privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மீத்தேன்: காவிரி டெல்டாவைப் பாதுகாக்க தேர்தலை புறக்கணிப்போம் !

மீத்தேன்: காவிரி டெல்டாவைப் பாதுகாக்க தேர்தலை புறக்கணிப்போம் !

-

  • மீத்தேன் எடுப்பு – நிலக்கரி கொள்ளையை அனுமதிக்கும் மறுகாலனியாக்கத்துக்கான போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம் !
  • நாட்டையும், காவிரி டெல்டாவையும் பாதுகாக்கும் – உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம் !

என்ற முழக்கத்துடன் சீர்காழி வட்டாரத்தில் மீத்தேன் எடுக்க வெறித்தனமாக குதித்துள்ள கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற அமெரிக்க பன்னாட்டு கம்பெனிக்கு எதிராக, “தேர்தலை புறக்கணிப்பதே தீர்வு” என பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தின் காவிரி பாசன விவசாய நிலங்களை குறி வைத்து ஏவப்பட்டுள்ள மீத்தேன் வாயு எடுப்பு – நிலக்கரி கொள்ளை திட்டத்தின் மூலம், 50 லட்சம் மக்களை சொந்த நாட்டில் அகதிகளாக, நாடோடிகளாக மற்றும் படுபாதக செயலில் இறங்கியுள்ளன மத்திய, மாநில அரசுகள்.

ஈராக்கிலும், ஈழத்திலும் லட்சக்கணக்கான மக்களின் மீது கொத்து குண்டுகளை வீசியெறிந்து கொன்றொழித்ததை போல காவிரி டெல்டா பாசன பகுதி மக்களின் மீது வீசி எறியப்பட்டுள்ள அணுகுண்டுதான் இந்த மீத்தேன் வாயு எடுப்புத்திட்டம்

முப்போகம் விளையும் காவிரி பாசன மருத நிலத்தையும், விவசாயத்தையும் முன்னேற்றும் வகையில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் எந்த திட்டமும் மத்திய மாநில அரசுகளால் முன்வைக்கப்பட்டது கிடையாது. ஆனால் 40 ஆண்டுகளாக, சதித்தனமாக காவிரி நதிநீர் சிக்கலை தீர்த்து வைக்காமல், நமது நிலத்தை காயவைத்து, தரிசாக்கிய அயோக்கியர்கள் வளர்ச்சி என்ற பெயரில் 1,66,710 ஏக்கர் நிலத்தை கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற பன்னாட்டு பகாசுர முதலாளிக்கு வாரிக் கொடுத்துள்ளார்கள்.

புதுவை மாநிலத்தின் பாகூர் தொடங்கி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வரையில் 1,64,819 ஏக்கர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்துக் கிடக்கும் நிலக்கரி வளத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் தாரை வார்த்துள்ளன மத்திய மாநில அரசுகள். பூமிக்கடியில் முதல் அடுக்கில் உள்ள மீத்தேன் வாயுவை எடுத்து எரிபொருளாக மாற்றுவதன் மூலம் நாகை மாவட்டத்தில் தற்போது அமைந்துள்ள ஒரு தனியார் அனல்மின் நிலையத்தையும் , அமைய உள்ள 12 தனியார் அனல்மின் நிலையங்களையும் இயக்கி, மின் உற்பத்தி செய்யப் போகிறார்களாம். இது ஒரு புறமிருக்க மீத்தேன் எரிவாயுவை, சமையல் எரிவாயுவிற்கு பதிலாக மாற்றி விற்பனை செய்ய போகிறார்களாம். 35 ஆண்டுகாலம் 6.25 லட்சம் கோடி மதிப்புள்ள மீத்தேனை உறிஞ்சிய பிறகு 65 ஆண்டுகள் நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப் போகிறார்களாம்.

நெல், கரும்பு, வாழை, எள், உளுந்து, பாசிப்பயிறு, கடலை, என்று உணவுப் பயிர்களை விளைவித்து ”சோழவளநாடு சோறுடைத்து” என்று தமிழகத்திற்கே உணவு கொடுத்த விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு, 50 லட்சம் விவசாயிகளை வெளியேற்றி விட்டு, பாலைவனத்தின் மீது நின்று செய்யும் மின் உற்பத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சகணக்கான கோடிகளை கொட்டப் போகிறது.

ஆனால் இத்திட்டத்திற்காக செழிப்பான நிலத்தில் 2000 இடங்களில் 6000 மீட்டர் ஆழம் கொண்ட துளைகளை போடபோகிறார்கள். இதற்காக நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்தி பாறைகளை துளைக்கப்போகிறார்கள். 600 வகையான ரசாயன கலவைகளை பூமிக்கடியில் செலுத்துவதால் மண்ணின் தன்மையும் மாறப்போகிறது. 1500 மீட்டருக்கு மேல் துளைப்பதால் ஏற்படும் அதிர்வுகள் புவியியல் அமைப்பையே மாற்றி, பல்லுயிர் காப்பு தன்மையை ஒழித்து இயற்கையை, அழிக்கப் போகிறார்கள்.

இயற்கை வளங்களை பன்னாட்டு முதலாளிக்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்கின்ற ஓட்டுக் கட்சிகள், அரசுத் துறைகள், அதிகாரவர்க்கத்தினர் அனைத்தையும் அம்பலப்படுத்தி, “மீத்தேன் திட்டத்தை முறியடிக்க தேர்தலை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து சீர்காழி வட்டார பகுதிகளில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி பாதிப்புக்குள்ளான திருநகரி, பழையபாளையம், கொடகாரமூலை, தாண்டவன்குளம், மாதானம், வடபாதி, தென்பாதி, தோப்புவட்டாரம் போன்ற கிராமங்களிலும் மற்றும் சீர்காழி நகரம் முழுவதிலும் உள்ள கடைகளில் வர்த்தகர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் இன்னும் பல கிராமங்களிள் தொடர்ந்து செய்து வருகிறோம்.

இந்த பிரச்சாரத்திற்காக வந்த கல்லூரி மாணவர்கள் “தங்கள் பாட திட்டத்தில் இருப்பதை போல காவிரி நதி பாயும் பூமி என்றால் செழிப்பாக இருக்கும் என்று வந்தோம், ஆனால் வறண்ட நிலத்தை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது” என்றனர்.

தற்போது மீத்தேன் திட்டத்திற்க்காக பழையபாளையம் என்ற கடலோர கிராமத்தில் துளையிடும் வேலை தொடங்கியுள்ளனர். இதனால் எற்படப்போகும் பாதிப்புகளை பற்றி அதை சுற்றியுள்ள மேற்சொன்ன கிராமங்கள் முழுவதும் வீடுவிடாக சென்று மீத்தேன் எடுப்பதால் மக்களின் வாழ்வாதாரம், விவசாய விளைநிலங்கள் பாதிக்கபடுவதற்கான காரணத்தையும் இதற்கு துணைபோகும் ஓட்டுகட்சிகள், அதிகாரிகளையும் அம்பலப்படுத்தி போலி ஜனநாயக தேர்தலுக்கு ஓட்டு போடாதிங்க என்று துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அப்போது தெருக்களில் மைய பகுதியில் கூடிய மக்களிடம் மெகா போன் மூலம் அம்பலப்படுத்தி பேசினர். இந்த பிரச்சாரத்தின் மூலம் ஆவேசமடைந்த மக்கள் “யாருக்கும் ஓட்டுபோடமாட்டோம், யாராவது ஓட்டுகேட்க வந்தா, கையில முறத்தையும், வெளக்கமாரும் எடுத்து வச்சிகிறோம்” என்று சொன்னார்கள். வயதான பாட்டி “வாங்க ஓட்டு கேட்கவா வந்து இருக்குறிங்க” என்று கோவமாக தோழர்களை பார்த்து கேட்டார். அதற்க்கு தோழர்கள் “இல்ல பாட்டியம்மா ஓட்டு போடக் கூடாது” என்று சொல்ல வந்திருக்கிறோம் என்று சொன்னவுடன் “வாங்க தங்கம்” என்று கண்னத்தை கிள்ளி “எல்லாருக்கும் உரைக்கும்படி சொல்லுங்க சாமி” என்று கூறினார்.

இந்த கிராமத்தில் விசித்திரமாக சி.பி.ஐ தலைவர் இருக்கும் தெருவில் இந்த திட்டம் மண்ணெண்ணெய் எடுக்க வந்துள்ளது என்று மக்களிடையே திசைதிருப்பப் பட்டிருக்கிறது. பிறகு தோழர்கள் கிராமம் முழுவதும் இது மீத்தேன் எடுப்பு திட்டம் என்று உண்மையை உடைத்தோம்.

அதேபோல் நகரத்தில் பிரச்சாரம் செய்யும் போது மக்கள் அதிக அளவில் நோட்டாவிற்கு தான் எங்கள் ஓட்டு என்று கூறினார்கள் ஆனால் நோட்டாவில் ஓட்டுபோட்டால் அது இந்த தேர்தலை ஏற்று கொள்வதாக அர்த்தமாகும் என்று விளக்கியவுடன் அப்படின்னா ஓட்டே போடகூடாதுன்னு சொல்லுறிங்களா? என்று கேள்வி கேட்டார்கள். பலரும் நமது பிரச்சாரத்திற்க்கு பிறகு “இந்த தேர்தல் என்பது மக்களுக்கு எதிரானது என்பதை புரிந்து கொண்டோம்” என்று கூறினார்கள்.

மீத்தேன் எடுப்பு – நிலக்கரி கொள்ளை திட்டத்தை எதிர்த்து மீண்டும் ஒரு விடுதலைப் போரை நடத்த வேண்டிய கால கட்டத்தில் கார்பரேட் முதலாளிகளுக்கும், கம்பெனிகளுக்கும் அடிபணிந்து சேவை செய்யும் எடுபிடிகளை தேர்வு செய்யும் இந்த கேடு கேட்ட தேர்தல் குறுக்கில் வந்து சதிராடுகிறது என்பதே உண்மை. இந்த உண்மையை உழைக்கும் மக்களிடத்தில் புரிய வைத்து விட்டால் சமூக மாற்றம் வெகு தொலைவில் இல்லை.

நாகை மாவட்டம் சீர்காழியில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் விடுதலை முன்னணி பிரச்சாரம்

நாகை மாவட்ட கலெக்டர் முன்பு மீத்தேன் திட்டத்தை எதிர்க்கும் திருநகரி கிராம மக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி.
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.
பேச: 98434 80587