Friday, April 3, 2020
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் தேர்தலை புறக்கணிப்போம் - கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்

தேர்தலை புறக்கணிப்போம் – கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்

-

தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு ! கூடங்குளம் அரங்க கூட்டப் பதிவுகள் !

னித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் 14-4-2014 அன்று திங்கள் கிழமை மாலை 3-00 மணிக்கு கூடங்குளம் அற்புதம் சாமுவேல் திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டமும் – கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கூடடத்திற்கு முதல் நாள் மாலையிலும், மறுநாள் காலையிலும் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் கூடங்குளம் பகுதி மக்களுடன் இணைந்து தெருக்களில், கலைக் குழு தோழர்களின் இசை முழக்கத்தோடு துண்டறிக்கை விநியோகம் செய்து கூட்டத்திற்கு அழைத்தனர். அங்கு வந்த காவல்துறை, “இது தேர்தல் நேரம் பறையடிக்க கூடாது” என்றது.

“துண்டறிக்கை விநியோகம் செய்கிறோம், வீட்டுக்குள் இருக்கும் மக்களை வெளியே அழைக்க பறையடிக்கிறோம்” என்று பதிலளித்தோம். உயர்நீதிமன்ற உத்தரவு இருந்ததால் கையைப் பிசைந்த காவல்துறை, “பிரச்சனை ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிச் சென்றனர்.

அதன்பின் கூட்டம் துவங்கும் முன் அரங்கின் அருகில் வேன், ஜீப்பில் வந்த காவல்துறை கூட்டத்திற்கு வரும் மக்களை மிரட்டும் வகையில் வீடியோ எடுத்தது. வழக்கறிஞர்கள் சென்றவுடன் வீடியோவை மறைத்துக் கொண்டது. கூடங்குளம் காவல் ஆய்வாளரோ ஜீப்பில் ஊர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து மக்களை அச்சுறுத்தினார். இத்தனை அச்சுறுத்தலையும் மீறி மக்கள் கொஞ்சம்,கொஞ்சமாக கூட்ட அரங்கிற்கு வரத் தொடங்கினர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்தோடு கூட்டத்திற்க்கு வந்தனர். இடிந்தகரை ஊர்கமிட்டி சார்பில் கவுன்சிலர் புனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக் குழுவின் பாடலோடு அரங்கக் கூட்டம் தொடங்கியது. தலைமை உரையாற்றிய, மனித உரிமைப் பாதுகாப்பு மைய மதுரை மாவட்ட துணைச் செயலாளரும், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன்

“காவல்துறை அச்சுறுத்தல், நெருக்கடிகளை மீறி இக்கூட்டத்திற்கு கூடங்குளம் மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். நாடு முழுவதும் தேர்தலில் உள்ளபோது 3&4-வது அணு உலைகளுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்களோ, ஒப்பந்தங்களோ மேற்கொள்ளக் கூடாது என்ற நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வாங்கி இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதாரண பொதுக்கூட்ட அனுமதிக்கே சாமியாடும் தேர்தல் ஆணையம் இம்மாபெரும் அநீதியை, மத்திய அரசோடு சேர்ந்து இழைத்துள்ளது. இதை தேர்தலில் ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சியும் பேசவில்லை. இது மக்களுக்கு இழைக்கப் பட்ட மாபெரும் துரோகம். இன்றுவரை இயங்க முடியாமல் உள்ள கூடங்குளம் அணு உலை, ஒரு தோற்றுப்போன திட்டம். தற்போது டீசல் மூலமே அணு உலை இயக்கப்படுகிறது.

அரங்கில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி தேவை இல்லை என்பது உலகறிந்த சட்டநிலை. ஆனால் அரசியல் சட்டத்தையே காவல்துறை கூடங்குளத்தில் மதிக்கவில்லை. துண்டறிக்கை கூட விநியோகிக்கக் கூடாது என்கிறார்கள். இது காசுமீரில் கூட இல்லாத நிலை. கூடங்குளம் போலீசு ஆட்சியின்கீழ் உள்ளது. இதை மாற்ற வேண்டும்.

மார்ச் -19, செப் -20 போராட்டத்தின் போது கடல்வழியாக வந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் போராட்டத்தில் பங்கேற்றோம்; இடிந்தகரை மக்கள் மீது போலீசு தாக்குதல் நடத்திய போது போலீசை தாக்கிய வீரமிக்கமக்கள் கூடங்குளம் மக்கள். அன்று ஜெயலலிதா உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என கூறிவிட்டு, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மக்கள் மீது தடியடி நடத்தினார்.

காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டு கட்சிகளுமே அணுஉலைக்கு ஆதரவாகவே உள்ளது. உச்சநீதி மன்றம் ஊழல் நீதிபதிகளின் கைகளில் உள்ளன. அந்த உச்சநீதிமன்றமே பொய் வழக்குகளை வாபஸ் பெறுமாறு சொல்லியும் கேட்க மறுக்கிறது போலீஸ். தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஜெ, ஸ்டாலின், விஜயகாந்த், யாருமே அணுஉலை பற்றி வாயே திறக்கவில்லை. கேஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியினர் அணு உலை பற்றி நிலைப்பாடே எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

அணு உலை விசம் என்பது தெரியும். விசம் குடித்தால் சாவு என்பதும் தெரியும். ஆனால் விசம் குடிப்பதா?இல்லையா? என்ற முடிவெடுக்கவில்லை என்பது அயோக்கியத்தனம். ஓட்டுப் பொறுக்கும் யாரையும் நம்பி நாம் இருக்க முடியாது. இந்தியாவில் இன்றும் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் எல்லாம் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளது. முல்லை பெரியாறு போராட்டத்தில் 1 லட்சம் மக்கள் கேரள எல்லைக்குச் சென்றார்கள். போலீசால் தடுக்க முடியவில்லை. கேரள அரசியல்வாதிகள் மிரண்டு போனார்கள். தமிழக ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளை நம்பாத போராட்டம் அது. அணையை உடைக்கும் பேச்சையும் போராட்டத்திற்குப் பின் நிறுத்தி விட்டனர். அது போல நாம் இந்தப் போராட்டத்தை நடத்த முடியும். இழப்பில்லாமல் எதுவும் பெற முடியாது. நந்திகிராம் மக்கள் போராட்டம், நியமகிரி மக்கள் போராட்டம் நமக்கு முன்னுதாரணம். மீண்டும் ஒரு விடுதலைப் போரை கட்டியெழுப்புவோம்.

ஒவ்வொரு ஊரிலும் 100 இளைஞர்கள் இப்பகுதியிலிருந்து வந்தால் அரசை எதிர்த்துப்  போராடுவது நடக்காத ஒன்றல்ல. எங்கள் மீதும் கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. என்ன செய்தது போலீஸ். காரணம், நாங்கள் பயப்பட மாட்டோம் என்பதே. சிறைக்கு சென்றாலும் திரும்ப வந்து போராடுவோம் என்ற காரணத்தால் எங்களைக் கைது செய்யவில்லை. போலீசுக்கு அஞ்ச வேண்டாம். நாங்கள் வழக்கு நடத்துவோம். உங்கள் பிரச்சனையை தேர்தலில் யாரும் பேசவில்லை. எனவே ஓட்டு போட்டுப் பயனில்லை. இது மக்களை நம்பிய போராட்டம். தேர்தல் தீர்வைத் தராது. தேர்தல் நாளை கருப்பு தினமாக அறிவிப்போம். ஓரு நீண்ட காலப் போராட்டத்தில் ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து நிச்சயமாக ஒருநாள் அணு உலைகளை மூடுவோம்.”

கூடங்குளம் வெங்கடாசலபதி

நம்மூர் போராட்டத்திற்கு வெளியூர்காரர்கள் நமக்கு வரவேற்பளிக்கிறார்கள். இது நமக்கு வெற்றியை தேடித்தரும். நாம் நடத்தும் போராட்டம் மிகப்பெரிய போராட்டம். எனவே நாம் மட்டும் போராடி வெற்றி பெற முடியாது. நாம் பயந்துவிடும் மக்கள் அல்ல. இருந்தாலும் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் அணு உலை வேண்டும் என்கிறார்கள். வல்லரசு நாடாக நம் நாடு மாற வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். நல்லரசுதான் வேண்டும். தேர்தல் கட்சிகள் அனைத்தும் மக்கள் விரோதமானவை. அவர்கள் பங்கேற்கும் தேர்தலை புறக்கணிப்போம். கடலூர் சிறைக்கு செல்லும் போது ம.க.இ.க., பு.மா.இ.மு தோழர்கள் இரவு 2 ம்ணிக்கு நம்மை வரவேற்றனர். அவர்கள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் நமக்காக எங்கு போராடக் கூடாது என்று போலீஸ் தடை விதித்ததோ அங்கேயே போராடினார்கள். நமக்கு ஆபத்து என்றால் தோழர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எனவே போராடுவோம், வெற்றி நிச்சயம்.

உவரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.அந்தோணி

பிறக்கும் போதும், இறக்கும் போதும் போராடுகிறோம். மக்கள் வாழும் இடத்தில் நாசகார அணு உலையை நிறுவி இக்கால, எதிர்கால மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் முயற்சிக்கு எதிராகப் போராட வேண்டும். பொதுத்தேர்தல் நடத்தும் அரசே, அணுஉலை வேண்டுமா? வேண்டாமா? என்று ஓட்டுப்பெட்டி வைத்துப் பாருங்கள். மக்களிடம் கேட்டு முடிவெடுங்கள். அரசாங்கம் அப்படி நடக்குமா? உறுதியாக நடக்காது. இது தான் ஜனநாயகம். நாம் முன்பு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல இடிந்தகரையில் மட்டும் போராட்டம் செய்யாமல் மற்ற பகுதிகளிலும் போராட்டம் நடத்த வேண்டும். இதை ஒவ்வொரு முறையும் இடிந்தகரை சமுதாயக் கூட்டத்தில் நான் சொல்லியுள்ளேன். போராட்டத்தில் முன்னணியாக இருந்த சிலர் பாதை மாறி சென்று விட்டார்கள்.

ஆனாலும் இது மக்கள் போராட்டம். ஏன் அவசரமாக 3-வது, 4-வது அணுஉலைக்கு கையெழுத்து போடப்பட்டுள்ளது? காங்கிரஸ் ஆட்சி மாறும் முன்னர் லஞ்சம் பெற வேண்டும் என்ற காரணத்தாலா? நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

இடிந்தகரை கவுன்சிலர் புனிதா

1,2 அணு உலைகள் தவிர வேறு அணுஉலைகளை திறக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று திருநெல்வேலி கலெக்டரிடம் பேசிய போது உறுதி கூறினார். ஆனால் இப்போது 3, 4-வது அணு உலைகளைத் திறந்தது எப்படி? போஸ்டர் ஒட்டாதே அது பண்ணாதே, இது பண்ணாதே என்று கூறும் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு முன்பு அணு உலை ஒப்பந்தம் போட அனுமதித்தது எப்படி? இடிந்தகரை மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய போது உடனிருந்தவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம். கலைக்குழு தோழர்களுடன் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். அணு உலையில் இருக்கும் யுரேனியம் பல பெண்களின் கர்ப்பத்தைக் கலைக்கிறது. மிருகங்களின் முடி உதிர்கிறது. கொஞ்சம் பேர் பேசி எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசு கேட்காது. அனைத்து மக்களையும் இணைத்துப் போராடி அணு உலைகளை மூடுவோம்.

நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்புத் தலைவர்- ஜோசப்

கண்ணெதிரே ஒரு கனவை கலைத்து போட்டது காந்தி தேசம். கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்க்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் போராடி வருகிறோம். வெளியூர்களுக்குச் சென்று போராட வேண்டும் என்று கேட்ட போது அதனைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இடிந்தகரை முற்றுகை போராட்டத்தின் போது தடியடி நடத்தப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் இருந்து சட்ட ரீதியாகவும், களத்தில் போராடியும் உதவினார்கள்.

தேர்தல் தீர்வல்ல. போராட்டமே அணு உலையை மூடும் என்பது அடிப்படைக் கொள்கை. மக்கள் நலனுக்காக போராடிய மூன்று பேர் இடிந்தகரையில் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டிருந்தார்கள் அவர்களை மறக்க முடியாது. அவர்களுக்கு நன்றி. எந்த அரசியல் கட்சியும் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை உண்மையாக ஆதரிக்கவில்லை. எனவே தேர்தலைப் புறக்கணிப்போம் என்று கூறினேன். அவர்கள் ஏற்கவில்லை அவர்கள் எலெக்சனில் நிற்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.

இந்த போராட்டத் தலைவர்களைப் போன்றவர்கள்தான் மனித உரிமைப்பாதுகாப்பு மையத் தோழர்களும், ம.க.இ.க தோழர்களும். சாதி மறுப்பு திருமணங்கள் , வரதட்சணை பெறாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் இத்தோழர்கள். பல லட்சம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் உழைக்கும் மக்கள் போராடும் இடங்களிளெல்லாம் சென்று குரல் கொடுப்பவர்கள் ம.உ.பா.மையத் தோழர்கள். தொடர்ந்து அவர்களோடு சென்று நம்பிக்கையோடு போராடுவோம். போராட்டங்கள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும். 150 ஆண்டுகள் போராடித்தான் சுதந்திரம் பெற்றுள்ளோம்.

தொலைக்காட்சியிலும், ஊடகங்களிலும் பார்க்காத அரசியலை சுட்டிக்காட்டியவர்கள் ம.உ.பா.மையத் தோழர்கள். ஜனநாயகம் பொய் என்று உணர வேண்டும். தேர்தல் அதிகாரத்தில் அமர்வதற்கும், சுரண்டுவதற்கும் மட்டுமே தவிர, ஜனநாயகம் என்று கூறுவது ஏமாற்று. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஜனநாயகம். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியப் பிரதமரை உருவாக்குகிறது.இந்நாடு உழைக்கும் மக்களுக்கானதல்ல. இன்றோ நாளையோ தங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்று தோழர்கள் போராடவில்லை. 100,500 ஆண்டுகளுக்குப் பின் வரும் சமுதாயத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு தோளோடு, தோள் கொடுத்துப் போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு

மாற்றுக்கருத்தைப் பேச அனுமதிக்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனை மறுப்பது காவல்துறை, கோர்ட், அதிகாரிகள். இது ஜனநாயகமா? இந்நாட்டில் அதிகாரிகளே உண்மையான அதிகாரம் கொண்டவர்கள்.இவர்களை ஒருபோதும் மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. 3 எம்.பி சீட்டுக்காக இப்பகுதி மக்கள் போராடினார்களா? ம.தி.மு.க. உள்ளிட்ட மற்ற சில கட்சிகள் அணு உலையை எதிர்ப்பதாகச் சொல்லியுள்ளார்கள். ஆம் ஆத்மி அணு உலை தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லாத நிலையில் அவர்களை ஆதரிக்கலாமா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு எளிமையானவர், நேர்மையானவர், மக்களுக்காக சிறை சென்றவர். அவரின் தியாகம் தா.பாண்டியன் பொறுக்கித் தின்னத்தான் பயன்படுகிறது. அதேபோல் உதயகுமாரின் தியாகம் ஆம் ஆத்மி பொறுக்கித் தின்னவா?

மன்மோகன் சிங் சொல்லும் வளர்ச்சி யாருக்கானது? தேர்தலில் போட்டியிட்டு நமக்கு என்ன கிடைக்கும்? ஏதாவது உரிமை கிடைக்குமா? வாக்களிப்பதைத்தவிர நமக்கு எந்த உரிமையும் இல்லையென்றால் அது எப்படி நாடாகும்? மக்களை நுகர்பொருளாகக் கருதும் அரசுதான்,கட்சிகள்தான் இங்குள்ளது. நேற்று ஒன்று, இன்று ஒன்று என்று மாற்றி பொய் பேசும் நபர்களை நாம் மதிப்பதில்லை. அதை விட மோசமாக பேசும் இந்த ஓட்டுக்கட்சிகளுக்கு ஏன் நாம் ஓட்டுப் போட வேண்டும்? அணு உலை ஆபத்து என்பது சிறுவனுக்கு கூடத் தெரியும். அணு உலையின் பின்னணி அரசியல் யாருக்குத் தெரியும்? மயிர் பிளக்கும் விவாதம் அணு உலைக்குத் தேவையில்லை. மக்கள் விரும்பவில்லை, மக்கள் உயிரோடு விளையாடக் கூடாது. எனவே அணு உலை வேண்டாம். ஓட்டுக் கட்சிகள் ஏன் இக்கோரிக்கைக்குப் போராடவில்லை?. அஜ்மல் கசாப் மீது நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக போடப்பட்ட தூக்குத் தண்டனை வழங்கக்கூடிய வழக்கு, கூட்டப்புளி சிறுவன் மீதும், இடிந்தகரைப் பெண்கள் மீதும், 67 வயது முதியவர் மீதும் போடப்பட்டது ஏன்? முதல் அணு உலை தோல்வியடைந்து மூடப்பட்டு விட்டது. பாதுகாப்பானது என பிதற்றிய அப்துல்கலாம் இன்று ஏன் பேச வில்லை?

தேர்தலில் பங்கேற்ற பின்னர்தான் சி.பி.எம்., சி.பி.ஐ., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் சீரழிந்தது. மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. துரோகம் செய்தார்கள். ஆம் ஆத்மியுடன் சேர்ந்து அணு உலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு போவதாகச் சொல்கிறார்கள். செப்டம்பர் 10 முற்றுகையின்போது போலீசிடம் உதயகுமார் சரணடையக் கூடாது, நாம் ஒரு குற்றமும் இழைக்கவில்லை என்று மக்களிடம் நாங்கள் பேசினோம். அப்போது உதயகுமார் நான் வெளிநாட்டிடம் பணம் வாங்கவில்லை என்று மாதா கோவிலில் சத்தியம் செய்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

உணர்ச்சிவயப்பட்ட மக்கள் உதயகுமாரை சரணடைய விடாமல் தங்கள் பாதுகாப்பில் கொண்டு சென்றார்கள். வெளிநாட்டில் பணம் வாங்குவது குற்றம், சொந்த நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதால்தான் உதயகுமார் கதறி அழுதார். ஆனால் தற்போது உதயகுமார் சேர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமெரிக்க போர்டு பவுண்டேசனிடம் 4 லட்சம் அமெரிக்க டாலர் பணம் வாங்கியுள்ளார்.

இவ்வாறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதன் நோக்கம், உண்மையான மக்கள் போராட்டத்தின் முனைகளை மழுங்கச் செய்வது தான். அணு உலை எதிர்ப்பு போன்ற பன்னாட்டு நிறுவன, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் மக்களிடையே புகுந்து தீவிரமாகப் போராடுவது போல் நடித்து, போராட்டத்தின் திசையை மாற்றி,போராட்டத்தை வலுவிழக்கச் செய்து, மக்களை விரக்தி அடையச் செய்து, போராட்டத்தைக் கைவிடச் செய்வதே வெளிநாடுகளில் பணம் வாங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணி. இந்தியா முழுவதும் 2 லட்சம் தொண்டு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. அதில் ஒன்றுதான் கெஜ்ரிவாலின் தொண்டு நிறுவனம். ஆம் ஆத்மியில் இணைந்துள்ள ஞானி சொல்கிறார், முன்புதான் கெஜ்ரிவால் பணம் வாங்கினார். இப்போது வாங்கவில்லை என்று. ஆனால் 2014–ம் ஆண்டுக்குப் பணம் கேட்டு கேஜ்ரிவால் விண்ணப்பித்துள்ளார் என்று சொல்கிறார் போர்டு பவுண்டேசனின் இந்தியப் பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக்.

கேஜ்ரிவால் கபீர், பி.சி.ஆர்.எப், பரிவர்த்தன் என மூன்று தொண்டு நிறுவனங்கள் வைத்து நடத்துகிறார். இது இல்லாமல் ஊழலுக்கு எதிராக இந்தியா என்று வைத்திருப்பது தனி. மேலும் இன்று ஆம் ஆத்மியில் பாராளுமன்ற வேட்பாளர்களாக இருப்பவர்களில் பலர் தொண்டு நிறுவனங்களை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். மீரா சன்யால் – பிரதான், மல்லிகா சாராபாய்-தர்பனா, யோகேந்திரயாதவ்-ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். என்ற நிறுவனங்கள் வைத்து பணம் வாங்குபவர்கள்.

அட்மிரல் ராமதாஸ் கூடங்குளம் போராட்டத்திற்கு வந்தவர், மகசேசே விருது பெற்றவர், இவரது மகள் கவிதா போர்டு பவுண்டேசன் தலைமை நிர்வாக அதிகாரி. இந்தியா , இலங்கை,நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பணம் ஒதுக்கீடு செய்பவர். இது போல் மகசேசே விருது வழங்கும் ராக்பெல்லர் பவுண்டேசன் கமிட்டி உறுப்பினர்களில் கவிதாவும் ஒருவர். இவர் கணவர் கல்பீர் அகமது தெற்காசியாவில் ரசியா, சீனா நாட்டு நிறுவனங்கள் அணு உலை அமைக்க விடாமல் அமெரிக்க சார்பிற்காக செயல்படுபவர். அரவிந்த கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்.

ஆம் ஆத்மியின் மனீஷ் சிசோதியா, ஜீ.டி.வி. யாதவ் ஆகியோர் சி.என்.என். போன்ற கார்ப்பரேட்டில் பணியாற்றியவர்கள். இவ்வாறு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புதான் ஆம் ஆத்மி கட்சி. தமிழகத் தலைவர் கிறிஸ்டினா சாமியும், அவரது கணவர் ஆரோக்கிய சாமியும் அரஸ்ட், சுவாதி என்ற தொண்டு நிறவனங்களை நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட ஆம் ஆத்மி எப்படி அணு உலையை மூடும்? தேர்தலில் பங்கேற்று அணு உலையை மூட முடியாது. தனியார்மயத்தை ஆதரிக்கின்ற ஆம் ஆத்மி கட்சிதான் ஊழலுக்கு மாற்று என்பதைப் போல மக்களிடம் பொய்க் கருத்து உருவாக்கப்படுகிறது.

விட்டெறிந்த காசுக்கு மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்று நினைக்கும் ஓட்டுச் சீட்டுக் கட்சிகளுக்கு நாம் பாடம் புகட்டுவோம். மூன்று மாவட்டங்களிலும் மக்கள் வாக்களிக்கவில்லை என தேர்தல் அதிகாரிகள் வாக்கு பெட்டியை காலியாக திருப்பி எடுத்து சென்றால் இந்திய செய்தியாக அது மாறி விடும். அந்த நிலையை உருவாக்கி இருந்தால் இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகும் 3,4, அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டு அறிவிக்கும் தைரியம் மத்திய அரசுக்கு வராது. இது போராடும் பிற பகுதி மக்களுக்கு முன்னுதாரணமாக அமையும்.

150 ஆண்டுகள் சுதந்திர போராட்டத்தில் உடனே வெற்றி பெறுவோம் என நினைத்து கட்டபொம்மன் ஆங்கிலேயனை எதிர்க்கவில்லை, மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கவில்லை, திப்பு சுல்தான் சாதாரண வீரனாக போரிட்டு மடியவில்லை. அந்நிய ஆதிக்கம் அநீதியானது அடிமைத்தனமானது. நாட்டுபற்று, மான உணர்வுதான் விடுதலையை சாதித்தது. கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டம் இந்திய முழுவதும் போராடக் கூடிய மக்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. தஞ்சை டெல்டா விவசாயிகளின் மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்புப் போராட்டம், திருவண்ணாமலை ஜிண்டால் எதிர்ப்புப் போராட்டம், சேலம் ஈரோடு கெயில் நிறுவன எதிர்ப்புப் போராட்டம், தாது மணல்- அணு உலைக்கு எதிராக கடலோர தென் மாவட்ட மக்கள் போராட்டம், கிரானைட் கொள்ளைக்கு எதிரான போராட்டம், இதுவல்லாமல் நாடு முழுவதும் நடக்கும் எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் அதிகார பலத்தை கேள்விக்குள்ளாக்கும். ஐந்து மாவட்டத்திற்கு போராட்டத்தை விரிவு படுத்தி மக்களை ஒன்றிணைத்தால் ஐந்து மாவட்ட போலீசார் கூடங்குளத்தில் மட்டும் எப்படி முகாம் இட முடியும்?.

இத்தகைய ஜனநாயகத் தேர்தல் திருவிழா, அரசமைப்பு முறை, பன்னாட்டு முதலாளிகளுக்கானது. வெறும் 650 கோடி முதல் போட்டு 8,000 கோடி லாபம் சம்பாதித்து ரூ 21,000 கோடி வரி மோசடி செய்த பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவை இத்தேர்தல் அரசியல் தண்டிக்குமா? நோக்கியாவை ஓட்டுக்கட்சிகள் எதிர்க்குமா?

அனைத்து ஊழல்களுக்கும் அடிப்படையானவர்கள் முதலாளிகளே. இவர்கள்தான் நாட்டில் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். இவர்களை எந்த ஆட்சியும் தண்டிக்காது. வட்டியில்லா கடன், குறைந்த விலைக்கு நிலம், இலவச குடிநீர், சாலை வசதி, 5 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வரி கிடையாது என பல்வேறு சலுகைகள் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து தொழில் திட்டங்களும் இப்படித்தான் செயல்படுத்தப்படுகிறது. இதைத்தான் நாட்டின் வளர்ச்சி என்கிறார்கள்.

எல்லா மக்களும் தனித்தனியே போராடுகிறார்கள். ஆனால் எதிரி பொதுவானவனே. இவர்களை வீழ்த்த அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்.

மேற்கண்ட உரைகளுக்குப் பின் மக்கள் கலை இலக்கியக்கழக மையக் கலைக்குழுவின் சிறப்பான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் அரசியல், அணு உலைப் போராட்டம், இயற்கை வளங்களை முதலாளிகள் கொள்ளையிடுவது, உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் அவசியம், பகத்சிங் போன்ற ஏகாதிபத்திய – முதலாளித்துவ எதிர்ப்பாளர்களின் பாதையை மக்கள் தேர்ந்தெடுப்பதின் அவசியம் குறித்தான பாடல்கள் பாடப்பெற்றன.

இறுதியில் காவல் துறையின் இரும்புக் கரங்களுக்குள் மாட்டிக் கொண்டிருந்த கூடங்குளம் மக்கள், அதிலிருந்து வெளியேறும் முதற்படியாக இக்கூட்டத்தை உணர்ந்தனர். பல்வேறு நெருக்கடிகள், விரக்தி, பங்குனி உத்திர திருவிழாவிற்கு நிறைய மக்கள் சென்று விட்ட நிலை என்பதையும் தாண்டி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்புடன் நடந்த இக்கூட்டம் அடுத்த கட்டப் போராட்டத்திற்க்கு மக்கள் தயார் என்பதை உணர்த்தும் விதமாக இருந்தது.

தகவல் :

மனித உரிமை பாதுகாப்புமையம்–தமிழ்நாடு
தொடர்புக்கு:
வழக்கறிஞர் சிவராஜ பூபதி
94866 43116
நாகர்கோவில்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. தேர்தல் நேரத்தில் புதிய திட்டங்களோ, ஒப்பந்தங்களோ மேற்கொள்ளக் கூடாது என்ற நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வாங்கி இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதாரண பொதுக்கூட்ட அனுமதிக்கே சாமியாடும் தேர்தல் ஆணையம் இம்மாபெரும் அநீதியை, மத்திய அரசோடு சேர்ந்து இழைத்துள்ளது.—–இதிலிருந்தே ஜனநாயகத் தேர்தலை நடத்தும் தேர்தலை் ஆணையத்தின் யோக்கியத்தை புரிந்து கொள்ளலாம்..தெர்தல் கால சட்டத்தை தேர்தல் ஆணையமே மதிக்காதபோது நாம் ஏன் மதித்து ஓட்ட போட வேண்டும் போலித் தேர்தலை புறக்கணிப்போம்

Comments are closed.