Sunday, July 27, 2025
முகப்பு பதிவு பக்கம் 663

உசிலையில் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம்

3

பாராளுமன்றத்தில் நாட்டாமைத்தனம் அந்நியனுக்காம்! அதில் தலையாரித்தனம் இந்தியனுக்காம்!
இதற்கு வாக்களிப்பது கடமையா? அல்லது மடமையா?
பணத்திற்கும், மதுவுக்கும், சாதி, மத, உணர்வுக்கும் வாக்களிப்பது நாட்டுக்கும் நமது வாழ்வுக்கும் செய்யும் துரோகம்!

என்ற அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முருகன் கோவில் அருகில் 12.04.2014 அன்று மாலை 6.30 மணியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வி.வி.மு. தோழர் ரவி தலைமையில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் உசிலைவட்டார வி.வி.மு செயலாளர் தோழர் குருசாமி, உசிலை வட்டார வி.வி.மு செயற்குழு உறுப்பினர் தோழர் சந்திரபோஸ் இருவரும் துவக்க உரையும், பு.ஜ.தொ.மு மாநில அமைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சிறப்புரையும் வழங்கினார்கள். இந்தப் பொதுக்கூட்டம் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தோழர் ரவி தனது தலைமை உரையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் வந்தால் மூன்று மாதத்திற்கு நாடு முழுவதும் திருவிழா கோலம் போல் காட்சி அளிக்கும். ஆனால், இன்று இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள் சுதந்திரமாக தாம் விரும்பியபடி மக்களை சந்தித்து ஓட்டு கேட்கக் கூட அனுமதி இல்லை. வேட்பாளர்களுக்கே ஜனநாயகம் மறுக்கப்படும் சூழ்நிலையில் ஓட்டு போடுவது மக்களின் ஜனநாயகக் கடமை, எனவே ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள் என்று தேர்தல் கமிஷன் கூறுவது பம்மாத்து வேலை, ஓட்டு போடுவதால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் தீரப் போவதில்லை. தனியார்மயக் கொள்கையை ஒழித்து புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்” என்று பேசினார்.

தோழர் சந்திரபோஸ் தனது உரையில், “நேற்று வரை லஞ்சத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்த மாவட்ட ஆட்சியர் முதல் உள்ளூர் தலையாரி வரை அனைவரும் இன்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள். இவர்கள் தேர்தலை நேர்மையாக நடத்த புதிய வடிவங்களில் கேமராவுடன் இறங்கியுள்ளார்கள். லஞ்சத்தைப் பற்றியும், ஊழலைப் பற்றியும் பேசுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது” என்று பேசினார்.

தோழர் குருசாமி தனது உரையில், “இன்றைய ஓட்டுக் கட்சிகள் மக்களை சாதிரீதியாக பிளவுபடுத்தி ஒவ்வொரு சாதியின் தலைவரும் நாம்தான் ஆண்ட பரம்பரை என்று கூறி மக்களிடம் ஓட்டு வாங்கிச் சென்று ஆளும் வர்க்கத்திற்கு அடிமையாக வேலை செய்கிறார்கள். நாம் ஆண்ட பரம்பரையினர் இல்லை, இன்று வரை அடிமை பரம்பரையாகத்தான் இருக்கிறோம். எனவே, நாம் விடுதலை அடைய வேண்டுமென்றால் வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தினால்தான் விடுதலை அடைய முடியும்” என்று உழைக்கும் மக்களாகிய நாம் வர்க்கமாக ஒன்று சேருவதன் அவசியத்தை உணர்த்தி பேசினார்.

தோழர் வெற்றிவேல்செழியன் தனது சிறப்புரையில்,”மக்களுக்கு தேர்தலின்மேல் நம்பிக்கை குறைந்து விட்டது என்பதை புரிந்துகொண்டு ஓட்டு சதவீதத்தை உயர்த்தி செத்துப் போன ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க இந்த அரசுபொன்னான வாக்குகளை போடுங்கள் என்கிறது. ஆனால், பொன்னுக்கு மதிப்பு அதிகம் என்றும் தேர்தலில் எவன் அதிக மதிப்பு (பணம்) கொடுக்கிறானோ அவனுக்கு ஓட்டுப் போடுவோம் என்று மக்கள் பேசிக் கொள்கின்றனர். தேர்தலில் சரத்குமார் போன்றவர்கள் அம்மாவிற்கு ஓட்டுப் போடுங்கள், அவர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே வறுமையை ஒழித்து விடுவார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். போன சட்டமன்ற தேர்தலில் இப்படித்தான் ஜெயாவிற்கு ஓட்டு கேட்டார்கள். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணம் இரண்டு மடங்கு அதிகமாகியது. மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளானார்கள்.

மக்கள் காசு வாங்கி ஐநூறுக்கும் ஆயிரத்திற்கு ஒருமுறை ஓட்டு போடுவதன் விளைவு ஒரு வருடத்தில் 5 மடங்கு விலைவாசி அதிகமாகி சராசரியாக ஒரு குடும்பம் வருடத்திற்கு ஒரு லட்சம் வரை செலவாகிறது. ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டுவரும் கட்சிகளாகிய அ.தி.மு.கவில் ஜெ எடுப்பதுதான் முடிவு. தி.மு.க.வில் கருணாநிதி எடுப்பதுதான் முடிவு. அவர்கள் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டினாலும் அது ஒரு சடங்குதான், மாறாக உறுப்பினர்கள் முடிவு எடுப்பதில்லை. எனவே ஜனநாயகத்தை காப்பாற்றப் போவதாகக் கூறும் இன்றைய எந்த ஓட்டுக்கட்சிகளுக்குள்ளும் ஜனநாயகம் இல்லை, செத்து விட்டது. சர்வாதிகார, எதேச்சதிகார முடிவுதான் எடுக்கப்படுகிறது. ஓட்டு கேட்கும் தகுதிகளாக தற்போது பணபலம், சாதிபலம், அடியாள் (பொறுக்கியாக இருக்க வேண்டும்) பலம், இருந்தால்தான் அவர் வேட்பாளராக இருக்க தகுதியானவராக பார்க்கப்படுகிறது. இந்த தகுதி உடையவர் எந்த கட்சியில் நின்றால் ஜெயிக்கலாம் என்ற பிராண்டு வகையாகத்தான் அரசியல் கட்சியை பார்க்கிறார். இப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் இருக்கிறதா என்றால் இல்லை. ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்காத அரசு அதிகாரிகளிடமே அதிகாரம் அனைத்தும் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை (சட்டமன்றம், பாராளுமன்றம்) அரசு அதிகாரிகள் நினைத்தால் கலைத்து விடலாம். ஆனால், நாம் தேர்ந்தெடுத்த இந்த அரசியல்வாதிகளால் இந்த அரசு அதிகார அமைப்பை கலைக்க முடியாது. இந்த பாராளுமன்ற முறையே வெள்ளைக்காரன் தன்னை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட முறை. இதில் அரசு அதிகாரிகளுக்குத்தான் அதிகாரம் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

1990-க்கு முன்பு (புதிய பொருளாதார கொள்ளை அமுல்படுத்துவதற்கு முன்பு) மக்கள் நலன் என்றும், அரசியல்வாதிகளுக்கு சற்று அதிகாரம் என்றும் பெயரளவில் இருந்தது. ஆனால், 1990-க்குப் பின்பு உலக வர்த்தகக் கழகம் சொல்வது எதுவோ அதுதான் நடைமுறையாகி விட்டது. இதன்மூலம் கொஞ்சம் இருந்த பெயரளவிலான அதிகாரமும் பறிக்கப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு கைமாறும்படியான சட்டம் இயற்றப்பட்டது, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முறையும் போதாது என்று அதிகாரம் அனைத்தும் ஆணையம் என்ற மூன்றாவது பிரிவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய அரசு உலகவர்த்தகக் கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்து விட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கட்டுப்பாட்டு வாரியம் என்று அனைத்துக்கும் கட்டுப்பாடு போடப்பட்டது. இந்த கட்டுப்பாடு ஆணையம் நேரடியாக உ.வ.கழகத்தின் உலக வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும். இந்த குழுவில் பன்னாட்டு கம்பெனி உறுப்பினர்கள் உள்பட அரசு அலுவலர்களும் சேர்ந்து அமைக்கப்பட்டிருக்கும். இதில் எடுக்கும் முடிவில் இந்திய அரசோ, அரசாங்கமோ தலையிடமுடியாது. உதாரணமாக, மின்கட்டண உயர்வை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால்அது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எடுத்த முடிவு என்று சட்டமன்றத்தில் ஜெயா கூறினார். இனி அனைத்து துறைக்கும் ஆணையம் வரும்! இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளும் நாட்டின் இறையாண்மையும் பறிபோவதோடு, நாடும் மறுகாலனியாகி வருகிறது.

இந்திய நாட்டின் நிலைமை இப்படி மறுகாலனியாக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க மறுபுறம் வளர்ச்சி என்று கூறி ஓட்டு கேட்டு வருகிறார்கள். செல்போன், டி.வி, மிக்ஸி,மின்விசிறி, நூறுநாள் வேலை போன்றவைகள் அனைத்தும் வழங்கி வளர்ச்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி வருகிறார்கள். கடன் வாங்கி விவசாயம் செய்த விளைபொருளுக்கு விலையில்லை. விவசாயிகளின் வாழ்க்கையும்,சிறுதொழில்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. டெல்டா-மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் யாருடைய வளர்ச்சிக்கு? சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய மூலதனம்,நான்கு ரோடு, மெட்ரோ ரயில் திட்டம், ரியல் எஸ்டேட், விவசாயத்தை அழித்த தொழிற்சாலை, சிறப்பு பொருளாதார மண்டலம், தண்ணீர் தனியார்மயம், கனிமவளங்கள் சூறையாடல், நோக்கியாவிற்கு வரிவிலக்கு போன்றவைகள் எல்லாம் யாருடைய வளர்ச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அனைத்தும் பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்காகவும், தரகு முதலாளிகளின் கொள்ளைக்காகவும்தான் என்பதையும், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகிள்ல 90 சதவீதம் நிரந்தரமற்ற தொழிலாளிகளும், ஒரு தொழிலாளிக்கு ரூ 3,000 முதல் ரூ 4000 வரை கூலி கொடுத்து உழைப்பு சுரண்டப்படுவதும் மக்களின் வளர்ச்சிக்கா?

இந்தியநாடு பன்னாட்டு கம்பெனிகள் முதலீடு செய்வதற்கான ஒரு கம்பெனியாக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் இறையாண்மை அழிக்கப்பட்டு அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபத்திற்கு சட்டபூர்வமாக தாரை வார்க்கப்பட்டுள்ளதுதான் இந்த தேர்தல் செய்த சாதனை என்று விளக்கினார். இந்த திருப்பணிக்கு நீதிமன்றம், பத்திரிகை, போலீஸ், ராணுவம், போன்ற அனைத்தும் முதலாளிகளுக்கு சேவகம் செய்யத்தான் உள்ளது. இதற்கு மாற்றாக உண்மையான தேர்தல் வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்பதை தோழர் லெனின் அவர்களின் பார்வையிலிருந்து கூறலாம். அதாவது மக்களுக்கு இரண்டு அதிகாரம் இருக்க வேண்டும்.

  1. மக்களின் தேவைக்காக கோரிக்கை வைப்பது!
  2. கோரிக்கை நிறைவேறவில்லையெனில் தண்டிப்பது அல்லது திருப்பி அழைப்பது.

அதாவது மக்கள் தேர்ந்தெடுக்கும் மக்கள் கமிட்டிக்கே அதிகாரம் இருக்க வேண்டும். கமிட்டியிடம் வைக்கும் கோரிக்கை நிறைவேற வேண்டும். இல்லையெனில் திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தேர்தல் முறைதான் நமக்கு வேண்டும். தற்போது இந்தியாவில் இருக்கும் இரட்டை ஆட்சிமுறையை அகற்றி மக்கள் கமிட்டிக்கே அதிகாரம் இருக்கும்படியான அரசு அமைக்க வேண்டும். இதில், கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும். இது முடியுமா? என்று மக்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்தியாவில் ஜனநாயகம் செத்து அழுகி வருகிறது. முதலாளித்துவ அரசும் ஆளத் தகுதி இழந்து விட்டது. இதனை அடக்கம் செய்ய ஆள் இல்லாததால் அது அரியணையில் நீடித்து இருந்து வருகிறது. எனவே, செத்து அழுகி நாறும் ஜனநாயகத்தை நீங்களும் நாங்களும் சேர்ந்து அடக்கம் செய்வோம், வாருங்கள்”

என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். இறுதியாக ம.க.இ.கவின் புரட்சிக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுக்கூட்டம் ஆரம்பிக்கும் போது தேர்தல் அதிகாரி என்று இருவர் கேமராவுடன் வந்து பொதுக்கூட்டத்தில் அமர்ந்திருந்த பொதுமக்களை ஒவ்வொருவராக படம் எடுத்தார். உடனே நமது தோழர்கள்,  “மேடையில் இருக்கும் எங்களைத்தான் நீங்கள் படம் எடுக்க வேண்டும். பொதுமக்களை படம் எடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்” என்று கேட்டார்கள். உடனே அருகிலிருந்து உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் அருகில் வந்து அந்த தேர்தல் அதிகாரியிடம், “இந்த பொதுக்கூட்டம் நடத்தும் தோழர்கள் நேர்மையானவர்கள், இது போல இவர்களிடம் நடக்க தேவையில்லை. எனவே, பொதுகூட்டத்திற்கு இடையூறு செய்யாமல் தூரத்திலிருந்து வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். அந்தத் தேர்தல் அதிகாரி வந்த வழியே திரும்பி சென்று விட்டார்.

பார்வையாளர்களில் ஒருவர், பொதுக்கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து, “மதுவும் பணமும் வாங்காமல் இவ்வளவு தன்னடக்கத்தோடு அமர்ந்திருக்காங்களே, இவர்கள்தான் கம்யூனிஸ்டுகள்” என்று கூறினார். ஒரு வியாபாரி பொதுகூட்டத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பார்த்து உற்சாகம் அடைந்து, “இந்த கட்சியில்தான் சேர வேண்டும், இதுதான் பாட்டாளி வர்க்க கட்சி, இதில் என்னை இணைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும், யாரை பார்க்க வேண்டும்” என்று ஆவலாக கேட்டார். ஒரு அரசு போக்குவரத்து நடத்துனர் பொதுக்கூட்டத்தில் தோழர் வெற்றிவேல் செழியன் உரையை தூரத்தில் கேட்டு வந்ததாக கூறி கூட்டத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பார்த்து விட்டு சென்றார்.

பொதுக்கூட்டத்திற்கு வழக்கமாய் வருபவர்களை விட அனைத்து பிரிவினரும் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், அரசுத் துறையினர் கூட்டத்திற்கு தள்ளி நின்று அதிகநேரம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பு.ஜ செய்தியாளர்
உசிலம்பட்டி

வேலையற்றோர் 90 இலட்சம் – நாக்கு வழிக்கவா தேர்தல் ?

21

தேர்தல் எனும் அபாயம் நெருங்கி வருகிறது இளைஞர்களே உஷார்…!

ன்பார்ந்த இளைஞர்களே,

பகத்சிங்நேற்று வரை நம்மை ஒரு மனுசனாக்கக்கூட மதிக்காத ஓட்டுக்கட்சியினர் இன்று வீடு தேடி வந்து ‘’ பார்த்து செய் தலைவா’’ என்று ஓட்டுப் பொறுக்க படையெடுத்து வருகிறார்கள். எமதருமை இளைஞனே, இவர்கள் வாசிக்கும் பேண்டு வாத்தியத்தில் குழம்பி ஓட்டுப் போட்டால் மாற்றம் வரும் என்று நினைக்காதே. சமூக மாற்றத்திற்காக சற்று மாத்தி யோசித்துப் பார்.

இன்று ஓட்டுக்கேட்டு வரும் ’யோக்கியவான்கள்’ நாட்டில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டிருக்கிறார்களா? ஆனால், இளைஞர்களைக் கவர வேலைவாய்ப்பு, வளர்ச்சி, முன்னேற்றம் என்று சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் அடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது.

உழைக்கும் ஆற்றல் உள்ள இளைஞர்களை உலகிலேயே அதிகம் கொண்ட நாடு இந்தியாதான். மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 54 கோடி பேர் உழைக்கத் தகுதியான இளைஞர்கள். இதில் முறையான வேலையில் இருப்பவர்கள் வெறும் 8% பேர் தான். தமிழகத்திலோ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் எண்ணிக்கை மட்டும் சுமார் 90 லட்சம். பதிவு செய்யாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் இருக்கும். ஆனால், முறையான வேலை கிடைக்கப்பெற்றவர்கள் 18 லட்சம்பேர்தான். இதை கேட்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறதில்லையா? இந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கதி என்னாவது?

தமிழகத்தில் 2 1/2 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பலாம் இல்லையா? வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள், நர்சிங் படித்து முடித்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் போராடும் போதெல்லாம் ஆட்சியில் உள்ளவர்கள் செய்த கொடுமைகளை மறந்துவிட முடியுமா? கண் தெரியாத பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தது போலீசு மிருகம். வேலையில்லாக் காலங்களில் கிடைக்கும் அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கச் சென்றவர்களை கருணையே இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்க உத்தரவிட்டது தமிழக அரசு. எத்தனை பேர்களின் மண்டையை உடைத்திருப்பார்கள், பொய் வழக்கில் எத்தனைப் பேரை சிறையில் தள்ளியிருப்பார்கள். ஆட்சியில் இருந்தவர்கள் மட்டுமல்ல, கைகட்டி வேடிக்கைப் பார்த்த பிற ஓட்டுக்கட்சியினரும் துரோகிகள்தானே. வாழ வேலை கேட்டவர்களின் வாழ்க்கையைப் பறித்த படுபாவிகள்தான் இன்று வெட்கம் இல்லாமல் மீண்டும் ஓட்டுக்கேட்டு வருகிறார்கள். நாம் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?

படித்த பட்டதாரி இளைஞர்கள் டீ க்கடைகளில், ஹோட்டல்களில் வேலை கேட்டு அலைகிறார்கள். எம்.ஏ, எம்.சி.ஏ எது படித்தாலும் மார்க்கெட்டிங் வேலைதான். அதுவும் ஒரு மாதம் தாக்குபிடிக்க முடியாது. டாக்டர், எஞ்சினியரிங் படித்தவர்கள் பியூன், வி.ஏ.ஓ, ரயில்வேயில் கலாசி வேலை ஆகியவற்றிற்கு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்காக லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கே சென்று ஆள் எடுத்த பன்னாட்டு நிறுவனங்கள் வேலைகாலி இல்லை என்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வெயிட்டிங்கில் வைத்திருக்கின்றன. அமெரிக்க கனவில் மிதந்தவர்களுக்கு அங்கேயும் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. மலேசியா, சிங்கப்பூரில் இந்திய இளைஞர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

படித்த இளைஞர்களுக்கே இதுதான் நிலை என்றால், படிக்காதவர்களின் நிலையை சொல்ல வேண்டுமா என்ன? கடுமையான உழைப்பைச் செலுத்தும் சுமை தூக்குவது, கம்பி கட்டுவது, கொத்தனார், சித்தாள், பெரியாள், பெயிண்டர் வேலைக்கும் போட்டி, தன்மானம் பார்க்காமல் கார்துடைக்கச் சென்றாலும் போட்டி. வேலையில்லை. இப்படி கோரத்தாண்டவமாடும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு யார் காரணம்? இந்த ஓட்டுப் பொறுக்கிகளும், அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டு புகுத்திய தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாசகாரக் கொள்கைகளும்தானே.

விவசாயத்தையும், சிறுதொழிலையும், பொதுத்துறை நிறுவனங்களையும் ஊக்குவித்து வளர்ப்பதன் மூலம் தான் அதிகப்படியான இளைஞர்களுக்கு வேலைகொடுக்க முடியும். வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்க முடியும். ஆனால் இவற்றையெல்லாம் அழித்து வருகிறார்கள். மேலும், தினம் ஒருவனைக் கூட்டி வந்து பெண்ணை கையைப் பிடித்துக்கொடுக்கும் மாமா வேலைசெய்யும் புரோக்கரைப் போல, ஓட்டுக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது போட்டி போட்டுக்கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகளை கூட்டி வந்தார்கள். அவர்களுக்காக திட்டம் தீட்டி, விவசாய நிலத்தை பறிமுதல் செய்து, நிலம், கரண்ட், தண்ணீ, சாலை என அடிப்படை வசதிகளை செய்து, சலுகைகளை வாரிக்கொடுத்து கார்ப்பரேட் முதலாளிகளை குளிப்பாட்டும், ஒவ்வொரு முறையும் நமக்கு இவர்கள் சொன்னது என்ன? இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு. நாட்டிற்கு வளர்ச்சி, முன்னேற்றம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமக்கு போட்டது அனைத்தும் பட்ட நாமம்.

அப்படி கூட்டி வந்த நோக்கியாவின் யோக்கியதை பாருங்கள்? லட்சக்கணக்க்கானோருக்கு வேலை, கை நிறைய சம்பளம் என்றார்கள். ஆனால், சில ஆயிரம் இளைஞர்களைத்தான் வேலைக்கு எடுத்தார்கள். சம்பளமோ வெறும் ரூ 5,000 ஆயிரம்தான். 20 வயதில் வேலைக்கு சென்ற இளைஞர்கள், இளம் பெண்கள் பலரை மூன்றே ஆண்டுகளில் கசக்கிப் பிழிந்து வெளியில் தள்ளினார்கள். இருப்பவர்களை காண்ட்ராக்ட் வேலை என்ற பெயரில் கொத்தடிமைப் போல் நடத்துகிறார்கள். குறைந்த ஆட்களை வைத்து டார்கெட்டை முடிப்பது என்ற அவர்கள் லட்சியத்திற்காக சென்சார் எந்திரத்தை ஆஃப் பண்ணி வைத்தார்கள். கல்யாணம், குடும்பம், எதிர்கால வாழ்க்கை என பல லட்சியங்களோடு வேலைக்குச் சென்ற இளம்பெண் அம்பிகாவின் கழுத்தை சென்சார் மிஷின் அறுக்க பலி கொடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய கொடூரம்.

இறுதியில் கம்பெனிக்கு நட்டம் என்று கூறி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனமோ ஒரே நாளில் பத்தாயிரம் பேரின் வேலையைப் பறித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டது. வெறும் ரூ 1,500 கோடியை மூலதனமாக போட்டு இந்நாட்டு வளங்களையும், மனித உழைப்பையும் சூறையாடி ரூ 45 ஆயிரம் கோடியை சுருட்டிய நோக்கியா, இறுதியில் நட்டம் என ஊத்திமூடி பல ஆயிரம் இளைஞர்களை நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறது. இதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு கொடுக்கும் லட்சணம். ஓட்டுப் பொறுக்கிகள் ஊதிப்பெருக்கிய வளர்ச்சியின் உண்மை முகம்.

இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்கிறார்களே, அந்த இளைஞர்களின் எதிர்காலம் பற்றி எப்போதாவது அரசு கவலைப்பட்டிருக்கிறதா? ஒரு பக்கம் வேலையில்லை, வருமானம் இல்லை. மறுபக்கம் செல்போன், லேப்டாப், டேப், துணி வகைகள், டூ வீலர்கள் என இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான நுகர்வுப் பொருட்களை மார்க்கெட்டில் குவித்து, ஓயாது விளம்பரம் செய்து எப்படியாவது வாங்க வேண்டும் என்று தூண்டுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இளைஞர்களின் வேலைக்கு வழி செய்யாத அரசு, முதலாளிகளின் பொருட்களை நம்மிடம் திணிக்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இளைஞர்களை திட்டமிட்டே சீரழிக்க டாஸ்மாக் சாராயத்தையும், சூதாட்டமான கிரிக்கெட்டை 20/20 ஐ.பி.எல் என்று இளைஞர்களுக்கேற்ப அரசே நடத்துகிறது. இந்த வலையில் சிக்கும் இளைஞர்கள் நல்ல வேலை, கவுரவமான வாழ்க்கை என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் வானம், விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் போன்ற தமிழ் சினிமாக்கள் காட்டிய வழியில் வாழ சமூக விரோதிகளாக சீரழிகிறார்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பு? இந்த அரசுதானே.!

இப்படி அன்றாடம் இளைஞர்கள் அனுபவிக்கும் வாழ்க்கைப் பிரச்சனைக்கு இதுவரை 15 முறையாக நடந்த தேர்தல்கள் தீர்வைத் தேடித்தராதபோது, இந்தத் தேர்தல் மட்டும் என்ன தீர்வைத் தந்துவிடப்போகிறது. இந்தத் தேர்தல் என்பதே அன்றாடம் நம்வாழ்வைப் பறித்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக, அவர்களால் நடத்தப்படும் சூதாட்டம்தான்.

’ஜெய் ஜக்கம்மா காசு போடாம இந்தக் கோட்டத்தாண்டி போனா ரத்தம் கக்கி செத்துடுவனு மிரட்டும்’ வித்தைக்காரனைப்போல, தேர்தலில் ஓட்டுப் போடலனா ஓட்டுரிமை போயிடும், சலுகைகள் கிடைக்காது, நோட்டாவிலாவது போடனும்னு இளைஞர்கள் மிரட்டப்படுவதாக தெரிகிறது. அப்பாவி மக்கள் வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுப்பதை மூட நம்பிக்கை என்கிறோம். எல்லாம் தெரிந்தபின்னும் நாம் ஓட்டுப் போட நினைத்தால் அதை என்னவென்று சொல்வது, அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் வேட்டாகிவிடும்.

கார்ப்பரேட் முதலாளிகளிடம் நாட்டையும், நம்மையும் அடகுவைக்கும் ஓட்டுப் பொறுக்கிகளோ, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக திட்டம்போடும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளோ நம் வாழ்க்கைப் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை. நாம் தான் போராடித் தீர்க்க வேண்டும். இளைஞர்களாகிய நாம் மட்டுமல்ல, நம்மைப்போன்றே கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கான இந்த அரசால் பாதிக்கப்படும் உழைக்கும் மக்களோடு ஒன்றுதிரள்வோம். இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். இந்த அரசமைப்பை தகர்த்தெரிவோம். உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

வாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்

17

“குற்றச்சாட்டுக்கள் வரையப்பட்ட காலத்திலிருந்து ஒரு ஆண்டுக்குள் அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட வேண்டும். வழக்குகள் தினந்தோறும் நடத்தப்பட வேண்டும். தவிர்க்க இயலாத தாமதம் ஏற்பட்டால் தாமதத்துக்கான காரணம் குறித்து சம்மந்தப்பட்ட நீதிபதி, தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்’’. இது கடந்த மார்ச் 10 அன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் குரியன் ஜோசப் அளித்த இடைக்கால தீர்ப்பு.

வாய்தா ராணி
வாய்தா ராணியால் மிரட்டி விரட்டப்பட்ட அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.

தன் மீதான வழக்கை நடத்தவிடாமல், கடந்த 17 ஆண்டுகளாக நீதித்துறையில் ‘புரட்சி” செய்து வரும் ஜெயலலிதா அம்மையாருக்கு மட்டும் இந்தத் தீர்ப்பு பொருந்தாது போலும்! இப்படி உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் கூறவில்லை என்ற போதிலும், நீதியரசர்கள் பி.எஸ்.சவுகான், செல்லமேஸ்வர் ஆகியோர் சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு 3 வாரகாலம் இடைக்காலத் தடை விதித்து அம்மாவுக்கு ஆறுதல் அளித்துள்ளார்கள்.

17 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களுர் சொத்துகுவிப்பு வழக்கை இழுத்தடித்து வரும் அம்மா வாய்தா ராணி என்றால், அவருக்கு கேட்டபடியெல்லாம் வாய்தா வழங்கிய நீதியரசர்களை வாய்தா ராஜாக்கள் என்று அழைப்பதுதானே பொருத்தம்? ஒரு கிரிமினல் வழக்கை நடத்த விடாமல் சட்டப்படியே அதனை முடக்குவது எப்படி என அம்மா ஒரு புத்தகம் எழுதினால், அதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பிக்கும் தகுதி பெற்றவர்கள் இந்த நீதியரசர்கள்தான்.

1996-ல் ஜெயா, சசி மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சோத்துக் குவித்ததாக பதியப்பட்ட வழக்கில் 1997-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செயப்பட்டு, 2001-ல் பெங்களூருக்கு மாற்றப்பட்டு, 6 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதன்பின் கடந்த 14 ஆண்டுகளாக அம்மா நடத்திய திருவிளையாடல்கள் ஓராயிரம். உதாரணத்திற்கு சில……….

  • 2001-ல் ஏற்கனவே சாட்சியமளித்த 74 சாட்சிகளில் 63 பேரை பிறழ்சாட்சியாக மாற்றியது
  • அதன்பின் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனு
  • அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு என மனு
  • நீதிபதி நியமனத்தில் முறைகேடு என மனு
  • குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய முன் அனுமதி இல்லையென்று மனு
  • ஆவணங்கள் தரக்கோரி மனு
  • மொழிபெயர்ப்பு செய்து தரக் கோரி மனு
  • மொழிபெயர்ப்பு சரியில்லை-மாற்றி தரக்கோரி மனு
  • புதிய வழக்கறிஞர் ஆஜராவதால் வாய்தா கோரி மனு
  • புதிய வழக்கறிஞர் கோப்புகளைப் படிக்க கால அவகாசம் கோரி மனு
  • 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக இலஞ்ச ஒழிப்பு போலீசு மூலம் வழக்கை மீண்டும் விசாரிக்க மனு
  • இவை அனைத்திற்கும் உயர் நீதிமன்றம், உச்ச நீதி மன்றங்களில் மேல்முறையீட்டு மனுக்கள்

இத்தனைக்கும் மேலாக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவை மிரட்டி வழக்கிலிருந்து விரட்டினார் ஜெயலலிதா. தனக்கு எதிராக அரசு வழக்கறிஞர் பவானிசிங்தான் வழக்கை நடத்தவேண்டுமென்றும், வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணாதான் விசாரிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உலகத்தில் எங்குமே கேள்விப்பட்டிராத இந்த அயோக்கியத்தனமான கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியவரும் நீதியரசர் பி.எஸ்.சவுகான்தான்.

“ஏழு கடல் ஏழு மலை தாண்டி” சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியது. உடனே அம்மையாரின் அபிமான அரசு வக்கீல் பவானிசிங், உடல்நிலை சரியில்லையென்று, பொய் மருத்துவ சான்றிதழ் கொடுத்தார். அதனை நிராகரித்து விசாரணைக்கு ஆஜராகாத நாளில் ரூ.65,000/- பவானிசிங் அபராதம் செலுத்த வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பவானிசிங் மேல்முறையீடு செய்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, இந்த வழக்கில் துவக்கம் முதலே பல நாடகங்கள் நடந்து வருவதாகக் கூறி பவானிசிங்கின் மேல்முறையீட்டை நிராகரித்தார். இப்படி கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் பச்சையாக விசயத்தை உடைத்த பிறகும், விசாரணைக்கு 3 வாரம் இடைக்காலத்தடை கொடுத்திருக்கிறார் உச்சநீதிமன்ற நீதியரசர் சவுகான். இதே நீதி அரசர் சவுகான்தான் சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் தீட்சிதர்களுக்கும் சுப்பிரமணியசாமிக்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர்.

அடுத்து நமது சென்னை உயர்நீதிமன்றம்! ஜெயா, சசி பங்குதாரர்களாக இருந்த 22 நிறுவனங்களின் சொத்துக்களுக்கு 2000-வது ஆண்டில் இணைப்பாணை (Attachment Order) விசாரணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, அவை முடக்கப்பட்டன. இதன்பின் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டு வழக்கின் விசாரணையே முடிந்து தீர்ப்பு வர உள்ளது. இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பல சொத்துகள் ஜெயலலிதாவுக்கு தொடர்பானவை அல்ல என்று கூறி அவற்றை விடுவித்திருக்கிறார். பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கின் மேல் முறையீடுகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய முடியும் என்ற போதிலும் தெரிந்தே இதை மீறியிருக்கிறார் நீதிபதி அருணா ஜெகதீசன். வழக்கை மேலும் இழுத்தடிப்பதுதான் இதன் நோக்கம். இவ்வழக்கில் ஜெயாவுக்கு “எதிராக” சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பவர் அ.தி.மு.க. அரசு வழக்கறிஞர் இன்பதுரை. இப்படியொரு வழக்கு நடந்திருப்பதே தனக்குத் தெரியாது என்று சாதிக்கிறார் சொத்துகுவிப்பு வழக்கை நடத்திவரும் பவானிசிங்.

இவை மட்டுமல்ல, சென்னையில் நடந்து வரும் வருமான வரி ஏய்ப்பு வழக்கிலும் பெங்களூரு வழக்கின் கதைதான். வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க முடியாது என்றும், இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் ஜனவரி 30-ம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன். இந்த தீர்ப்புக்குப் பின்னரும் ஏப்ரல் 10 வரை விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை. ஏப்ரல் 28 அன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று சென்னை தலைமை பெருநகர கூடுதல் மாஜிஸ்டிரேட் தட்சிணாமூர்த்தி ஏப் 10 அன்று உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையை மேலும் 4 மாதம் தள்ளி வைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனு போட்டார் ஜெ. மனு ஏப்ரல் 11 அன்று விசாரணைக்கு வந்த போது, “இனிமேலும் விசாரணையை தள்ளி வைக்க முடியாது” என்று கூறிய நீதிபதி ராதாகிருஷ்ணன் வழக்கை ஏப்ரல் 15 க்கு ஒத்தி வைக்கிறார். ஆனால் ஏப் 15 அன்று, அதாவது நாலே நாட்களில், அவர் வழங்கும் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாறிவிடுகிறது. வழக்கு விசாரணையை மேலும் 3 மாதம் நீட்டித்து உத்தரவிடுகிறார் நீதிபதி ராதாகிருஷ்ணன். 28-ம் தேதி “ஜெயலலிதா கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்” என உத்தரவிட்ட சென்னை நீதிபதி தட்சிணாமூர்த்திக்கு, மறுநாளே (ஏப் 16) சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மாற்றல் உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் மறுநாளே அந்த மாற்றல் உத்தரவு அவசரம் அவசரமாக ரத்து செயப்படுகிறது.

நீதிபதிகள் நியமனம், மாற்றம் ஆகிய அனைத்துமே மிகவும் மர்மமான முறையிலும் சந்தேகத்துக்கிடமான முறையிலும் நடைபெறுகின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், மூவர் விடுதலை குறித்து விரைவில் தீர்ப்பு வரவிருப்பதாக முறைகேடான அறிவிப்பொன்றை பொது அரங்கில் வெளியிடுகிறார். இது தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தேடும் முயற்சி என்று பச்சையாகத் தெரிந்தாலும் அவர் கவலைப்படவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் அனைத்துமே தலைமை நீதிபதியின் ஆசியுடன்தான் வழங்கப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயலலிதா மீதான வழக்குகளை அடுத்த அரசு அமையும் வரை முடிய விடாமல் இழுப்பதும், பிறகு அமையவிருக்கும் அரசாங்கத்துடன் பேரம்பேசி, எல்லா வழக்குகளுக்கும் சமாதி கட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு உதவி செய்வதும்தான், மேற்கூறிய தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நோக்கம்.

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளில் இத்தனை அயோக்கியத்தனங்கள் 17 வருடங்களாக தொடர்ந்து அரங்கேறுவதை ஜெயலலிதாவின் சாமர்த்தியம் என்று கூறிவிட முடியுமா? நீதிபதிகளின் கூட்டுக் களவாணித்தனம் இல்லாமல் இந்த சாமர்த்தியம் வெற்றி பெற்றிருக்க முடியுமா? சாதாரண மக்கள் கிடக்கட்டும், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட வேறு எத்தனை அரசியல்வாதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய கருணைப்பார்வை கிடைத்திருக்கிறது? வழக்குகளை இழுத்தடிப்பதற்கு 17 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு நீதியரசர்கள் வழங்கி வரும் இந்த ஒத்துழைப்புக்கு காரணம், பணமா அல்லது (பார்ப்பனச் சாதி) பாசமா? பெண் வழக்குரைஞரின் கையைப் பிடித்து இழுத்த நீதிபதி கங்குலியின் காலித்தனத்தையே நிரூபிக்க இயலாத போது, இதையெல்லாம் சாட்சி வைத்தா நிரூபிக்க முடியும்?

வெளிப்படையாகத் தெரிகின்ற உண்மைகளுக்கு சாட்சி எதற்கு? ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்பதும் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் சிறப்பு சேவை செய்வதும், பளிச்சென்று தெரிகிறது. குற்றவியல் சட்டங்கள் முதல் தானே வகுத்துக் கொண்ட நெறிமுறைகள் வரையிலான எதையும் நீதிபதிகளே மதிப்பதில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என்று குற்றம் சாட்டும் வழக்குரைஞர் பிரசாந்த் பூசனின் மனு உச்ச நீதிமன்றத்தில் தூங்குகிறது. உச்சநீதிமன்றம் தந்திரமாக மவுனம் சாதிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் 150-வது ஆண்டுவிழாவில் கூச்சநாச்சம் இன்றி ஜெயலலிதாவுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார் கள் நீதிபதிகள். இதுதான் நீதிமன்றத்தின் யோக்கியதை!

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின்  மீது கிளிக் செய்யவும்]

  • வாய்தாராணி ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
  • வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக் காலம் நீட்டிப்பு!
  • நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்! நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 21.04.2014 திங்கள் கிழமை
நேரம் : காலை 10.00 மணி
இடம் : மதுரை உயர்நீதிமன்றம்

நீதிமன்றத்திற்கு வெளியில் மக்கள் மன்றத்தில் நாம் நீதியைத் தேடுவோம்! போராடுவோம்!

இவண் :

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை. தொடர்புக்கு: 94434 71003

மீத்தேன்: காவிரி டெல்டாவைப் பாதுகாக்க தேர்தலை புறக்கணிப்போம் !

2
  • மீத்தேன் எடுப்பு – நிலக்கரி கொள்ளையை அனுமதிக்கும் மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம் !
  • நாட்டையும், காவிரி டெல்டாவையும் பாதுகாக்கும் – உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம் !

என்ற முழக்கத்துடன் சீர்காழி வட்டாரத்தில் மீத்தேன் எடுக்க வெறித்தனமாக குதித்துள்ள கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற அமெரிக்க பன்னாட்டு கம்பெனிக்கு எதிராக, “தேர்தலை புறக்கணிப்பதே தீர்வு” என பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தின் காவிரி பாசன விவசாய நிலங்களை குறி வைத்து ஏவப்பட்டுள்ள மீத்தேன் வாயு எடுப்பு – நிலக்கரி கொள்ளை திட்டத்தின் மூலம், 50 லட்சம் மக்களை சொந்த நாட்டில் அகதிகளாக, நாடோடிகளாக மற்றும் படுபாதக செயலில் இறங்கியுள்ளன மத்திய, மாநில அரசுகள்.

ஈராக்கிலும், ஈழத்திலும் லட்சக்கணக்கான மக்களின் மீது கொத்து குண்டுகளை வீசியெறிந்து கொன்றொழித்ததை போல காவிரி டெல்டா பாசன பகுதி மக்களின் மீது வீசி எறியப்பட்டுள்ள அணுகுண்டுதான் இந்த மீத்தேன் வாயு எடுப்புத்திட்டம்

முப்போகம் விளையும் காவிரி பாசன மருத நிலத்தையும், விவசாயத்தையும் முன்னேற்றும் வகையில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் எந்த திட்டமும் மத்திய மாநில அரசுகளால் முன்வைக்கப்பட்டது கிடையாது. ஆனால் 40 ஆண்டுகளாக, சதித்தனமாக காவிரி நதிநீர் சிக்கலை தீர்த்து வைக்காமல், நமது நிலத்தை காயவைத்து, தரிசாக்கிய அயோக்கியர்கள் வளர்ச்சி என்ற பெயரில் 1,66,710 ஏக்கர் நிலத்தை கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற பன்னாட்டு பகாசுர முதலாளிக்கு வாரிக் கொடுத்துள்ளார்கள்.

புதுவை மாநிலத்தின் பாகூர் தொடங்கி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வரையில் 1,64,819 ஏக்கர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்துக் கிடக்கும் நிலக்கரி வளத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் தாரை வார்த்துள்ளன மத்திய மாநில அரசுகள். பூமிக்கடியில் முதல் அடுக்கில் உள்ள மீத்தேன் வாயுவை எடுத்து எரிபொருளாக மாற்றுவதன் மூலம் நாகை மாவட்டத்தில் தற்போது அமைந்துள்ள ஒரு தனியார் அனல்மின் நிலையத்தையும் , அமைய உள்ள 12 தனியார் அனல்மின் நிலையங்களையும் இயக்கி, மின் உற்பத்தி செய்யப் போகிறார்களாம். இது ஒரு புறமிருக்க மீத்தேன் எரிவாயுவை, சமையல் எரிவாயுவிற்கு பதிலாக மாற்றி விற்பனை செய்ய போகிறார்களாம். 35 ஆண்டுகாலம் 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேனை உறிஞ்சிய பிறகு 65 ஆண்டுகள் நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப் போகிறார்களாம்.

நெல், கரும்பு, வாழை, எள், உளுந்து, பாசிப்பயிறு, கடலை, என்று உணவுப் பயிர்களை விளைவித்து ”சோழவளநாடு சோறுடைத்து” என்று தமிழகத்திற்கே உணவு கொடுத்த விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு, 50 லட்சம் விவசாயிகளை வெளியேற்றி விட்டு, பாலைவனத்தின் மீது நின்று செய்யும் மின் உற்பத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சகணக்கான கோடிகளை கொட்டப் போகிறது.

ஆனால் இத்திட்டத்திற்காக செழிப்பான நிலத்தில் 2000 இடங்களில் 6000 மீட்டர் ஆழம் கொண்ட துளைகளை போடபோகிறார்கள். இதற்காக நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்தி பாறைகளை துளைக்கப்போகிறார்கள். 600 வகையான ரசாயன கலவைகளை பூமிக்கடியில் செலுத்துவதால் மண்ணின் தன்மையும் மாறப்போகிறது. 1500 மீட்டருக்கு மேல் துளைப்பதால் ஏற்படும் அதிர்வுகள் புவியியல் அமைப்பையே மாற்றி, பல்லுயிர் காப்பு தன்மையை ஒழித்து இயற்கையை, அழிக்கப் போகிறார்கள்.

இயற்கை வளங்களை பன்னாட்டு முதலாளிக்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்கின்ற ஓட்டுக் கட்சிகள், அரசுத் துறைகள், அதிகாரவர்க்கத்தினர் அனைத்தையும் அம்பலப்படுத்தி, “மீத்தேன் திட்டத்தை முறியடிக்க தேர்தலை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து சீர்காழி வட்டார பகுதிகளில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி பாதிப்புக்குள்ளான திருநகரி, பழையபாளையம், கொடகாரமூலை, தாண்டவன்குளம், மாதானம், வடபாதி, தென்பாதி, தோப்புவட்டாரம் போன்ற கிராமங்களிலும் மற்றும் சீர்காழி நகரம் முழுவதிலும் உள்ள கடைகளில் வர்த்தகர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் இன்னும் பல கிராமங்களிள் தொடர்ந்து செய்து வருகிறோம்.

இந்த பிரச்சாரத்திற்காக வந்த கல்லூரி மாணவர்கள் “தங்கள் பாட திட்டத்தில் இருப்பதை போல காவிரி நதி பாயும் பூமி என்றால் செழிப்பாக இருக்கும் என்று வந்தோம், ஆனால் வறண்ட நிலத்தை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது” என்றனர்.

தற்போது மீத்தேன் திட்டத்திற்க்காக பழையபாளையம் என்ற கடலோர கிராமத்தில் துளையிடும் வேலை தொடங்கியுள்ளனர். இதனால் எற்படப்போகும் பாதிப்புகளை பற்றி அதை சுற்றியுள்ள மேற்சொன்ன கிராமங்கள் முழுவதும் வீடுவிடாக சென்று மீத்தேன் எடுப்பதால் மக்களின் வாழ்வாதாரம், விவசாய விளைநிலங்கள் பாதிக்கபடுவதற்கான காரணத்தையும் இதற்கு துணைபோகும் ஓட்டுகட்சிகள், அதிகாரிகளையும் அம்பலப்படுத்தி போலி ஜனநாயக தேர்தலுக்கு ஓட்டு போடாதிங்க என்று துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அப்போது தெருக்களில் மைய பகுதியில் கூடிய மக்களிடம் மெகா போன் மூலம் அம்பலப்படுத்தி பேசினர். இந்த பிரச்சாரத்தின் மூலம் ஆவேசமடைந்த மக்கள் “யாருக்கும் ஓட்டுபோடமாட்டோம், யாராவது ஓட்டுகேட்க வந்தா, கையில முறத்தையும், வெளக்கமாரும் எடுத்து வச்சிகிறோம்” என்று சொன்னார்கள். வயதான பாட்டி “வாங்க ஓட்டு கேட்கவா வந்து இருக்குறிங்க” என்று கோவமாக தோழர்களை பார்த்து கேட்டார். அதற்க்கு தோழர்கள் “இல்ல பாட்டியம்மா ஓட்டு போடக் கூடாது” என்று சொல்ல வந்திருக்கிறோம் என்று சொன்னவுடன் “வாங்க தங்கம்” என்று கண்னத்தை கிள்ளி “எல்லாருக்கும் உரைக்கும்படி சொல்லுங்க சாமி” என்று கூறினார்.

இந்த கிராமத்தில் விசித்திரமாக சி.பி.ஐ தலைவர் இருக்கும் தெருவில் இந்த திட்டம் மண்ணெண்ணெய் எடுக்க வந்துள்ளது என்று மக்களிடையே திசைதிருப்பப் பட்டிருக்கிறது. பிறகு தோழர்கள் கிராமம் முழுவதும் இது மீத்தேன் எடுப்பு திட்டம் என்று உண்மையை உடைத்தோம்.

அதேபோல் நகரத்தில் பிரச்சாரம் செய்யும் போது மக்கள் அதிக அளவில் நோட்டாவிற்கு தான் எங்கள் ஓட்டு என்று கூறினார்கள் ஆனால் நோட்டாவில் ஓட்டுபோட்டால் அது இந்த தேர்தலை ஏற்று கொள்வதாக அர்த்தமாகும் என்று விளக்கியவுடன் அப்படின்னா ஓட்டே போடகூடாதுன்னு சொல்லுறிங்களா? என்று கேள்வி கேட்டார்கள். பலரும் நமது பிரச்சாரத்திற்க்கு பிறகு “இந்த தேர்தல் என்பது மக்களுக்கு எதிரானது என்பதை புரிந்து கொண்டோம்” என்று கூறினார்கள்.

மீத்தேன் எடுப்பு – நிலக்கரி கொள்ளை திட்டத்தை எதிர்த்து மீண்டும் ஒரு விடுதலைப் போரை நடத்த வேண்டிய கால கட்டத்தில் கார்பரேட் முதலாளிகளுக்கும், கம்பெனிகளுக்கும் அடிபணிந்து சேவை செய்யும் எடுபிடிகளை தேர்வு செய்யும் இந்த கேடு கேட்ட தேர்தல் குறுக்கில் வந்து சதிராடுகிறது என்பதே உண்மை. இந்த உண்மையை உழைக்கும் மக்களிடத்தில் புரிய வைத்து விட்டால் சமூக மாற்றம் வெகு தொலைவில் இல்லை.

நாகை மாவட்டம் சீர்காழியில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் விடுதலை முன்னணி பிரச்சாரம்

நாகை மாவட்ட கலெக்டர் முன்பு மீத்தேன் திட்டத்தை எதிர்க்கும் திருநகரி கிராம மக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி.
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.
பேச: 98434 80587

மோடி ரஜினி சந்திப்பு – பில்டிங் மட்டுமில்ல பேஸ்மெண்டும் வீக்குதான்

17

“திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு நடந்துச்சாம் கல்யாணம்”கிறது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம ரஜினிகாந்துங்கிற நடிகருக்கு 100 சதவிகிதம் பொருந்தும் ( வடிவேலு ஹீரோவா நடிச்ச சந்திரமுகி படத்துல நிறைய பவுடர் அப்பிகிட்டு ஒருத்தரு அப்பப்போ வந்துபோவாரே அவரேதான்).. அவர் நம்மைத்தேடி வெளியே வருகிறார் என்றால் அவருடைய படம் வெளியாகப்போகிறது என்று அர்த்தம். அவரைத்தேடி யாரேனும் போகிறார்கள் என்றால் தேர்தல் வரப்போகிறது என்று பொருள்.

ரஜினி - அழகிரி சந்திப்பு
ஆறுதல்தேடி அலைந்த அழகிரியின் சந்திப்புதான் ரஜினிகாந்துக்கு கிடைத்த ஒரே ஆறுதலாக அமைந்தது

அந்த விதிப்படி சமீப காலங்களில் கோச்சடையானுக்காக அவர் வெளியே வரப்போக இருந்தார். ஆனால் எந்தக் கட்சியும் ரஜினி ஆதரவுக்காக மெனக்கெட்டதாக தெரியவில்லை. ஆட்சியில் இருந்திருந்தால் கருணாநிதியாவது ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்து ரஜினியை பக்கத்தில் உட்காரவைத்து அழகு பார்த்திருப்பார். ஜெயலலிதாவின் கணக்குப்படி அவர் பக்கத்தில் உட்காரக்கூட ரஜினிக்கு அருகதை கிடையாது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் “நான் பாஜகவுக்கு ஓட்டுபோடுவேன்” என ரஜினி சொல்லப்போக அன்றைக்குப் பிடித்தது அவர்களுக்கு தரித்திரம். அதை விரட்டவே பாஜகவுக்கு ஒரு மாமாங்கம் ஆகியிருக்கிறது, அதுவும் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவில். ரஜினியின் ரசிகர்கள் எனும் பெயரில் சில கோமாளிகள் “தலைவா நீ எப்போதான் ஆணையிடுவாய்” என போஸ்டர் ஒட்டுவார்கள். அதைத் தொடர்ந்து ஜூவி, ரிப்போர்ட்டரில் இரண்டு பக்க செய்தியும் வரும். இந்தமுறை ரஜினிக்கு அந்த பிராப்தமும் இல்லை

போஸ்டராலேயே எல்லாவற்றையும் இழந்தவரான அழகிரியின் ஆதரவை தேடி ஓடிய கட்சிகள்கூட, ரஜினியை கண்டு கொள்ளவில்லை. ஆறுதல்தேடி அலைந்த அழகிரியின் சந்திப்புதான் ரஜினிகாந்துக்கு கிடைத்த ஒரே ஆறுதலாக அமைந்தது. கோச்சடையானை ஓடவைக்க வேறுவழியே இல்லாத இந்த சூழலில் வாய்த்த “வரம்”போல ரஜினியை “வான்டனாக” வந்து சந்தித்திருக்கிறார் மோடி. சந்திப்பின்போது நாங்கள் பரஸ்பர நலன்விரும்பிகள் என சொல்லியிருக்கிறார் ரஜினி. அந்த வாசகத்தில் பொய் ஏதுமில்லை. ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை தன் படத்தில் கூடுமானவரை பிரச்சாரம் செய்பவர் ரஜினி. அவருக்கு உடம்புக்கு முடியாமல் போனதும் வாரா வாரம் போன் செய்து விசாரித்தாராம் மோடி (ஈழத்து இனப்படுகொலைகள் நடந்தபோதோ அல்லது தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதோ அவர் எத்தனை போன் செய்தார் என்றெல்லாம் கேட்பது தேசவிரோதம் என்பதை வாசகர்கள் நினைவில் வையுங்கள்).

ரஜினி - மோடி சந்திப்பு
ரஜினி அரசியல் செய்யும் வாய்ப்பை இழந்துவிட்ட ஒரு நடிகர், மோடியோ நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்ட ஒரு அரசியல்வாதி

ஆகவே இது ஒரு இயற்கையான நட்பு. அதுதான் மோடியை ஒரு தேநீருக்காக சென்னைக்கு தனிவிமானத்தில் வர வைத்திருக்கிறது. ரசிகர்களுக்கு வாக்களித்தபடி மகள் கல்யாண விருந்தைக்கூட ஏற்பாடு செய்யமுடியாத அளவுக்கு ஃப்ரீயாக இருக்கும் ரஜினியை இந்த சந்திப்புக்கு ஒத்துக்கொள்ள வைத்திருப்பதும் அதே நட்புதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரஜினி அரசியல் செய்யும் வாய்ப்பை இழந்துவிட்ட ஒரு நடிகர், மோடியோ நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்ட ஒரு அரசியல்வாதி. அதனால்தான் முன்னவர் நடிகனுக்கு அவசியமான மேக்கப்பை பொதுவெளியில் தவிர்க்கிறார், பின்னவரோ அரசியல்வாதிக்கு அவசியமற்ற அலங்காரத்துக்கு அதீத முக்கியத்துவம் தருகிறார்.

ரஜினியின் அரசியல் ஆர்வம் பல ஆண்டுகளாக பல வழிகளில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. “எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்” எனும் பாடல் வந்ததிலிருந்தே அவரது முதல்வர் முயற்சி ஆரம்பித்து விட்டதாக கருதலாம். ஜெயாவின் காலில் விழுவோர் அவரது (ஜெயா) விருப்பத்துக்கு எதிராகவே அவ்வாறு செய்வதாக நீங்கள் நம்பினால் மேற்சொன்ன வகையறா பாடல்கள் ரஜினியின் விருப்பத்துக்கு மாறாக எழுதப்பட்டிருக்கக்கூடும் என்றும் நம்பலாம். அந்த கோணத்தை விட்டுவிட்டாலும் அவரது சொந்தப்படமான பாபாவில் (கதை: ரஜினியின் கதை இலாகா) ரஜினியை விட்டால் ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் வேறு நாதியேயில்லை எனும் செய்திதான் சொல்லப்பட்டிருக்கிறது. கொஞ்சம் சகித்துக்கொண்டு அந்தப் படத்தை பார்ப்பீர்களேயானால் ரஜினியின் அரசியல் + ஆன்மீகக் கனவை நீங்கள் கண்டுணர முடியும்.

ரஜினிகாந்த்ரஜினியின் அந்த விருப்பம் ஒரு கிறுக்குத்தனமான ஆவலாகவே முடிந்திருக்கும். அதனை ஊதிப் பெருக்கி, ஒருவேளை அவருக்கு ஆதரவு இருக்குமோ என பலரையும் சந்தேகம் கொள்ளவைத்ததில் தமிழ் ஊடகங்களின் பங்கு மகத்தானது. சிரமமில்லாமல் செய்திகளை தொடர்ந்து உற்பத்தி செய்ய ரஜினி போன்ற நபர்களை பெரிய செல்வாக்குடையோராகக் காட்டி உசுப்பிவிடுவது என்பது அவர்களுக்கு அவசியம். ஸ்டைல் எனும் பெயரில் வித்தை காட்டுவதில் அவருக்கு இருந்த திறமை, பத்திரிக்கையாளர்களை கைக்குள் வைத்திருக்கும் லாவகம் என மேலும் சில தகுதிகள், அவரை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நபராக வைத்திருந்தன. அதனை தக்கவைக்க பத்திரிக்கையாளர்களை அவர் சரியாக கவனிக்கவும் செய்திருக்கிறார், ரஜினி பிரஸ் மீட்டுக்களில் கவர் விநியோகம் தாராளமாக இருக்கும் என ஊடக வட்டாரங்கள் வாயிலாக அறியமுடிகிறது. சோ ராமசாமி எனும் அரசியல் தரகனின் நட்பு (பிராமணர்களுக்கு மட்டும்.. அதர்ஸ் பிளீஸ் எக்ஸ்கியூஸ்) அவருக்கு பல பெரிய அரசியல் தலைவர்களின் தொடர்பை உருவாக்கித் தந்தது. இவை எல்லாமுமாக சேர்ந்து ரஜினி தன்னை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக நம்பும் சூழலை உருவாக்கின.

ஜெயலலிதாவின் முதல் ஆட்சிகாலத்தில் ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு செல்வதற்கு இடையூறு செய்யும் வகையில் இருந்த போலீஸ் கெடுபிடிகளைக் கண்டு கடுப்பாகியிருந்தார். அதன் வெளிப்பாடாக அப்போது இயக்குனர் மணிரத்தினம் வீட்டு பால்கனியில் வெடித்த வெங்காய வெடியைக் கண்டித்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என பேசினார். கவனியுங்கள், இந்தியாவில் நடந்த வேறு எந்த குண்டு வெடிப்பு பற்றியோ கலவரம் பற்றியோ அவருக்கு அறச்சீற்றம் வரவில்லை. அதன் தொடர்ச்சியாக 1996-ல் ஜெயலலிதா தோற்கடிக்கப்படவேண்டும் என வெளிப்படையாக அறிவித்தார். அதிமுக அந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்தது.

அவர் அப்படி அறிவிக்காமல் இருந்திருந்தாலும் அப்போது அதிமுக படுதோல்வியடைந்திருக்கும், மக்களுக்கு ஜெயா கும்பலின் மீது இருந்த வெறுப்பு அத்தகையது. அன்று காக்கை உட்காரும் முன்பே பனம்பழம் விழுந்து விட்டது. இப்படி எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோதுதான் லதா ரஜினிக்கு தன் கணவரை ஒரு பெருமுதலீடாக, பிராண்டாக மாற்றும் யோசனை முளைக்கிறது. பாபா படம் தயாராகும்போது ரஜினியின் பெயரையோ உருவத்தையோ இனி யாரும் பயன்படுத்தக்கூடாது என சட்டபூர்வ எச்சரிக்கையை விடுக்கிறார் லதா. ரஜினி பெயரில் பலவகையான பொருட்களை விற்பனை செய்யும் திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது. இந்த வியாபாரம் பாபா படத்தின் வெற்றியை நம்பியே இருந்தது, பாபாவுக்கு தரப்பட்ட அதீத ஊடக வெளிச்சம் ரஜினியின் சுற்றத்துக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாபா திரைப்படம்
பாபா கதை ரஜினியின் ”சொந்தக்கதை” என்பதால் படம் படுகேவலமான தோல்வியை சந்திக்கிறது.

துரதிருஷ்டவசமாக, பாபா கதை ரஜினியின் ”சொந்தக்கதை” என்பதால் படம் படுகேவலமான தோல்வியை சந்திக்கிறது. அதன் தொடர்ச்சியாக மற்ற வியாபார திட்டங்களும் ஊற்றி மூடப்படுகின்றன. போதும் போதாத்தற்கு பாபா படத்தை பார்ப்பதற்காகவே அமெரிக்காவில் இருந்து வந்த ரஜினியின் ஆன்மீக குரு படம் வெளியாவதற்கு முதல்நாள் வைகுண்ட பதவியடைந்து செண்டிமெண்ட் ஷாக் கொடுத்தார். அனேகமாக ரஜினியை நம்பி ஒரு கட்சி தொடங்க முதலீடு செய்வது முட்டாள்தனமானது எனும் முடிவுக்கு லதா அப்போதுதான் வந்திருக்கவேண்டும் என கருதுகிறேன் (ரஜினியின் முகத்தை வைத்து தொப்பி டி சர்ட்கூட விற்க முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த காலமல்லவா அது).

ஆனாலும் இதனை வெளிப்படையாக அறிவிக்க முடியாத சூழல் வெளியே இருந்தது. 1996 தேர்தலில் ரஜினி செல்வாக்கு மிக்கவர் எனும் மாயத்தோற்றத்தை அவரது ரசிகர்கள் நம்ப ஆரம்பிக்கிறார்கள். அதே சமயத்தில் ஏனைய பெரிய கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள்கூட பெரும் அளவில் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கட்சியை உருவாக்கும் விருப்பத்தை தோற்றுவிக்கிறது. குறைந்தபட்சம் ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் ஓடவேனும் ரசிகர் மன்றங்கள் எனும் மூடர் கூடாரங்கள் தேவை என்பதால் அவரது சுற்றம் திட்டங்களில் சிறு மாறுதல்களைச் செய்கிறது. அதுவரை அரசியலை நோக்கிய நகர்வுக்கு சினிமாவை உபயோகித்த ரஜினி அதன் பிறகு சினிமா வெற்றிக்காக அரசியலை பயன்படுத்தும் திட்டத்தை மேற்கொள்கிறார்.

பாபாவுக்குப் பிறகு “ரஜினியே இந்த மண்னின் கதிமோட்சம்” என் சொல்லும் காட்சிகள் அவரது எந்தப் படத்திலும் வரவில்லை. இன்னும் ஒருபடி மேலேபோய் “ஏதோ ஒரு படத்தில் நான் அரசியலுக்கு வருவதாக சொன்னதெல்லாம் யாரோ எழுதித்தந்த வசனம்தானேயன்றி எனது சொந்தக் கருத்தல்ல” என்றார். ஜெயாவை “தைரியலட்சுமி” என புகழ்ந்தார், தன்னை படுகேவலமாக திட்டிய ராமதாஸ் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து சமரசமானார். ஆனாலும் அவரது சினிமா வெளியாகவிருக்கும் தருணங்களில் மட்டும் ரசிகர்களை சந்திப்பது தொடர்ந்தது. அப்போதெல்லாம் ரஜினி தமிழக அரசியல் நிலைமையை “உன்னிப்பாக” கேட்டறிவதாக புலனாய்வு இதழ்களின் பஜனையும் தொடர்ந்தது. உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட பிறகு அவர் கட்டாய விஆர்எஸ் வாங்கிக்கொள்ளும் உத்தேசத்தில் இருப்பது தெரிகிறது. இப்படியாக முடிவுக்கு வரவிருந்த ஒரு சகாப்தத்தை மீட்டு உயிர் கொடுக்கத்தான் மோடி வந்திருக்கிறார்.

மோடி மோசடி
மோடியும் பாஜகவும் இப்போது நியாயமாக துவங்கியிருக்க வேண்டிய வேலை அமைச்சரவை இலாகா பிரிப்பதுதான்.

இந்தியாவில் கருத்துக் கணிப்பு நடத்தும் பத்திரிக்கைகள் மோடிக்கு 270 சீட்டுக்களை ஒதுக்கிவைத்துவிட்டு மற்ற இடங்களில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என தெரிந்துகொள்ள மட்டும்தான் கருத்துக் கணிப்பை நடத்துகின்றன. அமெரிக்கா தனது மோடி விரோத அதிகாரிகளை மாற்றுவதாக செய்தி வருகிறது (நான்சி பாவெல் ராஜினாமா).. சீன அரசே மோடியின் கேள்விகளுக்கு பவ்யமாக பதில் சொல்வதாக தமிழிசை சவுந்தர்ராஜன் சொல்கிறார். “மோடி வந்தால் வளர்ச்சி வந்துவிடும்” எனும் எஃப்எம் விளம்பரத்தால் லாட்ஜ் டாக்டர்களும் அமுக்ரா கிழங்கு விவசாயிகளும் தொழில் படுத்துவிடுமோ எனும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். “நீங்கள் இன்னும் பிரதமராகவில்லை” என மோடியை நம்பவைப்பதற்கே அவரது சுற்றத்தார் கடுமையாக சிரமப்படுவதாகத் தகவல். இந்தியாவின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் கார்பரேட் முதலாளிகளும் இந்தியாவின் சிந்தனையை தீர்மானிக்கும் ஊடக அடிமைகளும் அந்த அளவுக்கு மோடிக்காக மெய்வருத்தி வேலை செய்கின்றனர்.

நிலைமை இப்படியிருக்கையில் மோடியும் பாஜகவும் இப்போது நியாயமாக துவங்கியிருக்க வேண்டிய வேலை அமைச்சரவை இலாகா பிரிப்பதுதான். ஆனால் இப்போதுதான் பாஜக (அதாவது தற்சமயத்துக்கு மோடி) அதிகம் பயப்படுவதாகத் தெரிகிறது.

ராஜ்நாத்சிங் “ஒரேயொருமுறை எங்களை மன்னித்து வாய்ப்பு தாருங்கள்” என முஸ்லீம் மக்களிடம் கெஞ்சுகிறார். அடுத்த சில நாட்களில் “முஸ்லீம்களை பழிவாங்க எங்களுக்கு ஓட்டுபோடுங்கள்” என மோடியின் மாமா கம் அடியாள் அமித்ஷா உபியில் பிரச்சாரம் செய்கிறார். மத்திய அரசு சிறுபான்மை சமூக மாணவர்கள் ஐம்பத்தைந்தாயிரம் பேருக்கு ஒதுக்கிய கல்வி உதவித்தொகைகளை இன்னமும் பயன்படுத்த மனமில்லாத மோடியின் குஜராத் முகம், கிருஷ்ணகிரியில் அவரது உரையை ஒரு முஸ்லீம் பெண்ணை வைத்து மொழிபெயர்க்க வைக்கிறது.

மோடி ரஜினியை சந்தித்தது என்பது இதன் நீட்சிதான்.

படுகொலைகளும் பொய்களும்தான் மோடி போன்ற ஃபாசிஸ்டுகளின் ஆயுதம். ஆனால் அவர்களின் வாழ்நாள் சொத்தென்பது அச்சம்தான். இத்தனை ஆண்டுகாலமாக அவர் உருவாக்கிய பொய்களும் மறைத்து வைத்த உண்மைகளும் அவரை நிம்மதியாக இருக்கவிடாது. ஒரு பிரம்மச்சர்ய பொய் அம்பலமானதையே எதிர்கொள்ளத் திராணியற்ற கோழையான மோடிக்கு, ஒட்டுமொத்த உண்மைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் எக்காலத்திலும் வராது. சிறையில் இருக்கும் சகாக்கள் மட்டுமல்ல அவருக்காக பெண்களை வேவுபார்த்த கங்காணி போலீஸ்காரர்கள்கூட மோடிக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம்.

கட்சியின் எதிரிகளை ஓரளவுக்கு தட்டிவைத்தாலும் அவர்களை மொத்தமாக ஒழிக்க அவரால் முடியாது. அதனை மோடிக்கு உணர்த்தத்தான் எதிரிகள் அவ்வப்போது மோடியின் தலையில் கொட்டுகிறார்கள். அதன் உட்பொருள் உன் தலை எங்கள் கைக்கெட்டும் தொலைவில்தான் இருக்கிறது எனும் எச்சரிக்கைதான். மோடியும் அதனை புரிந்துகொள்ள இயலாத அடிமுட்டாள் அல்ல. மோடியே கேசுபாய் படேலை ஒழிக்க அத்வானி கும்பலால் ஏவிவிடப்பட்ட குட்டிச்சாத்தான்தான். இப்போது அதுவே ஏவியவர் மீது பாய்ந்துவிட்டது. தனது நலனுக்காக மோடியும் பல குட்டிச்சாத்தான்களை ஏவியவர்தான். ஆகவே அத்வானியின் கதி தனக்கும் வரும் என்பது மோடிக்குத் தெரியும்.

இந்த எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கவல்ல சர்வரோக நிவாரணி பிரதமர் பதவிதான். அதுவும் இது மோடிக்கு கடைசி வாய்ப்பு. முதலாளிகளைப் பொருத்தவரை, அவர்களுக்கு மோடி ஒன்றும் கடைசி வாய்ப்பல்ல, அவர்களுக்கு இன்னொரு ஃபாசிஸ்ட் கிடைப்பதும் கடினமானதல்ல. ஆகவே என்ன செய்தேனும் இம்முறை பிரதமராகிவிடவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் மோடி. அதற்கான சிறிய வாய்ப்பைக்கூட அவர் தவறவிடத் தயாராயில்லை. அந்த நடுக்கத்தைத்தான் ரஜினி வீட்டு வாசலில் நீங்களும் நானும் மோடியின் முகத்தில் பார்த்தோம். மோடி நடிகர் விஜய்யை சந்தித்தபோது நடுக்கத்தோடு லைட்டாக நாற்றமும் வர ஆரம்பித்துவிட்டது.

விஜய் சந்திப்புகள்
மோடியை சந்திக்க தான் முயற்சிக்கவில்லையென்றும் மோடிதான் தன்னை சந்திக்க விரும்பியதாகவும் “மிக அடக்கமாக” குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் விஜய்

நிலவரம் இப்படி கலவரமாகிக் கொண்டிருக்கும்போது நம் ஊடகங்கள் அதனை சமாளிக்க பெரும்பாடுபடுகின்றன. தன்னை சந்தித்த பல கட்சிக்காரர்களுக்கு, ரஜினி சொன்ன பதிலுக்கும் மோடிக்கு சொன்ன பதிலுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதால் இது மோடிக்கு ஆதரவான வாய்ஸ்தான் என கண்டுபிடித்திருக்கிறது தினமணி. வீட்டு வாசலில் ரஜினியின் உடல்மொழி அதனை ஊர்ஜிதம் செய்வதாகவும் சொல்லிவிட்டது தினமணி. ரஜினியின் முகம் தாமரை போல மலர்ந்திருந்தையும் தினமணி ஒரு ஆதாரமாக காட்டியிருக்கும். ஆனால் பக்கத்திலேயே மோடி முகம் கருவாட்டைப்போல வறண்டுபோய் காட்சி தந்ததால் சர்ச்சைக்குரிய அந்த ஆதாரம் மறைக்கப்பட்டுவிட்டது.

வைத்தி இவ்வளவு இறங்கியதைப் பார்த்து ஜூவி படுத்தேவிட்டது. “இது மோடிக்கு ரஜினி கொடுத்த மனப்பூர்வமான ஆதரவு, தேர்தல் நெருங்கியதும் அவர் பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்” என வூடு கட்டி அடித்திருக்கிறது ஜூனியர் விகடன். ரஜினியை மோடி சந்தித்த காரணத்தினால்தான் பாஜகமீது ஜெயலலிதா விமர்சனம் வைக்க ஆரம்பித்து விட்டார் என்று சொல்லி ரஜினியை சந்தியில் நிறுத்தியிருக்கிறார் கழுகார். “ஜெயா ரஜினியைப் பார்த்து பயப்படுகிறார்” என செய்தி வந்தபிறகு கோச்சடையான் எப்படி ரிலீஸ் ஆகப்போகிறதோ என எனக்கு கவலையாக இருக்கிறது. யாரை பலிகொடுத்தேனும் மோடியை பிரதமராக்கிவிடுவது என திருமாவேலன் சத்தியம் செய்திருக்கிறார் என்பது ஜூவி படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் இந்த எல்லா சூழ்ச்சிகளையும் தனது ஒற்றை அறிவிப்பால் அடித்து வீழ்த்தியிருக்கிறார் நடிகர் விஜய். மோடியை சந்திக்க தான் முயற்சிக்கவில்லையென்றும் மோடிதான் தன்னை சந்திக்க விரும்பியதாகவும் “மிக அடக்கமாக” குறிப்பிட்டிருக்கிறார் அவர். எனக்கென்னவோ இந்த ஸ்டேட்மெண்டைப் பார்த்தபிறகு மோடியைக்காட்டிலும் விஜய்தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என தோன்றுகிறது.

– வில்லவன்

மோடி திருமணம் – விசாரிப்பவர்களுக்கு அடி உதை உறுதி !

18

னைவியை மறைத்த மோடி விவகாரத்தில், பாஜக ‘ஒழுக்க சிகாமணிகள்’ முன்வைக்கும் கருத்து என்ன?  ஒருவருடைய தனிப்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாதாம், அது அநாகரீகமாம். இது வரை மோடி போட்டியிட்ட தேர்தல்களுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்களில் திருமணம் குறித்த விபரத்தை குறிப்பிடாமல் வெற்றிடமாக விட்டு விட்டது, அவரது தனிப்பட்ட விருப்பமாம். அப்போதைய விதி முறைகளின் படி அது தவறில்லை என்பவர்கள், இப்போதுதான் உச்சநீதிமன்றம் அனைத்து விபரங்களையும் குறிப்பிடா விட்டால், வேட்பு மனு செல்லுபடியாகாது என்று கூறி விட்டது என்கிறார்கள். அதனால், சட்டத்துக்கு அடிபணிந்து தன்னுடைய திருமண உறவு பற்றிய விபரத்தை மோடி வேட்பு மனுவில் குறிப்பிட்டிருப்பதாக பாஜக சமாளிக்கிறது.

யசோதாபென் - மோடி
யசோதாபென் – மோடி

இது பாஜகவோடு மோடியை ‘வளர்ச்சி’க்காக ஆதரிக்கும் அறிவு ஜீவிகளின் விளக்கமும் கூட. ஒரு தலைவனின் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்தாலும் அதில் சில இருட்டு பக்கங்கள் வைத்திருக்க உரிமை உண்டு என்கிறார்கள். எனில் மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தில் அந்த உரிமை கிளிண்டனுக்கு தரப்படவில்லையே, ஏன்? தனி நபர் உரிமையின் ‘தாயகமானா’ அமெரிக்காவிலேயே இது பிரச்சினைக்குள்ளானது எங்ஙனம்?

மோடி ஏன் மறைத்தார்?

அதாவது, சின்ன வயதில், அறியாத வயதில் பெரியவர்கள் அவருக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்து விட்டார்களாம். அவரது ஆர்வமோ ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்வதாகத்தான் இருந்ததாம். அதனால், ‘நான் வருவேன், போவேன், நாலு இடங்களுக்கு சுத்திக் கொண்டே இருப்பேன். எனக்கு இந்த வாழ்க்கை ஒத்து வராது’ என்று மனைவியிடம் சொல்லி விட்டு வீட்டை துறந்து கிளம்பி தேசத்தின் தொண்டிலேயே மூழ்கிப் போய் தன் சொந்த மனைவியைக் கூட மறந்து விட்டாராம். முதலில் திருமணம் செய்பவர்கள் தேசத்திற்கு தொண்டாற்ற முடியாது எனும் புனிதப் பார்ப்பனியம் இதில் உள்ளது. நாட்டிற்காக பாடுபடுபவர்களில், உயிர் துறந்தவர்களில் திருமணம் செய்தவர்கள் இருப்பது எல்லா நாடுகளிலும் உள்ளதுதான். அடுத்து, மோடி அப்படி மனைவியை ஒதுக்கிவைத்து விட்டு என்ன தேசத் தொண்டு செய்தார்?

1980-களில் குஜராத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கலவரங்களை தலித்துகள் மீதான தாக்குதல்களாகவும், இஸ்லாமியர்கள் மீதான மதக் கலவரமாகவும் மாற்றி நடத்தியது; சென்ற இடத்திலெல்லாம் வெறுப்பையும், வன்முறையையும் விதைத்துச் சென்ற அத்வானியின் ‘ராமஜென்மபூமி’ ரத யாத்திரைக்கு குஜராத் பகுதி சாரதியாக இருந்து வழிநடத்தியது; இப்போது வாரணாசி தொகுதியை பறித்து கான்பூருக்கு அனுப்பப்பட்டிருக்கும் முரளி மனோகர் ஜோஷியின் ஏக்தா யாத்திரையை ஒருங்கிணைத்து நடத்தியது முதலான இந்துத்துவ திட்டங்களின் மூலம் குஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைக் களமாக வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் மோடி.

இதன்படி குஜராத்தில் சிறுபான்மை மக்கள் பலர் கொல்லப்படுவதற்கு குஜராத் மாநிலத்தை தயார் செய்த பணிதான் மோடியின் பெரும்பணி. அவரது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பணியும் கூட. இதெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில், முதலமைச்சர் ஆவதற்கு முன்பு அவர் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றி பெரிய அளவில் விபரங்கள் வெளியாகவில்லை.

யசோதாபென்
யசோதாபென்

ஆனால், 2002-ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை கலவரங்களுக்குப் பிறகுதான் யார் இந்த மோடி என்ற கவலை பலருக்கும் வந்தது. அதனால் முந்தைய ஆண்டுகளில் முதலமைச்சர் மோடியின் சொந்த வாழ்க்கை பற்றி நம்முடைய ‘புலனாய்வு பத்திரிகையாளர்கள்’ விசாரிக்க ஆரம்பித்தார்கள். வெளியே காட்டிக்கொண்டதைப் போல மோடி திருமணமாகாத ‘பிரம்மச்சாரி’ இல்லை, விவரம் வெளியே வருகிறது. அவருக்கு திருமணமாகி விட்டது என்று கேள்விப்பட்ட, அப்போது இந்தியன் எக்ஸ்பிரசின் அகமதாபாத் நிருபராக இருந்த தர்சன் தேசாய் மோடியின் மனைவியை தேடி புறப்பட்டிருக்கிறார்.

யசோதாபென் உடனான மோடியின் திருமணம் மோடிக்கு 8 வயதாகும் போது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. 13 வயதில் திருமண விழா நடத்தப்பட்டது. 17-18 வயதில் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான சடங்குகளை நடத்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டிருந்த நாளுக்கு முன்னதாக அல்லது திருமணமாகி சில மாதங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மோடி என்று முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

2002-ம் ஆண்டில் யசோதாபென் சிமன்லால் குறித்து விசாரிக்க அவரது சொந்த கிராமமான பிராமன்வாடாவுக்கு போயிருக்கிறார் தர்சன் தேசாய். அங்கு யசோதாபென்னின் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் பேசியதில் அவர் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் வேலை செய்வதாக தெரிய வந்திருக்கிறது.

யாரோ ஒரு பத்திரிகையாளர் யசோதாபென் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் பரவி தர்சன் தேசாயை ஒரு குண்டர் படை துரத்தியிருக்கிறது. “உனக்கு இங்கு என்ன வேலை, மரியாதையாக இடத்தை காலி பண்ணு” என்று மிரட்டியிருக்கிறது. அவர் ஒரு காரில் ஏறி அவசரமாக தப்பி வந்திருக்கிறார். மோடியின் தனிப்பட்ட விவகாரத்தை  யாரும் அறிந்து கொள்ள கூடாது என்று ஒரு அடியாட்படையே அங்கு பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.

தர்சன் தேசாய் செய்தி
2002-ல் தர்சன் தேசாய் எழுதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

காரணம், நரேந்திர மோடியின் இமேஜ் டேமேஜ் ஆகி விடக் கூடாது என்பதுதான்.  இதற்காக அவரை திருமணம் செய்து கொண்ட பெண்ணைச் சுற்றி கோட்டை போல கண்காணித்திருக்கிறார்கள். மோடிக்கு இசட் ப்ளஸ் கமாண்டோக்கள் பாதுகாப்பு கொடுப்பது பாக் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க. மனைவிக்கான பாதுகாப்பு மற்றவர் சந்தித்து மானம் போய்விடக்கூடாது என்பதற்காக. இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணை வருடக்கணக்கில் துன்பப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் அந்த பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிறை வைத்திருக்கிறோம் என்று இந்த மதவெறிக்கும்பல் இப்போதும் ஒத்துக் கொள்ளாது.

ஆகவே யாருடனும், யசோதாபென் பேசி விடக் கூடாது, மோடியைப் பற்றி எந்தத் தகவல்களும் வெளி வந்து விடக் கூடாது என்று கவனமாக இருந்திருக்கிறார்கள்.

ஒரு சிறுமியிடம் யசோதாபென் ரஜோசனா என்ற கிராமத்தில் வேலை செய்வதை தெரிந்து கொண்ட தர்சன் தேசாய் அங்கே விரைந்திருக்கிறார். மோடி போய் விட்ட பிறகு யசோதாபென், பள்ளிப்படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் முடித்து விட்டு அகமதாபாத், தேக்வலி, ரூபால் போன்ற இடங்களில் ஆசிரியராக வேலை விட்டு 1991-முதல் ரஜோசனா தொடக்கப்பள்ளியில் வேலை செய்து வந்திருக்கிறார்.

ரஜோசனாவில் தர்சன் தேசாய், யசோதாபென்னை சந்தித்த போது அவர், “உங்களிடம் நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் பேச ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. போன முறை ஒரு தொலைக்காட்சி சேனல் காரர்களுடன் நான் பேசிய பிறகு பெரும் கலாட்டா நடந்தது. நியாயம், அநியாயம் என்றெல்லாம் பேசி என்னை மீண்டும் தூண்டி விட முயற்சி செய்யாதீர்கள்.” என்று பேச மறுத்திருக்கிறார். எல்லாம் மோடி மற்றும் மோடி அடியாட்படையின் மீது உள்ள பயம்தான். பாருங்கள், கூண்டுக்கிளி தன்னை பிடித்து வைத்த எஜமானை அடையாளம் காட்ட கூட உரிமை இல்லை. ஆனால் மோடி தனது மனைவியை திருமணத்தை மறைத்த விசயம் தனிப்பட விருப்பமாம்.

அத்தோடு விடாமல் நமது பத்திரிகையாளர் வலியுறுத்தவே, “சரி, நான் பேசணும், அவ்வளவுதானே. கேட்டுக்கோங்க. என் கணவர் குஜராத் முதல் அமைச்சர் ஆனதில  எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் நாட்டின் பிரதமராகவும் ஆகணும்னு நான் பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்றிருக்கிறார்.

“பற்றி எரிகிற குஜராத்தை கட்டுப்படுத்த தெரியாத அவரையா நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்கிறீர்கள்” என்று கேட்ட நிருபரிடம், பாரத நாரீகளின் அடிமை தர்ம விசுவாசத்தின்படி “அவர் ஒத்தை ஆளா அவரால் என்ன செய்ய முடியும்? முடிஞ்சதை செஞ்சுகிட்டு இருக்கார். இருந்தாலும், எனக்கு என்ன தெரியும். நான் ஒரு அரசாங்கத்தை எப்பவாவது நடத்தியிருக்கேனா என்ன?” என்றிருக்கிறார் அந்த பெண்.

அப்போது மோடியின் மனைவி மாத வாடகை ரூ 100 கொடுத்து பாத்ரூம்-டாய்லெட் வசதி கூட இணைக்கப்படாத ஒற்றை அறையில் வாழ்ந்து வந்திருக்கிறார். “மாதம் ரூ 10,000 சம்பளம் கிடைக்கிறது. பெரிய வீடு ஒன்றை எடுக்கலாமே” என்று கேட்டால், “ஒரு பெண் தனியாக வாழ்ந்தால், அக்கம்பக்கம் உள்ளவர்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. அதுதான் முக்கியம், வீட்டின் அளவு இல்லை” என்கிறார் அவர். இப்படி ஒரு பெண்ணை கொட்டடிச் சிறையில் அடைத்து வைத்து தனது இமேஜ்ஜை பாதுகாத்த அயோக்கியர் பிரதமரானால் பெண்கள் குறித்தும், அவர்களது பிரச்சினைகள் குறித்தும் எப்படி பார்ப்பார்?

வடோதராவில் வேட்புமனு தாக்கல் செய்யும் மோடி
வடோதராவில் வேட்புமனு தாக்கல் செய்யும் மோடி

இப்போது வேட்புமனுவில் யசோதாபென்னை மோடி தன் மனைவியாக குறிப்பிட்ட பிறகு,  பத்திரிகையாளர்கள் யசோதாபென் வசிக்கும் கிராமத்துக்கு விரைந்த போது அவர் ஊரில் இல்லை. ஏதோ புனித யாத்திரைக்கு அவர் கிளம்பி போய் விட்டதாக சொல்லப்பட்டது. “மோடி பிரதமர் ஆவதற்காக யசோதாபென் காலில் செருப்பு அணியாமல் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்ததாக” யசோதாபென்னின் அண்ணன் கமலேஷ்மோடி கூறியிருக்கிறார். அல்லது தற்போது நிறைய ஊடகங்கள் வருமென்பதால் யசோதா பென்னை கிட்டத்தட்ட எங்கோ தலைமறைவாக கடத்தி கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

பத்திரிகையாளர்களிடம் பேசிய நரேந்திரமோடியின் சகோதரி வாசந்தி “நரேந்திரா, யசோதாவை தனது மனைவி என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். யசோதாபென்னின் பிரார்த்தனைகள் வீண் போகவில்லை” என்று கூறியிருக்கிறார். அதாவது, கணவர் ஏதோ அரசியல் கட்டாயங்களுக்காக தன்னை மனைவி என குறிப்பிட்டு விட்டதோடு ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாக ஒரு மனைவி போற்ற வேண்டும் என்பதுதான் மோடியின், ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட பாரதம் பெண்களுக்கு அளிக்கும் ‘வளர்ச்சி’ப் பாதை.

மதவெறியோடு ஆணாதிக்கவெறியும் நிலவும் கட்சியில் உள்ள பெண்களான தமிழிசை சவுந்தரராஜனும், வானதி சீனிவாசனும், சுஷ்மா சுவராஜூம் என்ன சொல்வார்கள்? கொல்லப்பட்ட, வன்புணர்ச்சி செய்யப்பட்ட இசுலாமிய, கிறித்தவ பெண்களின் துயரங்களை உணராத இந்தப் பெண்கள் இதில் மட்டும் யசோதாவுக்காக குரல் கொடுப்பது சாத்தியமே இல்லை. 2004-ம் ஆண்டு சோனியா காந்தி மட்டும் நாட்டின் பிரதமர் ஆகி விட்டால், தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளை உடை உடுத்தி, வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டு விதவையாக துக்கம் அனுசரித்து போராடப் போவதாக அறிவித்த பார்ப்பனீய பெண் அடிமைத்தனத்தை கடைப்பிடிக்கும் சுஷ்மா சுவராஜ், மோடி செய்தது சரிதான் என்று பேசுவார்.

மோடியின் சொந்த மாவட்டமான மேசானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 762 என்பது நாட்டிலேயே குறைவான விகிதமுடைய நகர்ப்புறங்களில் ஒன்று. அதாவது, பெண்களை மதிக்கும் சமூகத்தில் 1,000-க்கு 1,000 என்று இருக்க வேண்டிய விகிதம், மோடியின் சொந்த மாவட்டத்தில் ஆயிரத்துக்கு 238 பெண் குழந்தைகள் சமூக கொடூரங்களால் இல்லாமல் ஒழிக்கப்படுகிறார்கள். மோடியின் ஆர்.எஸ்.எஸ் பாணி வல்லரசு இந்தியாவில் பெண்களின் இடம் இதுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யசோதாபென் பற்றிய குறும்படம் (குஜராத்தியில்)

தன் மனைவி எளிமையான வாழ்க்கை வாழும் போது, நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்த தலைவன் மோடி என்று மோடி ரசிகர்கள் புல்லரித்து கொள்ளலாம். ஆனால், இந்த காலகட்டத்தில், ‘சாய்வாலா’வாக (டீக்கடைக்காரராக) வாழ்க்கையைத் தொடங்கிய மோடி தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட “புல்காரி” கண்ணாடிகள், ஸ்விட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்ட “மொவாடோ” கைக்கடிகாரங்கள், இத்தாலியின் “மோன்ட்பிளாங்க்” பேனாக்கள், அகமதாபாத்தில் மேட்டுக்குடியினருக்கு சிறப்பாக துணி தைத்துக் கொடுக்கும் அகமதாபாத்தின் “ஜேட் புளூ” உருவாக்கிய “மோடி குர்த்தா” பிராண்டட் சூட்டுகள் என்று லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருந்தற்கெல்லாம் என்ன பொருள்?

ஆம். மோடி தனது பிரம்மச்சாரியத்தின் மகத்துவத்திற்காக மட்டும் அந்த பெண்ணை துன்புறுத்தவில்லை. தனது மேட்டுக்குடி இமேஜுக்கு பொருத்தமாக அந்த நாட்டுப்புறத்து பெண் பொருந்த மாட்டார் என்பதும் ஒரு காரணம்.

ஏழையின் கணவர் மோடி
நான் ஏழ்மையில் வளர்ந்தவன், வறுமையை அறிந்தவன்
1. டிசைனர் ஆடைகள்
2. ரூ 150 கோடி செலவிலான அலுவலகம்
3. Z+ பாதுகாப்பு
4. வெளிநாட்டு கண்ணாடிகள்
ஆண்டவன் எல்லோரையும் இப்படி ஏழையாக படைக்க மாட்டானா!

கிராமத்தில் ஒற்றை அறையில் தனிமை வாழ்க்கை நடத்தி வந்த கால கட்டத்தில் யசோதாபென்னை பள்ளியில் சந்தித்து பேச பள்ளி நிர்வாகம் அனுமதிக்காது. பள்ளி நேரம் முடிந்து அவர் வெளியில் வந்தாலும் கண்காணிப்புக்கு குண்டர் படை இருக்கும். யசோதாபென் யாரிடமும் எதுவும் பேசினாலும் காந்திநகரில் உள்ள மோடியின் அலுவலகத்துக்கு தகவல் சொல்லப்பட்டு விடும்.

2002-ம் ஆண்டு அவரை சந்திக்கப் போன தர்சன் தேசாய் அலைந்து திரிந்து, களைப்பாக நள்ளிரவில் அகமதாபாத்தில் தனது வீட்டுக்கு வந்து சேர்கிறார். சிறிது நேரத்திலேயே மோடியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.

“ஒனக்கு என்னதான் வேணும்?” என்கிறது அந்த இறுக்கமான குரல்.

“என்ன கேக்கறீங்கன்னு புரியலையே”

“ஒன்னோட பேப்பர்ல என்னை எதிர்த்து நிறைய எழுதறீங்க. அதை எல்லாம் பொறுத்துக்கிட்டேன். இன்னைக்கு என்ன செஞ்சுகிட்டு இருந்தேன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு நீ நடந்து கிட்டது அளவு மீறி போயிருக்கு. அதனால்தான் ஒனக்கு என்ன வேணும்னு கேட்கிறேன்”

கொஞ்சம் நெர்வஸ் ஆன தர்சன் தேசாய் “அப்படி எதுவும் இல்லீங்க, பத்திரிகை பத்தி என்ன பேசணுமோ எங்க ஆசிரியர்கிட்ட பேசிக்குங்க”

“சரி, நல்லா யோசிச்சிக்கோ”. என்று இணைப்பை துண்டித்திருக்கிறார் மோடி.

பிராமன்வாடாவில் தர்சன் தேசாயை துரத்திய குண்டர்கள் அவர்களது தலைவர் மோடிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். தர்சன் தேசாயின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து சரியாக வீட்டுக்கு வந்து சேரும் போது மோடிக்கு தகவல் போயிருக்கிறது. வீட்டில் அச்சுறுத்த வேண்டும் என்று போன் போட்டு பேசியிருக்கிறார்.

தர்சன் தேசாய்க்கு முன்பு இது குறித்து எழுதும்படி பொறுப்பு தரப்பட்ட இரண்டு நிருபர்கள் அதை செய்து முடிக்காமல் விட்டிருந்ததற்கு இத்தகைய மோடி பாணி அன்பான விசாரிப்பு கூட காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால், பார்ப்பனீய பெண்ணடிமைத்தனத்தை கோட்பாடாகவே கடைப்பிடிப்பது, கொடூரமான போலீஸ் ஆட்சியை நடத்தி வருவது, சிறுபான்மை மக்களையும், தொழிலாளர்களையும் ஒடுக்கி வருவதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படக் கூடாது, மோடி (கார்ப்பரேட்டுகளுக்கு) ‘வளர்ச்சி’யை தருகிறார் என்பதுதான் முக்கியம் என்று பல்வேறு அல்லக்கைகள் ஓதி வருகின்றனர்..

ஆர்.எஸ்.எஸ் விதிகளின் படி திருமணமாகியிருந்தால் ஒருவர் முழு நேர பிரச்சாரக் தகுதியை இழந்து விடுவார். ஸ்வயம் சேவகர்களிடையே பிரச்சாரக்குகளின் ஒளிவட்டம் இத்தகைய பிற்போக்கான ‘ஒழுக்க’ வாதத்தால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆரம்பகாலத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தனது பதவியை விட விரும்பாத மோடி தனது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்.

யசோதாபென்
யசோதாபென்

கட்சியில் பல உள்ளடி வேலைகளை செய்து சங்கர்சிங் வகேலா, கேசுபாய் பட்டேல் போன்ற பழம் பெருச்சாளிகளை ஓரம் கட்டி கடாசி விட்டு முதலமைச்சராக நியமனம் பெற்ற மோடி,  சட்ட மன்ற தேர்தல்களில் போட்டியிடும் போது வேட்புமனுவில் தனது திருமண உறவு பற்றிய விபரங்களை குறிப்பிடாமல் விட்டு வந்திருக்கிறார். “நான் ஒற்றை ஆள். எனக்கு முன்னேயும், பின்னேயும் குடும்பம் என்று யாரும் இல்லை. நான் தேசத்துக்காகத்தான் அர்ப்பணிப்புடன் பணி செய்கிறேன்” என்று சவடால் அடிப்பதையும் செய்யத் தவறவில்லை. அல்லது திருமணம் செய்து தலைவரானால் ஊழல் செய்தே தீருவார்கள் என்பது இதன் உட்கிடக்கை. அதன்படி பாஜகவில் உள்ள குடும்பம் குட்டிகளாக வாழும் தலைவர்கள் பலரும் ஊழல்வாதிகள் என்று பொருள் கொள்ள வேண்டுமாம்.

ஆனால், மாநில காவல் துறையையும், ‘பயங்கரவாத’ தடுப்புப் பிரிவையும், உளவுத் துறையையும் ‘பிரம்மச்சாரியான’ முதல்வரின் விருப்பப்படி ஒரு பெண்ணை பின்தொடர பயன்படுத்தலாம். இதை ஒரு  பிரம்மச்சாரி பிரச்சாரக் செய்வதை ஆர்.எஸ்.எஸ்சின் விதிகள் தடை செய்யவில்லை. திருமண விவகாரம் வெளியான மாதிரி இந்த பின்தொடருதல் விவகாரமும் சந்தி சிரிப்பதற்குள் பாஜகவே அதை முன் வந்து உண்மையை ஒத்துக் கொள்வது நல்லது. ஏதும் சிடி கிடி இருந்தால் பிறகு அதுதான் உலகத்தில் நம்பர் ஒன் ஹிட்டாகிவிடும். இருப்பினும் அதையும் சாதனையாக கூட சொல்வார்கள் இந்துமதவெறியர்கள்.

இந்நிலையில்தான் நரேந்திர மோடி வடோதரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் திருமணம் பற்றிய கேள்விக்கு எதிராக திருமணமானவர் என்று எழுதி விட்டு மனைவியில் சொத்து விபரங்களைப் பற்றி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையை கூறாமல் விட்டு விட்டால் வேட்பு மனு நிராகரிக்கப்படவோ, அல்லது வெற்றி பெற்று இருந்தால் பதவியையே இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியில்லாமல், திருமணம் ஆனவர் என்றும், மனைவியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் வெளிப்படுவது என்ன? பார்பனியம் பெண்களை எப்படி நடத்துமோ, பார்க்குமோ அதைத்தான் மோடி செய்துள்ளார். இந்த பச்சையான ஆணாதிக்கத்தை முதலாளித்துவ சுதந்திரத்தை வலியுறுத்துவோர் தனிநபர் உரிமை என்று மடைமாற்றி வருகின்றனர். அந்த வகையில் முதலாளித்துவமும், பார்ப்பனியமும் இணைந்திருப்பதும், மோடியை கார்ப்பரேட் கும்பல் ஆதரிப்பதும் வேறு வேறு அல்ல.

எனவே எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொள்ளும் வரை, மோடி சொக்கத்தங்கம்தான். அல்லது  யோக்கியன் வர்றான் செம்பை எடுத்து உள்ளே வை என்றும் கூட சொல்லலாம்.

– அப்துல்

__________________________

மேலும் படிக்க

வேட்டை நாய்களின் ஜனநாயகம் – கார்ட்டூன்கள் !

0

கார்ப்பரோக்ரசி

corporocracy-2

படங்கள் : ஓவியர் முகிலன்

வழக்கறிஞர் ரஜினிகாந்த் : தருமபுரியில் போட்டியிடும் பிழைப்புவாதி

13

நாயோடு படுத்துறங்கினால் உண்ணியோடுதான் எழுந்திருக்க முடியும்!

“பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம், தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப் பாதை” என்பது நக்சல்பாரி அமைப்புகளின் முழக்கம்.

வீடிழந்து, வாழ்விழந்து, உரிமையிழந்து, அடக்குமுறையை அன்றாடம் சந்தித்துவரும் உழைக்கும் மக்கள், அரசியல் புரிந்திராத போதிலும், இந்த போலி ஜனநாயகத்தின் யோக்கியதையை தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருப்பதால் ஆங்காங்கே தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர்.

வழக்கறிஞர் ரஜினிகாந்த்
இளவரசன் மரணத்தின் போது தன்னை முன்னிறுத்திக் கொண்ட வழக்கறிஞர் ரஜினிகாந்த் (கோப்புப் படம்)

ஆனால், நேற்றுவரை மார்க்சிய லெனினிய கட்சிகளில் புரட்சி பேசி வந்தவர்கள் இன்று இந்த பன்றிகளின் கூடாரத்திற்கு பேராவலுடன் வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவர்தான் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த்.

இளவரசன்-திவ்யா காதல் விவகாரம் ராமதாசிற்கு வன்னிய சாதிவெறியை கிளப்புவதற்கு பயன்பட்டது போல ரஜினிகாந்திற்கும் தலித் மக்களை பயன்படுத்தி பிழைப்புவாத அரசியலில் ‘முன்னேறுவதற்கு’ வாய்ப்பளித்துள்ளது.

அன்று பல ஜனநாயக இயக்கங்கள் இப்பிரச்சினைக்காக குரல் கொடுத்தன. எனினும் தன்னை மட்டும் முன்னிறுத்தி பிரபலப்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த், இதையே மூலதனமாகக் கொண்டு இன்று தனது சொந்த செல்வாக்கை பெருக்கிக் கொள்ளவும், பதவி சுகம் அனுபவிக்கவும் கிளம்பியுள்ளார். இந்த தேர்தலில் தோல்வி அடைவது உறுதியென்றாலும், தேர்தலுக்குப் பின் அவர் ஒரு ஓட்டு வங்கியை உருவாக்கிக் கொண்டு அடுத்த தேர்தலில் பிற கட்சிகளுடன் பேரம் பேச முடியும். இன்று எந்தக் கட்சியை எதிர்த்து ஓட்டுக்களை பொறுக்கினாரோ, அதே கட்சிகளுடன் அடுத்த தேர்தலில் கூட்டணி சேர்ந்து தனக்கு ஓட்டுப் போட்ட மக்களை அடகு வைப்பார். இதன் மூலம் சொத்து சுகத்தை பெருக்கிக் கொள்வார்.

திருமாவளவன் எம்.பி ஆக இருந்த போதிலும், இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரால் கிருஷ்ணகிரியைத் தாண்டி நத்தம் கிராமத்திற்கு வரமுடியவில்லை. அவரது எம்பி பதவி தலித் மக்களின் கிராமத்திற்கு வந்து போவதற்கு கூட பயன்படவில்லை. அதிகாரமில்லாத டம்மி பீசுகள்தான் எம்.பி, எம்.எல்.ஏ பதவிகள் எல்லாம். என்பதை போலிசு அதிகாரிகளும் கலெக்டரும் அன்று நிரூபித்துக் காட்டினர்.

டம்மி பீசு என்றாலும் காசு பார்க்க முடியுமே!. எல்லாக் கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் கோடிஸ்வரராகி விட்டார்கள். பதவிக்கு வந்து , தரகு முதலாளிகளோடு கூடிக் குலாவி தனது சொத்து செல்வாக்கை பெருக்கி கொண்டு விட்டார்கள். இதைப் பார்த்துதான் ரஜினிகாந்த் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வருகிறார்.

இந்த ஆசைதான் புரட்சிகர இயக்கத்தை விட்டு வெளியேறி துரோகியாவதற்கு அவரைத் தூண்டியிருக்கிறது. இன்று தேர்தலில் நிற்பதன் மூலம் தனது பாதையில் இன்னொரு படி முன்னே செல்கிறார்.

இவர் சாதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்ததும், தேர்தலில் நிற்பதும் இருதரப்பு மக்களிடையே சாதிய முரண்பாடுகள் நீடிக்கவும், தொடரவுமே வழிவகுக்கும். குறிப்பாகச் சொன்னால் இறுதியில் ஆதிக்க சாதி வெறியை கிளப்பும் பாமவிற்கே இது ஆதாயமாக முடியும். அந்த வகையில் இந்த தேர்தலில் ரஜினிகாந்த் நிற்பதால் அன்புமணிக்குத்தான் ஆதாயம் என்று தர்மபுரி தலித் மக்கள் புலம்புகிறார்கள்.

விவசாயிகள் விடுதலை முன்னணி கிளைப் பகுதிகளில் மக்கள் எதிர்ப்பால் ரஜினிகாந்த் உள்ளே நுழைய முடியவில்லை. தருமபுரியில் ஆங்காங்குள்ள தலித் மக்கள் இவரை விரட்டுகிறார்கள். எனினும் புதிதாக பதவியை சுவைக்கப் புறப்பட்டுள்ள ரஜினிகாந்த் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தலித் மக்களை சென்டிமென்டாக பேசி திறமையாக ஏமாற்றுகிறார்.

ஓட்டுக்கட்சி அரசியல் என்பது சாக்கடை அரசியல். பொய், பித்தலாட்டம், துரோகம், நம்ப வைத்து கழுத்தறுப்பது, உண்டவன் வீட்டிற்கு இரண்டகம் செய்வது, பணத்திற்கு விலை போவது என்பதெல்லாம் இந்த அரசியலில் சகஜம். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமது நடைமுறை மூலம் தலித் மக்களுக்கு ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார்கள்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோ பிழைப்புவாதத்தில் ராமதாசுக்கே சவால் விடக்கூடிய கட்சி. மனுவாதி கட்சி என்று பாரதிய ஜனதாவை சாடி விட்டு, 2002 குஜராத் இனப்படுகொலைக்குப் பின்னரும் “துணிந்து” பாஜக வுடன் இணைந்து உத்தர பிரதேசத்தில் ஆட்சியமைத்தவர் மாயாவதி. பிராமணர் சங்க மாநாட்டை நடத்தி பிராமண சமூகம் சுரண்டப்படும் சமூகம் என்று சான்றிதழ் கொடுத்தவர். இப்பேர்ப்பட்ட உலகமகா பிராடு கட்சியைத்தான் தருமபுரி தலித் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ரஜினிகாந்த்.

நாகை தொகுதியில் பா.ம.க சார்பாக போட்டியிடும் வடிவேல் ராவணனின் உறவினர்தான் ரஜினிகாந்த் என்றும், வடிவேல் ராவணன் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் தருமபுரி தொகுதியில் தலித் ஓட்டுக்களை சிதறடித்து பா.ம.கவை வெற்றி பெற செய்வதற்கு பா.ம.கவிடம் பணம் வாங்கிக் கொண்டு ரஜினிகாந்த் தேர்தலில் நிற்கிறார் என்றும், தருமபுரியில் பரவலாக ஒரு கருத்து பரவியிருக்கிறது.

இதை மறுத்து பேசும் ரஜினிகாந்த், “வடிவேல் ராவணன் என் உறவினரே கிடையாது. அவர் பள்ளர் சாதி, நான் பறையர் சாதி. இனி, சாதி சான்றிதழை வைத்துக் கொண்டுதான் ஓட்டுக் கேட்க வேண்டும் போல இருக்கிறது” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்.

இப்படி ரஜினிகாந்த் பெயருக்கு ‘களங்கம்’ வந்ததும் கலங்கிப் போன சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செங்கொடி. உடனடியாக வேட்பாளர் ரஜினிகாந்தின் சாதி சான்றிதழை நகல் எடுத்துக் கொண்டு , ‘நீதியை’ நிலைநாட்ட நத்தம் கிராமத்திற்கு அவர் ஓடிவந்தார். அங்குள்ள மக்களிடமும், தோழர்களிடமும், “இதோ பாருங்கள் தோழர்களே! ரஜினிகாந்த் பறையர் சாதிதான்!” என சாதி சான்றிதழ் நகலை காட்டி விட்டு, “ஓட்டுப் போடுவதும் போடாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால், தோழர் ரஜினிகாந்த் பா.ம.கவிடம் பணம் வாங்கி விட்டதாக சேற்றை வாரி இறைக்காதீர்கள். தேர்தல் 24-ம் தேதியோடு முடிந்து விடும். நாள பின்ன வழக்குக்காக நம்ம தோழர் ரஜினிகாந்திடம் போக வேண்டிவரும்” என்று சற்றே ‘மிரட்டலாக’ எச்சரிக்கை விட்டார்.

பல ஆண்டுகளாக சாதி, மதம் பார்க்கக் கூடாது. வர்க்கமாக ஒன்று சேர வேண்டும் என்று பேசிய செங்கொடி, இன்று சாதி அடையாளத்தை நிரூபிக்க இந்த அளவு தாழ்ந்து பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இப்படி ஒரு இழிந்த நிலைக்கு இறங்கி அரசியல் நடத்துகிறோமே என்று அவருக்கு வருத்தம் ஏற்பட்டதாக தெரியவில்லை. சாதிச் சான்றிதழைக் காட்டி ரஜினிகாந்தின் நேர்மையை நிரூபித்து விட்டார். மாயாவதி கட்சியின் நேர்மையை எதைக்காட்டி நிரூபிப்பார்.

செங்கொடி புரட்சிகர இயக்கத்தை சேர்ந்தவர் என அறியப்பட்டவர். ஓட்டுச்சீட்டு தேர்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்று பேசிவந்தவர். ஆனால், இன்று ரஜினிகாந்திற்காக ஊர்ஊராக ஓட்டுக் கேட்டு திரிகிறார். மக்களே எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்தாலும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு உரிய பாணியில், சூடு சொரணை ஏதுமின்றி ஓட்டுப் பொறுக்கும் பிரச்சாரத்தை தொடர்கின்றார். ரஜினிகாந்த், செங்கொடி மட்டுமல்ல, இவர்களை ஒத்த சிலரும் நேற்றுவரை தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப்பாதை, பாராளுமன்றம் பன்றித் தொழுவம் என்று முழங்கியவர்கள், இன்று பன்றி தொழுவத்தை விட கேவலமாகி, மனிதமல குவியலாகி விட்ட அந்த பாராளுமன்றத்திற்கு ரஜினிகாந்தை அனுப்ப படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்று எந்த ஓட்டுக் கட்சிக்கும் கொள்கை, கோட்பாடு ஏதுமில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால், ‘புரட்சி’ பேசிவந்த இவர்களுக்கும் கொள்கை ஏதுமில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டி வருகிறார்கள். பணம், பாதாளம் வரை பாயும் என்பது இதுதான் போலிருக்கிறது!

எத்தனை துரோகங்களையும், துரோகிகளையும் சந்தித்தாலும் உண்மையான கம்யூனிஸ்டுகளைக் கண்டு பழகிய தருமபுரி மக்கள் நிச்சயம் மீண்டு வருவார்கள்.

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி மாவட்டம்

தேர்தல் புறக்கணிப்பு பேசாதே – புதுச்சேரியில் நாறும் ஜனநாயகம்

3

புதுச்சேரி பு ஜ தொ மு – வின் இருசக்கர வாகனப் பிரச்சாரமும்! தேர்தல் துறையின் போலி ஜனநாயகமும்!

பாராளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் கமிசன், ஏற்கனவே நைந்து போன ஜனநாயகத்தை தைத்து இது ‘புத்தம் புதிய காப்பி’ என முன்னிறுத்த முயன்று கொண்டிருக்கிறது. மறுபுறம், இது போலி ஜனநாயகம் என தனது சர்வாதிகார செயல்களாலேயே நிரூபித்தும் வருகிறது. தேர்தல் கமிசனின் கெடுபிடிகள் தமிழகத்தை விட புதுச்சேரியில் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள், சுவரெழுத்துக்கள், சுவரொட்டிகள் ஆங்காங்கே காண முடிகிறது. ஆனால், புதுச்சேரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கமிசன் செய்த முதல் வேலை சுவருக்கெல்லாம் சுண்ணாம்பு அடித்தது தான். அதற்குப் பிறகு, பேனர்களை அகற்றி சுவரொட்டிகளைக் கிழித்தது. ஜனநாயகத்தைப் பற்றி சண்டமாருதம் செய்யும் எந்த ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் இவைகளைப் பற்றி வாய் திறக்கவேயில்லை. ஆனால், எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து பகுதிப் பிரச்சனைகளை ஒட்டி சுவரொட்டி பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்காகத் தேர்தல் விதி முறைகளை மீறிவிட்டதாக போடப்பட்ட பல வழக்குகளையும் எதிர்கொண்டு வருகிறது.

“இந்த தேர்தல் மக்களுக்கான தேர்தல் அல்ல! கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான தேர்தல்!” என விளக்கி, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 15/04/2014 அன்று கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்வதற்காக, இருசக்கர வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டது.

இந்த பிரச்சாரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அனுமதி கோரி தேர்தல் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், நமது பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிக் கேட்ட தேர்தல் துறையில் அனுமதி தொடர்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தாசில்தார் சிவக்குமார், “இந்தப் பிரச்சாரத்திற்குப் பயன்படும் இரு சக்கர வாகனங்கள் பற்றிய முழு விவரங்கள் (ஆர்.சி., இன்சூரன்ஸ்), வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்தின் நகல்களையும் அளிக்க வேண்டும். அவைகளை சரி பார்த்த பிறகே இந்த அனுமதி தருவது பற்றி பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.

“ஒவ்வொரு ஓட்டுக்கட்சியும் 50, 100 என தனது தொண்டர்களை இரு சக்கர வாகனங்களில் அணிதிரட்டி ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிக்கின்றனரே, அவர்கள் இந்த விவரங்களைக் கொடுத்ததாக கேள்விப் பட்டதில்லையே” எனக் கேட்டவுடன், “அவர்கள் எல்லாம் கொடுத்துத் தான் அனுமதி பெற்றுள்ளனர்” என நம்மிடமே ஒரு ‘ஜெர்க்’ விட்டார். மேலும், “பொதுவாக இரு சக்கர வாகனப் பிரச்சாரங்களுக்கு சாதாரண காலங்களில் இது போன்று கோருவதில்லையே?” எனக் கேட்ட போது, “அதைப் பற்றி எல்லாம் பேச முடியாது. கேட்டது கொடுத்தால் அனுமதி பற்றிப் பேசப்படும்” என்று கூறியதால், அந்த வாகனங்களின் மேற்கூறிய விவரங்கள் அடங்கிய நகல்கள் கொடுத்து, நாம் திட்டமிட்ட தேதியை மாற்றி மீண்டும் அனுமதி கோரப்பட்டது. “இப்போது தானே கொடுத்தீர்கள், அதைப் பரிசீலனை செய்து சொல்கிறோம்” என கூறிவிட்டார். இதற்கிடையில், வாரவிடுமுறையும், தமிழ் வருடப் பிறப்பு விடுமுறையும் வந்துவிட்டது. ஆனால், அனுமதி மட்டும் வரவேயில்லை.

அனுமதி இல்லாததால் ஒலிபெருக்கிக்குப் பதில், மெகா போன் மூலம் பிரச்சாரம் செய்வது, அதையும் மீறி பிரச்சினைகள் வந்தால் எதிர்கொள்வது என்ற அடிப்படையில் திட்டமிட்ட நாளில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. நமது இணைப்புச் சங்கங்கள் இயங்கும் நகரப் பகுதியான வில்லியனூர் கோட்டைமேடு என்ற பகுதியில், காலை 11.00 மணிக்கு பிரச்சாரம் துவங்கப்பட்டது. தோழர்கள் வந்து சேரும் முன்பே காவல் துறைக்கு மூக்கு வேர்க்க, மோப்பம் பிடித்து விட்டது. அங்கிருந்த கான்ஸ்டபிள், “அனுமதி இருக்கிறதா?” எனக் கேட்ட போது, இவர்களின் கெடுபிடியால் பிரச்சாரம் தடைபடக் கூடாது என எண்ணி, “அனுமதி வாங்கப்பட்டு விட்டது. தோழர்கள் கொண்டு வருவார்கள். அதற்காகத் தான் காத்திருக்கிறோம்” என்று கூறி, அடுத்த 10 நிமிடத்தில் வாகனங்களில் கொடிகளைக் கட்டிக் கொண்டு, சிவப்புப் சட்டையுடன் கேலிச் சித்திரங்கள் அடங்கிய தட்டிகளுடன் பிரச்சாரம் துவங்கப்பட்டது. வில்லியனூர், உறுவையாறு, மங்கலம், செம்பியப்பாளையம், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், குமாரமங்கலம், சேலியமேடு, பாகூர், கன்னியகோவில், காட்டுக்குப்பம், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடை வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து வகை மக்களையும் சந்திக்கும் வகையில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. பிரச்சாரம் செய்தபின் அங்குள்ள மக்கள், சிவப்புக் கொடிகளைக் கட்டிக் கொண்டு ஓட்டுப் போடாதே என்று சொல்கிறார்களே என ஆச்சரியமாகப் பார்த்தனர். விசயங்களை ஆர்வமுடன் கவனித்தனர். அனைத்து இடங்களிலும் மக்கள் சிறப்பான ஆதரவைக் கொடுத்தனர். குறிப்பாக, நாம் பேசுவதை தலையசைத்து ஆமோதிப்பது, பேருந்து ஏற காத்திருப்பவர்கள், பேருந்து வந்தாலும் ஏறாமல் நமது பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு அடுத்த பேருந்தில் ஏறுவது என தங்கள் ஆதரவை தங்களது செய்கையாலேயே பதிவு செய்தனர்.

பொதுவாக, வயதானவர்கள், ஓட்டுப் போட்டு, ஓட்டுப் போட்டு விரக்தியிலும், ஆத்திரத்திலும் பேசுவதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. இந்தப் பின்புலத்தை வைத்து, தேர்தல் கமிசன் குறிப்பாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சென்று ஓட்டுப் போடும் வயதை அடைந்த மாணவர்களிடம் ஓட்டுப் போடுவது பற்றிப் பேசுவது ஏன் எனப் புரிந்து கொள்ள முடிந்தது.

நண்பகல் நேரத்தில் கிராமங்களில், மக்கள் குறைவாக இருந்தாலும், பாடல், முழக்கம் என மக்களை வெளியில் வரவைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு மூதாட்டி, “ஆமாம் தம்பி! நீங்க சொல்வதெல்லாம் சரிதான். மாமன், மச்சான், சித்தப்பான்னு உறவு முறை சொல்லி ஓட்டுக் கேட்கிறானுங்க. ஆனா ஜெயிச்சு வந்தா, அவனுங்க கொள்ளையடிக்கவே நேரம் சரியா இருக்கும் போல” என தனது வழக்கமான மொழியில் ஆவேசமாகத் திட்டி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

மார்க்கெட் பகுதிகளில் பிரச்சாரம் செய்யும் போது, “பல ஆண்டுகளாகக் கடை வைத்திருக்கும் மளிகைக் கடை வியாபாரியோ, டீக்கடைக்காரரோ தன்னால் அடுத்த கிளையைத் திறக்க முடியவில்லை. ஆனால், முதலாளிகள் புதிதாக தொழிற்சாலை தொடங்கிய ஒரு ஆண்டிலேயே, கிளைகளைத் துவங்கி விடுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?” என்றும், “சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளில் தாங்களே கடை நடத்துபவர்களாகவும், தாங்களே அந்தக் கடையில் வேலை செய்யும் தொழிலாளியாகவும் வேலை செய்து தங்கள் வாழ்க்கையை நகர்த்த வேண்டியுள்ளது. அவர்களுக்கு வரிச்சலுகை எதுவும் இல்லை. ஆனால், வங்கிகளில் உள்ள மக்கள் சேமிப்பை கடனாகவும், பங்குச் சந்தை மூலம் நேரடியாய் மக்கள் பணத்தின் மூலமும், தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் கோடிகளுக்கும் மேல் வரிச்சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. இந்த அநியாயத்தைச் செய்யும் ஓட்டுக்கட்சிகளுக்கு ஓட்டுப் போட வேண்டுமா?”  எனவும் கேள்வி எழுப்பியவுடன், “சரியா சொன்னீங்க தம்பி! நான் கூடஓட்டுப் போடக் கூடாதுன்னு தான் நெனச்சேன். கண்டிப்பா நான் ஓட்டுப் போட மாட்டேன். மத்தவங்ககிட்டயும் இந்தக் கருத்தச் சொல்லுவேன். ஓட்டுப் போடுவதைத் தடுப்பேன்” என பட்டென்று சொன்னார் பக்கத்தில் இருந்த கடை வியாபாரி.

இது கிழிந்து தொங்கும் ஜனநாயகம் என மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களில் உணர்ந்துள்ளனர். ஆனால். மாற்று வழி தெரியாமல் கையறு நிலையில் உள்ளனர். ஒரு பக்கம் மக்கள் தெரிந்து கொண்டிருந்தாலும், காவல் துறையும், தேர்தல் துறையும் தங்கள் பங்குக்கு ஜனநாயகத்தைக் கிழித்துத் தொங்க விட்டது தான் இப்பிரச்சாரத்தின் கூடுதல் சிறப்பு.

இந்தப் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வந்து நின்ற காவல் துறையும், தேர்தல் துறையும் பிரச்சாரம் முடியும் வரை தொடர்ந்து வந்து அனுமதி, அனுமதி என்று ஜனநாயகத்தைக் ‘கட்டிக் காக்க’ பெரும் பாடுபட்டனர். ஒரு கட்டத்தில், அனுமதி கடிதத்தைக் காட்டினால் தான் உண்டு என்ற காவல்துறை அதிகாரியிடம் அனுமதி பெறவில்லை என்றவுடன், கொதிப்படைந்தார். ஆயினும், “ஒலிபெருக்கிக்குத் தான் அனுமதி தேவை. மெகா போனுக்கு அனுமதி தேவையில்லை” என்று சொன்னாலும் அவர் விடுவதாயில்லை. மேலும், அந்த மெகா போனின் புனல் போன்ற தோற்றத்தைப் பார்த்து அது மெகா போன் என்று ஒத்துக் கொள்ளவேயில்லை. ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இது மெகா போன் தான் என வாக்குவாதத்துடன் பிரச்சாரம் முடிக்கப்பட்டது.

“ஒரு இடத்தில், தேர்தல் அதிகாரி அனுமதி வாங்கித்தான் பிரச்சாரம் செய்கிறீர்களா? எங்கே அனுமதி கடிதம்” எனக் கேட்டார். “அனுமதி கடிதம் எங்கள் தலைவரிடம் கேட்க வேண்டும் எடுத்து வரச் சொல்லியிருக்கிறோம்” எனக் கூறியவுடன், சரி என்று சொல்லி, நாம் பிரச்சாரம் செய்வதை கவனித்த படியே அனுமதி கடிதத்திற்குக் காத்துக் கொண்டிருந்தனர்.

பிரச்சாரத்தில் பேசிய தோழர், “இன்று தேர்தல் துறை அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு கெடுபிடிகள், சோதனைகள் செய்யும் இவர்கள், தங்களது அன்றாட வேலைகளுக்காக லஞ்சம் வாங்கும் யோக்கிய சிகாமணிகள்” என்றும், “இதுவரை நடத்திய சோதனைகளில் எந்த ஓட்டுக்கட்சியின் பணத்தையும் கைப்பற்றவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பணப்பட்டுவாடா படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்காமல், அன்றாடம் பிழைப்புக்குச் செல்லும் வணிகர்களின் பணத்தையும், முறையாக கணக்கு காட்டாமல் எப்போதும் போல் எடுத்துச் செல்லப்படும் பணத்தையும் தான் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்” என்றும், இவர்கள் நடத்தும் தேர்தலின் யோக்கியதையை அம்பலப்படுத்தி உண்மையைச் சொன்னவுடன், தனது மானம் கப்பலேற்றப்படுவதைப் பொறுக்க முடியாமல், சற்றுத் தள்ளிப் போய் நின்றனர். தோழர்கள் அங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அடுத்த இடத்திற்குச் செல்லும் வழியில் மடக்கி தனது எரிச்சலை தீர்த்துக் கொள்ளும், விதமாக, “உங்கள் பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயரும், அதன் எண்ணிக்கையும் குறிக்கப்படவில்லை. அதனால், நீங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுகிறீர்கள். உங்களது பிரசுரங்களைப் பறிமுதல் செய்து விடுவோம்” என மிரட்டிப் பார்த்தனர்.

உடனே தோழர்கள், “நாங்கள் தேர்தலில் பங்கேற்பதில்லை. நீங்கள் சொல்லும் விதிகள் இதற்குப் பொருந்தாது” என்று சொன்னவுடன், “அதெப்படி? நீங்களும் தான் பிரச்சாரம் செய்கிறீர்கள். பிரச்சாரத்தில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும்” என்றார். அவரிடம் சொல்லிப் புரியவைப்பது சாத்தியமில்லை. அதற்கு நமக்கு நேரமுமில்லை என்பதைக் கணக்கில் கொண்டு, “அடுத்த முறை சரி செய்து கொள்கிறோம்” என பேசி முடித்துக் கொள்ளப்பட்டது.

நாம் இவ்வாறு கூறிவிட்டு வந்தும், தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வழி தேடும் வகையில், தோழர்களைப் பின் தொடர்ந்து வந்தும், மதிய உணவு அருந்துவதை மட்டுமில்லாமல், பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய கேலிச்சித்திரங்களையும், இரு சக்கர வாகனங்களையும் வீடியோ எடுத்தும் வழக்குப் போடுவோம் எனக் கூறியும் மிரட்டிப் பார்த்தனர். தோழர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிரச்சாரத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தனர். தனது மிரட்டல்கள் எடுபடாமல் போவதை உணர்ந்த அவர்கள் அமைதியாகச் சென்றுவிட்டனர்.

மற்றொரு இடத்தில், 4 தேர்தல் துறை அதிகாரிகள், 1 உதவி ஆய்வாளர், 4 கான்ஸ்டபிள்கள் என ஒரு கூட்டமே நமது பிரச்சாரத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. அதிலும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பல கோணங்களில் படம் பிடிப்பதைப் போல, நமது பிரச்சாரத்தை மூன்று பக்கங்களில் மூன்று கேமராக்களை வைத்து முகத்திற்கு அருகில் வந்து வீடியோ எடுத்து பயமுறுத்திக் கொண்டிருந்தனர். நமது தோழர்கள், அசராமல் நின்று பிரச்சாரம் செய்து அதைக் கேலிக்குள்ளாக்கினர்.

ஓட்டுப் போடுவது மக்களின் ஜனநாயகக் கடமை என மூலைக்கு மூலை பிரச்சாரம் செய்யும் தேர்தல் துறை, சட்டத்தைப் பாதுகாப்பதாகச் சொல்லும் காவல்துறை, ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசு என இவர்களே தாங்கள் கூறும் ஜனநாயகம் போலியானது என்பதனைக் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் வகையில், தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தைத் தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால், இவர்கள் சொல்லும் ஜனநாயகம் போலி ஜனநாயகம் என நாம் கூறிவருகிறோம்.

மொத்தத்தில், ஓட்டுப் போடுவது ஜனநாயகக் கடமையே இல்லை என்பதையும், ஓட்டுப் போடுவதால் தங்களது பிரச்சினைகள தீரப்போவதுமில்லை என்பதையும் உணர்ந்ததால், மக்கள் தேர்தல் மயக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். இதற்கு மாற்றாக புதியஜனநாயக அரசமைப்பு அதன் தன்மைகளை விளக்கும் போது, கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் அவர்களை இது சாத்தியமா? என அவநம்பிக்கை கொள்ள வைக்கிறது. ஆனால், வரலாற்று ரீதியாக அதைச் சாத்தியமாக்கும் வழிமுறைகளைப் பற்றி விளக்கியவுடன் புது நம்பிக்கை ஒளி அவர்களது கண்களில் காண முடிகிறது. இந்த நம்பிக்கை ஒளி புரட்சியின் தீபமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அனுபவபூர்வமாக உணர முடிந்தது இந்த மக்கள் பிரச்சாரத்தின் மூலம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – புதுச்சேரி.

விஜய், மோடி மீட்டு – டாடி எனக்கொரு டவுட்டு !

12
நடிகர் விஜயை சந்தித்த மோடி

காலம் கெட்டுப் போச்சே என்று எல்லாரும் சோர்வடையலாம். இருப்பினும் கலிகாலத்தை கலியுகமென்று ஒன்றுக்கு இரண்டாய் ஜபித்து சாபமிடுவார்கள் அக்ரகாரத்து இந்துக்கள். மற்ற மக்களுக்கு திரேதா யுகமும் தெரியாது, துவாபர யுகமும் புரியாது. யுகம் குறித்த அறிவிலேயே அக்ரகாரத்தை தாண்டிய ‘இந்துக்கள்’ இவ்வளவு வீக்காக இருப்பது ஒரு பிரச்சினை.

மோடியுடன் விஜய்
பரவாயில்லீங்னா உங்கள விட மோடி ஹைட்டு கம்மிதான்னா !

ஆனால் யுக அறிவில் மட்டுமல்ல, ‘யுக புருஷர்’களையும் உற்பத்தி செய்யக் கூடிய அக்ரகாரத்தின் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்-ஸே, இனி கலியுகத்தைப் பழிக்க முடியாது. ஷாகாவில் முனிபுங்கரர்களையும், ரிஷி பத்தினிகளையும் நினைவு கூர்ந்த ஸ்வயம் சேவகர்கள் இனி சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய தளபதி விஜய், கவர்ச்சி புயல் மேக்னா நாயுடு போன்ற நவீன கலை முனிக்களையும், கவர்ச்சி கன்னிகளையும் போற்றி பாட வேண்டும்.

இதனால் அந்தக் கால முனிவர் கூட்டம் யோக்கியமென்று நாம் சொல்லவில்லை. எது எப்படியோ, விஜய் ரசிகர்களும், ஸ்வயம் சேவக ‘ஜீ’க்களும் சகோதரர்களாக மாறிவிட்ட பிறகு, குத்தாட்டம் சிறுமை, பரதம் பெருமை என்று சங்கு ஊத முடியாதல்லவா? இதனால் இளைய தளபதியின் ரசிகர்கள் மட்டமானவர்கள் என்று பொருளல்ல. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை விட விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் மேலானவர்களே!

ரஜினியை சந்தித்து கேவலத்திற்கு மேல் கேவலப்பட்டாலும், கூச்சப்படாமல் அதைப் பெருமையாக பேசுமளவு பாஜக, மோடி கும்பலுக்கு வாக்கு வெறி வகை தொகையில்லாமல் அதிகரித்து வருகிறது. ரஜினி வீட்டில் 40 நிமிடம் இருந்த மோடி பத்து நிமிடம் கோச்சடையான் டிரைலர் பார்த்திருக்கிறார். அடுத்த பத்து நிமிடம், “அங்கிள் இது இந்தியாவிலேயே ஃபர்ஸ்ட் மோஷன் கேப்சர் டெக்னாலஜி” என்று ஐஸ்வர்யா உதவியாளர்கள் உதவியோடு வகுப்பெடுத்திருக்கிறார். பொது அறிவில் ஜூனியர் புஷ்ஷோடு போட்டியிடும் கோழி மாக்கான் மோடிக்கு மோஷன் என்பது ஏதோ நல்ல பாய்சன் என்றே புரிந்திருக்கும். அடுத்த பத்து நிமிடம் குடும்பத்தினருடன் ஃபோட்டோ செஷன். பிறகு பத்து நிமிடம் மோடி கெஞ்ச, ரஜினி அஞ்ச வெளியே இருந்த ஊடக குழுவினருக்கு மாம்பழ ஜூஸும், மோரும் வழங்கி சூட்டைத் தணித்து அறிக்கை கொடுத்து கவனித்தார்கள்.

மோடி வலை, ரஜினி அலை என்று ஜூவி எதிர்பார்த்தபடியே கவர் செய்திருந்தாலும் சுருதி பேதமாக அது எடுபடவில்லை. இதனால் இளைய தளபதிக்கு இளம் ரசிகர்கள் அதிகம், அவரை மீட் பண்ணினால் வோட்டுகளை அள்ளலாம் என்று (குமுதம் மாமாவா இருக்குமோ) ஏதோ ஒரு மாமா யோசனையில் இந்த விஜய்-மோடி சந்திப்பு நடந்தேறியிருக்கிறது.

ஆனால் நாம் இதில் புதிதாக எதுவும் எழுதத் தேவையில்லை. போயஸ் தோட்டத்தில் ரஜினி எப்படி மோடியின் மானத்தை வாங்கினாரோ அதே மொழியில் தான் விஜயும் வாங்கியிருக்கிறார். எப்படி இருவருக்கும் ஒரே மாதிரியான ஸ்கிரிப்ட் எழுதித் தயாரித்திருக்கிறார்கள், தெரியவில்லை. ரஜினி வீட்டிற்கு போய் பிச்சை கேட்ட மோடி, விஜயை மட்டும் நட்சத்திர விடுதிக்கு வரவழைத்து பிச்சை கேட்டிருக்கிறார். தானத்தில் சூப்பர் ஸ்டார் போட்ட அதே எச்சக்கலையைத்தான் விஜயும் போட்டிருக்கிறார். ஆனாலும் மகனே, இதற்கே உனக்கு தனியாக மக்கள் சுளுக்கெடுப்பார்கள், இருடி!

இனி வரலாறு காறித் துப்பப் போகின்ற புகழ்மிக்க இந்த சந்திப்பு 15 நிமிடமென்றும், பத்து நிமிடமென்றும் ஊடகங்களில் வந்திருப்பதிலேயே இந்த சந்திப்பு சில பல விநாடிகளுக்கு மேல் நடந்திருக்காது என்றே தோன்றுகிறது. தொலையட்டும், அந்த சந்திப்பு குறித்து விஜய் கூறியதாவது,

“ரொம்ப சாதாரண ஆளான என்னையும் மதித்து குருஜி நரேந்திர மோடி என்னை சந்தித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சென்ற முறை அவர் சென்னைக்கு வந்தபோது என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தமையால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை.

மீண்டும் கோயம்புத்தூர் வருகை தரும்போது என்னை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். எனவே கோயம்புத்தூரில் வைத்து இன்று நான் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

இந்த சந்திப்பில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. இந்திய நாட்டின் மரியாதைக்குரிய தலைவர் என்னை சந்திக்க வேண்டும் எனக் கேட்டதே எனக்கு பெருமைக்குரிய விஷயமாகும். அவரை சந்தித்த போது என்னிடம் அன்போடும், எளிமையாகவும் பேசினார்.

அவர் என்னிடம் என்னுடைய 21 வருட சினிமா வளர்ச்சியையும், அது சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களையும் பேசினார். நாட்டின் முக்கியத் தலைவர் என்னைப் பற்றி இந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

நாங்கள் எந்த அரசியல் நோக்கத்தோடும் சந்திக்கவில்லை. அரசியல் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவும் இல்லை.”

இதுதான் நடிகர் விஜய் கூறிய வார்த்தைகள்.

இளைய தளபதியைப் பார்க்க வேண்டும் என்று கோரியது வருங்கால பாரத பிரதமர் என்று வாய் வலிக்காமல் சங்க வானரங்களால் ஊளையிடப்படும் சாட்சாத் மோடிதான். தமிழ் சினிமாவில் கொக்கர கொக்கரக்கோ, கோழி கொக்கரக்கோ என்று படத்திற்கு படம் ஜீன்ஸ் பேண்டுகளை நம்பி மட்டும், தனது ‘நடிப்பு’த் திறனை காட்டும் ஒரு நடிகரை பார்த்துத்தான், தனது காவிக்கொடி மகத்துவத்தை பட்டொளி வீசி பறக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் மோடி கேங்க் இருக்கிறது.

அதிலும் முதல் முறை அழைப்பு வந்த போது விஜய் மறுத்திருக்கிறார். அதன் பிறகு மிரட்டலா, டீலா, லோலா ஏதோ ஒரு லாவால் கோயம்புத்தூரில் சந்தித்திருக்கிறார். சென்னை வந்த மோடி அழைத்தாலும் அதை விட தனது படப்பிடிப்பு முக்கியம் என்று டிமிக்கி கொடுத்ததையும் விஜய் போல்டாக பதிவு செய்திருக்கிறார். இதெல்லாம் தெரிஞ்சு பேசுறாய்ங்களா, தெரியமா பேசுறாய்ங்களான்னு ஒரு டவுட்டு இருக்கு என்றாலும் காக்கி டிராயர் கூட்டத்திற்கு கிடைத்த அவமானம் அவமானம்தான். பாபர் மசூதியை அவமானச் சின்னம் என்று அபாண்டமாக இடித்த கூட்டத்திற்கு விஜய் எனும் காமடி பீஸ் மூலம் வரலாறு பழிவாங்கியிருக்கிறதோ?

இந்த சந்திப்பில் அரசியல் நோக்கமில்லை, அரசியல் பேச்சு இல்லை, அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று சிக்ஸ் பேக்குக்கு மேலே இருக்கும் டபுள் நெஞ்சில் ஒன்றுக்கு மூன்று முறையாக அடித்து சத்தியம் செய்கிறார் விஜய். அம்மான்னா சும்மாவா!

ஓடு தலைவா ஓடு‘ என்று புரட்டி புரட்டி அடிபட்ட வடு மறைந்து விடுமா என்ன? அதனால்தான் ரஜினி பேசியது போல மோடி நினைப்பது நடக்கட்டும் என்று கூட விஜயால் பேச முடியவில்லை. மாறாக அவரது 21 வருட சினிமா வாழ்க்கையை பற்றித்தான் மோடி பேசினார் என்று உண்மையை உடைத்திருக்கிறார். அப்படி என்ன பேசியிருப்பார்கள்?

சங்கவி எனும் நடிகையை கவர்ச்சி காட்டி ரசிகர்களை வரவழைத்து மகனுக்கு வாழ்வு தர முயன்ற அப்பாவின் பாசப் போராட்டத்தைப் பற்றியா? செந்தூரப் பாண்டியில் காப்டன் அருளால் சாதா ஹீரோவான விபத்தை பற்றியா? தலைவா படத்திற்காக அவர் நடத்திய ‘ஜனநாயகப்’ போராட்டத்திற்கு பின் நவீனத்துவ அறிவாளிகளே ஆதரவு கொடுத்தும், எல்லாம் அம்மா அருளுடன் தீர்ப்பார் என்று பின் நவீனத்துவத்தை காமடியாக்கிய கதையைப் பற்றியா?

மோடி பேசிய அதே ஜெயின் கல்லூரி திடலில் பிறந்த நாள் நலத்திட்டங்கள் எனும் ஷோவை நடத்த முடியாமல் போன அவலத்தைப் பற்றியா? அம்மாவோடு சிக்கல் ஏற்படுத்திய அப்பாவை மட்டும் தைரியமாக ஓட்டியது பற்றியா?  இல்லை விஜய் உடான்சாக இருந்தாலும் நன்றாக டான்ஸ் ஆடி எல்லா டான்ஸ் மாஸ்டர்களிடமும் பாராட்டுப் பெற்றதைப் பற்றியா?

சிநேகா அக்காவின் சினிமா வாழ்க்கை வரலாற்று ஆல்பத்தை பரிசாக கொடுத்த அங்காடித் தெரு ‘கருப்பன்’ போல விஜய்யின் சினிமா வாழ்க்கை, அதில் நடித்த நாயகிகள், குத்தாட்டப் பாடல் நடைபெற்ற வெளிநாட்டு ஸ்தலங்கள் என அத்தனையையும் மோடி உருப்போட்டு வந்து பேசியிருக்கிறார். இதற்குத்தான் தன்னைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாரே என்று விஜய் ஆச்சரியப்படுகிறார்.

பாருங்கள், மோடி அருணாச்சல் பிரதேசத்தில் சீனாவுக்கு சவால் விடுகிறார்,  கோயம்புத்தூரில் காஜலின் கூகிள் தேடிப் பார்த்தேன் பாட்டு பற்றி விசாரிக்கிறார், இவரல்லவா சதாவதானி. போடா பேமானி!

மோடியின் ஆளுமையில் கொடூரம், சதி, மூர்க்கம், அடாவடித்தனம் போன்று கலையும், காமசூத்திராவும் கூட இருக்கலாமே? எல்லாம் இந்து ஞானமரபின் அங்கம் எனும் போது பங்கம் ஏது?

இதைத்தாண்டி விஜய் சொன்ன குருஜி  எனும் வார்த்தை மோடிக்கு மகிழ்ச்சியை வரவழைத்திருக்குமா, சந்தேகம்தான். ஏனென்றால் அவரது குருஜி ஆஸ்ராம் பாபு, காம சூத்திராவின் பாவங்களுக்காக சிறையில் கம்பி எண்ணும் போது, சீடனுக்கு குருஸ்தானம் கசக்கத்தானே செய்யும். ஆனாலும் அணில் எதற்கு குருஜி என்று கூறியது? இது தற்காலத்திய தமிழ் சினிமாவின் மொழி. இங்கே ‘ஜி’க்களும், ‘குருஜி’க்களும் சகஜம்.

அம்மாவென்றால் அடி முதல் முடி வரையும், முடியைத் தாண்டி சீலிங் வரையும் நடுங்கும் விஜய், எப்படி மோடியை சந்தித்தார் என்ற கேள்வி எழலாம். என்ன இருந்தாலும் ஒரு அணில், ஒரு நரியை சந்திப்பது என்பது யதார்த்தமில்லை அல்லவா? எப்படி அம்மா, தாமரை கட்சியை விமரிசிக்காமல் இருக்கிறாரோ, அதே காரணங்களை வைத்து பாஜகவையோ, மோடியையோ பார்த்தால் ஜெயா எகிற மாட்டார். அதே நேரம் நாளை ஒருக்கால் பாஜக ஆட்சி அமைக்கவில்லை, அதிலும் அம்மா கட்சிக்கு பங்கில்லை என்றால் அணிலுக்கு சுளுக்கு எடுப்பது உறுதி.

ஒரு வேளை ஆட்சி அமைத்து விட்டால், அடுத்த படத்திற்காக அணில் கொடநாட்டுக்கு அனுமதி வேண்டி இருமுடி கட்டி பாத யாத்திரை போக வேண்டிய அவசியம் இருக்காது. ஏதோ கொஞ்சம் பிழைத்துப் போகட்டும் என்று போயஸ் தோட்டத்து செக்யூரிட்டிகள் விட்டு விடுவார்கள். இல்லை, நான் அரசியலே பேசவில்லை, இனி எங்கேயும், எப்போதும் அரசியலை பேச மாட்டேன், பஞ்ச் டயலாக் வைக்க மாட்டேன் என்று ஏற்கெனவே கொடுத்த சத்தியத்தை இதுவரை மீறவில்லை, இனியும் அப்படித்தான் என்று ஒற்றைக் காலில் தவமிருக்க வேண்டியதுதான்.

ஏற்கெனவே ராகுல் காந்தியை பார்த்தும் ராகு காலம் முடியவில்லை என்பதால் இப்போது மோடியை பார்த்திருக்கிறார் விஜய். இது எம கண்டம் என்று அவருக்கு தெரியாது.

மோடி கும்பலைப் பொறுத்த வரை எத்தனை கேவலங்கள் வந்தாலும் பிரபலங்கள், அதிலும் சினிமா பிரபலங்களை வைத்து கட்சியின் செல்வாக்கைக் கூட்டிக் கொள்ளலாம் என்று எல்லா வகை பிச்சைகளுக்கும் தயாராகி விட்டார்கள். என்றாலும் ஒரு கொலைகாரனை இப்படி அங்கீகரிப்பது என்ற அளவில் ரஜினியோ, விஜயோ செய்து வரும் இந்த அயோக்கியத்தனங்களை கண்டித்து தமிழ் சினிமாவில் எந்த ஒரு நபரும் கண்டிக்கவில்லை. ஈழம், காவிரி என்றெல்லாம் தமிழ் உணர்வு பிலிம் காட்டும் இந்த கும்பல், சிறுபான்மை மக்களைக் கொன்ற தலைவனுக்கும், நாட்டில் பாசிசத்தை கொண்டு வரும் கட்சிக்கும் பல்லக்கு தூக்குகிறது.

மோடி கும்பல் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்த தமிழ் சினிமா கும்பல் அதன் கலை தூதர்களாக இருந்து தமது தொழிலைப் பாதுகாத்துக் கொண்டு, தமிழக மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் நியாயங்களை பேசும் படங்களாக வெளியிடும்.

ஆகவே லேடிக்கு ஜால்ரா போட்ட இந்த செல்லுலாய்டு கும்பல் தற்போது மோடிக்கும் சேர்த்து போடுகிறது. மோடியை வீழ்த்துவதற்கு இந்த மோசடி நட்சத்திரங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP – கார்ப்பரேட் கொள்ளைச் சின்னம்

13

வாழ்வையே விற்பதாகவும் வாங்குவதாகவும் பார்க்கச் சொல்கிற அத்து மீறல்; உழைப்புச் சுரண்டல்; முதலாளித்துவத்தின் கொடூரம்; இவைகள் தான் சன்னல்களுக்கு அப்பால் பிதுங்கித் தள்ளும் அடிவேர்கள்!

விண்டோசின் முடிவு
விண்டோசின் முடிவு

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ்-xp இயங்குதளத்தின் சேவையை அடியோடு நிறுத்தி செவ்வாயோடு செவ்வாயாக ஒரு வாரம் ஆகியிருக்கிறது. மைக்ரோசாப்ட் இயக்குநர் டிம் ரெய்ன்ஸ் ஏப்ரல் 8-ம் தேதி விண்டோஸ்-xp இயங்குதள சேவையை நிறுத்துவதாக அறிவிப்பதற்கு முன்னரே பிரிட்டனின் மிகப்பெரும் ஐந்து வங்கிகள் 100 மில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ 620 கோடிகள்) மென்பொருள் புதுப்பித்தலுக்காக செலவிட்டிருக்கின்றன.

ஆருத்ரா தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கட் வாங்கும் இந்தியாவில் இதன் நெருக்கடி மிகவும் பலமாக இருக்கிறது. இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் 34,000-க்கும் மேற்பட்ட கிளைகள் இதனால் பாதிப்படையலாம் என்கிறது இந்திய வங்கியாளர்களின் கூட்டமைப்பு. ஒரு நாளில் தோரயமாக 1,100 கோடி ரூபாய்க்கான வணிக வாய்ப்புகள் பாதிக்கும் என்றும் மூன்று நாளில் ஏற்படும் இழப்பு ஏறக்குறைய 3,300 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறது இவ்வமைப்பு.

2001-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ்- XP இயங்குதளம் 13 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று நிறுத்தும் அளவிற்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது? ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லையென்பதுதான் பிரச்சனையே! அசென்ஷியஸ் கன்சல்டிங்கின் தரவுகளின்படி இந்தியாவில் 40 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரையிலான கணிணிகள் விண்டோஸ்- xp இயங்குதளத்தில்தான் இயங்குகின்றன.

இடையில் கொண்டுவரப்பட்ட விண்டோஸ் விஸ்டா படுத்துவிட்டது. அதன்பிறகு கொண்டு வரப்பட்ட விண்டோஸ்-7, இதுவரை வந்த தொகுப்புகளின் பிரதிபலிப்பாகவும் பளபளப்பாக தோன்றும் திரையைத்தவிர (புலிகேசியின் பாணியில் ஆட்டு மூத்திரத்தை விளம்பரப்படுத்தினாலே வாங்கி குடிக்கும் நுகர்வு கலாச்சாரத்தை மைக்ரோசாப்ட் கையாண்டது) அச்சு மாறாமல் அப்படியே வந்தது.

இங்கு இருந்துதான் பில்கேட்ஸ்க்கு எரிச்சல் ஆரம்பித்திருக்க வேண்டும். அதாவது விண்டோஸ்-7ன் விற்பனையை உயர்த்துவதற்காக 2010-லேயே விண்டோஸ்- xpயின் விற்பனை நிறுத்தப்பட்டது. xpக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்பான மென்பொருள் புதுப்பித்தல்கள் மட்டும் தொடர்ந்த நிலையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளாய்ட் கணினிகளின் சந்தையை பிடிக்கும் பொருட்டு சொட்டு மருந்தாக 2012 அக்டோபரில் விண்டோஸ்-8 சந்தையைத் தொட்டது. (நீங்கள் கணினியை பயன்படுத்துவது குறித்த தகவல்களை உளவு பார்ப்பதில், விண்டோஸ் 8 பல மடங்கு முன்னேறிய ஒன்று என்பது தனிக்கதை.)

பில் கேட்ஸ்
2001-ல் விண்டோஸ் XP யை அறிமுகப்படுத்தும் பில் கேட்ஸ்.

இப்பொழுதும் வாடிக்கையாளர்கள் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. எச்சரிக்கை மேல் எச்சரிக்கையாக விடுத்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். போர்ப்ஸ் இதழ் மைக்ரோசாப்டிற்கு தன் கரிசனத்தை இப்படியாக வெளியிட்டது; மூன்றில் ஒரு பங்கு மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்கள் விண்டோஸ்- xp இயங்குதளத்தைப் பயன்படுத்துவதாகவும் 36 சதவீதம் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கைக்குப் பின்னரும் தொடர்ந்து xp இயங்குதளத்தையே பயன்படுத்துவதாகவும் தெரிவித்ததோடு நில்லாமல் இதிலிருந்து தப்புவது எப்படி என்று 10 விதமான ஆலோசனைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது.

நம்மவர்கள்தான் ஆகச் சிறந்த அடிமைகள் ஆயிற்றே! ரிசர்வ் வங்கி கடந்த மாதம் முதலே வங்கிகளுக்கு மென்பொருள் புதுப்பித்தல் தொடர்பாக நினைவூட்டலை ஊட்டியது. இந்தியாவில் 16 சதவீதம் அளவிலான ஏடிஎம்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்கின்றனர். பணம் எடுப்பதற்கும் வங்கி கணக்குகளை சரிபார்ப்பதற்கும் மிகவும் எளிய விண்டோஸ்- xp இயங்குதளமே போதுமானது எனும் பொழுது தவிடு தின்னும் அரசனுக்கு அமைச்சர் முறம் பிடித்த கதையாக வலுக்கட்டாயமாக இயங்குதளத்தை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன இந்தியப் பொதுத்துறைவங்கிகள். விண்டோஸ்- xp இயங்குதளம் மாற்றப்படா விட்டால் வைரசுகளாலும் ஹேக்கர்களாலும் மிகப்பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். இது ஒரு அளவில் தொழில்நுட்ப பிரச்சனைதான். ஆனால் யாருக்கு? பில்கேட்ஸின் தொழிலில் ஏற்படும் இலாபத்தின் மீதான நுட்பப் பிரச்சனை இது.

வைரசுகள், ஹேக்கர்களின் பங்கு என்ன? நடுத்தரவர்க்கம் நைஜீரியாக்காரனை ஹேக்கராக நினைத்துக் கொண்டிருக்கிறது. மொசார்ட்டும் சிஐஏவும் ஊடுருவ சாத்தியம் இல்லாத கணினிகள் ஏதாவது இருக்கிறதா? முதலாளித்துவ சமூகத்தில் மருந்துகளுக்காகத்தான் நோய்களே தவிர, நோய்களுக்கு மருந்துகள் இல்லையென்பது அனைவருக்கும் தெரியும். ரத்தமும் சதையுமாக இருக்கிற மனிதனின் பாதுகாப்பிற்கே இந்த முதலாளிகள் மயிரளவு மதிப்பும் தரவில்லையெனும்போது ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் வெறும் சிலிக்கான் சில்லில் இயங்கும் கணினிகளை வைரஸிருந்து பாதுகாக்கப் போகிறது என்பது நேர்மையான மோசடி. எப்பொழுதெல்லாம் ஆன்டி வைரஸ் இருக்கிறதோ அப்பொழுதுவரை கணினிகளைத் தாக்கும் வைரஸ்கள் இருக்கும் என்பதுதான் இலாபமீட்டும் விதி என்கிற பொழுது நமது அறிவுஜீவிகள் எதற்கு முட்டுக் கொடுக்கின்றனர் என்பதைப் பரிசீலிக்க வேண்டும். இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் விண்டோஸ்- xp இயங்குதளம் நிறுத்தப்படுகிறது என்பதை உங்களில் யார் ஏற்றுக் கொள்கிறீர்கள்?

கார்ப்பரேட் கொள்ளைச் சின்னம்
கார்ப்பரேட் கொள்ளைச் சின்னம் – மைக்ரோசாப்ட் விண்டோஸ் XP

“நீ நெல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; இருவரும் ஊதி ஊதி தின்போம்” என்ற கணக்காக இந்திய மைக்ரோசாப்ட் கிளையின் பொது மேலாளர் அம்ரிஷ் கோயல் ‘பல்வேறு நிறுவனங்கள் இயங்குதளம் குறித்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை எனினும் சிறப்பு சலுகை விலைகளை மைக்ரோசாப்ட் தரத் தயாராக இருப்பதாக’ காலால் இட்ட உத்திரவை தலையால் அறிவிக்கிறார். மற்றபடி இதன் சாரம் இந்தியாவில் காசுகொடுத்து வாங்கிய சற்றேறக் குறைய 40 இலட்சம் விண்டோஸ்- xp குறுந்தகடுகளை நங்கநல்லூர் ஆஞ்சனேயருக்கு வடமாலையாக சாத்துங்கள், காணிக்கையை மைக்ரோசாப்டுக்கு செலுத்துங்கள் என்பது தான்.

இப்பிரச்சனையின் ஊடாக மூன்றுவிதமான கும்பல்களை நாம் அடையாளம் காணவேண்டியிருக்கிறது.

முதலாவதாக இதை வெறும் இயங்குதள பிரச்சனையாக பார்க்கிறவர்கள், சுதந்திர மென்பொருட்களுக்கான இயக்கத்தை சமூக இயக்கமாக பிரதானப்படுத்துகிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தை நம்பும் இடதுசாரி மாணவர் குழுக்கள் இதில் அடக்கம். உபுண்டு மற்றும் பொதுவான மென்பொருட்களை உருவாக்குவதன் மூலம் இதை தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால் இது பிரச்சனையை ஒரு போதும் தீர்க்காது. மேலும் இது பிரச்சனையை தீர்க்கும் வழியுமல்ல.

நாம் இவர்களிடத்தில் முன் வைக்கும் வாதம் இது தான்; மைக்ரோசாப்டைத் தவிர்த்து மெக்டோனால்ட்ஸ்  (உணவு விடுதிகள்) கடந்த ஆண்டு பல மில்லியன் பவுண்ட் கோழி இறக்கைகள் எஞ்சியிருப்பதாகவும், அவற்றை  எப்படி விற்று தீர்ப்பதென வருடாந்திர அறிக்கைகளில் விவாதித்திருக்கிறார்கள். அவர்கள் வந்தடைந்த முடிவுகளில் ஒன்று மக்கள் வாங்கும் சக்தியற்று இருக்கிறார்கள் என்பது. இதற்காக ஒருவர் இலவச கோழி இறக்கை இயக்கத்தை நடத்துவது சரியாக இருக்குமா? அல்லது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி இலாப வெறியை அம்பலப்படுத்துவது சரியாக இருக்குமா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். மற்றபடி இலவச மென்பொருட்களுக்கான இயக்கம் வெறும் பிழைப்புவாதமன்றி வேறல்ல.

இரண்டவாதாக ‘முதலாளித்துவ எதிர்ப்பு’ என்பதை வார்ப்புரு அரசியல் (Template Politics) என்று கருதுபவர்கள். அபரிதமான உற்பத்தி, மூலதனக் குவியல் போன்ற சீரழிவுகளை அபாயகரமான முதலாளித்துவம் என்று வரையறுப்பார்களே தவிர முதலாளித்துவம் அபாயகரமானது என்று சொல்வதில்லை. வரலாறு இவர்களை பொறுக்கித் தின்பவர்களாகத்தான் பார்க்கிறது. ஓராயிரம் முறை இவர்கள் இதைச் சொல்லும் பொழுது ஒரு இலட்சம் முறை அது தவறு என்று திருப்பிச் சொல்வதற்கான வாய்ப்புகளைத் முதலாளித்துவம் தான் தருகிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். விண்டோஸ்- xp திரும்பப் பெற்ற விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு என்ன? அபாயகரமான முதலாளித்துவமா? அல்லது முதலாளித்துவம் அபாயகரமானதா?

விண்டோசை மூடுவோம்
விண்டோசை இழுத்து மூடுவோம்

மூன்றாவதாக பிரச்சனைகளை களைய தர்மகர்த்தா முறையை ஆதரிப்பவர்கள். ‘அறம் செய்ய விரும்பு’ என்று முதலாளிகளிடத்தில் கோரிக்கையை வைத்துவிட்டு தொழிலாளிகளிடத்தில் நைச்சியமாக ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று கூறும் நீதிமான்களும் இதில் அடக்கம். மேலும் மதங்கள், மடங்கள், ஆன்மீகப் பெரியவர்கள் எல்லாம் வரிசைகட்டி நிற்கிறார்கள். ஏற்பது இகழ்ச்சி என்பதால் தான் விவசாயிகள் கடன் கட்டமுடியாமால் தன்மானம் காக்க தற்கொலை செய்கிறார்கள். ஆனால் அறம் செய்ய விரும்பும் கூட்டம் ஒரு பக்கம் காசு கொடுத்து வாங்கிய இயங்குதளம் இயங்காது என இறுமாப்புடன் கூறுவதுடன் மறுபக்கம் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை என்று கவுச்சியுடன் அம்மணமாக நிற்கிறது. மல்லையா போன்றவர்கள் திவாலை அறிவித்துவிட்டு மக்கள் பணத்தை சூறையாடுகிறார்கள். உரிமையை தொலைத்த வாடிக்கையாளர்கள் அவலநிலையில் நீதிக் கருத்துகளில் மோசடியாக்கப்படுகிறார்கள்.

இப்பேற்பட்ட கார்ப்பரேட் மாஃபியாவான பில்கேட்சைத்தான்  மாணவர்களின் முன்னோடியாக ஊடகங்களும், கல்வி முதலாளிகளும் இந்தியாவில் முன்னிறுத்துகின்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்தியர் தலைவராக வந்தார் என்றெல்லாம் வெட்கம் கெட்ட முறையில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

ஒரு இயங்குதள விற்பனையை வைத்து முதலாளித்துவத்தை எடைபோட அவசியமேயில்லை. உண்மையில் சொல்லப்போனால் தொகுப்பாக நாம் வைத்த வாதங்கள் நடுத்தரவர்க்கத்தின் கோரிக்கையாகத்தான் எஞ்சியிருக்கிறது.

ஆண்டைக்கும் அடிமைக்கும் நடக்கும் வர்க்கப்போராட்டத்தில் அதாவது ‘ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கானவர்களின்’ போராட்டத்தில் நடுத்தரவர்க்கம் வாழ்வையும் இன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும், வாங்குவதாகவும் விற்பதாகவும் பார்த்துப் பழக்கப்பட்ட முதல் கூட்டம். இதே முதலாளித்துவத்தின் கொடூரத்தை பாட்டாளி வர்க்கம் அதாவது தன் உடல் உழைப்பை விற்றுப் பிழைப்பவர்கள் எந்தளவுக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நோக்கும் பொழுது நமக்கான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு ‘இரு கைகளாலும் இரு முனைகளிலும் போரடினால்’ மட்டும் போதாது பல முனைகளிலும் போராட வேண்டும் என்பதையே இச்செயல் நமக்கு உணர்த்துகிறது.

சமூக விஞ்ஞானத்தில் சாரமாக ஒன்றை முன்வைப்பார்கள்; ‘முதலாளித்துவம் தனக்கு சவக்குழி தோண்டுவோரையும் சேர்த்தே உற்பத்தி செய்கிறது’. அப்படியானால் விண்டோஸ் இயங்குதளத்தில் இதை எழுதி அதன் மூலமாகவே நீங்களும் வாசிக்கீறிர்கள் என்பது தற்செயலான நிகழ்வல்ல!

– தென்றல்.

மேலும் படிக்க

நாவம்மாத்தா யாருக்கு ஓட்டுப் போடுவார்?

1

“ஒரு துளி மை… உரிமை, கடமை, பெருமை” என்பது போன்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளும், கிராமப்புற மக்கள் மனதில் எந்தக் கட்சி பெரும்பான்மை இடத்தை பிடித்துள்ளது என்று ஊகங்களுமாக அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்று தேர்தல் குறித்த செய்திகள் அனல் பறக்கும் இந்த நேரத்தில் கிராம வாசியான நான் கிராமத்து மக்களுடன் பேசி அவர்களது மனநிலையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிராமத்துப் பெண்
படம் : நன்றி ஜெகதீஸ்வரன் http://sagotharan.wordpress.com

தேர்தல் குறித்து பேசணும்னு நெனச்சதும் முதலில் ஞாபகத்துக்கு வந்தது நாவம்மா ஆத்தா.

1996 சட்டமன்ற தேர்தல் நடந்தப்ப எனக்கு ஓட்டு போடும் வயசு, ஆனா வாக்காளர் பட்டியல்ல என் பேரு இல்ல. கல்யாணம் முடிஞ்சு வெளியூருக்கு போய்ட்ட பக்கத்து தெரு பொண்ணோட ஓட்டு வீணா போகுதுன்னு ஆயாசப்பட்ட உள்ளூர்ல உள்ள கட்சிக்காரங்க, கட்டாயப் படுத்தி கள்ளவோட்டு போட கூப்பிட்டாங்க.

“எலக்சன்னு ஊரே திருவிழா கூட்டமா இருக்கு, கட்சிக்காரங்க வாங்கி குடுத்த தண்ணிய ஊத்திட்டு ஒவ்வொருத்தனும் தலமாண்டு நிக்கிறானுங்கெ. ஓட்டு போட்ற எடத்துல நாலு தெரு ஆம்பளைங்களும் இருப்பாங்க. வயசுப் பொண்ண ரோடு சுத்தி அனுப்ப சொல்றீய கெழவி. ஒனக்கு கூறு இருக்கா” என்று என் அம்மா பொலம்பியத அலச்சியப் படுத்தி என்னை போக சொன்னா நாவம்மாத்தா.

“ஆமா ஒம்மக அப்புடியே கிளி மாரி இருக்கா, கொத்திட்டு போப்போறாங்கெ. போடி இவளெ! ‘மரியாத இல்லாம ரப்பு ரப்புன்னு போறா பாரு’ன்னு சொல்றவனுவ ஆம்பளைவ்வொ, அவனுவொளெ வந்து மதிச்சு கூப்புட்றானுவொ. இவவேற வூட்டுக்குள்ளேயே அடஞ்சு கெடக்கணுங்கறா. நீ போடி, ஒங்க அம்மா கெடக்கா. நீ போயி மாடி வீட்டுக்காரெ சொல்ற கச்சிக்கு ஓட்ட போட்டுட்டு வாடி. எப்புடியாவது இந்த தடவ செயிச்சுப்புட்டா எம்மகனுக்கு வேல வாங்கி தர்ரேன்னு சொல்லிருக்கான்”. 18 வருசத்துக்கு முன்னால நான் ஓட்டு போடுறதுக்கு சப்போட்டா இருந்தது நாவம்மாத்தா. இப்படி பேசிய நாவம்மாத்தா இன்னைக்கி என்ன சொல்றான்னு பாப்போம்.

“என்னாத்தா இந்த தடவ யாருக்கு ஓட்டு போடப் போற?”

“மயிருக்கு போட்றென் ஓட்டு. போரியல்ல (போர்வல்) போயி தண்ணி எடுக்குறேன்னு விழுந்து வாரி கால கீழ ஊண முடியாம கெடக்குறேன். இவய்ங்கெளுக்கு ஓட்டு போடலன்னா மோசமாம்! நெனவு தெரிஞ்ச நாளுமொதலா, எவம் போரியலு தொறந்துடுவா, ஒரு கொடம் தண்ணி தூக்கிட்டு வரலான்னு தொன்னாந்துட்டு இருக்கறதே பொழப்பா போச்சு. தண்ணிக்கி ஒரு வழி செய்ய மாட்டேங்கறாய்ங்கெ ஓட்டு ஒன்னுதான் கொறச்ச” என்று வெறுப்போட சொன்னா.

“ஓட்டு போட்றது நம்ம கடமன்னெல்லாம் சொல்றாங்க, நீ அவமதிச்சு பேசுறீயேத்தா?”

“மாடி வீட்டுக்காரனுக்கு ஓட்டுப் போட்டோம், இன்னொரு மாடிவீடு கட்டிட்டான். மேலத்தெரு தொப்பைக்கி ஓட்டுப் போட்டோம், அவெம்பாரு நெல்லரைக்கிற மிசுனு கட்டுனான். அம்பலக்காரவூட்டு காசிக்கி ஓட்டுப் போட்டோம், ஊருல பாவப்பட்ட சனம் நடவு நட்டுட்டு இருந்த கோயில் நெலத்த புடிங்கி அண்ணாங்காறன்ட குடுத்துட்டான். ஏவ்வீட்டுக்காரு சாவறதுக்கு முன்னாடிலேர்ந்து ஓட்டு போட்றேன், நமக்கு ஒன்னும் நடக்கல. ஒழுவுற வீட்டுக்கு ஓல போடாய்க்கல, இந்த மண்ண பேத்துட்டு ஒரு சிமெண்டு போடாய்க்கெல. நம்ம பொழப்பு நாறுது கடமெ உரிமென்னுட்டு வந்துட்டா”.

“ஆத்தா நீ ஓட்டு போட்டதா சொல்றது எல்லாம் பஞ்சாயத்து தலைவர தேர்ந்தெடுக்குற தேர்தல். இப்ப பிரதமர தேர்ந்து எடுக்குறதுக்கான தேர்தல். இதுல யாருக்கு ஓட்டு போடுவே?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நம்மூருகாரய்ங்கெதான வந்து ரெட்டலைக்கி போடு, கை சின்னத்துக்கு போடு சூரியனுக்கு போடுன்னு கேக்குறாய்ங்கெ. நீ சொல்றதெல்லாம் எனக்கு தெரியாது. “

“நம்மூர் காரவங்கள விடுத்தா. பெரிய தலைவர்கள் இருக்காங்கள்ள அவங்களுக்கு யாருக்கு ஓட்டு போட்டே?”

“ஏன்டி ஒம்மா வீட்ல இல்லையா, வேல பாக்காம இங்க வந்து வம்பு வளத்துகிட்டு இருக்க” என்று அலுத்துகிட்டு, “முன்னாடி இந்துராகாந்தி மொதலமச்சரா இருந்தப்ப அந்தம்மாவுக்கு ஓட்டுப் போட்டேன். செயலலிதா மொதலமச்சரா இருந்தப்ப இந்த அம்மாவுக்கு ஓட்டுப் போட்டேன். நம்மளாட்டம் அவங்களும் ஒரு பொம்பளையாச்சே பாவன்னு ஓட்டு போட்டேன்”.

“செத்துபோன இந்திரா காந்தி பிரதமர், செயலலிதா முதலமைச்சர்?, ரெண்டையும் கொழப்பறையே”

“யாரா இருந்தாலும் நம்மள ஆள்றவங்கதானேடி அவங்க.

“அதுவும் சரிதான். ஆனாலும் இத்தன வருசம் ஓட்டு போட்றே ஒருத்தரும் ஒரு நல்லதும் செய்யல. யாரும் சரி இல்லேங்றீயாத்தா?”

“இந்தரா காந்தி அம்மா நல்லவங்க. முன்னெல்லாம் மழ(ழை) பேஞ்சா நம்ம ஓட வாக்யால்ல நெரம்பி தண்ணி போவும். நம்ம ஊருக்கு மேற்க இருக்குற எந்த ஊருக்கும் போக முடியாது. ஆத்துல நடுப்பறி கயித்த கட்டிதான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகணும். அந்தம்மா மொதலமச்சரா இருந்தப்பதான் பாலம் கட்டுனுச்சு. எம்மகனுக்கு பாசுபோட்டு குடுத்துச்சு. இன்னொங் கொஞ்ச காலம் இருந்துருந்தா எம்புள்ளைக்கி வேல கெடச்சுருக்கும். எம்புள்ள துபாய் போனப்ப மறக்காம இந்தரா காந்தி சமாதிக்கி போயி பூவெல்லாம் போட்டு கும்புட்டுட்டு போனான். அந்தம்மாவெதான் பாவி பயலுவொ அனியாயமா கொன்னுபுட்டாய்ங்கெ” என்று தன் பரிதாப நிலையை மறந்து இந்திரா காந்திக்கு இரக்கப் பட்டாள் நாவம்மாத்தா.

“என்னாத்தா, அன்னைக்கி என்னைய கள்ள ஓட்டுப் போட, உற்சாகமா போக சொன்ன இப்ப ஓட்டு போடமாட்டேன்னு ஏத்தா தலகீழா பேசுறே?

“எங்க வீட்டுக்காரு செத்தப் பிறகு படாத கஷ்டமுல்ல, இருந்தாலும் கடன ஒடன வாங்கி பட்டப்படிப்பு படிக்க வச்சேன். பஸ்சுக்கு போக கூட காசுருக்காது, போட்டுட்டு போக ஒரு நல்ல சட்ட இருக்காது எப்புடியாவது படிக்க வச்சுட்டா ஒரு வேல கெடச்சுரும் நம்ம பாரம் கொஞ்சம் கொறையுன்னு ஆசபட்டேன். நான் சொல்ற கச்சுக்கு ஓட்டுப் போடு, ஒம்மகனுக்கு வேல வாங்கி தர்ரேன்னு எல்லாப் பயலும் சொன்னாங்கெ. அவைங்கெ சொன்னதெல்லாம் தண்ணிலெ எழுதுன எழுத்தாப் போச்சு. நம்மூர்ல ஒரு வேல கெடச்சுருந்தா ஏம்புள்ள வெளிநாடு வரைக்கும் சம்பாதிக்க போயி செத்து கண்ணாடி பொட்டில பொணமா வந்துருக்க மாட்டானே”ன்னு மகன் ஞாபகம் வந்தவளாய் தலையிலேயே அடிச்சுகிட்டு அழ ஆரம்பித்தாள்.

“அழாதாத்தா நான் ஏதோ கேக்கப் போயி ஒம்மகனெ ஞாபகப் படுத்திட்டேனோ?”

“ஏதோ கேக்கப் போயின்னு யாஞ்சொல்ற உண்மெ அதானே! வேல கெடைக்குன்னுதான் படிக்க வச்சேன், கெடைக்கெல. இருந்த ஒரு ஏக்கர் நெலத்தையும் வித்துட்டு சம்பாரிக்க வெளிநாடு போனான். எங்க கால சூழ்நெல, பின்னாடியே எமன் போயி உயிர பறிச்சுப்புட்டான். அங்க உள்ளவெ யாரோ கொன்னுட்டானுவொன்னு சொல்றாங்கெ, வேல தாங்காம நெஞ்சடச்சு செத்துட்டான்னு சொல்லாங்கெ. அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம். நெலத்துக்கு நெலமும் போயி பிள்ளைக்கி பிள்ளையும் போயி இன்னைக்கி எங்குடும்பம் அனாதையா நிக்கறதுக்கு காரணம் இவனுங்கதானே.

ஏம்புள்ள செத்ததுல இருந்து நானு ஓட்டு போடல. என்னா பண்ண. முடிஞ்சுச்சு அவைங்கெளால. எம்புள்ள செத்த பணத்த வச்சு லச்சலச்சமா கொட்டிக் கொடுத்து எம்பேரப்புள்ள படிக்கிறான். அவனுக்காவது ஒரு கெவுரு மெண்டு வேல கெடைக்கிதான்னு பாப்போம்”ன்னு மகன் இறந்த துக்கம் தொண்டைய அடைக்க தள்ளாத வயதுலயும் தன் நம்பிக்கைய பேரன் மீது மாத்தி பேசினாள்.

சாதி, அடிமைத்தனம், பிற்போக்கு சடங்கு இதெல்லாம் கடைபிடிச்சு நம் வாழ்க்கையில் மாறியது என்ன என்பதை தன் வாழ்க்கை சூழலிலிருந்து புரிந்து கொள்ளும் பாமர மக்கள் அதை தூக்கி எறிந்து விட்டு அதிலிருந்து வெளிவருகிறார்கள். அதுபோல ஓட்டு போடுறது சடங்குதான்னு கிராம மக்களால் அறிவு பூர்வமாக உணர முடியலைனாலும், இந்த தேர்தலும் நமக்கான உரிமையை வழங்கி நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது என்பதை நடைமுறையில் இருந்தே புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு நாவம்மாத்தா ஒரு உதாரணம்.

– சரசம்மா

தேர்தலை புறக்கணிப்போம் – கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்

1

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு ! கூடங்குளம் அரங்க கூட்டப் பதிவுகள் !

னித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் 14-4-2014 அன்று திங்கள் கிழமை மாலை 3-00 மணிக்கு கூடங்குளம் அற்புதம் சாமுவேல் திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டமும் – கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூடடத்திற்கு முதல் நாள் மாலையிலும், மறுநாள் காலையிலும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் கூடங்குளம் பகுதி மக்களுடன் இணைந்து தெருக்களில், கலைக் குழு தோழர்களின் இசை முழக்கத்தோடு துண்டறிக்கை விநியோகம் செய்து கூட்டத்திற்கு அழைத்தனர். அங்கு வந்த காவல்துறை, “இது தேர்தல் நேரம் பறையடிக்க கூடாது” என்றது.

“துண்டறிக்கை விநியோகம் செய்கிறோம், வீட்டுக்குள் இருக்கும் மக்களை வெளியே அழைக்க பறையடிக்கிறோம்” என்று பதிலளித்தோம். உயர்நீதிமன்ற உத்தரவு இருந்ததால் கையைப் பிசைந்த காவல்துறை, “பிரச்சனை ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிச் சென்றனர்.

அதன்பின் கூட்டம் துவங்கும் முன் அரங்கின் அருகில் வேன், ஜீப்பில் வந்த காவல்துறை கூட்டத்திற்கு வரும் மக்களை மிரட்டும் வகையில் வீடியோ எடுத்தது. வழக்கறிஞர்கள் சென்றவுடன் வீடியோவை மறைத்துக் கொண்டது. கூடங்குளம் காவல் ஆய்வாளரோ ஜீப்பில் ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து மக்களை அச்சுறுத்தினார். இத்தனை அச்சுறுத்தலையும் மீறி மக்கள் கொஞ்சம்,கொஞ்சமாக கூட்ட அரங்கிற்கு வரத் தொடங்கினர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்தோடு கூட்டத்திற்க்கு வந்தனர். இடிந்தகரை ஊர்கமிட்டி சார்பில் கவுன்சிலர் புனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக் குழுவின் பாடலோடு அரங்கக் கூட்டம் தொடங்கியது. தலைமை உரையாற்றிய, மனித உரிமைப் பாதுகாப்பு மைய மதுரை மாவட்ட துணைச் செயலாளரும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன்

“காவல்துறை அச்சுறுத்தல், நெருக்கடிகளை மீறி இக்கூட்டத்திற்கு கூடங்குளம் மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். நாடு முழுவதும் தேர்தலில் உள்ளபோது 3&4-வது அணு உலைகளுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்களோ, ஒப்பந்தங்களோ மேற்கொள்ளக் கூடாது என்ற நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வாங்கி இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதாரண பொதுக்கூட்ட அனுமதிக்கே சாமியாடும் தேர்தல் ஆணையம் இம்மாபெரும் அநீதியை, மத்திய அரசோடு சேர்ந்து இழைத்துள்ளது. இதை தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சியும் பேசவில்லை. இது மக்களுக்கு இழைக்கப் பட்ட மாபெரும் துரோகம். இன்றுவரை இயங்க முடியாமல் உள்ள கூடங்குளம் அணு உலை, ஒரு தோற்றுப்போன திட்டம். தற்போது டீசல் மூலமே அணு உலை இயக்கப்படுகிறது.

அரங்கில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி தேவை இல்லை என்பது உலகறிந்த சட்டநிலை. ஆனால் அரசியல் சட்டத்தையே காவல்துறை கூடங்குளத்தில் மதிக்கவில்லை. துண்டறிக்கை கூட விநியோகிக்கக் கூடாது என்கிறார்கள். இது காசுமீரில் கூட இல்லாத நிலை. கூடங்குளம் போலீசு ஆட்சியின்கீழ் உள்ளது. இதை மாற்ற வேண்டும்.

மார்ச் -19, செப் -20 போராட்டத்தின் போது கடல்வழியாக வந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் போராட்டத்தில் பங்கேற்றோம்; இடிந்தகரை மக்கள் மீது போலீசு தாக்குதல் நடத்திய போது போலீசை தாக்கிய வீரமிக்கமக்கள் கூடங்குளம் மக்கள். அன்று ஜெயலலிதா உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என கூறிவிட்டு, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மக்கள் மீது தடியடி நடத்தினார்.

காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு கட்சிகளுமே அணுஉலைக்கு ஆதரவாகவே உள்ளது. உச்சநீதி மன்றம் ஊழல் நீதிபதிகளின் கைகளில் உள்ளன. அந்த உச்சநீதிமன்றமே பொய் வழக்குகளை வாபஸ் பெறுமாறு சொல்லியும் கேட்க மறுக்கிறது போலீஸ். தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஜெ, ஸ்டாலின், விஜயகாந்த், யாருமே அணுஉலை பற்றி வாயே திறக்கவில்லை. கேஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியினர் அணு உலை பற்றி நிலைப்பாடே எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

அணு உலை விசம் என்பது தெரியும். விசம் குடித்தால் சாவு என்பதும் தெரியும். ஆனால் விசம் குடிப்பதா?இல்லையா? என்ற முடிவெடுக்கவில்லை என்பது அயோக்கியத்தனம். ஓட்டுப் பொறுக்கும் யாரையும் நம்பி நாம் இருக்க முடியாது. இந்தியாவில் இன்றும் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் எல்லாம் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளது. முல்லை பெரியாறு போராட்டத்தில் 1 லட்சம் மக்கள் கேரள எல்லைக்குச் சென்றார்கள். போலீசால் தடுக்க முடியவில்லை. கேரள அரசியல்வாதிகள் மிரண்டு போனார்கள். தமிழக ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளை நம்பாத போராட்டம் அது. அணையை உடைக்கும் பேச்சையும் போராட்டத்திற்குப் பின் நிறுத்தி விட்டனர். அது போல நாம் இந்தப் போராட்டத்தை நடத்த முடியும். இழப்பில்லாமல் எதுவும் பெற முடியாது. நந்திகிராம் மக்கள் போராட்டம், நியமகிரி மக்கள் போராட்டம் நமக்கு முன்னுதாரணம். மீண்டும் ஒரு விடுதலைப் போரை கட்டியெழுப்புவோம்.

ஒவ்வொரு ஊரிலும் 100 இளைஞர்கள் இப்பகுதியிலிருந்து வந்தால் அரசை எதிர்த்துப்  போராடுவது நடக்காத ஒன்றல்ல. எங்கள் மீதும் கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. என்ன செய்தது போலீஸ். காரணம், நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதே. சிறைக்கு சென்றாலும் திரும்ப வந்து போராடுவோம் என்ற காரணத்தால் எங்களைக் கைது செய்யவில்லை. போலீசுக்கு அஞ்ச வேண்டாம். நாங்கள் வழக்கு நடத்துவோம். உங்கள் பிரச்சனையை தேர்தலில் யாரும் பேசவில்லை. எனவே ஓட்டு போட்டுப் பயனில்லை. இது மக்களை நம்பிய போராட்டம். தேர்தல் தீர்வைத் தராது. தேர்தல் நாளை கருப்பு தினமாக அறிவிப்போம். ஓரு நீண்ட காலப் போராட்டத்தில் ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து நிச்சயமாக ஒருநாள் அணு உலைகளை மூடுவோம்.”

கூடங்குளம் வெங்கடாசலபதி

நம்மூர் போராட்டத்திற்கு வெளியூர்காரர்கள் நமக்கு வரவேற்பளிக்கிறார்கள். இது நமக்கு வெற்றியை தேடித்தரும். நாம் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய போராட்டம். எனவே நாம் மட்டும் போராடி வெற்றி பெற முடியாது. நாம் பயந்துவிடும் மக்கள் அல்ல. இருந்தாலும் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் அணு உலை வேண்டும் என்கிறார்கள். வல்லரசு நாடாக நம் நாடு மாற வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். நல்லரசுதான் வேண்டும். தேர்தல் கட்சிகள் அனைத்தும் மக்கள் விரோதமானவை. அவர்கள் பங்கேற்கும் தேர்தலை புறக்கணிப்போம். கடலூர் சிறைக்கு செல்லும் போது ம.க.இ.க., பு.மா.இ.மு தோழர்கள் இரவு 2 ம்ணிக்கு நம்மை வரவேற்றனர். அவர்கள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் நமக்காக எங்கு போராடக் கூடாது என்று போலீஸ் தடை விதித்ததோ அங்கேயே போராடினார்கள். நமக்கு ஆபத்து என்றால் தோழர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எனவே போராடுவோம், வெற்றி நிச்சயம்.

உவரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.அந்தோணி

பிறக்கும் போதும், இறக்கும் போதும் போராடுகிறோம். மக்கள் வாழும் இடத்தில் நாசகார அணு உலையை நிறுவி இக்கால, எதிர்கால மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் முயற்சிக்கு எதிராகப் போராட வேண்டும். பொதுத்தேர்தல் நடத்தும் அரசே, அணுஉலை வேண்டுமா? வேண்டாமா? என்று ஓட்டுப்பெட்டி வைத்துப் பாருங்கள். மக்களிடம் கேட்டு முடிவெடுங்கள். அரசாங்கம் அப்படி நடக்குமா? உறுதியாக நடக்காது. இது தான் ஜனநாயகம். நாம் முன்பு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல இடிந்தகரையில் மட்டும் போராட்டம் செய்யாமல் மற்ற பகுதிகளிலும் போராட்டம் நடத்த வேண்டும். இதை ஒவ்வொரு முறையும் இடிந்தகரை சமுதாயக் கூட்டத்தில் நான் சொல்லியுள்ளேன். போராட்டத்தில் முன்னணியாக இருந்த சிலர் பாதை மாறி சென்று விட்டார்கள்.

ஆனாலும் இது மக்கள் போராட்டம். ஏன் அவசரமாக 3-வது, 4-வது அணுஉலைக்கு கையெழுத்து போடப்பட்டுள்ளது? காங்கிரஸ் ஆட்சி மாறும் முன்னர் லஞ்சம் பெற வேண்டும் என்ற காரணத்தாலா? நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

இடிந்தகரை கவுன்சிலர் புனிதா

1,2 அணு உலைகள் தவிர வேறு அணுஉலைகளை திறக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று திருநெல்வேலி கலெக்டரிடம் பேசிய போது உறுதி கூறினார். ஆனால் இப்போது 3, 4-வது அணு உலைகளைத் திறந்தது எப்படி? போஸ்டர் ஒட்டாதே அது பண்ணாதே, இது பண்ணாதே என்று கூறும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பு அணு உலை ஒப்பந்தம் போட அனுமதித்தது எப்படி? இடிந்தகரை மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய போது உடனிருந்தவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம். கலைக்குழு தோழர்களுடன் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். அணு உலையில் இருக்கும் யுரேனியம் பல பெண்களின் கர்ப்பத்தைக் கலைக்கிறது. மிருகங்களின் முடி உதிர்கிறது. கொஞ்சம் பேர் பேசி எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசு கேட்காது. அனைத்து மக்களையும் இணைத்துப் போராடி அணு உலைகளை மூடுவோம்.

நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்புத் தலைவர்- ஜோசப்

கண்ணெதிரே ஒரு கனவை கலைத்து போட்டது காந்தி தேசம். கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்க்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் போராடி வருகிறோம். வெளியூர்களுக்குச் சென்று போராட வேண்டும் என்று கேட்ட போது அதனைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இடிந்தகரை முற்றுகை போராட்டத்தின் போது தடியடி நடத்தப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் இருந்து சட்ட ரீதியாகவும், களத்தில் போராடியும் உதவினார்கள்.

தேர்தல் தீர்வல்ல. போராட்டமே அணு உலையை மூடும் என்பது அடிப்படைக் கொள்கை. மக்கள் நலனுக்காக போராடிய மூன்று பேர் இடிந்தகரையில் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டிருந்தார்கள் அவர்களை மறக்க முடியாது. அவர்களுக்கு நன்றி. எந்த அரசியல் கட்சியும் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை உண்மையாக ஆதரிக்கவில்லை. எனவே தேர்தலைப் புறக்கணிப்போம் என்று கூறினேன். அவர்கள் ஏற்கவில்லை அவர்கள் எலெக்சனில் நிற்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.

இந்த போராட்டத் தலைவர்களைப் போன்றவர்கள்தான் மனித உரிமைப்பாதுகாப்பு மையத் தோழர்களும், ம.க.இ.க தோழர்களும். சாதி மறுப்பு திருமணங்கள் , வரதட்சணை பெறாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் இத்தோழர்கள். பல லட்சம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் உழைக்கும் மக்கள் போராடும் இடங்களிளெல்லாம் சென்று குரல் கொடுப்பவர்கள் ம.உ.பா.மையத் தோழர்கள். தொடர்ந்து அவர்களோடு சென்று நம்பிக்கையோடு போராடுவோம். போராட்டங்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும். 150 ஆண்டுகள் போராடித்தான் சுதந்திரம் பெற்றுள்ளோம்.

தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும் பார்க்காத அரசியலை சுட்டிக்காட்டியவர்கள் ம.உ.பா.மையத் தோழர்கள். ஜனநாயகம் பொய் என்று உணர வேண்டும். தேர்தல் அதிகாரத்தில் அமர்வதற்கும், சுரண்டுவதற்கும் மட்டுமே தவிர, ஜனநாயகம் என்று கூறுவது ஏமாற்று. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஜனநாயகம். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியப் பிரதமரை உருவாக்குகிறது.இந்நாடு உழைக்கும் மக்களுக்கானதல்ல. இன்றோ நாளையோ தங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்று தோழர்கள் போராடவில்லை. 100,500 ஆண்டுகளுக்குப் பின் வரும் சமுதாயத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு தோளோடு, தோள் கொடுத்துப் போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு

மாற்றுக்கருத்தைப் பேச அனுமதிக்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனை மறுப்பது காவல்துறை, கோர்ட், அதிகாரிகள். இது ஜனநாயகமா? இந்நாட்டில் அதிகாரிகளே உண்மையான அதிகாரம் கொண்டவர்கள்.இவர்களை ஒருபோதும் மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. 3 எம்.பி சீட்டுக்காக இப்பகுதி மக்கள் போராடினார்களா? ம.தி.மு.க. உள்ளிட்ட மற்ற சில கட்சிகள் அணு உலையை எதிர்ப்பதாகச் சொல்லியுள்ளார்கள். ஆம் ஆத்மி அணு உலை தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லாத நிலையில் அவர்களை ஆதரிக்கலாமா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு எளிமையானவர், நேர்மையானவர், மக்களுக்காக சிறை சென்றவர். அவரின் தியாகம் தா.பாண்டியன் பொறுக்கித் தின்னத்தான் பயன்படுகிறது. அதேபோல் உதயகுமாரின் தியாகம் ஆம் ஆத்மி பொறுக்கித் தின்னவா?

மன்மோகன் சிங் சொல்லும் வளர்ச்சி யாருக்கானது? தேர்தலில் போட்டியிட்டு நமக்கு என்ன கிடைக்கும்? ஏதாவது உரிமை கிடைக்குமா? வாக்களிப்பதைத்தவிர நமக்கு எந்த உரிமையும் இல்லையென்றால் அது எப்படி நாடாகும்? மக்களை நுகர்பொருளாகக் கருதும் அரசுதான்,கட்சிகள்தான் இங்குள்ளது. நேற்று ஒன்று, இன்று ஒன்று என்று மாற்றி பொய் பேசும் நபர்களை நாம் மதிப்பதில்லை. அதை விட மோசமாக பேசும் இந்த ஓட்டுக்கட்சிகளுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்? அணு உலை ஆபத்து என்பது சிறுவனுக்கு கூடத் தெரியும். அணு உலையின் பின்னணி அரசியல் யாருக்குத் தெரியும்? மயிர் பிளக்கும் விவாதம் அணு உலைக்குத் தேவையில்லை. மக்கள் விரும்பவில்லை, மக்கள் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே அணு உலை வேண்டாம். ஓட்டுக் கட்சிகள் ஏன் இக்கோரிக்கைக்குப் போராடவில்லை?. அஜ்மல் கசாப் மீது நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக போடப்பட்ட தூக்குத் தண்டனை வழங்கக்கூடிய வழக்கு, கூட்டப்புளி சிறுவன் மீதும், இடிந்தகரைப் பெண்கள் மீதும், 67 வயது முதியவர் மீதும் போடப்பட்டது ஏன்? முதல் அணு உலை தோல்வியடைந்து மூடப்பட்டு விட்டது. பாதுகாப்பானது என பிதற்றிய அப்துல்கலாம் இன்று ஏன் பேச வில்லை?

தேர்தலில் பங்கேற்ற பின்னர்தான் சி.பி.எம்., சி.பி.ஐ., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் சீரழிந்தது. மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. துரோகம் செய்தார்கள். ஆம் ஆத்மியுடன் சேர்ந்து அணு உலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு போவதாகச் சொல்கிறார்கள். செப்டம்பர் 10 முற்றுகையின்போது போலீசிடம் உதயகுமார் சரணடையக் கூடாது, நாம் ஒரு குற்றமும் இழைக்கவில்லை என்று மக்களிடம் நாங்கள் பேசினோம். அப்போது உதயகுமார் நான் வெளிநாட்டிடம் பணம் வாங்கவில்லை என்று மாதா கோவிலில் சத்தியம் செய்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

உணர்ச்சிவயப்பட்ட மக்கள் உதயகுமாரை சரணடைய விடாமல் தங்கள் பாதுகாப்பில் கொண்டு சென்றார்கள். வெளிநாட்டில் பணம் வாங்குவது குற்றம், சொந்த நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதால்தான் உதயகுமார் கதறி அழுதார். ஆனால் தற்போது உதயகுமார் சேர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமெரிக்க போர்டு பவுண்டேசனிடம் 4 லட்சம் அமெரிக்க டாலர் பணம் வாங்கியுள்ளார்.

இவ்வாறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதன் நோக்கம், உண்மையான மக்கள் போராட்டத்தின் முனைகளை மழுங்கச் செய்வது தான். அணு உலை எதிர்ப்பு போன்ற பன்னாட்டு நிறுவன, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் மக்களிடையே புகுந்து தீவிரமாகப் போராடுவது போல் நடித்து, போராட்டத்தின் திசையை மாற்றி,போராட்டத்தை வலுவிழக்கச் செய்து, மக்களை விரக்தி அடையச் செய்து, போராட்டத்தைக் கைவிடச் செய்வதே வெளிநாடுகளில் பணம் வாங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணி. இந்தியா முழுவதும் 2 லட்சம் தொண்டு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. அதில் ஒன்றுதான் கெஜ்ரிவாலின் தொண்டு நிறுவனம். ஆம் ஆத்மியில் இணைந்துள்ள ஞானி சொல்கிறார், முன்புதான் கெஜ்ரிவால் பணம் வாங்கினார். இப்போது வாங்கவில்லை என்று. ஆனால் 2014–ம் ஆண்டுக்குப் பணம் கேட்டு கேஜ்ரிவால் விண்ணப்பித்துள்ளார் என்று சொல்கிறார் போர்டு பவுண்டேசனின் இந்தியப் பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக்.

கேஜ்ரிவால் கபீர், பி.சி.ஆர்.எப், பரிவர்த்தன் என மூன்று தொண்டு நிறுவனங்கள் வைத்து நடத்துகிறார். இது இல்லாமல் ஊழலுக்கு எதிராக இந்தியா என்று வைத்திருப்பது தனி. மேலும் இன்று ஆம் ஆத்மியில் பாராளுமன்ற வேட்பாளர்களாக இருப்பவர்களில் பலர் தொண்டு நிறுவனங்களை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். மீரா சன்யால் – பிரதான், மல்லிகா சாராபாய்-தர்பனா, யோகேந்திரயாதவ்-ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். என்ற நிறுவனங்கள் வைத்து பணம் வாங்குபவர்கள்.

அட்மிரல் ராமதாஸ் கூடங்குளம் போராட்டத்திற்கு வந்தவர், மகசேசே விருது பெற்றவர், இவரது மகள் கவிதா போர்டு பவுண்டேசன் தலைமை நிர்வாக அதிகாரி. இந்தியா , இலங்கை,நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பணம் ஒதுக்கீடு செய்பவர். இது போல் மகசேசே விருது வழங்கும் ராக்பெல்லர் பவுண்டேசன் கமிட்டி உறுப்பினர்களில் கவிதாவும் ஒருவர். இவர் கணவர் கல்பீர் அகமது தெற்காசியாவில் ரசியா, சீனா நாட்டு நிறுவனங்கள் அணு உலை அமைக்க விடாமல் அமெரிக்க சார்பிற்காக செயல்படுபவர். அரவிந்த கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்.

ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோதியா, ஜீ.டி.வி. யாதவ் ஆகியோர் சி.என்.என். போன்ற கார்ப்பரேட்டில் பணியாற்றியவர்கள். இவ்வாறு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புதான் ஆம் ஆத்மி கட்சி. தமிழகத் தலைவர் கிறிஸ்டினா சாமியும், அவரது கணவர் ஆரோக்கிய சாமியும் அரஸ்ட், சுவாதி என்ற தொண்டு நிறவனங்களை நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட ஆம் ஆத்மி எப்படி அணு உலையை மூடும்? தேர்தலில் பங்கேற்று அணு உலையை மூட முடியாது. தனியார்மயத்தை ஆதரிக்கின்ற ஆம் ஆத்மி கட்சிதான் ஊழலுக்கு மாற்று என்பதைப் போல மக்களிடம் பொய்க் கருத்து உருவாக்கப்படுகிறது.

விட்டெறிந்த காசுக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று நினைக்கும் ஓட்டுச் சீட்டுக் கட்சிகளுக்கு நாம் பாடம் புகட்டுவோம். மூன்று மாவட்டங்களிலும் மக்கள் வாக்களிக்கவில்லை என தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெட்டியை காலியாக திருப்பி எடுத்து சென்றால் இந்திய செய்தியாக அது மாறி விடும். அந்த நிலையை உருவாக்கி இருந்தால் இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகும் 3,4, அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டு அறிவிக்கும் தைரியம் மத்திய அரசுக்கு வராது. இது போராடும் பிற பகுதி மக்களுக்கு முன்னுதாரணமாக அமையும்.

150 ஆண்டுகள் சுதந்திர போராட்டத்தில் உடனே வெற்றி பெறுவோம் என நினைத்து கட்டபொம்மன் ஆங்கிலேயனை எதிர்க்கவில்லை, மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கவில்லை, திப்பு சுல்தான் சாதாரண வீரனாக போரிட்டு மடியவில்லை. அந்நிய ஆதிக்கம் அநீதியானது அடிமைத்தனமானது. நாட்டுபற்று, மான உணர்வுதான் விடுதலையை சாதித்தது. கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டம் இந்திய முழுவதும் போராடக் கூடிய மக்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. தஞ்சை டெல்டா விவசாயிகளின் மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்புப் போராட்டம், திருவண்ணாமலை ஜிண்டால் எதிர்ப்புப் போராட்டம், சேலம் ஈரோடு கெயில் நிறுவன எதிர்ப்புப் போராட்டம், தாது மணல்- அணு உலைக்கு எதிராக கடலோர தென் மாவட்ட மக்கள் போராட்டம், கிரானைட் கொள்ளைக்கு எதிரான போராட்டம், இதுவல்லாமல் நாடு முழுவதும் நடக்கும் எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் அதிகார பலத்தை கேள்விக்குள்ளாக்கும். ஐந்து மாவட்டத்திற்கு போராட்டத்தை விரிவு படுத்தி மக்களை ஒன்றிணைத்தால் ஐந்து மாவட்ட போலீசார் கூடங்குளத்தில் மட்டும் எப்படி முகாம் இட முடியும்?.

இத்தகைய ஜனநாயகத் தேர்தல் திருவிழா, அரசமைப்பு முறை, பன்னாட்டு முதலாளிகளுக்கானது. வெறும் 650 கோடி முதல் போட்டு 8,000 கோடி லாபம் சம்பாதித்து ரூ 21,000 கோடி வரி மோசடி செய்த பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவை இத்தேர்தல் அரசியல் தண்டிக்குமா? நோக்கியாவை ஓட்டுக்கட்சிகள் எதிர்க்குமா?

அனைத்து ஊழல்களுக்கும் அடிப்படையானவர்கள் முதலாளிகளே. இவர்கள்தான் நாட்டில் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இவர்களை எந்த ஆட்சியும் தண்டிக்காது. வட்டியில்லா கடன், குறைந்த விலைக்கு நிலம், இலவச குடிநீர், சாலை வசதி, 5 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வரி கிடையாது என பல்வேறு சலுகைகள் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து தொழில் திட்டங்களும் இப்படித்தான் செயல்படுத்தப்படுகிறது. இதைத்தான் நாட்டின் வளர்ச்சி என்கிறார்கள்.

எல்லா மக்களும் தனித்தனியே போராடுகிறார்கள். ஆனால் எதிரி பொதுவானவனே. இவர்களை வீழ்த்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்.

மேற்கண்ட உரைகளுக்குப் பின் மக்கள் கலை இலக்கியக்கழக மையக் கலைக்குழுவின் சிறப்பான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் அரசியல், அணு உலைப் போராட்டம், இயற்கை வளங்களை முதலாளிகள் கொள்ளையிடுவது, உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் அவசியம், பகத்சிங் போன்ற ஏகாதிபத்திய – முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் பாதையை மக்கள் தேர்ந்தெடுப்பதின் அவசியம் குறித்தான பாடல்கள் பாடப்பெற்றன.

இறுதியில் காவல் துறையின் இரும்புக் கரங்களுக்குள் மாட்டிக் கொண்டிருந்த கூடங்குளம் மக்கள், அதிலிருந்து வெளியேறும் முதற்படியாக இக்கூட்டத்தை உணர்ந்தனர். பல்வேறு நெருக்கடிகள், விரக்தி, பங்குனி உத்திர திருவிழாவிற்கு நிறைய மக்கள் சென்று விட்ட நிலை என்பதையும் தாண்டி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்புடன் நடந்த இக்கூட்டம் அடுத்த கட்டப் போராட்டத்திற்க்கு மக்கள் தயார் என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது.

தகவல் :

மனித உரிமை பாதுகாப்புமையம்–தமிழ்நாடு
தொடர்புக்கு:
வழக்கறிஞர் சிவராஜ பூபதி
94866 43116
நாகர்கோவில்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

மூன்று தலித் ராமன்களின் அனுமன் சேவை !

2

பாபா சாகேப் அம்பேத்கர் கொள்கைகளின் வழிகாட்டிகளாக சுயதம்பட்டம் அடித்து வந்த மூன்று தலித் ராமன்களின் கதை இது. ராம்தாஸ் அதவாலே, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம் ராஜ் ( இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இவ்வாறே அழைக்கப்பட்டார்; இப்போது உதித் ராஜ் என்று பெயர் மாற்றி உள்ளார். எனினும் முதல் பெயரே அவருக்கு பொருத்தமாக உள்ளது.) ஆகியோர் அதிகாரத்தின் அற்பப் பருக்கைகளை பொறுக்குவதற்காக தமது கொள்கைகளை பா.ஜ.க.வின் தேர்ச் சக்கரத்தில் நசுங்க அனுமதித்துள்ளனர். இவர்களில் பஸ்வான் தன்னை தேர்ந்த பிழைப்புவாதியாக ஏற்கனவே நிலைநிறுத்திக் கொண்டவர். ரயில்வே, தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, சுரங்கம், உருக்கு, ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சராக வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் மன்மோகன் சிங் அமைச்சரவைகளில் பணியாற்றியவர்.

மோடியுடன் 'சமூக நீதி' காக்க புறப்பட்ட தலித் போராளி ராம் விலாஸ் பஸ்வான்
மோடியுடன் ‘சமூக நீதி’ காக்க புறப்பட்ட தலித் போராளி ராம் விலாஸ் பஸ்வான்

மற்ற இரண்டு ராமன்களும் மிகச் சமீப காலம் வரையிலும் பாரதிய ஜனதாவின் வகுப்புவாதத்திற்கு எதிராக  முழக்கமிட்டவர்கள். இவர்களில்அதவாலேயின் சந்தர்ப்பவாதம் அவர் 2009 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்று தனது மந்திரியாகும் கனவு சிதைந்து போனதை அடுத்து வெளிப்பட்டது. அதன் பிறகு முன்னர் சித்தார்த் விகாரின் பாழடைந்த அறையிலிருந்து தன்னை மீட்டு குளிரூட்டப்பட்ட அறையில் மராட்டியத்தின் காபினட் மந்திரியாகும் வாய்ப்பை வழங்கிய, காங்கிரஸ்  கட்சியில் இருந்த தனது ஆசான்களை சபிக்கத் தொடங்கினார். உதித் ராஜின் முந்தைய பா.ஜ.க எதிர்ப்பு நிலையிலிருந்து அடித்த குட்டிக்கரணத்தை விளக்குவது சற்று சுவாரஸ்யமாக இருக்கும். இவர் ராஜஸ்தானின் கோட்டா வேதாகமக் கல்லூரி மற்றும் பாதிரியார் பயிற்சி பட்டறையிலிருந்து முனைவர் பட்டம் பெற்று டாக்டர் உதித் ராஜ் ஆனார்.

ஒரு வகையில் இந்திய ஜனநாயகம் கண்டுள்ள சரிவோடு ஒப்பிடுகையில் தலித் தலைவர்களின் இந்த சந்தர்ப்பவாத வித்தைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த ஏதுமில்லை. இதனை எல்லோரும் தான் செய்து வருகிறார்கள். பிறகு, ஏன் தலித் தலைவர்கள் செய்தால் மட்டும் ஆத்திரம் வருகிறது? இன்னும் சொல்லப் போனால் இவர்களில் பலரும் இதுகாறும் காங்கிரஸ் கட்சியோடு உறவு கொண்டிருந்தவர்கள் தான். அப்போது வராத கோபம் பா.ஜ.க.விடம் போனால் மட்டும் வருவது ஏன்? காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை என்பது உண்மைதான். எனினும் பா.ஜ.க குறித்த எச்சரிக்கை உணர்வு அவர்கள் இதுகாறும் என்ன செய்து வந்தார்கள் என்பதோடு அது சார்ந்து உருவான மக்கள் கருத்தையும் வைத்து எழுந்திருக்கிறது. காங்கிரஸை போலல்லாது பா.ஜ.க ஒரு சித்தாந்தத்தால் உந்தப்பட்ட கட்சி. அதன் மைய சித்தாந்தத்தை சுற்றியிருக்கும் அலங்காரச் சொல்லாடல்களை நீக்கி விட்டுப் பார்த்தால் அது பாசிஸத்தின் சித்தாந்தம் என்பது விளங்கும். இது அம்பேத்கர் கொள்கைகளுக்கு நேரெதிரான ஒன்று. நிலவுகின்ற சூழலுக்கு தம்மை தகவமைத்துக் கொள்ளும் பொருட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஆதரிப்பதாக பா.ஜ.க கூறலாம். ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை கவரும் நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட்டாலும் அவர்களின் சித்தாந்த மனம் இந்த மக்கள் பிரிவுக்கு நிச்சயமாக எதிரானது தான். அம்பேத்கருக்கு துதி ஆராதனை செலுத்திக் கொண்டே அவர் கொள்கைகளுக்கு துரோகமிழைக்கும் இந்த தலித் தலைவர்களின் செயல்பாடுகள் வெறுக்கத்தக்கவை.

அம்பேத்கரின் கொடை!

தனது ஆய்வின் தொடக்கத்தில் அம்பேத்கர் இந்து மதத்தை சீர்திருத்தும் எண்ணத்தோடு இருந்தார். சாதிகளை மூடுண்ட வர்க்கங்கள் என்று கருதினார். அகமண முறையால் இந்த சாதியமைப்பு மூடுண்டதாக நினைத்தார். சாதிக் கலப்பு திருமணங்கள் மூலம் இதில் ஒரு உடைவு ஏற்படும் என்று எண்ணினார். அந்த உடைவு சாத்தியமான பிறகு சாதிகள் ஒழிந்து வர்க்கங்களாக பண்பு மாற்றம் பெறும் என்று நம்பினார். இதனடிப்படையில், அவரது ஆரம்ப கால திட்டங்கள் இந்து சமூகத்தின் தீமைகளை அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்துவதாக இருந்தது. அதன் மூலம் இந்து மதத்தின் சீர்திருத்ததிற்காக முற்போக்கு எண்ணம் கொண்டோரின் கவனத்தை ஈர்ப்பது என்று இருந்தது.

அதில் கிடைத்த மிக மோசமான அனுபவம் அவரை வேறு விதமாக சிந்திக்க வைத்தது. தர்ம சாஸ்திரங்களில் வேர் கொண்டுள்ள இந்து சமூகத்தை சீர்படுத்த இயலாது என்று தெளிந்தார். இந்த தர்ம சாஸ்திரங்களை தகர்த்தால் ஒழிய சாதிகளை ஒழிக்க முடியாது என்று தீர்மானித்தார். இறுதியாக, தனது இறப்புக்கு முன்னதாக சாதிகளை ஒழிக்கும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்தார். அதன்படி, பவுத்ததில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடைய இந்த முடிவு ஒரு பின்னறிவு அல்ல. சாதியொழிப்பு தான் அம்பேத்கரின் மையமாக எப்போதும் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் அவர் செய்தது அனைத்திலும் தலித் மக்களின் அரசியல் அதிகாரத்திற்காக நின்றார். தனது லட்சிய சமூகத்தின் கருத்தாக்கங்களாக அவர் போற்றிய சுதந்திரம், சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்திற்கு பாதகமான சாதியமைப்பை தகர்க்க நினைத்தார். வரலாற்று இயக்கப் போக்கை நிர்ணயிப்பதில் சில தர்க்கங்களும், விதிகளும் செயல்படுவதை மார்க்சியர்கள் அறிந்த முறையில் அவர் அறிந்திருக்கவில்லை. அதன் காரணமாக பயனீட்டுவாதம் (Pragmatism) என்ற கொள்கையை கடைபிடித்தார். தனது கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியர் ஜான் டிவேயிடமிருந்து இதனை பெற்றார்.

இந்துமத வெறியனிடம் சீடனாக பணியாற்றிய அதுவாலே ராமதாஸ்
இந்துமத வெறியனிடம் சீடனாக பணியாற்றிய அதுவாலே ராமதாஸ்

பயனீட்டுவாதம் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் செயல்படுத்தும் போது அவை பெறும் வெற்றியை அவற்றின் பொருத்தப்பாட்டிற்கு அளவுகோலாக கொண்ட ஒரு அணுகல்முறை. பயனீட்டுவாதம் நிரந்தரமான கோட்பாட்டு அணுகுமுறையை விட்டொழிக்கிறது. ஒரு கொள்கையின் நடைமுறை விளைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலம் அது பெறும் அர்த்தம், உண்மைத் தன்மை, மற்றும் பயனைத் தீர்மானிக்கிறது. நோக்கத்தின் நேர்மையும், கடைபிடிப்பவரின் தார்மீக நெறியும் அதன் மூலக் கொள்கையாக இருக்கும். அம்பேத்கரின் போராட்டங்கள் இதற்கு உதாரணமாக அமைகின்றன. பயனீட்டுவாதத்தின் மூலக் கொள்கையில் சமரசம் செய்ய நேர்ந்தால் பயனீட்டுவாதம் எந்த தவறையும் நியாயப்படுத்தும் ஒன்றாக சுருங்கி விடும். அம்பேத்கர் இயக்கத்தின் பின்காலப் பொழுதில் இது தான் நடந்தது. தலித் தலைவர்கள் அம்பேத்கரியம் என்ற பெயரில் தமது சொந்த நலன்களை தீவிரமாக துரத்தினர் எனலாம் அல்லது தலித் நலன்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர் என்றும் சொல்லலாம்.

இந்திய அரசியல் உருவாக்கிக் கொண்ட விதிப்படி உங்கள் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் நீங்கள் மக்கள் ஆதரவு பெற்றவராகி விடுவீர்கள். இந்த நச்சு வட்டம் அதன் தொடக்கப் புள்ளியை கடந்த பின், கட்டுப்படாமல் முன் சென்று கொண்டே இருக்கும். பன்னிரெண்டாம் வகுப்பே படித்த அதவாலே கோடிக்கணக்கான மதிப்புப் பெறும் சொத்துக்களையும் சேர்த்து விட்டு சிறப்புமிக்க கல்வியறிவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின்பால் உறுதியான கடப்பாடும் கொண்ட அம்பேத்கரின் பாரம்பரியத்திற்கு உரிமை கொண்டாடுவதற்கு மேலே கண்ட இந்திய அரசியல் வழமையே காரணம். இது அதவாலேக்கு மட்டுமல்ல; அரசியல் வியாபாரிகளாக மாறியுள்ள அனைத்து தலித் ராமன்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. இவர்கள் அனைவரது வியாபாரமும் அம்பேத்கர் பெயரிலும், தலித் மக்களை மேம்படுத்துவதாக சொல்லியும் நடைபெறுகின்றன.

தலித் நலன் என்றால் தான் என்ன

பசுமை நிலம் நோக்கிச் செல்லும் அம்பேத்கரியர்கள் தலித் நலன் என்று ஜெபித்துக் கொண்டே ஓடுகிறார்கள். இவர்கள் அம்பேத்கர் காலத்திலும் இருந்தனர். அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியில் இணையும் தலித் தலைவர்களை விமர்சித்தார். காங்கிரஸ் ஒரு எரியும் வீடு என்றார். மராட்டியத்தில் அப்போது காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் ராவ் சவான் வீசிய வலையில் அம்பேத்கரியர்கள் விரும்பி வழுக்கி விழுந்தனர். தமது மாறுபட்ட புதிய இடம் தலித் மக்களை மேம்படுத்தும் என்றனர். அம்பேத்கர் மட்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படவில்லையா? என்று தர்க்கம் புரிந்தனர். இப்போதும் அவர்களது தர்க்கங்களுக்கு குறைவில்லை.

பல பிரிவுகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவு தான் பா.ஜ.க. இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியத்தை பறைசாற்றும் அமைப்பு அது. பண்பாட்டையும், மதத்தையும் இணைத்துக் கொண்ட விபரீத ரசக் கலவையான இந்துத்துவத்தை பரப்பும் இவர்கள் அம்பேத்கரியர்களின் வெறுப்புக்குரியவர்களாக இருக்க வேண்டும். பல்லாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவுடன் ஒட்டுறவு இல்லாத நிலைமையே இருந்தது. ஆனால், இதற்கு மேலாக அப்படியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலித் மீன்களை பிடிக்க சமரசதா (அதாவ்து சமூக அமைதி – சமத்துவமல்ல) என்றொரு வலையை வீசி அதில் நல்ல பலனையும் கண்டுள்ளது. அதன் காரணமாக தலித் அமைப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் இடையேயான சித்தாந்த வேறுபாடுகள் இன்று மங்கியுள்ளன. இதில், சுவாரஸ்யமான உண்மை என்னவெனில் இந்த தலித் பிரதிநிதிகள் ஆளும் வர்க்க மற்றும் ‘உயர்’ சாதிய கட்சிகளை தான் தமது காப்பகமாக கருதுகிறார்களே ஒழிய இடதுசாரிகளை அல்ல. தலித் தலைவர்களின் பல்வேறு தவறுகளை சற்று ஒதுக்கி வைத்து பார்த்தால் கூட இடதுசாரிகளே இவர்களின் இயற்கையான நண்பர்களாக இருக்க முடியும். ஆனால், அவ்வாறு இணைய முடியாமல் இருப்பதற்கான ஒரே காரணம் ஆளும் வர்க்க கட்சிகள் அளிப்பவற்றை இடதுசாரிகளால் வழங்க முடியாது என்பதால் தான்.

தலித்துகள் நலன் என்று சொல்லி எதற்காக இந்த குட்டிகரணங்கள் போடுகிறார்கள், அம்பேத்கரிய தலைவர்கள்? 90% தலித் மக்கள் நிலமற்ற கூலிகளாகவும், சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளாகவும், கிராமப்புற கைவினைஞர்களாகவும், சேரி வாழ் மக்களாகவும், நகர வாழ்க்கையோடு இணைந்த முறைசாரா தொழில்களில் ஈடுபடுகிறவர்களாகவும் துயர் மிகுந்த வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பதை இந்த அம்பேத்கரிய தலைவர்கள் அறியாதவர்களா? அம்பேத்கரே இந்த உண்மையை தனது வாழ்வின் அந்திமக் காலத்தில் தான் உணர்ந்து தனது இயலாமையை எண்ணி வருந்தினார். மிகுந்த தந்திரங்களோடு செய்யப்பட்ட சூழ்ச்சிமிகு நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் பசுமைப் புரட்சி திட்டங்கள் மூலம் கிராமப்புறங்கள் வரையிலும் முதலாளித்துவ உறவுகளை  விரிவாக்கம் செய்ததில் இந்த தலித் தலைவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அதே நேரத்தில், இதனால் பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தும் எந்த நடவடிக்கையையும் இவர்கள் மேற்கொண்டதில்லை. தலித் மக்களின் வாழ்க்கையில் இது பெரும் கேட்டை விளைவித்துள்ளது. அவர்களுக்கிடையே இருந்த கூட்டுச் சார்பை சிதைத்து பணக்கார வர்க்கத்தின் கொடிய அடக்குமுறைக்கு உட்படுத்தியது. அது மட்டுமில்லாமல், ‘உயர்’சாதி நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து பின்தங்கிய சூத்திர விவசாயிகளை விடுவித்து பார்ப்பன கொடுங்கரங்களுக்குள் கொண்டு வந்தது.

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் தலித தலைவராக சொல்லிக் கொள்ளும் உதித் ராஜ்
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குடன் தலித தலைவராக சொல்லிக் கொள்ளும் உதித் ராஜ்

இந்த இடைபட்ட காலத்தில் இடஒதுக்கீடு புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டு மறைந்து போனது. கிராமப்புற ஏழை தலித் மக்கள் இடஒதுக்கீடு வாய்ப்புகளை தமது நகர்ப்புற பங்காளி தலித்கள் பறித்துக் கொள்வதை உணர்ந்தனர். கடைசியில் அந்த இட ஒதுக்கீட்டிற்கும் வந்தது ஆபத்து. நடைமுறைக்கு வரத் துவங்கிய புதிய தாராளமயக் கொள்கைகள் இட ஒதுக்கீட்டிற்கு முழு முற்றுப்புள்ளியை வைத்தன. நமது ராமன்கள் கடினமான இந்த உண்மைகளை மறந்து விட நினைக்கிறார்கள். இந்த ராமன்களில் ஒருவரான உதித் ராஜ் அழிந்தொழிந்து போன இட ஒதுக்கீட்டை ஒற்றைச் செயல்திட்டமாக வைத்து நாடு தழுவிய அமைப்பைக் கட்டினார். ஆளும் வர்க்கங்களின் இட ஒதுக்கீடு சார்ந்த மோசடிகளை அம்பலபடுத்தி மக்கள் இயக்கங்களை கட்டுவதற்கு பதிலாக, இட ஒதுக்கீடு என்ற பொய் மானைக் காட்டி மேலும் மக்களை ஏய்க்க ஆளும் வர்க்கங்களுக்கு உழைக்கிறார்கள். 90% தலித் மக்களின் தேவையை உணராதவர்களா இவர்கள்? அவர்களுக்கு நிலம், நியாயமான வேலை, இலவச சமச்சீர் கல்வி, உடல்நலம், ஜனநாயக வெளிப்பாட்டுக் களங்கள், மற்றும் முன்னுதாரணமிக்க சாதி எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவையே முதன்மையான தேவைகள்.

பா.. ராமனின் அனுமன்கள்

நமது ராமன்கள் சில சோற்றுப் பருக்கைகளுக்காக தலித் நலன்களை காவு கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த தலித் ராமன்களில் உதித் ராஜ் மெத்தப் படித்தவர். நேற்று வரை சங் பரிவாரம் மீது மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்தவர். ‘தலித்களும் மதச் சுதந்திரமும்’ என்ற என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் பா.ஜ.க மீதான அவரது தாக்குதல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவர் முதலில் மாயாவதியை துரத்துவதற்காக தனது வியாபார உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். அதில் அவர் தோல்வி கண்ட நிலையில் தலித் மக்களின் ஜென்மப் பகைச் சக்தியான பா.ஜ.கவில் அடைக்கலமாகி உள்ளார். தனக்கு தலித் மக்களிடேயே உள்ள சிறு ஆதரவை அடிப்படையாக வைத்து பா.ஜ.கவுக்கு அனுமன் சேவை வழங்க முன்வந்துள்ளார். உதித்ராஜ் போலல்லாது மற்ற இரண்டு ராமன்களும் – பஸ்வான் மற்றும் அதவாலே ஆகியோர் தமது தலித் ஆதரவு தளங்களை மூலதனமாக வைத்து தங்களுக்குரிய பங்குகளை உயர்த்திக் கொண்டு உள்ளனர். மொத்தம் ஏழு தொகுதிகளை பஸ்வான் பெற்றுள்ளார். அவற்றில் மூன்றை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். தனக்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியுடன் ஒரு மக்களவை தொகுதியையும் பெற்றுள்ளார், அதவாலே.

மறைந்த நாம்திவோ தாசலின் அடியொற்றிய காகிதச் சிறுத்தையாக முன்பு வலம் வந்தவர், அதவாலே. அம்பேத்கர், அம்பேத்கரிய தலித்கள் என்றால் வெறிபிடித்த பகைஞனான பால் தாக்கரேவின் மடியில் சீடனைப் போன்று விழுந்து கிடக்கிறார், அதவாலே. இந்த குட்டித் தலைவர்கள் தமது பழைய கூட்டாளிகளால் ‘அவமானப்பட்ட தலித்களை’ ஆற்றுபடுத்தும் நோக்கத்திற்காக பா.ஜ.கவுடன் இணைந்ததாக விளக்கம் கொடுக்கிறார்கள். தாங்கள் அவமானப்பட்டதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதவாலேயின் அவமானம் அவருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதை அடுத்து தொடங்கியது. தலித் மக்கள் போராடி உயிர்த் தியாகம் செய்து அம்பேத்கர் பெயர் சூட்டப் போராடிய மரத்வாடா பல்கலைக்கழகத்தின் தற்போதைய பெயரையே நீட்டிக்க முடிவு செய்த போது எதிர்ப்பின்றி இசைந்தார், அதவாலே. தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் புரிந்த கிரிமினல்கள் மீதான வழக்குகள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறப்பட்ட போதும் மவுனமாக வெட்கமின்றி இருந்தார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. பஸ்வான் மற்றும் அதவாலேயின் முழு அரசியல் வாழ்க்கையே தலித் மக்களுக்கு துரோகமிழைத்த வரலாறு தான்.

பா.ஜ.கவின் ராமனுக்கு அனுமன் சேவை செய்ய புறப்பட்டுள்ளார்கள், இவர்கள் இப்போது. இவர்களின் முகமூடியை கிழித்தெறிந்து இவர்களது உண்மை முகத்தை அறிந்து கொள்ளவதற்கு இது சரியான நேரம் அல்லவா?
_________________________________________

– ஆனந்த் தெல்தும்டே , நன்றி – EPW – Three Dalit Rams Play Hanuman to BJP
தமிழாக்கம்
: சுகதேவ்