privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்சிவரக்கோட்டையை சிவப்பாக்கு ! சிப்காட்டை விரட்டியடி !

சிவரக்கோட்டையை சிவப்பாக்கு ! சிப்காட்டை விரட்டியடி !

-

  • பயத்தையும் அச்சத்தையும் ஒழிப்போம்!
  • வாழ்ந்தாலும் செத்தாலும் எங்கள் பூமியில்தான்!
  • சிவரக்கோட்டையை சிவப்பாக்குவோம்!
    சிப்காட்டை விரட்டியடிப்போம்!

ந்தியா ஒரு விவசாய நாடு பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முக்கியதொழிலாக செய்பவர்கள். ஒரு நாட்டில் எது பிரதான தொழிலாக இருக்கிறதோ அதைச்சார்ந்துதான் அந்த நாடு வளர்ச்சி அடைய முடியும் என்பது பொதுவான விதி.

ஆனால், மக்களாட்சி என்று சொல்லக்கூடிய இந்த போலிஜனநாயக நாட்டில் அரசியல்வாதிகளும், ஆளும்வர்க்கமும் திட்டமிட்டே விவசாயத்தை அழித்து வருகின்றனர். இந்த நாடு யாருக்கானது? இந்த அரசு யாருக்கானது? தம் வாழ்வாதாரங்களை பாதுகாத்துக் கொள்ள இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த அரசோ, விவசாயிகளிடம் நிலத்தைப்பிடுங்கி சிறப்புப் பொருளாதார மண்டலம், சிப்காட் என்ற பெயரில் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கிறது.

அதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த சிவரக்கோட்டை, கரிசக்கலாம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி, நேசனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளுக்குத் தெரியாமலேயே அவர்களது விளைநிலங்களை சிப்காட்டுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அரசு. தற்செயலாக ஒரு விவசாயி தன் நிலங்களுக்கு வில்லங்கச்சான்று எடுத்து பார்த்த போதுதான் அவருக்கு நிலைமை தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.

சிவரக்கோட்டை எள்ளு வயல்
“இந்த நிலங்கள் மலட்டு பூமியென்று மாவட்ட ஆட்சியரால் சான்று வழங்கப்பட்டு அதன்பேரில் நிலங்கள் சிப்காட்டுக்கு மாற்றிவிடப்பட்டன” (படம் : நன்றி The Hindu)

அதேபோல மற்ற விவசாயிகளின் நிலங்களும் சிப்காட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரிந்து அதிர்ச்சியுற்ற விவசாயிகள் வட்டாட்சியரை அணுகி கேட்டபோது, “இந்த நிலங்கள் மலட்டு பூமியென்று மாவட்ட ஆட்சியரால் சான்று வழங்கப்பட்டு அதன்பேரில் நிலங்கள் சிப்காட்டுக்கு மாற்றிவிடப்பட்டன” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிவரக்கோட்டை பகுதி விவசாயிகள் கடந்த எட்டு வருடங்களாக விளைநிலங்களைத் தரமாட்டோம் என்று பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர்.

இந்த நிலங்களில் விவசாயிகள் காலங்காலமாக 20-க்கும் மேற்பட்ட வகை சிறுதானியங்களைப் பயிர் செய்து விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறனர். இந்நிலையில் இந்த விவசாய நிலங்கள் மலட்டு பூமியென்று போலியான மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு தெரியாமலேயே நிலங்கள் சிப்காட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன.

நிலத்தையும், நீரையும் வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் நம்மிடமிருந்து பிடுங்கும் அரசு, தெருவெங்கும் சாராயக்கடைகளைத் திறந்து நம் மக்களை அடிமையாக்கி சிந்திக்கும் திறனை, போராடும் பண்பினை அழித்து வருகிறது. இந்தக் கொலைகார, கொள்ளைக்கார அரசை எதிர்த்து எட்டாண்டுகளாக போராடி வரும் சிவரக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களை பாராட்டியும், உற்சாகப்படுத்தும் விதமாகவும், போராட்டத்தின் வடிவத்தை மாற்றவும் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பாக சிவரக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

sivarakottai-sipcot-vivimu-meeting-1பொதுக்கூட்டத்தில் சிவரக்கோட்டை மற்றும் அத்னைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலம் பாதுகாப்புக்கமிட்டி உறுப்பினர்கள், விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கினைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் மற்றும் சிவரக்கோட்டை உள்ளிட்ட அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

க்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக்குழுவின் பாடல்வரிகள் அந்த பகுதி மக்களின் பேராட்ட உணர்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த தோழர் வீரணன்…,

“போராட்டம் இல்லாமல் வெற்றி காண முடியாது. நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். விவசாயத்தை அழித்து விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டு அதனை மறைக்க இலவசம் என்ற பெயரில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி யாருக்கு வேண்டும். இலவசம் நாங்களா கேட்டோம். இல்லை, எங்களுக்கு எங்கள் நிலம் வேண்டும், விவசாயம் வேண்டும்.

ரேசன் கடைகளை மூடிவிட்டு நீங்கள் கொடுக்கும் ரூ 600-க்கு சாராயம் குடித்து சாகவா? எங்கள் பணத்தை எங்களுக்கே திருப்பி கொடுத்து ரேசன் கடைகளை மூடும் உங்களது திட்டம் எங்களுக்கு நன்றாக தெரியும்.

இலவசம் யார் கேட்டா? என்னா மயித்துக்குத் கொடுக்கிற. இலவசம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டம் மக்களை சோம்பேறிகளாக்கி விவசாயத்தை அழிக்கும் திட்டம். ஒரு கிராமத்தில் 1000 பேர்களுக்கு விவசாயத்தின் மூலம்தான் வேலை கிடைக்கும். நாம் தலைநிமிர்ந்தும் தன்மானத்தோடும் வாழலாம் உங்களுக்குத் துணையாக நாங்களும் எங்கள் தோழமை அமைப்புகளும் இருக்கிறோம் ஒன்றிணைந்து போராடுவோம் வாருங்கள்!”

சிவரக்கோட்டை சிப்காட்
சிவரக்கோட்டை சிப்காட் நில கையகப்படுத்தல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் (படம் : நன்றி The Hindu)

சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி மூக்கையா…

“நாங்க இந்த பூமியை நம்பித்தான் வாழ்கிறோம். எங்களுக்கு வேறவேலை தெரியாது, எங்ககிட்ட இருந்து எங்க நிலத்தை பிடுங்கிட்டா நாங்க எப்படி வாழ முடியும்? எல்லா அரசியல் வாதிகளும் ஓட்டுக் கேட்டு வரும்போது நாங்க பாத்துக்கிறோம். உங்க நிலத்தை யாரும் எடுக்க மாட்டாங்க என்று வாக்குறுதி கொடுத்துட்டு போறாங்க. ஆனா அவங்கதான் இடைத்தரகராக இருந்து வேலை பார்க்கிறார்கள். எனவே அதிகாரிங்க ஒத்துழைப்பு கொடுக்கணும். புரட்சிகர அமைப்புகள் எங்களுக்கு துணையாக இருக்கணும்.”

சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி டேவிட் என்ற ஆறுமுகம் …

“இந்த கரிசல் பூமிதான் எங்கள் வாழ்வாதாரம். எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்குது இந்த அரசு. இது திருமங்கலத்தில் நடக்கிற பிரச்சனை என்று மட்டும் பார்க்ககூடாது. இதை ஒரு தேசியப் பிரச்சனையாக பார்க்க வேண்டும். இறையாண்மை பற்றி வள்ளுவர் கூட நிறைய எழுதியுள்ளார், ஒரு நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும்.

எங்க பிள்ளைங்க படிச்சு வேலை பார்த்து நகரங்களில் பெரிய பெரிய வீடு கட்டி வசதியாக வாழ்கிறார்கள். நாங்கள் அவங்க கூட சேர்ந்து வாழமுடியும். அப்படி நாங்க போயிட்டா இந்த சிறுதானிய விவசாயத்தையும் இந்த பூமியையும் யார் காப்பாற்றுவது. உற்பத்தி இல்லையென்றால் இந்த மக்களை யார் காப்பாற்றுவது? எதை உண்பார்கள், இன்றைக்கு நாடே சிறுதானியங்களை திரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளது”

உதவி செய்யலேனாலும்! உபத்ரவம் செய்யாதே!

உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி

“அரசை எதிர்த்து இந்த மண்ணை பாதுகாக்கும் உங்களுடைய போராட்டங்கள் வரவேற்கக் கூடியவை. உங்களுடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் விவசாயத்தையும் இந்த மண்ணையும் பாதுகாத்தவர்களுக்கு பரிசு அளிக்கவேண்டும் என்றால் முதல் பரிசு உங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

இந்த அரசு இதுவரை விவசாயத்துக்கு தேவையான பாசன வசதி செய்து கொடுக்கவில்லை மாறாக விவசாயத்தை திட்டமிட்டே அழித்து வருகிறது. நம்முடைய பாரம்பரிய விதைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு மரபணு மாற்றப்பட்டு விதைகள் அனைத்தையும் மான்சாண்டோவிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த அரசு நாட்டை ஆள தகுதியிழந்து விட்டது. விவசாயத்தை பாதுகாப்பது நமது கடமை. விவசாயத்தை விட்டால் அரசு நம் அனைவருக்கும் வேறு என்ன வேலை கொடுக்கும். நாம் நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும். 100 நாள் வேலைகொடுத்து விவசாயத்தை அழித்து நம்மை சோம்பேறிகளாக மாற்றி வருகிறது. நாம் விவசாயத்தை எப்படி பாதுகாக்கப் போகிறோம்? அனைத்து துறைகளும் கைவிட்டு விட்டன.

நிலத்தை கொடுப்பது பணத்தை பெறுவது என்பது விசயமில்லை. நாம் இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறோம். வாழ்ந்தாலும் செத்தாலும் இந்த பூமியில்தான் இருப்போம் என்று சபதமேற்போம்.”

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் வாஞ்சிநாதன்

“மண்ணின் மானத்தை, நாட்டின் விவசாயத்தை காக்க 8 ஆண்டுகளாக போராடிவரும் இந்த சிவரக்கோட்டை உள்ளிட்ட அனைத்து கிராம மக்களையும் பாராட்டுகிறேன். உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பேராடி வருகிறீர்கள்.

நம் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். நாம் இந்த மண்ணில் மானத்தோடும், உயிரோடும் வாழ இந்த அரசு மறுக்கிறது. இந்த அரசு கொலைகார, கொள்ளைக்கார அரசு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். “நிலத்தை கேட்டு வருபவன் எவனாக இருந்தாலும் நீ உயிரோடு போக மாட்ட” என்று சொல்லிப்பாருங்கள், வந்த வழியே சென்று விடுவான். நாம் முதலில் நமது பயத்தையும் அச்சத்தையும் போக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த கொள்ளைக்கார அரசு நமக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நம் வாழ்வாதாரத்தை பறிப்பவனை செருப்பால் அடிப்போம். ‘மனு கொடுத்து நியாயம் கேட்போம்’ என்று போவது முட்டாள்தனம்.

இன்றைக்கு நீதித்துறை மிகவும் மோசமாக உள்ளது. நீதிபதிகளை நம்பாதீர்கள் பாதிப்பேர் அயோக்கியர்களாக உள்ளார்கள்.

மோடி உருவாக்கியுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஒரு கிராமத்திற்கு ஆண்கள் 100 பேர் பெண்கள் 100 பேர் வீதம் ஒரு அமைப்பாக திரண்டு உறுதி எடுத்து வாருங்கள். இந்த சிப்காட்டை துரத்தியடிப்போம்.

இந்த அரசுக்கு சாராயம் விற்பதுதான் கடமையா? கல்வி மருத்துவம் தண்ணீர் யார் கொடுப்பது இதையெல்லாம் கொடுக்காத இந்த அரசுகட்டமைப்பு நமக்கு வேண்டாம்! இது நம்மை ஆள தகுதியிழந்து விட்டது!

இந்த அரசு கட்டமைப்பை தகர்த்தெறிவோம்! மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்போம்!

ஊர்தோறும் மக்கள் பாதுகாப்பு குழு கட்டுவோம்!

மக்கள் அதிகார அமைப்பில் இணைந்து நமது மக்களையும் விவசாயத்தையும் காப்போம்! வரலாறு படைப்போம்!

வாருங்கள்! வாருங்கள்!

தொகுப்பாக..

நம்முடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் போது அதற்கு அதிகாரிகளிடம் மனுகொடுத்தோ, பேச்சுவார்த்தை நடத்தியோ இந்த அரசுக்கட்டமைப்பிற்குள்ளே தீர்வு காண முடியாது. இந்த அரசு மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக மாறி ஆளத் தகுதியிழந்து விட்டது.

எனவே நம்முடைய போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும் (அடித்தால் திரும்ப அடி). நம்முடைய முன்னோர்கள் பகத்சிங், பூலித்தேவன், ஒண்டிப்புலி, மருதுசகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை, வ.உ.சி, திப்பு, தீரன்சின்னமலை வாரிசுகளாய் நக்சல் பாரிகளாய் ஒன்றிணைந்து போராடுவோம்! வெற்றிபெறுவோம்!

sivarakottai-sipcot-notice

பு.ஜ.செய்தியாளர்
உசிலம்பட்டி