privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்73% வாக்கு பதிவும், போலி ஜனநாயக போதையும்

73% வாக்கு பதிவும், போலி ஜனநாயக போதையும்

-

don't voteட்டுக் கட்சிகளின் பணபலம், ஆள்பலம், தேர்தல் கமிசனின் கட்டாயம் ஓட்டுப்போட வாங்க என்று கையை பிடித்து இழுக்கும் ஊடக, பிரச்சார பலம், என்று தமிழக வாக்காளர்களை இவ்வளவு ஜாக்கி வைத்து தூக்கியும், சென்ற தேர்தல் வாக்கு பதிவிலிருந்து அரை சதவீதத்தை கூட அதிகப்படுத்த முடியவில்லை, இந்த போலி ஜனநாயகத்தால். பதினைந்து லட்சம் புதிய வாக்காளர்களையும் சேர்த்து வழக்கம் போல 73 சதவீதத்தை தாண்டமுடியாத இந்த தேர்தல் நம்பிக்கைக்கு கட்சிகளை விட தேர்தல்கமிசன் செய்த பிரச்சார செலவும் இந்த தேர்தல் அநியாயத்தில் ஒன்று.

மக்கள் பணத்தால் விழிப்புணர்வு ஊட்ட இவர்களின் தண்டச்செலவின் யோக்கியதை, கேப்டன் எந்த பட்டனை அழுத்துவது என்பதை பக்கத்திலிருந்து பிரேமலதா பார்த்துக் கொள்ளும் அளவுக்கு நாறிப்போய் விட்டது! இதுதவிர 90 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் நிரம்பிய மையங்களை ஆராய வேண்டும் என தேர்தல்கமிசனே கூறுமளவுக்கு ‘ஜனநாயகத்தின் விழிப்புணர்வு’ கதி கலங்க வைத்துள்ளது.

இந்த லட்சணத்தில் சில ஊடக, இணையதள கோயிந்துகள் புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை மக்கள் மதிக்கவில்லை, ஏற்கவில்லை, என மதிப்பிட்டு மகிழ்ச்சியிடுவதில் என்ன பெருமை இருக்க முடியும்? குடிக்கிறவன் அதிகமாக இருப்பதால் புறக்கணிப்பவருக்கு தோல்வி என்று குதிப்பதில் என்ன பொருளிருக்கிறது? அரசு, ஓட்டுக்கட்சிகள், முதலாளித்துவ ஊடகங்கள், கோடம்பாக்கத்து ஃபிராடுகள், இத்தனையும் அணிசேர்ந்து மக்களை வாக்களிக்க அழைத்தும், பல பகுதிகளில் மக்கள் தங்களது அடிப்படை பிரச்சனைகளுக்காகவும், அரசியல் வெறுப்பிலும் இந்த போலி ஜனநாயக செட்டப்பை ஏற்க மறுத்து விட்டதுதான், உண்மையில் வியப்புக்கும், வரவேற்புக்கும் உரிய விசயம்!

வெறும் அரை சதவீத வாக்களிப்பு உயர்வுக்கே ஆளும் வர்க்கமும், அடிவருடிகளும் டவுசரைப் பிடித்துக் கொண்டு குதிக்கையில், தமிழகம் முழுக்க அரை சதவீத அளவுக்காவது மக்களிடம் தேர்தல் புறக்கணிப்பை ஒரு அரசியல் மாற்று இயக்கமாக கொண்டு சென்ற புரட்சிகர அமைப்புகளின் பிரச்சார தாக்கம் நிச்சயம் பயனுள்ளதே! புறக்கணிக்க வேண்டியதன் அரசியல் காரணத்தை உருவாக்குவதில் மக்களிடம் எந்தளவிற்கு வேலை செய்திருக்கிறோம் என்பது தான், ஒரு தொடர் போராட்டத்தின் முதல்படி! வெறும் தேர்தலோடு மக்களின் கையை விட்டுவிடும் போலி ஜனநாயகத்தின் தன்மைக்கு முன்னால், மக்களிடம் ஒரு மாற்று அதிகாரத்தை நிறுவும் உண்மையான ஜனநாயகத்துக்கான பிரச்சார இயக்கமாக இதை தொடர்ந்து கொண்டு செல்லும் புரட்சிகர அமைப்புகளின் மக்கள் பணி மகத்தானது!

எவனும் சரியில்லை என்று மக்கள் வாயில் இருந்து வசவு வாங்கி மானங்கெட்டு, திரும்பவும் ஓட்டு கேட்கும் களவாணிகளை விட, தனிப்பட்ட ஆதாயம் ஏதுமின்றி ஒரு மாற்று சமூக நலனுக்காக பிரச்சாரம் செய்த இடமெல்லாம் மக்களிடம் விவாதிக்கும் ஜனநாயகத்தை நிறுவியுள்ள புரட்சிகர அமைப்புகளின் பணி அளப்பரிய பங்காற்றியிருக்கிறது! ஏன் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற அவசியத்தை, காரணத்தை பொறுப்போடு மக்களிடம் விளக்குவதில் தம்மை ஒரு மாற்று அரசியல் சக்தியாக மக்களிடம் அடையாளம் காட்டியுள்ளன புரட்சிகர அமைப்புகள்!

போலி ஜனநாயகத்தின் காலிகளோ ஓட்டுப் போடா விட்டால் தொலைத்துவிடுவோம் என்று தேர்தல் களத்திலேயே மக்களை மிரட்டியுள்ளனர். தாங்கள் எப்பேற்பட்ட ஜனநாயகவாதிகள் என்பதை அவர்களும் அடையாளம் காட்டியுள்ளனர்.

ஓட்டு போட்டதாலேயே மக்களை வெறுத்தோ, அவர்களை இழிவாக நடத்துவதோ புரட்சிகர அமைப்புகளின் நடைமுறையில் இல்லை. ஆனால் தங்களை மிகப் பெரிய ஜனநாயகவாதிகள் என்று சித்தரித்துக் கொள்ளும் தேர்தல் கமிசன் முதல் முதலாளித்துவ ஊடகங்கள் வரை எப்படி நடந்து கொண்டார்கள்? பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் உள்ள ஜனநாயக உரிமையைக்கூட சர்வாதிகாரமாக ரத்துசெய்தது தேர்தல் கமிசனின் அதிகார வர்க்கம்! ஊடகங்களோ ஒரு படி மேலபோய் விவாத அரங்குகள் என்ற பெயரில் வாக்களிக்க மறுப்பவர்களை வளைத்து வளைத்து தாக்கியது.

முக்கியமாக சன் தொலைக்காட்சி முதல் புதிய தலைமுறை, கேப்டன் டி.வி. வரை தேர்தலின் இறுதி நாட்களில் (முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களுக்கு கூட இந்த தடித்தோல்கள் இவ்வளவு துடிக்கவில்லை) ”வாக்களிக்காதவர்களை தண்டிக்க வேண்டும்” என்ற தலைப்பிலேயே நிகழ்ச்சிகளை நடத்தினர்.

வாக்களிக்காதவரின் ரேசன் அட்டைகள் மற்றும் முக்கிய உரிமைகளை பறிக்கவேண்டும் என்று வெறியோடு பாய்ந்தனர். கொடுக்கிற டார்ச்சரில் எடுக்கிற விதமாக ஓட்டை எடுக்க வேண்டும் என்று துரத்தி துரத்தி மக்களை அச்சுறுத்தினர். அனைத்துக்கும் மேலே தினமணியின் கார்ட்டூனிஸ்ட் மதிகெட்ட மதி வாக்களிக்காதவர்களை எமலோகத்துக்கு இழுத்து வா சித்ரகுப்தா என்று ஓட்டுப் போடாதவர்களை சாகடிக்கவும் வெறியோடு கிளம்பிவிட்டார். மோடிக்கு அடிக்கோடாய் தனது கோடுகளை இழுத்துக் கொண்டிருக்கும் இந்த விசப் பூச்சி மக்களை வெறியோடு கடிப்பதற்கு பெயர்தான் ஜனநாயகம்போல!

இதே தினமணியில் ஒரு காலத்தில் உதயன் என்ற கார்ட்டூனிஸ்ட்  ஜெயாவின் பார்ப்பனத் திமிரை வீங்கிய உதடுகளாய் விளாசித் தள்ளினார். தனது கோடுகளில் பாசிசத்தின் நரம்புகளை உரித்துத் தொங்கவிட்டார். பிழைப்புக்காக போன இடத்திலும் கொஞ்சமாவது ஜனநாயக சொரணை இருந்தது அவருக்கு. முழுக்க முழுக்க பார்ப்பன வைத்தியின் பல் துலக்கும் குச்சியாக ஆகிவிட்ட மதிக்குதான் மக்களின் மீது என்ன ஒரு வன்மம்! மக்களிடம் போய் பொறுப்பாகவும் பணிவாகவும் மாற்று அரசியல் கருத்துகளை பிரச்சாரம் செய்தாலே நக்சலைட்டுகள் என்று பீதியூட்டும் இந்த ஜனநாயகவாதிகள் தான் வாக்களிக்காத மக்களை தீவிரவாதியாக குதறுகிறார்கள். குறைந்த பட்சம் மக்கள் ஜனநாயகமாக தங்களது கருத்தை அமல்படுத்துவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத இவர்கள்தான் நமக்கு ஜனநாயகப்பாதையைக் காட்டும் யோக்கியர்களாம்!

ஓட்டுப் போட்டவர்களில் கணிசமானோர் உழைக்கும் மக்கள். ஓட்டுப் போடாதவர்களில் நகரத்து மேட்டுக்குடியினரும் அடக்கம். எனவே இதை தேர்தலில் ஓட்டுப் போடுபவர், போடாதவர் என்று சுருக்கி பார்க்காமல் இந்த போலி ஜனநாயக அரசமைப்பை எத்தனை மக்கள் புரிந்து கொண்டார்கள், எந்த அளவு தெரிந்து கொண்டார்கள், இதை மேலும் பரப்புவது எப்படி என்றே புரட்சிகர அமைப்புகள் பரிசீலிக்கின்றன. இந்த இத்துப்போன ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள்தான் இதை புள்ளிவிவரங்களிலிருந்து வெற்றியாக காட்ட முனைகிறார்கள். ஒருக்கால் புள்ளி விவரம்தான் வேண்டுமென்றால் இந்தியாவில் ஏழைகள், ஊட்டச்சத்து, இறப்பு, குழந்தைகள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளில், நம் நாடு மற்ற ஏழை நாடுகளோடு போட்டி போடுவது உலகறிந்த விசயம். இருப்பினும் சந்திரனுக்கு ராக்கெட் விட்டோம் என்று சில பார்த்தசாரதிகள் பல் தெரிய சிரித்துக் கொண்டு வல்லரசு ராக்கெட் விடுவதில்லையா? அது போலத்தான் தேர்தல் வாக்குப் பதிவை வைத்து புல்லரிக்கிறார்கள் சில லகுடபாண்டிகள்.

எனவே ஆளும் வர்க்கத்தின் இத்தனை அதட்டல் மிரட்டல்களையும் தாண்டி இந்த போலி ஜனநாயகத்தை புறக்கணித்த மக்களை முதலில் வாழ்த்துவோம்! வாக்களித்த மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி மாற்றுவோம்! புறக்கணிப்பின் தொடர்ச்சியாய் முன்னெடுக்கும் மக்களுக்கான மாற்று அதிகாரத்தை நிறுவும் மக்கள் கமிட்டிகள் வழி போலி ஜனநாயகத்தை வீழ்த்துவோம்!

–          துரை. சண்முகம்