பான பொருளாதாரத்தைக் கட்டியமைத்துப் போராடுவதற்கான எந்தத் திட்டத்தையும் சிரிசா கொண்டிருக்கவில்லை. முந்தைய அரசுகள் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன்கள் எவையும் நாட்டின் உற்பத்திக்காகவோ, மக்களின் நலன்களுக்காகவோ பயன்படுத்தப்படாத முறையற்ற கடன்கள் என்று அம்பலமாகியுள்ள போதிலும், ஆட்சிக்கு வந்த சிரிசா அரசாங்கம் இவற்றைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பில் நீடித்துக் கொண்டே ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள், பேரங்கள் மூலம் சலுகைகளைப் பெற்று இக்கடன் சுமையை நீக்கிவிடலாம் என்று கனவு கண்டது. நிலவுகின்ற கட்டமைப்பில் ஏகாதிபத்தியங்களுடன் சமரசமாகச் சென்று மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்க இப்போலி இடதுசாரிகள் மேற்கொண்ட முயற்சியும் படுதோல்வியில் முடிந்துள்ளது.
கிரீசில் ஏகாதிபத்திய நிதிநிறுவனங்கள் நடத்தியுள்ள தாக்குதலை ஆக்கிரமிப்புப் போருக்கு நிகரானது என்றும், அதிர்ச்சியானது, அநியாயமானது என்றும் புலம்பும் முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும் பொருளாதார மேதைகளும், ஏகாதிபத்திய வல்லரசுகளால் முன்வைக்கப்பட்ட இந்த ‘வளர்ச்சிப் பாதை’யும் முதலாளித்துவக் கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி தோல்வியடைந்துள்ளதைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஆனால், கிரேக்கத்தில் முற்றிய இந்த நெருக்கடியானது சங்கிலித்தொடர் போல பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்களை ஆட்டங்காணச் செய்துள்ளதோடு, 7 சதவீத வளர்ச்சியில் உள்ளதாக காட்டிக் கொள்ளும் சீனாவின் பங்குச் சந்தையையும் உலுக்கி வீழ்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 2008-ல் அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார பொது நெருக்கடியாக முற்றி அதிலிருந்து மீண்டெழுவதற்கான வாய்ப்பே அறவே இல்லாமல் போய்விட்டது. இந்த உண்மையை, கடந்த ஜூன் 26 அன்று லண்டன் வர்த்தகக் கல்வி மாநாட்டில் உரையாற்றிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜன், “1930-களில் நிலவிய பெருமந்தத்தைப் போன்றதொரு நெருக்கடியான நிலைக்கு நாம் வீழ்ந்து கொண்டிருக்கிறோம். இது தொழில்துறையில் முன்னேறிய அல்லது சந்தையில் வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கவ்வி நிற்கும் நிலைமையாகும்”என்று எச்சரிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரேக்கத்தில், கடந்த 2010-லிருந்தே ஓய்வூதியம் ஏறத்தாழ பாதியளவுக்கு வெட்டப்பட்டு மாதத்துக்கு 700 யூரோ அளவுக்கே ஒரு ஓவூதியதாரருக்குக் கிடைத்து வந்தது. இது அந்நாட்டின் வறுமைக் கோட்டுக்கும் கீழான வருவாயாகும். ஏற்கெனவே வேலையின்மை 30 சதவீதமாக உள்ள நிலையில், குடும்பத்திலுள்ள இளைய தலைமுறையினர் வேலையின்றித் தவிக்கும் போது முதியோர்களின் ஓய்வூதியத்தை நம்பித்தான் கிரேக்கத்தின் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. டிராய்காவின் மறுகாலனியாதிக்கக் கட்டளைப்படி, இப்போது இந்த அற்ப அளவுக்கான ஓய்வூதியத் தொகையும் குறைக்கப்பட்டதால், வங்கிகளின் முன்னே ஓய்வூதியதாரர்களான முதியவர்கள் வாழவழியின்றிக் கதறியழுதுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்பட்டு கடந்த கால் நூற்றாண்டு காலமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த ‘வளர்ச்சிப் பாதை’யானது உலகெங்கும் பல நாடுகளைத் தீராத பொருளாதார நெருக்கடியில் சிக்கவைத்துள்ளதோடு, கிரேக்க நாட்டையும் மக்களையும் கையேந்தும் நிலைக்குத் தள்ளி தோல்வியைத் தழுவிவிட்டது என்பதையும், ஏகாதிபத்தியங்களுடன் சமரசமாகச் சென்று தீர்வைத் தேடும் போலி சோசலிசப் பாதையானது துரோகத்தையும் பேரழிவையுமே விளைவிக்கும் என்பதையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, மாற்றுத் தீர்வாக புரட்சிகர கட்சியின் வருகையையும் சோசலிசப் புரட்சியையும் எதிர்பார்த்து கிரீஸ் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் போது இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கின்ற தொழிலுறவு சட்டங்களை பரிந்துரை செய்தது, ராயல் கமிசன். இந்த கமிசனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி, இந்தியத் தொழிலாளி வர்க்கத்துக்கு விழிப்புணர்வை ஊட்டினார், பகத்சிங். கேளாத செவிகளை கேட்க வைக்க பகத்சிங் தூக்கு மேடை ஏறினார்.
இது போன்ற எண்ணற்ற தியாகிகளது இரத்தத்தில் எழுதப்பட்டவைதான் தற்போது இந்தியத் தொழிலாளி வர்க்கம் அனுபவத்து வருகின்ற தொழிலாளர் நலச் சட்டங்கள். இந்த சட்டங்கள் அனைத்தையும் முதலாளிகளின் நலனுக்காக காவு கொடுத்து வருகிறார், மோடி. இதன் உச்சகட்டம்தான் ஏப்ரல் மாத இறுதியில் மோடி அரசு கொண்டு வந்த தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா, 2015 (Labour Code on Industrial Regulations, 2015).
இந்தியாவில் இருக்கின்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றனவாம். இந்த சட்டங்களைப் பார்த்து இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் பயந்து நடுங்குகின்றனராம். எனவே, மேற்படி 44 சட்டங்களையும் கலைத்துப் போட்டு, ஒவ்வொரு சட்டத்திலும் உள்ள சில பிரிவுகளை முதலாளிகளுக்கு சாதகமான முறையில் வடிவமைத்து, ஒரு தொகுப்பாக கொண்டு வந்தால், நாட்டின் தொழில் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் பாய்ந்துவிடும் என்கிறார், மோடி!
தொழில் வளர்ச்சி என்று மன்மோகன் சிங் – சிதம்பரமும் என்ன சொன்னார்களோ அதைத்தான் மோடி சொல்கிறார். ஆனால், வெறித்தனமாக அமுல்படுத்துகிறார். அந்நிய, பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் தாராளமாக முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த பன்னாட்டுக் கம்பெனிகள் இந்திய நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கவும், இந்தியாவின் தொழிலாளர்களை கட்டுப்பாடின்றி சுரண்டிக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கின்ற எல்லா சட்டங்களையும் திருத்த வேண்டும அல்லது ஒழித்துக் கட்ட வேண்டும். இங்கு உள்ள இயற்கை வளங்களையும் தொழிலாளார்களையும் சுரண்டி பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு வரிச்சலுகையோடு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளைத்தான் கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரசு கட்சி அமல்படுத்தி வந்தது. அப்போதுதான் இந்தியாவில் பல லட்சம் பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பைத் தந்து வந்த பொதுத்துறை நிறுவனங்கள், தொலைத் தொடர்பு, இன்சூரன்ஸ், மின் தயாரிப்பு போன்ற தொழில்களில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கபட்டன. நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, காண்டிராக்ட் மற்றும் தினக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். அதே நேரத்தில், விவசாயமும், கைத்தொழில்களும் அழிக்கப்பட்டு பல லட்சம் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் நகர்ப் புறங்களை நோக்கி துரத்தப்பட்டனர். இவர்கள் தினக்கூலி வேலையாவது கிடைக்காதா என்று பரிதவித்து வருகின்றனர்.
நிரந்தர வேலை என்பதே இல்லை என்கிற நிலையில் வேலை நிரந்தரம், உழைப்புக்கேற்ற கூலி, 8 மணி நேர வேலை, பாதுகாப்பான வேலை நிலைமை, தொழிற்சங்க உரிமை, கூட்டுப் பேர உரிமை என்பதெல்லாம் பெயரளவிலும் இருக்கக் கூடாது என்கின்றனர், முதலாளிகள். இதனடிப்படையில், “தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக் கட்டு” என்று அரசுக்கு உத்தரவு போடுகின்றனர் முதலாளிகள்! இதைத்தான் விழுந்து விழுந்து நிறைவேற்றுகிறார், மோடி!
இதன் முதல் கட்டமாக தொழிற்சங்கச் சட்டம், தொழிற்தகராறுகள் சட்டம், தொழிலக நிலையாணைகள் சட்டம் ஆகியவற்றின் சில பிரிவுகளை தொகுப்பாக்கி மேற்படி மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத் தொகுப்பானது தொழிற்சங்கம் அமைக்கின்ற உரிமையையும், தொழிற் சங்கத்துக்கு வெளித் தலைவர்களை வைத்துக் கொள்கின்ற உரிமையையும் பறித்துக் கொள்கிறது. முதலாளி நீட்டுகின்ற பேப்பரில் கையெழுத்து போடுபவனை வைத்து ஒரு கமிட்டியை உருவாக்கி, அந்த கமிட்டி மூலமாகவே தொழிலாளர்களது வாயை அடைக்க வழி செய்கிறது, புதிய சட்டம்.
முதலாளிகள் தங்கள் நிறுவனங்களின் நிலையாணைகளுக்கு சான்று பெறுவதற்கு இனி தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, அதனிடம் அனுமதி பெறவோ தேவையில்லை. தொழிலாளர்களின் ஏஜெண்ட் என்கிற பெயரில் ஒருவரை முதலாளிகளே நியமித்து அவரது ஒப்புதல் பெற்றால் போதுமானது. இதனால், தொழிலாளி அல்லது தொழிற்சங்கத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, தொழிலாளியின் ‘விதி’யை முதலாளி தீர்மானிக்க முடியும்.
இனிமேல் ஏழு பேர் சேர்ந்து சங்கத்தை ஆரம்பிக்க முடியாது. குறைந்த பட்சம் 100 பேர் அல்லது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் தொழிலாளர்கள் இருந்தால்தான் சங்கத்தை துவங்க முடியும். அவ்வாறு துவங்கப்படுகின்ற சங்கத்தின் பதிவும் நிரந்தரமானதல்ல. அதை எப்போது வேண்டுமானாலும், எந்த ஒரு அற்ப காரணத்தைக் காட்டியும் ரத்து செய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. சங்கத்தின் முகவரியைக் குறிப்பிடும் போது, கதவு எண் தவறுதலாகப் போடப் பட்டாலோ, உறுப்பினர் எண்ணிக்கையில் கூட்டல் கழித்தல் பிழை இருந்தாலோ, ஒரு உறுப்பினரின் இனிஷியல் தவறாக இருந்தாலோ கூட தொழிற்சங்கத்தின் பதிவு ரத்து செய்யப்படும். அரசுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கைகள் உரிய காலத்திற்கு அனுப்பாவிட்டால் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை நிலை நாட்டிட வேலை நிறுத்தமும் செய்ய முடியாது. எந்த ஒரு வேலை நிறுத்தத்தையும் சட்டவிரோத வேலை நிறுத்தம் என்று அரசு அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட சட்ட விரோதமான வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனித்தனியே அபராதம் விதிக்கப்படும். தொழிற்சங்கத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். நிதி உதவி அளித்தவர்கள் மீதும் இச்சட்டம் பாய்ந்து தண்டனை அளிக்கும்.
வேலை நிறுத்தம் என்கிற போராடும் உரிமைக்கு சமாதி கட்டுகின்ற அரசு, முதலாளிகள் ஆலை மூடல் செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது. 100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டால் தற்போதுள்ள சட்டப்படி அரசின் முன் அனுமதி பெற வேண்டும். அந்த எண்ணிக்கையை 300 ஆக உயரித்தியுள்ளது, புதிய சட்டம். தற்போதுள்ள பெரும்பலான ஆலைகளில் 300-க்கும் குறைவான தொழிலாளர்களே இருப்பதால், ஆலைமூடல் என்கிற மிரட்டலை வைத்தே தொழிலாளர்களை அடக்குவது சுலபமாகிவிடும்.
முதலீட்டாளர்களின் நலன் தான் நாட்டின் நலன், முதலாளிகள் எல்லையற்ற இலாபம் சம்பாதிக்க வேண்டும். அவர்களின் முதலீடு நாடு முழுவதும் தங்கு தடையின்றி பாய வேண்டும். இதற்கு தடையாக உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. உண்மையில் சொல்லப்போனால், தற்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் மயிரளவுக்குக் கூட மதிப்பதில்லை. எத்தனை கோர்ட்டுக்கு வேண்டுமானாலும் போ என்றுதான் தொழிலாளர்களை விரட்டுகின்றனர். வேலை நிரந்தரம் கேட்காதே; கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஓடிப் போ என்று தொழிலாளியை நைச்சியமாக மிரட்டுகிறது, தொழிலாளர் துறை. தொழிலாளர் நீதி மன்றங்களோ வாய்தாக்களைப் போட்டே தொழிலாளியின் ஆயுளைப் பறித்துவிடுகின்றன. ஆனாலும், பெயரளவில் கூட சட்டப் பாதுகாப்பு இருக்கக் கூடாது என்று கழுத்தைப் பிடிக்கின்றனர், முதலாளிகள்!
“தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்ததே” என்று இந்த அரசிடம் கையேந்தி நிற்க முடியுமா? அப்படித்தான் கையேந்தி நிற்கின்றன, பிற தொழிற்சங்க அமைப்புகள். இதன் பொருட்டு எதிர்வரும் செப்டம்பர் 2-ம் தேதியன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஒன்றையும் அறிவித்துள்ளனர். காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி-யும், பா.ஜ.க.வின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ். சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்காளிகள்! இதுவரை ஆட்சியதிகாரத்தில் இருந்த காங்கிரசு கட்சி, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைப் பறித்தது. தற்போது மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு இரட்டிப்பு வேகத்தில் அதையே செய்து வருகிறது.
காங்கிரசு, பி.ஜே.பி. கட்சிகள் மட்டும் தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமானதல்ல. அவற்றின் தொழிற்சங்கங்களும்தான். இவர்களுடனான பகை சாதாரண பகை அல்ல, இணக்கம் காணவே முடியாத வர்க்கப் பகை! இதையெல்லாம் மறைத்துவிட்டு தொழிலாளர்களது உரிமைக்காகப் போராடுவதைப் போல நடிக்கின்றனர். “மானோடு சேர்ந்து ஓடுவது, புலியோடு சேர்ந்து வேட்டையாடுவது” என்கிற கபட வேடதாரிகளே பி.எம்.எஸ்.-ம், ஐ.என்.டி.யு.சி.-யும்.
இந்த கபட வேடதாரிகளுக்கு ‘இடதுசாரி’ சங்கங்கள் வால் பிடிக்கின்றன. ‘இடதுசாரி’ தொழிற்சங்கங்கள் செல்வாக்கு செலுத்துகின்ற பொதுத்துறைகளில் தனியார்மயம் புகுத்தப்பட்ட போது, வேலை பாதுகாப்பு இருந்தால் போதும் என்று துரோகம் செய்தார்கள். காண்டிராக்ட், தினக்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்த போது அவர்களது முதுகில் சவாரி செய்து சுகம் தேடிக் கொண்டனர். தற்போது வர்க்கப் பகைவர்களான காங்கிரசு, பி.ஜே.பி. கும்பலுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். துரோகம், கயமை, பித்தலாட்டம், இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் ஆகிய அனைத்தும் இங்கே ஒளிந்துள்ளது. துரோகிகளான ஐ.என்.டி.யு.சி.-யையும் பி.எம்.எஸ்.-ஐயும் விரட்டியடித்தாக வேண்டும். சமரசவாதிகளான ‘இடதுசாரி’ சங்கத் தலைமைகளைப் புறக்கணிக்க வேண்டும். புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும். போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
தாங்கள் போட்ட சட்டத்தினை கிஞ்சிற்றும் மதிக்காமல் தொழிலாளர்களுக்கு எதிராக ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பே செயல்படும் நிலையில் இனியும் நம் பிரச்சனைகளை இந்த அரசு அதிகாரம் தீர்த்து வைக்கும் என நம்ப முடியுமா? மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வக்கற்ற நிலையில் உள்ளது, இந்த அரசு கட்டமைப்பு. தானே வகுத்த சட்டங்கள், விதிமுறைகள், நீதி பரிபாலன நடவடிக்கைகள் என அனைத்திலும் தோற்றுப்போய், அதற்கு எதிராக செயல்படுகின்றது. மொத்தத்தில், ஆளும் அருகதையற்றுப் போய்விட்டது, இந்த அரசமைப்பு!
உரிமை கொடு என போராடிய காலம் போய்விட்டது. நமக்குத் தேவை அதிகாரம். தொழிற்சாலைகளையும், நாட்டையும் நிர்வகிக்கும் அதிகாரம். தொழிலாளர் அதிகாரக் கமிட்டிகளை நாம் உருவாக்குவோம். நம்மை ஒடுக்கும் அரசு அதிகாரத்திற்கும், கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் சவால் விடுவோம். தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டங்களை பரவச் செய்வோம். இதன் முன்னோட்டமாக, செப்டம்பர் 2-ல் தொழிலுறவு சட்டத் தொகுப்பினை தீயிட்டுக் கொளுத்துவோம்! தீ பரவட்டும்!!
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
தொழிலாளர்களே…!
☀ தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது சட்டத் தொகுப்பு மசோதா!
☀ செப்.2 வேலை நிறுத்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டமாக முன்னெடுப்போம்!
முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற
தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! 2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்
– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள், பதிவு எண்: 24/KRI,
முகவரி: L 416 ASTC பழைய அட்கோ, ஒசூர்.
தொடர்புக்கு: 97880 11784.
ஜெயாவிடம் எகிறிய சு.சாமிக்கு இந்துஞான மரபின்படி அ.தி.மு.க. மகளிரணியை வைத்து கொடுத்த `வரவேற்பு’ இப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைத்திருக்கிறது. “நாயே.. பன்றி.. ..மவனே!” இன்ன பிற ஜெயார்ச்சனைகள் தமிழகம் முழுவதும் எதிரொலித்து வந்தன. பிறகு போரடித்து விட்டதோ என்னமோ போதும் என்று அம்மாவே ஜாடை காட்ட ரத்தத்தின் ரத்தங்கள் நிறுத்தியுள்ளன.
சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் ஸ்டேசனில் பத்மினி என்ற பெண் காக்கி மிருகங்களால் குதறப்பட்டபோது “அந்தப் பெண் நடத்தை சரியில்லாதவர்” என்று கூறியவர் மாண்புமிகு அம்மா. அப்பேற்பட்டவர்கள் அறத்துக்காக சினமடைந்தனர் என்பதை அ.தி.மு.க அடிமைகளே கேலி செய்வர்.
பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கள்ள உறவு வைத்திருக்கிறது எனும் இளங்கோவனின் ஒரு வசனத்துக்காகத்தான் பெண்ணினத்தயே தரக்குறைவாக்கிவிட்டார் என்று பெட்ரோல் குண்டு வீசி, கட்சி ஆபிசை கல்லால் அடித்து, சாலைகளை மறித்து கொடும்பாவி எரித்து, நெல்லை மேயர் பாலத்திலிருந்தே குதித்துவிடுவேன் என்று போலீசு பாதுகாப்புடன் `அறவழியில்’ போராடியது அ.தி.மு.க அடிமைக் கூட்டம்.
பெட்ரோல் குண்டு வீசும் காலிகளை தடவிக் கொடுக்கும் தமிழகப் போலீசின் கைகள்தான் டாஸ்மாக் பாட்டிலை உடைத்த மாணவர்களின் கழுத்தை நெறித்து, சட்டம் ஒழுங்கை பாதுகாத்தது என்பதை மறந்துவிட வேண்டாம்!
“உன்னை பத்தி தெரியாதா? உன் கதைய எடுத்து விடவா? எங்க அம்மாவ சொன்ன… உங்க அம்மாவ சொல்லுவேன்? ” என்ற வசனங்கள்தான் ஓட்டுக்கட்சிகளின் கொள்கை முழக்கங்கள். இந்த கொடுக்கல் வாங்கல்தான் இவர்கள் மக்களுக்கு வழங்கும் பரபரப்பு அரசியல். இந்தக் கலாச்சாரத்தில் ஓட்டுக்கட்சிகள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.
ஜானகி அணியிலிருக்கும் போது வளர்மதி பேசாத பேச்சா?
இருந்தாலும் இழித்துப் பேசப்பட்டவர் ‘அம்மா’ என்பதால் சும்மா இருக்குமா சட்டம்- ஒழுங்கு அது இஷ்டத்துக்கு அங்கங்கே ரோட்டில் வைக்கோல் பொம்மையாய் எரிய, அன்றாடப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட டீசன்டான நடுத்தரவர்க்கத்தின் மனசாட்சிக்கு பதில் சொல்லும் பொறுப்பும், சுமையும் ஊடகங்களை பற்றிக்கொண்டன. ஜனநாயகம் கருகும் வாசனை வரும்போது அதன் காவலர்களான நான்காவது தூண் வாளாயிருக்குமா?
என்ன இருந்தாலும் “அநாகரிமாக பேசுவதும் தவறு” ” அதற்காக ஆளும் கட்சியே சட்டம் – ஒழுங்கை சீர்குலைப்பதும் தவறு” என்று இரட்டை நாயனத்தால் காதுகளை கிழித்துவிட்டன காட்சி ஊடகங்களின் விவாத கச்சேரிகள். கொடும்பாவியையும் கொளுத்தி, அந்த ஆள் மேலேயே ஒரு கொலை மிரட்டல் கேசையும் கொளுத்திப் போட்டு, இளங்கோவனின் தீர்த்தயாத்திரை இப்போது தல்லாகுளத்தில்!
இளங்கோவனின் பேச்சு அதற்கு ஜெயா கும்பலின் பதிலடி என்ற பரபரப்பின் மூலம் தமிழகத்தின் தெருக்களில் ஒலிக்கும் டாஸ்மாக் ஒழிப்புக் குரலை பின்னுக்குத் தள்ளுவதில் அனைத்து ஊடகங்களும் தன்னியல்பாக பங்காற்றின. டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்தின் வீச்சை உழைக்கும் பத்திரிகையாளர்களும், ஊடகவியல் உழைப்பாளிகளும் தொடர்ந்து ஆவணப்படுத்தினாலும், “இப்போதைக்கு இதுதான் பெரிய பிரச்சனை” என்று வோறொன்றின் பக்கம் மக்களின் கவனத்தை திருப்புவதில் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் ஒரு அனிச்சை செயலைபோல அவர்களின் பல்வேறு உறுப்புகளுக்குள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதை இந்தப் பிரச்சனையும் எடுத்துக்காட்டியது.
அதுமட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களுக்கு இவர்கள் விவாதப்பொருளாக்கும் விசயத்திலும் “முதலாளித்துவ ஜனநாயகம்” என்ற வரம்புக்குள்ளாகவே எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள வலியுறுத்துவதும்தான், இவர்கள் நடந்ததாய் காட்டும் தரக்குறைவான அரசியலை விட தரம் தாழ்ந்ததாக உள்ளது.
உதாரணத்திற்கு இளங்கோவன் பேசியதை வைத்து ஜெயா கும்பல் உருவாக்கிய பரபரப்பை வைத்து இவர்கள் மக்களுக்கு சொல்ல வந்த அரசியல்தான் என்ன? முதலாவதாக முதல்வரையும், பிரதமரையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுவது சரியா? தனி நபர் தாக்குதல் ஆரோக்கிய அரசியலல்ல, இது நாகரிகமா?” என்றெல்லாம் செத்துப் போனவன் தலையில் பேன் பார்த்த கதையாய் இந்த இத்துப்போன ஜனநாயகத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக குழப்பினர்.
முதலாளித்துவ அரசியலுக்கும், நாகரிகத்திற்கும் துளியும் சம்மந்தம் கிடையாது என்பதை கோமாவில் கிடப்பவனே குறிப்பாக ஒத்துக்கொள்வான். அம்மா – ஐயா, கேப்ட்டன், மோடி என்று தன்னை மட்டுமே அரசியலாக முன்னிறுத்தும் தனிநபர்வாத அரசியல் கதாநாயகர்கள் தாக்குதல் வரும்போது மட்டும் தனிநபராக தாக்குவதா என அலறுவதற்கு முதலில் அவர்களுக்கு யோக்கியதை இல்லை. இதை பகிரங்கமாகப்பேச இந்த ஜனநாயக தினக்கூலிகள் தயாராயில்லை.
அமைச்சர் அடிமைகளில் ஆபாசமாக பேசாவர் யாரேனும் உண்டா?
முதலாளித்துவ நிறுவனங்கள் ஒரு பொருளை சந்தைப்படுத்துவது போல எப்போதும் பவுசுபவுசாக தன் மூஞ்சியைக்காட்டுவதும், தினுசு தினுசாக தன் பெயரை காட்டுவதையுமே கவர்ச்சி அரசியலாக பரப்பிவிட்டு சீரழிப்பவர் யார்? இந்த ஜனநாயகத்தின் தரத்தில்தான், இவர்கள் தாக்குதல்களும் இருக்கும் என்ற அரசியல் உண்மையை பேசுவதற்கு எண்ணமின்றி, இதெல்லாம் சில தனி நபர்களின் தனிப்பட்ட பண்புகளால் வருவதுதான், மற்றபடி நமது ஜனநாயகம் மதிப்பு வாய்ந்தது என்று மாஞ்சா போட்டு கழுத்தறுப்பதுதான் ஆளும் வர்க்க அறிவாளிகளின் இலக்கு.
இந்த இடுக்கில் கடுக்கன் கழட்டுவது போல இந்த தரக்குறைவான அரசியலை தொடங்கி வைத்ததே திராவிடக்கட்சிகள்தான் , அதுவும் தி.மு.க. தான் என்று பார்ப்பன ஊடகக்கிருமிகள் நேரம் பார்த்து காதைக் கடிக்கின்றன. ரீலை பாதியிலேந்து ஓட்டும் இந்த பார்ப்பன பண்பாட்டாளர்களின் வரலாற்று யோக்கியதை என்ன? மனுவின் காலத்திலேயே உழைக்கும் மக்களின் பிறப்பை இழிவுபடுத்தியும், பகவத்கீதையில் பெண்களை தரக்குறைவாக ( பாவயோனி! ) பேசியும்; எதிர்க்கும் திராவிடப் பெண்களை பூதகிகள், ராட்சசிகள் என்று அநாகரிகமாக வருணிப்பதும் ‘அவாள்’ தொடங்கி வைத்த அரசியல் நாகரிகமாயிற்றே!
இடையில் உங்கள் ‘தகுதிக்கு’ வளர்ந்தவர்களை மட்டும் பாவிகளாக்கினால் எப்படி? சட்டமன்றத்திலேயே உங்கள் ‘தீரர்’ சத்தியமூர்த்தி தேவதாசி ஒழிப்பை முன்வைத்த டாக்டர் முத்துலட்மிரெட்டியை பார்த்து பேசாதா பேச்சா! முன்னேறியதாய் சொல்லும் முதலாத்துவ ஜனநாயகத்திற்கே கெட்ட வார்த்தைகளை வாரி வழங்கிய வேத கடாட்சம் இந்து கலாச்சாரமல்லவா?
எனவே, “அரசியல் நாகரிகம், தரம்” என்பதை தமிழகப் பார்ப்பனக் கும்பல் வருணபேதத்தால் வரையறுப்பதுபேல திராவிட இயக்கம் வந்துதான் இப்படி ஆனது என்பது புழுத்துப் போனவன் புண்ணைப் பார்த்து சிரித்த கதைதான். தனிநபரின் பண்புகளும், குறிக்கோளும் சேர்ந்து பண்பாட்டில் வெளிப்படுகிறது என்பது ஒரு உண்மை, என்றாலும் அது முதலாளித்துவச் சூழலின் மூலத்திலிருந்து வேறுபட்டதல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஒரே முதலாளித்துவ அரசியலில் இருப்பவர்களின் வேறுபட்ட மாற்றங்கள் , நடத்தைகளை வைத்து அவர்களை முதலாளித்துவ அரசியலிலிருந்தே வேறுபட்டவர்கள் என்று கருதுவது தவறானது. மாறாக இப்படி விதவிதமான, வேறுபட்ட ஒழுக்ககேடுகளின் தன்னிறைவுதான் முதலாளித்துவ அரசியலே. முதலாளித்துவத்தின் குரலை அதானி ஒரு மாதிரி பேசினால், ‘அம்மா’ ஒரு மாதிரி பேசுவார்! மோடியின் வாயிலிருந்து பிகாரின் டி.என்.ஏ. பற்றி வருவது ஒரு வகை, இளங்கோவன் வாயிலிருந்து வருவது இன்னேரு வகை, இவர்களுக்கு வாய்கள் வேறு, ஆனால் வர்க்கம் ஒன்று!
இந்த ஜனநாயகமே இப்படித்தான் என்ற முடிவுக்கு மக்கள் எதார்த்தமாக வருவதை தடுத்து இது தனிநபர்களின் வெளிப்பாடு என்பதாக மட்டும் பார்க்க பழக்கும் முதலாளித்துவ அறிவாளிகளின் வரம்பைக் கடந்து இந்த ஜனநாகத்தின் தரக்குரைவை நாம் விவாதிக்க முன் வர வேண்டும். சுரண்டல், அடக்குமுறை என்ற தரக்குறைவான உள்ளடக்கத்தையே கோட்பாடாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து ஆரோக்கியமான அரசியல் பிறப்பது முடியாது. தனிநபரின் இயல்புகள் இந்த விகாரத்தை வீரியப்படுத்தலாம். ஆனால் தோற்றுவித்து தொற்று நோய் போல பரப்புவது முதலாளித்துவ ஜனநாயக அரசியல் என்பதே உண்மை.
அடுத்தவனை ஒழித்துவிட்டு ஆதாயத்தைப் பார் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த ஜனநாயகத்தின் தரத்தை விவாதிக்காமல், வெறுமனே தனிநபரின் தரமாக இதை வெட்டிச் சுருக்குவதும் அநாகரிக அரசியல்தான்.
பெண்ணை இழிவுபடுத்தும் பிரச்சனை மட்டுமல்ல, இந்த மண்ணையே இழிவுபடுத்தும் அன்னிய – கார்ப்பரேட் தரகுமுதலாளிகளின் அநாகரிக ஆக்கிரமிப்பிலிருந்தும் நாட்டை மீட்க இந்தப் போலி ஜனநாயகத்தால், குறிப்பாக முதலாளித்துவ ஜனநாயகத்தால் முடியாது என்பதுதான் நடைமுறை காட்டும் உண்மை. மக்களை அமைதியாக வளர்ச்சிப் பாதையில் வாழவைக்கும் என்று நம்பிக்கை ஊட்டிய உலக முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகி தோல்வியுற்று பல்லைக் காட்டி நிற்கிறது. இந்தியாவில் இந்த ஜனநாயகத்தின் அனைத்து அரசமைப்பு உறுப்பும் எதிர்சக்திகளாக மாறி தான் செய்வதாய் சொன்ன வேலைகளையே செய்ய லாயக்கற்றதாகி மக்களுக்கு பகை சக்தியாக பரிணமித்து விட்டது. சாராயத்தை ஒழிக்க வேண்டிய போலீசு சாராய கடைக்கு காவல் இருக்கிறது.
உச்சபட்சமாக நீதித்துறையே நீதியை விலைபேசும் துறையாக மாறியும் ‘மக்களுக்காக’ என்ற பெயரளவிலான திரைகளையும் களைந்துவிட்டு பச்சையாக முதலாளிகளின் அடியாளாக அரசு நிற்கிறது. இதுதான் இன்று நாம் காணும் ஆளும் வர்க்கத்தின் தரம்!
சுயமரியாதையே இல்லாத கூட்டத்திற்கு நாகரீகம் குறித்து ஏன் கவலை?
இது இனி மக்களுக்கு உதவாது என்பது அன்றாட நடப்பாக ஆன பிறகு இதையே நிரந்தரமாக மக்கள் மீது திணிக்க ஆளும்வர்க்க உறுப்புகள், அதன் ஒரு பிரிவான ஊடகங்கள் முயலுகின்றன. தானே வகுத்துச் சொன்ன கடமையிலிருந்து தரமிழந்து, விலகிய இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் இனி மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே இதற்கு வெளியே மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் அடுத்த கட்ட அரசியலுக்கு முன்னேறுவதுதான் வரலாற்று வளர்ச்சி விதி.
இதை சட்டவிரோதம் ஜனநாக விரோதம் என்று சொல்லுவதற்க்கு தனக்குத்தானே விரோதமான இந்த அரசமைப்பிற்க்கு எந்த உரிமையும் இல்லை. மேலும் உலகத்திலேயே இறுதியான வடிவம் இன்று இருக்கும் முதலாளித்துவ ஜனநாகயகம்தான் என்று வரம்பிடுவதும் முட்டாள்தனமானது. இதுவே மாறதது, மாற்றக்கூடாதது என்பது அரசியல் தற்குறித்தனமும், வர்க்க நலனும் சார்ந்தது.
சமுதாய அமைப்பு, வரலாற்றில் பல வடிவங்களை கடந்துதான் முதலாளித்துவ ஜனநாயக அரசும் வந்துள்ளது. மன்னர் காலத்தில் மன்னர் ஆட்சிகூட மாறாதது மாற்ற முனைந்தால் சட்டவிரோதமானது என்றுதான் நிலைமை இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சிகாலத்திலும் அரசமைப்பை எதிர்பதை சட்டவிரோதம் என்றுதான் சொன்னது. ஆனால் மக்களின் ஜனநாயக வேட்கை முதலாளித்துவ அடக்கு முறைகளோடு முடிந்துவிடுவதில்லை. அது தங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் கொண்ட, வர்க்க நலன் சார்ந்த ஒரு அரசமைப்பை நோக்கி முன்னேறியே செல்லும்.! இந்த திசையில் ஆளும் வர்க்க வரம்பையும் , முதலாளித்துவ சர்வாதிகார இழிவையும் தாண்டி சிந்திப்பது்தான் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவும் அரசியல் ஆரோக்கியத்தின், தரம் நோக்கிய முன்னேற்றத்திற்கான முதல்படி.!
இதை எதிரிவர்க்கம் தானாக வழங்காது . அன்றாட நடைமுறை பிரச்சனைகளின் வெளிப்பாட்டிலிருந்து மக்களுக்கு இந்த சிந்தனையை வழங்கும் அரசியல் நாகரிகத்தை உழைக்கும் வர்க்கமாகிய நாம் வழங்குவோம்.
“மூடு டாஸ்மாக்கை!” இயக்கத்துக்கு வழக்கு நிதி தாரீர்..!
தமிழகத்தில் அரசே குடிவெறியைத் திட்டமிட்டு மக்களிடம் திணித்து இளைஞர்களை, மாணவர்களைச் சீரழித்து மனிதப் பேரழிவுக்கு இட்டுச் செல்வதை இனம் கண்டு, இதற்கு எதிராக ‘மூடு டாஸ்மாக்கை! கெடுவிதிப்போம் ஆகஸ்ட் 31” என்ற இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகமெங்கும் நடத்தி வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக எமது அமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேலான இடங்களில் சுவர் எழுத்துக்கள், பல லட்சம் துண்டறிக்கைகள், பேருந்து, ரயில், தெருமுனைப் பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் எனப் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைமையில் திரண்டு சென்று அருகிலிருந்த ஷெனாய் நகர் டாஸ்மாக் கடையை உடைத்து நொறுக்கினர். உடனே கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி அவர்களில் 15 மாணவர்களை மட்டும் கைது செய்து பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்டு 10 பிரிவுகளில் வழக்குப் பதிந்தது, போலீசு.
புழல் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள இம்மாணவர்கள் அங்கும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இவர்களை ஆட்கொணர்வு மனு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யக் கோரினோம். ஆட்கொணரும் உத்தரவை ஏற்று மாணவர்களைக் கொண்டுவரச் செய்வதற்கு பதிலாக, மாவட்ட நீதிபதி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர் நீதிமன்றம். மாவட்ட நீதிபதி சிறைக்கு சென்று விசாரணை நடத்தி, தாக்குதல் நடத்தப்பட்டதை வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாலும் மேம்போக்கான அறிக்கை ஒன்றைத் தந்துள்ளார்.
இதற்கிடையே மேற்படி சிறையில் வாடும் மாணவர்களைக் கொச்சைப்படுத்தி, “அவர்கள் மாணவர்களே அல்ல, கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்‘ என்ற பொய்ப் பிரச்சாரத்தை அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பதால், தாங்கள் பிணை கோரப் போவதில்லை என்று மாணவர்கள் அறிவித்து புழல் சிறையிலேயே உள்ளனர்.
சட்டவிதிகளுக்கு விரோதமாக புழல் பெண்கள் சிறைக்கு சென்ற ஆண் உளவுத்துறை அதிகாரி, அங்கு அடைக்கப்பட்டிருக்கும் மாணவிகளை தரக்குறைவாகப் பேசி மிரட்டி உளவியல் ரீதியான சித்திரவதை செய்தார். இதை வெளியில் கொண்டுவர தனியாக ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. உளவுத்துறை அதிகாரி மீதான புகாரை மறுத்த அரசுத் தரப்பு, போலீசு சிறைக்குச் சென்றது உண்மைதான் என்றும், ஆனால் மாணவிகளை சந்தித்து, மிரட்டவில்லை என்றும் சாதிக்கிறது. இதுகுறித்து உண்மையை அறிந்திட வீடியோ பதிவுகளைத் தரும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் ஆட்கொணர்வைச் செய்யாமல் இழுத்தடிக்கிறது.
மாணவர்களின் பதினைந்து நாட்கள் காவல் முடிந்தபின்னர் அடாவடியாக காவலை நீட்டித்து உத்தரவிட்டார், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி. இதனை ஆட்சேபித்து நீதிமன்றத்துக்கு எதிரே எமது தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் நீதிபதி அசைந்து கொடுக்கவில்லை. இந்த அநீதியான உத்தரவுகளுக்கும் பிணை மறுப்புகளுக்கும் எதிரான சட்டப் போராட்டத்தில் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களின் உதவியுடன் இறங்கியுள்ளோம்.
விருத்தாச்சலம் நகரில் ஒரு டாஸ்மாக் கடைக்கு எதிராக மாணவர்கள் போராடியது, விருத்தாச்சலம் வட்டம் மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடை மூடச் செய்து முற்றுகையிட்டது ஆகிய இரு வழக்குகளிலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜூவையும் பிற தோழர்களையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு பிணை தர அரசு கடுமையாக எதிர்க்கின்றது. அத்துடன் நில்லாமல் மணல் கொள்ளையர்களுக்கு எதிராகவும், கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி தோழர் ராஜூ போராட்டங்களை நடத்திய போது போடப்பட்ட வழக்குகளைக் காரணங்காட்டி அவரை குண்டர் சட்டம் / தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரசு திட்டமிட்டது. இதனை உணர்ந்து கொண்ட நாம், சென்னை உயர் நீதிமன்றத்தில் போராடி அரசின் இம்முயற்சிக்கு தடை வாங்கியுள்ளோம்.
கோவையில் டாஸ்மாக் கடை நொறுக்கப்பட்ட வழக்கில் எட்டு தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம், மேலப்பாளையூர் டாஸ்மாக் கடை உடைப்புகளில் ஈடுபட்டதாக 30 க்கும் மேற்பட்ட புமாஇமு தோழர்களும், ஊர்ப் பொதுமக்களும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பிணை வழங்கிட அரசு கடுமையாக எதிர்ப்புக் காட்டி வருகின்றது.
கரூர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டி ஒட்டியதற்காக, வழக்குப் பதிவு செய்து சுவரொட்டி ஒட்டிய தோழர்களையும் சிறையில் அடைத்தது, அரசு. இவர்களைப் பிணையில் வெளியில் எடுத்துள்ளோம். டாஸ்மாக் கடை முற்றுகை நடத்தி சிறை சென்ற பென்னாகரம் தோழர்களையும் பிணையில் எடுத்துள்ளோம்.
சிறை சென்றுள்ள தோழர்களைப் பிணையில் எடுக்கவும் இவர்களின் மீதான பொய்வழக்குகளை எதிர்கொள்ளவும் பெருமளவில் நிதி தேவைப்படுகின்றது.
அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும் நோக்கில் எங்களோடு தோள் கொடுத்து வழக்கு நிதி தரும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
பின்வரும் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Name: Vetrivel Chezhiyan Account Number: 62432032779 Bank Name: State Bank of Hyderabad Branch: Pozhichalur, Chennai IFSC Code: SBHY0021334
– இவண் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு: 99623 66321
பெரியார், வழக்கறிஞர் அருள்மொழி, வீரமணி, சுப.வீர பாண்டியன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசும் ஹெச் ராஜா அதற்கான தண்டனை விவரங்களையும் தெரிவிக்கிறார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆபாசமாக பேசியதாக கண்டனம் தெரிவிக்கும் இந்த கிரிமினல் பேர்வழிதான், தண்டிக்கப்படவேண்டிய நெ 1 கிரிமினல் என்பதை நிரூபிக்கிறது இந்த வீடியோ – பாருங்கள், பகிருங்கள்!
“நாங்கள் மனிதர்கள் இல்லையா? – ஆம்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட போலீசார் வேதனை” என்று தலைப்பிட்டு “தி இந்து” தமிழ் நாளிதழ் (ஜூலை, 22) ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. காயம்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண் போலீசாரைப் பற்றி விவரித்து விட்டு, கலவரத்துக்குக் காரணமான முக்கியப் புள்ளிகள் கைது செயப்படவில்லை என்று போலீசார் மனம் குமுறுவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
பவித்ரா என்ற பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது என்ற இளைஞரை இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் லாக் அப் கொலை செய்ததுதான் இப்பிரச்சினைக்குக் காரணம். கொலைக் குற்றவாளி மார்ட்டின் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், இதன் எதிர்வினையாக நடந்த “ஆம்பூர் கலவரம்” முதன்மைக் குற்றமாக்கப்பட்டுவிட்டது.
சட்டவிரோதமாக அடைத்து வைத்து போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஷமீல் அகமது.
இப்பிரச்சினை தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள், நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துகள் போன்ற அனைத்தும் போலீசை நிரபராதியாக்கி விட்டு, ஆம்பூர் முஸ்லிம் மக்களையும், ஷமீலையும், பவித்ராவையும் குற்றவாளியாகக் காட்டுகின்றன. நம் கண் முன்னே நடைபெற்ற ஒரு சம்பவம் எப்படியெல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, ஆம்பூர் கலவரம் என்று அழைக்கப்படும் இந்தச் செய்தியின் விவரங்களைப் பார்ப்போம்.
***
பள்ளிகொண்டாவுக்கு அருகில் உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் பவித்ரா, கடந்த மே 24 அன்று காணாமல் போகிறார். பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்த அவளது கணவன் பழனி, பின்னர் உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார். ஜூன் 5-ம் தேதி விசாரணைக்கு வந்த அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், போலீசுக்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுத்து வழக்கைத் தள்ளி வைக்கின்றனர். 19-ம் தேதி இந்த வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஷமீல் அகமது என்ற இளைஞரை பள்ளி கொண்டா போலீசு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார். பவித்ராவைக் கண்டுபிடிக்க மேலும் அவகாசம் வேண்டும் என்று போலீசு கேட்க, மீண்டும் அவகாசம் தருகிறார்கள் நீதிபதிகள்.
பவித்ராவும் ஷமீல் அகமதுவும் 6 மாதம் முன்பு வரையில் ஆம்பூரில் ஒரே தோல் தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள். சமீபத்தில்தான் திருமணமான ஷமீல், தன் மனைவியோடு ஈரோட்டில் குடியேறிவிட்டார். வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோடு சென்று ஷமீலைத் தொடர்பு கொண்டிருக்கிறார். பவித்ராவிடம் வழிச்செலவுக்கு காசு கொடுத்து வீட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு புத்திமதி சொல்லி, பவித்ராவின் வீட்டுக்குத் தனது செல்பேசியிலிருந்தே போன் செய்து அவள் ஊருக்கு வந்து கொண்டிருப்பதாகத் தகவலும் சொல்லியிருக்கிறார் ஷமீல். இருப்பினும் ஈரோட்டிலிருந்து கிளம்பிய பவித்ரா வீட்டுக்குத் திரும்பவில்லை.
தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறிய போதிலும் நடத்தை கெட்டவள் என்று முத்திரை குத்தப்பட்ட பவித்ரா.
ஜூன் 16-ம் தேதி ஷமீலை விசாரணைக்கு வருமாறு அழைத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ். தவ்கீத் ஜமாத்தின் மாவட்டத்தலைவரும் ஷமீலின் மாமனாருமான முகமது கவுஸ், விசாரணைக்காக ஷமீலை ஒப்படைத்திருக்கிறார். 24 மணி நேரத்திற்குப் பின் ஷமீலை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் 19-ம் தேதி வரை வெவ்வேறு இடங்களில் வைத்து ஷமீலை கொடுரமான முறையில் சித்திரவதை செய்திருக்கிறார் மார்ட்டின். மாமனார் முகமது கவுஸ் அந்த நான்கு நாட்களில் பல முறை போலீசு நிலையத்துக்கு நடையாய் நடந்தும், போனில் விசாரித்தும் யாரிடமிருந்தும் அவருக்கு பதில் கிடைக்கவில்லை.
இன்ஸ்பெக்டர் மார்ட்டின் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் கைதேர்ந்த போக்கிரி. மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடிய சிவலிங்கம் என்பவரை லாரி ஏற்றிக் கொல்ல முனைந்த கிரிமினல். இரண்டாண்டுகளுக்கு முன் ரியாஸ் கான் என்ற இளைஞரை அடித்தே கொலை செய்தவர். இவையெல்லாம் அந்த வட்டாரம் முழுவதும் தெரிந்த விசயங்கள் என்பதால் செய்தி அறிந்தவர்களிடையே பதற்றம் பரவுகிறது.
ஷமீலை 19-ம் தேதியன்று விடுவிக்கிறார் மார்ட்டின். நடை பிணமாக வீடு திரும்பிய ஷமீல், உடனே ஆம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். உடல்நிலை மோசமடைந்ததால், 23-ம் தேதி வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஷமீல் 26-ம் தேதி மாலை மரணமடைகிறார்.
இது லாக் அப் கொலை என்றே போலீசு ஒப்புக்கொள்ளவில்லை. ஷமீலை ஜூன் 16 அன்றே வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும், மறுபடியும் 19 அன்று அழைத்து விசாரித்துவிட்டு மீண்டும் திருப்பி அனுப்பி விட்டதாகவும் அப்பட்டமாகப் புளுகினார் வேலூர் மாவட்ட எஸ்.பி.செந்தில்குமாரி.
“என்ன வேண்டுமானாலும் செயலாம்” என்ற போலீசின் இறுமாப்புக்கும் திமிருக்கும் சூடு வைக்கும் விதத்தில், 26-ம் தேதி இரவே ஆயிரக்கணக்கில் ஆம்பூர் போலீசு நிலையத்தின் முன் திரண்டார்கள் முஸ்லிம் மக்கள். இரண்டு போலீசு வாகனங்கள் எரிக்கப்பட்டன. 8 பெண் போலீசார் உள்ளிட்ட 38 போலீசாருக்கு காயம். போலீசு படை சிதறி ஓட வேண்டியதாயிற்று. இதனைத் தொடர்ந்து சுமார் 115 பேர் மீது கொலை முயற்சி, சதி, கலவரம் செய்தல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தீவைத்தல் – எனப் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கும் போடப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் மார்ட்டினோ அன்றைக்கே தலைமறைவாகிவிட்டார்.
கொட்டடிக் கொலைக்கு எதிராக போலீசு நிலையத்தின் முன் திரண்டு போராடிய ஆம்பூர் மக்கள்.
“பவித்ராவைத் தேடிய தனிப்படைப் போலீசார், ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து கொண்டு, அம்பத்தூரில் ஒரு மகளிர் விடுதியில் பதுங்கியிருந்த பவித்ராவை வளைத்துப் பிடித்தனர்” (தினமலர்). தனக்கும் ஷமீலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், தன்னைத் தவறான பெண்ணாகச் சித்தரிப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார் பவித்ரா. பவித்ராவின் கணவன் பழனி கொடுத்த புகாரில்கூட ஷமீலின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா.
இருந்த போதிலும், ஷமீல் கொல்லப்பட்டு விட்டார். கொலை செய்த மார்ட்டினை சி.பி.சி.ஐ.டி தனிப்படை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான், கலவரத்தில் பாதிக்கப்பட்ட போலீசாரின் “கண்ணீர்க்கதை” வெளியிடப்படுகிறது.
***
கணவனுடன் வாழப்பிடிக்காத ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறினால் அது ஏன் ஒரு கலவரத்தில் வந்து முடிய வேண்டும்? பவித்ரா என்ற பெண்ணுக்கு பழனியுடன் வாழப் பிடிக்கவில்லை. பழனிக்கு பவித்ராவை விடுவதற்கு மனமில்லை. இதில் யார் தரப்பில் நியாயம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வாழப்பிடிக்காத ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி ஒரு மண உறவில் இருத்தி வைப்பது முறையற்றது, சாத்தியமற்றதும் கூட.
இன்று ஆயத்த ஆடை நிறுவனங்கள், தோல் தொழிற்சாலை முதல் பல்வேறு தொழிற்சாலைகளில் இளம் ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றுகின்றனர். இங்கெல்லாம் காதல் திருமணங்கள் அதிகமாக நிகழ்வது இயல்பே.
பல இளம்பெண்கள் திருமணத்துக்குப் பின் கைவிடப்பட்டு பிள்ளையுடன் நிராதரவாக நிற்கின்றனர். சிலர் வேறு துணையுடன் சேர்ந்து வாழ்கின்றனர். கணவனையும் பிள்ளையையும் கைவிட்டு வேறு ஒருவருடன் செல்லும் பெண்களும் உண்டு. கணவன் குடிகாரனாகவோ, பொருந்தா மணமாகவோ இருக்கும் பட்சத்தில், திருமணமான பெண்கள் பழைய மண உறவை ரத்து செய்ய விரும்புகின்றனர்.
நகரமயமாதல் காரணமாக பெண்கள் ஒரே நேரத்தில் ஜனநாயக விழுமியங்களுக்கும் பண்பாட்டு சீர்கேடுகளுக்கும் அறிமுகமாகின்ற சிக்கலானதொரு சமூகச் சூழலையும், அது தோற்றுவிக்கும் முரண்பாடுகளையுமே பவித்ரா – பழனி விவகாரம் பிரதிபலிக்கிறது.
தன்னை யாரும் கடத்தியதாக பவித்ரா கூறவில்லை. எனவே, இந்த வழக்கில் போலீசு தலையிடுவதற்கான முகாந்திரமே இல்லை. ஒரு வேளை ஷமீலுக்கும் பவித்ராவுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாக ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அது பவித்ராவும் பழனியும் நீதிமன்றத்திலோ, தமது உறவினர்கள் – நண்பர்கள் முன்னிலையிலோ வைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினையே அன்றி, போலீசு தலையிடவேண்டிய பிரச்சினை அல்ல.
இருப்பினும், போலீசு சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளிலும் தலையிடுவதை நாம் காண்கிறோம். கடன் வசூல், வீடு காலி செவது போன்றவற்றில் தொடங்கி, காதல், கணவன்-மனைவி தகராறு வரையிலான அனைத்து சிவில் விவகாரங்களிலும் சட்டவிரோதமாகத் தலையிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்வதுதான் போலீசின் அன்றாட நடவடிக்கையாக இருக்கிறது.
பழனியின் புகார் மீது இன்ஸ்பெக்டர் மார்ட்டின் எடுத்த நடவடிக்கை இத்தகையதுதான். வாங்கின காசுக்காகவோ, முஸ்லிம்கள் மீதுள்ள விசேடமான வெறுப்பின் காரணமாகவோ, அல்லது போலீசுத் திமிரின் விளைவாகவோ ஷமீல் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார். ஆம்பூர் மக்களிடம் வெடித்த கோபம் இந்த ஒரு கொலையினால் மட்டும் தோற்றுவிக்கப்பட்டதல்ல.
செம்மரக் கடத்தல் மற்றும் கொலை செய்த டி.எஸ்.பி. தங்கவேலு முதல் மார்ட்டின் வரை பல அராஜகங்களை எதிர்கொண்டு சகிக்க முடியாத நிலையில்தான் போலீசுக்கு எதிரான இந்தக் கலகம் வெடித்திருக்கிறது. ஆனால் ஊடகங்களோ, போலீசின் குற்ற வரலாற்றைத் துருவுவதற்குப் பதிலாக, பவித்ரா “ஓடிப்போன” கதையைத் துருவி ஆராந்து, அதன் விளைவுதான் இந்தக் கலவரம் என்ற கோணத்திலேயே செய்தி வெளியிட்டனர். “பவித்ராவின் பழைய காதலர்கள் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை” என்று வக்கிரமாக செய்தி வெளியிட்டது தினமலர்.
ஆனால், உயர்நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பவித்ராவோ , தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியதுடன், தனக்கு பழனியுடன் வாழ விருப்பமில்லாததால் மணவிலக்கு வேண்டும் என்று மட்டும்தான் கோரினார்.
“இந்தப் பெண்ணால் ஆம்பூரில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் உயிரிழந் துள்ளார்” என்று கூறி கொலைப்பழியை பவித்ராவின் மீது போட்டார் அரசு வக்கீல் தம்பித்துரை.
நீதிபதிகள் தமிழ்வாணனும் சி.டி. செல்வமும் அரசு வக்கீலின் இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்காதது மட்டுமல்ல, “உன்னால்தான் பிரச்சினை. திருமணமானவருடன் நட்பு வைத்ததால்தான் மதக்கலவரம் ஏற்படுகிறது. இதற்கு நீதிமன்றம் துணை போகாது. தமிழகம் அமைதியான மாநிலமாகத் திகழ்கிறது. இது போன்ற பிரச்சினையால்தான் தேவையில்லாத கலவரம் நிகழ்கிறது” என்று ஆம்பூரில் நடந்த பிரச்சினையை இந்து-முஸ்லிம் கலவரமாகத் திரித்ததுடன், பவித்ராவின் மீது நடத்தை கெட்டவள்” என்ற முத்திரையையும் குத்தி விட்டனர்.
“கோடு போட்டு நிற்கச் சொன்னான், சீதை நிற்கவில்லையே, சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே” என்று விளக்கப்படுகிறது ஆம்பூர் விவகாரம். போலீசு, ஊடகங்கள், அரசு, நீதிமன்றம் ஆகிய அனைவரும் வெவ்வேறு அளவில் வெவ்வேறு கோணத்தில் இந்தக் கருத்துக்கு வலுச் சேர்த்திருக்கின்றனர்.
இந்து மதவெறியர்கள் மட்டும்தான் ஆம்பூர் பிரச்சினையை லவ் ஜிகாத் என்று பிரச்சாரம் செய்தனர். பவித்ரா மதம் மாற்றப்பட்டதாக திடுக் தகவல் என்று தலைப்பிட்டு தினமலர் மட்டும்தான் செய்தி வெளியிட்டது. காஷ்மீரில் கூட போலீசார் இப்படித் தாக்கப்பட்டதில்லை என்று இராம.கோபாலன் மட்டும்தான் அறிக்கை வெளியிட்டார்.
இவர்கள் மட்டும்தான் என்று மதிப்பிடுவது உண்மைதானா? முசாபர் நகரிலிருந்து ஆம்பூர் வெகு தொலைவில் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறோமே, அது உண்மைதானா?
பொற்காலமென்று ஜெயா அடிமைகளால் போற்றப்படும் அ.தி.மு.க அரசின் யோக்கியதை என்ன? திவாலாகிப் போன அரசுக் கட்டமைப்பிலிருந்து மக்கள் அதிகாரம் எப்படி எழுந்து வரும்? தோழர் ராஜுவின் நேர்காணல் – இறுதி பாகம்!
இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய தங்களது திட்டத்தை அரசரிடம் விளக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; அதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” என்று கேட்பான் அரசன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில், ஜெயாவைப் பொருத்திப் பாருங்கள்; சற்றேறக்குறைய அதே காட்சிதான் தமிழகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.
பொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. வசூலித்தக் கப்பம், முழுமையாக போயஸ் கார்டனுக்குப் போய்ச்சேரவில்லை என்பதற்காகத்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய சான்று.
சூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளு்ம தமிழக முதல்வர் ஜெ. மற்றும் அதானி குழுமத்தின் அதிகாரிகள்.
பொதுவில், தமக்குச் சேரவேண்டிய கமிசனைக் கொடுத்தால் நாட்டையே எழுதிக் கொடுக்கத் துணியும் நாலாந்தரமான கொள்ளைக்கும்பலின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது, தனியார் மின்சாரக் கொள்முதலில் நடைபெறும் கொள்ளையும் ஊழலும்.
“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு.
அதானியிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி கருணாநிதி தொடங்கி ராமதாசு, இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. என்றாலும், இவை எவற்றையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அம்மாவின் அரசு.
கமிசனுக்காகவே ஆட்சியை நடத்திவரும் அம்மாவின் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லுமா, என்ன? “மின்பற்றாக்குறையைச் சமாளித்து தடையற்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமானால், அதிக விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது.
அம்மாவைப் பொறுத்தவரையில் மின்துறை என்பது பொன்முட்டையிடும் வாத்து. பொதுப்பணித்துறையில் 100 டெண்டர்கள் ஒதுக்கி 10 கோடி ரூபாய் கமிசன் பார்ப்பதற்குள், மின்துறையில் ஒரே கையெழுத்தில் 100 கோடிகளில் கமிசனாகத் தேற்றிவிடலாம் என்பதுதான் யதார்த்தம்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட் ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அம்மாவுக்கு கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.
தமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.
திட்டப்படி, 2008-ல் வேலையைத் தொடங்கி 2011-ல் முடிவடைந்திருக்க வேண்டிய, வடசென்னை அனல்மின் நிலையம் (தலா 500 மெகாவாட் வீதம் – இரண்டு யூனிட்கள்) மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் (500 மெகாவாட் – மூன்றாவது யூனிட்) ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப்பிறகு 2014-ல்தான் உற்பத்தியைத் தொடங்கின.
எண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட்டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்); உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களை தொடங்கிட வேண்டிய நிலையில்தான் 2011-ல் இருந்தது. இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. பேரத்திற்கான தாமதங்கள்தான் இவையென்பது சொல்லாமலே விளங்கும்.
2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றே, மின்துறையில் நிலவும் பகற்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும்.
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக, முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி மின்திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிசனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயா. பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் புது டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் பெல் நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. சீன அரசு நிறுவனமும், எஃப்.கே.எஸ். என்ற இந்திய நிறுவனமும் இணைந்து இன்னொரு டெண்டர் தாக்கல் செய்தன. அதன்பிறகும், ஜெ. அரசு எதிர்பார்த்த பேரம் படியாததால், இவ்விரு நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதையே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போட்டு வந்தது. பின்னர், இந்த டெண்டரையும் ரத்து செய்வதாக அறிவித்தது ஜெ.அரசு.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளோடு முரண்படும் அவ்வாணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.
“டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விசயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியும் சேர்ந்து, 2015-ம் ஆண்டு மார்ச்-13-ந்தேதி அந்த டெண்டரையே ரத்து செய்ய வைத்தது.” என்று ஆனந்த விகடனே (29-07-2015) அங்கலாய்க்கும் அளவிற்கு அம்மாவின் கமிசன் விவகாரம் நாறிக்கிடக்கிறது.
அரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தையும் தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்கட்டணங்களை உயர்த்திய போதிலும், மின்வாரியத்தின் கடன் அதிகரித்துச் செல்வதோடு, மாநிலத்தின் மொத்தக் கடனில் சரிபாதி அளவாக உயர்ந்திருக்கிறது.
நாம் செலுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கும் சேர்த்தேதான் செலுத்திவருகிறோம் என்பதில் உண்மையில்லையா, என்ன?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தொடர்ந்து பல நாட்கள் கூச்சல், குழப்பம், அமளியில் மூழ்கடித்து முடக்கி வைப்பது என்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் அதே அரசியல் உத்தியை இப்போது காங்கிரசுக் கட்சி கையிலெடுத்துக் கொண்டுள்ளது. மற்ற பிற எதிர்க்கட்சிகளோ இரண்டு தரப்புகளுக்கும் மாறிமாறி ஒத்தூதிக் கொண்டிருக்கின்றன. இதனால் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் மேலும் சீரழிந்து போயுள்ளதோடு, நீண்டகாலமாகவே நெருக்கடியையும் தேக்க நிலையையும் எட்டிவிட்டது. மோடி தலைமையில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைந்தபோதும் இந்தநிலைக்கு விடிவொன்றும் ஏற்பட்டுவிடவில்லை. உலகின் மிகச் சிறந்த அரசியல் அமைப்புமுறையாகச் சொல்லப்படும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள தோல்விதான் என்று சொல்ல வேண்டும்.
இது அமைச்சரவைக் கூட்டமா? அல்லது விசாரணைக் கூடமா? (கோப்புப் படம்)
உறங்கிக் கொண்டிருந்த கிழட்டுச் சிங்கமான பா.ஜ.க.வின் அத்வானி, யாரோ தன்னை இடறி விட்டது போலத் திடீரென்று தனது ஓரக்கண்ணைத் திறந்து ஒருமுறை உறுமிவிட்டு, மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது. “நாட்டில் அவசரநிலை போன்ற சூழ்நிலை மீண்டும் வராது என்ற நம்பிக்கை எனக்கில்லை. இன்றைய இந்திய அரசியலில் தலைசிறந்த தலைமைக்குரிய பண்புக்கான அறிகுறிகள் எதையும் என்னால் காணமுடியவில்லை. அரசியல் தலைமை முதிர்ச்சி அடைந்ததாக இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதன் பலவீனங்கள் காரணமாக அதன் மீது எனக்கு நம்பிக்கையில்லை” என்று கடந்த மாதம் ஒரு நேர்காணலின்போது அத்வானி கூறியுள்ளார். அவர், 1975-1977 ஆண்டுகளில் இந்திரா காந்தியின் அவசரகாலப் பாசிச ஆட்சியின் விளைவுகளை நேரில் அனுபவித்த முதன்மைப் பிரமுகர்களில் ஒருவர். அத்வானியின் மேற்கண்ட கருத்து மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் நாடு எதிர்கொண்டுள்ள அவசரநிலைப் பிரகடன ஆபத்து குறித்ததா, இல்லையா – என செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் காரசாரமாக விவாதித்தன.
பா.ஜ.க.வின் மோடி தலைமையால் அவசரநிலைப் பிரகடன ஆபத்து குறித்து அத்வானி அப்படிக் கூறவில்லை; எதிர்த்தரப்பினரால்தான் அவ்வாறான ஆபத்து வளர்ந்துள்ளதாக அத்வானி பேசியதாக பா.ஜ.க.வினர் அபத்தமாகப் புளுகித் தள்ளினர்; மறுபுறம், கட்சியில் தான் தனிமைப்பட்டுவிடும் பயபீதியிலும் அடுத்த குடியரசுத் தலைவர் பதவியும் கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்திலும் அத்வானியே தான் முதலில் பேசியதை மழுப்பித் திரித்து விளக்கமளித்தார். இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. கும்பலின் அரசு அனைத்தும் தழுவிய தோல்வியை அடைந்து வருகின்றது. அக்கும்பல் தனது அதிகாரத்தைத் தக்கவைத்து கொள்ள ஒரு அவசரநிலைப் பிரகடனம் மூலமாகவோ, வேறுவகையிலோ இந்துத்துவா பார்ப்பன பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதையே அதன் எத்தணிப்புகள் காட்டுகின்றன.
பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது என்ற பெயரில் மோடி அரசு மேற்கொண்ட கண்துடைப்பு நடவடிக்கைகள் எதுவும் ஒரு சிறுஅளவு கூடப் பலன் அளிக்கவில்லை. புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லுகள் செய்து, நாட்டின் தொழில் வளர்ச்சியும் மொத்த/நிகர உள்நாட்டு உற்பத்தியும் முன்னேற்றமடையத் தொடங்கி விட்டதாக புளுகித் தள்ளியது. வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து கூவிக்கூவி விற்க முயன்ற ‘மேக்-இன் இந்தியா’ என்ற சரக்கு விலை போகவில்லை. நான்குமுறை முயன்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நீதிமன்றங்களில் தனது எடுபிடிகளை நீதிபதிகளாக நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் உச்சநீதி மன்றத்தில் தடைகோரும் வழக்கில் சிக்கித் தொங்கலில் கிடக்கிறது. அந்த வழக்கில் வாதாடிய அரசுத் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி “தனிமனித அந்தரங்கம் ஒரு அடிப்படை உரிமை கிடையாது; அதை யாரும் அரசியல் சட்ட அடிப்படை உரிமையாகக் கோர முடியாது” என்று வாதாடி மோடி – அமித் ஷா கும்பலின் மனப்போக்கை அப்பட்டமாகவே அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநரின் “வீட்டோ” அதிகாரத்தைப் பறித்து ஒரு குழுவிடம் கொடுக்கவுள்ளது, மோடி அரசு. அதற்குக் காரணம் நாட்டின் வளர்ச்சியில் நான்குகால் பாய்ச்சலை ஏற்படுத்திவிடும் என்ற மோடி வெறுமனே ஊதிப்பெருக்கிய மேக்-இன் இந்தியா பலூனை பஞ்சர் செய்துவிட்டார், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். தான் நியமித்துள்ள அரசின் செய்தித்தொடர்பு உயர் அதிகாரி தவிர, வேறு அரசு அதிகாரிகள் யாரும் செய்தியாளர்களிடம் பேசக்கூடாது தடைவிதித்துள்ளது மோடி அரசு. அரசின் இரகசியங்களை மக்களும் ஊடகங்களும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. மோடி கும்பல் தனது ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாளில் ஊழலற்ற அரசு நடத்தியதாகப் பீற்றிக்கொண்டது. இந்த அண்டப் புளுகை அம்பலப்படுத்தும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, இராஜஸ்தான் முதல்வர் வசுந்திரா, ம.பி. முதல்வர் சிவராஜ் சௌகான் ஆகியோர் சிக்கிய ஊழல்-அதிகாரமுறைகேடுகளில் அடுத்தடுத்து வெளிவந்து நாடே நாறுகிறது. இவற்றில் ம.பி.யில் நடந்துள்ள வியாபம் முறைகேடுகளில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் நேரடியாக முன்னின்று நடத்தியுள்ளது. அளவிலும் தன்மையிலும் மிகப்பெரிய இம்முறைகேடுகள் நாட்டின் அரசியல் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன.
மோடியின் ஆட்சியில் சர்வ வல்லமை பொருந்தியதாக மாற்றப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் (இடமிருந்து) நிருபேந்திர மிஸ்ரா, பிரமோத் குமார் மிஷ்ரா, அஜித் குமார் தோவல்.
நாட்டின் விளையாட்டு, சினிமா-தொலைக்காட்சி, கல்வி, கலாச்சாரம், அறிவியல், வரலாற்று ஆய்வு அமைப்புகள் முதல் உச்சநீதி மன்றம் வரை அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் எடுபிடிகளைத் திணித்து வருகிறார்கள். இவை மட்டும் போதாதென்று சி.பி.ஐ., பிரதமர் அலுவலகம் ஆகிய உயர்ந்த அதிகார அமைப்புகளில் அதன் விசுவாசிகளை நியமித்துக்கொண்டுள்ளனர். வெவ்வேறு துறைக்கான அமைச்சகங்கள், அவற்றின் கூட்டுப் பொறுப்பாகவுள்ள அமைச்சகம் மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின் தலைமையைத் தாண்டி, கோப்புகளை அனுப்பிப் பிரதமரும் அவரது அலுவலகமும் முடிவுகள் எடுக்கும் வகையில் அதிகாரம் குவிக்கப்படுகிறது. 1975-1977-ம் ஆண்டு அவசரநிலை பாசிச ஆட்சிக்குத் தலைமை தாங்கியதே பிரதமர் அலுவலகம் என்ற அரசியல் சட்டத்துக்குப் புறம்பான ஒரு அதிகார மையம்தான். அதன் மூலம் அதிகாரத்தை முழுமையாகக் குவித்துக்கொண்ட பிரதமர் இந்திரா காந்தி பாசிச ஆட்சியை நடத்தினார்.
மீளமுடியாத அரசியல் – பொருளாதார நெருக்கடியிலும், தப்பிக்க முடியாத இலஞ்ச-ஊழல் முறைகேடு குற்றசாட்டுகளிலும் சிக்கி, அனைத்தும் தழுவிய தோல்வியிலும் சிக்கிகொண்டுள்ள மோடி அரசும் அவ்வாறான ஏற்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
1. தமிழ்நாடு மின்சார வாரியம் – அம்மா “கமிசன்” மண்டி!
நீங்கள் செலுத்தும் மின்கட்டணத்தில் அம்மாவுக்குச் செல்லும் கமிசன் எவ்வளவு?
2. அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு!
3. ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.
4. யாகூப் மேமன் தூக்கு : இந்து மனசாட்சிக்கு இன்னுமொரு பலி!
இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெருநம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்கு யாகூப் மேமனுக்குக் கிடைத்த தண்டனை தூக்கு.
5. வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.
6. கிரீஸ் : மேல்நிலை வல்லரசுகளின் நவீன ஆக்கிரமிப்புப் போர்!
மேல் நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் நாட்டின் இறையாண்மை, மக்களின் ஜனநாயக உரிமை என்பதற்கெல்லாம் எந்தப் பொருளும் கிடையாது என்பதை கிரீஸ் மக்களின் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
7. சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு : தீவிரமடையும் வறுமைக்குத் தீர்வு என்ன? ‘வளர்ச்சி’யின் மறுபக்கம் : 10.69 கோடி கிராமப் புறக் குடுமங்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட இல்லை. தினக்கூலிகளாகப் பிழைப்பை நடத்தும் இவர்கள் குடிசை வீடுகளில் வறுமையில் உழல்கின்றனர்.
8. கர்நாடகா லோக் ஆயுக்தா: ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய நிறுவனங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனிதப் பசுக்களாக இருக்க முடியும் என்ற மாயையை கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழல் தகர்த்து விட்டது.
9. மேக் இன் இந்தியா : நாடு வல்லரசாகாது : கொத்தடிமை தேசமாகும்!
ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச் சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்றன “சீனப் பாதையில்” சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதே மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டம்.
10. “அச்சத்தைக் கைவிடு! துணிந்து போராடு!!” – உதவி பேராசிரியர் விக்ரமின் கலகக்குரல்
11. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 4
மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் அரசுக் கட்டமைப்பு
பூமியின் ”இலக்கு கடந்த நாள்” (Earthi Overshoot day) கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டது. மத்தீஸ் வாக்கெனெக்கல் என்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரால் ஏற்படுத்தப்பட்ட குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க் Global Footprint Network என்ற தன்னார்வ அமைப்பு, ஆண்டு தோறும் பூமியின் இலக்கு கடந்த நாளை அறிவித்து வருகிறது. பூமியின் சேமிப்பிலுள்ள வளங்கள் மற்றும் மறு உற்பத்திக்கான வளங்களைக் கணக்கிட்டு அதற்கும் மனித இனத்தின் வருடாந்திர சுவீகரிப்பிற்கும் உள்ள சமன்பாட்டை கணக்கிடுவதன் மூலம் இந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.
1970-ம் ஆண்டின் சுவீகரிப்பையும் இயற்கை வளங்களின் இருப்பையும் கணக்கிட்ட இவ்வமைப்பு, அந்த ஆண்டின் “இலக்கு கடந்த நாளை” டிசம்பர் 23-ம் தேதியாக நிர்ணயித்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இந்த தேதி படிப்படியாக முன்னேறி, இந்த ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனித இனத்திற்கு இந்த ஆண்டு பூமி அளிக்க முடிந்திருக்க கூடிய வளங்களை நாம் ஆகஸ்டு 13-ம் தேதியோடு தின்று தீர்த்து விட்டோம் என்று பொருளாகிறது. இந்த தேதிக்குப் பின் நாம் சுவீகரிக்கும் பூமியின் ஒவ்வொரு வளமும், நமது தேவைக்கும் இயற்கையின் ரிசர்வ் மற்றும் மறு உற்பத்தித் திறனுக்கும் அப்பாற்பட்டதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து உறிஞ்சியெடுக்கப்படும் இயற்கை வளங்களைக் கணக்கிட்டால் இரண்டரை பூமிகளுக்கு ஒப்பான வளங்களை ஆண்டு தோறும் மனித இனம் சுவீகரிப்பதாக கொள்ள முடியும் என்று மேற்படி அமைப்பு அறிவித்துள்ளது. ஜப்பான் தனது அளவை விட 5.5 மடங்கு அதிக நிலப்பரப்பின் வளங்களை சுவீகரிப்பதாகவும், இந்தியா தனது அளவை விட இரண்டு மடங்கு அதிக நிலப்பரப்பின் வளங்களை சுவீகரிப்பதாகவும் இவ்வமைப்பு அறிவித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இயற்கையின் வளங்கள் உறிஞ்சியெடுக்கப்படும் இதே காலகட்டத்தில் தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருப்போரும் இல்லாதோருக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. வறுமையில் உழல்வோரின் எண்ணிக்கை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இதே காலகட்டத்தில் தான் அதிகரித்துள்ளது.
உலகின் மொத்த வளங்களில் சரிபாதி அளவு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளதாக தெரிவிக்கிறது ஆக்ஸ்பாம். மேலும், முதல் 80 பணக்காரர்களின் சொத்து மதிப்பானது ஒட்டுமொத்த மனித இனத்தில் வறுமையில் உழலும் 50 சதவீதமான மக்களின் சொத்து மதிப்பிற்கு ஈடானதாம். அதாவது சுமார் 400 கோடி மக்களின் சொத்து மதிப்பும், வெறும் 80 தனிநபர்களின் சொத்து மதிப்பும் ஒன்று! – இந்த இடைவெளி முற்றுப் பெறாமல் தொடர்ந்து வளர்ந்து வருவது குறித்த அச்சம் முதலாளித்துவ உலகில் மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கியுள்ளது.
இருப்போருக்கும் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பது ஆபத்தானது என்று ஐ.எம்.எஃப் தலைவர் கிரிஸ்டின் லகார்டேயும் போப்பாண்டவர் பிரான்சிசும் இப்போது அலறுகின்றனர். எதார்த்த உண்மைகள் மக்களைக் கிளர்ந்தெழச் செய்து முதலாளித்துவ இன்பக் கனவை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது என்ற அச்சத்தின் விளைவே அவர்களின் அலறல்.
எனினும், இயற்கையின் மேல் முதலாளித்துவ உலகம் கட்டவிழ்த்து விட்டுள்ள கூட்டு வல்லுறவு உடனடியாக நிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நச்சு சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக முதலாளித்துவ உலகம் பொருளாதாரப் பெருமந்தத்தில் இருந்து மீள வழி தெரியாமல் திகைத்து நிற்கிறது. பெரிய மீன் சின்ன மீனை விழுங்குவது போல், வல்லரசுகளால் சிறிய நாடுகள் விழுங்கப்படுகின்றன – கிரீஸ் நெருக்கடி இந்த அபாயச் சீரழிவின் சமீபத்திய வெளிப்பாடு.
முடிந்த வரை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிடுவதன் மூலம் இந்த நெருக்கடியில் இருந்து வெளி வந்து விட முடியும் என்று வல்லரசு நாடுகள் கணக்கிடுகின்றன. இதன் விளைவாக மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களின் மீதும், பல்லுயிர்ச் சூழலின் மீதும் மீட்டுறுவாக்கம் செய்ய முடியாத வகையிலான சுரண்டலை ஏகாதிபத்திய நாடுகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன.
நாம் தாதுமணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனையும், கிரானைட் திருடன் பி.ஆர். பழனிச் சாமியையும், ஆற்று மணல் கொள்ளையன் ஆறுமுகசாமியையும் மட்டுமே நாம் அறிந்துள்ளோம். தமிழகத்தை ஒட்டச் சுரண்டிய இம்முதலைகளைப் போல உலகளாவிய அளவில் பிரம்மாண்டமான இயற்கை வளக் கொள்ளையர்கள் சமீப காலமாக பெருகி வருகின்றனர். இவர்கள் இயற்கையிலிருந்து அநீதியான முறையில் அடிக்கும் கொள்ளை மீண்டும் எந்தக் காலத்திலும் எந்த வகையிலும் மாற்றீடு செய்ய முடியாத பாதிப்புகளை விட்டுச் செல்கிறது.
ஐநா சபையின் உணவு மற்றும் தண்ணீருக்கான அமைப்பு 2025-ம் ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகையில் சுமார் 200 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிட்டுள்ளது. இது வரை கண்டறியப்பட்டுள்ள எண்ணைய் ரிசர்வ் மேலும் 46 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமே அச்சம் தெரிவித்துள்ளது. இவை தவிர காடுகள், மலைகள் மற்றும் பூமியிலிருந்து கிடைக்க கூடிய வளங்கள் அனைத்துமே எதிர்வரும் நூற்றாண்டுக் காலத்திற்குப் பின் தீர்ந்து விடக் கூடிய அபாயத்தின் விளிம்பில் மொத்த மனித சமூகமும் ஊசலாடிக் கொண்டுள்ளது.
தனது நெருக்கடியில் இருந்து மீள முன்னெப்போதும் இல்லாத வெறியுடன் முதலாளித்துவ உலகம் செயல்பட்டு வருகிறது. மோடியைப் போன்ற தனது சுரண்டலுக்கு பொருத்தமான ஆளும் கும்பல் மூன்றாம் உலக நாடுகளில் அதிகாரத்தில் அமர்வதை உத்திரவாதம் செய்கிறது. இயற்கையின் மேல் தொடுக்கப்படும் தாக்குதலை “வளர்ச்சி” என்று தனது அடிவருடிகளான முதலாளித்துவ அறிஞர்களையும் ஊடகங்களையும் வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.
இயற்கையை அழித்தொழிக்கும் பேரழிவு நடவடிக்கை வளர்ச்சியல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதோடு அதை சர்க்கரை தடவிய பொருளாதார வார்த்தைகளில் நியாயப்படுத்தும் முதலாளிய அடிவருடிகளையும், இந்த நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் அரசியல் மற்றும் ஆளும் வர்க்க அடியாட்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ஒன்று, மனித குல விரோதிகளான இவர்கள் தோற்கடிக்கபட வேண்டும் – அல்லது ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்து போக வேண்டும். மூன்றாவதாக ஒரு வாய்ப்பு நம் முன் இனியெப்போதும் இருக்கப் போவதில்லை.
மக்கள் அதிகாரத்தின் தேவை என்ன?
மற்ற கட்சிகளிலிருந்து இது எப்படி வேறுபட்டது?
திவாலான அரசுக் கட்டமைப்பிலிருந்து
மக்களின் அதிகாரம் உதித்தெழுவது சாத்தியமா?
– “மக்கள் அதிகாரம்” மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம்
தோழர் மருதையன் நேர்காணல்
June 7, 2014 – ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல விரும்பும் அகதிகள் – கரை தொடாடமல் மரிப்பவர்களே அதிகம்!
ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்பவர்களின் எண்ணிக்கையில் நடப்பு ஆண்டான 2015-லும் எந்த மாற்றமும் இல்லை. அதாவது அகதிகளாக வருவொர் பிணங்களாக கரையேறுகிறார்கள் – அந்த எண்ணிக்கைதான் அப்படியே தொடர்கிறது.
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி வருகிறார்கள். ஜூலை மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் அகதிகள் மத்தியத் தரைக்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் வந்திறங்கியதாக உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முந்தைய மாதத்திலும் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரைக்கும் 1 இலட்சத்து 24 ஆயிரம் அகதிகள் கிரீசுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, மே மாத கடைசியில் மட்டும் ஐரோப்பாவை சேர்ந்த கடற்படை மற்றும் வியாபார கப்பல்கள் மொத்தம் 1,770 அகதிகளை மத்தியத் தரைகடல் பகுதியில் மீட்டுள்ளனர். உலகிலேயே அதிக அளவு அகதிகள் கப்பல்கள் தரைத் தட்டும் இடமாக மத்தியத் தரைக்கடல் உள்ளது.
கிரீஸில் உள்ள லெஸ்போஸ் (Lesbos), காஸ் (Kos) மற்றும் சியோஸ் (Chios) தீவுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஐரோப்பாவிற்கான உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் செயலாளர் வின்சென்ட் கோசெடேல் (Vincent Cochetel) அகதிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் தங்குமிடங்கள் செய்து கொடுக்க முடியாத இந்த குழப்பமான சூழலை எனது 30 ஆண்டு அனுபவத்தில் கண்டதில்லை என்கிறார்.
மத்தியத் தரைக்கடல் தீவுகளில் நிலவும் இந்த குழப்பமான மற்றும் வெட்ககேடான சூழலை கிரீஸ் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக் கொண்டு உள்ளது. ஏற்கனவே உள்நாட்டுக் குழப்பத்தாலும், ஐரோப்பிய யூனியனின் கிடிக்கிப் பிடி மற்றும் ‘சிக்கன நடவடிக்கையாலும்’ சொந்த மக்களையே கவனித்துக் கொள்ள இயலாத சூழலில் கிரீஸ் எவ்வாறு இந்த நிலைமையை கட்டுப்படுத்த இயலும்?
இது ஒருபுறமிருக்க தமது தாய்நாடுகளை விட்டு பெயர்த்தெறியப்படும் அகதிகளுக்கு இந்த பயணம் காசி யாத்திரை போல இறுதிப் பயணமாக மாறிவிட்டது. இது வரையில் நிகழ்ந்த அகதிகளின் உயிரிழப்பில் மிகப்பெரியதும் கொடூரமானதும் இந்த ஆண்டில் நிகழ்ந்த அகதிகள் கப்பல் விபத்தாகும்.
லிபியாவின் திரிபோலியில் இருந்து கிளம்பிய அகதிகள் கப்பலில் இருந்த 850 பேரில் 350 பேர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்கள். மீதி இருந்தவர்கள் சோமாலியா, சிரியா, மாலி, ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்டு 34 பேர்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.
உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015-ம் ஆண்டில் மட்டும் 30,000 அகதிகள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இறந்த அகதிகளில் வட ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 1,722 என்கிறது.
இங்கே மிகவும் கொடூரமான விஷயம் என்னவெனில், போன ஆண்டின் இறப்பு எண்ணிக்கையான 3,271 இந்த ஆண்டின் தொடக்க வாரங்களிலேயே எட்டப்பட்டு விட்டது.
அகதிகளின் இந்த நிலைக்கு முதன்மையான காரணம் ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக ஆப்பிரிக்க கண்டம் மாற்றப்பட்டதுதான். அது தோற்றுவித்த உள்நாட்டுப் போரும் மத அடிப்படைவாதமும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆட்கடத்தல் கும்பல்களின் முக்கியமான இலக்கு இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளும் அதன் மக்களும் தாம்.
ஜூலை 27 அன்று 2,000 க்கும் மேற்பட்ட அகதிகள் பிரான்ஸ், காலேசில் (Calais) உள்ள ஐரோப்பிய சுரங்க வளாகத்தில் நுழைய முயற்சி செய்தனர். அங்கிருந்து இங்கிலாந்தை சென்றடைய செய்த இந்த கடுமையான முயற்சியில் ஏராளமானோர் காயமுற்றனர். பிரான்ஸ் போலிஸ் 200 அகதிகளை கைது செய்துள்ளனர் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
இந்த கோடையில் மட்டும் 8 அகதிகள் ரயில் டிரக்கில் ஏற முற்பட்டு இறந்து போயினர்.
ஏற்கனவே பிரான்சில் 3000 பேர்கள் அகதிகளாக உள்ளனர். இந்த அகதிகளை கட்டுப்படுத்தத் தவறுவதாக பிரான்சும் பிரிட்டனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றன.
பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் தெரசா மே மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு காசிநியூ இருவரும் சேர்ந்து வெளியிட்ட கடிதத்தில், பெரும்பான்மையான அகதிகள், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வழியே பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு வருவதாக் கூறினர்.
இதற்கு நிரந்தர தீர்வாக இருவரும், ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்வோரின் எண்ணிக்கையை குறைப்பது தான் என்று ஒரே குரலில் கூறியிருக்கின்றனர். .
கடுமையான சட்டங்கள் போடுவதன் மூலமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலமாகவும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுபடுத்த வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் விடுக்கின்றன.
இந்த அகதிகள் மற்றும் புலம் பெயர்வோருக்கு தேவையானது உளவியல் ரீதியிலான ஆதரவு தான் என்று UNHCR யை சேர்ந்த ஒரு ஊழியர் கூறுகிறார். இந்த நெருக்கடிகளை சமாளிக்க வேறுவிதமான நீதிமுறைகளும் மனிதாபிமான முறைகளும் உள்ளதாக தன்னார்வ நிறுவனங்கள் கூறுகின்றனர்.
அதாவது அந்த நாடுகளிலேயே இதற்கான அகதிகள் முகாம்களை வைத்து அங்கேயே அவர்களை அரசியல் தஞ்சம் கோர சொல்லலாம் என்றும் இது ஐரோப்பாவிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்கிறார்கள். மனிதாபிமானம் என்று இவர்கள் வைக்கும் தீர்வுகள் கடைசியில் இந்த முட்டு சந்தில் தான் நிற்கின்றன.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் அகதிகளை மீண்டும் அவர்களது தாய் நாட்டிலேயே விட்டு விடப் போவதாகவும், அகதிகளைக் கடத்திக் கொண்டு வரும் கடத்தல்காரர்களை அழித்தொழிக்கப் போவதாவும் சவடால் அடித்து கொண்டு இருக்கின்றன. இதற்காக பிரிட்டிஷ் அரசு பிரான்சிற்கு 11 மில்லியன் டாலர்கள் உதவி செய்ய போவதாக அறிவித்து உள்ளது.
உலகம் முழுதும் இந்த ஏழை எளிய உழைக்கும் மக்கள் இருமுறை புலம் பெயர்ந்துள்ளனர். காலனி ஆதிக்க காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்கள் நேரடியாக ஆப்பிரிக்க ஆசிய மக்களை அடிமைகளாக இழுத்து சென்றனர். பிறகு இன்றைய மறுகாலனிய காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் போர்சக்கரத்தில் மாட்டிய ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் உள்நாட்டு நிலைமைகள், அம்மக்களை தமது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இரண்டாவது முறையாக நவீன அடிமைகளாக விரட்டுகின்றன. அதிலொரு பகுதி மக்கள் தாம் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாய் வீசியடிக்கபடுகின்றனர்.
21-ம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் பலிபீடங்களாக ஆசிய ஆப்ரிக்க ஏழை நாடுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த கொடூரத்தின் வடிவம் தான் மாறியுள்ளதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை.
இங்கே வட கிழக்கு மாநிலங்களில் இருந்து கிட்டத்தட்ட இதே காரணங்களுக்காக உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை இங்கே ஒப்பிடலாம். தண்டகாரண்யா காடுகளில் இருந்து விரட்டப்பட்ட பழங்குடி மக்கள் இந்தியாவெங்கும் சிதறுண்டு கிடக்கின்றனர். கட்டிடத் தொழிலாளிகளாகவும், மேம்பாலம் கட்டுபவர்களாகவும் மற்றும் அதற்கான மனித பலிகளாகவும் இருக்கின்றனர்.
அதே வேளையில் இங்கே இன வெறியர்கள் அவர்களது வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குடும்ப அட்டையை வழங்க கூடாது என்றும் நாவில் ஈரம் இல்லாமல் பேசுகின்றனர்.
அகதிகளாக புலம் பெயர்ந்து செல்லும் மக்களில் ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். ஏகாதிபத்தியங்களின் சுரண்டல்கள் மற்றும் பிற்போக்குத்தனத்தோடு உள்ள கூட்டணியாலும் அதன் எதிர்வினைகளான இசுலாமிய தீவிரவாத அமைப்புகளாலும் தமது வாழ்விடங்களை தொலைத்த இசுலாமிய மக்கள் ஒருபுறம் ஐ.எஸ் போன்ற இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். மறுபுறம் வாழ்வதற்கு நாதியற்று அகதிகளாக தூர தேசங்களுக்கு புலம் பெயர்கின்றனர்.
மத்தியத் தரைக்கடல் அகதிகளுக்கு ஒரு கொடூரமான பகுதியாக மாறி உள்ளது. ஏகாதிபத்தியங்களின் விளையாட்டரங்கான அவர்களது தாய் நாட்டில் இனி இடமில்லை. தொலைதூரத்தில் உயிர் பிழைக்க ஓடும் தேசங்களிலும் அவர்களுக்கு இடமில்லை. இடையில் இறந்துபட்டு போகும் இந்த அகதிகளுடைய உடல்கள் ஆழிப்பெருங்கடலின் ஆழத்தில் புதைக்கபடுகின்றன. எனில் சாவதற்கான இந்த போராட்டம், வாழ்வதற்காக என்று மாறும் போது தான் இவர்களும் இவர்களது நாடுகளும் மீண்டெழும்!