Thursday, December 5, 2019
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க அடக்குமுறைக்கு போலீசை ஏவும் அரசு ! உதவும் நீதிமன்றம் !

அடக்குமுறைக்கு போலீசை ஏவும் அரசு ! உதவும் நீதிமன்றம் !

-

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள்!

அடக்குமுறையை ஏவும் அரசு! குதறும் காவல் துறை! துணை நிற்கும் நீதிமன்றம்!

மதுரையில் கண்டன கருத்தரங்கம்

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின்  சார்பாக 22-08-2015 சனிக்கிழமை மாலை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் கண்டன  கருத்தரங்கம் நடைபெற்றது.

டாஸ்மாக் சாராயக்கடை எதிர்ப்புப்  போராட்டங்கள்  தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாய்ப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தீயை  மூட்டியவர்கள், மேலும் அதை அணையவிடாமல் பாதுகாப்பதில் முன்னணியாய்    இருப்பவர்களை இனம் கண்டு ஒடுக்குவதில்  பாசிச ஜெயா அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. புறக்காவல் நிலையங்களாக மாறி, காவல்துறை சொல்வதை வழி மொழியும்  இழி செயலில் இறங்கி இருக்கும் நீதி மன்றங்கள். இந்த மக்கள் விரோதக் கூட்டணியை அம்பலப்படுத்தவும், இதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள்,  அறிவுத்துறை சார்ந்தவர்கள்  கலகக்குரல் எழுப்ப வேண்டும்  என்ற நோக்கில் தான் இக்கருத்தரங்கம்  நடத்தப்பட்டது.

கருத்தரங்கத்திற்கு  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் குழுவின் அமைப்பாளர் தோழர் மு.திருநாவுக்கரசு தலைமையேற்றார். கீழமை  நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் ப.திருமலைராஜன், மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தலைமை ஏற்ற வழக்கறிஞர் மு. திருநாவுக்கரசு பேசும்போது, “ டாஸ்மாக் ஒரு நோய். அரசு மக்களுக்கு நோயைத் தருகிறது . இத்தகைய சூழலில் வாழ்வதே அவலம். பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக, விடுதலைக்காகப் போராடுவதே சரியானது. ஓட்டுப் போடுவதற்கு மட்டும்தான் மக்கள் என்று ஓட்டுக்கட்சிகள் கருதுகின்றன. இலவசங்களை மக்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏய்க்கிறார்கள். உழைப்பின் மூலம் வரும் வருமானத்தில் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும். உரிமைக்காகப் போராடுகிறவர்களை அடக்குமுறையைக் கையாண்டு கைது செய்கிறது அரசு. ஒரு ராஜுவைக் கைது செய்வதால் பல ராஜுக்கள் உருவாகிப் போராடும்  நிலை ஏற்பட அனைவரும் போராட வேண்டும்” என்றார்.

டாஸ்மாக் நடத்துவது சட்டப்படியானது, எதிர்த்துப் போராடுவது சட்ட விரோதமானதா? – மூத்த வழக்கறிஞர் ப.திருமலை ராஜன்:

”நீதிபதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பது வழக்காடிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர் எங்கிருந்து வந்தார், எப்போது வீடு வாங்கினார்? எப்போது கார் வாங்கினார். எந்தெந்த பேங்குகளில் கணக்கு வைத்துள்ளார் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.

நீதித்துறையில் மேலிருந்து கீழ்வரை லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது.  வன்னியர் ஜாதிக்கு நீதித் துறையில் அதிக ஒதுக்கீடு கேட்டுப் போராட என்னிடம்  வந்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். நீதித்துறையில் இரண்டே ஜாதிகள் தான் உள்ளன.  ஒன்று யோக்கியர்கள், மற்றொன்று அயோக்கியர்கள். எந்த ஜாதியில் இருந்து வந்தாலும், இந்த இரண்டு ஜாதியில் தான்  அடக்கம். இதில் யோக்கியர்கள் ஒன்று சேர மாட்டார்கள்.  அயோக்கியர்கள் சுலபமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றேன்.

நிதி கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மர்க்கண்டேய கட்ஜு சென்னை தலைமை நீதிபதியாக  இருந்த போது சில நீதிபதிகள் மீது ஊழல் புகார் கொடுத்தோம்.  அவர் விசாரணை கமிசன் போட்டார். நாகப்பன், கற்பக விநாயகம், சதாசிவம், ஆகிய மூன்று நீதிபதிகள். அவர்களை நாங்கள் சந்திக்கச் சென்றபோது அவர்கள் மூன்று பேரும்  நீதித்துறை அதிகாரி ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தார்கள். அந்த அதிகாரி முதல் தரமான அயோக்கியன். இவர்களிடமிருந்து எப்படி நீதி கிடைக்கும்.?

போரடிப் பெற்ற உரிமைகள் நீர்த்துப் போய்  சட்டமே பிற்போக்குத்தனமாக மாறிக்கொண்டு  இருக்கிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சட்டப்படி நோட்டீஸ் கொடுத்தால் சட்ட விரோதம் என்கிறார்கள். ரிலையன்ஸ்  அம்பானி, அண்ணன் – தம்பி சொத்துப் பிரச்சனைக்கு 3 நாட்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமரசம் பேசுகிறார்கள். எழுத்தாளர் அருந்ததிராய் ”நீதிமன்றங்கள் மக்களுக்காக இல்லை”  என்று சொன்னார். சொன்னதை வாபஸ் பெற முடியாது என்றதால் ஒரு நாள் திகார் சிறைக்குள் அவரைத் தள்ளியது நீதிமன்றம். இப்படித்தான் இருக்கிறது நீதிமன்றம்.

தமிழ் நாட்டில் அரசே சாராயக்கடை நடத்துகிறது. டாஸ்மாக்கின் கொடுமைகளைச் சொல்லித் தீராது. அண்மையிலே ஒரு இளம் பெண்  குடித்துவிட்டு போதையிலே வீதியில் சுரணையற்று விழுந்து விட்டாள். அவளுடைய கைக்குழந்தை பக்கத்திலே உட்கார்ந்து தாய்ப் பாலுக்காக அழுது அழுது  இறந்துவிட்டது.  குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டிய தாய் சாராயம் குடித்து சரிந்து விட்டாள். இதற்கு யார் பொறுப்பு ? அரசுதான் பொறுப்பு !

இந்திய தண்டனைச் சட்டம் 324-ன் கடைசிப் பகுதி ’ஒருவரின் உடல்நலத்தைக் கெடுக்கும் ரசாயனப் பொருளும் ஆயுதம்தான்’ என்று வரையறுக்கிறது. டாஸ்மாக் நடத்தும்  அரசு சட்டப்படி குற்றவாளி. ஆனால் அதனை எதிர்த்துப் போராடுவது சட்டப்படியானது.  அரசியல் சட்டம் 47 மது போன்ற போதைகளை ஒழிக்க வலியுறுத்துகிறது . 750 மிலி ஆல்கஹாலை ஒருவன் ஒரே நேரத்தில் குடித்தால் அவன் செத்துவிடுவான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குடிகாரர்களின் கல்லீரல், மூளை, தசைகள்  மெல்ல மெல்லக் கெட்டுவிடும். இதைத் தெரிந்தே அரசு செய்கிறது .

அரசு சாராயம் விற்பதைத் தடை செய்யவேண்டும் என்று வழக்கு போட்டால் அது அரசின்  கொள்கை முடிவு என்கிறது நீதிமன்றம். அப்படியானால், உடல் உறுப்புகளை விற்கவும், கஞ்சா, பிரவுன் சுகர், போன்ற போதை வஸ்துக்களையும், விபசாரத்தையும் கூட அனுமதித்து அரசாங்கம் வருமானத்தைப் பெருக்கலாமே. டாஸ்மாக்குக்கு எதிராக உறுதியாகப் போராடிக்கொண்டு இருக்கிறவர்கள் சிறைகளில். வதைபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றும் பொறுப்பு நம் அனைவர் கையிலும் இருக்கிறது.”

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்   வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசியது.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  கருத்துக்கு எதிராகத் தமிழகம் முழுக்க ஆளும் கட்சி போராட்டம் நடக்கிறது. இளங்கோவன் ஒரு கருத்தைச் சொன்னால்  அதை எப்படி எதிர் கொள்வது ? கண்டன அறிக்கை, அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம், அவமதிப்பு வழக்கு இப்படித்தான் எதிர் கொள்ள வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது?

அ.தி.மு.க. காலிகள் காங்கிரஸ் அலுவலகங்களை அடித்து நொறுக்குகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள். முச்சந்தியில் கொடும்பாவி கொளுத்துகிறார்கள். தமிழக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர், இந்நாள் நாடளுமன்ற  உறுப்பினர் நவநீதகிருஷ்ணன்  தலைமை தாங்குகிறார். நெல்லை மாநகரப் பெண் மேயர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏறி தற்கொலை  செய்வேன் என்று மிரட்டுகிறார். பாதுகாப்புக்கு வரும் போலீசைக் கூட கெட்ட வார்த்தைகளால் திட்டுகின்றனர் அ.தி.மு.க. காலிகள். இது வன்முறை இல்லையா? சட்ட விரோதமில்லையா?

ஆனால் ஒரு மாதம் முன்பாக டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மாணவர்களை போலீஸ் என்ன செய்தது. இரும்புக் கம்பிகளைக் கொண்டு  குறிவைத்துத்  தாக்கி மண்டையை உடைத்து  இரத்தக் காட்டேரியாகத் தாண்டவமாடியது. மாணவிகளை பூட்ஸ் கால்களால் உதைக்கிறார் சென்னை  உதவி கமிஷனர் மோகன்தாஸ். காவல் நிலையத்தில் வைத்தும், உளவுத்துறை போலீஸ் சிறைக்குள் சென்றும் கொடுரமாகத் தாக்குகிறது. பொய் வழக்குகளை அடுக்கடுக்காய்ப்  புனைகிறது. யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு அதிகாரம்?

விருத்தாசலம், மேலப்பாளையூர், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி  போன்ற இடங்களிலே டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் மற்றும் ஊர் பொதுமக்களைச் சிறையில் அடைத்து பிணை தர மறுக்கிறது அரசு. மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்  ராஜு மீது இரண்டு  கொலை முயற்சி வழக்குகளைப் போட்டு குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சி செய்கிறது ஜெயாவின் போலீஸ். சாராயத்துக்குப் பாதுகாப்பு, எதிர்த்துப் போராடுபவர்களுக்குச் சிறை வைப்பு. இது என்ன நியாயம்? அவர்கள் ஏற்படுத்திய சட்டத்தை அவர்களே மதிப்பதில்லை.

மக்கள் சாராயம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். குடிக்கத் தண்ணீர், மருத்துவம், கல்வி போன்ற அடிபடைத் தேவைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அரசு சாராயத்தைத் தருகிறது.  நீதிமன்றங்களுக்குப் போனால் சாராயம் விற்பது அரசின் முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடாது என்கிறார்  தலைமை  நீதிபதி. அரசிடம் மக்கள் பல  ஆண்டுகளாகக் கெஞ்சுகிறார்கள். ஆனால் அரசு மயிரளவுகூட செவி சாய்க்கவில்லை. உடைப்பதைத் தவிர  வேறு என்ன வழி?

அ.தி.மு.க  ரௌடிகள் அடித்து நொறுக்கினால் நடவடிக்கை கிடையாது. மற்றவர்கள் போராடினால் காட்டுமிரண்டித்தனமான ஒடுக்குமுறை. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பது உண்மையா?

பிளசன்ட் ஸ்டே  ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது தருமபுரியில் 3 மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்டனர் . சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்காவை சொல்லக் கூசும் வார்த்தைகளால் வசைமாறிப் பொழிந்த  வானரக் கூட்டங்கள் பல நாட்கள் தமிழகத்தையே நிலைகுலையச் செய்தது. இவர்கள் எல்லாம் குவாட்டரும் கோழிப் பிரியாணியும் கூலியும் கொடுத்துக் கூட்டி வரப்பட்டவர்கள் தான். இவை அனைத்தையும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததைத்  தமிழ் நாடே அறியும்.

ஆர்.கே.நகர்  இடைத் தேர்தலில்  ஜெயலலிதா போட்டியிட்டார் . அங்கே  நடந்தது என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு  கள்ள ஓட்டு போட்டு வந்ததை ஊடகங்கள்  படம் பிடித்துக் காட்டின.  ஒரு வாக்குச் சாவடியில்  மொத்தம் 800 ஓட்டுக்கள்தான். ஆனால் 900 ஓட்டுக்கள் பதிவாகியது எப்படி? தேர்தல் கமிசன் எங்கே  இருக்கிறது? என்ன செய்கிறது ? அரசியல் சட்டத்தைக் கழிப்பறைக் காகிதமாகக் கூட மதிப்பதில்லை. ஆனால் மக்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்று சொல்லி மிதிக்கிறது காவல் துறை.

மதுவினால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில்  ஏழை மக்கள் மடிவதுடன் இப்போது  நிமிடம் தோறும் நடைபெற்று வரும் அனைத்துக் குற்றச் செயல்களுக்கும் மதுதான் அடிப்படையாக இருக்கிறது என்று அரசே ஒத்துக்கொள்கிறது. ஆனால் எதிர்த்துப் போராடுகிறவர்களை மண்டையைப் பிளக்கிறது. சிறைக்குள் தள்ளி சித்திரவதை செய்கிறது.

டாஸ்மாக் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தில் தான் நலத்திட்டங்கள் நடக்கின்றது. 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார்கள் சாராயக் கம்பேனி முதலாளிகள்,  அவர்களின் ஊதுகுழல்கள். இலவசங்கள் எல்லாம் குப்பை; ஒன்றுக்குமே உதவாது  என்று சொல்லி மக்கள் வீதியில் வீசுகிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களுக்கு  மாற்றுப் பணியாக மலிவு விலை உணவகம், மருந்தகம் போன்றவற்றை அரசு நிறைய திறந்து வேலை தரலாமே?

அரசும் காவல்துறையும் இப்படி இருக்கிறது என்றால் ’சுதந்திரமான’ நீதித்துறை  எவ்வாறு இருக்கிறது? ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க சென்னை உயர்நீதிமன்றதிற்குள் காவல்துறையினர் சட்டவிரோதமாகப் புகுந்து நீதிபதிகள் முதல் வழக்கறிஞர், பொதுமக்கள் வரை  அனைவரையும் அடித்து  மண்டையை உடைத்தனர்.அவர்கள் மீது இதுவரை  எந்த நடவடிக்கையும் உச்சநீதிமன்றம்  எடுக்கவில்லை.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜரானது  செல்லாது என்று சொன்ன உச்ச நீதிமன்றம் குமாரசாமி தீர்ப்புச் சொல்லத் தடை இல்லை என்றது. ஜெயா கும்பலின் ஜாமீன் மனு மீது உடனடி விசாரணை. வழக்கை 6 மதத்திற்குள் முடிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு  உத்தரவு. குமாரசாமியின் தப்புக் கணக்குத் தீர்ப்பு. 10 சதவீதம் கொள்ளையடிக்கலாம் என்ற அனுமதி. இவையெல்லாம் எந்த சட்டத்தில் உள்ளது. நீதிமன்றங்களை லஞ்ச ஊழல் மற்றும் பார்ப்பனீய மனுதர்ம சாத்திரங்கள்தான் ஆட்சி செய்கின்றன.

இலட்சக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நமது மண்ணின் கனிமங்களைக் கொள்ளையிடும் கூட்டங்களுக்கு  ஆதரவாக  நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் நிற்கின்றன. கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி ,தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசன், ஆற்று மணல் கொள்ளையர்களிடம் பங்கு வாங்கிக்கொண்டு அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளை ராஜா, சி.எஸ்.கர்ணன், சி.டி.செல்வம் போன்ற நீதிபதிகள் தருகின்றனர். பாதிக்கப்படும் மக்களையும் வழக்காடும் வழக்கறிஞர்களையும் மக்களையும்  இந்த நீதியரசர்கள் கேவலப்படுத்துகின்றனர் .

அப்சல் குரு, யாகூப் மேமன் போன்றவர்களைச் சட்டவிரோதமாகவும், தார்மீக நெறிமுறைகளை  மீறியும்,  நரித்தனமாகவும் நம்ப வைத்துக் கழுத்தறுத்துக் கொலை செய்வதற்கு நம்முடைய பார்ப்பனீய நீதிமன்றங்கள் அப்பட்டமாக ஒத்துழைத்துள்ளன. இது பார்ப்பனீய இந்து மனசாட்சிக்கு அவர்கள் அளிக்கும் மதிப்பும் மரியாதையும். அரசியல் சட்டத்துக்கு அவமரியாதை. அதே நேரத்தில் 2002-ல் குஜராத்தில் 3000 இசுலாமியர்களைக் கொன்ற மோடியும் ஹரேன் பாண்டியா,  செராபுதீன் ஷேக் போன்ற பலரின் கொலைக்குக் காரணமான அமித்ஷாவும்  எந்த சட்டத்தாலும் தண்டிக்கப்படவில்லை. இசட் பிளஸ் பாதுகாப்புடன் இருந்து வருகிறார்கள். அமித்ஷாவை  வழக்கிலிருந்து விடுவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்துக்குக் கேரளா கவர்னர் பதவியைப் பரிசாக வழங்கி இருக்கிறது மோடி அரசு.

குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் கான் என்ற நடிகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்  சட்டத்திற்குப் புறம்பாக அவனுக்கு ஜாமீன் வழங்கி வெளியே விடுகிறது. இதுதான் நீதி மன்றத்தின் லட்சணம்.

அன்னா ஹசாரே, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றவர்கள் லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற  சட்டங்களைக் கொண்டு வந்து  நடைமுறைப்படுத்தினால் லஞ்ச ஊழல் முறைகேடுகள் ஒழிந்து நாடு முன்னேறிவிடும்  என்று சொல்கிறார்கள். கர்நாடக மாநிலத்திலே லோக் ஆயுக்தா  நீதிபதியின், மகன் அரசு அதிகாரிகளை மிரட்டியே 180 கோடிகளை லஞ்சமாகப் பெற்றுள்ளான். எனவே இந்த அமைப்பு முறையே தோற்றுப் போய் மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக மாறிவிட்டது என்பதே உண்மை.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்  தேர்வு, உயர்கல்வித் தேர்வுகளில் நடைபெற்றுள்ள பல்லாயிரம் கோடி ஊழலில்  இதுவரை 48பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்புடைய  முதலமைச்சர்,அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்து வருகிறார்கள் இவற்றையெல்லாம் பார்க்க மறுக்கின்ற விழிகண் குருடாக நீதிமன்றங்கள் இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில் தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து வருகின்ற  மக்களால்  என்ன செய்ய முடியும்? அதற்கு மாற்று வழி சொல்லுங்கள்.”  இவ்வாறு  தோழர் வாஞ்சிநாதன்  பேசினார் .

கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் அனைவருக்கும் நன்றி சொல்ல கருத்தரங்கம் நிறைவடைந்தது.

தோழர் லயனல் அந்தோணிராஜ்
கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ்

தென்மாவட்டங்களில் இருந்தும் மதுரை நீதிமன்றங்களிலிருந்தும் கணிசமான அளவில் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அறிவுதுறையினர், பெண்கள், சிறுவர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கீழைக்காற்று  வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

கருத்தரங்கம் நடைபெற்ற செய்தியாளர்  அரங்கத்தைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட உளவுத் துறையினர் குவிந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். கிளைச் செயலாளர் அவர்களை அணுகிக் கேட்டபோது ஒருவரும் பதில் சொல்லாமல் முகத்தை மறைத்துக் கொண்டனர். டாஸ்மாக்கை வாழவைப்பதில் அவர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை.

ஜெயா அரசு இரண்டை நம்பிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்று போலீஸ், இரண்டாவது டாஸ்மாக். டாஸ்மாக்கில் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட அம்மாவுக்குக்  கிடைக்கும் கமிஷன்தான் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் மறுநாள் 23-8-2015 ஞாயிறன்று மதுரை உளவுத்துறை  சப் இன்ஸ்பெக்டர்  சுந்தர் என்று பெயர் சொல்லிக்கொண்டு  ஒருவர்  கிளைச் செயலாளர்  வீட்டுக்கு வந்துவிட்டார். மக்கள் அதிகாரம் பற்றி விபரம் வேண்டுமாம் அவருக்கு. ”யாரைக் கேட்டு வீட்டுக்குள் வந்தீர்கள் ? எந்த அனுமதியும் ஆதாரமும் இல்லாமல்  ஒருவரின் வீட்டுக்கு வந்து விசாரிப்பதற்கு  எந்த சட்டத்தில்  இடமிருக்கிறது” என்று கேட்டபோது “சாரி  சாரி” என்று மழுப்பி விட்டுச் சென்றுள்ளார் அந்த உளவுத் துறை.

அதோடு நில்லாமல் ம.உ.பா மையத்தின் உறுப்பினர் தோழர் கணேசன் வீட்டுக்கும் உளவுத்துறை சென்றுள்ளது. மக்கள் அதிகாரம் பற்றியும்  ஆகஸ்ட் 31 கெடு பற்றியும் அவரிடம் கேட்டுள்ளனர். மேலும்  அவரைப் புகைப்படம் எடுத்துள்ளார். உளவுத் துறையினரை புகைப்படம் எடுக்க தோழர் முயன்ற போது இல்லை உங்கள் படத்தை அழித்து விட்டோம் நீங்கள் எங்களை எடுக்க வேண்டாம்  என்று சொல்லி விட்டுச் சென்று இருக்கின்றனர்.

இது போல தோழமை அமைப்புத் தோழர்களிடமும்  உளவுத்துறை “மக்கள்  அதிகாரம், ஆகஸ்ட் 31 கெடு” பற்றி துழாவிக் கொண்டு இருக்கிறது.

ஜெயாவின்  கொத்தடிமைகளான இவர்கள் ஈடுபடும்  இவ்விதமான சட்டவிரோத  அச்சுறுத்தலுக்கு  எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தகவல்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக்கிளை
98653 48163, 9443471003

  1. //ஜெயாவின் கொத்தடிமைகளான இவர்கள் ஈடுபடும் இவ்விதமான சட்டவிரோத அச்சுறுத்தலுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.//

    உண்மையில் இந்திய சட்டத்தையும், நீதித்துறை நடவடிக்கைகளையும் நம்புகின்றீர்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க