நெய்வேலி நிலக்கரி தொழிலாளர் போராட்டம் வெல்க !
அன்பார்ந்த தொழிலாளர்களே!
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12,000 நிரந்தரத் தொழிலாளர்களும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.
நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் புதுப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் 31-12-2011 ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதன் பின்னர் 43 மாதங்களாக ஊதிய உயர்வு தொடர்பாக 25 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒரு அற்பத் தொகையை ஊதிய உயர்வாக தருவதாகக் கூறி வருகிறது NLC நிர்வாகம். தொழிலாளர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளைக் கூட நிர்வாகம் ஏற்கவில்லை. தொழிலாளர்கள் தரப்பில் தரப்பட்ட வேலை நிறுத்த அறிவிப்புக்கு நீதிமன்றம் தடைவிதித்து தொழிலாளர் விரோதப் போக்கைக் காட்டி வருகிறது.
இதனை மீறி கடந்த 20-ம் தேதி அதிகாலை முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆதரவுடன் நடக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நாட்டின் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்று!
NLC தொழிலாளர்களின் போராட்டத்தில் முக்கியமான கோரிக்கைகளில் ஊதிய உயர்வு, 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த ஈடுகட்டும் விடுப்பை (C Off) ரத்து செய்யும் நிர்வாகத்தின் முடிவைக் கைவிடுதல் போன்றவை முக்கியமானவை. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேசி முடிக்கும் நடைமுறையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றி இருப்பதே தொழிலாளர்களை நசுக்கும் முடிவாகும். மேலும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட அங்கீகரிக்க மறுக்கின்றது ஆலை நிர்வாகம்.
இதற்கு முக்கியக் காரணம், 1992-ல் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைப் பறிப்பது போன்ற அடக்குமுறைகளை ஏவிவருகின்றன மத்திய மாநில அரசுகள். மோடி அரசு மேலும் தீவிரமாக செயல்பட்டு, தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளையும் பறித்துவருகிறது. இதற்கான மசோதாவையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறது.
குறிப்பாக, பொதுத்துறை தனியார்மயமாக்குவதற்கு முன்பாக, பன்னாட்டுக் கம்பெனிகளும் கார்ப்பரேட் கம்பெனிகளும் விதிக்கும் நிபந்தனைகளே, அவர்களின் இலாப வெறியை உத்திரவாதப்படுத்திக் கொள்பவையாக இருக்கின்றன. அந்த வகையில்தான், குறைந்த கூலி, பராமரிப்பு செலவுகளைக் குறைப்பது போன்றவற்றை பொதுத்துறை நிறுவனங்களில் தற்போதே அமுலுக்குக் கொண்டுவரவேண்டும் எனக் கோருகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை மிக அற்பத்தொகையைக் கொடுத்ததும் இதன் வெளிப்பாடே!
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இந்த தனியார்மயக் கொள்கைகளைத் தத்தமது மாநிலங்களில் தீவிரமாக அமுல்படுத்தி வருகின்றன. இதனால், பாதிக்கப்படும் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் போது மட்டும் நீலிக்கண்ணீர் வடித்தும், தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பது போல நடித்தும் வருகின்றன. “தொழிலாளர்களின் பிரச்சனையை விரைந்து பேசி தீர்க்க வேண்டும்” என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைப்பதுடன் நின்று கொள்கின்றன.
மற்றொருபுறம், மின்சாரத்துறை தனியார்மயமாக்கம், கனிமவளங்கள் சூறையாடல், நிலக்கரியில் அண்மையில் நடந்துவரும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் போன்றவை அனைத்தும் தனியார்மயம் தாராளமயத்தின் விளைவே. மின்சாரத்துறையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து, அதன் மூலம் தொடர்ந்து மின்சார விலையேற்றத்தை மக்கள் மீது திணித்திருப்பதும் இதன் விளைவே. இதன் மூலம், மின்சாரத்தை தொடர்ந்து விலையேற்றவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களைக் கொள்ளையடிக்கவும் முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மக்கள் நல அரசு என்ற போர்வையை அரசு கழற்றி வீசிவிட்டது. அதாவது, இலவச மருத்துவம், இலவசக் கல்வி, நீதி, சட்டம் போன்ற அனைத்தையும் இந்த அரசே கடைப்பிடிப்பதில்லை. மக்களுக்கு குறைந்தப் பட்ச தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு இந்த அரசு மக்களை ஆளத் தகுதியிழந்துவிட்டது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வாழும் உரிமையை வழங்குவதுதான் ஜனநாயகம் என்று இவர்கள் பேசியதை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, அப்பட்டமாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடியாளாக அரசு செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கப் போராட்டங்களையும் விவசாய சங்கப் போராட்டங்களையும் கடுமையாக ஒடுக்கிறது.
இதனால், சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற குறைந்தபட்ச தேவைகளுக்கு மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இலஞ்ச ஊழல், பாலியல் வன்கொடுமை, டாஸ்மாக் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக மக்களே திரண்டெழுந்து, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கின்ற போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன.
இவ்வுண்மைகள் நமக்கு உணர்த்துவது என்ன? தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தினால் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள், சிறு தொழில் செய்பவர்கள் அனைவரும் இனியும் தனித்தனியாகப் போராடி வெற்றிபெற முடியாது. இதற்கு உதாரணம், சமீபத்தில் நடந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டமே. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நீண்டகாலமாக இக்கோரிக்கைகளுக்காக நடத்தியப் போராட்டத்தின் விளைவு மிகச் சொற்பமான (மூன்றாண்டுகளுக்கு 5.5%. அதாவது ரூ 500 முதல் 1500 வரை) ஊதிய உயர்வே இது ஊதிய உயர்வு என்பதைவிட, அடக்குமுறை தொடர்கிறது என்பதுதான் உண்மை!
மேலும், சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு போராட முடியாது என்பதுதான் அனுபவம். தற்போது, NLC தொழிலாளர்களும் நீதிமன்றத் தடையை மீறித்தான் போராடி வருகின்றனர்.
இந்தச் சூழலை நாம் உணரவேண்டும். NLC தொழிலாளர்களின் மீதான அடக்குமுறைகளும் தனியார்மயமும் பிரிக்க முடியாதவை. இத்தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது, இந்த அரசு ஆளத் தகுதியிழந்ததன் விளைவு. ஆகையால், தொழிலாளர்கள் பரந்துபட்ட ஒரு ஐக்கியத்தை உருவாக்குவதும், அடுத்த கட்டமாக அரசை நிர்பந்திக்கும் ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களுக்கும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தங்களது உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!
NLC தொழிலாளர்களின் போராட்டம் வெல்க!
மத்திய அரசே!
- 43 மாதங்களாக நிறைவேற்றாத ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி தீர்வுகாண்!
- பொதுத்துறைகள் தனியார்மயத்தை கைவிடு!
உழைக்கும் மக்களே, தொழிலாளர்களே!
- NLC தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளும் மின் கட்டண உயர்வும் தனியார்மயத்தின் விளைவுகளே! இந்த அரசு மக்களை ஆளத் தகுதியிழந்துவிட்டது என்பதன் வெளிப்பாடே!
- NLC தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம்! அரசை நிர்பந்தித்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்துப் போராடுவோம்!
- NLC தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784
அமெரிக்க ஏவுகணைகள் = அமெரிக்க பத்திரிகைகள்
அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடி செயல்களுக்கு எப்படி பக்க வாத்தியங்கள் இசைத்து அதன் சொந்த மக்களை நுட்பமாக ஏமாற்றுகின்றன என்பதற்கு சில சமீபத்திய சான்றுகளைப் பார்ப்போம்.

2015, மே – 9 அன்று கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்து பார்த்ததாக வட கொரியா தெரிவித்தது. இது ஒரு ஆத்திரமூட்டும் செயல் என்றும் , தென்கொரிய – அமெரிக்கா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியினாலும், உலக நாடுகளின் ஆதரவு கிடைக்காததன் ஆத்திரத்தினாலும் வட கொரியா அடுத்தடுத்த ஏவுகணை சொதனைகளில் ஈடுபடுகிறது என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததாக யூ.எஸ்.ஏ டுடே என்ற அமெரிக்கப் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மார்ச் – 23 அன்று அமெரிக்கா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து அணுகுண்டை ஏவ வல்ல ஏவுகணையை சோதித்துப் பார்த்தது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கா இது போன்று 3 முறை சோதித்து பார்த்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஜப்பானுடன் சேர்ந்து தயாரித்த ஏவுகணைகளை() ஜூன் – 6 அன்று பரிசோதித்துப் பார்த்துள்ளது. பாகிஸ்தானையும் சீனாவையும் காரணம் காட்டி இந்திய அரசும் கூட அணுகுண்டை தாங்கி செல்லும் அக்னி – 5 ஏவுகணையை ஜனவரி மாதத்தில் சோதனை செய்து பார்த்துள்ளது. அது மட்டுமல்லாமல் மார்ச் – 19 மற்றும் ஏப்ரல்–4 ல் வேறு சில ஏவுகணை சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.

இது போன்ற சோதனைகள் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது என்று ஏவுகணை சோதனையில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் கூறி வருகின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது, அமெரிக்க அரசும், அதன் ஊடகங்களும் அதே போன்ற தர்க்க நியாயத்தை ஒருபோதும் தம் எதிரிகளிடம் எதிர்பார்ப்பதில்லை. அவற்றை நிராகரிக்கவே செய்கின்றனர்.
ஒவ்வொரு முறை வடகொரியா ஏவுகணை சோதனை செய்யும் போதும் கொரியத் தீபகற்பம் முழுமைக்கும் பதட்டமான சூழல் நிலவுகிறது என்று அமெரிக்க சார்பு ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால், அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தலுக்கு எதிராக இது போன்ற சோதனைகளை தான் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாக கூறி வருவதை இருட்டடிப்பு செய்கின்றன.
வடகொரியாவின் செயல்களுக்கு கண், காது, மூக்கு வைத்து அமெரிக்க ஊடகங்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பலவிதமான காட்சிப் படிமங்களாக மக்களின் மூளையில் சொருகி வருகின்றன. அதே வேளையில் அமெரிக்கா ஆக்கிரமிக்கும் நாடுகளைப் பற்றி இட்டுக் கட்டி எழுதி தனது சொந்த மக்களை ஒரு பீதியிலேயே வைத்திருக்கின்றன. எந்த ஒரு நாடு அமெரிக்க பத்திரிகைகளுக்குத் தீனியாக இருக்கிறதோ அந்த நாடுதான் அமெரிக்க இராணுவத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் அந்த நாடுகளைத் தாக்குவதற்கான தார்மீக ஆதரவுத் தளத்தை பொது மக்களிடம் பெறுவதற்கு அமெரிக்க ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

இசுரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான பிரச்சினையில் பாலஸ்தீனத்தை தனிமைப்படுத்தவும், பாலஸ்தீனத்தைத் தாக்குவதற்கு இசுரேலுக்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியிலான உதவிகள் அமெரிக்கா அளிப்பதை நியாயப்படுத்தவும் அமெரிக்க ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
சமீபத்தில் ஜூன் 16 அன்று இசுரேலிய வெளியுறவுத்துறை “காசாவைப் பற்றி அறிந்து கொள்ள உங்கள் கண்களை திறவுங்கள்” (open your eyes about Gaza) என்ற அனிமேஷன் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், ஒரு வெளிநாட்டு பத்திரிக்கை நிருபர் ஒருவர் “நாம் காசா நகரத்தின் மையத்தில் இருக்கிறோம். இங்கே மக்கள் அனைவரும் அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இங்கே தீவிரவாதிகள் யாரும் இல்லை, இருப்பவர்கள் அனைவரும் சாதாரண மக்களே” என்று பேச ஆரம்பிக்கும் போது நகரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபடுவர். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிராக தீவிரவாதிகளின் செயல்கள் இருக்குமாறு காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி மூலம் பாலஸ்தீனம் இன்று இரத்தக் களறியாக இருப்பதற்கு தனக்கு எந்த பாத்திரமும் இல்லை, அனைத்திற்கும் தற்போது பாலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகள் தாம் காரணம் என்று இசுரேலிய அரசுத் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க – இசுரேலிய ஊடகங்கள் அதற்கு பக்க வாத்தியங்கள் வாசித்து வருகின்றன.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஐக்கிய நாடுகளின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு குழு வெளியீட்ட புள்ளிவிவரங்கள் இதற்கு மாறான தகவல்களைத் தெரிவிக்கின்றன. அமெரிக்க – இசுரேலிய மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான சண்டையில் 2014-ல் மட்டும் 1,483 அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அதில் 521 பேர் குழந்தைகள் மற்றும் 283 பேர் பெண்கள். ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் தங்களது சொந்த இடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர், 18,000 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 15 ஆண்டுகள் (1990-2005) வெளிநாட்டு நிருபராகவும் , மத்திய அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அனுபவம் மிகுந்த கிரீஸ் வெட்ஜஸ், இசுரேலுக்கு ஆதரவான கருத்துக்கள் எப்படி திணிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும் அதற்கு பத்திரிக்கையாளர்கள் எவ்வாறு நிர்பந்திக்கபடுகிறார்கள் என்பதைப் பற்றியும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பிப்ரவரி 13 அன்று இங்கிலாந்தை சேர்ந்த 100 கலைஞர்கள் பாலஸ்தீன மக்களை ஆதரித்தும், இசுரேலுடையேயான கலாச்சார உறவுகளை புறக்கணிப்பதாகவும் கார்டியன் பத்திரிகைக்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தனர். இதுவரையிலான கொடூரமான ஆக்கிரமிப்புகளில் ஒன்றான இதன் மூலம் பாலஸ்தீன மக்களது வாழ்வாதாரம் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். இசுரேலின் தாக்குதல் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரங்களை பாதிப்பதுடன் குறிப்பாக அவர்களது கலாசார அடையாளங்களை குறி வைத்தும் நடத்தபடுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இசுலாமியத் தீவிரவாதிகள் வேறு மதத்தினரது கலாச்சார அடையாளங்களை அழித்தொழிப்பதாக கூறிக் கொண்டு அமெரிக்க மற்றும் இசுரேல் அரசுகள் கடுமையானத் தாக்குதலை மேற்கொண்டு அப்பாவி மக்களை அழித்துக் கொண்டு இருக்கும் அதே வேளையில் ஊடகங்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த இனவழிப்பு குறித்த உண்மைகளை மறைத்தோ அல்லது ஹமாஸ் அமைப்பினரது தாக்குதல்களை மிகைப்படுத்தியோ பொதுப்புத்திக்குள் புதைத்து விடுகின்றன.
அமெரிக்காவின் நடவடிக்கைகளின் பின் விளைவுகள் பெற்றெடுத்த பிள்ளைகள் தாம் அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் என்று தமது சொந்த நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தார்மீகக் கடைமையை ஊடகங்கள் கைகழுவிக் கொண்டு உள்ளன.
ஈராக்கின் மீதான தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த புஷ் கூறிய வார்த்தைகள், “ஈராக்கை நிராயுதபாணியாக்கி, அதன் மக்கள் விடுவிப்பது மற்றும் உலகைக் காப்பது” என்பவை உலகெங்கும் உள்ள ஊடகங்களில் திரும்பத் திரும்ப விளம்பரப்படுத்தப்பட்டன. தன்னை ஒரு மீட்பனாக அறிவித்து தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு உலகுத் தழுவிய பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டது அமெரிக்கா. ஈராக் என்ற ஒரு பெரும் புதைகுழியில் அமெரிக்க பொருளாதாரம் புதையும் வரையில் அது நீடித்தது. அதன் பின்னர் சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாகவும் பொருளாதார ரீதியிலான கடுமையான பின்னடைவு காரணமாகவும் மண்ணைக் கவ்வி பின்வாங்கியது.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்த பம்மாத்து, தீவிரவாதிகளை அழிப்பதில்லை மாறாக அவர்களை உருவாக்கத்தான் செய்கிறது. அல்கொய்தா தீவிரவாத அமைப்பினரை உருவாக்கிய அமெரிக்கா பின்னர் அதன் தலைவர் பின்லேடனை அழிப்பதற்காக போர் நடத்தியது மட்டுமல்லாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினருக்கு புரவலராக அமெரிக்கா இருந்து வருவதும் அம்பலமாகி சந்தி சிரிக்கின்றது.
அமெரிக்க ஊடகங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை பற்றி அதன் மக்களை அச்சமூட்டி வரும் அதே நேரத்தில், அதன் உருவாக்கத்தில் அமெரிக்காவின் பங்கைப் பற்றி அமைதி காத்து வருகின்றன. இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 100 பேர்களின் தலையைத் துண்டித்து படுகொலை செய்த அமெரிக்காவின் விசுவாசியான சவூதி அரசின் காட்டுமிராண்டி செயல்களை கண்டும் காணாமல் இருக்கும் ஊடகங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் படுகொலைகளை பற்றி எழுத எந்த ஒரு தர்க்க நியாயமும் இல்லை.
ஐ.எஸ் தலையை துண்டிக்கும் வீடியோவை காட்டும் அமெரிக்க ஊடகங்கள், அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் சித்திரவதை சிறைகளை நியாயப்படுத்துகின்றன. ஆனால், தலை துண்டிக்கப்படும் வீடியோவில், அந்த படுகொலைகள், அமெரிக்க அரசின் அபு கரீப் சிறை சித்திரவதைகளுக்கு எதிர்வினை என்று கொலையாளிகள் கூறுவதை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விடுகின்றன.
ஜூலை – 6 காலைப் பொழுதில் வடக்கு யேமன் துறைமுக பகுதியில் சவுதி-அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகளின் வான்வெளித் தாக்குதலால் 45 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேலான அப்பாவி மக்கள் படுகாயமுற்றனர். ஏழை நாடான யேமனைத் தாக்குவதற்கு அரேபியாவிற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. தமது சொந்த அரசின் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அமெரிக்க மக்களுக்கு தெரியப்படுத்த இந்த ஊடகங்கள் தவறுகின்றன.
உலகெங்கும் உள்ள ஜனநாயகவாதிகள், மனித உரிமை அமைப்புகள் அமெரிக்கா மற்றும் இசுரேலின் பயங்கரவாத செயல்களை அம்பலபடுத்தி வந்தாலும் அவை பெரும்பாலும் பொது மக்களின் செவிகளுக்கு எட்டுவதில்லை. வெகுஜன ஊடகங்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொந்தமாக இருப்பதால் அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களால் சிதறுபட்ட அப்பாவி மக்களின் இரத்தத் துளிகள் தாம் இம்முதலாளிகளின் பத்திரிகைகளின் “எழுத்து மையாகவே” மாறுகின்றன.
மேலும் படிக்க:
சி.ஆர்.ஐ முதலாளி சேவையில் அரசு – கோவை பொதுக்கூட்டம்
“சட்டவிரோத கதவடைப்பை நீக்கு! இல்லையேல் குடும்பத்தோடு எங்களை சிறையிலடை!!” என்ற கோரிக்கையுடன், கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி 90 நாட்களுக்கும் மேலாக உறுதியான போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர், கோவை சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனத்தின் தொழிலாளர்கள்.

கோவை சின்னவேடம்பட்டி, சி.ஆர்.ஐ. நிறுவனம் கதவடைப்பு செய்யப்பட்டிருக்கிறது. 1987-ல் இராஜேந்திரா இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் குடிசைத் தொழிலாக தொடங்கப்பட்ட சி.ஆர்.ஐ., இன்று கோவை மாவட்டத்தில் ஆறு கிளைகள், சீனாவில் ஒரு கிளை என்று வளர்ந்திருக்கிறது. இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் விவசாயம், தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்திற்கான நீரிறைக்கும் இயந்திரங்கள் உள்நாட்டில் மட்டுமின்றி, 120 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இன்று இந்நிறுவனத்தின் ஆண்டு வணிகம் ரூ 1100 கோடி.
சின்னவேடம்பட்டி கிளையில் பணியாற்றும் 160 பேரில் 50 பேர்தான் நிரந்தர தொழிலாளர்கள். மற்றவர்கள் தற்காலிக தொழிலாளர்கள். 5 முதல் பத்தாண்டுகளுக்கும் மேலாக, தற்காலிகத் தொழிலாளர்களாகவே பணிபுரியும் இவர்களது அதிகபட்ச சம்பளம் 6,000 ரூபாய். முதலாளி சவுந்திராஜன் சைக்கிளை உருட்டிக் கொண்டு கம்பெனிக்கு வந்துகொண்டிருந்த காலத்திலிருந்தே உழைத்து வரும் இத்தொழிலாளர்கள்தான் இன்று நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான முயற்சியை 2012 இலேயே தொடங்கி விட்டார் சி.ஆர்.ஐ. முதலாளி. “ஒப்பந்தத் தொழிலாளியாக மாறிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். வசதிகளை இனி வழங்கமுடியாது” என்று திமிராக அறிவித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த தொழிலாளர்களை சக்கையை போல வீசியெறிந்துவிட்டு, அவர்களை விடக் குறைவான கூலிக்கு வடமாநிலத் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்வதே சவுந்தரரானின் திட்டம். சி.ஆர்.ஐ.யின் மற்றக் கிளைகளிலெல்லாம் வட மாநிலத் தொழிலாளர்கள் நிரப்பப்பட்டு விட்டனர்.
முதலாளியின் பேச்சை நம்பி சங்கம் கூடத் தொடங்காமல் 25 ஆண்டுகாலம் விசுவாசமாக உழைத்த தொழிலாளிகள், இதன் பின்னர்தான் பு.ஜ.தொ.மு. சங்கத்தை தொடங்கினர். பணிநிரந்தரம் உள்ளிட்ட உரிமைகளுக்காக சங்கம் போராடத் தொடங்கியது.

பணி நிரந்தரத்துக்காக பு.ஜ.தொ.மு. நடத்திய போராட்டத்தின் விளைவாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் 31 தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டுமென்று தொழிலாளர் நல ஆய்வாளர் உத்தரவிட வேண்டியதாயிற்று. உடனே, உயர்நீதிமன்றத்துக்கு சென்ற சி.ஆர்.ஐ முதலாளி, நீதிபதி கர்ணனிடம் இதற்கு இடைக்காலத் தடை வாங்கினார்.
சங்கம் தொடங்கியதற்காக, தொழிலாளர்களை தொடர்ந்து பழிவாங்கும் நிர்வாகத்தின் அடாவடித்தனங்கள், நட்டம் என்று பொய்க்கணக்கு காட்டுவது போன்ற தில்லுமுல்லுகளை தொழிலாளர் துறை ஆணையர் முன் ஆதாரங்களுடன் பு.ஜ.தொ.மு அம்பலப்படுத்தியது. சி.ஆர்.ஐ நிர்வாகமோ வாய்தாவுக்கு வராமல் இழுத்தடித்தது. தொழிலாளர்துறை முதல் நீதிமன்றம் வரை அனைத்தையும் விலைக்கு வாங்க முடிந்த போதிலும், அடிமைகளாக நடந்து கொள்ள வேண்டிய தொழிலாளர்கள் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பதை சவுந்தரராஜனால் சகிக்க முடியவில்லை.
எனவே, தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அதுவரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை, சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டது. 8 மணிநேரத்தில் முடிக்கக்கூடிய வேலையை 4 மணிநேரத்தில் செய்து முடித்துத் தருமாறு நிர்ப்பந்திப்பது, இலக்கை எட்டவில்லை என்று கூறி சம்பளத்தில் பிடித்தம் செய்வது, பரிச்சயமில்லாத துறைகளுக்கு தொழிலாளர்களைப் பந்தாடுவது, சட்டப்படியான விடுமுறையைக் கூடத் தர மறுப்பது என்று பல வடிவங்களில் சங்கத்தின் மீது தாக்குதல் தொடுத்தது நிர்வாகம். வக்கிரத்தின் உச்சமாக மற்ற கிளைகளில் 30% போனஸ், சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% தான் என்று அறிவித்தார் சவுந்தரராஜன்
கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு மிடுக்காக உலக நாடுகளை சுற்றி வந்தாலும், முதலாளி சவுந்தரராஜனின் புத்தி பண்ணையார்த்தனமும் தெள்ளவாரித்தனமும் கலந்தது. தொழிலாளர்களோ சுயமரியாதை உணர்வும் புத்திக்கூர்மையும் நிறைந்தவர்கள். சங்கத்தை ஒழிப்பதாக எண்ணிக்கொண்டு ஆலைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையை ஆள்வைத்து திருடிப் பார்த்தார் சவுந்தரராஜன். அப்புறம் கொடிக்கம்பத்தை பிடுங்கிப் போட்டார். கடைசியாக, சங்கத்தைக் கலைத்தால் போனஸ், கல்வி உதவித்தொகை என்று தொழிலாளிகளுக்கு ஆசை காட்டியும் பார்த்தார். எதுவும் பலிக்கவில்லை.
தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, வேலைநிறுத்தம் செய்ப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்த உடனே, கதவடைப்பு செய்து விட்டு, காண்டிராக்டில் தயாரித்த தரமற்ற பம்புகளில் சி.ஆர்.ஐ என்று முத்திரை குத்தி விற்கத் தொடங்கினார் சவுந்தரராஜன். போலி சி.ஆர்.ஐ பம்புகளை வாங்காதீர் என்று இந்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தினர் தொழிலாளர்கள்.
இது சட்டவிரோதமான கதவடைப்புதான் என்று தொழிலாளர் நல ஆணையர் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இருந்தபோதிலும், முதலாளிக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை அரசு. “முதலாளி தமது மகளின் திருமண @வலைகளில் மும்மரமாக இருப்பதால் பேச்சு வார்த்தைக்கு வரமுடியாது” என்று சி.ஆர்.ஐ. நிர்வாகம் திமிராக அறிவித்தது. அதுவரை வயிற்றில் ஈரத்துணிகட்டி காத்திருக்குமாறு கூறுகிறது அதிகார வர்க்கம்.
இப்படி தொழிலாளிகளின் தாலி அறுத்து, மகளுக்கு ஆயிரம் பவுன் போட்டு திருமணம் நடத்தும் சி.ஆர்.ஐ. முதலாளியின் வக்கிரத்தை திருமண முகூர்த்தம் நடைபெறும் சவுந்தரராஜனின் கிராமம் முழுவதும் பிரச்சாரம் செய்து மதிப்பிழக்கச் செய்தனர் தொழிலாளர்கள். ஜூன் 12 அன்று திருமண வரவேற்பு நடைபெறும் கோவை கொடிசியா அரங்கின் வாசலில், சவுந்தரராஜனால் கொலை செய்யப்பட்ட சி.ஆர்.ஐ. கம்பெனியை சங்கு ஊதி சேகண்டி அடித்து பாடையில் கொண்டு செல்வோம் என்று அறிவித்து, அந்தப் பாடை தூக்கும் விழாவுக்கு சவுந்திராஜனின் வீட்டிற்கே சென்று பத்திரிகையும்வைத்தனர்.

இந்நடவடிக்கைகளால் பீதியடைந்தார் சவுந்தரராஜன். உடனே, மூன்று மாதங்களாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசு எந்திரம் துள்ளி எழுந்தது. ஜெயலலிதா பதவியேற்பைக் கண்டித்து மே 22 ஆம்தேதி ஒட்டிய சுவரொட்டியைக் காரணம் காட்டி, ஜூன் 10 அன்று பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத்தலைவர் விளவை இராமசாமியையும் அவரது மகனும் பு.மா.இ.மு.வின் கோவை மாவட்ட செயலருமான திலீபனையும் கைது செய்தது போலீசு. ராமசாமி பிணையில் வந்தவுடன் மீண்டும் பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறைவைப்பதே அரசின் திட்டம்.
இதுவன்றி, 5 சங்க முன்னணியாளர்கள், போராட்டப் பந்தலில் சமையல் செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் போன்றோர் மீதும் பொய்வழக்கு போடப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். தொழிலாளர் குடும்பத்தினர் மிரட்டப்பட்டனர். போலீசு ஆய்வாளர் ஜோதியும் சரவணம்பட்டி போலீசும் சவுந்தரராஜனிடம் கவ்விய காசுக்கு அதிகமாகவே குரைத்தனர்.
ஜூன் 12 அன்று திருமண வரவேற்பு நடந்த கொடீசியா அரங்கைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு. கல்யாணக் கறிசோறுக்காக போலீசு காத்து நிற்க, பசிக்கும் பட்டினிக்கும் பணிந்துவிடாத தொழிலாளர்கள், திட்டமிட்டவாறு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட தொழிலாளிகளின் தாய்மார்களும் மனைவிமார்களும் சிறை செல்ல அஞ்சவில்லை. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
பதினோரு வருசம் மண்டி போட்டாச்சு. இனிமே நம்ம கைதான் உசர இருக்கணும். முதலாளி கை கீழத்தான் போகணும் என்று ஆவேசமாகச் சொன்னார் ஒரு தொழிலாளியின் தாய். ஊதிய உயர்வு, போனசு என்ற கோரிக்கைகளின் வரம்பைத் தாண்டி, சி.ஆர்.ஐ என்ற ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கெதிரான போராட்டம் என்ற எல்லையையும் தாண்டி, அந்தத் தாயின் குரலில் ஒலிப்பது தொழிலாளி வர்க்கத்தின் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் வேட்கையல்லவா!
பெஸ்ட் பம்ப்ஸ்
கோவை தடாகம் ரோட்டில் அமைந்துள்ள பெஸ்ட் குரூப் கம்பெனிகளில் சுமார் 250 தொழிலாளர்கள் கடந்த 25 வருடங்களாக வேலை செய்து வருகிறார்கள். இ.எஸ்.ஐ, பிஎஃப் வசதி இல்லை. ஒரு தொழிலாளி கூட நிரந்தரம் இல்லை. சட்டப்படியான உரிமைகள் கேட்டதுக்கு தொழிலாளர்கள் 50 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராக 50 தொழிலாளர்கள் கடந்த 90 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

சட்ட விரோத வேலை நீக்கத்துக்கெதிராக தொழிலாளர் துறையில் மனுச் செய்தும் எந்த விட பலனும் இல்லை. தொழிலாளர்களை விசம் கொடுத்து கொல்வது ஒரு பாணி வெல்லம் கொடுத்து கொல்வது ஒரு பாணி. கோவை தொழிலாளர் துறை வெல்லம் கொடுத்து பேசியே கொல்கிறது. கோவை மாநகர காவல்துறை போராடும் தொழிலாளர்களை விசம் கொடுத்து கொல்லும் முறையில் சிறையில் அடைத்தும் மிரட்டியும் கொல்கிறது.
தொழிலாளர் துறை அலுவலகத்தில் டி.சி.எல் முன் நடைபெறும் பேச்சு வார்த்தைக்கு முதலாளி திருமதி ஸ்ரீப்ரியா கலந்து கொண்டால் பந்தய சாலை காவல் நிலைய காவலர்கள் இருபது பேர் பாதுகாப்புக்கு வருகின்றனர். முதலாளியோ, “என்னால் 50 பேரையும் வேலைக்கு எடுக்க முடியாது; தொழிலாளர்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” எனத் திமிராக எழுதித் தருகிறார். இதனை தொழிலாளர் துறை ஆணையர் எந்த விட மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார். காவல் துறையோ, “இதற்கு எதிராக தொழிலாளர்கள் பெருமூச்சு விட்டாலும் கைது செய்வோம்” என மிரட்டுகிறார்கள். பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்கள் 4 பேர் மீது ஆறு பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு சிறையிலும் அடைத்து விட்டது. மீதி 30 தொழிலாளர்கள் மீது பொய் வழக்கை சாயிபாபா காலனி காவல் துறை கொடுத்துள்ளது.
இதன் மூலம் காவல் துறை என்ன சொல்கிறது என்றால் ’50 தொழிலாளர்கள் குடும்பங்கள் அழிந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. முதலாளி ஸ்ரீப்ரியா குடும்பத்துக்கு எந்த விட பாதிப்பும் வரக் கூடாது’ என்கிறார்கள்.

முதலாளி ஸ்ரீப்ரியா சட்டத்தை மயிரளவும் மதிக்காமல் நடப்பார். 25 வருடங்களாக வேலை செய்யும் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகள் என்கிறார். யார் அந்த ஒப்பந்த தாரர் எனக் கேட்டால், நானேதான் என்கிறார். ஒரு முதலாளி எப்படி தன்னை ஒப்பந்த தாரர் எனக் கூற முடியும்? “இதற்கு அனுமதி வாங்கியுள்ளீர்களா” எனக் கேட்டால் “அதெல்லாம் வாங்க முடியாது நான் சொல்வதுதான் சட்டம்” என்கிறார். “சட்டப்படி நடக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, எனக்கு பாதுகாவலாக காவல்துறை உள்ளது” எனச் சொல்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இரண்டு முறை மனு கொடுத்து முறையீடு செய்தாகி விட்டது. சட்டப்படியான அமைப்புகள் அனைத்தின் கதவுகளையும் தட்டியாகிவிட்டது. அனைவரும் முதலாளிக்கு கூசாமல் சேவகம் செய்கிறார்கள். எல்லாத் திசைகளிலும் பணம் பாதாளம் வரை பாய்கிறது.

தொழிலாளர்கள் பக்கம் சகல நியாயங்கள் இருந்தும் கேட்பதற்கு ஆள் இல்லை. கோவை மாநகர காவல்துறையே “நாங்கள் தொழிலாளர்களது நியாயங்களை செவி மடுத்துக் கேட்க மாட்டோம் பட்டினியால் தொழிலாளர்கள் அழிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஆனால் எக்காரணம் கொண்டும் போராடக் கூடாது. போராடினால் சிறையில் அடைப்ப்ம்“ என மிரட்டிக் கொண்டுள்ளனர்.
பெஸ்ட் கம்பெனியில் கடந்த 25 வருடங்களாக நிரந்தரத் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இ.எஸ்.ஐ பிஎஃப் உரிமைகள் கூட இல்லை.
முதலாளி கடந்த 25 வருடங்களாக சட்டத்தை ஏமாற்றி தொழிலாளர்கள் உழைப்பையே உறிஞ்சி மேலும் மேலும் பணம் சேர்க்கிறார். மாவட்ட ஆட்சித் தலைவரும் முதலாளிக்கு உதவியாக உள்ளார். தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளார். தொழிலாளர் துறையும் முதலாளிக்கு சேவகம் செய்கிறது. தொழிற்சாலை ஆய்வாளரும் முதலாளிக்கு சேவகம் செய்கிறார். காவல் துறையும் முதலாளிக்கு எடுபிடி வேலை செய்கிறது. தொழிலாளர்கள் தங்கள் நியாயத்தை பெற என்ன செய்வது.? விடை காண வாருங்கள்.
முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
கோவை மாநகர காவல் துறை அறிவிப்பு !
- முதலாளிகளுக்கு சேவை செய்வதே எங்கள் கொள்கை!
- தொழிலாளர்களை சிறையிலடைப்பதே எங்கள் நடைமுறை
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறிவிப்பு
- காவல் துறை, தொழிலாளர் நலத் துறையின் சதியை முறியடிப்போம்!
- தொழிலாளிகளின் உரிமைகளை மீட்டெடுப்போம்!!
சி.ஆர்.ஐ பெஸ்ட் தொழிலாளர் போராட்டங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்
பொதுக் கூட்டம்
26-07-2015 மாலை 6 மணி
துடியலூர் பேருந்து நிலையம்
கோவை
நிகழ்ச்சி நிரல்
தலைமை :
தோழர் குமாரவேல்
மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு, கோவை.
முன்னிலை :
தோழர் சரவணன்
பெஸ்ட் பம்ப்ஸ் கிளைச் செயலர், பு.ஜ.தொ.மு, கோவை.
உரை :
தோழர் விளவை இராமசாமி
மாநிலத் துணைத் தலைவர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு.
சிறப்புரை :
தோழர் ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
நன்றியுரை :
தோழர் பூவண்ணன்
மாவட்ட பொருளாளர், பு.ஜ.தொ.மு, கோவை.
(ம.க.இ.க மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்)
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை
அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 3
அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! பகுதி -3
அரசியல்வாதிகளும், முதலாளிகளும் இணைந்த ஒரு ஒட்டுவகைப் (ஒட்டு மாங்காய் போல) பிரிவினர் தான் இன்று கட்சிகளையும் அரசுகளையும் ஆள்கிறார்கள்; நிர்வகிக்கிறார்கள். இதன் விளைவாக அரசு சொத்துக்களையும், அரசு கஜானாவையும், நாட்டின் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் சட்டபூர்வமாகவே, கொள்கை முடிவுகளின்படியே பகற்கொள்ளையடிப்பது அதிகரித்து வருவதோடு, இவர்களின் வரிஏய்ப்பு, தில்லுமுல்லுகளும் அதிகரித்துள்ளன. இவற்றில் புதுப்புது நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளில் ஈட்டப்படும் கருப்புப் பணமும் பன்மடங்கு பெருகிவிட்டது. அவற்றை வெளிநாடுகளுக்குக் கடத்தும் ஹசன் அலி போன்ற ஹவாலா ஏஜெண்டுகளும், நீரா ராடியா போன்ற அரசியல் தொழில் புரோக்கர்களும், அவர்களின் செல்வாக்கும் அதிகார பலமும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
ஹசன் அலி ஒரு நபர் அல்ல; அவனுக்குப் பின்னால் கார்ப்பரேட் முதலாளிகள், மத்திய-மாநில அமைச்சர்கள், தேசியக் கட்சிகளின் பெருந்தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள், நீதிபதிகள், ஆயுதக் கடத்தல்-போதை மருந்து கடத்தல் கும்பல்கள் ஆகியவர்கள் உள்ளனர். அவன் மீது கைவைத்தால் இந்த அத்தனை சக்திகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்; ஹசன் அலியும் அவனது கூட்டாளிகளும் ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அவன் தாவூத் இப்ராஹிமுடனும் ஆயுதக் கடத்தல் பேர்வழி ஆதனன் கஷோகியுடனும் தொடர்பு வைத்துள்ளான். 35,000 கோடி ரூபாய்களை ஹவாலா வழிமுறை மூலம் (அதாவது சட்டவிரோதமான பணப் பரிமாற்றத்தின் மூலம்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளான் என்று அரசாங்கமே குற்றம் சாட்டியுள்ளது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 10-03-2011); 1984-ல் ஒரு டாக்டர் மீது ஆசிட் வீசித் தாக்கிய வழக்கு ஹசன் அலி மீது உள்ளது. இந்த வழக்கு தொடர்பான பதிவேடுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசு சொல்லியுள்ளது. 2008-ல் மூன்று பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்ததாக இவன் மீது வழக்கு உள்ளது.

தற்போது குதிரைப் பண்ணை அதிபராக உள்ள ஹசன் அலியின் வருமானம் ஆறு ஆண்டுகளில் 54 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2001-02-ம் ஆண்டில் இவனது ஆண்டு வருமானம் 528.9 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அடுத்த ஆண்டில் (2002-03-ல்) 5404 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பின்னர் 2006-07-ம் ஆண்டு 54,268 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (தினமலர், 21-03-2011). 2002-லிருந்து 2006-ம் ஆண்டுக்குள் – அதாவது நான்காண்டுகளில் அவனது வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.
சாதாரணமாக இதே விகிதத்தில்தான் அவனது சொத்து அதிகரித்திருக்கும் என்று கணக்கிட்டால் கூட, 2006-லிருந்து 2010-ம் ஆண்டிற்குள், அதாவது அடுத்த நான்காண்டுகளில் இன்னும் ஒரு 10 மடங்கு அதிகரித்து 2010-ம் ஆண்டில் அவனது வருமானம் 5,40,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என்று சொல்லலாம். எனவேதான், அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகள் அவன் மீது வழக்குகள் போடவே தயங்குகின்றன; மரியாதையுடன் அழைத்து வந்து பிஸ்கட், டீ தந்து விசாரித்து விட்டு மரியாதையாக அனுப்பி வைக்கின்றன.
அம்பலமானது ஒரு ஹசன் மட்டுமல்ல, அம்பலம் ஆகாமல் பல ஹசன் அலிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை அமைப்புகள் இவனைப் போன்றவர்கள் மீது காரசாரமில்லாத குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும்; நாட்டின் திறமை வாய்ந்த வழக்குரைஞர்கள் இவர்களுக்காக வாதாடுவார்கள். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று உச்சநீதி மன்றமே இவர்களை விடுதலை செய்யும்.
ஹசன் அலிகளையும் நீரா ராடியாக்களையும்; அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகார வர்க்கத்தினரையும்; சி.பி.ஐ.யையும், தலைசிறந்த வழக்குரைஞர்கள், உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் தங்களது செல்லப் பிராணிகள் போல் ஊட்டி வளர்க்கும் ஒரு புதிய ஒட்டுவகை ஆளும் வர்க்கக் கட்சிகளுடைய ஏதோவொரு கூட்டணிதான் இத்தேர்தல்களில் ஆட்சிக்கு வரும். இவர்களின் ஒரே நோக்கமே மக்கள் பணத்தையும் நாட்டின் வளங்களையும் பகற்கொள்ளையடிப்பதுதான்!
எனவே, இன்றைய நிலையில் முதலாளித்துவ தேர்தல் முறையில் மக்கள் ஏதாவது ஒரு கோடீசுவரனைத்தான் எம்.எல்.ஏ.ஆகவோ, எம்.பி.ஆகவோ தேர்ந்தெடுக்க முடியும். கோடீசுவரர்கள்தான் அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் பிரதமர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் நோக்கம் – செயல்பாடுகள் பற்றி மேலே பார்த்தோம். இப்படிப்பட்ட கோடீசுவரர்களால், கோடீசுவரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சி, மக்கட்தொகையில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்காகப் பாடுபடும் என்பது நடக்கவே நடக்காது.
கார்ப்பரேட்டுகள் மீதான அரசு அதிகாரம் விலகுதல்; அரசின் மீதான கார்ப்பரேட் அதிகாரம் இறுகுதல்.

ஆறாவதாக, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கம் மற்றும் உலகமயமாக்கலின் கீழ் ஒரு புதியவகை காலனியாதிக்கம் – அதாவது, மறுகாலனியாக்கம், இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது. தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள தேசிய அரசு, தேசங்களின் இறையாண்மை, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்டுள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து அரசமைப்பை முடக்கி அவற்றைத் தங்களின் (சர்வதேசியமாகியுள்ள ஏகாதிபத்திய நிதிமூலதனம் மற்றும் மேல்நிலை வல்லரசுகளின்) ஆணைக்கு ஆடும் கைப்பாவைகளாக மாற்றி உள்ளன. இவற்றின் கருவிகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவைதான் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக அரசாங்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன; ஆட்டுவிக்கின்றன.
சந்தைக்கு எல்லாம் தெரியும் என்ற புதிய தாராளவாத முழக்கத்தின் அடிப்படையில், சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவை, முதலாளிக்கும் நுகர்வோனுக்கும் இடையிலான பொருளாதார உறவின் சட்டகத்தில் வைத்து, குடிமகனின் அரசியல் உரிமையை, நுகர்வோனின் பொருளாதார உரிமையாக மாற்றும் புதிய அரசியல் வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, தற்கொலைகள் போன்ற அனைத்தும் பெருகி வருவதற்கு ஊழல், அயோக்கிய அரசியல்வாதிகள்தான் காரணம் என்றும், தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் அறிந்த அதிகார வர்க்கத்தினரிடம் கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலமே இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதிகார வர்க்கத்தின் கையில் முடிவெடுக்கும் அதிகாரங்களும் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.
கழிவுநீர் அகற்றுதல், குப்பை வாருதல் தொடங்கி கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் மற்றும் பொதுத்துறையைச் சீரமைத்தல், தனியாருக்கு விற்றல் – ஆகிய அனைத்து பிரச்சினைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் சார்ந்த வல்லுனர்களிடம் விடப்படுகின்றன.
மேலும், ஜனநாயக அமைப்பிற்கு வெளியே இந்நிறுவனங்கள் இருப்பதால், தமது முறைகேடுகள் தொடர்பாக மக்களுக்குச் சம்பிரதாயபூர்வ விளக்கத்தினைக்கூட இவை அளிப்பதில்லை. இந்நிறுவனங்கள் அளிக்கின்ற ஆய்வறிக்கைகள் நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்குமே இரகசியமாக்கப்பட்டு, அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே புதைந்து விடுகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து அதிகார வர்க்கத்தையும் மக்களுக்குப் பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோரையும் விடுவித்து விடுவதன் மூலம் அம்மணமான கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின் ஆட்சியே இன்று இந்தியாவில் நடந்து வருகின்றது. கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் மீது அரசு ஏற்கெனவே விதித்திருந்த கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜனநாயக அமைப்பின் அதிகாரத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும், முதலாளி வர்க்கத்தைக் கண்காணித்து நெறிப்படுத்தும் துறைகளிலும் அரசு எந்திரம் வெட்டிக் குறைக்கப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் புதிய தேவைகளை ஈடு செய்யும் திசையில் அதிகார வர்க்கமும் போலீசும் இராணுவமும் மென்மேலும் பெருக்கப்படுகிறது. மேலும் பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு இலாக்காகளிலும் மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும் ஆட்குறைப்பு மற்றும் அவுட்சோர்சிங் முதலான முறைகளைப் புகுத்தி அரசு நிர்வாகமும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. கார்ப்பரேட் முதலாளிகளும் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்களும் அரசின் இயற்கையான கூட்டாளிகள் என்று முன்வைக்கப்பட்டு, அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.
அரசு அதிகார நிறுவனங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசு சாரா வல்லுனர்கள், தன்னார்வ குழுக்களின் இயக்குனர்கள் பங்கேற்கின்றனர். அரசுப் பணிகள் தனியாருக்கு அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன. அரசுத்துறை தனியார்துறை கூட்டுத் திட்டங்கள் பெருகி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. முன்பு அரசு ஏகபோகமாக இருந்து வந்த தொலைபேசி, மின்சாரம் போன்ற துறைகளில் அத்துறைகளுக்குரிய அமைச்சரவைகளுக்கு வெளியே, அதற்கும் மேலே, சுயேச்சையான அதிகாரம் கொண்ட ’ஒழுங்குமுறை ஆணையங்கள்’ உருவாக்கப்பட்டு, அதன்மூலம் அரசுத்துறைகளை திட்டமிட்டு நட்டப்படுத்தி, அப்புறம் அவற்றை ஒழிக்கும் சதித்திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் தனியார் முதலாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், அத்தகைய உறவுகள் முறைகேடானவை என்றும், நடவடிக்கைக்கு உரியவை என்றும் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டு வந்த மரபுகள் கைவிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, பொருளாதாரக் கொள்கை முடிவுகள் எடுக்கும் முன்னர் எஃப்.ஐ.சி.சி.ஐ., சி.ஐ.ஐ. போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சங்கங்களை அரசே அழைத்து கலந்தாலோசிக்கிறது. மக்கள் நலனையும் மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளிவிட்டு, சமூகத்தின் பிரதிநிதியாகவும் அரசு அதிகாரத்தின் அங்கமாகவும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் வர்க்கத்தை நியமிக்கும் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக ’கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்ச்சி’ என்ற புதியதொரு கோட்பாடு புகுத்தப்பட்டுள்ளது.
வேர்மட்ட ஜனநாயகம் என்ற பெயரில் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற அதிகார மையங்களாக ஆக்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியங்களின் கண்களாகவும் காதுகளாகவும் விளங்கும் இந்த ஐந்தாம்படை அமைப்புகள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக மாற்றப்பட்டுள்ளன. மேலிருந்து கீழ் என்ற அதிகாரப்படிநிலை முறை நிராகரிக்கப்பட்டு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய சர்வதேச நிதிநிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளைப் புறந்தள்ளி நகராட்சிகளையும் ஊராட்சிகளையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு திட்டங்களை அமல் நடத்துகின்றன. அவற்றிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை முனை மழுங்கச் செய்கின்றன.
நீர்வள மேம்பாடு, சாலை போடுதல், கல்வி, காடுவள நிர்வாகம், உள்கட்டுமானப் பணிகள் போன்ற இதுகாறும் அரசின் பொறுப்பு, கடமை என்று கூறப்பட்டு வந்த துறைகள் பலவற்றிலும் தனியார்துறை புகுத்தப்பட்டுள்ளது. நேரடியாக பொதுநலனுடன் தொடர்புள்ள இந்தத் துறைகளிலெல்லாம் தனியார் புகுத்தப்படுவதால், பொதுச் சொத்துக்கள் கார்ப்பரேட் முதலாளி வர்க்க ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டு மக்கள் இவற்றின் மீது எந்தவிதத்திலும் உரிமை கோர இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.
மாறியுள்ள உலக நிலைமையில் தமது முழு ஆற்றலையும் வெளிக் கொண்டுவர வேண்டுமானால், அரசுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள், இன்னபிற அரசு சார் நிறுவனங்களைத் தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்ற புதிய தாராளவாதத்தின் கோரிக்கையும் அமலாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இவற்றுக்கான அரசு மானியங்களை வெட்டுவது மட்டுமின்றி, நாட்டின் பொதுத்தேவையின் அடிப்படையில் வகுக்கப்படும் திட்டங்களுக்கு சேவை செய்வதாக இந்த அமைப்புகள் இருப்பதும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இலாபமீட்டும் முதலாளித்துவ நிறுவனங்களைப் போலவே மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. பன்னாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் இவற்றை நேரடியாக தொடர்பு கொண்டு தம் தேவைக்கான ஆய்வுகளைச் செய்யும் ஆய்வுக் கூடங்களாகவும், தமக்குத் தேவைப்படுகின்ற துறைகளிலான பட்டதாரிகளை உருவாக்கித் தரும் பட்டறைகளாகவும், தமது வர்த்தக முகவர்களாகவும் பரப்புரையாளர்களாகவும் இவற்றை மாற்றியமைத்துள்ளன.

சாராம்சமாகச் சொன்னால், மக்கள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, நிலைநாட்டுகின்ற அறுதி அதிகாரம் என்ற தகுதியிலிருந்து அரசு மெல்ல மெல்ல அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. தமது அடிப்படைத் தேவைகளையும் கவுரவமான வாழ்க்கையையும் பெற முடியாத குடிமக்களுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்பதைக் கருத்தளவில்கூட மறுகாலனியாதிக்க கொள்கைகள் ஏற்பதில்லை. மாறாக, குடிமக்கள் அனைவரையும் நுகர்வோராகவும், எனவே, தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை விலைகொடுத்து வாங்கிக் கொள்ள கடமைப்பட்டவர்களாகவுமே அது கருதுகிறது. கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளும், சாலைகள் முதலான சேவைகளும் வணிகப் பொருட்களாக மாற்றப்பட்டு விட்டன. இதனால் குடிமக்களின் பாலான தனது கடமைகளிலிருந்தும் அரசு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.
சமூக ரீதியான தீர்வுகளைக் கோருகின்ற சிக்கல்களுக்கு சமூக ரீதியான தீர்வுகளை மறுத்து, தனிப்பட்ட தீர்வுகளை மக்களே தங்களது சொந்த பொறுப்பில் செய்து கொள்ளுமாறு மாற்றப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பற்றாக்குறை போன்று சூழலியல் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு மழைநீர் சேமிப்புத் திட்டம், புவி சூடேறுதல் பிரச்சினைக்கு கார்பன் வர்த்தகம், விவசாயத்தின் நசிவால் பெருகியுள்ள கிராமப்புற வறுமை – கடன் சுமைக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அணைக்கட்டுகள் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றிற்காக கிராமம் கிராமமாக அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு ஒரு சமூகம் என்ற வகையில் மறுவாழ்வு வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்குத் தனிப்பட்ட ஈட்டுத்தொகை வழங்குதல் என எல்லாப் பிரச்சினைகளிலும் தனிப்பட்ட தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் ஒரு சமூகம் என்ற வகையில் அரசியல் ரீதியாகச் சிந்திக்கவும் திரளவும் விடாமல் மக்களின் சிந்தனையையே மறுகாலனியாதிக்க கொள்கைகள் விலங்கிட்டு வைத்துள்ளன.
அதற்கேற்ப இவ்வாறு மறுகாலனியாதிக்க முறையிலான சுரண்டல் ஆதிக்கத்தின் கீழ், இந்திய அரசின் கட்டுமானம், அதன் பாத்திரம், செயலாற்றும் முறைகள், சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளைக்கான ஒரு கருவியாக வெளிப்படையாகவே பறைசாற்றிக் கொள்ளும் அரசாக, சோசலிசம், காந்தியம், சமூகநீதி போன்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல், நிலையான ஆட்சியை நிலைநாட்டும் வலுவான அரசாங்கம் என்ற இலச்சினை பொறித்த அரசாக மாற்றப்பட்டு விட்டது.
(தொடரும்)
______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_______________________________
ஒரு சலவைத் தொழிலாளியின் சிங்கப்பூர் அனுபவம்
வீரப்பன் இராஜா சென்னை நகரின் பகுதியொன்றில் கடந்த நான்கு ஆண்டுகளாக சலவைத் தொழில் செய்து வருகிறார். மனைவி மற்றும் இருக் குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார்.
அன்றாடம் 50 முதல் 100 அல்லது 150 துணிகள் வரை சலவை செய்யும் இராஜாவிற்கு உதவியாக அவரது மனைவி துணிகளை மூட்டைக் கட்டி எடுத்து வருவது மற்றும் சலவை செய்த துணிகளை வீடுகளில் ஒப்படைப்பது போன்ற வேலைகளை செய்கிறார். குழந்தைகள் இருவரும் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். இராஜாவிற்கு அன்றாடம் 300 முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும்.
ஊரில் சொந்தமாக வீடு கட்டியதன் பின்னணியை விளக்கும் போது அவரது கண்கள் கலங்குகின்றன. அவரைப் பொறுத்த வரை அது ஒரு மலரும் நினைவல்ல, கசக்கும் நினைவு! ஏழ்மையான பெற்றோர்கள் சொந்த ஊரான தேவக்கோட்டையில் 2 ஏக்கரில் “வானம் பார்த்த” விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் குடும்பச் சூழல் காரணமாக 9 வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இராஜா சம்பாதிப்பதற்காக சிங்கப்பூர் செல்ல அவரது குடும்பம் முடிவெடுக்கிறது. ஏற்கனவே அவரது அக்காவின் கணவர் அங்கே இருப்பதால் இவர் அங்கே போவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குடும்பத்தினர் கருதினார்கள்.
1995-ம் ஆண்டில் ஒரு ஏஜென்ட் மூலம் 1.85 லட்சம் ரூபாய் செலவு செய்து சிங்கப்பூர் சென்றார். அங்கே கட்டிடம் கட்டுவது, ரோடு போடுவது ஆகிய வேலைகள் செய்து மாதம் சம்பளமாக 250 வெள்ளியைப் பெற்று வந்தார். இருந்த போதிலும் தனது சொந்தத் தேவைகளை பூர்த்தி செய்து வீட்டிற்கும் பணம் அனுப்புவது சிரமமாக இருந்ததால் அதிகப்படியான நேரம் வேலைப் பார்த்து அந்த வருமானத்தையும் சேர்த்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
‘பையன் சிங்கப்பூரில் வேலை செய்கிறான். எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் அங்கே வேலை செய்வான். பிறகு திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல வீடு வேண்டும்’ என்றெண்ணிய அவரது பெற்றோர்கள் சொந்தமாக ஒரு நல்ல வீட்டை கட்ட ஏற்பாடு செய்தார்கள். இதற்க்கு மகன் இராஜா அனுப்பிய 1 லட்சம் ரூபாயை பயன்படுத்திக் கொண்டார்கள்.
அதே நேரத்தில் சிங்கப்பூரில் முதலிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த இராஜா வீடு கட்டி முடிக்க இன்னும் அதிகப்படியான பணம் தேவைப்படுவதை உணர்ந்து வேறொரு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். ஆனால் அவரது கடவுச் சீட்டு பழைய ஒப்பந்ததரரிடமே இன்னும் இருக்கிறது. ஊருக்கு செல்ல வேண்டுமானால் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வேறு ஒப்பந்ததாரர்களிடம் வேலைக்கு செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதனால் அவர்களிடம் சொல்லாமல் வேறொரு ஒப்பந்ததாரரிடம் வேலைக்கு சேர்ந்தார்.
வேலை அதே அளவிற்கு கடுமையாக தான் இருந்தது. ஆனால் சம்பளம் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தது. வீட்டிற்கும் கொஞ்சம் அதிகப்படியாக அனுப்ப முடிந்தது. ஆயினும் அது அவர்களது பெற்றோர் ஆசைப்பட்ட அந்த ‘நல்ல’ வீட்டைக் கட்டி முடிக்க போதுமானதாக இல்லை. இப்படியே இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. இதனிடையில் ஒரு நாள் கடவுச் சீட்டு இல்லாததால் சிங்கப்பூர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
குடும்பச் சூழல் காரணம் என்றாலும் சொந்த நாட்டை விட்டு சொந்த பந்தங்களை விட்டு சிங்கப்பூரில் சிறையில் இருப்பது அவரது மனதை சுக்கு நூறாக்கியது.
பின்னர் காவல் துறை விசாரணையில் அவரது கடவுச் சீட்டு பழைய ஒப்பந்ததாரரிடம் இருப்பதை அறிந்து மீண்டும் அவர் மீண்டும் இந்தியா திரும்ப தேவையான சான்றிதழ்களை ஏற்பாடு செய்து கொடுத்து போலீசாரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டார்.

இது ஏதோ தனக்கு மட்டும் நேர்ந்த அனுபவம் அல்ல என்றும் பெரும்பான்மையான ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை இதுதான் என்றும் ஏதாவது ஒரு கட்டத்தில் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என்றும் கூறினார். சொந்த நாட்டை விட்டு குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் இப்படியான பிரச்சினைகளை சந்திக்கும் தொழிலாளர்கள் இதை தம் வீட்டிற்கு கூட தெரிவிப்பதில்லை.
தமது பெற்றோர் தான் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்வதற்காகத்தான் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார்கள். தான் ஏஜென்டிடம் கொடுத்த பணத்தை கூட சம்பாதிக்க முடியாத நிலை தான் அவருக்கு வாய்த்திருந்தது. சிங்கப்பூர் வந்தாரை நோகாமால் வாழ வைக்காது.
அவரது அனுபவத்தின் படி நன்றாக படித்தவர்கள் வேண்டுமென்றால் அங்கே சென்று சம்பாதிக்கலாம். ஆனால் அவரைப் போன்ற உழைக்கும் மக்களுக்கு சிங்கப்பூர் ஒன்றும் சொர்க்கம் கிடையாது மாறாக சிறை தான்.
ஒப்பந்தத் தொழிலாளிகளைப் பொறுத்த மட்டில் சிங்கப்பூரோ இந்தியாவோ, கிடைக்கும் கூலியில் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை என்று கூறுகிறார். இன்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் அவர், குடும்பத்தை சொந்தபந்தத்தை இழந்து அங்கே சிறை செல்வதை விட இங்கேயே பிழைக்க வழி தேடலாம் என்று அவர்களிடம் அறிவுறுத்துகிறார்.
இறுதியில் ஊரில் அவரது சொந்த வீடு என்பது சிங்கப்பூர் காசின்றி கடன் பெற்று முடிந்திருக்கிறது. அவலம், நெருக்கடி, சிறை இன்ன பிற கசப்புக்களே சிங்கப்பூர் செல்லும் பெரும்பான்மை தொழிலாளிகளின் அனுபவம் என்றாலும் அது வெளியே எதிர்மறையாக மாறி பொய் வேடம் போட்டிருப்பதற்கு காரணம் என்ன?
ஏழைகளின் பழம் வாழைப்பழம்
நகரத்து வாழ்வின் பல சிக்கல்களில் ஒன்று இந்த மலச்சிக்கல். இந்த சிக்கலை கடந்து போக நாளிதழ் படிப்பதில் ஆரம்பித்து வரவு செலவு கணக்கு பார்ப்பதோடு கதை கவிதை என படைப்பு அவஸ்தைகளும் சங்கமிக்கும் திருத்தலமாகவும் கழிப்பறை இருக்கிறது. குனிந்து நிமிர்ந்து ஆடி ஓடி வேலை செய்யும் பழக்கம் மறைந்து விட்டதால் காலைக் கடனே நேரம் பிடிக்கும் பெருங்கடனாக மாறிவிட்டது.
இந்த அவஸ்தையை தீர்ந்து வைக்கும் பெரும் பங்கு வாழைப்பழத்துக்கு உண்டு. மற்ற பழங்களை விட விலை குறைவாக இருப்பதால் ஏழைப் பழம் வாழைப்பழம் என்பார்கள்.
மக்களுக்கு எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம், இதை பயிரிட எந்த காலநிலையும் ஏற்றது, சீசனுக்கு மட்டும் இல்லாமல் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பதுமாய் பல சிறப்புக்கள் அடங்கியது வாழைப்பழம். பழக்கடைகள் மட்டும் இல்லாது பெட்டிக்கடை முதல் டீக்கடை வரை வாழைப் பழத்துக்கு இடமுண்டு.
இப்படியான சிறப்பு மிகு பழத்தைக் கொண்டு பலரது வயிற்றுச் சிக்கலை போக்கும் வாழை பழ சிறு வியாபாரி ஆறுமுகம் ஒரு ஆறு மாதங்களாக பழக்கம். தள்ளுவண்டியில் வாழப்பழத்தை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று இடங்களில் நின்று வியாபாரம் பார்ப்பார்.
பொழுது சாய்ந்த ஒரு மாலை நேரத்தில் குழந்தையுடன் நேரத்தை போக்க வந்த நானும் வியாபாரத்துக்கு கடைவிரித்த ஆறுமுகமும் ஒரு பூங்கா வாசலில் பேசிக் கொள்ள சற்று நேரம் கிடைத்தது.
“சென்னைக்கு வந்து 20 வருசமாச்சு. 20 வயசுல வீட்ட விட்டு பொழப்பு தேடி வந்தேன். இப்ப 40 வயசாச்சு. ரெண்டு பிள்ளைக்கி தகப்பனாயிட்டேன். ரெண்டு மூணு வருசத்துக்குள்ள ஊரோட போயி விவசாயத்த பாத்துட்டு இருக்கனுன்னு நெனச்சுட்டு இருக்கேன். அந்த ஆண்டவன் என்ன முடிவு எடுத்துருக்கானோ தெரியல.”
“உங்களுக்கு சொந்த ஊரு எது?”
“விழுப்புரமுங்க. சின்ன வயசுலேயே அப்பா எறந்துட்டாரு. நாங்க மூணு பேரு அண்ணந்தம்பி. நாந்தான் கடைசி பையன். எங்களுக்கு சொந்தமா பத்து ஏக்கர் நிலம் இருந்தது. விவசாயம் படுத்துப் போச்சுங்க. வாங்குன கடனை அடைக்க முடியல. அடுத்தடுத்து கைப்பணம் போட்டு விவசாயம் பாக்க முடியல. பொழப்புக்கு வேற வேலை தேட வேண்டியதா போச்சு. அண்ணனுங்களுக்கு கல்யாணம் குழந்தைங்கன்னு ஆனதால ஊரோடவே இருந்துட்டாங்க, நான் இங்க வந்துட்டேன்.”
“என்ன விவசாயம் செஞ்சிங்க.?”
“அஞ்சு ஏக்கர் தரிசு நிலமுங்க. தண்ணிக்கி வழி இல்லாததால அதுல எதுவும் பயிர் போட முடியாது. அதனால சவுக்கு போட்டுருந்தோம். மீதி இருந்த அஞ்சு ஏக்கர்ல வாழை விவசாயம் வச்சோம். வாழை அடி முதல் நுனி வரைக்கும் அத்தனையும் பணம்தான். ஆனா வாழை வாழ வச்சாலும் வைக்கும், சில நேரம் சாச்சிடிச்சுன்னா எழுந்துருக்கவே முடியாது. அப்படி ஒரு கண்டந்தான் எங்கள சுத்தி அடிச்சுது.”
“அஞ்சு ஏக்கர் வாழையும் வாலிப வயசு பசங்களாட்டம் அப்படி ஒரு மினுமினுப்போட வளந்து நின்னுச்சு. பூவும் பிஞ்சுமா குலைகளோட நின்னத பாத்தா நம்ம தோட்டம்னாலும் நமக்கு பொறாமை வர்றாப் போல இருந்துச்சுங்க. அண்ணந்தம்பி தலை நிமுந்து நின்னோமுங்க. வாங்கன கடனை அடைச்சுட்டு வீட்ட சரி பன்னிடனுமுன்னு கனவு கண்டுட்டு இருந்தோம். ஒரு மணி நேரத்துல அத்தனை மரத்தையும் வேறோட சாச்சுபுடிச்சு சூறாவளி காத்தும் மழையும்.”
“இன்னும் கொஞ்சம் பெருக்கட்டும் தாங்கி பிடிக்க முட்டு குடுத்து மரம் கட்டலாமுன்னு இருந்தோம். கண்ண புடுங்குறாப்போல அத்தனையும் புடிங்கிட்டு போச்சு பாழாப்போன காத்து. அப்ப கரண்டு கெடையாது. ஆயில் மோட்டார் போட்டு கெணத்து தண்ணி எறச்சு குடும்பமே பாடுபட்டோம். அத்தனையும் வெழலுக்கு எறச்ச நீரா போச்சு. வாழை படுத்தால் வாழ்க்கையே படுத்துருன்னுவாங்க. அப்ப வந்ததுதாங்க நான் சென்னைக்கு. இருவது வருசமாச்சு.
“நெலத்த என்ன செஞ்சிங்க?”
“விவசாயம் பண்ணி ஒண்ணும் முன்னுக்கு வர முடியலிங்க. நாலு வருசம் போல எதுவுமே பயிர் பண்ணலை. கையிலருந்து முதல் போட முடியல. விவசாயம் மட்டும் பண்ணினா வாயிக்கும் கையிக்கும் இழுத்துக்க பறிச்சுக்கன்னுதான் இருக்கும். அவங்க அவங்க முடிஞ்சத செஞ்சு பொழச்சுக்குங்கன்னு நிலத்த மூணு பேருக்கும் எங்க அம்மா பிரிச்சு கொடுத்துட்டாங்க.”
“அண்ணனுங்க அவங்க பங்கு நிலத்த பயிர் செய்றதுக்கு பெரும் பாடு பட்றாங்க. பிள்ளையோட படிப்பு, பொண்ணோட கல்யாணமுன்னு விவசாயம் பாத்து குடும்பத்த சமாளிக்க முடியல. என்னப் போல வெளிய வேலைக்கி போகவும் முடியாது, வயசாகி போச்சு. பிள்ள குட்டிங்கள வச்சுகிட்டு சிரமப்பட்றாங்க.”
“உங்க பங்கு நிலத்த நீங்க விவசாயம் செய்றதில்லையா?”
“செஞ்சுகிட்டுதான் இருக்கேன். வெளியில ஏதாவது வேலைய பாத்து அந்த பணத்த விவசாயத்துல போட்டா பத்துரூவா காசு பாக்கலாம். நஷ்டம் வந்தாலும் சமாளிக்கலாம். விவசாயம் மட்டும் பாத்தா இன்னைய நெலமைக்கி சாப்பிட கூட முடியாதுங்க.”
“நான் இங்க பழ வியாவாரம் பாத்து அந்த வருமானத்தை முதலா போட்டு பயிர் செய்றதால இப்ப கொஞ்சம் விவசாயமும் நடக்குது. மேற்கொண்டு அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கி இருக்கேன். சின்னதா மாடி வீடு ஒன்னு கட்டியிருக்கேன். ஆனா கல்யானம் ஆயி 18 வருசம் ஆகுது நான் இங்கேயும் எங்கூட்டுக்காரம்மா விழுப்புரத்துலயும் இருக்கோம். பயிரு வைக்கிற காலத்துல பத்துநா(ள்) சேந்தாப்போல இருந்து எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துட்டு வருவேன். மத்தத வீட்டம்மா பாத்துக்கும். மாசத்துக்கு ஒருக்க ஒருநா ரெண்டுநா போயி பாத்துட்டு வருவேன்.”
“குடும்பத்த சென்னைக்கி கூட்டிட்டு வந்துருக்கலாமே?”
“விடிய விடிய கதை கேட்டு சீதைக்கி ராமன் சித்தப்பங்கற கதையாருக்கு போங்க. ஏங்க நான் தள்ளுவண்டி பழ வியாவாரம் பாத்து அனுப்புற காச வச்சுதான் விவசாயம் கைய கடிக்காம நடக்குது. விவசாய குடும்பத்துல பொறந்துட்டு ஊற காலி பண்ணிட்டு வரமுடியுமா? சாதிக்கார பயலுக ஏளனமா பேச மாட்டாங்களா? அதுவும் தவிர நான் என்ன படிச்சு ஆபீசரு உத்தியாகமா பாக்குறேன். எனக்கு தெரிஞ்சது விவசாயம் அதுக்கு தோதுவா பத்துரூவா சம்பாரிச்சு ஊருல வாழ வழிபாக்கனுமே தவிர இங்குட்டு குடும்பத்தோட வந்து என்னத்த பண்ண?”
“வாழ்க்கைக்கு வசதி வாய்ப்ப தேடிக்கறதுக்கு சாதிக்காரங்க என்னங்க பேசப் போறாங்க?”
“கவுண்ட(ர்) சாதியில விவசாயம்தாங்க பரம்பர தொழிலு. இருக்கப்பட்டவங்க எப்புடி போனாலும் ஊரு ஏத்துக்கும். அதே போல ஒன்னுமே இல்லாதவங்களும் சாதிக்கு பயப்பட மாட்டாங்க அவங்களையும் ஊரு கண்டுக்காது. நம்மள மாதிரி இந்த பக்கமும் அந்த பக்கமும் போக முடியாம நடுப்பரி நிக்கிறவங்க கதிதான் அதோகதி. எல்லாத்தையும் அனுசரிச்சுதான் போக வேண்டியிருக்கு”
“சென்னைக்கி வந்ததும் பழ வண்டி போட ஆம்பிச்சிட்டிங்களா?”
“வந்த ஒரு வருசத்துல ஏதேதோ கூலி வேலையெல்லாம் செஞ்சேன். பாத்த எந்த வேலையும் மனசுக்கு திருப்தியா இல்லை. என்ன செய்றதுன்னு ஒரே குழப்பம். ஒரு வழியா முடிவெடுத்தேன். நமக்கு நல்லா தெரிஞ்சது வாழை விவசாயம். அது சம்மந்தமான வேலையையே பாப்போன்னு வாழப்பழ வண்டி போட ஆரம்பிச்சேன். கோயம்பேடு போயி சரக்கெடுத்துட்டு வந்து சாயந்தரம் 4 மணிக்கி கடை போட்டேன்னா ராத்திரி 10, 11 ஆயிரும் முடியிரதுக்கு.”
(1994) எங்க நிலம் பாதிச்சப்பதான் என் சொந்தக்கார பய ஒருத்தன் விவசாயத்துல ரொம்பவே நொடிச்சு போய்டான். அதனால குடும்பத்துல ஒரே சலசலப்பு. அவரோட 15 வயசு புள்ள கோவிச்சுகிட்டு வீட்ட விட்டு ஓடி போய்ட்டான். தேடாத இடம் கிடையாது. நாலு வருசம் கழிச்சு ஒருநாள் கோயம்பேடுல அவனை பாத்தேன். ஒரு அடியாள் கும்பலுகிட்ட சிக்கி ரவுடியா இருந்தான்.”
“அது ஒரு பெரிய கதை பிறகு வீட்டுக்கு தெரிவிச்சு படாத பாடுபட்டு அவனை மீட்டெடுத்தோம். கையில கொஞ்சம் காசு வச்சுருந்தான். கோயம்பேட்லயே வாடகைக்கு கடை எடுத்து பழ வியாவாரம் செய்ய ஏற்பாடு செஞ்சேன். அவங்கூட சேந்து ஒத்தாசையா வேலை பாப்போன். அவங்க கடையில கொஞ்ச சரக்க மொத்தமா வாங்கி வச்சு விக்கிறதால எனக்கும் பெரிசா நஷ்டம் வராது. நம்ம கிட்ட பழம் வாங்குறவங்களுக்கு ரெண்டு பழம் சேத்துதான் தருவேன்.”
“எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னா நிலத்த நம்பி விவசாயம்தான் தொழிலுன்னு இருக்கவங்களுக்கு இதுபோல ஒரு சரிவு வந்துச்சுன்னா எழுந்திரிக்க முடியாது. சின்னா பின்னமா போயிரனும். அதான் எம்மகனுங்கள எப்படியாவது படிக்க வச்சுபுடனுன்னு வைராக்கியமா இருக்கேன்.”
“பத்து ஏக்கர் நிலம், ஊருல மாடி வீடு வச்சுருக்க ஆளு மாதிரியே தெரியலையே உங்கள பாத்தா?
“குடிகார பய மாறி தெரியுதா? கண்ணு எந்த நேரத்துலயும் விஜயகாந்து போல இருக்கதால அப்படி தோணும். சின்ன வயசுல மரம் வெட்டுற தொழிலுக்கு போயிருந்தேன். வெட்டும் போது மரத்துண்டு கண்ணுல பாஞ்சுருச்சு அதான் எப்பயும் செவந்து போயி பாக்க அப்படி தெரியும். மணி கணக்கா நிக்க முடியாம எப்பையாவது ஒரு துண்டு பீடிய பத்த வைப்பேன் அது மட்டும்தான் என்னுகிட்ட இருக்குற கெட்ட பழக்கம்.”
“அது இல்லைங்க. எப்பையும் புயல் மழையில சிக்குனா மாதிரி ஒரு தோற்றத்தோட இருக்கீங்களே?”
“பத்து ஏக்கர் நிலம் இருந்தாலும் நான் பழ வண்டி காரந்தானே. கோட்டு சூட்டு போட்டுகிட்டோ, மினிஸ்டர் காட்டன் போட்டுகிட்டோ இருக்க முடியுமா? இருக்க எடத்துக்கு ஏத்தா மாறிதான் நாம இருக்கனும். அதெல்லாம் போக மாடி வீடும் நெலமும் உழைச்சதால வந்தது. இப்படி இருக்கறதுதான் நமக்கு பெருமை. பகட்டு தேவையில்லை. என்னங்க நான் சொல்றது. சிரிக்கிறீங்க.”
“நீங்க ஏதோ கேக்கப் போயி நான் பாட்டுக்கு சொல்லிகிட்டு இருக்கேன். வாடிக்கையா பழம் வாங்குவிங்க தன்மையா பேசரிங்களேன்னு சொல்லிட்டேன். வெளியில யாரு காதுலையும் போட்டு வைக்காதீங்க. சும்மாவே போலீசுக்காரன் சீப்பு சீப்பா பழத்த எடுத்துட்டு போறான். அப்பறோம் நெலத்துல விளையிரதெல்லாம் கொண்டான்னு கேக்கப்போறான். நான் எங்குட்டு போறது” என்று முடித்துக் கொண்டார்.
ஆறுமுகம் அநேகமாய் விடுமுறை இல்லாமல் எல்லா நாட்களிலும் மாலை நேரங்களிலும் பழம் விற்பார். வாரம் ஒருமுறையாவது அவரிடம் பழம் வாங்குவேன். பழம் வாங்குவதாக இருந்தால் எந்தக்கடையிலும் இருபது ரூபாய்க்குத்தான் வாங்குவேன். இவரோ முப்பது ரூபாய்க்கு பழம் தருவார். சமயத்தில் மலைப்பழம், செவ்வாழை, சீசனின் வரும் மாம்பழம் எல்லாம் சேர்த்து தருவார். வேண்டாம் என்றால் குழந்தைக்கு இருக்கட்டும் என்பார். அதற்கு ரூபாய் கூட கொடுத்தால் வேண்டாம் என்பார்.
கோடை விடுமுறையில் ஒரு நாள் தலைவாரி நல்ல சொக்காய் போட்டு இருந்தார். என்னவென்று கேட்டால் வீட்டம்மா வருது, ஏன் முடிவெட்டலேன்னு திட்டும் என்று வெட்கத்துடன் சிரித்தார். பிறகு ஒரு நாள் மனைவிக்கு கிட்னியில் கல், மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்றார். அடுத்த நாள் காட்டியாச்சா என்றால் நேரமில்லை இன்று போவேன் என்றார்.
விடுமுறைக்கு வந்த அவரது மகன்கள் இருவரும் கிராமத்து வளர்ப்பு என்றாலும் அப்பாவின் பழ வண்டி வியாபாரத்துக்கு அவ்வளவாக உதவுவதில்லை. அவர்களை பூங்காவிற்கு அழைத்து போகிறேன் என்று அந்த அம்மாவிடம் கேட்ட போது அவர்கள் ஓடினால் பிடிக்க முடியாது என்று சிரித்துக் கொண்டே மறுத்தார்.
ஆறுமுகத்தின் வியாபார இடங்களில் இருக்கும் அனைத்து கடைக்காரர்களும் அவருக்கு பழக்கம். அவரிடம் பழம் வாங்கும் அனைவரும் கூட நட்புடன் பேசுவார்கள்.
மலச்சிக்கலை மட்டுமல்ல, சமூக உறவுகளை சிக்கலாக்கும் மனச்சிக்கலையும் சேர்த்தே உருவாக்கியிருக்கிறது நகரம். அண்டை வீட்டின் சுக துக்கம் கூட அறியாமல் இரகசியமாக வாழும் நகரத்து மாந்தர்களுக்கு எப்போதும் அரவணைப்பு தரும் இந்த எளிய நாட்டுப்புற மக்களின் அரவணைப்பும் அதன் அருமையும் தெரியுமா?
– சரசம்மா
கிரீஸ் நெருக்கடியில் வல்லூறு கோல்ட்மேன் சாக்ஸ்
“கிரீசு நாட்டின் கடன் நெருக்கடி கோல்ட்மேன் சாக்சு நிறுவனம் கொள்ளை உபரி ஈட்ட உதவிற்று!”
ராபர்ட் ரெய்ச் 1993-97 ஆண்டுகளில் அமெரிக்க ஒன்றிய அரசுகளின் மைய தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர். தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திட்டக்கொள்கைத் துறைச் சிறப்புப் பேராசிரியராக உள்ளார். அண்மையில் பரவலாகப் பேசப்பட்ட கிரேக்கக் கடன் நெருக்கடியில் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்சு பெருமளவில் உபரி ஈட்டியதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய ஆங்கில மூலக் கட்டுரை எனும் வலைப் பூவில் உள்ளது. கட்டுரைக்கு நன்றி: www.truthout.org
– பரிதி, மொழிபெயர்ப்பாளர்

உலகளாவிய கொள்ளையர்களான பன்னாட்டு நிதிச் சேவை நிறுவனங்கள் உலக நாடுகளின் அரசாங்கங்களைத் தம் கைப்பிடிக்குள் வைத்திருப்பது நமக்குப் புதிய செய்தியன்று. இதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது கிரீசு நாட்டுக் கடன் நெருக்கடி. ஆனால், அந்த நெருக்கடியைக் குறித்து வெளியான செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை நிதிச் சேவை நிறுவனங்களின் பங்கு குறித்து வாய் திறக்கவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்னரே , கோல்ட்மேன் சாக்சின் இப்போதைய தலைவர் லாய்ட் பிளாங்க்ஃபைன் உருவாக்கிய ஒப்பந்தம் கிரீசின் நிதி நெருக்கடி மேலும் முற்றுவதற்குக் காரணமாக இருந்தது. கிரீசு நாட்டுக் கடனின் முழுப் பரிமாணத்தை மறைப்பதற்கு கோல்ட்மேன் நிறுவனம் உதவி செய்தது. அதன் விளைவாக அந்நாட்டின் கடன் சுமை ஏறக்குறைய இரண்டு மடங்காக ஊதிப் பெருகிவிட்டது. டிசம்பர் 2007 முதல் சூன் 2009 வரை அமெரிக்காவை உலுக்கிய நிதிச் சிக்கல், இப்போது அமெரிக்க நகராட்சிகள் பலவற்றை அலைக்கழிக்கும் நிதிச் சிக்கல் ஆகியவற்றைப் போலவே கிரேக்கக் கடன் நெருக்கடியை உருவாக்கியதிலும் அமெரிக்க நிதிச் சேவை நிறுவனங்களின் கொள்ளைக்காரக் கடன் திட்டங்கள் முதன்மையான பங்கு வகித்தன. ஆனால் இது பரவலாக அறியப்படவில்லை.
2001-ல் மலைபோலப் பெருகிவிட்ட தன் நிதிச் சிக்கல்களை மறைப்பதற்கான வழிகளை கிரேக்க அரசு தேடிக்கொண்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குவதற்கான மாசுட்ரிக் ஒப்பந்தம் 1991 டிசம்பரில் கையெழுத்திடப்பட்டது. அதன்படி உறுப்பு நாடுகள் தம் நிதி நிலைமையில் மேம்பாட்டைக் காட்டவேண்டும். ஆனால், கிரேக்க அரசின் நிதி நிலைமை நேரெதிர்த் திசையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கோல்ட்மேன் சாக்சு நிறுவனம் கிரேக்க அரசுக்கு உதவ முன்வந்தது: அந்த நிறுவனம் கிரீசுக்கு 280 கோடி யூரோ கடன் ஏற்பாடு செய்தது; அந்தக் கடனைப் பயன்படுத்தி சிக்கலான நாணய-மாற்று ஒன்று செயல்படுத்தப்பட்டது. அதன்படி, கிரீசின் அந்நியச் செலாவணிக் கடன் கிரேக்க [உள்நாட்டு] நாணயக் கடனாக மாற்றப்பட்டது. அது கற்பனையான நாணயப் பரிமாற்ற விகிதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பிறருக்குத் தெரியாமல் கமுக்கமாக வைத்திருப்பதெனவும் இரு தரப்பினரும் முடிவெடுத்தனர்.
அதன் மூலம், கிரேக்க நாட்டு அரசின் கடனில் சுமார் 2 விழுக்காடு கணக்கில் இருந்து மாயமாக மறைந்துவிட்டது. “இரு பாவிகளுக்கு இடையிலான கவர்ச்சியான கதை” என்று பின்னாளில் கிரேக்கக் கடன் மேலாண்மை முகமையின் தலைவராக பொறுப்பேற்ற கிறிஸ்டோபோரஸ் சர்தேலிஸ் அதை விவரித்தார்.
இந்தச் சேவைக்காக கிரேக்க அரசு கோல்ட்மேன் நிறுவனத்துக்குத் தந்த விலை 60 கோடி யூரோக்கள்! இது 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் மற்றும் நிதி முதலீட்டுப் பிரிவின் வருமானத்தில் 12 விழுக்காடாகும்; அந்த ஆண்டு அந்தப் பிரிவு விற்பனையில் சாதனை படைத்தது. அந்தப் பிரிவின் தலைவராக இருந்தவர் பிளாங்க்பெய்ன் (இப்போது கோல்ட்மேன் நிறுவனம் முழுமைக்கும் தலைவராக இருப்பவர்)

2001-க்குப் பின்னர் மேற்படித் திட்டத்தில் சிக்கல்கள் நேர்ந்தன. 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் [கடன்] முறி வட்டி விகிதங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. கோல்ட்மேன் ஆலோசனையின்படிச் செயல்படுத்தப்பட்ட கணக்கில் வராத நாணய மாற்று ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி கிரேக்க அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது. 2005 வாக்கில் கிரேக்க அரசின் கடன் மேற்படி ஒப்பந்தத்தில் அவ்வரசு செலுத்திய தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்காகப் பெருகி, கணக்கில் வராத கடன் 280 கோடி யூரோக்களில் இருந்து 510 கோடி யூரோக்களாகிவிட்டது.
2005-ம் ஆண்டு இந்த கடன் பேரம் மறுசீரமைக்கப்பட்டு 510 கோடி கடன் கணக்கில் சேர்க்கப்பட்டது. இப்போது ஐரோப்பிய நடுவண் வைப்பகத்தின் தலைவராகவும் கிரீசுடனான நாடகத்தில் முதன்மையான பங்கு வகிப்பவருமான மாரியோ டிராகிதான் அந்த சமயத்தில் கோல்ட்மேன் நிறுவனத்தின் நாட்டிடைப் பிரிவுத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீசு மட்டுமே இத்தகைய குற்றவாளி அன்று. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பணப் பரிமாற்றங்களில் சந்தைக்கு அப்பாற்பட்ட பரிமாற்ற விகிதங்களைப் பயன்படுத்தித் தம் கடன்களை மேலாண்மை செய்வதற்குத் தக்க கணக்கீட்டு விதிகள் 2008 வரை நடைமுறையில் இருந்தன. கோல்ட்மேன் உள்ளிட்ட பெரும் நிதி நிறுவனங்களின் அழுத்தமே இதற்குக் காரணம்.
கிரீசுக்கு கோல்ட்மேன் உதவியதைப்போலவே மற்றொரு பன்னாட்டு நிதிச் சேவை நிறுவனமான சேபீமோர்கன் 1990-களின் இறுதி ஆண்டுகளில் இத்தாலிக்கும் வழிகாட்டிற்று. அப்போதைக்குச் சாதகமான பரிமாற்ற விகிதத்தில் நாணயப் பரிமாற்றம் செய்வதன் மூலம் இத்தாலி தன் கடனை மறைப்பதற்கு அந்நிறுவனம் உதவிற்று. இதன் மூலம் எதிர்காலக் கடன்களாக அந்நாட்டின் நிதியறிக்கைகளில் காட்டப்படாமல் எதிர்காலத்தில் திருப்பித் தரவேண்டிய தொகைகளுக்கு இத்தாலி பொறுப்பேற்றுக் கொண்டது.

ஆனால், கிரீசு நாட்டின் நிதி நிலைமைதான் இருப்பதிலேயே மோசமாக இருந்தது; [அத்தகைய நாடுகளுக்கு] உதவியளிக்கும் நிறுவனங்களில் கோல்ட்மேன் தான் பெரியதாக இருந்தது. பல ஆண்டுகளாக தொடரும் ஊழல்கள் மற்றும் பணக்காரர்களின் வரி ஏய்ப்பு ஆகியவற்றால் கிரீசு பாதிக்கப்பட்டிருந்தது என்பதில் ஐயமில்லை. அதே சமயம், கோல்ட்மேன் இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி நிறுவனமுமன்று: கிரீசையும், அத்தோடு ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அடகு வைத்துத் தன் உபரியைப் பெருமளவு பெருக்கிக்கொண்டது அந்த நிறுவனம். அதையொத்த பிற பெரிய நிதிச் சேவை நிறுவனங்களும் அவ்வாறே செயல்பட்டன. ஆனால், குறைந்த காலத்தில் பெரும் வீக்கம் கண்ட உலக நிதிச் சந்தை அதன் அழுத்தம் தாங்காமல் வெடித்தபோது அத்தகைய அடகு ஒப்பந்தங்கள் உலகப் பொருளாதாரத்தை மண்டியிடச் செய்தன.
பன்னாட்டு நிதி நிறுவனங்களின் கொள்ளைகளால் உலகப் பொருளாதாரம் தாக்குண்டிருந்த அதே காலத்தில் கோல்ட்மேன் நிறுவனம் கிரீசுக்கு வேறோர் தந்திரத்தைப் பரிந்துரைத்தது. கிரேக்கக் கடன் சிக்கல் உலகளவில் பேசுபொருளாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், 2009 நவம்பரில் கிரேக்க நாட்டின் பொது மருத்துவத் துறையின் கடனை மிகத் தொலைவான எதிர்காலத்திற்குத் தள்ளிவைப்பதற்கு உதவும் நிதிய வழிமுறை ஒன்றை கோல்ட்மேன் முன்வைத்தது. ஆனால், இந்த முறை கோல்ட்மேன் வீசிய தூண்டிலில் கிரீசு விழவில்லை.

அமெரிக்காவின் பன்னாட்டு நிதி நிறுவனங்களை அமெரிக்க அரசு [மக்களுடைய வரிப்பணத்தைக் கொண்டு ‘உடுக்கை இழந்தவன் கைபோல …’] தக்க தருணத்தில் கடன் தந்து மீட்டதை நாமறிவோம். அந்நிறுவனங்கள் மீண்டும் உபரி ஈட்டத் தொடங்கியபின் அந்தக் கடனைத் திருப்பித் தந்துவிட்டன. இப்போது வைப்பகங்கள் உள்ளிட்ட நிதிச் சேவை நிறுவனங்களின் பங்குகள் உச்சாணியில் உள்ளன. கோல்ட்மேன் பங்கு 2008 நவம்பரில் 53 டாலராக இருந்தது. இப்போது 200 டாலருக்கும் அதிகமாக விற்கிறது.
நிதிச் சேவை நிறுவனங்களின் மேலாளர்கள் பெருமளவு ஊதிய உயர்வையும், பதவி உயர்வுகளையும் ஈட்டினர். கிரீசுக்கு “வழி”காட்டிய கோல்ட்மேன் தலைவர் சென்ற ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 2.5 கோடி டாலர் (சுமார் ரூ 150 கோடி) வருமானம் ஈட்டினார். அவரால் “வழி” காட்டப்பட்ட கிரேக்கர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வாங்கக்கூடப் பணம் இல்லாது தவிக்கின்றனர்!
கிரீசில் நடந்தது போலவே அமெரிக்காவிலும் நடந்தது. முதலில், நிதி நிறுவனங்களின் கொள்ளைக்கார கடன் கருவிகள் மூலமாக பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இன்று நிதி நிறுவன மேலாளர்கள் சொகுசு விடுமுறைகளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பல கோடி அமெரிக்க மக்கள் தம் வேலை, சேமிப்பு, வீடு வாசல் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர்.
கிரீசுக்கு விற்கப்பட்டது போன்ற ஒப்பந்தங்களை வாங்கிய பற்பல அமெரிக்க நகராட்சிகள் அடிப்படைச் சேவைகளைத் தர இயலாது விழிபிதுங்கி நிற்கின்றன. கிரீஸ் அரசுக்கு வாக்களித்தது போலவே, தமது நிதிச் சேவைக் கருவிகளை வாங்கினால், சந்தையிலிருந்து குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம் என்று ஆசை காட்டின நிதி நிறுவனங்கள். அவற்றில் அடங்கியிருந்த இருந்த எதிர்மறை அபாய சாத்தியங்களைப் பற்றி வாய் திறக்கவில்லை. பின்னர், நிதி நெருக்கடியின் காரணமாக வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்து நகராட்சிகள் வாங்கிய நிதிக்கருவிகள் பெரும் சுமையாக மாறிய பிறகு, நகராட்சியகள் தமது கடன்களை மறுசீரமைக்க வேண்டுமானால் அவை பெருமளவு தண்டம் செலுத்த வேண்டுமென்று இந்த நிதிச்சேவை நிறுவனங்கள் நிபந்தனை விதித்தன.

இதன்படி, மூன்றாண்டுகளுக்கு முன்னால் டெட்ராய்ட் நகர நீர் வழங்கல் துறை கோல்ட்மேன் உள்ளிட்ட வைப்பகப் பெருநிறுவனங்களுக்குச் சுமார் 55 கோடி டாலர் தண்டம் கட்ட வேண்டி வந்தது. அந்நகர மக்கள் தண்ணீருக்குச் செலுத்தும் வரியில் ஏறக்குறைய 40 விழுக்காடு மேற்படி தண்டத் தொகையை ஈடு செய்வதற்கே செலவாகிவிடுகிறது. தண்ணீர் கட்டணம் செலுத்த முடியாமல் நீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட மக்களுக்கு தம் நிலைமைக்கான பொறுப்பு கோல்ட்மேன் மற்றும் பிற பெரு வங்கிகள்தான் என்ற உண்மைக் காரணம் தெரியாது.
இதுபோலவே, சிக்காகோ நகரக் கல்வித் துறையும் இந்நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. அதன் நிதித் திட்டம் ஏற்கனவே பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது. நிதி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களின்படி ஆண்டுக்கு 3.6 கோடி டாலர் செலவாகிறது. அந்த ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டுமானால் சிக்காகோ கல்வித் துறை நிதிச் சேவை நிறுவனங்களுக்குத் தரவேண்டிய தண்டம் 20 கோடி டாலர்கள்!
10 ஆண்டுகளுக்கு முன்பு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக கலிபோர்னியா மாநிலத்தின் ஓக்லன்ட் நகரம் கோல்ட்மேன் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 40 லட்சம் டாலர் கப்பம் கட்டிக்கொண்டுள்ளது. அது தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கோல்ட்மேன் கேட்கும் தண்டத் தொகை 1.6 கோடி டாலர். இதை எதிர்க்கும் முகமாக கோல்ட்மேன் நிறுவனத்தைப் புறக்கணிப்பது என்று ஓக்லன்ட் நகரசபை முடிவெடுத்துள்ளது. இது குறித்து கோல்ட்மேன் தலைவர் பிளாங்க்பைனிடம் கேட்ட போது, ஒப்பந்தத்தை ரத்து செய்வது பங்குதாரர் நலனுக்குப் புறம்பானது என்று விளக்கம் அளித்தார்.
இத்தகைய கொள்ளைக்காரத் திட்டங்களை வகுத்து, அவற்றின் பலன்களை ஊதிப் பெருக்கிக் காட்டி, அவற்றுக்கான விலையையும், எதிர்மறை விளைவுகளையும் அடக்கி வாசித்து அரசுத் துறைகளிடம் விற்பதில் கோல்ட்மேன் போன்ற நிதிச் சேவை நிறுவனங்கள் கெட்டிக்காரர்கள். அவற்றின் மூலந்தான் அவை பெரும் உபரி ஈட்டுகின்றன. அவை தரும் திட்டங்கள் தோல்வியுறுகையில், அமெரிக்க நகர சபைகளாக இருந்தாலும் சரி, தனிநபர் வீட்டுக் கடனாளியாக இருந்தாலும் சரி அல்லது கிரீஸ் ஆக இருந்தாலும் சரி அவர்களின் உதவிக்கு வராமல் சட்ட நடைமுறைகளுக்குப் பின்னும், தமது பங்குதாரர் நலன்கள் என்ற போர்வையிலும் அவை ஒளிந்துகொள்கின்றன.
இப்படிப்பட்ட நிறுவனங்களிடம் சிக்கிக்கொள்ளும் அரசுத் துறைகள் மீதும் தவறுகள் இருப்பதை மறுக்கமுடியாது. அவை தம் வரவு செலவுகளைக் கட்டுக்குள் வைப்பதில்லை அல்லது, அந்தத் துறைகளை நிர்வகிப்பவர்கள் இப்படிப்பட்ட திட்டங்களை நம்புமளவு ஏமாளிகளாகவோ முட்டாள்களாகவோ உள்ளனர்.
ஆனால் இந்த நிகழ்வுகள் அனைத்திலும் கோல்ட்மேன் நிறுவனத்திற்குத் தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அரசுத் துறைகளுக்குத் தான் விற்கும் திட்டங்களின் உண்மையான இடர்கள், அவற்றால் நேரும் செலவினங்கள் ஆகியன குறித்து அந்த அரசுத் துறைகளைக் காட்டிலும் கோல்ட்மேனுக்கு மிகத் தெளிவான புரிதல் இருந்தது. கோல்ட்மேனிடம் இல்லாதது அறநெறிக் கோட்பாடு ஒன்றுதான்!
அருஞ்சொற்பொருள், கலைச்சொற்கள், அயல்மொழிப் பெயர்ச்சொற்கள்
- அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் – the united states of america
- இத்தாலி – italy
- உபரி (‘லாபம்’ என்பதன் தமிழ் வடிவம்) – profit
- ஐரோப்பிய ஒன்றியம் – european union
- ஐரோப்பிய நடுவண் வைப்பகம் – the european central bank
- ஓக்லன்ட் – oakland
- கடன் முறி – bond
- கமுக்கமாக (‘ரகசியமாக’ என்பதன் தமிழ் வடிவம்) – in secret
- கலிபோர்னியா பல்கலைக்கழகம் – university of california
- கிரீசு – greece
- கோல்ட்மேன் சாக்சு – goldman sachs
- சிக்காகோ – chicago
- சேபீமோர்கன் – jpmorgan
- டெட்ராய்ட் – detroit
- திட்டக்கொள்கைத் துறை – department of public policy
- தொழிலாளர் நலத் துறை அமைச்சர் – secretary of labor
- மாசுட்ரிக் ஒப்பந்தம் – the maastricht treaty
- மாரியோ டிராகி – mario draghi
- முகமை – agency
- யூரோ – the euro
- ராபர்ட் ரெய்ச் – robert reich
- விழுக்காடு (‘சதவீதம்’ என்பதன் தமிழ் வடிவம்) – percentage
- வைப்பகம் (‘வங்கி’ என்பதன் சரியான தமிழ் வடிவம்) – bank
கிரீஸ் : பிச்சை எடுப்பதை விட போராடுவதையே விரும்புவேன்
“பன்னாட்டு நிதி நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தையின் போது பிரதமர் சிலுவையில் அறையப்பட்டார்!”
“பிரதமர் மீது தண்ணீர் அடித்து (water boarding) சித்திரவதை!”
“பிரதமர் மண்டியிட்டு அடிபணிந்தார்!”
“நாடாளுமன்றத்தில் மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு முன்பு எங்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று நிதி நிறுவனங்கள் நிபந்தனை”
“சுமார் ரூ 3.5 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனங்களை எங்கள் வசம் பிணையாக ஒப்படைக்க வேண்டும். சரியான நேரத்தில் அவற்றை விற்று காசாக்கிக் கொள்வோம் என்று நிதி நிறுவனங்கள் கறார்.”
“எங்கள் விருப்பத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் – நிதி நிறுவனங்கள் அதிரடி.”
“நாட்டின் அனைத்து முக்கிய முடிவுகளும், வெளிநாட்டு தலைவர்களாலும், நிதித்துறை அதிகாரவர்க்கத்தாலும் எடுக்கப்படும்.”
இவை கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராசுக்கு ஐரோப்பிய மத்திய வங்கியும் ஜெர்மனி தலைமையிலான ஐரோப்பிய நாடுகளும் இழைத்த அவமானம் குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள்.
“ஐ.எம்.எஃப், உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டுவிப்பது பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம். ஆனால், இப்போது கிரீஸ் விஷயத்தில் அந்நாட்டு பொருளாதாரத்தை தாம் கட்டுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் வெளிப்படையாகவே நிபந்தனை போட்டிருக்கின்றன” என்கிறார் கார்டியன் நாளிதழில் சுமாஸ் மில்னே என்ற பத்திரிகையாளர்.
“இவர்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? இந்த நடவடிக்கைகள் கடுமையானவை என்பதைத் தாண்டி பழிவாங்குவதாகவும், கிரீசின் இறையாண்மையை அழிப்பதாகவும், கிரேக்க பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான எந்த நம்பிக்கையையும் கொல்வதாகவும் உள்ளன. நான் எப்போதுமே போற்றிய, ஆதரித்த ஐரோப்பிய திட்டத்தின் மீது ஒரு பயங்கரமான, அது இறுதியானதாகக் கூட இருக்கலாம், தாக்குதல் நடந்திருக்கிறது” என்று புலம்புகிறார் நோபல் பரிசு பெற்ற பொருளியல் பத்திரிகையாளர் பால் குரூக்மேன்.

“இந்த நடவடிக்கைகள் கடுமையானவை என்று ஒத்துக் கொள்கிறேன். நான் அவற்றை ஆதரிக்கவில்லை. அவை கிரேக்க பொருளாதாரத்துக்கு உதவும் என்று நான் கருதவில்லை. ஆனால், எனக்கு வேறு வழியில்லை. இதை ஏற்று அமல்படுத்த வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்” ஜூலை 15-ம் தேதி கிரீஸ் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டு பேசிய பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸின் சோக வசனம்.
2010-ம் ஆண்டு ஆரம்பமான எலும்பை முறிக்கும் பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்து கிரீஸ் மக்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில், ‘இடது சாரி’ சிரிசா கட்சியை தேர்ந்தெடுத்தனர். அக்கட்சியைச் சேர்ந்த அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையிலான அரசு கடன் மறுசீரமைப்பு, மக்கள் மீதான சுமையை குறைத்தல் ஆகியவற்றுக்கு சர்வதேச கந்து வட்டி கடன் நிறுவனங்களிடம் கடந்த 6 மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தியது. இறுதிக் கெடுவாக நிதியாதிக்க கும்பல் முன்வைத்த மேலும் வாழ்வாதார பறிப்பு, வரி உயர்வு, தனியார்மயம் அடங்கிய ஒப்பந்ததை கிரீஸ் மக்கள் ஜூலை 5-ம் தேதி நடந்த நாடு தழுவிய வாக்கெடுப்பில் நிராகரித்தனர்.
2010-லிருந்து 25% பொருளாதார சுருக்கம், உழைக்கும் மக்களில் 4-ல் ஒருவருக்கு வேலை இல்லை, இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலையற்றவர்கள் என்ற நிலையில் மக்களை நெருக்கும் நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதன் மூலம் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகமாகும்.
இதனால் கிரீஸ் யூரோ நாணயத்திலிருந்து வெளியேற்றப்படுவது உறுதியாகியிருக்கிறது. எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள் அல்லது எத்தனை ஆண்டுகள் என்பதுதான் கேள்வி.
ஆனால், ஐரோப்பிய நிதி நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படா விட்டால் யூரோ நாணயத்தை கைவிடுவதற்கான திட்டத்தைக் கூட தயாரித்திருக்கவில்லை சிப்ராஸ் அரசு. எப்படியாவது கிரீசை ஏகாதிபத்தியக் கட்டமைவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இருந்த சிப்ராஸ் பேச்சுவார்த்தையில் அவமானப்படுத்தப்பட்டு அடிபணிய வைக்கப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரான கிரீஸ் ஒரு காலனிய அடிமை நாடு போல நடத்தப்பட்டது. அந்நாட்டு மக்கள் நிதி நிறுவனங்களின் கொள்ளைத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்ததற்காக அந்நாட்டு பொருளாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.
“கிரீஸின் மொத்தக் கடன், நாட்டின் ஆண்டு உள்நாட்டு உற்பத்தியில் 200%-ஐ தாண்டி விடும். இத்தகைய கடன் சுமையை எந்த நாடும் தாங்க முடியாது. எனவே கடன்களைக் குறைப்பது (ரத்து செய்வது) பற்றி ஐரோப்பிய நாடுகள் பரிசீலிக்க வேண்டும்” என்று கந்து வட்டி கூட்டணியில் பங்கு பெற்றுள்ள ஐ.எம்.எஃப் அறிவுரை கூறியிருக்கிறது. “ரெண்டு காலையும், ரெண்டு கையையும் ஒடைச்சு விட்டால் எப்படி அவன் ஒழைச்சு கடனை அடைப்பான். கொஞ்ச நஞ்சம் உயிரை விட்டு வை” என்று புத்திசாலியாக யோசிக்கிறது, ஐ.எம்.எஃப்.
சிரிசா கட்சியின் 201 உறுப்பினர் கொண்ட மத்தியக் குழுவின் 110 உறுப்பினர்கள் சிப்ராசை கண்டனம் செய்து, இந்தக் கடன் ஒப்பந்ததை நிராகரிக்கும்படி அறிக்கை விட்டனர். கடன்காரர்களின் விருப்பப்படி பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சர் வரோஃபகிஸ், “வாகை சூடிய வெற்றியாளர்களாக தங்களை அடிமை கிரீஸ் அரசு வரவேற்க வேண்டும் என ஐரோப்பிய நிறுவனங்கள் உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார்.
அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற சபாநாயகர் ஜோ கான்ஸ்டான்டாபோலோ சிப்ராசின் வேண்டுகோளின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நிதித்துறை துணை அமைச்சர் நாடியா வலவானி, “இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை அமல்படுத்த முனைந்து நிற்கும் அரசாங்கத்தில் தான் தொடர முடியாது” என்று தன் பதவியை ராஜினாமா செய்தார். நிதி அமைச்சக செயலர் ஜெனரல் மானோர் மானோசாகிசும் பதவி விலகினார்.
அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சங்கங்களும் ஏதென்ஸ் தரையடி ரயில் தொழிலாளர்களும், நாடு தழுவிய ரயில்வே தொழிலாளர்களும் 24 மணி நேர வேலை நிறுத்தம் செய்தனர். இந்த ஒப்பந்தம் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நாடாளுமன்றத்தின் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது கலவர கட்டுப்பாடு சிறப்பு போலீசை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது சிப்ராஸ் அரசாங்கம். இந்தக் கலவர கட்டுப்பாடு சிறப்பு போலீசை கலைப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்தவர் சிப்ராஸ். தான் எதிர்த்த ஐரோப்பிய பொருளாதார நெரித்தலையே மக்கள் மீது அவிழ்த்து விடும் போது போலீசை ஏவுவதா பெரிய விஷயம்!
38 சிரிசா கட்சி உறுப்பினர்கள் நிதி நிறுவனங்களுடனான இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார்கள்.
இந்தச் சூழலில், ஜனவரி மாதம் தேர்தலில் தோற்றுப் போன, ஜூலை 5-ம் தேதி கருத்துக் கணிப்பில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்த எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன் சிப்ராஸ் கிரீஸின் அடிபணிதலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறார்.
‘தென் அமெரிக்க நாடுகளிலும், தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இடது சாரிகள் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்கள். உலகெங்கிலும் அமைதியான வழியில் சோசலிச புரட்சி நடந்து கொண்டிருக்கிறது’ என்று ஆர்ப்பரித்த சாய்வு நாற்காலி அறிவு ஜீவிகள் இப்போது அமைதியாகி விட்டார்கள். கிரீஸில் சிரிசாவாக இருந்தாலும், இந்தியாவில் போலி கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, ஏகாதிபத்திய தாக்குதலால் வெறுப்படையும் மக்களின் வாக்குகளைப் பெற்று ஒரு வேளை அதிகாரத்தைப் பிடித்து விட்டாலும், ஆட்சியில் அமர்ந்த பிறகு முதலாளிகளுக்கும், நிதி மூலதனத்திற்கும் அடிபணிந்து அவர்கள் காலை நக்கித்தான் தீர வேண்டும் என்பதை நடைமுறையில் நிரூபித்து நிற்கிறார் சிப்ராஸ்.
நியூயார்க் டைம்ஸில் பால் க்ரூக்மேன் கட்டுரையில் கருத்து தெரிவிக்கும் JPRasko என்ற ஏதென்சைச் சேர்ந்த இளைஞர் இப்படி சொல்கிறார்.
JPRasko ஏதென்ஸ் July 13, 2015
திரு குரூக்மேன். உண்மைக்கும், நியாயத்துக்கும் இவ்வளவு உறுதியாக போராடுவதற்காக உங்களுக்கு நன்றி. நான் 28 வயதான ஒரு கிரேக்கக் குடிமகன்; அழகான ஒரு 8 மாத குட்டிப்பாப்பாவின் அப்பா. நான் அவளது எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறேன். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால், என்னால் சொல்ல முடிவது இதுதான்.
இந்தத் தருணத்தில் கிரீஸ் எதிர்கொண்டிருப்பது ஒரு போர். ஈவு இரக்கமற்ற ஒரு போர்.
கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்னையும், எனது குடும்பத்தையும் இடி போலத் தாக்கும். கடந்த 10 ஆண்டுகளாக எதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோமோ அவை அனைத்தும் ஒரே நொடியில் சாம்பலாகிப் போய் விடும்.
ஆனால்…, நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்… இதற்கு மேல் தாங்காது. இந்தக் கணத்தில் என்னுள் கோபம் கொதிக்கிறது. பிச்சை எடுக்கும் ஏழையாக வாழ்வதை விட போராடும் ஒரு ஏழையாக வாழ்வதையே நான் விரும்புவேன்.
உலகெங்கிலுமிருந்தும் இதைப் படிக்கக் கூடியவர்கள் எல்லோரிடமும் ஒரே ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
எங்கள் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட 7000 பேரின் குடும்பங்களுக்காக போராடுங்கள். எங்களது இந்தப் போராட்டத்தில் இணைந்து கொளுங்கள். கிரீசை கைவிட்டு விடாதீர்கள்.
– அப்துல்
மேலும் படிக்க:
மோடியின் எடுபிடிகளே சி.பி.ஐயின் இயக்குநர்கள்
இந்தியாவை ஆளும், அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரை, மத்திய புலனாய்வுத்துறை ஆன சி.பி.ஐ (Central Bureau of Investigation) ‘கூண்டுக்கிளி’ என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆங்கிலப் பத்திரிகைகளால் Caged Bird என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த சி.பி.ஐ இன்றைக்கு மோடி கும்பலால் ‘குட்டி குஜராத்தாக’ மாற்றப்பட்டிருக்கிறது.

மிகச் சமீபத்தில் ஒய்.சி. மோடி, சிபிஐயின் கூடுதல் இயக்குநரகாவும் அருண் குமார் சர்மா இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
யார் அந்த ஒய்.சி மோடியும் அருண் குமார் சர்மாவும்?
ஒய்.சி.மோடி அசாம்-மேகாலயாவிலிருந்து ஐ.பி.எஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர். மோடியின் கூட்டாளியான இவர் குஜராத் படுகொலைகளை விசாரிக்கும் அமைப்பிலும் ஹரேன் பாண்டியா கொலை வழக்கிலும் புலனாய்வு அதிகாரியாகச் செயல்பட்டவர்.
ஹரேன் பாண்டியா குஜாரத்தின் உள்துறை அமைச்சராகவும், மோடியின் கூட்டாளியாகவும் இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். மோடியின் இரத்தக் கவுச்சி வெளிவந்த நேரத்தில் மோடியின் கூட்டாளியான ஹரேன் பாண்டியா காந்திநகர் பூங்கா ஒன்றின் அருகில் போட்டுத் தள்ளப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட சி.பி.ஐ விசாரணைக்குழுவின் தலைவராக இருந்தவர் ஒய்.சி.மோடி!
ஒய்.சி. மோடியின் திருவிளையாடலால் ஹரேன் பாண்டியன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் குஜராத் உயர் நீதி மன்றத்தால் 2011-ல் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு எழுதிய நீதிபதி வெளிப்படையாக சி.பி.ஐயைக் காறித்துப்பும் விதத்தில் கண்டனங்களை பதிவு செய்தார்! ஹரேன் பாண்டியன் குடும்பத்தினர், சி.பி.ஐதான் இந்த வழக்கை ஊற்றி மூடியது என்று குற்றம் சாட்டினர்.
ஒய்.சி.மோடியின், மோடி சேவை இத்தோடு நிற்கவில்லை. 2010 குஜராத் படுகொலைகளை விசாரிக்கும் பொருட்டு ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக்கான ஆர்.கே. ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவிலும் அங்கம் வகித்தவர் இந்த ஒய்.சி.மோடி! குறிப்பாக கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிற்பாடான கலவரங்கள், நரோடா பாட்டியா, நரோடா காம் படுகொலைகள் தொடர்பான மூன்று விசாரணைக் கமிசன்களிலும் விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டிருக்கிறார்.
விளைவு!? கோத்ரா ரயில் எரிப்புக்கு பிற்பாடான கலவரங்களை மோடி தடுத்து நிறுத்தவில்லை என்பதற்கோ கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்கு வாய்மொழி உத்தரவுகளை மோடி வழங்கினார் என்பதற்கோ போதிய ஆதாரமில்லை என்று கச்சிதமாக வேலையை முடித்தது மோடியின் கைக்கூலிக்கும்பலான ராகவன்-ஒய்.சி.மோடி கும்பல். இந்த குஜராத் கும்பல் சி.பி.ஐக்குள் நுழைந்த கதையின் ஒரு பரிமாணம் மட்டுமே இது!
இரண்டாவது பரிமாணம் அருண் குமார் சர்மாவினுடையது! கடந்த ஏப்ரலில் சி.பி.ஐக்குள் இணை இயக்குநராக கொண்டுவரப்பட்ட இந்த அருண் குமார் சர்மா யார்?
மோடியின் கட்டளைப்படி பெங்களூரைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளாரன பெண்ணை அமித் ஷா தலைமையில் குஜராத்தின் ஒட்டுமொத்த புலனாய்வுத்துறையே வேவு பார்த்ததில்லையா? அப்படி வேவுபார்த்த புலனாய்வுத்துறைக்கு தலைமை தாங்கிய ஐ.ஜி தான் அருண் குமார் சர்மா.
2013-ல் கோப்ரா-போஸ்ட் (cobrapost) மற்றும் குலைல் (Gulail.com) இணையதளங்கள் வெளியிட்ட ஆடியோ பேச்சுகள் அருண் குமார் சர்மா, மோடியின் உளவாளி (Snoopgate) என்பதை அம்பலப்படுத்தியது.
230 தொகுதிகளாக வெளியிடப்பட்ட அமித் ஷாவிற்கும் குஜராத் உளவுப்பிரிவிற்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களில், அமித் ஷா, “என்னை விட, மோடி சாஹிப் தகவல்களை முன் கூட்டியே தெரிவதில் வல்லவராக இருக்கிறார்” என்று பேசிய வரலாற்று ஆவணமும் அடக்கம்!
பொதுவெளியில் அம்பலமான ஆடியோ பேச்சுக்கள், பெண்ணை உளவு பார்ப்பது குஜராத்தில் மட்டுமன்றி கர்நாடகவிலும் தொடர்ந்ததை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இதைத் தலைமைதாங்கி நடத்திய அருண் குமார் ஷர்மா தான் சி.பி.ஐ.யில் தற்பொழுது இணை இயக்குநராக அமர்த்தப்பட்டிருக்கிறார். அதுவும் சுலபத்தில் முடிந்துவிடவில்லை.
அருண் குமாருக்கு சி.பி.ஐ.யின் கொள்கைத் துறையின் இணை இயக்குநர் (JD (policy) பதவி வழங்க வேண்டும் என்று ஆளும் கும்பல் அழுத்தம் கொடுத்திருக்கிறது. அந்தப் பதவி மத்திய அமைச்சரவையின் அனைத்து இலாக்காக்களையும் சி.பி.ஐயையும் இணைக்கும் பதவியாகும். இந்த பதவிக்கு வருபவர் சி.பி.ஐயில் ஏற்கனவே பணியாற்றியவராகவும் அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும் என்கிறது பணிநியமன ஒழுங்குமுறைகள். இதைக்காரணம் காட்டி, சி.பி.ஐ இயக்குநர் எதிர்த்ததால், சி.பி.ஐயோடு தொடர்பில்லாத அருண் குமார் ஷர்மா இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
சி.பி.ஐ, குட்டி குஜராத்தாக மாறியது இத்தோடு நிற்கவில்லை. மோடி கும்பல் பதவியேற்றவுடனயே அப்பொழுது சி.பி.ஐ.யின் இணை இயக்குநராக (கொள்கைத் துறை) இருந்த ஜாவித் அகமத் உத்தர பிரதேசத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். இத்துணைக்கும் அடுத்த கூடுதல் இயக்குநராக பதவிபெறும் நிலையில் இருந்த ஜாவித் அகமத் தூக்கியடிக்கப்படுவதற்கு ஒரே காரணம், இவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அப்தாப் ஆலமின் தூரத்துச் சொந்தம் என்பதுதான்.
நீதிபதி அப்தாப் ஆலம், கிரிமினல் அமித் ஷா திட்டமிட்டு செய்த ‘சோரபூதின் போலி எண்கவுண்டர்’ தொடர்பான வழக்கில் ஓய்வு பெறுவதற்கு முன் விசாரணை நீதிபதியாக இருந்தவர். (பின்னர் வந்த சதாசிவம் அமித் ஷாவை விடுவித்து, கேரள கவர்னர் பதவியைப் பெற்றுக்கொண்டது தனிக்கதை!)
நீதிபதியின் தூரத்துச் சொந்தமான ஜாவித் அகமத்தின் பணியிட மாற்றம் அமித் ஷாவின் நிபந்தனையின் பேரிலேயே நடைபெற்றதாக உள்துறை செயலர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்!
நம்ம ஊரில் பத்ரி சேசாத்ரி, துக்ளக் சோ, தரகு வைத்தி, மாமா மணியன், போன்றவர்கள் ‘குஜராத் மாடல்’ ‘குஜராத் மாடல்’ என்று கூவியது இன்றைக்கு சி.பி.ஐ குட்டி குஜாராத்தாக மாறியிருப்பதில் இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் கறாராக சொல்வதென்றால் அழுகி நாறும் ஓர் உண்மை நிரூபணம் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தோற்றுப்போன இந்த அமைப்பில் சி.பி.ஐ, ஏன் குட்டி குஜராத்தாக மாற்றப்பட வேண்டும்? என்பதில் முக்கிய நிகழ்ச்சி நிரலே அடங்கியிருக்கிறது.
கேள்விக்கான விடையை நாம் நம்பர் போட்டு பரிசீலிக்க வேண்டும்.
1. லலித்மோடி விவாகரம் தொடர்பாக வசுந்தரா ராஜே அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்!
2. ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ் கும்பலும் சேர்ந்து கொள்ளையடித்த வியாபம் ஊழல் இன்றைக்கு சி.பி.ஐ.யின் கையில்!
3. மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் பா.ஜ.க.வின் ஆர்.எஸ்.எஸ் வெறியரான சிவராஜ் சிங் சவுகான் வியாபம் தொடர்பாக மோடியை டில்லியில் சந்தித்திருக்கிறார்!
4. மகாராஷ்டிராவின் பங்கஜ முண்டா ஊழல் வழக்கு சி.பி.ஐக்கு எதிர்காலத்தில் மாற்றப்படலாம்!
5. ராம் ஜென்ம பூமியில் ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் கோயில் கட்டுகிறேன் பேர்வழி என்று வி.ஹெச்.பியின் அசோக் சிங்கால் கூட்டம் 1400 கோடி ரூபாயை சுருட்டியிருக்கிறது. இந்துத்துவத்தின் இரு முகமைகள் (இந்து மகாசபா, வி.ஹெச்.பி) தங்களுக்குள் பங்கிடுவதில் சண்டை காரணமாக இன்றைக்கு விசயம் வெளியே நாறிக்கொண்டிருக்கிறது.
6. தமிழ்நாட்டில் வேலூர், கோவை, இராமநாதபுரம், கன்னியாகுமரி போன்றவை பா.ஜ.கவின் ஏ சென்டர்களாக அறிவித்து அமித் ஷா களப்பணி காணவிருப்பதாக நாளேடுகள் சொல்கிறன. அமித் ஷாவின் களப்பணி பாணியின் படி இங்கெல்லாம் இரத்த ஆறு ஓட வேண்டும். ஏற்கனவே ஆம்பூரில் இந்து-முசுலீம்களுக்கிடையே முனைவாக்கம் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தென்மாவட்டங்களில் இன்னுமோர் சாதிக்கலவரம் நடைபெறுவதற்கு, முன்தயாரிப்பு வேலைகள் ஆப்ரேசன் 100 எனும் பெயரில் நடைபெறுவதாக தமிழ் இந்துவின் பத்திரிக்கையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து அரங்குகளிலும் அம்பலப்பட்டு அழுகிநாறும் மோடி கும்பலுக்கு இனி பிரச்சனைகளை திசை திருப்புவதற்கும் மேலும் தாக்குப் பிடிப்பதற்கும் எஞ்சியிருக்கும் வழிமுறைகள் கலவரமும் இந்து-முசுலீம் பிரச்சனையும் மட்டுமே!
இதில் சி.பி.ஐ, குட்டி குஜராத்தாக இருக்க வேண்டியது இந்துத்துவ கும்பலின் வழமையான வாடிக்கைதான்.
இந்த நேரத்தில் மோடியின் குஞ்சு குளுவான்கள், ரசிக சிகாமணிகள், கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல், பத்திரிகை தரகு மாமாக்கள் இவர்களை இன்னும் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் அறியாமையில் இருப்பதாக நடிப்பவர்கள், வளர்ச்சி என்று வேசம் போடுகிற மோடியின் முதலாளித்துவ ஜாக்கிகள் போன்றவர்கள் தான் அடுத்த புலனாய்வுக்குழுவில் சிறப்பு அதிகாரிகளாக இருக்கப்போகிறவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!!!
இருந்தபோதிலும் இந்த ஊழிக்கூத்தை நாம் இனிமேலும் அனுமதிக்கப்போகிறோமா? என்பது தான் இத்தருணத்தில் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி!
– இளங்கோ
மேலும் படிக்க
விஜயகாந்த் கல்லூரி பேராசிரியர் மீது கொலைவெறி தாக்குதல்!
விஜயகாந்த் கல்லூரி உதவி பேராசிரியர் விக்ரம் மீது கல்லூரி நிர்வாகத்தின் கொலைவெறி தாக்குதல்!
செங்கல்பட்டு அருகே விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு இரண்டு ஆண்டுகளாக பயோ டெக்னாலஜி துறையில் உதவி பேராசிரியராக வேலை செய்து வரும் விக்ரம் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்த குண்டர்களால் 15-07-2015 அன்று கடுமையாகத் தாக்கப்பட்டார்.
தாக்குதலின் பின்னணி
கல்லூரியில் வேலை செய்துவரும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை சம்பளம் தரப்படவில்லை. மேலும் பேராசிரியர்களும், உதவி பேராசிரியர்களும் பாடம் நடத்துவதோடு, கல்லூரி நிர்வாகம் சொல்லும் எல்லா வேலைகளையும் கட்டாயம் செய்யவேண்டும் என நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. உதாரணமாக, மற்ற கல்லூரிகளுக்கு சென்று போட்டிகள் நடத்துகிறோம் என்ற பெயரில் பேராசிரியர்கள் தங்களது சொந்த செலவில் ஆள் பிடிக்கவேண்டும்.
இது இல்லாமல், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, “கோடை விடுமுறைக்கு பின் ஒவ்வொரு பேராசிரியரும் குறைந்தது இரண்டு மாணவர்களையாவது சேர்த்துவிடவேண்டும், இல்லையென்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போங்கள்” எனக் கட்டளையிட்டது நிர்வாகம்.
இப்படிப்பட்ட கல்லூரியின் தொடர்ச்சியான அத்துமீறல்களை யாரும் தட்டிக் கேட்கத் துணியாதபோது, விக்ரம் கேட்கத் துணிந்தார்.
ஜூன் 27-ம் தேதி அன்று கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது இஸ்ரோவை சேர்ந்த மாதவன் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அரங்கம் முழுவதும் மாணவர்களும், பேராசிரியர்களும், பெற்றோர்களும் நிரம்பி இருந்தனர்.
இந்த விழாவில், “கல்லுாரி நிர்வாகம் சம்பளம் கொடுக்கவில்லை, மாணவர்களை அட்மிசனுக்கு ஆள் பிடிக்கச் சொல்கிறது” என்பன போன்ற உண்மைகளை துண்டறிக்கையாக அச்சிட்டு வினியோகித்து எதிர்ப்பு குரல் எழுப்பினார் உதவி பேராசிரியர் விக்ரம்.
அன்றைக்கே அவரை தாக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. இருந்தும் விக்ரம் அன்று தப்பிவிட்டார். பீதி அடைந்த நிர்வாகம் அனைவருக்கும் சம்பளத்தை உடனே பட்டுவாடா செய்தது.
ஆனால் உதவிபேராசிரியர் விக்ரமை பணியை ராஜினாமா செய்து விட்டு போகும் படி பல முனைகளில் இருந்து நெருக்குதல் கொடுத்தது நிர்வாகம். இதன் விளைவாக ராஜினாமா செய்ய நேரிட்டது.
பின்னர் 15-07-2015 அன்று தனது சான்றிதழ் போன்றவற்றை திரும்பப் பெறுவதற்காக முதல்வரை சந்தித்தார். அப்போது முதல்வர், விக்ரமிடம், “எங்கு தங்கியுள்ளார்? எந்த வழியில் போவார்? எந்த பேருந்தில் போவார்?” போன்ற விவரங்களை நயமான முறையில் விசாரித்துள்ளார்.
முதல்வரை சந்தித்துவிட்டு கல்லுாரி வளாகத்தில் இருந்து சுமார் மாலை 4 மணி அளவில் திடீரென 5 குண்டர்கள் விக்ரமை சூழ்ந்து கொண்டு தாக்கி கொண்டே ”என்னடா நினைத்துக் கொண்டாய், நிர்வாகத்திற்கெதிராக மாணவர்களை துாண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாய். இதோடு நிறுத்திக்கொள் ” என கூறி கீழே தள்ளி மிதித்துள்ளனர். இதனால் விக்ரமின் மூக்குக் கண்ணாடி உடைந்ததோடு மூக்குத் தண்டும் உடைபட்டு ரத்த காயம் ஏற்பட்டது.
இவர்களிடம் இருந்து தப்பி வெளியே வந்து மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் 16-7-2015 அன்று படாளம் காவல் நிலையத்தில் கல்லுாரி நிர்வாகத்திற்கு எதிராக புகார் கொடுத்துள்ளார் உதவி பேராசிரியர் விக்ரம்.
உதவி பேராசிரியர் விக்ரம் பதிவு செய்த புகாருக்கான முதல் தகவல் அறிக்கையின் நகல்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
விஜயகாந்த் கல்லுாரி மட்டும் அல்ல. எல்லா தனியார் கல்லுாரிகளுமே கல்விக்கு சற்றும் தொடர்பில்லாத கிரிமினல் மாஃபியா கும்பல்களால் தான் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல கல்லுாரிகள் தங்கள் ஆசிரியர்களை புரோக்கர்களாக மாற்றி கல்விச் சந்தையில் அலையவிட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படும் ஆசிரியர்களில் விக்ரமைப் போன்று துணிச்சலுடன் குரல் எழுப்பியவர்கள் மிகக் குறைவு. தனியார் கல்லுாரி மாஃபியாக்களுக்கு எதிராக துணிவுடன் போராடுமாறு ஆசிரியர்களையும், மாணவர்களையும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக் கொள்கிறது. உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் துணை நிற்போம்.
கல்லுாரி முதல்வரையும் தாக்குதல் நடத்திய குண்டர்களையும் கைது செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்.
தே.மு.தி.க என்ற அரசியல் கட்சியை நடத்திவரும் விஜயகாந்த் தனது கல்லுாரியில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
(சு.மில்ட்டன்)
செயலாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்புமையம்
போன் : 9842812062
சிவரக்கோட்டையை சிவப்பாக்கு ! சிப்காட்டை விரட்டியடி !
- பயத்தையும் அச்சத்தையும் ஒழிப்போம்!
- வாழ்ந்தாலும் செத்தாலும் எங்கள் பூமியில்தான்!
- சிவரக்கோட்டையை சிவப்பாக்குவோம்!
சிப்காட்டை விரட்டியடிப்போம்!
இந்தியா ஒரு விவசாய நாடு பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முக்கியதொழிலாக செய்பவர்கள். ஒரு நாட்டில் எது பிரதான தொழிலாக இருக்கிறதோ அதைச்சார்ந்துதான் அந்த நாடு வளர்ச்சி அடைய முடியும் என்பது பொதுவான விதி.
ஆனால், மக்களாட்சி என்று சொல்லக்கூடிய இந்த போலிஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகளும், ஆளும்வர்க்கமும் திட்டமிட்டே விவசாயத்தை அழித்து வருகின்றனர். இந்த நாடு யாருக்கானது? இந்த அரசு யாருக்கானது? தம் வாழ்வாதாரங்களை பாதுகாத்துக் கொள்ள இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த அரசோ, விவசாயிகளிடம் நிலத்தைப்பிடுங்கி சிறப்புப் பொருளாதார மண்டலம், சிப்காட் என்ற பெயரில் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கிறது.
அதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த சிவரக்கோட்டை, கரிசக்கலாம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி, நேசனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளுக்குத் தெரியாமலேயே அவர்களது விளைநிலங்களை சிப்காட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அரசு. தற்செயலாக ஒரு விவசாயி தன் நிலங்களுக்கு வில்லங்கச்சான்று எடுத்து பார்த்த போதுதான் அவருக்கு நிலைமை தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.

அதேபோல மற்ற விவசாயிகளின் நிலங்களும் சிப்காட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரிந்து அதிர்ச்சியுற்ற விவசாயிகள் வட்டாட்சியரை அணுகி கேட்டபோது, “இந்த நிலங்கள் மலட்டு பூமியென்று மாவட்ட ஆட்சியரால் சான்று வழங்கப்பட்டு அதன்பேரில் நிலங்கள் சிப்காட்டுக்கு மாற்றிவிடப்பட்டன” என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சிவரக்கோட்டை பகுதி விவசாயிகள் கடந்த எட்டு வருடங்களாக விளைநிலங்களைத் தரமாட்டோம் என்று பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர்.
இந்த நிலங்களில் விவசாயிகள் காலங்காலமாக 20-க்கும் மேற்பட்ட வகை சிறுதானியங்களைப் பயிர் செய்து விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறனர். இந்நிலையில் இந்த விவசாய நிலங்கள் மலட்டு பூமியென்று போலியான மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு தெரியாமலேயே நிலங்கள் சிப்காட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன.
நிலத்தையும், நீரையும் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் நம்மிடமிருந்து பிடுங்கும் அரசு, தெருவெங்கும் சாராயக்கடைகளைத் திறந்து நம் மக்களை அடிமையாக்கி சிந்திக்கும் திறனை, போராடும் பண்பினை அழித்து வருகிறது. இந்தக் கொலைகார, கொள்ளைக்கார அரசை எதிர்த்து எட்டாண்டுகளாக போராடி வரும் சிவரக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களை பாராட்டியும், உற்சாகப்படுத்தும் விதமாகவும், போராட்டத்தின் வடிவத்தை மாற்றவும் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பாக சிவரக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் சிவரக்கோட்டை மற்றும் அத்னைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலம் பாதுகாப்புக்கமிட்டி உறுப்பினர்கள், விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் மற்றும் சிவரக்கோட்டை உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக்குழுவின் பாடல்வரிகள் அந்த பகுதி மக்களின் பேராட்ட உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த தோழர் வீரணன்…,
“போராட்டம் இல்லாமல் வெற்றி காண முடியாது. நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். விவசாயத்தை அழித்து விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டு அதனை மறைக்க இலவசம் என்ற பெயரில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி யாருக்கு வேண்டும். இலவசம் நாங்களா கேட்டோம். இல்லை, எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும், விவசாயம் வேண்டும்.
ரேசன் கடைகளை மூடிவிட்டு நீங்கள் கொடுக்கும் ரூ 600-க்கு சாராயம் குடித்து சாகவா? எங்கள் பணத்தை எங்களுக்கே திருப்பி கொடுத்து ரேசன் கடைகளை மூடும் உங்களது திட்டம் எங்களுக்கு நன்றாக தெரியும்.
இலவசம் யார் கேட்டா? என்னா மயித்துக்குத் கொடுக்கிற. இலவசம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டம் மக்களை சோம்பேறிகளாக்கி விவசாயத்தை அழிக்கும் திட்டம். ஒரு கிராமத்தில் 1000 பேர்களுக்கு விவசாயத்தின் மூலம்தான் வேலை கிடைக்கும். நாம் தலைநிமிர்ந்தும் தன்மானத்தோடும் வாழலாம் உங்களுக்குத் துணையாக நாங்களும் எங்கள் தோழமை அமைப்புகளும் இருக்கிறோம் ஒன்றிணைந்து போராடுவோம் வாருங்கள்!”

சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி மூக்கையா…
“நாங்க இந்த பூமியை நம்பித்தான் வாழ்கிறோம். எங்களுக்கு வேறவேலை தெரியாது, எங்ககிட்ட இருந்து எங்க நிலத்தை பிடுங்கிட்டா நாங்க எப்படி வாழ முடியும்? எல்லா அரசியல் வாதிகளும் ஓட்டுக் கேட்டு வரும்போது நாங்க பாத்துக்கிறோம். உங்க நிலத்தை யாரும் எடுக்க மாட்டாங்க என்று வாக்குறுதி கொடுத்துட்டு போறாங்க. ஆனா அவங்கதான் இடைத்தரகராக இருந்து வேலை பார்க்கிறார்கள். எனவே அதிகாரிங்க ஒத்துழைப்பு கொடுக்கணும். புரட்சிகர அமைப்புகள் எங்களுக்கு துணையாக இருக்கணும்.”
சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி டேவிட் என்ற ஆறுமுகம் …
“இந்த கரிசல் பூமிதான் எங்கள் வாழ்வாதாரம். எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்குது இந்த அரசு. இது திருமங்கலத்தில் நடக்கிற பிரச்சனை என்று மட்டும் பார்க்ககூடாது. இதை ஒரு தேசியப் பிரச்சனையாக பார்க்க வேண்டும். இறையாண்மை பற்றி வள்ளுவர் கூட நிறைய எழுதியுள்ளார், ஒரு நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும்.
எங்க பிள்ளைங்க படிச்சு வேலை பார்த்து நகரங்களில் பெரிய பெரிய வீடு கட்டி வசதியாக வாழ்கிறார்கள். நாங்கள் அவங்க கூட சேர்ந்து வாழமுடியும். அப்படி நாங்க போயிட்டா இந்த சிறுதானிய விவசாயத்தையும் இந்த பூமியையும் யார் காப்பாற்றுவது. உற்பத்தி இல்லையென்றால் இந்த மக்களை யார் காப்பாற்றுவது? எதை உண்பார்கள், இன்றைக்கு நாடே சிறுதானியங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளது”
உதவி செய்யலேனாலும்! உபத்ரவம் செய்யாதே!
உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி…
“அரசை எதிர்த்து இந்த மண்ணை பாதுகாக்கும் உங்களுடைய போராட்டங்கள் வரவேற்கக் கூடியவை. உங்களுடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் விவசாயத்தையும் இந்த மண்ணையும் பாதுகாத்தவர்களுக்கு பரிசு அளிக்கவேண்டும் என்றால் முதல் பரிசு உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.
இந்த அரசு இதுவரை விவசாயத்துக்கு தேவையான பாசன வசதி செய்து கொடுக்கவில்லை மாறாக விவசாயத்தை திட்டமிட்டே அழித்து வருகிறது. நம்முடைய பாரம்பரிய விதைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்டு விதைகள் அனைத்தையும் மான்சாண்டோவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த அரசு நாட்டை ஆள தகுதியிழந்து விட்டது. விவசாயத்தை பாதுகாப்பது நமது கடமை. விவசாயத்தை விட்டால் அரசு நம் அனைவருக்கும் வேறு என்ன வேலை கொடுக்கும். நாம் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும். 100 நாள் வேலைகொடுத்து விவசாயத்தை அழித்து நம்மை சோம்பேறிகளாக மாற்றி வருகிறது. நாம் விவசாயத்தை எப்படி பாதுகாக்கப் போகிறோம்? அனைத்து துறைகளும் கைவிட்டு விட்டன.
நிலத்தை கொடுப்பது பணத்தை பெறுவது என்பது விசயமில்லை. நாம் இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறோம். வாழ்ந்தாலும் செத்தாலும் இந்த பூமியில்தான் இருப்போம் என்று சபதமேற்போம்.”
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் வாஞ்சிநாதன்…
“மண்ணின் மானத்தை, நாட்டின் விவசாயத்தை காக்க 8 ஆண்டுகளாக போராடிவரும் இந்த சிவரக்கோட்டை உள்ளிட்ட அனைத்து கிராம மக்களையும் பாராட்டுகிறேன். உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பேராடி வருகிறீர்கள்.
நம் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். நாம் இந்த மண்ணில் மானத்தோடும், உயிரோடும் வாழ இந்த அரசு மறுக்கிறது. இந்த அரசு கொலைகார, கொள்ளைக்கார அரசு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். “நிலத்தை கேட்டு வருபவன் எவனாக இருந்தாலும் நீ உயிரோடு போக மாட்ட” என்று சொல்லிப்பாருங்கள், வந்த வழியே சென்று விடுவான். நாம் முதலில் நமது பயத்தையும் அச்சத்தையும் போக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த கொள்ளைக்கார அரசு நமக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நம் வாழ்வாதாரத்தை பறிப்பவனை செருப்பால் அடிப்போம். ‘மனு கொடுத்து நியாயம் கேட்போம்’ என்று போவது முட்டாள்தனம்.
இன்றைக்கு நீதித்துறை மிகவும் மோசமாக உள்ளது. நீதிபதிகளை நம்பாதீர்கள் பாதிப்பேர் அயோக்கியர்களாக உள்ளார்கள்.
மோடி உருவாக்கியுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஒரு கிராமத்திற்கு ஆண்கள் 100 பேர் பெண்கள் 100 பேர் வீதம் ஒரு அமைப்பாக திரண்டு உறுதி எடுத்து வாருங்கள். இந்த சிப்காட்டை துரத்தியடிப்போம்.
இந்த அரசுக்கு சாராயம் விற்பதுதான் கடமையா? கல்வி மருத்துவம் தண்ணீர் யார் கொடுப்பது இதையெல்லாம் கொடுக்காத இந்த அரசுகட்டமைப்பு நமக்கு வேண்டாம்! இது நம்மை ஆள தகுதியிழந்து விட்டது!
இந்த அரசு கட்டமைப்பை தகர்த்தெறிவோம்! மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்போம்!
ஊர்தோறும் மக்கள் பாதுகாப்பு குழு கட்டுவோம்!
மக்கள் அதிகார அமைப்பில் இணைந்து நமது மக்களையும் விவசாயத்தையும் காப்போம்! வரலாறு படைப்போம்!
வாருங்கள்! வாருங்கள்!
தொகுப்பாக..
நம்முடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதற்கு அதிகாரிகளிடம் மனுகொடுத்தோ, பேச்சுவார்த்தை நடத்தியோ இந்த அரசுக்கட்டமைப்பிற்குள்ளே தீர்வு காண முடியாது. இந்த அரசு மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக மாறி ஆளத் தகுதியிழந்து விட்டது.
எனவே நம்முடைய போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும் (அடித்தால் திரும்ப அடி). நம்முடைய முன்னோர்கள் பகத்சிங், பூலித்தேவன், ஒண்டிப்புலி, மருதுசகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை, வ.உ.சி, திப்பு, தீரன்சின்னமலை வாரிசுகளாய் நக்சல் பாரிகளாய் ஒன்றிணைந்து போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
பு.ஜ.செய்தியாளர்
உசிலம்பட்டி
பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி
குஜராத் முதல்வராக இருந்தபோது 2013-ல் இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பேசிய மோடி, “அரசாங்கம் போட்ட சாலைகளில் தனியார் வாகனங்கள் போகும்போது, தனியார் விமானங்கள் அரசின் விமான நிலைய ஓடுபாதைகளில் பறக்கும்போது, ஏன் அரசாங்க தண்டவாளத்தில் தனியார் ரயில்கள் ஓடக்கூடாது?” என்று தனியார்மயமாக்கலை வெறியோடு ஆதரித்துப் பேசினார். பிரதமரான பின்னர், மேகாலயாவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ரயில் சேவை தொடக்க விழாவில் பேசிய மோடி, ரயில்வே என்பது ‘வளர்ச்சி’யின் வாகனம், ரயில் நிலையங்களைத் தனியாரிடம் கொடுத்து விமான நிலையங்களைப் போல நவீனப்படுத்த வேண்டுமென்றார். மோடியின் நோக்கமே காங்கிரசு அரசை விஞ்சும் வகையில் தனியார்மயமாக்கலைத் தீவிரமாக்குவதுதான்.
அந்த நோக்கத்துடன், நட்டத்தில் இயங்கும் ரயில்வே துறையை மேம்படுத்துவது பற்றி ஆராயப் போவதாக கூறிக்கொண்டு ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவுக்கு பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் பற்றிய நூல்களை எழுதியுள்ள நம்பகமான இந்துத்துவ விசுவாசியும், தனியார்மய தாசரும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவராய் என்பவரைத் தலைவராக நியமித்தார். அந்தக் குழுவும் ‘விரைவாக’ஆய்வு செய்து, மோடி என்ன எதிர்பார்த்தாரோ, அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வேயை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கான செயல் திட்டத்தைத் தமது பரிந்துரைகளாக கடந்த மார்ச் மாதத்தில் சமர்ப்பித்தது.
“பயணிகள் போக்குவரத்தையும் சரக்கு போக்குவரத்தையும் கொண்டுள்ள தற்போதைய ரயில்வே மண்டலங்களில், ஒன்றில் ஏற்படும் நட்டத்தை மற்றது ஈடு செய்து கொள்வதற்கு மாறாக, ரயில்வே மண்டலங்களைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். எந்த மண்டலத்தில் நட்டம் அதிகமாக உள்ளதோ அதனை தனியாருக்கு விற்றுவிட வேண்டும். ரயில்வே துறையை உள்கட்டமைப்புக் கழகம், போக்குவரத்துக் கழகம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். தண்டவாளங்கள் போடுவது, சிக்னல்களை நிர்வகிப்பது முதலானவற்றைக் கொண்ட உள் கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்தை தனியார் நிர்வகிக்க வேண்டும். ரயில்பெட்டிகள், என்ஜின்களைப் பராமரிக்கத் தனியாருக்கு அனுமதியளிக்க வேண்டும்.

தற்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை முதலானவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். புறநகர் ரயில்கள் போன்ற அதிக இலாபமில்லாத ரயில் போக்குவரத்தை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட வேண்டும். பயணிகள் கட்டணத்தையும் சரக்கு ரயில் கட்டணத்தையும் நிர்ணயிப்பதில் அரசு தலையிடக் கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள ஏறத்தாழ 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது. அடுத்த ஆண்டிலிருந்து 7-வது ஊதியக்குழுவின் புதிய சம்பள விகிதங்கள் அமலுக்குவரும்போது ரயில்வே துறையில் கூடுதல் செலவாகும் என்பதால், ஏறத்தாழ 10 லட்சம் தொழிலாளர்களைக் குறைக்க வேண்டும். அவர்கள் செய்துவந்த பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச்சினைகளையும் தாவாக்களையும் தீர்த்துக் கொள்ளவும், கட்டண நிர்ணயத்தைக் கண்காணிக்கவும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும்”
-என ரயில்வே துறையை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கான திட்டத்தை, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கால இலக்குடன் அறிக்கையாகக் கொடுத்துள்ளது இக்குழு.
அதாவது, ரயில் தண்டவாளங்களை அரசாங்கம் பராமரிக்க, தனியார் முதலாளிகள் அதில் ரயில் விடுவார்களாம். பொதுச் சோத்தில் மஞ்சள் குளிப்பார்களாம்!
இப்பரிந்துரைகளைச் செயல்படுத்தினால், தற்போது பல தடங்களில் இயக்கப்பட்டுவரும் ரயில்களால் லாபமில்லை என்று நிறுத்தப்படும். வருமானம் அதிகமுள்ள பெரு நகரங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டணத்துடன் அம்பானி ரயில், அதானி ரயில்கள் சென்ட் மணக்க பளபளப்பாக இயக்கப்படும். சிறு நகரங்களுக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் ரயில்களும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும் ஒழிக்கப்படும்.
நட்டம் அதிகமாக உள்ள ரயில்வே மண்டலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, கோடிக்கணக்கிலான ரயில்வே சொத்துக்கள் பறிபோகும். ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனமான தொலைத்தொடர்புத்துறை முடமாக்கப்பட்டதைப் போல, ரயில்வே துறையும் முடமாக்கப்படும். இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும். ஒப்பந்த சேவை அடிப்படையில் அற்பக் கூலிக்கு தொழிலாளர்கள் சுரண்டப்படுவார்கள். சீசனுக்கு ஏற்பவும், கிராக்கிக்கு ஏற்பவும் சாதாரண ரயில்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்படும். இதனால் காசு உள்ளவனுக்கு மட்டுமே ரயில் என்று மாற்றப்படும்.
இருப்பினும், முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் ரயில்வே துறையை லாபகரமானதாக்கி, ‘வளர்ச்சி’யைச் சாதிக்க தனியார்மயம் அவசியம் என்று இதனை மோடி நியாயப்படுத்துகிறார். பேருந்துகளை வாங்கி தனியார் முதலாளிகள் இயக்குவதைப் போல, மூலதன அழுத்தமும் குறைவான லாபமும் கொண்ட ரயில்களை தனியார் முதலாளிகள் வாங்கி இயக்குவதற்கு மடியில் பணத்தைக் கட்டிக் கொண்டு தயாராக இருப்பதைப் போல பல திட்டங்களை மோடி கும்பல் அறிவித்த போதிலும் யாரும் முதலீடு செய்ய வரவில்லை. அரசாங்கம் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அதில் நான் டெலிபோன் கனெக்ஷன் கொடுக்கிறேன் என்று தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பொதுச் சொத்தில் மஞ்சள் குளித்ததைப் போல, அரசாங்கம் தண்டவாளம் போட்டு, ரயிலையும் கொடுத்தால் நான் அதிக கட்டணத்துக்கு அந்த ரயிலை ஓட்டுவேன் என்கிறார்கள் தனியார் முதலாளிகள். இதற்கு மாமா வேலை செய்கிறார் மோடி.
இந்திய ரயில்களில் அன்றாடம் 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர். பேருந்து போக்குவரத்தை விட, ரயில் போக்குவரத்துதான் மலிவானது, வசதியானது என்று சாமானிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே சாமானிய மக்கள் பயன்படுத்தும் முன்பதிவு செய்யப்படாத ரயில்பெட்டிகளை அதிகரிப்பதற்கு மாறாக ஏ.சி., பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, பாசஞ்சர் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக்குவது, எக்ஸ்பிரஸ் ரயிலை சூப்பர் பாஸ்ட் ஆக்குவது, பயணிகள் ரயில் கட்டண அதிகரிப்பு, தட்கல் திட்டத்தில் மாற்றம், பிரீமியம் ரயில், பிளாட்பார டிக்கெட் கட்டண அதிகரிப்பு – என அடுத்தடுத்து தாக்குதலை ஏவியது போதாதென்று, இனிமேல் ரயில்களை இத்தகையோர் பயன்படுத்தவே கூடாது என்று வர்க்கவெறியுடன் ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கிளம்பியுள்ளது மோடி அரசு. தனியார் முதலாளிகளுக்கு இலாப உத்திரவாதம் வேண்டுமென்பதால், பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக பயணிகள் ரயில்களை மாற்றுவது என்பதே மோடியின் திட்டம். இப்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ள பளபளப்பான குளுகுளு மெட்ரோ ரயிலின்
அநியாயக் கட்டணத்தால், அதில் யாரும் பயணிக்க முடியாமல் வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது. அதேபோல அனைத்து ரயில்களையும் மாற்றுவதுதான் மோடியின் நோக்கம்.
குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளரைக் கொண்டு அதிக லாபத்தை ஈட்டுவதுதான் தனியார் முதலாளிகளின் நோக்கமாக உள்ளபோது, தனியார்மயத்தால் சேவை அதிகரிக்கும் என்பது வடிகட்டிய பொய். இந்திய ரயில்வேயில், ரயில் பெட்டிகளையும், பெட்டிகளிலுள்ள கழிப்பறைகளையும் சுத்தப்படுத்துவது, ரயில் பயணத்தில் உணவு தயாரித்து பரிமாறுவது, ரயில் நிலைய கழிவறைகளைப் பராமரிப்பது முதலானவை ஏற்கெனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தனியார் என்றால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்; தனியார்மயம் என்றால் சேவை நன்றாக இருக்கும் என்ற பொய்யை ரயில் பெட்டிகளின் கழிப்பறைகளே நாறடித்துக் கொண்டிருக்கின்றன.
பிரிட்டனில் 1990-களில் ரயில்வேதுறை தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அரசியல் பொருளாதார நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு 2013-ஆம் ஆண்டில் “சமூக கலாச்சார மாற்றம் குறித்த ஆய்வு மையம்” என்ற அமைப்பால் அறிக்கையாக வெளியிடப்பட்டது. “தி கிரேட் டிரெயின் ராபரி” (மாபெரும் ரயில் கொள்ளை) என்று தலைப்பிட்டு, தனியார்மய தாசர்களின் முகத்தில் காறி உமிழாத குறையாக, தனியார்மயத்தால் சேவை அதிகரிக்கவில்லை, கட்டணக் கொள்ளைதான் தீவிரமாகியுள்ளது என்று அந்த அறிக்கை அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது.
இருப்பினும், இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளித்து, கோடிக்கணக்கான சொத்துக்களுடன் அடிக்கட்டுமான வசதிகளைக் கொண்டுள்ள நாட்டின் முதுகெலும்பான ரயில்வே துறையை, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யும் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தை, மக்களின் வாழ்வோடு நெருக்கமான பிணைப்பைக் கொண்ட ரயில்வே துறையைத் தனியார் முதலாளிகள் விழுங்கி ஏப்பம் விடுவதற்காக அத்துறையைத் தனியார்மயமாக்க வெறியோடு அலைகிறது மோடி கும்பல். இந்த அநியாயத்தையும் பேரழிவையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் முடியுமா?
– மனோகரன்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
______________________________
அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்
”என்ன தம்பி நல்லா எளைச்சிடியளே.. நீங்க வாறியன்னி முன்னெயே சொல்லிருக்கலாமே? இந்நா இருங்க சோறு பொங்கிட்டேன்.. ரசம் வச்சி கொண்டாறேன், சாப்பிடுங்க”
நண்பனின் ஆச்சி வைக்கும் ரசம் எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ரொம்பவே பிரசித்தம். நாங்கள் தம்ளர் தம்ளராக மிளகு ரசம் வாங்கிக் குடிக்கவே நண்பன் வீட்டுக்குப் படையெடுப்போம்.

ஆச்சி ரசம் வைக்கும் முறை மிகவும் அலாதியானது. முதலில் ஒரு சின்ன கல்லுரலில் சீரகம், மிளகு, பூண்டு, கருவேப்பிலை போன்றவற்றைப் போட்டு நறநறவென நசுக்கி எடுப்பார். அதைத் தனியே வைத்து விட்டு ஒரு பொறிக்கான் சட்டியை அடுப்பில் வைத்து கடலை எண்ணை விட்டு அதில் வெந்தையம் கடுகைப் போட்டு தாளிப்பார். கடுகு குதிக்கும் போது ரெண்டு மிளகாய் வற்றலை கிள்ளிப் போடுவார். மிளகாய் வற்றல் பொறியும் நிலை வந்ததும் ஒரு தக்காளியைக் கையால் நசுக்கிப் போடுவார். தக்காளி வதங்கிக் கொண்டிருக்கும் போதே தண்ணீரில் புளியைக் கரைத்து எடுத்து வைப்பார். இப்போது ஏற்கனவே இடித்த சமாச்சாரங்களை எண்ணையில் போட்டு ஒரு நிமிடம் கிளறுவார். பின் அதற்குள் புளிக் கரைசல் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் மல்லித் தூள் சேர்ப்பார். ஒரு கொதி வந்த பின் அதற்குள் கொஞ்ச கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு இறக்குவார். எப்படியும் அரைமணி நேரத்திற்கு பொறுமையாக இத்தனை வேலைகளையும் பார்த்திருப்பார்.
இன்றைய துரித உணவக காலத்தில் வைக்கப்படும் ரசத்தில் வழக்கமாக நறுநறுவென்று தட்டுப்படும் சீரகம், மிளகு, பூண்டு வகையறாக்கள் கிடையாது. வழக்கமான மணம் இல்லை – என்றாலும் அந்த ரசத்தில் ஏதோவொரு சுவை நாக்கை கட்டிப் போட்டது.
அந்த சுவைக்கு காரணம் அஜினோமோட்டோ. இன்றைக்கு அந்த ஜப்பானிய செயற்கை உப்பு நமது சமையல் கட்டில் புகுந்ததோடு மட்டுமின்றி சகல விதமான துரித உணவுகளிலும் நீக்கமற நிறைந்து விட்டது.
“ஏதோ ஜப்பான் உப்பாம்ல?” என்று மக்களால் சாதாரணமாக அறியப்பட்டிருந்த மேற்படி வஸ்து தற்போது நெஸ்லே மேகி தடை விவகாரத்திற்கு பின் பரவலான விவாதத்திற்கு வந்துள்ளது – மோனோ சோடியம் க்ளூட்டமேட் என்கிற அதன் சொந்தப் பெயரில்!

கிகுனே இகேடா என்ற ஜப்பானிய ரசாயனத் துறைப் பேராசிரியர் 1908-ம் ஆண்டு வாக்கில் ஜப்பானிய மற்றும் சீன உணவு வகைகளில் சேர்க்கப்படும் கோம்பு எனும் கடற்பாசி தான் அந்த உணவுகளின் தனிச்சிறப்பான சுவைக்கு காரணம் என்பதைக் கண்டறிகிறார். இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் உப்பு ஆகிய அடிப்படைச் சுவைகளில் இருந்து மாறுபட்ட அந்த சுவைக்கு உமாமி என்று பெயரிட்ட கிகுனே இகேடா, குறிப்பிட்ட அந்த கடற்பாசியில் உள்ள க்ளூட்டமிக் அமிலங்கள் தான் அந்த சுவைக்கு காரணம் என்பதைக் கண்டறிந்தார்.
தக்காளி, கோதுமை போன்ற இயற்கையான தாவரங்களில் கிடைக்கும் க்ளூட்டமின் அமிலங்கள் சந்தைத் தேவைக்காக எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? இயற்கையான தாவரங்களை கோரினே என்ற பாக்டீரியாவுடன் (Coreneybacterium) நொதித்தலுக்கு (Bacterial fermentation) உட்படுத்தி, பின்னர் அதனோடு சோடியம் உப்பைக் கலந்து வாசனையற்ற வெண்மையான க்ரிஸ்டல்களாக வடித்தெடுக்கின்றனர். இறுதியாக கிடைக்கும் மோனோசோடியம் க்ளூட்டமின் என்கிற இந்தக் க்ரிஸ்டலைத் தான் நாம் அஜினோமோட்டோ என்ற பெயரில் பக்கத்து மளிகைக் கடைகளில் வாங்குகிறோம்.
1909-ம் ஆண்டு தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்ற கிகுனே இகேடா, பின்னர் அதைச் சந்தைக்கு அறிமுகம் செய்தார். 1917-ம் ஆண்டு மோனோசோடியம் க்ளூட்டமினை அஜினோமோட்டோ என்ற வணிகசின்னத்தோடும் அதே பெயரில் துவங்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் விற்கத் துவங்கினார் கிகுனே. 1956-ல் அமெரிக்காவில் கால் பரப்பிய அஜினோமோட்டோ தற்போது உலகெங்கும் கிளை விரித்துள்ளது.

2013-ம் ஆண்டு வாக்கில் 1,091 பில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ 50,000 கோடி) மதிப்பிலான சொத்துக்களைக் கொண்டிருந்த அஜினோமோட்டோவின் ஆண்டு வருமானம் 1,172 பில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ 58,600 கோடி)!
மோனோ சோடியம் க்ளூட்டமின்கள் மனித உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்பதைப் பல்வேறு சுயேச்சையான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனினும், அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இந்த மோனோசோடியம் க்ளூட்டமின்களுக்கு பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான அந்தஸ்தை (GRAS – Generally Recognized as Safe Status) வழங்கியுள்ளது. பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் (FDA – Food and Drug Administration) முடிவுகளை ஒரு நிர்ணய அளவாக (Standard) கொண்டே செயல்படுவதால் எந்தத் தடையுமின்றி அஜினோமோட்டோ சக்கை போடு போடுகிறது.
தற்போது நெஸ்லே நிறுவனமும் FDA வழங்கியுள்ள அனுமதியைத் தான் சுட்டிக் காட்டுகிறது. அதாவது, அமெரிக்காவே அனுமதித்த ஒன்றை நீ தடுத்து நிறுத்துவாயா என்பதே இந்த சுட்டிக்காட்டுதலின் பொருள்.
1950-களில் இருந்தே அஜினோமோட்டோ அமெரிக்காவின் சீன உணவகங்களில் சாதாரணமாக புழங்கி வந்துள்ளது. சீன உணவுகளில் வரைமுறையற்று தூவப்படும் அஜினோமோட்டோவால் ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்கர்கள் ’சீன உணவக சிண்ட்ரோம்’ என்று பேச்சு வழக்கில் அழைக்கத் துவங்கியிருந்தனர். எண்பதுகளில் அஜினோமோட்டோ தான் அந்த ‘சிண்ட்ரோமுக்கு’ காரண கர்த்தா என்பதை உணர்ந்த பல அமெரிக்கர்கள் அதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி FDA-விடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
1992-ம் ஆண்டு பரிசோதனை முறை உயிரியல் ஆய்வுகளுக்கான அமெரிக்க நிறுவனம் (FASEB Federation of American Society for Experimental Biology) என்ற அமைப்பிடம் அஜினோமோட்டோவினால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் பொறுப்பை FDA வழங்கியது. அந்நிறுவனத்தின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய அஜினோமோட்டோ, ஆய்வின் முடிவுகள் தமது வர்த்தகத்தை பாதிக்காதவாறு 1995-ம் ஆண்டு வெளியிடச் செய்தனர். 3 கிராம்களுக்கு மேல் அஜினோமோட்டோ உட்கொள்வது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்ற அறிவுறுத்தலோடு FDA தனது அனுமதியைத் தொடர்கிறது.

எனினும், இன்று வரை சுயேச்சையான ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் அஜினோமோட்டோவின் பாதகங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. அமெரிக்காவில் உள்ள பல்வேறு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆய்வு அமைப்புகள் FDA வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி வருகின்றன.
அஜினோமோட்டோ அப்படி என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றது?
சாதாரணமாக நாம் கடையில் வாங்கும் தக்காளியை எடுத்துக் கொண்டால் நூறு கிராமுக்கு சுமார் 203 மில்லி கிராம் க்ளூட்டமின்கள் உள்ளது. இயற்கையான க்ளூட்டமின் மூலங்களில் தக்காளியில் கிடைப்பதே அதிகம். குறைந்தபட்சமாக கிச்சினிப் பழத்தில் (Orange) நூறு கிராமுக்கு 2 மில்லி கிராம் அளவில் க்ளூட்டமின்கள் உள்ளன. இப்படி இயற்கையான மூலங்களில் இருந்து கிடைக்கும் குறைந்த அளவிலான க்ளூட்டமின்கள், மூளை நரம்புகளின் செயல்பாட்டுக்குத் தேவையான காமா அமினோ பியூட்ரிக் அமிலம் உற்பத்திக்கு உதவுகின்றன.
இதே அளவுக்கு மீறிச் சென்றால் என்ன நடக்கும்? சந்தைத் தேவைக்கென செயற்கையான முறையில் உற்பத்தி செய்யப் படும் அஜினோமோட்டோவை அள்ளித் தூவிய துரித உணவு என்ன விளைவை ஏற்படுத்தும்?
மிதமிஞ்சிய அளவில் நம் உடலுக்குள் நுழையும் அஜினோமோட்டோ (மோனோ சோடியம் க்ளூட்டமேட்) நேரடியாக நமது மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் பகுதியை பாதிக்கிறது. ஹைபோதலாமஸ் தான் நமது உணவுப் பழக்கங்களின் கட்டுப்பாட்டுப் பகுதி. அதாவது நாம் எதை, எந்த அளவு, எப்போது சாப்பிட வேண்டும் என்ற கட்டளை மூளையால் பிறப்பிக்கப்படுவதை ஹைபோதலாமஸ் கட்டுப்படுத்துகிறது.
எப்படி? நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவை தொடர்ந்து கண்காணித்து வரும் ஹைபோதலாமஸ், மூளையின் ஒரு சென்சாராக செயல்படுகிறது. உடலின் ஆற்றல் குறையும் போது இன்சுலினையும் அட்ரினலையும் அதிகமாக சுரக்கச் செய்யும் ஹைபோதலாமஸ், பசியை உண்டாக்கி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற முடிவை மூளை எடுக்குமாறு தூண்டுகிறது.

லேய்ஸ், குர்குரே, சீஸ் பால்ஸ் போன்ற குப்பை உணவுகளைத் தின்னும் பிள்ளைகள் எந்தப் பசியும் இன்றி ஓரு பழக்கம் போல தொடர்ந்து அவற்றை உள்ளே தள்ளுவது மேற்கண்ட முறையிலேயே நடக்கிறது.
மேலும் மோனோ சோடியம் க்ளூட்டமேட்டினால் தூண்டப்படும் ஹார்மோன்கள் – குறிப்பாக திடீரென்று அதிகரிக்கும் இன்சுலின் மற்றும் அட்ரினலின் – உடலின் ஒத்திசைவில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. நீண்ட கால நோக்கில் உடல் எடை அதிகரிப்பது, மன அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றை உண்டாக்கவல்ல அஜினோமோட்டோ, உடனடியாக உட்கொண்டவரின் ஹார்மோனில் தாறுமாறான மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
எந்தக் காரணமும் இன்றி திடீரென்று அதிகரிக்கும் கோபம், சட்டென்று தன்னுள் ஒடுங்கிக் கொள்ளும் மனச் சோர்வு போன்றவற்றை இந்த ஹார்மோன் தடுமாற்றங்கள் ஏற்படுத்துகின்றன.
நாவில் பட்டதும் அதன் சுவை மொட்டுக்களை மரக்கச் செய்யும் அஜினோமோட்டோ, ஒரு விதமான காரல் சுவையை ஏற்படுத்தி பிற சுவைகளை அறியாதபடிக்கு மூளையைக் குழப்புகின்றது. சுர்ரென்று இழுக்கும் இந்த காரல் சுவை மற்ற சுவைகளை கீழ் தள்ளி மூளை நரம்புகளை ‘இந்தப் பதார்த்தம் நல்லது’ என்று நம்பச் செய்து ஏமாற்றுகிறது. இதன் காரணமாகவும் செயற்கையான ஹார்மோன் தடுமாற்றங்களின் விளைவாகவும், பொய்யான பசியினாலும் கையில் உள்ள ஒரு பாக்கெட் குப்பை உணவோடு நாம் நிறுத்திக் கொள்ள மாட்டோம். தொடர்ந்து நான்கைந்து பாக்கெட்டுகள் காலியான பிறகு தான் மூளையின் தர்க்கப் பிரிவு விழித்துக் கொள்கிறது – அதற்குள் போதுமான அழிவு வேலையை அஜினோமோட்டோ செய்து முடித்திருக்கும்.
இயற்கை உணவுப் பழக்கத்தை சமீபகாலமாக பிரச்சாரம் செய்து வரும் என்.ஜி.ஓக்கள் இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்கின்றனர்; விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் ஓரளவு செய்கிறார்கள். ஆனால், இந்த அஜினோமோட்டோவை தடை செய்ய அதன் அடிநாதமான முதலாளித்துவ சமூக அமைப்பை கேள்வி கேட்காமல் முடியவே முடியாது. அப்படி கேட்கப்படும் குரல்களை திசை திருப்பும் வேலைகளையே இத்தகைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்கின்றன.
மேலும்”இயற்கை உணவு” என்பதே ஒரு தனிவகை கார்ப்பரேட் தொழிலாக ஏற்றம் கண்டு வருகிறது. மரபீனி தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்கும் அதே நெஸ்லே, ஆர்கானிக் உணவுப் பொருட்களையும் விற்கிறது. முந்தையது மாஸ் என்றால் பிந்தையது க்ளாஸ். அதாவது காசில்லாதவன் பரிசோதனைக்குரிய பன்றி, காசுள்ள ‘தரமான’ வாடிக்கையாளனுக்கு ‘தரமான’ பொருள்!
வியாபாரத்திற்காக, மூலதனத்தின் நலனுக்காக, முதலாளிகளின் லாப வெறிக்காக எதைச் செய்தாலும் அது சரியே என்ற ‘நீதி’ நிலைநாட்டப்பட்ட ஒரு வரலாற்றுக் கட்டத்திற்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம். அது அழிக்கப்படும் தண்டகாரண்ய வனமாக இருக்கலாம், உடைக்கப்படும் மதுரை மாவட்ட கிரானைட் மலைகளாக இருக்கலாம், அள்ளப்படும் காவிரி பாலாற்றின் மணலாக இருக்கலாம் – முதலாளிகளுக்கு லாபம் கிடைக்குமென்றால் அது நற்செயல் தான் என்பது இந்தக் காலத்தின் நீதி.
இந்த அநீதியை தூக்கி எறியும் வரை, அப்படி தூக்கி எறியும் அதிகாரத்தை மக்கள் பெறாத வரை அஜினோமோட்டோக்கள் நமது வயிற்றைச் சுரண்டி ஆரோக்கியத்தை விலை பேசும்.
– தமிழரசன்
பன்றித் தீனி – புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு
மேலும் படிக்க:
மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்
மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை!
தொடர்பற்றவை போலத் தோன்றும் விசயங்கள் தொடர்பற்றவையாக இருப்பதில்லை. தனித்தனியானவை போலத் தெரிகின்ற விசயங்கள் வேறு வேறு உண்மைகளைச் சொல்வதுமில்லை. மாகி நூடுல்ஸுக்குத் தடை, பால வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளிக்கு எதிரான பெற்றோர்-ஆசிரியர் போராட்டம், செம்மரக் கடத்தல் மற்றும் கொலையில் ஒரு டி.எஸ்.பி ஈடுபட்டிருப்பது ஆகிய இம்மூன்று செய்திகளும் சென்ற மாதம் வெளியானவை. மேல் தோற்றத்தில் தொடர்பற்றவை போலத் தோன்றினாலும், ஒருங்கிணைந்த முறையில் பார்க்கும்போது, இவை இந்த அரசமைப்பின் தோல்வியை வெவ்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
***

மாகி நூடுல்ஸ், நெஸ்லே என்ற ஸ்விஸ் பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு. இதன் விற்பனை ஆண்டுக்கு சுமார் 2000 கோடி ரூபாய். 2014 மார்ச் மாதம் உ.பி. மாநிலம் பாராபங்கி நகரின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளைச் சோதனையிட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் பாதுகாப்புக்கான நிர்வாக அதிகாரி வி.கே.பாண்டே, அதில் அனுமதிக்கப்பட்ட அளவான 2.5 பி.பி.எம்.ஐ விட அதிகமாக, 17.2 பி.பி.எம். அளவிற்கு காரீயம் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து, இதனை உறுதி செய்யும்பொருட்டு கோரக்பூரிலுள்ள பிராந்திய சோதனைக்கூடத்துக்கு அனுப்பினார். காரீயம் மட்டுமின்றி, சாப்பிடுபவர்களின் நாக்கை அடிமையாக்கும் நச்சு வேதிப்பொருளான மோனோ சோடியம் குளூடோமேட் என்ற அஜினமோட்டோவும் இதில் கலந்திருப்பதாக கோரக்பூர் சோதனைக்கூடம் கூறியது. நெஸ்லே நிறுவனம் இதனை ஏற்க மறுத்து, சென்ற ஜூலை, 2014-ல் கொல்கத்தாவில் உள்ள மத்திய உணவு ஆய்வுக்கூடத்துக்கு மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஆய்வுக்கூடமும் மேற்கூறிய முடிவை உறுதி செய்ததைத் தொடர்ந்து, சென்ற மாதம் உ.பி. மாநிலம் முழுவதும் மாகி பாக்கெட்டுகள் கடைகளிலிருந்த அகற்றப்பட்டன.
ஒரு ஆண்டுக்கு முன்னரே தொடங்கிய இந்தப் பிரச்சினை, இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது.
“அளவுக்கு அதிகமாக காரீயம் கலந்திருப்பது, அஜினமோட்டோவை சேர்த்து விட்டு, சேர்க்கப்படவில்லை என்று பாக்கெட்டில் அச்சிட்டிருப்பது, மாகி ஓட்ஸ் மசாலா நூடுல்ஸ் – என்ற சோதனைக்குட்படுத்தி ஒப்புதல் பெறப்படாத பொருளை விற்பனைக்கு விட்டது” ஆகிய மூன்று முறைகேடுகளைக் காட்டி, தில்லியில் உள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), மாகி பாக்கெட்டுகளைச் சோதனைக்கு உட்படுத்துமாறு மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு அறிவுருத்தியது. மக்களின் கோபத்துக்கு வடிகாலாக, பல மாநில அரசுகள் மாகி பாக்கெட்டுகளை கடைகளிலிருந்து அகற்ற உத்தரவிட்டிருக்கின்றன.

இருந்தபோதிலும், தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னர் கோக், பெப்சியில் பூச்சி மருந்து அளவுக்கதிகமாக கலந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, இந்தியாவின் நிலத்தடி நீரிலேயே பூச்சி மருந்து அதிகமிருக்கிறது, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று அந்நிறுவனங்கள் திமிராகப் பதிலளித்ததைப் போல, இந்தியாவில் விளையும் வெங்காயத்தில் அதிக அளவுக்கு காரீயம் கலந்திருப்பதால், அந்த வெங்காயத்தை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் மாகியிலும், காரீயம் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறுகிறது நெஸ்லே. அதுமட்டுமல்ல, அஜினமோட்டோவைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய அரசின் எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறது.
மாகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை கடைகளிலிருந்து அப்புறப்படுத்தியதையே நெஸ்லேக்கு விதிக்கப்பட்ட மாபெரும் தண்டனை போலச் சித்தரித்துக் காட்டி, உணவில் நஞ்சுவைத்த கொடுங்குற்றத்திலிருந்து நெஸ்லே நிறுவனத்தை விடுவிக்கின்றது அரசு. இயல்பிலேயே பன்னாட்டு நிறுவனச் சார்பு கொண்டவையும், நெஸ்லே போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களால் பெரும் ஆதாயம் அடைபவையுமான ஊடகங்கள் இந்த விசயத்தில் அரசுக்கு எதிராகவோ, நெஸ்லேவுக்கு எதிராகவோ கேள்வி எழுப்புவதில்லை.
பாக்கெட் உணவு விளம்பரங்களுக்குப் பலியாகாமல் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வது பெற்றோரின் பொறுப்பு என்று கூறி சாமர்த்தியமாகப் பிரச்சினையைத் திசை திருப்புகின்றன. இத்தகைய நச்சுப் பொருட்களின் விற்பனையை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் அரசையும், உணவுப் பொருட்களின் தரக்கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அதிகார வர்க்கத்தையும் குற்றத்திலிருந்து விடுவிக்கின்றன ஊடகங்கள்.

320 கோடி மதிப்புள்ள மாகி பாக்கெட்டுகளை சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுத்திருக்கிறது நெஸ்லே. இப்படி செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை என்பதே உண்மை. இருந்த போதிலும், தங்கள் பொருளில் எந்தக் குற்றமும் இல்லை என்ற போதிலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் பொருட்டு, தாங்கள் செய்திருக்கும் Kதியாகமாக” இதனைச் சித்தரித்துக் கொள்கிறது நெஸ்லே.
***
சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர், உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகள் படிக்கின்ற சி.பி.எஸ்.இ. பள்ளி. வர்க்கம், போராட்டம் போன்ற சொற்களையே கட்டோடு வெறுப்பவர்களான இந்த வர்க்கத்தினருக்கு, வர்க்க ஏற்றத்தாழ்வு தோற்றுவிக்கும் அவமதிப்பு எத்தகையது என்பதை உணர்த்தியிருக்கிறது இந்தப் பள்ளியின் நிர்வாகம்.
நீதிபதி சிங்காரவேல் கமிட்டி நிர்ணயித்திருக்கும் கட்டணத்தைப் போல மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிக்கிறது இந்தப் பள்ளி. வசூலிக்கும் தொகைக்கு ரசீது தருவதில்லை. தாமதமாகப் பணம் கட்டினால் நாளொன்றுக்கு 500 ரூபாய் அபராதம். 12-ம் வகுப்பு முடித்தவுடன் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவதற்குத் தயார்படுத்துவதற்காக மெரிட்டஸ் என்றவொரு வகுப்பு – அதற்கு ஆண்டுக்கு 90,000 ரூபாய். பாதியில் வேண்டாமென்று கருதினாலும் 1.8 லட்சத்தையும் கட்டியாக வேண்டும். இப்படிப்பட்ட கொள்ளைகள் எல்லை மீறிப் போகவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்குமாறு பெற்றோர் மத்தியில் கோரிக்கைகள் எழத்தொடங்கின.
உடனே பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு கீழ்க்கண்டவாறு சுற்றறிக்கை அனுப்பியது.
“சிங்காரவேல் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் கட்டும் பெற்றோர், கட்டணத்தை பள்ளிக்கு வந்து வரிசையில் நின்று கட்டவேண்டும். அந்த மாணவர்களுக்கு அரைநாள்தான் வகுப்பு நடத்தப்படும். கேன்டீனில் சாப்பிட முடியாது. கழிவறை பயன்படுத்தவும் கட்டுப்பாடு உண்டு. விளையாட்டுப் பயிற்சி கிடையாது.”
நிர்வாகம் சொல்கின்ற கட்டணத்தை செய்லுத்தும் பெற்றோர் கியூவில் நிற்க வேண்டியதில்லை. ஆன்லைனில் பணம் கட்டலாம். மாலை 3.40 வரை வகுப்பு உண்டு. அம்மாணவர்களுக்கு கேன்டீன், கழிப்பறை வசதி உண்டு. விளையாட்டு, நடனப் பயிற்சியுடன், 59 வகை கல்விச் சேவைகள் வழங்கப்படும்.”
சினிமா கொட்டகைகளின் பெஞ்சு டிக்கெட்டை விடவும், ஓட்டல்களில் போடப்பட்ட ஜனதா சாப்பாட்டை விடவும் கேவலமான முறையில் மாணவர்களை இழிவுபடுத்திய இந்த சுற்றறிக்கையை அந்தப் பள்ளியின் ஆசிரியர்களாலேயே சீரணிக்க முடியவில்லை. வித்யா மந்திர், டி.ஏ.வி. பத்மா சேஷாத்ரி போன்ற பள்ளிகளை அக்கிரகாரங்கள் – மேட்டுத்தெருக்களாகவும், அரசுப் பள்ளிகளைச் சேரிகளாகவும் மாற்றியிருக்கும் கல்வி தனியார்மயம் என்ற புதிய வருணாசிரமக் கொள்கையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களான இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர், வர்க்க ரீதியான அவமதிப்பின் அநாகரிகத்தைப் பட்டுத் தெரிந்து கொண்டார்கள். பால வித்யா மந்திரை நடத்தும் பிராமணோத்தமர்கள், கல்வி வியாபாரிகளாக அவதரித்திருக்கும் சாராய வியாபாரிகளைப் போலவே ரவுடித்தனமாக நடந்து கொள்வதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள்.

ஆம். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது என்று கூறிய பள்ளியின் தலைமை ஆசிரியர், தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமின்றி, 8 ஆசிரியர்களும் அங்கிருந்து பள்ளியின் வேறு கிளைக்கு தூக்கியடிக்கப்பட்டார்கள். ஒரு வார காலம் போராட்டம் தொடர்ந்ததன் விளைவாக சிங்காரவேல் கமிட்டியும் சி.பி.எஸ்.இ. அதிகாரிகளும் தலையிட நேர்ந்ததாலும், தவிர்க்கவியலாமல் பள்ளி நிர்வாகம் ஊடகங்களில் அம்பலமாகிவிட்டதாலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிப்பதாக நிர்வாகம் ஒப்புக்கொள்ள நேர்ந்தது.
இருப்பினும், இதன் பிறகு பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருக்கும் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் சி.எச்.ராம், “அரசு சொல்லும் கட்டணத்தை வசூலிப்போம். அதே நேரத்தில் இந்தக் கட்டணக் குறைப்பின் காரணமாக, ஆசிரியர்களைக் குறைப்போம். அவர்களுடைய சம்பளத்தைக் குறைப்போம். சிறப்பு வகுப்புகளைத் தனியே நடத்துவோம்” என்று கூறியிருக்கிறார். முடிவில் வெற்றி பெற்றிருப்பது தனியார் பள்ளியா, அரசின் மேலாண்மையா?
***
ஆம்பூருக்கு அருகிலுள்ள பாலூரைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் பேர்வழியான பா.ம.க. வைச் சேர்ந்த சின்னபையன் என்பவரை மிரட்டி, அவரிடமிருந்து 7 டன் செம்மரக் கட்டைகளைப் பிடுங்கியது மட்டுமின்றி, அவரைக் கூலிப்படையை அமர்த்திக் கொலையும் செய்திருக்கும் பலே கிரிமினல், வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. தங்கவேல் என்பது அம்பலமாகிவிட்டது.

“டி.எஸ்.பி. தங்கவேலுதான் செம்மரங்கள் எப்போது வரும் என்பது பற்றியும், அவற்றை வெளியே அனுப்புவது பற்றியும் எங்களுக்குச் சொல்வார். சின்னப்பையன் கொலை விசயத்திலும் டி.எஸ்.பி. சொன்னதைத்தான் செய்தோம்” என்று இந்தக் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நாகேந்திரன் மற்றும் அவரது மனைவி ஜோதிலட்சுமி ஆகியோர் ஆம்பூர் போலீசிடம் வாக்குமூலம் தந்திருக்கின்றனர்.
இந்தத் தகவலை உடனே தங்கவேலுவுக்கு சொல்லி, தலைமறைவாவதற்கு ஏற்பாடு செய்து விட்டு, முன் ஜாமீனுக்கும் மனுப்போட்டு விட்டு, குற்றவாளியை வலைவீசித் தேடுவதாக அறிவித்தது ஆம்பூர் போலீசு. 12 நாட்களுக்கு மேல் இந்த நாடகத்தை நடத்த முடியாமல் போகவே, வேறு வழியின்றி தங்கவேலு கைது செய்யப்பட்டார்.
தங்கவேலுவின் முகம் பத்திரிகை காமெராக்களில் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டே இரவு நேரத்தில் அவரை நீதிபதி வீட்டுக்கு ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கிய ஆம்பூர் போலீசு, நீதிபதியின் வீட்டைச் சுற்றி விளக்கை அணைத்து இருட்டாக்கியது. வாசல் வழியாக நுழையாமல் கொல்லைப்புறமாக நுழைந்தது. ஒரு கான்ஸ்டபிள் தயாராக குனிந்து நிற்க, அவர் முதுகில் பச்சைக்குதிரையேறி காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்த தங்கவேலுவை, தயாராக நின்ற இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது போலீசு. இருப்பினும் இத்தனையும் தாண்டி ஊடகங்கள் தங்கவேலுவைப் படம் பிடித்து விட்டன.
அடுத்தமுறை நீதிமன்றத்துக்கு வந்த தங்கவேலு ஒளிந்து மறைந்து வரவில்லை. போலீசாருக்கு, தலைமை தாங்கி செல்லும் தோரணையில், கைகளை, அங்கும், இங்குமாக நீட்டி, ’ஜாலி’யாக பேசியபடி அந்தக் கிரிமினல் நடந்து சென்றதையும், போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையும், அவர் பின்னால், போலீசார், ’பவ்யமாக’ நடந்து சென்ற காட்சியையும் பத்திரிகைகள் விவரித்தன.
விசாரணையின் போது, 4 அ.தி.மு.க. பிரமுகர்கள், 11 போலீசு அதிகாரிகள், 12 வனத்துறை அதிகாரிகள், 10 கடத்தல்காரர்கள் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக முதலில் சொன்ன தங்கவேலு, அடுத்த சில நாட்களில் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதித்திருக்கிறார்.
இந்த வழக்கில் பல லட்சம் ரூபாய் கை மாறி தங்கவேலுவைக் காப்பாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுவதாக வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார் செம்மரக் கட்டைகள் கடத்தல் பிரிவைச் சேர்ந்த ஆந்திர டி.எஸ்.பி. வெங்கடேஸ்வரன். தங்கவேலுவை விசாரித்து வரும் தனிப்படையினர் யார் தெரியுமா? அவருடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற, ஒண்ணாக உட்கார்ந்த சரக்கடித்த அங்காளி பங்காளிகள்தான் அவரை விசாரித்து வரும் தனிப்படை!
***
மேற்சொன்ன மூன்று சம்பவங்களிலிருந்தும் தெரியவரும் உண்மைகள் என்ன? உணவுத் தரக் கட்டுப்பாட்டுத் துறையாகட்டும், கல்வித்துறையாகட்டும், போலீசாகட்டும் – அரசின் இந்த உறுப்புகள் எதுவும் தாமே கூறிக்கொள்ளும் நோக்கங்களை இம்மியளவும் நிறைவேற்றுபவையாக இல்லை.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) என்று மிகவும் டாம்பீகமாகப் பெயர் வைத்துக் கொண்டிருந்த போதிலும், நெஸ்லே, பிரித்தானியா போன்ற நிறுவனங்கள் இந்த அமைப்பின் சோதனைச்சாலையில் சான்றிதழ் பெற்றால்தான் பொருளை சந்தைப்படுத்த முடியும் என்று சட்டமே இல்லை. இந்த நிறுவனங்கள் தமது சோதனைச்சாலைகளில் சோதித்துப் பார்த்து விட்டதாகக் கூறி தருகின்ற சான்றிதழுக்கு கீழே இந்த ஆணையம் கையெழுத்து மட்டுமே போடுகிறது.
இந்த அமைப்பிடம் இருப்பவை வெறும் 4 சோதனைச்சாலைகள். மாநில அரசுகளிடமும் போதிய சோதனைச்சாலைகள் கிடையாது. ஒரு ஒப்பீடு சொல்லவேண்டுமானால், சீனாவில் 2 லட்சம் பேருக்கு ஒரு உணவுத்தர சோதனைச்சாலை. இந்தியாவிலோ சுமார் ஒரு கோடிப் பேருக்கு ஒன்று என்ற அளவிலேயே உள்ளது. அதேபோல, Kதங்களது விளம்பரங்கள் உண்மையானவை” என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் உறுதிமொழியை அரசு அங்கீகரிக்கிறதே தவிர, பொய்யான விளம்பரங்களைச் சோதிக்கவோ, தண்டிக்கவோ கூட சட்டங்கள் இல்லை.
அப்படியே இதனை வித்யா மந்திர் விவகாரத்துடன் பொருத்திப் பாருங்கள். சிங்காரவேல் கமிட்டி கூறும் கட்டணத்துக்கு மேல் வசூலிக்காத தனியார் பள்ளி இருக்கிறதா? மழலையர் வகுப்புக்கே ஒரு லட்சம் என்ற அளவுக்கு கல்விக் கொள்ளை சிரிப்பா சிரித்த போதிலும், எந்தப் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
அடுத்து, இந்தக் கமிட்டிகளாலும் ஆணையங்களாலும் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று சொல்லப்படுவோர்தான், இந்த ஆணையங்களை மறைமுகமாகக்கூட அல்ல, நேரடியாகவே கட்டுப்படுத்துகின்றனர்.
கோலா பானங்களில் பூச்சி மருந்துகளும் நச்சு வேதிப்பொருட்களும் அளவுக்கதிகமாக இருப்பதை, அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையம் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, இத்தகைய உணவுப் பொருட்களை சோதிக்கவும் கண்காணிக்கவும் 2006-ல் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கான ஆணையமாக FSSAI உருவாக்கப்பட்டது. உணவு மாதிரிகளைச் சோதிக்கும் குழு, அறிவியல் குழு, விளம்பரக் கண்காணிப்பு குழு போன்ற குழுக்கள் இந்த ஆணையத்தால் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுக்களில் நிரம்பியிருந்தவர்கள் கோக், நெஸ்லே, யூனிலிவர், ஐ.டி.சி., பிரிட்டானியா போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் அதிகாரிகள். அதாவது குற்றவாளிகள்தான் கண்காணிப்பாளர்கள்!
சமச்சீர் பாடத்திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க, தனியார் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டதைப் போல! டி.எஸ்.பி தங்கவேலுவை விசாரிக்க ஏ.டி.எஸ்.பி.யோ, எஸ்.பி.யோ நியமிக்கப்பட்டிருப்பதைப் போல!
இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களின் மூலம் அரசு குற்றவாளிகளை விடுவிக்கின்றது. சட்டப்படி குற்றம் என்று கருதப்பட்டவற்றை இனி சட்டபூர்வமானதென்றும் மாற்றுகின்றது.
சான்றாக, தமிழகத்தில் ஜுன் 1,1976-க்கு முன் மதுரை, சென்னை பல்கலைக்கழகங்களிடம் அங்கீகாரம் பெற்றிருந்த சுமார் 40 மெட்ரிக் பள்ளிகளைத் தவிர, தமிழகத்தில் தற்போது இயங்கும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் பள்ளிகள் முதல் மழலையர் பள்ளிகள் வரையிலான அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும், இந்தப் பள்ளிகளை அங்கீகரிப்பதற்காகத் தமிழக அரசு இயற்றியிருக்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான நெறிமுறைகளும் சட்டவிரோதமானது என்றும், பா.ம.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வேலுசென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதனை மறுக்க முடியாத தமிழக அரசு, சட்டவிரோத மெட்ரிக் பள்ளிகள் முதல் மழலையர் பள்ளிகள் வரையிலான அனைத்தையும் சட்டபூர்வமாக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு ஒரு ஆண்டு அவகாசம் கேட்டது. நீதிமன்றமும் அவகாசம் வழங்கியிருக்கிறது. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 19.6.15)
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதே நோக்கம் என்று கூறிக்கொள்ளும் நீதிமன்றம், கல்விக் கொள்ளையைச் சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கு துணை நிற்கிறது. தனியார் கொள்ளையைத் தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு அமைக்கப்பட்ட சிங்காரவேல் கமிட்டி, கொள்ளையர்களின் ஏஜெண்டாக இருந்து ஆண்டுதோறும் அவர்களுடைய கோரிக்கைக்கு ஏற்ப கட்டணத்தை ஏற்றிக் கொடுக்கிறது.
மோடியின் துணிச்சலான நடவடிக்கை என்பதைப் போல பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் மாகி விவகாரத்தில், நெஸ்லேவுக்கு எதிராக அரசு கிரிமினல் வழக்கு ஏதும் தொடுத்திருக்கிறதா என்றால், இல்லை. நுகர்வோரின் சார்பாக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் (NCDRC) முறையிட்டிருக்கிறது. இதைக்காட்டிலும் அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது.
அதே நேரத்தில், பாக்கெட் உணவுகளில் உப்பு, சர்க்கரை போன்றவை எந்த அளவு இருக்கலாம் என்று தீர்மானிக்க தர நிர்ணய ஆணையம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. இந்திய உணவுப் பொருள் சந்தையில் சிறு, நடுத்தர உற்பத்தியாளர்கள் செல்வாக்கு செலுத்துவதால், உணவுப் பொருட்களைத் தரப்பரிசோதனைக்கு உட்படுத்துதல் என்ற பெயரில், அவர்களை வெளியேற்றுவதும், பன்னாட்டு நிறுவன ஆதிக்கத்தை உத்திரவாதப் படுத்துவதும்தான், மாகி பிரச்சினையைச் சாக்கிட்டு அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிபுணர் குழுவின் நோக்கமாக இருக்கும் என்று நிச்சயமாக சந்தேகிக்கலாம்.
இத்தகைய சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், மாகி நூடுல்ஸ் பிரச்சினை கிடக்கட்டும், “கையேந்தி பவன் பானி பூரியில் உள்ள மலம் கலந்த தண்ணீர் டைபாய்டை உருவாக்கும்” என்று எச்சரிக்கிறது தர நிர்ணய ஆணையத்தின் இணையதளம். மாநகராட்சிக் குழாய்களில் சாக்கடைத் தண்ணீர் வழங்கும் அரசு, கையேந்திபவனில் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கிறதாம்!
உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், போலீசு, பள்ளி கல்வித்துறை முதலான துறைகளும் சரி, அவற்றுக்கான நோக்கங்கள், விதிகள், நெறிகள் போன்றவையும் சரி – அனைத்தும் ஆளும் வர்க்கங்கள் தமது நலனுக்கேற்ப வடிவமைத்துக் கொண்டவைதான். இந்த நிறுவனங்களையும் விதிமுறைகளையும் எல்லா மக்களுக்கும் பொதுவானவை என்று பிரச்சாரம் செய்து நம்பவைப்பதன் மூலம்தான் மக்களிமிருந்து ஆள்வதற்கான நியாயவுரிமையைப் பெற்றிருக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.
ஆனால் அவர்கள், தாங்கள் உருவாக்கிய நிறுவனங்களையும் நெறிகளையும் தாங்களே மீறுகிறார்கள். இந்த அரசமைப்பின் வரம்புக்கு உட்பட்டு, இத்தகைய முறைகேடுகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், முன்னிலும் பெரிய முறைகேட்டுக்கு வழி வகுக்கிறது. ‘சட்டத்தின் ஆட்சி’ என்ற இடையூறைத் தகர்த்துத் தரைமட்டமாக்கியபடி, மத்திய அமெரிக்காவின் வாழைப்பழக் ‘குடியரசு’களின் நிலைக்கு வழுக்கிச் சரிகிறது ‘இந்திய ஜனநாயகம்’.
அடையாறு மேட்டுக்குடி வர்க்கம் தெருவுக்கு வந்ததும், கொலைக் குற்றவாளி பகிரங்கமாக போலீசின் முதுகில் பச்சைக்குதிரை தாண்டுவதும், உணவில் நஞ்சு கலந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கே தரநிர்ணய அதிகாரம் வழங்கப்படுவதும் இந்த அரசுக் கட்டமைவின் மக்கள் விரோதத் தன்மையை மட்டும் காட்டவில்லை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தோல்வியையும், அது ஆளும் அருகதை இழந்து நிற்பதையும் வெவ்வேறு கோணங்களில் பறைசாற்றுகின்றது.
– சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_____________________________