Saturday, August 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 645

பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!

2

“நாங்கள் பிஷ்னோய்கள். நாங்கள் நன்மை செய்பவர்களுக்கு நன்மை செய்வோம். தீமை செய்தவர்களை மறக்க மாட்டோம்.  எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவசாயம் மட்டும் தான். நாங்கள் ஏன் அமைச்சரைப் பார்த்து அஞ்ச வேண்டும்? அவர் தான் எங்களைக் குறித்து கவலை கொள்ள வேண்டும். ஒருவேளை சட்டம் அவரை தண்டிக்கவில்லை என்றாலும், நாங்கள் அவரை மன்னிக்கப் போவதில்லை”

நிகால் சந்த்ஹரியானாவின் சிர்ஸா மாவட்டத்தைச் சேர்ந்த பிரிஜ்லால் பிஷ்னோய் 86 வயதான ஒரு ஏழை விவசாயி. அரசியலில் சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் பாலியல் வெறி பிடித்த மிருகம் ஒன்று தனது பேத்தியை கிழித்து சீரழித்துப் போட்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரது அரற்றல்களில் ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்குகிறது.

பிரிஜ்லால் பிஷ்னோயின் பேத்தி 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 20.12. 2010 அன்று ஓம் பிரகாஷ் என்பவனோடு திருமணம் முடிகிறது. ஓம் பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்தவன், பாரதிய ஜனதா கட்சியின் கீழ்மட்ட பொறுப்பு ஏதோவொன்றில் இருக்கிறான் என்பவை தவிர்த்து பிஷ்னோய் குடும்பத்தாருக்கு அவனைப் பற்றி மேல் விவரங்கள் தெரியாது.

”நாங்கள் கிராமத்தின் வெளியே விவசாய நிலங்களில் அமைக்கப் பட்டிருக்கும் தானிக்களில் (வயலின் நடுவே மரச்சட்டங்களால் தளம் உயர்த்தப்பட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய மரக் குடிசை போன்ற அமைப்பு) வாழ்கிறவர்கள். கிராமத்தோடு எங்களுக்கு அவ்வளவாக தொடர்புகள் கிடையாது” என்கிறாள் பிரிஜ்லாலின் பேத்தி.

வெளியுலகம் தெரியாத அப்பாவி ஏழைகள் என்பதோடு, பிரிஜ்லாலின் பேத்திக்கு அடுத்ததாகப் பிறந்த இரண்டு தங்கைகளும் இருந்தனர். படித்து வழக்குரைஞராக வேண்டும் என்கிற தனது கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு கல்யாணத்திற்கு தயாரானாள் அந்தப் பெண்.

”நாங்கள் அவனுக்கு வரதட்சணையாக எங்கள் சக்திக்குட்பட்டு எவ்வளவோ கொடுத்திருந்தோம். என்றாலும், கல்யாணம் முடிந்த உடனேயே அவனது நடவடிக்கைகள் முற்றாக மாறின. மேலும் வரதட்சணை வாங்கி வர துன்புறுத்திக் கொண்டே இருந்தான்”

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை ஹரியானாவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளான் ஓம்பிரகாஷ். தனது இளம் மனைவியை எப்போதும் சந்தேகக் கண்ணோட்டத்தோடே கண்காணிப்பில் வைத்திருந்த ஓம்பிரகாஷ், வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் பூட்டிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளான்.

ஜெய்ப்பூரில் அவன் அடிக்கடி தனது வீட்டை மாற்றி வந்திருக்கிறான். மனைவிக்கு அவன் வாங்கிக் கொடுத்த உணவுப் பதார்த்தங்களில் ஏதோ மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறான்.

“நான் எப்போதும் ஒரு விதமான மயக்க நிலையிலும் ஆழ்ந்த தூக்கத்திலும் தான் இருந்தேன். விழிப்பான சொற்ப நேரங்களில் கூட அரைத் தூக்கத்திலேயே இருந்தேன். நான் மயக்கத்தில் இருந்த சமயத்தில் எனக்கு ஏதோவொன்று நடந்துள்ளதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் கிராமத்தைச் சேர்ந்தவள். நகரம் மிக அந்நியமாக இருந்தது. எனக்கு அங்கே யாரையும் தெரியாது. யாரோடு பேசுவதென்றும் தெரியாது. அங்கே ஒரு சிறைக் கைதி போல் வைக்கப்பட்டிருந்தேன்” என்கிறாள் அந்த இளம்பெண்.

தின்பண்டங்களில் ஏதோ கலந்திருப்பதை உணர்ந்து ஒரு கட்டத்தில் ஓம்பிரகாஷ் கொடுத்த பதார்த்தங்கள் எதையும் சாப்பிட மறுக்கிறாள். கொஞ்சம் சுயநினைவோடு இருந்த சந்தர்பம் ஒன்றின் போது ஓம்பிரகாஷின் சகோதரன் தன்னோடு உறவு கொள்ளும் நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். அந்த அயோக்கியத்தனத்திற்க்கு உடன்பட மறுத்துப் போராடியிருக்கிறாள்.

இது ஒன்றும் புதிது கிடையாது, பல நாட்களாக நடந்து கொண்டிருக்கும் சமாச்சாரம் தான், அவளைத் தனது மனைவியாகவே கருதவில்லையென்றும், தனது அரசியல் வளர்ச்சிக்காக அவளைப் பயன்படுத்திக் கொள்வதே தனது நோக்கம் என்றும் எகத்தாளமாக சொல்லியிருக்கிறான் ஓம்பிரகாஷ். மேலும், அவளை மயக்க நிலையில் இருக்கும் இதே போல் பலரோடும் அனுப்பி வீடியோக்களாக எடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளான். அந்த வீடியோக்களில் சிலவற்றை அவளுக்கே காண்பித்து மிரட்டியும் இருக்கிறான்.

பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் தங்காமல் தொடர்ந்து இடங்களை மாற்றி வந்த ஓம்பிரகாஷ், விலை உயர்ந்த செல்போன்களையும் வாகனங்களையும் பயன்படுத்தியிருக்கிறான்.

நிகால் சந்த் மேக்வால்
நிகால் சந்த் மேக்வால்

2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் சுமார் ஒன்பது மாதங்களாக இந்த சித்திரவதைகளை அந்தப் பெண் அனுபவித்து வந்திருக்கிறாள். ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர். கிரிமினல் எம்..பிக்களை சகித்துக் கொள்ளவே மாட்டேன் என்று போர் குரல் எழுப்பியிருக்கும் உத்தமர் மோடியின் தற்போதைய அரசாங்கத்தில் உரத்துறை அமைச்சராக இருக்கும் அந்தப் பாலியல் குற்றவாளியின் பெயர் நிகால் சந்த் மேக்வால்.

இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியின் கீழ் மட்ட பொறுப்பில் இருந்த ஓம் பிரகாஷ், பில்பங்கா ஜில்லா பரிஷத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக அரசியலில் ”வளர்கிறான்”. பிரிஜ்லால் பிஷ்னோயின் உறவினர் ஒருவரை ஜெய்ப்பூருக்கு வரவழைக்கும் ஓம் பிரகாஷ், பிஷ்னோய் குடும்பத்தினர் வறுமையின் காரணமாக தங்கள் பெண்ணை ஓம் பிரகாஷுக்கு எட்டு லட்சம் ரூபாய்களுக்கு விற்று விட்டதாக எழுதித் தரக் கேட்டு மிரட்டியுள்ளான்.

மிரட்டப்பட்ட உறவினரின் மூலம் அந்தப் பெண்ணின் பரிதாப நிலை பிஷ்னோய் சமூக மக்களின் கவனத்திற்குச் செல்கிறது. அவர்கள் கொந்தளித்துப் போகிறார்கள். என்றாலும் ஏழைகளான அவர்களால் பாரதிய ஜனதாவின் மேல் மட்டம் வரை நெருங்கிய தொடர்பு கொண்ட ஓம்பிரகாஷை எதிர்க்க முடியவில்லை. அவன் மேல் வரதட்சணை வழக்கு பதிய முயற்சிக்கிறார்கள். ஆனால் அது கூட பதிவாகாத படிக்கு தனது போலீசு செல்வாக்கை பயன்படுத்தி தடுத்து விடுகிறான் ஓம்பிரகாஷ்.

உள்ளூர் அளவிலான பிரச்சினையாக முற்றி, இறுதியில் சிர்ஸாவில் சாதி பஞ்சாயத்து ஒன்றின் முன் விசாரணைக்கு வருகிறது இந்த விவகாரம். அங்கே தனது உறவினர்களின் உதவியோடு தப்பிச் செல்லும் பிரிஜ்லாலின் பேத்தி தனது குடும்பத்தோடு சேர்கிறாள்.

“அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட்டாக வேண்டும். நான் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளேன். என்னால் அவர்கள் அனைவரையும் அடையாளம் காட்ட முடியும். அமைச்சர் எங்கள் கிராமத்தவர்கள் மேல் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார். ஆனாலும் நான், எனது வாக்குமூலத்தை மாற்றப் போவதில்லை. எனக்கு நடந்ததென்னவோ நடந்து விட்டது, ஆனால் இதே கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நடந்து விடக் கூடாது” என்கிறாள் அந்தப் பெண்.

விஷயத்தைக் கேள்விப் பட்ட சிர்ஸா மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் ஹெத்ராம் பெனிவ்வால் உடனடியாக அதில் தலையிட்டுள்ளார். போலீசில் புகார் கொடுக்க முற்பட்ட போது, சம்பவம் ஜெய்பூரில் நடந்துள்ளதால் தம்மால் அதில் தலையிட முடியாது என்று சிர்ஸா மாவட்ட போலீசார் கைகழுவியுள்ளனர். அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?

மோடி அரசு
அமித் ஷாவின் தலைமையில் பெண்ணை உளவு பார்க்க ஒட்டு மொத்த போலீசு கட்டமைப்பையும் பயன்படுத்தும் திறமையும் வல்லமையும் கொண்ட மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள் நிகால் சந்துக்கு சிர்ஸா மாவட்ட போலீசாரை மிரட்டிப் பணிய வைப்பது அப்படியொன்றும் சிரமமான காரியமல்லவே?

சிர்ஸா மாவட்ட போலீசு கைவிட்டபின் அந்தப் பெண் ஜெய்பூர் மாவட்ட போலீசாரை நாடியிருக்கிறாள். அவர்களோ நாள் முழுவதும் அந்தப் பெண்ணை காவல் நிலையத்தில் அமரச் செய்து விட்டு வழக்குப் பதிந்தால் உனக்குத் தான் அவமானம் என்று எச்சரித்துள்ளனர். பார்ப்பன ஆணாதிக்க கொடுங்கோன்மை என்பது இந்துமதவெறி பாரதிய ஜனதா கும்பலுக்கு மட்டுமா, ஒட்டுமொத்த போலீசு-அதிகார அடுக்குமே அதில் தான் ஊறித் திளைத்துக் கிடக்கின்றன.

அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு காவல் நிலையங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் அலைந்து திரிந்த ஹெத்ராம் பெனிவால் இறுதியில் தனது வழக்குரைஞர் நண்பர்களான இந்தர்ஜித் பிஷ்னோய் மற்றும் நவ்ரங் சௌத்ரி ஆகியோரின் உதவியோடு வழக்கு பதிந்துள்ளார்.

நிகால் சந்த் மேக்வால் மத்திய அமைச்சராகும் வரை இந்த விவகாரம் குறித்து நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டிருந்த காங்கிரசு இத்தனை காலம் கழித்து இப்போது கோதாவில் குதித்து பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட ஆபத்தைப் பாரீர் என்று போலியாக கூவுகிறது. காங்கிரசு கடைபிடித்து வந்த கள்ள மௌனத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. பாதிக்கப் பட்ட அந்தப் பெண் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் நிகால் சந்த் மேக்வால் உள்ளிட்ட பாரதிய ஜனதாவின் தலைவர்களோடு சில உள்ளூர் காங்கிரசு பெருச்சாளிகளின் பெயர்களும் அடக்கம். குறிப்பாக, ராஜஸ்தானின் முன்னாள் இளைஞர் காங்கிரசு தலைவர் புஷ்பேந்திர பரத்வாஜின் பெயரையும் அந்தப் பெண் குறிப்பிட்டிருக்கிறாள்.

மார்க்சிஸ்டு கட்சியின் ஹெத்ராம் பெனிவால் இந்தக் கொடுமையான சம்பவத்தை அதிகார அடுக்கின் பல மட்டங்களுக்கும் சுமந்து திரிந்துள்ளார். எங்காவது நியாயம் கிடைக்காதா என்று எதிர்பார்த்திருக்கிரார். தேசிய மகளிர் ஆணையமும், ராஜஸ்தான் மகளிர் ஆணையமும் விசயத்தைக் கேட்டு விட்டு சம்பிரதாயமான பேச்சுடன் அடங்கி விட்டதாக ஹெத்ராம் குறிப்பிடுகிறார். அரசு மற்றும் அதிகார வர்க்கம் குறித்த மார்க்சிஸ்டு கட்சியின் புனித மதிப்பீட்டின் அடிப்படையில் செயல்பட்டிருக்கும் அவர் மேல் பரிதாபமே மேலிடுகிறது. மக்களைத் திரட்டி போராட வேண்டிய இடத்தில் மயிலே மயிலே இறகு போடு என்று அதிகார வர்க்கத்திடம் இறைஞ்சுவதால் என்ன பயன்?

அதே நேரம் இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் ஒரு மாநிலத்தில் இத்தகைய முயற்சிகளே கூட அபூர்வம் என்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். ஆனால் இந்த முயற்சிகள் இந்துமதவெறியர்களை தொந்தரவு செய்யாத அளவோடு நின்றுவிடுவதுதான் பிரச்சினை.

இதற்கிடையே மொத்தமாக மலத்தில் முங்கியெழுந்து விட்டு பன்னீராக மணக்கிறதே என்கிறது பாரதிய ஜனதா கட்சி. மொத்தமும் மோடியின் பெயரைக் கெடுக்க நடக்கும் அரசியல் சதி என்கிறார் அக்கட்சியின் ராஜ்நாத் சிங். மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பாக 2011-ம் ஆண்டின் பிற்பகுதியிலேயே பின்னாட்களில் மோடி பிரதமர் ஆகப் போகிறார் என்பதை எப்படி பிஷ்னோய் குடும்பத்தினர் அறிந்திருக்க முடியும் என்பது பற்றிய விஞ்ஞான விளக்கங்களை அவர் சொல்லவில்லை. ஒருவேளை அக்கட்சிக்கு இணையத்தில் சொம்படித்துக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் சொல்லக் கூடும்.

இப்போது மட்டும் என்ன நடக்கும்? அந்தப் பெண் நடத்தை கெட்டவள், காசுக்கு விலை போய்விட்டாள், காங்கிரசு ஏற்பாடு செய்த நாடகம் என்றெல்லாம் ஆதாரங்களை உற்பத்தி செய்து உலவவிடுவார்கள்.

தங்களது சொந்த வர்க்க அபிலாஷைகளுக்காக மோடியின் ஆசை வார்த்தைகளில் மயங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த அயோக்கியத்தனத்திற்கு என்ன சொல்வார்கள்? இது தான் பாரதிய ஜனதா கட்சியின் தராதரம் என்பதைப் புரிந்து கொள்வார்களா?

இந்தி பேசும் மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் செல்வாக்கோடு இருப்பதும், அந்த செல்வாக்கில் இத்தகைய ஆணாதிக்க பொறுக்கித்தனங்களை உள்ளிட்டு பல்வேறு கொடுங்கொன்மை செயல்கள் நடப்பதும் வேறு வேறு அல்ல. இந்தி இருக்கும் மாநிலங்களில் உள்ள இந்த பாரதப் பண்பாட்டைத்தான் முழு இந்தியாவிற்கும் பரப்ப துடிக்கிறது பார்ப்பனிய பாஜக கும்பல்.

மேலிருந்து கீழ் வரை ஒட்டு மொத்தமாக கிரிமினல்களையும் காமாந்தகார மிருகங்களையும் உள்ளடக்கிய குற்றக் கும்பல் தான் இந்துத்துவ கும்பல். இதை சட்டப்படியோ, நீதிமன்றத்தாலோ தண்டிக்க முடியாது. உழைக்கும் மக்கள் எடுக்கும் நேரடி நடவடிக்கையின் மூலமே இந்த நாட்டில் பார்ப்பனிய இந்துமதவெறி பாடைக்கு அனுப்ப முடியும். அது வரை பிரிஜ்லாலின் பேத்திகளுக்கு பாதுகாப்பு இல்லை.

–    தமிழரசன்.

தகவல் – Frontline பத்திரிகையில் வெளியான கட்டுரை

மேலும் படிக்க

தொலைந்த நிலம்

0

முகம் கொள்ளாத பூரிப்போடும், ஏங்கிக் கிடைத்த சந்தோசத்தோடும், வீட்டம்மா காது கேக்காது என்பதை மறந்தும் தனத்திடம் பேசினார் முருகைய்யன்.

“மாச கடைசியில ஆத்துல தண்ணி தொறந்து விட்றதா பேப்பர்ல போட்ருக்காம்புள்ள. போன வருசம் போல இந்த வருசமும் வானத்த பாத்துட்டு ஒக்காந்து இருக்கனுமேன்னு நெனச்சேன். ஏதோ ஆண்டவன் கண்ண தொறந்துட்டான். எங்கனையோ கடன ஒடன வாங்கி நட்டு வச்சா கஞ்சிதண்ணிக்காவது வரும். என்னால ஆட்டோவுல (குட்டியானை) ஏறி எறங்க முடியாது. ஒம்பொறந்தவங்கிட்ட சொல்லி, கெடக்குற எருவ கொஞ்சம் அள்ளி வயல்ல போட சொல்லு”.

nel“என்னத்த அதிசயமா பேப்பர்ல போட்ருக்கானுவொ, வாய ஒரு பக்கம் கோனிகிட்டு, வெத்தல பாக்க கொதப்பிகிட்டு எச்சித்தெரிக்க பேசற நீ.” என்று காதுல விழாத எரிச்சலில் திட்டியது அந்தம்மா. அந்த அம்மாவுக்கு புரியும்படி சாடையுடன் விளக்கினார் பெரியவர்.

“ஆமா! போன வருசம் நடவு செலவுக்கு காதுல கழுத்துல கெடக்குறெதல்லாம் வாங்கி அடகு வச்ச. இன்னும் திருப்பி தரல. ஒரு புடி கருதறுக்க முடியாம கருகிப் போச்சு. இந்த வருசம் எதெல்லாம் அடகு கடைக்கி எடுத்துட்டு போப்போறியோ”.

“இந்த வருசம் மேட்டூரணையில தண்ணி வரத்து நல்லா இருக்காம்புள்ள! கவலப்படாத, அறுப்பறுத்து வளைஞ்சு போன ஒம்முதுகு நிமிர்றா மாறி  ஒட்டியாணம் பண்ணி போட்றேன்.” சந்தோசத்துல மனைவியை வம்புக்கிழுத்தார், பெரியவர்.

அவர்களின் ஊடலை ரசித்த அதே வேளையில் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கை ரசிக்கத் தக்கதாக இல்லை. அவரிடமே கேட்டுப் பார்ப்போமென பேச்சு கொடுத்தேன்.

“எனக்கு 80 வயசாகுது. நான் எளவட்டமா இருக்கையில இந்த ஓல வீட்டையும் பதினஞ்சு மா (5 ஏக்கர்) நெலத்தையும் விட்டுட்டு போனாரு எங்கப்பா. அவரு குடுத்த நெலத்துல இன்னைக்கி ஒரு குழி நெலம்மில்ல. எல்லாம் வித்துட்டேன். எங்கப்பனாவது இத வச்சுட்டு போனான். நம்ம பிள்ளைகளுக்கு என்னத்த வச்சுட்டு போறோம்னு நெனச்சு நம்ம காலத்துக்குல்ல இந்த வீட்ட இடிச்சுட்டு ஒரு ஓட்டு வீடு கட்டிடுவோன்னு பாக்குறேன் முடியல. இதுதான் வெவசாயம் என்ன முன்னேத்துன கதை.”

“அந்த காலத்துல பாகவதர் கிருதாவும், வெள்ள வேட்டியும் கட்டின ஒரு சோக்காளி மைனரு நானு. பணக்காரன் பண்ற பகட்ட பாடுபட்டு கஞ்சி குடிக்கிற நாம பண்ணுனா, நெலைக்காதுங்கிறது புத்திக்கி எட்டாம போச்சு. மாடா உழைக்க வேண்டிய வயசுல ஊதாரியா சுத்திட்டு எல்லாத்தையும் எழந்துட்டேன்.”

“வருசம் பூறா ஒழைக்கிறவனே தசுகூலி (வெள்ளாமை செலவு) செலவுக்கு கடன ஒடன வாங்கி செலவு செஞ்சுட்டு அறுப்பறுத்ததும் கடனடைப்பான். முதுகு வளையாத எனக்கு எவனாவது கடங்கொடுப்பானா? 100 குழிய அடகு வச்சு நடவு தசுகூலிக்கு செலவு செய்வேன். பாதி நெலத்த எழந்த பிறகு என்ன செய்றதுன்னு தெரியாம டவுனுல இருக்குற நம்ம சேந்த சாதிக்காரன்னுங்க, பழக்கமானவங்க கிட்ட இத்தன ரூவா பணத்துக்கு இத்தன மூட்ட நெல்லு தர்ரேன்னு வட்டிக்கி வாங்குவேன்.”

“நம்ம கெட்ட நேரம், காலத்துல மழையும் பேயாது, தொண்ட கருதா இருக்குற நேரத்த பாத்து ஆத்துல தண்ணியும் வராது. ஒன்னு வெள்ளாம சரியில்லாம போயிரும், ஆண்டவன் புண்ணியத்துல தப்பிதவறி வெளஞ்சாலும் சொந்தக்காரப் பய கல்யாணம், காதுகுத்து, கருமாதின்னு மொய் செஞ்சு செஞ்சே, போட்ட மொதலு மண்ணோட போயிரும். மறுவருச நடவு செலவுக்கு நெலத்த அடகு வாங்குனவங்கிட்டையே மேக்கொண்டு பணம் வாங்குவேன். காலப்போக்குல நெலத்த மூக்க (மீட்க) முடியாம கெரயத்துக்கே (விற்பனை) எழுதி குடுத்துருவேன். இப்புடியாவே எல்லாம் போச்சு. அதெல்லாம் நெனச்சுப் படுத்தா தூக்கமே வராது.”

“ஒன்னப்போல என்னப்போல உள்ளவனா வாங்குனா? ஊருக்குள்ளேயே பெரும் பணக்கார பஞ்சாயத்துக் கார குடும்பம். அரசாங்க உத்தியாகம் வேற உண்டு. வாங்குன சம்ளம்மெல்லாம் ஊருக்குள்ள 5 வட்டி 10 வட்டிக்கி குடுத்து ஊரையே வளச்சுப் போட்டானுவ. அவ்வளவு ஏன்? அவைங்க சொந்தக்கரானுவ நிலத்தையே கடன கொடுத்து வளைச்சு புட்டானுவ. இப்ப அந்த குடும்பங்க ஒன்னுமில்லாம நொடிச்சு போச்சு. கூட பொறந்தவங்ளையே விட்டு வைக்காதப்ப, ஊதாரியான என்ன விட்டு வைப்பாய்ங்களா?” என்னையும் சேத்து சோலிய முடிச்சுப்புட்டானுவொ.”

“அது போக, எங்க குடும்பம் போல ஒன்னுமில்லாமா போயி கண்டிக்கி பொழைக்க போன எங்கூருக்காரரு, கையில கொஞ்சம் காசோட திரும்பி வந்தப்போ, என் நெலமைய புரிஞ்சுகிட்டு நேரடியா கேக்க முடியாம ‘கையில கொஞ்சம் காசு இருக்கப்பு. யாரும் நெலம் எதுவும் விக்கிறதா காதுல விழுந்தா சொல்லு’ன்னு சொன்னாரு. அவருகிட்ட கொஞ்சத்த கொடுத்தேன்.”

“ஒருத்தனுக்கு கோயில்ல பூசாரி வேல. கூடுதலா பில்லி, சூனியம், சோழி போட்டு பாக்குறது, வெத்தல மை மாயம், மந்தரம்னு கொடிகட்டி பறந்தான். சுத்துப்பட்டு ஊருல உள்ள எல்லா சனமும் பணத்த கொண்டாந்து கொட்டுச்சு. என்னப்போல உள்ளவங்க நெலத்த எல்லாம் அந்த பூசாரி வாங்குனான். எனக்கு என்ன மை வேல பன்னாணோ மிச்சம் மீதி இருந்தத இவங்கிட்ட கொடுத்துட்டேன். முடிஞ்சது சோலி.”

“எல்லாம் எழந்த பின்னே என்ன செய்றதுன்னு தெரியல. டவுனுக்கு போயி பழ யாவரம் பண்ண ஆரம்பிச்சா எங்கூட்டுக்காரி. நானு மாட்டு சந்தைக்கி போயி தரகனா மாடு வாங்கி குடுக்க ஆரம்பிச்சேன. வெக்கத்த விட்டு சொல்லனுன்னா கொஞ்ச நாளு எந்தம்பி சாராயம் காச்ச போனான். பொறவு டீக்கட வச்சான், கூடவே இட்லி வட போட்டான். அப்பறந்தான் கொஞ்சம் தப்பி பொழச்சு வந்தோம். எங்காத்தா செஞ்ச புண்ணியத்துல கிளாரு (சுண்ணாம்பு) மண்ணுல குந்தி போயி கருகுன பயிராட்டம் இருந்த எங்க வாழ்க்க கொஞ்சம் துளுரு விட ஆரம்பிச்சது.”

“என் சித்தப்பா ஒருத்தரு, நெலத்த அடகு வச்சுட்டு சிங்கப்பூருக்கு பொழைக்க போன எடத்துலயே செட்டிலாயிட்டாரு. அந்த நெலத்த மூட்டு வாய்தா வரி கட்டி எங்களுக்கு சொந்தமாக்கிகிட்டோம். அப்புறம் அவன இவன புடிச்சு கோயில் நெலத்த கொஞ்சம் குத்தகைக்கி நட ஆரம்பிச்சேன். ஏதோ வயித்துக்கும் வாயிக்கும் பெரிய பஞ்சம் வந்துராம பொழப்பு ஓடுனிச்சு.”

“பசங்க தலப்பட்டு இப்பதான் கொஞ்சம் பரவாயில்ல, வீட்டுக்கு கரண்டு இழுத்தோம், ஒரு சட்னி அரைக்கிற மிசினு வாங்குனோம், காலம் போன கடைசியில அவ கழுத்துக்கு ஒரு செயினு வாங்கி போட்ருக்கானுவொ பசங்க. இதெல்லாம் வெவசாயம் பாத்து இல்ல. பசங்க வெளியதெருவ (வெளியூர்) போயி சம்பாரிச்சதால. ஒரு பய பூச்சிமருந்து கடைக்கி வேலைக்கி போறான். இன்னோருத்தன் மெட்ராஸுல வேலப் பாக்குறான். பாப்போம் இனிமேலாவது விடிவு காலம் வருமான்னு.”

“என்னப் போல மைனராட்டம் போடாம யோக்கியமா புழைச்சவனுக்கும் இதுதான் கதி. அவங்களும் எழந்த நெலத்த திரும்ப வாங்குவோமான்னு கனவு கண்டுட்டு இருக்காய்ங்க தெரியுமா? எதுத்த வீட்டுல ஆறு பசங்க பிள்ளைகள படிக்க வக்கெறெதுக்காகவே பொன்னா வெளையிர பூமி ரெண்டு வேலி (ஒரு வேலி – 7 ஏக்கர்) நெலத்த வித்தாங்க. படிச்சுட்டா வேல கெடச்சுரும்,  இதவிட அதிகமா நெலபலம் வாங்கி சௌகரியமா இருப்பாங்கன்னு ஆசப்பட்டாங்க. ஆறு பேருல ஒருத்தனுக்கு மட்டும் போட்டி தேர்வு எழுதி கெவுருமெண்டு உத்தியோவம் கெடச்சுது. மத்த பய எல்லாரும் ஏதோ ஒரு வேலைய பாத்து பொழப்பு நடத்துறானுவொ. நெலம் போனதுதான் மிச்சம். பட்டதாரியானாலும் கஷ்டம் தீரல”.

“எம்பங்களாளி பய ஒருத்தன் மூணு பொண்ண கட்டிக்கொடுக்க மூணு ஏக்கர் நெலத்த வித்தான், என்ன செய்ய. முன்னெல்லாம் நாலு மூட்ட, அஞ்சு மூட்ட நெல்லு குடுத்து நிக்கிற மாட்டுல ஒன்ன ஓட்டி கொடுத்து பொழச்சுக்கங்கன்னு பொண்ண கொடுப்போம். இப்ப நெலம அப்படியா இருக்கு? இன்ன வண்டிதான் வேணும், தேக்கு கட்டுலுதான் வேணுன்னு லிஸ்ட் போட்றானுவொ. வெவசாயம் பண்ற நம்மால இதெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாதும்மா. ரெண்டும் கெட்டான நம்மள மாறி நடுவுல இருக்குற விவசாயிகிட்ட நெலமெல்லாம் கைல நிக்காதாத்தா. நாங்களே டவுனுக்கு பொழக்க போற வயசுப்பசங்கள வெச்சுத்தான் வெவசாயின்னு காலத்த ஓட்டுறோம்.”

பெரியவருகிட்ட பேசி முடிஞ்சதும் யோசிச்சு பாத்தேன்.

முன்னெல்லாம் கிராமத்துக்கு போகும் போது திரும்பி பார்க்குற இடமெல்லாம் பசுமை மாறாம கண்ணுக்குள்ளேயே நிக்குமுனு பாரதிராஜா படத்த பாத்த ஜனங்க நினைப்பாங்க. அந்த பச்சையும் பசுமையும் சிறு, நடுத்தர விவசாயிங்களுக்கு சொந்தமில்லைங்கிறது யாருக்கும் தெரியாது. ஒன்னு அந்த நிலம் மிராசுதார்களுக்கோ இல்லையினா குத்தகைக்கு எடுத்த கணக்குலதான் வரும். இப்ப அந்த இரவல் பசுமைக்கும் சோதனை. விவசாயி கஷ்டத்த புரிஞ்ச அரசோ இல்லை உதவியோ, தீர்வுகளோ எந்த எழவும் எப்பவும் கிராமங்கள அண்டுனதில்ல.

போதாக்குறைக்கு ரியல் எஸ்டேட்டுக்காரனுவ கையளவு இடத்த கூட விடாம தட்டிப்பறிக்கிறானுவ. பஸ் வசதியே இல்லாத கிராமத்துல கூட யாருன்னே தெரியாத வெளியூர் காரங்க நெலம் வாங்கி பண்ணை வீடு உருவாக்கி சொகுசா தங்க வந்து போறாங்க. கொஞ்ச கொஞ்சமா நெலத்த வளச்சு முள்வேலி போட்டு என்னென்னமோ பயிருங்கள போட்டு விவசாயம் நடத்துராங்க. வரப்பு விவசாயம் ஊர ஒண்ணா வைச்சதுன்னா, வேலி விவசாயம் எல்லாத்தையும் பிரிச்சு போடுது.

தண்ணி எடுத்து விக்கிற கம்பனிங்க வந்தாச்சு. இவ்வளவு ஏன்! பக்கத்தூருல ஏதோ ஒரு வெளி நாட்டுக்காரன் வளச்சு வாங்கி நீச்சல் குளத்தோட பங்களா அமைச்சு வெளிய தெரியாமெ வேல நடத்துறாரு. இன்னும் சென்னை பெரும்புள்ளிங்களெல்லாம் கிராமம் கிராமா வாங்கி போடுறாங்க. விவசாயத்துல நொடிச்சுப் போயி நிமிர முடியாம இருக்குறவங்க கிட்ட என்னைக்கும் நிலம் தங்காது.

வயல்கள்ல வேலை இருக்கும் போது பார்த்துட்டு, வேல இல்லாத நேரம் கேரளா, திருப்பூருன்னு வேறு வருமானமும் பாக்க போராங்க. பெரியவரு முருகைய்யனோட தம்பியும் அப்படி போனவருதான்.

வெவசாயம் செய்ய முடியாம பயந்துகிட்டு ஊரு ஊரா போற ஜனம் என்னைக்கு இவங்கள எதித்து நிக்க முடிவு செய்யுதோ அன்னைக்குத்தான் கிராமங்களுக்கும் நம்ம நாட்டுக்கும் விமோசனம். அப்படி ஒரு விடுதலை வந்த பிறகு வர கிராமங்கள் எப்படி இருக்கும்? நிச்சயமா தமிழ் சினிமா கிராமங்கள் மாறி இருக்காதுன்னு தோணுது!

– சரசம்மா

இதுதாண்டா அமெரிக்கா – கேலிச்சித்திரங்கள்

9
அமெரிக்க கொடி


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இதுதாண்டா அமெரிக்கா  (9)

இதுதாண்டா அமெரிக்கா  (8)

இதுதாண்டா அமெரிக்கா  (4)

இதுதாண்டா அமெரிக்கா  (7)

இதுதாண்டா அமெரிக்கா  (3)

இதுதாண்டா அமெரிக்கா  (6)

இதுதாண்டா அமெரிக்கா  (1)

இதுதாண்டா அமெரிக்கா  (2)

இதுதாண்டா அமெரிக்கா  (5)

நன்றி: Political Humor

தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!

52

தேவையான பொழுது வேலைக்கு வைத்துக் கொண்டு, தேவையில்லையென்றால் தூக்கியெறிகின்ற அமர்த்து – துரத்து (Hire & Fire) என்கிற கொள்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. எனினும், தற்போது இருக்கிற சட்டங்கள், தொழிலாளர்களுக்கு வழங்குகின்ற உரிமைகளின் காரணமாக, முதலாளிகள் தொழிலே நடத்த முடியாத வண்ணம் விழிபிதுங்கித் தவிப்பது போலவும், இச்சட்டங்களையெல்லாம் ஒழித்தால்தான் உள்நாட்டு முதலாளிகளும் அந்நிய முதலீட்டாளர்களும் நமது நாட்டில் தொழில் தொடங்குவார்களென்றும், வேலைவாய்ப்பு பெருகுமென்றும், தொழிலாளர்களின் ஊதிய விகிதங்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்தியப் பொருட்கள் சர்வதேச சந்தையில் போட்டி போட முடிவதில்லை என்றும் பல பொய்களை முதலாளி வர்க்கமும், அவர்கள் கையில் இருக்கும் ஊடகங்களும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றன.

தொழிலாளர் நலச்சட்டம்உண்மை நிலைமை என்ன? அவுட்சோர்சிங் என்ற பெயரில், ஒரு ஆலையில் வேலை செய்யும் ஆகப்பெரும்பான்மையான தொழிலாளிகளுக்கும் அந்த ஆலை நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை என்று ஆக்கி, அவர்களை தனித்தனி காண்டிராக்டர்களின் கீழ் வேலை செய்யும் கூலிகளாக்குவதை 2001-ல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அங்கீகரித்திருக்கிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை ஆட்சேபிக்கும் உரிமை அங்கு பணியாற்றும் தொழிலாளிகளுக்கு இல்லை என்று வேறொரு தீர்ப்பு கூறியிருக்கிறது. உலகமயமாக்கத்துக்கு ஏற்பத்தான் அரசியல் சட்டத்துக்கு நீதிமன்றம் விளக்கம் கூறமுடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அது மட்டுமல்ல, நாடு முழுதும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் எதிலும் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடி ஆகாதென்று அரசே ஒப்பந்தம் போட்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறையோ முதலாளிகள் நலத்துறையாகத்தான் எல்லா இடங்களிலும் செயல்படுகிறது. இதுதான் நிலைமை.

அசோசெம் என்கின்ற இந்திய முதலாளிகள் சங்கம், இந்திய தொழில்துறை முழுவதும் நடத்திய தனது ஆய்வின் முடிவுகளை பிப் 5, 2014-ல் வெளியிட்டுள்ளது. 2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் கூறும் அவ்வறிக்கை, துறை வாரியாக ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. தொலைதொடர்புத் துறையில் 60%, ஆட்டோமொபைல் துறையில் 56%, கல்வித்துறையில் 54%, உற்பத்தித் துறையில் 52%, நுகர்பொருள் விற்பனைத் துறையில் 51%, ஐ.டி துறையில் 42%, ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் 35%, மருத்துவத்துறையில் 32% – என ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு துறையிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இலாபகரமான பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும் தொழில் நிறுவனங்களிலேயே ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்றும், நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் அதேவேலையை மிகக்குறைவான ஊதியத்துக்கு இவர்கள் செய்கிறார்கள் என்றும் கூறுகிறது அவ்வறிக்கை. மேலும் தொழிலாளர் என்ற வரையறைக்குள் அடங்காத மருத்துவர், பொறியாளர், அறிவியல் ஆய்வாளர்கள், ஆடிட்டர்கள், வணிக மேலாளர்கள் போன்றோரும் கூட ஒப்பந்தக்காரர்களின் சம்பளப்பட்டியலில் கூலிகளாக வேலை செய்கிறார்கள் என்றும் இவ்வறிக்கையை வெளியிட்ட அசோசெம்மின் பொதுச்செயலர் டி.எஸ். ராவத் கூறியிருக்கிறார்.

“இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை மீறுகின்றன. நிரந்தர ஊழியர் செய்கின்ற அதே வேலையைச் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்கு, மூன்றில் ஒரு பங்கு ஊதியமே தரப்படுகிறது. மேலும், கிராசுவிட்டி, பி.எஃப், மருத்துவ – கல்விச் சலுகைகள் போன்றவை மறுக்கப்படுகின்றன. இந்த நிலைமை தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தொழில்துறை வளர்ச்சிக்கே மிகவும் தீங்கானது” என்றும் கூறியிருக்கிறார் ராவத். முதலாளிகள் சங்கத்தின் ஆய்வு கூறும் புள்ளிவிவரங்களே இப்படி இருக்கும்போது, உண்மை நிலை எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

நோக்கியா போராட்டம்
விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிரந்தரத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்த நோக்கியாவின் சதியைக் கண்டித்து, அவ்வாலைத் தொழிலாளர்கள் சென்னை – சேப்பாக்கத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இருப்பினும், தொழிலாளர் சட்டங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் தந்திரமாக இறங்கியிருக்கிறது மோடி அரசு. தொழில்தகராறு சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், தொழிற்பயிற்சி சட்டம் ஆகிய மத்திய சட்டங்களைத் திருத்தவிருப்பதாக ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. “300 தொழிலாளர்கள் வரை ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி தேவையில்லை; தொழிலாளர்களில் 30% பேர் உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் ஒரு தொழிற்சங்கம் பிரதிநிதித்துவம் பெறும்” – என்பன போன்ற திருத்தங்கள் அங்கே மேற்கொள்ளப்படுகின்றன.

அரசமைப்புச் சட்டத்தின்படி தொழிலாளர் நலம் என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால், இச்சட்டத்திற்கு மோடி அரசு ‘குடியரசு’ தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தந்துவிடும். முதலீட்டாளர்களைக் கவர வேண்டுமென்றால், மற்ற மாநிலங்களும் ராஜஸ்தானுடன் போட்டி போட்டுக் கொண்டு இத்தகைய சட்டத்திருத்தங்களை செய்யும். இதன் போக்கிலேயே தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துவிடலாம் என்பது மோடி அரசின் திட்டமெனத் தெரிகிறது. ஆயத்த ஆடை முதலான துறைகளில் இரவு நேரப் பணிகளில் பெண்களை வேலை வாங்குவதை அனுமதிப்பது, தொழிலாளர்களை ஓவர்டைம் செய்யச் சொல்வதற்கு இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்துவது, தொழிலாளர் துறை அதிகாரிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற சட்டத்திருத்தங்களை மத்திய அரசு செய்யவிருப்பதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் தொழிலாளர் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோசாய். தொழில் முனைவோரின் கால்களில் பூட்டப்பட்டிருக்கும் காலாவதியாகிப் போன காலனிய கால தொழிலாளர் சட்டங்கள் என்ற தளையை மோடி அகற்றப் போகிறார் என்றும், இதன் விளைவாக அடுத்த 20 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகள் பெருகப் போகின்றன என்றும் அளந்து விடுகின்றன கார்ப்பரேட் ஊடகங்கள்.

நோக்கியா சென்னையில் வழங்கிய வேலைவாய்ப்பின் யோக்கியதை நம் கண்முன்னே தெரிகிறது. 650 கோடி ரூபாய் மூலதனம் போட்டு, அதைப்போல பத்து மடங்கு சலுகைகளைப் பெற்று, 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து, கொள்ளை லாபமீட்டிய நோக்கியா, 23,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது. வரியைக் கட்டு என்றவுடன் 8000 பேர் வேலை செய்த இடத்தில் இப்போது வெறும் 850 பேர்தான் வேலை செய்கிறார்கள்.

காங்கிரசு அரசு வரி கேட்காமலிருந்தால் நோக்கியா தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி. முதலாளியிடம் சம்பளம் கேட்காமல் இருந்தால் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படாது என்று அடுத்தபடியாக ஒரு மத்திய அமைச்சர் பேசக்கூடும்.

– அன்பு
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை

1

“பெருகிவரும் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் நுகர்வு வெறியே!” என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி சென்னை பல்லாவரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று (09/08/2014) மாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது!

கடந்த ஒரு மாத காலமாக, பேருந்துகளில், ரயிலில், குடியிருப்பு பகுதிகளில் என மக்கள் மத்தியில் 6000 துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் தொடர் பிரச்சாரம் செய்தார்கள். பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. இளைஞர்கள் மத்தியில் நுகர்வு வெறிக்கு எதிராக ஒரு கருத்து மாற்றத்தை உருவாக்க முடிந்தது!

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய, பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் இராஜி “நாள்தோறும் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் சமூகத்தில் பெருகிவருகிறது. இதற்கான சமூக தீர்வை முன்வைத்து பெண்களை திரட்டி இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

கலைஞர் தொலைக்காட்சியில் குத்தாட்ட நிகழ்ச்சியாக ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியை தடை செய்ய கோரி சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை சுட்டிக்காட்டியும், குரோம்பேட்டை மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் இளைஞர்களை சீரழிக்கும் டாஸ்மார்க் கடையை திறக்கவிடாமல், பகுதி மக்களை அணிதிரட்டி, விடாப்பிடியாக போராடியதையும் சுட்டிக்காட்டி, மக்களைத் திரட்டி போடும் பொழுது தான் பாலியல் வன்முறை பிரச்சனையை கூட தீர்க்கமுடியும்” என பேசினார்.

கண்டன உரை நிகழ்த்திய பெண்கள் விடுதலை முன்னணியில் சென்னை கிளை செயலாளரான தோழர் உஷா “தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக்கு இதே இடத்தில் அந்த சமயத்தில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்பொழுது பிரச்சாரம் செய்த பொழுது சிலர் ‘ஏன் இங்கு போராடுகிறீர்கள்?” என கேள்விக்கேட்டனர். அதற்கு பிறகு தமிழகத்தில் பல பாலியல் வன்முறைகள் நடந்திருக்கிறது. ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா சட்டபேரவையில் பேசிய பொழுது, கருணாநிதி ஆட்சியை விட தன் ஆட்சிக்காலத்தில் பெண்கள் மீதான வன்முறை 50 சதவிகிதம் குறைந்திருக்கிறது என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இது கடைந்தெடுத்த பொய். புகார் கொடுக்க சென்ற பெண்களை காவல்துறை எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதும், புகார் பதிவு செய்ய மறுப்பதும் அவ்வப்பொழுது செய்திகளில் வந்துகொண்டு தான் இருக்கின்றன. முதல்வரின் பேச்சைக் கேட்டு, அதிமுககாரர்கள் எல்லோரும் பெஞ்சை தட்டுகிறார்கள். மற்ற ஓட்டுக்கட்சிகள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். பெண்கள் பிரச்சனை உட்பட எந்த சமூக பிரச்சனை குறித்தும், உருப்படியான விவாதம் சட்டமன்றத்தில் எதுவும் நடப்பதில்லை.

விளம்பரங்களில் பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகிறார்கள். ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களில் கூட பெண்களை ஆபாசமாக காட்டுவது தொடர்ந்து நடந்துவருகிறது!

இந்தியாவில் காட் ஒப்பந்தத்திற்கு பிறகு தாரளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கைகள் அமுலானதிலிருந்து சமூகத்தில் நுகர்வு வெறி என்பது பல்கி பெருகியுள்ளது. பல நுகர்வு பொருட்களையும் வாங்கி குவிப்பது என்பதும், புதிது புதிதாக வாங்கி அனுபவிப்பது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விஷம் போல பரவியுள்ளது. இதில் பெண்ணையும் பொருளாக பார்க்ககூடிய கண்ணோட்டத்தை உருவாக்கியுள்ளது.

பெருகிவரும் பாலியல் வன்முறையை தீர்க்க, துவக்கமாக சமூகத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் பொழுது அல்லது பார்க்கிற பொழுது, செருப்பால் அடியுங்கள். இப்படி பெண்கள் சகித்துக்கொண்டு செல்வதால் தான் மேலும் மேலும் தைரியம் பெற்று பாலியல் தொந்தரவுகளை செய்கிறார்கள். எனவே, ஏதேனும் பிரச்சனையென்றால், பெண்கள் விடுதலை முன்னணியை தொடர்புகொள்ளுங்கள். உங்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்!” என்று பேசினார்.

ஆர்ப்பாட்டம் நடந்தது பல்லாவரத்தின் மார்க்கெட் பகுதி என்பதால், நூற்றுக்கணக்கான மக்கள் ஆங்காங்கே நின்று கவனித்தனர். “செல்போனில் ஆபாச படங்கள் இளைஞர்களை சீரழிக்கிறது. நீங்கள் பேசியது சரி” என்றார் ஒரு பெண்.  “இந்த மாதிரி குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் மன்னித்து விடுவதால் தான் குற்றம் பெருகிறது” என ஒரு பெண் ஆவேசமாக தன் கருத்தை சொன்னார். அலுவலத்திலிருந்து வேலையை விட்டுச் சென்ற பெண் “நாங்க மனசுல நினைக்கிறதை, நீங்கள் நடைமுறையில் சரியாக செய்கிறீர்கள்” என சொன்னார்.

பெண்கள் மீது திணிக்கப்படும்
பாலியல் வன்முறை வெறியாட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

பெண்ணைப் போக பொருளாக
ஆணுக்கும் பெண் அடிமையாக
நடத்துகின்ற நிலவுடைமை பண்பாட்டை
அறுத்து எறிவோம்! அறுத்து எறிவோம்!

தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது
பாலியல் வன்கொடுமை நடத்துவதை
நியாயப்படுத்தி பேசுகின்ற
ஆதிக்க சாதி பண்பாட்டை
வேரறுப்போம்! வேரறுப்போம்!

சாத்திரம் என்றும்
சடங்குகள் என்றும்
மடமைக்குள்ளே பெண்களை தள்ளும்
பார்ப்பனிய சாதி பண்பாட்டை
ஒழித்துக்கட்ட உறுதி ஏற்போம்!

மறுகாலனியாதிக்க கொள்கைகளை
எதிர்ப்பின்றி நடத்துவதற்கு
அரசே திட்டமிட்டு பரப்புகின்ற
நுகர்வு வெறி கலாச்சாரத்தை வேரறுக்க
அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

துண்டறிக்கை

  • சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையைச் சாதிப்போம்!

பெருகிவரும் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் நுகர்வுவெறியே!

ன்பார்ந்த உழைக்கும் பெண்களே!

“வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று நகைகள் கொள்ளை – கொள்ளையடித்த பணத்தில் அடுக்குமாடி வீடு, ஆடம்பரத் திருமணம், சொகுசான வாழ்க்கை”, 

“சப் – இன்ஸ்பெக்டர் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலி கைது”,

“எனக்கு கிடைக்காத நித்யா யாருக்கும் கிடைக்கக் கூடாது – கொலை செய்த காதலன் வாக்குமூலம்”,

“பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை, கொடூரமாக கொலை”

என்ற செய்திகளை படிக்கும் போதே அருவருப்பாக இருக்கிறதா?

ஏன் இந்த வக்கிரம்?

“ஏற்கனவே இதெல்லாம் நடப்பதுதானே. இதில் புதிதாக என்ன இருக்கிறது” என்று கேட்கிறீர்களா? முன்பு நடந்தது வேறு. இப்பொழுது நடப்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. முன்பெல்லாம் பசி வறுமையின் காரணமாக திருடினான். நகரமாக இருந்தால் அண்டாவும் குண்டாவும் திருடினான். ஆனால் இன்று அப்படியா? இல்லை. உல்லாசமாக இருப்பதற்காக அல்லவா திருடுகிறான்.

ஆடம்பரமாக, உல்லாசமாக வாழ பணம் தேவை. அதை உழைத்து சம்பாதிக்க முடியாது. அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படி என்றால் என்ன செய்வது? கொள்ளையடிப்பதை தவிர வேறு வழியில்லை. தேவைப்பட்டால் கொலையும் செய்யலாம். அதுவும் வக்கிரமான கொலை. கழுத்தை அறுத்துக் கொலை, பெற்றெடுத்த, பாலூட்டி சீராட்டி வளர்த்த தாயைக் கொல்வது, பாசமிகு தந்தையைக் கொல்வது, தன்னை நேசித்த காதலியை பாலியல் கொடுமை செய்து கொல்வது .

இப்பொழுது சொல்லுங்கள். பசிக்காக – வறுமைக்காகவா கொல்கிறார்கள்? இல்லை. ஆன்டிராய்ட் போன், விதவிதமான ஆடைகள், வகைவகையான உணவுகள், குடிக்க சாராயம், அனுபவிக்க பெண்கள் என விதவிதமாக ருசிக்கவே செய்கிறார்கள்.

அப்படி என்றால் இதற்கெல்லாம் யார் காரணம்?

வேறு யாருமில்லை. உழைப்பவனுக்கு அடிமாட்டு கூலியைக் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் சுயநலத்தையே கொள்கையாகப் பரப்பும் கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும், தனியார் மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பெயரில் கொண்டு வந்த நுகர்வுவெறிதான் காரணம். அதாவது மறுகாலனியாக்கக் கொள்கைதான் காரணம்.

படித்த படிப்புக்கு வேலை இல்லை, வேலைக்குக்கேற்ற கூலியில்லை. ஆனால், இவர்கள் பரப்பும் நுகர்வுவெறியானது, “எப்படியாவது இதையெல்லாம் அனுபவிச்சி தீர்த்திடனும்” என்ற பேராசையைத் தூண்டுகிறது. இதுவே, நுகர்வுவெறியில் மாணவர் – இளைஞர்களை தள்ளிவிடுகிறது. இந்த நுகர்வுவெறியை, இதை அடைவதற்கான வக்கிரப் புத்தியை நமது சிந்தனையில் திணிக்கும் வேலையை சினிமா – சீரியல் – விளம்பரங்களும், இவர்கள் நடத்தும் ஆபாசக் கூத்துக்களும் செவ்வனே செய்கின்றன.

இந்த நுகர்வு கலாச்சாரம், உழைத்த பணத்தை வைத்துக் கொண்டு நேர்மையாக வாழ்பவர்களைப் பிழைக்கத் தெரியாத கோமாளிகள் என்று அவர்களின் உயர்ந்த ஒழுக்கத்தை இழிவுபடுத்துகின்றது. ஆனால், உழைக்காமல் அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி கொழுத்த, வரியை – வங்கிக் கடனை ஏப்பம் விட்ட, திருடிய அம்பானி – டாடா போன்ற கொள்ளையர்களைப் பாராட்டுகிறது.

எந்த சீரியலாவது ஒழுக்கமான குடும்பத்தைக் காட்டுகிறதா? எந்த விளம்பரமாவது நல்லதை சொல்கிறதா? எந்த வீடியோ கேமாவது பிள்ளைகளை நல்வழிப்படுத்துகிறதா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

“பணம் இருந்தா ஆயிரம் பொண்டாட்டி கிடைப்பா?”

“எவ்வளவு நாள்தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது”

என வசனம் பேசும் அஜீத்தும், வெட்டியாக பொழுதைப் போக்கி கெத்து காட்டுவது, திருடுவது, அடுத்தவனை ஏமாற்றுவது போன்றவைகளையே கதைகளாக்கி நடித்து வரும் கார்த்தி, விமல், சிவா, சிவகார்த்திகேயன் போன்ற கழிசடைகளும் நம் பிள்ளைகளைச் சீரழிக்கவில்லையா?

மலிவு விலை செல்போன்கள், மெமரி கார்டுகள், இன்டர்நெட்கள் வீடு தேடி வந்து நம் பிள்ளைகளின் மனதில் பாலியல் வக்கிரங்களைத் திணித்து சீரழிப்பது – படிப்பு சொல்லித்தர வேண்டிய அரசே குடிக்கச் சொல்லித் தந்து ஊற்றிக் கொடுப்பது என தூண்டப்படும் நுகர்வுவெறியால் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் பெருகிவருவதை சகித்துக் கொள்ள முடியுமா?

ஆனால், இதை சகஜமாக கருதும் அளவிற்கு நம்முடைய சிந்தனையை – உணர்வை மழுங்கடித்து சொரணையற்றவர்களாக மாற்றி வருகிறார்கள்.

யார் தெரியுமா?

சினிமா, சீரியல், விளம்பரங்களை நடத்தும் நிறுவனங்கள், அவைகளுக்கு பணத்தை வாரி இறைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள், இவைகளுக்கு அடியாள் வேலை செய்யும் அதிகாரிகளும், போலீசும், ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளும்தான்.

இதற்கு விடிவே இல்லையா? ஏன் இல்லை?

“எரிகிறத பிடிங்கினா கொதிக்கறது அடங்கும்” என்று மக்கள் கூறுவதுபோல, பிரச்சினைக்கு ஆணிவேரான நுகர்வுவெறியைப் பரப்பும் கார்ப்பரேட் சீரழிவுக் கலாச்சாரத்தையும், அரசே சாராயம் விற்கும் அக்கிரமத்தையும் ஒழிக்க வேண்டும். இவற்றை தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பெயரில் அதாவது மறுகாலனியாக்கக் கொள்கை மூலம் திணித்து, இதற்கு அடியாள் வேலை செய்யும் மக்கள் விரோத அரசை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும். இதற்கு மாற்றாக நாமும் ஒரு மாற்று அதிகாரத்திற்கான கமிட்டியைக் கட்ட வேண்டும்.

“இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆகிற விசயமாக சொல்லுங்கள்” என்று ஒதுங்கி நின்றால் எதுவும் நடக்கப் போவதில்லை. உங்கள் வீடு கொள்ளை போகலாம். ஏதோ ஒரு பொறுக்கியால் உங்கள் பிள்ளைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகலாம். கொலை செய்யப்படலாம். இக்கொடுமைகளை விடவா, இதை மாற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது கடினம்?

நமது வாழ்க்கைக்காக நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்? உங்களோடு கைகோர்த்து போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வாருங்கள் போராடுவோம், சாதித்துக் காட்டுவோம்.

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !

38

மிழக பொறியியில் கல்லூரிகளில், தலித் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (11.08.2014) ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சலிங்
அண்ணா பல்கலைக் கழகம் கவுன்சலிங்

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் புள்ளிவிவரப்படி 2006-07-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகளின் மாணவிகள் 2,361 பேர் சேர்ந்தனர். 2013-14-ம் ஆண்டில் 10,505 மாணவிகள் சேர்ந்திருக்கின்றனர். பொதுப்பிரிவு மாணவிகளின் நிலையோ இந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை.

2006-07-ல் 4,498 ஆக இருந்த பொதுப்பிரிவு மாணவிகள், 2013-14-ல் 6,535-ஆக மட்டுமே அதிகரித்திருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் 2013-14-ம் ஆண்டில் பொதுப்பிரிவு பெண்கள் 184-ஆக இருக்க, தலித் மாணவிகள் 577 ஆக சேர்ந்திருக்கின்றனர்.

இந்த ஆண்டுகளில் பொதுவாக பொறியியல் மாணவர் சேர்க்கை 2.5 மடங்கு அதிகரித்திருக்கும் போது தலித் மாணவிகளின் சேர்க்கை விகிதம் 4.4 மடங்காக அதிகரித்திருக்கிறது. தலித் ஆண் மாணவர்கள் 2013-14-ம ஆண்டில் 18,988 பேர் சேர்ந்ததை ஒப்பிட்டு பார்த்தாலும் மாணவிகளின் விகித வளர்ச்சி மிக அதிகம்.

“அவர்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாக இந்த மாற்றத்தை பார்க்கலாம். அவர்களது சூழ்நிலையிலிருந்து வெளியே வரும் வழியாக, கல்வியை பார்க்கும் விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது” என்று லயோலா கல்லூரியின் உதவி பேராசிரியர் அம்ரிதா லெனின் கூறியிருக்கிறார்.

எனினும் இந்த புள்ளிவிவரங்கள் கூறும் தலித் மாணவிகளின் வளர்ச்சி உண்மையானதா?

2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 16.6% தலித் மக்கள் வாழ்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய தலித் மக்கள் தொகையில் 7.2%-த்தைக் கொண்டிருக்கும் தமிழகம், தலித் மக்கள் வாழும் நான்காவது பெரிய மாநிலமாகும். தமிழகத்தின் மக்கள் தொகை விகிதப்படி இங்கே 18% தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

தற்போதைய நிலவரத்தின் படி தமிழகத்தில் 570 பொறியியில் கல்லூரிகள் உள்ளன. சில நிர்வாக பிரச்சினைகள், அரசின் மேலோட்டமான கண்காணிப்பு நாடகம், நடவடிக்கை காரணமாக இந்த எண்ணிக்கை சற்று குறையலாம். எனினும் மேற்கண்ட தலித் மாணவிகள் குறைவாக சேர்ந்தாக கூறப்படும் 2006-07-ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 280-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இங்கே புதிதாக துவங்கப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 2013-ம் ஆண்டில் இரண்டு மடங்கு கல்லூரிகள் அதிகரித்திருக்கின்றன.

ஆகவே தலித் மாணவிகளின் சேர்க்கை வளர்ச்சியில் இந்த கல்லூரி பெருக்கம் மறைந்திருக்கிறது. மொத்தமுள்ள பொறியியல் கல்லூரிகள் உள்ள 2,36,417 இடங்களில் தலித் மக்களின் 18% சதவீத இருப்பின்படி 42,255 பேர் படிக்க வேண்டும். ஆனால் இரு பால் பிரிவு தலித் மாணவர்களை கூட்டினாலும் அது 30,000 மட்டுமே வருகிறது. இதில் அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான 15% இட ஒதுக்கீட்டின் படி சுமார் 2,000 இடங்கள் வரலாம். இவற்றில் கட்டணம் குறைவு என்பதோடு, இங்கு படித்தால் ஒப்பீட்டளவில் மதிப்பும், வேலை வாய்ப்பும் சற்று அதிகம் என்பதால் தலித் மாணவர்களில் அதிக மதிப்பெண் வாங்கும் பிரிவினர் கண்டிப்பாக சேர்ந்து விடுவார்கள். மீதி இடங்கள் அதிக கட்டணம் வாங்கும் தனியார் கல்லூரிகள். இதில்தான் பிரச்சினையே.

சரி, எது எப்படியோ தலித் மக்களின் விகிதத்திற்கு நெருக்கமாக இந்த எண்ணிக்கை வருகிறதே என்று சிலர் எண்ணலாம். அப்படி வைத்துக் கொண்டாலும் தலித் மாணவர்கள் சேர்க்கை வளரும் விகிதத்தில் மற்ற பிரிவினர்களும் இருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லை என்பதை இந்தக் கணம் வரை கிட்டத்தட்ட பாதி இடங்கள் அதாவது 1,00,000-த்திற்கும் மேற்பட்ட இடங்கள் யாரும் சேராமல் இருக்கும் யதார்த்தம் நிரூபிக்கின்றது. பல கல்லூரிகள் ஒரு மாணவரைக் கூட சேர்க்காமல் கடை விரித்திருக்கின்றன.

இந்த காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன. அதிலொரு முயற்சியாகத்தான் இந்த ஊடகச் செய்தியை பார்க்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா, சீனாவின் கூட்டுத் தொகையை விட அதிகமான பொறியியல் மாணவர்களை இந்தியா வருடந்தோறும் உற்பத்தி செய்கிறது. கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவர்கள். இவற்றில் ஐ.டி நிறுவனங்கள் சராசரியாக ஆண்டு தோறும் சுமார் 50,000 மாணவர்களை மட்டும் பணிக்கு அமர்த்துகின்றன. அதுவும் தற்போது குறைந்து வருவதோடு, சம்பள விகிதமும் சரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கைக்கு நிகராகவோ இல்லை குறைவாகவோ உற்பத்தித் துறை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றன. இந்த ஒரு லட்சத்தை கழித்து விட்டால் மீதியுள்ளோரில் கால்வாசிப் பேர் ஏதோ ஒரு வேலையை மிகக் குறைந்த சம்பளத்திற்காக ஏற்கின்றனர். முக்கால்வாசிப்பேர் வேலையற்று இருக்கின்றனர். இவர்களும் இறுதியில் வேறுவழியின்றி ஏதோ ஒரு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள்.

சாதி கௌரவம், சொத்துடைமை உள்ளவர்கள் மட்டும் திருமணத்திற்கு விலை பேசும் சரக்காக பொறியியல் படிப்பை பயன்படுத்துகிறார்கள். பெரும்பான்மையினர் படித்து நல்ல வேலை கிடைத்து அதிக சம்பளம் வாங்க முடியும் என அப்பாவித்தனமாக நம்பி ஏமாறுகிறார்கள்.

இது நடுத்தர வர்க்கத்திற்கு பட்டுத் தெரிந்த பிறகே பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாகும் நிலைமை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமையில் தலித் மாணவிகள் அதிகம் சேர்கிறார்கள் என்பதை எப்படி பார்ப்பது?

தாழ்த்தப்ப்ட்ட மக்களில் நடுத்தர வர்க்கமாக, மாத சம்பளம் வாங்கும் பிரிவினரே இத்தகைய உயர்கல்விகளில் தமது பிள்ளைகளை சேர்க்கின்றனர். இதற்காக தமது சொத்துக்களையும், வாழ்நாள் வருமானத்தையும் அடகு வைத்து படிக்க வைக்கின்றனர். ஏழைகளில் இத்தகைய படிப்பிற்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிலும் லட்சத்திற்கு ஒரு மாணவருக்கு தினமணி போன்ற ஊடகங்களின் கௌரவ நன்கொடை மூலம் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆரம்பக் கல்வி, பள்ளிக் கல்வி படிப்பில் இடைநிறுத்தம் செய்து வெளியேறும் எண்ணிக்கையில் தலித் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க அளவில் படிக்கும் இம்மக்களும், அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதிலிருந்தும் இதை புரிந்து கொள்ள முடியும். எந்த வசதிகளுமற்று நடத்தப்படும் அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். எனினும் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கணிசமாக படிக்கின்றனர். மேற்கண்ட பிரச்சினைகள் இவர்களுக்கும் பொருந்தும்.

பொறியியல் படிப்பின் விகிதத்திற்கு நிகராக நிலவுடைமையிலோ இல்லை மற்ற தொழில் சொத்துக்களிலோ தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை. கிராமங்களிலிருந்து கூலி வேலைக்காக குடும்பம் குடும்பமாக வெளியேறும் பிரிவினரில் இவர்களே குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றார்கள்.

இதன்படி பார்த்தால் சமூகத்தில் ஏற்படும் எத்தகைய விழிப்புணர்வும் இம்மக்களை கடைசியில்தான் எட்டும். அதனால்தான் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பது நிச்சயமில்லை, படிப்பதற்கு அதிக பணம் புரட்ட வேண்டும் என்ற யதார்த்தத்தின் படி மற்ற பிரிவு மக்கள் அதை புறக்கணிக்கத் துவங்கும் பொழுது தலித் மக்கள் அதில் அதிகம் சேர்கிறார்கள் என்பது வளர்ச்சியா இல்லை ஏமாற்றுதலா?

அவர்களது பொருளாதாரத்தை சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் கைப்பற்றும் சதியை வளர்ச்சி, சாதி அடக்குமுறைக்கு எதிரான எதிர்வினை என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பது சரியா என்பதே நமது கேள்வி.

கிராம அளவில் நிலவுடைமை சமூக அமைப்பில் பொருளாதார ரீதியில் தலித் மக்களுக்கு விடுதலை கிடைக்காத வரை இத்தகைய சீர்திருத்த முயற்சிகள் அவர்களை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் மற்ற சாதி மக்களையும் திசை திருப்பும் ஒன்றாகும்.

குறைவு, கூடுதல் என்று எண்களை கொண்டு வளர்ச்சியை காட்டும் ஊடக அறிஞர்கள் சமூகத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி பார்க்க மறுப்பது தற்செயலான ஒன்று அல்ல. ஏழைகளை ஏழைகளாக இருக்க வைக்கும் முயற்சி பழைய பஞ்சாங்க முறையில் இல்லை என்றாலும் இன்ஜினியரிங் வடிவில் வருதால் அதை புதிய கம்ப்யூட்டர் பஞ்சாங்கம் என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

மேலும் படிக்க

பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை

6

“இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பட்ஜெட்” எனத் தனது முதல் பட்ஜெட்டை வருணித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அம்பானி, அதானி தொடங்கி ஒட்டுமொத்த இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமும் மோடி அரசின் முதல் பட்ஜெட்டை ஆரவாரமாக வரவேற்றிருப்பதால், இது அவர்களுக்கான பட்ஜெட்தான் என்பதை நம்மால் சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அருண் ஜெட்லி குறிப்பிடும் ஏழை யார் என்பதுதான் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விடயம். அதற்கும் பட்ஜெட்டிலேயே விடை இருக்கிறது.

பட்ஜெட்வெங்காயத்தின் விலை சாமானிய மக்கள் நெருங்க முடியாத அளவிற்கு ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் வெளிவந்த நரேந்திர மோடி அரசின் பட்ஜெட்டில் 19 இன்ஞ்சுக்குக் குறைவான எல்.சி.டி. மற்றும் கேதோடு கதிர் டி.வி.க்கள், மைக்ரோ அவன் அடுப்பு, தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள், குளிர்பதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு, அவை இனி விலை மலிவாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், வீடு, கார் தொடங்கி ஐ பேட், ஐ ஃபோன் வரையிலான நவீனமான நுகர்பொருட்கள் அனைத்தையும் இ.எம்.ஐ. மூலமே வாங்கி அனுபவித்துவரும் நகர்ப்புறத்துப் புதிய நடுத்தர வர்க்கம்தான் மோடி அரசின் பார்வையில் ஏழைகள். அதற்குக் கீழே வாழும் பல்வேறு தட்டுக்களைச் சேர்ந்த சாமானிய மக்களனைவரும் இந்த அரசிற்குத் தேவையற்றவர்கள்.

இந்த பட்ஜெட் இந்தியத் தரகு முதலாளிகள்-பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்கள்-புதிய நடுத்தர வர்க்கத்திற்கானது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்து தன்னைப் பிரதமராக அமர வைத்த இந்தியத் தரகு முதலாளிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள நரேந்திர மோடி, அக்கடனுக்கான முதல் தவணையை பட்ஜெட்டாகச் சமர்ப்பித்திருக்கிறார்.

இந்தியாவின் இயற்கை வளங்கள், நிதி ஆதாரங்கள் அனைத்தையும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஒரேயொரு உத்தரவு மூலம் பட்டா போட்டுக் கொடுத்துவிடும் துணிவு கொண்ட பாசிஸ்டுதான் மோடி என்றபோதும், தேர்தல், நாடாளுமன்றம், நீதிமன்றம், எதிர்க்கட்சிகள் என்ற ஜனநாயக சல்லாத்துணியை இந்தியா போர்த்திக் கொண்டிருப்பது அவரின் விருப்பத்திற்குத் தடையாக இருக்கிறது. அதனால்தான் பி.பி.பி. (அரசு-தனியார் கூட்டு Public Private Partnership) என்ற ரூட்” வழியாக இந்திய நாட்டின் வளங்களைத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார், அவர். இதுதான் (பி.பி.பி.) இந்த பட்ஜெட்டின் உயிர்நாடி.

ஆவடி மேற்கு காந்திநகர் தெரு
அடிக்கட்டுமான வளர்ச்சியில் இரு துருவங்கள் : சென்னை – ஆவடியிலுள்ள மேற்கு காந்திநகர் தெரு

ஏற்கெனவே உள்ள நகர்ப்புறங்களையொட்டி 100 புதிய நகரங்களை அமைப்பது, இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட நகரங்களில் புதிய விமான நிலையங்களை அமைப்பது, 16 புதிய துறைமுகங்களை உருவாக்குவது, 11,635 கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவுபடுத்துவது, 5,000 கோடி ரூபாய் செலவில் நாடெங்கும் குளிர்பதனக் கிடங்குகளை அமைப்பது, 4,200 கோடி ரூபாய் செலவில் உ.பி.யின் அலகாபாத்திலிருந்து மேற்கு வங்கத்திலுள்ள ஹால்தியா வரையில் கங்கை நதியில் 1,500 டன் எடை கொண்ட கப்பல் போக்குவரத்தை அமைப்பது எனத் தனியார் பங்கேற்புடன் அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் திட்டங்கள் பட்ஜெட் முழுவதும் நிரம்பி வழிகின்றன.

மோடி எந்தளவிற்கு தனியார்மயத்தின் சேவகன் என்பதற்கு ரயில்வே பட்ஜெட் இன்னொரு சாட்சி. ரயில் நிலையங்களையும் முனையங்களையும் நவீனப்படுத்துவது, ரயில் நிலையங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பது என்பவை உள்ளிட்டு அத்துறையின் கேந்திரமான பணிகள் அனைத்தும் இனி பி.பி.பி.-இன் வழியாகத்தான் நிறைவேற்றப்படும் என அறிவித்து, ஒரே பட்ஜெட்டில் ரயில்வே துறையை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிக் கொழுப்பதற்கான களமாக மாற்றிவிட்டது, மோடியின் அரசு.

கிருஷ்ணகிரி - தோப்பூர் விரைவுச் சாலை
அடிக்கட்டுமான வளர்ச்சியில் இரு துருவங்கள் : கிருஷ்ணகிரி – தோப்பூர் விரைவுச் சாலை (கோப்புப் படம்)

ஈருடல் ஓருயிராக அடிக்கட்டுமானத் துறையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் எந்தளவிற்கு வளர்கின்றனவோ அந்தளவிற்கு இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என்ற மோடியின் ஃபார்முலா, மன்மோகன் சிங் ஃபார்முலாவின் ஜெராக்ஸ் காப்பிதானே தவிர, இதில் புதுமையும் கிடையாது; சுயமான புத்திசாலித்தனமும் கிடையாது. அது மட்டுமல்ல, மோடியின் பட்ஜெட், ப.சி.யின் இடைக்கால பட்ஜெட்டின் நீட்சிதான் என்பதை மோடியின் ஆதரவாளர்களால்கூட மறுக்க முடியவில்லை. அதனால்தான், “காங்கிரசு இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனத் தேர்தலில் சவடால் அடித்த மோடியால் காங்கிரசு முத்திரை இல்லாத பட்ஜெட்டைக்கூடப் போட முடியவில்லை” எனக் கூறி, மோடியின் மூக்கை உடைத்திருக்கிறார் ப.சிதம்பரம்

மோடி அரசின் பட்ஜெட் அடிப்படையில் புதிய மொந்தை பழைய கள்ளுதான் என்றாலும், தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் அவரது அரசு காட்டியிருக்கும் வேகம் மன்மோகன் சிங் கும்பலையே அசர வைத்துவிடும். அடிக்கட்டுமானத் திட்டங்களில் பி.பி.பி. முறையில் நுழையும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதற்கு ஏற்ப பொதுத்துறை வங்கிகள் தனிச் சிறப்பான முறையில் சந்தையிலிருந்து சேமிப்புகளைத் திரட்டிக் கொள்ளவும், அப்படி திரட்டப்படும் சேமிப்புகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. வாராக் கடன்கள் பொதுத்துறை வங்கிகளைத் திவாலாக்கிவிடும் சூழ்நிலையில் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அபாயகரமான அனுமதி, கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிலுள்ள பொதுமக்களின் சேமிப்புகளை மனம்போன போக்கில் சூறையாடுவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள லைசென்சு தவிர வேறில்லை. மேலும், அரசு-தனியார் கூட்டுறவு திட்டங்களைத் தடங்கலின்றி நிறைவேற்றுவதற்காக “3பி” என்ற பெயரில் அரசு நிறுவனமொன்று உருவாக்கப்பட்டு, அதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆளுங்கும்பலின் செல்லப்பிள்ளையாகக் கவனிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறை சரிந்து கிடப்பதால், அதனைத் தூக்கி நிறுத்தும் நோக்கில் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விலக்கு அளிக்கும் வரம்பு 1.5 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தைப் பொதுமக்களிடமிருந்து திரட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, அப்பங்குகளுக்கு கார்ப்பரேட் வரி விதிப்பிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய ஏகபோக நிறுவனங்கள் நுழைவதற்கு ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் மூலதனமிட வேண்டும்; 50,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களில் மட்டுமே அந்நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படும் என்றிருந்த கட்டுப்பாடுகள் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு, 50 இலட்சம் அமெரிக்க டாலர்கள் எனத் தளர்த்தப்பட்டுள்ளன.

05-1-captionகார்ப்பரேட் நிறுவனங்கள் மீது பின் தேதியிட்டு வரி விதிக்கும்படியான பொது வரி ஏய்ப்பு தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய காங்கிரசு கூட்டணி அரசு, இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் அச்சட்டத்திற்குத் தெரிவித்த எதிர்ப்புக்கு அணிபணிந்து, அதனை ஏப்.2015 வரை அமலுக்குக் கொண்டுவரப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. அரசனை விஞ்சிய விசுவாசியாக இச்சட்டத்தை ‘வரி தீவிரவாதம்’ எனத் தனது தேர்தல் அறிக்கையிலேயே குற்றஞ்சுமத்தியிருந்த பா.ஜ.க., இச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், அதுவரை இச்சட்டத்தின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளித்திருக்கிறது. தற்பொழுதுள்ள வணிக வரி விதிப்பு முறையைக் கைவிட்டு, அதனிடத்தில் நாடெங்கும் ஒரேமாதிரியான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவரவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மீது விதிக்கப்படும் டிவிடெண்ட் வரி, மாட் வரிகளைச் சீரமைக்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பத்தாண்டு கால வரி விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு அப்பால், காங்கிரசு கூட்டணி அரசால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் அளிக்கப்பட்டிருந்த ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமான வரிச் சலுகைகள் மீது மோடி அரசும் கைவைக்கவில்லை என்பதோடு, தனிநபர் வருமான வரி, சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றில் மேலும் 22,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்திற்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள தனிநபர் வருமான வரி விலக்கு மற்றும் முதலீட்டுக்கான வரி விலக்குகளால் அவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 5,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை மிச்சமாகுமென்று கூறப்படுகிறது.

டெல்லி விமான நிலையம்
டெல்லி விமான நிலையம் – பி.பி.பி திட்டங்களில் நடக்கும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எடுப்பான உதாரணம்.

இந்த வரி விலக்குகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பை ஈடுகட்ட 7,525 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அன்றாடங் காய்ச்சிகளான சாமானிய மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் இது. இதற்கு அப்பால் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு பெட்ரோலியப் பொருட்கள் மீதான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. யூரியாவிற்கு வழங்கப்படும் மானிய முறையை மாற்றியமைப்பதன் மூலம் உர மானியத்தில் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு வெட்டிவிடவும் திட்டங்கள் தயாராகி வருகின்றன. பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு; பட்ஜெட்டில் மானிய வெட்டு, மறைமுக வரி உயர்வு – “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம்” எனச் சவடால் அடித்த உத்தமர்களின் யோக்கியதை இதுதான்.

இவை ஒருபுறமிருக்க, பற்றாக்குறையை ஈடுகட்ட 63,000 கோடி ரூபாய் பெறுமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை – கணிசமான இலாபத்தில் இயங்கும் செயில், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா ஆகியவற்றின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தனியார்மய நடவடிக்கையோடு, காப்பீடு துறையிலும் இராணுவத் தளவாட உற்பத்தித் துறையிலும் 49 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, இணையதள வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி – என மோடியின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானதாகவும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் மற்றும் புதுப் பணக்கார கும்பலின் மனதைக் குளிர்விப்பதாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காக 2.5 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இதுதான் இந்த பட்ஜெட்டின் குறிப்பிடத்தக்க அம்சம்” என தினமணி நாளிதழின் நடுப்பக்க கட்டுரையொன்று சிலாகித்துப் பேசுகிறது. “இவ்வளவு கோடி ரூபாயைச் செலவழித்து உருவாக்கப்படும் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் யாருக்குப் பயன்படும்?” என்ற கேள்விதான் இந்த பட்ஜெட்டின் மக்கள் விரோதத் தன்மையை முழுமையாக வெளிப்படுத்தும்.

வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வரும் கிராமப்புற ஏழைகள் தகரக் கொட்டகையிலும், நடைபாதையிலும், கட்டுமானங்கள் நடக்கும் பொட்டல் வெளியிலும் தங்க வேண்டிய அவலத்தில் இருத்தப்பட்டுள்ளனர். அவர்களின் உயிருக்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடையாது என்பதை மௌலிவாக்கம் சாவுகள் அம்பலப்படுத்தின. நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 75,000 கோடி ரூபாய், நகர்ப்புற வளர்ச்சியின் வேராக இருக்கும் இத்தொழிலாளர்களுக்கு ஒரு குடிசையைக்கூட கட்டிக் கொடுக்கப் பயன்படப் போவதில்லை. ஏனென்றால், நகர்ப்புற சேரி ஒழிப்புத் திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பாக்கிவிட்டு தனது பொறுப்பைக் கைகழுவிவிட்டது, மோடி அரசு.

100 புதிய நகர்ப்புறங்களை அமைக்க 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கும் மோடி அரசு, கிராமப்புறங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் என்ற சிறுதொழில் முனைவோரின் கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் 45 சதவீதத்தை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நிறைவு செய்கின்றன; இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் சிறு, குறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்திருக்கிறது. 10.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல இலட்சம் கோடி ரூபாய் மூலதனத்தையும் பல இலட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகை களையும் அளித்திருக்கும் மோடி அரசு, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது, “இந்நிறுவனங்களுக்கு ஊக்க மூலதனம் அளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் கொண்ட நிதியம் உருவாக்கப்படும்” என்ற வாக்குறுதி மட்டும்தான்.

ரயில்வே துறையில் தாழ்த்தப்பட்டோர் மலம் அள்ளிவரும் அவலத்தை ஒழித்து, ரயில் பெட்டிகளிலுள்ள கழிப்பறைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கண்டுகொள்ளாத ரயில்வே பட்ஜெட், பெருநகர ரயில்வே நிலையங்கள் அனைத்திலும் “வைஃபி” இணைப்புப் பொருத்தப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற சாமானிய மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போடுகிறது, ரயில்வே அமைச்சகம். இதற்காகத் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, நடுத்தர வர்க்கத்தையும் புலம்ப வைத்துவிட்டது. சென்னையிலிருந்து தென்தமிழகம் செல்லும் தடத்தை இரட்டைப் பாதையாக மாற்றக் கோரும் நீண்ட நாள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, 50,000 கோடி ரூபாய் செலவில் புல்லட் ரயில் விடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற பெயரில் நகர்ப்புறங்களில் கட்டப்பட்டிருக்கும் பாலங்களும், விரைவுச் சாலைகளும், மிக நவீனமான விமான நிலையங்களும் சாமானிய மக்களின், கிராமப்புற விவசாயிகளின் குடிசைகளை, வாழ்வாதாரங்களைப் பறித்திருக்கிறதேயொழிய, அவர்களது வாழ்க்கையிலிருந்து வறுமையை விரட்டியடித்து விடவில்லை. வாஜ்பாயி காலத்தில் கொண்டுவரப்பட்ட தங்க நாற்கரண சாலை கட்டணக் கொள்ளையை நிரந்தரமாக்கியதேயொழிய, வேலைவாய்ப்புகளை நிரந்தரமாக்கவில்லை. மன்மோகன் சிங் ஆட்சியில் கட்டப்பட்ட டெல்லி மற்றும் மும்பய் விமான நிலையங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கும், ஊழலுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடனில் 53 சதவீதம் கட்டுமான கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏப்பம் விட்டதாகும். மோடி அரசின் அடிக்கட்டுமான மற்றும் பி.பி.பி. திட்டங்கள் இதிலிருந்து வேறுபட்டதாக இருந்துவிடப் போவதில்லை.

இந்த பட்ஜெட் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் எட்டு சதவீத வளர்ச்சியைச் சாதிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருப்பதாக மோடியின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். 2008-க்கு முன்பு சாதிக்கப்பட்ட எட்டு சதவீத ‘வளர்ச்சி’ இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளைத் தற்கொலைக்கு தள்ளிவிட்டது. பல இலட்சக்கணக்கான விவசாயிகளை நடோடிகளாக நகர்ப்புறங்களை நோக்கி விசிறியடித்தது. உத்தரவாதமற்ற வேலையும், அற்பக்கூலியும், விலைவாசி உயர்வும் சாமானிய மக்கள் சந்திக்க வேண்டிய நிரந்தரப் பிரச்சினைகளாகின. இந்த நிலையில் மன்மோகன் சிங்கைவிடத் தீவிரமான தனியார்மய விசுவாசியான மோடி முன்னிறுத்தும் எட்டு சதவீத வளர்ச்சியைக் கற்பனை செய்து பார்ப்பதே மரண பயத்தை ஏற்படுத்துகிறது.

– செல்வம்
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்

27

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 3 : பொதுப்பள்ளிகளும், தாய்மொழி வழிக் கல்வியும்

ரசுப் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் தான் நடக்கின்றன. ஒரு சாதாரண தீப்பெட்டி வாங்கினால் கூட அதில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். தீப்பெட்டி இல்லாத வீடு எதாவது இருக்கிறதா? நமது வரிப்பணத்தில் நடக்கும் பள்ளிகள் முறையாக நடக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டியதும் நமது கடமை தான். ஆசிரியர்களை போதுமான அளவு நியமிக்காவிடில் அதற்காக போராட வேண்டும். அப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கு வராவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் நாம்தான் போராடி அதனை வேண்டும்.

பொதுப்பள்ளி
முன்னர் பொதுப்பள்ளி முறை இருந்தபோது முதலாளி மகனும், தொழிலாளி மகனும் அருகருகே அமர்ந்து கற்றனர்.

தனியார் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். அரசு பள்ளிகளில் நாற்பது சதவீத கல்வி போதனை நேரத்திற்குதான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை நாற்பதால் வகுத்து அந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பதால் பிரச்சினை தீராது. அரசு இதனைத்தான் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஐந்து வகுப்பு வரை இருந்தால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஒரே ஒரு மாணவர் இருக்கும்பட்சத்தில் கூட அதற்கு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.  ஐந்தாம் வகுப்பு முடிக்கும் மாணவருக்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயித்து விட்டால் எப்படியாவது முயன்று ஆசிரியர்கள் கற்பித்து விடுவார்கள். ஆனால் பாடத்திட்டத்தை இதுதான் என வரையறுத்து கொடுத்து விட்டு ஆசிரியர்களை முறையாக நியமிக்காவிடில் அரசு பள்ளிகள் என்றுமே முன்னேற முடியாது.

ஆசிரியர்கள் நடத்தும் குழந்தைகள் மீதான் பாலியல் வன்முறைகளை இப்போது பெரிதாக பேசுகிறோம். ஊடகங்களும் இவற்றை வெளியில் கொண்டு வந்துள்ளன. எங்கள் காலத்திலும் இப்படியான பாலியல் வன்முறை சம்பவங்களை நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. அப்போது ஆசிரியருக்கு எதிராக பேசினால் அடி கிடைக்கும் என்பதால் யாரும் இதனைப் பேசவில்லை.

முன்னர் பொதுப்பள்ளி முறை இருந்தபோது முதலாளி மகனும், தொழிலாளி மகனும் அருகருகே அமர்ந்து கற்றனர். அவர்களிடையேயான தோழமை உணர்வை பொதுப்பள்ளி முறை வளர்த்தது. ஆனால் இப்போது கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைக்கு ஒரு பள்ளி, லட்சாதிபதி பிள்ளைக்கு ஒரு பள்ளி, ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவன் பிள்ளைக்கு ஒரு பள்ளி, ஒன்றுமில்லாதவன் பிள்ளைக்கு ஒரு பள்ளி என சமூகத்தில் இருக்கும் பிரிவுகளையே பள்ளித்துறையும் பின்பற்றுவதாக மாறி விட்டது.

தென் மாவட்ட சாதிக்கலவரங்களின் போது நான் அங்கே ஒரு பதினைந்து நாட்கள் போயிருந்தேன். அங்கே சாதிவாரியாக பள்ளிகள் பிரிந்து கிடக்கின்றன. பறையர் சாதியினை சேர்ந்தவர் தலைமையாசிரியராக இருக்கும் பள்ளியில் தேவர் சாதி மாணவர் சேர மாட்டார். தேவர் சாதி தலைமையாசிரியர் இருக்கும் பள்ளியில் பள்ளர் சாதியினை சேர்ந்த மாணவர் சேர மாட்டார். இருப்பது ஒரே பொதுப்பள்ளியாக, ஊருக்கு ஒரே பள்ளியாக இருக்கும்பட்சத்தில் இதெல்லாம் நடக்குமா? சாதியத்தை ஒழிப்பதற்கு பதிலாக தனியார் பள்ளிகள் இதனை வளர்க்கத்தான் உதவுகின்றன. தரமான கல்வி, மருத்துவத்தை அரசுதான் மக்களுக்கு தர வேண்டும்.

கல்வியை போலவே மருத்துவத்தையும் தனியாருக்கு திறந்து விட்டவர் எம்.ஜி.ஆர்.தான். அப்பல்லோவுக்கு அனுமதி கொடுத்தவர் அவர்தான். கூடவே அரசு மருத்துவமனை நன்றாக நடக்க விடாமலும் செய்தார். அரசு மருத்துவமனைகள் ஒழுங்காக நடந்தால் அப்பல்லோவுக்கு எப்படி ஆட்கள் வருவார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தற்போது ரூ 2 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளுக்கு 2000 தனியார் மருத்துவமனைகள் பரிந்துரைக்கப்பட்டு, அங்கு விலையில்லா மருத்துவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நான் எதிர்ப்பவன். இதனை அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சையாக தர வேண்டும் என்பவன். சொல்லப் போனால் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு பாடம் கற்பித்தவர்களே இந்த நமது அரசு மருத்துவமனையில் உள்ள பேராசிரியர்கள்தான், இவர்களை விடவும் மிகவும் அனுபவம் உடையவர்கள். முன்னர் கவர்னர் முதல் அமைச்சர் வரை எல்லோருமே அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தார்கள். நானே அப்படி பல அமைச்சர்களை அரசு மருத்துவமனையில் சென்றுதான் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் அப்பல்லோவுக்கும், ராமச்சந்திராவுக்கும் ஏன் ஓடுகிறார்கள்? இது தவறு. அரசின் கொள்கை இது. தனியார்மயம் உலக வங்கியின் நிர்ப்பந்தம் காரணமாக நடக்கிறது. முன்னர் விசா மறுத்த அமெரிக்கா இப்போது ஏன் மோடிக்கு பின்னால் வருகிறது. அவனுக்கு வியாபாரம் நடக்க வேண்டும். அதனால் தான் இப்போது காலைப் பிடிக்கிறான்.

ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம் என்று சொல்கிறேன். உங்களுக்கு வேலை தரும் அமெரிக்காக்காரன் உங்களுக்கு எவ்வளவு ஆங்கிலம் தெரியும் என்று பார்த்து வேலை தருவதில்லை. உங்களுக்கு எவ்வளவு கணிதம், அறிவியல், பொறியியல் தெரியும் என்று பார்த்துதான் தருகிறான். ஒரு மொழியை ஓராண்டுக்குள் படித்து விட முடியும். இங்குள்ள துணைத்தூதரகங்களில் அதற்கான பயிற்சியும் தருகிறார்கள்.

அன்னிய மொழி கற்றல்
ஆறு மாதங்களில் அலையன்சு பிரான்சிசில் பிரெஞ்சு மொழி கற்றுத் தருகிறார்கள்.

ஆறு மாதங்களில் அலையன்சு பிரான்சிசில் பிரெஞ்சு மொழி கற்றுத் தருகிறார்கள். அதிலும் தினமும் கூட வகுப்பு கிடையாது. மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். ஓராண்டுக்கு மேற்பட்ட படிப்பு எங்குமே கிடையாது. சிறிதும் பரிச்சயமில்லாத இம்மொழியை ஓராண்டுக்குள் கற்க முடியும்போது, ஏற்கெனவே ஓரளவு நமது சமூகத்தில் நடைமுறையில் உள்ள பரிச்சயமுள்ள ஆங்கிலத்தை டிகிரி வரை பதினைந்து ஆண்டுகள் ஏன் கற்க வேண்டும். இரண்டு கோடை விடுமுறைகளில், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் முப்பது நாட்கள் என ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.

ஆங்கிலமே தெரியாத ஆசிரியரை வைத்துக்கொண்டு எப்படி ஆங்கிலம் கற்றுத்தர முடியும். ஆங்கிலத்தில் பேசவே முடியாத ஒரு ஆசிரியரால் எப்படி ஆங்கில வழியில் கற்றுத்தந்து விட முடியும். வெர்டிபிரேட் என்ற வார்த்தையை அவர் வெறும் மனப்பாட கல்வியாகத்தான் சொல்லித்தர முடியும். நம் ஊரில் ஏழு லட்சம் பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லாமல் இருப்பதால் அல்ல. பொறியியல் அறிவு இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

உயர்கல்வியினை தமிழ்வழியில் கொடுப்பதை கோரும் தீர்மானங்கள் முன்னர் ஆசிரியர் சங்க கூட்டங்களில் முதல் முதலாக வைக்கப்படும். இன்றைக்கு ஆரம்ப கல்வியே தாய்மொழியில் இல்லாத நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்விக்காக நான் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். ஏறக்குறைய 161 நாடுகளைப் பார்த்த வரையில் எங்குமே பயிற்றுமொழி வேற்றுமொழியாக ஒரு நாட்டில் கூட இல்லை. கல்தோன்றி முன்தோன்றா காலத்தே தோன்றியதாக சொல்லிக் கொள்ளும் நாம் தோன்றி 1300 ஆண்டுகள் மட்டுமேயான ஆங்கில மொழியில் தான் கற்கிறோம். சோவியத் யூனியனில் இருந்த துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளில் கூட நர்சரி பள்ளி துவங்கி ஆய்வுப்படிப்பு வரை தாய்மொழியில்தான் கல்வி கற்றல் நடைபெற்று வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற மூன்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கூட அவர்கள் தாய்மொழியில்தான் ஆய்வுப்படிப்பு வரை கல்வியை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் ஜப்பானில்தான் இப்போதும் உள்ளனர். ஒருவர் மட்டும்தான் அமெரிக்கா போயுள்ளார். ஜப்பானியர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான்.

(தொடரும்)

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2014

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. சூரத் குண்டுவெடிப்பு வழக்கு : நிரபராதிகளின் கொலைக்களமாக குஜராத்

2. தலையங்கம்  : குடந்தை வழக்கில் அநீதித் தீர்ப்பு : மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி!

3. மெட்ரிக் கொலைக்கூடங்கள்
தனியார் கல்வி என்று கவுரவமாக அழைக்கப்படும் இந்தத் தொழில், மணற்கொள்ளை கிரானைட் கொள்ளையைப் போன்றதொரு கிரிமினல் தொழில்.  இலஞ்சம், ஊழல், போர்ஜரி, கள்ளக்கணக்கு, கொலை உள்ளிட்ட அனைத்தும் இத்தொழிலின் அங்க லட்சணங்கள்.

4. மீத்தேன் எடுப்புத் திட்டத்தைத் தடுப்போம் ! காவிரி டெல்டாவைப் பாதுகாப்போம் !!

5. பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
நாட்டின் செல்வங்களை “பி.பி.பி” திட்டங்களின் மூலம் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், மோடி

6. பட்ஜெட் பற்றாக்குறை : கஞ்சிக்கில்லாத மக்கள் பணத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானியம்
மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்ட உள்நாட்டில் வாங்கியிருக்கும் மொத்தக் கடனும், கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மேட்டுக்குடி கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகைகளும் ஏறத்தாழ சமமானவை.

7. மரபணு மாற்றுப் பயிருக்கு அனுமதி : இந்திய விவசாயத்தைத் தூக்கிலேற்றுகிறார் மோடி!
இருபதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான கள ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்டு மேலும் 15 உணவுப் பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.

8. சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!
இந்து மதவெறி பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலம் முறியடித்துவிட முடியாது என்பதை மோடி அரசின் நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டுகின்றன.

9. சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…

10. பாலஸ்தீனம் – உக்ரைன் : மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !
மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரசியாவைப் பொறுப்பாக்கித் தண்டிக்கத் துடிக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள், காசா மீது இசுரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பக்கதுணையாக நிற்கின்றன.

11. ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம் 3
அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசார நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்

12. நரேந்திர மோடி அரசு : சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!

13. தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் : பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது !

14. பட்ஜெட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம் !

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு

2

புதுச்சேரியில் நடப்பது யாருடைய அரசாங்கமாக இருந்தாலும், ஆட்சி ரவுடிகளின் கையில்தான் இருக்கிறது. ரவுடிகளின் முக்கியமானதொரு தொழில் லேபர் கான்டிராக்ட். எந்த வித உரிமைகளும் இல்லாமல் கொத்தடிமைத் தொழிலாளர்களாக நடத்தப்படும் கான்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த 5-ம் தேதி புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி, ரவுடிகளால் தாக்கப்பட்டது. தாக்கியவர்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது. 8 ரவுடிகளும் சில தொழிலாளர்களும் மருத்துவமனையில். தொழிலாளர்கள் மட்டும் 20 பேர் சிறையில்.

நடந்த நிகழ்வுகளை கீழே விவரிக்கிறோம். மானேசரில் தொடங்கி புதுச்சேரி வரையில் தொழிலாளி வர்க்கத்தின் மீது இழைக்கப்படும் அநீதி ஒன்றுதான். அதற்கு விடையும் ஒன்றுதான் என்பதை இந்த அறிக்கையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியுமெனக் கருதுகிறோம்.

000

தொழிலாளி உரிமைபுதுச்சேரி மாநிலம், திருபுவனை தொழிற்பேட்டையில் 150 தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் 20 முதல் 30 பேர் மட்டும்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மற்ற அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். பல நிறுவனங்களில் நூற்றுக்கணக்கிலும் சில நிறுவனங்களில் ஆயிரக்கணக்கிலும் கூட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, வேர்பூல் – Whirlpool குளிர்சாதன பெட்டிக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் மதர் பிளாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் 22 பேர் தான் நிரந்தரத் தொழிலாளர்கள், இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள். இருவருக்கும் செய்கின்ற வேலையில் வேறுபாடு இல்லை என்றாலும் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு இ.எஸ்.ஐ, பி.எஃப் கூடக் கிடையாது.

ரயில்களுக்கான பிரேக் தயாரிக்கும் ரானே பிரேக் நிறுவனத்தில் வெறும் 64 பேர் தான் நிரந்தரத் தொழிலாளிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளிகள். நிரந்தரத் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடினால் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து ஆலையை இயக்கி, போராடும் தொழிலாளியை மிரட்டுவது நிர்வாகங்களின் வாடிக்கை.

தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டுவது, காண்டிராக்ட் தொழிலாளிகள், நிரந்தர தொழிலாளிகளிடையே ஒற்றுமையைக் கட்டுவது, ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பது – ஆகியவற்றுக்காக புதுச்சேரியில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது

சமீபத்தில் ஒப்பந்த தொழிலாளர் முறையைத் தடை செய்ய வேண்டும் என பு.ஜ.தொ.மு சார்பாக திருபுவனை தொழிற்பேட்டையில் துவங்கி புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆலைகளின் சுற்று வட்டாரத்திலும் பு.ஜ.தொ.மு வின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. சுவரொட்டிகளை கண்டவுடனேயே ஆத்திரம் கொண்ட லேபர் காண்டிராக்டர்களான சுதாகர், பூபாலன் மதர் பிளாஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பு.ஜ.தொ.மு கிளைச் செயலாளரான தோழர் பிரபுவை கொலை செய்யப்போவதாக மிரட்டியிருக்கின்றனர். திருபுவனை காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுத்தார் பிரபு. புகாரை வாங்கிக்கொண்ட ஆய்வாளர் அதற்கான CSR-ஐ (ரசீதை) கொடுக்காமல், மாலை ஸ்டேசனுக்கு வருமாறு கூறியிருக்கிறார்.

மாலையில் போலீசு நிலையத்துக்கு பிரபு சென்றபோது இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் அங்கே குவிந்திருந்தனர். தகவல் அறிந்து, இருபதுக்கும் மேற்பட்ட தோழர்களும் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

புதுச்சேரியில் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் அதிகாரத்தை கூட போலீசார் தங்களிடம் வைத்துக்கொள்ளவில்லை. ஸ்டேசனை மட்டும் லீசுக்கு விட்டிருப்பதால், “நீங்களே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒப்பந்ததாரர்களில் ஒருவன் “ஏன் நண்பா நமக்குள்ள பிரச்சினை, இது எங்களோட பொழப்பு, தொழிலாளிகளை நிரந்தரப்படுத்தனும்கிற கோரிக்கைகளை எல்லாம் வைக்காதீங்க, நம்ம எல்லோரும் உள்ளூர் ஆளுங்களா இருக்கோம், எதுக்கு பிரச்சினை பேசாம கேச வாபஸ் வாங்கிக்கங்க” என்று நயமாக மிரட்டினான்.

தனது புகாரில் நிர்வாகத்தின் தூண்டுதலால் தான் சுதாகரும், பூபாலனும் தன்னை தாக்க வந்தனர் என்று தோழர் பிரபு கூறியிருந்தார். ஆனால் போலீசாரோ நிர்வாகத் தரப்பை விசாரிக்க கூட இல்லை. அதே நேரம் “ஆலையின் HR அதிகாரியை தோழர்கள் தாக்க முயற்சித்தனர்” என்றொரு பொய் புகார் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டிருந்தது. எந்த தோழர் மீது நிர்வாகம் பொய்ப்புகார் கொடுத்ததோ, அவர் குறிப்பிட்ட அந்த நாளில் ஆலையிலேயே இல்லை. தொழிலாளர் உதவி ஆணையரை சந்திக்கச் சென்றுள்ளார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தனர்.

வேலழகன் என்ற லாபர் காண்டிராக்டர் “நீங்க போஸ்டர் போட்டது தப்பு, பேசாம கேசை வாபஸ் வாங்கிக்கங்க” என்றான். அவனோடு வந்திருந்த இருபது பேரில் ஆறு ஏழு பேர் நல்ல போதையில் சலம்பிக் கொண்டே இருந்தனர்.

“எதுக்கு மாப்ள இவனுங்கட்டல்லாம் கத்தினிருக்கே? போட்டுத்தள்ளிட்டு போறத வுட்டுட்டு…” என்று ரவுடிகள் ஸ்டேஷனிலேயே உதார் விட, அதையும் போலீசார் வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

போதையில் இருந்த ரவுடிகளின் அலப்பறை மிகவும் அதிகரிக்கவே “ஏம்பா எதுனாலும் சமாதானமா பேசுங்க, இல்லைன்னா நான் FIR போட்றுவேன்” என்று கூறி ஸ்டேசனில் ஒழுங்கை நிலைநாட்டினார் ஆய்வாளர்.

தொழிலாளி உரிமைஉடனே வேலழகன் யாருக்கோ போனைப் போட்டு “மாப்ள இவனுங்க என்னா பேசுனாலும் கலைய மாட்றானுங்கடா, நம்மாளுங்களுக்கு போதை இறங்கிடுச்சுன்னா கெளம்பிறுவானுங்க போல இருக்குதுடா, இன்னா பன்றது” என்றான். சற்று நேரத்தில் தொழிலாளிகள் கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல் அங்கே திரண்டு விட்டனர். ரவுடிகள் இடத்தை காலி செய்யத்தொடங்கினர்.

துணை ஆய்வாளர் “இது தொழிலாளர் பிரச்சினையாக இருக்கிறது எனவே இதற்கு தனியாக FIR போட முடியாது” என்றார். “என்னங்க ஒரு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விட்டிருக்காங்க இதுக்கு லேபர் ஆபீசுக்கு போகச்சொல்றீங்களா? கம்பெனிக்குள்ள கொலை நடந்தாலும் இப்படிதான் பேசுவீங்களா” என்று கேள்வி எழுப்பினர். எது நடந்தாலும் FIR போடுவதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார் துணை ஆய்வாளர்.

இச்சம்பவத்துக்குப் பத்து நாட்கள் கழிந்த பின்னர், திருவெண்டார் அருகே உள்ள சன் பார்மா என்கிற நிறுவனத்தில் சிஐடியு CITU தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. அப்போது கொடியேற்றும் நேரம் பார்த்து வந்த இருபது பேர் கொண்ட கும்பல் தொழிற்சங்க நிர்வாகிகளை தாக்கிவிட்டு “நாங்க இருக்கிற தொழிற்பேட்டையில் எவனும் சங்கம் வைக்கக்கூடாது” என்று மிரட்டியது. சிஐடியு-வினர் போலீசில் புகார் கொடுத்தனர். எதுவும் நடக்கவில்லை. 2009-ல் ரானே பிரேக் நிறுவனத்தில் தொழிலாளர்கள் சங்கம் துவங்கிய போதும் இதே போல தான் ரவுடிகள் அடித்து உடைத்தனர். பிறகு தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு வில் இணைந்தனர்.

இந்தப் பின்புலத்தில்தான் திருபுவனை தொழிற்பேட்டையில் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து, பு.ஜ.தொ.மு சார்பாக 5.8.2014 அன்று திருபுவனையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்து தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. எல்லா இடங்களிலும் ரவுடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் அனுபவத்தை கூறி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கடைசி வரையில் பேசாமல் இருந்துவிட்டு, போராட்ட நாளான 5-ம் தேதி மாலை 3 மணிக்கு துணை ஆய்வாளர் தோழர்களை அழைத்து “ உங்களுக்கு ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் தான் அனுமதி, பேரணிக்கு இல்லை” என்றார். அதை எழுத்துபூர்வமாகத் தருமாறு கேட்டதற்கு தர மறுத்தார். “எனக்கு பல பேர் போன் பண்ணி,அனுமதி கொடுத்தால் பிரச்சினை பண்ணுவோம்”னு சொல்றானுங்க, என்றார். “சொன்னா அப்படி சொல்றவனத் தூக்கி உள்ளே வெச்சுட்டு, பேரணிக்கு பாதுகாப்பு கொடுக்கிறதுதான் சார் உங்க கடமை” ன்னு தோழர்கள் வாதாடியபின், “சரி பேரணி நடத்திக்குங்க, பாதுகாப்பு தர்றோம், ஆனா எழுதித் தர முடியாது, பாதுகாப்பு தருகிறோம்” என்றார்.

பேரணி போகும் பாதையில் தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. பேரணிக்கு சென்ற சில தொழிலாளர்கள் ஸ்டேஷனை கடந்து சென்ற போது அங்கே இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கின்றனர்.

பேரணி தொடங்கும் தருவாயில் அந்த 20 பேரும் திபுதிபுவென்று இரு சக்கர வாகனங்களில் புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து இறங்கினர். பேரணியில் கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குழுமியிருந்தனர். பாதுகாப்பு தருகிறேன் என்று சொன்ன போலீசார் யாரையும் காணோம். இத்தனைக்கும் 200 மீட்டர் தூரத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன்.

முதலில் வந்த பூபாலன் என்ற காண்டிராக்டர் “ஏய் கெளம்பி எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு ஓடுங்க” என்றான். ராஜா என்பவன் “ஏய் இவனுங்ககிட்டா இன்னாடா பேச்சு” ன்னு கத்திக்கொண்டே அருகில் இருந்த ஓட்டலிலிருந்து தடி கட்டையை எடுத்து தோழர்களின் செங்கொடியை ஓங்கி ஒரு அடி அடித்தான். கொடியை பிடித்துக் கொண்டிருந்த தோழர் நிலைகுலைய, கம்பி சாய்ந்து ஒரு பெண் தோழரின் தலையில் விழுந்து காயம் பட்டது.

தொழிலாளி உரிமைஉடனே பு.ஜ.தொ.மு துணைத்தலைவர் எழில் வேகமாக முன்னே வர, அவர் தலையில் ஓங்கி அடிப்பதற்கு ராஜா உருட்டுக்கட்டையை தலைக்கு மேலே தூக்கினான். ஆனால் அடி இடுப்பில் விழுந்து எலும்பு முறிந்தது. தோழர் எழில் மீது அடி விழுந்தவுடனே, நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் ரவுடிகள் மீது பாய்ந்தனர். விளைவு, எழிலைத் தாக்கிய ராஜா அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தான். பெட்ரோல் குண்டுகள், இரும்பு கம்பிகளோடு வந்திருந்த ரவுடிகள், தொழிலாளர்களின் போர்க்குணத்தை கண்டு பீதியடைந்து ஆயுதங்கள் அனைத்தையும் போட்டுவிட்டு தெறித்து ஓடினர்.

பேரணி கிளம்பியது. பேரணி 100 மீட்டர் முன்னே செல்வதற்குள் இன்ஸ்பெக்டரும், எஸ்.பியும் பேரணிக்குள் வந்தனர். முகப்பு கொடியை பிடித்துக் கொண்டிருந்த தோழரை போலீஸ் வண்டிக்குள் ஏற்ற முயன்றனர். ஏன் என்று பிற தோழர்கள் கேட்டதும், “ஒருத்தனை அடிச்சே கொன்னுருக்கீங்க” என்று சொல்லிக்கொண்டே இன்னும் இரண்டு தோழர்களையும் பிடித்து இழுத்தனர். “மூணு பேரெல்லாம் வர முடியாது, பேரணியில் 350 பேர் இருக்கோம், அத்தனை பேரும் வர்றோம்” என்று தொழிலாளர்கள் ஸ்டேஷனை நோக்கி நடந்தனர்.

காவல் நிலையம் வந்தவுடன், “அஞ்சு பேர் மேல கேஸ் போடப்போறோம் மத்தவங்க எல்லாம் கிளம்பி வீட்டுக்கு போங்க” என்றனர். யாரும் போக மாட்டோம் என்று தொழிலாளர்கள் மறுத்தனர். மற்றொரு புறம் பயந்து ஓடிய ரவுடிகள் ஊருக்குள் சென்று, “நம்ம சாதிக்காரனுங்களை அடிச்சிட்டானுங்க, நம்ம ஊர்காரன்களை வெளியூர்காரனுங்க அடிச்சிட்டானுங்க” என்று ஊர் மக்களை திரட்ட முயற்சி செய்தனர். ஆனால் மக்கள் யாரும் அவர்களோடு வரவில்லை என்றதும் இருபது குடும்பத்திலிருந்தும் 5,6 பேர் என்று ஒரு 70 பேரை திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியில் நிற்கின்ற தோழர்களை தாக்க வந்தனர்.

ஸ்டேஷனுக்கு வெளியில் தான் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் நின்று கொண்டிருந்தனர். வந்த ரவுடிகள் போலீசு இருக்கும் தைரியத்தில், தோழர்களை தாக்க முனைந்தனர். தொழிலாளர்கள் உடனே திருப்பித் தாக்குவதற்கு திரளவே, ரவுடிகளை காம்பவுண்டை விட்டு வெளியேற்றியது போலீசு.

வெளியே சென்ற கும்பல், பேரணிக்கு வந்திருந்த இரு தொழிலாளர்களைத் தாக்கி மண்டையை உடைத்தது. (அருள் என்கிற தொழிலாளி Lottee நிறுவனத்தில் பணிபுரிகிறார். புண்ணியமணி Swastik என்கிற நிறுவனத்தில் பணிபுரிகிறார்)

இப்படி கோழைத்தனமாக தாக்கிவிட்டு, கும்பலாக சாலையில் அமர்ந்து கொண்டு புஜ.தொ.மு வினரை ரிமாண்டு செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர். சரி செய்கிறோம் என்று போலீஸ் அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே, சாலயோரம் நடப்பட்டிருந்த CITU கொடிக்கம்பத்தை உடைத்து கொடியை நடுரோட்டில் போட்டு கொளுத்தினர்.

இதைப் பார்த்த மார்க்சிஸ்டு கட்சியினர், ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்து சாலை மறியல் செய்தனர். “தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது, முதலில் அடிச்சது இவனுங்க தான். அதை தடுக்கிறதுக்கு தான் பு.ஜ.தொ.மு காரங்க திருப்பி அடிச்சாங்க, ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும்” என்று மக்கள் முழக்கமிடவே, “அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் நீங்க கலைந்து போங்க” என்று போலீசு சமாதானம் செய்தது.

மக்கள் போராட்டத்தால் பின் வாங்கிய ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது. ஆனால் செல்லும் வழியில் திருபுவனை பு.ஜ.தொ.மு கிளை துணைத்தலைவர் மோகன்ராஜ் வீட்டையும் பு.ஜ.தொ.மு கிளை அலுவலகத்தையும் அடித்து நொறுக்கியதுடன், ஊருக்குள் யாரும் கடையை திறந்து வைத்திருக்கக்கூடாது என்று மூட வைத்துள்ளனர். பேரணிக்கு வந்த தோழர்களின் இரு சக்கர வாகனங்களையும் ஒரு வண்டி விடாமல் அடித்து நொறுக்கியுள்ளனர். சாலையில் சிவப்பு சட்டை அணிந்து சென்ற மக்கள் பலரைத் தாக்கி, அவர்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். நிலைமை கைமீறிப்போகவேதான் வேறு வழியே இல்லாமல் போலீசு அந்த கும்பலைக் கலைக்க தடியடி நடத்தியது.

பேரணி தொடங்கிய இடத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் தொழிலாளர்கள் கூறியிருக்கின்றனர். போலீசோ, அவற்றில் 6 வண்டிகளை தூக்கி வந்து, பு.ஜ.தொ.மு வினர் அந்த வண்டிகளில் வந்து இறங்கி ரவுடிகளைத் தாக்கியதாக வழக்கை சோடித்திருக்கின்றனர். ரவுடிகள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளையும் பு.ஜ.தொ.முவினரிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறி பொய்வழக்கு போட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் தோழர் எழில் தாக்கப்பட்டது பற்றியும், தோழர் மோகன்ராஜின் வீடு தாக்கப்பட்டதும், அவருடைய துணைவியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவற்றுக்காக கொடுக்கப்பட்ட புகார்களை வாங்க போலீசு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

மறுநாள் காலை வந்த பத்திரிகை செய்திதான் மிகவும் கேவலமானது. ரவுடிகள் மீது போலீசு நடத்திய தடியடியை பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி என்று செய்தி வெளியிட்டது தினமலர்.

தினத்தந்தி உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளும் போலீசு செய்தியை தான் வெளியிட்டன. தினகரன் மட்டும் என்ன நடந்தது என்பதை ஓரளவுக்கு எழுதியிருந்தது.

காலை 6 மணிக்கு 20 பேர் மட்டும் லாஸ்பேட்டையில் உள்ள மாஜிஸ்டிரேட் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை புகைப்படமெடுத்த ஒரு தோழரின் கைபேசியைப் பறித்துக்கொண்டு அவரையும் வண்டியிலேற்றியது போலீசு. உடனிருந்த வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே தோழரை விடுவித்து விட்டு, கைபேசியை மட்டும் பறித்துக் கொண்டது.

“நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, அவர்கள் தான் எங்களை தாக்கினர். நாங்களே தான் காவல் நிலையத்திற்கு வந்தோம்” என்று என்ன நடந்தது என்பதை தோழர்கள் விளக்கியும் நீதிபதி கேட்க தயாராக இல்லை. தோழர்கள் மீது 307, 323, 324, 147, 190, 198 (திட்டமிட்ட கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதம் உள்ள 36 தோழர்களை ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அழைத்து வந்தனர். சார் நிலை ஆட்சியர் மாலை நான்கு மணிக்கு வந்தார். “தமிழ்நாடு முகவரி உள்ளவர்கள் அனைவரும் பாண்டு பத்திரம் கொடுக்க வேண்டும். பாண்டிச்சேரி முகவரியில் உள்ளவர்கள் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்” என்றார். “107, 151 ஆகிய பிரிவுகளின் கீழ் போடப்பட்டிருக்கும் வழக்குகள் நிபந்தனை பிணையின் கீழ் வரக்கூடியவை அல்ல” என்று வழக்குரைஞர்கள் கூறியதற்கு “புதுச்சேரியில் இப்படித்தான் செய்வோம்” என்றார் சார் ஆட்சியர்.

உண்மைதான். புதுச்சேரியில் முதலாளிகள், காண்டிராக்டர்கள், ரவுடிகளின் கூட்டணிதான் ஆட்சி நடத்துகிறது.

புதுச்சேரி தொழில்துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் இத்தகைய ரவுடிகளே அனைத்து மட்டத்திலும் கோலேச்சுகின்றனர். அனைத்து ஓட்டுக் கட்சிகளிலும் இத்தகைய ரவுடிகளே தளபதிகளாக வலம் வருகின்றனர். வசூலிலும் கூட்டுக் கொள்ளையிலும் பங்கு பிரித்துக் கொள்கின்றனர். இவர்களை எதிர்த்து வீழ்த்தாமல் அங்கே எந்தவிதமான அரசியல் – சமூக நடவடிக்கைகளும் சாத்தியமில்லை.

ஒப்பந்ததாரர் என்ற பெயரில் உலவும் இந்த ரவுடிகளுக்கெதிராக புதுச்சேரி முழுவதும் பொதுமக்களிடையே வெறுப்பு நிலவுகிறது. ஒப்பந்ததார ரவுடிகளின் இந்த தாக்குதலை கண்டித்து CPM, CPI (ML) விடுதலை, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கண்டன அறிக்கை விடுத்துள்ளன. யாரும், தங்கள் மீது கை வைக்க முடியாது என்று தினவெடுத்து திரிந்து கொண்டிருந்த இந்தக் கும்பலுக்கு முதல் முறையாக தொழிலாளி வர்க்கம் பாடம் கற்பித்திருக்கிறது.

முதலாளிகளின் எச்சில் காசில் வயிறு வளர்க்கும் பொறுக்கி கும்பல்கள், தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஒரு போதும் அனுமதிக்காது என்பதை இச்சம்பவம் நிரூபித்திருக்கிறது. தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான பாதை எளிதானதாக இருக்காது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும். தனது வலிமை என்ன என்பதையும் தொழிலாளிவர்க்கம் எதிரிகளுக்கு உணர்த்தும்.

ndlf-puduchery-banner-1

– வினவு செய்தியாளர்
(தகவல் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி)

தொடர்புடைய பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நான் விபச்சாரியா இல்லேங்கிறதுதான் அவன் கவலை !

16

நான் திருச்சிக்கி பக்கத்துல ஒரு கிராமமுங்க. நிலமில்லா ஒரு கிராமத்து ஏழை குடும்பத்துல குடிகார அப்பனுக்கு மகளாப் பொறந்தவ. ஊரு நெலமைக்கி தவுந்தபடி சீருவருச சீதனம் குடுத்து கல்யாணம் பண்ண முடியாததால வெள்ளேந்தியான வயசு மூத்த ஆம்பளைக்கி வாக்கப்பட்டேன்.

ஏழ்மை நெலமையில இருந்த எங்க குடும்பத்துல அடுத்தடுத்து நடந்த துயர சம்பவங்களும் அது தந்த மன சங்கடமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சொந்த பந்தங்க பாக்குற நேரமெல்லாம் ஆறுதலா பேசுறதா நெனச்சு நடந்த தொயரத்த நெதமும் கண்ணு முன்னால கொண்டு வருவாங்க. அடுத்தவங்க பரிதாபமும் பச்சாதாபமும் எனக்கு ஆறுதலா இல்லேங்கிறது மட்டும் நெசம். அதுல மன சமாதானம் அடையுற மாறி வாழ்க்கை அமையலேன்னா யாரு என்ன செய்யறது சொல்லுங்க!

Broken
ஓவியம் : Carol Allen Anfinsen
http://anfinsenart.blogspot.in/2011/06/painting-from-within-leads-to-discovery.html

எங்கன இருந்தாலும் வயித்து பொழப்புக்கு நம்ம கைய ஊனிதான் கரணம் போடனும். கஷ்டத்துல இருந்து கை தூக்கிவிட நமக்கு நாதியுமில்ல. வறுமையும் தொயரமும் போட்டிப் போட்டு தொரத்தும் போது, பொழைக்க வழியில்லாத இந்த குண்டு சட்டி ஊருக்குள்ள குதுர ஓட்றதவிட பட்டணம் போகலான்னு புருசனும் பொஞ்சாதியுமா கைக்கொழந்தைய தூக்கிக்கிட்டு சென்னைக்கி வந்தோமுங்க.

கோடியில பணம் பொழங்கும் ஒரு பண பெருச்சாளிகிட்ட புருசனும் பொஞ்சாதியுமா வீட்டோட தங்கி வீட்டு வேல பாக்க ஆரம்பிச்சோம்.

ஓனரு என்ன தொழில் பாக்குறான்னு இப்பவும் எனக்கு வெளங்காது. என்னமோ வெளிநாட்டு பொருளுகள கப்பல்ல எறக்குமதி செஞ்சு யாவாரம் பாக்குறாருன்னு சொல்வாங்க. யாவரத்துல எம்புட்டு பணம் அள்றாருன்னு அவங்க வீட்டு கண்ணாலம், காச்சி, விசேசங்கள பாத்தா உங்களுக்கே தெரியும். அவங்க வீட்டுல வளர்ற மூணு நாயிங்களுக்கு சிக்கன், முட்டை, என்னமோ பிஸ்கெட்டு, பாலுன்னு சாப்பாடு போடும் செலவே நெதமும் 1000 ரூவாயத் தாண்டும்.

அன்னாடம் பூசை புனஸ்காரம்ன்னு 2000-ரூபா வரைக்கும் செலவு செய்வாரு அந்த முதலாளி. ஆந்திராவுலேருந்து லாரில வெங்கடாசலசாமி செலைய கொண்டு வந்து வீட்லேயே அஞ்சு நாளைக்கி திருவுழா நடத்துவாரு. அஞ்சு நாளைக்கும் ஊரு பூரா மூணு வேளை விருந்து வைச்சு, திருப்பதி லட்டு தாம்பூலப் பை (பை மட்டும் 100 ரூபா) கொடுத்து எல்லாம் பாத்தா செலவு பல லட்சத்தை தாண்டுங்க.

இப்பேற்பட்ட பாரி வள்ளல் முதலாளி, எங்க ரெண்டு பேருக்கும் சேத்து தந்த மாச சம்பளம் 5,500 ரூவாதானுங்க.

எங்களுக்குன்னு மாடியில சின்னதா ஒரு அறை, கேஸ் அடுப்பு, சம்பளம் போக சமையல்கட்டு சாமானுங்கன்னு பாத்ததுமே, முதலாளி இவ்ளோ தங்கமானவரான்னு தோணிச்சு. ஆரம்பத்துல கிராமத்து வாழ்க்கைக்கு சென்னை வாழ்க்கை தேவலான்னு நெனச்சேன். வூட்டுக்குள்ள தங்க வைச்சு செக்கு மாடாட்டம் நிக்காம சுத்த வெக்கிறதுன்னா என்னண்ணு அப்ப தெரியல. பொதுவா இழுத்துப் போட்டு வேலை செய்யும் குணம் எனக்கு. ஆரம்பத்துல நமக்கு கெடச்சது அற்புத வாழ்க்கன்னு நெனச்சு அத தக்க வச்சுக்க சொன்ன வேலையையும் தாண்டி சொல்லாத வேலையையும் சேத்து செஞ்சோம். வூட்டுல கஷ்டம்னு சந்தைக்கி வந்த நல்ல உழவு மாட சல்லிசா வாங்கிபுட்டதா முதலாளியும் அவரோட வூட்டம்மாவும் நெனச்சுருப்பாங்கண்ணு இப்ப தோணுது.

எனக்கு வீட்டு வேல. வீடு தொடைக்கணும், பாத்திரம் கழுவணும், கையால துணி தொவைக்கணும், வீட்டுல உள்ள மத்த பத்து வேலக்காரங்களுக்கு மூணு நேரம் சமைச்சு போடணுன்னு தான் வேலைக்கி பேசிவிட்டவரு சொன்னாரு.

வேலைக்கி சேந்த கொஞ்ச நாள்ல தெரு பெருக்கறதுலேர்ந்து, டாய்லட் கழுவுற வரைக்கும் செய்யச் சொன்னாங்க. ஒவ்வொருத்தரு ரூமுலயும் ஒரு டாய்லெட்டு, ஆபீஸ் ரூமையும் சேத்து வீட்டுக்குள்ள மட்டும் ஆறு டாய்லெட். வெளியில வேலக்காரங்க போறதுக்கு நாலு டாய்லெட். அத்தனையும் கழுவணும். முதலாளி வூட்டம்மாவுக்கு காய்கறி நறுக்குறது, பாத்திரம் கழுவுறது, சமையலுக்கு உதவறது, காத்தால நாலு மணிக்கு எந்திரிச்சி நாளுக்கு தக்க ரெண்டு கிலோ, நாலு கிலோ பூவ நின்னுக்கிட்டே கட்டுறதுன்னு சொல்லி மாளாத வேலைங்க.

எங்க வீட்டுக்காரருக்கு வாட்சுமேன் வேல. தோட்ட வேலையிலேருந்து நாயி பேண்டதை கழுவி, வாக்கிங் கூட்டிட்டு போய், குட்டிப் போட வைக்கிற வரைக்கும் எல்லா வேலையும் செய்யணும். இது போக எங்ககூரு கரம்பக் காடு மாறி விரிஞ்சு கெடக்குற அந்த மாளிகை வீட பெருக்கி, துடைச்சு கண்ணாடி மாறி வெக்கணும்.

இவங்கிட்ட வேலைக்கி சேந்து அஞ்சு வருசம் ஆச்சு. ஒரு வயசு கூட ஆகாத கைக்கொழந்தைய தூக்கிட்டு வேலைக்கி வந்தேன். பிள்ளைய மூணாவது மாடில ரூம்ல பூட்டிட்டு கீழ வீட்டு வேல செய்வேன். எங்க வீட்டுக்காரரு போயி அப்பப்ப பாத்துக்குவாரு. ஆனாலும் புள்ள நெனப்புல எனக்கு மாருல பாலு கட்டிக்கிட்டு ஊத்தும். நான் போயி பாக்கும் போது ஏம்புள்ள ஏங்கி அழுதுட்டு கைய சப்பிகிட்டு படுத்து தூங்கிருக்கும். அன்னாடம் இப்புடி எம்புள்ளய பாக்கும் போது செத்தரலாமுன்னு தோணும்.

முதலாளி பணத்திமுருல ஒரு ஆளு உக்காந்து போகவே 7 காரு வச்சுருக்காரு. எங்கூட்டுக்காரு  நெதமும் அத பளபளன்னு தொடைக்கணும். காருங்கள பாக்கையில எம்புள்ள ஆசையா தொட்டு வெளையாடும். ஒடனே பங்களாவே கலகலத்துப் போற மாறி அழுக்கா போயிருச்சின்னு அந்த கத்து கத்துவாரு ‘நல்ல மனசு’ முதலாளி.

இல்லாத கஷ்டத்துக்கு இடுப்பொடிய வேல பாத்தாலும், தோட்டத்துல தண்ணி விட்டியா, நாயெ குளிக்க வச்சியா, சோறு போட்டியா, பேல வச்சியான்னு எங்க வீட்டுக்காரர, நாயவிட கேவலமா நடத்துவாரு. இதெல்லாம் பரவாயில்ல. “நாயி எதுக்கு இத்தன நாள செனை புடிக்கல. அதுக்குள்ள நீ படுக்க போயிட்டியா”ன்னு அசிங்கப் படுத்துவாரு. கேக்கையில எனக்கு ரத்தம் கொதிச்சாலும் அப்பாவியான என் வீட்டுக்காரரு நெலமெ ரொம்ப மோசமுங்க.

இந்த மாதிரி பாவிங்ககிட்ட வேலை பாக்கறதுக்கு ஊரோட போயிரலாமான்னு நெனப்பேன். ஆனா, ஊருல உள்ள கடன அடைக்க இந்த முதலாளிகிட்ட ஒன்ர லட்ச ரூவா கடன வாங்குனேன். சம்பளத்துல மாசாமாசம் புடிச்சுகிட்டதுல அம்பதாயிரம் முடிஞ்சு போச்சு.

திடீர்னு எங்க அப்பா செத்துப் போய்ட்டாரு. அதுக்காக ஒரு இருவதாயிரம் கடன் கேட்டேன். காசு குடுக்குறது அவருக்கு பெரிசில்ல. ஆனா, துக்கத்துக்கு போனா கருமாதி முடிஞ்சுதானே வருவேன்னு சண்ட போட ஆரம்பிச்சுட்டாரு. எத்தனையோ தடவ அசிங்கப் பட்டப்பெல்லாம் பொறுத்துகிட்டுதான் போனோம். ஆனா பெத்த அப்பனோட சாவுக்கு கூடவா கணக்கு பாப்பாங்கன்னு கோவத்துல நானும் ரெண்டு வார்த்த கூட பேசினேன்.

ஒடனே வாங்குன கடங்காச வச்சுட்டு அந்தண்ட போன்னுட்டாரு. எங்கேருந்து ஒடனே பணம் தர முடியும். “இவ்வள பணம் எங்கிட்ட இருந்தா எதுக்கு ஒங்ககிட்ட வேல பாக்குறேன். என்ன வெளிய விடுங்க. நான் எங்கயாவது வேல பாத்து ஒரு வருசத்துல ஒங்க கடன அடைக்கிறேன்னு” சொன்னதுக்கு “என் வீட்டு எச்சி சோத்த தின்னுட்டு என்னையே எதுத்து பேசுரியாடி தேவுடியா”ன்னு கேட்டாங்க அந்த பொறம்போக்கு. இந்தாளு இப்படி திடீரென்னு சண்டை போடறதுக்கு நாலு நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவம்தான் காரணுமுன்னு தோணுது.

ஆமாங்க. நான் தேவுடியாளா இல்லங்கறதுதான் அவனோட கவலை. பேரம் பேத்தி எடுத்தாலும் முதலாளிங்கற ஆணவத்துல பொறுக்கி புத்திய காட்டி அப்பப்ப பல்லிளிச்சிகிட்டுதான் அந்தாளு பேசுவான். அன்னைக்கு சமையகட்டுல பாத்திரம் வெளக்கும் போது பின்னாடியே பூனை மாறி வந்து என் தோள்பட்டை மேல கைய வெச்சான். நிலை குலைஞ்சு போன நானு, “என்ன சார் இந்த மாதிரி பண்றீங்க, மேடத்துக்கிட்ட சொல்லுவேன்னு” கையை தட்டி விட்டேன்.

“உனக்கு பிழைக்க தெரியல, புரிஞ்சு நடந்துக்க மாட்டேங்குற”ன்னு பேரம் பேசுனான் அந்த படுபாவி. ஆத்திரத்துல வாயில வந்தத நான் பேச கடைசியில, “இத வெளிய சொன்னா, கடனை அடைக்கிறதுக்கு நீதான் கூப்ட்டேன்னு கதைய மாத்துவேன்”னான் அந்த கடங்காரன். வறுமையின்னு வேலைக்கி வர்றவங்க பணத்த பாத்தா, பல்ல இளிச்சுகிட்டு வருவாங்கன்னு சாதாரணமா நெனச்சுருக்கான் அந்த கம்முனாட்டி. பெறகு நம்ம விதி இதுதான்னு நான் மனசொடிஞ்சு போய் வேலைய பாக்க போயிட்டேன். இந்த சண்டைக்கு பெறகுதான் அவன் ஒரு தினுசா என்ன கருவற மாதிரியே காத்திருந்தான்னு இப்ப தோணுது.

ரேப்

“தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன். மானத்தோட ஒடம்ப ஓடா தேச்சு ஒழச்சதுக்கு நீ தர்ற பரிசாய்யா இது. நீ காசு தரவேண்டாம். இனிமே வேல பாக்கவும் முடியாது. எதுவா இருந்தாலும் சாவுக்கு போயிட்டு வந்த பொறவு பேசிக்கலாமு”ன்னு சொல்லிட்டு ஊரப் பாக்க கிளம்பிட்டோம்.

சாவுக்கு போயி மூணா நாளு போலீசுலேருந்து போனு வருது, நீங்க ஒடனே ஸ்டேசனுக்கு வாங்கன்னு. ஸ்டேசனுக்கு போயி பாத்தா, “பணத்த வாங்கிட்டு சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டிங்கன்னு எங்களுக்கு கம்ப்ளேண்டு வந்துருக்கு, என்ன சொல்றீங்க” அப்புடிங்குறாரு போலீசு. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. இடிஞ்சு போயிட்டேன். நெஞ்சுக்குள்ள சுருக்குன்னுச்சு. “ஊருக்குள்ள தெரிஞ்சா  திருடிட்டு ஓடியாந்துட்டேன்னு சொல்லுவாங்களே. அசிங்கப்பட்டு சாவணுமா? ஏழை சொல்லு அம்பலம் ஏறுமா”ன்னு?

பொணந்தின்னி கழுகுன்னா அது இவனுக்குதான் சரியாருக்கும். எழவு விழுந்த வீட்ல ஒப்பாரி ஓயறதுக்குள்ள அவனோட திமிர காமிச்சுட்டான். ஸ்டேசனுக்கு போயி நடந்தத சொல்லிட்டு. குடுத்த பணத்துக்கு ஈடா வெத்துப் பத்தரத்துல கையெழுத்து போட்டு குடுத்துருக்கோம். அந்த கழிசடை முதலாளி எங்க வூட்டுக்காரரு பள்ளிக்கூட டீசி, பாஸ்போட், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாத்தையும் வாங்கி வச்சுகிட்டுதான் பணமே தந்தான். இவ்வளவு நடந்தப்புறம் இனி அவங்கிட்ட வேல செய்ய முடியாதுன்னு அஞ்சு மாசத்துக்குள்ள வாங்குன பணத்த தந்துர்ரேன்னு போலிசுகிட்ட எழுதி குடுத்துட்டு வந்துட்டேன்.

“நீயும் ஒம் புருசனும் இவ்வளவு நாளா ராப்பகலா அவனுக்கு வேல பாத்ததுக்கு அவந்தான் காசு தரனும். நீ வாங்குன பணத்த தர்ரேன்னு ஒத்துகிட்டது தப்பு. அவமேல கேசு போட்டா பணம் கெடைக்கும்”னு எங்கூருல பல பேரு சொன்னாங்க. இதுல அவனோட பொறுக்கிதனத்தை யாருகிட்டயும் சொல்லலை. கிராமத்து பொண்ணு ஒருத்தி இதையெல்லாம் எதுத்து நிக்காம மென்னு முழுங்குறது ஏன்னு எப்புடி உங்களுக்கு புரிய வெக்கிறதுன்னே தெரியல.

அவனுக்கு இருக்குற செல்வாக்குக்கு எதுவேணுன்னாலும் செய்வான். பணத்த, நகைய திருடிட்டேன்னு கேசு குடுப்பேன்னு என்னைய ஒரு தடவ மெறட்டுனான். ஒத்தாளா நின்னு அவங்கிட்ட மல்லுக்கு நிக்க முடியாது. அதுவும் போக, வாங்குன பணத்த இல்லன்னு சொன்னா அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கு, சொல்லுங்க பாப்போம்.

மானத்த எழந்துட்டு அவங்கிட்ட வேல பாக்க முடியாது. குடுத்த வாக்க காப்பாத்த தலைய அடகு வச்சாவது அவன் பணத்த தூக்கி எரியணும். என்ன செய்ய! திரும்பவும் ஊருல உள்ள மிராசுதாருகிட்ட அஞ்சு காசு வட்டிக்கி வாங்க வேண்டியதுதான்.

ஊருக்கும் சென்னைக்குமா பல வாட்டி அர்த்த ராத்திரியிலயெல்லாம் தனியா போயிருக்கேன். இளவட்ட பொண்ணுதான்னு எந்த ஊரு ஜனமும் இப்படி என்னை கேவலப்படுத்தல. ஒரு பணக்கார கெழட்டு நாயி என்ன பாடுபடித்திச்சுன்னு இப்ப யோசிச்சு பாத்தா மனசு கெடந்து தவிக்கிது. என்ன மாறி ஊருகாட்டு பொண்ணுங்க வறுமையில சாகாம வாழணும்ணா நிறைய போராடணும் போல!

–    சரசம்மா.

(உண்மைச் சம்பவம். ஊர், பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…

14

“சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தியையே முதன்மையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றொரு அரசாணையை முதலில் வெளியிட்டு ஆழம் பார்த்தது மோடி அரசு. பரவலாக எதிர்ப்பு வரவே, “அந்த ஆணை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும்” என்று சமாளித்தது. பிறகு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்திப் பயிற்சிக்கு செல்லாத ஊழியர்களுக்கு அலுவலக ரீதியில் மெமோ கொடுக்கப்படுவதாக செய்தி வெளியானது. இப்போது நாடெங்கும் மைய அரசின் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் (சி.பி.எஸ்.சி.) ஆகஸ்டு 7 முதல் 13 வரை சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி, சி.பி.எஸ்.சி. இயக்குனர் வழியாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அழிந்தொழிந்ததற்கு உயிர் கொடுக்க முயலும் மோடி அரசு
அழிந்தொழிந்தத சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்க முயலும் மோடி அரசு

பச்சைப் பொய்களாலும், பார்ப்பனப் புரட்டுகளாலும் நிரம்பியிருக்கும் அந்தச் சுற்றறிக்கை, சமஸ்கிருதத்தை எல்லா (உலக) மொழிகளுக்கும் தாய் என்று குறிப்பிடுவதுடன், அது இந்தியப் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த மொழி என்றும், இந்தியாவின் ஆகப்பெரும்பான்மையான அறிவுச்செல்வங்கள் சமஸ்கிருதத்தில்தான் இருப்பதாகவும் கூறுகிறது. இந்தியப் பண்பாட்டுப் பாரம்பரியத்துக்கு மட்டுமின்றி, எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துடன் உள்ள உறவு குறித்து பிரபலப்படுத்த வேண்டுமென்றுமென்றும் இச்சுற்றறிக்கை கோருகிறது.

சமஸ்கிருத மொழியை அன்றாட வாழ்வுடன் இணைப்பது எப்படி என்பது குறித்து மாணவர்கள் சமஸ்கிருத பண்டிதர்களுடன் கலந்துபேச வேண்டுமென்றும், சமஸ்கிருத சொற்களை கற்றுக் கொள்ளும் விதமான கணினி விளையாட்டுகளை உருவாக்குவது, சமஸ்கிருத மொழித் திரைப்படங்களான ஆதி சங்கரர், பகவத் கீதை போன்றவற்றைத் திரையிடுதல் போன்ற வழிமுறைகளில் இது கொண்டாடப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது மோடி அரசு.

சுற்றறிக்கையில் காணப்படும் விவரங்களிலிருந்தே, மொழியின் பெயரால் பார்ப்பன இந்து மதத்தைத் திணிக்கும் மோடி அரசின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். சமஸ்கிருதம் இந்தியப் பண்பாட்டுடன் பிணைந்த மொழி என்று இவ்வறிக்கை கூறும்போது, அது பார்ப்பன இந்துப் பண்பாட்டை மட்டுமே அர்த்தப்படுத்துகிறது. ஏனென்றால் சமண, பவுத்த மதங்கள் உள்ளிட்ட பிற மதங்களின் இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் இல்லை. மேலும் ஆதி சங்கரர் படத்தைத் திரையிடுதல், சுலோகப்போட்டி போன்றவை அப்பட்டமான பார்ப்பனியத் திணிப்பு நடவடிக்கைகள். எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்குமான “உறவு” குறித்து மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும் என்று கூறுவதன் வாயிலாக, “சமஸ்கிருதம்தான் தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளுக்கும் தாய்” என்று பார்ப்பனப் புரட்டை நிலைநாட்டவே மோடி அரசு முயற்சிக்கிறது.

ஆனால், சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் ஆட்சிமொழியாகவோ, மக்களின் வழக்கு மொழியாகவோ இருந்ததில்லை. கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேதமறுப்பு மதங்களான பவுத்த, சமண மத இலக்கியங்கள் பாலி மொழியில்தான் இயற்றப்பட்டன என்பதுடன் அசோகனின் கல்வெட்டுகளும் பாலி மொழியில்தான் செதுக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் என்பது தமிழைப் போல ஒரு மூல மொழியல்ல. அது பல அந்நிய நாட்டு மொழிகளைக் கொண்ட கதம்ப மொழியாகும். கிரேக்க, ஜெர்மானிய, கோதிக் மொழிகளும் சமஸ்கிருதமும் ஒன்றுபோல ஒலிப்பதை பல ஆய்வாளர்கள் ஏற்கெனவே நிரூபித்துள்ளனர்.

சமஸ்கிருதம் ஒரு தொன்மையான மொழி என்பதில் நமக்கு மறுப்பேதும் இல்லை. வேத, சாத்திர, புராண, இதிகாசங்கள் மட்டுமல்ல, பல்வேறு வேதமறுப்பு, இறைமறுப்பு தத்துவங்கள், அறிவியல், இலக்கிய நூல்களும் அம்மொழியில் உள்ளன. அவற்றையெல்லாம் பயின்றதன் பயனாகத்தான் பார்ப்பன இந்துமதக் கொடுங்கோன்மைகளை அம்பேத்கர் வெளிக்கொணர முடிந்தது. “இந்திய தத்துவ மரபு என்பது பார்ப்பன ஆன்மீக மரபு அல்ல, நமது தத்துவ மரபில் பெரும்பான்மையானவை வேத மறுப்பு, இறைமறுப்புத் தத்துவங்களே” என்று தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற ஆய்வாளர்களால் நிலைநாட்ட முடிந்தது. டி.டி.கோசாம்பி போன்ற வரலாற்று ஆய்வாளர்களால், புராண மவுடீகங்களிலிருந்து வரலாற்றை விடுவிக்க முடிந்தது. பார்ப்பன மரபுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட எண்ணற்ற சமஸ்கிருத நூல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையையும் வெளிக்கொணர முடிந்தது.

சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்திற்கு எதிராக புமாஇமு ஆர்ப்பாட்டம்
சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்திற்கு எதிராக புமாஇமு ஆர்ப்பாட்டம்

உண்மையில் சமஸ்கிருதம் என்ற மொழியின் அழிவுக்கு வழிகோலியவர்கள் இன்று சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லும் மோடியின் மூதாதையர்கள்தான். ஆம், இது அவர்கள் தம் சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியம். எந்த ஒரு மொழியும் மக்களுடைய நாவிலும் காதிலும்தான் வாழ முடியும், வளர முடியும். ஆரியம் போல “உலக வழக்கொழிந்து சிதையா சீரிளமைத் திறத்தை” தமிழ் பெற்றிருப்பதற்கு காரணம், அன்று முதல் இன்றுவரை அது மக்கள் மொழியாக இருப்பதுதான்.

ஆனால் பார்ப்பனியமோ, நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு கல்வியையும், வழிபாட்டு உரிமையையும் மறுத்தது. சமஸ்கிருதம் என்ற மொழியைத் தனது ஆதிக்கத்துக்கான ரகசிய ஆயுதமாக மாற்றிக்கொண்டு, அதற்கு தேவபாஷை என்றும் பெயரிட்டுக் கொண்டது. சமஸ்கிருத மந்திரங்களின் ஒலி பார்ப்பனர்களின் வாய் வழியாக வெளியில் வரும்போதுதான் கோயிலில் இருக்கும் கற்சிலை தெய்வீக சக்தியைப் பெறுகிறது; அந்த சக்தி தமிழ் உள்ளிட்ட வேறெந்த மொழிக்கோ, வேறு சாதியினருக்கோ கிடையாது என்று விதி செய்தது. இந்த ஆகம விதியைக் காட்டித்தான் பார்ப்பனரல்லாத அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் கோயில்களில் மேற்படி மந்திரங்களை அன்றாடம் ஒப்புவிக்கும் பார்ப்பன அர்ச்சகர்கள் யாருக்கும் அவற்றின் பொருள் தெரியாது. தன் வாயிலிருந்து வரும் வார்த்தைக்கே பொருள் தெரியாதவர்களாக அர்ச்சகர்கள் இருக்க, இந்த மொழியை மக்களுக்கு கற்றுக் கொடுத்து, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைக்கப்போகிறதாம் மோடி அரசு.

சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண்டுமென்ற இந்த பார்ப்பன வேட்கை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தலையெடுத்து விட்டது. கல்லூரிப் பாடத்திட்டத்தில் மொழிக்கல்வியாக கற்றுத்தரப்பட வேண்டியது சமஸ்கிருதமா அல்லது அவரவர் தாய்மொழியா என்ற விவாதம் வந்தபோது, வைஸ்ராய் கர்சன் அதன் மீது கருத்து கூறுமாறு சென்னைப் பல்கலைக் கழகத்தைப் பணித்திருக்கிறார். அன்று பரிதிமாற்கலைஞரும், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஆசிரியர்களைத் தனித்தனியே சந்தித்து, தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி ஏற்கச் செய்திருக்கின்றனர். பின்னர் தாய்மொழிக் கல்வியே பாடமாக்கப்படவேண்டுமென்று அரசு முடிவெடுத்திருக்கிறது. மேற்கூறிய வரலாற்று விவரங்களை “செம்மொழி” உள்ளும் புறமும் என்ற தனது நூலில் விளக்கியிருக்கிறார் மணவை முஸ்தபா. தமிழைத் தம் உயிர் மூச்சாகக் கருதியவர்களான பரிதிமாற்கலைஞரும் பூரணலிங்கம் பிள்ளையும், பார்ப்பன வெறியர்களைப் போல அதனை மற்ற மொழியினர் மீது ஏவி விடவில்லை. தமிழை இந்தியாவின் தேசிய மொழியாக்கவேண்டும் என்று கருதவில்லை. மாறாக, ஜனநாயக உணர்வுடன் பல் தேசிய இனங்களின் தாய்மொழிக் கல்வியையே வலியுறுத்தியிருக்கின்றனர்.

இன்று வைகோ, ராமதாசு முதலானோர் மிகவும் எச்சரிக்கையாக, “சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனிச்சலுகை வழங்கக்கூடாது; அவரவர் தாய்மொழியை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறுவதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். மோடி அரசு தொடுத்திருக்கும் இந்த தாக்குதலின் நோக்கம் பற்றிப் பேச மறுக்கின்றனர்.

இன்று மோடி அரசு கொண்டுவரும் சமஸ்கிருத திணிப்பு என்பது இந்து-இந்தி-இந்தியா என்ற இந்து ராஷ்டிர அரசியலின் திணிப்பு. தேசிய இன அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு. அயோத்தி, பொது சிவில் சட்டம், இந்தித் திணிப்பு, பாடத்திட்டங்களில் இந்துத்துவம் ஆகியவற்றின் வரிசையிலான இன்னொரு தாக்குதல். சமஸ்கிருதமயமாக்கத்தை எதிர்த்து நின்ற தமிழ் மரபு, இந்தத் தாக்குதலை எதிர்ப்பதில் முன் நிற்கவேண்டும்.

_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
_____________________________

நூலறிமுகம் : காஷ்மீர் – அமைதியின் வன்முறை

3

ந்த நூலில் உள்ள கட்டுரைகளும் கவிதையும் காசுமீரிலிருந்து வெளிவந்த கன்வேயர் எனும் ஆங்கில மாத இதழில் இடம் பெற்றவை.  மனித உரிமைச் செயற்பாட்டளரான கவுதம் நவலாகாவின் கட்டுரைகள், உஸ்மா பலாக்கின் அனுபவக் கட்டுரை, மார்க் அதோனிஸின் கவிதை அடங்கிய இத்தொகுப்பை வெண்மணி அரிநரன் தமிழாக்கம் செய்திருக்கிறார். இச்சிறுநூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் அமைதியின் வன்முறைஇலங்கையின் போர்க்குற்றங்களை பேசுவதற்கு இந்திய அரசுக்கு தகுதி இல்லை என்பதை காஷ்மீர் பிரச்சினை விளக்குகிறது. இதையே ஒருமுறை ராஜபக்சேவும் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஈழப் பிரச்சினையை மட்டும் உணர்ச்சி பூர்வமாக ஆதரிக்கும் தமிழின ஆர்வலர்களிடமும் இந்த கேள்விக்கு பதில் இல்லை. அதனால்தான் காசி ஆனந்தன் போன்ற ஈழத்து ‘கவிராயர்கள்’ காஷ்மீர் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்துகிறார்கள்.

ஈழ விடுதலை, காஷ்மீர் விடுதலை உள்ளிட்ட தேசிய இனப் போராட்டங்களை ஆதரிப்பதோ இல்லை அடக்குவதோ, ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க நலன்களோடு தொடர்புடையவை. இதன்றி அவை பேசும் மனித உரிமை வெறும் நாடகமே. இந்தியா போன்ற அவற்றின் பிராந்திய துணை வல்லரசு நாடுகளும் தத்தமது தரகு முதலாளிகளின் நலனைக் கொண்டே தேசிய இனப் போராட்டங்களை நசுக்குகின்றன. இலங்கை சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொள்வதும் இப்படித்தான்.

“போரில் மக்கள் மட்டுமல்ல, உண்மைகளும் கூடத்தான் பலியிடப்படுகின்றன” என்று கட்டுரையை ஆரம்பிக்கிறார் கவுதம் நவலாகா. காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவலாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு? சாக்கடை, குடிநீர் பிரச்சினைகளுக்காக மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பதை, விடுதலை போராட்ட உணர்விற்கு எதிராக பார்ப்பது அபத்தம். ஆறாவது ஊதிய ஆணையத்தின் படி ஊதிய உயர்வு வேண்டும் என்று ஆசிரியர்கள் போராடினால் கூட அங்கே 144 தடை உத்திரவு அமல்படுத்தப்படுகிறது. பொருளாதார போராட்டமானாலும் கூட அங்கே உரிமை கிடையாது.

அமர்நாத் பயணத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல, காஷ்மீர் அரசு கூட விழுந்து விழுந்து எல்லா வசதிகளையும், பாதுகாப்புகளையும் செய்கின்றது. இந்துமதவெறி அமைப்புகள் வருடாவருடம் இந்த யாத்திரையை வைத்து செய்யும் கூச்சல்கள், அத்துமீறல்கள் அனைத்தும் சகித்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் காசுமீரில் 70,000-த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும், பத்தாயிரக் கணக்கானோர் சித்திரவதை செய்யப்பட்டதும், 10,000-த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதற்கும் பொறுப்பேற்க யார் இருக்கிறார்கள்? இதை எழுப்பி மக்கள் போராடினால் அதை ஒடுக்க இந்திய இராணுவம் ஓடி வருகிறது.

கவுதம் நவலாகா
கவுதம் நவலாகா

கூடவே காசுமீர் போராளிகளால் கொல்லப்பட்ட சில காசுமீர் பண்டிதர்கள் குறித்த செய்திகள் பேசப்படுவது போல இவர்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் அதே போராளிகளால் கொல்லப்படும் முசுலீம்களை பற்றி யாரும் பேசுவதில்லை. காசுமீர் விடுதலை இயக்கங்களின் இந்த தவறுகளை மக்கள் முடிந்த அளவு கண்டிக்கிறார்கள். ஆனால் பல கொலைகள் இந்திய அரசின் சதிகள் என்று தெரியவந்த பிறகு இந்த கண்டிப்பு நிதானமாக வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போராளிகளின் ஆயுதப் போராட்டங்களை விட, மக்கள் திரளாக பங்கேற்கும் அரசியல் போராட்டங்களே அதிகம் நடக்கின்றன. அல்லது மக்களின் அரசியல் போராட்ட வீச்சு காரணமாக போராளிக் குழுக்களின் தவறுகள் கணிசமாக குறைந்திருக்கின்றன.

கல்லெறிவதற்கு வெள்ளிக்கிழமை தோறும் ரூ 400 வழங்கப்படுகிறது என்று இந்திய அரசு அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் அவதூறு செய்கின்றனர். எல்லா நாட்களும் கற்கள் வீசப்படுவதால் நாளொன்றுக்கு ரூ 57-தான் கூலியாக வருகிறது. இந்த கல்லெறியில் பிடிபட்டால் சிறை, சித்திரவதை, ஆயுள் முழுவதும் போலிஸ் கண்காணிப்பில் அடிமையாக வாழ்வது, சமயத்தில் உயிரிழப்பது கிடைக்கலாம். 57 ரூபாய்க்காக தமது உயிரை யாரேனும் இப்படி இழக்க சம்மதிப்பார்களா என்று கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்கு என்ன பதில்?

காஷ்மீரில் இராணுவ வீரர்கள், போராளிகள், பாக்கில் உள்ள காஷ்மீரில் உள்ள பயிற்சி முகாம்கள் என அரசு மற்றும் புகழ்பெற்ற ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகள், புள்ளிவிவரங்களை வைத்தே இந்தியாவின் அவதூறுகளை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். காஷ்மீர் போராட்டத்தை பொதுவாக ஆதரிப்போரும், பொதுவாக தேசபக்தி காய்ச்சலுடன் எதிர்ப்போரும் இந்த கட்டுரையின் வாதங்களையும் தரவுகளையும் அறிந்து கொள்வது அவசியம்.

உஸ்மா பலாக்
உஸ்மா பலாக்

“நெஞ்சை அழுத்தும் நினைவுகள்” எனும் தலைப்பில் இரண்டாவது கட்டுரையை உஸ்மா பலாக் எனும் காஷ்மீரின் மைந்தர் தனது குழந்தைப் பருவத்திலிருந்து தற்காலம் வரையிலான நிகழ்வுகளை உணர்ச்சியாகவும், நேர்மையான கேள்விகளாகவும் எழுதியிருக்கிறார். போராட்டக் காட்சிகளை பார்த்து வளர்ந்த அவருக்கு “ஹம கியா சாஹ்தே? ஆசாதி!” – நாங்கள் என்ன கேட்டோம்? விடுதலைதானே? எனும் முழக்கம் மறக்க முடியாத ஒன்று. அம்மாவிடம் “நமக்கு ஆசாதி எப்போது கிடைக்கும்” என்று கேட்டதை மறக்க முடியாது என்று நினைவுகூர்கிறார்.

“காசுமீரின் முழுமையான சித்திரம் என்பது அழகான தால் ஏரியையும், முகலாயத் தோட்டங்களையும் மட்டும் கொண்டதல்ல; அது உலகிலேயே மிகுதியான படைவீரர்கள் குவிக்கப்பட்ட மண்டலம்”, என்கிறார் உஸ்மா பலாக். அதன் பாதிப்புகள் ஏதோ சுட்டுக் கொல்லப்படுவது மட்டுமல்ல, ஒரு பள்ளிச்சிறுவனின் உணவுப் பாத்திரம் சோதனையிடப்படுவதில் தொடங்கி கல்வி, வரலாறு, பொருளாதாரம் அனைத்திலும் நிலவுகிறது.

அவரது அண்டை வீட்டில், ஐந்தாவது படிக்கும் சிறுவன் கல்லெறிவதற்காக அம்மாவிற்கு தெரியாமல் வருகிறான், அவனுக்கு நிதி அளிப்பது ஐஎஸ்ஐயா என்று கேட்கும் அவர் நீதி வழங்கும் பொறுப்பை நம்மிடமே விட்டு விடுகிறார்.

அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். படிப்பதோடு கட்டுரையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்புணர்வையும் கோரும் நூல்!

நூல்: காஷ்மீர் – அமையின் வன்முறை
ஆசிரியர்: கவுதம் நவ்லாகா
தமிழாக்கம்: வெண்மணி அரிநரன்
பக்கம்: 40, விலை: ரூ.25
முதல்பதிப்பு – டிசம்பர், 2013

வெளியீடு:
விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,

தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை – 2
044 – 28412367