இந்தாண்டுக்கான இரயில்வே நிதிநிலை அறிக்கையை இந்து பத்திரிகை உள்ளிட்ட தேசிய, பிராந்திய, ஆங்கிலம் என அனைத்து ஊடகங்களும் போற்றி புராணம் பாடுகின்றன. “புதிதாக இரயில்களை அறிவிப்பது, கட்டணக் குறைப்பு என்று கவர்ச்சி திட்டங்கள் இல்லாமல் முன்னேற்றத்திற்கான ஒரு தொலை நோக்கு பார்வை கொண்டாதாக இருக்கிறது இந்த நிதி நிலை அறிக்கை” என்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதார மேதைகள்; “இதை அரசியலற்ற பட்ஜெட், நுகர்வோருக்கான பட்ஜெட்” என்கிறார்கள். அதாவது, ரயில்வே மக்களுக்கான பொது சேவைக்கானது என்பதை மாற்றி முதலாளிகளுக்கான லாப வணிகத்துக்கானது என்பதை கொண்டாடுகிறார்கள்.
நாட்டை விற்பதற்கான மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை கொண்டாடும் ஊடகங்கள்.
ஜால்ரா கச்சேரி களை கட்டிக் கொண்டிருக்கும் போது வழக்கம் போல் காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள், திரிணாமூல் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சம்பிரதாயமான முறையில் “இது பயனற்றது” என்று ஜால்ராவைத் திருப்பித் தட்டியுள்ளன. எதிர் லாவணி பாடியுள்ள எதிர்க்கட்சிகளும் தாங்கள் விட்ட ‘காட்டமான’ கண்டன அறிக்கைகள் மறுநாள் பத்திரிகைகளில் வந்ததா இல்லையா என்று கூட கவலைப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது தனி கதை.
ஒவ்வொரு ஆண்டும் இரயில்வே துறைக்கான நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் சடங்கு நடந்தேறும் போதும் செய்யப்படும் அறிவிப்புகள் என்ற மோசடியைப் பார்த்து ஈமு கோழி நிறுவன அதிபர்களே வெட்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதற்கு முந்தைய ரயில்வேத் துறை அமைச்சர்கள் பறக்கவிட்ட குமிழிகளின் நிலை என்னவென்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா – மர்ச்சாலா பகுதிகளுக்கு இடையிலான இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட ஆண்டு – 1997. மேற்படி திட்டத்திற்காக பதினெட்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பிடிக்கும் இந்த திட்டத்திற்கு இப்போது ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய கோடிகளை ஒதுக்கி, அதில் ஒப்பந்ததாரர் தின்று கழித்தது போக மிஞ்சிய தொகையில் வேலை நடந்து, இடைப்பட்ட காலத்தில் பணிகளின் மறுமதிப்பீட்டில் அதிகரித்த தொகைக்கான ஒப்புதல் கிடைத்து, அதற்கான நிதி ஒதுக்கீடு நடந்து, ஒரு வழியாக வேலை முடியும். மர்ச்சாலா மக்கள் இந்த இருப்புப் பாதையில் ஓடும் இரயிலில் ஏறி பத்து நூற்றாண்டுகள் கழித்து நல்கொண்டா வந்து சேர்ந்திருப்பார்கள்.
சாலைப் போக்குவரத்துக் கட்டணம் வானத்து மேகங்களைக் கிழித்து அதற்கும் மேலே பறக்கும் நிலையில் சாதாரண மக்களின் மலிவான போக்குவரத்துத் தேர்வாக இருப்பது இரயில் பயணம் ஒன்று தான்.
கடந்த இருபதாண்டுகளில் இரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட சுமார் ரூ 6 லட்சம் கோடி மதிப்பிலான 362 திட்டங்கள் நிதி நெருக்கடியின் காரணமாக முடங்கிக் கிடக்கின்றன என்று கடந்த ஜனவரி 15-ம் தேதி ஜீ தொலைக்காட்சியில் நடந்த ராஜ்நீதி என்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் சுரேஷ் பிரபு. ஒவ்வொரு நாளும் சுமார் 2.3 கோடி பயணிகள் இரயில்வே சேவையைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 2.4 கோடி டன் அத்தியாவசிய சரக்குகள் இரயில்வே சேவையைப் பயன்படுத்தி நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு ஜூலை மாதம் பாரதிய ஜனதாவின் அப்போதைய இரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவால் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரெயில்கள் இப்போது எங்கே ஓடிக் கொண்டிருக்கின்றன என்கிற தகவல் தெரியவில்லை.
சாலைப் போக்குவரத்துக் கட்டணம் வானத்து மேகங்களைக் கிழித்து அதற்கும் மேலே பறக்கும் நிலையில் சாதாரண மக்களின் மலிவான போக்குவரத்துத் தேர்வாக இருப்பது இரயில் பயணம் ஒன்று தான். சாதாரண மக்களுடைய அன்றாடப் பிழைப்பின் பிரிக்க முடியாத அங்கமாகவும் அத்தியாவசிய சரக்குகளை தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சேர்க்கும் இரத்த நாளங்களாகவும் விளங்கும் இரயில்வே துறையில் இத்தனை நாட்களாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை வெறும் வாயில் சுட்ட வடைகள் தான். நிறைவேறிய சொற்ப திட்டங்களும் ஆமை இனமே வெட்கித் தலைகுனியும் வேகம் கொண்டவை. அதில் நடக்கும் லஞ்சம், ஊழல், கமிஷன் போன்ற லாகிரி வஸ்துக்களை இங்கே கணக்கில் சேர்க்கவில்லை.
தனியார் மயத்துக்கு “புளூ பிரின்ட்” – ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் உரையில் முன்வைக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் –
– இரயில் நிலையம் சுத்தமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்க சி.சி.டி.வி கேமரா
– இன்பச் சுற்றுலாவை ஊக்கப்படுத்த பிரத்யேகமான சுற்றுலா இரயில்கள்
– மும்பை அகமதாபாத் இடையே புல்லட் இரயில்
– முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ’வைர நாற்கர’ இருப்புப் பாதைத் திட்டம்
– இரயில் நிலையங்களில் வைஃபை மூலம் இணைய இணைப்பு
– இரயில்களில் தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதி (infotainment)
– இரயில் கோச்சுகளில் விமானங்களில் உள்ளது போன்ற கழிவறை
– இரயில் நிலையங்களில் உயிரிக் கழிவறை
– இரயில் கோச்சுகளில் செல்போன்கள் ரீசார்ஜ் செய்யும் வசதி
– இரயில் நிலையங்களைச் சுத்தமாக பராமரிக்க 50,000 பேர்கள் கொண்ட தனி(யார்) படை
இன்னும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு சுமார் ரூ 8.56 லட்சம் கோடி தேவைப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஒரு புறம் ஏற்கனவே உள்ள இருப்புப் பாதைகளை முறையாகப் பராமரித்து விபத்துகளைத் தடுக்கவே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இன்னொரு புறம், ஏற்கனவே உள்ள இரயில்கள் போதாமல் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கிறார்கள். ஊரகப் பகுதிகளில் இருந்து பெருநகரங்களுக்குத் தொழிலாளிகளைச் சுமந்து வரும் இரயில்கள் ஒவ்வொன்றும் பிராய்லர் கோழிகளைச் சுமந்து செல்லும் டி.வி.எஸ் மொப்பட்டைப் போல் காட்சியளிக்கிறது. சாதாரண மக்கள் பயணிக்கும் முன்பதிவு தேவையில்லாத பொதுக் கோச்சுகளோ பன்றிகளே நுழைய சங்கடப்படும் கோலத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இரயில் பயணம் என்பது மக்களின் தலையில் எழுதப்பட்ட மோசமான விதி என்ற நிலையில், “கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை” என்கிறார் இரயில்வே அமைச்சர்.
வாலாஜாபேட்டையில் இருந்து நெஞ்சாங்கூடு நசுங்க காலை ரெயிலில் பயணித்து சென்னைக்கு வேலைக்கு வரும் சாதாரண மக்களுக்குத் தேவை குத்துப் பாட்டுக்களோ, செல்போன் ரீசார்ஜோ அல்ல – மேலும் புதிய இரயில்களும், இணைக்கப்படாத பகுதிகளை இணைப்பதும், புதிய வழித்தடங்களில் மலிவான சேவையுமே மக்களுக்குத் தேவை. ஆனால், முட்டையிடும் கோழியின் பிட்டி வலியைப் பற்றி ஐந்து நட்சத்திர ஓட்டலில் ‘புல்ஸ் ஐ’ தின்னும் சுரேஷ் பிரபுவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதே ஐந்து நட்சத்திர ‘புல்ஸ் ஐ’ பார்ட்டிகளுக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுப்பதுதான் அவருக்கு இடப்பட்ட கட்டளை.
அத்தியாவசியத் திட்டங்களுக்கே காசு இல்லை என்று ஒரு மாதத்திற்கு முன் புலம்பியவர், இந்தப் புதிய ஆடம்பரங்களுக்கு எங்கே இருந்து நிதி திரட்டப்போகிறார்?
மோடி அரசு பதவியேற்ற உடனேயே டீசல் விலையேற்றத்தைக் காரணமாகச் சொல்லி இரயில்வே பயணிகள் கட்டணம் 14.2 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டது. தற்போது சர்வதேச எண்ணைச் சந்தையில், இரசியாவின் பொருளாதாரத்தைச் சீரழிக்க அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் கச்சா எண்ணை கடுமையாக வீழ்ந்துள்ளது – விளைவாக, டீசலின் விலை கணிசமாக குறைந்துள்ளது. டீசல் விலை உயர்ந்தபோது உயர்த்தப்பட்ட பயணிகள் கட்டனம், பின்னர் குறைந்த போது குறைக்கப்படவில்லை. இந்த வகையில் சேமிக்கப்பட்ட ரிசர்வ் தொகையை புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்திக் குறிப்பு.
இது தவிர, “உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன் வாங்குவது குறித்துப் பேசி வருவதாகவும் ஓய்வூதிய நிதியில் இருந்து கணிசமான தொகையை இரயில்வே துறைக்குத் திருப்பி விடுவது குறித்து அலோசனைகள் நடந்து வருவதாகவும்” சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உள்ளே நுழைகிறது என்றாலே தனியார் முதலாளிகள் உள்ளே நுழைவதற்கான முன்னோட்டமாக அதைப் புரிந்து கொள்ளலாம். கூடுதலாக, ஓய்வூதிய நிதியை இரயில்வேத் துறையை நோக்கித் திருப்பி விடும் பாரதிய ஜனதாவின் யோசனையையும் இணைத்துப் பார்த்தால் புதிருக்கான விடை தெளிவாகிறது.
ஓய்வூதிய நிதியை இரயில்வேயில் கொட்டுவது, மக்களின் இரத்தப் பணத்தில் வைஃபை இணையம், குளு குளு சொகுசுப் பெட்டிக்குள் குத்தாட்டப் பாடல்கள் என்று மக்களுக்கான சேவையாக இயங்க வேண்டிய இரயில்வே துறையை பணக்காரர்களுக்கான விற்பனை பொருளாக மாற்றுவது, பின் இரயில்வே துறையை மொத்தமாகத் தூக்கி பன்னாட்டு முதலாளிகளின் கையில் ஒப்படைப்பது, உள்ளே நுழைந்த தனியார் முதலாளிகள் கட்டணக் கொள்ளை அடிப்பதற்கு விளக்குப் பிடிப்பது என தனியார் மயத்துக்கான விரைவு தடத்தை போடுவதுதான் மோடி அரசு வழங்கியிருக்கும் இந்த ரயில்வே பட்ஜெட்டின் நோக்கம்.
மோடி சொல்லும் “அச்சே தின்”, இரயில்வே துறையைப் பொறுத்த வரை வெகு சீக்கிரத்தில் வரப் போகிறது – “அச்சே தின”ங்களை அள்ளிக் கொள்ள முதலாளிகளும் மேட்டுக்குடியினரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் ரூ 13,985 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது, முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ 2,305 கோடி அதிகம். மேலும், மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ 74,113 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது மாநிலத்தின் மொத்தக் கடன் சுமையில் சரி பாதி.
கோப்புப் படம்
இது தொடர்பாக, பொறியாளர் காந்தி அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏறத்தாழ ரூ 16,000 கோடி அளவிற்கு மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், மின்வாரியத்தின் நட்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே, இதற்கு என்ன காரணம்?
2012-13, 14 ம் ஆண்டுகளில் முறையே ரூ 7,874 கோடி, ரூ 937 கோடி மற்றும் ரூ 4,225 அளவுக்கு கட்டண உயர்வு வந்துள்ளது. ஒரே காரணம் தனியார் மின்சாரம் மட்டுமே.
1997-98-ல் வெறும் 99.8 கோடி யூனிட் ஆக இருந்த தனியார் கொள்முதல் (அதுவும் காற்றாலை போன்ற மின்சாரமே கொள்முதல் செய்யப்பட்டது) 2007-08-ல் 2392 கோடி யூனிட் என அதிகரித்திருக்கிறது. இன்று மொத்தத் தேவையில் 30.35 சதம்வரை உயர்ந்து தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது.
அரசு மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திச்செலவு யூனிட் ரூ 3 என்றளவில் இருந்தாலும் தனியாரின் உற்பத்தி விலை ரூ 5.50-லிருந்து ரூ 14.00 வரை வேறுபடுகிறது. 30.35 சத பங்கு தனியார் கொள்முதலும் அதிக விலையும், மின் வாரியத்தின் நட்டத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றது.
30.35 சத பங்கு தனியார் கொள்முதலும் அதிக விலையும், மின் வாரியத்தின் நட்டத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றது.
எஸ்.டி.சி.எம்.எஸ் எலெக்ட்ரிக் நிறுவனம், அபான் பவன் நிறுவனம், பென்னா எலெக்ட்ரிசிடி ஆகிய தனியார் நிறுவனங்கள் யூனிட் ஒன்று ரூ 5 விலையில் மின்சாரத்தை வழங்கிவரும் நிலையில் , ஜி.எம்.ஆர் பவர் கார்ப்பரேஷன், சாமல்பட்டி பவர் கார்ப்பரேஷன், பிள்ளை பெருமாள் நல்லூர் பவர் கார்ப்பரேஷன், மதுரை பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ 14 வரை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதன் பின்னணி என்ன?
அபான் பவன், பென்னா ஆகியவை எரிக்காற்றையும், எஸ்.டி.சி.எம்.எஸ். பழுப்பு நிலக்கரியையும் எரிபொருளாய் கொண்டவை. மற்ற நான்கு நிறுவனங்களும் எச்.எப்.ஓ. (ஹெவி ஃபர்னஸ் ஆயில்) என்ற நீர்ம எரிபொருள் அதாவது டீசல் போன்றவற்றை எரிபொருளாகக் கொண்டவை. அவற்றின் விலை கடுமையானதுதான்.
தற்பொழுது சந்தித்து வரும் மின்பற்றாக்குறை எவ்வளவு? இதனை அரசே தனது சொந்த முறையில் பூர்த்தி செய்து கொள்ள முடியாதா?
கோடைக் காலத்தில் தோராயமாக 2,000 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. புதிய உற்பத்திக்காக கட்டுமானத்தில் இருந்தவற்றை குறைந்தபட்சம் 2012-ல் கொண்டுவந்திருந்தால் அந்த ஆண்டு முதல் மின்வெட்டைத் தவிர்த்திருக்கலாம். புதிய நிலையங்கள் துவங்குவதிலும் தேவையில்லாமல் மூன்றாண்டுகள் வீணடிக்கப்பட்டன. துவங்கிய புதிய நிலையங்கள் முழு உற்பத்தியின்றி, பழுதடைந்து பகுதித்திறனாக முடங்கியுள்ளன. (மேட்டூர் 200 மெகாவாட், வட சென்னை 600 மெகாவாட், வல்லூர் 500 மெகாவாட், வழுதூர் 100 மெகாவாட்)
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதாலேயேதான், பல மின்திட்டங்கள் முடக்கப்பட்டிருக்கிறதா? இல்லை, இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கையா?
தனியார் மின்சாரக் கொள்முதல் என்பது கொள்ளை லாபம் தரும் ஊழல் வழி. இதனை யாரும் தவிர்க்கமாட்டார்கள். (2400 கோடி யூனிட் கொள்முதலில் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கமிசன் கூட நல்ல இலாபம்தான்)
மின்வாரிய நட்டம், ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் மின்கட்டண உயர்விலிருந்து மீள, தாங்கள் முன்வைக்கும் மாற்றுத்திட்டம் (அ) ஆலோசனை என்ன?
அ) அடிப்படையில் மின்சாரம் சேவைப்பொருளாக மீண்டும் கொள்ளப்பட்டு அரசே அளிக்க வேண்டும்.
ஆ) இடை மானியம், சமுதாய நோக்கில் தொடர வேண்டும்.
இ) புதிய உற்பத்தி முழுவதும், அரசுத்துறையில் இருக்க வேண்டும்.
ஈ) மின்சாரம், உணவுக்கு அடுத்த அடிப்படை வளம். இதில் எல்லா குடிமக்களுக்கும் பங்களிக்கப்படுவதே ஜனநாயக கடமை.
உ) அடிப்படையில் ”சந்தைப் பொருளாதாரம்” மாற்றப்பட வேண்டும்.
கோவை நகரம் நாளுக்கு நாள் முற்றி வரும் மக்கள் போராட்டங்களை தினந்தோறும் எதிர் கொண்டு வருகிறது. தன்னியல்பில் பாசிசமயமாகி வரும் அரசக் கட்டமைப்பில் இதர மாவட்டங்களுடன் ஒப்பு நோக்கின் இன்னும் ஒரு படி மேலே இருக்கும் நகரம் இது. இந்துத்துவ சில்லறை லெட்டர் பேட் அமைப்புகளின் கொட்டம் வேறு ஒரு பக்கம். புரட்சிகர அமைப்புகள் இத்தகைய அசுத்தங்களை அகற்றி புதுக் குருதி ஏற்றும் வேலையை செய்து வரும் வேளையில், அதற்கு அவ்வப்போது எதிர் வரும் வேகத் தடைகளை அகற்றும் தருணங்கள் சுவாரசியமானவை.
கடந்த வாரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த நமது தோழர்கள் கோவை அரசுக் கலைக் கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். கலைக் கல்லூரி கோவையின் மையப் பகுதியில் இருக்கிறது. மாணவர்கள் இளைஞர்களின் பிரதான பிரதேசமாதலால் இதயத்தின் இடது வெண்ட்ரிக்கிள் போல எப்போதும் துடிப்புடன் இருக்கும் பகுதி.
வழக்கம் போல் சிறிய தட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் உறுப்பினர் அட்டைகள் சகிதமாக மாணவர்களுடன் அரசியல் பேசியவாறு காலையில் துவங்கிய வேலை மதியம் வரை சுமுகமாகவே போனது.
மதியம் 12:30 போல ஒரு ஆட்டோ ஓட்டுனர் நம்மை அணுகி, ஆஞ்சநேயர் கோவிலில் பிரசாதம் வாங்கும் உடல் மொழியில் மிக பவ்யமாக, “ஒரு நோட்டீஸ் தருவீங்களா…?” எனக் கேட்டார். அப்போதே பட்சி சொல்லிற்று; ஒன்றிற்கு இரண்டாகக் கொடுத்து அனுப்பினோம்.
சரியாக 3 நிமிடங்களில் 5 காக்கி போலீஸும் ஆறேழு மஃப்டி போலீஸும் (ரகசிய போலீசாமா…!) ஸ்பாட்டுக்கு வந்து எங்களை மறித்து நின்றனர்.
புமாஇமு : “நாங்க ஒண்ணும் சாதி மத பிரச்சினைய கிளப்பல…. சார்.”
போலீஸ் : “நீங்க வந்தா எல்லா கட்சிக் காரங்களும் கேட்பாங்க…! த.மா.கா கேட்டாங்க., அவங்களுக்கும் நாங்க விடல. அதனால நீங்களும் பண்ணக் கூடாது; பொது மக்களுக்கு இடையூறு ஆகுது”
புமாஇமு : “என்ன இடையூறு ஆகுது..? இப்ப நீங்க வந்தவுடன் தான் இங்க கூட்டம் அதிகமாகியிருக்கு மக்கள் இங்க என்னவென்றே வேடிக்கை பார்க்கறாங்க…! நாங்க இதுவரை எங்களிடம் பேசுகின்ற மாணவர்களிடம் தான் பேசுறோம். யாரையும் கட்டாயப் படுத்தல.”
போலீஸ் : “இல்லைன்னா இல்ல தான். நீங்க பண்ணக் கூடாது.”
புமாஇமு : “இல்லைன்னு எந்த செக்சன்ல் சொல்லிருக்குன்னு தெளிவா சொல்லுங்க சார். பொத்தாம் பொதுவா இல்லைன்னு சொன்னாலாம் நாங்க போக முடியாது. இது எங்க உரிமை.”
சிஆர்பிசி, சிபிசி என நாம் பேசத் துவங்க இவங்க ஏதோ நமக்கு சம்பந்தமில்லாததை பேசுறாங்க போல “என்னமோ போடா மாதவா” என்ற தொனியில் சட்டம்&ஒழுங்கு காவல் துறையினர் பேந்தப் பேந்த விழித்தவாறே நின்றிருந்தனர்.
சீனியர் போலீஸ் சிரிப்பு போலீஸாக மாறியது கண்டு அறச் சீற்றம் கொண்டார் ஒரு பெண் போலீஸ்,
“என்னம்மா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போற., சொன்னா கேக்க மாட்டியா நீ.” என்று கூறியவாறே தோழர்களை போட்டோ எடுக்க முனைந்தது போலீஸ்.
புமாஇமு : “நிறுத்துங்க.. ஃபோட்டோ எடுக்காதீங்க….” எனத் தடுக்கையில்,
அந்த போலீஸ், “ஏய், என்ன” எனக் கூற, அவ்வளவு தான் ஆக்ரோஷமானார்கள் தோழர்கள்.
என நமது தோழர் எகிற, அவர்களும் பதில் பேச நமது தோழரும் ஏகத்துக்கும் எகிறத் துவங்க சுற்றியிருந்த மாணவர்களோ படு உற்சாகத்துடன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிலைமை கை மீறுவதை உணர்ந்த காக்கிகள் பின் வாங்கினர். சமாதானமாக பேச முயன்றனர். “இன்ஸ்பெக்டர் கூப்ட்டாரு” என காக்கிகள் கிளம்பிவிட்டனர். ஆனாலும் மஃப்டி போலீஸ்கள் விடாமுயற்சியுடன் சிலர் தன்மையாகவும் நாசூக்காக பேசியும் அங்கேயே உலாத்திக் கொண்டும் இருந்தனர் சூடுபட்ட பூனைகளாக.
(இப்படியான சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மறு புறம் மாணவர்கள் ஆர்வமாக வந்து உறுப்பினரானார்கள்)
போலீஸ் : “அவங்க பண்ணது புகாரா வரலயேப்பா.. நீங்க செய்றது தான் வந்திருக்கு.”
புமாஇமு : “யார் அப்படி புகார் சொன்னாங்க…?”
போலீஸ், “பசங்க தான்” எனக் கூறினர். எந்த பசங்க எனும் போது கூற மறுத்து விட்டார்.
கோவை அரசுக் கலைக் கல்லூரியில் கணிசமான அளவு தி.க. வினரும் ஏ.பி.வி.பி. யினரும் இருக்கின்றனர். இதில் ஏ.பி.வி.பி. யினரின் சில்லுண்டித்தனங்கள் மோசமானவை.
அவ்வமைப்பின் முன்னணியினர்
தமது வகுப்பு மாணவர்களின் ஃபோனை வாங்கி கனவு பெண்ணை கண்டுபிடிக்க இந்த நெம்பருக்கு அழையுங்கள் என அலைபேசி கம்பெனிகள் செய்யும் மாமா வேலையை போன்றே ‘உறுப்பினர் ஆகணுமா, இந்த நெம்பருக்கு கூப்பிடுங்க’ என விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் பிஜேபி யின் நெம்பருக்கு இவர்களே மிஸ்டு கால் கொடுப்பது
வகுப்பில் மிக சொற்பமாக இருக்கும் இஸ்லாமிய மாணவர்களை மிக மோசமாக கிண்டல் செய்வது
கல்லூரிக்குள்ளேயே ஆங்காங்கே கூட்டங்களை போட்டு மினி மதவெறி ஷாகா நடத்துவத
இதை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரு சில மாணவர்களையும் அடக்குவது
என்பன போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்று மத முனைவாக்கம் (Polarizing) செய்து கொண்டிருக்கும் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பின் தொடுப்புகளை (Outfits) மிக மென்மையாக கையாள்கிறது பார்ப்பன ஏவல் துறை. இதன் எதிர்முனையாக இருக்க வேண்டிய தி.க. வினரோ, பு.மா.இ.மு வளர்ச்சியை பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுகின்றனரே அன்றி, காவிக்கூட்டத்தை எதிர்த்து ருத்ர தாண்டவம் ஆடுவதில்லை. இப்படியான நிலைமை இங்கிருக்கிறது.
சுமார் இரண்டு மணி நேரம் நம்மிடம் என்ன பேசியும் முடியாமல், மஃப்டிகளும் போலீஸ்களும் கிளம்பும் போது அதில் ஒரு பெண் காக்கி “வாங்க சார்., நாம HOD கிட்ட புகார் எழுதி வாங்கிட்டு இவங்கள பாத்துக்கலாம்” என அப்பட்டமாக கூறுகிறார். ஒரு பொய்ப் புகார் எழுதி வாங்கப் போவதை அப்படி கூறிவிட்டு போகிறார்.
நாமும், “நீங்க முடிஞ்சத பாத்துக்கங்க சார்” எனக் கூறி அவர்களை வழியனுப்பி விட்டு வந்து நமது வேலையை தொடர்ந்தோம். அதன் பின்னர் பல மாணவர்கள் மிக ஆர்வமாக உறுப்பினராக இணைந்தனர். அது வரை, நாம் யாரு என்ன விஷயம் எனப் பேசியவாறு சேர்க்க வேண்டியிருந்தது. ஆனால் இதன் பின் வேலை கொஞ்சம் எளிதாகியது என்னவோ நிஜம்.
ஒரு முதுகலை மாணவர் வந்து “எனக்கொரு கார்டு போடுங்க..” என உரிமையாகக் கேட்டார்.
“என்னங்க., நோட்டீஸ் படிச்சிங்களா..? எதுவுமே கேட்கலயே நீங்க…” என நாம் கூறுகையில் அதற்கு அவர்,
“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க….! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்” எனக் கூறினார்.
அதன் பின், மாலை ஆறு மணி வரை தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்தது உறுப்பினர் சேர்க்கை. இது தொடரும்….
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை
சென்னை ராயபுரத்தில் மாணவர் உரிமைக்காக போராடும் பு.மா.இ.மு (கோப்புப் படம்)
ஜூலை 2014-ல் எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ஒலிப்பதிவு கோப்பை கேட்டு எழுதி, தொகுப்பதற்கு உடன் நேரம் கிடைக்கவில்லை என்பதால் இந்த தாமதம். சினிமா தொழிலாளிகள் மற்றும் துணை நடிகர்கள் அதிகம் வாழும் சாலிக்கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்கிறார் அமிர்தலிங்கம். சென்னையில் குடியேறி பல வருடங்கள் ஆகியிருந்தாலும் நெல்லை வழக்கு மொழியே அவருக்கு சரளமாக வருகிறது. பேச்சில் மட்டுமல்ல, இன்னமும் நகரத்து மனிதர்களின் செயற்கைத்தனம் அண்டாத எளிய கிராமத்து மனிதராகவும் இருக்கிறார். அவர் பா.ஜ.கவில் இருப்பதாக கூறினாலும் அது இன்னமும் அவருக்கு ஒட்டாத வேடமாகவே எங்களுக்கு தோன்றியது.
நேர்காணலை படியுங்கள்.
_____________
எனக்கு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு அருகில் உள்ள நாடார் குடியிருப்பு தான் சொந்த கிராமம். விவசாய பின்னணி. 1970 ல் சென்னைக்கு வந்து பலசரக்கு கடை வைத்திருந்த எனது அண்ணனிடம் அம்மாவால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டேன்.
கோடம்பாக்கம் பகுதியில் கடை திறந்த போது சினிமா மற்றும் நாடகத் துறை தொடர்பு கிடைத்தது. சிறுவயதியேலேயே நாடகத்தில் ஆர்வம் உண்டு. அதன் தொடர்ச்சியாக இங்கே அமெச்சூர் வகை நாடகங்களை மேடைகளில் நடிக்க ஆரம்பித்தேன்.
பூக்கடை காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் சௌந்தரி மகால் என்ற இடம் தான் எனக்கு முதல் மேடை. அதில் தியாராஜ பாகவதர் போன்றவர்கள் எல்லாம் நடித்திருக்கிறார்கள். சென்னை அருங்காட்சியக அரங்கம், நடிகர் சங்கம், வாணி மகால் என தொடர்ந்து பல இடங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
நகைச்சுவை நடிகர் அமிர்தலிங்கம்
வினவு : முதல் நாடகம் என்ன? என்ன பாத்திரத்தில் நடித்தீர்கள்?
அமிர்தலிங்கம் : நீண்ட காலமாகி விட்டதால் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் எனக்கு முதலில் சினிமாவில் கிடைத்த பாத்திரம் பிச்சைக்காரன். (சிரிக்கிறார்) அப்படி ஒரு பாத்திரம் முதல் படத்திலேயே கிடைப்பது அதிர்ஷ்டம் என்றுதான் சொன்னார்கள். அதாவது நமக்கும் அந்த கலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக அர்த்தமாம். ஆனால் காலப்போக்கில் சினிமாவில் ஒன்றும் சம்பாதிக்கவில்லை. ஆனாலும் அது ஒரு வேடம்தானே.
வினவு : நாடகத்திலிருந்து சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?
அமிர்தலிங்கம் : 1980-ல் வந்தேன். கே.ஏ கிருஷ்ணன் என்ற இயக்குநர் அப்போது அசோகன் அண்ணன், நம்பியார் அண்ணன், என்னத்த கண்ணையா அண்ணன் ஆகியோரை வைத்து தஞ்சாவூர் மேகம் என்று ஒரு படம் பண்ணினார். அவர் பழம்பெரும் இயக்குநர் சாந்தாராமிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இதுல அசோகன் அண்ணனுடைய கையாளாக நடிச்சேன்.
அப்போது மெய்வழிச் சாமி என்று ஒரு கடத்தல் தொழில் செய்யும் சாமியார்கள் இருந்து வந்தனர். அசோகன் அண்ணன் சித்து வேலையெல்லாம் செய்வார். நம்பியார் அண்ணன் அதெல்லாம் செய்ய மாட்டார். இரண்டு பேருமே சாமியார்கள்.
வினவு : வில்லன் பாத்திரம் என்பதால் உடம்பை நன்றாக பராமரிப்பீர்களா?
அமிர்தலிங்கம் : அப்படியெல்லாம் இல்லை. அந்தப் படத்திலேயே காமெடி சீன்தான் எனக்கு. படமே காமெடி படம் தான். அப்போதெல்லாம் மீசையெல்லாம் வளர்க்கல. திருமணமும் ஆகவில்லை. 1992-லதான் கல்யாணம் செய்தேன்.
அமிர்தலிங்கம் : என்னோட அண்ணன்மார்கள் எல்லாரும் விரட்டி விரட்டி அடிச்சாங்க. நமக்கு சம்பந்தமில்லாத துறை எதுக்குடான்னு கேட்டாங்க. எங்க அம்மா மட்டும் தான் எல்லோரும் கடை வியாபாரம்னு போறாங்க, நீ போய் முயற்சி செஞ்சு ஜெயிச்சுக் காட்டுன்னாங்க.
வினவு : மத்தவங்க சினிமாவ அப்படி வெறுக்க காரணம் என்ன?
அமிர்தலிங்கம் : பணத்தை போட்டு இழந்து விடக் கூடாதுன்னு ஒரு பயம். வீண் பழக்க வழங்கங்களுக்கு உள்ளாகி நடத்தை மாறி விடக் கூடாதுன்னு இன்னொரு பயம். அப்போ சினிமாவில் இருப்பவர்களை கூத்தாடிகள்ன்னுதான் பொதுவாக நடத்துவாங்க. எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகுதான் இந்த துறைக்கு மதிப்பு வந்தது. நடிகர்களை ஒரு ஆளாக மதிக்கிறது அப்புறம்தான். முன்னாடி கிராமப்புறங்கள்ல சினிமா, நாடகத்துல நடிக்கப் போனா, கூத்தாடப் போறானா, ஆடப் போறானா, நடிக்கப் போறான்னு கேவலமாத்தான் பார்த்தாங்க.
வினவு : ஆரம்பத்துல சினிமாவுல நீங்க கஷ்டப்பட காரணம் வாய்ப்புகள் நிறைய இல்லேன்னா?
அமிர்தலிங்கம் : ஆமா. அப்போ சினிமா ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருந்தது. இப்போது தான் வீதி வீதியாக வந்து விட்டது. ஏவிஎம், ரோகிணி போன்ற ஸ்டூடியோக்களை தாண்டி உள்ள போக முடியாது.
படிப்பு, தகுதியை விட நாடக அனுபவத்தைத்தான் எதிர்பார்ப்பாங்க. வசனங்களை பாவனையோடு உச்சரிக்கணும். கூச்சத்துடன் நடிச்சா ஃபிலிம் விரயம். ஒவ்வொரு அடியும் நூற்றுக்கணக்கான ரூபாய்கள். அவ்வளவு சீக்கிரம் அதனை வீணடிக்க மாட்டாங்க.
அதனால் மேடை அனுபவங்களை எதிர்பார்த்தாங்க. எனக்கு முதலில் ஓரிரு டயலாக்குகளை தருவார்கள். ஒரே டேக்கில் அதனை சிறப்பாக செய்து முடித்து விட்டால், அடுத்த சீன் வரும்போது ‘ஏம்பா! இவன் வசனத்தை சரியாக பேசுவான்’ என்று சொல்லி வாய்ப்பு தருவாங்க. வந்தவுடனே யாருக்கும் வாய்ப்பு கிடையாது.
இன்றைக்கு டிஜிட்டல் வந்த பிறகு எத்தனை தடவை வேண்டுமானாலும் அழித்து அழித்து எடுத்துக் கொள்ளலாம். ஒரே சிப் தான்.
வினவு : வாய்ப்பில்லாம வாழ்க்கையை எப்படி நடத்துனீங்க?
அமிர்தலிங்கம் : அப்ப ஐம்பது ரூபாய் சம்பளம் கிடைத்தாலே பெரிய விசயம். ஒரு நாள் சம்பளம் அது. அதுவும் உடனே கிடைக்காது. முன்னாடி சூட்டிங்கிறது பத்து பதினைந்து பேருடன் முடிந்து போகும். இப்போ அந்த நாடக பாணியைத் தாண்டி விரிவடைந்து விட்டதால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு உண்டு. முன்னர் கல்யாண சீன் என்றால் இரண்டு பொம்மைக்கு மாலையை மாந்நி, நேரா படுக்கையறை காட்சிக்கு போயிருவாங்க. கல்யாண சூழலை காட்ட மாட்டாங்க. இப்ப அதை காட்டுவதால் 300 பேருக்கு வேலை கிடைக்கிது. அப்போதுள்ள படங்கள் ஒரு வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி இப்ப உள்ள சீரியல் மாதிரி இருக்கும்.
இதுக்கு செலவு குறைவாக இருக்கணும்கிறது ஒரு காரணம். இரண்டாவது, ஊடகங்கள் அதிகமாக இல்லை. பெரிய நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி இவங்கல்லாம் அவுங்க படத்துல நடிக்க வைக்க தனி குழுவையே வெச்சிருப்பாங்க. மத்தவங்க நடிக்க முடியாது. இத விட்டா மத்த சிறு நடிகர்கள் படங்களில் தான் நடிக்க முடியும்.
எண்பதுகளில் எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு மார்க்கெட் போய், ரஜினி, கமல், விஜயகாந்த்ன்னு அடுத்த தலைமுறை வந்துவிட்ட காரணத்தால் நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
வினவு: எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் தங்களுக்கென தனியான நடிகர் கோஷ்டிகளை வைத்திருந்தது ஏன்? ஏதேனும் ரகசியங்களை பாதுகாக்கவா?
அமிர்தலிங்கம் : உண்மையில் சினிமாவை ரகசியமா இருட்டுலதான் பராமரிக்கணும். இருட்டுல ஜோலிப்பது தான் சினிமா. அதுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டால் ஒன்னுமில்லைன்னு ஆகிரும். ‘நடிகர்களை தெருவிலே போய் உட்கார வைத்து படப்பிடிப்பு நடத்தாதீர்கள்’ ன்னுதான் எம்ஜிஆரே சொல்வார். ஏன்னா படத்தில் ஆஜானுபாகுவாக தெரியும் பல நடிகர்கள நேரில் பாத்தால் அப்படி இருக்க மாட்டாங்க.
உதாரணமாக நான் கொஞ்சம் குள்ளம். அசோகன் அண்ணன் ஆறடி உயரம். அவரது தோள்பட்டை உயரத்துக்குத்தான் இருப்பேன். எம்ஜிஆரும் என் உயரம் தான். ஆனா எம்ஜிஆரையும் அசோகன் அண்ணன் உயரத்துக்கு இருக்குமாறு வசதியான கோணத்தில் இருந்து கேமராவில் படம் பிடிப்பாங்க. அதுதான் ரகசியம். அந்த ரகசியத்தை வெளியே கசிய விட்டா மக்களுக்கு சினிமா கவர்ச்சியே போயிரும்.
வினவு : இப்படி அவர்கள் தனியாக குழுக்களை வைத்திருப்பதால் சினிமாத் துறையில் ஜனநாயகமே இருக்காதே? உங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காதே!
அமிர்தலிங்கம் : இதனால் தான் சினிமாவுல எல்லாருக்கும் தனித்தனியா சங்கம் துவங்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு துணை நடிகருக்கும் தினசரி மூன்று ரூபாய் அல்லது நான்கு ரூபாய் என கணக்கிட்டு படப்பிடிப்பு முடியும்போது பணத்தை செட்டில் பண்ணி விடுவார்கள். அப்போதே பதினைந்தாயிரம் பேர் வரை உறுப்பினர்களாக இருந்தார்கள். நான்கு மொழிகளிலும் இங்குதான் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இங்கு யூனியன் பலமாக இருந்தது.
மூவாயிரம் பேர் வரை ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் வரை இருந்தனர். கம்பெனிகள் ஒவ்வொன்றும் தலா நூறு இருநூறு பேர் வரை எடுத்துக் கொள்வார்கள். இதுபோக நாடக நடிகர்கள் வேறு இருந்தனர். டயலாக் பேசுவதற்கும், சூழலில் நடிப்பதற்கும் என்று தனித்தனியாக பிரித்து எடுத்து விடுவார்கள்.
டயலாக் பேசும் ஆர்ட்டிஸ்டுகளான நாங்கள் சம்பளம் இவ்வளவு என்று பேசி முடிவுசெய்து விட்டு அதன் பிறகுதான் போவோம். சூழலுக்கு (அட்மாஸ்பியர் நடிப்பு – கூட்டத்தோடு மட்டும் காட்சியளிப்பது, வசனம் பேசவேண்டியிருக்காது) நடிப்பவர்களுக்கு யூனியன் முடிவு செய்திருக்கும் சம்பளம் தான் கிடைக்கும். இப்போது 300 அல்லது 350 ரூபாய் ஒரு கால்ஷீட்டுக்கு சம்பளம் வைச்சிருக்காங்க. ஒரு கால்ஷீட்டுன்னா எட்டு மணி நேரம்.
டயலாக் ஆர்ட்டிஸ்டு வேறு, சூழல் ஆர்ட்டிஸ்டு வேறு, கேரக்டர் ஆர்ட்டிஸ்டு வேறு. இப்போது நானே ஒரே நாளில் இரண்டு மூன்று சீன்கள் நடிக்க நேர்ந்தால் அதற்கு சம்பளம் பேசிக் கொண்டு, கம்பெனிக்கு ஏற்ப தொகையை நிர்ணயம் செய்து பெற்றுக் கொள்வோம்.
வினவு : நீங்கள் என்ன நோக்கத்திற்காக திரைப்படத் துறைக்கு வந்தீர்கள்?
அமிர்தலிங்கம் : நான் இத்துறைக்கு வந்தது நடிப்பதற்காக வரவில்லை. கதை, பாட்டு எழுத வேண்டும் என்ற படைப்பாற்றல் ஆர்வம் காரணமாகத்தான் வந்தேன்.
வினவு : கதை, கவிதை எல்லாம் ஆரம்பத்தில் எழுதியிருக்கிறீர்களா?
அமிர்தலிங்கம் : ஆம், அந்த நோக்கத்தில் தானே சினிமாவுக்கு வந்தேன். ஆனால் அந்த கதை கவிதையெல்லாம் தூக்கிச் சுமந்து கொண்டு செல்ல கஷ்டமாக இருந்தது. ஏனெனில், அப்போது கதை இலாகா என்று ஒன்றை வைத்திருந்தார்கள். கதையை விலை கொடுத்து வாங்கி அவர்கள் வசனம் எழுதிக் கொள்வார்கள். அதற்கு பிறகு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் ஒருவரே செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்போது நான் போன இடங்களிலெல்லாம் இயக்குநர்கள் ‘என்னிடமே நாற்பது கதைகள் இருக்கின்றன. இதை விட்டுவிட்டு நான் உன்னிடம் எப்படி வாங்குவது?’ என்று சொல்லி விட்டனர்.
அப்புறம் கதைகள் அவ்வளவு சீக்கிரம் விலை போகாது என்று தெரிந்த பிறகு, சினிமாவில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறித்தனம் இன்னமும் இருக்கவே, கே.ஏ. கிருஷ்ணன் அவர்கள் தான் ‘நான் எடுக்கும் படத்தில் அசோகனோடு ஒரு ஆளாக உன்னைப் போட்டு விடுகிறேன். உன் தலையெழுத்து நல்லாயிருந்தா அதிலும் பிரகாசிக்கலாம்’ என்று அந்த வாய்ப்பைக் கொடுத்தார்.
வினவு : உங்களைப் போன்ற கிராமப்புற பின்னணி கொண்டவர்கள் ஏன் சினிமாவில் கதாநாயகர்களாக மாற முடியவில்லை?
அமிர்தலிங்கம் : பாரதி ராஜா இதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். மதுரையிலிருந்து பாண்டியனை கொண்டு வந்தார். சந்திரசேகர் கூட தெற்கேயிருந்து கிராம்புறத்திலிருந்து வந்தவர்தான். எல்லாவற்றுக்கும் ஒரு காலகட்டத்தில் மாற்றம் வரும் சார். இப்போது அரசியலைப் போலவே சினிமாவிலும் வாரிசு முறை வந்து விட்டது. வாரிசு மட்டுமின்றி, பணபலமும் அவசியம்.
என்னைப் போன்றவர்கள் ஜெயிப்பது கஷ்டம். எனக்கு கூட வாரிசு இருக்கிறான். ஆனால் வசதியுள்ள மகனாக இருப்பதுதான் முன்நிபந்தனை. என் பையனை வைத்து படமெடுக்க பத்து கோடி ரூபாய் தேவை. அது என்னிடம் இல்லை. அடுத்து யாருடைய பிள்ளை என்ற லேபிளை மக்களும் எதிர்பார்க்கிறார்கள். முதலீட்டுக்கும் இது முன்நிபந்தனை
வினவு : திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் சொல்வார்களே?
அமிர்தலிங்கம் : உதாரணமா ரஜினிகாந்த் ஒரு பெரிய ஸ்டாராகினார் என்றால், ஓரிரு காட்சிகளில் பாலசந்தர் வாய்ப்பை கொடுத்தார். அவரிடம் ஒரு தனித்திறமை இருந்த காரணத்தால் தான் சின்ன பாத்திரத்தில் சிகரெட்டை லாவகமாக தூக்கிப் போட்டு பிடித்து ஸ்டைல் காட்டினார்.
வினவு : அந்த திறமை பெங்களூருவில் நடத்துனராக இருந்து ஒரு தொழிலாளியாக இருந்து வளர்த்துக் கொண்டது. இன்றைக்கு வாரிசுகளுக்கு என்ன திறமை இருக்கிறது என்று பத்து கோடி ரூபாய் வரை முதலீடு செய்கிறார்கள்?
அமிர்தலிங்கம் : இன்றைக்கு பணம் தான் முன்னால் நிற்கிறது. அன்றைக்கு டயலாக் பேசி நடிப்பவர்களை நாடக கம்பெனிகளில் இருந்து தேர்ந்தெடுத்து சினிமாவில் நடிக்க வைத்தார்கள். சிவாஜி கணேசன் இப்படி உயிரோட்டமாக, உரத்த குரலில் பேசி நாடகங்களில் நடித்து அதன் மூலம் தான் சினிமாவுக்கு வந்தார். நாடகத்தில் நடிக்கும் காலத்திலேயே வெறும் கணேசனாக இருந்த அவரைப் பாராட்டி சிவாஜி பட்டத்தை கொடுத்தவர் பெரியார்.
இன்றைக்கு நாடகம் என்பதே இல்லை. பார்க்கவும் ஆட்கள் இல்லை. நாடகத்தில் நடிப்பது சினிமாவை விட கஷ்டம். அதில் கட் எல்லாம் கொடுக்க முடியாது. பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்வதோடு, அதன் குணாதிசயங்களையும் உள்வாங்கி நடிக்க வேண்டும். எதிரே உள்ளவன் ஏதாவது வசனத்தை விட்டுவிட்டாலும் சாமர்த்தியமாக பேசி நடிக்க வேண்டும். அப்படி திறமையானவர்களைத்தான் அப்போது சினிமாவுக்கு நாடகம் மூலமாக எடுத்தார்கள். இப்போதுள்ள சினிமாவில் அத்தகைய திறமையில்லாதவர்களையும் திறமையுள்ளவர்கள் போல காட்ட முடியும்.
வினவு : பெரியார் கூட்டங்களை நேரில் கேட்டிருக்கிறீர்களா?
அமிர்தலிங்கம் : நான் சென்னைக்கு வந்த ஓரிரண்டு ஆண்டுகளில் பெரியாரும் ராஜாஜியும் இறந்து விட்டார்கள். எனவே அவர்களது கூட்டங்களை கேட்ட அனுபவம் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு 75ல் இறந்த காமராசரையே சந்திக்க முடியாமல் போய் விட்டது.
வினவு : இதுவரை எத்தனை படங்களில் நடித்திருப்பீர்கள்?
வடிவேலுவுடன் நடிகர் அமிர்தலிங்கம்
அமிர்தலிங்கம் : கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. 450 முதல் 500 படம் வரை பண்ணியிருப்பேன். சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறேன். கவுண்டமணி, செந்தில் உடன் நிறைய படங்களில் நடித்தேன். பிறகு வடிவேல் சாருடன் நடித்தேன். அவர் வந்த பிறகு தான் காமடி சேனல் என்றே ஒன்று வந்தது.
வினவு : வடிவேல் போன்ற காமெடி நடிகர் திமுக-வுக்கு பிரச்சாரம் செய்த காரணத்தால் பட வாய்ப்பு மறுக்கப்படுகிறதே. அதே நேரத்தில் பெரிய கதாநாயகர்கள் அரசியல் கட்சி எனப் போனால் ஏற்றுக் கொள்கிறார்களே! ஏன் இந்த பாகுபாடு?
அமிர்தலிங்கம் : அவருக்கு உள்ளுக்குள் நிறைய பிரச்சினை இருந்தது. காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இது. அவருக்கு கொஞ்சம் சொத்துப் பிரச்சினை இருந்தது. ஏமாற்றியதாகவும், நீதிமன்ற வழக்கு என்று வந்து விட்ட காரணத்தால், உட்கார்ந்து இரண்டு ஆண்டுகளில் இவற்றை சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததாக என்னிடம் சொன்னார். நடிப்பு நடிப்பு என்று போய்விட்டதால் பணம் எங்கே போகிறது, அதன் பிறகு என்ன ஆகிறது, தெரியவில்லை என்று கவலைப்பட்ட அவர் அவற்றை இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டார்.
அதன் பிறகும் வந்து தனியாக காமெடி டிராக் பண்ணுவதற்கு பதிலாக கதாநாயகனாக முதலில் இரண்டு படங்கள் பண்ணிய பிறகு அதனை தொடரலாம் என்று தான் முடிவெடுத்தார். தெனாலிராமன் படம் கூட பண்ணினார். அப்போதே நிறைய கம்பெனிகள் அவரிடம் அணுகிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்தான் மறுத்து வந்தார். ஆனால் வெளியே அவருக்கு படமில்லை என்றவுடன் மக்கள் இப்படி பேச ஆரம்பித்து விட்டார்கள்.
நான் கூட பாஜக உறுப்பினர்தான். அவர்களது மேடைகளில் கூட ஏறியுள்ளேன். அரசியல் என்பது கருத்துப் பரிமாற்றம் தானே. யாரைப் பற்றியும் தப்பாக பேசக் கூடாது. அவ்வளவுதானே! கொள்கையை, கருத்தை சொன்னால் பிரச்சினை வராது.
வினவு : பெரிய நடிகர்கள் உங்களைப் போன்ற துணை நடிகர்களை எப்படி பார்க்கிறார்கள்? எப்படி நடத்துகிறார்கள்?
அமிர்தலிங்கம் : நான் யாரிடமும் காசு எதிர்பார்த்து இதுவரை போனதில்லை. சகஜமாக பழகுவார்கள். என்னை எல்லோரும் நன்றாக மதிப்பார்கள். மற்றபடி அவர்கள் கோடி கோடியாக சம்பாதிப்பார்கள். பிறருக்கு போதுமா போதாதா என்றெல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். மற்றபடி ஈகை என்பது இயற்கையாக உள்ளுக்குள் இருந்து வர வேண்டும்.
மற்றபடி சகஜமாக பேசினால் தான், இயக்குநர் டயலாக்கை ஒன்றாக உட்கார வைத்து பேசினால் தான், அனைவரும் ஒத்துழைத்தால் தான் காட்சி நன்றாக அமையும்.
வினவு : தற்போது உங்கள் சினிமா வாழ்க்கை எப்படி போகிறது?
அமிர்தலிங்கம் : எனக்கு மாதத்தில் பதினைந்து நாட்கள் வரை வேலை இருக்கும். சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் தான் வேலை இருக்கும். சில சமயம் இல்லாமலும் இருக்கும். அப்படி இல்லாத காலங்களில் டப்பிங் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளை ஒருங்கிணைத்து காண்டிராக்டு எடுத்து வேலை செய்து கொடுப்பேன். தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களுக்கும் இந்த வேலைகளை 1995 முதல் செய்து வருகிறேன். இரண்டுக்குமே ஒரே யூனியன்தான்.
நான் வரும்போது யூனியனில் சேருவதற்கு ரூ.100 தான் கட்டணம். இப்போது ஒரு லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனெனில் டப்பிங் பேசுவதற்கு இப்போது ஒரு கால்ஷீட் சம்பளம் ரூ.3000. எட்டு மணி நேரம் தான் என்ற போதிலும், முன்னர் போல ஐந்து மைக் வைத்து லூப் முறையில் ரிக்கார்டு செய்த காலம் போய் இப்போது தனித் தனியாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து பேசி விட்டு போய் விடலாம் என்று ஆகி விட்டது. எனவே வேலை விரைவில் இப்போது முடிந்து விடும். ஆனாலும் அரை மணி நேரத்தில் வேலை முடிந்தாலும் மூவாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விடலாம்.
ஒரே நாளில் மூன்று நான்கு கால்ஷீட் கூட கிடைக்குமென்றால் அது உங்களது அதிர்ஷ்டம் தான். ஏனெனில் நிரந்தரமற்ற ஒரு துறையில் இருந்து கொண்டு நிரந்தரமாக வருமானம் நன்றாக பெற முடியுமெனில் அது கட்டாயம் இறைவன் அளித்த அதிர்ஷ்டம்தான்.
வினவு : டப்பிங்கிற்கு என்ன தகுதி?
அமிர்தலிங்கம் : அதில் கொஞ்சம் திறமை வேண்டும். அதாவது உயிரற்ற பொம்மைக்கு உயிர் கொடுக்கும் கலை அது. மாடுலேசனில் பேச வேண்டும். வசனங்களை மூளையில் உள்வாங்கி தன்னை மறந்து அதற்கு உயிர் கொடுக்க வேண்டும். திறமை இருந்தால் தான் ஜெயிக்க முடியும். பேச்சில் ஏற்ற இறக்கும் மிகவும் முக்கியம். வட இந்தியாவில் இருந்து வரும் பல நடிகர்களையும் பின்னால் இருந்து பேசி வாழ வைத்தவர்கள் தமிழ் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் தான். இவர்களைப் பற்றி மக்களுக்கு எதுவும் பெரிதாக தெரியாது.
வினவு : வாய்ப்புகளை நீங்களே தேடிப் போவீர்களா?
அமிர்தலிங்கம் : ஒரு காலத்தில் நாங்கள்தான் தேடி அலைந்தோம். அப்போதெல்லாம் படபூஜை என்றால் ஏவிம், வாகிணி எல்லாம் பயங்கர அலங்காரமா இருக்கும். செய்தித் தாளில் விளம்பரமும் நிரம்பியிருக்கும். சினிமா இப்போது எங்கே என்றே தெரியவில்லை. காரணம் ஸ்டுடியோவும் இல்லை. இப்போது ஏவிஎம் இன் பூமி உருண்டை மட்டும் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது, சினிமா இருந்த்து என்ற தடயத்திற்காக. கற்பகம், அருணாச்சலம் எல்லாம் இடித்து பிளாட் கட்டி விட்டார்கள். வாஹிணியும் இல்லாமல் போய் விட்டது. ஏவிஎம் மட்டும் தான் இருக்கிறது. பிரசாத்தில் கூட இரண்டு தளங்களில் மட்டும் தான் சினிமா.
வினவு : ஆனால் தொழில் வளர்ந்துள்ளதே!
அமிர்தலிங்கம் : உண்மைதான். இப்போது யாரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சேர்வதில்லை. காரணம் இப்போது படப்பிடிப்பு என்பதே மதுரை, பொள்ளாச்சி எனப் போய் விட்டது. அங்கிருப்பவர்களை நடிக்க வைத்து படமெடுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் விவசாய கூலிகள். அங்கே 75 ரூபாய் சம்பளம். ஆனால் இங்கே நூற்றியம்பது ரூபாய் சம்பளத்துடன் சாப்பாடும் கிடைப்பதால் இதற்கு எளிதில் போய் விடுகிறார்கள். இதனை எதிர்த்து யூனியன் ஒன்றும் பண்ண முடியாது. சிதறிப் போய்விட்ட தொழிலை ஏரியா தாண்டி போய் அதிகாரம் பண்ண முடியாது.
வினவு : ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து கொண்டு குடும்பம், இரண்டு பிள்ளைகள் என குடித்தனமாக வாழ்வது சாத்தியமா?
அமிர்தலிங்கம் : அது மிகவும் கஷ்டம். இன்றைய பொருளாதார வளர்ச்சி நிலைமையில் மாதம் குறைந்தது ஒரு முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் தான் வாடகை, குழந்தைகள், படிப்பு என குடும்பம் ஒன்று வாழ முடியும். ஆனால் சினிமாவில் முப்பதாயிரம் சம்பாதிப்பது என்பது அசாத்தியமானது.
எனவே துணை நடிகர்கள் அனைவரும் சூட்டிங் இல்லாத காலங்களில் கல்யாண காலங்களில் பந்தி பரிமாறுவது, காய்கறி வெட்டுவது என்ற வேலைகளுக்கு போய்விடுவார்கள். எல்லாக் காலங்களிலும் சூட்டிங் இருப்பது எப்படி சாத்தியமில்லையோ அது போலத்தான் கல்யாணம் இருப்பதும் சாத்தியமில்லை. அப்போது என்ன வேலை கிடைக்கிறதோ அதற்கு போய்க் கொள்ள வேண்டியது தான். இன்றைய நிலைமையில் நான்கு வகையான வேலைகள் செய்தால் தான் பிழைக்க முடியும்கிறது நிலைமை.
வினவு : கோச்சடையான் போன்ற திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகிறது. 50 கோடி 100 கோடியில் தமிழ் சினிமா வியாபாரம் நடக்கிறது. இது நீங்கள் சொல்வதற்கு எதிராக இருக்கிறதே?
அமிர்தலிங்கம் : அது வேற. திரையரங்கிற்கு செல்வது. எத்தனை கோடி ரூபாய் யார் சம்பளம் வாங்கினாலும் அதனை யாரும் யாருக்கும் பகிர்ந்து தரப் போவதில்லை. அவர்கள் வாங்கிய பணமூட்டையைக் கொண்டு உலக நாடுகளை சுற்றி வருவார்கள். நமக்கு தர வேண்டும் என்று ஏதும் கட்டாயமிருக்கிறதா என்ன? அப்படி யாரும் தருவதில்லை.
யாராவது கடைகோடி நடிகர்கள் பெரிய நடிகர்களுக்கு பரிச்சயமாகி இருந்தால் மாத்திரம் ஏதாவது பிள்ளைகள் படிப்பதற்கு உதவி கேட்டால் கிடைக்கும். எல்லோருக்கும் அது கிடைத்து விடாது.
என்னை விட வெளிச்சத்திற்கு வராத சிறு நடிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஓடிவிட்டால் தப்பித்துக் கொள்வார்கள். மற்றபடி அவர்களது வாழ்க்கையை பற்றி சொல்ல என்ன இருக்கிறது (கையை விரித்து பெருமூச்சு விடுகிறார்). இன்றில்லாவிட்டாலும் நாளைக்கு ஒரு வழி கிடைக்காதா என்ற நம்பிக்கைதான் இத்தனையாண்டுகளையும் ஓட்டி விட்டது. இனிமேல் வேறு துறைக்கும் போக முடியாது. சரி இதையே தொடர்ந்து முயற்சி செய்து பார்ப்போம் என்று தொடர்கிறேன்.
வினவு : இன்றைக்கு கம்ப்யூட்டர் ஆபீசு, பெரிய கட்டிடம், அபார்ட்மெண்ட் என சென்னையே மாறி விட்ட நிலைமையில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளே சுத்தமாகவும், சிவப்பாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைமை தானே. அப்படியானால் தமிழர்களது நிறத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் இல்லையா?
அமிர்தலிங்கம் : ஆமாம். கிராமபுறங்களுக்கு போகின்றவர்கள் அங்கிருக்கும் ஜனங்களை வைத்தே படம் எடுத்து விடுகிறார்கள். நகரம் சார்ந்த கதை பண்ணும் போது தான் சேட் மற்றும் இந்திப் பசங்களை தேடுகிறார்கள். இப்போது வரும் கதாநாயகர்களே அப்படி கிளாமராக முடியெல்லாம் வைத்துக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த சேட் பசங்களுக்கு சம்பளமும் அதிகம். சங்கத்தில் உறுப்பினராக இல்லாவிடிலும் அண்டர்டேக்கனில் தான் வருகிறார்கள். ரிச் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர்.
பெரிய நட்சத்திர விடுதியில் பல தரப்பட்ட மக்கள் இருப்பதாக அட்மாஸ்பியரை காட்ட வேண்டுமானால் அப்படி செய்து தான் ஆக வேண்டும். அங்கு போய் சாதாரண ஆட்களை நீங்கள் வைக்க முடியாது.
வினவு : நகரம் சார்ந்த திரைப்படங்கள் அதிகமாக வருவதால் மாநிறமாக இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் சினிமாவில் இனி இடமில்லை என்று சொல்லலாமா?
அமிர்தலிங்கம் : அது ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான். இன்று வரை தமிழ் கதாநாயகர்கள் எத்தனை பேர் வந்துள்ளார்கள்.? ஆரம்பத்திலிருந்தே வெளியில் இருந்து தான் வந்துள்ளார்கள். ஆனால் அப்படி வந்தவர்களும் நன்றாக துறையில் நடித்து பிரகாசித்துள்ளார்கள்.
வினவு : இத்துறைக்கு வந்து எத்தனை வருடம் ஆனது? என்ன சம்பாதிச்சிருக்கீங்க?
அமிர்தலிங்கம் : நாற்பது ஆண்டுகள் ஆகிறது. மூன்று பசங்களை படிக்க வைத்திருக்கிறேன். வாடகை வீடுதான். இன்றைக்கு விலைவாசி எங்கேயோ போய் விட்டது. அன்றைக்கு வாங்கிய ஐம்பது ரூபாயின் மதிப்புதான் இன்றைக்கு ஐயாயிரம் ரூபாய்க்கும். ஆனால் அந்த ஐயாயிரம் ரூபாய் பெரிதில்லை. வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. இந்த வீட்டின் வாடகை 7200 ரூபாய்.
வினவு : உங்களது மாத செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?
அமிர்தலிங்கம் : மாதமொன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் முப்பதாயிரம் வரை தேவை. நான்கு பேருக்கு போனை போட்டு தேடினால் இந்த தொகை தேறும். உட்கார்ந்தால் எல்லாம் கதை வேகாது. கடனும் வாங்கித்தான் ஆக வேண்டும். கடனில்லாமல் யார் இருக்கிறார்கள். இந்தியாவே கடன்கார நாடாக இருக்கிறது. அப்புறம் ஒரு சாதாரண இந்தியன் கடன் வாங்காமல் இருக்க முடியுமா?
வினவு : இத்தனையாண்டு கால போராட்டத்திற்கு பிறகும் குறைந்தபட்ச தேவைக்காக வாய்ப்பு தேடி அலைய வேண்டியிருப்பது உங்களுக்கு கோபத்தை தூண்டவில்லையா?
அமிர்தலிங்கம் : அதான் முதலிலேயே சொன்னேன். ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று முதலிலேயே போயிருக்க வேண்டும். எதையாவது பண்ணி பிக் அப் ஆகியிருக்கலாம். ஆனால் அந்தப் பழத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே குதித்து குதித்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
வினவு : நேற்று வந்த ஹீரோ பத்து கோடி சம்பாதிக்கிறாரே!
அமிர்தலிங்கம் : ஒரு விசயம் சார். அம்பானியை பார்த்து எல்லோருமே அம்பானியாக ஆசைப்படுவது தப்பு. ஒரு எம்ஜியார் வந்தார், ஒரு சிவாஜி வந்தார் என்பதற்காக எல்லோரும் அப்படி ஆக முயற்சிக்க முடியுமா? ஒரு நாட்டுக்கு ஒருவன் தான் தலைவன். எல்லோரும் தலைவனாக முடியுமா? அந்த அதிர்ஷ்டம், வாய்ப்பு யாருக்கு கிடைக்கிறதோ அவன் வாழ்கிறான்.
நீங்க ஏன் அவன் போல வரவில்லை என யாரையும் கேட்காதீர்கள். கடவுள் இருக்கிறானோ இல்லையோ நம் நாடு கேப்பிடலிச நாடு, கம்யூனிச நாடு இல்லை. பத்து முதலாளி இருந்தால் தொன்னூறு வேலைக்காரன்கள் தான் இருப்பார்கள். முதலாளிகளின் ஆதிக்கத்தில் தான் இந்நாடு வாழ்கிறது. ஏன் அந்த பத்து முதலாளிகளில் தொன்னூறு பேர் வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
வினவு : உங்களுக்கு எப்போது திருமணம் ஆனது ? இந்த துறையில் நீங்கள் இருப்பதை உங்களது துணைவியார் ஏற்றுக் கொண்டார்களா?
அமிர்தலிங்கம் : 1992 ல் நடைபெற்றது. நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதை சொல்லி தான் திருமணம் நடைபெற்றது. அவளும் பெரிய பணக்கார பின்னணி உடையவள் அல்ல. நம்மைப் போன்ற சாதாரண பின்னணிதான். இதுவரை முகம் சுழிக்காமல் என்னுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
வினவு : பிள்ளைகளை படிக்க வைக்கின்றீர்களா? அவர்களை சினிமா துறைக்கு அனுப்புவீர்களா?
அமிர்தலிங்கம் : இல்லை. நான் அவர்களை படிக்க வைக்கிறேன். எனக்கு சின்ன வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டதால் படிப்பு கிடைக்காமல் போய் விட்டது. எனது மகளை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் பிஏ ஆங்கிலம் படிக்க வைக்கிறேன். ஒரு மகன் 12, இன்னொருவன் 11 படிக்கிறான்.
வினவு : பாஜகவில் எப்போது சேர்ந்தீர்கள்?
அமிர்தலிங்கம் : 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் போய் சேர்ந்தேன். ஏனெனில் பாஜக என்பது கொள்கை ரீதியாகவே ரொம்ப காலமாகவே பிடிக்கும்.
வினவு : பாஜக வின் எந்த கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?
அமிர்தலிங்கம் : பொது சிவில் சட்டம் வேண்டும் என்பது எனக்கு பிடிக்கும். இந்து, முசுலீம், கிறிஸ்தவன் என்று தனித்தனியாக பிரித்து இருப்பதால் அது தான் நம்மை அடிமைப்படுத்துகிறது. ஒரு நாட்டில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்.
இந்து மதத்தில் மனைவி உயிரோடு இருக்கையில் இன்னொரு கல்யாணம் பண்ண முடியாது. ஆனால் இசுலாமியன் தலாக் சொன்னாலே போதும் என்றுதானே இருக்கிறது. அப்படியில்லாமல் பொதுச் சட்டம் வேண்டும் என்கிறோம்.
இது முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் நாடு. கம்யூனிச நாடு இயற்கையானதல்ல. ஆளானப்பட்ட ரசியாவே உடைந்து போய் விட்டது. உங்களுக்கு தெரியாத விசயமா.
வினவு : இந்து மதத்திற்குள்ளேயே அக்ரகாரம், சேரி என்ற பிரிவினை இருக்கிறது. முன்னொரு காலத்தில் தென்மாவட்டங்களில் கோவில் நுழைவு சாணார்களுக்கு மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் அய்யா வழி தோன்றியது. பொது சிவில் சட்டம் வந்தால் இந்த ஏற்றத் தாழ்வெல்லாம் இந்து மதத்தில் ஒழிக்கப்படுமா?
அமிர்தலிங்கம் : ஒரு காலகட்டத்தில் அப்படியான அடிமைத்தனம் இருந்திருக்கலாம். கல்விதான் இதனை நீக்க முன்வர முடியும். குருகுலம் வைத்து பிராமணர்கள் அன்று படிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் செய்த சிலையோ, அவன் வடித்த கோவிலோ இருக்கிறதா? ராணித் தேனீ போல உள்ளே உட்கார்ந்து கொண்டு தங்களது புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆட்சியதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவனிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொண்டார்கள். இன்று அந்த அடிமைத்தனத்தை கல்வி வந்து உடைத்திருக்கிறது. அந்தப் புண்ணியம் காமராசருக்கும் சேரும். வெள்ளைக்காரன் காலத்திலும் அவன்தான் ஆட்சி நடத்தினான். கீழ்குடி மக்களால் அப்போது எந்திரிக்க முடியவில்லை.
வினவு : பா.ஜ.கவில் யாராவது சொல்லிப் போய் சேர்ந்தீர்களா? அல்லது நீங்களாகவே போய் சேர்ந்தீர்களா?
அமிர்தலிங்கம் : இல்லை. நானாகத்தான் போய் சேர்ந்தேன். தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தேன். நான் அங்கு ஒரு மேடைப் பேச்சாளனாக இருக்கிறேன்.
வினவு : 2011 தேர்தல் பிரச்சாரத்தில் எத்தனை கூட்டங்களுக்கு போனீர்கள்? எவ்வளவு தொகை கொடுத்தார்கள்?
அமிர்தலிங்கம் : ஒரு பத்து பதினைந்து கூட்டங்கள் போயிருப்பேன். எவ்வளவு கொடுத்தார்கள் என்று வெளியில் சொல்ல முடியாது. சம்பளம் கொடுத்தார்கள். ஒரு கலைஞன் என்ற முறையில் மதித்து சம்பளம் கொடுத்தார்கள். பாஜக வில் சம்பளம் என்று ஒரு முறை கிடையாது. அது ஒரு சேவை மையம் என்பதால் பணத்தை எதிர்பார்த்து வராதீர்கள் என்று சொல்லி விடுகிறார்கள். வெளியில் தான் தப்புதப்பாக பேசுகிறார்கள்.
வினவு : பா.ஜ.க தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினீர்கள்?
சென்னையில்தான் பேசினேன். நான் ஒரேயொரு விசயத்தைதான் எடுத்து எல்லா கூட்டங்களிலும் பேசினேன். அதாவது திராவிடம் பாரம்பரியம் என்று சொல்வது பொய். அப்படி எந்த மலையாளியும், தெலுங்கனும், கன்னடனும் தன்னை திராவிடன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர்கள் என்று சொல்ல வேண்டும். திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர் அவ்வளவுதான். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கு பதிலாகத்தான் தனது கடைசி திருவாரூர் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர் ‘திராவிடம் என்பது தேசிய கீதத்தில் உள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தில் உள்ளது’ என்று பதிலாக சொன்னார். இதுவே ஒரு ஏமாற்று தான். மொழிவாரியாக சொல்ல வேண்டியது தானே. உங்களைத் தவிர யாரும் சொல்லவில்லை. திராவிடம் என்று நீங்கள் சொல்ல காரணம் இந்த மக்களை அடிமைப்படுத்தி உங்களது காலடிக்குள் வைத்திருக்க நினைப்பதால் தான்.
வினவு : உங்களை விட பெரிய நடிகர்களுக்கு உங்களுக்கு தெரிந்த அளவுக்கு அரசியல் விபரங்கள் ஓரளவுக்காவது தெரியுமா?
அமிர்தலிங்கம் : எல்லோருக்கும் அரசியல் பிடிக்காது. விஜயகாந்த் உடன் விருத்தகிரி என்ற படத்திற்கு டப்பிங் பண்ணப் போகும் போது பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரிடமும் என்னென்ன கட்சி என்று கேட்டுக் கொண்டிருந்தார். நான் பாஜக என்றவுடன், ‘அது மதவாத கட்சி இல்லையா?’ என்றார். ‘அது மதவாத கட்சி என்று பறைசாற்றப்பட்ட கட்சி. அவ்வளவுதான். முசுலீம் லீக் மதவாத கட்சி இல்லையா? கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி மதவாத கட்சி இல்லையா? அவரவர் மார்க்கத்துக்கு ஒரு கட்சி வைத்துக் கொள்ளும்போது இதை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் விமர்சிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘நீங்கள் சொல்வது சரிதான். மக்களுக்கு அது தெரிய மாட்டேங்குதே’ என்றார் அவர். பிறகு அவரே கூட்டணிக்கும் வந்தார்.
வினவு : அதிமுகவில் கூப்பிட்டால் போய் பேசுவீர்களா?
அமிர்தலிங்கம் : ஒரேயொரு விசயம் தான். பச்சையாக பேசினாலும் அது நியாயமாகவும், தர்மமாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். இந்த நாடு நாசமாகப் போனதற்கு முக்கிய காரணம் திராவிட கழகங்கள். 1970 ல் கருணாநிதி கள்ளுக்கடையை திறந்து 74-ல் மூடி விட்டார். குதிரை பந்தயத்தை ஒழித்தார். பெண்களின் தாலியை அறுத்து நடந்த அதனை மூடிய அவர், கள்ளுக்கடையையும், சாராயக் கடையையும் மூடினார். ஆனால் பிராந்திக் கடை வைத்திருந்தார். அதனை ஒழுங்குபடுத்தி வைத்திருந்தார். பர்மிட் இருந்தால் தான் பிராந்தி தருவார்கள். அதற்கு இவனுக்கு இத்தனை அவுன்சு பிராந்தி தேவை என மருத்துவர் சான்றிதழ் தர வேண்டும். சும்மா போய் எல்லாம் வாங்க முடியாது.
கள்ளச் சாராயம் என்பது மது ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அதில் வெட்டு குத்து நடப்பது தனிக்கதை. 1983-ல் தரும்புரியில் 165 பேர் கள்ளச்சாராயம் குடித்து செத்துப் போனார்கள். அந்த மாவட்டத்தில் மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சுண்டு விரல் போன்ற தரும்புரியின் காயத்திற்கு தமிழகம் என்ற உடம்பு முழுக்க பேண்டேஜ் சுற்றினார் எம்ஜிஆர். தருமபுரியில் செத்தது 165 பேர்தான். ஆனால் நீங்கள் திறந்த சாராயக் கடை வாசலில் செத்துக் கிடந்தவர்களின் எண்ணிக்கைக்கு எதாவது உங்களிடம் கணக்கிருக்கிறதா? அப்படியே சுருங்கி செத்துக் கிடப்பான். போலீசுக்காரன் வருவான். அங்க அடையாளங்களை குறித்துக் கொள்வான், ரிக்ஷாக்காரனை கூப்பிட்டு பத்து ரூபாய் கொடுத்து ‘டே! இத ஜி.எச்-ல் போய் போடு!’ என்பான்.
அந்தக் கணக்குதான் இன்றைக்கு பாட்டிலாக க்யூவில் வந்து நிற்கிறது. மும்பையில் விபச்சாரம் இருக்கிறது, கொல்கத்தாவில் இருக்கிறது என்பதற்காக இங்கும் திறக்க முடியுமா?
நமது அரசியல் கட்சிகள் எல்லாம் குறுகிய வட்டத்திற்குள் அரசியல் பண்ணுவதால் மதுவிலக்கை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள். மற்றபடி ஒன்றும் இல்லை.
வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், நாத்திகருமான அவ்ஜித் ராய், நேற்று வியாழன் – 26.02.2015 அன்று இரவு சிலரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இவரது மனைவி ரஃபிதா அகமதுவும் தாக்கப்பட்டு, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
டாக்கா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர் அஜய் ராயின் மகனான அவ்ஜித் ராய் பிரபலமான முக்தோ மோனா எனும் வங்க மொழி இணைய தளத்தின் நிறுவனராவார். நாத்திக சிந்தனைகளையும், மதவெறியர் – மத அடிப்படைவாதத்தை எதிர்த்தும் இந்த இணைய தளம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் தஸ்லிமா நசுரீன் நாடு கடத்தப்பட்டு அதை வங்க நீதித்துறை அனுமதித்த போதெல்லாம் இவர் அதை கண்டித்து குரல் கொடுத்திருக்கிறார். பிறப்பால் இந்துவாக இருந்தாலும் வங்க மொழியையும், கலாச்சாரத்தையும் நேசித்தவர். அதனாலேயே மதவெறியர்களை எதிர்த்து எழுதி வந்தார். வங்க தேச மரபில் மதவெறிக்கு இடமில்லை.
பெரிய கத்திகளைக் கொண்டு இருவர் தாக்கியதாக மருத்துவமனையில் இருக்கும் இவரது மனைவி தெரிவித்திருக்கிறார். டாக்கா புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இருவரையும் அக்கும்பல் கொடுரமாக தாக்கியிருக்கிறது.
காவல்துறை அதிகாரியான சிராஜுல்,”இந்தக் கொலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால் பேராசிரியர் ஹுமாயூன் ஆசாத்தை தாக்கிய கும்பல்தான் இதை செய்திருக்க கூடும்” என்று தெரிவித்திருக்கிறார்.
படுகாயத்துடன் அவ்ஜித்தின் மனைவி
பிப்ரவரி 17, 2004 அன்று இதே போல புத்தகக் கண்காட்சி சென்று திரும்பிய ஆசாத்தை இப்படித்தான் தாக்கினார்கள். பிறகு அவர் அதே வருடம் ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் இறந்தார். அவரது நாவல் ஒன்றில் இசுலாமிய மதவாதிகளை அம்பலப்படுத்தியும், கேலி செய்தும் எழுதியிருந்தார் என்று பல்வேறு இசுலாமிய மதவெறிய அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பையும், மிரட்டலையும் தெரிவித்திருந்தன. வங்கதேச பாராளுமன்றத்திலேயே இவரை கைது செய்து புத்தகத்தை தடை செய்ய வேண்டுமென்று மதவாதிகள் குரல் கொடுத்திருக்கின்றனர். இறுதியில் ஒரு மதவெறியரால் தாக்கப்பட்டு பிறகு அதன் பாதிப்பால் இறந்தும் போனார். இந்த வழக்கின் இன்றைய நிலை குறித்து தெரியவில்லை.
2013-ம் ஆண்டு துவக்கத்தில் 1971 போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் இ இசுலாமி மதவெறியர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென்று ஷாபாக் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக எழுதிய ரஜீப் ஹைதர் எனும் நாத்திக வலைப் பதிவரை ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி குண்டர்கள் 2013 -பிப்ரவரி 15ம் தேதி படுகொலை செய்தனர். ரஜீபின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மத பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
தற்போது அவ்ஜித் ராயின் மரணத்திற்கு பிறகும் பல்வேறு மக்கள் உடன் திரண்டு டாக்கா மருத்துவமனையின் முன் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேராசிரியர் அன்வர் ஹுசைன் பேசும் போது,” நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், கருத்து சுதந்திரம் அனைத்தையும் எதிர்ப்பதோடு, ஹுமாயூன் ஆசாத் போன்றோரை கொன்றவர்களுமே இந்த கொடூரத்தை செய்திருக்கின்றனர்” என்று பேசினார்.
கொலை செய்யப்பட்ட நாத்திக பதிவர் ரஜீப் ஹைதர்
டாக்கா பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்க தலைவரான லிடன் நந்தி, விரைவில் இந்தக் கொலையைக் கண்டித்து தீப்பந்த ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் ரொபாயத் பெர்டோஸ் பேசும் போது, ஆசிரியர்களும் மாணவர்களும் வெள்ளியன்று ஊர்வலம் போக இருப்பதாக கூறினார். இன்னும் பல்வேறு மாணவர் சங்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் கொலையைக் கண்டித்து போராடி வருகின்றனர்.
வங்கதேசத்தில் செயல்படும் இணைய புத்தக விற்பனை நிறுவனமான ரோகோமாரி, 2014 ஆரம்பத்தில் அவிஜித் ராயின் புத்தகங்களை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டது. ஃபேஸ்புக்கில் ஃபாரபி ஷைஃபர் ரஹ்மான் எனும் ஜமாத் ஏ இசுலாமி இயக்க மதவெறியர் மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்த விற்பனை தடை. அவிஜித் ராய் இசுலாமையும், நபியையும் இழிவுபடுத்துவதாகவும், ரோக்மாரி நிறுவனம் இத்தகைய நாத்திக புத்தகங்களை விற்றுவருவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார். ரோக்மாரி அலுவலகத்தின் முகவரியை கொடுத்து இசுலாமிய நண்பர்கள் அதை தாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அகமது ராஜிப் ஹைதருக்கு நடந்தது அவிஜித்துக்கும் நடக்குமென்றும் கூறினார். இத்தனைக்கும் பிறகும் கொலையை யார் செய்தார்கள் தெரியவில்லை என்று போலீஸ் தெரிவிக்கின்றது.
பொறியியலாளரான அவிஜித் ராய் அமெரிக்கா சென்று செட்டிலானவர். தத்துவம், அறிவியல் சிந்தனைகள், மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். (Among his books are Biswas and Bigyan (Belief and Science), Abishwasher Darshan (philosophy of atheism), Samakamita: Baigyanik ebong Samajmanastattik Anusandhan (Homosexuality: Scientific and socio-psychological intervention), Satantra Bhabna o Buddir Mukti (individual thoughts and freedom of thoughts) etc. )
இந்த வருடம் டாக்கா புத்தகக் கண்காட்சியில் அவரது இரு புத்தகங்கள் வெளிவருவதை ஒட்டி அவர் வங்கதேசம் வந்திருந்தார். வந்தவருக்கு மதவெறியர்கள் சமாதி எழுப்பி விட்டனர்.
சென்னை புத்தகக் கண்காட்சியின் போது எழுத்தாளர் பெருமாள் முருகனது நாவலை எரித்து, அவரை முடக்கி இந்துமதவெறியர்களும், கவுண்டர் சாதிவெறியர்களும் ஆட்டம் போட்டனர். தற்போதும் கரூரில் புலியூர் முருகேசன் எனும் எழுத்தாளரை தாக்கி அடவாடி செய்து வருகின்றனர்.
ஹூமாயூன் ஆசாத்
தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பொதுவுடமை, பெரியார் கருத்து தாக்கத்தினால் இன்னும் கொலை அளவுக்கு போகவில்லை. ஆனால் வங்க தேசத்தில் இத்தகைய முற்போக்கு மரபு இருந்தாலும் மதவெறியர்கள் இன்னும் இத்தகைய அடாவடிகளை செய்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர். இவையெல்லாம் இசுலாத்தில் இல்லை, குர் ஆன் அப்படிச் சொல்லவில்லை, நபிகள் அப்படி போதிக்கவில்லை என்று சலீப்பூட்டும் வாதத்தை இப்போதும் கேட்கலாம்.
ஆனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையுடன் வாழும் ஒரு இடத்தில் ஒரு நாத்திகருக்கோ இல்லை ஒரு கம்யூனிஸ்டுக்கோ இடமில்லை, அவர்கள் தமது கருத்துக்களை பேசக்கூடாது என்பதில் மிதவாத முசுலீம்கள் கூட ஏற்றுக் கொள்வர். இவர்கள் ஆயுதம் எடுத்து அடுத்தவரை தாக்குவதில்லை. ஆனால் கருத்தளவில் மதவெறியர்களுக்கு களம் அமைத்து கொடுக்கின்றனர். எப்படி குஜராத்தில் இந்துமதவெறியர்கள் முசுலீம்களை தாக்கும் போது பெரும்பான்மை இந்துக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தார்களோ அது போலத்தான் மிதவாத முசுலீம்களும் மதம் சார்ந்து ஜனநாயகத்தை எதிர்க்கின்றனர்.
வங்கதேசம் எனும் ஏழை நாடு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது. வால்மார்ட் ஏற்படுத்திய தீ விபத்தின் புகை மூட்டம் கூட இன்னும் அணையவில்லை. இத்தகைய சூழலில் இசுலாமிய மதவெறியர்கள் வங்கதேசத்தின் அறிவுச் செல்வங்களை, மண்ணின் மைந்தர்களை ஒவ்வொருவராக கொலை செய்கின்றனர்.
1971 போரில் வங்கதேச இளைஞர்களைக் கொன்று, பெண்களை வன்புணர்ச்சி செய்து ஆட்டம் போட்டதும் இதே மதவெறியர்கள்தான். இன்று அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பி வரும் வங்க தேசம் இன்னும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.
பிறப்பால் முசுலீம்களாக இருக்கும் ஒருவர் அவர் சமூகத்திலேயே நாத்திக பிரச்சாரம் செய்யும் உரிமையை பெற்றிருக்க வேண்டும், மற்ற மதத்தினரை காதலித்து மணமுடிக்கும் உரிமை வேண்டும், இசுலாமிய சடங்குளை தவிர்க்க நினைத்தால் அனுமதிக்க வேண்டும் போன்ற மதச்சார்பற்ற, ஜனநாயக உரிமைகளுக்காக போராட வேண்டும்.
இதன்றி இது இசுலாத்தில் இல்லை, குர்ஆன் பேசவில்லை என்று பேசினால் அவர்கள்தான் முசுலீம் மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்து சித்ரவதை செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள்.
வங்கதேச எழுத்தாளர் கொலைக்கு கண்டனம் தெரிவிப்போம். இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்துவோம்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்திலுள்ள அம்பரப்பர் மலையில்தான் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. இதற்காக மலையின் பக்கவாட்டில் இரண்டு கிலோ மீட்டர் நீள குகைப்பாதை வெட்டி அதற்குள் 130 மீ நீளம் 26மீ அகலம் 30 மீ உயரத்தில் ஒரு குகையை அமைத்து, அதனுள் உணர்கருவியை வைத்து ஆய்வுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், குகைக்கு வெளியில் 66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. இதில் முள்வேலி அமைத்து நீர் தேக்க தொட்டி, துணை மின்நிலையம், 300 குடும்பத்திற்கு தேவையான குடியிருப்புகள், ஆய்வு செய்யவரும் மாணவர்கள், விஞ்ஞானிகளுக்கு தனித்தனி விடுதிகளும், அலுவலகங்களும் அமைய உள்ளன. இன்றுவரை தமிழக மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெறாத நிலையிலும், ஆரம்பகட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையிலுள்ள சலீம்-அலி என்ற பறவைகளைப் பற்றி ஆய்வு நிறுவனம் மூலம் சுற்றுச்சூழல் அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஐ.என்.ஓ திட்டப் பணியிடம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இந்திய நியூட்ரினோ ஆய்வகம் அமையும் இப்பகுதிவாழ் மக்களின் நீண்ட்நாள் கோரிக்கைகளில் சாக்குலூத்து மெட்டுசாலை மற்றும் ராமக்கல் மெட்டுசாலை ஆகியவை முக்கியமானவை. இந்த சாலைகள் அமைக்கப்பட்டால் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் கேரள எஸ்டேட்டுகளுக்கு, வெறும் 6 கிலோமீட்டரில் சென்றுவிடலாம். நூற்றுக்கணக்கான விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளும் பயன்பெறும் இத்திட்டத்திற்கு வனத்துறை இன்றுவரை அனுமதி தர மறுத்து வருகிறது. “வனவிலங்குகள் அழிந்து விடும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி” என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால் 6 கிலோமீட்டர் சாலை அமைத்து மக்களுக்கு உதவ மறுக்கும் அரசின் கொள்கைகள் இதே வனப்பகுதியில் 5,000 டன் வெடிமருந்தை பயன்படுத்தும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்கு அனுமதியளித்திருக்கின்றன.
மக்கள் கேள்விகளும் – விஞ்ஞானிகளின் பதிலும்
பெரும் பொருள் செலவிலான இந்த ஆய்வின் மூலம் “பிரபஞ்சம் உருவான விதம், அதன் வயது போன்ற நுணுக்கமான கேள்விகளுக்கு துல்லியமான விடை கிடைக்கும். நிலநடுக்கம், சுனாமி அபாயங்களை முன்னரே தெரிந்துகொள்ளலாம். நம் நாட்டின் மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் முன்னேறலாம். உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயரும். உலக வரைபடத்தில் பொட்டிப்புரம் கிராமம் முக்கிய இடம் பெறும்’’ என்று நியூட்ரினோ ஆய்வுத்திட்ட விஞ்ஞானிகள் விளக்கக் கூட்டத்தில் கூறுகிறார்கள்
ஆனால் பகுதிவாழ் மக்களோ, “இப்பவே அடிவாரக் காடுகளை வேலிபோட்டு அடைத்து விட்டார்கள். ஆடு, மாடு மேய்ச்சல் பறிபோய்விட்டது. காட்டுக்குள் போனால் வனத்துறை அதிகாரிகள் விரட்டுவார்கள், ஆடு மாடு வளர்க்கவே முடியாது. நாளைக்கு வெடிவைத்து மலையைத் தோண்டினால் நிலத்தடி நீரோட்டம் மாறிவிடும். பாறை தூசிகளால் பயிர்களும் நாசமாகிவிடும். கிராம மக்களின் சுகாதார வாழ்வு சீர்கேடாகி விடும். பிழைப்புக்கு வழியில்லாத ஊரில் எப்படி குடியிருக்க முடியும்?” என்று பீதியில் உறைந்து மவுனமாகி நிற்கிறார்கள்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, “மூன்று வருடம், நடக்கும் சுரங்கக் கட்டுமான வேலைகளால் இப்பகுதியின் பல்லுயிர்வளம் சிதைந்து போகும். 5000 டன் வெடிமருந்துகளை பயன்படுத்துவதால் பாறை அடுக்குகளில் அதிர்வு ஏற்பட்டு 15 கி.மி சுற்றளவிலுள்ள (இடுக்கி, பெரியாறு, வைகை அணை உட்பட) பல அணைகள் சேதமடையும். மேலும், எதிர்காலத்தில் இம்மலைக்குகையை அணுக்கழிவுகளை பாதுகாக்கும் இடமாக மத்திய அரசு பயன்படுத்தும் அபாயமும் உள்ளது.” என்று எதிர்கால ஆபத்துகளை பட்டியலிடுகிறார்கள்.
ஃபெர்மிலேப் கண்காணிப்பகம்
மேற்கண்ட சந்தேகங்களுக்கு பதிலாக விஞ்ஞானிகள் தரப்பில், ‘’பொட்டிப்புரம் மலையில் கிரானைட் பாறைகள் இருப்பதால் பெரும்பாறைகளாக எடுக்கும் வகையில்தான் குகை வெட்டும் பணி இருக்கும். மேலும் நவீன தொழில் நுட்பக் கருவிகளையும் பயன்படுத்துவதால் பெரும் சப்தமோ, நில அதிர்வோ ஏற்படாது. இது கடினப் பாறையாக இருப்பதால் அதனுள் நீரோட்டம் இருக்க வாய்ப்பே இல்லை. இது ஒரு அடிப்படை ஆராய்ச்சிதான். இதில் அணு சம்பந்தமானது எதுவும் இல்லை. அணுக்கழிவு, அணுக்கதிர் வீச்சு என்பதெல்லாம் பொய், புரளி. மக்கள் பயப்படத்தேவை இல்லை. வேலிக்கு வெளியே ஆடுமாடு மேய்ப்பதில் நாங்கள் தலையிடமாட்டோம்.’’ என்று வாக்குறுதி தருகின்றனர்.
மக்கள் மத்தியில் இவ்வளவு ஆரவாரம் நடந்துகொண்டிருந்தாலும் மத்திய- மாநில அரசுகள் இதில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கின்றன. ‘மக்களின் முதல்வர்’ மீண்டும் அரியணை ஏறுவதற்காக பல்வேறு மாநில அரசுத் திட்டங்கள் காத்துக்கிடக்கும் போது, நியூட்ரினோ திட்டவேலைகள் மட்டும் தொடங்கிவிட்டன. அம்மாவோ அமைதி காக்கிறார்.
ஆனால் சி.பி.ஐ, சி.பி.எம்.கட்சியினர் இத்திட்டத்திற்கு திடீர் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். அடுத்த நாளே இவர்களின் ‘அறிவியல் இயக்கம்’ விஞ்ஞானிகளைக் கூட்டிவந்து ஊர்ஊராக விளக்கக்கூட்டம் நடத்தத் தொடங்கி விட்டது.
ஃபெர்மிலேப் இந்திய விஞ்ஞானிகளுடன் கலாம்.
“தோழர்களே’ தலையிடுவதால் காரியம் இல்லாமல் இருக்குமா?” என்ற கேள்வியுடன் நாம் விசயத்தை தோண்டித் துருவியதில் கிடைத்த தகவல்களை தொகுத்து தருகிறோம்.
நியூட்ரினோ துகள்:
நவீன அறிவியலின்படி அணுவினுள், நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் ஆகிய மூன்று துகள்களோடு கூடவே இருக்கும் ஒரு நுண்துகளுக்கு ‘என்ரிகோ பெர்மி’ என்ற இத்தாலிய விஞ்ஞானி 1933-ம் ஆண்டு ‘நியூட்ரினோ’ எனப் பெயரிட்டார். (இவருக்கு “அணுகுண்டின் தந்தை” – Father of Atom bomb என்ற பட்டமும் உண்டு). ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்க விஞ்ஞானி அண்ட வெளியிலிருந்து வந்து சேரும் நியூட்ரினோக்களை அடையாளம் காணும் பணிக்காக 2002-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
நியூட்ரினோ என்பது ஒரு மின்னூட்டமில்லாத நுண்துகள். எனவே பிற துகள்களின் மீது எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஒளியின் வேகத்துக்கு இணையாக பயணம் செய்யும் நியூட்ரினோதுகள் அனைத்து பருப்பொருள்களையும் எளிதாக ஊடுருவி பாய்ந்து விடுகிறது. அண்ட வெளியிலிருந்து ஒரு நொடிக்கு பல லட்சம் கோடி நியூட்ரினோக்கள் பூமியை நோக்கி வருவதாகவும், நம் உடலையும் கூட, ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற நியூட்ரினோக்கள் (எவ்வித பாதிப்புமில்லாம்ல) ஊடுருவிச் செல்வதாகவும் நவீன அறிவியல் கூறுகிறது.
ராபர்ட் வில்சன்
இதன் எதிர்வினையற்ற தன்மையாலும், பிற காஸ்மிக் கதிர்களின் இடையூறாலும் இதனை கண்டறிவது சவாலானதாக உள்ளது. எனவே காஸ்மிக் கதிர்கள் ஊடுருவ முடியாத மலைக்குகைக்குள் ஆய்வகம் அமைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர், விஞ்ஞானிகள். நியூட்ரினோ குறித்த இவ்வகை ஆய்வுகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மன், ஜரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இவ்வரிசையில் இந்தியாவும், சமீபத்தில் சீனாவிலும் சேர்ந்துள்ளன.
நார்வே நாட்டின் இயற்பியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்துவரும் திரு விஜய் அசோகன் என்பவர், “உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் நியூட்ரினோ ஆய்வின் ஒரு அங்கமாகவே இந்திய நியூட்ரினோ ஆய்வு நடக்க உள்ளது. இதற்காக அமெரிக்காவின் ‘ஃபெர்மிலேப்’ உடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.” என்று இந்தத் தகவலை வெளிப்படுத்துகிறார்.
ஆனால், INO விஞ்ஞானிகளோ, “ஃபெர்மிலேப் க்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இது இந்திய விஞ்ஞானிகள் மட்டுமே செய்லபடும் திட்டம்’’ என்று இரண்டு வரி பதிலைச் சொல்லி, இதை இல்லவே இல்லை என மறுத்து வருகிறார்கள்.
கொலைகாரனின் வீச்சரிவாள் ‘ஃபெர்மிலேப்’
வில்சன் ஹால்
சிகாகோ நகரில் சுமார் 68,000 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்துள்ள ‘ஃபெர்மிலேப்’தான், உலகின் முன்னணி நியூட்ரினோ ஆய்வகம். ‘அணுகுண்டின் தந்தையான என்ரிகோ ஃபெர்மி என்ற விஞ்ஞானியின் நினைவாகத்தான் அமெரிக்கா தனது தேசிய ஆய்வகத்திற்கு ‘ஃபெர்மிலேப்’ – எனப் பெயர் சூட்டியுள்ளது. ஹிரோசிமா, நாகசாகியில் விசிய அணுகுண்டு தயாரிக்க, அமெரிக்க செயல்படுத்திய ‘மன்ஹட்டன் திட்டத்தின்’ திட்டத்தலைவராக இருந்தவர் டாக்டர்- ராபர்ட். ஆர்.வில்சன். பெர்மிலேப் –ன் முகப்பு அடையாள கட்டிடம் இவரது பெயரால் ‘வில்சன் ஹால்’ என அழைக்கப்படுகிறது.
அமெரிக்க அரசின் பில்லியன் (100 கோடி) டாலர் முதலீடு, 1000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், உலகெங்கிலுமிருந்து வரும் பல்லாயிரக் கணக்கிலான ஆய்வு மாணவர்கள், விடுதிகள், சூப்பர்மால், கோல்ஃப் மைதானம், கார்ப்பரேட் அலுவலக வசதி, தொழில்வர்த்தக உறவு, பட்ஜெட் நிதிக்குழு என பகாசுரக்கம்பெனிகளின் கட்டுமானத்துடன் இயங்கும் நிறுவனம்தான் ஃபெர்மிலேப். தனது ஏகாதிபத்திய நோக்கத்தை கச்சிதமாக சாதித்துக் கொள்ள அமெரிக்கா ஏந்தியிருக்கும் ஒரு நவீன அறிவியல் கருவி இது.
நியூட்ரினோ ஆய்வில் ஃபெர்மிலேப்!
ஃபெர்மி லேப் வான் பார்வை
உயர் ஆற்றல் இயற்பியல் (High Energy physics) என்ற இயற்பியல் துறையின் பல்வேறு ஆய்வுகள் ஃபெர்மிலேபில் நடந்து வந்தாலும், நியூட்ரினோ ஆய்வுதான் பிரதானமாக உள்ளது. 1950 முதல் நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டுவரும் ஃபெர்மிலேப், நியூட்ரினோ ஆய்வுக்குரிய பல உயர்தொழில்நுட்பக் கருவிகளை வடிவமைத்து, சோதனை செய்து வருகிறதுத. ஆனாலும் நியூட்ரினோ பல செயல்பாடுகளை இன்னமும் துல்லியமாக கண்டறிய முடியவில்லை.
நியூட்ரினோக்களில், எலக்ட்ரான் நியூட்ரினோ, மியுவான் நியூட்ரினோ (muon), டவ் நியூட்ரினோ என்று மூன்றுவகை உண்டு ஒரு உணர்கருவியில் எலக்ட்ரான் நியூட்ரினோ தன்னை வெளிப்படுத்திவிட்டு போகும் பாதையின் இடையிலேயே மியூவான் நியூட்ரினோவாக மாறிவிடுகிறது. பிறகு எலக்ட்ரான் நியூட்ரினோவாக பழைய நிலைக்கு திரும்பிவிடுகிறது. இந்த நிலையற்ற தன்மையினால்தான் நியூட்ரினோவை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
எனவே நியூட்ரினோ ஆய்வை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுப்பதற்காக LBNE (Long baseline Neutrino Exporiment) என்ற புதியதிட்டத்தை ஃபெர்மிலேப் வகுத்துள்ளது. அதாவது, அண்டவெளியிலிருந்து வரும் நியூட்ரினோக்களுக்கு மாற்றாக, செயற்கையாக நியூட்ரினோக்களை உற்பத்தி செய்வது, (Neutrino Factry) இந்த நியூட்ரினோக்களை கற்றையாக, அடர்த்தியானதாக மாற்றுவது (Neutrino beam), இவ்வாறு அடத்தியூட்டப்பட்ட நியூட்ரினோக்களை உலகின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள உணர்கருவிகளில் (Observatory) செலுத்தி ஆய்வுகள் செய்வது. இதுதான் LBNE ன் சுருக்கமான திட்டவிளக்கம்.
ஏற்கனவே நியூட்ரினோ தொழிற்சாலைகளும், நியூட்ரினோ பீம்களும் தயார்நிலையில் உள்ளன. இவற்றிலிருந்து 700 கி.மீ. தூரத்திலுள்ள உணர்கருவிக்கு அடர்த்தி நியூட்ரினோக்களை அனுப்பி வெற்றிகரமாக 5000, 10,000 கி.மீ தூரத்துக்கு சோதித்தறிந்துள்ளனர். இதனை மேலும் வீரியப்படுத்தி LBNE திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
ஃபொமிலேப்பும் – இந்தியாவும்
மேற்கண்ட அதிநவீன திட்டத்தை செயல்படுத்த அமெரிக்க தேசிய ஆய்வுகழகமான பெர்மிலேப், உலக நாடுகளின் விஞ்ஞானிகள், ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஃபெர்மி லேபில் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள்
இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்துபல்கலைக்கழகம், கொச்சி, ஹைதராபாத், ஜம்மு பல்கலைக்கழகங்கள் மற்றும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், தவிர ஹைதராபாத் ஐ.ஐ.டி.யும், இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கடந்த 2009 முதல் இணைந்துள்ளன. டாக்டர் கிரி, குரோவர் குமார், ராஜிவ், மொகந்தா, ருக்மணி போன்ற 13 இந்திய இயற்பியல் விஞ்ஞானிகளும் இணைந்துள்ளதாக ஃபெர்மிலேப் இணையதளம் கூறுகிறது.
மேலும், ஆகஸ்ட் 2014 நிலவரப்படி இந்த கூட்டு ஆய்வுத்திட்டத்தில் இந்தியா உட்பட இத்தாலி, பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளும், பல நாடுகளைச் சேர்ந்த 525 விஞ்ஞானிகளும், 190 ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளதாக அந்த இணையதளம் தெரிவிக்கிறது.
இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் பரஸ்பர ஒப்பந்தப்படி சில இந்திய விஞ்ஞானிகள் பெர்மிலேப்பில் சில ஆண்டுகள் தங்கியிருந்து படிப்பும், பயிற்சியும் பெற்று வருகிறார்கள். இதுபோல ஃபெர்மிலேப் விஞ்ஞானிகளும் இந்திய ஆய்வகத்தில் பணிபுரியவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.
ஐ.ஐ.எஃப்.டி குழு
இதன் ஒரு அங்கமாகத்தான் டெல்லி பல்கலைக்கழகத்தின் தலைமையில் இந்திய நியூட்ரினோ திட்டத்திற்காக பெர்மிலேப் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள அதே பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்திய நியூட்ரினோ ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த LBNE திட்டத்தை அடுத்த வருடத்திற்குள் முடிப்பதற்கான P5 (Particle Physics Project Priortization Panel ) என்ற செயல்திட்டத்தை அமெரிக்க அணுசக்திதுறை கடந்த 2014 தயாரித்து வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த மொத்த நீண்டகாலத் திட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக டெல்லி பல்கலைக்கழகம் பெர்மிலேப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திலும் (INO) ஈடுபட்டு வருகின்றனர்.
நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும்..டும்…டும்
டாக்டர் G.ராஜசேகரன்
டாக்டர் G.ராஜசேகரன் என்பவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து பின்பு பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும், டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிலைத்திலும் பயிற்சி பெற்று, 1976-ல் சிகாகோ பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையிலுள்ள இந்திய கணித அறிவியல் துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்தவர்.
இவர் கடந்த 2003 ஜூன் 5-11-ம் தேதிகளில் அமெரிக்காவின் கொலம்பியா யுனிவர்சிட்டியில் நடந்த “சர்வதேச நியூட்ரினோ தொழிற்சாலைகள்’’ (ஆங்கிலம்) குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ‘இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டம்’ குறித்த 5 பக்க அறிக்கை வாசித்துள்ளார்.
இது, பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையை தேர்வு செய்வதற்க்கு முன்பு சிங்காரா மற்றும் டார்ஜலிங் ஆகிய இடங்கள் பரிசீலனையில் இருந்த போது தயாரித்த அறிக்கை.
அதில், இந்திய நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் என்பது “எதிர்காலத்தில் நியூட்ரினோ தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் அடர்த்தியூட்டப்பட்ட நியூட்ரினோக்களை பெறும் நோக்கத்தோடுதான் 30-50 டன் எடையுள்ள உணர்கருவி அமைக்கப்படுவதாகவும், LBNE திட்டத்திற்கு ஒத்துழைப்பாக இருக்கும்” என்று மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய – அமெரிக்க கூட்டு முயற்சியை விளக்கும் காட்சித் திரை படங்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மேலும் நியூட்ரினோ தொழிற்சாலைகள் அமையும் இடங்களான ஃபெர்மிலேப், CERN, KEK (ஜப்பான்) ஆகியவற்றிலிருந்து ஐ.என்.ஓ அமைவிடம் எத்தனை கிலோ மீட்டர் தூரம் என்பதை வரைபடமாகவும் வெளிப்படுத்தி உள்ளார். இதைவிட வெளிப்படையான ஒப்புதல் வாக்கு மூலத்தை யார் தர முடியும்?
நியூட்ரினோ ஆராய்ச்சியால் யாருக்கு பயன்?
“நிலநடுக்கம், சுனாமிகளை முன்னறிந்து பேராபத்தை தடுக்கலாம், உலக நாடுகள் பொட்டிப்புரத்தை திரும்பிப் பார்க்கும்” என்று இந்திய விஞ்ஞானிகள் ஜோசியம் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்க கப்பல் படைப் பிரிவு கற்றைகளைப் பயன்படுத்தி, 400 கி.மீ.தூரத்திலுள்ள ஆணு ஆயுத நீர்மூழ்கி கப்பலுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வெற்றிகரமாக சோதித்துவிட்டார்கள். தகவல் தொடர்புதுறையில் ஈடுபட்டுள்ள பன்னாட்டுக் கம்பெனிகள் இப்போதே அங்கு ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.
ஜப்பானிய விஞ்ஞானிகள், “எதையும் எளிதாக ஊடுருவிப் பாயும் நியூட்ரினோக்களை கொண்டு இதுவரை கண்டிராத அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கலாம்” என்று அறிவித்துள்ளனர். அதிநவீன நுண்ணோக்கி தயாரிப்பிலும், மருத்துவத்துறையில் பெரும்புரட்சி ஏற்படுத்தலாம்! பால்வெளியில் பிற உயிர்வாழும் கிரகங்களுக்கு தகவல் செய்திகளை அனுப்பி, புதிய கிரகங்களை கண்டறியலாம். என்று அடுத்தடுத்த புதிய இரைகளைத்தேடி, நாக்கை சுழட்டிக் கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகள் புறப்பட்டுவிட்டன.
இறுதியில் நியூட்ரினோ ஆராய்ச்சி என்பது ஏகாதிபத்தியங்களின் இராணுவ நலன்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் இலாப சுரண்டலுக்குமே பயன்படப் போகிறது. இதற்கு இத்தகைய பெரிய அளவு இந்திய மக்களின் பணத்தை செலவு செய்வது என்ன நியாயம்?
அடுத்த வேளை கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் மக்களின் அடிப்படை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தர முடியாமல், அவர்களது வாழ்வாதாரங்களை அச்சுறுத்தி அமெரிக்க திட்டத்தின்படி விஞ்ஞானத்தை வளர்க்க சேவை செய்யப் புறப்பட்டிருக்கின்றனர் இந்திய அரசும், இந்திய விஞ்ஞானிகளும்.
கடந்த நூறு ஆண்டுகளாக நடத்தப்பட்ட அடிப்படை அறிவியல் ஆய்வுகள் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் எந்த விதமான மேம்பாட்டையும் கொண்டு வந்து விடாத நிலையில், அவர்களுக்குப் புரியாத, எதிர்காலத்தில் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படும் ஆய்வகளுக்காக அவர்களது வாழ்விடங்களை அழிப்பது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது?
அப்படியே, அடிப்படை அறிவியல் புரட்சிகள் நடந்தாலும், அதனால் சாதாரண மக்களுக்கு என்ன பலன் என்பதை யாரும் விளக்குவதில்லை. இன்றைய, சந்தைப் பொருளாதார கோட்பாடுகளின்படி இந்த ஆய்வுகளின், அறிவின் இறுதிப்பலன் பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாப வேட்டைக்குத்தான் போய்ச் சேரும்; அவர்கள் சம்பாதிப்பதற்கு அறிவியல் சிகப்பழகு கிரீம், ஐ-ஃபோன் தொடு திரைகள் என திருப்பி விடப்படுமே தவிர, கிராமப்புற மக்களுக்கு தேவையான வாழ்வுக்கு போதுமான விவசாய நுட்பம், குறைந்த செலவில் வீடு கட்டுதல், வெப்ப மண்டல நோய்களை ஒழித்தல், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிப்படுத்துதல் போன்ற துறைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் என்ற நிலைதான் உள்ளது.
அமெரிக்க எஜமானின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் இந்திய அரசோ, தனது விசுவாசத்தை மேலும் வேகமாக வாலாட்டிக் காட்டுவதற்குத் தான் இந்திய நியூட்ரினோ திட்டத்தை இங்கு நிறைவேற்றத் துடிக்கிறது. ஒரு டாக்டர் பட்டத்திற்கு ஆசைப்பட்டு சில இந்திய விஞ்ஞானிகள் இதற்குப் பலியாகி கிடக்கின்றனர்.
இவ்வாறு அனைத்து வகையிலும் மக்கள் நலனைப் புறக்கணித்து விட்டு, அமெரிக்க விருப்பத்தின்படியிலான அறிவியல் வளர்ச்சிக்காக ஆய்வகம் அமைக்கிறார்கள்.
– மாறன், விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம் வட்டாரம்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திலிருந்து ‘இரகசிய’ ஆவணங்கள் திருடு போனதாக வெளியான செய்தி, சிலருக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆவணத் திருட்டு விவகாரத்தில், பெட்ரோலியம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சகங்களைச் சேர்ந்த ஐந்து அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களைச் ஐந்து பேர்களும், சாந்தனு சாய்க்கியா எனும் முன்னாள் பத்திரிகையாளர் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களவாடப்பட்ட ஆவணங்களில் பாராளுமன்றக் கூட்டத்தில் நிறைவேறவுள்ள நிதி நிலை அறிக்கை குறித்த இரகசியத் தகவல்களும், நிதி அமைச்சரின் உரைக்குத் தேவையான புள்ளி விவரங்களும் இருந்தனவாம். மேலும் எரிசக்தி, பெட்ரோலிய துறைகளில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள் மற்றும் இத்துறைகள் சார்ந்து இயங்கும் ஊக வணிகம் தொடர்பான முடிவுகள் குறித்த அடிப்படைக் குறிப்புகளும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோலிய அமைச்சக அலுவலகத்தின் நகலெடுக்கும் எந்திரத்தின் அருகில் இரகசிய ஆவணம் ஒன்றின் பிரதிகள் காணப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தில்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வலைவிரித்ததாகவும், தில்லி போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் தான் இந்த ஐவர் குழு பிடிபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது பற்றி தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் ஒவ்வொன்றிலும் மோடி அரசின் ’கறார்த்தனம்’ பற்றிய விவரணைகள் தவறாமல் இடம் பெற்று வருகின்றன. இதற்கிடையே, தில்லியின் புதிய முதல்வரான விளம்பர புகழ் கேஜ்ரிவால், ஆவணங்கள் களவு போன விவகாரத்தை தாம் சும்மா விடப்போவதில்லை என்று தானும் பயங்கர “டெரர்” பார்ட்டி தான் என்று தேசத்திற்கு அறிவித்துள்ளார்.
ஊடகங்களோ, அரசு அலுவலகங்களின் பாதுகாப்பை எப்படி பலப்படுத்துவது, எங்கெல்லாம் கேமரா வைப்பது, கள்ளச் சாவி தயாரிப்பைத் தடுப்பது எப்படி என்றெல்லாம் அரசுக்கு ஆலோசனை தெரிவித்து வருகின்றன. அதிகார வர்க்கமே சிந்திக்கத் தடுமாறும் கோணங்களில் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மவுண்ட்ரோட் மகாவிஷ்ணு, முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் ஆர்.கே ராகவனை வைத்து ஒரு நடுப்பக்க கட்டுரையை வெளியிட்டுள்ளது. அவரும் தனது போலீசு மூளையைக் கசக்கி திருட்டைத் தடுப்பது எப்படி என்று கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.
ஆவணத் திருட்டு குறித்த செய்திகள் வெளியாகும் இணையதளங்களுக்கு படையெடுக்கும் மோடி பக்தர்கள் படை, காங்கிரசால் வளர்த்து விடப்பட்ட கார்ப்பரேட் பெருச்சாளிகளுக்கு மோடி ஆப்பு வைக்கத் துவங்கியுள்ளதாக குதூகலத்துடன் மறுமொழி எழுதி வருகிறார்கள். இதே வேலையில் சில ஆங்கில ஊடகங்களும் ஈடுபட்டு மோடி பக்தர்களுக்கு ”டஃப்” கொடுத்து வருகின்றன. மோடியின் கறார்த்தனத்தை போற்றும் பக்தர்களோ, அம்மாவுக்காக தன்னையே சிலுவையில் அறைந்து கொண்ட ஷிகான் ஹுசைனியைப் பார்த்து வாய்பிளந்த தமிழக அமைச்சர்களின் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
மக்களைப் பொறுத்தவரை மத்திய அரசு அலுவலகத்திலிருந்து ஆவணத் திருட்டு என்ற செய்தியே கடும் அதிர்ச்சியாக அவர்கள் தலையில் இறங்கியுள்ளது.
மத்திய அரசு போடும் பட்ஜெட்டே முதலாளிகள் சங்கமான சி.ஐ.ஐமுன் நிறைவேற்றப்பட்ட பின் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்பது கடந்த சில பத்தாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மறைமுக நடைமுறை. மத்திய அரசு ஆண்டு தோறும் நிறைவேற்றும் நிதி நிலை அறிக்கையின் ஒவ்வொரு அம்சமும், கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானவை என்பது நேற்றுப் பிறந்த குழந்தை கூட அறிந்த அப்பட்டமான உண்மை.
மோடி அரசு பதவியேற்ற பின் கடந்த ஓராண்டுக்குள் கார்ப்பரேட்டுகளுக்கு கிடைத்துள்ள நன்மைகளை நூலாகத் தொகுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், அது ஆண்டுக்கணக்கில் ஓடும் மெகாத் தொடரையே விஞ்சிவிடும் என்பதால், பருந்துப் பார்வையில் ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
அதானி குழுமம் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான மின்சாரத்தை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மோடியே நேரடியாக பாகிஸ்தான் பிரதமரிடம் புரோக்கர் வேலை பார்த்தார்.
இரயில்வே போன்ற துறைகளில் பாதியும் மற்ற பொதுத் துறை நிறுவனங்களில் 100 சதவீதமும், கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்து விட்டார்.
88,000 கோடி ரூபாய்க்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்டுள்ள, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் 100% நேரடி அன்னிய மூலதனத்தை திறந்துவிட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளார்.
கார்ப்பரேட் முதலாளிகள் பல ஆயிரக் கணக்கில் நிலங்களை குவிக்கும் வகையில் நிலச் சீர்திருத்த சட்டதிருத்தத்தை நிறைவேற்ற முயன்று வருகிறார்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு வழங்கிய வரிச்சலுகையைவிட பல மடங்கு அதிகமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்.
அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட பிரதமரே நேரடியாகச் சென்று புரோக்கர் வேலை பார்த்ததோடு, அதற்கான முதலீடுகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ஆறாயிரம் கோடி கடனுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
விவசாயிகள் வாங்கும் டிராக்டர் கடன்களுக்கான வட்டி வீகிதத்தை விட மேட்டுக்குடியினர் வாங்கும் கார் லோன்களின் வட்டி விகிதங்கள் குறைவு.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்குதடையின்றி சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதை உத்திரவாதப்படுத்த வனச் சட்டங்கள் மற்றும் சுற்றுச் சூழல் சட்டங்களில் திருத்தம்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் துவங்க பல்வேறு அரசுத் துறைகளில் அனுமதி வாங்கிச் சிரமப்படுவதைத் தவிர்க்க ஒற்றைச் சாளர முறை
வங்கிக் கார்ப்பரேட்டுகள் கொழுக்க ஜன் தன் யோஜனா.
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, அதனால் முதலாளிகள் மனம் புண்பட்டுப் போவதைத் தடுக்க தொழிலாளர் நலச் சட்டங்களின் பற்கள் பிடுங்கப்பட்டது.
தொழிற்சாலையின் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்கு இருந்த வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டது.
எதை விட எதை எடுக்க என்ற திணறலோடு இந்தப் பட்டியலை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம்.
ஒட்டுமொத்த அரசும், அரசின் நடவடிக்கைகளும், அது முன்வைக்கும் நிதி நிலை அறிக்கை என்ற மோசடியும் முதலாளிகளுக்கே சாதகமாக இருக்கும் ஒரு நாட்டில், அரசின் ஆவணங்களைத் திருடித் தான் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏன் ஏற்படுகிறது?
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த தில்லி சாஸ்திரி பவனுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பும் அந்த தொடர்பை பராமரிக்கும் லாபியிங் நிறுவனங்களும் யாரும் அறியாத இரகசியங்கள் அல்ல. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சாந்தனு சாய்க்கியா என்ற முன்னாள் பத்திரிகையாளர் சொந்தமாக ஒரு லாபியிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பெட்ரோலியம், எரிசக்தி மற்றும் நிலக்கரி அமைச்சகங்களின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் மற்றும் அந்த அமைச்சகங்களின் கொள்கைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதாக சொல்லிக் கொள்ளும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ், டாடா உள்ளிட்ட பகாசுர தரகு முதலாளிகளே உள்ளனர்.
தரகு முதலாளிகள் குறிப்பிட்ட ஒரு லாபியிங் நிறுவனம் என்றில்லாமல், அரசின் நடவடிக்கைகளை முன்னரே உளவறிந்து தெரிந்து கொள்வதற்காக பல்வேறு லாபியிங் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டிருப்பதும் யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல.
காங்கிரசோ, பாரதிய ஜனதாவோ மாறி மாறி வரும் எந்த அரசாக இருந்தாலும் அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானதே என்றாலும், அது எந்தளவுக்கு சாதகமானது, அதில் தனக்கு என்ன லாபம், தனது போட்டியாளருக்கு என்ன லாபம் என்று அறிந்து கொள்ள தரகு முதலாளிகளும் பெரும் கார்ப்பரேட்டுகளும் பெரும் ஆர்வம் காட்டுவதுண்டு.
சி.ஐ.ஐ, அசோசாம் போன்ற அமைப்புகள் மூலம் முதலாளிகள் அரசின் கொள்கைகளை தங்களுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டு மக்களின் செல்வங்களைச் சூறையாட தமக்குள் சிண்டிகேட் அமைத்து செயல்படுகின்றன. என்றாலும், ஒவ்வொரு முதலாளியும் தனது போட்டியாளனை தீர்த்துக் கட்டி போட்டி நிறுவனத்தின் சந்தையைக் கபளீகரம் செய்தன் மூலமே உயிர்த்திருக்க முடியும் என்பது மூலதனத்தின் விதி.
2ஜி, காமன்வெல்த், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் போன்ற மக்களின் கவனத்திற்கு வரும் முறைகேடுகளும் கார்ப்பரேட் பகற்கொள்ளைகளும் அரசின் நேர்மை நாணயத்தின் விளைவாக வெளிப்பட்டவை அல்ல. அவை ஒவ்வொன்றும் கார்ப்பரேட்டுகளுக்கு இடையே நடக்கும் நாய்ச்சண்டையின் விளைவு. கனிமொழிக்கும் நீரா ராடியாவுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் வெளியானதும், அதைத் தொடர்ந்து 2ஜி ஊழல் பரந்துபட்ட அளவில் பேசு பொருளானதும் கார்ப்பரேட் சிண்டிகேட்டுகளிடையே நடந்த மோதலின் விளைவு தான்.
தற்போது நடந்திருக்கும் கைதுகளின் பின்னணியிலும், ’இரகசியங்களை’ முன்கூட்டியே அறிந்து கொள்ளத் துடிக்கும் கார்ப்பரேட்டுகளின் தவிப்பும், அதில் அவர்களுக்கிடையில் இருந்த போட்டியுமே வெளிப்படுகிறது. லாபியிங் நிறுவனங்கள் செயல்படுவதைத் தடுக்காத ஒரு நாட்டில், நாடாளுமன்ற விவாதங்களுக்கு முன்பே கார்ப்பரேட் கருவறையில் வைத்து நிதிநிலை அறிக்கை பூசிக்கப்படும் ஒரு நாட்டில், அதன் விவரங்களில் கொஞ்சம் கசிந்து விட்டதாக கூப்பாடு போடும் இந்த கேலிக்கூத்திற்கு காரணம் என்ன?
அடுத்து வரும் நாட்களில் கார்ப்பரேட்டுகளிடம் ’கட் அண்ட் ரைட்டாக’ நடந்து கொண்ட பிரதமர் சோட்டா பீம் பற்றிய பரபரப்புத் தகவல்களும், கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் இரகசியங்களை விற்ற காசில் எந்தெந்த நடிகைகளோடு ‘உல்லாசமாக’ இருந்தார்கள் என்ற ’அதிமுக்கியமான’ தகவல்களும் நாளிதழ்களின் பக்கங்களை அடைத்துக் கொள்ளப் போகின்றன. இந்த இடைவெளியில் எதிர் வரும் நிதி நிலை அறிக்கையில் கார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவின் வளங்கள் சல்லிசான விலையில் அள்ளி வழங்கப்படும்.
2ஜி, நிலக்கரி ஊழல்கள் பரபரப்பாக பேசப்பட்ட அதே காலகட்டத்தில் தான் வரலாறு காணாத நிதிச் சலுகைகள் வரிவிலக்குகள் என்ற பேரில் அள்ளி வழங்கப்பட்டன, அதே காலகட்டத்தில் தான் பல்வேறு மக்கள் விரோத சட்ட திருத்தங்கள் பெரும் விவாதங்கள் இன்றியும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படாமலும் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு முறை பெரிய ஊழல் புகார்கள் வெடித்த போதும் நடந்தது இது தான். இம்முறை நாம் வெறுமனே திருட்டைப் பற்றி மட்டும் பேசப்போகிறோமா அல்லது திருட்டிற்கு காரணமான அரசின் கொள்கைகளைப் பற்றிப் பேசப் போகிறோமா?
இந்தக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பாத்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அது செத்தவனுக்காக வந்த அழுகை அல்ல, பற்றியெறியும் ஆத்திரத்தை தணிக்க கண்கள் கொட்டிய நீர்.
ஊரைச் சுத்தி எங்கெ பார்த்தாலும் இவனோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மூஞ்சீல அடிச்சது. யோசிச்சுப் பார்த்தேன், இவன் செஞ்ச காரியத்துக்கு இவனைப் பெத்தவ கூட ஒரு சொட்டு கண்ணீரு வடிக்க மாட்டா. அப்படிபட்ட படுபாவிப்பயலு கண்ணீர் அஞ்சலி போஸ்டரெல்லாம் ஒரு கேடா?
ஊருல உள்ள பெரும் பணக்காரங்கள்ள இவனும் ஒருத்தன். பல ஏக்கர் சொத்துக்கு சொந்தக்காரன். கல்யாணம் பண்ணி 25 வருசமா பிள்ளை கிடையாது. அவம் பெஞ்சாதிய கூட்டிகிட்டு போவாத ஆசுபத்திரியும் இல்ல, அவளுக்கு பண்ணாத வைத்தியமும் இல்ல. ஆனா பிரச்சின இவன்கிட்டதான்னு ஊருக்கே தெரியும்.
சொத்து பத்து வச்சிருந்தாலும் தனக்கு வாரிசு இல்லேங்கறத ஒத்துக்க மனசில்ல. பிள்ள இல்லன்னாலே பொம்பளைங்கள மட்டும் சோதிப்பது பொதுவான ஊர் நீதியா இருக்கிற பழக்கத்த அவன் மட்டும் மாத்துவானா என்ன? அதை நல்லா பயன்படுத்திக்கிட்டான்.
மூத்த பொண்டாட்டிய மலடின்னு முத்திர குத்திட்டு சொத்துக்கு வாரிசு வேணுமின்னு நடாயிய (நடு ஆயி) கட்டிக்கிட்டான் இந்தப் பாவிப்பய. இவங் கையாலாகதனத்தால இன்னிக்கு வாழ வேண்டிய வயசுல எல்லாத்தையும் எழந்துட்டு எதிர்காலம் என்னன்னு தெரியாம கேள்விக்குறியாகி நிக்கிறா ‘நடாயி’. நாலு ஆணு; மூணு பொண்ணு – இவங்களுக்கு மத்தியில பொறந்ததால இவ பேரு நடாயி.
நடாயியோட மூத்த அக்கா புருசன் செத்துப் போக, ரெண்டு பொம்பளப்பிள்ளையோட பெத்த வீட்டுக்கே அவ திரும்பி வந்து நாலு வருசமாச்சு. மூத்த அண்ணனுக்கு பஸ் டிரைவர் வேலை. நிதானமெல்லாம் பஸ்சுலேர்ந்து எறங்கற வரைக்கும் தான், வீட்டுக்கு வரும் போது நிதானத்த டாஸ்மாக்குல வித்துட்டு வந்துருவான். பொண்டாட்டி பிள்ளைங்க இருந்தும் வீட்டுக்கு பொறுப்பில்லாதவன்.
சின்ன வயசுலேயே கால பறிகொடுத்து கட்டக்கால் வச்சுகிட்டு வாழ்க்கை கெடைக்குமாங்கற கனவோட கல்யாண வயச கடந்தவன் இன்னொரு அண்ணன். பள்ளிக்கூடத்துல முதல் மார்க்கு வாங்கியும் பணம் கொடுத்தாதான் நல்ல படிப்பு படிக்க முடியுங்கற நெலமைக்கி பலியானவன் தம்பி. பேருக்குப் பின்னாடி போட மட்டுமே ஆகிற பார்ட் டயம் படிப்பும் மத்த நேரத்துல வாயிக்கும் வயித்துக்குமான உதிரி வேலையுமா அல்லாடிகிட்டிருந்தான் தம்பி. இத்தன கஷ்டம் குடும்பத்துல இருந்தாலும் காதலில் உறுதியா இருந்தா தங்கச்சி.
நடாயியோட குடும்பம் தத்தளிச்சுகிட்டு இருந்த நெலமைய தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு நடாயிக்கு வாழ்க்கை கொ(கெ)டுக்கறேன்னு வந்தவன்தான் இப்ப கண்ணீர் அஞ்சலி போஸ்டருல மொறைச்சிப் பார்க்கிறவன்.
ஊர்ல கிராமத்துல பெத்தவங்களுக்கு என்னத்த பொறுப்பு; ஆண்டவன் அவங் கடமைக்கு புள்ளைய குடுத்தான், நம்ம கடமைக்குப் பெத்துப் போட்டாச்சி. ஏதோ கால் வயிறோ அரை வயிறோ சோத்தை மட்டும் போட்டு வளத்து விட்டா போதும். கை, கால் நல்லாருந்தா அதுங்க தானா பொழச்சுக்குன்னு நெனச்சாங்க பெத்தவங்க. படிப்பு, வரதச்சனை, வேலையின்னு பிள்ளைங்க வாழ்க்கைக்கு இவ்வளவு நெருக்கடி வரும்னு யோசிச்சிருக்க மாட்டாங்க. யோசிக்கவும் தெரியாது.
குடும்ப நெருக்கடிகள் ஒண்ணு கூடி நடாயி தலையில இடியா விழுந்தது.
அம்பது வயசான ஆம்பளைக்கும் இருவத்தி அஞ்சு வயசான நடாயிக்கும் நடக்குற கல்யாணத்துல எந்தத் தடையும் வந்துரக் கூடாதுன்னு ரகசியமா பேசி முடிச்சுட்டு, மொத தாரத்துக்கு மூணு நாளைக்கி முன்னாடிதான் சொன்னாங்க. அவங்க பொறந்த வீட்டுக்கும் இதப்பத்தி தெரியப்படுத்தல. நெருங்கிய உறவுக்காரங்க மட்டும் கலந்துகிட்டு ஒரு கோயில்ல வச்சு காலையில 7 மணிக்கி கல்யாணம் முடிச்சது. ஓட்டல்ல சாப்பாடு முடிஞ்சு 10 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுச்சு கல்யாணக் கும்பல்.
கல்யாணம் முடிஞ்ச சில மணி நேரத்துக்கெல்லாம் முதல் தாரத்து வீட்டுல விசயம் தெரிஞ்சு அவங்க சொந்தபந்தம் ஊர்க்காரங்கன்னு பெரிய கூட்டமா வந்தாங்க. “என் சம்மதத்தோடதான் நடக்குது எதுவும் பிரச்சனை பண்ணாதீங்க”ன்னு சொல்லிக் கொடுத்தத, சொல்லிக் கொடுத்தபடி சொல்ல வச்சிட்டாங்க. மலடின்னு பட்டத்த சொமத்தி இருவத்தஞ்சி வருசமா படாத பாடெல்லாம் படுத்தினவங்க இப்படி பேசலைன்னா என்னெல்லாம் செஞ்சிருப்பாங்களோ. ஆனா, நம்பிக்கையா வாழ அனுப்பிச்ச பொண்ணோட வாழ்க்கை கண்ணு முன்னாடி பறிபோச்சேங்கற ஆத்தரம் அடங்கல அவங்களுக்கு.
நடாயி தலையில இடியா இறங்கிச்சு இந்த சேதி. அவ வயசுக்கு எல்லாருக்கும் வரும் அதே கல்யாணக் கனவுகளோட தான் அவளும் இருந்திருப்பா
“பிள்ள பெத்துக்க தகுதி இல்லாத மலட்டுப் பய நீ தான், என் தங்கச்சிதாண்டா உன்ன ஒதுக்கி வைக்கணும். ஒண்ணும் தெரியாத பொண்ண பயமுறுத்தி ஒத்துக்க வச்சிருக்கியா. இத இப்புடியே விட்டுட்டு போயிடுவோம்னு நினைக்காதே. யாருக்கு பிள்ள பெத்துக்க முடியலன்னு கோர்ட்டுல போயி தெரிஞ்சுக்குவோம். இன்னும் ஒரு மணி நேரத்துல போலீசோட வந்து ஒம்மானத்த சந்தி சிரிக்க வைக்கல, நாங்க ஒரு பக்கத்து மீசைய எடுத்துக்கிறோண்டா”ன்னு ஊரே பாக்க சத்தம் போட்டபடி வண்டிய எடுத்துகிட்டு கிளம்பிட்டாங்க.
தன்னோட ஆண்மை மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சு இருவத்தஞ்சி வருசமா போராடி தோத்தவன் அவன். வைத்தியத்தையும், மருந்தையும் கூட மொத தாரத்து தலைல சொமத்தி ஊருக்குள்ளே மீசைய முறுக்கிக்கிட்டு அலைஞ்சவன். அசட்டு நம்பிக்கையில ரெண்டாவதா கல்யாணம் செஞ்சுக்க துணிஞ்சி நின்னவனுக்கு முத தாரத்து குடும்பத்த சேர்ந்தவங்க சத்தம் போட்டுப் போன பின்னே திகிலடிச்சுப் போச்சு. அவங்க சொன்னா மாதிரி கோர்ட்டு கேசுன்னு போனா ரெண்டாவதா வந்தவ குடும்பத்து முன்னாடியும் ஊர் முன்னாடியும் அம்பலப்பட்டு போயிருவோமோ என்ற பயந்துட்டான்.
பவிசு கௌரவத்துல விட்டுக்கொடுக்காதவன் மலட்டுப்பட்டம்தான் கதின்னா என்ன செய்வான்?
“அய்யோ பாவமே எந்த ஊருல இப்படி ஒரு அநியாயம் நடக்கும். கடவுளே நீ இருக்கியா இல்லையா. எம்பது வருச வாழ்க்கையில இதுபோல நான் பாத்ததே கெடையாதே” என்று ஆளாளுக்கு ஆயாசத்த ஆச்சர்யமா பேசிட்டிருந்தாங்க கரும்புக் கொல்லையில.
காலையில கட்டுன பட்டுப்புடவ கசங்காம, புதுத்தாலி, மஞ்சள் குங்குமமுமா மணவறைக் கோலம் கலையாமல் இருந்த நடாயி தலையில இடியா இறங்கிச்சு இந்த சேதி. அவ வயசுக்கு எல்லாருக்கும் வரும் அதே கல்யாணக் கனவுகளோட தான் அவளும் இந்தக் கல்யாணத்துக்கு முந்தி இருந்திருப்பா. ஆனா நெனச்ச வாழ்க்கை, பிடிச்ச வாழ்க்கை எல்லாம் பொம்பளைக்கி கெடைக்கிறது அவ்வளவு சுலபமில்லங்கறது தான் இவ விசயத்திலும் நடந்தது.
இந்த கொடுமைய தடுத்து நிறுத்த தோணாம தாலி அறுப்பாங்களா இல்லையாங்கற உச்ச கட்ட சீனுக்காக காத்திருந்தாங்க சில பேரு.
விரும்பாத இந்த வாழ்க்கை போனதை நெனச்சு சந்தோசப்படுவாளா?, இருந்ததும் போச்சேன்னு வருத்தப்படுவாளா? சில மணி நேரத்துக்கு முன்னாடி வந்துபோன வாழ்க்கை மேல் என்ன உணர்வு வரும் அவளுக்கு? எந்த உணர்ச்சியக் காட்ட முடியும் அவளால? உணர்ச்சியற்ற சிலையாய் எதிர்காலம் என்னவாகும் என்ற கலவரப்பட்ட முகத்தோடு கருங்கல்லாதான் நின்னா.
ஊர் கூடியது, கல்யாண வீடு எழவு வீடா மாறியது. கல்யாணப் பொண்ணு காட்சிப்பொருளா மாறிப் போனா.
“சொத்துபத்த ஆள பிள்ள வேணுன்னு என்னா ஆசையா கல்யாணம் பண்ணினான். கொஞ்சம் புத்திய செலுத்தி இருக்காமே, இப்படி அல்ப ஆயிசுல போய்ட்டானே பாவிப்பய”
“யாரு விட்ட வாசாப்போ அன்னைக்கே கட்டி, அன்னைக்கே அறுத்துட்டா. போன பிறவியில என்ன பாவம் செஞ்சாளோ”
“அந்தப் பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருந்துருக்கு, சரியா சாதகம் பாக்காம இப்படி பண்ணிட்டாங்க”
“தாலி கட்டிட்டான், இனி பொண்டாட்டி இல்லேன்னு ஆயிடுமா? இனிமேட்டு எப்ப பாக்கப் போறா. கிட்டக்க வந்து அழுக விடாமெ வீட்டுக்குள்ளேயே எதுக்கு உக்கார வச்சுருக்காங்க.”
எழவுக்கடையில ஊர் சனங்களால அவளுக்கு எழுதப்பட்ட நீதி இப்படிதான் இருந்துச்சு. இந்த கொடுமைய தடுத்து நிறுத்த தோணாம தாலி அறுப்பாங்களா இல்லையாங்கற உச்ச கட்ட சீனுக்காக காத்திருந்தாங்க சில பேரு.
நடாயிக்கு இன்னொரு கலியாணம் செஞ்சு வச்சா அவ வாழ்க்கை சரியாகுமின்னு பெத்தவங்களுக்கு தெரியாதா?
இரவு ஏழு மணிக்கு அடக்கம் செய்ய ஏற்பாடு செஞ்சதும் மொதோ தாரத்துக்கு தாலியறுக்கும் சடங்கு ஆரம்பமாச்சு. “சின்ன பொண்ணு பாவம், எதுவும் செய்ய வேண்டாம். மனசாட்சி வேணும் நமக்கும். காலையில தாலி கட்டி சாயந்தரம் அறுக்குறது ரொம்ப கொடுமை. இன்னும் ரெண்டு நாள் போகட்டும். அந்தப் பொண்ணையே கழட்டிட சொல்லலாம்”னு கூடியிருந்த ஆம்பளைங்க முடிவெடுத்தாங்க. அந்த அசிங்கத்த பெரிய மனசு பண்ணி விட்டுக் கொடுத்ததா நெனச்சாய்ங்க அந்த பெரிய மனுசனுங்க.
நடாயி நெலைமை அந்தப் பெரிய மனுசங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கு வருமா? வந்தாலும், இதே மாதிரித் தான் பெருந்தன்மையா பேசுவாங்களா? ரோசங்கெட்ட புழுவுக்கும் கூட நாலு குத்து சேர்த்துக் குத்தினா கோபம் வருமே. அந்த கோபங்கூட சம்பந்தப் பட்டவங்களுக்கு இல்லையே. நடந்தது கல்யாணமும் இல்ல, அவ பொண்டாட்டியாவும் இல்லன்னு ஊருக்கே தெரிஞ்சு தான் இருந்துச்சு. ஆனாலும் செஞ்ச தப்புக்கு விதியை காரணம் காட்டி அமைதியா இருந்தது தான் ஊர்க்கார பெரியமனுச நியாயம்.
கூடப் பொறந்தவன் செத்துப் போன இழப்பை விட அவன் விட்டுப் போன கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து பெரிசாச்சே. செத்தவனோட தம்பிக்காரனுக்கு போஸ்டரடிக்கிற செலவை விட அண்ணங்காரனால வரவு பல மடங்கு அதிகம். அதனால தான் வருசத்துக்கு ஒருதரம் தன் துக்கத்த வண்ண வண்ணமா கண்ணீர் அஞ்சலி போஸ்டறடிச்சு ஊரு பூரா வளைச்சு வளைச்சு ஒடறான் தம்பிகாரன்.
நடாயி வாழ்க்கைக்கு சவக்குழி தோண்டி நாலு வருசமாச்சு. அவளுக்கு ஏதாவது வழி செய்யறதா நெனச்சு சொத்துல பங்கு வேணுன்னு கோர்ட்ல கேஸ் போட்டாங்க. எதுவும் சட்ட பூர்வமா நடக்கல. கட்டபஞ்சாயத்து பேசி ஒன்ட்ர லச்சம் பணம் கொடுத்து ஒதுக்கி விட்டுட்டானுங்க. நடாயிக்கு இன்னொரு கலியாணம் செஞ்சு வச்சா அவ வாழ்க்கை சரியாகுமின்னு பெத்தவங்களுக்கு தெரியாதா? ஆனா, திரும்பத் திரும்ப ஊரு, மரியாதை, சாதி, சனமுன்னு அவ வாழ்க்கையை கெடுத்த சமூகத்துக்கு பயந்து அதுக்குள்ளேயே இன்னமும் சுத்தி வாராங்க. அவங்க ஊருல விதவைங்கன்னா ஆயுசு பூரா அடக்கவொடுக்கமா ஆயுள் கைதியா சுத்தி வரணும்.
–
நடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு?
காட்டுமன்னார்குடி வட்டம் காவாலக்குடி கிராமத்தின் வெள்ளாற்று படுகையில் 10 ஆண்டுகளாக மணல் அள்ளியதால் ஆறு இறால் குட்டை போல் மாறி நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விவசாயம் பாதிப்படைந்தது.
மணல் குவாரியை மூடக் கோரி மக்கள் போராட்டம் (கோப்புப் படம்)
அதே வெள்ளாற்றுப் படுகையைச் சேர்ந்த கார்மாங்குடி கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் சேர்ந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உதவியுடன் அப்பகுதியில் இயங்கி வந்த சட்ட விரோத மணல் குவாரியை முற்றுகையிட்டு மணல் அள்ளுவதை நிறுத்தியதை அறிந்த காவாலக்குடி, சாந்திநகர் மக்கள் தங்கள் பகுதி குவாரியை முற்றுகையிட்டு குவாரியை தற்காலிகமாக மூடினர்.
ஆனால், அப்பகுதி மக்களின் மீது “அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக” PWD செயற்பொறியாளர் வெற்றிவேல் கொடுத்த பொய்ப் புகாரை ஏற்று காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது; மேலும் கு.வி.மு.ச 107 சட்டப்பிரிவின் கீழ் சார் ஆட்சியர் விசாரணை நடந்து வருகிறது.
இதனைக் கண்டித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக 24-2-2015 காலை 11 மணி அளவில் “சர்க்காரும், சட்டமும் யாருக்காக?” என்ற கேள்வியுடன் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் காவாலக்குடி, சாந்திநகர் பகுதி மக்களை ஒருங்கிணைத்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சிதம்பரம் பகுதி மாவட்ட இணைச்செயலாளர் வழக்கறிஞர் சி.செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவாலக்குடி, சாந்திநகர் மக்கள் தங்கள் பகுதி குவாரியை முற்றுகையிட்டு குவாரியை தற்காலிகமாக மூடினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, கடலூர் மாவட்டச் செயலாளர் செந்தில், கடலூர் மாவட்ட பொருளாளர் செந்தாமரைகந்தன் மற்றும் உறுப்பினர்கள் முஜிபூர் ரஹ்மான், செல்வக்குமார், ஜோதி ராமகிருஷ்ணன் மற்றும் சாந்தி நகர் காவாலக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.
மக்களை அச்சுறுத்தும் வகையில் காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மதியம் 01.00 வரை முழக்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்களின் கண்டன உரைகளுடன் எழுச்சியோடு நடைபெற்றது.
முன்னதாக காவல்துறை டி.எஸ்.பி சுந்தரவடிவேல், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் மைக்செட் வைக்கக் கூடாது” என நிபந்தனை விதித்தார் அதை மீறி தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காவல்துறை டி.எஸ்.பி சுந்தரவடிவேல், “ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் மைக்செட் வைக்கக் கூடாது” என நிபந்தனை விதித்தார் அதை மீறி தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கண்டன உரைகள் :
வழக்கறிஞர் செந்தில், கடலூர்
ஏற்கனவே 100 அடி ஆழம் இருந்த போர் இன்று அளவுக்கதிகமாக மணல் அள்ளியதால் 200 அடி போட்டாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஏற்கனவே மின்சார பிரச்சனையால் விவசாயிகள் சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்; இருக்கும் நிலத்தடி நீரையும் நாம் இழக்க முடியாது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக 107 பிரிவில் வழக்கு போடச் சொல்லி யார் காவல்துறையிடம் புகார் கொடுத்தது?
ஆர்.டி.ஓ.-வைப் பார்க்க காலை 10 மணிக்கு வரவழைத்து மாலை 4 மணி வரை காத்திருக்க வைத்து மக்களை அலைக்கழிக்கிறார்கள்.
அதிகாரிகள் யாரும் சட்டத்தை மதிக்காதபோது நாம் ஏன் சட்டத்தை மதிக்க வேண்டும்
செங்குட்டுவன், காவலக்குடி வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம்
அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வந்தால் ஆர்.டி.ஓ, “ஊருக்கு ஏதாவது செய்கிறோம். மணல் அள்ள விடுங்கள்” என்று கேட்கிறார். இவர் என்ன லஞ்சப் பணத்தை வைத்து எங்கள் ஊருக்கு நல்லது செய்யபோகிறாரா?
இந்த PWD இன்ஜினியர், 500 லோடு மணல் எடுத்துவிட்டு 100, 150 லோடு என்று கணக்கெழுதுபவர், எங்கள் மீது பணிசெய்யவிடாமல் தடுத்ததாக பொய் வழக்கு போட வைத்தார்.
“ஆற்றில் டெட்பாடி கிடக்கிறது” என்று அதை ஒரு கொலை வழக்குகாக புகார் செய்ய காவல் நிலையம் சென்றால், “அது என் எல்லை இல்லை” என பேசும் ஆய்வாளர் மணல் பிரச்சனை என்றவுடன் உடனே வழக்கு போடுகிறார்.
இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். சட்ட விரோத மணல் குவாரியை மூடும் வரை போராட்டம் தொடரும்.
கலையரசன், மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம்
ஆற்றில் விதிமுறைகளுக்கு மீறி மணல் அள்ளப்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கொள்ளைக்கு துணை போகிறார்கள். மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் வாழ்வதாரத்திற்காக போராடினால் “பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக” வழக்கு போடுகிறார்கள் என்றால் சட்டமும், சர்க்காரும் யாருக்காக என்று தெரிவதற்காக இந்தக் கண்டன ஆர்பாட்டம். இந்த வழக்குகளுக்கெல்லாம் பயந்து இந்த வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் பின்வாங்காது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள்
கோபாலகிருஷ்ணன் ஆசிரியர் ஓய்வு (சாந்தி நகர்), வெள்ளாறு பாதுகாப்பு இயக்கம்
மணல் அள்ளுவதால் ஊருக்கு பாதிப்பு என்று போராடினால் ஊரில் பிரிவினைவாதிகளை வைத்து மணல் அள்ள வேண்டும் என்று போராட வைத்து பொய் வழக்கு போடுகிறார்கள். கொள்ளைக்காரனுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள்.
“இன்னும் கொஞ்சம் மணல் தான் அள்ள வேண்டும், அள்ள விடுங்கள்” என PWD அதிகாரி கோட்கிறார். மக்களை போராட தூண்டியதாக என் மீது பொய் வழக்கு போட்டு என்னை அழைத்துச் சென்ற போலீஸ், மக்கள் ஒன்று திரண்டவுடன் என்னை இறக்கி விட்டுச் செல்கிறார்கள். நான் என்ன கொள்ளையா அடித்தேன்?
மணல் கொள்ளை அடித்தவனை விட்டுவிட்டு போராடும் மக்கள் மீதும், துணை நின்ற வழக்கறிஞர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மணல் குவாரியை மூடும் வரை போராடுவோம்.
முருகானந்தம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சட்டம் சட்டம் என்று பேசும் அரசு மூன்று அடிக்கு அனுமதி வாங்கி 35 அடி மணல் அள்ளுபவனை ஒன்றும் கேட்காமல் போராடும் மக்களை மட்டும் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள். எனவே, இந்தச் சட்டத்தை நம்பி இனி பயனில்லை. மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால்தான் இந்த அநீதிகளுக்கு முடிவுகட்ட முடியும்.
வெங்கடேசன், விவசாயிகள் சங்கம், கூடலையாத்தூர்
அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் மணல் கொள்ளையை தடுக்கவில்லை. ஆனால் நாங்கள் போராடினால் பொய் வழக்கு போடுகிறார்கள். 2020-ம் ஆண்டில் நிலத்தடி நீர் வெகுவாக குறையும் என அதிகாரிகளே கூறிவிட்டு மணல் அள்ளச் சொல்லுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. உயிர் போனாலும் விடமாட்டோம்.
வழக்கறிஞர் ராஜு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மாநில ஒருங்கிணைப்பாளர்
பொதுப்பணித்துறை தான் மணல் அள்ளுகிறது என்பது பொய்.
“குத்தகைதாரர் அனுமதிக்கப்பட்ட அளவை விட எல்லை தாண்டி மணல் எடுக்கிறார்கள்” என கூறினால், “அது PWD துறை அதிகாரிகளின் தொழில் நுட்பம் சார்ந்த விஷயம்” என கோட்டாட்சியர், சார் ஆட்சியர் கூறுகிறார். ஒரு வழக்கறிஞரான எனக்கு தெரிந்த விஷயம் உங்களுக்கு, அதிகாரிகளுக்கு தெரியாதா?
வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிக்க உத்தரவு போட்டுவிட்டு ஆற்று மணலை கொள்ளையடிக்கிறார்கள். அதிகாரிகள் துணையோடுதான் கிரானைட் ஊழல், தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை இவை அனைத்தும் நடைபெறுகின்றன.
அரசியலமைப்பு சட்டம் தோற்றுப் போய்விட்டது. போராட அனுமதி இல்லை, பேச அனுமதி இல்லை, என்ன ஜனநாயகம்?
ஆற்றில் தண்ணீர் விட்டால் மணல் அள்ள முடியாது என்பதற்காக ஆற்றுக்கு தண்ணீர் வராமல் கடலுக்கு தண்ணீரை திருப்பும் PWD பொறியாளர் வெற்றிவேல் சோற்றில் உப்புபோட்டு தின்கின்றாரா?
பென்னிகுயிக் என்ற ஆங்கில பொறியாளன் தன் சொந்தக் காசைப் போட்டு தமிழனுக்கு அணை கட்டினார். அவர் பொறியாளர்.
வரவு கணக்கு பாராமல் மக்களுக்கு பணி செய்ய அதிகாரிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதிகாரி என்றால் சகாயம் போல் இருக்க வேண்டும். ஜெயாவை, தமிழக அரசை எதிர்த்து நின்று விசாரணை நடத்துகிறார். இங்குள்ள ஆட்சியர், சார் ஆட்சியர் மேலிடம் என சொல்லி மணல் கொள்ளைக்கு துணை போகிறார்கள்.
“எங்களால் நேர்மையாக இருக்க முடியவில்லை, மக்களுக்கு எதிராகத் தான் செயல்பட முடியும்” என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள் பணிக்கு வாருங்கள்.
திறமையானவர்கள், தைரியமானவர்கள், நேர்மையானவர்களாக இருக்கும் அதிகாரிகள் மட்டுமே மக்களுக்கு பயன்படுவார்கள்.
சகாயத்தால் கிரனைட் கொள்ளைக்கு காரணமான அதிகாரிகள், கொள்ளையர்களை தண்டிக்க முடியாது. ஆனால் மக்களுக்கு ஆதாரத்துடன் அடையாளம் காட்ட முடியும்.
அரசியல் கட்சிகள் முதல் அதிகாரிகள், நீதிமன்றங்கள் வரை அனைத்து நிர்வாக அமைப்பும் சீர்கெட்டு போயுள்ள நிலையில் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை. மணல் கொள்ளைக்கு எதிராக எங்கு மக்கள் போராட்டம் நடந்தாலும் அவர்களுக்கு நாங்கள் துணை நிற்போம்.
***
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
கண்டன ஆர்ப்பாட்டத்தை காண வந்து உரைகளை கேட்ட அதிகாரிகள் அவமானத்தால் சுவர்களுக்கு பின் பதுங்கி நின்றனர். மக்கள், கருத்துகளை ஆரவாரத்துடன் வரவேற்று கைத்தட்டினர்.
பொதுவில் இந்த ஆர்ப்பாட்டம், “அரசியல் அமைப்பின் தோல்வியையும், மக்கள் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே உரிமைகளை பெறமுடியும்” என்பதையும் உணர்த்துவதாக அமைந்தது.
பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் உரையை கவனமாக கேட்டனர்.
அருகில் இருந்த கடைக்காரர்கள், “பட்டா கொடு, அத கொடு என அனைத்து கட்சினரும் புலம்புவதைதான் இது வரை கேட்டு வந்தோம். முதல் முறையாக நல்ல பேச்சை கேட்டோம்” என கருத்து தெரிவித்தனர்.
RDO விசாரணைக்கு வந்து இருந்த 20 நபர்களுடன் காவாலக்குடி, சாந்தி நகர் கிராம மக்கள் அனைவரும் அங்கேயே தங்கி விட்டனர். மணல் அள்ள வேண்டும் எனச் சொன்ன வி.சி உட்பட 20 பேரும் “107 வழக்கு விசாரணைக்கு ஜாமீன் கொடுக்கப் போகிறோம்” என தயாராக வந்து இருந்தனர்.
நமது வழக்கறிஞர்கள், “காவாலக்குடி மக்கள் மூலம் அவர்களுக்கும் நாம் சேர்த்து வழக்கு நடத்தலாம். RDO விடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டோம் என ஜாமீன் கொடுத்தால் வரும் காலத்தில் போலீசார் உங்களுக்கு சிக்கல் கொடுப்பார்கள்” என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வி.சி பேச்சை கேட்டுக் கொண்டு மணல் குவாரியின் அரவணைப்பில் ஜாமீன் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
பின்னர், நம் தரப்பில் RDO-விடம், “நாங்கள் வழக்கை நடத்துகிறோம். எங்களுக்கு வழக்கு விபர நகல் கொடுங்கள்” எனக் கேட்டோம். இதனால் விசாரணையை வரும் 10-03-2015-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
“மணல் கொள்ளை தொடர்பாக தாங்கள் நேரில் வந்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள், நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? எங்கள் வீட்டு ஆம்பளைகளை ஏன் அலைய வைக்கிறீர்கள். இது தொடர்ந்தால் இனிமேல் எங்கள் பிணத்தின் மீது ஏறி தான் மணல் அள்ள முடியும்” என பெண்கள் சார் ஆட்சியரிடம் மனு கொடுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சிதம்பரம் சார் ஆட்சியர் அரவிந்த், “ஒன்னும் கவலைப் படாதீர்கள். இப்பதான் மனு எடுக்கலையே” என சமாதானம் சொன்னார்.
பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறையினர், பொதுப் பணித்துறை பொறியாளர் என அதிகாரிகளை கடுமையாக அம்பலபடுத்தி வருவதை கீழ்நிலை ஊழியர்கள் வரவேற்கின்றனர். சேத்தியாத்தோப்பு காவல் துறையினர், “பொதுப்பணித் துறை பொறியாளர் வெற்றிவேல் கொடுத்த புகார் மனுவை நாங்கள் மேல் விசாரணையின்றி முடித்து விட்டோம். கவலை வேண்டாம்” என கூறிச் சென்றனர்.
தகவல் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பன்சாரே 82 வயதானவர். பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து சுடப்பட்டார் பன்சாரே. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 20-ம் தேதி உரிரிழந்தார். அவரது மனைவி உமா பன்சாரே காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
கோவிந்த் பன்சாரே
கோவிந்த் பன்சாரே கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு சிவாஜி பல்கலைக்கழகத்தில் கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை குறிப்பிட்டு, “கோட்சேயை புகழும் மனநிலை ஆபத்தானது” என்று பேசியிருந்தார். சிவசேனை மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் போட்டி போட்டுக் கொண்டு கோட்சேவை புகழ்வது மகாராஷ்டிரத்தில் அன்றாட செய்திகள். “சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை காவல்துறை கண்காணிக்க வேண்டும்” என்று எழுதியதற்காக பன்சாரே ஒரு முறை மிரட்டப்பட்டார்.
மராட்டியம் அறிந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, பன்சாரேவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “அடுத்தது நீங்கள்?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “சிவாஜி யார்?” என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது. பன்சாரேவும், தபோல்கரும் இந்து விரோதிகள் என்று ஹெச். ராஜாவின் மொழியில் மதவெறி பிரச்சாரம் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
கோவிந்த் பன்சாரே கொலைக்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. பெருமாள் முருகனை முடக்க இந்துத்துவ-சாதிய சக்திகளுக்கு நாமக்கல் தனியார் பள்ளி முதலைகள் கைகொடுத்ததை போன்றது அது. ‘பன்சாரே எதிர்த்து வந்த சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கரங்கள் அவரது கொலைக்கு பின்னால் இருக்கக்கூடும்’ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்புகின்றனர். சாலைகள் தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார் பன்சாரே.
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட போது…
சிவசேனை-பா.ஜ.க கூட்டணி 1990-ல் ஆட்சியை பிடித்த போது சாலைகள் தனியார்மயத்தை பெருமளவுக்கு ஊக்குவித்தது. ஐ.ஆர்.பி (Ideal Road Builders) என்ற நிறுவனம் மராட்டியம் முழுவதும் பல சாலைகளை போட்டு, சுங்கச் சாவடி அமைத்து பெரும் வசூல் கொள்ளையில் இறங்கியது. ஐ.ஆர்.பி.யின் நிலப்பறிப்புக்கு எதிராக தகவல் பெறும் உரிமை சட்டப்பட்டி சில விபரங்களை கோரிய சதீஷ் செட்டி என்பவர் 2010-ம் ஆண்டு கொல்லப்பட்டார். அதன் பிறகு கோவிந்த் பன்சாரே ஐ.ஆர்.பி.க்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை முன்னெடுத்தார். பன்சாரே கொல்லப்பட்ட பிப்ரவரி 16-ம் தேதி ஐ.ஆர்.பிக்கு எதிரான வழக்கு சி.பி.ஐ-க்கு கைமாறியது குறிப்பிடத்தக்கது.
மராட்டியத்தில் 2005-லிருந்து 2013 வரை பன்சாரே கொலை சம்பவம் போன்று 53 தாக்குதல் சம்பவங்கள் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன. 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கொடுரமாக அங்ககீனப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த கொலைகளுக்கு எதிரான வழக்குகள் நகராமல் இருக்கின்றன. 2013-ம் வருடம் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராக அப்போது இருந்த பிரிதிவ்ராஜ் சவான் ‘மகாத்மா காந்தியை கொலை செய்த மனஅமைப்பு தாபோல்கரின் கொலைக்கு பின்னால் இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்தார். குற்றவாளிகளின் பின்னணி தெரிந்திருந்தும் முதலமைச்சராக செயல்பட்ட எஞ்சியிருந்த காலத்தில் கொலையாளிகளை பிடிக்க பிரிதிவ்ராஜ் சவானால் இயலவில்லை.
பன்சாரேவின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
“தாஜ் ஹோட்டல் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசப்பை பிடிக்க முடிந்தவர்களால் தாபோல்கர் மற்றும் பன்சாரேவின் உயிர்களை காவு வாங்கிய கயவர்களை பிடிக்க முடியாதது ஏன்” என்ற கேள்வி முக்கியமானது. இந்துத்துவம் இந்த சமூக உடலின் ஆபத்தான எச்சதசையாக வளர்ந்து இருக்கிறது. வெட்டி எறியும் அறுவை சிகிச்சைக்கு அந்த எச்சதசை காத்திருக்கிறது.
பன்சாரேவின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது, சமூக நலனுக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் காட்டியது.
திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என ‘திருவிழா’க் கோலம் பூண்டிருந்தது தஞ்சை.
பேனர்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என ‘திருவிழா’க் கோலம் – ஆர்.வைத்திலிங்கத்தின் ஊழல் செலவழிக்கும் காலத்தின் கோலம்
காவிரி ஆற்று நீர் சிக்கல், மீத்தேன் வாயு எடுப்புத் திட்டம், உரத்தட்டுப்பாடு, விவசாயிகளின் போராட்டங்கள், பெட்டிச் செய்தி அளவுக்குக்கூட இடம்பெறாமல் இருட்டடிப்பு செய்யப்படும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளென இருள் அப்பிக் கிடக்கும் தஞ்சையில் ‘திருவிழா’க் கோலமா?
‘மக்களின் முதல்வர்’ என்ற அருவருப்பான அடைமொழியுடன் அழைக்கப்படும் தண்டனைக் கைதி ஜெயலலிதாவின் 67-ம் பிறந்த நாள் விழாவாம். அதற்காக, தனது வட்டங்களுக்கு உத்தரவிட்டு ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது மாவட்டம்.
தஞ்சை திலகர் திடலில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் தலைமையில், 113 ஜோடிகளுக்கு மெகா திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவித்தன சுவரொட்டிகள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சந்தைக்கு ஓட்டிவரப்படும் ஆட்டு மந்தைகளைப்போல திணித்துக்கொண்டு வந்து மக்களையெல்லாம் திடலுக்கு வெளியே கொட்டின, ஷேர் ஆட்டோ, டாடா ஏஸ், மற்றும் டிராக்டர்கள்.
திடலுக்குள் நுழையும் வழியில் நம்மை வழிமறித்ததோ அம்மாவின் அடிமைகள் வந்திறங்கியிருந்த டாடா சுமோ, பொலிரோ, டஸ்டர் மற்றும் பல உயர்ரக வாகனங்கள். அவற்றுள் பல சைரன் விளக்குகளைத் தாங்கி நின்றன.
மேடையில், அடிமைகளின் பெயர்களையெல்லாம் விளித்து, புல்ஸ்டாப் வைப்பதையே மறந்து பத்து நிமிடத்திற்கும் மேலாக ஒரே வாக்கியத்தில் அம்மாவை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஒரு ரத்தத்தின் ரத்தம் (தமிழுக்காக அம்மா செய்த பங்களிப்பு இதுவென்று, இதற்கு ‘அம்மா இலக்கியம்’ என்றும் பெயர் சூட்டப்படலாம்! அம்மா நாமம், வாழ்க!!)
பொதுவாக கல்யாணம் என்றால் மணமக்கள் தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்…. ஆனா இங்கே அமைச்சரும் அவரது உள்வட்ட அடிப்பொடிகளும் தான் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள்.
பொதுவாக கல்யாணம் என்றால் மணமக்கள் தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்…. ஆனா இங்கே அமைச்சரும் அவரது உள்வட்ட அடிப்பொடிகளும் தான் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள். மேடையின் மையத்தில் வீற்றிருந்ததும், டிரேடு மார்க் வெள்ளுடையில் ஜொலித்த ரத்தத்தின் ரத்தங்களின் அணிவரிசைதான். அந்த மேடையின் காட்சியையும், அவர்களின் பேச்சுக்களின் வீச்சையும் கண்டபொழுது, ”மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற டிரஸ் என்னோடது” என்ற காமெடிக் காட்சியின், ரஜினி கதாபாத்திரம்தான் நினைவுக்கு வந்து தொலைத்தது.
கட்சி கரைவேட்டிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துகொண்டிருந்தனர், மேடையேறுவதற்காக! “கட்சிக்காரங்க எல்லாம் மேடைய விட்டு கீழ எறங்குங்க! நீங்கல்லாம் இங்க தேவையில்ல, போங்க, போங்க” என்று கீழ்மட்ட அ.தி.மு.க அடிமைகளை, மைக்கில் விரட்டிக் கொண்டிருந்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அம்மாவின் முன்பு அமைச்சர்கள் அடிமைகள், அமைச்சர்களின் முன்பு உள்ளூர் கட்சிக்காரர்கள் அடிமைகள் என்ற படிவரிசை கச்சிதமாக தெரிந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மணமக்களோ இந்த அடிமை கட்சிக்காரர்களின் தயவில் விழாவுக்கு வந்திருந்தார்கள்; ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையின் இரு ஓரங்களிலும், அய்யோ பாவமாய் அமர வைக்கப்பட்டிருந்தனர்; பலரின் முகத்தில் திருமணக் களையே இல்லை. மணமக்கள் அமர வைக்கப்பட்ட இருக்கைகளிலும், மணமக்கள் கையில் தாங்கியிருந்த மஞ்சள் பையிலும் கொட்டை எழுத்தில் எண்கள் அச்சிடப்படிருந்தன. அதுவே அவர்களது அடையாளமாகவும் மாறியிருந்தது. டோக்கன் நம்பர் 1, டோக்கன் நம்பர் 2 என அந்த எண்களாலேயேதான் மணமக்கள் அழைக்கப்பட்டனர்.
மேடையில் ஒரு ஜோடியின் மணமகள் கர்சீப்பால் அடிக்கடி துடைப்பதுபோல் மக்களை பார்ப்பதை தவிர்த்தார். சாதாரண மனிதர்களுக்கு மேடையில் அமர்வது கொஞ்சம் கௌரவமாகத்தான் தெரியும். ஆனால் அப்பெண்ணிடம் அங்கே அமர்ந்திருப்பது அசிங்கமாய் உணர்வதை சிலகணங்கள் காட்டிச் சென்றன.
மணமக்களின் உறவினர்களோ, கூட்டத்தோடு கூட்டமாக பந்தலில் இடம் பிடித்து உட்கார்ந்திருந்தனர். “நம்ம வீட்டில கல்யாணம் நடத்தினா என்னா காட்டுவாங்க, இங்க எல்லாம் கப்சிப்” என்றார் ஒரு மணமகனின் அண்ணன்.
விழாப்பந்தலின் கடைசியில் ஒரு ஜோடி தமது குடும்பத்தினருடன் தனியே அமர்ந்திருந்தனர். என்ன வென்று கேட்டால் பொண்ணு, மாப்ளை நிமிர்ந்து கூட பாக்கவில்லை. பக்கத்தில் இருந்த பெரியவரிடம் “ஏன்யா… இவங்க மேடையில இல்லாம இங்க ஒக்காந்து இருக்காங்களா…” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, “நீ வேற அங்க இடம் இல்லாமத்தான்” என எரிச்சல்பட்டார் அந்தப் பெரியவர். மீண்டும் ஒருமுறை மேடையை நோக்கினோம், அ.தி.மு.க. அல்லக்கைகள் நெருக்கியடிக்கும் மேடையில் இவர்களுக்கு இடம் இல்லாமல் போனது சரிதான்.
இந்த அடிமைகள் நடத்தும் கல்யாணத்தில் இடம் பிடிக்க கட்சி, அரசு எல்லாம் சேர்ந்து வேலை செய்திருக்கின்றன. “ஊரு கவுன்சிலருகிட்ட மனு கொடுக்கனும். வி.ஏ.ஓ.கிட்ட இதுதான் முத கல்யாணமுன்னு சர்டிபிகேட்டு வாங்கித் தரனும். அதெல்லாம் செக்கப் பண்ணிதான், தேர்ந்தெடுப்பாங்க” என்றார், அவர்.அம்மா ஆட்சியில், கல்யாணம் ஆகாத ஜோடிகளை மட்டும் வடிகட்டி தனது மெகா திருமணத்தை செய்யும் அமைச்சரின் நிர்வாகத் திறமையை பாராட்டத்தான் வேண்டும்.
கல்யாண சாப்பாட்டுக்கு வரிசையில் குவிந்த உறவினர்கள்
“மணமக்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்க”
“மாலை மாத்திக்கோங்க”
“மணமகன்கள் மணப்பெண்களுக்கு தாலி கட்டுங்க”
என்று டிரில் போல கல்யாணத்தை நடத்தி வைத்தார் அறிவிப்பாளர். தாலி கட்டும் வைபவம் முடிந்ததும் கல்யாண உணவுக்காகக் காத்து நின்றது பெருங்கூட்டம்.
முறைப்பெண்ணை முறைத்துப் பார்த்து கொண்டிருந்த, இளைஞர் ஒருவரை வம்படியாக ஓரங்கட்டி, “உங்க குடும்பத்துல யாருக்கு கல்யாணம்? இவ்ளோ செலவு பண்ணி, இந்த கல்யாணத்தை யாரு நடத்துறா?” என்றோம். “என் அண்ணனுக்குத்தான் கல்யாணம். அமைச்சர் நம்ம பக்கத்து ஊர்காரர்தான். வருசா வருசம் நடத்துறார். ஏழைப்பட்டவங்களுக்கு உதவி செய்ற மனுசன்” என்று, ஏதோ அமைச்சரே தனக்கு சொந்தக்காரர்தான் என்பது போன்ற உணர்விலிருந்து பதிலளித்தார் அவர்.
வயல்களின் நடுவே போடப்படும் ஆட்டுக்கிடையை ஞாபகப்படுத்தியது, திடலுக்கு நடுவே தகர தகடுகளால் ஏற்படுத்தப்பட்டிருந்த அந்தத் தடுப்புகள். மணமகன்/மணமகள் அறையென்ற அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தால், மூத்திரக்கவிச்சிகளுக்கு மத்தியில் சிதறிக்கிடந்தது புதுச்சட்டைகளைத் தாங்கியிருந்த அட்டைப் பெட்டிகள். “எல்லாமே, காஸ்ட்லி சட்டை வேட்டிதான்” என்று பெருமைபொங்க பதிலளித்தார், தனது பட்டாபட்டி டிராயரை சரிசெய்துகொண்டே அந்த அறையிலிருந்து வெளியேறிய முதியவர் ஒருவர்!
மேடைக்கு இடப்புறம், பசுங்கன்றுடன் பசுமாடுகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கழுத்திலும், கொட்டை எழுத்தில் எண்கள் எழுதி தொங்கவிடப்பட்டிருந்தன. மேடையில் ஜோடியாக மணமக்கள். மேடைக்கு அருகிலேயே ஜோடியாக பசுமாடும் கன்றும். ஆகா, என்ன பொருத்தம்! அவர்களைப் பொருத்தவரையில், ஆடு, மாடுகளைப் போல மணமக்களும் ஒரு உருப்படி அவ்வளவுதான்.
“கல்யாண ஜோடி 113 இருக்கு. இங்க கட்டியிருக்க மாடுகள் 25 தானே இருக்கு?” வாயைக் கிளறினோம், ஒருவரிடம். “இப்போதைக்கு இருக்கிற மாட்டை இங்க வச்சி கொடுக்கிறதாகவும், பிறவு மிச்ச பேத்துக்கு டோக்கன் கொடுத்துருவாங்களாம், மாடு இருக்கிற தாவுக்கு போயி ஓட்டியாந்திரனும்னு பேசிக்கிட்டாங்க” என்றார் அவர். மாட்டுக்கு காவல் காத்து நின்றவர்களிடம் இதே கேள்வியை கேட்டதற்கு, “மிச்ச மாடெல்லாம், பக்கத்து தெருவுல நிப்பாட்டியிருக்கோம் சார்” என்றார், படபடப்பாக. இந்தக் கதையை நம்பி, மணமக்களின் உறவினர்கள் பழைய பஸ்டாண்ட் வரையில் தெருத் தெருவாக அலைந்ததுதான் மிச்சம். எங்கும் மாடுகள் நிறுத்தப்பட்டிருக்கவில்லை.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
எந்த ஜோசியக்காரன் சொல்லி, பசுமாடும் கன்றும் கொடுக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, பசுவை தெய்வமாக பூஜிப்பதால் உண்டாகும் நன்மைகளை விளக்கும் கையேடும் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. அம்மாவின் படத்தோடு உள்ளே பகவான் பலராமன் மற்றும் கோமாதா படங்களும் இடம்பெற்றிருந்தன. பச்சை அட்டைக்குள் காவிக் கருத்துக்களைத் தாங்கியிருந்தது அந்த கையேடு!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஏழை மக்கள் படும் துன்பங்களை உணர்ந்து, அம்மாவின் ஆணைக்கிணங்க மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை, பட்டுவேட்டி, பட்டு சட்டை, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட 72 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படுவதாக மேடையில் பீற்றிக்கொண்டிருந்தனர் உடன்பிறப்புக்கள்.
அப்படி என்னதான் 72 வகையான பொருட்களை கொடுக்கிறார்கள் என்று அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தபோது கொஞ்சம் தலை சுற்றத்தான் செய்தது எங்களுக்கு! ஜாடி, ஜக்கு, சோம்பு, டம்ளர், பூரி கட்டை, தேங்காய்த்துருவி, மசால் டப்பா, ‘சரோஜா தேவி யூஸ் பண்ணின’ சோப்பு டப்பானு… போகுது அந்த லிஸ்ட். நல்லவேளை, பட்டு சட்டையில் குத்தி வந்த குண்டூசிகளை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை! இவ்வாறு, பெருந்தன்மையோடு பட்டியலில் சேர்க்காத பொருளையும் கணக்கிட்டால், நூறு நூற்றம்பதைத் தாண்டும்!
சீர்வரிசை கொடுகக்கூப்பிட்ட ஜோடியில் வேறொருஜோடி வர நெரிசலில், “அறிவிருக்கா தள்ளிப்போ” என அந்த மணமகனை அ.தி.மு.க அடிபொடி கோபித்தது.
கச்சேரி இல்லாமல் கல்யாணமா? குத்தாட்டத்துக்கே ஏற்பாடு செய்திருந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். “எங்கம்மா களவாணி… ஆனாலும் அவதான் எங்க மகராணி..” ச்சீ.. ச்சீசீ… மன்னிக்கணும் அப்பிடியில்ல…”எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி” என்ற கொள்கை விளக்க – தத்துவப் பாடலுக்கு அயிட்டம் சாங்க் ரேஞ்சுக்கு மேடையை ரணகளப்படுத்தினர் குத்தாட்ட கலைஞர்கள். எனக்கு வேணும், நல்லா வேணும் என்று அ.தி.மு.க. கொடியில் அறையப்பட்டிருந்த அண்ணா, யாரையோ கையை நீட்டி கொண்டிருந்தார்.
வளர்ப்பு மகன் திருமணம் என்ற பெயரில், அடிச்ச கொள்ளை இதுதான் என்று ஊருக்கே காட்டியதோடல்லாமல், ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையே எச்சில் இலை எடுக்க வைத்து மாநில அளவில் ‘புரட்சி’ செய்தார் புரட்சித்தலைவி. அன்று அவர் ஊரை வளைத்து உலையில் போட்டு செய்த ‘புரட்சி’க்காகத்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை பெற்று, முதல்வர் பதவியை இழந்து, சிறைக்கு சென்று பின்னர், பிணையில் வெளிவந்த தண்டனைக் கைதியாக போயஸ் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்.
இப்போது, அம்மாவின் உள்ளூர் அடிமைகள் தமது ரேஞ்சுக்கு ஏழை தம்பதிகளை திரட்டி திருமணம் நடத்தி தமது செல்வாக்கை தம்பட்டம் அடிக்கின்றனர்.
இந்தக் கூத்துக்களெல்லாம், தஞ்சையில் மட்டுமல்ல; கோடிகளைக் கொட்டி மாவட்டங்கள் தோறும், கலர் கலராய் கல்யாணம், காதுகுத்து, கோயில்களில் அங்கப் பிரதட்சணம், அன்னதானம், சிறப்புப் பூஜைகள், தங்கத் தேர் இழுத்தல், அலகு குத்துதல் என மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. அல்லக்கைகளின் அளப்பறைகள் தாளாமல் திணறுகிறது தமிழகம். அம்மாவுக்காக கையில் ஆணியடித்து சிலுவையில் அறைந்து கொள்ளும் அடிமைகளையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பதென்றும் புரியவில்லை.
காணச்சகிக்காத இந்தக் கேலிக்கூத்துக்களையெல்லாம் கடந்து செல்கிறபொழுது, நரகலுக்கு நடுவே நடந்து செல்லும் உணர்வுதான் மேலிடுகிறது. அப்பட்டமாக ஊரைக் கொள்ளையடித்து அதற்கு தண்டனையும் பெற்ற கும்பல் ஒன்று இப்படி பகிரங்கமாக தனது கொள்ளையை பறைசாற்றி தானதருமம் என்று ஊளையிடுகிறதே, இதுதான் ஆபாசாமானது.
சித்தம் கலங்கிய கும்பலுக்கு சித்த மருத்துவக் கையேடு!
தொழில் தகராறு சட்டம், ஐ.டி. நிறுவனங்களுக்குப் பொருந்துமா? சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
நமது நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கிய பின்னர் தொடங்கப்பட்ட கார்ப்பரேட் மென்பொருள் நிறுவனங்களில் தொழில் தகராறுகள் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்கள் எவையும் பின்பற்றப்படுவதே இல்லை. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த சமயத்திலும் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்கிற அச்சத்தில் தான் பணிபுரிகின்றனர். வருடாந்திர அப்ரைசல் என்கிற வெளிப்படைத்தன்மையற்ற நடைமுறையின் மூலம் ‘திறனற்றவர்கள்’ என்கிற முத்திரை குத்தப்படுகின்றனர். கடும் மன அழுத்தத்திலும், 10 மணி நேரத்துக்கும் மேலாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சங்கம் அமைக்கும் உரிமையும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி 10-ம் தேதி டி.சி.எஸ் நுழைவாயில் முன்பு பு.ஜ.தொ.மு நடத்திய பிரச்சாரம் (கோப்புப் படம்)
“முந்நூறு பேருக்கும் அதிமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதாக இருந்தால் அரசின் அனுமதி பெற்றாக வேண்டும்” என்ற சட்டத்தை ஐ.டி. நிறுவனங்கள் மதிப்பதேயில்லை.கொத்துக் கொத்தான வேலைநீக்கங்கள் ஐ.டி நிறுவனங்களில் சகஜமாகி விட்டன. இத்தகைய சட்டவிரோத வேலைநீக்கத்தை எதிர்ப்பவர்கள் குறித்த விபரங்கள் நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட எவருக்கும் பிற ஐ.டி நிறுவனங்களிலும் வேலை கிடைக்காது என்பதால், ஐ.டி.ஊழியர்கள் இத்தகைய சட்ட விரோத வேலைநீக்கங்களை எதிர்க்கத் துணியாமல் சகித்துக் கொள்கின்றனர்.
இந்தச் சூழலில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் ( TATA CONSULTANCY SERVICES ) என்ற நிறுவனம் கடந்த 2014 டிசம்பர் மாத இறுதியில் 25 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவெடுத்து, அதற்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கியது. 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் தொடர்ந்து 30 ஆண்டுகளாக இலாபத்தில்தான் இயங்கி வருகின்றது. தனது லாபத்தினை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட ஊழியர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்கள் 55 ஆயிரம் பேரை மிகக்குறைந்த ஊதியத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
சோழிங்கநல்லூர் சிக்னலில் பு.ஜ.தொ.மு தொழிலாளர்களின் பிரச்சாரம் (கோப்புப் படம்)
தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்ற “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி” ( NDLF ) தொழிற்சங்கம், டி.சி.எஸ். ஊழியர்களது வேலை நீக்கப் பிரச்சினையில் தலையிட்டுப் போராடத் தொடங்கியது. இதற்கென பு.ஜ.தொ.மு ஐ.டி.ஊழியர்கள் பிரிவு தொடங்கப்பட்டது. “சட்ட விரோதமான வேலை நீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டுமானால் சங்ககமாகத் திரளுவதுதான் தீர்வு” என்பதை உணர்ந்த நூற்றுக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் பு.ஜ.தொ.மு.வில் இணைந்து வருகின்றனர்.
டி.சி.எஸ் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சசிரேகா என்ற பெண்மணி இந்த அநீதிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியபோது, “தொழிற் தகராறு சட்டம் தம்மைக் கட்டுப்படுத்தாது” என்று வாதிட்டு, ஐ.டி ஊழியர்களது சட்டபூர்வ உரிமைகளை மறுத்தது, டி.சி.எஸ்.
மென்பொருள் நிறுவனங்கள் செயல்படும் தொழிற்பூங்காவின் கட்டுமானம் அனைத்தையும் அரசு தான் செய்து கொடுத்தது. அரசு செலவில் மலிவான கட்டணத்தில் மின்சாரம், குடிநீர், சாலைவசதி ஆகியவற்றை அனுபவிப்பதுடன். பல ஆயிரம் கோடிகளுக்கு வரிச்சலுகையும் பெற்றுள்ளன டி.சி.எஸ் போலவே எண்ணற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மென்பொருள் மட்டுமல்லாது ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டு வரும், எண்ணற்ற சலுகைகளை அனுபவிக்கும் இத்தகைய கார்ப்பரேட்கள் இங்குள்ள சட்டங்கள் எதையும் மதிப்பதே கிடையாது. சட்டங்களை மதிக்காத கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தான் சமூகத்தின் சொத்துக்களான நிலம், நீர் ஆகிய அனைத்தையும் வாரி இறைக்கிறது, அரசு.
“தொழிற் தகராறு சட்டம் தம்மைக் கட்டுப்படுத்தாது” என்று வாதிட்டு, ஐ.டி ஊழியர்களது சட்டபூர்வ உரிமைகளை மறுத்தது, டி.சி.எஸ்.
25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, சட்டவிரோத வேலை நீக்கத்தை தடுத்திடுமாறும், டி.சி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பெறுவதை உறுதி செய்யுமாறும், 25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது “தொழில் தகராறு சட்டம் 1947” அட்டவணை V- ன்படி தொழிலாளர் விரோதப் போக்கு என அறிவிக்குமாறும், ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தும் நாஸ்காம் கருப்புப் பட்டியலைத் தடை செய்யுமாறும், டிசிஎஸ் நிர்வாகத்தால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிடுமாறும் “புஜதொமு- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு” சார்பில் கடந்த ஜனவரி 21 அன்று தமிழக அரசிடம் மனு கொடுக்கப்பட்டது. அம்மனு மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிலாளர்களது நலன்களைக் காப்பதற்காக போடப்பட்ட சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையும் இருந்தபோதிலும் அவர்களைப் பணி செய்ய வைப்பதற்குக் கூட நாம் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்க வேண்டிய நிலைதான் உள்ளது.
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தோம். அவ்வழக்கில் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவும், வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதியும் வாதாடினர். பொது நல வழக்காக இதனைக் கருத முடியாதென முடிவு செய்த தலைமை நீதிபதியின் முதன்மை அமர்வு , “ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டம் பொருந்துமா இல்லையா என்பதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.
பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர் பிரிவு அமைப்பாளர் கற்பகவிநாயகம்
இதனை அடுத்து கீழ்க்காணும் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்குமாரு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
1) தமிழ் நாட்டிலுள்ள ஐ.டி. நிறுவனங்களை இந்திய தொழில் தகராறு சட்டங்கள் கட்டுப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
2) எந்த ஐ.டி. நிறுவனமும் நினைத்த நேரத்தில் லே-ஆப் செய்வதை சட்ட விரோதம் என அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் சங்கம் அமைக்கும் உரிமையைத் தடுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4) பணி நீக்கம் செய்யப்பட்ட டி.சி.எஸ் உள்ளிட்ட அனைத்து ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கும் உரிய நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்
தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஐ.டி நிறுவனங்களை வலியுறுத்துவதற்கும், இது குறித்து , அரசுக்கு அழுத்தம் தருவதற்கும் ஐ.டி ஊழியர்கள் சங்கமாக ஒன்றுபடுவது முன் நிபந்தனையாக உள்ளது.
எனவே சட்டபூர்வ உரிமைகளை வென்றிட அனைத்து ஐ.டி.ஊழியர்களும் தங்களை எமது பு.ஜ.தொ.மு சங்கத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இது தொடர்பான பத்திரிகை செய்திகள்
[செய்திகளை பெரிதாகப் படிக்க படத்தின் மீது சொடுக்கவும்]
சு. கற்பகவிநாயகம், அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
அமித் ஷா தலையை காக்கும் ஆர்.எஸ்.எஸ் தம்பிரான் கோசாவி
பிரதமர் மோடியின் கார்ப்பரேட் நலன் சார்ந்த செயல்பாடுகள், மத்திய அமைச்சர்களின் வெறியூட்டும் பேச்சுக்கள் மற்றும் சங் பரிவாரங்கள் துணிகரமாக ஈடுபடுகின்ற இந்துத்துவ நடவடிக்கைகள் ஓரளவுக்கு ஊடக கவனத்தை பெற்றுள்ளன. இந்து மதவெறியர்கள் கடந்த காலங்களில் இழைத்த குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளிலிருந்து தப்புவிக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் உரிய முக்கியத்துவமின்றி ஊடகங்களில் பகிரப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன.
இந்து மதவெறியர்கள் கடந்த காலங்களில் இழைத்த குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளிலிருந்து தப்புவிக்க செய்யப்படுகின்ற முயற்சிகள் உரிய முக்கியத்துவமின்றி ஊடகங்களில் பகிரப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றன.
பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, குஜராத் மாநில உள்துறை மந்திரியாக செயல்பட்ட போது புரிந்த போலி மோதல் கொலைகள் தொடர்பான முக்கியமான ஒரு வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார். சொராபுதீன் சேக், அவரது மனைவி கவுசர் பீ ஆகியோர் 2005-ம் வருடம் அமித் ஷாவின் ஆணையின் பேரில் கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யபட்டனர் என்பது குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006-ம் வருடம் கொல்லபட்டார்.
இந்த வழக்கு முதலில் குஜராத் மாநிலத்தில் நடந்து கொண்டிருந்தது. சொராபுதீன் ஒரு லஷ்கர் இயக்கத் தீவிரவாதி என்ற கருத்து அப்போது மக்கள் மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஜூலியஸ் சீசரை பொய்ப்பழி சுமத்தி கொன்ற புரூட்டஸ் ‘நீதி’ கேட்டது போல, மோடி பொதுக்கூட்டங்களில் மக்களை பார்த்து, ‘சொராபுதீன் போன்ற தீவிரவாதியை என்ன செய்ய சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘கொல்லுங்கள், கொல்லுங்கள்’ என்று விடை பகர்ந்தனர் மக்கள். ‘மோடியை கொல்ல சூரத்திலிருந்து அகமதாபாத் பயணித்து கொண்டிருந்த ‘பயங்கரவாதி’ சொராபுதீன் சேக்கை சரணடைய கோரிய போது, மறுத்து துப்பாக்கியால் சுட்டதால், போலீசு எதிர்வினையாற்ற நேர்ந்ததில் கொல்லப்பட்டார்’ என்று வழக்கை முடித்தது குஜராத் போலீஸ்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் 2007-ம் வருடம் வந்தது. மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அமித் ஷாவை பாதுகாக்க விசாரணையின் போக்கை திசை திருப்பி நாடகமாடியது குஜராத் மோடி அரசாங்கம். ‘பேர், புகழ் மற்றும் பதவி உயர்வுக்காக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகள் சிலரே சொராபுதீன் சேக்கை சுட்டுக் கொன்றனர்’ என்றும், ‘சொராபுதீன் சேக் லஷ்கர் தீவிரவாதியல்ல’ என்றும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் புலனாய்வு கோணத்துக்கு உகந்ததாக மூன்றாவது ஒரு தகவலும் அதில் இருந்தது. சொராபுதீன் கொல்லப்பட்ட போது ஆந்திராவிலிருந்து மகாராஷ்டிராவின் சாங்க்லிக்கு ஒரு பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அமித் ஷாவை பாதுகாக்க விசாரணையின் போக்கை திசை திருப்பி நாடகமாடியது குஜராத் மோடி அரசாங்கம். (மோடி – அமித் ஷா – டி.ஜி. வன்சாரா)
இந்த மூன்றாவது தகவல் உச்சநீதிமன்றத்தில் வழக்கை கண்காணித்து வந்த நீதிபதியை ஆச்சரியப்படுத்தியது. பதவிக்கும், புகழுக்கும் ஆசைபட்டு ஒருவரை கொல்ல போலீஸ் அதிகாரிகள் ஆந்திரா வரை புறப்பட்டு சென்றனர் என்ற தகவல் துணுக்குற செய்தது. இரண்டு புள்ளிகளும் இணைய மறுப்பதை கண்டனர். வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு 2010-ம் வருடம் மாற்றப்பட்டது. சொராபுதீன் மற்றும் அவரது மனைவி பயணித்த பேருந்தில் சென்ற துளசிராம் பிரஜாபதி இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார். அவர் 2006-ம் வருடம் கொல்லப்பட்ட தகவலையும் வெளிக்கொணர்ந்தது சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து பல்வேறு தடைகளை குஜராத் அரசாங்கம் ஏற்படுத்தியது. விசாரணை காலம் முடியும் வரை அமித் ஷா குஜராத்தில் நுழைய தடை விதித்தது உச்சநீதிமன்றம். சி.பி.ஐ-ன் கோரிக்கையை ஏற்று வழக்கை 2012-ம் வருடம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கை தனியாக விசாரணை நடத்தி முடிவை பெற மகாராஷ்டிராவில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஒன்றையும் ஏற்படுத்தியது உச்சநீதிமன்றம். அப்போது முக்கியமான ஒரு நிபந்தனையை விதித்தது. வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி நடுவில் மாற்றப்படக்கூடாது என்று கூறியது. விசாரணை நீதிபதியாக உத்பத் என்பவர் நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது நேரில் ஆஜராகாத அமித் ஷா மீது கண்டிப்புடன் நடந்து கொண்டார்.
இந்த நிலையில் பிரதமராக மோடி பொறுப்பேற்றார். பல்வேறு மாநில ஆளுநர்கள் அவமானப்பட்டு வெளியேறியது போல, சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி உத்பத் ‘தானாகவே’ வெளியேறி வழி விட்டார். 2014 மே மாதம் மோடி பிரதமராக பொறுப்பேற்றார். ஜூன் மாதத்தில் உத்பத் ராஜிநாமா செய்தார். அமித் ஷாவை காப்பாற்ற மோடி எவ்வளவு துரிதகதியில் செயல்பட்டுள்ளார் என்பது இதில் தெரிகிறது.
ஹர கர மோடி, வீட்டுக்கு வீடு மோடி (மோடிக்காக அமித் ஷா நடத்திய ஒட்டுக் கேட்பு குறித்து)
உத்பத் ராஜிநாமா செய்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்தவர் பிரிஜ்மோகன் லோயா. மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இறந்து கிடந்தார். மாரடைப்பு என்று சொல்லப்பட்டாலும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது. அமித் ஷாவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதை போல முதலில் தோன்றினார், பிரிஜ்மோகன் லோயா. உத்பத் மாதிரி இல்லாமல், நேரில் ஆஜராவதிலிருந்து அமித் ஷாவுக்கு விலக்கு அளித்து வந்தார். பின்னர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இந்தச் சலுகை ‘அமித் ஷாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை பதிவாகும் வரை மட்டுமே’ என்றார்.
அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து விடுவிக்க வேண்டும் என்பதே அமித் ஷா தரப்பின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. சி.பி.ஐ சிறப்பு நீதிபதியின் அறிவிப்பு அமித் ஷாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதிகாரத்தின் உச்சியில் ராஜாளி பறவையின் இறுமாப்புடன் தான் வீற்றிருக்க, கூட்டுக் களவாணியான பழைய நண்பனின் துயரைக் காண சகிக்காதிருந்தார் மோடி. மேலும் ஜெயலலிதா சசிகலாவின் துணையை நாடுவது போல அமித் ஷாவின் அருகாமையை மிகவும் விரும்பினார். 52 வயதான நீதிபதி லோயா மோடியின் நன்னூலில் இடம்பெற மறுத்ததால் அதற்குரிய வெகுமானத்தை பெற்றார். லோயா அகற்றப்பட்டு அவருக்குப் பிறகு சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியாக கோசாவி 2014-ம் வருடம் டிசம்பர் 4-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
குஜராத் போலீசின் இரட்டைத் துப்பாக்கி – மோடி, அமித் ஷா
அமித் ஷாவின் எதிர்பார்ப்பில் எந்த குறையையும் வைக்கவில்லை, கோசாவி. தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கோரிக்கை மனுவை முதலில் எடுத்துக் கொண்டார், கோசாவி. டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வாதங்களை கேட்டறிந்து, டிசம்பர் மாதம் 30-ம் தேதி தீர்ப்பை வழங்கினார். அமித் ஷாவுக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளிருந்தும் அவரை விடுவித்து தனது ‘கடமையை’ செவ்வனே நிறைவேற்றினார். ‘அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட வழக்கு’ என்று பா.ஜ.க.வின் ஊடகப் புளுகர்கள் கூறி வந்ததையே தனது தீர்ப்பாக எழுதினார் கோசாவி. வேகமான பந்துவீச்சுக்கு சோயப் அக்தரை ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைப்பது போல, அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை அதிவேகமாக முடித்து வைத்த சி.பி.ஐ சிறப்பு நீதிபதி கோசாவியை நாம் ‘நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். எக்ஸ்பிரஸ்’ என்று தான் அழைக்க வேண்டும்.
‘இந்த வழக்கு சிக்கலான முடிச்சுகளை கொண்டது; ஆழமான சதிவலை பின்னப்பட்டது; அதிகார பலமுள்ளவர்கள் சம்பந்தப்பட்டது’ என்பதால் தான் வழக்கை தீர விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை குஜராத்துக்கு வெளியே அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் நோக்கத்தை நிறைவேற்றாமல், பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையையும் புறந்தள்ளி, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அமித் ஷாவின் கோரிக்கை மனுவை முதலில் பரிசீலனைக்கு எடுத்து அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதி தேவன் கோசாவி ஒரு ஆர்.எஸ்.எஸ் தம்பிரான் என்பதில் சந்தேகம் உண்டா?
உள்துறை மந்திரியாக இருப்பவர் டி.ஜி.பி., உள்துறை செயலர் ஆகியோருடன் முறையான தொடர்பில் இருப்பதை புரிந்து கொள்ளலாம். குஜராத்தின் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷா, எஸ்.பி. மற்றும் உதவி எஸ்.பி நிலையில் இருந்த டி.ஜி. வன்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் ஆகியோரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். சொராபுதீன் கொல்லப்பட்ட நாளில் இவர்களுடன் மிக அதிகமாக பேசிய தொலைபேசி நேரக் கணக்கு மற்றும் தடயவியல் சோதனை அறிக்கை என்று எந்த ஆதாரத்தையும் கோசாவி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இது மட்டுமல்லாமல் தஸ்ரத் பட்டேல் மற்றும் ராமன் பட்டேல் ஆகிய இரு சகோதரர்களின் வாக்குமூலங்கள் முக்கியமானவை. கட்டிட ஒப்பந்ததாரர்களான இவர்களின் வாக்குமூலங்கள் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா ஒரு பெரும் கொள்ளை கூட்டத்தின் தலைவன் என்பதை தெரிவிக்கிறது. தனது வசூல் வேட்டைக்கு சொராபுதீனின் அடியாட்களை அவர் பயன்படுத்தி வந்துள்ளார். 2004-ம் வருடம் ‘பாப்புலர் பில்டர்ஸ்’ என்ற தங்கள் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு தனது அடியாள் படையுடன் வந்த சொராபுதீன் அங்கு சிறு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கூட்டத்திலிருந்து ஒருவர் துப்பாக்கியால் காற்றில் சுட்டுள்ளார். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சொராபுதீனுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் குஜராத் போலீஸ் எடுக்கவில்லை. காரணம், சொராபுதீன் முஸ்லிமாக இருந்தாலும், அமித் ஷாவின் பங்காளி.
பங்காளிகள் பகையாளிகளானது தான் அமித் ஷா – சொராபுதீன் கதையின் மையக்கரு எனலாம். கொள்ளையடிக்கும் பணத்தை பகிர்ந்து கொள்வதில் தோன்றிய முரண்பாடே சொராபுதீன் கொலைக்கான மூலக் காரணம். சொராபுதீன் அதிகமாக பணத்தை நிர்ப்பந்தித்து இருக்க வேண்டும் அல்லது உரிய பங்கை தரவில்லை என்றால் பங்காளிகளை அம்பலப்படுத்துவதாக மிரட்டியிருக்க வேண்டும். சில வழக்கறிஞர்கள் சந்தேகப்படுவது போல 2002-ம் வருடம் நடந்த முஸ்லிம் மக்கள் படுகொலையில் மோடிக்கு எதிராக ‘நீதிக்கான குடிமக்கள்’ ஆணையத்தில் சாட்சியமளித்த ஹரேன் பாண்டியா கொலையில் சம்பந்தபட்டவராகவும் கூட இருக்கலாம். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த கவித்துவ நீதியின் மீது தணியாத தாகம் கொண்டவர்கள் பொறுப்புகளில் இருக்க வேண்டும்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். துளசிராம் பிரஜாபதியை கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குஜராத் மாநில டிஜிபி பி.சி.பாண்டேவை பிப்ரவரி 4-ம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டார் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி கோசாவி. பிப்ரவரி 5-ம் தேதி கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் கொலை வழக்கிலிருந்து டி.ஜி. வன்சாரா மற்றும் இணை டி.ஜி.பி யாக இருந்த பி.பி. பாண்டே ஆகியோருக்கு பிணை கிடைத்தது. பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சொராபுதீன் கொலை வழக்கிலும் பிணை கிடைத்ததை அடுத்து டி.ஜி. வன்சாரா சிறை வாசத்தை முடித்து வெளி வந்துள்ளார்.
இவை ஒருபுறம் சத்தமின்றி நடந்து கொண்டிருக்க, குஜராத் 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையோடு தொடர்புடைய கொலை பாதகர்கள் தண்டிக்கப்பட காரணமாக இருந்த மனித உரிமை போராளி டீஸ்தா சேதல்வாத்தை கைது செய்ய முயன்று வருகிறது குஜராத் அரசாங்கம். உச்சநீதிமன்றம் டீஸ்தா சேதல்வாத் கைது செய்யப்படுவற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. குல்பர்க் சொசைட்டியில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவகம் அமைக்க வசூலிக்கபட்ட பணத்தை டீஸ்தா கையாடல் செய்தார் என்பது வழக்கு. இது பொய் குற்றச்சாட்டு என்பதை விளக்கும் விரிவான கட்டுரை ஏற்கனவே வினவில் வெளியானது.
சொராபுதீன் வழக்கை 2005-லிருந்து தொடர்ந்து நடத்தி வருபவர் சொராபுதீனின் தம்பி ரூபாபுதீன். தனது அண்ணனும், அண்ணியும் ஒருசேர கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டி நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். தனது அண்ணி கவுசர் பீ களங்கமற்றவர் என்பது அவரது உறுதியான நம்பிக்கை. ருபாபுதீனுக்கு பல்வேறு போக்குகளை காட்டி விட்டு தற்போது குற்றவாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை செய்யப்படுவதை பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளார். அப்பாவி மக்களின் உயிரை குடித்த கொலையாளிகள் விடுதலையாவதும், நீதிக்கு போராடியவர்கள் சிறைக்கு செல்லவிருக்கும் நிலையையும் சற்று கற்பனை செய்யுங்கள். இந்துத்துவம் என்ற கொடுங்கனவில் வந்து போகும் மாய மோகினி தான் இந்திய நீதித்துறை என்பது விளங்கும்.