Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 662

73% வாக்கு பதிவும், போலி ஜனநாயக போதையும்

22

don't voteட்டுக் கட்சிகளின் பணபலம், ஆள்பலம், தேர்தல் கமிசனின் கட்டாயம் ஓட்டுப்போட வாங்க என்று கையை பிடித்து இழுக்கும் ஊடக, பிரச்சார பலம், என்று தமிழக வாக்காளர்களை இவ்வளவு ஜாக்கி வைத்து தூக்கியும், சென்ற தேர்தல் வாக்கு பதிவிலிருந்து அரை சதவீதத்தை கூட அதிகப்படுத்த முடியவில்லை, இந்த போலி ஜனநாயகத்தால். பதினைந்து லட்சம் புதிய வாக்காளர்களையும் சேர்த்து வழக்கம் போல 73 சதவீதத்தை தாண்டமுடியாத இந்த தேர்தல் நம்பிக்கைக்கு கட்சிகளை விட தேர்தல்கமிசன் செய்த பிரச்சார செலவும் இந்த தேர்தல் அநியாயத்தில் ஒன்று.

மக்கள் பணத்தால் விழிப்புணர்வு ஊட்ட இவர்களின் தண்டச்செலவின் யோக்கியதை, கேப்டன் எந்த பட்டனை அழுத்துவது என்பதை பக்கத்திலிருந்து பிரேமலதா பார்த்துக் கொள்ளும் அளவுக்கு நாறிப்போய் விட்டது! இதுதவிர 90 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் நிரம்பிய மையங்களை ஆராய வேண்டும் என தேர்தல்கமிசனே கூறுமளவுக்கு ‘ஜனநாயகத்தின் விழிப்புணர்வு’ கதி கலங்க வைத்துள்ளது.

இந்த லட்சணத்தில் சில ஊடக, இணையதள கோயிந்துகள் புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை மக்கள் மதிக்கவில்லை, ஏற்கவில்லை, என மதிப்பிட்டு மகிழ்ச்சியிடுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? குடிக்கிறவன் அதிகமாக இருப்பதால் புறக்கணிப்பவருக்கு தோல்வி என்று குதிப்பதில் என்ன பொருளிருக்கிறது? அரசு, ஓட்டுக்கட்சிகள், முதலாளித்துவ ஊடகங்கள், கோடம்பாக்கத்து ஃபிராடுகள், இத்தனையும் அணிசேர்ந்து மக்களை வாக்களிக்க அழைத்தும், பல பகுதிகளில் மக்கள் தங்களது அடிப்படை பிரச்சனைகளுக்காகவும், அரசியல் வெறுப்பிலும் இந்த போலி ஜனநாயக செட்டப்பை ஏற்க மறுத்து விட்டதுதான், உண்மையில் வியப்புக்கும், வரவேற்புக்கும் உரிய விசயம்!

வெறும் அரை சதவீத வாக்களிப்பு உயர்வுக்கே ஆளும் வர்க்கமும், அடிவருடிகளும் டவுசரைப் பிடித்துக் கொண்டு குதிக்கையில், தமிழகம் முழுக்க அரை சதவீத அளவுக்காவது மக்களிடம் தேர்தல் புறக்கணிப்பை ஒரு அரசியல் மாற்று இயக்கமாக கொண்டு சென்ற புரட்சிகர அமைப்புகளின் பிரச்சார தாக்கம் நிச்சயம் பயனுள்ளதே! புறக்கணிக்க வேண்டியதன் அரசியல் காரணத்தை உருவாக்குவதில் மக்களிடம் எந்தளவிற்கு வேலை செய்திருக்கிறோம் என்பது தான், ஒரு தொடர் போராட்டத்தின் முதல்படி! வெறும் தேர்தலோடு மக்களின் கையை விட்டுவிடும் போலி ஜனநாயகத்தின் தன்மைக்கு முன்னால், மக்களிடம் ஒரு மாற்று அதிகாரத்தை நிறுவும் உண்மையான ஜனநாயகத்துக்கான பிரச்சார இயக்கமாக இதை தொடர்ந்து கொண்டு செல்லும் புரட்சிகர அமைப்புகளின் மக்கள் பணி மகத்தானது!

எவனும் சரியில்லை என்று மக்கள் வாயில் இருந்து வசவு வாங்கி மானங்கெட்டு, திரும்பவும் ஓட்டு கேட்கும் களவாணிகளை விட, தனிப்பட்ட ஆதாயம் ஏதுமின்றி ஒரு மாற்று சமூக நலனுக்காக பிரச்சாரம் செய்த இடமெல்லாம் மக்களிடம் விவாதிக்கும் ஜனநாயகத்தை நிறுவியுள்ள புரட்சிகர அமைப்புகளின் பணி அளப்பரிய பங்காற்றியிருக்கிறது! ஏன் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற அவசியத்தை, காரணத்தை பொறுப்போடு மக்களிடம் விளக்குவதில் தம்மை ஒரு மாற்று அரசியல் சக்தியாக மக்களிடம் அடையாளம் காட்டியுள்ளன புரட்சிகர அமைப்புகள்!

போலி ஜனநாயகத்தின் காலிகளோ ஓட்டுப் போடா விட்டால் தொலைத்துவிடுவோம் என்று தேர்தல் களத்திலேயே மக்களை மிரட்டியுள்ளனர். தாங்கள் எப்பேற்பட்ட ஜனநாயகவாதிகள் என்பதை அவர்களும் அடையாளம் காட்டியுள்ளனர்.

ஓட்டு போட்டதாலேயே மக்களை வெறுத்தோ, அவர்களை இழிவாக நடத்துவதோ புரட்சிகர அமைப்புகளின் நடைமுறையில் இல்லை. ஆனால் தங்களை மிகப் பெரிய ஜனநாயகவாதிகள் என்று சித்தரித்துக் கொள்ளும் தேர்தல் கமிசன் முதல் முதலாளித்துவ ஊடகங்கள் வரை எப்படி நடந்து கொண்டார்கள்? பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் உள்ள ஜனநாயக உரிமையைக்கூட சர்வாதிகாரமாக ரத்துசெய்தது தேர்தல் கமிசனின் அதிகார வர்க்கம்! ஊடகங்களோ ஒரு படி மேலபோய் விவாத அரங்குகள் என்ற பெயரில் வாக்களிக்க மறுப்பவர்களை வளைத்து வளைத்து தாக்கியது.

முக்கியமாக சன் தொலைக்காட்சி முதல் புதிய தலைமுறை, கேப்டன் டி.வி. வரை தேர்தலின் இறுதி நாட்களில் (முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களுக்கு கூட இந்த தடித்தோல்கள் இவ்வளவு துடிக்கவில்லை) ”வாக்களிக்காதவர்களை தண்டிக்க வேண்டும்” என்ற தலைப்பிலேயே நிகழ்ச்சிகளை நடத்தினர்.

வாக்களிக்காதவரின் ரேசன் அட்டைகள் மற்றும் முக்கிய உரிமைகளை பறிக்கவேண்டும் என்று வெறியோடு பாய்ந்தனர். கொடுக்கிற டார்ச்சரில் எடுக்கிற விதமாக ஓட்டை எடுக்க வேண்டும் என்று துரத்தி துரத்தி மக்களை அச்சுறுத்தினர். அனைத்துக்கும் மேலே தினமணியின் கார்ட்டூனிஸ்ட் மதிகெட்ட மதி வாக்களிக்காதவர்களை எமலோகத்துக்கு இழுத்து வா சித்ரகுப்தா என்று ஓட்டுப் போடாதவர்களை சாகடிக்கவும் வெறியோடு கிளம்பிவிட்டார். மோடிக்கு அடிக்கோடாய் தனது கோடுகளை இழுத்துக் கொண்டிருக்கும் இந்த விசப் பூச்சி மக்களை வெறியோடு கடிப்பதற்கு பெயர்தான் ஜனநாயகம்போல!

இதே தினமணியில் ஒரு காலத்தில் உதயன் என்ற கார்ட்டூனிஸ்ட்  ஜெயாவின் பார்ப்பனத் திமிரை வீங்கிய உதடுகளாய் விளாசித் தள்ளினார். தனது கோடுகளில் பாசிசத்தின் நரம்புகளை உரித்துத் தொங்கவிட்டார். பிழைப்புக்காக போன இடத்திலும் கொஞ்சமாவது ஜனநாயக சொரணை இருந்தது அவருக்கு. முழுக்க முழுக்க பார்ப்பன வைத்தியின் பல் துலக்கும் குச்சியாக ஆகிவிட்ட மதிக்குதான் மக்களின் மீது என்ன ஒரு வன்மம்! மக்களிடம் போய் பொறுப்பாகவும் பணிவாகவும் மாற்று அரசியல் கருத்துகளை பிரச்சாரம் செய்தாலே நக்சலைட்டுகள் என்று பீதியூட்டும் இந்த ஜனநாயகவாதிகள் தான் வாக்களிக்காத மக்களை தீவிரவாதியாக குதறுகிறார்கள். குறைந்த பட்சம் மக்கள் ஜனநாயகமாக தங்களது கருத்தை அமல்படுத்துவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத இவர்கள்தான் நமக்கு ஜனநாயகப்பாதையைக் காட்டும் யோக்கியர்களாம்!

ஓட்டுப் போட்டவர்களில் கணிசமானோர் உழைக்கும் மக்கள். ஓட்டுப் போடாதவர்களில் நகரத்து மேட்டுக்குடியினரும் அடக்கம். எனவே இதை தேர்தலில் ஓட்டுப் போடுபவர், போடாதவர் என்று சுருக்கி பார்க்காமல் இந்த போலி ஜனநாயக அரசமைப்பை எத்தனை மக்கள் புரிந்து கொண்டார்கள், எந்த அளவு தெரிந்து கொண்டார்கள், இதை மேலும் பரப்புவது எப்படி என்றே புரட்சிகர அமைப்புகள் பரிசீலிக்கின்றன. இந்த இத்துப்போன ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள்தான் இதை புள்ளிவிவரங்களிலிருந்து வெற்றியாக காட்ட முனைகிறார்கள். ஒருக்கால் புள்ளி விவரம்தான் வேண்டுமென்றால் இந்தியாவில் ஏழைகள், ஊட்டச்சத்து, இறப்பு, குழந்தைகள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளில், நம் நாடு மற்ற ஏழை நாடுகளோடு போட்டி போடுவது உலகறிந்த விசயம். இருப்பினும் சந்திரனுக்கு ராக்கெட் விட்டோம் என்று சில பார்த்தசாரதிகள் பல் தெரிய சிரித்துக் கொண்டு வல்லரசு ராக்கெட் விடுவதில்லையா? அது போலத்தான் தேர்தல் வாக்குப் பதிவை வைத்து புல்லரிக்கிறார்கள் சில லகுடபாண்டிகள்.

எனவே ஆளும் வர்க்கத்தின் இத்தனை அதட்டல் மிரட்டல்களையும் தாண்டி இந்த போலி ஜனநாயகத்தை புறக்கணித்த மக்களை முதலில் வாழ்த்துவோம்! வாக்களித்த மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி மாற்றுவோம்! புறக்கணிப்பின் தொடர்ச்சியாய் முன்னெடுக்கும் மக்களுக்கான மாற்று அதிகாரத்தை நிறுவும் மக்கள் கமிட்டிகள் வழி போலி ஜனநாயகத்தை வீழ்த்துவோம்!

–          துரை. சண்முகம்

 

1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை

15

ரோப்பா முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் வீடு இல்லாமல் தெருவில் தவிக்கையில், மறுபுறம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் யாரும் தங்காமல் “காலியாக”வே இருக்கும் அதிர்ச்சியான தகவலை, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை இனி விரிவாக.

அயர்லாந்து
அயர்லாந்தில் உள்ள காலியான விற்கப்படாத வீட்டுத் தொகுப்பு.

இங்கிலாந்தின் பிரபல நாளிதழான கார்டியன், ஐரோப்பிய யூனியன் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் இங்கிலாந்தில் சுமார் 7 லட்சம் வீடுகளும், ஜெர்மனியில் 18 லட்சம் வீடுகளும், பிரான்சில் 24 லட்சம் வீடுகளும், ஸ்பெயினில் 34 லட்சம் வீடுகளும் கேட்பாரின்றி காலியாக கிடப்பது தெரிய வந்துள்ளது.

இதை விட மிக அவலமான விடயம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகளிலும் லட்சகணக்கான வீடுகள் ஆளில்லாமல் அனாதையாக விடப்பட்டுள்ளன.

அத்தனை வீடுகளும் உலகமயம் உருவாக்கிய புதுப் பணக்காரர்களால் “முதலீடு” என்கிற வகையில் வாங்கி போடப்பட்டவையாகும். லண்டனில் இப்படி முதலீடுகளாக வாங்கிக் குவித்த மிக ஆடம்பரமான வீடுகள் இன்று தங்கவும் ஆளில்லாமல், பராமரிப்பும் இல்லாமல் பாழடைந்து சிதைந்து வரும் காட்சிகளையும் கார்டியன் பத்திரிக்கை படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

பலகையால் மூடப்பட்டுள்ள வீடுகள்
வடக்கு இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் சீல் வைக்கப்பட்டுள்ள வீடுகள்.

2007-2008-ம் ஆண்டில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் துறையின் ஊக பேர வணிக சூதாட்டம் உச்சத்தில் இருந்த போது, வீடுகளை வாங்கி விற்பது பெரும் லாபம் ஈட்டும் முதலீடாக விளம்பரப் படுத்தப்பட்டது. அதன் விளைவாக ஐரோப்பாவின் பல பணக்காரகளும், புது பணக்காரர்களும், தங்கள் முதலீடுகளை விரைவாக இரட்டிப்பாக்கி கொள்ள வீடுகளை வாங்கிக் குவித்தனர். இங்கிலாந்து, ஜெர்மனியில் வசிக்கும் பணக்காரர்கள் ஸ்பெயினில் தனி சொகுசு வீடுகளை (வில்லா) வாங்கிக் குவித்தனர். வீட்டின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு வேகமாக உயர்ந்து வரும் அதே நேரம், வீட்டை வாடகைக்கும் விடலாம் என்ற இரட்டை லாப ஆசை, வீடுகளின் மீது முதலீடுகளை குவிக்க வைத்தது.

திடீரென பெருகிய முதலீடுகளால் ஐரோப்பா முழுவதும் குறிப்பாக ஸ்பெயின், பிரான்சு போன்ற நாடுகளில் புதிய பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முளைத்துப் பெருகின. அவர்கள் பல புது திட்டங்களை அறிவித்து அப்பார்ட்மென்டுகள், தனி வில்லாக்கள், அதி சொகுசு வீடுகள், விளையாட்டு மைதானம் இணைந்த வில்லாக்கள், விடுமுறை வீடுகள் என கட்டிக்குவித்து அதை கணிசமாக விற்று லாபமீட்டவும் செய்தனர்.

காலி வீடுகள்
இங்கிலாந்தில் 7 லட்சம் காலி வீடுகள் உள்ளன.

தனி குடும்பத்திற்கு (நபருக்கு) விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் இணைந்த வீடுகளும்,  விடுமுறை நாள் வீடுகள் அதாவது விடுமுறையை கழிக்க கடற்கரை வீடுகள் என உருவாக்கப்பட்டன. பணம் இருப்பவருக்கு வேலை நாளில் தங்க ஒரு வீடு, விடுமுறையில் தங்க தனி வீடு என இவர்களின் ஆடம்பர அராஜகத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது.

ஆனால், விரைவில்இத்தகைய அராஜக முதலாளித்துவ பொருளாதாரத்தை தவிர்க்க இயலாமல் தாக்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஐரோப்பாவையும் பதம் பார்த்தது. பலர் வேலை இழந்தனர். அமெரிக்காவில் 2008-ல் வங்கிக் கடன் நெருக்கடியில் சிக்கி வங்கிகள் திவாலானதற்கு கட்டுப்பாடில்லாமல் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்கள் தான் ஆணி வேர். இந்தக் கடன்களை வம்படியாக வழங்க வைத்து பின்னர் மக்களை மொட்டையடித்தது கட்டுமானத் துறை முதலாளிகள்தான்.

ஐரோப்பிய காலி கட்டிடங்கள்
ஐரோப்பிய நாடுகளில் காலியாக உள்ள வீடுகள் எண்ணிக்கை விபரம்.

இந்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக பல நடுத்தர வர்க்க குடும்பங்கள் வேலையில்லாமல் வீதிக்கு விரட்டப்பட்டனர், அவர்களால் வாடகையும் கொடுக்க முடியாது என்பதால் ஐரோப்பா முழுவதும் வீடுகள் காலியாகத் தொடங்கின.

கட்டிடக் கலையின் உச்சத்தை தொட்ட பிரான்சில் வீடிழந்து வீதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை 2009-ம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 5 லட்சமாக உயர்ந்து விட்டது.

கட்டப்பட்ட வீடுகள் அப்படியே தான் இருக்கின்றன. அவற்றில் தங்குவதற்கான விலையை இவர்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் வீட்டை காலியாக வைத்துவிட்டு இவர்களை விரட்டி விட்டார்கள். ஆம். அஃறிணை பொருட்கள்தான் உயிருள்ள மனிதர்களை விட முக்கியமானது. அடுத்து உலகமயமாக்கலின் மூலம் லாபத்தை அதிகப்படுத்த மக்களின் வேலைகளையும் பிடுங்கி விட்டார்கள். உழைக்க அவர்கள் தயார் தான், ஆனால் அவர்களுக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை, வீடில்லை உணவில்லை.

இது தான் சுதந்திர சந்தை எனும் முதலாளித்துவ விதி. மக்கள் வீதியில் விடப்பட்டு சிதைந்து போனாலும் கூட காசில்லாதவர்களை வீடுகளில் தங்க வைக்கக் கூடாது என்பதுதான் சந்தையின் “மனிதாபிமானம்”. சிதைந்து போய் கொண்டிருக்கும் அந்த வீடுகளை, வீடில்லாதவர்கள் ஆக்கிரமித்து விடாமல் போலீசைக் கொண்டு பாதுகாப்பது “ஜனநாயக“ அரசின் கடமை. இந்த ஜனநாயகத்தைத்தான் முதலாளிகள் உச்சி மோந்து வருடிக் கொடுக்கிறார்கள்.

முதலாளித்துவ மனிதாபிமானமும், ஜனநாயகமும் அதன் லாபத்தில் உறைந்து போய் இருப்பதை, இதை விட எளிதாக எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்.

லிவர்பூல் காலி வீடுகள்
லிவர்பூலில் சீல் வைக்கப்பட்ட காலி வீடுகள்.

இங்கிலாந்தின் வீடில்லாதவர்களுக்கான அமைப்பின் ஆதரவளாரான டேவிட் அயர்லாந்து இதை பற்றி கூறுகையில் “வீடுகள் மக்கள் தங்குவதற்காக தான், ஆனால் வீடுகள் இப்படி காலியாக உள்ளது என்றால் ஏதோ தவறாக உள்ளது. வீடுகளை முதலீட்டு பொருளாக நினைப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோருகிறார். ஏதோ தவறு இல்லை, ஒட்டு மொத்த முதலாளித்துவ கட்டமைப்பே தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடில்லாதவர்கள் அனைவரையும் நிரப்பிவிடும் அளவு வீடுகள் இருந்தும் ஸ்பெயினில் மேலும் பலர் வீடிழந்து புதிதாக வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று புலம்புகிறார் ஸ்பானிய வீட்டுவசதி கழக உறுப்பினரான மரியா.

ஐரோப்பிய யூனியனின் வீடில்லாதவர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பின் இயக்குனரான ப்ரிக் ஸ்பின்வின் கூறுகையில் ”வீடில்லாதவர்கள் நிலைமை மோசமாக உள்ளது, அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து பல வீடுகளை சந்தையில் விற்பனைக்கு தயார் செய்ய வேண்டும்” என்று கோருகிறார். இது போன்று அழுகிப் போன பிணத்துக்கு அலங்காரம் செய்ய அல்லது செயற்கை சுவாசம் கொடுத்து உயிர்ப்பிக்க கோருவதுதான் இவர்களைப் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளின் திருப்பணி.

வீடு வெளியேற்றம்
ஸ்பெயின் – மாட்ரிடில் மாற்றுத் திறனாளி ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வந்திருக்கும் போலீஸ் படையும், அதை எதிர்த்து நிற்கும் அண்டை வீட்டுக்காரர்களும்.

இந்த வாதங்கள் மேலே அதிகாரத்தில் இருப்பவர்களின் காதில் கேட்காமல் இல்லை. ஐரோப்பிய யூனியன் கமிசனில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டு, வீடில்லாதவர்களுக்கு தீர்வை வழங்க உரிய தந்திரத்தை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது.

1 கோடி வீடுகள் காலியாக உள்ளன, 50 லட்சம் பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன தீர்வு, வீடு இல்லாதவர்களுக்கு 50 லட்சம் வீடுகளை கொடுத்தால் கூட 50 லட்சம் வீடுகள் மிஞ்சி விடும். எளிமையான கூட்டல் கழித்தல் கணக்கு சிறு குழந்தைக்கு கூட தெரியும். எளிமையான இந்த தீர்வை கண்டுபிடிக்க ஐரோப்பிய கமிசன் இனிமேல் ஒரு தந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டுமாம். இது கோரிக்கையாம், அது கமிசனில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாம். முழுப் பூசணிக்காயை இப்படி சரவண பவன் முழுச் சாப்பாட்டில் மறைக்க முனைகிறார்கள். இதை என்னவென்று சொல்வது? ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது ஏனென்று இப்போது புரிகிறதா?

தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குனர் பிரிக் ஸ்பின்வின்னின் கோரிக்கையை கவனமாக கேளுங்கள், வீடுகளை சந்தைக்கு திறந்து விட வேண்டுமாம், சந்தையில் வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டதால், வேலை இழந்து, வருமானம் இழந்து கடன் தவணையோ, வாடகையோ கட்ட முடியாமல் வீட்டை விட்டு வீதிக்கு வந்தார்கள் மக்கள். மீண்டும் வீடுகளை சந்தைக்கு விட்டு என்ன செய்வது? தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த பிரச்சனைக்கு எப்படிப் பட்ட தீர்வை முன் வைக்கிறார்கள் என்று பாருங்கள்?

இப்படியான ஏற்றத் தாழ்வுக்கு இது தான் குறிப்பிட்ட காரணம் என்று ஒன்றை கூறிவிட முடியாது. இதற்கு பல காரணங்கள் இருகின்றன. பல கோணங்களில் இதை ஆராய வேண்டும் என்று நழுவுகிறார்கள் முதலாளித்துவ நிபுணர்கள். அதற்கு ஒரு ஆய்வு நிறுவனத்தை உருவாக்கி, பல ஆண்டுகள் உழைத்து, ஆய்வறிக்கை வெளியிட்டு ஒரு சிலர் நோபல் பரிசு கூட வென்று விடலாம். யார் கண்டது. மக்களின் துயரத்தில் விருது ஜெயிப்பது என்பது அன்னை தெரேசாவிலிருந்து, நுண்கடன் நிபுணர் முகமது யூனுஸ் வரை நீள்கிறது.

முன்னர் லாபமீட்டும் நோக்கத்தில் பல புதிய வீடுகளை கட்டி தள்ளிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்த வீழ்ச்சியை சரி கட்ட அரை குறையாக கட்டிய வீடுகளை இடித்துவிட்டு செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி லாபம் பார்க்கலாம் என்று கடப்பாறையுடன் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

இவ்வளவு வீடுகள் காலியாக இருக்க இன்னும் வாங்குவார்களா? என்று நீங்கள் கேட்கலாம். இன்னும் லண்டனில் ரியல் எஸ்டேட் விலை உயர்வில் தான் இருக்கிறது என்று உரக்கக் கூறுகிறார் ரியல் எஸ்டேட் முகவர் சாவ்லிஸ்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கொடுத்தாலும் உபரியாக மீந்து போகும் அளவற்று வீடுகள் உள்ளது என கார்டியன் ஆராய்ந்து கூறிய பின் என்ன நடந்தது?

கார்டியன் கூறுவதற்கு முன்னரே பல இடங்களில் வீட்டு கடன் தொகையை  கட்டாதவர்களின் வீடுகளை ஜப்தி செய்யும் இடங்களில் கணிசமான போரட்டங்கள் நடந்தபடி உள்ளன.

ஆனால் வீடிழந்த மக்களுக்கு ஆக்கிரமிப்பு, போராட்டம், இருப்பவனிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகள் வராமல் இருக்க அரசிடம் கோரிக்கை வைக்க சொல்லி கொடுத்து கொண்டிருக்கின்றன தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். நமது அன்னா ஹசரேவை கூப்பிட்டு ஐரோப்பிய ‘ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கச் சொல்வார்களா’ என்று தெரியவில்லை.

பலர் தேர்தலில் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படலாம் என நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் தீர்வு எளிமையானது, குடியிருக்க வீடு தேவைப்படுபவர்கள் அவற்றை எடுத்துக் கொள்வதுதான் தீர்வு. அவர்களை சுரண்டிய பணத்தில் கட்டப்பட்ட வீடுகள் தான் அவை.

–    ஆதவன்

படங்கள் : நன்றி theguardian.com , rt.com

மேலும் படிக்க

புதுவை பல்கலைக் கழக மாணவர் போராட்டம் வெற்றி !

1

புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் வெற்றி: மாணவனைத் தாக்கிய சர்வாதிகார ரௌடிக் கும்பலை விசாரிக்க முன்வந்தது நிர்வாகம்!

டந்த ஏப்ரல் ஆறாம் தேதி அன்று ராதாகிருஷ்ணன் என்ற அப்பாவி தமிழ் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனைப் பிடித்து ஒரு சிறு குற்றச்சாட்டின் கீழ் தன்னிச்சையாக விசாரித்த புதுவை பல்கலைக்கழகத்தின்  அகாடமிக் ஸ்டாஃப் காலேஜ் இயக்குனர் ஹரிஹரன் மற்றும் அவரது கைக்கூலி கும்பல் அந்த மாணவன்தான் பெண்கள் விடுதிகளுக்குள் நுழைந்து மாணவிகளை அச்சுறுத்தியவன் என்று ஒப்புக்கொள்ளச் சொல்லித் துன்புறுத்திச் சித்திரவதை செய்தது. ஆனால் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து, தொடர்ந்து போக்குக் காட்டித் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் காமுகனான உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க வக்கற்ற பாதுகாப்பு கம்பெனியும் பல்கலைக்கழகத்தின் நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் தான்தான் அதிகாரி, நீதிபதி என்று கருதிக்கொண்டிருந்த ஹரிஹரனும் இந்த மாணவனை வைத்தே தங்களது கையாலாகாத் தனத்தை மறைத்துவிடலாம் என்று கணக்குப் போட்டு அந்த மாணவரைத் துன்புறுத்தி மிரட்டி பொய் வாக்குமூலம் வாங்கியது அம்பலமானது.

பொய் வாக்குமூலம்
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையின் மூலமாக, மாணவரைத் துன்புறுத்தி மிரட்டி, பொய் வாக்குமூலம் வாங்கியது அதிகாரபூர்வமாக 11.04.2014 அன்று அம்பலமாகியபோது எடுத்த படம்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் பெருமளவிலான மாணவர் போராட்டங்கள் வெடித்தன. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தன்னை இணைத்துக் கொண்டு போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக துண்டறிக்கைகள் சுவரொட்டிகள் மூலம் வீச்சான பிரச்சாரங்களை மேற்கொண்டது. வளாகத்தினுள்ளும் புதுவை நகரிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருநூறுக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. முதல் மூன்று நாட்கள் நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை முற்றுகையிட்டு நிர்வாக நடவடிக்கைகளை முடக்கிய மாணவர்கள் கடந்த செவ்வாய் (ஏப்ரல் 15) அன்று இன்னும் வீரியமான முறையில் போராட்டத்தை கொண்டுசென்றனர். பு.மா.இ.மு. தோழர்களின் ஆலோசனையை ஏற்று மாணவர்கள் துண்டறிக்கைகள் தயாரித்து அவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் விடுதிகளில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் திங்கள் அன்று பரவலாக விநியோகித்தனர். ஆர்வத்துடன் துண்டறிக்கைகளைப் படித்த மாணவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்ததோடு ஹரிஹரன் கும்பலின் கொடூரச் செயலுக்கு எதிராக தமது கடும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். இதற்கிடையில் மாணவரை தனிமையில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்து அவமானப் படுத்திய ஹரிஹரன், பேராசிரியர் பூஷன், தனியார் செக்யூரிட்டி அலுவலர் ஷியாம், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் எம்.டி. குணசேகரன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப் பட்டது.

ஹரிஹரன் போஸ்டர்
ஹரிஹரன் கும்பலை அம்பலப்படுத்தும் விதமாக மாணவர்களால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.

ஹரிஹரன் மற்றும் பூஷன் ஆகியோர் தமது சொத்துக்களைச் சேதப்படுத்திவிட்டதாக மாணவர்கள் மீது கொடுத்த புகாரை  காவல் துறைக்கு அனுப்பிய நிர்வாகம் மாணவர் ராதாகிருஷ்ணன், ஹரிஹரன் கும்பல் மீது கொடுத்த புகாரை அனுப்பாமல் கிடப்பில் போட்டது. முதலில் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒப்புதல் கடிதம் அனுப்பினால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய முடியும் என்று கூறிவந்த காவல்துறை, புரட்சிகர அமைப்புகள் பிற ஜனநாயக சக்திகள், மாணவர்கள் என்று பல தரப்புகளிலும் இருந்து நெருக்கடி முற்றவே வேறு வழியின்றி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது. செவ்வாய் அன்று மாணவர்களின் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்த்த நிர்வாகம் காவல்துறையை சமரசம் பேச அனுப்பியது. ஒரு காவல் ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் வந்து கூடியிருந்த மாணவர்களிடம் அமைதியாக இருக்கும்படியும் பிரதிநிதிகள் மட்டும் சென்று நிர்வாகத்திடம் பேசும்படியும் கூறினர்.

அதனை மறுத்துப் பேசிய மாணவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்த பிறகும் ஏன் இன்னும் ஹரிஹரன் கும்பலை கைதுசெய்யவில்லை என்று கேட்டனர். “அவர்களும்தான் உங்களில் நூறுபேர் மீது வழக்குக் கொடுத்துள்ளார்கள், உங்களையும் கைதுசெய்யலாமா?” என்று சமாளித்துக்கொண்டு  கேட்க மாணவர்கள் ஆவேசத்துடன், “இப்பொழுதே கைதுசெய்யுங்கள்” என்று ஆர்ப்பரிக்க, பின்வாங்கியது காவல்துறை. “நாங்கள் நிர்வாகத்துடன் பேசுகிறோம், உங்களின் கோரிக்கைகள் ஹரிஹரன் கும்பலை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானதுதான், ஆனால் வளாகத்திற்கு வெளியே ரோட்டுக்கு மட்டும் வந்துவிடாதீர்கள்” என்று கூறிச் சென்றது. பின்னர் மாணவர்கள் அணிதிரண்டு நிர்வாக அலுவலகத்தினுள் பிரவேசித்து  “துணைவேந்தர் வந்து உரிய பதிலளிக்காமல் இங்கிருந்து நகர மாட்டோம்” என்று முழக்கமிட்டுவிட்டு அங்கேயே அமர்ந்துகொள்ள காவல்துறை அதிகாரிகள் துணைவேந்தருடன் பேச்சு நடத்தி கடைசியில் பேச்சுவார்த்தைக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாணவர்கள் துணைவேந்தரைக் கேள்விகளால் துளைக்கவே பதில்கூற முடியாமல் திணறிப் போனார் அவர்.

துணைவேந்தர், ஒழுங்கு நடவடிக்கை குழு
15.04.2014 அன்று நடந்த கூட்டத்தில் மாணவர்களால் எழுப்பப்பட்ட நியாயமான கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் துணைவேந்தர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள்.

“நீங்கள் ஏன் ஹரிஹரன் கும்பலைப் பாதுகாக்கிறீர்கள்? யார் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர், நீங்கள்தானா அல்லது ஹரிஹரனா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய மாணவர்கள், “சரியான நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்களே ஹரிஹரன் கும்பலின் மீதும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்போம்” என்று நேரடியாகவே எச்சரித்தனர். ஒரு விசாரணைக் குழுவை நியமித்து அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுச் செயல்படுவதாகக் கூறிய துணைவேந்தர், அதுவரை ஹரிஹரனையும் அவரது கும்பலையும் பணிநீக்கம் செய்வது சாத்தியமில்லை என்று சமாளித்தார். ஆனால் உடனடியாக அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய மாணவர்கள் உடனடியாக விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறுதியுடன் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அது இயலாது என்று துணைவேந்தர் கூறவே துணைவேந்தருக்கும் நிர்வாகத்திற்கும் எதிராக கோஷமிடத் தொடங்கினர். துணைவேந்தரும் பதிவாளரும் அவசரமாக வெளியேறி ஓடினர்.

தோழர்களின் ஆலோசனையின்படி அன்று மாலை பல்கலைக்கழக பேருந்துகள் வெளியேறும் நேரத்தில் மாணவர்கள் நுழைவாயிலில் கூடி ஹரிஹரன் பூஷன் உள்ளிட்டோரின் புகைப்படங்களையும் உருவ பொம்மைகளையும் செருப்பால் அடித்து நெருப்பில் பொசுக்கினர்.

உருவபொம்மை எதிர்ப்பு
கிரிமினல் கும்பலின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய மாணவர்கள்.

பேருந்துகளில் இருந்த மாணவர்கள் தாமாகவே இறங்கிப் போராட்டத்தில் கலந்துகொண்டு விண்ணதிர ஹரிஹரன் கும்பலுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் எதிராக முழக்கமிட்டனர். பேருந்துகளில் சென்ற பேராசிரியர்களும் அலுவலர்களும் தமது ஆதரவைக் கூறிச் சென்றனர். அடுத்தநாள் புதன் (ஏப்ரல் 16) அன்று போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்கள் அன்று நடைபெறவிருந்த கிரீன் எனர்ஜி டெக்னாலஜி துறைக்கான புதிய கட்டிடத் திறப்புவிழாவை முடக்கி அதில் கலந்துகொள்ள வந்திருந்த வெளிநாட்டு கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அலுவலர்களிடம் நிர்வாகத்தின் மாணவர் விரோதப் போக்கினை அம்பலப் படுத்தப் போவதாக அறிவித்தனர். பயந்து நடுங்கிப் போன நிர்வாகம் கூட்டத்தை காலை 7.30 மணிக்கே தொடங்கி அவசர அவசரமாக முடித்தது. விழா நடைபெறவிருந்த இடத்தையும் திடீரென மாற்றிக் கொண்டு தப்பிக்கப் பார்த்தது. பின்னர் பத்து மணியளவில் விழாவினை ஒட்டி ஒரு விவாத நிகழ்வு நடைபெற்றது. பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் விழா நடைபெற்ற இடத்தை அடைய விடாமல் தடுக்க அழைக்கப் பட்டிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் மாணவர்களைத் தடுத்து நிறுத்தினர். பெருந்திரளாக தொடக்கம் முதல் உறுதியாகப் போராடிவரும் சுமார் ஐம்பது மாணவிகள் முன்னின்று அணி நடத்திச் சென்றனர்.

புதுவை பல்கலைக்கழக மாணவியர்
காவல்துறையை எதிர்கொண்டு போராட்டத்தில் களமிறங்கிய மாணவிகள்.

துணைவேந்தரின் அலுவலகத்தை நோக்கி முன்னேறிய மாணவர்களை தடுக்க இம்முறை பெண் காவலர்களும் பேச்சுவார்த்தை நடத்த சுமார் இருபது காவல் உயரதிகாரிகளும் காத்திருந்தனர். துணைவேந்தர் அலுவலகத்தின் வாயிலை மூடிய காவல்துறை, நிர்வாகத்திடம் பேசி ஒர் அரங்கினுள் கூட்டம் நடத்தி இன்று தீர்வு கண்டுவிடலாம் என்று கூறியது. “இதுவரை நீங்கள் நடத்திய கூட்டமெல்லாம் போதும், இங்கேயே இப்போதே பதில் கூறிவிட்டு வெளியேறுங்கள்” என்று மாணவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் அங்கேயே பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது நிர்வாகம். மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைக்க ஒப்புக்கொண்டார் துணைவேந்தர்.

பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் விசாரணைக் குழுவில் இருந்தால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறாது என்று மாணவர்கள் கூறியதை ஏற்று வெளி மாநிலங்களைச் சார்ந்த நடுநிலையாளர்கள் என்று அறியப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி, காவல் உயர் அதிகாரி, புதுவை எஸ்.பி. உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அதன் விவரங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்தார். குழுவின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகள் அப்படியே நிறைவேற்றப் படும் என்றும் உறுதியளித்தது நிர்வாகம். மாணவர் பிரதிநிதிகள், ஹரிஹரன் கும்பல் விசாரிக்கப்படும்போது பார்வையாளர்களாக இருக்க வேண்டுமென்று மாணவர்கள் கோரியதை முதலில் ஏற்க மறுத்த நிர்வாகம் பின்னர் அதனை ஒப்புக்கொண்டது.

புதுவை பல்கலைக் கழகம்
சரியான வழிகாட்டுதல், நிலைப்பாடு மற்றும் ஒற்றுமையுடன் கூடிய தொடர் போராட்டமே அதிகாரம் மற்றும் காவல்த்துறையை விழிபிதுங்கச் செய்யும்.

மேலும் விசாரணை முழுவதும் வீடியோ பதிவுசெய்யப்படும் என்றும் அதன் ஒரு படி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எந்தச் சூழலிலும் நிர்வாகம் ஹரிஹரனையோ அல்லது அவரது கூட்டாளிகளான கும்பலையோ பாதுகாக்காது என்று உறுதியளித்த துணைவேந்தர், ஹரிஹரனை கல்லூரி வளர்ச்சி குழுவின் (College Development Council) முதன்மையர் பதவியிலிருந்து நீக்கினார். (முறைகேடாக தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்/அனுமதி வழங்க ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் பெருமளவில் பணம் பெற்றுச் சுருட்டிக்கொண்ட துறை இது என்பது முக்கியம்!)

விசாரணை முடியும்வரை காத்திருப்பதென்றும் தாக்கப்பட்ட மாணவர் ராதாகிருஷ்ணனுக்கு நீதியும், அப்பாவி மாணவனை அடித்துச் சித்திரவதை செய்தும் இன்னும் பல அட்டுழியங்கள் செய்தும் சர்வாதிகாரத்துடன் இயங்கிவரும் ஹரிஹரன் மற்றும் அவருக்குத் துணை நிற்போருக்குத் தண்டனையும் கிடைக்காவிட்டால் போராட்டத்தைத் தொடர்வது என்றும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஹரிஹரன் கும்பலுக்கு எதிரான வழக்கினை தொடர்ந்து நடத்தி அவர்களின் கிரிமினல் செயல்களுக்கு குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் தண்டனை பெற்றுத்தர தொடர்ந்து போராடுவது என்றும் மாணவர்கள் உறுதிபூண்டுள்ளனர். இப்போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று உணர்வுடனும் உறுதியுடனும் போராடியது எழுச்சியூட்டுவதாக அமைந்திருந்தது.

தமது அகமதிப்பீட்டுத் தேர்வுகளைக்கூடப் பொருட்படுத்தாமல் மாணவிகள் தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்றதும் கைதுசெய்தால் கூடப் பரவாயில்லை என்று உறுதியுடன் எதிர்த்து நின்றதும் போராட்டத்திற்கான அவர்களின் வேட்கையைப் பறைசாற்றுவதாக இருந்தது. இப்போராட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தொடக்கம் முதல் உடனிருந்து மாணவர்களை உற்சாகப் படுத்தி ஒன்றுதிரட்டவும் புதிய வழிகளில் வீரியமாகப் போராட்டத்தைக் கொண்டுசெல்லவும் உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கியது. களப்போராட்டம், சட்டப் போராட்டம் என எல்லா விதங்களிலும் தனது ஆதரவை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

ஓர் அப்பாவி மாணவனை அடித்துச் சித்திரவதை செய்த ஹரிஹரன் கும்பல் தண்டிக்கப்படுமா அல்லது மாணவர்கள் தாமாகவேதான் தண்டனையை வழங்க வேண்டுமா என்பதை இனி  பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயல்பாடுகளும் விசாரணைக் குழுவின் அறிக்கையும்தான் தீர்மானிக்க வேண்டும்!

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதுச்சேரி

தடை தகர்த்த தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டங்கள்

9

1. தருமபுரி

“மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத்தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!”

என்ற தலைப்பின்கீழ் தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள சந்தைப்பேட்டையில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம் 18.04.2014 மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. அவ்வமைப்பின் வட்டச் செயலர் தோழர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த மூத்த தோழர் ஆம்பள்ளி முனிராஜ், வி.வி.மு-வின் வட்டக்குழு உறுப்பினர் தோழர் குபேந்திரன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் ராஜா,  மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜானகிராமன் ஆகிய தோழர்களின் உரையின் முடிவில் மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தை சேர்ந்த மையக்கலைக்குழுவினரின் எழுச்சிமிகு புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. போலீசு மற்றும் உளவுத்துறையினர்களின் பீதியூட்டல் நடவடிக்கைகளை முறியடித்து நடத்தப்பட்ட இப்பொதுக்கூட்டம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்லவரவேற்பைப் பெற்றது.

தோழர் கோபிநாத் தனது தலைமை உரையில் இந்த பொதுக்கூட்டத்தினை நடத்த உயர்நீதிமன்றம் வரை சென்று செலவு செய்து அனுமதிவாங்கி நடத்தப்படுவதை எடுத்துச் சொல்லி இந்த நாட்டின் பேச்சுரிமை, கருத்துரிமை என்று சொல்லப்படுவைகளின் கேலிக்கூத்துகளை பட்டியலிட்டு தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சாதிய கட்சிகளின் சந்தர்ப்பவாத தகிடுதத்தங்களை தோலுரித்து காட்டினார்.

அடுத்து பேசிய தோழர் ஆம்பள்ளி முனிராஜ், சாதாரண கூலி ஏழை உழைக்கும் மக்களின் மொழியில் எளிமையாக நையாண்டிமுறையில் இந்த போலீசு மற்றும் அதிகாரவர்க்க தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திப்பேசி தேர்தலை மக்கள் புறக்கணிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

தோழர் குபேந்திரன் பேசுகையில், மோடி மற்றும் தமிழகத்தின் லேடிமோடியான ஜெயலலிதாவின் பார்ப்பன கூட்டரசியலை சாடி பேசினார்.

தோழர் ராஜா பேசுகையில் இந்த தேர்தல் காசு இருந்தால்தான் கல்வி எனும் இன்றைய மாணவர்களின் நிலைமையை மாற்றி விடப் போகிறதா? என கேள்வி எழுப்பி தனியார்மய கல்விமுறைக்கு வேட்டுவைத்திடும் வகையில் மாணவர்கள் பகத்சிங் வழியில் போராட முன்வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப்பேசினார்.

தோழர் ஜானகிராமன் தனது உரையில் இந்த போலிஜனநாயகத் தேர்தலை வாராது வந்த மாமணியாக சித்தரிக்கும் தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்களின் சித்து வேலைகளை அம்பலப்படுத்தியும் , புதிய ஜனநாயகப்புரட்சிக்கு அணிதிரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.

தோழர் காளியப்பன் தனது சிறப்புரையில், “1990-க்கு முன்பு மக்கள் நலன் என்றும், அரசியல்வாதிகளுக்கு கொஞ்சம் அதிகாரம் என்றும் பெயரளவில் இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு உலக வர்த்தகக் கழகம் சொல்வது எதுவோ அதுதான் நடைமுறையாகி விட்டது. இதன்மூலம் கொஞ்சம் நஞ்சம் இருந்த பெயரளவிலான அதிகாரமும் பறிக்கப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு கைமாறும்படியான சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவும் போதாது என்று அதிகாரம் அனைத்தும் ஆணையம் என்ற மூன்றாவது பிரிவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய அரசு உலகவர்த்தகக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து விட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கட்டுப்பாட்டு வாரியம் என்று அனைத்துக்கும் கட்டுப்பாடு போடப்பட்டது. இதில் எடுக்கும் முடிவில் இந்திய அரசோ, அரசாங்கமோ தலையிடமுடியாது. உதாரணமாக, மின்கட்டண உயர்வை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால்அது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எடுத்த முடிவு என்று சட்டமன்றத்தில் ஜெயா கூறினார். இனி அனைத்து துறைக்கும் ஆணையம்தான் வரும்! இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளும் நாட்டின் இறையாண்மையும் பறிபோவதோடு, நாடும் மறுகாலனியாகி வருகிறது.

அடுத்து, உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக சித்தரிக்கப்படும் நமது நாட்டின் ஜனநாகத்தின் நான்கு தூண்களாக சொல்லப்படும் அரசாங்கம், அதிகாரவர்க்கம், நீதித்துறை, பத்திரிக்கைத்துறை ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களை வாழ்விழக்க செய்து கொழுத்த லாபவெறியோடு அலைந்து திரிகின்ற தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய நாடுகளை சேர்ந்த கம்பெனிகளின் வாலாகிபோய்விட்டதை ஒவ்வொன்றாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி ஆளும் வர்க்கங்களின் இந்த அமைப்புமுறைகளை அடியோடு தகர்த்து ஒரு புதிய ஜனநாயக குடியரசை அமைக்க போராடுவதே நம்முன் உள்ள கடமையாகும். அதன் முதல் நடவடிக்கையாக மறுகாலனியாக்கத்துக்கான இந்த தேர்தலை புறக்கணிப்போம்!” என்று அறைகூவி அழைக்கும் வகையில் சிறப்புரையாற்றியது நல்லவரவேற்பை பெற்றது.

கூட்ட தொடக்கத்திலிருந்து இறுதிவரை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் வீடியோ எடுப்பதாக சொல்லி மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்ட அதிகாரவர்க்கத்தின் திமிரை பொருட்படுத்தாது மக்கள் உணர்வோடு இறுதிவரை பொதுக்கூட்டத்தை கவனித்துச் சென்றது புதுரத்தம் பாய்ச்சுவதாக இருந்தது.

இவண்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு : செல்- 9443312467

2. கரூர்

21.04.2014 அன்று நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காக நடத்தப்படும் தேர்தலை விளக்கி கரூரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கரூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயலர் இரா பாக்கியராஜ் தலைமையேற்க பேச்சாளராக தோழர் இராமசாமியும், சிறப்புரையாக மனித உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூவும் பேசினர். இதனைத் தொடர்ந்து புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக தோழர் பாலமுருகன் நன்றியுரையாற்றினார்.

பொதுக்கூட்டம் நடத்துவதாக திட்டமிட்ட நாள் முதல்,  பகுதி தேர்தல் கமிசன் அலுவலர்கள் தொடர்ந்து பலமுறை அலைக்கழித்து அனுமதி மறுத்தனர். தனிநபர்களை மற்றும் கார்ப்பரேட் கம்பெனியை விமர்சித்து பேச வாய்ப்பிருக்கிறது என்று காரணம் கூறினர்.  “இந்நாட்டில் அனைவருக்கும் தனிநபராகவோ அல்லது அமைப்பாகவோ பேசவும், மாற்றுக் கருத்து கூறவும் உரிமையுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி வரை போராடி அனுமதி பெற்று கூட்டம் நடத்தப்பட்டது.

தோழர் இராமசாமி தனது உரையில், ஆண்டு முழுவதும் இலஞ்சம், ஊழல் குற்றங்களில் ஊறித் திளைக்கும் இக்கும்பல் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் யோக்கியர்கள் போல நடிப்பதும், அவ்வாறு நடிக்க முயன்றதில் தன்னுடைய புத்தியை அவர்கள் பல இடங்களில் வெளிப்படுத்தி மாட்டிக் கொண்டு மானம் போனதும் குறித்து பேசி அம்பலப்படுத்தினார். இவர்கள் உன்னதமான இந்த அமைப்பை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருப்பதாக நாடகமாடுவதுடன் இறந்த பிணத்தை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்று தேர்தல் அலுவலர்களின் முகத்திரையைக் கிழித்தார். மேலும், கார்ப்பரேட் கம்பெனியின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு இந்த அரசியல் கட்சிகள் நடத்தும் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பேசினார்.

பிறகு சிறப்புரையாற்றிய தோழர் ராஜூ, இந்த அரசியல் கட்சிகளின் யோக்கியதை என்ன? இவர்கள் நடத்தும் தேர்தல் ஜனநாயக நாடகத்தில் மக்களை வெறுமனே ஓட்டுப் போடும் கதாபாத்திரத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேறு எதற்கும் மக்களுக்கு உரிமை இல்லை. ஓட்டு பொறுக்கும் அரசியல் கட்சிகள் தங்களது நலனை மட்டுமே முன்நிறுத்துகிறார்கள். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், விவசாயிகளுக்கு விலை நிர்ணயிப்பது பற்றியோ, கல்வி இலவசமாக வழங்குவதை தனது இலட்சியமாகவோ அல்லது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றியோ பேசுவதில்லை. மாறாக, தனிநபர்களின் நடத்தை பற்றி பேசி, பண பலத்தால் வென்று எவ்வாறு மக்களை ஏய்த்து கொள்ளை அடிக்கலாம் என்றுதான் சிந்திக்கிறார்கள். தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் ஜனநாயகக் கட்சி என்று எதுவும் இல்லை. எல்லாமே தங்களின் குடும்ப அரசியலை நடத்துகின்றார்கள். கட்சிகளே இவ்வாறு முடியாட்சி போல நடத்தப்படும் போது இவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது மடமை. இவர்கள் அனைவரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களுக்காக நாட்டினையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கவும், அதற்கு தடையாக இருக்கும் அனைத்து வகையான சட்டங்களையும் நீக்கவும் செய்து குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையும் பிடுங்கி பாசிச ஆட்சியை கொண்டு வருவதைத்தான் இலக்காக கொண்டுள்ளனர். நாட்டின் நிலை இப்படி இருக்கும் போது வெறுமனே ஓட்டு போடுவதன் மூலம் அனைத்தையும் மாற்றி விடலாம் என்று பிரச்சாரம் செய்வது மக்களை முட்டாளாக்கும் வேலை.

பா.ஜ.க, காங்கிரசு முதல் தற்போது ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வரை அனைவரும் இதையே செய்கின்றவர்கள்தான். இதற்கு தீர்வு காண கட்சியை மாற்ற வேண்டும் என்று சிந்திப்பது தீர்வாகாது. மாறாக, நம்முடைய பிரச்சனையை நாம்தான் தீர்க்க வேண்டும். இதற்கு அனைவரும் புரட்சிகரமான முறையில் புதிய ஜனநாயக அரசு அமைக்க போராட முன் வர வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து இந்த கருத்தினை கலைவடிவத்தில் கலைக்குழுவின் பாடல்கள் மக்களிடம் கொண்டு சென்றன. தோழர் பாலமுருகன் நன்றியுரை கூறிய பின்பு கூட்டம் நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

3. ஆக்சில் இந்தியா

காஞ்சிபுரம் அருகாமையில் உள்ள வெண்பாக்கம் கிராமத்தில், ஆக்சில் இந்தியா கிளை சங்கத்தின் (இணைப்பு – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) சார்பாக “போலி ஜனநாயக தேர்தலை புறக்கணிப்போம், புதிய ஜனநாயக அரசைக் கட்டியெழுப்புவோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில், தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் சரவணன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலாளர் தோழர் சிவா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அனைத்து ஓட்டு பொறுக்கிக் கட்சிகளின் சார்பாக நிறுத்தக் கூடிய வேட்பாளர்கள் எல்லோரும் கோடீஸ்வரர்கள் என்பது மட்டுமல்ல எந்த கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லாமல், மகன், மகள், சொந்தக்காரர்கள், பணக்காரர்கள் என்ற தகுதியில் தேர்தல் சீட்டு தரப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு ஜனநாயகம் வழங்குவார்களா? மற்றும் அரசு அதிகார வர்க்கம் மக்களை அடக்கி ஒடுக்குகின்றது. இவர்களை யார் தேர்ந்தெடுப்பது என்றும் ஆணையங்கள், தீர்மானங்கள் போன்ற அதிகார வர்க்க அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அதுமட்டும் இல்லை , அடுத்து மேற்குறிப்பிட்ட சில கட்சிகள் அதன் வேட்பாளர்கள் அரசில் பங்கேற்கும் போது, அரசின் கொள்கை என்பது மறுகாலனியாக்க கொள்கைகளே, இவைகள் நமது வாழ்வுரிமைகள் பறிக்கப்பட காரணமாக இருக்கின்றன. இக் கட்சிகளின் வேட்பாளர்கள் அரசின் அதிகாரவர்க்கம் – பன்னாட்டு கம்பனிகளுக்கு சேவை செய்கின்றன – இக்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம், புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரள்வோம். உழைக்கும் மக்களுக்கு தேவை விடுதலையே எனக்கூறி போலி ஜனநாயக தேர்தலை புறக்கணிக்க அறைகூவினார்.

அக்கூட்டத்தில் ஆக்சில்ஸ் இந்தியா மற்றும் கிளை சங்க தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பகுதி  உழைக்கும் மக்கள், சிறுகடை வணிகர்கள், பேருந்துக்கு நின்றிருந்தோர் அனைவரும் கூட்டத்தில் பேசிய கருத்துக்களை ஆர்வத்துடன் கேட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்

4. திருப்பெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே 18-04-2014 அன்று மாலை 5 மணியளவில்

மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!
கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!

என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் தோழர் நாச்சியப்பன் தலைமையேற்றார். தனது தலைமை உரையில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், ஒரகடம் சிப்காட், திருப்பெரும்புதூர் மற்றும் சுங்குவார்ச்சத்திரம் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய பகுதிகளில் செயல்படும் பிரசித்திபெற்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் அவல நிலையைப் பற்றி பேசி, தொழிலாளர்களின் கோரிக்கையான நிரந்தர வேலை, விலைவாசி உயர்வுக்கேற்ற ஊதிய உயர்வு, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றை பற்றி ஓட்டுக் கட்சிகள்  அக்கறை கொள்வதில்லை என்பதை விளக்கினார்.

“பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் வேலை கொடுக்க வந்தவை, நாட்டை முன்னேற்ற வந்தவை என்று எல்லா ஓட்டுப் பொறுக்கி கட்சிகளாலும், ஆளும் வர்க்கங்களாலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மை நிலைமையில் இந்நிறுவனங்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலையையும் பறித்து வெறியாட்டம் போடுகின்றன. இக்கொடுமைகளுக்கு முடிவுகட்ட மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணித்து வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்பதுடன் புதிய ஜனநாயக புரட்சியை நடத்த வேண்டிய தேவை குறித்து அறைகூவினார்.

பு.ஜ.தொ.மு திருவள்ளுவர் மாவட்ட செயலாளர் தோழர் செல்வகுமார் சிறப்புரை ஆற்றினார்.

“ஓட்டுப்போடு என்பது ஜனநாயகம் என்றால் ஓட்டுப் போடாதே என்று பிரச்சாரம் செய்வதும் ஜனநாயக உரிமைதான். ஆனால், தமிழகம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் நடத்துவதற்கு தேர்தல் அதிகாரியிடன் அனுமதி பெற்றிருந்தும் பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. கீழ்நிலை அதிகாரிகளே மேலதிகாரிகளின் ஆணையினை மதித்து நடக்காத போது நாங்கள் ஏன் இந்த போலி ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும்.

ஓட்டுப் போடாதவன் செத்த பிணத்துக்கு சமம், எனவே வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கூறும் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை என்ன? ஊழலில் ஊறித் திளைக்கும் அதிகார வர்க்கத்தினரே தேர்தல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று பணத்திற்கு ஓட்டை விற்காமல் மனசாட்சிப்படி ஓட்டுப் போடும்படி நமக்கு உபதேசம் செய்கிறார்கள். மக்கள் பல இடங்களில் ஓட்டுக் கட்சிகளை பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தேர்தலின் மீதும் ஓட்டுக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்பதை புரிந்து கொண்டுதான் புழுத்துப் போன இந்த போலி ஜனநாயகத்தை காப்பாற்ற ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் தேர்தலுக்காக பல கோடி ரூபாய் வாரி இறைக்கிறது. கட்டுப்பாடுகள் பல விதித்து பம்மாத்து காண்பிக்கிறது. பள்ளி மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஓட்டு போடும்படி பாடம் எடுக்கிறார்கள்.

இன்று இந்தியாவில் 1627 ஓட்டுக் கட்சிகள் உள்ளன, எந்த ஓட்டுக் கட்சிக்கும் கொள்கை ஏதும் இல்லை. மக்களிடம் ஓட்டுப் பிச்சை வாங்கி பதவிக்கு சென்று முதலாளிகளுக்கு சேவை செய்வதும், நாட்டின் வளங்களை கூறுபோட்டு விற்று கொள்ளை அடிபடும்தான் இவர்களின் கொள்கை, தேசியக் கட்சியான பா.ஜ.க மக்களிடம் அம்பலப்பட்டு செல்வாக்கை இழந்து விட்ட நிலையில் மோடி என்ற தனிநபரை முன்நிறுத்துகிறது. மோடி பிரதமராக வேண்டும் என்பது இவர்களது விருப்பமல்ல, அது முதலாளிகளின் விருப்பம். இவர்கள் அனைவரும் தனியார்மய, தாராளமயக் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதுதான் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என  ஒருமித்த குரலில் ஊளையிடுகிறார்கள்.

இன்று உலகம் முழுவதும் ஒட்டுமொத்த முதலாளித்துவ கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உழைக்கும் மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அமைதியாக அடிமைத்தனத்தை ஏற்க வேண்டும். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது, இதை மறுப்பவர்கள் தேசத் துரோகிகள் என்பதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. எனவே இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையில் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியாது. ஏதாவது ஒரு கிரிமினலை தேர்ந்தெடுத்து அவர்கள் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் உரிமை மட்டுமே நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுத்தவர்களை திரும்ப அழைக்கும் உரிமையோ, அவர்கள் கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யும் உரிமையோ இந்த போலி ஜனநாயக அரசமைப்பில் இல்லை. அது உழைக்கின்ற மக்களுக்கு அதிகாரமுள்ள ஒரு புதிய ஜனநாயக அமைப்பில்தான் சாத்தியம். நம்மை ஆள்பவர்களிடம் எங்கள் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியாது, எனவே விலகி எங்களுக்கு வழிவிடுங்கள். நாங்கள் ஆள்கிறோம் என்றால் அவர்கள் அகிம்சா மூர்த்திகளாகவா இருப்பார்கள். போலீசு, இராணுவம், குண்டாந்தடி, துப்பாக்கி கொண்டு நம்மை ஒடுக்குவார்கள். எனவே உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் வேண்டுமானால் அது ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதன் மூலம்தான் சாத்தியமாகும். ”

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்
தொடர்புக்கு – 8807532589

5. ஓசூர் கமாஸ் வெக்ட்ரா

ப்ரல்–22 உலக பாட்டாளி வர்க்கத் தலைவர் தோழர் லெனின் 145–வது பிறந்த நாள் விழாவை அன்று காலை 8.00 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக கிளைகளில் கொடியேற்றி, இந்தியா போன்ற வளரும் நாட்டில் இன்றைய காலக்கட்டத்தில் தொழிலாளர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு லெனினுடைய தேவையை பற்றி விளக்கினர்.

கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் கிளையின் சார்பாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து தலைமை தாங்கினார். சிறப்புரை ஆற்றிய மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தோழர் லெனின் சாதித்த வரலாற்று பாத்திரத்தை தொழிலாளர் வர்க்கம் முன்னுதாரணமாக எடுத்து செயல்பட வேண்டுமென்றும், இந்த நன்நாளில் தோழர் லெனின் வழியில் உறுதியேற்று செயல்பட வேண்டுமென்றும் விளக்கினார்.

அடுத்து வெக் இந்தியா ஆலையில் காலை 11.00 மணியளவில் நடந்த கூட்டத்துக்கு அச்சங்கத்தின் கிளைச் செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமைத் தாங்கினார்.  மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் உரையாற்றினார். இறுதியாக தோழர் சாது சுந்தர்சிங் கிளையின் துணைத் தலைவர் நன்றியுரையாற்றினார்.

முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிராக போராடக்கூடிய புரட்சிகர சங்க உறுப்பினர்களான நாம் லெனினுடைய வரலாற்றையும், அவருடைய தத்துவங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கலந்து கொண்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவித்தனர். மாவட்டச் சங்க நிர்வாகிகள் தோழர் இரா.சங்கர், தோழர் சின்னசாமி, தோழர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தர்மபுரி-கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு 9788011784, ஓசூர்.

6. திருவள்ளூர் மாவட்டம்

ஆசான் லெனின் பிறந்தநாளையொட்டி தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் லெனின் பிறந்த நாளை தொழிலாளிகளுக்கு பிரச்சாரம் செய்யும் வகையில் புஜதொமு இயங்கி வருகின்ற ஆலைவாயில்களில் ஆசான் லெனின் படத்தை வைத்து தொழிலாளிகளுக்கு இனிப்பு வழங்கி, ஆசான் லெனின் குறித்து முன்னணியாளர்கள் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் கும்முடிப்பூண்டி பாண்டியன் ஹோட்டல் அருகில் 08.30 மணிக்கு துவங்கி கும்முடிப்பூண்டி பேருந்து நிலையம் வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் தலைமையில் சைக்கிள் பேரணியும் நடத்தப்பட்டது. செஞ்சட்டைகள் நிறைந்திருக்க சைக்கிளில் புஜதொமு கொடி கட்டிக்கொண்டு முழக்கமிட்டபடியே 3 கிலோமீட்டர் தூரத்துக்கு தொடர்ந்தது பேரணி.

இந்த சைக்கிள் பேரணியில்,

  • ஆசான் லெனின் பிறந்த நாளில் உறுதியேற்போம்.
  • பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்
  • ஓட்டுப் போடாதே புரட்சி செய்
  • போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்
  • புதிய ஜனநாயக அரசமைப்பை கட்டியெழுப்புவோம்.
  • மக்கள் சர்வாதிகார மன்றங்களை கட்டியமைப்போம்

என்று விண்ணதிர முழக்கங்களிட்டபடியே இந்த 16-வது நாடாளுமன்ற போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிக்கக் கோரி மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. தட்டுகளில் இனிப்புகளை கொண்டு பேரணியின் இருபுறமும் தோழர்கள் மக்களிடம் வழங்கி வர, மற்றும் இரு தோழர்கள் லெனின் குறித்த விளக்க பிரசுரத்தை வழங்கினர்.

தேர்தல் வந்தது, திருநாள் வந்தது, கொள்கைக் கூட்டணி ஒவ்வொன்னுக்கும் என்ன பின்னணி? ஓட்டுப் போடாதே போடாதே புரட்சி செய்! ஆகிய பாடல்களை திருவள்ளூர் மாவட்ட பிரச்சாரக் குழு தோழர்கள் மக்கள் கூடுமிடங்களில் பாடினர்.

கடைத்தெருவில் பிரச்சாரம் செய்து வந்த போது, அதிமுக, திமுக, பாஜக, போலி கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் அன அனைத்து ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் பணிமனைகளின் வழியாக பேரணி கடந்து வந்தது. பணிமனைகளில் இருந்தவர்களுக்கு பிரசுரமும் இனிப்பும் வழங்கப்பட்டது. ”ஓட்டு போடாதே புரட்சி செய்”, ”பாராளுமன்றம் பன்றித் தொழுவம்” என்று பிரச்சாரம் செய்யும் போது செய்வதெறியாமல் பிரச்சாரத்தை வாய்பிளந்து பார்த்தவாறே இருந்தனர். ஓட்டு போடச்சொல்லி ஊர் ஊராக பிரச்சாரம் செய்தும், வாய்ப்புள்ள இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தும் ஓட்டுக்கட்சிகள் வாக்கு சேகரித்து வரும் நிலையில் ஆசான் லெனின் பிறந்த நாளில் நடத்தப்பட்டுள்ள இந்த சைக்கிள் பேரணி உழைக்கும் மக்களிடையே ஒரு புத்தெழுச்சியையும், ஓட்டுக்கட்சிகள் மத்தியில் கலக்கத்தையும் உண்டாக்கியுள்ளது.

குடியிருப்பு பகுதிகளின் வழியே பிரச்சாரம் செய்த போது, ஓட்டுப் போடாதே என்று சொல்லக்கூடிய கட்சியா, நீங்க தாம்பா எங்க கட்சி, என்று ஒரு பெண்மணி கூறினார். மற்றொரு பெண்ணிடம் பேசும் போது, ”நான் ஓட்டு போடமாட்டேன்பா, இவனுங்களுக்கு ஓட்டு போட்டு போட்டு ஒன்னும் நடக்காது” என்றார். ”அதெப்படி உங்களை நம்புவது இப்படிதான் சொல்வீங்க அப்புறம் ஓட்டு போட்டுடுவீங்க” என்று நாம் வேண்டுமென்றே பேசியதும், என்னயயாப்பா சந்தேகப்படுற, ”வியாலக்கெலம வந்து என் வெரலப் பாரு, ஓட்டு போட்ட மை இருந்த இந்த தெருவுலேயே வெச்சு செருப்பால அடி” என்று மிகக் கோபமாக பேசினார். பிறகு சமாதானப் படுத்தி விட்டு, நாங்கள் உங்கள நம்புகிறோம். ஓட்டு போடாமலிருப்பதால் மட்டும் நம் பிரச்சனை தீர்ந்து விடாது, போராட வேண்டும் என்று கூறினோம்.

”நானோ, என் குடும்பத்தை சேர்ந்தவர்களோ தேர்தலில் நின்றால் முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கடி கொடுங்கள்” என்று பேசி, பின்னர் வெட்கமே இல்லாமல் தேர்தலில் நின்றதோடு மட்டுமல்லாமல் சாதி வெறியை தூண்டி ஓட்டுப் பொறுக்கிக் கொண்டிருக்கும் ராமதாசு வகையறாக்களை அப்போதே செருப்பால் அடிக்காமல் விட்டதன் விளைவு தான் இன்று வரை மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் முச்சந்தியில் மக்கள் மத்தியில் செருப்படி படப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை பெருகி வரும் மக்கள் போராட்டங்கள் நிருபித்து வருகிறது.

சைக்கிள் பேரணி

டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் கூட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்

7. மதுரை

துரை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 19.4.14. அன்று மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டம் போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் முழக்கங்களுடன் துவங்கியது. இக்கூட்டத்திற்கு ஒத்தக்கடை பு.ஜ.தொ.மு தோழர் பாண்டியராசன் தலைமை தாங்கினார்.

ஒத்தக்கடை பு.ஜ.தொ.மு தோழர் போஸ் உரையாற்றிய போது மதுரையிலும், ஒத்தக்கடை பகுதியிலும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் தேர்தல் விதிமுறைகள் மீற் எப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் கூட்டங்களுக்கும் ஓட்டுக்கும் பணம் கொடுப்பவர்களையும் வெளிப்படையாக அம்பலப்படுத்தி பேசினார்.

மதுரை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட துணைச்செயலாளர் தோழர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரையாற்றுகையில் அரசும் அதன் போலீஸ் துறையும் எப்படி ஆளும்வர்க்கத்திற்கும் அதன் அடிவருடிகளான ஓட்டுக்கட்சிகளுக்கும் விசுவாசமாக செயல்படுகிறது என்பதையும், புரட்சிகர அமைப்புகளின் மீதான நயவஞ்சகமான அணுகுமுறையை அம்பலப்படுத்தி சாடியும் உரையாற்றினார்.

இறுதியாக பு.ஜ.தொ.மு வின் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன் “நாடு மீண்டும் அடிமையாகி வருகிறது, மறுகாலனியாதிக்கத்திற்கான பாதையை மக்கள் தேர்ந்தெடுத்த‌ அரசாங்கத்தின் துணையோடு திறந்துவிடுவதற்காகத்தான் இத் தேர்தல்” என்றும், மோடி, ஆர்.எஸ்.எஸ், இந்து பாசிசத்தை அம்பலப்படுத்தி எச்சரித்தும் இதற்கு ஒரே தீர்வு புரட்சிதான் என்பதை வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.

இறுதியில் ம.க.இ.க வின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்ட உரையும் கலைநிகழ்ச்சியும் பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஓட்டுக்கட்சிகளின் வயிற்றில் புளியையும் கரைத்தது.

உங்களுடைய பொதுக்கூட்ட நிகழ்ச்சியை பார்த்தால் யாரும் ஓட்டுப்போடமாட்டார்கள் எனவும். வெளிப்படையாக, தைரியமாக உள்ளதை சொன்னீர்கள் எனவும் அப்பகுதிவாழ் மக்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

2

வாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!
நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்!

வாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக்காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!
நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!

என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையின் முன்பு 21.04.2014 காலை 10.00 மணியளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளையின் சார்பாக தோழர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர். ம.உ.பா.மையம் அவர்களின் தலைமையில்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது “ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உடனே முடிக்கவேண்டும் என்று லோதா தலைமையிலான அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளித்தது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் 3 வாரம் இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வழங்கிய சௌகான் – தலைமை நீதிபதி சதாசிவத்தின் நெருங்கிய நண்பர். நீதியரசர் சதாசிவத்தின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பவர். எனவே இந்த 3 வார காலத்தடைஎன்பது “ஜெ”க்கு வழங்கப்பட்ட தீர்ப்பல்ல, ஜெ-யால் வாங்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை செல்லரித்துப் போய்விட்டது. நீதிக்குப் புறம்பான தீர்ப்பால் நீதித்துறை அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மாற்ற நாம் தான் போராட வேண்டும்” எனக் கூறினார்.

சமநீதி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகவேல் பேசும் போது “ஏமாற்றமடைந்த மக்களின் இறுதிப் புகலிடமாக நீதிமன்றங்கள் தான் இருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதிகளின் அணுகுமுறைகள் படுகேவலமாக இருக்கிறது. கோடிக் கணக்கான ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெ க்கு நீதிமன்றம் துணை போவது கேவலமானது.

தலைமை நீதியரசர் சதாசிவம், பொதுமேடையில் 3 பேரின் விடுதலையை பற்றிப் பேசியது, நீதிமுறைக்குப் புறம்பானது.ஜெயாவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவாக நடக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது. ஜெ-யின் சொத்துக்குவிப்பு வழக்கிலும் நீதியரசர் சதாசிவம் கேவலமாகவே நடந்து வருகிறார். வழக்கை விரைந்து முடிப்பதற்கு மாறாக, வாய்தா மேல் வாய்தா வாங்கும் ஜெ-க்கு நீதித்துறை துணைபோவது கேவலமாகும். மனிதஉரிமை பாதுகாப்புமையம் சரியான நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதற்கு பாராட்டுக்கள்” என்று பேசினார்.

சமநீதி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்கள், “வழக்குகளை விரைவாக முடிக்கச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால் ஜெ சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டும் வழக்கை எப்படியெல்லாம் நீட்டிக்கமுடியும் என்று யோசித்துச் செயல்படுகிறது” என்று உச்சநீதிமன்றத்தின் கேவலமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் பேசும் போது, ”1998- லிருந்து, ஜெ யின் சொத்துக்குவிப்பு வழக்கு வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி நீண்டு கொண்டே இருக்கிறது. இதேமுறை மற்ற வழக்கிலும் கையாளப்படுமா? கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே, 12 ஆண்டுகள் சிறையில் இருந்தனர். ஆனால் ஜெ வழக்கில் மட்டும், ஜெ சொல்வதையெல்லாம் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. விரைந்து வழக்கை முடிக்க நீதிமன்றம் யோசிக்கிறது. இப்படிப்பட்ட நிலையை மாற்ற HRPC போன்ற அமைப்புகளின் போராட்டங்களால் மட்டுமே முடியும்.” என்று பேசினார்.

வழக்கறிஞர் அறவாழி பேசும் போது, “உச்சநீதிமன்றம் அல்ல உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்றே சொன்னார் பெரியார். அது மிகச் சரிதான். ஜெ க்கு காட்டப்படும் இந்தச் சலுகைகளை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் மீது இந்த நீதிமன்றங்கள் காட்டுமா? இது சாதிய அமைப்பு முறைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜெயின் மீது காட்டப்படும் பரிவுக்குக் காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பது தான். இதை சட்டசபையிலேயே பேசியவர் ஜெயலலிதா. இதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த சாதியக் கட்டமைப்பை தகர்த்தெறிய தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டத் துணைத்தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் பேசும் போது, “உச்சநீதிமன்றம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிட்டது. ஜெயின் சொத்துக்குவிப்பு வழக்கு இழுத்தடிப்புக்கு பின்னால் சாதியம் இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் இந்த நிலையை மாற்ற முடியும்” என்றார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் இணைச் செயலர் வழக்கறிஞர் அப்பாஸ் பேசும் போது, “17 ஆண்டுகள் இந்த வழக்கு நீடித்து இருக்கிறது. இதைக் கண்டிக்க யாருக்கும் துப்பில்லை. HRPC மட்டும் தான் துணிவோடு போராடிக் கொண்டிருக்கிறது” என்றார்.

மதுரை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞர் கண்ணன் பேசும் போது, “HRPC யின் துண்டு பிரசுரத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் உண்மையானவை. சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பெங்களூரில் தனிநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது சென்னை உயர்நீதிமன்றம், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தது எப்படிச் சரியாகும்? இது மரபு மீறிய செயல். அரசியல் சட்டத்திற்கே புறம்பானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் கிடையாது. ஆனால் அது வழக்கை ஏற்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி அருணா ஜெகதீசன். யார் அரசு வழக்குரைஞர் தெரியாது. அவர் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் தெரியாது. யாரால் நியமிக்கப்பட்டார் தெரியாது. ஆனால் சொத்துக்கள் மீதான தடை நீக்கப்பட்டு விட்டது. இதை எங்கே போய் முறையிடுவது” என்று நீதித்துறையின் அவலங்களை பற்றி விளக்கிப் பேசினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் ம.லயனல் அந்தோணிராஜ் அவர்கள் பேசும் போது, “ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ 66 கோடி ரூபாய்க்கு சொத்துச் சேர்த்த வழக்கு 1997 -ல் தொடங்கியது. இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை. சட்டப்பூர்வமாகவே ஒரு வழக்கை 17 ஆண்டுகள் நீட்டிக்க முடியும் என்பதை ஜெ. நிரூபித்துள்ளார். இதை அவர் புத்தகமாக வெளியிட்டால், அது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஜெ யின் கைக்கூலியாகவே செயல்படுகிறார். உடல்நிலை சரியில்லை என்று சொல்லி வாதாட மறுத்து விட்ட நிலையில் 65,000/- ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிடுகிறார். கர்நாடக உயர்நீதிமன்றம் அதை உறுதி செய்கிறது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட, உச்ச நீதிமன்றமே அநீதியாக விசாரணைக்கு 3 வார காலம் இடைக்காலத் தடைவிதிக்கிறது.

தலைமை நீதியரசர் சதாசிவம், தனது எண்ணங்களை பிரதிபலிக்கும் சௌகானிடம் இந்த வழக்கை தள்ளிவிட அவர் 3 வாரம் தடைவிதித்து உத்தரவிடுகிறார். சதாசிவத்திற்கும் சௌகானுக்கும் உள்ள உறவு இந்தியா முழுவதும் அறிந்தது தான்.

வருமானவரி ஏய்ப்பு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் நான்கு மாதங்களில் வழக்கை முடிக்க ஜனவரி 30-ல் உத்தரவிடுகிறார்.ஆனாலும் ஜெயா இன்றுவரை ஆஜராகவில்லை, அதனால் ஏப்ரல் 28-ல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடுகிறார் விசாரணை நீதிமன்ற நீதிபதி. உடனே அவர் மாற்றப்படுகிறார். மறுநாளே மாறுதல் ரத்து செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் ஜெ. தனது சாதிப்பாசத்தாலும் பணப்பாசத்தாலும் சாதித்துக் கொள்கிறார்.

22 நிறுவனங்களில் குவிக்கப்பட்ட ஜெ-யின் சொத்துக்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணாஜெகதீசன் உத்தரவிடுகிறார். தனி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது நீதிபதியின் இந்தத் தீர்ப்பு ஜெ க்கு ஆதரவானது மட்டுமல்ல வரம்பு மீறிய செயலும் ஆகும்.

ஜெ-க்காக எல்லா சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கிறது. ஜெ என்ன கேட்டாலும் செய்யக் காத்திருக்கிறது நீதிமன்றம்.

“ஜெ“ யின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி கேள்வி கேட்க துணிவில்லாத ஊடகங்கள், கருணாநிதியிடம் 2G வழக்கு பற்றி துருவி துருவிக் கேட்கின்றன. ஜெயிடம் ஏன் இதைப்பற்றி கேட்பதில்லை என்று நிருபர்களிடம் கருணாநிதி கேட்டால் அவர்கள் யாரும் பதில் சொல்வதில்லை.

ஆக நம் நாட்டில் உள்ளது ஒரு போலித்தனமான ஜனநாயகம், போலியான நீதிமன்றங்கள் இவைகளை எதிர்த்து போராட வேண்டியது இன்றைய அவசியமாகும்.

இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறையின் கீழான நீதித்துறை, தானே உருவாக்கிய நெறிமுறைகளை, மரபுகளை மீறிச் செயல்படுகிறது. அது மக்கள் மத்தியில் அப்பட்டமாக அம்பலமானாலும் அதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை. அநீதிமான்கள் கூச்சநாச்சமின்றி சுதந்திரமாக திரிகின்றனர். எனவே இந்த அமைப்பே புழுத்து நாறுகிறது. இந்த ஜனநாயகம் தோல்வியடைந்துவிட்டது. நீதித்துறை ஊழல் பேர்வழிகளின் உறைவிடமாகி விட்டது. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேர்தலுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்க வேண்டும் அதற்குப் பதிலாக 3 வாரம் விசாரணைக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசின் ஊழல், கருணாநிதியின் ஊழல் என்று பேசிவரும் ஜெயலலிதா செய்த ஊழல் நீதிமன்றங்களால் மறைக்கப்பட்டுவிட்டதால் அவர் ஊழலற்றவராக மாறிவிட்டார்.

மேலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ராஜீவ்கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 25-க்குள் தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிமன்ற மரபை மீறி பொது இடத்தில் அறிவிக்கிறார். இது தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதைக் காட்டுகிறது. இது தேர்தலில் ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதற்கு ஜெ மட்டும் காரணம் அல்ல. இந்த மொத்த அமைப்பு முறையும் அவருக்கு ஆதரவாக செயல்படுவதையே காண முடிகிறது. ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி என்பதை இந்த நீதிமன்றங்கள் வெளிப்படையாகவே செயல்படுத்துகின்றன. இந்த நீதிமன்றங்களில் உழைக்கும் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கில்லை. எனவே மக்கள் தங்களுக்கான நீதியை வீதியில் இறங்கிப் போராடியே பெறவேண்டும்.

ஜெயா வழக்கில் 3 வாரம் இடைக்காலத் தடை வழங்கப்பட்டதன் நோக்கம் தேர்தலுக்குப்பின் ஏற்படும் அணி மாற்றங்கள் ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த வழக்கையும் ஊத்தி மூடும் சதித்திட்டம் இதன் பின்னணியில் தெள்ளத்தெளிவாக உள்ளது,” என்று விளக்கிப் பேசினார்.

இறுதியில் ம.உ.பா.மையத்தின் மாவட்டப் பொருளாளர் மு.சங்கையா நன்றி கூறினார். வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு, ஆறுமுகம், இராபர்ட் சந்திர குமார்,கருணாநிதி,ராஜசேகர்,மன்மதன்,ஒத்தக்கடை எவர் சில்வர் பட்டறைத் தொழிலாளர்கள், தோழமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர். உளவுப்பிரிவு, கியூபிரிவு, உள்ளுர் போலீசு, பெண்போலீசு உட்பட ஒரு பட்டாளமே தனியாகக் கூடிநின்றது. அதிகம் பேர் கலந்து கொள்ள விடாமல் மிரட்டும் போக்காகக் காணப்பட்டது. அதையும் மீறி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்ததுடன் வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
—————————————————————————–
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை.9443471003

பாஜக வெற்றிக்காக நடுநிலையுடன் எழுதும் விகடன் நரி !

21

ண்ணாசாலையில் அலுவலகத்தை கொண்டிருந்தாலும், விகடன் குழுமத்தின் ஆன்மா கமலாலயத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆன்ம மாற்றத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்களை நாம் அறியோம். அதனால் என்ன, ஒரு மாதத்தில் அவை தானே வெளியே வரும்.

ஜூனியர் விகடன்தமிழகத்தில் பா.ஜ.க-வின் அதிகார பூர்வ ஏடுகளில் நம்பர் ஒன்னான ஜூனியர் விகடனின் 27.4.14 தேதியிட்ட “தேர்தல் கணிப்பு ஸ்பெஷல்” வழக்கத்தை விட 2 நாட்கள் முன்னதாக செவ்வாய்க் கிழமை அன்றே கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி செவ்வாய்க் கிழமை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் சட்டத்துக்கு கீழ்ப்படிந்தாக வேண்டும். சட்டத்திறகு கீழ்ப்படிந்தாலும் தாமரை மலர மானம் கெட்டு தண்ணீர் ஊற்றும் வேலையையும் விட்டு விட முடியாது. இதனாலேயே செவ்வாய்க்கிழமை அன்றே விகடன் குழுமத்தினர் பா.ஜ.க-வுக்கான தமது இறுதி பிரச்சார அறிக்கையை வாசகர்களின் கைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்; கூடவே மோடிக்கான பிரச்சாரத்தை மனதில் ஊறப் போட்டு நல்ல முறையில் வாக்கு போட வாசகர்களுக்கு அவகாசம் கொடுக்கிறார்களாம்.

முக்கியமாக வாசகர்களுக்கும், அவர்கள் மூலமாக தமிழ் மக்களுக்கும் விகடன் நரிக் குழுமம் கொண்டு சேர்க்க முயற்சிக்கும் செய்தி : “இது நாடாளுமன்றத் தேர்தல்” என்பது. மேலோட்டமாக பார்த்தால் இது அறிவுப்பூர்வமான விசயமாயிற்றே என்று தோன்றும். அதுதான் நரிகளின் பலம். அதாவது இந்த தேர்தலை தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்குமான போட்டி, திராவிட இயக்க குழாயடிச் சண்டை என்று நினைத்து வோட்டு போட்டு விடாதீர்கள். மத்தியில் ஊழல் மக்கள் விரோத காங்கிரசை விரட்டி மாற்று ஆட்சியை ஏற்படுத்த பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்ற தமிழ்நாடு பா.ஜ.கவின் கோயாபல்ஸ்சுகள், பிரச்சாரங்களில் தவறாமல் சொல்லி வந்த செய்திதான் விகடனது வாசகருக்கான நீதி.

இப்படி அப்பட்டமாக காவி நீதியை தனது முழக்கமாக ஏற்றுக் கொண்டிருப்பதிலிருந்து காவிகளின் சித்தம் விகடன் சீனிவாசக் கண்ண திருமாவேலன்களின் பாக்கியம் என்பதாகவும் புரிந்து கொள்ளலாம்.

இந்த மானங்கெட்ட மாமா வேலையில், இருட்டு அறை அரசியல் கிசுகிசுக்களின் பெரிய மாமாவான மிஸ்டர் கழுகுவின் “குசு குசு”வாக முதல் பக்கத்திலேயே ஆரம்பமாகிறது.

மோடி, சோனியா காந்தி, மற்றும் பா.ஜ.க மத்திய தலைவர்களின் பிரச்சாரம் ‘இது நாடாளுமன்ற தேர்தல், அதற்கு ஏற்ப வாக்குகளை அளிக்க வேண்டும்’ என்ற சிந்தனையை படித்த வாக்காளர்கள், நகர்ப்புற மக்கள் மத்தியில் விதைத்து விட்டது. என்று தமிழ் மக்களின் நாடித்துடிப்பை வதைத்துக் கொண்டிருக்கும் கழுகனே சொல்லி விடுகிறான். காவி சாயத்தை கழுகு வாந்தியெடுத்தால் அதற்கு அப்பீல் உண்டா என்ன?

மேலும், ‘ஜெயலலிதா மோடியை செல்லமாக விமர்சித்தது அவருக்கு பலனளிக்கப் போவதில்லை, அதனால் அவர் மோடி பிரதமராக ஆதரவு தருவார் என்று நினைத்திருந்த இந்துத்துவாக்கள் ஓட்டு போட மாட்டார்கள், அவர் எதிர்பார்த்த வகையில் சிறுபான்மை மக்களும் ஓட்டு போட மாட்டார்கள்’ என்று ஆய்வு செய்து பா.ஜ.கவுக்கு எதிராக அ.தி.மு.க பலவீனப்பட்டு நிற்கிறது என்று நிறுவுகிறார்கள். அதாவது, இந்துத்துவத்தில் நம்பிக்கை உடையவர்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்காமல் மோடியின் பையில் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்பதுதான் விகடனது வெறி கலந்த விருப்பம். இதை நல்லதொரு அறிவுப்பூர்வமான ஜனநாயக கடமை என்று வாசக கோயிந்துகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நாடாளுமன்ற தேர்தலாம்
இது நாடாளுமன்ற தேர்தலாம்

அடுத்ததாக, தலைவர்களின் இறுதிக் கட்ட பிரச்சாரம் என்ற தலைப்பில் காங்கிரசின் ராகுல் காந்தி அசாமில் பிரச்சாரம் செய்தது, அ.தி.மு.கவின் ஜெயலலிதா திருவல்லிக்கேணியில் பேசியது, பா.ஜ.கவின் ராஜ்நாத்சிங் தமிழகச் சுற்றுப்பயணத்தில்  ‘கர்ஜித்தது’, தி.மு.கவின் ஸ்டாலின் திருச்சியில் பிரச்சாரம் ஆகிய செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் துணைத் தலைப்பாக பெரிய எழுத்துக்களில் “இது நாடாளுமன்ற தேர்தல்” என்று ராஜ்நாத் சிங் பேசியதாக அவர்களது மற்றும் பாஜக தமிழக தலைவர்கள் பேசிவரும் கருத்தை சொருகியிருக்கிறார்கள். தாமரைக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று திரும்பத் திரும்ப வேறு வேறு தலைப்புகளில், செய்திகளில், அலசல்களில், அக்கப்போர்களில் நச்சரிக்கிறார்கள்.

“வாரியா” என்று தெருவோரத்தில் நின்று கொண்டு விபச்சாரத்திற்கு அழைக்கும் தெருப்பொறுக்கி மாமாக்களுக்கும் இந்த ஊடக பொறுக்கி மாமாக்களுக்கும் என்ன வேறுபாடு? இப்பேற்பட்ட மாமா விகடன், ராஜ்நாத் சிங், தஞ்சை திலகர் திடலில் காலி நாற்காலிகளோடு பேசிய அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டத்தை படத்தோடு ஏன் வெளியிடவில்லை? மோடி அலையின் உண்மையான இலட்சணமே அதுதானே!

கழுகின் காவி ரசாயன சிட்டுக்குருவி லேகிய பதில்கள், மோடியுடன் ரஜினி இருக்கும் புகைப்படத்துடன் ஆரம்பமாகிறது. “தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் வித்தியாசம் இல்லை” என்று மோடி சொன்ன செய்யுளுக்கு செல்வகணபதியை சான்றாக எடுத்துக் கொண்டு விசக் கழுகு பொழிப்புரை எழுதியிருக்கிறது. காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் வேறுபாடு இல்லை என்று எடியூரப்பாவையும், சுரேஷ் கல்மாடியையும் வைத்து இப்படி ஒரு பதில் எழுதுமா அந்த மானங்கெட்ட கழுகு?

இல்லை, கார்ப்பரேட்டுகளுக்கு தரகு வேலை பார்ப்பதில் காங்கிரசை விஞ்சும் மோடிக்கும் காங்கிரசு பெருச்சாளிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று அதானி குழுமத்தை சான்றாகக எடுத்துக் கொண்டு உபதேசிப்பார்களா இந்த கமலாலயத்திற்கு வாக்கப்பட்ட நரிகள்? பா.ஜ.கவின் உப்பைத் தின்னும் நரிக் கழுகுகள் அதை எக்காலத்திலும் செய்யப் போவதில்லை.

மோடி - ரஜினி
பிரதமர் வேட்பாளர் என்று இந்திய அரசியல் அமைப்பிலேயே இல்லாத ஒரு பதவிக்கு புரோட்டா காலும் இல்லை சால்னா காலும் இல்லை என்று வாசகர்களுக்கு தெரியவா போகிறது என்ற அலட்சியத்தோடு மோடி ரஜினியின் வீட்டில் வாலாட்டி கால் நக்கி நின்றதற்கு கௌரவ முலாம் பூசியிருக்கிறது கழுகு.

அடுத்த கேள்வியில் ரஜினி வீட்டுக்கு மோடி சென்றதால் மனம் புண்பட்ட இந்துத்துவா போக்கிரிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் வகையில், அதையே மோடியின் பெருந்தன்மையாக மாற்றிக் காட்டுகிறார் கழுகு பெயரில் இருக்கும் கேடி. அதாவது ‘என்னுடைய நண்பரை அவரது வீட்டுக்குப் போய் சந்திப்பதை எந்த புரோட்டோகால் தடுக்க முடியும்’ என்று மோடி கேட்டாராம். பிரதமர் வேட்பாளர் என்று இந்திய அரசியல் அமைப்பிலேயே இல்லாத ஒரு பதவிக்கு புரோட்டா காலும் இல்லை சால்னா காலும் இல்லை என்று வாசகர்களுக்கு தெரியவா போகிறது என்ற அலட்சியத்தோடு மோடி ரஜினியின் வீட்டில் வாலாட்டி கால் நக்கி நின்றதற்கு கௌரவ முலாம் பூசியிருக்கிறது கழுகு.

அடுத்து “மோடி பற்றி ரஜினி கூறியவை ஓட்டுகளாக மாறுமா” என்று ஈரோட்டின் ரேவதிப் பிரியனின் அக்கறைக்கு கர்ம சிரத்தையாக பதிலளிக்கிறார்கள். ரஜினி வீட்டிலிருந்து கிளம்பி மீனம்பாக்கம் கூட்டத்துக்கு மோடி காரில் போகும் போது, பா.ஜ.க பிரமுகர் மோகன்ராஜூலு, லதா ரஜினிக்கு போன் செய்தாராம், உடனே போனை வாங்கிய ரஜினி சொன்னதாக பா.ஜ.க பிரச்சாரம் செய்யும் திரைக்கதையை தனது வாசகர்கள் நம்பியே ஆகவேண்டுமென்று அடித்து விடுகிறார்கள். இதற்கு தினமும் மோடியும், ரஜினியும் காலையில் செல்பேசியில் குசலம் விசாரித்து விட்டுத்தான் ஒன்றோ, இரண்டோ போவார்கள், இல்லையெனில் போகாது எனுமளவு நட்பு என்று எழுதலாமே!

அடுத்து தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.கவில் சேர்ந்த நடிகர் பற்றிய கேள்வியை வைத்து “கருணாநிதிக்கு இந்த அவமானம் தேவையா” என்று பூணூலை உருவிக் கொண்டு வக்கரிக்கிறது கழுகு. ரித்தீஷ் விலகியதால் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் அவமானம் என்று பெயர் குறிப்பிட்டு அலுத்துக் கொள்ளும் ஜூவி, ‘மன்னார்குடி சொந்தத்திடம் வேலை பார்த்த… வெளிநாட்டுக்கு ஓடிப் போன… கைது செய்ய தேடப்பட்ட….“ ரிதீஷை சேர்த்துக்கொண்ட கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு மட்டும் அவமானமில்லையா என்று ஏன் கேட்க துப்பில்லை? இந்த கோழைத்தனத்தை மறைக்கத்தான் “எல்லாம் தெரிந்த அரசியல் தலைவர்களுக்கு எதுவுமே தெரிவது இல்லை” என்று வேதாந்தம் பேசி வேசித்தனத்தை மறைக்கிறது கழுகு.

இறுதி பஞ்சாக, முதன்முறையாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களுக்கு அறிவுரை கேட்கும் கேள்விக்கு,  “இது நாடாளுமன்ற தேர்தல் என்பதை மனதில் வையுங்கள்” என்று பாஜக இல கணேசனின் முழக்கத்தைச் சொல்லி முடித்திருக்கிறார்கள். சரி முதன்முறையில் வாக்களிப்பவர்கள் மோடிக்கு அளியுங்கள் என்று நேரடியாக சொல்ல முடியாமல் நடுநிலைமைக்காக இவர்கள் ரொம்ப மெனக்கெடுகிறார்களாம், அய்யோ பாவம், அடி செருப்பால!

வைகோ
திராவிட இயக்கத்தின் துரோகி, இந்து மத வெறியர்களுக்கு குடை பிடிக்கும் கருப்பு சட்டை போட்ட காவி பாதம் தாங்கி வைகோ.

அடுத்த 3 பக்கங்களுக்கு “காங்கிரஸ் துரோகத்தை பி.ஜே.பி செய்யாது” என்ற தலைப்புடன் திராவிட இயக்கத்தின் துரோகி, இந்து மத வெறியர்களுக்கு குடை பிடிக்கும் கருப்பு சட்டை போட்ட காவி பாதம் தாங்கி வைகோவின் பேட்டி. அவரை துவைத்து எடுக்கும் விமரிசனங்களுக்கு சமாதானம் சொல்லும் நோக்கில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ‘தமிழ் ஆதரவு நண்பர்கள்’ எல்லாம், அண்ணன் வைகோவின் திருநாமத்தை பஜனை செய்து கொண்டே இந்துத்துவா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் மெசேஜ்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் ராஜபக்சேவிடம் நெக்லஸ் வாங்கி வந்த சுஷ்மா சுவராஜ், ராஜபக்சேவை சாஞ்சிக்கு வரவழைத்து பூஜை செய்த சிவராஜ்சிங் சௌகான், ராஜபக்சேவின் புரோக்கராக வேலை செய்யும் சுப்பிரமணியசாமி இவர்களின் கட்சியான பா.ஜ.கவிடம் சரணடைந்துள்ள வெட்கங் கெட்ட அரசியல் அனாதை வைகோவின் சமாதானங்களை பெரிய அரசியல் கோட்பாடுகளாக கடை விரித்திருக்கிறது ஜூவி.

‘பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்’ என்று சொன்ன எச் ராஜாவையும், பெரியாருக்கு சவால் விட்ட சி.பி.ராதாகிருஷ்ணனையும் தேர்தலில் நிறுத்தியுள்ள பா.ஜ.கவின் கூட்டணியில் அவர்களுக்கு பிரச்சாரம் செய்யும் மானங்கெட்ட துரோகி வைகோ, பா.ஜ.க பெரியாரை மதிப்பதாகவும், மோடி சிறுபான்மையினரை பாதுகாப்பதாகவும் கூசாமல் புளுகியிருக்கிறார். குஜராத்தில் சொத்து வாங்கும் முஸ்லீம் வணிகர்கள் கூட இந்துத்துவா வெறியர்களால் வெளிப்படையாக மிரட்டப்படுகிறார்கள் என்பது ஊடகங்களில் அம்பலப்பட்டு நாடு முழுவதும் சந்தி சிரிக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பற்றியும், கிரேக்க வரலாற்றையும் நெப்போலியனின் வீரதீரங்களையும் ஆய்வு செய்து கரைத்து குடித்தது போல உதார் விடும் இந்த பெருச்சாளி, “குஜராத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்கிறார்கள்” என்று பேசுவதற்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? அதை மறைக்க திருமாவேலனும், ஜூனியர் விகடனும் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள். இனி கோயாபல்ஸ் என்றால் திருமாவேலனைத்தான் குறிப்பிட வேண்டுமென்று விக்கிபீடியாவில் விதி கொண்டு வர வேண்டும்.

இவ்வாறாக பா.ஜ.கவுக்கு ஊடக அடியாளாக வேலை செய்ததோடு, கடந்த மூன்று மாதங்களாக பா.ஜ.க கூட்டணிக்கு தமிழ்நாட்டில் இல்லாத ஆதரவை எழுப்பிக் காட்டும் அற்புதத்தை நடத்திக் கொண்டிருந்த ஜூ.வி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது முதுகை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் சில முன் தயாரிப்புகளை செய்திருக்கிறது.

ராஜ்நாத் சிங்
தஞ்சையில் ராஜ்நாத் சிங் கூட்டத்தில் காலி நாற்காலிகள் (படம் நன்றி The Hindu)

முதலாவதாக, மிஸ்டர் கழுகு பகுதியில் அ.தி.மு.கவின் அதிகார துஷ்பிரயோகம் பற்றி கழுகார் கவலைப்படுகிறார். காவல் துறையினரின் தபால் ஓட்டுக்களை வாக்குப்பெட்டியில் போடுவதற்கான ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்து விடுமாம், கடைசி இரண்டு நாட்களில் பரவலாக அதிகார மீறல்கள் நடந்து விடும் என்று எச்சரிக்கிறார். இரண்டரை ஆண்டுகளாக கொடி கட்டிப் பறக்கும் அ.தி.மு.கவின் அதிகார மீறல்களைப் பற்றி திடீரென்று “கிசுகிசு” புகழ் கழுகு மாமாவுக்கு அக்கறை பிறந்திருப்பது மோடி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமும், புதிய மத்திய அரசின் ஆதரவும் செய்த மாயம் என்பதே உண்மை.

மேலும், சென்ற இதழ் வரை தமிழ்நாட்டில் மோடி பிரதமராக 50%-க்கும் மேல் மக்கள் ஆதரவு, பா.ஜ.க. கூட்டணிக்கு 28.75% பேர் வாக்கு, அ.தி.மு.கவுக்கு 26.4% வாக்கு, தி.மு.கவுக்கு 17.51% என்று அடித்து விட்டுக் கொண்டிருந்த ஜூ.வி, இப்போது தொகுதிவாரியான கணிப்பில் அ.தி.மு.கவுக்கு 15 தொகுதிகள், தி.மு.கவுக்கு 14 தொகுதிகள், பா.ஜ.க கூட்டணிக்கு 10 தொகுதிகள் என்று பல்டி அடிக்கிறது.

அது வேற வாய், இது நாறவாய், இரண்டுமே அழுகி நாறும் வாய் என்றுதான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதங்களாக பெண்கள், இளைய வாசகர்கள், கிராமத்தினர், சிறுபான்மையினர் என்று அனைத்து தரப்பிலும் பா.ஜ.க கூட்டணிக்கும், மோடிக்கும் மகத்தான ஆதரவு என்று மோசடி சர்வேக்களை வெளியிட்டு வாசகர்களை முட்டாளாக்கி வந்த ஜூ.வி தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்காலத்தில் மக்களின் செருப்படியை தவிர்ப்பதற்கு இப்படி ஒரு கணிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதாவது 28.75% = 10 சீட்டுகள் (பா.ஜ.க)
26.4% = 15 சீட்டுகள் (அ.தி.மு.க)
17.51% = 14 சீட்டுகள் (தி.மு.க)

பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் அதிகம் பெற்று முதலில் வருபவருக்கு வெற்றி என்ற இந்த போலி ஜனநாயகத்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையில் 28.75% வாக்குகளை பெற்று முதல் இடத்தில் வரும் ஒரு கூட்டணி மும்முனை போட்டியில் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளையும் ஸ்வீப் செய்யும் என்பதுதான் நிதர்சனம். ஆனால், ஜூ.வி அதற்கு நேர்மாறாக 14 சீட்டுகள் என்று கணித்திருக்கும் தி.மு.கவை 17.5% மக்கள் மட்டும் ஆதரிப்பதாக 25,000 பேரைச் சந்தித்து எடுத்த சர்வேயில் தெரிய வந்ததாக கூறியிருந்தது. அந்த சர்வேயில் மோடி பிரதமராக 50% பேர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறியிருந்தது எந்த அடிப்படையில் என்று வாசகர்கள் செருப்புக்களையும், துடைப்பக்கட்டைகளையும் எடுத்துக் கொண்டு விகடன் அலுவலகத்திற்கு போய் கேட்டால்தான் தெரிய வரும்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி பெறப்போகும் தொகுதிகள் மூன்றென ஆங்கில ஊடகங்களும், ஐந்தென ஏனைய தமிழ் ஊடகங்களும் கணித்துள்ள நிலையில் 30 அல்லது 40 என்று எழுத ஜூவிக்கு சிரமமாக இருக்கிறது. எடுத்த சர்வேயே கீ போர்டு மோசடி எனும் போது சீட் ரிசல்ட்டில் மட்டும் எப்படி மோசடியை குறைப்பது? இதுதான் தற்போது சாமர்த்தியமாக 10 என்று எழுதியிருக்கிறார்கள். இதில் ஐந்து இவர்களது போனஸ் தொகுதிகள் என்பது மற்ற தமிழ் ஊடக சர்வேக்களைப் பார்த்தால் புரியும். சரி, இரண்டு மூன்றுக்கு பத்து என்று எழுதினால் கூடுதலாக மக்கள் அதுவும் ஜூவி வாங்கும் கோயிந்துகள் வாக்களிக்க மாட்டார்களா என்று நப்பாசை!

இந்த கிரிமினல் வேலைகளை எந்த திராவிட இயக்க வட்டச் செயலாளரோ இல்லை அமைச்சர்கள் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அண்ணாசாலை, கமலாலய காம்பினேஷனில் சதித்திட்டங்களெல்லாம் என்னமாக பிய்த்து உதறுகிறார்கள். அதிலும் திருமாவேலனின் மனங்கவர்ந்த வைகோ கட்சிக்கு நான்கோ, ஐந்தோ வெற்றி என்று போட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்து ஐந்து வாக்குகள் கூட மதிமுகவிற்கு விழாது என்பதே அரசியல் நிலைமை.

இந்த இதழின் இறுதிப் பகுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சுப தங்கராசுவின் தேர்தல் புறக்கணிப்பு குறித்த ஒரு பக்க பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள். இத்தனை தகிடுதத்தங்களையும் எழுதி விட்டு பிராயச்சித்தம் போல இப்படி ஒரு உத்தி. அதாவது மோடிக்கு கொடி பிடித்தாலும், தேர்தல் புறக்கணிப்பிற்கு ஒரு பக்கத்தை ஒதுக்க மறக்கவில்லையாம். அதை வைத்து புரட்சிகர அமைப்புகளை மதிக்கும் மக்களிடம் மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஜூவி சொல்வது சரிதான் என்று ஒரு கருத்து உருவானால் இலாபம் தானே? ஆனால் ஜூவியை மட்டும் படிக்கும் கோயிந்துகளைத் தவிர வேறு எவரும் அப்படி தங்களது அறிவை அடகு வைக்க மாட்டார்கள்.

ஊடகங்கள் அனைத்தும் இப்படி பகிரங்கமாக மோடிக்கு ஆதரவாக சதித்தனத்துடன் இயங்கி வரும் நிலையில் பாஜகவின் ஆட்சி வந்தால் எப்படி இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இனி விகடன் குழுமத்தை பாஜகவின் ஊடக அணி என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம். இல்லை கூச்சமாக இருந்தால் விளம்பர மாமா அணி என்று கொஞ்சம் ஃபேஷனாக கூட வைக்கலாம்.

–    செழியன்.

தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?

308

வாக்களிக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள்!

எர்வாமேட்டின் விளம்பரமும் மோடி விளம்பரமும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நம்மை பிறாண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் பல்வேறு வழிகளில் செய்யப்படும் விளம்பரம் ”தவறாமல் வாக்களியுங்கள், அது நம் அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக கடமை”. எர்வாமேட்டினின் தராதரத்தை ஒருமுறை வாங்கிப் பார்த்தால் தெரிந்துவிடும். என்ன, ஆயிரமோ ரெண்டாயிரமோ வீணாகித் தொலையும். மோடியின் லட்சணத்தை அறிந்துகொள்வது சற்றே சிரமம். அதற்கு கொஞ்சம் அறிவு, நியாய உணர்வு, மனிதாபிமானம் மற்றும் நாம் மந்தைகள் அல்ல எனும் தெளிவு என சில தகுதிகள் அவசியப்படுகின்றன, அது ஆயிரம் ரெண்டாயிரத்தில் முடியும் சமாச்சாரமல்ல. ஆனாலும் எர்வாமேட்டின் வளர்ச்சியும் மோடியின் வளர்ச்சியும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அம்பலப்பட்டு விடும் என்பது நிதர்சனம்.

மோடி - சிவராஜ் வைத்தியர்
சேலம் சிவராஜ் வைத்தியர் விளம்பரங்கள் போல நம்மைத் துரத்தும் தேர்தல் விளம்பரங்கள்.

ஆனால் ஓட்டு போடச்சொல்லி நம்மை கேன்வாஸ் செய்யும் விளம்பரங்கள், சேலம் சிவராஜ் வைத்திய சாலை விளம்பரங்களைப் போல அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்மைத் துரத்துகின்றன. ஊடகங்கள், நட்சத்திரங்கள் தொடங்கி ஹீரோ ஹோண்டா போன்ற பெருநிறுவனங்கள் வரை இத்தகைய விளம்பரங்களை மேற்கொள்கிறார்கள். மதக்கலவரங்கள் பற்றியோ, விவசாயிகள் தற்கொலைகள் பற்றியோ எந்த கருத்தையும் முன்வைத்திராத அரசு அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் மேட்டுக்குடி கனவான்கள் கூட இந்த வேள்வியில் மனமுவந்து பங்கேற்கிறார்கள். எல்லோரும் வாக்களித்தால் சகல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். வாக்களிப்பது நம் கடமை, அதை செய்யாதவன் எந்த உரிமையையும் கேட்க தகுதியற்றவன் என அச்சுறுத்துகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.

தற்சமயத்துக்கு ஆனந்த விகடன் குழுமத்தின் தேர்தல் ஆலோசனை ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. வாக்களிப்பது நம் கடமை, உரிமை & பெருமை எனும் முழுப்பக்க விளம்பரம் விகடன் குழுமத்தின் சகல இதழ்களிலும் தவறாது இடம் பிடிக்கிறது. ஏப்ரல் இரண்டாம் தேதியிட்ட ஆனந்த விகடன் தலையங்கத்தில் “மாறிவரும் நவீன உலகுக்கு ஏற்ப இந்தியாவுக்கான பாத்திரத்தை வடிவமைக்கும் முக்கியமான பணி நம் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தவகை விளம்பரங்களைப் பார்க்கையில் ஒரு மனிதன் ஜட்டி போடுவதை விட ஓட்டு போடுவது முக்கியமானது எனும் முடிவுக்கு எல்லோரும் வந்தாக வேண்டும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என சிலாகிக்கப்படும் இந்த வாக்குரிமை எப்படி நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமில்லையா? அதைப்பற்றி ஏன் இந்த கும்பல் பேச மறுக்கிறது?…

அவர்கள் பேச மறுப்பதை நாம் விவாதிக்கலாம்.

யார் இந்த தேர்தல் கமிஷன்? என்ன அதன் அருகதை?

முதலில் இந்த உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவை நடத்துபவர்களிடமிருந்து ஆரம்பிப்போம். பொதுவாக நம்பப்படும் கருத்து. இந்தியாவின் தேர்தலானது தேர்தல் கமிஷன் எனும் தன்னாட்சி பெற்ற அமைப்பால் நடத்தப்படுகிறது, தேர்தல் காலத்தில் நாட்டின் (அல்லது மாநிலத்தின்) நிர்வாகம் முழுதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும். இத்தனை பெரிய பொறுப்பை சுமக்கும் இந்தத்துறை எத்தனை பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும்? ஆனால் உண்மையில் இங்கே பணியாற்றுபவர்கள் சில நூறு பேர்தான். கலெக்டர், போலீஸ், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழும் அவர்களிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களாலும்தான் தேர்தலானது நடத்தப்படுகிறது.

தேர்தல் ஆணையம்
கலெக்டர், போலீஸ், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழும் அவர்களிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களாலும்தான் தேர்தலானது நடத்தப்படுகிறது.

உங்களுக்குத் தெரிந்த நேர்மையான, அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணைபோகாத அதிகாரிகள் பெயரை பட்டியலிடுங்கள். நாளெல்லாம் முக்கி முக்கி யோசித்தாலும் சகாயம், நரேஷ் குப்தா என ஒன்றிரண்டு பெயர்களுக்கு மேல் உங்களால் சொல்ல முடியாது. தமிழகத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு ஜெயலலிதாவுக்கு வாழ்த்துப்பா மட்டுமே பாடும் அதிமுக பொதுக்குழுவைவிட கீழான தரத்தில் நடந்தது. இந்த அதிகாரிகளது பங்கேற்பில்லாமல் எந்த ஒரு ஊழலும் மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ நடக்க வாய்ப்பில்லை. தேசிய அளவிலான ஊழல்கள் எல்லாவற்றிலும் அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள். இது சுடுகாட்டு கொட்டகை முதல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வரை அனைத்து ஊழல்களுக்கும் பொருந்தும்.

போலீசைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் ஒரு பெண் சினிமாவுக்கு போகலாம், வேலைக்குப் போகலாம் ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் இருக்கக்கூடாது என அரசாங்கமே கண்டிப்பாக சொல்லியிருக்கிறது. ஆக, ஒரு பெண்ணைக்கூட நம்பி ஒப்படைக்க முடியாத துறை என அரசாங்கத்தாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட அரசின் ஓர் அங்கம் நம் காவல்துறை. இப்படி வருடத்தின் எல்லா நாட்களிலும் ஊழல் செய்கிற அதிகார துஷ்பிரயோகத்தில் ஊறித் தேறிய இந்த அரசு அதிகாரிகளை வைத்து தேர்தலை நேர்மையாக நடத்த முடியுமா? தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் இவர்கள் எல்லோரும் புனிதர்களாகி விடுவார்களா?

இன்னமும் உங்களுக்கு தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கும். அவர்கள் கடுமையாக கண்காணிக்கிறார்கள். பணம், பொருள் மற்றும் கள்ளச்சாராயம் என ஏராளமானவை கைப்பற்றப்படுகின்றன. எல்லா கட்சிகளும் தேர்தல் கமிஷனை கடுமையாக திட்டுகின்றன், ஆகவே தேர்தல் நேர்மையாக நடக்கிறது என நாம் உறுதியாக நம்பலாமென பரவலாக கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒவ்வொருவரும் இரண்டு முறை ஓட்டுப் போடுங்கள் என வெளிப்படையாக சொன்ன சரத்பவார், முஸ்லீம்களை பழிவாங்க எங்களுக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொன்ன அமித் ஷா ஆகியோரது பேச்சடங்கிய வீடியோ ஆதாரங்கள் தேர்தல் கமிஷன் வசம் இருக்கின்றன. ஆயினும் இவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதுவரை நாற்பதாயிரத்துக்கும் மேலான விதிமீறல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன, யாரும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. திருமங்கலம் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது என தலைமை தேர்தல் அதிகாரியே ஒப்புக்கொண்ட பிறகும் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ஆக இந்த தேர்தல் கமிஷனால் நேர்மையானவர்களைக் கொண்டும் தேர்தலை நடத்த இயலாது, முறைகேடு செய்பவர்களை தண்டிக்கவும் முடியாது.

எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாத தேர்தல் கமிஷன், யாரும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என வாக்காளர்களுக்கு அறிவுரை சொல்ல மட்டும் பெரிதும் சிரத்தை எடுத்துக் கொள்கிறது. காரணம் நீங்கள் பணம் வாங்கினால், அது அரசியல் கட்சியின் ஒரு முதலீடாகிவிடும். பிறகு அவர்கள் முதலீட்டுக்கு லாபம் பார்க்க ஊழல் செய்வார்கள். ஆகவே நீ நேர்மையாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் அதன் விளக்கம். உண்மையில் பெருமளவிலான பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதில்தான் செலவாகிறதா?

ஒரு தேசிய நாளிதழின் முதல் பக்க முழு விளம்பரத்துக்கு தரப்படும் தொகை சற்றேறக்குறைய ஐம்பது லட்சம். ஒரு செய்திச் சேனலின் பத்துவினாடி விளம்பரத்துக்கான தொகை உத்தேசமாக இருபதாயிரம். நாமெல்லோரும் நரேந்திர மோடியின் முகரையை பார்ப்பதற்காக இந்தியா முழுவதும் வெளியாகும் நாளிதழ்களில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் ஆயிரத்து ஐந்நூறு முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இதனை இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளும் தங்களது சக்திக்கேற்ற அளவில் செய்துகொண்டிருக்கின்றன. எல்லா கட்சிகளது டிவி விளம்பரங்களும் பெரிய சேனல்கள் எல்லாவற்றிலும் வருகின்றன.

ஐந்நூறு பேர் வரக்கூடிய ஒரு திருமணத்திற்கான சத்திர மற்றும் சாப்பாட்டு செலவு மட்டுமே குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் ஆகும் சூழலில்- சாராயம், போக்குவரத்து, சாப்பாடு, விளம்பரம் மற்றும் வருபவனுக்கு சம்பளம் என பணத்தை இறைக்க வேண்டிய நிகழ்வான மாநாடுகளும் பொதுக்கூட்டங்களும் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி தினசரி நடத்தப்படுகின்றன. இணைய விளம்பரங்களுக்கான செலவே நூற்றுக்கணக்கிலான கோடிகள் ஆகிறது. மேடையமைப்பு மற்றும் கட்சி ஊழியர்களுக்கு ஆகும் பணம் என கடைநிலை செலவுகள் இருக்கின்றது. ஆக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை 100 சதவிகிதம் தடுத்தாலும்கூட தேர்தலுக்கு என கட்சிகள் செலவிடும் தொகை (எவ்வளவு குறைவாக கணக்கிட்டாலும்) ஆயிரக்கணக்கான கோடிகள் ஆகும். இவை அனைத்தும் சட்டபூர்வமாக தடுக்கவே முடியாத செலவுகள். இந்த பல்லாயிரம் கோடி முதலீட்டுக்கான ஒரே வருவாய் ஆதாரம் ஊழல்தான். ஆகவே நீங்கள் இந்த தேர்தல் முறையை ஏற்றுக்கொள்ளும்போதே அதன் விளைவான ஊழலையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறீர்கள்.

இந்த தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது?

கோடீஸ்வர வேட்பாளர்கள்இதற்கு சொல்லப்படும் பதில் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க. அதிலும் குறிப்பாக, இருப்பவர்களில் நல்லவனைத் தேர்ந்தெடுக்க என்பதாக இருக்கும். அரசின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 70 சதம் மக்கள் போதுமான அளவு சாப்பாட்டுக்கு கூட செலவிட இயலாத ஏழைகள். அப்படியானால் மக்கள் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதம் பேர் பரம ஏழைகளாக இருக்க வேண்டும். அதுதான் மக்கள் பிரதிநிதித்துவத்தின் நியாயமான விகிதாச்சாரம்.  ஆனால் இங்கே ஒரு வேட்பாளரது சின்னமும் முகமும் எல்லா வாக்காளர்களுக்கும் சென்றடையவே பல லட்சங்கள் செலவாகும்.

தமிழக வேட்பாளர்களில் ஓங்கி உலகளந்த உத்தமர் என பலராலும் சுட்டிக்காட்டவல்ல ஒரே வேட்பாளர் பத்திரிக்கையாளர் ஞாநி, தனது ஒருநாள் பிரச்சார செலவு ஐம்பதாயிரம் ஆவதாகச் சொல்கிறார். ஆகப்பெரும்பாலான பாராளுமன்ற வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். கட்சிக்கு தொடர்பே இல்லாத முதலாளிகளை வேட்பாளராக்கும் போக்கு இப்போது துவங்கியிருக்கிறது. சுருங்கச்சொன்னால் இந்த நாட்டின் பெரும்பாலானவர்களான ஏழை மக்களில் இருந்து ஒரு மக்கள் பிரதிநிதி உருவாக வாய்ப்பே கிடையாது. பிறகு என்ன மயிருக்கு இதனை மக்களாட்சி என நாம் அழைக்க வேண்டும்!

போகட்டும், இந்த எல்லா பிரச்சனைகளையும் தாண்டி ஒரு யோக்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு போகிறான் என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்ளலாம். அவனால் உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அவனது அதிகார எல்லை எத்தகையது?

மக்கள் பிரதிநிதிக்கு என்ன அதிகாரம்?

அதிகார வர்க்க நபர்களைக் கொண்ட ஒழுங்கு முறை ஆணையத்தால் மட்டுமே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை, எண்ணெய் நிறுவன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. தொலைபேசித் துறையை டிராய் எனும் சுயேச்சையான அமைப்பு கட்டுப்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை மாற்றும் ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு வராமல் நிறைவேறுகின்றன (காட் ஒப்பந்தம், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்). பல ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி நிறைவேற்றப்படுகின்றன. நாட்டு மக்களின் சொத்தான அரசுத்துறை நிறுவனங்கள் ஒரு அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் சுலபமாக விற்பனை செய்யப்படுகின்றன (பால்கோ, மாடர்ன் பிரெட்). கனிம வளங்கள் முதலாளிகளுக்கு இனாமாக தரப்படுகின்றன. இவை எல்லாமே நம் வாழ்வோடு பெரிதும் தொடர்புடைய விடயங்கள்.

நாடாளுமன்றம்
மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் இவற்றைப் பற்றி முடிவெடுப்பதில் உங்களது மக்கள் பிரதிநிதிக்கு எந்த அதிகாரமும் இருக்கப்போவதில்லை. உங்களது வேலை பறிபோனாலோ, உங்களது வாழிடம் பறிக்கப்பட்டாலோ ஒரு எம்.பியால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. உங்கள் ஊரின் ஏரியோ ஆறோ விற்பனை செய்யப்பட்டால் அதனை தடுத்து நிறுத்த உங்களது எம்.எல்.ஏவால் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசோடு போடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கூட அறிய முடியாது.

அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே என ஈழப்பிரச்சனை தொடர்பான ஒரு பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டார் ப.சிதம்பரம். வருடத்துக்கு ஒன்றிரண்டு கோடி பாரளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர் நிதியை செலவு செய்யப் பரிந்துரைக்கலாம், அதுதான் ஒரு மக்கள் பிரதிநிதியின் இன்றைய அதிகபட்ச அதிகாரம் (அந்தப்பணமும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும், அவரே செலவு செய்யும் பொறுப்பிலிருப்பவர்). ஆனால் அந்தத் தொகையை பதவியில் இல்லாத உள்ளூர் பவர்ஸ்டார்களே செய்வார்கள். அதிகாரமற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் அளவில் ஒரு செல்வாக்கு போய்விடக் கூடாது என்பதற்கே இந்த தொகுதி மேம்பாட்டு நிதி. இது ஒரு நாடகம். பிறகு உங்கள் ஓட்டுப்போடும் புனிதக் கடமையின் பலன்தான் என்ன?

இது அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் தேசம்!

கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருக்கும் மன்மோகன் ஒரு மக்கள் பிரதிநிதியல்ல. திட்டக்கமிஷன் துணைத்தலைவர் ஒரு மக்கள் பிரதிநிதியல்ல. ரிசர்வ் வங்கியின் இன்றைய தலைவர் ஒரு இந்தியரே அல்ல (பிறப்பின் அடிப்படையில் சொல்லவில்லை). ஆனால் இவர்கள் எல்லோரும் நம் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரத்தை வகிப்பவர்கள். ஆகவே நண்பர்களே, இது அதிகாரிகளால் ஆளப்படும் ஒரு தேசம். ஜனநாயக ஆட்சி என்பது வெறும் பெயர்தான்.

அதிகார வர்க்கம்
அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் தேசம்

ஒரு எளிய உதாரணத்தோடு இதனை விளங்கிக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்ணாண்டர்ஸ் தென்னமெரிக்காவுக்கான சுற்றுப் பயணத்தின்போது அமெரிக்க அதிகாரிகளால் அம்மணமாக்கி சோதனை செய்யப்பட்டார், ஒருமுறையல்ல இரண்டு முறை. பின்னாளில் ஜார்ஜே அதனை ஒப்புக்கொண்ட பிறகும், ஒரு அமெரிக்க அதிகாரி தான் எழுதிய புத்தகத்தில் அச்செய்தியை பகடியாக எழுதி வெளியிட்ட பிறகும் இந்திய அரசு மட்டத்தில் எந்த சலனமும் இல்லை.

ஆனால் ஒரு பச்சை பிராடுத்தனம் செய்து அமெரிக்க போலீசிடம் சிக்கிக்கொண்ட தேவயானி கோப்ரகடேவின் கைதுக்கு இந்திய அரசு கொதித்தெழுந்தது. அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது, அவர்களது சலுகைகள் பறிக்கப்பட்டன, அதிகாரியொருவர் திருப்பியனுப்பப்பட்டார். இந்தியா வந்த அமெரிக்க அரசு விருந்தாளிகளை சந்திக்க அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மறுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு போர்ச்சூழலே அந்த பித்தலாட்டக்கார அதிகாரிக்காக உருவாக்கப்பட்டது. பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள பாதுகாப்பு அமைச்சரைக் காட்டிலும் ஒரு அதிகாரிக்கு செல்வாக்கு இருக்குமானால், இது யாரால் நடத்தப்படுகிற ஆட்சியாக இருக்க இயலும்?

சரி, இது மக்களாலோ மக்கள் பிரதிநிதிகளாலோ நடத்தப்படுகிற ஆட்சியில்லை என்பது உறுதியாகி விட்டது. இப்போது இது யாருக்காக நடத்தப்படும் ஆட்சி என்பதை பார்க்கலாம்.

இது முதலாளிகளுக்கான அரசு – ஆட்சி!

தொழிலாளிகளை ஒடுக்கும் மாருதி கார் நிறுவனம் உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என ஒழுக்கமாய் சொல்கிறது. அஞ்சு வருசமா எதையுமே செய்யாத உனக்கு என் ஓட்டு இல்லை என யாருக்கோ எதிராக வாக்களிக்க தூண்டுகிறது டாலர் பனியன்-ஜட்டி கம்பெனி. இது டேலண்டுக்கான தேர்தல் என்கிறது ஹீரோ ஹோண்டா. ஒயர் கம்பெனி முதல் ஊறுகாய் கம்பெனிவரை எல்லா நிறுவனங்களும் ஓட்டுபோடுவதன் மகாத்மியத்தைப் போற்றி விளம்பரம் கொடுத்த வண்ணமிருக்கின்றன. அது அவர்களது சமூக அக்கறை என கொள்ளலாமா? என் பொருளை வாங்கினால் அதன் லாபத்தில் ஒருபாகம் ஏழைக்குழந்தைகள் படிப்புக்கு தரப்படும் என்கிறது இந்துஸ்தான் லீவர் நிறுவன விளம்பரம். அதாவது அவர்கள் சமூக அக்கறையை காட்டவேண்டுமானால் நீங்கள் அவர்களது பொருளை வாங்கியாக வேண்டும்.

ஓட்டுக்கு நோட்டு
தொழிலாளிகளை ஒடுக்கும் மாருதி கார் நிறுவனம் உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என ஒழுக்கமாய் சொல்கிறது.

ஆனால் ஓட்டுபோடு எனும் விளம்பரத்துக்கு மட்டும் எந்த பிரதிபலனும் பாராமல் இவர்கள் விளம்பரம் செய்கிறார்களே.. ஏன்? காரணம் இது இவர்களுக்கான அரசு. இந்த அரசமைப்பானது அவர்களது நலனுக்காகவே கட்டமைக்கப்பட்டது. ஆகவே அதன்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தக்கவைக்கும் அக்கறையும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிதான் இந்த விளம்பரங்கள்.

பட்ஜெட் போடும்போது விவசாயிகளையோ நெசவாளர்களையோ நமது நிதியமைச்சர்கள் ஆலோசனை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் எல்லா பட்ஜெட்டுக்கு முன்பும் முதலாளிகளோடு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். இந்தியாவுக்கு வந்த பில் கிளிண்டன் பாராளுமன்றத்தில் செலவிட்ட நேரத்தைவிட அம்பானி சகோதரர்களை சந்திக்க ஒதுக்கிய நேரம் அதிகம் என்பதை அறிவீர்களா? ஒரு சாமானிய மனிதன் பேருந்து நிலைய கழிப்பறையில் சிறுநீர் கழிக்கவே மூன்று ரூபாய் செலவழிக்கும் நாட்டில் ஒரு சதுர மீட்டர் விளைநிலம் ஒரு ரூபாய் விலையில் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அரை லிட்டர் பால் இருபது ரூபாய் விலையுடைய நாட்டில் நூறு ஏக்கர் தாதுமணல் சுரங்க நிலம் பதினாறு ரூபாய் ஆண்டு குத்தகைக்கு விடப்படுகிறது. உங்கள் தெருவில் உள்ள கடைக்காரர் திடீரென அரிசி விலையை இரண்டு மடங்காக்கினால் நாம் அமைதியாக இருப்போமா? அதே அண்ணாச்சி பக்கத்து தெருவுக்கு பழைய விலைக்கே அரிசி விற்றால் அவரை நீங்கள் விட்டுவைப்பீர்களா? இயற்கை எரிவாயு விலை விவகாரத்தில், எந்த இடையூறும் இல்லாமல் இதைத்தான் அம்பானி செய்கிறார்.

2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், தாதுமணல் ஊழல் போன்ற எண்ணற்ற ஊழல்களின் அடிப்படை, முதலாளிகளுக்கு நாட்டின் செல்வம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இவற்றால் பலன் பெற்றவர்கள் எல்லோருமே டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற  தரகு முதலாளிகள். இவர்கள் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்பப் பெற முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர்களது அந்த ஆதாயத்துக்காக தரகு வேலை பார்த்த நீரா ராடியாவைக்கூட நம் அரசால் கைது செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆக, அரசாங்கம் என்பது முதலாளிகளுக்காவே நடத்தப்படுகிறது. எல்லா ஊழல்களும் அந்த முதலாளிகளின் லாபத்துக்காகவே செய்யப்படுகின்றன. ஊழலின் மூலவர்கள் பாதுகாப்பாக இருக்கும் நாட்டில் ஊழலை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?

முதலாளிகளுக்கான நீதிதான் நீதித்துறையின் நீதி!

இவை எல்லாம் இருந்தாலும் நாட்டைக் காப்பாற்றும் வல்லமை நம் நாட்டு நீதிமன்றத்துக்கும் சட்டத்துக்கும் உண்டு என வாதிடுவோர் பலர் இருக்கிறார்கள். நாட்டின் சகல பாவங்களையும் போக்கும் பெரிய தோஷபரிகார ஸ்தலமாக உச்ச நீதிமன்றம் கருதப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் எட்டுபேர் ஊழல்வாதிகள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என, தான் தொடுத்த வழக்கொன்றில் குறிப்பிட்டார், பிரஷாந்த் பூஷன் (மற்ற நீதிபதிகள் நியாயவான்கள் என அவர் சொல்லவில்லை, ஆதாரம் இல்லை அவ்வளவே). அவர் சொன்னது உண்மை என கருதினால் உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்க வேண்டும். அல்லது பொய்யென்றால் பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாயிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் அவரிடம் சமரசத்துக்கு முன்வந்தது, குறைந்தபட்சம் வருத்தத்தையாவது பதிவு செய்யுங்கள் நாம் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என கெஞ்சியது. ஏன்?

கஙகுலி
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி.

ஸ்டெர்லைட் வழக்கு உள்ளிட்ட பெரும்பாலான பெருநிறுவனங்களோடு தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முதலாளிகளுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்குகின்றது, பல பிரச்சனைகளில் தலையிடவே மறுக்கின்றன நீதிமன்றங்கள். அரிதினும் அரிதான நிகழ்வாக, வோடாஃபோன் நிறுவனம் வரிமோசடி செய்தது உறுதியாகி அவர்கள் பதினோராயிரம் கோடி அபராதம் செலுத்தவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இத்தீர்ப்புக்கு கட்டுப்பட முடியாது என்று சொல்லி அவர்கள் சர்வதேச நீதிமன்றங்களை அணுகுகிறார்கள். சர்வதேச மருந்து நிறுவனங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கெதிராக, தீர்ப்புக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகின்றன. 2ஜி ஊழல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களால் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடு கேட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சர்வதேச தீர்ப்பாயங்களை அணுகுகின்றன. உள்நாட்டில் செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலோ இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகாது.

இருக்கும் மிச்ச சொச்ச தொழிலாளர் சட்டங்களையும் ஒட்டுமொத்தமாக நீக்கு என முதலாளி வர்க்கம் அரசுக்கு கட்டளையிடுகிறது. தொலைத்தொடர்பு நிறுவங்களின் வருவாய் குறித்து தணிக்கை செய்ய சி.ஏ.ஜிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இது நிறுவன ஒப்பந்தங்களின் புனிதத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். மேலும் இது மற்ற துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என அஞ்சுகிறோம் என சொல்லியிருக்கிறார் ஃபிக்கி (இந்திய வர்தக சபைகள்-தொழிலகங்களின் சம்மேளனம்) தலைவர் சித்தார்த் பிர்லா. என் வருமானத்தைக்கூட நீ ஆய்வு செய்யக்கூடாது என நீதிமன்றத்தை மறைமுகமாக கண்டிக்கிறது முதலாளிகள் கூட்டம். கார்ப்பரேட் கம்பெனிகளால் நம் சட்டத்தை வளைக்கமுடியும் சூழல் ஒருபக்கம், அவர்கள் நம் நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனும் கள யாதார்த்தம் மறுபக்கம் என இந்திய சட்டத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது.

முதலாளிகளால் பராமரிக்கப்படும் ஊடகங்கள்!

முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஊடகங்கள்
பன்னாட்டு ஊடக முதலை முர்டோச்சின் வழித்தடத்தில் முதலாளிகளுக்கு சொந்தமான, முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஊடகங்கள்

இந்த எல்லா பிரச்சனைகளையும் மக்களிடம் தெரியப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இருக்கிற ஊடகங்களின் நிலை என்ன? இன்று அவர்களும் பெருமுதலாளிகள் கைபொம்மையாகத்தான் இருக்கிறார்கள். அனேக ஊடகங்கள் பெருமுதலாளிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன, அம்பானி வசம் மட்டும் சுமார் நாற்பது சேனல்கள் இருக்கின்றன. மற்ற ஊடகங்களும் அவர்களது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். நாம் யாருக்காக அழவேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் தீர்மானித்ததால்தான் நாம் நிர்பயாவுக்காக மெழுகுவர்த்தி ஏந்தினோம். அவர்கள் விரும்பியதால் அன்னா ஹசாரேவின் ஏழுநாள் உண்ணாவிரதத்தின் ”நியாயம்” நம் எல்லோரையும் வந்தடைந்தது. அவர்கள் விரும்பவில்லை, ஆகவே பத்து வருடமாக நடக்கும் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் நம் யாரையும் சலனப்படுத்தவில்லை. விற்பனைச் சரக்காக அவர்கள் செய்தியை மாற்றியது மட்டும் பிரச்சனை அல்ல, சுவாரஸ்யமான செய்தியை மட்டும் நாடும் இழிவான ரசிகனாக நம்மையும் மாற்றியிருக்கிறார்கள்.

இப்படி இந்திய அரசு அமைப்பின் எல்லா தரப்பும் சீரழிந்திருக்கிறது. அதனை கண்காணிக்கவும் தண்டிக்கவும் உள்ள அமைப்புக்கள் ஊழல்மயமாகிவிட்டன. சுருக்கமாக சொன்னால் இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி இந்திய ஜனநாயகத்தின் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே புரையோடிப்போய் அழுகி நாற ஆரம்பித்திருக்கிறது. அது மக்களின் விவாதப் பொருளாவதை தவிர்க்கவே இந்த ஓட்டுப்போடும் புனிதக் காரியத்தின் மகிமைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விளம்பரம் செய்கிறார்கள்.

மன்மோகன் சிங் காலாவதியாகி மோடி திணிக்கப்படுவது ஏன்?

மன்மோகன் சிங், மோடி
மன்மோகன் சிங் காலாவதியாகி மோடி திணிக்கப்படுவது ஏன்?

இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதி இலக்கு நாட்டை மொத்தமாக முதலாளிகள் சொத்தாகவும் மக்களை வெறும் நுகர்வோராகவும் மாற்றுவதே. அதனை விரைவாக செய்ய திணிக்கப்பட்டவர்தான் மன்மோகன். முதலாளித்துவத்தின் யூஸ் அண்டு த்ரோ விதிப்படி இனி அவர் உபயோகமற்றவர். ஒரு பெரிய தாதாவின் கீழிருக்கும் கும்பலில், ஸ்கெட்ச் போடும் ஆளைப் போன்றவர் மன்மோகன். கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை பலியிடும் திட்டத்துக்கு ஸ்கெட்ச் போடும் அடிப்படைப் பணிகளை அவர் செவ்வனே செய்துவிட்டார், இது கழுத்தறுக்க வேண்டிய கட்டம். இப்போது ஸ்கெட்ச் போட்ட மன்மோகனுக்கு இங்கு வேலையில்லை, இனி இந்த அசைன்மெண்டுக்கு மோடி போன்ற மூளையற்ற அடியாள் அதிகாரத்தில் இருப்பதுதான் முதலாளிகளுக்கு வசதி.

அதனால்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொருளாதார மீட்பராக அறிமுகமான மன்மோகன் இன்று அப்படி ஏற்றி விடப்பட்டவர்களாலேயே செயல் திறனற்றவர் என தூற்றப்படுகிறார். முதலாளிகளின் ஃபாசிஸ்ட் தேர்வில் முதல் வகுப்பில் தேறிய மோடி, புதிய மீட்பராக அறிமுகம் செய்யப்படுகிறார். அங்கிங்கெனாதபடி எல்லா ஊடகங்களிலும் அவர் வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தப்படுகிறார். தெகல்கா கூட அவருக்கு எதிரான ஆதாரங்களை இப்போது வெளியிட மறுக்கிறது. ஒருவேளை மோடியை கொண்டுவரும் திட்டத்தில் பிசகு ஏற்படும் சாத்தியத்தை கவனத்தில் கொண்டு களமிறக்கப்பட்டிருக்கும் டம்மி வேட்பாளர்தான் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால். குறைந்தபட்ச அவநம்பிக்கை இருப்பின் அதை சமன் செய்யவும் அது அதிகமாகி விட்டால் அதனை அறுவடை செய்யவுமே அவர் களத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி – ஆளும் வர்க்கத்தின் பிளான் பி

நாடு முழுக்க இருக்கும் இரண்டு லட்சம் என்.ஜி.ஓக்களின் ஏக பிரதிநிதிதான் கெஜ்ரிவால். அவரது வேட்பாளர்கள் பலரும் என்.ஜி.ஓ ஓனர்கள்தான். பொதுவான நபர்களை ஆ.ஆ கட்சிக்கு கொண்டுவரும் பிள்ளை பிடிக்கும் வேலையை செய்வதும் என்.ஜி.ஓக்கள்தான். ஒரு வருடத்துக்குள் கட்சி ஆரம்பித்து நாடுமுழுக்க வேட்பாளர்களை நிறுத்தும் வல்லமை, இவர்களால்தான் ஆம் ஆத்மிக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏகாதிபத்திய நிதியால் இயங்குபவை. தங்களை ஒரு மாற்று என சொல்லிக்கொள்ளும் போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளும் மற்ற பெயர்ப்பலகை இடதுசாரிக் கட்சிகளும் இவர்களுக்கு எவ்வகையிலும் மாற்றல்ல. அவர்களது முதலாளித்துவ சார்பை விளங்கிக்கொள்ள சிங்கூர் நந்திகிராம உதாரணங்களே போதும்.

இந்தியா இனியும் ஒரு நாடல்ல, அது ஒரு ஐஎன்சி  (INC) கம்பெனி – இங்கே வளர்ச்சி என்பது என்ன?

அரசு என்பது ராணுவம், போலீஸ் போன்ற துறைகளை மட்டும் வைத்திருந்தால் போதும் மற்ற எல்லாவற்றையும் எங்களுக்கு கொடு என்பதுதான் முதலாளிகளின் உத்தரவு. மக்கள் பிரதிநிதிகள் எனும் பெயரில் அரசியல் கட்சிகளினால் ஏற்படும் சிறிய அளவு தாமதத்தை தவிர்க்கவும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய லஞ்சத்தின் அளவை குறைக்கவும் முதலாளிகள் “லெஸ் கவர்மெண்ட், மோர் கவர்னென்ஸ்” எனும் செயல் திட்டத்தை முன்மொழிகிறார்கள். அரசின் பங்கைக் குறை, அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகமாக்கு என்பதாக அதனை புரிந்துகொள்ளலாம். இங்கே அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த செயல்திட்டம்தான் அமுலுக்கு வரும். இந்த காரணிகள் அனைத்தையும் பரிசீலித்தால் நாம் சிக்கியிருக்கும் வலையின் எல்லா கண்ணிகளும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்டவை என்பது புலனாகும். இந்த அமைப்புக்குள் உருப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அறவே இல்லை என்பதும் விளங்கும்.

இந்தியா இன்க்
இந்தியா ஒரு நாடு அல்ல, முதலாளிகள் முதல் போட்டு லாபம் சம்பாதிக்க பயன்படும் கம்பெனி.

இவை எல்லாவற்றுக்கும் மேல் நம் நாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்திருப்பதாக நம்ப வைக்கப்படுகிறோம். மன்மோகன், சிதம்பரம், கோபண்ணா போன்ற காங்கிரஸ்காரர்களும் பத்ரி, வெங்கடேசன் போன்ற பா.ஜ.க சார்பு “அறிவுஜீவிகளும்” நாடு வளர்ந்திருப்பதாகவே சொல்கிறார்கள். பா.ஜ.க வந்தால் அது இன்னும் வேகமாக இருக்கும் என்பதுதான் பத்ரி மாதிரியானவர்களின் அபிப்ராயம். அவர்களது பார்வையில் வளர்ச்சி என்பது அகலமான சாலைகள், பெருமளவுக்கான அன்னிய முதலீடு, பெரிய ஷாப்பிங் மால்கள் ஆகிய கட்டுமானங்களும் ஜி.டி.பி, அன்னிய செலாவணி கையிருப்பு ஆகிய எண்களும்தான்.

உண்மையில் இவை நமக்கு என்ன வளர்ச்சியை தந்திருக்கின்றன? சாலைகள் அகலமாகியிருக்கின்றன, ஆனால் இலவசமாக பயணித்த சாலைகளை பாவிக்க பணம் செலுத்த வேண்டிய நுகர்வோராக இன்று நாம் மாற்றப்பட்டு விட்டோம். சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பு நம்மில் பெரும்பாலானோருக்கு இன்றில்லை. நாம் பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடுகிறோம். வட இந்திய பணியாளர்கள் நம் நகரங்களுக்கு வருகிறார்கள்.

பயணங்கள் இலகுவாகியிருக்கின்றன, ஆனால் அவை நமக்கு செலவு மிக்கதாகியிருக்கின்றன, அது தவிர்க்க இயலாததாகி நாம் நவீன நாடோடிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் இனிமையான பருவமாக கருதப்பட்ட குழந்தைப் பருவம் இன்றைய மாணவர்களுக்கு பெரும் சுமையாகவும் வெறும் போட்டியாகவும் மாறியிருக்கிறது. முன்பு தண்ணீர் விலைபொருளாக இருந்திருக்கவில்லை, அது அதிகபட்சமாக கோரியது உங்கள் உழைப்பை மட்டுமே. இன்று கிராமம் நகரம் என பாரபட்சமில்லாம் தண்ணீர் ஒரு விற்பனைப் பண்டம். கேன் தண்ணீர் கவர்ச்சிக்கு நாம் ஆட்படுத்தப்பட்ட வேளையில் அரசு தந்திரமாக குடிநீர் வழங்கும் கடமையில் இருந்து விலகிவிட்டது.

இன்று டிவியும் வாகனமும் இலகுவாக கிடைக்கிறது ஆனால் நாளைய நம் வேலை என்பது அனேகருக்கு உத்திரவாதமற்றதாக மாறிவிட்டது. பெரிய அதிநவீன மருத்துவமனைகள் எல்லா நகரங்களிலும் முளைக்கின்றன, ஆனால் மருத்துவம் ஏழைகளுக்கு கைக்கெட்டாததாக இருக்கிறது. சகல வசதிகளோடு இருக்கும் பள்ளி கல்லூரிகள் எல்லா இடங்களிலும் இன்று இருக்கின்றன, ஆனால் கல்விச்செலவானது நடுத்தர வர்க்க மக்களுக்குகூட பெருஞ்சுமையாய் மாறியிருக்கிறது.

பொருள், வசதி என்றில்லை, வாழ்க்கை முறையும் பெருமளவு சிதைக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்குவது குற்றம் எனும் சிந்தனையை மக்களில் பலரும் கைவிட்டாயிற்று. இயல்பான மனித அற உணர்ச்சிகள் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது, அதன் விளைவாக சாமானிய மக்கள் ஈடுபடும் குற்றச் செயல்கள் பெருகுகின்றன. இளைஞர்கள் பலர் சமூக சிந்தனையற்றவர்களாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தோல்வியடையும் வேளையில் தான் தனித்து விடப்பட்டதாக இளையோர்கள் உணர்கிறார்கள். விளைவு, முப்பது வயதுக்குட்பட்டோரது மரணத்திற்கான முதல் காரணியாக தற்கொலை மாறியிருக்கிறது. குடிக்கும் தண்ணீரில் இருந்து கேட்கும் செய்திவரை எல்லாவற்றையும் ஒரிஜினல்தானா என சந்தேகிக்க வேண்டிய அளவுக்கு நாம் நம்பிக்கையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். மனசாட்சியோடு நேர்மையாக சிந்தித்தால் இந்த வளர்ச்சி நம்மை பாதுகாப்பற்றவர்களாக, சக மனிதர்கள் மீது நம்பிக்கையற்றவர்களாக, நிம்மதியில்லாதவனாக, கடனாளியாக மாற்றியிருப்பது புரியும். இது வளர்ச்சியா, வளர்ச்சியென்றால் இந்த வளர்ச்சிதான் நமக்கு வேண்டுமா?

மேற்சொன்ன உண்மைகளை விவாதிக்கும் எல்லா தருனங்களிலும் நாம் எதிர்கொள்ளும் கேள்வி, இந்த அரசமைப்பு பிரயோஜனமற்றது என்றால் வேறு மாற்றுதான் என்ன?

புழுத்து நாறும் இந்த அரசமைப்பிற்கு தீர்வு என்ன?

நாம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்குமான ஆணிவேர் தனிச் சொத்துடைமைதான். பெண்ணடிமைத்தனம், வறுமை, மதம் என எல்லா சிக்கல்களும் தனியுடைமையால்தான் உருவாகின்றன. ஒருவன் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் எனும் சூழலே இன்னொருவனிடம் இருந்து அபகரிக்கவும், அடுத்தவனை அடிமையாக்கவும் தூண்டுகிறது. அதற்கான கவசமாக மதம் பயன்படுத்தப்படுகிறது. பணக்கார வர்கத்தின் வளர்ச்சி என்பது ஏழைகளை மேலும் ஏழையாக்காமல் சாத்தியப்படாது. இந்தியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை இருபது கோடி, வசிக்க ஆளற்ற வீடுகள் சற்றேறக்குறைய ஐந்துகோடி. தஞ்சையில் விவசாய வேலைக்கு ஆளில்லை, ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிலாளர்களுக்கு வேலையில்லை. இந்த அபாயகரமான முரண்பாடுதான் முதலாளித்துவம் தரும் பரிசு. ஆகவே நம் பிரச்சனைகளின் தீர்வென்பது தனிச்சொத்துடமையை ஒழிக்கும் கோட்பாட்டின் வாயிலாகத்தான் கிடைக்கும்.

சோசலிசப் புரட்சியின் சாதனைகள்

1917 புரட்சிக்குப் பிறகு அரசமைத்த லெனின், முதலில் மூன்று காரியங்களை செயலாக்குகிறார்.

  • நிலங்களை விவசாயிகளுக்கு பிரித்தளிப்பது.
  • பெரிய நிறுவனங்களை அரசுடமையாக்குவது.
  • சமனற்ற வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வது.
லெனின் - ஸ்டாலின்
உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்கிய முன்னோடி தலைவர்கள் – லெனின், ஸ்டாலின்

பிறகு தமது அரசின் முக்கியமான உடனடி இலக்குகளாக அனைவருக்கும் உணவு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிவற்றை நிர்ணயித்தார் . இவற்றை அடைந்த பிறகே மற்றவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் எனவும் அறிவித்தார். கல்வி புகட்டுவது ஒரு மக்கள் நடவடிக்கையாக மாற்றப்படுகிறது. கற்ற ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு கற்றுத் தரவேண்டும் எனும் முயற்சி தொடங்குகிறது. தொழிலாளர்கள் அதிகம் கூடும் ஆலைகளிலும் பண்னைகளிலும்கூட பள்ளிகள் துவங்கப்படுகின்றன. முதியோருக்கான கல்வி தனியே செயல்படுத்தப்படுகிறது. 1918 அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் ஒரே தரத்திலான இலவசக் கல்விச் சட்டமாக்கப்படுகிறது. அதுவரை இருந்த வசதிக்கு ஏற்ப இருந்து வந்த பாரபட்சமான கல்விமுறை ஒழிக்கப்பட்டது.

எழுத்தறிவை மூன்று சதவிகிதத்தில் இருந்து நூறு சதவிகிதமாக்க சோசலிச ரஷ்யா எடுத்துக்கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள். புரட்சி நடந்து இருபதாண்டுகளுக்குள் ரசியாவில் வரிவடிவம் இல்லாதிருந்த நாற்பது தேசிய இனங்களின் (சிறுபான்மை இனங்கள் உட்பட) மொழிகளுக்கு வரிவடிவம் உருவாக்கப்பட்டது. நாடு முழுக்க கிராமங்களிலும் நகரங்களிலும் பெரிய நூலகங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் காலத்தில், ஏழை நாட்டு மாணவர்களுக்கு அறிவு மறுக்கப்படக் கூடாது என்பதற்காக அறிவியல் நூல்கள் மிக மிக மலிவான விலையில் அவர்கள் மொழியிலேயே தயாரித்தளிக்கப்பட்டது. யுத்தத்தினால் ஆதரவற்றோராகிவிட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஏராளமான காப்பகங்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவர்களில் இருந்து பல ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் பின்னாட்களில் உருவானார்கள்.

மற்ற இலக்குகளான அனைவருக்கும் உணவு, குடியிருப்பு, மருத்துவம் ஆகியவை ஸ்டாலின் காலத்தில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. 1940 மற்றும் 1950-க்கும் இடையேயான பத்தாண்டுகளில் ரசியாவின் மருத்துவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்தில் இருந்து இரண்டு லட்சத்து அறுபத்தைந்தாயிரமாக உயர்ந்த்து. பத்தாண்டுகளில் 1.10 லட்சம் புதிய மருத்துவர்கள். கர்ப்பிணிகள் மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டியதில்லை, அவர்களை நாடி மருத்துவப் பணியாளர்கள் வருவார்கள். பிரசவத்திற்கான உத்தேசமான தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக அரசே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வரும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. கர்ப்பிணிகளுக்கு ஓராண்டுவரை முழு ஊதியத்துடனான விடுமுறையும், இரண்டாம் ஆண்டு அரை சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்பட்டது. 1916-ல் ரசியாவின் தனிமனித சராசரி ஆயுள் 32 ஆண்டுகள். 1960-ல் அது 70 வருடமாக அதிகரிக்கப்பட்டது. அதே வருடத்தில் ரசியாவில் பத்தாயிரம் பேருக்கு 20 மருத்துவர்கள் இருந்தார்கள், உலகிலேயே இதுதான் அதிகம். மற்ற நாடுகளின் அன்றைய தரவுகள் கீழே,

  • அமெரிக்கா – 10,000 பேருக்கு 12 மருத்துவர்கள்
  • பிரான்ஸ் –  10,000 பேருக்கு 10.7 மருத்துவர்கள்
  • இங்கிலாந்து – 10,000 பேருக்கு 10 மருத்துவர்கள்
  • பாகிஸ்தான் – 10,000 பேருக்கு 0.7 மருத்துவர்கள்??!!

1941 மற்றும் 1951 -க்கும் இடையேயான பத்தாண்டுகளில் மட்டும் கட்டப்பட்ட மக்கள் குடியிருப்புக்களின் அளவு நகர்ப்புறத்தில் நூற்று பத்து கோடி சதுரஅடி. கிராமப்புறங்களில் உருவாக்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை 27 லட்சம். இது ரசியாவின் அன்றைய ஐந்தாண்டு திட்ட இலக்கைக் காட்டிலும் 21 சதவிகிதம் அதிகம். இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை 77 லட்சம். 1947-ல் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நுகர்பொருட்கள் மீதான ரேஷன் கட்டுப்பாட்டுமுறை முழுமையாக நீக்கப்படுகிறது.

இந்தியாவில் போலி ஜனநாயகத்தின் ‘சாதனைகள்’!

ஆனால் ஜனநாயகத்தின் கோயிலான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் நிறைவேறவே 65 ஆண்டுகள் ஆனது, அதனை சாத்தியமாக்கும் முயற்சிகள் இன்றைக்குவரைக்கும் ஆரம்பமாகவில்லை. இன்றும் இந்தியாவில் எழுபது விழுக்காடு மக்களே எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  70 சதம் மக்களுக்கு இரண்டு வேளை உணவு மட்டுமே கிடைக்கிறது. முக்கால்வாசி மக்களுக்கு ஒழுங்கான சாப்பாடே இல்லாத நாட்டின் மொத்த மருத்துவ செலவில் அரசின் பங்கு 16 விழுக்காடுதான். 86 சதவிகித செலவை மக்களே செய்கிறார்கள். வீடற்றவர்கள் எண்ணிக்கை 20 கோடி. கிராமங்களில் வாழ வழியின்றி நகரங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பத்து கோடி. சரியான உணவில்லாததால் நாட்டின் பெண்களில் பாதிபேர் ரத்த சோகையுடையோராக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதே சதவிகிதத்திலான இந்திய குழந்தைகள் போதிய ஊட்டச்சத்தற்றவர்கள். இவை அனைத்தும் சிலநூறு முதலாளிகளால் முடக்கப்படும் செல்வத்தின் காரணமாக உருவாகின்றன. ஆகவே முதலாளித்துவத்தை ஒழிக்காமல் மக்கள் நலன் என்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை.

மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்த சோசலிசத்தை தோற்ற ஃபார்முலா என கிண்டலடிப்பதும் மக்களுக்கு எதையுமே செய்ய முடியாத செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை போற்றிப் புகழ்வதும் அறிவுடையோர் செய்யும் காரியமல்ல. தோல்வியிலிருந்து பாடம் கற்பதில் சிறுமையும் இல்லை பிணத்துக்கு பேன் பார்ப்பதில் பெருமையும் இல்லை.

தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தார் பாம்பின் பெருமையை சொல்லும் “வெள்ளிக்கிழமை விரதம்” என்ற படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்த படத்தை எடுக்க கொல்லப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை உத்தேசமாக நூறு (இதனை அதன் கதாசிரியர் கலைஞானம் நக்கீரன் இதழ் தொடர்கட்டுரையில் குறிப்பிடுகிறார்). அதே கதைதான் இங்கேயும், சாமானிய மக்களை தேர்தல் மூலம் அரசு கவுரவிப்பதாக ஒரு தோற்றம் நமக்கு காட்டப்படலாம். ஆனால் பின்னணியில் நம்மைப் போன்ற மக்களில் பலர் அழிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. மாமாக்களை மாற்றினால் விபச்சாரத்தை ஒழித்துவிட இயலும் என்பதை உங்களால் நம்ப இயலுமெனில் இந்தத் தேர்தல் மூலம் மக்கள் நல அரசை அமைத்துவிட முடியும் என்றும் நீங்கள் நம்பலாம்.

தேர்தலை புறக்கணியுங்கள்!
புதிய ஜனநாயக் புரட்சிக்கு பணியாற்ற புரட்சிகர அமைப்புகளில் இணையுங்கள்!
வினவுடன் தொடர்பு (vinavu@gmail.com அல்லது 9941175876) கொள்ளுங்கள்!

தென் ஷென்னை பாஜக ஸ்தீரி அணி உத்சவ் – ஹாஸ்ய திருஷ்டி

9

பா.ஜ.க மகளிர் அணி  சார்பில் தென் சென்னை தொகுதி வேட்பாளரான இல.கணேசனுக்கு ஆதரவு திரட்ட மாபெரும் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எல் ஆர் ஈசுவரியின் மகமாயி பாடல்களில், பாஜக கோமகன்களது பேர்களை தூவி விட்டு நாராசமாக தாக்கி வந்தனர். இதாவது பரவாயில்லை, அடுத்த பாட்டு ரஜினியின் “பொதுவாக எம் மனசு தங்கம்” எனும் பாடலை “பொதுவாக கணேசன்தான் தங்கம், போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்” என்று ரகளையாக போட்டு பட்டையைக் கிளப்பினர்.

பா.ஜ.க மகளிர் அணி`
யமஹா, நமஹா என்று அக்ரகாரத்தில் தவளை மந்திரங்களை கேட்டு வளர்ந்த அந்த மாமிகள் இப்படி தெருவில் இறங்கும் காட்சி ஜெயமோகனது ஆழ் கடல் அக மன கிடங்கை ஆவேசம் கொண்டு எழுப்பி விடும் என்பதில் ஐயமில்லை (இல கணேசனுக்கு பிரச்சாரம் செய்யும் பா.ஜ.க மகளிர் அணியினர், நின்றவாறு முழங்கும் மாமிதான் லலிதா சுபாஷ்)

பாரத மாதாவின் புத்திரர்கள் இப்படி ஒரு சேர குத்தாட்டத்தையும், மகமாயி பாடலையும் இணைத்து பின் நவீனத்துவத்தின் கலை நோக்கை ஏற்றுக் கொண்டிருந்ததை பார்த்தால் அறிஞர் அ.மார்க்ஸ் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார். கணேசன் எனும் முதியவர் இப்படி சிங்கம், தங்கம் என்று தனது பாடலை சுட்டிருப்பது மோடியின் ரசிகரான ரஜினிக்கு ஆனந்தமாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தற்கொலையே செய்திருப்பார்கள்.

பா.ஜ.க மகளிர் அணி கூட்டம் என்றாலும், ‘கலீஜான’ சென்னை தெருக்களில் மூக்கைப் பிடித்துக் கொண்டு மாமிகள் வோட்டு கேட்க வந்திருக்கும் காட்சியினை பார்த்தால், எழுத்தாளர் ஜெயமோகன் அறம் கதைகளின் அடுத்த தொடரை எழுதுவது உறுதி. யமஹா, நமஹா என்று அக்ரகாரத்தில் தவளை மந்திரங்களை கேட்டு வளர்ந்த அந்த மாமிகள் இப்படி தெருவில் இறங்கும் காட்சி ஜெயமோகனது ஆழ் கடல் அக மன கிடங்கை ஆவேசம் கொண்டு எழுப்பி விடும் என்பதில் ஐயமில்லை. தி இந்து தமிழ் நாளிதழில் பேட்டியளித்த பா.ஜ.கவின் வானதி சீனிவாசன், எழுத்தாளர் ஜோ டி குருஸோடு சேர்ந்து எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும் கூட மோடியை ஆதரிக்கிறார்கள் என்று கூறியிருந்தார். ஆகவே பா.ஜ.க மாமிகள், அறம் கதைகளில் வரப் போவது நமது கற்பனை அல்ல.

தமிழகத்தில் மோடி அலை வீசுவதாகவும், அது புரட்சி புயலுடன் சேர்ந்து 40 தொகுதிகளுடன் கரையை கடந்துவிடும் என்று ஜூ.வி, தினமலர், புதிய தலைமுறை, குமுதம் உள்ளிட்ட கூஜாக்கள் மஜா செய்து வந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் அந்த அலை எப்படி இருந்தது? என்ன செய்வது அந்தக் கூட்டத்தில் தாராளமாக கணக்கு போட்டால் கூட மொத்தம் 50 பேர்  மிஞ்ச மாட்டார்கள். இதுதான் அலையின் உண்மையான காட்சி அல்லது வறட்சி.

அதிலும் பாதி பேர் தேமுதிக கட்சி கொடி பார்டர் சேலையில் வந்திருந்தார்கள். இவர்கள் கருப்பு அல்லது மாநிறத்திலும், மஞ்சள் கயிறு தவிர வேறு நகைகள் இல்லாமலும் எளிமையாக இருந்தனர். ஆனால் பா.ஜ.க மாமிகள் தலைக்கு 50 அல்லது 100 பவுன் நகைகளுடன், ஏசி அறைகளில் பராமரிக்கப்படும் அழகுடனும், பட்டுச் சீலை அலங்காரத்துடனும் இருந்தனர். காஞ்சிபுரம் பட்டு தொழிலும், ஜோய் ஆலுக்காஸும் இவர்களை நம்பித்தான் பிழைக்கின்றனர் போலும். மோடியின் கட்சிக்கு அதானி, அம்பானி ஸ்பான்சர் என்ற தராதரத்தை மாமி மகளிர் அணியும் மெயின்டைன் பண்ணுவது ஒரு குற்றமல்ல.

“வருங்கால மத்திய அமைச்சர்’ இல.கணேசன் பேசுகிறார் என்று உசுப்பேத்தினாலும் கூட்டம் ஐம்பதைத் தாண்டாமல் அடம் பிடித்தது. மகளிர் அணியைத் தவிர மற்றவர்கள் எல்லாம் வயதான நபர்களாகவும், திருவிழாவில் காணாமல் போனவர்கள் போல பாவமாகவும் இருந்தனர். கேட்டால் இவர்களெல்லாம் எழுத்தாளர்கள், கலைஞர்களாம். ஒருவர் ஜோ-டி- குரூஸ் குறித்து ஆவேசமாக முழங்கிக் கொண்டிருந்தார். எழுத்தாளர்களுக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது. இலக்கியவாதிகள் பேச்சைக் கேட்டவுடன் டீ, சிகரெட்டுடன் தற்செயலாக எட்டிப் பார்த்தவர்களெல்லாம் இடத்தை காலி செய்தார்கள். நாற்காலியில் அமர்ந்த ஐம்பதிலும் 15 எழுந்து மறைந்து போனது.

எழுந்து போனவர்கள் குரூஸை கண்டார்களா, கொற்கையை படித்தார்களா, ஒரு எழவும் புரியவில்லை. ஆனால் குரூஸ் எனும் துரோகியின் பெயர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று பார்த்தால் குமட்டிக் கொண்டு வந்தது. இறுதியாக ஜோடிகுரூஸ் மட்டும் தான் மதச்சார்பற்றவர் என்று கூறி ஒரே போடாக போட்டு உரையை நிறைவு செய்தார், அந்த எழுத்தாளர்.

அடுத்து ஏர்வாடி ராதாகிருஷ்ணன் என்று ஒருவரை பேச அழைத்தார்கள். பெரிய கவிஞர் எழுத்தாளர் என்று பல ரூபங்களை கொண்டவராம், அது போக தமிழகமெங்கும் பல நூறு கவிஞர்களை உருவாக்கி உலவ விட்டிருக்காராம். பொதுவில் கவிதை என்றாலே எனக்கு அலர்ஜி, அதுவும் மேடையில் கவிஞர் பேசுகிறார், கவிதை படிக்கிறார் என்றால் காய்ச்சலே வந்துவிடும். நல்ல வேளை ஏர்வாடி கவிதை பாடாமல் நம்மைக் காப்பாற்றியது.

“இல.கணேசன் என் நண்பர், எனது புத்தகத்தை வெளியிட்டு பேசியிருக்கிறார்.., எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்… எனது வெளியீட்டு விழாவில் ….” என்று சில நிமிடங்கள் தன் கதை கூறினார். எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருந்தாலும். இந்த ஜீவனை வைத்து ஓட்டு கேட்பது தற்கொலைக்கு சமமானது என்று மற்ற கட்சிகளுக்கு புரிந்திருப்பதால் யாரும் அழைக்கவில்லை. ஆனால் கிடைக்கும் எந்த அற்ப ஆதரவையும் விட்டுவிடக் கூடாது என்று அலையும் பாஜகவிற்கு எகத்தாளமான ஏர்வாடி கூட மதிப்புள்ளதாக தெரிகிறது. “பிஜேபி இந்துக் கட்சி என்று சொல்கிறார்கள் ஆனால் அப்படி அல்ல. அது இந்தியர்களுக்கான கட்சி” என்றார், ஏர்வாடி.

பிறகு யாரும் ராமர் கோவில் விவகாரத்தை தவறாக நினைக்க கூடாது என்று, “ராமன் யார்?  ஒழுக்கமானவன்.. @#@#, ###@#” என்று பல ‘வன்’களை கூறிவிட்டு அதைபோல ஆட்சி செய்வோம் என்பதை தான் அப்படி சொல்கிறோம் மற்றபடி இதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று பேசினார். ராமராஜ்ஜியத்தில் பசுவை கொன்றவனுக்கும், மதம் மாற்றுபவர்களுக்கும், பெண்ணுரிமை பேசும் பெண்களுக்கும் என்ன தண்டனை என்று மனு தர்மத்தில் தேடவேண்டாம். கடந்த பத்து வருட இந்திய சமூக வரலாற்றை பார்த்தாலே போதும்.

அடுத்து குஜராத்  வளர்ச்சி குறித்து இவர் கூறிய புள்ளிவிவரங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அடிபட்ட நாய்போல ஆனது. நோ கமெண்ட்ஸ்.

கூட்டணி கட்சிகளும் இருக்கிறார்கள் என்பதை காண்பிக்க இடையிடையே ‘இந்தக் கட்சியின் இத்தனையாவது வட்ட செயலாளர் இன்னாருக்கு பொன்னாடை போர்த்துவார்’ என்று போர்த்திக் கொண்டார்கள். கட்சிக்கு 10 பேரு வந்திருந்தா கூட 7×10= 70 பேராவது வந்திருக்கணுமே என்ற கவலையை இல.கணேசன் முகத்தில் பார்க்க முடிந்தது. ஆனால் கூட்டணி கட்சிகள் யாரையும் மேடையிலும், கீழேயும் காணக் கிடைக்கவில்லை, தேமுதிக பெண்கள் சிலரைத் தவிர.

அடுத்து தமிழக பா.ஜ.கவின் பிரபலமான லலிதா சுபாஷ் என்ற அக்மார்க் மாமி மைக்கை பிடித்தது. “ தேஷ்ஷிய ஜனநாயக கூட்டணியில் சார்பில் எங்கள் அண்ணா இல.கணேஷ்ஷனுக்கு வாக்கு ஷ்ஷேகரிக்க நடக்கும் ……”  என்று ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. இத்தனை நாட்களானாலும் வடமொழி உச்சரிப்பை இங்கே காப்பாற்றி வருவது அவாள்தான்.

“குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிதான் பிரதமர் ஆக முடியும். நாற்பது தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் ஆக முடியும் என்று ஜெயா தொலைக்காட்சியில் ஒரு லேடி பேசிக்கொண்டிருக்கிறார்” என்று மரியாதையாக பேசினார் லலிதா. ஆனால் யார் அந்த லேடி? பாத்திமா பாபுவா? விந்தியாவா, சி கே சரஸ்வதியா?

ஜெயலலிதா என்ற பெயரை உச்சரிக்க மாமிக்கு பயமா இல்லை மானசீக கூட்டணி தலைவரான சக மாமியின் மீதான அபிமானமா என்று கண்டுபிடிப்பது உங்கள் திறமை. ஆனால் 150 தொகுதிகளில் போட்டியிட்டால் பிரதமர் ஆக முடியும் என்று மாமி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு வேளை ஒட்டு மொத்த பாராளுமன்ற இடங்களை 300 ஆக குறைத்து விட்டார்களோ?

அதிமுக, திமுக எம்.பிக்கள் கட்சியின் அடிமைகளாக இருப்பார் என்பதை விளக்க ஒரு கதையை கூறினார்.  அதாவது நேர்மையின் சிகரமாக காட்டிக் கொள்ளும் காவி கும்பலின் இந்த மாமி ஒரு ரெக்கமண்டேசனுக்கு ஒரு அதிமுக அமைச்சரை சந்திக்க காரில் போனதாம். வீட்டின் முன் நாலைந்து கார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர் தூக்கப்படுவார் எனும் மம்மியின் விதி எண் 110 படி அமைச்சரின் உதவியாளர் மாமி காரை பக்கத்து தெருவில் நிறுத்தச் சொன்னாராம். இதை வைத்து அம்மாவின் கட்சியில் அடிமைகள்தான் இருக்க வேண்டும், ஜனநாயமில்லை என்று பினாத்தினார் மாமி. ஒரு அமைச்சர் வீட்டின் முன் பந்தாவாக கார்கள் நிறுத்தக் கூடாது என்று  ஜெயா மாமி ஒரு உத்திரவு போட்டால் அது வெட்டி பந்தா செய்யும் அமைச்சர்களுக்கு நல்ல பாடம்தானே? ஆனால் இந்த அடிமைகளிடம் வெட்கம் கெட்டு சிபாரிசுக்கு போன மாமிக்கு என்ன தண்டனை? இதுதான் ஊழலற்ற ஆட்சி செய்யப் போகிறவர்களின் இலட்சணமா?

ஏதோ திராவிடக் கட்சிகள்தான் போலீஸ் ஸ்டேசன், கலெக்டர் ஆபீஸ், தலைமைச் செயலகத்தில் நுழைந்து சிபாரிசு, நிர்ப்பந்தம் என்ற பெயரில் கெடுத்து விட்டார்கள் என்று வெகு காலமாக தில்லானா வாசித்து வருகிறார் துக்ளக் சோ. எனில் இப்போது பாஜக கும்பலும் அதேதான் என்றால் இதற்கு என்ன ராகம் வாசிக்கலாம்? போகட்டும், அம்மா நினைத்தால் அமைச்சர் பதவியைத்தான் தூக்க முடியும். மோடி நினைத்தால் அமைச்சரையே தூக்கி விடுவாரே? அந்த வகையில் மோடி ஜனநாயகத்தை விட லேடி ஜனநாயகம் ‘தேவலாம்’ அல்லவா?

தியாகராய நகர்
தி நகர் பகுதியையே தரைமட்டமாக்கி விட்டு, தி நகர் முழுவதிலும் மேலே கார் பார்க்கிங்காம், பூமிக்கு அடியில் அனைத்து கடைகளும் கொண்டு வரப்படுமாம்

‘தென் சென்னை தொகுதியில் வேறு கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் மோடியை சந்தித்து தொகுதிக்கு நல்லது செய்ய முடியாது, கணேஷன் ஜெயித்தால் எப்போது வேண்டுமானாலும் மோடியை சந்திக்க முடியும்’ என்றார் மாமி. இதை விட யாரும் மட்டமாக பேச முடியாது. அதாவது பா.ஜ.க எம்பிக்கள் அதுவும் கணேஷன் போன்று மோடியோடு நேரடியாக பேசுபவர்கள் தவிர மற்ற எம்பிக்கள் யாரும் மோடியை சந்தித்து தொகுதிகளுக்கு நல்லது செய்ய முடியாது என்றால், தென் சென்னை அல்ல இந்தியாவிற்கே மோடி ஆகாது என்றல்லவா பொருள்!

என்றாலும் மோடி அருகில் சென்று பேசுவதற்கான தகுதி கணேஷ்ஷனுக்கு தான் இருக்கிறது என்று லலிதா சுபாஷ் பேசும் போது இல.கணேசன் தன் பூணூலை பெருமையுடன் தொட்டு பார்த்திருப்பார்.

‘நடப்பது பாராளுமன்றத் தேர்தல், இதை கவுன்ஷிலர், எம்எல்ஏ தேர்தல் போன்று நினைக்காமல் இந்தியா, தேஷபக்தியை சென்டராக வைத்து ஓட் போடுங்கள்’ என்றார் மாமி. அடுத்த நிமிடமே, கோயம்பேடு மார்க்கெட்டை சுத்தப்படுத்த பிளான், சின்மயா நகர் கொசுக்களை தடை செய்ய சீனப் பெரும் சுவர் என்று இல கணேஷனின் மாஸ்டர் பிளான்களை அடுக்க ஆரம்பித்தார். அட அறிவுகெட்ட மாமியே, கொசு ஒழிப்பு, கடை சுத்தமெல்லாம் கவுன்சிலர் பார்க்கும் பொறுப்புகள்தானே, இதில் எம்பிக்கு என்ன வேலை?

ஒழியட்டுமென்றால் அடுத்ததாக ஒரு அணு குண்டை போட்டார் மாமி. அது தி.நகரை அடியோடு மாற்றி அமைப்பது. இந்த திட்டத்தை மட்டும் சுமார் 15 நிமிடங்கள், உதாரணங்கள் எல்லாம் கூறி அசத்தினார் லலிதா மாமி. அதன்படி தி நகர் பகுதியையே தரைமட்டமாக்கி விட்டு, தி நகர் முழுவதிலும் மேலே கார் பார்க்கிங்காம், பூமிக்கு அடியில் அனைத்து கடைகளும் கொண்டு வரப்படுமாம். முகமது பின் துக்ளக்கே காறித்துப்பும் இந்த மாஜிக்கல் ரியலிசத்தை உண்மை, நம்புங்கள் என்று பேச வேண்டுமென்றால் என்ன ஒரு லங்ஸ் அழுத்தம்?

யோசித்துப் பார்த்ததில் இந்த மாஜிகல் ரியலிசத்தின் பின்னணி புரிந்தது. அவாவாளுக்கு அவா அவா பிரச்சனை. மாமிகள் காரில் வந்து நல்லிக்கோ, போத்திசுக்கோ ஷாப்பிங் செய்வதில் நிறைய துன்பங்களை அடைந்திருப்பார்கள் போலும். மாநகர பேருந்துகளில் புளி மூட்டை போல வந்து போகும் மக்களுக்கு இந்த பார்க்கிங் பிரச்சினை இல்லை. இதை வைத்து தி நகரையே கார் பார்க்கிங்காக மாற்ற முடிவு செய்தார்கள் என்றால் அம்பானிக்கும், அதானிக்கும், அமெரிக்காவிற்கும் என்னவெல்லாம் செய்வார்கள்?

இறுதியாக “தேர்தல் நாளன்று காலையிலேயே நன்னா குளிச்சுண்டு, மோடி பிரதமராகனும்னு ஒரு ரூபா வெச்சு பிள்ளையாரை சேவிச்சுண்டு போய் ஓட்டு போடுங்க” என்று தன் உரையை நிறைவு ‘ஷெ’ய்தார் மாமி.

அடுத்து வேட்பாளரான இல.கணேசன் பேச வருவார் என்று அறிவித்தார்கள். அவர் எழுந்திருக்கவில்லை. தமிழ் சினிமா ஹீரோ என்ட்ரி பாடல் போல ஒரு பாட்டை போட்டு விட, மேடையே அமைதியானது. எட்டுக் கட்டையில் ஒரு விளங்காத கர்நாடக சங்கீத ராக இசையமைப்பில் ஒரு கோவில், புனித மூடைக் கிளப்பும் விதமான பாடல் அது. ஆனாலும் பக்கத்தில் பாய் ஒருவரின் புரோட்டாக் கடையில் போடப்பட்ட கலக்கியின் மணம் அதை கம்பீரத்துடன் காலி செய்தது. சுமார் ஏழெட்டு நிமிசம் அந்த கர்மத்தை கதற கதற ஒலிபரப்பினார்கள். இந்த பாட்டைக் கேட்டாவது மக்கள் தனக்கு ஓட்டு போடும் மூடுக்கு வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் இல கணேஷன் மேடையை பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் பீடி வலித்துக் கொண்டிருந்த தொழிலாளிகளெல்லாம் இதெல்லாம் ஒரு கட்சி கூட்டமா என்பதாக காலி செய்து கொண்டிருந்தார்கள்.

மேடையில் இருந்த எழுத்தாளர்களின் முகத்தை பார்க்கவேண்டுமே. விட்டால் கர்நாடக சங்கீதத்துக்கு குத்தாட்டம் போடுவார்கள் போல அவ்வளவு குஷி. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மைக்கை பிடித்த இல.கணேசன் ‘அடுத்த ஆட்சியில் தேசிய விருது வாங்க போகும் எழுத்தாளர்கள் எல்லாம் எனக்காக பிரச்சாரம் செய்ததை நினைத்து மகிழ்வதாக’ கூறி ஆரம்பித்தார். மக்கள் ஓட்டு போட வெறும் சில நூறு ரூபாய்களை கொடுக்கும் போது எழுத்தாளர்களுக்கு மட்டும் தேசிய விருது கொடுக்கப்படுகிறது என்றால் ஏர்வாடியோ, குருஸோ, ஜெயமோகனோ நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு  மோடிக்கு ஜே போட வரமாட்டார்களா என்ன?

சீ சீ இதற்குதானே ஆசைப்பட்டாய் எழுத்தாள பாலகுமாராக்களே! தனக்கு விருது கிடைக்காத விரக்தியில் இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் தான் விருதுலகமும், அறிவுலகமும் இருக்கிறது என்று புலம்பும் ஜெயமோகன் இனி உற்சாகமாக அறிவடியாள் வேலையை தொடர்வார் என்று நம்புவோமாக!

இல கணேஷன் பேச ஆரம்பித்து, காங்கிரஸ், திமுக என்று முடித்துவிட்டு மெய்ன் சப்ஜெக்டுக்கு வந்தார். நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா குஜராத் வளரவில்லை என்று சொல்லி விட்டாராம். அதனால் பாருங்கள் குஜராத் எவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கிறது என்று பல முறை அம்பலமான பொய்களையே திரும்பவும் கூறினார். அதை விட அவர் பேசியதில் முக்கியமானது காவிரி பற்றியது. காவிரி நீரை ஏன் நம்புகிறீர்கள் என்றவர், மழைநீரை சேகரியுங்கள் வேறு ஏதாவது செய்யுங்கள் அதற்கு தானே முதல்வராக இருக்கிறீர்கள். அதை விடுத்து அவன் தண்ணீர் தரவில்லை இவன் தரவில்லை என்று குற்றம் சுமத்தவா இருக்கிறீர்கள் என்று கேட்டார். ஒரு வழியாக கர்நாடக பாஜகவின் காவிரி மறுப்பை தமிழக பாஜக ஒத்துக் கொண்டிருக்கிறது. இதேதான் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சிபிஎம் கட்சியின் ஸ்டேண்டர்டு டயலாக். காவிகளும், போலிகளும் உண்மையிலேயே ‘தேசியக்’ கட்சிகள்தான்

குஜராத்தில் மோடி இப்படி குற்றம் சொல்வது இல்லை என்றும் மழை நீரை சேகரித்து தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் அனைவருக்கும் வீட்டில் பைப்பை திறந்தால் தண்ணீர் வருவது போல் செய்கிறார் என்றும் விட்டால் இன்னும் சில மாதங்களில் வீட்டிலேயே எண்ணெய், பெட்ரோல், நெய், தேன் என்று சரக்கைத் தவிர அனைத்தும் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று சொல்வார் போலும். குஜராத் கிராமப்புறங்களில் தாய்மார்கள் பல கி மீ நடந்து சுமந்து குடிநீரை எடுத்து வருவதெல்லாம் சும்மா உடற்பயிற்சிக்குத்தான் என்று இந்த கூ முட்டை பாசிஸ்டுகள் பேசினாலும் பேசுவார்கள்.

பா.ஜ.கூட்டணிக்கான மக்களின் ஆதரவை பற்றி பிற கட்சிகள் பயப்படுவதாகவும் அதன் விளைவுதான் ஜெயலலிதா பி.ஜே.பி யை விமர்சனம் செய்வது என்றும் தன் முன்னால் இருந்த காலி சேர்களை பார்த்து காரணமே இல்லாத கம்பீரத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

இல கணேசன்
சமீப காலமாக புத்தி பேதலித்துவிட்டதா என்று சந்தேகப்படும் அளவுக்கு மோடியிலிருந்து இல.கணேசன் வர எல்லா சுயம்சேவக்குகளையும் சினிமா மோகம் போட்டு தாக்குகிறது.

படித்தவர்கள் எல்லாம் ஓட்டு போடவரவேண்டும், அவர்கள் வராவிட்டால் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுபவர்கள் தவறான கட்சியை தேர்தெடுத்து விடுவார்கள் என்று கணேஷன் பேசியதிலிருந்து பாஜக ஏழைகளை இழிவுபடுத்தும் கட்சி என்பது நிலைநாட்டப்பட்டது. நடுத்தர வர்க்கம்தான் பாசிசக் கட்சிகளின் குறி என்பதை இப்போதாவது அம்மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இந்தியன் திரைப்படத்தை வைத்து பேசினார். படத்தில் வர்மக்கலையை கொண்டு ஊழலை ஒழிக்கிறார், இந்தியன் தாத்தா. நிஜத்தில் இரண்டு விரலைக் கொண்டில்லாமல் ஒரு விரலில் தாமரை பொத்தானை அழுத்துவதன் மூலம் எளிதாக ஊழலை ஒழித்து விடலாம். அதற்கு இந்தியன் தாத்தாவாக வேண்டாம் இந்தியனாக இருந்தால் போதும் என்று பஞ்ச் வைத்து முடித்தார். சமீப காலமாக புத்தி பேதலித்துவிட்டதா என்று சந்தேகப்படும் அளவுக்கு  மோடியிலிருந்து இல.கணேசன் வர எல்லா சுயம்சேவக்குகளையும் சினிமா மோகம் போட்டு தாக்குகிறது.

ஹாலிவுட் படங்களில் ஊழலை மட்டுமல்ல, போரையே ஒரு பட்டம் போட்டு ராக்கெட்டை அனுப்பித்தான் நடத்துகிறார்கள். அதையெல்லாம் கணேஷன் பார்த்தால் பாரத மாதாவை அமெரிக்காவிற்கே நாடுகடத்தலாம் என்று தீர்வு சொல்வார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் இல கணேசனுக்கு திருமணம் ஆகவில்லை, குடும்பம் குட்டி இல்லை, ஊழல் செய்ய மாட்டார், சொத்து சேர்க்க மாட்டார் என்று ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த ஒரு தொழிலாளி, “ என்ன ஒரு மாதிரி சூசகமாக பேசுகிறார்கள்” என்று சிரித்தார். என்னவென்று கேட்டேன். “கல்யாணம், குடும்பம்னு வாழறவனை நம்பலாம், சாகுற வயசுலயும் கல்யாணம் பண்ணாத தியாகின்னா அத அவன் பெருமையா வெளிய பேச கூடாது, மீறி பேசினா அவன்தான் இந்த உலகத்துலேயே பெரிய ஃபிராடு” என்றார்.

என்ன இருந்தாலும் மக்கள் மக்கள்தான். பா.ஜ.கவை நாம் இவ்வளவு வார்த்தைகளை எழுதி விளக்கும் போது ரத்தினச் சுருக்கமாக முடித்து விட்டாரே அந்த தொழிலாளி. இதுதாண்டா உழைக்கும் மக்கள் இந்துமதவெறிக்கு வைக்கும் பஞ்ச்.

–    வினவு செய்தியாளர்.

சிபிஐ சிபிஎம் போலிகளே, மானமிழந்த வாழ்க்கை வேண்டுமா?

8

மத்துப் போன ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் பிரச்சாரம் ‘சூடு’ பிடித்திருக்கிறது. மக்களை ஏமாற்றி எப்படியாவது பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் தங்களது வழக்கமான பொய்களை அள்ளி வீசி தங்களது பிரச்சாரத்தை செய்கின்றன. மக்களை ஏமாற்றுவதிலும், ஓட்டுப் பொறுக்குவதிலும் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக அரசியல் அனாதைகளாகிவிட்ட போலி கம்யூனிஸ்டுகளும் தங்களது ‘கொள்கைகளைப்’ பிரச்சாரம் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் இந்த, சிபிஎம் – சிபிஐ கூட்டுக் களவாணிகளால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஆர்.விசுவநாதன் அவர்களின் சொத்து மதிப்பு 1 கோடியே 32 இலட்சம் என தனது வேட்பு மனுவில் தெரிவித்திருக்கிறார். இந்த ‘பாட்டாளி’ வர்க்கப் போராளிகள் தான் முதலாளித்துவத்தை ஒழிக்கக் கிளம்பியுள்ள ’காம்ரேடுகள்’. இதில் ஓட்டுக் கட்சிகளுக்குத் தாங்கள் தான் மாற்று என்ற பெருமை வேறு. இதைச் சொல்ல இவர்களுக்கு வெட்கமே இல்லை போலிருக்கிறது.

சி.பி.ஐ - சி.பி.எம்புதுச்சேரியில் மற்ற ஓட்டுக் கட்சிகளை மிஞ்சும் வகையில், ஓட்டுப் பொறுக்குவதில் ஒருபடி மேலே சென்றுவிட்டனர் இந்தப் போலிகள். மற்ற எல்லா கட்சிகளும் தாங்களே சொந்தமாக தயாரித்த பாடல்களை – அவை சினிமா மெட்டை சுட்டது என்றாலும் வசனங்கள் அவர்களுடையது -, ஒலிபரப்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்களோ தங்களது பிரச்சார வாகனத்தில், எங்களது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தயாரித்த பாடல்களில் “நான் உலகம்” பாடல் கேசட்டில் உள்ள “மானத்தை இழந்து வாழ்க்கை வேண்டுமா?” என்ற பாடலை ஒலிபரப்பிக் கொண்டே ஓட்டுப் பிச்சை கேட்டு வலம் வந்தனர். அந்தப் பாடல் தாங்கள் இறங்கியுள்ள ஓட்டுப் பொறுக்கும் போலி ஜனநாயகத்தை விமர்சித்து தங்களையே அம்பலப்படுத்துகிறது என்ற உணர்வின்றி பொதி சுமக்கும் கழுதைகள் போல பாட்டை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட நமது தோழர்கள் அந்த வாகனத்தை நிறுத்தி “இது எங்களது அமைப்பின் பாடல்கள்; எங்கள் அனுமதியின்றி எப்படி நீங்கள் பிரச்சாரத்திற்கு உபயோகிக்கலாம்?” எனக் கேட்டு உடனடியாக நிறுத்தச் செய்தனர்.

அரசியல் நாகரிகமோ நேர்மையோ கொஞ்சமும் இல்லாமல், ”தோழர்களே, நீங்களும் கம்யூனிஸ்டு தான்; நாங்களும் கம்யூனிஸ்டு தான். நம்ம பாட்டு தானே?” என தனது செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்காமல் அதை நியாயப்படுத்தும் விதமாக பேசி நம்மைப் பற்றி ஏதும் தெரியாதவர்கள் போல நடித்தனர்.

“நீங்களும் நாங்களும் அடிப்படையிலேயே வேறானவர்கள். நீங்கள் கம்யூனிசக் கொள்கைகளை கைவிட்டு விட்டு ஓட்டுப் பொறுக்குவதில் குறியாக உள்ளீர்கள், ஆனால், நாங்களோ கம்யூனிசக் கொள்கைகளின் அடிப்படையில், இது போலி ஜனநாயக தேர்தல் என்பதை அம்பலப்படுத்தி, இந்த மக்கள் விரோத அரசமைப்பை தகர்த்து புதிய ஜனநாயக அரசை நிறுவ புரட்சிக்கு மக்களை அணிதிரட்டும் விதமாக தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். எனவே, நீங்களும் நாங்களும் ஒன்றல்ல. அதனால், எங்கள் பாட்டை நீங்கள் உபயோகிக்கக் கூடாது” என எச்சரித்து வந்துள்ளனர். தனது வயிற்றுப் பிழைப்புக்காக உடலை விற்கும் விபச்சாரியிடம் உள்ள நேர்மை கூட கட்சியை வைத்துப் பிழைப்பு நடத்தும் இந்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. தனது பிழைப்புக்காக அடுத்தவர்களுடைய அதுவும் எதிர்ப்பவர்களுடைய உழைப்பைத் திருடும் கேடுகெட்டவர்களாக மாறியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களது 12 மணிநேர பணிநேரத்தைப் 10 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது, அதற்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, “இந்தக் கோரிக்கை வெற்றி பெற வேண்டுமெனில், பணி நிரந்தரம் என்ற கோரிக்கையைப் பிரதானமாக வைத்துப் போராட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு போராடினால், தற்போதைய 12 மணி நேர பணி நேரம் 8 மணிநேரமாக மாறிவிடும்” என சொன்னபோது, நாம் விளக்கியதைப் புரிந்துகொண்டு நாம் சொல்வது தான் சரி என்று அந்தத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தங்களது கட்டுப்பாட்டில் உள்ள சங்கத்தில், தங்கள் தலைமை தங்களது தொழிலாளர்களாலேயே கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சிபிஐ-யின் தொழிற்சங்க அமைப்பான ஏஐடியுசி யின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் அபிஷேகம், “தம்பி, உன் வயது என் அனுபவம். நீங்க இப்போ தான் சங்கம் ஆரம்பிச்சுருக்கீங்க. எங்க கட்சிக்கு 40 ஆண்டு கால அனுபவம் இருக்கு. உங்களுக்கு அனுபவம் போதாது” என்று பிரச்சினையின் மைய விசயங்களை விட்டு விட்டு நம்மை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்.

இன்று அத்தொழிலாளர்கள் வேலையை விட்டு தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். பழுத்த அனுபவம் உள்ள போலி கம்யூனிஸ்டு சங்கமோ தனது வழக்கமான சட்டவாத செக்குமாட்டுப் பாதையில் சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததைத் தவிர வேறெந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், இதே போல் தேஜாஸ் நெட்வொர்க் என்ற தொழிற்சாலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களாக 8,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் களத்திலும், சட்டரீதியாகவும் எதிர்கொண்டதால் அத்தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, இன்று 20,000 முதல் 25,000 ரூபாய் சம்பளம் பெறுவதற்கு, அனுபவமே ’இல்லாத’ எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வழிகாட்டுதலில் சாதித்துள்ளனர்.

அதன் பிறகு, கடந்த 4 மாதங்களுக்கு முன், சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களிடம் ஒப்படைத்ததற்கு, உச்சநீதி மன்றத்தில் சுப்ரமணிய சாமியுடன் சேர்ந்து, பார்ப்பன பாசிச ஜெயலலிதா சதி செய்ததை அம்பலப்படுத்தி பகுதியில் பிரச்சாரம் செய்த எங்களது தோழர்கள் மீது அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர், தனது அடியாட்களுடன், தானே களத்தில் இறங்கி ரவுடி போல கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதல் ஜனநாயக சக்திகளுக்கு விடப்பட்ட சவால் என்பதை உணர்ந்து, இந்தத் தாக்குதலை கண்டிக்கின்ற வகையிலே பகுதியில் உள்ள சிபிஐ எம்.எல் கட்சியோடு, பெரியாரிய அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் கூட்டமைப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த சிபிஐ, சிபிஎம் கட்சிகளிடம் சென்று அவர்கள் பேசிய போது, அப்போதும் பிரச்சினையின் தன்மையைப் பற்றி கவலை கொள்ளாமல், “இது போன்ற அமைப்பு பகுதியில் உள்ளதா?” என்றும், “இப்படிப்பட்ட சம்பவம் நடந்ததா” என்றும் கேள்வி கேட்டு நம்மை சிறுமைப் படுத்துவதில் குறியாக இருந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், தங்களது அம்மாவுடனான கூட்டு பஜனைக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடாது என்ற திரு’ஓட்டு’க் கணக்கை எண்ணி அதை வெளியில் சொல்லாமல் சப்பை கட்டு கட்டினர்.

மேலும், இந்தப் பிரச்சினையையொட்டி பகுதியில் சுவரொட்டி பிரச்சாரம் செய்த போது, தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொண்ட சிபிஎம் கட்சியின் திருபுவனை தொகுதி பொறுப்பாளர், “நாங்க தான் அடிச்சோம்னு அதிமுககாரங்க கேக்குறாங்க. நாளக்கி எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு அவங்க கிட்ட போயி சீட்டு கேட்க முடியும். அதனால நீங்க அருவா சுத்தி போட்டு போஸ்டர் போடாதீங்க, இல்லையின்னா உங்க சின்னத்த மாத்துங்க” என்றவரிடம், “அரிவாள் சுத்தியல் என்பது உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு பொதுவானது. யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது; நாங்க அத மாத்திக்கவும் முடியாது” என்று விளக்கினாலும், “அதெல்லாம் கிடையாது. நீங்க போடக் கூடாதுன்னா போடக்கூடாது” என்று மிரட்டும் தொனியில் பேசியவரிடம், “நாங்கள் போடுவோம். உங்களுக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்குப் போடுங்கள் அதை நாங்கள் அங்கு பேசிக் கொள்கிறோம்” என்று சொன்னவுடன், தொலைபேசியில் தன்னுடன் பேசிய தோழரின் முகவரியைக் கேட்டு தான் நேரில் வந்து பேசிக் கொள்வதாக மிரட்டிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். ஒரு தொகுதிப் பொறுப்பாளருக்கு கம்யூனிசத்தைப் பற்றிய அறிவை இந்த அளவில் போதித்த கட்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?

இவர்கள் ஏற்கனவே, சந்தர்ப்பவாத, பிழைப்புவாதத்தில் ’மூழ்கி’, கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் ’முத்துக்களைத்’ தொலைத்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, தங்களை சீண்ட நாதியில்லாமல், தமிழகத்தில், அம்மாவிடம் ஒரு சீட்டு கூட பெற வக்கற்று, அனாதைகளாகிவிட்ட இந்தப் போலிகள், தங்களது அனுபவங்களை எவ்வாறு பொறுக்கித் தின்பதற்குப் பயன்படுத்தலாம் என்ற யோசனையிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.

இவர்கள் இது போன்று எங்களது பாடல்களைத் திருடுவது இது முதல் முறையல்ல; ஏற்கனவே தங்களது கூட்டங்களில் பல முறை பயன்படுத்தியுள்ளனர். தங்களுக்கு ஏற்றவாறு வெட்டியும் ஒட்டியும் ‘பிளேடு’ போட்டுள்ளனர். ஒவ்வொரு முறை அந்தத் திருட்டைக் கண்டித்தபோதும் அப்போதைக்கு ஏற்றுக் கொள்வது மீண்டும் திருடுவது என்பதை ஏதோ தொழில் முறைத் திருடர்கள் போல கடைபிடிக்கின்றனர். இந்தப் போலிகளை எவ்வளவு முறை கழுவிக் கழுவி ஊற்றினாலும், துடைத்துக் கொண்டு மீண்டும் தங்களை அடுத்த முறை கழுவச் சொல்லத் தயாராகின்றனர்.

இக்கட்சியில் உள்ள புதிய தோழர்கள், எப்போதும் இந்தக் கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்வதாக குறைபட்டுக் கொள்கின்றனர். இவர்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்வதற்கு இவைகள் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இது போன்ற பல விசயங்களை, புத்தகமாக எழுதும் அளவிற்கு ’சிறப்புப்’ பெற்றவர்கள் இவர்கள்.

இன்று, எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்த போலி ஜனநாயகத் தேர்தல் பாதை மக்களிடம் முழுக்க முழுக்க அம்பலப்பட்டுப் போயுள்ளது. இந்த ஓட்டுக்கட்சிகளால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை மக்களே புரிந்தும் வைத்துள்ளனர். மன்மோகனுக்கு மாற்று மோடி என்பதோ போலி கம்யூனிஸ்டுகள் என்பதோ அல்லது ஆம் ஆத்மி என்பதோ இல்லை என்பதை அவர்கள் பேசும் விசயங்களிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

எனவே, உழைக்கும் மக்களே, விவசாயிகளே, தொழிலாளர்களே, மாணவர்களே, வியாபாரிகளே, இன்று நமது தேவை நாட்டையும் மக்களையும் விலைபேசும் இந்த வியாபாரிகளிடமிருந்து காப்பாற்றும் மாற்று சக்திதான். இந்த மாற்று சக்தி வேறொரு தனி கிரகத்தில் இருக்குமோ என நாம் தேடத் தேவையில்லை. அது நமது செயல்களில் உள்ளது. சின்னத்தை மாற்றுவது என்பதில் பயன் இல்லை சிந்தனை முறையை மாற்றுவோம். அதற்கு முதல் படியாக மேலிருந்து உழைக்கும் மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்தும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். கீழிருந்து மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக அரசமைக்க நக்சல்பாரி புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்.

அதற்கு போலிகளை இனம் காணுவோம்! அவர்களைப் புறந்தள்ளுவோம்! உண்மையான புரட்சிகர அமைப்புகளில் அணி திரள்வோம்!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

காங்கிரசு பாஜக கூட்டணியில் 1984 சீக்கிய படுகொலை

1

டைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் ஊடே, பாஜக தனது இந்துமதவெறி பயங்கரவாதத்தை மறைக்க, பொய்களையும், புனையப்பட்ட புள்ளிவிவரங்களையும் அள்ளி வீசுகின்றது. ஊடகங்களில் பாஜக கோயாபல்ஸ்சுகள் மட்டையடியாக இந்த பொய்களை எட்டுக் கட்டையில் கத்துகிறார்கள்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்
சீக்கியர்களுக்கு எதிரான ‘இந்துக்களின்’ தாக்குதல் கலவரம் (புது தில்லி – 1984)

மோடியின் இரத்தவெறி முகம் 2002 குஜராத் கலவரங்களில் அம்பலப்பட்டு நாறியதைக் குறித்து பேசும் எவரையும், “1984 சீக்கியப் படுகொலைகளை நடத்திய காங்கிரசு குண்டர்கள் பற்றி ஏன் பேச மறுக்கிறாய்” என்று எதிர் கேள்வி மூலம் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் சாமர்த்தியமாக திசைதிருப்புகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உ.பியில் பிரச்சாரம் செய்த மோடி 84 சீக்கியப் படுகொலைகளில் காங்கிரசு கட்சிக்கு இருக்கும் பங்கை பற்றி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். பிடிக்க வருபவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் திருடன், அவனும் திருடனை பிடிக்க ஓடுவதாக போக்கு காட்டுவான். இதுவும் அப்படித்தான்.

மோடியைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவின் இணைய மற்றும் ஊடக பீரங்கிகள் குஜராத் படுகொலையைப் பற்றிய கேள்விகளுக்கு எதிர்வினையாக இதையே பயன்படுத்தி வருகின்றனர். பாரதிய ஜனதாவின் இந்த உத்தியை ‘அவள் மட்டும் என்ன பத்தினியா?’ என்று ஆணாதிக்க பொறுக்கிகள் பேசும் திமிர் பிடித்த வழக்காகவும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அது ஒரு பக்கம் இருக்க, காங்கிரசு நியாயப்படுத்த இயலாத காலிகளின் கும்பல் என்பதென்னவோ உண்மைதான்; ஆனால், கலவரங்களையே உண்டு செரித்து வளர்ந்து நிற்கும் இரத்த உண்ணியான ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடிக்கும் மேற்படி சவடாலின் யோக்கியதை என்ன? சீக்கியர்களை படுகொலை செய்த 84 கலவரங்களில் இவர்கள் என்ன அமைதி யாகமா நடத்தினார்கள்?

1970-களில் பஞ்சாபில் பணக்கார சீக்கிய விவசாயிகளுக்கும், இந்து முதலாளிகளுக்கும் இடையேயான பொருளாதார முரண்பாடு அரசியலிலும் பிரதிபலிக்கிறது. இரு மதத்தாரும் பஞ்சாபிகள்தான் என்றாலும் அகாலிதள் சீக்கியர்களிடையே செல்வாக்குடன் வளர்கிறது. அகாலிதளத்தை ஒடுக்க நினைத்த இந்திரா காந்தி பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாத குழுக்களை வளர்த்து விட்டார். பின்னர் பிந்தரன்வாலே இந்திரா காந்தியையே எதிர்க்கிறார். அதன் மூலம் சீக்கியர்களிடையே தான் ஒரு போராளியாக உருப்பெறலாம் என்று முனைகிறார். சீக்கியர்களின் மத அரசியலை பலர் பஞ்சாபி தேசிய இன போராட்டமாக தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் இது மதவாதமே அன்றி தேசிய இன போராட்டம் அல்ல.

சீக்கியர்களின் புனிதஸ்தலமான பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாதிகளை ஒடுக்க அரசு முனையாது என்று சீக்கியர்கள் நினைத்தார்கள். ஆனல் இறுதியில் இந்திராகாந்தி இராணுவத்தை அனுப்பி தாக்கினார். அதுதான் ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் என்று அழைக்கப்பட்டது. பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவம் நுழைந்த நிகழ்வை அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொண்டாடினர். பொற்கோவிலுக்குள் இராணுவம் நுழைந்ததைத் தொடர்ந்து வாஜ்பாயி, இந்திரா காந்தியை ’தேசம் காக்க அவதரித்தவர்’ என்று அறிவித்தார். இப்படி இதை சீக்கியர் மீதான வெற்றியாக இந்துமதவெறியர்கள் பார்த்தார்கள், கொண்டாடினார்கள்.

பா.ஜ.க தொடர்பு - பத்திரிகை செய்தி
பா.ஜ.க தொடர்பு – பத்திரிகை செய்தி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

சிறுபான்மை மதத்தவர்களை தனிமைப்படுத்தி இந்து தேசிய பொதுபுத்தியை கட்டமைக்கும் வேலையை சீக்கியர் விவகாரத்திலும், ஆர்.எஸ்.எஸ் கும்பல் தீவிரமாக முன்னெடுத்து வந்ததது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பன அறிவுத்துறையினர் இன்றைக்கு காஷ்மீரின் மீதும் அதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மீதும் எந்தளவுக்கு வெறுப்பைக் கக்கி வருகிறார்களோ அதற்கு சற்றும் குறையாத அளவுக்கு அன்று சீக்கியர்களின் மேல் வெறுப்பைக் கக்கி வந்தனர். அதில் முன்னணியில் நின்றது தற்போது பாரதிய ஜனதாவின் ‘மிதவாத’ முகமாக முதலாளித்துவ பத்திரிகைகளால் முன்னிறுத்தப்படும் எல்.கே அத்வானி.

சீக்கியர்களை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை அன்றைக்கு முதலாளித்துவ ஊடகங்களில் முன்னெடுத்துச் சென்றது யார் தெரியுமா? இன்று மோடியை தலையில் தூக்கி சுமந்து கொண்டு, நடுநிலை என்கிற போர்வையில் இந்துத்துவத்தை நைச்சியமாக வாசகர்களிடம் புகுத்தும் வேலையை செய்து கொண்டு, தேசிய ஒருமைப்பாடு குறித்தும், தேசிய மனநிலை குறித்தும் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் இதே டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தான். 82-ம் ஆண்டு அப்பத்திரிகையின் ஆசிரியர் கிரிலால் ஜெயின் எழுதிய ’சீக்கியர்களின் தலைப்பாகையை அகற்றுதல்’ (De-Turbaning of Sikhs) என்ற எடிட்டோரியல் சீக்கிய சமூகத்தின் மேல் வன்மத்தையும், வெறுப்பையும் கக்கியது.

1988-ல் தனது பதவிக் காலம் முடியும் வரை சீக்கியர்களின் மேல் வன்மத்தைக் கொட்டினார் கிரிலால் ஜெயின். இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான தீவிரவாதிகள் என்றும் நசுக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சீக்கியர்களை சித்தரித்து அவர்களை ‘இந்தியர்களுக்கு’ எதிரானவர்களாகவும் அபாயகரமானவர்களாகவும் ஊதிப் பெருக்கிக் காட்டினார். இதே டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தவரான அர்னாப் கோஸ்வாமியின் மோடி ஆதரவு கரகாட்டத்தையும் தேசிய ஒருமைப்பாட்டு சிறுபான்மையின வெறுப்பையும் நாம் இன்றும் கண்டு வருகிறோம். எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடி வராது என்பதை நாம் பொருத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைக்கு சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு விலை போய் விட்டார்கள் என்று இந்துத்துவ குண்டர்கள் செய்து வந்த நச்சுப் பிரச்சாரம் ஒருபுறம்; இன்னொரு பக்கம் ஊடகங்களின் மூலம் சீக்கியர்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் சித்தரித்தரிப்பு என்கிற பின்புலத்தில் இந்திரா காந்தி பார்ப்பன இந்து தேசியத்தின் மாண்பை காக்க 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் ’தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது’ என்கிற முகாந்திரத்தோடு பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவத்தை அனுப்பினார். அதற்கு பதிலடியாக அதே ஆண்டு அக்டோபர் 31-ம் நாள் தனது சீக்கிய பாதுகாவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே தான் உண்டாக்கி வைத்திருந்த சீக்கிய எதிர்ப்பு இந்து பொதுபுத்தியை மேலும் வளர்த்தெடுக்க ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் களமிறங்கினர். சராசரி கீழ்மட்ட காங்கிரசு தொண்டர்களுக்கு தங்கள் தலைவியைக் கொன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணமே போதுமானதாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ இந்து ராஷ்டிரம் என்கிற தங்களது எதிர்கால கனவின் அங்கமாக தெளிவான திட்டத்தோடு களத்தில் இறங்கினர்.

தில்லியின் வீதிகளெங்கும் காங்கிரசு காலிகளும் இந்துத்துவ குண்டர்களும் கைகோர்த்துக் கொண்டு சீக்கியர்களைத் தாக்கிக் கொன்றனர். இந்தியாவெங்கும் சுமார் 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். தில்லியில் மட்டும் சுமார் 3,000 சீக்கியர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். தில்லியின் திரிலோக்புரி பகுதியில் மட்டும் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட சுமார் 350 சீக்கியர்கள் கலவரக்காரர்களால் கொன்றொழிக்கப்பட்டனர். காங்கிரசு மேலிருந்து கலவரத்தை முறைப்படுத்த, இந்துத்துவ கிரிமினல்கள் கலவரங்களுக்கு ஒரு சமூக அடிப்படையை இந்து தேசிய பொதுபுத்தியில் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

கொலைகளுக்கான நோக்கத்தில் அமைப்பு ரீதியாகவே காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றுபட்டிருந்ததால் கீழ்மட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களும் காங்கிரசு காலிகளும் கைகோர்த்துக் கொண்டு வெறியாட்டம் போடுவதில் எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. கலவரம் குறித்து பின்னர் அமைக்கப்பட்ட ஜெயின் – அகர்வால் கமிட்டியின் பரிந்துரைகளின் படி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த 49 நபர்கள் மேல் வழக்குகள் பதியப்பட்டன.

வழக்குகள் பதியப்பட்டவர்களுள் ஒருவரான ராம்குமார் ஜெயின் 1980-ம் ஆண்டு தில்லியில் அடல் பிகாரி வாஜ்பாயி போட்டியிட்ட போது அவரது தேர்தல் பிரதிநிதியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலவரங்களில் நேரடியாக ஈடுபட்டது மட்டுமின்றி அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் சீக்கியப் படுகொலைகளை நியாயப்படுத்தும் விதமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து 1990-களில் டெல்லியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, நாசவேலை, கலவரம், கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த பா.ஜ.க தொண்டர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

சிறுபான்மையினர் உரிமை, வெகு மக்களின் நலன் என்கிற கேள்வி வரும் போது காங்கிரசும் பாரதிய ஜனதாவும்  சிந்திக்கும் திசை ஒன்று தான். வெள்ளைக்காரன் வந்து வெகுகாலம் கழித்து செயற்கையாகவும் போலித்தனமாகவும் கட்டப்பட்ட பார்ப்பன இந்திய தேசிய நலன் தான் இவ்விரு கட்சிகளின் அரசியல் ஆன்மாவாகும். பார்ப்பன இந்திய தேசியம் என்கிற அச்சாணி தான் இக்கட்சிகளின் தரகுத்தனத்தையும்,  அந்நியக் கைக்கூலித்தனத்தையும் சுழல வைக்கிறது.

இதில் காங்கிரசு சர்கஸ் கோமாளி முகமூடி அணிந்த கொலைகாரன் என்றால், பாரதிய ஜனதா முகமூடி தேவைப்படாத கொலைகாரன் என்பது தான் இவர்களுக்குள் உள்ள வேறுபாடு.

என்றாலும் தேர்தல் சமயங்களில் மோடியின் கொலைகார முகத்தை நியாயப்படுத்த அவ்வப்போது காங்கிரசின் 84-ம் வருடத்திய யோக்கியதையை பாரதிய ஜனதா சந்திக்கு இழுப்பது வழக்கம். அன்றைக்கு காங்கிரசு காய்ச்சிய தேசிய ஒருமைப்பாட்டு பட்டை சரக்கை வாங்கிக் குடித்து குத்தாட்டம் போட்டவர்களில் முதன்மையாக நின்றவர்கள் தாங்களே என்பதை வசதியாக மறைத்துக் கொள்கிறார்கள் பாஜக இந்துமதவெறியர்கள்.

வரலாறு என்பதே இந்துக்களின் வெற்றி வரலாறாகத்தான் எழுதப்படவேண்டும் என்பதில் பார்ப்பனிய இந்துமதவெறி பாசிஸ்டுகளுக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இல்லாவிட்டால் மராட்டியத்தில், மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்து கலவரம் செய்த வரலாற்றை முதுகுக்குப் பின் வைத்துக் கொண்டே அம்பேத்கருக்கு பாரத் ரத்னா வழங்கியது நாங்கள் தான் என்று வெட்கங்கெட்ட முறையில் சொல்ல முடியுமா? யோசித்து, திட்டமிட்டு பொய் சொல்வது வழக்கமான இந்துத்துவ பாணி என்றால், யோசிக்காமல் வாய்க்குள் வந்ததையெல்லாம் அடித்து விடுவதற்குப் பெயர் தான் மோடித்துவம்.

இறுதியாக சீக்கிய மதம் என்பது இந்துமதத்தின் ஒரு உட்பிரிவுதான்  என்று சில வருடங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் கூறியதும், சீக்கிய மக்களும், இயக்கங்களும் அதை எதிர்த்து கோபத்துடன் போராடினர். இறுதியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டது. இன்றைக்கு அகாலிதள் கட்சி பாஜகவோடு கூட்டணியில் இருப்பதாலேயே இந்துமதவெறியர்கள் சீக்கியர்களை மதிக்க கூடியவர்கள் என்பதல்ல.

ஆம். 1984 சீக்கிய மக்களை புதுதில்லியில் கொன்று குவித்த வெறியாட்டத்தை காங்கிரசோடு, இந்துமதவெறியர்களும் சேர்ந்துதான் நடத்தினார்கள். அந்த கொலைகாரர்கள்தான் இன்று குஜராத் இனப்படுகொலையை மறைக்க 84 கலவரத்திற்கு காங்கிரசு காரணம் என்று திசை திருப்புகிறார்கள். ஆனால் அந்த கலவரத்தில் காங்கிரசு குண்டர்கள் நடத்திய கொலைகளோடு, சித்தாந்த கோபத்தோடு கொலை செய்த இந்துமதவெறியர்களின் வன்முறை எந்த வித்திலும் குறைந்ததில்லை.

–    தமிழரசன்

பெண் தோழர்களை மிரட்டிய திமுக பாஜக போலீசு கூட்டணி

2

“பெண்கள்தானே” என்ற திமுக, பாஜக,அதிகாரவர்க்கத்தின் அலட்சிய நினைப்புக்கு…பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் வைத்த ஆப்பு !

சென்னை பெண்கள் விடுதலை முன்னணியைச் சார்ந்த தோழர்கள் 20.4.14 அன்று மாலை 4.30 மணி அளவில் கோயம்பேடு பின்புறம் உள்ள சிவன்கோயில் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தையும் மோடியை அம்பலப்படுத்தும் சிறுவெளியீட்டு விற்பனையும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் செய்து கொண்டு இருந்தோம். பகுதியில் மக்கள் நமது பிரச்சாரத்தை வரவேற்றார்கள். பல கேள்விகளை நம்மிடம் கேட்டு அதை தோழர்கள் விரிவாக விளக்கிய பிறகு நீங்கள் சொல்வது சரிதான் என்று ஏற்றுக் கொண்டார்கள். இப்படி முழு வீச்சாக பிரச்சாரம் நடந்துக் கொண்டு இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

திமுகவின் தேர்தல் பிரச்சாரம் மாலை 7 மணிக்கு அந்த பகுதியில் இருந்ததையொட்டி திமுகவை சார்ந்த ஒருவர் அதற்கான பகுதி ஏற்பாடுகளை செய்ய மாலை 6.30 மணிக்கு வந்த போது நமது பிரச்சாரத்தை பார்த்து மிகவும் கோபம் அடைந்தார். உடனே நம்மிடம் வந்து “இங்கு என்ன பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்று மிகவும் அதட்டலாக கேட்டதற்கு நமது தோழர்களும் “ஓட்டு போடாதீர்கள்“ என்று பிரச்சாரம் செய்கிறோம் என்றார்கள். ஓட்டு கேட்க வரும் வேட்பாளரை வரவேற்க மக்களை அழைக்க வந்தவருக்கு, அரசியல் கட்சி எல்லாம் மக்களை ஏமாற்றும் கட்சி என்று மக்களிடம் நாம் பிரச்சாரம் செய்தது அவருக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது.

“இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? “ என்று அடுத்த கேள்வியை நம்மிடம் கேட்டதற்கு, “இது ஜனநாயக நாடுதானே. எங்களுடைய கருத்தை மக்களுக்கு எடுத்து சொல்கிறோம். அவர்களும் ஏற்று கொள்கிறார்கள். அதற்கு யாருடைய அனுமதி தேவை? “ என்ற பதில் கேள்வியால் மேலும் எரிச்சலடைந்து, “நீங்கள் எல்லாரும் இங்கேயே இருங்கள் நான் போலீஸை கூப்பிடுகிறேன்” என்று கூறியபடியே போனில் போலீஸூக்கு தகவல் தந்தார். “நாமும் சரி சொல்லுங்கள்” என்று தைரியமாக அந்த இடத்தை விட்டு போகாமல் நின்று கொண்டிருந்தோம். இதை கவனித்த பகுதி மக்கள் சுமார் 100-க்கு மேற்பட்டவர்கள் நம்மை சுற்றி நின்று கொண்டார்கள்.

ஒரு 10 நிமிடத்திற்குள் 1 கான்ஸ்டபிள் மற்றும் 2 ஐஎஸ் வந்தார்கள். “இங்கு என்ன பிரச்சாரம்?“ என்று அதிகாரத்துடனும் ‘இருப்பது பெண்கள்தானே’ என்ற கேவலமான பார்வையுடனும் கேட்டனர். அதற்கு தோழர்கள் “நாங்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள். எங்கள் அமைப்பு தொடர்ந்து பல வருடங்களாக தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை செய்கிறோம்” என்றார்கள். “நீங்கள் மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறீர்களாமே?“ என்றார் ஒரு ஐஎஸ். ” ஆமாம், மோடிக்கு மட்டுமில்லை நாங்கள் எந்த கட்சிக்கும் ஓட்டு போடாதீர்கள் என்றுதான் பிரச்சாரம் செய்கிறோம்” என்றோம். “சரி சரி உங்கள் பெயர்களை சொல்லுங்கள்” என்றார் இன்னொரு ஐஎஸ். “எதற்கு எங்களுடைய பெயர்களை கேட்கிறீர்கள்” என்றதற்கு “யார் யார் பிரச்சாரம் செய்கிறீர்கள் என்பதை நான் மேலிடத்திற்கு தகவல் சொல்வதற்குதான்” என்றார்.

அதற்குள் அந்த பகுதியில் உள்ள பிஜேபிக்காரர்கள் சிலர் வந்துவிட்டார்கள். போலீசிடம் நம்முடைய தோழர்களுடைய பயமற்ற தன்மையை சகித்துக் கொள்ள மனமில்லாத அவர்கள், “இதுங்க எல்லாத்தையும் பார்த்தா சின்னதுங்க மாதிரி இருக்குதுங்க. ஆனா பல வருஷமா தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் செய்யறதா சொல்லுதுங்க?” என்று மரியாதையற்ற தொனியில் பேசினார்கள். அதற்கு தோழர்கள், “எங்கள் அமைப்பு செய்கிறது என்றுதான் சொன்னோம். நீங்க மரியாதை இல்லாமல் பேசினால் நாங்களும் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது” என்று கடுமையாக பேசியது, பெண்கள் என்றால் அடங்கி போவார்கள் என்ற அவருடைய நினைப்பை உடைப்பதாக இருந்தது.

“நீங்கள் ஏன் ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்றார் மறுபடியும் கான்ஸ்டபிள். “சார் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதாவது தண்ணீர் இல்லை, கல்வி இல்லை. மருத்துவம் இல்லை என்று கேட்டு போராடினால் மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யும் அவர்களா வருகிறார்கள். நீங்கள் தானே மக்களை விரட்டி அடிக்கிறீர்கள். ஓட்டு வாங்கும் எம்சி, எம்எல்ஏ, எம்பிக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. அதிகாரிகளாக போலீசு, கிராம அதிகாரிகள், கலெக்டர்கள் இவர்களுக்குதான் அதிகாரம் என்பதை மக்களுக்கு விளக்கமாக எடுத்து கூறி அதனால் ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறோம்” என்றும் “ஜனநாயகமே இல்லாத ஒரு நாடாக இந்தியா விளக்குவதையும் அவரிடம் கூறிய போது அவர் “எங்கம்மா எங்களுக்கே ஜனநாயகம் இல்லை“ என்று ஆதங்கப்பட்டார். பாருங்கள்  ஜனநாயமில்லை என்று இந்த ஜனநாயக அமைப்பை குண்டான்தடியால் நிலைநாட்டும் அடக்குமுறை அமைப்பான போலீசே புலம்புகிறது.

மறுகேள்வியை கேட்காமல், “சரி சரி பிரச்சாரம் முடித்துக் கொண்டு நீங்கள் புறப்படுங்கள்” என்றார். நாமும் மக்களிடம் ஜனநாயக நாட்டில் தேர்தலை புறக்கணிப்பதற்கு தடை இருப்பதை அம்பலப்படுத்தி விட்டு புறப்பட்டோம்.

சிறிது தூரம்தான் சென்று இருப்போம். கான்ஸ்டபிளும் ஒரு ஐஏஸ்-ம் (உளவுத்துறை போலிசு) இருசக்கர வாகனத்தில் நம் முன்னால் வந்து “மேடம் மேடம், இன்ஸ்பெக்டர் வந்துட்டார். அவரிடம் நீங்கள் பேச வேண்டும்” என்றனர்.

அங்கு வந்த இன்ஸ்பெக்டர் (கோவிந்தன் K11 Station), “என்ன பிரச்சாரம் ? நீங்கள் பெண்களாக இருக்கிறீர்கள் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் யார் பாதுகாப்பு?” என்று பயமுறுத்தும் தொனியிலும், “நீங்கள் பெண்களாக வரும் போது எந்த பகுதிக்கு வருகிறீர்களோ அந்த பகுதியில் உள்ள போலீசு நிலையத்தில் தகவல் சொன்னீர்கள் என்றால் போலீசு உங்களுக்கு காவல் வரும், இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருந்து சொந்தங்களை (அண்ணன், தம்பி, அப்பா, கணவர்) துணைக்கு அழைத்து வாருங்கள்” என்றார். அதற்கு தோழர்களும், “எங்களுடைய மக்கள்தான் எங்களுடைய சொந்தங்கள். அவர்கள்தான் எங்களுக்கு பாதுகாப்பு. அவர்களை மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம்” என்றதும் அதிகாரத்துடன் அட்வைசு பண்ணியே பழக்கப்பட்ட அவருடைய முகம் சுருண்டு போனது.

மேலும், “கமல் என்ன சொல்கிறார் தெரியுமா?” என்று அதட்டலாக தோழர்களிடம் கேட்டார். “தெரியவில்லையே சார் நீங்களே சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “யார் நல்லவர்கள் என்பதை கணித்து காசு வாங்காமல் ஓட்டு போடுங்கள்” என்கிறார் என்பதை சொன்னார். நாமும் விடாமல், “சார் அது அவராக சொன்னது கிடையாது தேர்தல் ஆணையத்தின் விளம்பரம்தான் அது. சரி நீங்க சொல்லுங்க சார், விவசாயம் நலிந்து போனதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், விலைவாசி உயர்வால் வாடும் மக்கள், கல்வி இல்லாத மாணவர்கள், இது மாதிரி விசயங்களுக்காக உண்மையாக கவலை கொள்ளும் வேட்பாளர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்றோம்.

அதற்கு அவர் பதில் சொல்லாமல், “நீங்கள் எப்படி அனுமதியில்லாமல் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்றார். நாமும் விடாமல்,”தமிழ்நாடு முழுக்க நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். மேலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்களும் நடத்தி வருகிறோம்” என்றோம். அதற்கு, “ஒரு வாரத்திற்கு முன் வேண்டுமானால் அப்படி நடத்தலாம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அனுமதி பெற வேண்டும்” என்றார். “தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ள நேரம் வரை நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் செய்யலாம்” என்று தோழர்களும் விடாமல் வாதிட்டார்கள்.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல்,”சரி சரி திமுகவின் பிரச்சாரம் நடக்க இருக்கு, நீங்க உடனே புறப்பட்டு போங்க” என்றார். நாமும், “சார் நாங்க புறப்பட்டு போயிட்டுதான் இருந்தோம். நீங்கதான் எங்களை நிற்க சொன்னீங்க, முதல்ல இருந்து கேள்விகளை கேட்கிறீர்கள்” என்றதும் அங்கு கூடியிருந்த மக்கள் அவருடைய மூக்கு அறுபட்டதை உணர்ந்தனர்.

பெண்கள் என்றால் பயமூட்டி பணிய வைக்கலாம் என்று அரசியல்வாதிகளுக்கும், போலீசுக்கும் இருக்கும் அதிகார திமிரைப் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் தைரியமுடன் எதிர்கொண்டு முறியடித்தது அங்கு கூடியிருந்த பகுதி மக்களுக்கு அமைப்பாக சேர வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக அமைந்தது. தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை பெண் தோழர்கள் செய்கிறார்கள் என்பது  போலீசுக்கும், திமுகவிற்கும், இந்துமதவெறியர்களுக்கும் பொறுக்க முடியாததாக இருந்திருக்கிறது. எங்களாலும்தான் இந்த போலி ஜனநாயகத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விரைவில் மக்களும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை வரும் போது இப்போது கேள்வி கேட்டவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அது வரை எங்களது பிரச்சாரமும் தொடரும்.

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை கிளை

இந்தியாவை மீட்கப் போவது நக்சல்பாரிகளே – பென்னாகரத்தில் விவிமு

1

மறுகாலனியாக்கத்திற்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்! புதிய ஜனநாயக அரசை கட்டியமைப்போம்! தெருமுனைக் கூட்டம்

16-வது பாராளுமன்ற தேர்தல் மக்கள் மத்தியில் ஜனநாயகத்தை தூக்கி நிறுத்தும் திருவிழாவாகவும், மக்களே தங்களுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உயர்ந்த வடிவம் கொண்டது இத்தேர்தல் என்றும் ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் புளுத்து நாறும் போலி ஜனநாயகத்தை மக்களுக்கானது என்று கூறி, மக்களுக்கு அதிகாரம் இல்லாத இந்த வழியிலேயே தீர்வை தேடச்சொல்லி மக்களை நிர்ப்பந்தித்து வருகின்றன.

மறுபக்கத்தில் ஓட்டுக் கட்சிகள் பல வெற்று வாக்குறுதிகளையும், கவர்ச்சி அறிக்கைகளையும் அறிவித்து மக்களை மீண்டும் புதைகுழியில் நிரந்தரமாக தள்ளும் வேலையை செய்து வருகின்றன. கேடி, கிரிமினல், கொலைகாரர்கள், கல்வி முதலாளிகள் என்று மக்கள் விரோதிகளே நல்லவர்களாக மக்கள்முன் காட்டப்பட்டு நான் வந்தால் செய்வேன் என மக்களை குழப்பி வருகின்றனர். இன்னொரு புறம் எப்போதுமே இல்லாத அளவிற்கு சாதிவெறி கட்சிகளும் வெளிப்படையாகவே, சாதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வெறியை தூண்டி வருகிறார்கள்.

இவ்வாறு மக்கள் சிந்தனையை சீரழித்து வரும் நிலையில், சீரழிந்து கிடக்கும் இந்த கட்டமைப்பை தூக்கியெறிந்து, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு என்று மக்களுக்கு அறைகூவி நம்பிக்கை நட்சத்திரமாக துணிவுடன் செயல்பட்டு வருகிறது நக்சல்பாரி அமைப்பான் விவசாயிகள் விடுதலை முன்னணி. போலி ஜனநாயக் தேர்தலை புறக்கணிப்போம் என்ற அடிப்படையில் கடந்த 15/4/2014 அன்று பென்னாகரம் நகரத்தில் கடை பிரச்சாரம் மாலை வரை செய்யப்பட்டது.

மாலை 5 மணிக்கு தெருமுனைக்கூட்டம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இறுதிவரை கலைந்து செல்லாமல் கூட்டத்தை கவனித்தனர். இக்கூட்டத்திற்கு தோழர் சிவா தலைமை தாங்கினார். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜானகிராமன் உரையாற்றினார். வட்டார செயலர் தோழர் கோபிநாத் சிறப்புரை ஆற்றினார். மக்களுக்கு அதிகாரம் வழங்கவும், தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும் அதிகாரம் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சிதான் தீர்வு. நீதிபதி, போலீசு, அதிகாரிகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்க மக்களுக்கே அதிகாரம் உண்டு. ஏழைகள் மட்டும் பாராளுமன்றத்திற்கு போக முடியும் என்ற உண்மையான ஜனநாயகத்தை நக்சல்பாரிகள் தலைமையில் படைப்போம் என்ற சிறப்புரை ஆற்றியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளி்க் செய்யவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி
9443312467
பென்னாகரம் வட்டம்
தருமபுரி மாவட்டம்

தேர்தலை புறக்கணிக்கும் நெய்வேலி தாண்டவன் குப்பம் மக்கள் !

5

டலூர் மாவட்டம் நெய்வேலி நகரப்பகுதியில் என்.எல்.சி. ஆளுகைக்கு உட்பட்ட தாண்டவன் குப்பம், ஒர்க் ஷாப் கேட், ஆட்டோ கேட், அண்ணா ஸ்டாப் ஆகிய பகுதிகளில் தற்போது சுமார் 5,000 மக்கள் வசிக்கிறார்கள். நெய்வேலி முதல் சுரங்கம் 1954-ல் உருவாக்கபட்டபோது கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே இருக்கிறார்கள்.

கனரக வாகனங்கள் வருவதற்கு முன் மண் வெட்டி, கொந்தலம் ஆகியவற்றை வைத்து சுரங்கம் வெட்டியவர்கள், தலையில் வெடிமருந்து சுமந்து சுரங்கத்தில் இறங்கியவர்கள், என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளிகளாகவும், சொசைட்டி தொழிலாளிகளாகவும் இருப்பவர்கள் இவர்கள். என்.எல்.சி.நிர்வாகம், “புல்டோசர் வைத்து குடிசைகளை இடிக்கபோகிறேன் எங்காவது ஓடிவிடுங்கள்” என மூன்று தலைமுறைகளாக இருக்கும் இம்மக்களை தொடர்ந்து மிரட்டி வருகிறது. தமிழக அரசு அதிகாரிகளோ, “என்.எல்.சி இடம் நாங்கள் என்ன செய்ய முடியும்” என கைவிரிப்பதுடன் போராடும் போது எல்லாம் பேச்சு வார்த்தை நடத்தி கபட நாடகம் ஆடுகின்றனர்.

என்.எல்.சியின் இரண்டு அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி, வெளி மாநிலங்களுக்கு போகிறது, நிரந்தர தொழிலாளிகள், என்.எல்சி. அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள் வீட்டில் நாய் ஷெட்டுக்கும் மின் விளக்கு, தடையற்ற தண்ணீர் விநியோகம் என உத்திரவாதமான சொகுசு வாழக்கைக்கு நடுவில், இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடையாது. மின்விளக்கு கிடையாது. நம்பமுடிகிறதா? ஆனால் 50 ஆண்டுகளாக இப்படித்தான் வாழ்கிறார்கள்.

“தெருவிளக்கு கொடு, ஏரியாவுக்கு குடிநீர் கொடு, ஏன் நிறுத்தினாய்” என்பதற்கான போராட்டம்தான் இத்தனை நாள் இந்த பகுதி மக்கள் நடத்தியது.

தற்போது, “எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும். மாற்று குடியிருப்பு கொடு” என 2014 தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களை தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்க என் .எல்.சி நிர்வாகம் திடீரென்று தெருவிளக்கு, குடிநீர் நிறுத்திவிடும், “அனைவரும் காலி செய்யுங்கள்” என மிரட்டும். மக்கள் சாலை மறியல் செய்வார்கள், தற்காலிகமாக மின்சாரம் வரும். மக்கள் கொக்கி போட்டு வீட்டுக்கு இழுத்து விடுகிறார்கள் என காரணம் சொல்லும். குழந்தைகள் மாணவர்கள் எப்படி வெளிச்சம் இல்லாமல் வாழ்வார்கள் என்று அதிகாரிகள் யோசிப்பதில்லை. பாம்பு விசப்பூச்சிகளுக்கு நடுவில் கட்டாயமாக வாழ வேண்டும் என மக்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள். செல்வம் என்ற மாணவன் தெருவிளக்கில் படித்து நான்கு பாடங்களில் நூறுசதவீத தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்கிறார்.

ஆகஸ்டு 15, 2013  அன்று தாண்டவன் குப்பம் பகுதி மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் அறிவித்தார்கள். குடிநீர் வேண்டும். மின்சாரம் வேண்டும் என்பதுதான் கோரிக்கை. விருத்தாசலம் வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி உறுதியளித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. பள்ளி மாணவர்கள் தேர்வு வந்து விட்டது தெருவிளக்கை அணைக்காதீர்கள் என பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கரண்ட் வரவில்லை. கஞசி காய்ச்சி நடத்தும் போராட்டத்துடன் மறியலிலும் ஈடுபட்டார்கள். மண்டபத்தில் சிறை வைக்கபட்டபோது ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் அனைவரும், “குடிநீரும்,மின்சாரம் வந்தால் நாங்கள் வீட்டுக்கு போகிறோம், இல்லை யென்றால் ஜெயிலுக்கு போகிறோம். கொலை குற்றவாளிகளுக்கு கூட இவைகள் மறுக்கப்படுவதில்லை. உழைத்து வாழும் எங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது” என காவல்துறை விடுதலை செய்த போதும் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்தனர். தற்காலிகமாக தெருவிளக்கு பொது குடிநீர் நாள் ஒன்றுக்கு அரைமணி நேரம் வரும்.  தெர்மலுக்கு ஒரு கி.மீ.மந்தாரக்குப்பம் இரண்டு கி.மீ.என சைக்கிளில், இருசக்கர வாகனத்தில் குடத்தில் தண்ணீர் எடுப்பது தினம்தோறும் நடக்கும் நிகழ்வுகள்.

1317 பேர் ரேசன் அட்டையுடன் இருப்பவர்கள். 1000 பேர் என்எல்.சியில் பணிபுரிகிறார்கள். சொசைட்டியிலும், டோசர், ஹிட்டாச்சு போன்ற கனரக வாகனங்களை இயக்குவதிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். கன்வேயர் பெல்டில் இருந்து கீழே விழும் நிலக்கரிகளை மீண்டும் சவுலால் எடுத்து போடுவது இவர்கள் தான். ஆனால் எந்தவித பாது காப்பு கவசங்களும் கிடையாது. தானே புயல் பாதிக்கபட்டபோது நுற்றுக்கணக்கான மரங்களை அப்புறப் படுத்தியவர்கள் இவர்கள் தான். சுரங்கத்தில் தண்ணீர் நிரம்பினால், கான்கிரீட் போடுவது போன்ற ஆபத்தான வேலைகளில் உயிரை பணயம் வைத்து ஈடுபடும் இந்த மக்கள் இன்று சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கிறார்கள்.

என்.எல்சி.அதிகாரிகளின் வீட்டில் பணிபுரிவது, காய்கறி, பழங்கள் தினக்கூலி என என்.எல்.சியிலேயே வாழும் பெண்கள். என்.எல்.சி நீரை தேக்கி வைக்க 40 ஏக்கர் பரப்பளவில் தோண்டப்பட்ட இரண்டு ஏரிகளும், கரியின் சாம்பலை தேக்கி வைக்க சாம்பல் ஏரி 40 ஏக்கரில் மூன்றும் வெட்டியதில் இந்த பகுதி மக்கள்தான். 1990-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு செட்டில் மெண்ட் ஓரிரு லட்சங்கள்தான், பென்சன் கிடையாது, அது போல் சொசைட்டியில் ஒப்பந்த தொழிலாளியாகவே பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இவர்களின் வாரிசுகள் தான் தாண்டவன்குப்பம் பகுதி மக்கள். இங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படித்தவர்கள் இன்று 60 வயதை தாண்டி வேலை செய்து வருகிறார்கள். தற்போது அந்த பள்ளி கூடத்தை என்.எல்சி. அகற்றி விட்டது.

என்.எல்.சியின் அங்கீகரிக்கபட்ட தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஆண்டகுருநாதன், கலியன், வீரன், அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த பண்டரிநாதன், அந்தோணி சாமி, ஏழுமலை, சுந்தரமூர்த்தி, ஜனதாதளம் செங்கால்,சி.ஜ.டி.யு சங்கிலி பாண்டியன், வேல்முருகளன் என பலர் தாண்டவன் குப்பம் பகுதியில் வாழ்ந்தவர்கள். சி.பி.எம்.தலைவர் ராமகிருஷ்ணன் இங்கு பல நாட்கள் தங்கி இருந்து கட்சி பணிகள் செய்திருக்கிறார். ஆனால் எந்த கட்சியும் இந்த மக்களுக்கு குரல் கொடுப்பதில்லை.

மாறாக என்.எல்.சி. அதிகாரிகள் குடிநீர் கேட்டு, மின்சாரம் கேட்டு போராடினால் சொசைட்டி தொழிலாளிகளை திடீரென்று பணியிலிருந்து நீக்கி மிரட்டுகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்வி ராம ஜெயம் கோரிக்கை பற்றி பேசாமல், “வாக்களியுங்கள் பிறகு பார்க்கலாம்” என மிரட்டுகிறார். அதிகாரிகள், “தெருவிளக்கு குடிநீர் தருகிறோம், தேர்தல் புறக்கணிப்பை கைவிடுங்கள்” என பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

ஆனால் அந்த மக்களின் மாற்று குடியிருப்பு கொடுங்கள் என்ற கோரிக்கை பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள். மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, பல ஆண்டுகளாக வாழ்ந்த குடிசையை இடிப்பது எப்படி என என்.எல்சி. அதிகாரிகள் இரவு பகலாக திட்டம் தீட்டுகிறார்கள். தமிழக அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர், தொழிற் சங்க தலைவர்கள், ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகள் என்.எல்.சிக்கு ஆதரவாக உள்ளார்கள்.

“எங்கள் வாழ்வுரிமைகளை பற்றி பேசாத அரசியல் கட்சிகள் வாக்கு கேட்டு எங்கள் பகுதிக்கு வரக்கூடாது. தேர்தலை புறக்கணிக்கிறோம்” என தாண்டவன் குப்பம் பகுதி மக்கள் தினம்தோறும் போராடுகிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு பீர், பிரியாணி காசு என செல்லும் இந்த நிலையில் தம் மக்களுக்காக இரவு பகலாக போராடுகின்ற இந்த பகுதி இளைஞர்களின் செயல்பாடுகள் என்.எல்சியை எதிர்த்து போராட தயங்கும் தொழிற்சங்கங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் போராட்டமாக இருக்கிறது.

தமிழர்களை உரிமைகள் அற்ற அகதிகளாக ராஜபக்சே ஈழத்தில் நடத்துகிறான். நெய்வேலியில் வாழும் இந்த மக்களுக்கு என்ன பெயர்?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம்.