கடந்த 20 ஆண்டுகளாக தென் தமிழக கடற்கரையில் கடல் அன்னையின் மார்பை அறுத்து விற்றுக் கொண்டிருப்பவர் வைகுண்டராஜன். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்களின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்துக் கொண்டிருப்பது மிடாஸ் முதலான சாராய ஆலைகள்.
1974 – 75 களில் அரசின் கனிமவளத் துறையில் வேலை பார்த்த செல்வராஜ் என்ற அதிகாரியும், தூத்துக்குடி மணல் மாணிக்கமும் இணைந்து முதலில் கார்னெட் மணல் கம்பெனி தொடங்கினார்கள். பின்னர் மணல் மாணிக்கம் செல்வராஜை மிரட்டி, விரட்டி விட செல்வராஜை, வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் சந்தித்து தாது மணல் தொழிலில் இறங்கியிருக்கிறார். செல்வராஜ் முதன்முதலில் ரூ 150/- செலவில் வைகுண்டராஜனுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார். சட்டவிரோதமாக கடற்கரை மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கடத்தல் வேலையை செய்து வந்தார் வைகுண்டராஜன்.
1990-ம் ஆண்டு வரை இந்திய அரசின் தொழிற் கொள்கை கனிம வளங்களை அரசு மட்டுமே எடுக்க அனுமதித்தது. தனியாருக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. 1991-ல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியாரும் கனிமத் தொழிலில் அனுமதிக்கப்பட்டனர். 1990-க்கு முன்பு சட்டவிரோதமானவையெல்லாம், பின்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
அரிய வகைக் கனிமங்கள் நிரம்பிய மணல் தாதுவை அள்ளி தொழிற்சாலைகள் மூலம் கார்னெட், இல்மனேட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய தனித்தனி கனிமங்களாகப் பிரித்து, அவற்றை தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இதில் வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான 15 கி.மீ நீளமுள்ள கடற்கரையை 40 ஆண்டுகள் குத்தகைக்கு அரசிடமிருந்து பெற்றுள்ளதோடு, 2300 ஏக்கர்கள் பட்டா நிலங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தங்கள் நிறுவன இணையதளத்தில் தெரிவித்துள்ளனர். இந்த நிலங்களையும் அரசிடமிருந்து மிகக் குறைந்த குத்தகைக்கு தான் பெற்றுள்ளார்கள். உதாரணத்திற்கு இருக்கன்துறை கிராமத்தில் 100 ஏக்கர்கள் அரசு நிலம் ஆண்டுக்கு 16 ரூபாய்க்கு வைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
1 லட்சம் டன் கார்னெட்டில் 4000 டன் மோனோசைட் இருக்கும். இதில் 4 சதவீதம் தோரியம் இருக்கும். கூத்தன்குழி என்ற கிராமத்தில் பாதிப்பேர் வி.வி.-ல் வேலை செய்கிறார்கள். அவர்களில் பலர் வேலை செய்யாமலே ரூ. 5,000 – 10,000 சம்பளம் வாங்குகிறார்கள். கம்பெனிக்கு ஆதரவாக இவர்கள் கலெக்டரிடம் மனுக் கொடுப்பார்கள். எதிர்ப்பவர்களை அடிப்பார்கள். கடற்கரை சமூகத்தையே பிளந்து வைத்துள்ளார்கள். எல்லா ஊர்களையும் பிரித்து வைத்துள்ளார்கள். ஒற்றுமை வரக் கூடாது என வேலை செய்கிறார்கள்.
1991 முதல் 1996 வரை, 2001 முதல் 2006 வரை மற்றும் 2011-லிருந்து தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவே வைகுண்டராஜனின் தொழில் கூட்டாளியாக இருந்திருக்கிறார். மேலும் ஆட்சி மாறினாலும் DEPARTMENT OF ATOMIC ENERGY, MINISTRY OF MINES AND MINERALS அதிகாரிகள், CONTROLLER OF MINES, INDIAN BEREAU OF MINES அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளும், மாநில அரசில் – மாவட்ட ஆட்சித்தலைவர், தாசில்தார், மீன்வளத் துறை, தொழிற்துறை, கனிம மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், தலைமைச் செயலக அதிகாரிகளும் வைகுண்டராஜனுக்கு ஊழியம் செய்து வருகின்றனர்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனது எலைட் டிஸ்லரிசுக்கு பங்கம் ஏற்படாத வகையில் உறவைப் பேணும் ஜெகத்ரட்சகன்
ஆந்திராவில் இராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலத்திலேயே பல கோடி ரூபாய் கைமாறியதன் பலனாக கும்மிடிப்பூண்டி முதல் சிறீகாகுளம் வரை உள்ள கடற்கரை பகுதியில் மணல் எடுக்க வைகுண்டராஜனுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு சாத்தான்குளம், திசையன்விளை பகுதிகளில் வரவிருந்த டாடா-வின் டைட்டானியத் தொழிற்சாலைக்கு தனது அரசியல் செல்வாக்கால் பல்வேறு முறைகளில் எதிர்ப்பு தெரிவித்தவர் என்றால் இவரது செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.
1999-ம் ஆண்டிலிருந்து வைகுண்டராஜன் நிறுவனங்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 96,120 கோடி ரூபாய்கள்.
2003-04ம் ஆண்டில் அம்மாவின் பொற்கால ஆட்சியில் அரசே மது விற்பனையை ஏற்று நடத்துவது என்று முடிவு செய்த போது, அதன் ஒரு முனையில் மக்களின் சங்கை அறுக்கும் போது கொட்டும் ரத்தத்தை உறிஞ்சும் உரிமையை பெற்றவர் வைகுண்டராஜன். வைகுண்டராஜன், அவரது மனைவி, சகோதரர்கள், சகோதரர் மனைவி இன்னும் சிலரை பங்குதாரர்களாகக் கொண்ட மிடாஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 2003-04ல் 12.85 லட்சம் பெட்டி மதுபானங்கள் வாங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் இது 51.04 லட்சம் பெட்டிகளாக அதிகரித்தது.
2006-ம் ஆண்டு அராஜக ஜெயலலிதாவை தேர்தலில் தோற்கடித்து (‘ஜனநாயகத்தின் வெற்றி’) ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஜெயலலிதா தன் அடியாள் வைகுண்டராஜன் மூலமாக சம்பாதிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்கவில்லை. அந்த கொள்ளையில் திமுகவும் பங்கேற்பதற்கு தோதாக அக்கட்சியின் பினாமி ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, மகனுக்குக்குச் சொந்தமான இலைட் டிஸ்டிலரீசுக்கு 2008-ல் உரிமம் வழங்கப்பட்டு 2011-12க்குள் ரூ 712 கோடி விற்பனை வருவாய் அவருக்கு கிடைக்கிறது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு 2012-13ல் அது ரூ 466 கோடியாக குறைகிறது.
மேலும் உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய படங்களை தயாரித்து கருணாநிதிக்கு வசனம் எழுத வாய்ப்பும் அதற்கான ஊதியமும் வழங்கிய ஜெயமுருகன் (அதாவது கருணாநிதியின் பினாமி) நிறுவனமான எஸ்.என்.ஜி டிஸ்டிலரீஸ் 2008-ல் உரிமம் பெற்று 2011-12ல் ரூ 940 கோடி விற்பனையை எட்டியது. 2012-13ல் அது ரூ 834 கோடியாக குறைந்தது.
இதற்கிடையில் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஜெயா-சசி கும்பலின் கொள்ளை தொடர்கிறது. இக்கும்பல் மிடாஸ் நிறுவனத்தை வைகுண்டராஜனிடமிருந்து தம் பெயருக்கு மாற்ற முடிவு செய்கின்றனர்.
2009-10ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தை சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்வீல்ஸ் எஞ்சினியரிங் என்ற நிறுவனங்கள் வாங்குகின்றன. ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் தலா 31% பங்குகளும், ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் 38% பங்குகளையும் வைத்திருக்கின்றன.
90% இளவரசிக்கு சொந்தமான ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா 2008-09ல் ரூ 1.85 கோடியும், 2009-10ல் ரூ 1.92 கோடியும் கடனாக கொடுக்கிறார் (மொத்தம் – ரூ3.77 கோடி). கூடவே ஜெயலலிதாவும் கூட்டாளியாக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் இந்நிறுவனத்துக்கு ரூ 5 கோடி பங்கு விண்ணப்பத் தொகை கொடுக்கிறது. அதாவது ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதாவிடமிருந்து ரூ 8.77 கோடி ரூபாய் தரப்பட்டிருக்கிறது. அதை பயன்படுத்தி மிடாஸ் நிறுவனத்தில் மூன்றில் ஒரு பங்குகளை வாங்கியிருக்கிறது. மேலும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் வைகுண்டராஜனுக்கு சொந்தமான ஃபேன்சி டிரான்ஸ்போர்டுக்கு ரூ 3.06 கோடி 2005-06ல் முன்பணம் கொடுத்தது. இதையும் மிடாஸ் நிறுவனத்துக்கான அச்சாரப் பணம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஜெயலலிதா இந்த பணத்தை எல்லாம் அந்த காலத்தில் அவர் குடி கொண்டிருந்த கொடநாடு எஸ்டேட்டில் அடகு காத்தே சம்பாதித்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டும்.
2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் ஆன பிறகு தி.மு.கவின் பினாமி நிறுவனங்களின் கொள்ளை ரத்து செய்யப்படவில்லை. அவற்றின் வருமானம் குறைக்கப்பட்டு மிடாஸின் வருமானம் அதிகரிக்கப்பட்டது. முந்தைய ஆண்டு ரூ 360 கோடியாக இருந்த மிடாஸின் வரிவிதிப்புக்கான வருமானம் 2011-12ல் ரூ 857 கோடியாகவும், 2012-13ல் ரூ 1,077 கோடியாகவும் உயர்ந்தது. அதாவது இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மூன்று மடங்கு அதிக வருமானம் ஈட்டித் தர அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் ஆர்டர் கொடுத்திருக்கிறது.
2011 மே மாதம் அ.தி.மு.க அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் கடற்கரை மணல் எடுக்க வழங்கப்பட்டிருந்த 43 லைசென்ஸ்களில் 36 வைகுண்டராஜனின் நிறுவனங்களுக்கு தரப்பட்டிருந்தன. மீதமுள்ள 7 லைசென்ஸ் பெற்றவர்களை பொய் புகார்கள் அளித்து தன் அதிகார பலத்தில் செயல்பட விடாமல் தடுத்து விட்டார் வைகுண்டராஜன். அ.தி.மு.க. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அளிக்கப்பட்ட 8,9 லைசென்ஸ்கள் முழுவதும் வைகுண்டராஜனுக்கே வழங்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் பினாமிகளாக சசிகலா கும்பல் செயல்பட்டு வரும் போது ஒரு பேக்-அப் ஆக இருந்தவர் பெரியவர், நேர்மையாளர் என்று நாட்டுக்கே உபதேசம் செய்யும் உபதேசியார் துக்ளர் சோ ராமசாமி. 2011 டிசம்பர் மாதம் சசிகலா ஜெயலலிதாவால் போயசு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, சோ ராமசாமியும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் 9 நிறுவனங்களுக்கும் இயக்குனர்களாக நியமிக்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் சோ ராமசாமி நவம்பர் 2012-ல் இயக்குனர் பதவியிலிருந்து விலகுகிறார். பூங்குன்றன் மார்ச் 2013-ல் விடுவிக்கப்படுகிறார்.
ஆகஸ்ட் 6, 2013-ல் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையில் சட்டங்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி ஆட்சியர் ஆசிஷ் குமார் சோதனைக்குப் பிறகு அறிக்கை வெளியிட்டார். அதாவது, கொள்ளை அடிப்பதை விதிமீறல் இல்லாமல் செய்யலாமே என்ற கடமை உணர்வை மட்டும்தான் அவர் காட்ட முடியும். கொள்ளையையே தடுத்து நிறுத்த எவ்வளவு துடிப்பாக இருந்தாலும் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, முதலமைச்சர், நாட்டின் பிரதமருக்கே அப்படி செய்ய உரிமை கிடையாது. அதைத் தீர்மானிப்பது உலக வங்கியால் அமல்படுத்தப்படும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகள்தான். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வேண்டுமென்றால் இந்த பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையில் வடியும் துளிகளை நக்கிக் கொள்ளலாம்.
அப்படி நக்குவதை அம்பலப்படுத்திய ஆசிஷ் குமார் இரண்டே நாட்களில் இடமாற்றம் செய்யப்படுகிறார். அதே மாதம் ககன்தீப் சிங் பேடி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் அறிக்கை 6 மாதங்கள் ஆகியும் அறிக்கை வெளியிடப்படவில்லை.
இந்த விபரங்களை திரட்டி அ.தி.மு.கவின் ஜெயா-சசி-வைகுண்டராஜன் கும்பலும், தி.மு.கவின் கருணாநிதி-ஜெகத்ரட்சகன்-ஜெயமுருகன் கும்பலும் மாற்றி மாற்றி தமிழகத்தை மொட்டை அடித்துக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி பொதுவில் தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்த்து அரசியல் மேலாண்மை பெற விரும்புகிறது. ஆனால் இந்த விவரங்களுக்கு முன்னரே தமிழகத்தை கொள்ளையடித்த ஜெயா சசி கும்பல் குறித்து ஊரே அறிந்திருந்தாலும் ஆம் ஆத்மி வாயே திறக்கவில்லை.
கொள்கையே இல்லாத, அன்னிய முதலீட்டை அல்லது கார்ப்பரேட்டுகளை எதிர்க்காத ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, வைகுண்டராஜன், ஜெகத்ரட்சகன் போன்ற அடியாட்களை ஒழித்துக் கட்டி விடுமா என்ன? முதலில் தென் மாவட்டங்களில் போட்டியிடும் உதயகுமாரனும், புஷ்பராயனும், சேசுராஜனும் தங்களது தொகுதிகளில் வைகுண்டராஜன் பெயரை வாய் விட்டு சொல்ல முடியுமா?
கார்ப்பரேட் கொள்ளையை சட்டபூர்வமாக நடத்த வேண்டும் என்பதற்காகவே ஓட்டுக் கட்சிகள் மற்றும் அதிகார வர்க்கத்தில் ஊழல், லஞ்சம், அரசின் அதிகார வர்க்க தடைகள் முதலியவற்றை ஆம் ஆத்மி எதிர்க்கிறது. எல்லாம் ‘முறைப்படி’ நடந்தால் இவர்களுக்கு பிரச்சினை இல்லை. எனினும் இந்த முரண்பாட்டில் ஜெயா சசி கும்பல் மற்றும் திமுக, துக்ளக் சோ, வைகுண்டராஜன் அனைவரும் தமிழக வளத்தை சுரண்டியும், சாராயம் விற்றும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்த செய்திகள் வெளியே வந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை சட்டபூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் கொள்ளை அடிக்கும் இரு தரப்பு முதலாளிகளையும் ஒழிக்க வேண்டும் என்கிறோம்.
சொந்த வாழ்க்கையில் யோக்கியன் போல வேசம் போட்ட ஒரிஜினல் பார்ப்பான் சோ, அதிமுகவை எதிர்ப்பதாக நாடகம் போடும் திமுக, ஒரு ரூபாயிலேயே இவ்வளவு சொத்துக்களை குவித்துக் கொண்ட ஜெயா சசி கும்பல், மணலிலேயே மாபெரும் கொள்ளையை நடத்தி, ஜெயாவின் சொத்துக்களுக்கும், அரசியலுக்கும் புரவலராக திகழும் வைகுண்டராஜன் முதலியோரை தமிழக மக்கள் உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்வதற்கு இந்த விவரங்கள் போதுமானது.
பன்னாட்டு சுரண்டலுக்கு நம் நாட்டை பலி கொடுக்கும் இந்த கார்ப்பரேட் மற்றும் ஓட்டுப் பொறுக்கி, அதிகாரவர்க்க கும்பல்கள் உருவாக்கியிருக்கும் மொத்த அரசமைப்பையே தூக்கி எறிவதுதான் நாட்டையும், நம் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி.
பாசிச அடக்குமுறைக்கு எதிராகக் கொந்தளித்து நிற்கும் மக்களை ஜனநாயக – அறவழிமுறைகளைத் தாண்டி போய்விடாதவாறு தடுக்கும் பிரபஞ்சப் பெருங்கடமை முடித்து, ஓட்டுப் பொறுக்கப் புறப்பட்டார் உதயகுமாரன்!
நரேந்திர மோடி, ஜெயலலிதா, பிரகாஷ் காரத் – பரதன் ஆகியோரோடு சுப. உதய குமாரனுக்கும் நமது மக்கள் நன்றி சொல்லவேண்டும். நரேந்திர மோடி – இந்து தேசிய மதவெறி பாசிசம், ஜெயலலிதா – பிழைப்புவாதப் பொறுக்கி அரசியல், பிரகாஷ் காரத், பரதன் – போலிக் கம்யூனிசம், சுப. உதயகுமாரன் – அரசு விதித்துள்ள எல்லையை, தடையை மீறாதவாறு அரசு சாராத தொண்டு நிறுவனங்களின் கீழ் மக்களைத் திரட்டி ஒரு கட்டுக்குள் வைப்பது; இப்படி இவர்களெல்லாம் அறிவிக்காமல் செயல்படுத்திய அவரவர்களுடைய அரசியல் கொள்கை, இலட்சியத்தின் வரம்புகளை மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தையும் கடைக்கோடி எல்லை வரை, நாட்டையும் மக்களையும் இழுத்துக்கொண்டுபோய் அதன் ஓட்டாண்டித்தனத்தையும் நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆம்-ஆத்மி கட்சியின் தொண்டர்கள் புடைசூழச் செல்லும் சுப.உதயகுமாரன்.
இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மக்களுக்குப் புரிய வைத்து, அவர்களைப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டுவதற்கு கம்யூனிசப் புரட்சியாளர்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள். ஆனால், மேற்படி நபர்கள் அதைவிடக் குறுகிய காலத்திலேயே எதிர்மறையில் மக்களுக்குப் புரியவைத்து வருகிறார்கள். இந்த உண்மையை கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கூடவே, இன்னும் சில உண்மைகளையும் போட்டுடைத்து விட்டார். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலைமையேற்று வழிநடத்திய “அரசுசாரா தொண்டு நிறுவனங்களின்” வரம்புகளையும், அப்போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இனி ‘தம் தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்ளவேண்டும், விடைபெறுகிறோம்! தாங்கள் ஓட்டுக்கட்சி அரசியலுக்குப் போகிறோம்!’ என்றும் சொல்லாமல் சொல்லி விட்டார்.
“போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது… இடிந்தகரையில் சில ஆயிரம் மக்களின் போராட்டமாக இருந்த இது, இன்று தமிழகம் முழுக்கப் பரவியிருக்கிறது” என்று நேர்காணலைத் தொடங்கிய உதயகுமாரன், அந்த அடுத்த கட்டம் மீண்டும் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிடப்போவதை நேரடியாகவும், தேர்தல் களத்தில் குதிக்கப்போவதை மறைமுகமாகவும் அறிவித்தார்.
“ஒரு பக்கம், மக்கள் உயிரைக் கடுகளவும் மதிக்காத பொய்களைத் துணிந்து சொல்கிற தரங்கெட்ட பாசிஸ சூழல் இங்கே நிலவுகிறது. இன்னொரு பக்கம், தாதுமணல் கொள்ளையர்கள் இடிந்தகரைக்குள் புகுந்து பணம் கொடுத்தும், சாதிய எண்ணத்தைத் தூண்டிவிட்டும், மிரட்டியும் எங்கள் மக்களுக்குள் பிரிவினையை உருவாக்கி வருகின்றனர். இந்த இரண்டு பிரச்னைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல நாங்கள் எண்ணுகிறோம். இதனால்தான் இங்கிருந்து வெளியேவரும் முடிவை எடுத்துள்ளோம். ஆனால், இந்த முடிவுக்கு மக்கள் இன்னும் சம்மதிக்கவில்லை. இதனால் வெளியேறும் தேதியும் முடிவு செய்யப்படவில்லை.”
“இரண்டு ஆண்டுகளாக எங்களைப் பாதுகாத்தவர்கள் இந்த மக்கள். ஆகவே, ஊர் கமிட்டியிடமும், பெண்கள் – இளைஞர்களிடமும், நாங்கள் முதல்வரைச் சந்திக்கச் செல்லும்போது, ஒருவேளை கைது செய்யப்படலாம். அப்படி நடந்தால், நீங்கள் உங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருந்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். நாங்கள் சிறைக்குச் செல்வதால், இந்தப் போராட்டம் முடங்கிவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறோம்!” என்று போருக்குப் போகும் வீரனைப் போல சிறைக்குச் செல்லப்போவதாக விடைபெறும் உதயகுமாரன் தேர்தல் களத்தில்தான் குதித்தார்! அதற்குமுன் ஓட்டுக்கட்சித் தலைருக்கே உரிய பாணியில் வீராவேச மாகப் பல கேள்விகளை வீசுகிறார்.
“உச்ச நீதிமன்றமே, ‘மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்’ என கூறியிருக்கிறது. உயர் நீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்துகிறது. பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும்கூட இந்தப் பொய் வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று கோருகின்றனர்.
இவர்கள் அத்தனை பேரும் சொல்வதைக் கேட்காமல், வழக்குகளை வாபஸ் வாங்க மாட்டோம் என்றால், எங்கள் மக்கள் அப்படி என்ன தவறு இழைத்தார்கள்? பொதுச் சொத்துகளைக் கொள்ளை அடித்தோமா? சொத்துக் குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறோமா? அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டோமா? இது ஜனநாயக நாடா? அல்லது அதிகாரிகள் தங்கள் மனதின் வன்மங்களைத் தீர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நாடா?”
“இது இடி அமீன் ஆட்சி செய்த உகாண்டா அல்ல; ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனியும் அல்ல. இது ஜனநாயக நாடு. ஊருக்குள் வந்து அடித்துத் துவைத்துப் போட்டுவிட்டுப் போய் விட முடியாது. அப்படிச் செய்தால், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே… அதில் மக்கள் பதில் சொல்வார்கள்!”
இந்த நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உதயகுமாரன் ஒரு தேர்ந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதியைப் போல பேசியுள்ளார். ஆனால், அவர் அளித்துள்ள பதில்கள், எழுப்பியுள்ள கேள்விகள் கபடத்தனங்களை ஒளித்து வைத்துக் கொண்டுள்ளன. உதயகுமாரனே பதில் சொல்ல வேண்டியவையாகவும் உள்ளன.
மக்கள் உயிரைக் கடுகளவும் மதிக்காத, பொய்களைத் துணிந்து சொல்கிற “தரங் கெட்ட பாசிஸ சூழல்” யாரால் உருவாகியது? “தாதுமணல் கொள்ளையர்கள் இடிந்தகரைக்குள் புகுந்து பணம் கொடுத்தும், சாதிய எண்ணத்தைத் தூண்டிவிட்டும், மிரட்டியும் மக்களுக்குள் பிரிவி னையை உருவாக்கி” வருவது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? இந்த இரண்டு பிரச்சினைகளையும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு உதயகுமாரன் எடுத்துச்சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
“மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்று உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் கூறியும் அதைக் கேட்காமல், வழக்குகளை விலக்கிக் கொள்ளாமல், உச்ச நீதி மன்றத்தில் வழக்காடுவது யார்? ஜெயலலிதா தானே! அவரிடம் போய் “எங்கள் மக்கள் அப்படி என்ன தவறு இழைத்தார்கள்? பொதுச் சொத்துக்களைக் கொள்ளை அடித்தோமா? சொத்துக் குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறோமா? அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டோமா? இது ஜனநாயக நாடா? அல்லது அதிகாரிகள் தங்கள் மனதின் வன்மங்களைத் தீர்த்துக்கொள்ளும் எதேச்சதிகார நாடா?” என்று உதயகுமாரன் கேட்கவேண்டியதுதானே?
ஜெயலலிதாவிடம் போய் “இது இடி அமீன் ஆட்சி செய்த உகாண்டா அல்ல; ஹிட்லர் ஆட்சி செய்த ஜெர்மனியும் அல்ல. இது ஜனநாயக நாடு. ஊருக்குள் வந்து அடித்துத் துவைத்துப் போட்டுவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் செய்தால், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதே… அதில் மக்கள் பதில் சொல்வார்கள்!” என்று சவால்விட வேண்டியதுதானே? அதை விட்டு, காந்தியை விஞ்சும் சாந்தசொரூபியாக ஆட்சியாளர்களிடம் மன்றாடுகிறார்.
இதற்கெல்லாம் காரணம் ஒன்றுதான். அதையும் அதே நேர்காணலில் உதயகுமாரன் சொல்லிவிட்டார்: “ஆளும்வர்க்கம், சாதாரண மக்களின் குரல்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்பதை இங்குள்ள மக்கள் உணர்ந்துள்ளனர். அதே நேரத்தில் இந்த அரசுடன் மோதி வெற்றிபெறக்கூடிய சூழலும் இங்கு இல்லை.
நான் அடிக்கடி சொல்லும் உதாரணம்… ஒரு கணவன் – மனைவி இருக்கின்றனர். வாட்டசாட்டமான உடல்பலம் கொண்ட கணவன், மனைவியை அடித்து நொறுக்குகிறான் என்றால், அந்த மனைவி தானும் ஜிம்முக்குப் போய் உடலை வலுவாக்கி, அவனை அடிக்க முடியாது. மாறாக, கணவனின் தொந்தரவுகள் குறித்து அக்கம் பக்கத்தாரிடம் குற்றம் சுமத்தி, அவனுக்கு உணவு தர மறுத்து, அவனுடைய இயல்பு வாழ்க்கையைத் தடுத்து நிறுத்தி வழிக்கு வரவைக்க வேண்டும். இது ஓர் ஒழுக்கபூர்வமான அழுத்தம் (a moral pressure). எங்கள் போராட்டமும் இத்தகையதுதான். இது, அறவழிப் போராட்டம். இப்படித்தான் இதைச் செய்ய முடியும். இதற்கு மேல் அரசை எதிர்த்து எங்களால் போராட முடியாது. அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி எங்களிடம் இல்லை!”
அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தங்களிடம் இல்லை என்றால் போராட்டக் களத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதுதான் நேர்மையானது. அதற்கு மாறாக, இப்போராட்டத்தில் மக்களுடன் களத்தில் இறங்கிய ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் போராட்டத் தலைமையைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார், உதயகுமாரன்.
“பிரெஞ்சுப் புரட்சியின்போது அவர்கள் வலது தோளில் துப்பாக்கி கனத்தபோது, துப்பாக்கியைக் கீழே போடவில்லை. இடது தோளுக்கு மாற்றினார்கள்” என்று சொல்வார்கள். ஆனால், உதயகுமாரன் என்ன செய்கிறார்? போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு, ஏற்கெனவே மக்களே நம்பிக்கையிழந்துவிட்ட, அழுகிப் புளுத்து நாறும் ஓட்டுக்கட்சி அரசியலுக்குள் குதித்துவிட்டார். ஆனால், சந்தர்ப்பவாத அரசியல்வாதியைப் போல வளைத்து வளைத்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததை நியாயப்படுத்துகிறார்.
ஆனந்த விகடனின் அந்த நேர்காணலின் இறுதியில் “இந்தப் போராட்டத்தில் இப்போதும் நம்பிக்கை அளிக்கிற அம்சங்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?” என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதற்கு ஒரு தேர்ந்த ஆன்மீகத் தத்துவஞானியைப்போல பிரசங்கம் செய்துமுடிக்கிறார்.
“உண்மை, ஒழுக்கம், நேர்மை, நிதானம்… ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும், சொந்த நலன்களை மறந்து முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்காகப் போராடுபவர்கள். ‘தூய்மை, பொறுமை, நிலைத்திருத்தல்’ என விவேகானந்தர் குறிப்பிடும் மூன்று முக்கியமான அம்சங்களைக் கடைப்பிடித்து வருகிறோம். ‘பைய வித்து முளைக்கும் தன்மைபோல்’ என்று பாரதியாரின் வாக்குக்கேற்ப, இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் பெரும் கடமையுடன் எங்கள் பயணம் தொடர்கிறது!”
“இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் பெரும் கடமை” என்று உதயகுமாரன் சொல்லும்போது அது இந்நாட்டையும் மக்களையும் மட்டுமல்ல, இந்த உலகத்தையே அணுஉலை ஆபத்திலிருந்து காப்பதுதான் என்று யாரும், குறிப்பாக கூடங்குளம் அணு உலைக்கெதிராகப் போராடும் மக்கள் கருதிவிடக் கூடாது. அப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எல்லா ஜனநாயக வாசல்களையும் – வழிமுறைகளையும் பாசிச அரசு மூடிவிட்ட பிறகு என்ன செய்வது? கொந்தளித்து நிற்கும் மக்கள் அந்த ஜனநாயக வாசல்களையும் – வழிமுறைகளையும் தடைகளையும் தாண்டிப்போய்விடாதவாறு தடுத்துத் திசைதிருப்பி விடவேண்டும் என்ற புனிதக் கடமையைதான் உதயகுமாரன் சொல்கிறார். ஓர் ஒழுக்கபூர்வமான அழுத்தம் (a moral pressure). அறவழிப் போராட்டம். இப்படித்தான் இதைச் செய்ய முடியும். இதற்கு மேல் அரசை எதிர்த்து மக்களால் போராட முடியாது. அரசிடம் இருக்கும் அசுர பலத்தை எதிர்த்து நிற்கும் சக்தி மக்களிடம் இல்லை என்று அவர்களை இருத்தி வைப்பது. உதயகுமாரன் போன்றவர்கள் தலைமையேற்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதைத்தான் தமது இலக்காகக் கொண்டு செயல்படுகின்றன.
– பச்சையப்பன்
___________________________________ புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
___________________________________
சாகித்திய அகாடமி விருது வென்றதால் பிரபலமானவரும், மீனவ மக்களின் நலன் பேணுபவராக, தன்னை காட்டிக்கொள்பவரும்தான் ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் . இவர் எழுதிய “ஆழி சூழ் உலகு, கொற்கை” எனும் இருநாவல்களில் “கொற்கை” நாவலுக்குத்தான் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
ஆழி சூழ் உலகு – நாவல் எழுதும் போது குரூஸின் மனதில் காவி குடியேறியிருக்கவில்லை.
இந்த விருதுக்கு முன்பே இவர் தனது அரசியல், தத்துவ நோக்கை பார்ப்பனியத்திடமிருந்து பெற்றுக் கொண்டதாக மாறிப் போனார். இதன் தொடர்ச்சியாக ‘இந்திய ராஜபக்சே’ கொலைகார மோடி பிரதமராக வருவதை ஆதரித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையின் நாயகனை பகிரங்கமாக ஆதரிக்கும் முடிவையடுத்து அவர் எழுதிய “ஆழி சூழ் உலகு” நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவிருந்த நவயனா பதிப்பகம், பதிப்பித்து வெளியிடும் பணியினை நிறுத்துவதாக அறிவித்தது. நாவலை மொழிபெயர்த்த எழுத்தாளர் – ஆய்வாளர் வ.கீதாவும் ஜோ டி குரூஸுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தனது மொழிபெயர்ப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
முதலில் அரசியலிருந்து துண்டிக்கப்பட்ட கலை இலக்கியம், எழுத்தாளர் சுதந்திரம் போன்ற போதை வஸ்துக்கள் சூழ்ந்திருக்கும் இலக்கிய உலகில், இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக நவயனா பதிப்பகத்திற்கும், வ.கீதாவுக்கும் நமது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வோம்.
மோடிக்கு ஆதரவளிக்க கோரி ஃபேஸ்புக்கில் பிரச்சாரம் செய்திருந்த குரூஸ், மோடி ஒரு புரட்சியாளர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்கிற(!) தகமையாளர், இந்திய கடற்கரை மக்களின் வாழ்க்கையை புரிந்து கொண்டவர் என்றெல்லாம் அடுக்கிவிட்டு அதனால் மோடியை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நவயனா பதிப்பகம், மூன்று தலைமுறை மீனவமக்களின் தனித்துவமான வரலாற்றை தன் நாவலில் பதிவு செய்த எழுத்தாளரான ஜோடிகுரூஸ், மோடி போன்ற ஒரு பாசிஸ்டை ‘தொலைநோக்குடையவர்’ என்று கூறி ஆதரிப்பது தங்களுக்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவும், மோடி ஆதரவு என்பது அவரது தனிப்பட்ட கருத்து என்ற போதிலும் இது போன்ற நபர்களுக்கு தங்கள் பதிப்பகத்தில் எந்த இடமுமில்லை என்றும் கூறி புத்தகத்தை பதிப்பிக்கும் முடிவை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. பதிப்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதால் ஏற்படும் இழப்பைக் குறித்த கவலையை விட ஜோ-டி-குரூஸ் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்து தாங்கள் அதிகம் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. நாவல் வெளிவரும் முன்னரே குரூஸ் குறித்து தெரிய வந்தது மகிழ்ச்சி என்றும் அறிவித்துள்ளது.
வ.கீதாவுக்கும் நவயானா பதிப்பகத்துக்கும் நமது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வோம்.
இந்த புத்தகத்தை மொழிபெயர்த்துள்ள வ.கீதா, வெளியிட்டுள்ள செய்தியில், மோடியை ஆதரித்து ஜோ-டி-குரூசின் அறிக்கையை படித்து தான் வேதனையடைந்ததாகவும், அவருக்கு தனிப்பட்ட அரசியல் கருத்தை கூற எல்லா உரிமையும் இருக்கிறது என்றும், ஆனால் மோடியுடன் தொடர்புடைய எவருடனும் இணைந்து செயல்பட தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் 2002 குஜராத்தை படுகொலைகளை நாம் மறக்கக் கூடாது, யாரையும் மறக்கவிடக்கூடாது என்றும் தெரிவித்தவர், ஜோ-டி-குரூசின் ஆழி சூழ் உலகு மீனவ மக்களின் வாழ்வை படம் பிடிக்கும் சிறப்பான நாவல், அதை ஆதரிப்பதாகவும், ஆனால் குரூஸ் தன் எழுத்தாற்றலை ஒரு அபாயகரமான பாசிச அரசியலுக்கு விற்க முடிவு செய்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுவதாகவும் அதனால் தன் மொழிபெயர்ப்பை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
புத்தகம் பதிப்பிப்பது இவ்வாறு முடிவுக்கு வந்ததும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக மோடியை தூக்கி பிடிக்கும் கார்ப்பரேட் ஊடகங்களில் குய்யோ முய்யோ என்று குதிக்கிறார் குரூஸ். மீனவ மக்களுக்கு மட்டுமல்லாமல் மொத்த சமூகத்திற்கும் அநீதி இழைத்திருக்கும் குரூஸ், “ஏழைகளை பற்றி எழுதினால் அதற்காக என்னை இடதுசாரி என்று நீங்களாகவே எப்படி கருதிக் கொள்ளலாம்?” என்று இப்புத்தகத்தை பதிப்பிக்க முன்வந்த நவயனா பதிப்பகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழித்த கொலைகாரனை கண்டிப்பதற்கு இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, ஒரு மனிதனாக இருந்தாலே போதும். அப்படி குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாத குரூஸ் ஒரு இலக்கியவாதியாக இருந்து என்ன பயன்? மனிதபிமானம் கூட இல்லாத ஒரு நபருக்கு இலக்கியமோ இல்லை நாவலோ அவை வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட அதை வைத்து மட்டும் தகுதியோ அங்கீகாரமோ கோர முடியாது.
இதுதான் இலட்சணமென்றால் குரூஸை நாம் ஒரு மனிதனாக ஏற்பதே சாத்தியமில்லை. இதற்கு மேல் இவரை மனித குலத்திற்காகப் போராடும் இடதுசாரியாக யாராவது கருதினால் அது நிச்சயமாக பெரும் பிழைதான். நாங்களும் இதற்காக சம்பந்தப்பட்டவர்களை ‘கண்டிக்கின்றோம்’.
மேலும், தான் மோடியை ஆதரிப்பதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார் குரூஸ். குஜராத் மாடல் வளர்ச்சியும், உறுதியான தலைமையும் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்று உணர்ந்திருப்பதாலேயே இவர் மோடியை ஆதரிக்கிறாராம். வேலை நிமித்தமாக குஜராத்திற்கு 12 ஆண்டுகளாக சென்று வருவதாகவும் குஜராத்தின் வளர்ச்சி குறித்து அறிந்திருப்பதாகவும், மோடி ஆளும் வர்க்கத்தை பயன்படுத்தி ஏழைகளை உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார் குரூஸ்.
குரூஸ் அடுக்கிய இந்த வார்த்தைகளைத்தான் தமிழக தொலைக்காட்சிகளில் பாஜக கோயாபல்ஸுகள் அடித்து பேசுகிறார்கள். இதையே கோயாபல்ஸ்தனத்தில் கொட்டை போட்ட அரவிந்த நீலகண்டன் போன்ற பெருச்சாளிகளிடம் பேசி உள்ளே இறக்கியிருக்கிறார் குரூஸ். இதற்கு நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக, தான் குஜராத்திற்கு 12 வருடமாக சென்று வருவதாக கூறுகிறார். சரி, வளர்ச்சி எனும் இந்த பொய் மூட்டையை விடுவோம், இத்தனை ஆண்டுகளில் அவர் குஜராத் கலவரங்களில் உறவுகளையும், வாழ்வையும் இழந்த ஒரு முசுலீமைக் கூட சந்திக்கவில்லையா? இல்லை அவர்களது குடியிருப்புகளுக்கோ, தடுப்பு முகாம்களுக்கோ போவதற்கு வழி தெரியவில்லையா? இசுலாமியர்களை விடுங்கள், தற்கொலை செய்த விவசாயிகள், மலத்தை கையால் அள்ளும் தொழிலாளிகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்து குறைந்த கூலிக்கு கொத்தடிமையாக இருக்கும் தொழிலாளிகள் இவர்களைக் கூட குரூஸ் ஏன் சந்திக்கவில்லை?
தமிழகத்தில் குமுதம் முதலாளி, ஜூவி ஆசிரியர் குழுவினர் உட்பட நாடெங்கும் உள்ள ஊடகங்களை மோடி அரசாங்கம் அழைத்து வந்து செட்டப் காட்சிகளையும், கணக்குகளையும் காட்டி பிரச்சாரம் செய்கின்றனர். அதையே தனது சொந்த அனுபவமாக முன்வைக்கிறார் குரூஸ். இதனால் குஜராத் போனவர்களெல்லாம் குஜராத் மக்களைப் பற்றி தெரிந்தவர்கள் என்பது கோயாபல்ஸ் கோமகன்களது உத்தியே அன்றி உண்மை அல்ல.
குஜராத்தில் ஒடுக்கப்பட்ட இசுலாமிய மக்களையும் இதர உழைக்கும் மக்களையும் கண்டுகொள்ளவில்லை என்பதிலிருந்தே இவர் தமிழக மீனவ மக்களுக்காக கவலைப்படுவது நாடகம் என்பது புரிகிறது.
குரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்
ஏழைகளை உயர்த்த ஆளும் வர்க்கத்தை மோடி பயன்படுத்துவதாக குரூஸ் சொல்கிறார். இது தான் பித்தலாட்டத்தின் உச்சகட்டம். ஜோ-டி-குரூசின் நேர்மையை இதன் மூலம் யாரும் உரசிப் பார்த்துக் கொள்ளலாம். குஜராத்தில் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் நகர்ப்புறத்தில் 106 ரூபாய், கிராமப்புறத்தில் 86ரூபாய். இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான். இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட முடியாது மீறி போராடினால் போலீசின் குண்டாந்தடி தான் வரும். இப்படி தொழிலாளர்களை சுரண்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாய்பளிப்பதால் தான் அவரை வளர்ச்சியின் நாயகன் என்று கொண்டாடுகிறார்கள் முதலாளிகள்.
குரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்.. மற்றபடி உண்மையான ஏழைகளை சிவலோக பதவிக்கு தான் உயர்த்தியிருக்கிறார். இதை அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகள் மூலம் புரிந்து கொள்ளலாம். 2012-ல் மட்டும் அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 564 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடல் எனும் பிரம்மாண்டமான இயற்கைத் தாயின் மடியில், வாழ்வதற்காக கருணையோடும் வீரத்தோடும் போராடும் மீனவ மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையை உயிர்ப்போடு சித்தரித்த “ஆழி சூழ் உலகு”
ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் குஜராத் வளர்ச்சியின் மாயையை தமிழகத்தில் திரை கிழித்த பிறகு, குஜராத்தின் வளர்ச்சி குறித்த பம்மாத்து முன்பு போல் அப்படியே செல்லுபடியாகாது என்பதால் ஜூ.வி யே கூட தன்னை நடுநிலையாளனாக காட்டிக்கொள்ள குஜராத்தின் பலவீனங்களை துளியாவது பட்டியலிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு ஏமாற்றும் தந்திரம் என்றாலும் மட்டையடியாக வளர்ச்சிதான் என்று சொன்னால் மதிப்பு இருக்காது.
ஒரு வேளை குரூஸ் எதுவும் தெரியாத அப்பாவி என்றால் முதலாளித்துவ அமைப்புகளே தூக்கிப் பிடிக்கும் குறியீடுகளிலும் கூட குஜராத் பின்தங்கியிருக்கிறது என்பதோடு தமிழ்நாடு முன்னிடங்களில் இருக்கிறது என்பதை நினைவூட்ட சில புள்ளிவிவரங்கள்.
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12% தான். கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18-வது இடம், மாநிலத்தின் உற்பத்தி மொத்தத்தில் மராட்டியம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம். கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்! குஜராத்தின் வளர்ச்சியை அம்பலப்படுத்தி வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன.
அதே நேரம் மேற்கண்ட விவரங்கள் குறித்து அறியாத அளவுக்கு ஜோ-டி-குரூஸ் அவ்வளவு முட்டாளாக இருக்க வாய்பில்லை. மோடியை ‘டெவலெப்மன்ட்’ என்ற பெயரில் ஆதரிக்கும், ஏதோ ஒரு சாதாரண நடுத்தர வர்க்க கோயிந்து கிடையாது இவர். இந்துத்துவ கருத்தியலை கடைவிரிக்கும் இவரது பிரசங்கங்கள் யூடியூபிலும், இந்துத்துவ ஆதரவு தளங்களிலும் ஏராளம் காணக் கிடைக்கின்றது. ஆக இவர் மோடியை ஆதரிப்பதன் பின்னணி, வளர்ச்சியோ வெங்காயமோ கிடையாது. பார்ப்பனிய இந்துமதவெறி பாசிசத்தை இவர் கருத்தளவில் மனதார ஏற்றுக் கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் உவரியில் மீனவ குடும்பத்தில் பிறந்த இவர் நெய்தல் நிலமக்களின் வாழ்வையும், அவர்கள் மீதான கத்தோலிக்க திருச்சபையின் சுரண்டல்களையும் உள்ளடக்கி எழுதிய முதல் நாவலான ஆழி சூழ் உலகு தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பை பெற்றது. கடல் எனும் பிரம்மாண்டமான இயற்கைத் தாயின் மடியில், வாழ்வதற்காக கருணையோடும் வீரத்தோடும் போராடும் மீனவ மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை அந்த நாவலில் உயிர்ப்போடு இருப்பது உண்மையே.
ஒரு வேளை இளவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு சென்று ‘மீன் நாற்றத்தை’ கழுவி சுத்தப்படுத்தி ஊதுபத்தி – சாம்பிராணியாக குரூஸ் மாற்றப்பட்டிருந்தால் நமக்கு, “ஆழி சூழ் உலகி”ற்கு பதில் ‘காவி கொல் கடற்கரை’தான் கிடைத்திருக்கும்.
இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் காலம் அவரது இள வயது ஞாபக சேமிப்பில் மட்டும் இருப்பதால், நல்ல வேளையாக நாவலில் இந்துத்துவம் இல்லை. ஆனால் நாவல் எழுதப்பட்ட வயது, வேலை நிமித்தம் ஏற்பட்ட வர்க்க மாற்றம், நாவலை எழுதத் தூண்டிய, திருத்திய பதிப்பாளர், பிறகு ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் என்று எல்லாமும் சேர்ந்து அவரை இந்துஞான மரபில் இழுத்துக் கொண்டிருந்த போது அதில் ஊற்றப்படும் நெருப்பாக திருச்சபை பாவி பாதிரிகள் நடந்து கொண்டனர். ஒரு வேளை இளவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு சென்று ‘மீன் நாற்றத்தை’ கழுவி சுத்தப்படுத்தி ஊதுபத்தி – சாம்பிராணியாக குரூஸ் மாற்றப்பட்டிருந்தால் நமக்கு, “ஆழி சூழ் உலகி”ற்கு பதில் ‘காவி கொல் கடற்கரை’தான் கிடைத்திருக்கும்.
இதனிடையில் ஆழிசூழ் உலகில் திருச்சபையை நாறடித்து விட்டார் என்று குரூஸ் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். அவரது உவரி வீடும் தாக்கப்பட்டது. இது குரூஸுக்கு தாங்கவொண்ணாத வடுவாக அமைந்து விட்டது. அந்த வடுவை பயன்படுத்திக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ் அயோக்கியர்கள் அவரது சிந்தனையில் காவி வண்ண ரோடு போட்டிருக்கிறார்கள். இதை தொடர்ந்து குரூஸ், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக இருக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டார். இப்படித்தான் அவரது கத்தோலிக்க ஆதிக்க எதிர்ப்பு பார்ப்பனியத்திற்கு மடை மாற்றப்பட்டது.
கத்தோலிக்கம் கடற்கரை மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளை விலாவரியாக விளக்கும் குரூஸ், தன் பாரம்பரிய வேர்களை பார்ப்பனிய எதிர்ப்பு மரபில் தேடுவதற்கு பதில் பார்ப்பனியத்திலேயே தேடி தஞ்சம் அடைந்தார். மதங்கள் அனைத்துமே தோன்றிய காலம் தவிர்த்து ஆளும் வர்க்க ஆன்மீக அடியாட்களாக விரைவிலேயே மாறினாலும் இந்துமதம் மட்டும்தான் தோற்றத்திலேயே ஆளும் வர்க்கத்தின் நோக்கை நிறைவேற்றி வருகிறது. கிறித்தவம் இந்தியாவிற்குள் நுழைந்ததற்கு வேண்டுமானால் காலனிய நோக்கம் இருந்தாலும், வளர்ந்ததற்கு காரணம் பார்ப்பனிய கொடுங்கோன்மைதான். இது குறித்து கண்ணை மறைக்கும் காவிப் புழுதி தொடரில் நிறைய கட்டுரைகள் இருப்பதால் இங்கே தவிர்க்கிறோம்.
ஆக வர்ணாசிரம சாதிய கொடுமைகள் பொறுக்க முடியாமல் தான் மக்கள் வேறு மதம் மாறினார்கள். ஆனால் விரைவிலேயே கிறித்தவ மதமும் பார்ப்பனியத்தின் வருணாசிரமத்தை ஏற்றுக் கொண்டுதான் இங்கே நீடிக்க முடிந்தது. ஒடுக்கப்பட்ட பழங்குடி, தாழ்த்தப்பட்ட, மீனவ மக்களுக்கு கிறித்தவம்தான் முதன் முதலில்தான் சேவை செய்தது என்றாலும் நிறுவன ரீதியில் அது பார்ப்பனிய சமூக அதிகாரத்தை ஏற்றுக் கொண்டே செயல்பட்டது. இந்த வரலாற்று உண்மைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன் வைக்கும், இந்துமதத்தில் சாதி இல்லை – இடைச் செறுகல், வியாசர் ஒரு மீனவப் பெண்ணின் மகன், பரதவ மக்கள் தொன்மையான இந்துமத நாகரீகத்தின் தொல்குடிகள், கிறித்தவ-இசுலாம் அன்னிய சதி, பாரதத்தை குலைக்க கிறித்தவ-இசுலாமிய நாடுகள் சதி போன்ற கோயாபல்ஸ் விளக்கத்தில் திளைத்த குரூஸ் தற்போது அவற்றையே நம்புகிறார், பேசி வருகிறார்.
தன் இந்துத்துவ சித்தாந்த அரிப்பின் தொடர்ச்சியாக மோடியை ஆதரிக்கும் இவர் அதை விடுத்து மோடி பிரதமாரவது தான் மீனவ மக்களுக்கு நலன்னுக்குகந்தது என்று அதை மீனவ மக்களின் மேல் ஏற்றி கூறுவது மோசடியானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீனவ மக்களின் வரலாறும், நாட்டின் வரலாற்றுணவர்வும் தெரியாமல் தன்னை மீனவ மக்களின் பிரதிநிதியாக இவர் முன்வைப்பது மேட்டிமைத்தனமானது. மேலும் அந்த மக்களின் வாழ்வை மாற்றுவதற்கு இவர் தன்னறிய எந்த விதமான சமூக, அரசியல் போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. அவையெல்லாம் ‘கீழ்த்தரமானது’ என்று கருதும் சிற்றிலக்கியவாதிகளின் சமூக விரோத சிந்தனைதான் இவருடையதும். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்றது மீனவ மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று உளறுமளவுதான் இவருடைய சமூக பார்வை உள்ளது.
கூடங்குளம் மக்கள் போராட்டம்
ஆளும் வர்க்கங்களின் இந்தியாவும், அரசும்தான் மீனவர் உள்ளிட்ட உழைக்கும் மக்களை ஒடுக்கி வருகிறது. அந்த இந்தியாவில் இருந்து வரும் ஒரு அரசு விருதை ஏற்க மறுத்தால்தான் ஒருவன் சமூகப் போராளியாக இருக்க முடியும். மாறாக அடிப்பவனது பாராட்டையே உச்சி மோந்தால் அது அடிமைத்தனமே அன்றி விடுதலை உணர்வல்ல. இந்த இலட்சணத்தில் தனக்கு கிடைத்த விருதை மீனவ மக்களுக்கும் மாற்றி கொடுத்தால் தான் மட்டுமல்ல, மக்களும் அடிமையாகவே இருந்து விட்டு போகவேண்டும் என்ற அதிகாரத்துவமே அன்றி வேறல்ல.
மீனவ மக்களுக்கு உயிராதாரமாக திகழும் கடலையும கடற்கரையையும் காப்பதற்காக இன்று கூடங்குளம் அணுவுலையையும், தாதுமணல் கொள்ளையையும் எதிர்த்து போராடி வருகிறார்கள் கடற்கரை பகுதிமக்கள். அந்த மீனவ மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அந்நிய கைக்கூலிகள் என்றும் கிறித்தவ பாதிரிகளின் சதி என்றும் இன்றளவும் வன்மம் கக்கிவரும் இந்துமதவெறி கும்பலுடன் கொஞ்சி குலாவி வெட்கமில்லாமல் அவர்களுக்கு ஓட்டும் கேட்கிறார் குரூஸ். ஏற்கனவே அவர் தன்னை மீனவ மக்களின் பிரதிநிதி என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் இனி துரோகிதான். தமிழினவாதியான வைகோ செய்த துரோகத்தைப் போல, மீனவ மக்களை காட்டி கொடுக்கிறார் குரூஸ்.
சில மாதங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடனில் பின்வரும் கேள்வியை எழுப்பியிருந்தார் குரூஸ். “அணு உலைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் போராடுகிறார்கள். ஆனால், கத்தோலிக்கம் மிகப் பெரிய கள்ள மௌனம் சாதிக்கிறது.” உண்மை தான். சரி, நீங்கள்ஓட்டு போடச்சொல்லும் மோடி இடிந்தகரைக்கு வந்து அணுவுலையை மூட வேண்டும் என்று அறிவித்தாரா என்ன? கத்தோலிக்கமாவது கள்ள மவுனம் தான் சாதிக்கிறது, ஆனால ஜோ-டி-குரூசின் ஆசி பெற்ற இந்துத்துவா கும்பல் தான் இடிந்தகரை போராட்ட குழு பெண்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக் குழுவினரை தாக்கிய இந்து முன்னணியினருக்கு எதிராக செருப்பைக் காட்டும் பெண்.
பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக, இந்திய கடற்கரை நெடுகிலும் அணுவுலைகளை நிறுவி நெய்தல் நில மக்களின் வாழ்வாதாரமான கடலை அழிக்கத் துடிக்கும் கட்சிகளில் ஒன்றான பா.ஜ.க வை ஆதரித்துக்கொண்டே ஆழிசூழ்உலகு என்றும், நெய்தல் நிலம் என்றும் பேசும் நயவஞ்சகம் கொண்டவராகத்தான் இருக்கிறார் ஜோ-டி-குரூஸ். சொந்த மக்களையே ஏமாற்றும் இப்படிப்பட்ட பித்தலாட்டகாரரின் கண்கள், குஜராத்தின் முஸ்லீம்களுக்காக கண்ணீர் வடிக்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பொதுவில் அடுத்தவருக்காக கவலைப்படும் மீனவ மக்கள் மத்தியிலிருந்து எப்படி இப்படி ஒருவர் பேசமுடியும்? அவரது நாவலிலேயே தனது உயிரை தியாகம் செய்து கொண்டு இளையவர்களின் உயிரைக் காத்த மீனவர்கள் ஏராளமிருக்கிறார்கள். ஆனால் குருஸோ தனது நலனுக்காக மீனவ மக்களை பலிகடா ஆக்குகிறார். அந்த வகையில் ஆழி சூழ் உலகு எனும் நாவலே குரூஸை காறித் துப்பும். ஆமாம், குரூஸ் அவர்களே, அந்த நாவல் இனியும் உங்களுக்கு சொந்தமில்லை என்று அறிவியுங்கள், நேர்மையிருந்தால்.
கடற்கரை சமூகத்தில் பிறந்திருந்தாலும் ஜோ-டி-குரூஸ் போன்றவர்கள் வர்க்க ரீதியில் சாதாரண மீனவர் அல்லர். இவர் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் வேலை செய்துவருபவர். இவருக்கும் உழைக்கும் மீனவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இருவரின் வாழ்க்கையும் தன்மையிலேயே வெவ்வேறானவை. அதனால் தான் தன்னுடைய பழைய நினைவுகளில் ஆழி சூழ் உலகு படைத்த இவர் இன்று கந்த புராணத்தில் தன் வரலாற்றை தேடிக்கொண்டிக்கிறார். உவரிக்கும் அயோத்திக்கும் அன்டர்கிரவுன்ட் லிங்க் இருப்பதாக உளறுகிறார். உழைக்கும் கடல்சார் பழங்குடிகளான மீனவர்களிடம் இயல்பாகவே இருக்கும் முரட்டுத்தனம் நிறைந்த அன்பு, மனிதநேயம் போன்றவை இது போன்ற கோட்டு சூட்டு போட்ட அதுவும் காவி டை கட்டும் ஜென்டில்மென்களிடம் இருக்க வாய்ப்பில்லை.
இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக ஆர்.எஸ்.எஸ் கும்பலும், கார்ப்பரேட் ஊடங்களும் கூறித்திரியும் வேளையில் தமிழகத்திலிருந்து இலக்கிய உலகில் இப்படி ஒரு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவே வட இந்தியாவிலோ இல்லை ஏனைய மாநிலங்களிலோ நடப்பது அரிது. காரணம் இங்கே பெரியாரும், திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கத்தினரும் செய்த களப்பணி. இன்றைக்கு பெரியார் மரபு இங்கே இல்லாமல் செய்யும் பணி நடைபெற்று வந்தாலும் அதை தொடர்வதற்கு புரட்சிர அமைப்புகள் களத்தில் நிற்கும்.
ஜெயமோகன் போன்ற அற்பங்கள் இதை ஏதோ இடதுசாரி சதிவேலை என்றும், இந்தியா முழுவதும் இடதுசாரி அறிஞர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் உளறுகின்றன.
மாறாக, ஜெயமோகன் போன்ற அற்பங்கள் இதை ஏதோ இடதுசாரி சதிவேலை என்றும், இந்தியா முழுவதும் இடதுசாரி அறிஞர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் உளறுகின்றன. ஜயேந்தரன் கைது செய்யப்பட்ட போது அவரை விடுதலை செய்ய முயன்றும், மோடி குறித்த செய்திகளை அதிகம் வெளியிடவில்லை என்று சித்தார்த் வரதராஜனை நீக்க காரணமாக இருந்த இந்து ராம்தான் இடது சாரி என்றால் ஜெயமோகன் முப்பது ஆண்டுகளாக எதையும் படிப்பதில்லை என்று தெரிகிறது. இன்று இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாகத்தான் பேச, எழுத வேண்டும் என்று அனைத்து ஊடகங்களும், கலை இலக்கியத்துறையும் மாறிவிட்ட பின் இடதுசாரி சதி என்று உளறுவதற்கு இந்த அறிஞர் எவ்வளவு சரக்கு அடித்தாரோ தெரியவில்லை. மேலும் மோடியைப் பற்றி விமரிசிக்க கூடாது என்று பல பத்திரிகையாளர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர், நீக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனால்தான் தமிழகத்தில் சாகித்ய அகடாமி எனும் ஜால்ரா விருது வாங்கிய ஒரு எழுத்தாளர் மோடியை ஆதரித்தார் என்ற காரணத்திற்காக அவரது ஆங்கில பதிப்பு முயற்சி நிறுத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதுவே வட இந்தியாவில் இருந்தால் வ.கீதா குஜராத் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பார். அங்கே இருக்கும் ஜெயமோகன்கள் அதை நியாயப்படுத்தி எழுதவும் செய்வார்கள்.
அடுத்து இந்தப் பிரச்சினையில் இலக்கியவாதிகளும், கடைசி பெஞ்சிலாவது அறிவுஜீவி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மேன்மக்களும் எழுப்பும் கருத்துச் சுதந்தரப் பிரச்சினையை பார்க்கலாம். இந்தக் கேள்விகளுக்கு வ.கீதாவின் பதிலிலேயே விளக்கம் உள்ளது.
குறிப்பிட்ட பதிப்பகம் குரூஸின் நாவலை ஆங்கில மொழியாக்கம் செய்வதாக ஒப்பந்தம் போடுகிறது, பிறகு ரத்து செய்கிறது. இங்கே ரத்து செய்வதற்கு காரணம் எழுத்தாளரின் மனித விரோத செயல் என்று பதிப்பகம் கருத்து கூறுகிறது. சரி, இதில் எழுத்தாளர் பாதிக்கப்பட்டிருந்தால் சட்டபூர்வமாக வழக்கு போடலாம். போட்டாலும் நீதிமன்றம் அந்த நாவலை வெளியிட்டே தீர வேண்டும் என்று உத்திரவிட முடியாது. வேண்டுமானால் எழுத்தாளருக்கு நிவாரணத் தொகை கொடுக்குமாறு உத்திரவிடலாம். இவ்வளவிற்கும் நவயன்யா பதிப்பகம் இந்த நாவல் முயற்சியால் பொருளாதார இழப்பு இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறது. மேலும் எல்லா பதிப்பங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடு தொடர்புடையதாகவே நூல்களை வெளியிடுகிறார்கள்.
கிழக்கு பதிப்ப்கத்தின் பத்ரி, நக்சலைட்டுகளே இந்த நாட்டின் தேசபக்தர்கள் என்றோ, ஆனந்த விகடனில் மோடி ஒரு கேடி என்றோ, உயிர்மை பதிப்பகத்திலிருந்து திமுகவின் சமூகநீதித் தோல்வி என்றோ புத்தகங்களை போடுவார்களா? இல்லை காலச்சுவடு கண்ணன், சு.ராவின் கவிதைகள் வழியாக அவரது அற்பவாத உலகம் எனும் நூலை ஏன் வெளியிடவில்லை என்று யாராவது கேட்க முடியுமா?
ஒரு பதிப்பகம் எந்த நூல்களை தெரிவு செய்து வெளியிடுகிறது என்பது அதன் உரிமை, சுதந்திரம் என்று ஒத்துக் கொண்டால் அதே உரிமை ஒத்துக் கொண்ட நூலை ரத்து செய்வதற்கு உரிமை உள்ளது என்பதை ஏற்கவேண்டும். இங்கே இவர்கள் ஆராதிக்கும் சட்டத்தின் பார்வையிலேயே கருத்து சுதந்திரத்தை காலி செய்யலாம். இருப்பினும் இதற்கு அடுத்தபடியாக இவர்கள் எழுப்பும் தார்மீக கருத்துக்களையும் பார்க்கலாம்.
ஒரு எழுத்தாளரின் இலக்கியத்தை ஆராதிக்கும் நீங்கள் அவரது அரசியல் கருத்து சொல்லும் உரிமை காரணமாக அவரது இலக்கிய முயற்சிகளை தடை செய்தால் அது பாசிசமில்லையா என்கிறார்கள். இங்கே ஒடுக்கப்படும் மக்களின் குரலை இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பதாலேயே குரூஸின் நாவலை பாராட்டுகிறார்கள். அந்த பார்வையிலிருந்தே அவரது மோடி ஆதரவு குரலை கண்டிக்கிறார்கள், அதன் பொருட்டு அவரோடு இணைந்து செய்யும் பதிப்பக முயற்சிகளை கைவிடுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு உரிமை இல்லையா?
ஈழத்தமிழரின் அவலத்தை ஒருவர் நாவலாக்கி பாராட்டு பெற்ற பிறகு, அவர் ராஜபக்சேவின் ஆட்சியை ஆதரிக்கிறார் என்றால் அவரை பழைய பாராட்டிற்காக தூக்கி சுமப்போமா, இல்லை உறவை வெட்டி எறிவோமா? இது வெறுமனே நூல் அல்லது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினை இல்லை. சரியான கருத்துக்களுக்கும், தவறான கருத்துக்களுக்கும் நடைபெறும் போராட்டம்தான் இப்பிரச்சினையின் மையம். இதை விடுத்து கருத்து சுதந்திரம் என்ற ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக கற்பித்துக் கொண்டவர்களால் இந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் பயனில்லை.
இறுதியாக ஒரு மனிதன் இலக்கியம் படைக்கிறானா, ஏன் கம்யூனிசம் பேசுகிறானா என்பதை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது. முதலில் அடிப்படை மனித நேயமும், மதிப்பீடுகளும் அவனிடம், வாழ்க்கையிலும், பேச்சிலும் இருக்கிறதா என்பதே முக்கியம். ஆனால் இந்த தகுதியைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒருவன் உண்மையான கம்யூனிஸ்டாக மாற முடியுமென்றால், ஒரு இலக்கியவாதிக்கு அந்த நிபந்தனை இருப்பதில்லை. காரணம் எழுதுபவன் சமூக இயக்கத்தினை அறிந்து எழுதுவதற்கும் பொறுப்பேற்று பணிபுரிவதற்கும் உள்ள வேறுபாடுதான். ஆகவேதான் எழுதுவதோ இல்லை இலக்கியம் படைப்பதோ ஒரு மனிதனின் ஆகப் பெரும் தகுதியாக கூறமுடியாது என்கிறோம்.
சுருங்கச் சொன்னால் மோடி எனும் காட்டுமிராண்டியை ஆதரிக்கும் குருஸுக்கு இலக்கியம் ஒரு கேடா என்பதே நமது கேள்வி.
வ.கீதா மற்றும் நவயன்யா பதிப்பகம் ஆகியோர் தைரியமாக மோடியின் அதிகாரத்திற்கு பயப்படாமல், குரூஸ் உடனான தொடர்பை துண்டித்தது போன்று இந்துமதவெறி பாஜகவையும், மோடியையும் தூக்கிச் சுமக்கும் வை.கோ வை கண்டிக்கவோ அவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளவோ எந்த தமிழினவாதியும் முன்வரவில்லை. ஆரியத்தை எதிர்த்து படை நடத்துபவர்களும், இந்திய ‘ஏகாதிபத்தியத்திலிருந்து’ தமிழ்தேசிய விடுதலைக்கு ‘களமாடும்’ பல உதிரி தமிழின அமைப்புகளும் வை.கோவை நிச்சயம் கண்டிக்கமாட்டார்கள் என்பதே உண்மை. என்ன செய்வது இயற்கையில் எல்லா பிராணிகளுக்குமே முதுகெலும்பு இருக்கிறதா என்ன?
இவர்கள் இல்லையென்றால் என்ன, மோடிக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் தனது பதிவை செய்து கொண்டே இருக்கிறது, இருக்கும். மோடி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் குரூஸின் நாவல் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, பல்வேறு மொழிகளிலும் கூட வெளிவரும். ஆனால் பார்ப்பனிய பாசிசத்திற்கு பல்லக்கு தூக்கிய அவரது வார்த்தைகள் ஒரு போதும் நிம்மதியைத் தந்துவிடாது. பாசிசத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் கொடி பிடித்த பல்வேறு மனிதர்களை – அவர்கள் இலக்கியவாதிகளாக இருந்தாலும் – வரலாறும் வரலாற்றை படைக்கும் மக்களும் குப்பைக் கூடைக்குத்தான் அனுப்பியிருக்கிறார்கள்.
மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்! கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!
தமிழகம் தழுவிய இயக்கம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஓட்டுப்போடுவது உங்கள் ஜனநாயகக் கடமை என்கிறது தேர்தல் கமிசன். என்ன ஜனநாயகம் இங்கே வாழ்கிறது? எல்லாக் கட்சிகளிலும் மன்னராட்சியைப் போல மனைவி, மகன், மாமன், மச்சான் ஆட்சி! அப்புறம் கோடீசுவரர்கள், சாதிவெறியர்கள், ரவுடிகள் – இவர்களெல்லாம்தான் வேட்பாளர்கள். இவர்களில் எவனாவது உழைத்துச் சோறு தின்பவனா? இவர்களுடைய தொழில் என்ன? சுயநிதிக் கல்லூரி முதலாளி, தண்ணீர் வியாபாரி, மணற்கொள்ளையன், கிரானைட் திருடன், லாட்டரி சீட்டு வியாபாரி, ரியல் எஸ்டேட் முதலைகள். இப்படி தனியார்மயக் கொள்கையைப் பயன்படுத்திக்கொண்டு மக்களைக் கொள்ளையடிக்கும் நபர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவியில் அமர்த்துகிறீர்களே, இது ஜனநாயக கடமையா அல்லது மடமையா?
நீங்கள் தேர்ந்தெடுக்கும் எம்.பி. நல்லவனாகவே கூட இருக்கட்டும். அவனால் என்ன செய்துவிட முடியும்? டில்லியிலோ சென்னையிலோ உட்கார்ந்திருக்கும் எம்.பி. – எம்.எல்.ஏ.க்களா நம்மை ஆட்சி செய்கிறார்கள்? பிறப்பு – இறப்பு, சாதிச்சான்று, பத்திரப்பதிவு, ஓட்டுநர் உரிமம், ரேசன் அட்டை, முதியோர் பென்சன், குடிநீர், மின்சாரம், சாலைவசதி, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட நமது அன்றாடப் பிரச்சினைகள் அனைத்தையும் கையாள்பவர்கள் மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ, தாசில்தார், போக்குவரத்து, கல்வி, மின்வாரிய அதிகாரிகள் போன்ற அந்தந்தத் துறை அதிகாரிகள்தான். நீங்கள் சி.எம். செல்லுக்கு மனுச் செய்தாலும், பி.எம். செல்லுக்கு புகார் செய்தாலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமுள்ளவர்கள் இந்த அதிகாரிகள்தான். மாதம் மும்மாரி பொழிகிறது என்று இவர்கள் எழுதித் தருவதைத்தான் அமைச்சர்கள் சட்டமன்றத்தில் ஒப்பிக்கிறார்கள்.
இந்த அதிகார வர்க்கத்தினரை நாம் தேர்ந்தெடுப்பதும் இல்லை, இவர்களை நீக்குவதற்கும் நமக்கு அதிகாரமுமில்லை. தேர்தலே நடக்கவில்லையென்றாலும் இவர்கள்தான் அரசை நடத்துகிறார்கள். அரசாங்கத்தை நடத்துவார்கள். ஏனென்றால், அரசு என்பதே இவர்கள்தான். யார் வென்றாலும் தோற்றாலும் இவர்கள் நம்மீது செலுத்தும் சர்வாதிகாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவேதான், இது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் ஆட்சியல்ல, ஜனநாயகமல்ல – இரட்டை ஆட்சிமுறை என்கிறோம்.
இந்த அதிகார வர்க்கம் தலை முதல் கால்வரை பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களுடைய ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குச் சேவை செய்வதற்கும் ஏற்பத்தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு ஆலை முதலாளி சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியத்தைத் தொழிலாளிக்கு மறுத்தாலோ, சட்டவிரோதமாக தொழிற்சங்க உரிமையைப் பறித்தாலோ அதற்காக எந்த கலெக்டரும் முதலாளியைக் கைது செய்வதில்லை. மணற்கொள்ளையை விவசாயிகள் எதிர்த்தால், தாசில்தாரும் போலீசும் விவசாயிகள் மீதுதான் பொய்வழக்கு போடுகிறார்கள். இவையெல்லாம் நாம் அன்றாடம் காணும் காட்சிகள். ஆகவேதான் இது ஜனநாயகமல்ல, ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்கிறோம். இதற்கு மக்களிடமிருந்தே நியாயவுரிமை பெறுவதற்காகத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த அதிகாரிகளுக்கும் அரசாங்கங்கத்துக்கும் கூட தனியார்மயம் – தாராளமயம் என்று அழைக்கப்படும் மறுகாலனியாக்கம் அமலாகத் தொடங்கிய பிறகு உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள்தான் ஆணையிட்டு வருகின்றன. தானியக் கொள்முதலை நிறுத்து, கல்வி-மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறை – என்று உத்தரவிடுகின்றன. உலகவங்கியின் அதிகாரம் ஊராட்சி மன்றம் வரை வந்துவிட்டது. அதுமட்டுமல்ல, மின்சாரம், தொலைபேசி, சாலைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு விட்டதால், அனைத்திலும் வல்லுநர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் அதிகாரிகள் அரசு அதிகாரத்துக்குள்ளேயே நுழைந்து விட்டார்கள். மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் முதலானவற்றை அந்தந்தத் துறைக்கான ஒழுங்குமுறை ஆணையம்தான் தீர்மானிக்கிறது. அதாவது, அரசு நிர்வாகமே தனியார்மயம் ஆகிவருகிறது. மின்கட்டணத்தைக் குறைக்கும் அதிகாரம் தனக்கு இல்லையென்று எல்லாம் வல்ல அம்மா சட்டமன்றத்திலேயே கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?
இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாகத்தான்
விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். விவசாயம் அழிந்து பிழைப்புத்தேடி ஊர் ஊராக ஓடுகிறார்கள்.
கல்விக்குப் பணம், குடிதண்ணீருக்குப் பணம், மருத்துவமனையில் கால் வைத்தால் பணம், டோல்கேட்டுக்குப் பணம் என்று திரும்பிய பக்கமெல்லாம் மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.
இன்னொருபுறம் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகள் ஆகின்றன; கனிம மணற்கொள்ளையால் கடல் வளம் அழிகிறது; ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் நஞ்சாகிறது.
ஆற்று மணற்கொள்ளையால் நிலத்தடி நீரும் காற்றின் ஈரமும் அழிந்து மழை பொய்க்கிறது. மிச்சமிருக்கும் நீரையும் சூறையாடி காசாக்குகிறார்கள் தண்ணீர்க் கொள்ளையர்கள்.
விவசாயம் அழியும் என்று தெரிந்தே மீதேன் திட்டமும், கெயில் குழாய் திட்டமும் திணிக்கப்படுகின்றன.
இவை அனைத்திலும் லாபம் ஈட்டுபவர்கள் முதலாளிகள். கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை வளர்க்கும் திட்டங்களைத்தான் மக்களுக்கான வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் அரசு நம்மீது திணித்து வருகிறது. எந்தக் கட்சி வென்றாலும் அமலாக்கவிருப்பது இதைத்தான். இதனைத் தீவிரமாகவும் திறமையாகவும் அமல்படுத்துவது யார் என்பதில்தான் கட்சிகளுக்கிடையில் போட்டி நடக்கிறது. இதில் ஏதாவது ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்து கூரையில் செருகிக் கொள்ளலாம் என்பதுதான் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமையின் உண்மையான பொருள்.
இப்படிச் சொல்வது மிகையானது என்று எண்ணுகிறீர்களா? நாட்டைப்போலவே, நம் வீடும் சமூகமும் பற்றியெரிவதை நீங்கள் காணவில்லையா? பள்ளி மாணவிகளைக் கெடுக்கும் வாத்தியார்கள், ரவுடிகளாகக் கல்லூரித் தாளாளர்கள், கிட்னி திருடும் டாக்டர்கள், அங்கீகாரமே இல்லாத பல்கலைக்கழகங்கள், ஆசி வாங்கப்போனால் முந்தானையை உருவும் சாமியார்கள், வயிற்றில் குழந்தையோடு தவிக்கும் கைவிடப்பட்ட காதலிகள், திரும்பிய பக்கமெல்லாம் சங்கிலிப் பறிப்பு – என்று நச்சரவங்களுக்கு நடுவே குடித்தனம் நடத்துவது போல நாடே மாறியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
காரணம் என்னவென்றால், எந்தச் சட்டங்களையும் மரபுகளையும் மதித்து நடக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கம் மக்களுக்கு அறிவுறுத்துகிறதோ, அந்தச் சட்டங்களை அவர்களே மதிப்பதில்லை. அதாவது, இந்த ஜனநாயகக் கோயிலில் மக்கள் பக்தர்கள் என்றால், ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும், ஓட்டுப்பொறுக்கிகளும் தேவநாதன்கள், ஆசாராம் பாபுகள், நித்தியானந்தாக்கள்!
எம்.எல்.ஏ. எம்.பி.க் களில் 30% பேர் மீது கிரிமினல் வழக்குகளாம்!
அலைக்கற்றை, ஆதர்ஷ், நிலக்கரி வழக்குகள் அனைத்திலும் முக்கியக் குற்றவாளிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் என்று எல்லா மட்டத்திலும் குற்றவாளிகள்!
பாலியல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு டி.ஜ.ஜி. 15 ஆண்டுகளாகத் தலைமறைவு!
வேறொரு டி.ஜி.பி. யை பிடித்துக் கொடுத்தால் பத்து லட்சம் சன்மானம் என்று அறிவிக்கிறது சி.பி.ஐ!
தேசபக்தியின் திருவுருவமாகச் சித்தரிக்கப்படும் இராணுவ அதிகாரிகளோ அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு பாக். தீவிரவாதிகளைக் கொன்றதாகக் கணக்குக் காட்டி பதவி உயர்வு வாங்குகிறார்கள்.
ஓய்வு பெறுவதைத் தள்ளிப்போடுவதற்காக பிறந்த தேதியை மாற்றி போர்ஜரி செய்கிறார் இராணுவத்தின் தலைமைத் தளபதி.
தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினாலும் மவுனம் சாதிக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிகைகளோ கவர் வாங்கிக்கொண்டு கருத்துக் கணிப்பு வெளியிடுகின்றன.
மொத்தத்தில், இந்த அரசியல் கட்டமைப்பு முழுவதுமே நொறுங்கிச் சரிந்து வருகிறது. சமூகத்தின் உறுப்புகள் அனைத்திலிருந்தும் சீக்குப்பிடித்து அழுகிச் சீழ் வடிகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள். ஆனால், நம்மீதுதான் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் கொடூரமான அடக்குமுறை ஏவப்படுகிறது.
நாம் அனுபவிக்கும் இந்தக் கொடுமைகளைப் பற்றியெல்லாம் ஏன் எந்தக் கட்சியும் பேசுவதில்லை என்று யோசித்துப் பாருங்கள். ஏனென்றால், அவர்கள் ஆளும் வர்க்கங்களின் கையாட்கள். பாதிக்கப்படுபவர்களாகிய நாம்தான் நமக்கான தீர்வை யோசிக்க வேண்டும். மாறாக, மன்மோகனுக்குப் பதிலாக மோடி என்று சிந்திப்பது தீர்வு அல்ல, நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் தண்டனை.
சின்னத்தை மாற்றிப் பயனில்லை; நாம் சிந்திக்கும் முறையை மாற்றவேண்டும். இந்தப் போலி ஜனநாயக அரசு, ஒருபோதும் நமக்குச் சேவை செய்யாது. உழைக்கும் மக்களின் நலன் காக்கும் புதிய ஜனநாயக அரசினை நாம்தான் புதிதாக உருவாக்க வேண்டும்.
அதன் முதல்படி தேர்தல் புறக்கணிப்பு. அடுத்த அடி இந்த மக்கள் விரோத அதிகாரத்தைத் தகர்க்கும் போராட்டங்கள்! மனு கொடுப்பதும், ஓட்டுப் போடுவதும், வழக்கு தொடுப்பதும் நம் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ள உதவாது. மக்கள் எழுச்சிகளின் மூலம் நம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வோம்.
இந்தப் போலி ஜனநாயகத்தை ஒழித்து, ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுதான் நமது போராட்டத்தின் இலக்கு.
புதிய ஜனநாயக அரசமைப்பில் இன்றைய இரட்டை ஆட்சிமுறைக்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்குச் சட்டமியற்றவும் அதனை அமல்படுத்தவும் அதிகாரம் இருக்கும்.
அதிகாரிகள், போலீசு, இராணுவம், நீதித்துறை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படும். தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும், தண்டிக்கவுமான அதிகாரம் வாக்களித்த மக்களுக்கு இருக்கும்.
இன்று மக்கள் பிரதிநிதிகளாக பவனி வரும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள், நிலப்பிரபுக்கள், சாதி-மத ஆதிக்க சக்திகள், சமூக விரோதிகளின் வாக்குரிமை பறிக்கப்படும். உழைப்போர்க்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் மக்கள் அதிகாரம் நிறுவப்படும்.
புதிய ஜனநாயக அமைப்பில் கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும். கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத்துறைகளும் நாட்டுடைமை ஆக்கப்படும்.
டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்துக்களும் நிலப்பிரபுக்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களும் நாட்டுடைமை ஆக்கப்படும்.
நிலமற்ற உழவர்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்குவதுடன், பாசன வசதி, உழுபடைக் கருவிகள், உள்ளீடு பொருட்களை உழவர்களுக்கு வழங்கி விவசாயம் ஊக்குவிக்கப்படும். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட உழவர் கமிட்டிகளுக்கு வழங்கப்படும்.
நெசவு, மீன்பிடி, சிறுதொழில்கள், சிறுவணிகம் உள்ளிட்ட சிறு – நடுத்தர முதலாளிகளின் உள்நாட்டுத் தொழில்கள் ஊக்குவிக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படும். இயற்கை வளங்களைச் சூறையாடி நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்படும்.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நடக்கக்கூடிய காரியமா? என்று நீங்கள் சிந்திக்கக் கூடும். மன்னராட்சியையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் அகற்றுவது நடக்காத காரியம் என்றுதான் பலரும் அன்று எண்ணினார்கள். தொழிற்சங்க உரிமை முதல் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுப்பாதையில் நடக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் மக்கள் போராடி நிலைநாட்டிக் கொண்ட உரிமைகளேயன்றி, ஓட்டுக்கட்சிகள் வழங்கிய இலவசத்திட்டத்தில் கிடைத்தவை அல்ல. ரசியாவிலும், சீனாவிலும் வேறு பல நாடுகளிலும், போராட்டத்தின் மூலம்தான் மக்கள் தங்களுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ள அரசமைப்பை அன்று உருவாக்கிக் கொண்டார்கள்.
போராடத் தவறியதால்தான், அன்று போராடிப் பெற்ற உரிமைகளையும் கூட இன்று ஒவ்வொன்றாய் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்தப் போலி ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது, நமக்கு எதிராக நாமே வாக்களித்துக் கொள்ளும் உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! போதும். இன்னொருமுறை அந்தத் தவறைச் செய்யாதீர்கள்! போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணியுங்கள்! புதிய ஜனநாயகத்தை உருவாக்கும் மக்கள் எழுச்சிகளுக்கு அணிதிரளுங்கள்!
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.
தொடர்புக்கு
அ.முகுந்தன்,
110, இரண்டாம்தளம், மாநகராட்சி வணிக வளாகம்,
63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்,
சென்னை – 600 024.
புதுவை பல்கலைக்கழகமானது மத்திய மனித வள மேம்பாட்டுத் அமைச்சகம் (MHRD) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகிய அமைப்புகளின் கீழ் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகம்தான் என்றாலும், பொதுவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) போன்ற பிற மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வு அவ்வளவு பரவலாகவும் வீரியமாகவும் இங்கு இல்லை. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்திவரும் விதமும் நிர்வாகத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் பார்ப்பனக் கும்பலின் எதேச்சதிகாரமும் மாணவர்களை தன்னெழுச்சியான போராட்டங்களை நோக்கித் தள்ளிக்கொண்டு வந்துள்ளன.
புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி சென்ற 2013 பிப்ரவரியில் பொறுப்பேற்றது முதல் பார்ப்பன அதிகாரம் அங்கு முழுவீச்சில் கோலோச்சத் தொடங்கியது. அவர் முதலாளிகளின் சேவைக்கு தன்னை அர்பணித்துள்ள மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினியின் நெருங்கிய நண்பர் மற்றும் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர் என்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததாலேதான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவர் பொறுப்பேற்ற பின்னர் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் ஸ்டாஃப் காலேஜ் இயக்குனராக இருக்கும் ஹரிஹரன் என்ற அதிகாரத் திமிரில் ஊறியிருக்கும் பார்ப்பனர் எல்லா நிர்வாக அலுவல்களையும் கவனிக்கலானார். இவர் சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு விதிமுறைகளுக்கு மாறாக அங்கீகாரம் கொடுத்த சிபிஐ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இதுவரையில் துணை வேந்தர் சிபிஐக்கு அனுமதி அளிக்க மறுத்து அவரை பாதுகாத்து வருகிறார். இவர் மீது இன்னும் சில கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. அவருக்குத் துணையாக ராம தீர்த்தம் என்ற பழுத்த பார்ப்பன “சட்ட மேதை”யை துணைவேந்தரும் ஹரிஹரனும் பணியில் அமர்த்தினர்.
இயக்குநர் ஹரிஹரன்
இவர்களில் முக்கியமாக ஹரிஹரன் செய்துவந்த கேள்விமுறையற்ற அதிகார அட்டுழியங்கள் எல்லாத் தரப்பினரையும் பாதித்தன. தினக் கூலி காண்டிராக்ட் பணியாளர்களான செக்யூரிட்டி பணியாளர்களிடம் கூட வஞ்சத்துடனும் சர்வாதிகாரத்துடனும் நடந்துகொண்ட ஹரிஹரன், யாரை எங்கே என்ன பணியில் அமர்த்துவது, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் எந்த மாணவர், பேராசிரியர் அல்லது அலுவலரை எப்படி தண்டிப்பது உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் ஏகபோகமாக தன் கையில் வைத்திருந்தார்.
அதே நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் கோஷ்டி மோதல்களும் பெண்கள் உள்ளிட்ட மாணவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழலும் பெருகி வந்தது. குறிப்பாக, பெண்கள் விடுதிகளுக்கு உள்ளேயும் சுற்றியும் ஒரு மர்ம கிரிமினல் காமுகன் ஆடையில்லாமல் உடல் முழுவதும் எண்ணையைப் பூசிக்கொண்டு இரவிலும் பகலிலும் நடமாடி அச்சுருத்தியிருக்கிறான்.
கடந்த இரு மாதங்களாக அவனது நடமாட்டம் மாணவிகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து அந்தக் காமுகனைப் பிடிக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் அதற்காக எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதோடு அந்தப் பிரச்சனை பெரிதாகிவிடாமல், போராட்டங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் பல்வேறு சாக்குகளைச் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தது. அந்த மர்ம கிரிமினல் மாணவிகளை அச்சுறுத்துவது தொடரவே மாணவிகள் பெருமளவில் கூடி போராடத் தொடங்கினர்.
இச்செய்தி நாளிதழ்களிலும் பிற ஊடகங்களிலும் பரவலாக வெளியானதால் நிர்வாகத்திற்கு நெருக்கடி முற்றியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி பட்டப் பகலில் சுமார் 2.45 மணிக்கு அவன் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து, அங்கு அவனைத் தடுத்துப் பிடிக்க முயன்ற பெண் பாதுகாவலரைத் தள்ளி விட்டுவிட்டு ஓடிவிட்டான். இந்தச் சம்பவம் மாணவியர் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடும் சந்தேகத்தையும் உருவாக்கியது. உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க வக்கற்ற நிர்வாகமும் பாதுகாப்புக்கான ஒப்பந்தக் கம்பெனியும் புதிய காரணங்களையும் திசைதிருப்பும் முயற்சிகளையும் செய்தன.
தற்போது பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்றுள்ள கம்பெனி எம்.டி. ஹரிஹரனுக்கு நெருக்கமான நபர் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில்தான் விதிமுறைகளைத் திருத்தி அதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இந்த நிறுவனம் பொறுப்பேற்றவுடன் முன்பிருந்த எல்லாப் பாதுகாப்புப் பணியாளர்களும் எந்த முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டனர் என்பதும், அதில் ஹரிஹரன் விரும்பியவர்கள் மட்டுமே மீண்டும் ஒருமாதம் அலைந்து திரிந்து போராடியபின் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர் என்பதும் எல்லோரும் அறிந்த நிகழ்வுகள்தான். இவ்வாறு ஹரிஹரனின் சர்வாதிகாரமும் நிர்வாகத்தின் கையாலாகாத் தனமும் அம்பலமான நிலையில், ஓர் அப்பாவி மாணவனைப் பிடித்து அவர்தான் பெண்கள் விடுதிக்குள் நுழைந்தார் என்று சாதிக்க முயன்றது ஹரிஹரன் கும்பல்.
புதுவை பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் முதலாண்டு படிக்கும் ஏழை மாணவர் ராதா கிருஷ்ணன். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து உயர்கல்வி படிக்க வந்துள்ள அவர் தன் தாய் மற்றும் ஒரே தம்பியின் உதவியினாலேயே படித்து வருகிறார். கடந்த 06.04.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுமார் 11.20 மணியளவில் புதுவைப் பல்கலைக்கழக சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் விடுதியிலுள் தான் தங்கியிருக்கும் அறையில் இருந்துள்ளார். அப்போது பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவர்கள் காணாமல்போன தங்களுடைய பேண்ட்களைத் தேடிக் கொண்டு சந்தேகத்தின் பேரில் ராதா கிருஷ்ணனின் அறைக்கு வந்தனர். குழந்தைக்காலம் தொட்டே வறுமையில் வளர்ந்த அவர் மறைத்து வைத்திருந்த பிற மாணவர்களுடைய பேண்ட்கள் மற்றும் சட்டைகளை அவர்களிடத்து ஒப்படைத்திருக்கிறார். தவிர தன்னிடமிருந்த மற்ற துணிகளை உரிய விடுதி மாணவர்களிடம் அப்போதே ஒப்படைத்துவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த ஆண்கள் விடுதித் தலைமைப் பாதுகாப்பாளர் (Chief Warden for Men – Incharge) சுடலைமுத்து என்ற பேராசிரியர் நடந்த நிகழ்வுகளை முழுமையாக விசாரித்தார். மேலும் அங்கு வேறெதும் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அவ்விடத்திற்கு வந்த பாதுகாப்பு அதிகாரி (Security Manager) சியாம், ராதா கிருஷ்ணனைப் பார்த்து ‘இதுமட்டும்தான் திருடினியா, இல்லை லேப்டாப், வாட்ச், சைக்கிள் போன்றவற்றையும் திருடினாயா?’ என்று கேட்டு கையில் வைத்திருந்த லத்திக்கழியால் ஐந்தாறு அடிகள் உடம்பில் சரமாரியாக அடித்துள்ளார். அதோடு மிக வேகத்துடன் தனது கார் டிரைவரை கூப்பிட்டு அவரைக் காரில் ஏற்றச் சொல்லியுள்ளார். அப்போது அவரைக் காரில் ஏற்றி செக்யூரிட்டி-க்கு கொண்டு சென்றனர். அங்கேயும் கையினாலும் லத்திக்கழியினாலும் பலமாக அடித்து மிருகத்தனமாக நடந்துகொண்டுள்ளது அந்த ஹரிஹரனின் அடிவருடிக் கூட்டம்.
அவ்விடத்தில் பூஷன் என்ற பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு தான்தான் அத்தாரிட்டி என்று அறிவித்துக் கொண்டுள்ள ஹரிஹரனின் விசுவாசி, அந்த மாணவரை லத்திக்கழியைக் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார். பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்பு காணாமல்போன மாணவர்களின் பொருட்கள் திருடுப் போனதற்கும் ராதா கிருஷ்ணன்தான் காரணம் என்ற குற்றத்தையும் அவர்மீது போட்டுள்ளார். ‘நீ பேண்ட், சட்டையை மட்டும் திருடவில்லை. எத்தனையோ லேப்டாப், வாட்ச், ஹெட்செட், செல்போன், மிதிவண்டி திருடியதாக புகார் வந்திருக்கு. டேய்! உண்மையைச் சொல்லு இதற்கெல்லாம் நீதான் பொறுப்பு. சொல்லு, இந்தக் காரியங்களைச் செய்தது நீ ஒருத்தன்தானா? இல்லை ஒரு கேங்கே இருக்கா?’ என்று தொடர்ந்து அடித்துச் சித்திரவதை செய்து மிரட்டியுள்ளார்.
அந்நேரத்தில் அங்கு நுழைந்த ஹரிகரன், ராதா கிருஷ்ணனைப் பார்த்து ‘டேய்! அன்றைக்கு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் போனவன் நீதானடா?’ என்று சொல்லி மிரட்டியுள்ளார். அதற்கு அவர் , “ஐயா, நான் பேண்ட், சட்டையை எடுத்தது உண்மைதான். அவற்றை நான் விற்கவோ அல்லது வேறெந்த மோசமான நோக்கத்துடனோ எடுக்கவில்லை. மேலும் அவற்றை உடனடியாக உரிய மாணவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன். வேறெந்த குற்றமும் நான் செய்யவில்லை, பெண்கள் விடுதிக்குள் நான் நுழையவில்லை’ என்று கெஞ்சி மன்றாடியுள்ளார்.
இந்த அப்பாவி ஏழை மாணவனை வைத்தே பெண்கள் விடுதிப் பிரச்னையை ஊத்தி மூடிவிடுவது என்று முடிவு செய்துகொண்ட ஹரிஹரன், ‘ஒத்துக்கடா, ஒத்துக்கடா’ என்று சொல்லி அவரைக் கடுமையாக ஓங்கி ஓங்கி அடித்துள்ளார். அப்போது அவரின் அழைப்பின் பேரில் அவ்விடத்திற்கு வந்த ஒரு பெண் காவலர் (Security) ‘03.04.2014 அன்றைக்கு என் மேல் மிளகாய்ப் பொடியைத் தூவி தப்பி ஓடிய பையன் இவன்தான்’ என்று அபாண்டமாக அவர்மேல் சாட்டப்பட்டிருந்த குற்றத்தை உறுதி செய்துள்ளார். அப்போது ‘டேய் பொம்பள பொறுக்கி மாட்டுனியா’என்று திட்டிக் கொண்டே மேற்சொன்ன பூஷன் அவரை அடித்துள்ளார்.
மேலும் ஹரிகரன், “டேய்! கிரிமினல்! கிரிமினல்! ஒத்துக்கோடா அந்த பொம்பளையே நீதான்னு சொல்லிட்டாடா, மேலும் இது இல்லாமல் கம்பளைண்ட் கொடுத்த இரண்டு பெண் பிள்ளைகளோட அப்பா எல்லாம் போலீஸ் அதிகாரிங்க, நீ ஹாஸ்டலுக்குள் வந்ததை இவங்க பாத்தாங்களாம். போலீஸ் நிலையத்தில் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறாங்களாம். உன் வாழ்க்கையே தொலைஞ்சுதுடா, எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ளிடுவாங்க ஒழுங்கா குற்றத்த ஏத்துக்கோடா” என்று கடுமையாக மிரட்டிக் கொண்டிருந்த வேளையில் செக்யூரிட்டி அதிகாரிகளான பூஷன் குணசேகரன் உள்ளிட்டோர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
ஹரிகரன், ‘நீ ஒத்துக்கோடா உனக்கு யூனிவர்சிட்டில படிக்கிறதுக்கு எந்தப் பிரச்சனையும் வராம பார்த்துக்கறேன். நீ என் பிள்ளை மாதிரி இருக்குற. உன் காலில் வேணும்னாலும் விழுறேன்டா!’ என்று நைச்சியமாகப் பேசி அந்த ஏழை மாணவனைத் தனது பார்ப்பனச் சதிக்குள் சிக்கவைக்கப் பார்த்துள்ளார்.
கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான ராதா கிருஷ்ணன், செய்வதறியாமல் திகைத்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னுமும் கூட தன்னால் மீள முடியவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார் அவர். தன் மேல் முதல் தகவல் அறிக்கை போட்டுவிட்டால் என்னாகும் என்று அஞ்சியும், கல்வி கற்பதற்கு 40,000 ரூபாய் வட்டிக்குக் கடன்வாங்கி படிக்கவைக்கும் தன் அம்மா மற்றும் தம்பி ஆகியோரின் உழைப்பு வீண் போகக்கூடாது என்ற கவலையினாலும் உடைந்துபோன அவரை உடம்பில் விழுந்த அடிகளும் சேர்ந்துகொண்டு வருத்தியுள்ளன.
அதற்கடுத்ததாக, சிறிது நாட்களுக்கு முன்பு மகளிர் விடுதிக்குள் எவர் எவரோ சென்று பெண்களைப் பயமுறுத்திய குற்றத்தையெல்லாம் ராதா கிருஷ்ணன் பெயரில் சுமத்திக் கொண்டிருந்தனர்.
“இரவு எத்தனை மணிக்கு Girls Hostel-க்கு போவ, என்னென்னவெல்லாம் பண்ணுவ?” என்று அடித்துக்கொண்டே கேட்டுள்ளார் பூசன். பிறகு மேல்சட்டை அணியாத நிலையில் இருந்த அவரை மகளிர் விடுதி நோக்கி ஜீப்பில் அழைத்துச் சென்றனர். இடையிடையில் ஓரிருமுறை அவரை அடித்த ஹரிகரன், சரஸ்வதி பெண்கள் விடுதிக்கு முன்பு ராதா கிருஷ்ணனை நிற்கவைத்து, அங்குள்ள அனைத்து மாணவிகளையும் அழைத்து, “இதோ இவன்தான் இத்தனைநாள் அட்டூழியம் செய்த மகாபாவி’ என்று அவர் அணிந்திருந்த டீ சர்ட்டை கழுத்தோடு இறுக்கிப் பிடித்துப் பிடரியில் ஓங்கி அடித்துள்ளார்.
பிறகு பெண் பாதுகாவலரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய இடம் இதுதானென ஓரிடத்தைக் காட்டி அவர்கள் அங்கேயே ராதா கிருஷ்ணனை குத்த வைத்து உட்காரச் செய்து ஒரு யூகத்தினடிப்படையில் அங்குமிங்கும் விடுதிகளின் மேல் ஏறிக்காட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி பெண்கள் விடுதியில் அவர்கள் கூறியவாறு அவர் ஏறிக்காண்பிக்கும் செயலைச் செய்ய, அதனை முழுவதுமாக பூசன் கேமிராவில் படம் பிடித்துக் கொண்டுள்ளார். உடல் வலியால் ஏற முடியவில்லை என்று மறுத்தபோதும் கூட அவரை விடவில்லை அந்தக் கும்பல். பிறகு அங்குள்ள கங்கா பெண்கள் விடுதிக்கும் அழைத்துச்சென்று அங்கேயும் அனைத்து மாணவிகளையும் அழைத்து, ‘இவன் ஒரு சைக்கோ, இவன்தான் இத்தனைநாள் இங்கே நிர்வாணமாக வந்தவன்’ என்று நாகூசாமல் ஹரிகரன் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். ‘இவன் யாரு தெரியுமா? நம்ம யுனிவர்சிட்டியில் எம்.ஏ. தமிழ் படிக்கிறவன், தமிழ் படிக்கிற கம்மனாட்டி என்று துறையை இதில் சம்மந்தப்படுத்தி ‘தமிழ் ஒரு நீச பாஷை’ தமிழர்கள் நீசர்கள் என்ற பார்ப்பனியக் கண்டுபிடிப்பையும் எல்லா மாநில மாணவிகளிடமும் பரப்பியிருக்கிறார் ஹரிஹரன்.
பின்னர் “பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமுள்ள ஏதோ ஒரு பள்ளத்தையும் கடந்துதான் அன்றைக்கு நீ ஓடினியாமே” என்று எவரோ, என்றைக்கோ ஓடிய இடத்திற்கும் ராதா கிருஷ்ணனை அழைத்துச் சென்றார்கள். அவரைத் தாறுமாறாகத் திட்டிக்கொண்டும், கேமிராவில் படம் எடுத்துக்கொண்டும் இருந்தனர். ஓர் இடத்தைக் காட்டி அங்கிருந்துதான் அவர் ஓடியிருக்க வேண்டுமென்று சொல்லி அவரை நடக்கவைத்துப் படமெடுத்துள்ளனர். அப்போது மாலை நேரமாகிவிட்டதால் ராதா கிருஷ்ணனை செக்யூரிட்டி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மகளிர் விடுதிக்குள் நுழைந்தது அவர்தான் என்றும், மேலும் பல குற்றங்களை அவர்தான் செய்தார் என்றும் கட்டாயப்படுத்தி வெள்ளைத்தாளில் எழுதி வாங்கி கொண்டனர். அங்கு பசியால் தள்ளாடிய நிலையில் இருந்த அவரைக் கொலைக் குற்றம் செய்த சிறைக் கைதியைவிடவும் மோசமாக நடத்தினர். அவரிடம் எந்த நபரையும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. காலை முதல் மாலைவரை உணவு உண்ணாததாலும் மாறிமாறி பலரது கைகளாலும் லத்திகளாலும் அவரவர் ஆசைதீர அடித்ததால் அவரது உடம்பு மேலும் ரணமானது. சுமார் ஒன்றரை நாட்கள் அவரை அடைத்து வைத்திருந்ததில் மொத்தம் மூன்றே மூன்று இட்லிகள்தான் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
மறுநாள் 07.04.2014 அன்று திங்கட்கிழமை காலையில் கழிவறைக்குச்செல்லவும்கூட உடலில் திராணி இல்லாமல் போய் குற்றுயிராகக் கிடந்தார் அந்த மாணவர். இது “வி.சி மேடம் போட்ட கட்டளையென்றார்” பூசன். இப்படியே பொழுது கழிய மதியம் 3.30 மணியளவில் இதுபற்றிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம் தொடங்கலானது. இதற்கு சற்று முன்னர்தான் தமிழியற்புல முதல்வருக்கு இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. தான் ஹரிஹரன் கும்பலின் வலுக்கட்டாயத்தினால் மகளிர் விடுதிக்குள் சென்றேன் என்ற பொய்யை எழுதிக் கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர் என்றும், தன்னை மிருகத்தனமாக அடித்தும் மிரட்டியும் பெண்கள் விடுதிக்குள் நுழைந்தது தான்தான் என்பதுபோல நடிக்கவைத்து படம்பிடித்துக் கொண்டனறேன்றும் ராதா கிருஷ்ணன் தன் நிலையை எடுத்துரைத்தார்.
இவர்கள் மிக அழகாக ஜோடித்த எல்லா கட்டுக்கதைகளையும் உடைத்தெறிய ஆதாரமாக தான் பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நாள் மற்றும் நேரத்தில் (03/04/2014: 2.45 PM) தான் நூலகத்தில் இருந்ததைக் கூறினார், ராதா கிருஷ்ணன். அவரது கூற்று உண்மையெனில், நூலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களில் அவர் நுழைந்ததும் வெளியேறியதும் பதிவாகி இருக்கவேண்டும்; எனவே நூலகத்தின் காமிராப் பதிவுகளை ஆய்வு செய்வது என்று குழு முடிவுசெய்தது. அவ்வாறு சோதித்துப் பார்த்ததில் ராதா கிருஷ்ணன் ஏப்ரல் மூன்றாம் தேதி 1.40 PM மணிக்கு நூலகத்தினுள் நுழைந்ததும், அவர் அங்கேயே இருந்ததும், பின்னர் 5.10 PM மணிக்கு நூலகத்திலிருந்து வெளியேறியதும் மூன்று காமிராக்களில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் அவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததர்க்கான அடையாளங்கள் அவரது உடலில் காணப்பட்டன.
ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்த பேராசிரியர்கள் சிலர் நடுநிலையானவர்கள் என்பதால் நிர்வாகத்தின் மீதுதான் தவறு என்றும் அந்த மாணவர் பிற மாணவர்களின் சட்டையை எடுத்ததைத் தவிர வேறெந்தத் தவறும் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் தொடர் சித்திரவதைக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளான ராதா கிருஷ்ணன் அடுத்தநாள் வகுப்பில் மயக்கமடைந்து விழுந்துவிடவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னரே சுயநினைவுக்கு வந்தார். அவருக்கு நடந்த அநீதி மாணவர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவிகள் பலர் முன்னின்று போராடி ஹரிஹரன் கும்பலுக்குத் தண்டனை பெற்றுத்தர தயாராக இருந்தனர்.
நிர்வாக வளாகத்தினுள் முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பகுதி.
கடந்த புதன் (ஏப்ரல் ஒன்பதாம் தேதி) அன்று மாணவர்கள் சுமார் முன்னூறு பேர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் ஹரிஹரன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டுமென்று வலியுறுத்திப் போராடத் தொடங்கினர். பார்ப்பனக் கூட்டாளி என்பதற்காகவே பதிவாளராக தற்காலிகப் பொறுப்பு வகித்துவரும் பேராசிரியர் இந்துமதி வந்து மாணவர்களைச் சமாதானப் படுத்த முயன்றார். மாணவர்கள் அவருடன் பேசத் தயாரில்லை என்று கூறித் துரத்திவிடவே நிர்வாகம் மாலை வரை மாணவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுக் கலைந்துபோக வைக்கலாம் என்று கணக்குப் போட்டது.
ஆனால் மாலையில் இன்னும் வீரியமடைந்த மாணவர்கள் நிர்வாகக் கூட்டங்கள் நடைபெறும் அரங்கினுள் நுழைந்து அங்கு நடைபெற இருந்த ஓர் ஏலத்தைத் தடுத்து ஏலப் பெட்டியைக் கைப்பற்றிக் கொண்டனர். வேறுவழியின்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் துணைவேந்தர் நீங்கலாக பதிவாளர் இயக்குனர் என அனைவரும் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
போராட்டத்தில் தீவிரமாக களமிறங்கிய மாணவிகள்
இது கண்துடைப்பு வேலை என்பதை உணர்ந்த மாணவர்கள், “என்ன நடவடிக்கை எடுக்கப்படும், எவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதைத் தெளிவாக எழுத்தில் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் நிர்வாகம் காவல்த்துறையை உள்ளே அழைத்தது. காவல்துறை ஆய்வாளரை சூழ்ந்துகொண்ட மாணவர்கள் தமது நியாயங்களை எடுத்துக் கூறி, “இதில் நிர்வாகத்திற்கு அடியாள் வேலை பார்க்க வேண்டாம்” என்று விளக்கினர். ஆய்வாளரும் இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை அல்ல என்றும் நிர்வாகமே பேசித் தீர்க்குமாறும் கூறிவிட்டு தேர்தல் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். மாணவிகள் பதிவாளரைச் சூழ்ந்துகொண்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி விடவே அடுத்தநாள் பதினோரு மணிக்கு என்ன நடவடிக்கை என்பது பற்றியும் அதன் விபரங்களையும் தெரிவிப்பதாக எழுதிக் கொடுத்தார்.
நிர்வாகம் ஏதேனும் தீர்வு வழங்கி ஹரிஹரன் கும்பல் மீது பெயரளவுக்காவது ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு மாணவர்கள் அடுத்தநாள் கூடினர். ஆனால் நிர்வாகமோ ஒழுங்கு நடவடிக்கைக் குழுசமர்ப்பித்திருந்த அறிக்கையை மட்டும் படித்துவிட்டு ‘நீங்கள் கேட்டதற்கு இதுதான் பதில்’ என்று கூறி மோசடி செய்தது. சட்ட விரோதமாக ஒருவரை அடைத்து வைத்திருந்தது, அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்தது, ஒவ்வொரு பெண்கள் விடுதியாகக் கூட்டிச் சென்று அவமானப் படுத்தியது, அவரது அனுமதி இல்லாமல் அவரைப் படம் பிடித்தது, மிரட்டி தாங்கள் விரும்பியவற்றை எழுதிக் கையெழுத்துப் பெற்றது என்று அடுக்கடுக்கான குற்றங்களைச் செய்த ஹரிஹரன் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முன்வராது என்பதை உணர்ந்த மாணவர்கள் தாமாகவே புறப்பட்டு பூஷன் அறையை உடைத்து உள்ளிருந்த பொருட்களைக் கலைத்துப்போட்டனர்.
மாணவிகளே இதனை முன்னின்று செய்து பெண்களின் போராட்ட உறுதியைப் பறைசாற்றினர். தங்களுக்கு கிடைக்கவேண்டிய சரியான தீர்வை வேண்டுமென்றே நிர்வாகம் ஒருசார்புத்தன்மையோடு மறுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாத மாணவர்கள் கோபமுற்று பின்னர் ஹரிஹரனின் வீடு மற்றும் கார் ஆகியவற்றை சேதப்படுத்திய நிகழ்வு, ஆளும் வர்க்கம் நீதியை நிலைநாட்டத் தவறி, மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும்போது மக்கள் நீதியை நிலைநாட்டுவார்கள் என்பதை உணர்த்துகிறது. நிர்வாகம் 15 ஏப்ரல் செவ்வாய் அன்று ஹரிஹரன் கும்பலுக்கு எதிராக உருப்படியான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என்ற எச்சரிக்கைக் கடிதம் துணைவேந்தரிடம் அளிக்கப்பட்டுள்ளது. பூஷன், ஹரிஹரன் இருவரும் மாணவர்கள் தமது சொத்துக்களைச் சேதப்படுத்திவிட்டதாகக் கூறி காவல்த்துறையில் புகார் அளித்துள்ளனர்.
நீதி வேண்டி Director of Studies அலுவலகத்தை முற்றுகையிட்டபோது எடுத்த படம். நன்றி: தி ஹிந்து
மாணவர்கள் தன்னெழுச்சியாகவே நடத்திய இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தொடக்கம் முதல் உடனிருந்து ஆலோசனைகள் வழங்கியும் பங்கேற்றும் வருகிறது. குறிப்பாக, குறிப்பிட்ட மாணவர் அந்தக் குற்றங்களைச் செய்தாரா இல்லையா என்பதைவிட முக்கியமான பிரச்சனை ஹரிஹரனுக்கோ பாதுகாப்பு ஒப்பந்ததாரருக்கோ அதனை விசாரிக்கும் அதிகாரம் கிடையாது என்பதும், விசாரணை நடத்தப்பட்ட முறை முற்றிலும் கிரிமினல் தனமானது என்பதும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த பல்கலைகழக நிர்வாக சீர்கேட்டிற்கு பளிச்செனத் தெரியும் ஒரு உதாரணம் ராதா கிருஷ்ணணனை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து பொய் வாக்குமூலம் வாங்கிய பூசன் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஒரு உறுப்பினர். இதையும் அம்பலப்படுத்தி மாணவர் மத்தியில் பேசப்பட்டது. மேலும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் ஹரிஹரன் கும்பலைத் தண்டிக்கக் கோரியும் பல்கலைக்கழகம் பார்ப்பனமயமாகிவிட்டதைக் கண்டித்தும் பல்கலைகழக வளாகம் மற்றும் புதுவை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
ஹரிஹரன் மற்றும் கூட்டாளிகளை அம்பலப்படுத்தி புதுவை நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.போராட்டத்தை ஒட்டி பல்கலைகழக வளாகத்தினுள் ஒட்டப்பட்ட A3 அளவு சுவரொட்டி.
அதுமட்டுமன்றி ஹைதராபாத் உள்ளிட்ட பிற மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் அந்தந்த வளாகங்களில் புதுவைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அராஜகப் போக்கைக் கண்டித்துச் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதோடு அந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கையெழுத்தியக்கமும் தொடங்கியுள்ளனர். போராட்டம் ஒன்றுதான் தம் விடுதலையையும் உரிமைகளையும் பெற ஒரே வழி என்பதைப் புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் ராதா கிருஷ்ணனுக்கு நடந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தின் மூலம் தாமாகவே தம் சொந்த அனுபவத்தில் உணரத் தலைப்பட்டுள்ளனர்.
இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.)
தமிழ்நாடு & புதுச்சேரி
“விதைகளோடு தர்ப்பூசணியை சுவைப்பது தொந்தரவாக இருக்கிறதே, ஏதும் தொழில் நுட்ப தீர்வு கிடையாதா” என்று கேட்ட போது ஒரு தோழர் ஆண்டிகளது கதை ஒன்றைச் சொன்னார்.
நாலு வோட்டு பெறுவதற்காக நாய் மாதிரி நாக்கை தொங்க விட்டு அலைவதற்கும் நரேந்திர மோடி தயாராகி விட்டார்.
சோம்பேறிகள் மடத்தில் வாசம் செய்யும் இரண்டு ஆண்டிகள் பேசிக் கொள்கிறார்கள்.
முதல் ஆண்டி : “பக்கத்து தெருவில் கோயில்ல வாழைப்பழம் கொடுக்கிறாங்களாம், போய் வாங்கிக்கலாமா”.
இரண்டாவது ஆண்டி : “உரிச்சி கொடுக்கறாங்களா, உரிக்காம கொடுக்கறாங்களா”.
எடுப்பது பிச்சை என்றாலும் தோல் உரிக்கப்பட்ட வாழைப்பழத்தை தின்றால் வேலை மிச்சம் என்று சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்தும் சுதந்திரம் ஆண்டிகளுக்கு உண்டுதான். ஆனால் இன்னும் பழுக்காத பச்சை வாழைக்காயை பிரசாதமாக கொடுக்கிறார்கள்; அதுவம் காலியாகி, பழமென்று நம்பி நாய் கடித்து போட்டுவிட்ட பாதிதான் கீழே கிடக்கிறது; அது தெரிந்தும் விடாமல் சாப்பிட்டு பெருமாள் கோவில் படிக்கட்டு பிச்சைக்காரர்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்காதா என்று அலையும் அற்பத்தனமான ஆண்டிகளை என்ன சொல்வது?
கதையை விஞ்சும் நிஜம். ஆம். நாலு வோட்டு பெறுவதற்காக நாய் மாதிரி நாக்கை தொங்க விட்டு அலைவதற்கும் நரேந்திர மோடி தயாராகி விட்டார். ரஜினியை வீடு தேடி மோடி சந்தித்தது குறித்த பத்திரிகை செய்திகளை சலித்து பார்த்தால் வாக்குக்காக அலையும் அந்த நாக்கின் யோக்கியதையை அறியலாம்.
நேற்று (13.04.2014) சென்னை பொதுக்கூட்டத்திற்காக வந்த மோடி, ரஜினி வீட்டிற்கு சென்று 45 நிமிடங்கள் இருந்திருக்கிறார். மோடி வீடு புகுந்ததும், கதவை சாத்திவிட்டு ஊடகவியலாளர்களை வீட்டுஅருகிலேயே அனுமதிக்கவில்லை. ‘வரலாற்று’ இகழ்மிக்க இந்த சந்திப்பு முடிந்ததும் மோடி வெளியே வந்து காரில் செல்ல ஆயத்தமானதும், ரஜினி அவரை திரும்ப அழைத்து பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். ஏன்? ஒரு வேளை மோடி அப்படியே வெளியே போய் விட்டால் பாஜக முதலைகள் ஆளுக்கொரு கதை விட்டு, ‘ரஜினி தாமரைக்கு ஓட்டு போட மக்களுக்கு வேண்டுவதாக மோடியிடம் உறுதி கொடுத்தார்’ என்று வந்தால் முதலுக்கே மோசமாகிவிடும்.
காரில் ஏறிய மோடி உர்ரென்று இஞ்சி தின்ற கொரில்லா போல இருந்ததற்கும் காரணம் இருக்கிறது. சார்த்திய கதவுக்குள்ளே மோடி எதிர்பார்த்தது போல ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் மோடியின் காதுகளில் விழவில்லை. அதுதான் அந்த இஞ்சியின் கோரம்.
காரில் ஏறிய மோடி உர்ரென்று இஞ்சி தின்ற கொரில்லா போல இருந்ததற்கும் காரணம் இருக்கிறது
இதற்கு ஆதாரம் என்ன?. ஊடகங்களிடம் அவர் தெரிவித்த வார்த்தைகளை கவனமாக ஆய்வு செய்தால் யாரும் ரசிக்கலாம். மட்டுமல்ல இன்றைக்கு வந்த தினமலருக்கு போட்டியாக, வரும் நாட்களில் ரஜினியை அட்டைப்படமாக போட்டு வெளிவரப் போகும் விகடன், சோ வகையறாக்களிலும், பூட்டிய கதவுக்குள் மோடிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி குறித்து விதவிதமான சேதிகள் கூச்ச நாச்சமில்லாமல் புனையப்படும். அதன் பொருட்டும் நாம் இதை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
கீழே ரஜினி பேசியதும், அடைப்புக்குறியில் நாங்கள் எழுதிய பொருள் விளக்கத்தையும் சேர்த்து போட்டிருக்கிறோம்.
“இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. (முதல் வாக்கியமே மோடிக்கு வேட்டு வைக்கிறது. தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் ரஜினி)
மோடி எனது நல்ல நண்பர். (ரஜினி எனக்கும்தான் நணபர், நானும் அவர் வீடு சென்று பார்க்க முடியும், என்ற காங்கிரசு தலைவர் ஞானதேசிகன் கூறியதை பாருங்கள், ரஜினியை பார்க்க எந்த பிரபலங்கள் வந்தாலும் பார்க்கலாம், கூர்க்காவும் தடுக்க மாட்டார், சூப்பர்ஸ்டாரும் தயங்க மாட்டார்.)
எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார் மோடி.ஒவ்வொரு வாரமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். (இந்த நல விசாரிப்பை பல்வேறு அரசியல் தலைவர்களும் செய்திருப்பார்கள். அவர்களையெல்லாம் பட்டியல் போட்டால் இருமுடி பலசரக்கு சீட்டு போல மைல் கணக்கில் நீண்டு விடும். அடுத்து உடல் நலத்தை விசாரிப்பவர்களெல்லாம் ரஜினியோடு நெருக்கமான நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால், ரஜினியின் செல்பேசி முகவரி மெமரி கார்டு வெடித்து விடும்.)
இன்றைக்கு என் வீட்டுக்கு வந்து டீ சாப்பிட விரும்பினார். அதன்படி நானும் அவரை வரவழைத்து உபசரித்தேன். அவர் என்னோடு டீ சாப்பிட்டார். ( நன்றாக கவனியுங்கள், ரஜினி தானே வலிய போய் மோடியை அழைக்கவில்லை. மோடியே தொந்தரவு செய்து வந்ததால்தான் இது நடந்தது. அதுவும் ஐந்து ரூபாய் பெறாத டீ மட்டும்தான். நெருங்கிய நட்பில் இல்லை என்றால் வருபவர்களுக்கு டீயைத் தவிர வேறு இல்லை.)
மோடியின் வருகை எனக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. (பிறகு வீட்டுக்கு டீ தானம் கேட்டு வந்தவர் வருகையால் துக்கம் வந்தது என்றா சொல்ல முடியும். ஒரு வேளை துக்கம் துண்டையை அடைத்தாலும் அதை துப்ப முடியாத படி மோடியின் என்கவுண்டர் போலீசு நினைவுக்கு வந்திருக்குமோ?)
அவர் இந்தியாவில் வலுவான தலைவர். திறமையான நிர்வாகி. அவருக்கு எனது வாழ்த்துக்கள். எல்லாம் நல்லபடி நடக்க வாழ்த்துகிறேன். அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன். அவர் நினைப்பது எல்லாம் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். (இதெல்லாம் காலில் விழுபவர்களுக்கு பெருசுகள் சொல்லும் பொதுவான ஆசீர்வாதமன்றி வேறு எதுவுமல்ல. அதிலும் மோடி என்ன நினைக்கிறாரோ அது வெற்றி பெற வேண்டும் என்றுதான் ஆண்டவனிடம்தான் பிராத்திக்கிறார். மாறாக தமிழக மக்களிடம் கோரிக்கை வைக்க விரும்பவில்லை. கடவுள் இல்லை என்ற உண்மை ரஜினியை எப்படியெல்லாம் காப்பாற்றுகிறது பாருங்கள்.)”
பிறகு மோடி பேசிய போது, “தமிழ்நாட்டில் நாளை புத்தாண்டு. எனவே, எல்லோருக்கும் வாழ்த்துக்கள்” என்று மட்டும் தெரிவித்தார். உர்ரென்று இருப்பதோடு வார்த்தைகளும் ஓரிரண்டோடு பேசிவிட்டு பறந்து போன மாயம் என்ன? எல்லாம் எதிர்பார்த்து வந்தது கிடைக்கவில்லை என்று வெறுப்பைத் தவிர வேறு என்ன?
இருப்பினும் ஊடகங்கள் அனைத்தும் தமிழக தேர்தல் காலத்தில் மாபெரும் பரபரப்பு என இந்த சந்திப்பை ஊதிப் பெருக்குகின்றன. தினமலரோ ஒரு படி இல்லை, ஒரு ஒளியாண்டு தூரம் மேலே போய் செய்தியை பச்சையாக திரிக்கிறது. அதாவது மற்ற தினசரிகள் எல்லாமே மோடிதான் ரஜினி வீட்டிற்கு வந்து ஒரு டீ குடிக்க விரும்பியதாக ரஜினி தெரிவித்தாக கூறியிருந்தன. ஆனால் தினமலர் மட்டும் இதை அப்படியே திரித்து ரஜினிதான் டீ குடிக்க வருமாறு மோடியை அழைத்ததாக புளுகியிருக்கிறது. இந்த லட்சணத்தில் தமிழகத்தில் மோடி அலை வீசுவதாகவும் இந்த ரஜினி சந்திப்பு அதை சுனாமி போல மாற்றிவிட்டதாகவும் ஊளையிடுகிறது பார்ப்பன தினமலர். பிச்சை எடுக்க வந்தவனை, பிச்சை போடுபவன்தான் அழைத்தான் என்று கூசாமல் எழுதுவதற்கு இந்த உலகில் தினமலரால் மட்டுமே முடியும்.
தினமலரே பரவாயில்லை என்று ஜூனியர் விகடனில் திருமாவேலன் பிய்த்து உதறுவார், காத்திருப்போம் அந்த கருமம் வரும் வரை.
உண்மையில் இந்த சந்திப்பு இவ்வளவு கேவலமாக பாஜகவின் ஆசையில் மண் அள்ளிப் போடுமளவு நடந்தது ஏன்?
அதற்கு இந்த சந்திப்பின் கிளைமேக்ஸ் உணர்ச்சியை தடயமாக வைத்து இது எப்படி நடந்திருக்கும் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே ஏதாவது கூட்டணி வைத்து காவிக் கொடியை ஒரு சாண் குச்சியிலாவது ஏற்ற வேண்டும் என்று பாஜக துடித்தது. அதற்காக விஜயகாந்த பின்னால் விரட்டியடிக்கப்பட்ட தெரு நாய் போல சளைக்காமல் சுற்றி வந்தது. இந்த கேவலம் முடிவுக்கு வந்த போதே ரஜினி ஏதாவது நமக்கு வாய்ஸ் கொடுத்தால் ஏதாவது ஐந்து பத்து – ஓட்டுதான – தேற்றலாமே என்று பாஜகவிற்கு எச்சில் வழிந்தது. அதைத்தான் பல்வேறு நிர்வாகிகள் விரைவில் ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என்று ஊடகங்களில் அன்றாடம் ஜபித்து வந்தார்கள்.
இருப்பினும் ரஜினி கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் பாஜக தலைவர்களே மானம் கெட்டு ரஜினியிடம் தொடர்பு கொண்டு கேட்டிருப்பார்கள். அதற்கு காரியவாத பெருச்சாளியான ரஜினி, “ஜி இப்போ அரசியெல்லாம் வேண்டாமே, ப்ளீஸ்” என்றிருப்பார். பிறகு பொன்னார் கொஞ்சம் வேறு விதமாக மிரட்டியிருப்பார். அதாவது “ரஜினி சார், மோடிஜியை பார்க்க நீங்க ஒத்துக்கிட்டதாக அவரிடம் தெரிவித்து விட்டோம், இப்போ வேணாம்னா சொன்னா நல்லா இருக்காது, ப்ளீஸ்” என்று கொஞ்சம் மிரட்டலோடு கெஞ்சியிருப்பார்கள்.
சரி, நாளைக்கே பிரதமர் ஆகிறவர், வேண்டாமென்று சொன்னாலும் பிரச்சினை, ஓகேன்னு சொன்னா அம்மா வைக்கப் போகிற ஆப்பு நினைவுக்கு வருகிறது. கூடவே கோச்சடையானுக்கும் சேர்த்து வைத்துவிட்டால் பிறகு வடிவேலு கதைதான். எனவேதான் மோடிஜி வரட்டும், ஆனா நோ அரசியல் ஒன்லி சாயா என்று ரஜினி ஒப்பந்தம் போட்டிருப்பார்.
இதுவரைக்கும் யார் வீட்டிற்கும் நாம் போகவில்லை. ரஜினி வீட்டிற்கு போனால் பிறகு மேக்னா நாயுடு வீட்டிற்கும் போக வேண்டி வருமோ என்றெல்லாம் மோடி கொஞ்சம் தயங்கியிருப்பார். மேலும் வல்லரசு இந்தியாவுக்கு தலைமை தாங்கப் போகிறவர் போயும் போயும் ஒரு கூத்தாடி வீட்டுக்கு சாயாவுக்காக போகணுமா என்று ஒரு ஈகோ இல்லாமல் இருக்காது. இருந்தாலும் பத்து இருபது ஓட்டு கிடைப்பதாக இருந்தால் வெட்கம் மானம் பார்க்க கூடாது என்று மோடியும் கடைசியில் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு அதை வைத்து தாமரைக்கு ரஜினி ஆதரவு என்று போஸ்டர், மோடி ரஜினி படம் போட்டு அறுவடை செய்யலாம் என்று பொன்னார் அன்கோ அசால்ட்டாக நினைத்திருக்கிறது. மேலும் சாணக்கிய குரு சோவோடும் ரஜினி கலந்திருக்க வேண்டும். “மோடியை பாருங்க, ஆனா ஆதரவுன்னு வெளிப்படையா சொல்ல வேண்டாம், இங்கே அம்மாதான் ஜெயிக்க வேண்டும். பாஜக நிச்சயமாக வெற்றிபெரும் இடங்களில் மட்டும் தாமரைக்கு ஓட்டு போடலாம் என்று நானே சொல்லிவருகிறேன், எனவே உசராக இருங்கள்” என்று எச்சரித்திருப்பார்.
இப்படித்தான் ரஜினி மோடி சந்திப்பு மகா கேவலமாக மேலே விவரித்தபடி நடந்திருக்கிறது. மேலும் 90-களின் இறுதியில் ரஜினிக்கு பெரிய வாய்ஸ் இருப்பதாக ஊடகங்கள் கொடுத்த பில்டப்பை நம்பிய ரஜினி அப்போதும் அரசியலுக்கு வரும் தைரியத்தையும், உழைப்பையும் பெற்றிருக்கவில்லை. திரைப்படங்களில் சுறுசுறுப்பாக அதுவும் கிராபிக்ஸ் உதவியுடன் மின்னிய சூப்பர் ஸ்டார், நிஜத்தில் அச்சமும், அறியாமையும் கலந்த ஒரு சோம்பேறித்தனமான காரியவாதி மட்டுமே.
அவருக்கென்று தனியாக செல்வாக்கு ஏதுமில்லை என்பதாலேயே 2004 தேர்தலில் அவர் அதிமுக – பாஜகவிற்கு ஆதரவு கேட்டும் ஒரு சீட்டு கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை. அத்தோடு ரஜினிக்கு ப்யூஸ் போய்விட்டது. இருப்பினும் அவ்வப்போது ஊடகங்கள் மட்டும் அவருக்கு உயிர் கொடுத்து வந்தன.
ஆக இன்று ரஜினியிடமிருந்து ஒரு கட்சிக்கு வாக்கு கிடைக்க வேண்டுமென்றால் அது ரஜினி, லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று நாலு ஓட்டு மட்டும்தான் கிடைக்கும். பிறகு ரஜினி வீட்டை பாதுகாக்கும் செக்யூரிட்டிகள் கூட அவரது வாய்சுக்காக ஓட்டும் போட மாட்டார்கள், சினிமாவுக்கு சீட்டும் எடுக்க மாட்டார்கள்.
ஆனாலும் சோ, விகடன், இந்து, குமுதம், தினமலர் முதலான பார்ப்பனிய ஊடகங்கள் சூப்பர் ஸ்டாருக்கு சோப்பு போடுவதோடு அவருக்கென்று செல்வாக்கு இருப்பதாக மாயையை உருவாக்க முயல்கின்றன. அதை பாஜகவிற்கு பயன்படுத்தவும் விரும்பின.அந்த அடிப்படையில்தான் இந்த எச்சக்கலை டீ சந்திப்பு நடந்திருக்கிறது. ஆனாலும் ரஜினி அதை மறக்க முடியாத எச்சக்கலையாக மாற்றி விட்டார். வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தால் பலரும் எதிர்ப்பார்கள், குறிப்பாக இசுலாமியர்கள் எதிர்ப்பார்கள், ஆப்கானிலிருந்து அல்கைதா ஏதும் வந்து குண்டு வைத்து விட்டால் என்ன ஆகும் போன்ற பயமெல்லாம் ரஜினிக்கு இருக்காது என்பதல்ல.
ஆனால் அவர் இமயமலை போகிறார், பாபாவைப் பற்றி பேசுகிறார், ஆன்மீகம் படிக்கிறார், துக்ளக் கூட்டத்திற்கு தவறாமல் வருகிறார், இதற்கு முன் அத்வானியை ஆதரித்திருக்கிறார், அவர் இயல்பான இந்துத்துவ ஆதரவாளர் என்று பாஜக வானரங்கள் நம்புவதில் குறையில்லை. இருப்பினும் அம்மா விருப்பத்திற்கு மாறாக நடந்தால் பிழைக்க முடியாது என்ற பயமும் ரஜினிக்கு உண்டு. வடிவேலு போல இழப்புகளை தாங்கிக் கொள்ளும் உறுதி இவருக்கு கிடையாது.
ஆக இவை அனைத்தும் கூடித்தான் இந்த சந்திப்பை காமடியாக மாற்றியிருக்கிறது. ஆனாலும் பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப்ப போல அலைகிறார்கள் என்பது முக்கியம். இவர்தான் வருங்கால பிரதமர் என்று முன்னிறுத்தப்படுகிறார் என்றால் தில்லானா மோகனாம்பாள் வைத்திக்களே பிரதமராக வரலாமே?
எது எப்படியோ இந்த சந்திப்பின் மூலம் பாஜகவையும், மோடியையும் செருப்பால் அடித்த்து போல ஒரு எஃபெக்ட் கொடுத்ததற்கு ரஜினியை நாம் பாராட்டத்தான் வேண்டும். மற்ற மாநிலங்களில் விஐபிக்கள் மோடியை தேடி வந்து ஆதரிக்கிறார்கள். இங்கு மோடியே தேடி வந்து ஆதரவு பிச்சை கேட்டாலும் கிடைக்கவில்லை. இதுதாண்டா பெரியார் பிறந்த மண்!
இதற்கு மேல் ரஜினி வீட்டில் ராகுல் காந்தி வந்து பானி பூரி சாப்பிட விரும்பினாலும், மு.க.ஸ்டாலின் வந்து அவிச்ச வேர்க்கடலை சாப்பிட முனைந்தாலும், அவ்வளவு ஏன் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்கே மோர் அருந்த வந்தாலும் ரஜினி வரவேற்பார், மோடிக்கு சொன்னது போல அவர்கள் விரும்பியது நிறைவேற ஆண்டவனிடம் பிராத்திப்பதாகவும் சொல்வார்.
சரி எல்லாரது விருப்பங்களிலும் எது நிறைவேறும் என்று கேட்டால் “ அது அவன் கையில், என் கையிலில்லை” என்று மேலே பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்? இது எப்படி இருக்கு?
தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்கள் என்றைக்குமே தங்களது முதலாளிகளின் விருப்பத்தின்பேரில்தான் செயல்படுகின்றன. அவை ஒரு நாளும் நடுநிலைமையோடு செயல்பட்டதில்லை. இதுநாள்வரை நாம் கூறியபோதெல்லாம் ஏற்காதவர்களுக்கு இந்த உண்மையை ஆம் ஆத்மி கட்சியினர் தமது பிரச்சாரத்தின் மூலம் விளக்கி வருகின்றனர்.
(கடிகாரச் சுற்றுப்படி) மோடிக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக தி இந்து நாளிதழிலிருந்து வெளியேற்றப்பட்ட சித்தார்த் வரதராஜன்; ஓபன் மேகசின் பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்ட அர்தோஷ் சிங் பால்; சன் டி.வி.யால் ஓரங்கட்டப்பட்டுள்ள வீரபாண்டியன்; சி.என்.என் ஐ.பி.என் நிர்வாகத்தால் கண்டிக்கப்பட்ட நிகில் வாக்லே.
சி.என்.என். – ஐ.பி.என். ஆங்கிலத் தொலைக்காட்சியில் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், கோதாவரி எண்ணெய் வயலில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவின் விலையை அம்பானிக்கு உயர்த்திக் கொடுத்திருக்கும் காங்கிரசு அரசின் முடிவை நியாயப்படுத்திப் பேசினார் ஒரு வல்லுநர். அந்த விவாதத்தில் பங்கேற்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மேற்படி வல்லுநருக்குப் படியளப்பவர் முகேஷ் அம்பானி என்ற உண்மையை அம்பலப்படுத்தி னார். “உங்கள் தொலைக்காட்சியே அம்பானிக்குச் சோந்தமானதுதானே, பிறகு உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று பிரசாந்த் பூஷண் கூற, அதுவரை நடுநிலையாகப் பேசுவது போல பாவ்லா காட்டி வந்த பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பர், ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் பாணியில் கூச்சல் போட்டு பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல் தடுக்க வேண்டியதாயிற்று.
அதேபோல சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கும் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேத்தான், “எனக்கு பத்திரிகைத் துறையைப் பற்றித் தெரியாதா? உங்கள் தொலைக்காட்சி நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று என்று என்னை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
“தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் தங்களை இருட்டடிப்பு செய்கின்றன, மோடியை பிரதமராக்கத் திட்டமிட்டு விளம்பரப்படுத்துகின்றன” என்று குற்றஞ் சாட்டித் தான் ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது ஊடகங்களைத் தோலுரித்து வருகின்றனர். தனியார்மயத்தின் ஆதரவாளரான கேஜ்ரிவால், தேர்தல் பிரச்சார உத்தியாகத்தான் இதனைச் செய்கிறார் என்ற போதிலும், ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஊடகங்களால் முடியவில்லை. “உங்களை இருட்டடிப்பு செய்வதாகக் கூறுகிறீர்களே, நாங்கள் உங்களைப் பிரபலப்படுத்தாவிட்டால், நீங்கள் இன்றைக்கு ஆளாகியிருக்க முடியுமா? உங்களைப் புகழ்ந்தால் இனிக்கிறது, விமர்சனம் செய்தால் வலிக்கிறதா” என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றன ஊடகங்கள். ஊடகங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
அன்னா ஹசாரேயும், அர்விந்த் கேஜ்ரிவாலும் அவர்களது ஊழல் ஒழிப்பு இயக்கமும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களால்தான் திட்டமிட்டே ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டன. வேறு செய்தியே கிடையாது என்பது போலவும், இதைத்தவிர நாட்டில் வேறு மக்கள் போராட்டங்களே நடக்கவில்லை என்பது போலவும் அன்று ஊடகங்களால் நடத்தப்பட்ட இந்த ஆபாசக் கூத்துதான் இன்று அரவிந்த் கேஜ்ரிவால் பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்தது என்பது மறுக்கவியலாத உண்மை.
அரவிந்த் கேஜ்ரிவாலையும் அன்னா ஹசாரேவையும் ஆளும் வர்க்க ஊடகங்கள் அன்று விளம்பரப்படுத்தியதற்கு ஒரு நோக்கம் இருந்தது.
அன்று மத்திய இந்தியா முழுவதும் ஒரு அறிவிக்கப்படாத போரை இந்திய அரசு நடத்தி வந்த காலகட்டமாகும். கார்ப்பரேட் முதலாளிகளின் கனிமவளக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கத்தான் மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலை அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது என்பது பரவலாக அம்பலமாகியிருந்தது.
அதேசமயம், காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் எனத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்களும் அம்பலமானதுடன், இந்த ஊழல்களில் கார்ப்பரேட் முதலாளிகளின் பாத்திரத்தை நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அம்பலமாக்கின.
இந்தச் சூழலில்தான் குறிப்பான எந்த ஊழலைப் பற்றியோ, அதில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் முதலாளிகள் பற்றியோ பேசாமல், தனியார்மயக் கொள்கைக்கும் ஊழலுக்கும் இடையிலான நேரடி உறவு பற்றியும் பேசாமல் பொதுவாக ஊழல் எதிர்ப்பு பேசிய அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு நாடகம், மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக கார்ப்பரேட் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. அதிகார வர்க்க ஊழலால் அன்றாடம் பாதிக்கப்படும் ஆம் ஆத்மியையும் (எளிய மனிதனையும்) ஊழலின் ஊற்றுக்கண்ணான முதலாளி வர்க்கத்தையும் ஒரே தரப்பாக நிறுத்தி, இருவருமே ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கி, ஊழலை வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாக காட்டிய இந்தத் தந்திரம் கேஜ்ரிவாலின் சொந்த சரக்கு அல்ல; உலக வங்கி தந்த சரக்கு.
பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளால் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவது, காடுகள், நிலங்கள் பறிக்கப்படுவது மற்றும் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிக்கப்பட்டு விட்டால் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் மக்களுக்குச் சொர்க்கத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற பிரமையை சிவில் சொசைட்டி அமைப்புகள் என்றழைக்கப்படும் ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உலக வங்கி பரப்பி வந்தது. களத்தில் இறக்கப்பட்ட பல தன்னார்வக் குழுவினரில் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒருவர். இதன் காரணமாகத்தான் அன்னாவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பேராதரவு வழங்கி, தனது ஊடகங்கள் மூலம் அதனை ஊதி ஊதிப் பெரிதாக்கி காட்டியது. அன்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கேஜ்ரிவாலை விளம்பரப்படுத்தியதற்கான காரணம் இதுதான்.
வெறும் ஊழல் ஒழிப்பு முழக்கம் ஓட்டுக்களைப் பெற்றுத்தராது என்று புரிந்திருந்த கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய பின், மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு டெல்லியின் மின் கட்டண உயர்வையும், தண்ணீர் கட்டணத்தையும் எதிர்த்த நடவடிக்கைகளில் இறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் போலீசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகத் தெருவிலிறங்கினார். கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைகளின் நோக்கம் தேர்தல் அரசியலில் செல்வாக்கு பெறுவதுதான் என்ற போதிலும், இத்தகைய ‘வரம்பு மீறிய’ நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ள ஆளும் வர்க்கங்கள் தயாராக இல்லை என்பதால் கேஜ்ரிவாலை அராஜகவாதி என்று சித்தரிக்கத் தொடங்கின ஊடகங்கள்.
ஊழல் ஒழிப்பு, சிறந்த அரசாளுமை என்பது உலக வங்கியின் முழக்கம்தான் என்ற போதிலும், ஊழல் ஒழிப்பு நாடகத்துக்கு கேஜ்ரிவாலைப் பயன்படுத்திக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், சிறந்த அரசாளுமைக்கு மோடியை ஒருமனதாகத் தெரிவு செய்து வைத்திருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்கள் தங்களது முதலாளிகளின் விருப்பத்தை மென்மேலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. மோடிக்கெதிரான செய்திகளை எழுதக் கூடாது என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பத்திரிகைகளும் தங்களது செய்தியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவே போட்டன. இதனை மீறிய மூத்த பத்திரிக்கையாளர்கள் பலர், தயவு தாட்சண்யமின்றித் துரத்தியடிக்கப்பட்டனர்.
‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சித்தார்த் வரதராஜன், அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஊர்ஊராகச் சென்று மோடி நடத்திரும் ‘ஆவி எழுப்புதல் கூட்டங்கள்’ குறித்த செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட மறுத்தது, சுப்பிரமணிய சாமியின் அறிக்கைகளைப் பிரசுரிக்க மறுத்தது, முகேஷ் அம்பானி குறித்த ஒரு அம்பலப்படுத்தலை வெளியிடத் திட்டமிட்டிருந்தது என்பன போன்ற காரணங்களுக்காக அவர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல மோடியை அம்பலப்படுத்திச் செய்திகளை வெளியிட்ட’ ஓபன் மேகசின்’ பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியரான அர்தோஷ் சிங் பால், பத்திரிகையின் உரிமையாளர்களான கோயங்கா குழுமத்தினரால் நீக்கப்பட்டிருக்கிறார்.
மோடியை அம்பலப்படுத்திப் பேசுவதைக் கைவிடவேண்டும் என சி.என்.என். – ஐ.பி.என். தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் சகாரிகா கோஷுக்கும், அதே நிறுவனத்தின் மராத்திய சேனலின் ஆசிரியரான நிகில் வாக்லேவுக்கும் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அவ்வளவு தூரம் போவானேன், மோடியை எதிர்மறையாக சித்தரித்த காரணத்துக்காக, வீரபாண்டியன் நடத்திவந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது சன் தொலைகாட்சி.
மோடியை பிரதமராக்க வேண்டும் என்பது தற்போது இந்திய ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் கருத்து. பொதுச்சொத்துகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடும் தங்களது வெறிக்கும் தாராளமயக் கொள்கைகளைத் திணிக்கும் அவசரத்துக்கும் பொருத்தமான ஒரு பாசிஸ்ட் என்ற முறையில் அவர்கள் மோடியை முன்தள்ளுகிறார்கள். ‘திறமைசாலி’ என்று சொல்லி பத்தாண்டுகளுக்கு முன்னர் மன்மோகன் சிங்கை மார்க்கெட்டிங் செய்த அதே உத்திதான்.
கார்ப்பரேட்டும் பாசிஸ்ட்டும் இணைந்த இந்தக் கூட்டணி நடுநிலை முகச்சாயங்களைக் களைந்து விட்டு, தங்கள் நோக்கத்துக்கு ஒத்து வராத பத்திரிகையாளரை உடனே வெளியேற்றி விடுகிறது. இந்திய ஊடகத்துறையைப் பொருத்தவரை, அதனைக் கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 30-க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதில் சி.என்.என். – ஐ.பி.என்., சி.என்.பி.சி., டிவி18 மற்றும் ஐ.பி.என். 7 உள்ளிட்ட மிகப் பிரபலமான 17 செய்தி ஊடகங்களும் அடக்கம்.
2008-ம் ஆண்டில் ஒ.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது தெலுங்கு தேச கட்சியின் தீவிர ஆதரவாளரான ராமோஜி ராவுக்குச் சொந்தமான ஈநாடு(ஈ.டி.வி.) தொலைக்காட்சியில் சுமார் 2600 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் ஒளிபரப்பாகும் 12 ஈ.டிவி அலைவரிசைகளை ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் மறைமுகமாகக் கட்டுப்படுத்தத் துவங்கியது.
பின்னர் 2012-ம் ஆண்டில் ராகவ் பாலின் நெட்வொர்க் 18 நிறுவனத்தில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ததன் மூலம் இரண்டு டஜன் முன்னணி ஆங்கில, இந்தித் தொலைக்காட்சி நிலையங்களை, அம்பானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முகேஷ் அம்பானி உதவுவதாக வாக்களித்திருந்த விசயம் நீரா ராடியாவின் தொலைபேசிப் பதிவுகளின் மூலம் அம்பலமானது.
நிதி நிறுவன வலைப்பின்னல்கள் மூலம் அடையாளம் தெரியாத முறையில் முதலீடு செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால், அம்பானி போன்ற தரகு முதலாளிகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ எந்தெந்த ஊடகங்களில் எத்தனை பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை யாருக்கும் தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக, தெகல்கா வார இதழின் முதலீட்டாளர்களில் இரண்டு நிறுவனங்களைத் தவிர, மீதமுள்ள 4 முதலீட்டாளர்கள் யார் என்றே தெரியவில்லை. 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளை 13,189 ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியிருக்கின்றனர். முன்னர் குஜராத் இனப்படுகொலை குறித்த புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்ட தெகல்காவிடம், ஒரு பெண்ணை உளவு பார்ப்பதற்கு மோடி தனது உளவுத்துறை அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்த தொலைபேசிப் பதிவுகள் தரப்பட்ட பின்னரும், அது அவற்றை வெளியிடவில்லை. பின்னர் கோப்ரா போஸ்ட் என்ற இணையப் பத்திரிகை மூலம்தான் மோடியின் அந்த முறைகேடு அம்பலமானது.
மோடி எதிர்ப்பாளராக அறியப்பட்ட ஒரு பத்திரிகையிலேயே இத்தகைய திரைமறைவு வேலைகள் நடக்குமென்றால், மற்ற பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோடியின் உளவுத்துறை பெண்ணைத் துரத்திய இந்த விவகாரம் குறித்தோ, குஜராத் வளர்ச்சி என்ற பித்தலாட்டம் குறித்தோ, மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்தோ, ஊடகங்கள் எதுவும் ஒரு வார்த்தை பேசாமல் மவுனம் சாதிப்பதன் மூலம் மோடி அலையை திட்டமிட்டே உருவாக்குகின்றனர்.
சுரங்கம், மின் நிலையங்கள், ஐ.டி. துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முதலாளிகள், பல்வேறு ஊடகங்களிலும் பங்குகளை வாங்கிப் போட்டு வைத்துக் கொள்வதன் மூலம், தங்கள் முறைகேடுகள் – கொள்ளைகள் குறித்த செய்திகளே வெளிவராமல் தடுத்து விடுகின்றனர். கெயில் குழாய் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு தொடங்கி தனியார் கல்விக் கொள்ளைக்கெதிரான போராட்டங்கள் வரையிலானவை இப்படித்தான் இருட்டடிப்பு செயப்படுகின்றன.
இது மட்டுமின்றி, கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல்வேறு ஊடகங்களுக்கும் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வழங்கி ‘பிரைவேட் டிரீட்டி’ என்றழைக்கப்படும் தனிப்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்கின்றனர். தங்களுக்கு எதிரான செய்திகள் வெளிவராமல் தடுப்பது மட்டுமின்றி, இந்த ஊடகப் பங்குதாரர்கள் மூலம் பொய் – புனைசுருட்டுகளைப் பரப்பி, பங்குச்சந்தையில் தமது பங்குகளின் மதிப்பை இவர்கள் உயர்த்திக் கொள்கின்றனர் என்பது செபி அமைப்பாலேயே நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு.
வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிடும் விளம்பரங்களுக்கு மக்களிடம் மதிப்பிருக்காது என்பதால், ஊடகங்களுக்குப் பணத்தைக் கொடுத்து, வெளியிட வேண்டிய செய்தியையும் எழுதிக் கொடுத்து, அவற்றை செய்தி போல வெளியிட வைக்கும் ‘பெய்டு நியூஸ்’ என்ற மோசடியினை 2009-ல் சாநாத் அம்பலமாக்கினார். அதன் பின்னர் பிரஸ் கவுன்சில் நடத்திய விசாரணையில் பிரபல ஊடகங்கள் அனைத்தும் சிக்கின. ஆனால், குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட பிரஸ் கவுன்சில் இந்தக் கணம் வரை மறுத்து வருகிறது. இது மட்டுமல்ல, இனி காசு வாங்கிக் கொண்டு செய்தி போடமாட்டோம் என்று ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தருவதற்குக்கூட பெரும்பான்மையான பத்திரிகை முதலாளிகள் தயாராக இல்லை என்று சமீபத்தில் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் ராஜ்தீப் சர்தேசாய் (சி.என்.என். – ஐ.பி.என்.) .
தூர்தர்சன் தொலைக்காட்சியை ஆளும் கட்சிகள் தமது பிரச்சார சாதனமாக மாற்றிக் கொள்ளும் நிலையைத் தாராளமயக் கொள்கை மாற்றிவிடும் என்றும், தனியார் தொலைக்காட்சிகளிடையேயான போட்டி கருத்துலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிடும் என்று கூறினார்கள் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். பிறகு சன், ஜெயா போன்ற தொலைக்காட்சிகள் கட்சி சார்பானவை என்றும் மற்ற தொலைக்காட்சிகள்தான் நடுநிலையாளர்கள் என்றும் பசப்பினார்கள்.
கட்சித் தொலைக்காட்சிகளின் பக்கச்சார்பு மக்கள் அனைவருக்கும் தெரியும். நடுநிலையாளர்கள் என்று தமக்குத்தாமே பெயர் சூட்டிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகையினர்தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் ஆளும் வர்க்க கருத்துகளைப் பிரதிபலிப்பதில் கண்டிப்பான கற்பு நெறியாளர்களாக இருப்பதுடன், தங்கள் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லுக்கும், தங்கள் வர்க்கத்தினரிடமிருந்தே ரேட்டு பேசி காசு வசூலிக்கும் விலை மாந்தர்களாகவும் இருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்காவது தூணின் யோக்கியதை இதுதான்.
கல்லூரி மாணவர்களுக்காக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வெளியிட்டிருக்கும் துண்டறிக்கை:
அன்பார்ந்த மாணவ நண்பர்களே,
வரும் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என நினைக்கிறோம். கல்லூரித் தேர்வுக்கு இடையில் இதெல்லாம் தேவையில்லாத விசயம் என்று நீங்கள் கருதாமல் இந்த நோட்டீசை சற்று படிக்குமாறு உங்களை உரிமையோடு கோருகிறோம்.
’’வாக்களிப்பது நமது கடமை, கடமையை செய்யத் தவறக்கூடாது’’ என தேர்தல் கமிசன் மூச்சுக்கு 300 தடவை நமக்கு சொல்லி வருகிறது. ஆனால், ’’குடிமக்கள் அனைவருக்கும் தரமானக் கல்வியை இலவசமாகக் கொடுப்பது அரசின் கடமை’’ என்று எப்போதாவது இந்த தேர்தல் கமிசன் சொல்லி இருக்கிறதா? இதுவரை நமக்காக பேசாத தேர்தல் கமிசன் இப்போது மட்டும் ஏன் பேசுகிறது என சற்று சிந்தித்துப் பாருங்கள்.
வாக்குரிமையை நாம் யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாதாம்? அது நமக்கு கிடைத்த பொக்கிசமாம். அதனால் ’’புதிய வாக்காளர்களான மாணவர்கள் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’’ என்று வீடு தேடி வந்து சொல்கிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்.
ஆனால்,
அரசு – அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குடிநீர், கழிவறை, போதிய வகுப்பறை, போதிய ஆசிரியர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. கலாச்சார விழாக்களோ, மாணவனுக்கு என்று இருக்கும் ஒரே விழாவான “பஸ் டே” வோ நடத்த முடியவில்லை. இதெல்லாம் மாணவர்களுக்கு கட்டாயம் வேண்டும் என்று எப்போதாவது ஓட்டுப் பொறுக்கிகள் சொல்லியிருக்கிறார்களா?
தன் கல்லூரிப் பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பதற்கான மாணவர் பேரவைத் தேர்தலை ஜனநாயக உரிமை என்று அங்கீகரிக்காதவர்கள்தான் அழுகி நாறும் இந்தத் தேர்தலில் ஓட்டும் போடுவது நமது உரிமை வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.
இப்படியெல்லாம் பேசி ஓட்டுப் பொறுக்கும் இவர்கள் ஜெயித்து ஆட்சிக்கு வந்த பின்னால் நமக்கான உரிமைகளை வழங்குகிறார்களா?
கல்லூரியிலிருந்து நீக்கம் செய்து மாணவர்களின் படிப்பையே பாழாக்குகிறார்கள்.
மொத்தத்தில் கல்லூரிகளை கல்விச்சாலைகள் போலவா நடத்துகிறார்கள், சிறைச்சாலையைப் போலல்லவா நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்?
’’எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் உங்கள் காலுக்கு செருப்பாகத் தேய்வோம்’’ என்று 16-வது முறையாக ஓட்டுக்கேட்டு வருகிறார்களே? இதுவரை இவர்கள் மாணவர்களுக்கு செய்தது என்ன? பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் உயரவே இல்லை. தனியார் கலை/ அறிவியல், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகி கட்டணம் என்ற பெயரில் மாணவர்களையும், பெற்றோர்களையும் கசக்கிப் பிழிகின்றனவே, இதைத் தடுத்து நிறுத்த எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளாவது, எப்போதாவது போராட்டக் களத்திற்கு வந்ததுண்டா? இல்லையே? எஸ்.சி/ எம்.பி.சி மாணவர்கள் தங்கும் விடுதிகள் சிறைச்சாலைகளைவிடக் கொடுமையானது யாருக்கும் தெரியாததா? இந்த ’மக்கள் பிரதிநிதிகள்’ அங்கு ஒரு நாளாவது வந்திருக்கிறார்களா? அந்த கொடுமைகளைத் தீர்க்க வழி செய்திருக்கிறார்களா? வேறு யாருக்குதான் இவர்கள் சேவை செய்கிறார்கள்? நாய் வாலாட்டுவது எஜமானுக்குத்தானே! ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகள் சேவை செய்வது தனியார் கல்வி கொள்ளையர்களுக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்தான்.
சமீபத்தில்,வேல்டெக் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதை எதிர்த்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போராடிய போது நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்தது யார் தெரியுமா? காங்கிரசின் அகில இந்திய தொழிற்சங்க தலைவரும், அதிமுக அமைச்சரும்தான். அவர்களால் புமாஇமு தோழர்களை பணிய வைக்க முடியவில்லை. அடுத்து போலீசை ஏவுகிறார்கள். திவ்யா எனும் மாணவியின் ’படுகொலை’க்கு நியாயம் கேட்டதற்காக எமது தோழர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையிலடைத்தார்கள். இதுதான் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடக்கிறது. இப்படி கல்விக்கொள்ளையர்கள் வீசி எறியும் எச்சில் காசுக்கு காவல் ’தெய்வமாக’ சேவை செய்பவர்கள் இந்த ஓட்டுக் கட்சிகள்தான். இன்னும் சொல்லப் போனால் கல்விக் கொள்ளையர்களில் பெரும்பாலானோர் ஓட்டுகட்சி அரசியல்வாதிகள்தான் எனும் போது இவர்கள் எப்படி மாணவர்களுக்கு சேவை செய்வார்கள்?
இது மட்டுமல்ல, கடந்த காலத்தையும் சற்று திரும்பிப் பாருங்கள். மாணவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வியை, ஏழை மாணவர்களின் கல்விபெறும் உரிமையை, அன்றாடம் பாதிக்கின்ற பிரச்சனைக்கு இதுவரை நடந்த 15 தேர்தல்கள் என்ன தீர்வைத் தேடித் தந்துள்ளன? எதுவும் இல்லையே. மாறாக ஒவ்வொரு ஆண்டும் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளும், கொடுமைகளும்தான் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அரசு புகுத்தி வரும் தனியார்மயம், தராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையால் கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து அரசு படிப்படியாக விலகி வருகிறது. கல்வித் துறையையே ஒட்டுமொத்தமாக தனியாருக்குத் தாரைவார்த்து வருகிறது. ’காசு உள்ளவனுக்கே கல்வி’ எனும் உலக வங்கியின் உத்தரவால் நாட்டின் பெரும்பான்மை ஏழை மாணவர்கள் தற்குறியாகும் அபாயம் நெருங்கி வருகிறது. இப்படி மாணவர்கள் அன்றாடம் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்காத இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்?
அரசியல்வாதிகள் மட்டுமா? அரசின் துறைகள் என்ன நமக்காகவா இருக்கின்றன?
கல்வியை குடிமக்களின் அடிப்படை உரிமையாக்காத அரசியலமைப்புச் சட்டம்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தி கொள்ளையடிப்பது முதலாளிகளின் உரிமை என்கிறது.
மாணவர்களின் பஸ் டே விழாவை அராஜகம் என்று தடை செய்த நீதிமன்றம்தான் தனியார்கல்வி நிறுவனங்களின் கொள்ளையை, அவர்கள் செய்யும் சித்திரவதைகளை, கொலைகளை, முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியாது என்கிறது.
சட்டத்தையும், விதிமுறைகளையும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் கறாராக நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அதை மதிப்பதே இல்லை.அதிகாரிகளில் கீழ்மட்டம் மட்டுமல்ல மேல்மட்டம் முழுவதும் லஞ்ச – ஊழலில் மலிந்து கிடப்பது நாடே நாறுகிறது.
இப்படி மொத்த அரசின் துறைகளும் அழுகி நாறுகின்றன. இனியும் இதை வைத்துக்கொள்ள முடியாது, தூக்கியெறிய வேண்டும். ஆனால், செண்ட் அடிச்சா சரியாகிடும் என நம்மை நம்ப வைத்து கழுத்தறுக்கத்தான் இந்த தேர்தல் நாடகம்.
’’எல்லாம் சரி பாஸ்….. நமக்கும் இந்த தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லாதபோது, இத ஏன் நாம கண்டுக்கணும்’’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஓட்டுக்கட்சிகள் மாணவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, தலைக்கு ரூபாய் 200, வேட்பு மனுத் தாக்கல, வேட்பாளர் பிரச்சாரம், ‘மாப் காட்ட’, ‘டோர் அடிக்க’, தேவைப்பட்டால் ‘எதிர்கட்சிக்காரன அடிக்க’ என அடியாளாக பயன்படுத்துகின்றனரே. இது நமக்கு அவமானமில்லையா? இதை துடைத்தெறிய களமிறங்க வேண்டாமா?
நம் வாழ்க்கையை தீர்மானிப்பது அரசியல்தான். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல்தான் உங்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டுமா? கூடாதா? எப்படிப்பட்ட கல்வியை கொடுக்க வேண்டும்? என்பதையெல்லாம் தீர்மானிக்கிறது. அரசுக் கல்வியை ஒழித்து தனியார் கல்வியை வாழவைப்பதையும், போர்க்குணமான மாணவர்களை டாஸ்மாக் போதையிலும், நுகர்வுவெறி கலாச்சாரத்திலும் சிக்கி சீரழிய வைப்பதையும் செய்வது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசியல்தான். இந்த கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான லைசன்ஸ் வாங்குவதற்குதான் தேர்தல். இப்போது சொல்லுங்கள் அரசியலுக்கும் மாணவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிவிட முடியுமா? முடியாது.
நம்மை மட்டுமல்ல, நம் பெற்றோர்கள், சகோதர சகோதரிகளான விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளிகள், பெண்கள் என கோடானு கோடி உழைக்கின்ற மக்கள் அனைவரும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியாகி வருகிறார்கள்; இந்த தேர்தல் பாதையால் வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்; இப்படி பாதிக்கப்டும் உழைக்கும் மக்களுடன் ஓரணியில் திரள்வோம். இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். நம்மை கொடுமைபடுத்தி வரும் இந்த அரசை தூக்கியெறிவோம். உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!
_____________________
பள்ளி மாணவர்களுக்காக வெளியடப்பட்ட துண்டறிக்கை:
பள்ளி மாணவர்களே, தேர்தலில் வாக்களிப்பது கடமை அல்ல –
மடமை என்பதை பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்வோம்!
அன்பார்ந்த மாணவர்களே,
இறுதித் தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பீர்கள். உங்கள் படிப்பிற்கிடையே குறுக்கிடுவதற்கு வருந்துகிறோம். ஒரு அவசரமான விசயத்தை பேச வேண்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. 18 வயது நிரம்பியவர்கள்தான் ஓட்டு போட முடியும். ஆனால், 18 வயது நிரம்பாத நம்மையும் தேர்தல் வேலைகளில் இழுத்து விடுகிறது தேர்தல்கள்.
ஒரு பக்கம் ஓட்டுக்கட்சிகளின் புரோக்கராக செயல்படும் தேர்தல் கமிசன் உறுதிமொழி படிவம் ஒன்றை நம் கையில் திணித்து ஓட்டுப் போட ஆள் பிடிக்கச் சொல்கிறது. மறு பக்கம் ஓட்டுக் கட்சிகள் முதலாளிகளிடம் வாங்கிய எச்சில் காசை வீசியெறிந்து கூட்டத்திற்கு ஆள் சேர்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தேர்தல் களத்திற்கு வந்து விட்டோம். எனவே, பள்ளி மாணவர்களாகிய நாம் தேர்தலை எப்படி பார்ப்பது என தெளிவுபடுத்திக்கொள்வோம்.
இதற்கு நாம் படிக்கும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவைகள் எப்படி உள்ளன? காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத வகுப்பறைகள். குடிக்க தண்னீர் இல்லை. சிறு நீர் கழிக்க, மலம் கழிக்க கழிவறை இல்லை. ஆய்வுக்கூடமில்லை. விளையாட்டு இல்லை. கலைவிழா இல்லை. இடியும் நிலையில் கட்டிடங்கள். அழியும் நிலையில் அரசுப்பள்ளிகள்.
பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளைக்காரனாக தனியார் பள்ளிகள். பணம் கறக்க முடியாதபோது மாணவர்களின் உயிரைப் பறிக்கின்றன தனியார் பள்ளிகள். மொத்தத்தில் கல்வி கற்கும் சூழல் இல்லை. உரிமைகள் இல்லை. ஆனால் சித்திரவதைகள் உண்டு. இதைப் பற்றி இந்தத் தேர்தல் கமிசனோ, ஓட்டுக் கட்சிகளோ கவலைப்பட்டதுண்டா? இப்போது மட்டும் உறுதிமொழி படிவத்தை தருகிறது தேர்தல் கமிசன்.
அன்று தன்னந்தனியாக நாம் தானே கல்வி கற்கும் உரிமைக்காக போராடினோம். புமாஇமு தலைமையில் போராடினோம். எத்தனை எத்தனை போராட்டங்கள்.
தமிழ் வழிக் கல்வி கேட்டு ஆர்ப்பாட்டம்.
கழிவறை கேட்டு கல்வித்துறை அலுவலகம் முற்றுகை.
பள்ளிக்கூடம் இடிந்தபோது ரிப்பன் மாளிகை முற்றுகை.
எத்தனை சுவரொட்டிகள்,எத்தனை பிரசுரங்கள், மாவட்டம் முழுக்க எத்தனை பிரச்சாரம் இவையெல்லாம் இவர்களுக்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் வரவில்லை. வரமாட்டார்கள்.
காரணம் இவர்கள் அனைவரும் அதாவது, இந்த அரசும், அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் இலவச – கட்டாயக் கல்வியை தரமாக, தாய்மொழியில் அறிவியல் பூர்வமான கல்வியை விரும்பவில்லை. தனியார் கல்விக் கொள்ளையர்களை வளர்க்கவே வெறிகொண்டு அலைகிறார்கள். தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க தடையாக உள்ள அரசுப் பள்ளிகளை இழுத்து மூட முயலுகின்றன. கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுக்கவும் அவர்கள் சேமிப்பை கொள்ளையடிக்கவும் தனியார் முதலாளிகளுக்கு பாதை போட்டு தருகிறது. இதற்காக அரசுப்பள்ளிகளை திட்டமிட்டே சீரழிக்கின்றன. இந்தக் கொள்ளைக்கு ( கொள்கைக்கு) பெயர் கல்விதனியார்மயம். இதை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்ததும் இந்த ஓட்டுக் கட்சிகள்தான். இவைகளை ஒழித்துக்கட்டாமல் கல்வி கிடையாது. உரிமை கிடையாது. இதுதானே இந்த ஓராண்டுப் போராட்டத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம்.
ஆனால், ரத்தம் குடிக்கும் இந்த கல்வி தனியார்மய காட்டேரியை யார் வளர்ப்பது என்ற போட்டியில் தானே கட்சிகள் குதித்துள்ளன. இதற்கு பெயர் தானே நாடாளுமன்றத் தேர்தல்.
கல்வி உரிமையை மட்டுமல்ல, வேலை உரிமை, தண்ணீர் உரிமை, இலவச மருத்துவ உரிமை என, மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்து பணக்கார கும்பல்களை (கார்ப்பரேட் முதலாளிகளை) வளர்க்கத்தானே நாய்களைப் போல சண்டையிடுகின்றன ஓட்டுச் சீட்டு கட்சிகள். வெளிநாட்டு முதலாளிகளுக்கும் , உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் நம் பெற்றோர்களை கூலி அடிமைகளாக்கி ஒட்டச் சுரண்டுவதற்கு எந்த கட்சிக்கு வாய்ப்பளிப்பது என்பதை முடிவு செய்வது தானே இந்தத் தேர்தல். உண்மை இப்படி இருக்கும் போது இந்தத் தேர்தலில் வாக்களிப்பது கடமை அல்ல. மடமை என்பதை நம் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்வோம்.
இந்த ஓராண்டு அனுபவம் நமக்கு சொல்வதென்ன? போராட்டம் ஒன்றுதான் அரசை பணிய வைக்கும் என்பதே. இதை உரக்கச் சொல்லுவோம். மற்றவர்களுக்கு உறைக்கச் செய்வோம். தாய், தந்தை, உற்றார், உறவினர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் பிரச்சாரம் செய்வோம்.
நாட்டையும், நம்மையும் அடிமைப்படுத்துவதை தீவிரப்படுத்தி வரும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்வோம். போலி ஜனநாயக செட்டப்பை உடைத்து எறிய பெற்றோர்களோடு களம் இறங்குவோம். புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்.
நீதிபதிகளாகிய நீங்கள் சட்டத்தை மீறலாம்! பொதுமக்களாகிய நாங்கள் மீறக்கூடாதா? இது எந்த ஊர் நியாயமடா?
அன்பார்ந்த பொதுமக்களே!
“தமிழை நீதிமன்ற மொழியாக்கு” என்ற வழக்குரைஞர்களின் முழக்கம் சென்னை-மதுரை உயர்நீதி மன்றங்களில் எதிரொலிக்கின்றன. இது அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. நம்முடையதும் தான்.
நாம் என்ன அன்றாடம் ஆங்கிலமா பேசுகிறோம்? தமிழில் தானே பேசுகிறோம். குடும்பங்களிலும், நண்பர்களிடமும், அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும், நம் சொந்த பந்தங்களிடமும், பழகும் இடங்களிலும், வேலைகளிலும் சரி, தாய்மொழி தமிழில் தானே பேசுகிறோம். உதாரணத்திற்கு ஒரு விசயத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது, நம் வேலை செய்யும் இடங்களில் இடை நீக்க உத்தரவையோ, விசாரணையையோ ஆங்கிலத்தில் தான் அச்சடித்து தருகிறது நிர்வாகம். ஆனால், அதை நாம் ஏற்க மறுத்து, தமிழில் மொழி பெயர்த்து கொடுங்கள் என்று கேட்கிறோமா இல்லையா? உண்மை இப்படி இருக்கும் பட்சத்தில் உயர்நீதி மன்றங்களில் புரியாத மொழி ஆங்கிலம் எதற்கு?
நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடும் உரிமை இருந்தால் தான், வழக்குரைஞர்கள் என்ன பேசுகிறார்கள், அதற்கு நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கும் புரியும். வழக்குரைஞர்களுக்கும் புரியும். வழக்குரைஞர்களும் சரியாக வாதாடுகிறார்களா? நீதிபதிகளும் அதை சரியாகப் புரிந்துக் கொண்டு தீர்ப்பளிக்கிறார்களா? என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் புரியாத மொழியில் படம் பார்ப்பதைப் போல இவர்கள் வாயை அசைப்பதைத் தான் வேடிக்கை பார்க்க முடியுமே தவிர, அவர்கள் விவாதிப்பதிலிருந்து ஒரு எழவையும் புரிந்துகொள்ளமுடியாது. வேண்டுமானால் நமது வழக்குரைஞர்கள் இங்கிலீசிலே நல்ல வெளுத்து வாங்கினார்கள் என்று பெருமை பீத்தி கொள்ளலாம்.
இதில் நமக்கு என்ன பலன்? பணத்தையும், நேரத்தையும் இழந்தது தான் மிச்சம். வழக்குரைஞர்கள் வேண்டுமானால் வழக்காட வரும்பொழுது மக்களிடம் எதையாவது சொல்லி ஏமாற்றலாம். “நான் நல்லாத்தான் வாதாடினேன். ஆனால் நீதிபதி தான் சரியா தீர்ப்பு சொல்லல” என்றும் வழக்குரைஞர்கள் சொல்லலாம். தமிழில் வாதாடும் உரிமை இருக்கும் பட்சத்தில் வழக்குரைஞர்கள் வாதாடுவதை வைத்துக் கொண்டு சந்தேகங்களை அவர்களிடம் எழுப்பித் தெளிவுபெற முடியும். அவர் சரியாக வாதாடினாரா இல்லையா என்பதை நேரிலேயே பார்த்து புரிந்துக் கொண்டு நமது வழக்கில் யார் தவறு செய்துள்ளார்கள், வழக்குரைஞர்களா? நீதிபதிகளா என்பதை புரிந்து கொள்ளவும் முடியும்.
உதாரணத்திற்கு, கோயில்களில் சமஸ்கிருதம் என்ற புரியாத ’தவளை’ பாஷையில் அர்ச்சகர் அர்ச்சனை செய்யும் பொழுது, அவர் நமக்காக கடவுளிடம் என்ன கேட்கிறார், அதாவது நமக்காக என்ன ‘சிபாரிசு’ செய்கிறார் என்று தெரியாமல், புரியாமல் அவர் வாயைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இதில் ஒன்றை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது அவர் நம்மிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட ’குலம்-கோத்திரங்களை’ கடவுளிடம் ஒப்பிக்கும் பொழுது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றபடி என்ன சுலோகம் சொல்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம் – அது நமக்கு புரியாத-தெரியாத பாஷை. நமக்கு தெரிந்த-புரிந்த தாய் மொழியில் சொல்லும் பொழுது புரிந்து கொள்ள இயலும் இல்லையா?
இப்பொழுது சொல்லுங்கள், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களின் வாயையும், கோயில்களில் அர்ச்சகர்களின் வாயையும் தானே பார்க்கிறோம். என்றைக்காவது இதைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறோமா? இதை என்னவென்று சொல்வது? அடிமைப் புத்தி என்பதா? சொரணை இல்லை என்பதா?
அதனால் தான், 1956-ம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது, தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டப்படி கீழமை நீதிமன்றங்களில் தமிழ்நாடு ஆட்சி மொழியான தமிழை வழக்காடும் மொழியாக்கப்பட்டதோ, 20 ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து, வழக்குரைஞர்களின் பல போராட்டங்களுக்கு பிறகு குற்றவியல் நீதிமன்றங்களில் 1976-ம் ஆண்டும், உரிமையியல் நீதிமன்றங்களில் 1982-ம் ஆண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதோ நமக்குத் தெரியவில்லை.
தமிழ் தெரியாத ஒன்றிரண்டு நீதிபதிகளின் நலனுக்காக, பெரும்பான்மை தமிழக மக்களின் ஜனநாயக உரிமையையும், உணர்வையும் காலில் மிதித்து, 1994-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள அனைத்து நீதிபதிகளும் ஒன்று கூடி, தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என ஒரு தீர்மானத்தின் மூலம் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை ஆழக் குழிதோண்டி அதில் போட்டு புதைத்து விட்டதையும் தெரியாமல்- புரியாமல் இருக்கிறோம்.
1996-ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாக்க தமிழக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த்து. உ.பி. உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக்க அனுமதித்த மத்திய அரசு, தமிழை ஓரவஞ்சனையுடனும், மொழித் தீண்டாமையுடனும் அனுமதி தர மறுத்து வருகிறது என்பதையும் அறியாமல் இருக்கிறோம்.
சிறிது யோசித்துப் பாருங்கள், இதன் விளைவாக பாதிக்கப்படுவது யார்? பொதுமக்களாகிய நாம்தான். வழக்கு விபரங்கள் எதுவுமே தெரியாமல், மந்தைகளைப் போல நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் சொல்வதையே ‘உண்மை’ எனவும், நீதிபதிகள் எழுதும் தீர்ப்பையும் கேள்வி எழுப்ப முடியாமல் தவிக்கிறோம்.
சட்டத்தை மீறக்கூடாது, சட்டத்தை மீறக்கூடாது என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் ’மகா கனம் பொருந்திய’ நீதிபதிகள் தான் ஆட்சி மொழிச் சட்டத்தை ஒரு தீர்மானத்தின் மூலம் செல்லாக்காசாக்கி விட்டார்கள்.
பொதுமக்களாகிய நாம் சட்டத்தை இம்மியளவு மீறினாலும், போலீசும், நீதித்துறையும் காட்டுக் கூச்சல் போட்டு வழக்கைப் போட்டு, உள்ளே தள்ளுகிறது. ஆனால், நீதிபதிகள் மட்டும் மீறுவார்கள். யாரும் கேள்வி எழுப்பக்கூடாது. இது எப்படி இருக்கிறது என்றால் “இராஜா மட்டும் ’குசு’ விடலாம்!” என்பதை தான் நினைவூட்டுகிறது.
இது கேவலம் இல்லையா? இந்தி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழகம், பிறகு மெல்ல மெல்ல அடங்கி போனதால், இன்று பள்ளிகளில் ஆங்கிலம்; கோயில்களில் சமஸ்கிருதம்; நீதிமன்றங்களில் ஆங்கிலம் என எங்கும் அடிமை மோகம் பெருகியதன் விளைவு தாய்த் தமிழை இழந்து நிற்கிறோம். இந்நிலையை மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக நீதிமன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்களுக்கு தோள் கொடுப்போம். உயர்நீதி மன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழைக் கொண்டு வந்து பொதுமக்களாகிய நாம் சட்டத்தை மீறமால் இருக்க நீதிபதிகள் வழிவகுப்பார்களா?
மத்திய அரசே!
உ.பி. உள்ளிட்ட நான்கு மாநில உயர்நீதிமன்றங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக்கியது போல தமிழ்நாடு உயர்நீதி மன்றங்களிலும் தமிழை வழக்காடும் மொழியாக்கு!
சென்னை உயர்நீதி மன்றமே!
தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை முடக்கி கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாவதை தடுத்து நிறுத்தி உள்ள உயர்நீதி மன்ற தீர்மானத்தை உடனே திரும்ப பெறு!
உழைக்கும் மக்களே!
தமிழை வழக்காடும் உயர்நீதி மன்றங்களில், கீழமை நீதிமன்றங்களில் மொழியாக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்!
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்கள் மீது கிளிக் செய்யவும்]
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை கிளை
தொடர்புக்கு : வழக்கறிஞர் மில்டன், 9842812062
“ஜனநாயகத்தின் அடிப்படையாக இருப்பது தேர்தல்கள்தான்; தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்தான் நாட்டை ஆளுகிறார்கள்; நாடாளுமன்றம் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்ந்த நிறுவனம்” என்றவாறு தேர்தல்கள், நாடாளுமன்றம் பற்றிய நம்பிக்கையை முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் பொதுமக்களிடம் உருவாக்கி வைத்துள்ளனர். ஓட்டுக்கட்சிகள் கிரிமினல்மயமாகியிருப்பது; ஓட்டுச் சீட்டு அரசியலே பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பதற்கான எளிதான வழியாக, பிழைப்புவாதமாக மாறியிருப்பது; எங்கும் இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகள் பெருத்துப் போயிருப்பது என இந்த அமைப்புமுறை அழுகிப் போயிருப்பதைக் காணும் மக்கள், இந்த தேர்தல்கள், ஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்துவரும் நிலையிலும், தேர்தல்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட இந்த அமைப்பு முறையை விட்டால் வேறு மாற்று இல்லை என்றே இவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
உங்கள் ஓட்டு, அவர்கள் சீட்டு
நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் சீரழிந்து போயிருப்பதற்கு ஓட்டுக்கட்சிகள், அதனின் தலைவர்கள், தனிப்பட்ட அதிகாரிகள் ஆகியோரின் மீது பழிபோட்டுவிட்டு, இந்த அமைப்பு முறைக்கும் அக்கேடுகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என இவர்கள் வாதிடுகிறார்கள். ஓட்டுக்குப் பணம் வாங்காமல், கட்சிகளைப் பாராமல், சாதி – மதச்சார்பு இல்லாமல், நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் போல மக்களுக்குச் சேவை செயக்கூடிய அமைப்பு வேறு எதுவும் கிடையாது என இவர்கள் உபதேசிக்கிறார்கள். ஊழல், அதிகாரமுறைகேடுகள் உள்ளிட்ட கேடுகள் அனைத்தையும் தானாகவே திருத்திக் கொள்ளும் வாய்ப்புகள் (ஜன் லோக்பால் போன்றவை) இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறைக்குள் கொட்டிக் கிடப்பதாகக் கூறி இவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்.
“நாடாளுமன்றம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை மூடிமறைக்கும் திரைச்சீலை” என்ற லெனினின் வரையறுப்புக்கு முற்றிலும் எதிராக, “மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவதில் நாடாளுமன்றம் உயர்ந்த அமைப்பு வடிவமாகும். எனவே, இந்திய நாடாளுமன்றம் முடமாகிப் போனால், இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்” என எச்சரிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா. அரசனை விஞ்சிய ராஜ விசுவாசி!
“மாற்றம் வேண்டும்” என்ற அடிப்படையில் வாக்களிப்பதாகக் கூறும் படித்த நடுத்தர வர்க்கத்தினர்கூட, தேர்தல்கள் மூலம் ஒரு கட்சிக்குப் பதிலாக இன்னொரு கட்சியைப் பதவியில் அமர்த்தினால் மாற்றம் வந்துவிடும் எனப் பாமரத்தனமாகத்தான் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைப் புரிந்து வைத்துள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்தான் நாட்டை ஆளுவதாகக் கூறப்படுவதே ஒரு வடிகட்டிய பொய். நாடாளுமன்றத்திற்குச் சட்டமியற்றும் அதிகாரம்தான் உண்டே தவிர, அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அப்பால் தனித்து இயங்கிவரும் அதிகார வர்க்கத்திற்குத்தான் உண்டு. மேலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களையும் இந்த அதிகார வர்க்கம்தான் வடிவமைத்துத் தருகிறது. இந்த அதிகார வர்க்கம் நாடாளுமன்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுயேச்சையாக இயங்கக் கூடியது. இந்த அதிகார வர்க்கத்தை நியமிக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்குக் கிடையாது.
இதுவொருபுறமிருக்க, தனியார்மயம் புகுத்தப்பட்ட பிறகு இந்திய நாடாளுமன்றத் தின் நடவடிக்கைகளை ஒருமுறை அலசிப் பாருங்கள். இந்திய மக்களின் மீது மானிய வெட்டு, விலைவாசி உயர்வு, நில அபகரிப்பு எனப் பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கிய அதேசமயம், ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவற்றின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் பல்வேறு சலுகைகளை அளித்து, அதன் மூலம் அக்கும்பல் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் அதிரடி இலாபம் அடையவும் ஏற்பாடு செய்து கொடுக்கும் கருவியாக நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் உண்மை தெரிய வரும்.
இந்திய நாடாளுமன்றம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் நலன்களைப் பாது காக்கும் கருவியாக இருப்பதை ஓட்டுக் கட்சிகளின் சொந்த விருப்பு வெறுப்பாக, ஓட்டுக்கட்சிகள் மக்கள் மீது அக்கறையற்று இருப்பதன் வெளிப்பாடாகவோ சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. 1990- களில் புகுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு ஏற்ப அரசின் கட்டுமானங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடு இது.
1947-க்குப் பிந்தைய இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளைத் தனியார்மயத்திற்கு முன், தனியார்மயத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். தனியார்மயத்தின் முன்பு இந்திய நாடாளுமன்றம் டாடா, பிர்லா, டி.வி.எஸ்., உள்ளிட்ட சில குறிப்பிட்ட தரகு முதலாளித்துவ குடும்பங்களுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவந்த போதும் நாட்டின் சுதேசித் தொழில்களையும், இயற்கை வளங்களையும் ஏகாதிபத்தியக் கொள்ளையர்களிடமிருந்து காக்கும் அரைகுறையான சுதேசி பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை நிலவியது. இதனால் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பெயரளவிலான அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டிருந்தது. மேலும், மக்கள் நல அரசு எனத் தன்னைக் காட்டிக் கொள்வதற்காகவே ஒப்புக்குச் சப்பாணியாகச் சில நடவடிக்கைகளை – கல்வி, மருத்துவம், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசியமான சேவைகளை அரசின் கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருப்பது – எடுத்து வந்தது.
1991-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த நரசிம்ம ராவ் அரசு, உலக வங்கியின் கட்டளைகளை ஏற்று இந்தியப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கத் தொடங்கிய பின், இந்திய நாடாளுமன்றத்தின் பெயரளவிலான அதிகாரமும் சுயேச்சைத் தன்மையும் முற்றிலும் பறிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, மக்கள் நல அரசு என்ற முகமூடியையும் கழட்டிவிட்டது. அதனைத் தொடர்ந்து “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த நாள் தொடங்கி, இந்திய நாடாளுமன்றமும், அரசின் பிற உறுப்புகளும் அந்நிய நிதி மூலதனத்தின் கட்டளைகளை நிறைேவற்றும் ரப்பர் ஸ்டாம்பாகவே மாறிவிட்டன.
நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த காங்கிரசு அரசு “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுகூட, நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே, அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே நடந்து முடிந்தது. இந்தச் சம்பவம் ஒன்றே இந்திய நாடாளுமன்றம் இனி சோளக்காட்டு பொம்மை போன்றது என்பதை எடுத்துக் காட்டியது.
“காட்” ஒப்பந்தம் கொல்லைப்புற வழியில் நாட்டின் மீது திணிக்கப்பட்டபோதும், நரசிம்ம ராவ் அரசிற்குப் பின் பதவிக்கு வந்த, போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவைப் பெற்றிருந்த ஐக்கிய முன்னணி அரசும், அதற்குப் பின் பதவிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் முந்தையதைவிட விசுவாசமாக நடந்து கொள்வதிலேயே குறியாக இருந்தன. குறிப்பாக, வாஜ்பாயி தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுக்கு அப்பாலும் சென்று, 640 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், இந்திய-அமெரிக்க இராணுவக் கூட்டு ஒப்பந்தமும்கூட நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல்தான் மன்மோகன் சிங் அரசால் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் சிவில் அணுஉலைகளைக் கண் காணிக்கும் அதிகாரத்தை ஏகாதிபத்திய நாடுகளுக்கு அளித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனங்களை தாஜா செய்வதற்காகவே, அணுசக்தி கடப்பாடு மசோதா நீர்த்துப் போன வடிவத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வோடோஃபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏப்பு செய்த விவகாரம் அம்பலமான பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்புகளைத் தடுக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, பொது வரி தவிர்ப்பு விதிமுறைகளை நாடாளு மன்றத்தில் கொண்டு வந்தது, காங்கிரசு கூட்டணி அரசு. பன்னாட்டு நிறுவனங்கள் இப்புதிய விதி முறைகளைத் தீவிரமாக எதிர்த்தவுடனேயே, அதனை அமலுக்குக் கொண்டுவருவது கிடப்பில் போடப்பட்டது. “மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர்” என மேற்கத்திய ஊடகங்கள் அபாயச் சங்கை ஊதியவுடனேயே சில்லறை வர்த்தகம் தொடங்கி ஆயுதத் தளவாட தயாரிப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாகத் தன்னிச்சையாக அறிவித்தார், மன்மோகன் சிங்.
உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள், குறிப்பாக அறிவுசார் சொத்துரிமை விதிகள் (TRIPS) மற்றும் நிதி முதலீட்டு விதிகளுக்கு (TRIMS) மாறாக, இந்திய நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்றிவிட முடியாது. இந்தியா எந்தெந்த பொருட்களை எவ்வளவு இறக்குமதி செய்ய வேண்டும்; எந்தெந்த பொருட்களை எந்த அளவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் உலக வர்த்தகக் கழகம்தான் தற்பொழுது தீர்மானிக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், உலக வங்கியின் நிபந்தனைப்படி இயற்றப்பட்ட ஒன்றாகும். 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ரசியாவின் சீஸ்டெமா நிறுவனமும், நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்திய அரசிற்கு மேலான சூப்பர் அரசாங்கமாக ஏகாதிபத்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதையே இவை எடுத்துக் காட்டுகின்றன.
இந்திய அரசு: கார்ப்பரேட் முதலாளிகளின் சேவகன்
அரசு : கார்ப்பரேட்டுகளின் சேவகன்
1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின், அதுகாறும் அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்துவந்த துறைகள் சிலவற்றுள் இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய தொழில் கழகங்களும் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டன. இப்படி நுழைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிரடி இலாபம் அடைவதற்கு வசதியாக அத்துறையில் இருந்துவரும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் திட்டமிட்டே முடக்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நட்டத்தில் தள்ளப்பட்டதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
தனியார்மயத்தின் இரண்டாவது கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களையும் இலாபத்தையும் கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் படலம் ஆரம்பமானது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி, அதற்குத் தரகு முதலாளிகளின் நம்பகமான விசுவாசியான அருண் ஷோரி அமைச்சராக்கப்பட்டார். இலாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை என்ன விலைக்கு விற்கலாம் என்பதைக்கூட நாடாளுமன்றத்திற்குப் பதிலாக ஏகாதிபத்தியவாதிகள்தான் முடிவு செய்தனர். 2100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மாடர்ன் புட்ஸ் 104 கோடி ரூபாய்க்கும், 5,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பால்கோ 551 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதிலிருந்தே இரண்டாவது கட்டத்தில் நடந்த பகற்கொள்ளையின் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு அடுத்து, கண்ணுக்குத் தெரியும் ஆற்றுத் தண்ணீர், இரும்பு, நிலக்கரி, இயற்கை எரிவாயு, மீத்தேன் தொடங்கி கண்ணுக்குத் தெரியாக அலைக்கற்றைகள் ஈறாக இயற்கை வளங்கள் அனைத்தையும் எந்த வரைமுறையும் இன்றி இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் தேசங்கடந்த தொழிற்கழங்களுக்கும் ஒதுக்கீடு செயும் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் பாதைகள் கட்டும் காண்டிராக்டுகள் மட்டுமின்றி, அவற்றைப் பராமரிப்பது தொடங்கி குப்பை வாருவது வரையுள்ள அனைத்துப் பொதுப் பணிகளையும் தனியாரிடம் அயல்பணியாக ஒப்படைப்பது; அரசும்-தனியாரும் கூட்டுச் சேர்ந்து (Public Private partnership projects) அடிக்கட்டுமான திட்டங்களை உருவாக்குவது; சிறப்புப் பொருளாதார மண்டல வளையங்களை உருவாக்குவது; உள்நாட்டு தொழில்களில் குறிப்பாக பங்குச் சந்தை உள்ளிட்ட நிதிச் சந்தையில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளை நீக்குவது; அவற்றுக்கு வரிச் சலுகைகளும் வரித் தள்ளுபடிகளும் அளிப்பது என அடுத்தடுத்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட்டன.
இந்தத் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை அரசே விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்து கொடுத்தது; கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்கு வசதியாக பழங்குடியின மக்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்று, இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக பொதுத்துறை வங்கிகளின் கடன் விதிகள் தளர்த்தப்பட்டன; வட்டி வீதம் குறைக்கப்பட்டது. முதலீடுகளைக் கவர்வது என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரித் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன. இப்படியான சலுகைகளை அளிப்பதன் மூலம்தான் நாட்டில் தொழில் பெருகும், வேலை வாய்ப்புகள் கிடைக்கும், ஏற்றுமதி அதிகரிக்கும், அந்நியச் செலாவணி கிடைக்கும் என அரசு வாக்குறுதிகளை அள்ளிவிட்டது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் பல்லிளித்துப் போவிட்டதை இப்பொழுது அரசே ஒப்புக் கொண்டு விட்டது.
நாடு போண்டியாகி நிற்கும் அதேசமயம் அரசின் செல்லப்பிள் ளைகளான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அசிம் பிரேம்ஜி, அடானி, மித்தல் உள்ளிட்ட ஒரு சில இந்தியத் தரகு முதலாளிகளோ உலகின் சூப்பர் பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கின்றனர். விலங்குகளின் இரத்தத்தைக் குடிக்கும் ஒட்டுண்ணி போல, மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் முட்டைப் பூச்சி போல, இந்தியத் தரகு முதலாளிகளும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் நாட்டின் பொதுச் சொத்துக்களை, இயற்கை வளங்களை, பொதுமக்களின் சேமிப்புகளை, உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணிகளாக அரசின் ஆதரவு அரவணைப்போடு உருவாகியுள்ளனர்.
நாடாளுமன்றம் இந்த ஒட்டுண்ணித்தனம் நிறைந்த கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் மாமா வேலையைத்தான் பார்த்து வருகிறது. இதைச் செய்து கொடுக்கும் நம்பகமான விசுவாசிகள்தான் அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த ராஜாவைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக நியமிப்பதற்கு மட்டும தானா லாபியிங் நடந்திருக்கிறது? பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி தூக்கி கடாசப்பட்டு, அவரிடத்தில் வீரப்ப மொய்லி உட்கார வைக்கப்பட்டதன் பின்னே முகேஷ் அம்பானியின் கரங்கள் இருந்தன. வீரப்ப மொய்லி இயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்து, அம்பானியின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.
அரசுத்துறை வங்கிகளை மேன்மேலும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).
நிதி மந்திரி ப.சிதம்பரம், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் எனத் திரும்பும் பக்கமெல்லாம் ஏகாதிபத்திய விசுவாசிகளால் இந்திய அரசாங்கம் நிரம்பி வழிவதை யாரும் கண்கூடாகப் பார்க்கலாம். மாண்டேக்சிங் அலுவாலியா உலக வங்கியிலும், ரகுராம் ராஜன் சர்வதேச நாணய நிதியத்திலும் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிவிட்டு இறக்குமதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஏன், உலக வங்கியில் குப்பை கொட்டியவர், ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் நம்பகமான ஏஜெண்ட் என்பதால்தான் மன்மோகன் சிங், நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதிமந்திரியாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதம மந்திரியாகவும் முடி சூட்டப்பட்டார்.
இதுவொருபுறமிருக்க இந்தியத் தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனங்களைச் சேர்ந்த விசுவாசமான அதிகாரிகளும் கொல்லைப்புற வழியாக மேலவை உறுப்பினராக நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவது இன்று ஒரு போக்காக வளர்ந்து வருகிறது. மேலும், அரசு அமைக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் தரகு முதலாளிகளுக்கு இடம் அளிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக அரசின் பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்களைத் தரகு முதலாளிகளும், அதிகார வர்க்க கமிட்டிகளும், ஏகபோக நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களும்தான் வகுத்துக் கொடுக்கிறார்கள்.
இதன் அடிப்படையில்தான் இன்று சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவன அதிகார வர்க்கத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோல தொலைபேசிக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அதிகார வர்க்க கமிட்டிகள் தீர்மானிக்கின்றன. இவற்றுக்கு அப்பால், வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்யவும், சர்க்கரை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தாராளமயத்தைப் புகுத்தவும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் கமிட்டி; சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியங்கள் தொடர்பாக அரசுக்கு அறிவுரை வழங்க இன்ஃபோசிஸ் இயக்குநர் நந்தன் நிலகேனி கமிட்டி; தரகு முதலாளித்துவ நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க தரகு முதலாளி குமாரமங்கலம் பிர்லா கமிட்டி; வங்கித் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர நரசிம்மன் கமிட்டி என்றவாறு அனைத்து நிலைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கு ஏற்றவாறு அதிகார வர்க்க கமிட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக மைய அரசு அமைத்து வருகிறது. இந்த கமிட்டிகள் தான் உண்மையான அரசாங்கமாகவும், அவை தரும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் தலையாட்டி பொம்மையாக நாடாளுமன்றமும் இன்று செயல்பட்டு வருகின்றன.
அரசியல்வாதிகளிடம் காணப்படும் சுயநலம், ஊழல் ஆகிய ஒழுங்கீனங்களைக் காட்டி, தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் நிறைந்த அதிகார வர்க்கத்தின், துறை சார்ந்த நிபுணர்களின் கைகளில் கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை அளித்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என இந்த மாற்றத்தைப் புதிய தாராளவாதக் கொள்கை நியாயப்படுத் துகிறது.
உண்மையான அரசாங்கம் இவர்களைப் போன்ற நிபுணர்களின் கைகளில்: வங்கித்துறை சீர்திருத்தக் கமிட்டியின் தலைவர் நரசிம்மன்; வறுமைக்கோடை நிர்ணயிக்கும் கமிட்டியின் தலைவர் ரங்கராஜன்; எரிபொருட்களுக்கு மானியம் வழங்குவது குறித்த கமிட்டியின் தலைவர் நந்தன் நிலகேனி; வரி தவிர்ப்பு விதிமுறைகள் கமிட்டியின் தலைவர் பார்த்தசாரதி ஷோமே.
அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் சமூக பொறுப்புகள், கடப்பாடுகள் அனைத்தும் களையப்பட்டு, அவை மேலும் மேலும் ஆழமாக இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செயும்படி மாற்றப்பட்டிருப்பதைத்தான் இவை எடுத்துக் காட்டுகின்றன. அரசியல் கிரிமினல்மயமாகியிருப்பதைவிட கொடிய அபாயம் நிறைந்தது இந்த மாற்றம். எனினும், முதலாளித்துவ ஊடகங்களும் அறிவுத்துறையினரும் ஊழல் இல்லாத நல்லாட்சி, சிறந்த அரசாளுமை ஆகிய மயக்கு வார்த்தைகளைக் கொண்டு இந்த பேரபாயத்தை நியாயப்படுத்தி வருகின்றனர்.
தேர்தல்கள்: மறுகாலனியாதிக்கத்தின் மூகமூடி
கடந்த இருபது ஆண்டுகளில் காங்கிரசு கூட்டணி ஆட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட் சி, ஐக்கிய முன்னணி ஆட்சி எனப் பல வண்ண கூட்டணிகள் மாறிமாறி ஆண்டபோதும், தனியார் மய-தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கூட்டணிகளுக்கிடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை. சொல்லப்போனால், இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தங்களுக்கிடையே யார் முந்தி என்ற போட்டிதான் அக்கூட்டணி ஆட்சிகளுக்கிடையே நிலவி வந்தது. இப்படி தனியார்மயக் கொள்கைகளுக்கு எந்தவிதப் பாதிப்புமின்றி ஆட்சி நடத்துவதைத்தான் ஆளுங்கும்பல் நிலையான ஆட்சி என வரையறுக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பறக்க நடந்து வருகிறது. தேர்தலுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது பற்றி இந்திய மக்களைவிட, ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகள்தான் அதிகம் கவலை கொள்கின்றனர். தங்கள் விருப்பத்துக்கு மாறான கூட்டணி ஆட்சி அமைந்தால், அதனைக் கவிழ்த்து விடவும் தயாராக இருக்கிறது அக்கும்பல். “சிறிய மற்றும் பிராந்திய கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொண்டு, ஒரு பொதுவான பொருளாதாரத் திட்டமின்றி ஆட்சியமைக்க முற்பட்டால், அது நிதி முதலீட்டாளர்களை வெளியேறத் தூண்டுவதாக அமைந்துவிடும். அப்படிபட்ட நிலை இந்திய ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செயும்; வெளிநாடுகளிலிருந்து பெறும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும்; இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுவதைத் தாமதப்படுத்தும்” என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறது, மூடி (Moody) என்ற ஏகாதிபத்திய ரேட்டிங் நிறுவனம்.
எனவே, தேர்தல்களுக்குப் பின் எந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அது ஏகாதிபத்திய நிதி மூலதனச் சூதாடிகளின், இந்தியத் தரகு முதலாளித்துவக் கும்பலின் ஆட்சியாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இருக்க முடியாது. அதனால் நடைபெறவுள்ள தேர்தல் என்பது இந்தத் தீவட்டிக் கொள்ளையர்களின் ஆட்சிக்கு ஒரு சட்டபூர்வ நியாயத்தைக் கற்பிக்கும் மோசடி தவிர வேறெதுவும் கிடையாது என்பதை உழைக்கும் மக்கள் உணர வேண்டும். ஓட்டுக்கட்சி களும் ஊடகங்களும் முதலாளித்துவ அறிவுத்துறையினரும் முன்வைக்கும் “தேர்தலின் மூலம் மாற்றம்” என்ற மோசடிக்கு மாறாக, நக்சல்பாரி புரட்சியாளர்கள் முன்வைக்கும் “தேர்தலைப் புறக்கணிப்போம்; மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் அணி திரண்டு, தனியார்மயம்-தாராளமயத்தையும் அதனைப் பாதுகாக்கும் இந்த அரசியல் அமைப்பு முறையையும் வேரடி மண்ணோடு வீழ்த்தக்கூடிய புரட்சிகரப் போராட்டங்களைக் கட்டியமைக்க முன்வர வேண்டும்.
1905-ம் ஆண்டு இன்றைய தேதியான ஏப்ரல் 11 அன்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற சிறப்பு சார்பியல் தத்துவத்தை வெளியிடுகிறார். அதை நினைவு கூர்ந்து இந்த ஆவணப்பட விளக்க கட்டுரையை வெளியிடுகிறோம். நெடிய இந்த கட்டுரை ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளை வரலாற்றுப் பார்வையோடு விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, கூடவே அதன் நெடிய பாதையில் அரசியலும், மக்கள் புரட்சிகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் எப்படி பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதையும் இங்கே புரிந்து கொள்ள முடியும். மதங்களையும், கடவுள்களையும் அருங்காட்சியகத்திற்கு மட்டும் அனுப்ப வேண்டிய அடையாளங்கள் என்பதை ஐன்ஸ்டீனது கண்டுபிடிப்புகள் நமக்கு வலியுறுத்துகின்றன. அறிவியலை கற்பது என்பது அரசியல் போராட்டம், மனித குல வரலாறு கற்பதோடு பிரிக்க முடியாத ஒன்று என இந்த ஆவணப்படம் எடுத்துக் கூறுகிறது. படியுங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்!
– வினவு
___________
நவீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.
இந்த சமன்பாட்டின் படி ஒரு ரூபாய் நாணயத்தின் மொத்த நிறையையும், திட, திரவ, வாயு மிச்சம் ஏதுமின்றி ஆற்றலாக உருமாற்றம் செய்தால், அதைக் கொண்டு மொத்த தமிழ் நாட்டின் இரண்டு நாட்களுக்கான மின் தேவையை பூர்த்தி செய்துவிட முடியும். இது சாத்தியமா? உண்மையில் இச்சமன்பாட்டின் பொருள் என்ன? அது எப்படி உருவானது? அது மனித வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்மில் வெகுசிலரே அறிந்திருக்கிறோம்.
நோவாவின் “ஐன்ஸ்டீனின் பெரும் சிந்தனை” என்ற ஆவணப்படம் பார்ப்பதற்கு எளியதாக தோன்றும் இந்த சமன்பாட்டின் வரலாற்றையும், அது உருவான கதையையும் நம் சிந்தனையை தூண்டும் விதத்தில் விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், கருதுகோள்கள் ஒரு வெற்றிடத்திலோ அல்லது ஒரு விஞ்ஞானியின் மூளைக்குள்ளிருந்து மட்டும் உருவாக்கப்படுவதில்லை. மனிதகுலம் பல நூற்றாண்டு காலமாக திரட்டிய அறிவுச் செல்வத்தின் மீது நின்று கொண்டு அறிவியலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் அவை கட்டியெழுப்பபடுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.
இளம் ஐன்ஸ்டீன்
E=mc2 என்ற சமன்பாட்டை நினைக்கும் போது ஐன்ஸ்டீனை வெள்ளை முடியும் சுருக்கம் விழுந்த வயதான மனிதராக பலர் உருவகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இச்சமன்பாட்டை உருவாக்கிய போது ஐன்ஸ்டீன் வயோதிகர் இல்லை; துடிதுடிப்பும் துள்ளலும் நிறைந்த இளைஞர். காதல், குடும்பம், கல்லூரி வகுப்புகள், வேலை தேடல், அலுவலக நெருக்கடிகள் என்ற சராசரி போராட்டங்களுக்கு மத்தியில்தான் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.
அவருக்கு முன் இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கப் போராடிய, பலருடைய வேலையை கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து அவற்றைக் கொண்டு ஒரு கோட்பாட்டு பாய்ச்சலை செய்ததுதான் ஐன்ஸ்டீனின் மேதைமை. இச்சமன்பாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு பின்னாலும் சாதனை, தோல்வி, சண்டை, பகை, காதல், போட்டி, அரசியல் மற்றும் பழிவாங்கும் கதைகள் உள்ளன.
E = mc2 சமன்பாட்டின் கதை ஐன்ஸ்டீனுக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் ஆற்றல் மாறும் கோட்பாடு கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து துவங்குகிறது.
E – ஆற்றல்
19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் விஞ்ஞானிகள் ஆற்றலை அடிப்படையாக கொண்டு உலகை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கவில்லை. அவர்கள் காற்றின் சக்தி, கதவு மூடப்படும் விசை, மின்னலின் சக்தி இப்படி ஒவ்வொன்றையும் விசைகளாகவும், சக்திகளாகவும் தனித்தனித் தீவாக ஆய்ந்து வந்தனர். அவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனிமுதலானவை, தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை.
அக்காலகட்டத்தில் அறிவியல் என்பது மேன்மக்களுக்கான துறையாகவே இருந்தது. அவர்களுக்கே அறிவியல் கல்வி கற்கவும், ஆய்வுகள் நடத்தவும் வாய்ப்புகள் கிடைத்தது. ஒவ்வொரு சக்தி அல்லது விசையின் பின்னிருந்து இயக்கக் கூடிய, அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் இன்னும் அந்த மேன்மக்களிடையே உருவாகவில்லை. இது அறிவியலின் அன்றைய வரம்பு என்பதோடு கனவான்களின் புத்தார்வ தடைகளும் சேர்ந்த ஒன்று. கல்விக்கும், அறிவியலுக்கும் பிறப்பு காரணமாக அனுமதி மறுப்பில்லை என்ற மேலை நாடுகளிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவில் பார்ப்பனியத்தின் பிடியில் அவை வளராமல் சிக்குண்டிருந்தன எனலாம். இந்த பின்னணியில்தான் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதனின் இயற்கையின் புதிர்களை புரிந்துகொள்ளும் உந்துதல், ஆற்றல் குறித்த அறிவியல் கோட்பாட்டை மாற்றியமைப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.
மைக்கேல் ஃபாரடே – 1842ல்
ஒரு இரும்புக் கொல்லரின் மகனான மைக்கேல் ஃபாரடே, புத்தகம் பைண்டிங் செய்யுமிடத்தில் பழகுநராக வேலை செய்து வருகிறார். 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில் புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில் உழைக்கும் மக்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவர்கள் சிறுபட்டறைகளிலும், தொழிற்கூடங்களிலும் தொழில் பழகுனராக சேர்ந்து தொழில் கற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. ஃபாரடே பைண்டிங் தொழிலின் திறனை கற்றுக் கொண்டதோடு நில்லாமல், அவர் கைகளுக்கு வரும் எல்லா புத்தகங்களையும் படித்து சுயமாக கல்வி கற்கிறார்.
தனது வேலையை விட அறிவியல் ஆய்வுகளில் ஆர்வம் அதிகம் கொண்டிருந்த ஃபாரடே, தனது சொற்ப வருமானம், ஓய்வு நேரம் அனைத்தையும் சுயகல்வி கற்பதிலும், இயற்கை விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதிலும் செலவிட்டார். அன்றைய சமூகத்தில் விஞ்ஞானிகள் நட்சத்திர அந்தஸ்து உடையவர்களாக மதிக்கப்பட்டதுடன் அவர்களை சந்திப்பதோ, அவர்களுடைய விரிவுரைகளுக்கு செல்வதோ சாதாரண மக்களுக்கு அரிதாக கிடைக்கும் வாய்ப்பாகவே இருந்தது. இளம் ஃபாரடேயின் உற்சாகத்தையும், பேரார்வத்தையும் கண்ட வாடிக்கையாளர் ஒருவர், பிரபுகுலத்தை சேர்ந்தவரும் அக்காலத்தைய மிகப்பிரபலமான வேதியியலாளருமான சர் ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்பதற்கு ஃபாரடேவுக்கு அனுமதிச்சீட்டு பெற்றுத் தருகிறார்.
ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளை கேட்ட ஃபாரடே உற்சாகமடைந்து அவரை தனது ஆதர்ச நாயகனாக மதிக்க ஆரம்பிக்கிறார். ஹம்ஃப்ரி டேவியின் விரிவுரைகளில் தான் எடுத்த குறிப்புகளை புத்தகமாக தொகுத்து அதை அவரை நேரில் சந்தித்து பரிசளிக்கிறார். கட்டுப்பாடுகள் மிகுந்த, அறிவுத் தேடலை முடக்கிப் போடும் மற்றும் சுயநலம் மிகுந்த வர்த்தக உலகிலிருந்து தான் விடுபட விரும்புவதாகவும், சுதந்திரமும், முற்போக்கானதும் தனது மனதிற்கினியதுமான அறிவியலுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளிக்குமாறும் கோரி டேவியின் உதவியாளராக சேர விண்ணப்பிக்கிறார். டேவி ஆரம்பத்தில் ஃபாரடேவை அவமானப்படுத்தி அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். பின்னர் ஆய்வகத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமுற்ற பிறகே தனது ஆய்வுகளில் உதவி செய்ய ஃபாரடேயை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.
சர் ஹம்ப்ரி டேவி
அக்காலத்தின் கவர்ச்சிகரமான அதிசயிக்கத்தக்க ஒன்றான மின்கலமும் மின்சக்தியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. விசித்திரமான மின்சக்தியை குறித்து அறிந்து கொள்ள அனைத்து விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு வந்த போதிலும் அதைப் பற்றி இன்னும் சரியாக மதிப்பிடப்பட்டிருக்கவில்லை.
1821-ல் டேனிஷ் (டென்மார்க்) ஆய்வாளர் மின்சாரம் பாயும் மின் கடத்தியின் அருகில் காந்த திசைகாட்டியை கொண்டு செல்லும் போது அதன் ஊசி செங்கோணத்தில் விலக்கப்படுவதை கண்டறிந்தார். மின்கடத்தியின் எந்த பக்கத்தில் வைத்தாலும் ஊசி செங்கோணத்தில் விலக்கப்பட்டது.
உயர்கல்வி கற்ற மேன்மக்களான அப்போதைய அறிவியலாளர்கள் மத்தியில், குழாயினுள் நீர் பாய்வதைப்போல் மின்கடத்தியினுள் மின்சாரம் பாய்வதாக கருத்து நிலவி வந்தது. அப்படித்தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது என்று அவர்கள் ஃபாரடே போன்ற ‘தற்குறி’களுக்கு இடித்துரைக்கவும் செய்கின்றனர். ஆனால், ஃபாரடே மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது அதை சுற்றிலும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது எனும் கருத்தை முன்வைத்தார். அக்காந்தப்புலமே காந்த திசைகாட்டியின் ஊசியை விலக்குகிறது என்றும் விளக்கினார்.
அத்துடன், நிலை காந்தத்தின் அருகில் வைக்கப்படும் மின்கடத்தியில் மின்சாரம் பாயும் போது, கடத்தியை சுற்றி உருவாகும் காந்தப்புலத்திற்கும், நிலை காந்தப்புலத்திற்கும் இடையேயான எதிர் வினை விலக்குவிசையை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார். இதுவே அந்நூற்றாண்டின் மிகப்பெரும் கண்டுபிடிப்பான மின் மோட்டார் ஆகும். இவ்வாய்வே எல்லா இயக்க சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பற்றிய கோட்பாடு உருவாக காரணமாக அமைந்தது.
பிரிட்டனின் உயர் அறிவியல் அமைப்பான ராயல் சொசைட்டியில் – அவ்வமைப்பின் தலைவராக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஹம்ஃப்ரி டேவி, ஃபாரடேவை கருத்து திருடர் என குற்றம் சுமத்தி ஆய்வறிக்கையை திரும்பப் பெறுமாறு நிர்பந்தித்ததையும் மீறி – ஃபாரடே தனது ஆய்வை சமர்ப்பிக்கிறார்.
ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பின் ஃபாரடே தனது பணிகளுக்கான அங்கீகாரத்தை பெற்றதோடு தனது புகழ்பெற்ற அடுத்த கண்டுபிடிப்பான மின்காந்த தூண்டல் விதிகளை கண்டறிந்தார். அதாவது, மின்கடத்தியை சுற்றியுள்ள காந்தப்புலம் மாறுதலடையும் போது கடத்தியுள் மின்சாரத்தை உருவாக்கும் என்பதை கண்டறிந்தார்.
இவ்விரு கண்டுபிடிப்புகளும், மின்சக்தியும், காந்தசக்தியும் ஒன்றை ஒன்று சார்ந்தியங்குகின்றன என்பதையும் ஒன்று மற்றொன்றை தூண்டுகிறது என்பதையும் வெளிக்கொணர்ந்ததுடன், ஆற்றல் அழிவின்மை விதி உருவாக காரணமாக அமைந்தன.
ஃபாரடேவின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தைத் தொடர்ந்து ஐன்ஸ்டீன் ஆற்றல் பற்றிய இயற்பியலில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதை இந்தப் படம் விவரிக்கிறது.
குழந்தை ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீனின் குழந்தைப்பருவத்திலிருந்தே அவருக்கு நம் கண்களுக்கு தெரியாத மின்சக்தி, காந்தசக்தி போன்றவற்றின் மீது கவர்ச்சி ஏற்பட்டது. அவரது பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் இயற்பியல், கணிதம், தத்துவம் ஆகிய துறைகளில் மட்டுமே ஆர்வம் காட்டினார். அவரது பள்ளி, கல்லூரி பேராசிரியர்களை பொருத்தமட்டில் உலகின் எல்லா ஆற்றலும் – சக்தியும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.
ஆனால், ஐன்ஸ்டீன் பின்னாட்களில், ஒரு புதிய, கண்டறியப்படாத மீப்பெருமளவிலான ஆற்றலை பொருட்களின் இதயமான அணுவில் கண்டறிந்து அவர்களுடைய கருத்து தவறென்பதை நிருபிக்கப்போகிறார்.
E=mc2 சமன்பாட்டில் M என்பது Mass – நிறையை குறிக்கிறது. இதை பற்றி அறிந்து கொள்ள ஐன்ஸ்டீன் பிறந்ததற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நிலபிரபுத்துவ அரசு அல்லது எதேச்சதிகார முடியாட்சியை எதிர்த்த மக்கள் புரட்சி (முதலாளித்துவ புரட்சி) காலகட்டத்திலான பிரான்சுக்கு செல்லவேண்டும். அதுவரை திருச்சபைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவியலை வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு துறையையும் பகுத்தறிவின் மூலம் பிரித்தாய்ந்து வளர்த்தெடுத்த காலம் அது. இந்தியாவில் அத்தகைய அரசியல் புரட்சி நடப்பதற்கு பார்ப்பனியம் பெரும் தடையாக இருந்ததால் இங்கே அறிவியல் வளரவில்லை மட்டுமின்றி காலனி ஆதிக்கமும் சடுதியில் நிலைநாட்டப்பட்டது.
பிரான்சில் பிரபுகுலத்தை சேர்ந்த அன்டோன் லவாய்சியர், பிரபலமான வேதியலாளரும், மன்னர் பதினாறாம் லூயி-யின் வரிவசூலிக்கும் அதிகாரியும் ஆவார். வரி வசூலை பெருக்குவதற்கு பாரிஸ் நகரத்தைச் சுற்றி சுவரெழுப்பி நகரத்தினுள் நுழையும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி வசூலிக்கும் முறையை கொண்டு வந்து மக்கள் மத்தியில் ‘இழி’புகழ் ஈட்டிய பணியை செய்தவர். ஆனால், அவரது முக்கிய பங்களிப்பு வேதியல் துறையில், வேதி வினைகளில் பொருட்களின் நிறை மாறாமல் இருக்கும் கோட்பாட்டை நிரூபிப்பதில் இருந்தது.
அவர் மொத்த இயற்கையும் மூடிய அமைப்பாக இருப்பதையும், வேதியல் நிலைமாற்றங்கள் அனைத்திலும், எந்தப் பொருளின் நிறையும் அழிவதுமில்லை, புதிதாக உருவாவதுமில்லை என்பதை ஆய்வுக்கூடத்தில் நிருபித்துக் காட்டினார். அவருடைய ஆய்வுக்கூடத்தில் செஞ்சூட்டிலிருக்கும் இரும்புக் குழாயின் வழியாக நீராவியை செலுத்தி மறுபுறம் அதை சேகரித்து குளிர்வித்தார். (அதாவது இரும்புக் குழாயை துருப்பிடிக்க வைக்கும் வேதி வினையை நிகழ்த்தினார்).
சூடேற்ற பயன்படுத்திய நீரின் நிறைக்கும், இறுதியில் குளிர்வித்து பெறப்பட்ட நீரின் நிறைக்கும் இருந்த வித்தியாசம் வேதி வினையின் போது வெளியான வாயுவின் நிறை மற்றும் இரும்பு குழாயின் அதிகரித்த நிறையின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருந்தது. இச்செயல் முறையை பின்னோக்கி – தலைகீழாக – செய்து காட்டி தனது கோட்பாட்டை நிரூபிக்க அவர் முயன்றார்.
அன்டோன் லவாய்சியர்
லவாய்சியரின் சிறப்பு துல்லியமான அளவீடுகளிலும், தரவுகள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து ஆய்வு செய்யும் நேர்த்தியுமாகும். லவாய்சியர் வரிவசூல் அதிகாரியாக ஈட்டிய செல்வம் அனைத்தையும் தனது அதிதுல்லியமான ஆய்வுக்கூடத்தை மேம்படுத்துவதற்கே செலவிட்டுக் கொண்டிருந்தார். லவாய்சியரின் ஆய்விலிருந்து எந்த பொருளும் தப்பவில்லை.
அவருடைய கோட்பாடு பொருள் முதல்வாதத்திற்கு நிரூபணமாகவும், எல்லாப் பொருளும் எல்லா வகையான நிலைமாற்றங்களிலும் வேறொன்றாக மாறுவதாகவும், அவற்றின் அடிப்படை துகள் (பருப்பொருள்) அழிவதில்லை என்ற நிறைமாறாக் கொள்கை (நிறை அழிவின்மை கொள்கை) உருவாகவும் காரணமாக அமைந்தது.
அவருடைய பங்களிப்பு விஞ்ஞானத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது எனினும், அப்போதைய சமூக சூழலில் உயர் பிரபுகுலத்தோர் சமூகத்தின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரம் வகித்ததுடன் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வாய்ப்புகளை ஏகபோகமாக ஒதுக்கிக் கொண்டனர். ஆனால், இந்த ஆதிக்கத்தை எதிர்த்த பரந்து பட்ட மக்களின் போராட்டமும் வலுப்பெற்று வந்தது.
ஜோன் பால் மாரட் என்ற உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அறிவியல் ஆர்வலர் நெருப்பின் துகள்களை திரையில் படம்பிடிக்கும் கருவியை தாம் கண்டறிந்துள்ளதாக லவாய்சியரிடம் வருகிறார். மாரட்டின் சோதனைச்சாலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத வர்க்க பின்னணியையும், அறிவியல் ஆர்வத்தையும் கணக்கில் கொள்ளாத லவாய்சியர், நெருப்பின் துகளை பிடித்து அதை துல்லியமாக அளவிட்டிருந்தால் மட்டுமே மாரட்டின் கண்டுபிடிப்பை தான் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று அவரை அலட்சியப்படுத்தி அனுப்பி விடுகிறார்.
1789-ல் மகத்தான பிரஞ்சு புரட்சி நடக்கிறது. எதேச்சாதிகாரத்தின் தலைகளை மக்களும் புரட்சியாளர்களும் கில்லட்டினால் வெட்டியெறிகின்றனர். இப்போது ஜேகோபின் புரட்சியாளர்களில் ஒருவராக இருக்கும் ஜோன் மாரட், வரி வசூலிக்கும் அதிகாரியாக மக்களை ஒடுக்கிய லவாய்சியருக்கு சம்மன் அனுப்ப, லவாய்சியரும் கில்லடினுக்கு தப்பமுடியவில்லை.
சமூக அலைவீச்சில் அடித்துச் செல்லப்பட்டு குறுக்கப்பட்ட லவாய்சியேவின் வாழ்வைத் தொடர்ந்து ஐன்ஸ்டீனை ஒளியைப் பற்றி சிந்திக்க வைத்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.
பேராசிரியர் ஃபாரடே (முதிய வயதில்)
ஐன்ஸ்டீனின் இளம்பருவத்தில் அவரை அதிகம் கவர்ந்த, அவர் அதிகம் சிந்தித்து கொண்டிருந்த விசயம் ‘ஒளி’யைப் பற்றியது. கல்லூரி நாட்களில் அவர் தனது நண்பர்களுடன் மட்டுமின்றி தனது காதலியான மிலெவா மாரிக்குடனும் ஒளியைப் பற்றியும் அதன் வேகத்தை பற்றியும் விவாதிப்பதில் நேரத்தை செலவிடுகிறார். ஐன்ஸ்டீனின் ஒளியை பற்றிய பேரார்வம், பின்னர் ஆற்றலையும், பருப்பொருளையும் (நிறை) ஒருங்கிணைத்து மனிதகுலத்தின் பிரபஞ் பார்வையையே மாற்றியமைத்தது.
E=mc2 சமன்பாட்டின் அடுத்த பகுதி c என்பது ஒளியின் திசைவேகத்தைக் குறிக்கிறது. 19-ம் நூற்றாண்டிற்கு வெகுகாலத்திற்கு முன்னரே அறிவியலாளர்கள் ஒளியின் திசைவேகத்தை செயல்முறை அளவீடுகள் மூலம் கணக்கிட்டிருந்தனர். உலகின் அறியப்பட்ட அனைத்திலும் அதிவேகமாக பாய்வது ஒளி. அதன் வேகம் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர்.
ஹம்ஃப்ரி டேவியின் மரணத்திற்கு பிறகு ஃபாரடே, பேராசிரியர் ஃபாரடேவாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மின்சக்தியும், காந்தசக்தியும் மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் இரு வடிவங்கள்தான் என்ற அவரது கருதுகோளையும், ஒளியும் அதே மின்காந்த அலையின் ஒரு வடிவம்தான் என்பதையும் அறிவியல் உலகம் ஏற்க மறுத்தது. தன்னுடைய கருதுகோளை நிரூபிக்கத் தேவையான உயர்கணித புலமை ஃபாரடேவிடம் இருக்கவில்லை.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வயது முதிர்ந்த ஃபாரடேவின் உதவிக்கு வருகிறார் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல். உயர்கணிதம் கற்ற இளம் பேராசிரியர் மேக்ஸ்வெலும் ஃபாரடேவும் வயது வரம்பைத் தாண்டிய நண்பர்களாயினர். மேக்ஸ்வெலின் புதிய உயர்கணித சமன்பாடுகள் மின்விசையும் காந்தவிசையும் ஒன்றையொன்று சார்ந்தும் ஒன்று மற்றொன்றை தூண்டுவதாகவும், அவை மின்காந்த அலைகள் என்ற ஒரே ஆற்றலின் கூறுகள் என்பதை உறுதி செய்தன. அம்மின்காந்த அலைகள் ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் ஒன்றையொன்று தூண்டி பரவுவதாக அச்சமன்பாடுகள் உறுதிசெய்தன. அவ்வேகம் ஒளியின் திசைவேகமான வினாடிக்கு 3லட்சம் கிலோமீட்டர் என்பதை மேக்ஸ்வெலின் சமன்பாடுகள் நிரூபித்தன. இவ்வகையில் ஃபாரடேயின் மின்காந்த அலை என்ற கருது கோளும், ஒளியும் மின்காந்த அலையின் ஒரு வடிவமென்பது கணிதவியலால் உறுதி செய்யப்பட்டது. மேலும், மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் ஒளியின் வேகம் அளக்கப்படும் ஆதாரத்தைப் பொறுத்தும், நிலைமத்தொகுதிகளை (Inertial Frame) பொறுத்தும் வேறுபடா மாறிலி என்று முன் வைத்தது.
இப்போது ஒளியின் வேகம் எந்த நிலையிலும் மாறுவதில்லை என்ற மேக்ஸ்வெல் கோட்பாட்டை சார்பியல் தத்துவமாக வளர்த்தெடுக்கும் நிகழ்முறை ஐன்ஸ்டீனின் வாழ்வில் எப்படி உருவாகிறது என்பதை பார்க்கலாம்.
ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன் தான் பார்க்கக்கூடிய அனைத்தையுமே ஒளியின் பண்புகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முற்பட்டார். உதாரணமாக ஆற்றில் படகு நீரைக் கிழிப்பதால் ஏற்படும் அலைகள். படகும் அலைகளும் ஒரே வேகத்தில் செல்வதால் படகில் அமர்ந்திருகும் பயணியைப் பொறுத்தமட்டில் நீரலைகள் நிலையாக இருக்கிறது. கரையிலிருந்து பார்க்கும் பார்வையாளரோ அலைகள் படகின் வேகத்தில் நகர்வதாக காண்பார். ஒளியுடன் இதை ஒப்பிட்டால், நாம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது நம் முன் இருக்கும் கண்ணாடிக்குப் போய்ச் சேரும் ஒளி திரும்பி நம்மை வந்து அடையாமலே போய் விட, கண்ணாடியில் நமது உருவம் தெரியாமல் இருக்கும். இது எப்படி சாத்தியம்?
மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின்படி படி ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தாலும் ஒளியின் c என்ற அளவை விட குறையாத வேகத்தில் நம்மை விட்டு விலகிச் சொல்லும். மற்ற அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த கோட்பாட்டை அங்கீகரிப்பதன் மூலம் ஐன்ஸ்டீன், பருப்பொருள் (நிறை), ஆற்றல், ஒளியின் வேகம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் மிகை யதார்த்த (Surreal) அண்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்.
E=mc2 என்ற சமன்பாட்டில் அடுத்து பார்க்க வேண்டியது கணிதக்கூறான நிறையை வேகத்தின் வர்க்கத்தால் (c Squared) பெருக்குவதை பற்றி. பிரெஞ்சு புரட்சி ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், அறிவியலாளர்கள் பொருட்களின் இயக்கத்தை அளவிடவும் வரையறுத்துக் கூறவும் முயன்று வந்தனர்.
18-ம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ பிரான்சில் உயர்குலத்தைச் சேர்ந்த எமிலி டு சாட்லே என்ற பெண் அடுத்த 150 ஆண்டுகளில் கூட பெரும்பாலான பெண்களுக்கு வழங்கப்படாத சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றார். சிறுவயது முதலே அறிவு தேடலில் நாட்டம் கொண்டிருந்த எமிலி, அறிவியல், உயர்கணிதம், தத்துவத்துறைகளில் சிறப்பான பயிற்சியை பெற்றார். பிரான்சின் பிரபல கணிதவியலாளரும், நியூட்டன் இயற்பியல் வல்லுனருமான பியர் டி மாபெர்டசிடம் (Pierre de Maupertuis) உயர்கணிதம் கற்கிறார்.
பிரஞ்சு இராணுவ அதிகாரி ஒருவரை மணந்த எமிலியைச் சுற்றி அப்போதைய அறிவுஜீவிகள் கூட்டம் நண்பர்களாகவும் வழிகாட்டியாகவும் இருந்தனர். பிரஞ்சு புரட்சியின் வித்தகர்களில் ஒருவரும் கவிஞருமான வால்டருடன் எமிலிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. முடியரசையும், திருச்சபையையும் கடுமையாக விமர்சித்ததால் வால்டர் இரு முறை சிறை தண்டனைக்குள்ளாகிறார். ஒரு முறை இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படுகிறார். நாடு திரும்பும் வால்டருக்கு எமிலியும் அவரது கணவரும் அடைக்கலம் தருகின்றனர். அன்றைக்கு அறிவியலாளர்களும் அரசியல் புரட்சி ஆர்வமும் பிரிக்க முடியாத படி இருந்ததை இது காட்டுகிறது.
எமிலி டூ சாட்லே
நியூட்டனின் இயக்கம் பற்றிய பிரபலமான கட்டுரையான பிரின்சிபா (Principia) வை எமிலி பிரஞ்சு மொழியாக்கம் செய்கிறார். இன்று வரை பிரான்சின் கல்வி நிலையங்களில் எமிலியின் மொழி பெயர்ப்பே பாடப்புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நியூட்டனின் கோட்பாட்டின்படி, ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளினது நிறையின் மடங்கு திசைவேக அளவு (E=mv) இருக்கும். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த கோட்ஃபிரைட் லெப்னிஸ் (Gottfried Leibniz) ஒரு பொருளின் இயக்க ஆற்றல், அப்பொருளின் நிறையின் திசைவேகத்தின் இருபடி மடங்காக (E = mv2) இருக்கும் என்று முன்மொழிந்தார். அதை பெரும்பாலான அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கோட்ஃபிரைடின் கோட்பாட்டின் மீது ஈர்ப்படைந்த எமிலி, நியூட்டனின் விதியை சந்தேகிக்க ஆரம்பித்தது, அவருடைய வழிகாட்டிகளான மேதைகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உண்மை என்பது நடைமுறையில் சோதித்தறியப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று எனும் அறிவியல் அணுகுமுறையின்படி எமிலி கோட்ஃபிரைடின் கோட்பாட்டை பரிசோதனை மூலம் உறுதி செய்கிறார். 1740-ம் ஆண்டு மிகப் பிரபலமானதும், சர்ச்சையைக் கிளப்பியதுமான இயற்பியலின் நிறுவன விதிகள் (Institutions of Physics) என்ற கட்டுரையை வெளியிடுகிறார்.
“பெண்ணாகப் பிறந்த மிகச்சிறந்த ஆண்மகனென்று” எமிலியைப் பற்றி வால்டர் வருணித்தார். எமிலி அவருடைய 43-ம் வயதில் கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்த பின் நோய்தொற்றினால் உயிரிழந்தார். தன் காலத்தின் தளைகளை உடைத்துக் கொண்டு அறிவியல் தேடலில் ஈடுபட்டு அறிவியலுக்கு அழியா பங்காற்றிய முன்னோடிகளில் ஒருவராக எமிலி தூ சாட்டலே விளங்குகிறார்.
இப்போது, ஐன்ஸ்டீன் எப்படி ஆற்றலையும், நிறையையும் இணைத்து 20-ம் நூற்றாண்டின் நவீன அறிவியலுக்கு அடித்தளம் இடுகிறார் என்று பார்க்கலாம்.
1903-ம் ஆண்டு தன்னுடன் பயின்ற மிலெவா மாரிக்கை மணந்து கொண்ட ஐன்ஸ்டீன் பல்கலைக் கழகங்களில் வேலை தேடுவதற்கு தேவையான பரிந்துரைகளை அவரது பேராசிரியர்கள் யாரும் தரத் தயாராக இல்லாத நிலையில் சுவிட்சர்லாந்தில் வடிவுரிமை அலுவலகத்தில் ஒரு கீழ்நிலை எழுத்தராக வேலை செய்து பொருள் ஈட்டுகிறார். மரபுகளை உடைத்துக் கொண்டு ஒரு துறையின் இயற்பியல் விதியை இன்னொரு துறைக்கு பொருத்தி இயற்கையின் அடிப்படை இயக்க விதிகளை, அதாவது இப்பிரபஞ்சத்தை படைத்த கடவுளின் சிந்தனையை அறியும் தேடலில் இருக்கும் ஐன்ஸ்டீனுக்கு பதவி உயர்வு, கூடுதல் ஊதியம், குடும்ப வாழ்க்கை, துணைவியின் குறிக்கோள்கள் அனைத்துமே அற்ப விசயங்களாகப்படுகின்றன. எழுத்தர் வேலையில் கவனத்தை செலுத்தாததால் பதவி உயர்வு மறுக்கப்படுகிறார். குடும்பச் சுமை தன்னுடைய சுயத்தையும் மேல் கல்வி கற்கும் வாய்ப்பையும் முடக்கிப் போடுவதை உணரும் மிலெவா, ஐன்ஸ்டீனுக்கு ஊதிய உயர்வு கிடைக்காமல் போனதைக் கேட்டு ஆத்திரப்படுகிறார். அவர்களுடைய திருமண வாழ்க்கை முரண்பட ஆரம்பிக்கிறது.
ஐன்ஸ்டீன் தன்னுடைய நெருங்கிய நண்பரான மிக்கேல் பெஸ்ஸொவுடன் நகரில் உலாவச் செல்லும் போது வெவ்வேறு தொலைவிலிருக்கும் கோபுர கடிகாரங்களிலிருந்து வரும் ஒளி தங்களை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது மிக முக்கியமான நுண்ணறிவுப் புரிதலை அடைந்தார்.
மேக்ஸ்வெலின் சமன்பாடு முன்னறிவித்து ஒளியின் வேகம் மாறாதது என்பதை ஏற்றுக் கொண்டு நாமறிந்த மற்ற எல்லா நிகழ்வுகளையும் அத்துடன் பொருத்த முயன்றார். அப்படி பொருத்துவதற்கு இயங்கும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க நேரம் குறுக்கப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.
அது வரை காலம் என்பதை தனிமுதலான ஒன்றாக அதாவது காலம் என்பது கடவுளின் கையிலிருக்கும் கடிகாரத்திலிருப்பதை போல் எல்லா இடங்களுக்கும் மாறாத நிலையான ஒன்றாக அறிவியலாளர்கள் கருதி வந்தனர்.
ஒரு பொருள் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அப்பொருளின் காலம் சுருங்கிக் கொண்டே போவதால்தான் ஒளிஅலை அதனின்று வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்ற மாறா வேகத்தில் விலகிச் செல்கிறது என்று ஐன்ஸ்டீனின் முன் வைத்தார். 1905-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் ஐந்து மிக முக்கியமான ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். அவற்றுள் நான்காவது ஆய்வறிக்கையில் விளக்கப்பட்ட ‘சிறப்பு சார்பியல் தத்துவத்தின்’ (Special Relativity) படி ஐன்ஸ்டீனின் பிரபஞ்சத்தில் தனிமுதலான மாறிலி (constant) காலமோ, வெளியோ அல்ல. ஒளியும், அதன் வேகமும் தான் மாறிலியாகும்.
வேகமாக செல்லும் ரயில் வண்டியை உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் வேகத்தை கூட்ட ஆற்றலை அதாவது மேலும் மேலும் கூடுதல் எரிபொருளை போட்டுக் கொண்டே செல்கிறோம். அதன் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க ஒளி அதை விட்டு மாறா வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டரில் விலகிச் செல்லும், ரயில் வண்டியினுள் காலம் சுருங்கும் எனில் நாம் உயர்த்திக்கொண்டே செல்லும் ஆற்றல் எங்கே செல்கிறது?
E = mc2
அது நிறையாக மாறுகிறது. ஆம் ஆற்றல் பருப்பொருளாக மாறுகிறது. ஆற்றலும் பொருளும் ஒன்றை ஒன்று சாராத தனிமுதலானவை அல்ல. ஆற்றல் பொருளாக மாறும், பொருள் ஆற்றலாக மாறும், பொருளையும் ஆற்றலையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
ஒரு பொருளில் உறைந்திருக்கும் ஆற்றலை கணக்கிட அதன் நிறையுடன் ஒளியின் வேகமான 3 லட்சம் மீட்டர் என்பதன் “வர்க்க”த்தை (அதாவது 9 ஆயிரம் கோடியை) பெருக்க வேண்டும். அவ்விதத்தில் பருப்பொருள் (அணு) ஒவ்வொன்றும் உறைந்திருக்கும் ஆற்றலின் சேமக்கலனாக உள்ளது. ஒரு பேனாவின் நிறை முழுவதையும் ஆற்றலாக மாற்றினால் அது அணுகுண்டு வெடிப்பதற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே ஆண்டில் இயற்பியல் உலகைக் குலுக்கிப் போடக் கூடிய 5 ஆய்வறிக்கைகளை வெளியிட்ட ஐன்ஸ்டீனின் சாதனைக்கு எதிர்வினையாக என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் பதில். ஐன்ஸ்டீனின் சராசரி, காப்புரிமை அலுவலக எழுத்தர் வேலையும், சச்சரவுகள் நிறைந்த திருமண வாழ்வும் தொடர்ந்தன. அடுத்த 4 ஆண்டுகளில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் குறித்து ஒவ்வொன்றாக கடிதங்கள் வர ஆரம்பித்தன. அவை அனைத்துக்கும் ஐன்ஸ்டீனை பொறுமையாக பதில் எழுதினார். இறுதியில் மேக்ஸ் பிளாங்க் என்ற முக்கியமான விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ரசிகர் மன்றத்தின் ஒரே உறுப்பினராக சேர்கிறார். அவரது உதவியால் ஐன்ஸ்டீன் ஜூரிக் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பதவி நியமனம் பெறுகிறார்.
ஐன்ஸ்டீனின் வெற்றி அவரது திருமண வாழ்க்கையின் தோல்வியாக முடிந்தது. 1919-ம் ஆண்டில் ஐன்ஸ்டீன், மிலேவாவை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்து கொண்டார்.
E=mc2 இயற்பியல் உலகின் புனிதக் கோட்பாடாக மாறியது. அணுக்களில் பூட்டப்பட்டிருக்கும் ஆற்றலை விடுவிப்பதற்கு குறைந்தது 100 ஆண்டுகள் பிடிக்கும் என்று ஐன்ஸ்டீன் கருதினார். ஆனால், அவர் இரண்டாம் உலகப் போரையும், ஹிட்லரின் ஜெர்மனியில் பணியாற்றிய ஒரு யூதப் பெண்ணின் மேதமையையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
1907-ம் ஆண்டு ஆஸ்திரியவைச் சேர்ந்த 28 வயதான யூதப் பெண் லிசா மைட்னர் கதிரியக்கத் துறையில் ஆய்வு மேற்கொள்வதற்காக பெர்லின் நகருக்கு வருகிறார். அன்றைய ஜெர்மனியில் பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் பெண் ஆய்வாளர்களை பணிக்கமர்த்துவதில்லை.
ஆட்டோ ஹான்
ஜெர்மானிய வேதியலாளர் ஆட்டோ ஹான், லிசாவுக்கு உதவ முன்வருகிறார். கதிரியக்கம் பற்றிய தனது ஆய்வில் லிசாவை சககூட்டாளியாக சேர்த்துக் கொள்கிறார். 1912ல் அவ்விருவரும் கைசர் வில்ஹெல்ம் (Kaiser Wilhelm) ஆய்வு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். பல்கலைக் கழகத்தின் பிற பேராசிரியர்கள் லிசா மைட்னரை தொடர்ந்து புறக்கணித்து அவமதிக்கின்றனர். ஆனால் ஆட்டோ ஹானுடனான நட்பும் இயற்பியல் மீதான வேட்கையும் அவரை தாக்குப்பிடிக்க வைக்கிறது.
லிசா மைட்னர் ஜெர்மனியின் முதல் பெண் பேராசிரியராக நியமிக்கப்படுகிறார்.
1930-களில் பருப்பொருளின் அடிப்படைத் துகளான அணுவின் அணுக்கரு புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்பது கண்டறியப்பட்டிருந்தது. அந்த ஆண்டுகள் அணுக்கரு ஆய்வுகளின் பொற்காலமாக திகழ்ந்தன. அன்றைக்கு அறியப்பட்ட தனிமங்களில் மிகப்பெரிய உட்கருவைக் கொண்டிருந்த தனிமம் யுரேனியம். 238 புரோட்டான்களும் நியூட்டான்களும் கொண்ட யுரேனியத்தின் உட்கருவுக்குள் நியூட்ரான்களை செலுத்தி புதிய தனிமங்களை உருவாக்கும் ஆய்வில் லிசாவும் ஆட்டோவும் ஈடுபட்டிருந்தனர். ஆய்வின் வேதியல் செயல்முறைகளை ஆட்டோவும், இயற்பியல் கோட்பாடுகளை லிசாவும் பங்களித்து வந்தனர்.
1930-களில் ஆட்சிக்கு வந்த நாஜிக்கள், இனவெறி காரணமாக யூதர்களை அறிவுத்துறையில் இருந்து வெளியேற்றத் துவங்கினர். அதனால் 1933-ல் ஐன்ஸ்டீன் நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆய்வுகளில் தீவிரமாக இருந்த லிசாவுக்கு எதிராகவும் நாஜிக்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். நாஜி எதிர்ப்பு கருத்துக்களை கொண்ட ஹான், லிசாவை பாதுக்காக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆயினும், சூழ்நிலை மோசமடைந்து லிசா ஜெர்மனியில் தங்கியிருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவரைக் காப்பாற்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் அமைப்புகளிலிருந்தும் அறிவியல் உரையாற்ற அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. ஆனால், நாஜிக்கள் அவரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. ஆட்டோ ஹானும், லிசாவுக்கு சார்பான தனது போராட்டங்களை கைவிடுகிறார்.
1938-ம் ஆண்டு சூழ்நிலை மிகவும் மோசமடைய, டச்சு நண்பர் ஒருவரின் உதவியுடன், தனது வாழ்நாள் முழுவதும் ஈட்டிய பொருட்கள், ஆய்வுப் பணிகள் அனைத்தையும் விட்டு விட்டு ஒரு பெட்டியுடன் அகதியாக ஹாலந்துக்கு தப்பிச் செல்கிறார் லிசா. பெர்லினில், நடந்து வரும் ஆய்வு விபரங்களை கடிதம் மூலம் பெற்று ஆட்டோ ஹானுக்கு தனது வழிகாட்டல்களை அளித்து வருகிறார்.
யுரேனியம் அணுக்கருவில் நியூட்ரானை உட்செலுத்திய சோதனையில் பேரியம் உருவாக்கப்படுவதாக ஆட்டோ ஹான் தகவல் அனுப்புகிறார். எதிர்பார்த்தபடி பெரிய தனிமத்தை உருவாக்காமல் சிறிய தனிமம் எப்படி உருவானது என்பதை ஆட்டோ ஹான் புரிந்து கொள்ள முடியவில்லை. லிசா, அதைப்பற்றி தனது மருமகனும் அறிவியலாளருமான ஒட்டோ ராபர்ட் ஃபிரிட்சுடன் விவாதிக்கிறார். ஒரு பெரிய நீர்க் குமிழி எந்த நேரமும் உடைந்து சிதறும் நிலையில் இருப்பதைப் போல பெரிய உட்கருவான யுரேனியத்துக்குள் நியூட்ரானை செலுத்தும் போது, அது ஆட்டோ ஹான் மற்றும் பிற அறிவியலாளர்கள் நினைத்தது போல பெரிய தனிமத்தை உருவாக்காமல், சிறிய தனிமங்களாக உடைகிறது என்று லிசா உணர்கிறார்.
லிசா மைட்னர்
ஆனால், உட்கரு பிளவுபட்டால் இரண்டு பகுதிகளும் உயர் ஆற்றலுடன் (இரு அணுக் கருக்களுக்கிடையிலான எதிர்விசை சுமார் 200 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் இருக்க வேண்டும்) ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து விலக வேண்டும். அவ்வாற்றல் எங்கிருந்து பெறப்படுகிறது என்று இருவரும் ஹானின் ஆய்வு முடிவுகளை சரிபார்க்கிறார்கள். பிளக்கப்பட்ட அணுக்களின் நிறைகளின் கூட்டுத்தொகையானது யுரேனியம் அணுவின் நிறையை விட, புரோட்டானின் நிறையில் ஆறில் ஒரு பங்கு குறைவாக இருந்தது. அந்நிறையை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டில் பொருத்திப்பார்க்கும் போது அது கிடைக்கும் ஆற்றல் அவர்கள் பரிசீலிக்கும் அணுப்பிளவில் எதிர்பார்க்கும் அளவிலானது என்பதை லிசா மெய்ட்னர் கணக்கிடுகிறார்.
“அவர் (ஆட்டோ ஹான்) அணுவை பிளந்து விட்டார்” என்கிறார் லிசா. அவரது மருமகனோ, “இல்லை! இல்லை! நீங்கள் அணுக்கருவை பிளந்திருக்கிறீர்கள்!” என்கிறார்.
ஐன்ஸ்டீன் சொன்னது மிகச்சரியென நிரூபிக்கப்பட்டாகி விட்டது. யுரேனியம், ரேடியம் போன்ற தனிமங்கள் கதிரியக்கத்தின் மூலம் ஆற்றலை வெளியிடுவதை ஐன்ஸ்டீனின் சமன்பாட்டின் மூலம் விளக்க முடிந்தது.
லிசா மைட்னரும் பிரிட்சும் தங்களது கண்டுபிடிப்பான அணுக்கரு பிளப்பை பற்றிய ஆய்வுக்கட்டுரையை வெளியிடுகிறார்கள். ஆனால், ஜெர்மனியில் ஓட்டோ ஹான் தனது ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்கும் போது நாஜிக்களின் நெருக்குதலால் அதில் யூதரான லிசாவின் பெயரை குறிப்பிடாமல் விட்டுவிடுகிறார். அணுக்கரு பிளப்பிற்கு 1944-ம் ஆண்டில் ஹானுக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரும் கூட ஹான், லிசா மெய்ட்னரின் பங்களிப்பை அங்கீகரிக்காமல் தாமே அணுப்பிளவை கண்டறிந்ததாக கூறுகிறார். ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் காரணங்கள் கூட ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை கண்டு கொள்ளாமல் செய்து விடும்.
1942-ம் ஆண்டில் அமெரிக்காவில் “மான்ஹட்டன் திட்டம்” என்ற பெயரில் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவந்தன. அத்திட்டத்தில் பணிபுரிய லிசாவுக்கு வந்த அழைப்பை அவர் நிராகரித்து விடுகிறார். அவருடைய மருமகன் ராபர்ட் பிரிட்ஸ் நாஜி ஜெர்மனை தோற்கடிக்க அணு ஆயுதம் தேவை என நம்பி அத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உணர்ச்சி சார்ந்த உத்வேகத்தை மக்கள் போராட்டங்களும், ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வுமே வழங்குகின்றன.
அமெரிக்காவின் மான்ஹட்டன் திட்டத்தில் செய்யப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று 1945 ஆகஸ்டு 6ம் நாள் ஜப்பானின் ஹிரோசிமாவிலும் மற்றொன்று மூன்று நாட்களுக்கு பின் நாகசாகியிலும் போடப்பட்டு, மனித குலம் இதுவரை கண்டிராத பேரழிவு நிகழ்த்திக் காட்டப்பட்டது. நூற்றாண்டு கால விஞ்ஞானிகளின் உழைப்பும், தியாகமும் முதலாளிகளின் கையில் பேரழிவுக்கு பயன்படுத்தப்படுவது அதற்கு முன்பும், பின்னரும் தொடர்ந்து நடக்கின்றன.
ஐன்ஸ்டீனின் E=mc2 என்ற சமன்பாடு நமது சூரியனின் இயக்கத்தைப் பற்றியும், அதனுள் நடக்கும் அணுக்கரு பிணைப்பில் நிறை உருமாறி வெளிப்படும் பேரளவு ஆற்றலை விளக்க உதவுகிறது. நட்சத்திரங்களின் தோற்றத்தையும், வாழ்வையும், மறைவையும், பிரபஞ்சம் தோன்றியதையும், இயங்குவதையும் புரிந்து கொள்ள உதவுகிறது.
முதலில் பெரும் அழுத்தத்தில் இருந்த பேரளவு ஆற்றல், பெருவெடிப்பாக வெடித்து சிதறியது. அப்போது ஆற்றல், நிறையாக – பருப்பொருளாக மாறி இப்போது நாம் காணும் பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்கிறது.
இன்று அறிவியலாளர்கள், அணுத்துகள் முடுக்கிகளில் அணுத்துகள்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பெருவெடிப்பை ஆய்வக அளவில் செய்து பார்க்கின்றனர். சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட அத்தகைய ஆய்வில் தான் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசான் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு உலகத்தைப் பற்றிய மனிதகுலத்தின் பார்வையையே ஐன்ஸ்டீனுடைய சமன்பாடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.
அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு சில நேரங்களில் மகிழ்ச்சியானதாகவும், சில நேரங்களில் வலிமிகுந்ததாகவும் இருக்கிறது. ஆனால் இயற்கையை புரிந்து கொள்ள முனையும் மனிதனின் பேரார்வம் எப்போதும் முடிவுறுவதில்லை.
இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதன் எண்ணிலடங்கா இயக்கங்களையும், விசித்திரங்களையும் கடவுள்கள் தோற்றுவித்திருப்பதாக மதங்கள் இன்றைக்கும் ஊளையிடுகின்றன. கீதையிலும், குர்ரானிலும், பைபிளிலும் அனைத்து அறிவியல்களும் விளக்கங்களும் பொதிந்திருப்பதாக மதத்தை வைத்து பிழைக்கும் மதகுரு முட்டாள்கள் தொடர்ந்து ஓதி வருகின்றனர். பிழைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கும் அப்பாவிகள் அதை நம்பவும் செய்கின்றனர்.
ஆனால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறும் கடமையை மனித குலம் தனது கூட்டுழைப்பு சமூகப் போராட்டத்தால் சாதித்து அதை அறிவியலாளர்கள் மூலம் நிரூபித்திருக்கிறது.
இன்றைக்கு முதலாளித்துவம் அறிவியலை பிடித்து வைத்துக் கொண்டு அறிவுக்கு எதிராகவும், சந்தைக்கு ஆதரவாகவும் நடந்து வருவதால் நாம் மதங்களை முறியடித்து அறிவியலை அதன் பீடத்தில் வைத்து மரியாதை செய்ய முடியாமல் இருக்கிறது.
ஆனால் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் மதங்களையும், கடவுள் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு எல்லாம் மகாபாரதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த அழகான உலகத்தை நாம் அறிந்திருக்கவும் முடியாது. இத்தனை தொழில்நுட்ப புரட்சிகளும் சாத்தியமாகியிருக்காது.