privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாவங்கதேசம் – அவ்ஜித் ராயைக் கொன்ற முசுலீம் மதவெறியர்கள் !

வங்கதேசம் – அவ்ஜித் ராயைக் கொன்ற முசுலீம் மதவெறியர்கள் !

-

அவ்ஜித் ராய்
அவ்ஜித் ராய்

ங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், நாத்திகருமான அவ்ஜித் ராய், நேற்று வியாழன் – 26.02.2015 அன்று இரவு சிலரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். இவரது மனைவி ரஃபிதா அகமதுவும் தாக்கப்பட்டு, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

டாக்கா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர் அஜய் ராயின் மகனான அவ்ஜித் ராய் பிரபலமான முக்தோ மோனா எனும் வங்க மொழி இணைய தளத்தின் நிறுவனராவார். நாத்திக சிந்தனைகளையும், மதவெறியர் – மத அடிப்படைவாதத்தை எதிர்த்தும் இந்த இணைய தளம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் தஸ்லிமா நசுரீன் நாடு கடத்தப்பட்டு அதை வங்க நீதித்துறை அனுமதித்த போதெல்லாம் இவர் அதை கண்டித்து குரல் கொடுத்திருக்கிறார். பிறப்பால் இந்துவாக இருந்தாலும் வங்க மொழியையும், கலாச்சாரத்தையும் நேசித்தவர். அதனாலேயே மதவெறியர்களை எதிர்த்து எழுதி வந்தார். வங்க தேச மரபில் மதவெறிக்கு இடமில்லை.

பெரிய கத்திகளைக் கொண்டு இருவர் தாக்கியதாக மருத்துவமனையில் இருக்கும் இவரது மனைவி தெரிவித்திருக்கிறார். டாக்கா புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இருவரையும் அக்கும்பல் கொடுரமாக தாக்கியிருக்கிறது.

காவல்துறை அதிகாரியான சிராஜுல்,”இந்தக் கொலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆனால் பேராசிரியர் ஹுமாயூன் ஆசாத்தை தாக்கிய கும்பல்தான் இதை செய்திருக்க கூடும்” என்று தெரிவித்திருக்கிறார்.

படுகாயத்துடன் அவ்ஜித்தின் மனைவி
படுகாயத்துடன் அவ்ஜித்தின் மனைவி

பிப்ரவரி 17, 2004 அன்று இதே போல புத்தகக் கண்காட்சி சென்று திரும்பிய ஆசாத்தை இப்படித்தான் தாக்கினார்கள். பிறகு அவர் அதே வருடம் ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் இறந்தார். அவரது நாவல் ஒன்றில் இசுலாமிய மதவாதிகளை அம்பலப்படுத்தியும், கேலி செய்தும் எழுதியிருந்தார் என்று பல்வேறு இசுலாமிய மதவெறிய அமைப்புகள் அவருக்கு எதிர்ப்பையும், மிரட்டலையும் தெரிவித்திருந்தன. வங்கதேச பாராளுமன்றத்திலேயே இவரை கைது செய்து புத்தகத்தை தடை செய்ய வேண்டுமென்று மதவாதிகள் குரல் கொடுத்திருக்கின்றனர். இறுதியில் ஒரு மதவெறியரால் தாக்கப்பட்டு பிறகு அதன் பாதிப்பால் இறந்தும் போனார். இந்த வழக்கின் இன்றைய நிலை குறித்து தெரியவில்லை.

2013-ம் ஆண்டு துவக்கத்தில் 1971 போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் இ இசுலாமி மதவெறியர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென்று ஷாபாக் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக எழுதிய ரஜீப் ஹைதர் எனும் நாத்திக வலைப் பதிவரை ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி குண்டர்கள் 2013 -பிப்ரவரி 15ம் தேதி படுகொலை செய்தனர். ரஜீபின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மத பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

தற்போது அவ்ஜித் ராயின் மரணத்திற்கு பிறகும் பல்வேறு மக்கள் உடன் திரண்டு டாக்கா மருத்துவமனையின் முன் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேராசிரியர் அன்வர் ஹுசைன் பேசும் போது,” நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், கருத்து சுதந்திரம் அனைத்தையும் எதிர்ப்பதோடு, ஹுமாயூன் ஆசாத் போன்றோரை கொன்றவர்களுமே இந்த கொடூரத்தை செய்திருக்கின்றனர்” என்று பேசினார்.

கொலை செய்யப்பட்ட நாத்திக பதிவர் ரஜீப் ஹைதர்
கொலை செய்யப்பட்ட நாத்திக பதிவர் ரஜீப் ஹைதர்

டாக்கா பல்கலைக்கழகத்தின் தொழிற்சங்க தலைவரான லிடன் நந்தி, விரைவில் இந்தக் கொலையைக் கண்டித்து தீப்பந்த ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர் ரொபாயத் பெர்டோஸ் பேசும் போது, ஆசிரியர்களும் மாணவர்களும் வெள்ளியன்று ஊர்வலம் போக இருப்பதாக கூறினார். இன்னும் பல்வேறு மாணவர் சங்கங்களும், முற்போக்கு அமைப்புகளும் கொலையைக் கண்டித்து போராடி வருகின்றனர்.

வங்கதேசத்தில் செயல்படும் இணைய புத்தக விற்பனை நிறுவனமான ரோகோமாரி, 2014 ஆரம்பத்தில் அவிஜித் ராயின் புத்தகங்களை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டது. ஃபேஸ்புக்கில் ஃபாரபி ஷைஃபர் ரஹ்மான் எனும் ஜமாத் ஏ இசுலாமி இயக்க மதவெறியர் மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்த விற்பனை தடை. அவிஜித் ராய் இசுலாமையும், நபியையும் இழிவுபடுத்துவதாகவும், ரோக்மாரி நிறுவனம் இத்தகைய நாத்திக புத்தகங்களை விற்றுவருவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார். ரோக்மாரி அலுவலகத்தின் முகவரியை கொடுத்து இசுலாமிய நண்பர்கள் அதை தாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அகமது ராஜிப் ஹைதருக்கு நடந்தது அவிஜித்துக்கும் நடக்குமென்றும் கூறினார். இத்தனைக்கும் பிறகும் கொலையை யார் செய்தார்கள் தெரியவில்லை என்று போலீஸ் தெரிவிக்கின்றது.

பொறியியலாளரான அவிஜித் ராய் அமெரிக்கா சென்று செட்டிலானவர். தத்துவம், அறிவியல் சிந்தனைகள், மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார். (Among his books are Biswas and Bigyan (Belief and Science), Abishwasher Darshan (philosophy of atheism), Samakamita: Baigyanik ebong Samajmanastattik Anusandhan (Homosexuality: Scientific and socio-psychological intervention), Satantra Bhabna o Buddir Mukti (individual thoughts and freedom of thoughts) etc. )

இந்த வருடம் டாக்கா புத்தகக் கண்காட்சியில் அவரது இரு புத்தகங்கள் வெளிவருவதை ஒட்டி அவர் வங்கதேசம் வந்திருந்தார். வந்தவருக்கு மதவெறியர்கள் சமாதி எழுப்பி விட்டனர்.

சென்னை புத்தகக் கண்காட்சியின் போது எழுத்தாளர் பெருமாள் முருகனது நாவலை எரித்து, அவரை முடக்கி இந்துமதவெறியர்களும், கவுண்டர் சாதிவெறியர்களும் ஆட்டம் போட்டனர். தற்போதும் கரூரில் புலியூர் முருகேசன் எனும் எழுத்தாளரை தாக்கி அடவாடி செய்து வருகின்றனர்.

ஹூமாயூன் ஆசாத்
ஹூமாயூன் ஆசாத்

தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பொதுவுடமை, பெரியார் கருத்து தாக்கத்தினால் இன்னும் கொலை அளவுக்கு போகவில்லை. ஆனால் வங்க தேசத்தில் இத்தகைய முற்போக்கு மரபு இருந்தாலும் மதவெறியர்கள் இன்னும் இத்தகைய அடாவடிகளை செய்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர். இவையெல்லாம் இசுலாத்தில் இல்லை, குர் ஆன் அப்படிச் சொல்லவில்லை, நபிகள் அப்படி போதிக்கவில்லை என்று சலீப்பூட்டும் வாதத்தை இப்போதும் கேட்கலாம்.

ஆனால் இசுலாமியர்கள் பெரும்பான்மையுடன் வாழும் ஒரு இடத்தில் ஒரு நாத்திகருக்கோ இல்லை ஒரு கம்யூனிஸ்டுக்கோ இடமில்லை, அவர்கள் தமது கருத்துக்களை பேசக்கூடாது என்பதில் மிதவாத முசுலீம்கள் கூட ஏற்றுக் கொள்வர். இவர்கள் ஆயுதம் எடுத்து அடுத்தவரை தாக்குவதில்லை. ஆனால் கருத்தளவில் மதவெறியர்களுக்கு களம் அமைத்து கொடுக்கின்றனர். எப்படி குஜராத்தில் இந்துமதவெறியர்கள் முசுலீம்களை தாக்கும் போது பெரும்பான்மை இந்துக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தார்களோ அது போலத்தான் மிதவாத முசுலீம்களும் மதம் சார்ந்து ஜனநாயகத்தை எதிர்க்கின்றனர்.

வங்கதேசம் எனும் ஏழை நாடு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது. வால்மார்ட் ஏற்படுத்திய தீ விபத்தின் புகை மூட்டம் கூட இன்னும் அணையவில்லை. இத்தகைய சூழலில் இசுலாமிய மதவெறியர்கள் வங்கதேசத்தின் அறிவுச் செல்வங்களை, மண்ணின் மைந்தர்களை ஒவ்வொருவராக கொலை செய்கின்றனர்.

1971 போரில் வங்கதேச இளைஞர்களைக் கொன்று, பெண்களை வன்புணர்ச்சி செய்து ஆட்டம் போட்டதும் இதே மதவெறியர்கள்தான். இன்று அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்பி வரும் வங்க தேசம் இன்னும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.

பிறப்பால் முசுலீம்களாக இருக்கும் ஒருவர் அவர் சமூகத்திலேயே நாத்திக பிரச்சாரம் செய்யும் உரிமையை பெற்றிருக்க வேண்டும், மற்ற மதத்தினரை காதலித்து மணமுடிக்கும் உரிமை வேண்டும், இசுலாமிய சடங்குளை தவிர்க்க நினைத்தால் அனுமதிக்க வேண்டும் போன்ற மதச்சார்பற்ற, ஜனநாயக உரிமைகளுக்காக போராட வேண்டும்.

இதன்றி இது இசுலாத்தில் இல்லை, குர்ஆன் பேசவில்லை என்று பேசினால் அவர்கள்தான் முசுலீம் மக்களை காட்டுமிராண்டி காலத்தில் வைத்து சித்ரவதை செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள்.

வங்கதேச எழுத்தாளர் கொலைக்கு கண்டனம் தெரிவிப்போம். இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்துவோம்.

தொடர்புடைய செய்திகள்:

Writer Avijit Roy hacked to death 

A Statement from Mukto-mona : Stop Muzzling Taslima Nasrin a la Bangladeshi style

Humayun Azad

Ahmed Rajib Haider