Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 698

ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?

4

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும், உலகின் மிகப் பிரபலமான பெண்களில் ஒருவருமான ஏஞ்சலினா ஜோலிக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கு சாத்தியகூறுகள் 87 சதவிகிதம் இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் மாசெக்டமி அறுவை சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றிக்கொண்டு, செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்டார். பெண்களின் உடல்நலனுக்காக தனது அழகைத் துறந்து விட்டார் ஏஞ்சலினா என்று ஊடகங்கள் அனைத்தும் இதை மாபெரும் தியாகமாக கொண்டாடி விட்டன.

மனித உடலில் இருக்கும் உறுப்புகளின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும்  மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன. செல்களின் வளர்சிதை மாற்றத்தில், ஒரு செல் தனக்குள் இரண்டாக பிரிந்து இரு புதிய செல்களாக மாறுகின்றது. மறுபுறம் குறிப்பிட்ட ஆயுட்காலத்துக்கு பிறகு பழைய செல்கள் அழிகின்றன. இந்த வகையில் செல்களின் எண்ணிக்கையில் சமநிலை எட்டப்படுகிறது. ஒரு செல் பிரிந்து பெருக முதலில் அதன் மரபணு மறுபிரதியெடுக்கப்பட வேண்டும். இந்த மறுபிரதியாகும் செயல்முறையில் அபூர்வமாக பிறழ்வு ஏற்படலாம். இந்த மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வானது கட்டுப்படுத்தப்படாத உயிரணு பெருக்கத்தையும், செல் அழியாத்தன்மையையும் அனுமதிக்கின்றது. நியதிக்கு மாறான இத்தகைய செல்களின் அபரிதமான பெருக்கம் புற்றுநோய் எனப்படுகிறது.

பெண்களுக்கு மற்ற புற்றுநோய்களோடு மார்பகத்திலும், கருப்பையிலும் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின் படி 2008-ம் ஆண்டில் மட்டும் 4.5 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும், 1.4 லட்சம் பெண்கள் கருப்பை புற்றுநோயாலும் உயிரிழந்துள்ளனர்.

பிறழ்வு ஏற்பட்ட மரபணுவை சரி செய்யக்கூடிய புரதங்களை உற்பத்தி செய்யும் BRCA 1 மற்றும் BRCA 2 மரபணுக்கள் மனித செல்களில் இருப்பதாகவும், அவை புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன என்றும் பல்கலைக்கழகங்களில் நடந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்தன. இந்த ஆராய்ச்சியில் பல்கலைக்கழகங்களுடன் மைரியட் ஜெனிடிக்ஸ் (Myriad Genetics) என்ற நிறுவனமும் கூட்டுச் சேர்ந்திருந்தது. இந்த BRCA மரபணுவில் குறைபாடு இருந்தால், சேதமடைந்த மரபணு சரிசெய்யப்படாமல் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகின்றன. இந்த இரு மரபணுக்களையும் பரிசோதித்து பிறழ்வுகளை அறிவதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை  புற்றுநோய்  அபாயங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பது அந்த ஆய்வுகளின் முடிவு.

சராசரி பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் 12% ஆக இருப்பதாகவும், அதுவே மரபு வழியாக பிறழ்வடைந்த BRCA மரபணுக்களைப் பெற்றுள்ள பெண்களுக்கு 60% ஆக இருப்பதாகவும், அதாவது சாதாரண பெண்களை விட ஐந்து மடங்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினாவின் தாயார் மார்பகப் புற்றுநோயால் மரணமடைந்ததால், அந்த மருத்துவப் பரிசோதனையை தனக்கும் செய்து கொண்டதில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறுகள் 87 சதவிகிதம் இருப்பதாகத் தெரிய வந்ததையடுத்து, உடனடியாக மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் முடிவுக்கு வந்தார் ஏஞ்சலினா. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அது குறித்து பத்திரிகைகளில் எழுதிய அவர், “நான் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் முடிவை எளிதாக எடுத்து விடவில்லை. ஆனாலும், உயிர் அதை விட முக்கியமானது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காகவே இதை வெளிப்படையாக சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் இந்த மரபணுக்களின் கட்டமைப்புக்கும், அவற்றை பரிசோதித்து பார்க்கும் முறைகளுக்கும் காப்புரிமை வாங்கியதன் மூலம் அவற்றை தனது கட்டுக்குள் வைத்துள்ளது. இந்த மரபணுக்கள் குறித்த சோதனையை செய்து கொள்ள அந்நிறுவனம் தலா ஒருவருக்கு 3500 டாலர்கள் (சுமார் ரூ. 2 லட்சம்) கட்டணமாக வசூலிக்கிறது.

2006-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் கிங் தலைமையிலான ஆய்வுக்குழு மைரியட்  ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் சோதனை முறை இந்த இரு மரபணுக்களில் ஏற்படக்கூடிய கணிசமான எண்ணிக்கையிலான மற்ற பிறழ்வுகளைக் கண்டறிவதில்லை என்று கண்டுபிடித்தது. மைரியட் ஜெனிடிக்ஸ் இந்தப் பிறழ்வுகளைக் கண்டறியவும் சோதனை முறையை உருவாக்கியது. இப்புதிய சோதனை முறையைக் கொண்டு முதன்மை சோதனையை மேம்படுத்தவோ அல்லது அதனுடன் சேர்க்கவோ இல்லை. அதற்கு பதிலாக புதிய சோதனை முறையை பிற்சேர்க்கை சோதனையாக்கி அதற்கு தனியாக 700 டாலர்களை (ரூ. 42 ஆயிரம்) கட்டணமாக வசூலிக்கிறது.

இயற்கையின் கொடையான BRCA மரபணுக்களின் வடிவத்திற்கும் வடிவுரிமை வாங்கி வைத்துள்ளதன் மூலம் மற்ற ஆய்வாளர்கள் இந்த மரபணுக்கள் குறித்து ஆய்வு செய்வதையும், அவற்றுக்கான மலிவான மாற்று சோதனை முறைகளைக் கண்டறிவதையும் தடை செய்து வைத்திருக்கிறது. அதன் மூலம் கொடிய ஆட்கொல்லி நோய் வருவதை முன்னறிவிக்கும் சோதனையில் கொள்ளை லாபமீட்டுகிறது. இந்த பரிசோதனைகள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் $126 மில்லியன் (சுமார் ரூ. 700 கோடி) சம்பாதித்துள்ளது மைரியட் ஜெனிடிக்ஸ்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதியளிக்கவும், மேலும் புதிய ஆய்வுகளை ஊக்குவிக்கவும், வடிவுரிமை பாதுகாப்பு தேவை என்றும், வடிவுரிமை பாதுகாப்பு இல்லையென்றால் புதிய ஆய்வுகளில் ஈடுபட நிறுவனங்கள் முன்வராது என்றும், தொழில்நுட்பமும் அறிவியலும் வளர வடிவுரிமைகள் உதவி செய்கின்றன என்றும் வாதிடப்படுகிறது.

இந்த BRCA மரபணுக்களின் கண்டுபிடிப்பையே எடுத்துக்கொண்டால், பல்வேறு பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் இந்த மரபணுக்களைப் பற்றி ஆய்வு செய்து வந்தன. மைரியட் ஜெனிடிக்ஸ் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் வேறு ஒரு ஆய்வு நிறுவனமோ, பல்கலைக்கழகமோ கண்டுபிடித்திருக்கும். ஆனால் தனது கண்டுபிடிப்பு முழுமையடைவதற்கு முன்னரே தனது லாப வேட்டைக்காக அவசரமாக அதன் மீது வடிவுரிமையைப் பெற்றிருக்கிறது மைரியட் ஜெனிடிக்ஸ் நிறவனம்.

அரசுகள் இது போன்ற ஆய்வுகளுக்கு பல்கலைக் கழகங்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் அளித்து வந்த நிதியை தொடர்ந்து குறைத்துக்கொண்டு வருகின்றன. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் நிதியளித்து, அதன் பின்னர் அவர்களது கண்டுபிடிப்புகளுக்கு வடிவுரிமை வாங்கி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன.

1907 வரை வடிவுரிமைப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் இல்லாத ஸ்விட்சர்லாந்து, 1921 வரை வடிவுரிமை சட்டம் இல்லாத நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நடந்திருக்கின்றன. அறிவுசார் சொத்துரிமை சார்ந்த ஆராய்ச்சிகள் அடிப்படை அறிவியல் வளர்ச்சிக்கு மிகக் குறைந்த அளவே பங்களித்திருக்கின்றன. 2013-ம் ஆண்டு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட மனித மரபணுத் தொகுப்பு ஆராய்ச்சி திட்டம் முழுவதும் அரசுகளின் நிதி உதவியின் மூலம் நடத்தப்பட்டது தான்.

வடிவுரிமை சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் தான் மனித குலத்தின் பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. மனித குலத்தின் அறிவுத் தேடலில் இருந்தும், இயற்கையை அறிந்து கொள்ளும் பேராவலில் இருந்தும், சமூகத்தின் மீதுள்ள பற்றும் தான் ஆய்வுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக இருந்துள்ளன.

ஆனால் வடிவுரிமையோ கண்டுபிடிப்பாளருக்கு வெகுமதியை வழங்குவதாக இல்லாமல், பெரு நிறுவனங்களுக்கு சமூகத்தைக் கொள்ளையடிக்க ஏகபோக அதிகாரத்தை வழங்குகின்றன. தனது கண்டுபிடிப்புக்கு வடிவுரிமை வாங்கும் எந்த நிறுவனமும் தாம் பயன்படுத்திக்கொள்ளும் மனித குலத்தின் திரட்டப்பட்ட அறிவுச்சொத்துக்கு எந்த உரிமத் தொகையும் கொடுப்பதில்லை. ஆனால், வடிவுரிமையின் மூலம் நிறுவனங்கள் அறிவைப் பயன்படுத்த தடை செய்து அதை மேலும் வளர்த்துச் செல்வதைத் தடுக்கின்றன.

மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியங்கள் குறித்து தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ளவும், அதன் பின் மாசெக்டமி அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவும், அது தெரியாமலிருக்க செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொள்ளவும் ஏஞ்சலினாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் கிடைப்பதில்லை. உதாரணமாக, அமெரிக்காவில் அரசு மருத்துவக் காப்பீடு பெறும் இரண்டு பெண்களுக்கு, காப்பீட்டுத் தொகை குறைவென்பதால் பரிசோதனையை செய்ய மறுத்திருக்கிறது மைரியட் ஜெனிடிக்ஸ்.

வேறு சில பெண்கள் முதல் சுற்று பரிசோதனையிலேயே மார்பகத்தை அல்லது கருப்பையை அகற்றும் அறுவைச் சிகிச்சையை செய்து கொள்ளும் கடினமான முடிவை எடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய முக்கியமான முடிவெடுக்க நோயாளிகள் மைரியட் ஜெனிடிக்ஸ்-ன் சோதனை முடிவுகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவது சுற்று பரிசோதனைக்கான கட்டணம் அவர்களுடைய மருத்துவ காப்பீட்டில் இல்லாததால் அதை செய்துகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. மேலும், மைரியட் ஜெனிடிக்ஸ் BRCA மரபணுக்களின் கட்டமைப்பிற்கே வடிவுரிமை வாங்கி வைத்துள்ளதால் வேறு மலிவான சோதனை முறைகள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் இரண்டாவது சோதனை செய்து உறுதிசெய்து கொள்வது ஏஞ்சலினாவுக்கு கூட சாத்தியமுமில்லை.

மைரியட் ஜெனிடிக்ஸின் இந்த வடிவுரிமையானது எந்த ஒளிவுமறைவும், முகத்திரையுமின்றி முதலாளித்துவத்தின் லாப வேட்டையை அப்பட்டமாக நடத்துகிறது. பணக்கார நாடுகளான அமெரிக்காவிலேயே இது தான் நிலைமை என்றால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் ஏழைப் பெண்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

மைரியட் ஜெனிடிக்ஸின் சோதனை முறைகள் சிறப்பானவையோ உயர்ந்தவையோ அல்ல என்றும், அவை அந்நிறுவனம் உரிமை கொண்டாடக்கூடிய, மற்றவர்களுக்கு கிடைக்காத ஜீன்களின் கட்டமைப்பு தகவல்களை மட்டுமே சார்ந்திருக்கின்றன என்றும், அந்தத் தகவல்கள் பொதுவெளியில் கிடைக்கப் பெற்றால் மைரியட் ஜெனிடிக்ஸின் சோதனை முறைகளை விட மலிவான சோதனை முறைகளை உருவாக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

BRCA மரபணுக்களை சோதித்தறிய $200 (சுமார் ரூ. 12,000)-க்கும் குறைவாகவே செலவாகுமென்றும், $1000-க்கு குறைவான தொகையிலேயே ஒரு நபரின் ஒட்டுமொத்த 20,000 மரபணுக்களின் வடிவமைப்பையும் சோதித்து அறிந்து கொள்ள முடியும் என்றும், மைரியட் ஜெனிடிக்ஸ் இந்த வடிவுரிமையின் மூலம் கொள்ளை லாபம் அடிப்பதையும் அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

மார்பகப் புற்றுநோய் பற்றிய மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் விளம்பரம்
மார்பகப் புற்றுநோய் பற்றிய மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் விளம்பரம்

மனிதன் மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்துமே தங்களது கடவுளுடைய படைப்பு தான் என்பது மதவாதிகளுடைய வாதம். அவர்களுடைய வாதப்படியே பார்த்தாலும், கடவுளுடைய படைப்பான மரபணுக்களின் வடிவமைப்பை தனது லாப வெறிக்காக வடிவுரிமை பெற்று வைத்திருப்பதை மதவாதிகள் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் மதவாதிகள் முதலாளித்துவ லாபவெறியை எப்போதுமே எதிர்ப்பதில்லை. மாறாக அதனுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.

ஏஞ்சலினாவின் அறிக்கை வெளியானதையொட்டி மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு 3% உயர்வடைந்தது. மேலும், உலகம் முழுவதிலும் பெண்களுக்கு புற்று நோய் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் ஒரு பெரிய சந்தையை ஏற்படுத்திக் கொடுக்கவும் அது பயன்பட்டது. ஏஞ்சலினா ஜோலி ஒரு மனிதராக சக பெண்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஆரோக்கிய தகவல் கூட மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் லாப வேட்டைக்கான கருவியாக மாற்றப்பட்டது.

பிரபல அமெரிக்க பாப் பாடகி மெலிசா எதரிட்ஜ் (Melissa Etheridge), ஏஞ்சலினாவின் முடிவு தவறானது என்றும், அவர் அவசரப்பட்டு தன்னுடைய மார்பகங்களை அகற்றியுள்ளார் என்றும், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரைத் தவறாக வழிநடத்தியுள்ளனர் என்றும் கூறிவிட்டு, ஏஞ்சலினா போல அவசரப்பட்டு யாரும் மார்பகங்களை அகற்ற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். அவர் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்கூட்டியே கூறுவதை ஏற்க முடியாது என்றும், தகுந்த பாதுகாப்பான சிகிச்சை முறைகளைப் பின்பற்றினால் புற்றுநோய் வருவதைத் தவிர்க்க முடியும் எனவும் கூறி அறுவை சிகிச்சை செய்ய மறுத்திருந்தார்.

ஏஞ்சலினாவின் கட்டுரை உலக அளவில் பல்வேறு நாட்டு பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. ஆனால் மெலிசா எதரிட்ஜின் அறிக்கை அத்தகைய வரவேற்பை பெறவில்லை என்பதற்கு அதனால் எந்த நிறுவனமும் லாபமடையப் போவதில்லை என்பதுதான் காரணம்.

மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் BRCA மரபணுக்களின் வடிவத்திற்கே காப்புரிமை பெற்றிருப்பதை எதிர்த்து மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம் (Association for Molecular Pathology) என்ற மருத்துவ அறிவியலாளர்களின் அமைப்பு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை மரபணுக்களுக்கு வேண்டுமானால் வடிவுரிமை பெறலாம் என்றும், ஆனால் இயற்கையின் கொடையான மனித மரபணுக்களுக்கு வடிவுரிமை கோர முடியாது என்று ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.

இயற்கையின் அருட்கொடைகளை தனியார் சொந்தம் கொண்டாடலாம் என்பது தான் இதுவரை நிலவி வரும் சொத்துடைமை சமூக அமைப்புகளின் நியதி. முதலாளித்துவ நீதிமன்றங்கள் அந்த நியதியைக் காப்பாற்றுவதைத் தான் தங்களது முதன்மையான கடமையாக கொண்டுள்ளன. இயற்கை வளங்களை தனியார் நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுவதற்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிமன்றம் இந்த வழக்கில் மட்டும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கக் காரணம் என்ன?

இப்படிப்பட்ட அப்பட்டமான பகற்கொள்ளை மக்களிடையே வடிவுரிமைக்கெதிராக அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. அதிருப்தியுற்ற மக்கள் போராட ஆரம்பித்தால் அது வடிவுரிமைக்கு மட்டுமல்ல, இந்த முதலாளித்துவ அமைப்புக்கே எதிராகப் போய் முடியும் என்பதால் அதை சிறிதளவாவது தணிக்கலாம் என்று நீதியரசர்கள் கருதியிருக்கலாம்.

இதுவரை மனித மரபணுக்களில் 20-க்கும் மேற்பட்டவற்றுக்கு வடிவுரிமை பெறப்பட்டுள்ளன.  தனியார் நிறுவனங்கள் தமது லாப வேட்டைக்காக பெரும்பாலானவற்றுக்கும், பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் சேர்ந்து சிலவற்றுக்கும் வடிவுரிமைகளைப் பெற்றிருக்கின்றன. இன்னும் ஆயிரக்கணக்கான மரபணுக்களுக்கான வடிவுரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

மனித மரபணுக்களும், அவற்றின் கட்டமைப்பும் மக்களின் உடல்நலம் சார்ந்த வகையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. அவற்றுக்கு வடிவுரிமை வாங்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு மனித உடலின் மரபணு மாதிரிகளையே கட்டணமாக கொடுப்பதாகக் கோரி போராடலாம்.

மனிதக் கழிவுகளில் அதிகமான மரபணு மாதிரிகள் கிடைக்கப் பெறுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதனால் மரபணு வடிவுரிமைக்கு கட்டணம் கேட்கும் நிறுவனங்களுக்கு மனித மலத்தை கட்டணமாக செலுத்துவது தான் இந்த அபத்தமான சொத்துடைமை சட்டங்களுக்கு சரியான பதிலடியாக இருக்கும்.

-மார்ட்டின்.

________________________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013

________________________________________________________________

மருத்துவம் : சோனியாவுக்கு அமெரிக்கா – மக்களுக்கு மார்ச்சுவரியா ?

4

டந்த ஆகஸ்ட் 26-ம் தேதி மக்களவையில் நடந்த உணவு பாதுகாப்பு சட்டம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு வாக்களிப்பதற்காக காத்திருந்த சோனியா காந்திக்கு குமட்டலும் வாந்தியும் ஏற்படவே, அவரை உடனடியாக அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சோனியா காந்தி
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் சோனியா காந்தி.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோனியாவை எய்ம்ஸ் இயக்குநர் ஆர்.சி.டேகா மற்றும் டாக்டர் நிதீஷ் நாயக் மற்றும் கார்டியோ நியூரோ பிரிவு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மழைக்காலமாக இருப்பதால் சளித்தொற்று அதிகமாகி, அதற்கு பயன்படுத்திய மருந்துகள் இரைப்பை சிக்கலையும் வாயுக் கோளாறையும் உருவாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

நாட்டின் தலைவியான சோனியா காந்திக்கு சாதாரண சளித் தொல்லைக்கே அவசர பிரிவு பரிசோதனைகள் கிடைத்திருப்பதும், சாதாரண ஏழை மனிதர்கள் மாரடைப்பே வந்து போனாலும், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி விட மாட்டார்கள் என்பது இருக்கட்டும்.

அத்தகைய ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதை உத்தரவாதம் செய்யும் மசோதாவை சோனியாவின் கனவுத் திட்டம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி ஏழை பாழைகளுக்கு உண்டி கொடுக்கும் கனவை நனவாக்கும் அன்னை சோனியாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் அது சாதாரணமானதில்லையே? மேலும் அதே ஏழை பாழைகளுக்கு கிடைக்கும் அரசு மருத்துவமனையில்தான் சோனியாவும் சிகிச்சை எடுத்திருக்க வேண்டும் என்று யாரேனும் கேட்க முடியுமா? குறைந்த பட்சம் இந்தியாவில்தான் மருத்துவம் எடுக்க வேண்டும் என்று இவரை மட்டுமல்ல வேறு தலைவர்களைத்தான் கோர முடியுமா?

இந்த சளித் தொல்லைப் பிரச்சினைக்காகவே 2011-ம் ஆண்டு அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுடனும் டெல்லி மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். எதற்கும் இருக்கட்டும் என்று மேல் சோதனைக்காக சோனியா அமெரிக்கா கிளம்பி விட்டிருக்கிறார். இனி இவரது கனவுத் திட்டத்தில் வரும் ஏழைகளுக்கு இந்நாட்டில் என்ன மருத்துவ வசதி கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

தவ்லத் பர்வீன்
படம் : நன்றி தினகரன்

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லெப்பைக் குடிக் காட்டைச் சேர்ந்தவர் தவ்லத் பர்வீன். 4 குழந்தைகளுக்கு தாயான அவர் இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது மருத்துவர் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்து விட, ஸ்கேனில் அந்த விபரம் தெரிந்த பிறகு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சையும், அழுகிப் போன நிலையில் இரண்டு குடல் துண்டுகளையும் எடுத்திருக்கிறார்கள். 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டிருக்கிறார்.

அதே போன்று அரியலூர் வி.கைகாட்டியை அடுத்த குடிசல் கிராமத்தைச் சேர்ந்த சுமதி, அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு வயிற்று வலியால் துடித்திருக்கிறார். கடந்த 18-ம் தேதி சுண்டக்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரது பிறப்பு உறுப்பு வழியாக மூன்று ரப்பர் கிளவுஸ்களை எடுத்திருக்கின்றனர். சுமதியின் கர்ப்பப்பை சீழ் பிடித்திருக்கிறது.

இந்தியா எங்கும் அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களின் உயிரோடு விளையாடுவது அன்றாட நிகழ்வாகியிருக்கிறது. இதனால்தான் இந்தியாவில் சிகிச்சை எடுப்பது முட்டாள்தனம் என்பது சோனியா போன்ற பெருந்தகைகளுக்கு தெரிந்திருக்கிறது. ஒருவேளை உயிரை எடுக்கும் இந்த சிகிச்சைகளிலிருந்து அதிர்ஷடவசமாக தப்பினாலும் மருந்துகளை வாங்குவதில் மிச்சமிருக்கும் வாழ்க்கை பறி போய்விடும் அளவுக்கு அவற்றின் விலைகளை உயர்த்தி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதுதான் இவர்களது உண்மையான கனவுத் திட்டங்கள்.

1979-ல் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூலம் 200 மருந்துகளின் விலைகள் குறைந்த பட்ச வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டன. படிப்படியாக அந்த பட்டியலில் இருந்த மருந்துகள் நீக்கப்பட்டு இப்போது 74 மருந்துகளுக்கு மட்டுமே விலைக் கட்டுப்பாடு இருக்கிறது. தற்போது தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலின்படி 348 மருந்துகளுக்கு மத்திய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் மருந்து கம்பெனிகள் வைத்த விலையின் சராசரியை எடுத்து கட்டுப்பாட்டு விலையாக வைத்திருக்கிறது.

இதனால் மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்திருக்கின்றன.

உதாரணமாக, கிளாக்சோ நிறுவனத்தின் ஆகுமென்டின் என்ற ஆண்டிபயாடிக்கின் விலை ரூ 266. இதே மருந்தை இந்திய நிறுவனமான மேன்கைண்ட் ரூ 75-க்கும் குறைவாக விற்கிறது. இப்போது புதிய விலையாக ரூ 141 என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. ரூ 75-க்கு விற்று லாபம் பார்க்க முடியும் மருந்துக்கு ரூ 141 என்று விலை உயர்த்துவதுதான் அரசின் மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் மருந்து வழங்குவதற்கான நடைமுறையாம்.

ஐடிபிஎல்1961-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐடிபிஎல் எனப்படும் இந்திய மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் நிறுவனம் குறைந்த விலையில் மருந்துகளின் அடிப்படை வேதிப் பொருட்களை உற்பத்தி செய்து வந்தது. 1970-ல் பைசர் நிறுவனம் ரூ 1.25-க்கு விற்ற டெர்ராமைசின் என்ற மாத்திரையை 25 பைசாவுக்கு உற்பத்தி செய்து விற்றது. அதே போல ஃபுல்ஃபோரா என்ற தனியார் மருந்து நிறுவனம் ரூ 32-க்கு விற்ற ஜெண்டாமைசின் என்ற ஊசி மருந்தை ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனம் ரூ 7-க்கு விற்றது. இதனால் அந்த இரண்டு தனியார் நிறுவனங்களும் தத்தமது மருந்துகளின் விலையை குறைத்து விற்க கட்டாயப்படுத்தப்பட்டன.

இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடவோ அல்லது தனியாரிடம் விற்று விடவோ செய்து விட்டு தனியார் நிறுவனங்கள் விற்கும் மருந்து விலைகளையும் கட்டுப்படுத்தாமல் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடிக்க வழி வகுத்து தருகிறது மத்திய அரசு.

ஒரு புதிய மருந்தை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் 20 ஆண்டுகள் காப்புரிமை காலத்தின் போது அதிக விலை வைத்து லாபம் சம்பாதிக்கிறது. காப்புரிமை காலம் முடிந்த பின்னரும் புதுப் புதுப் பெயரில் அதே மருந்தை அதிக விலைக்கு விற்று கொள்ளை அடிப்பது வாடிக்கையாக உள்ளது. அத்தகைய மருந்துகளை இந்திய நிறுவனங்கள் குறைந்த செலவில் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்றும் லாபம் சம்பாதிக்க முடிகிறது.

ஆனால், அந்த விலைகளை விட 2 மடங்கும் அதற்கு மேலும் உயர்த்தி பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சேவை செய்வதையே தம் லட்சியமாக செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கு நன்றிக் கடனாக அமெரிக்காவில் அவர் அந்த நிறுவனங்களால் சிறப்பாக கவனித்துக் கொள்ளப்படுவார் என்று நம்பலாம்.

நன்றி : ஜூனியர் விகடன், நக்கீரன்.

மேலும் படிகக

ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?

9

ந்த ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுடைய பெற்றோர்களில் குறைந்தது 20 பெற்றோர்கள் விரும்பினால் ஆங்கில வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜெயலலிதா அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 3500 ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியில் சுமார் 80,000 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. 2012-13 கல்வி ஆண்டில் 640 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பல பள்ளிகளில் அனைத்து பெற்றோர்களும் ஆங்கில வழிக் கல்வியையே தேர்வு செய்தனர். அதற்கும் முன்னரே மாகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கி விட்டது.

ஆங்கிலம் பயில ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை
ஆங்கிலம் பயில ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை

ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்துவதன் மூலம்தான் தமிழ்நாடு முழுவதும் முளைத்திருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டி போட முடியுமென்றும், அரசுப் பள்ளிகளில் குறைந்து கொண்டே வரும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்றும் சொல்லி கல்வித் துறை அதிகாரிகள் இந்த முடிவை நியாயப்படுத்துகிறார்கள்.

“நாம் வசதி குறைவானவர்களாக இருந்ததால் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி முறையில் படித்தோம். நமது குழந்தையாவது ஆங்கில வழிக் கல்வி கற்று முன்னுக்கு வரட்டும்” “அடித்தட்டு மக்களும் தம் பிள்ளைகள் இங்கிலீசு பேசுவதைக் கண்டு மகிழட்டும்” “காசு பணம் இல்லாதவர்களும் தம் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்க வைக்க கிடைத்த நல்ல வாய்ப்பு” என்றெல்லாம் இத்திட்டம் குறித்து மக்கள் கருதுவதாக துக்ளக் பத்திரிகை கூறுகிறது. மக்களிடம் இத்தகைய ஆங்கில மோகம் பரப்பப்பட்டிருப்பது உண்மைதான்.

தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட்டால் நல்ல வேலை கிடைத்து முன்னேறி விடலாம் என்ற மயக்கத்தின் காரணமாகத்தான் கடன் வாங்கியோ, சாப்பாட்டுச் செலவை குறைத்தோ, இருக்கும் சொற்ப நிலத்தை விற்றோ, நகைகளை அடகு வைத்தோ பல ஏழைப் பெற்றோர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.

அரசுப் பள்ளிகளை அரசே புறக்கணிப்பதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் வேகமாக சரிந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. 1976-ல் 25 ஆக இருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை 1999-ல் 2000 ஆக உயர்ந்தது.

இப்போது தமிழ்நாடு முழுவதும் சுமார் 4600 தனியார் நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சம் குழந்தைகளும், சுமார் 2000 மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவ, மாணவிகளும் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவே என்ற போதிலும், அரசுப் பள்ளிகளும் தமிழ் வழிக்கல்வியும் வீழ்ச்சிடைந்து வரும் போக்கை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகின்றன.
தமிழ் நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்களில் சுமார் 50% மாணவர்கள் மட்டுமே 10-ம் வகுப்பு முடித்து மேல்நிலைப் பள்ளிகளில் சேருகிறார்கள். அதற்கு மேல் 15%-க்கும் குறைவான மாணவர்களே இளநிலை பட்டப்படிப்பில் சேருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் குறைவானவர்களே பட்ட மேற்படிப்புக்கும், அறிவியல் ஆராய்ச்சி துறைக்கும் போகிறார்கள். ஆங்கிலத்திலேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய தேவை ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கு இல்லை. பெரும்பான்மை மக்கள் தமது வீட்டிலும், சமூகத்திலும் தமிழ் மொழியிலேயே சிந்திக்கின்றனர், பேசுகின்றனர்.

ஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் மேட்டுக்குடியினர் பொருளாதாரரீதியில் முன்னேறிய நிலையில் இருப்பதையும், அவர்கள் வெளி நாடுகளுக்கு வேலைக்குப் போவதையும் பார்த்த நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கில வழிக் கல்விதான் பொருளாதார உயர்வுக்கான திறவுகோல் என்று கணித்து தமது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர்.

மேட்டுக்குடி வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கத்தையும் பார்த்து அவர்களுடைய இடத்தையும், பண்பாட்டையும் எட்டுவதுதான் முன்னேற்றம் என்று புரிந்து கொண்டிருக்கும் ஏழை மக்கள், அவர்களுடைய பண்பாட்டின் மலிவுப் பிரதிகளைத் தேடுகிறார்கள். உடைகளிலும், அலங்கார சாதனங்களிலும், கைபேசிகளிலும் கிடைக்கும் மலிவுப் பதிப்புகள் போல, தாகம் தீர்க்க அம்மா வாட்டர் போல, ஆங்கில மோகம் தீர்க்க அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி. ஆனால் இந்தப் பள்ளிகளில் கஷ்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் ஏழைகளால் அப்படி ஒன்றும் வாய்ப்புகளை எளிதில் தட்டிக் கொண்டு போக இயலாது.

மேட்டுக்குடியினரின் உயர்வுக்கு காரணம், அவர்கள் ஏற்கெனவே பொருளாதார ரீதியில் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருப்பது, மேல்தட்டு வர்க்கத்தில் அவர்கள் பெற்றிருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொடர்புகள், இவற்றின் காரணமாக கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவை தானே தவிர ஆங்கில வழிக் கல்வி அல்ல. ஆங்கில வழிக் கல்வி அவர்களது வர்க்க நிலையின் ஒரு வெளிப்பாடு. வெறும் ஆங்கிலத்தின் மூலம் அவர்களது வர்க்க நிலை உயர்ந்து விடவில்லை.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அந்த மொழி வழியாக கல்வி கற்பது மட்டுமே உதவுவதில்லை. முதுநிலைப் பட்டப் படிப்பு வரை கூட ஆங்கில வழியில் படித்திருந்தாலும், எளிய ஆங்கில வாக்கியங்களைக் கூட பேச முடியாதவர்கள் பலர் உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் சரளமாக உரையாட, எளிய ஆங்கில வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ள தேவைப்படுவது ஆங்கில மொழிக்கல்வியே தவிர ஆங்கில வழிக் கல்வி அல்ல. வீட்டிலும், அலுவலகத்திலும், அன்றாட சமூக உறவுகளிலும் ஆங்கிலத்தை பயன்படுத்துபவர்கள்தான் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகின்றனர்.
ஆங்கிலத்தில் பேச, எழுத, படிப்பதற்கான தேவையை 5-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக் கல்வியின் ஒரு பாடமாக ஆங்கிலத்தை கற்பிப்பதன் மூலம் சிறப்பாகவும், முழுமையாகவும் வழங்கி விட முடியும். அப்படி ஆங்கிலத்தை கற்பதற்கான அடிப்படை அறிவு பெறும் திறன் தாய்மொழி வழிக் கல்வி மூலம்தான் கிடைக்க முடியும்.

ஆங்கில வழிக்கல்வி படித்தால் வேலை என்னும் மூடநம்பிக்கையினை விற்றுக் காசாக்கும் தனியார் பள்ளிகள் !
ஆங்கில வழிக்கல்வி படித்தால் வேலை என்னும் மூடநம்பிக்கையினை விற்றுக் காசாக்கும் தனியார் பள்ளிகள் !

“பைசா 2009” (Programme for International Student Assessment) என்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேட்டுக்குடி மாணவர்களின் அறிவுத் திறனை சோதனை செய்யும் நிகழ்வில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு, இமாச்சல பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 74 பிராந்தியங்கள் கலந்து கொண்ட இந்தத் தேர்வில் இவ்விரண்டு மாநில மாணவர்களும் வாசித்தல், கணிதம் இரண்டிலும் 72,73-வது இடங்களையும், அறிவியலில் 73,74-வது இடங்களையும் பிடித்தனர்.

வாசிப்பு என்பதற்கு PISA கொடுத்த ’படித்த பொருளைப் புரிந்துகொண்டு, அதை வெளிப்படுத்தத் தெரிந்திருப்பது’ என்ற விளக்கத்தின் அடிப்படையில் இவர்கள் தற்குறிகளாகவே இருந்தனர். இவர்கள் மேட்டுக்குடி வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்பதுடன், ஆங்கில வழியில் கல்வி பயின்றவர்கள். வாசிப்பு, கணிதம், அறிவியல் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் சீனாவின் ஷாங்காய் மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர். சீன மாணவர்கள் தாய் மொழி வழியில் படித்திருந்தாலும், தேர்வு பொருள் பற்றி அவர்களுக்கிருந்த அடிப்படை அறிவே ஆங்கிலத்தை சுலபமாக எதிர்கொள்ளச் செய்திருக்கின்றது.
தாய் மொழி என்பது, வெறும் மொழியாக அல்லது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மட்டும் இல்லாமல் ஒரு மனிதனின் அடிப்படை அறிதல் திறனாகவும் அமைகின்றது. மற்ற எதையும், அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும் ஒரு குழந்தை இந்த அறிதல் திறனின் வழியாகவே கற்றுக் கொள்கிறது.

குழந்தைகள் மனதளவில் எந்தத் தொல்லையுமில்லாமல், ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதைப் போல் தாய் மொழியை கற்றுக்கொள்கின்றார்கள். தாய் மொழியைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் வாக்கியங்களை அப்படியே பிரதி எடுப்பதில்லை, கற்றுக்கொள்ளும் போது விதிகளை ஊகித்து உணர்கிறார்கள். வாக்கியக் கட்டமைப்பில் இருக்கும் விதிகளை குழந்தைகள் தாங்களாகவே முயன்று புரிந்து கொள்கிறார்கள். தாய் மொழியைப் பயில்வதை கற்றல் என்று சொல்வதை விட அறிவைக் கைக்கொள்வது என்று சொல்லலாம்.

இயற்கையாக அறிதலை தன் தாய் மொழியில் பயின்று வந்திருக்கும் குழந்தைகளுக்கு, பள்ளிக் கூடங்களில் அயல் மொழியில் பாடங்களைக் கற்பிக்கும் போது அவர்களின் சிந்தனை தொந்தரவிற்குள்ளாகின்றது. இது குழந்தைகளின் சிந்தனையில் நாம் செலுத்தும் கொடிய வன்முறை தான். தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் அயல் மொழி வழி கற்பிக்கும் முயற்சியின் காரணமாக அவர்கள் அறிவைக் கைக்கொள்ளும் திறனை இழந்து விடுகின்றனர்; கற்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆசிரியர்களும் கற்பித்தலை நிறுத்தி விடுகின்றனர்.

புரியாமை என்பது மாணவனின் கற்கும் முயற்சியையே நிரந்தரமாக முடக்கி விடுகிறது. அதன் பிறகு மதிப்பெண்களை நோக்கிய பயிற்சி மட்டுமே நடக்கிறது. புத்தகங்களில் இருப்பதைப் மனப்பாடம் செய்வதற்கு கற்றுக் கொள்கின்றனர். எடுக்கப்படும் பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்து விடுகின்றன, அவ்வளவுதான்.

ஆங்கிலத்தை ஒரு பாடமாக கற்பதற்கே தடுமாறும் மாணவர்களுக்கு, ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக வகுப்பறைகள் சித்திரவதைக் கூடங்களாக மாறி விடுகின்றன. கணிசமான மாணவர்கள் இந்த சித்திரவதையைத் தாங்க முடியாமல் சில வகுப்புகளுக்குப் பின் வெளியேறி விடுகிறார்கள். ஆரம்ப வகுப்பிலிருந்தே ஆங்கில வழிக் கல்வியை அறிமுகம் செய்வதன் விளைவு 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குள் சுமார் 1 கோடி மாணவர்கள் சிந்தனை முடக்கப்பட்ட கல்வியைக் கற்றவர்களாகவோ, அல்லது கல்வியே இல்லாதவர்களாகவோ உருவாக்கப்பட்டிருப்பார்கள்.
ஆங்கிலம் படித்தால் வேலை என்பதும் ஒரு விதமான மூடநம்பிக்கை. இந்தி படித்தால் வேலை என்று கூறி இந்தித் திணிப்பை நியாயப்படுத்தும் ஆட்கள் இன்னமும் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் கரி பூசுவது போல, வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வேலை தேடி வந்திருக்கும் தொழிலாளர்கள், இங்கே வந்து தமிழ் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பொறியியல் பட்டம் பெற்ற பல லட்சம் மாணவர்கள் இன்று வேலை இல்லாமல் தவிக்கின்றனர் அல்லது தமது கல்வித் தகுதிக்குப் பொருத்தமில்லாத வேலையை குறைவான சம்பளத்தில் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அனைவருக்கும் வேலை கிடைக்கக் கூடாது என்பது உலக முதலாளித்துவத்தின் கொள்கை. அதனை ஆங்கிலப் புலமையால் முறியடித்து விட முடியாது.

“இந்த ஆண்டு பத்து பொறியாளர்கள் தேவை என்றால் உழைப்புச் சந்தையில் நூறு பொறியாளர்கள் அந்த வேலைக்குப் போட்டி போட வேண்டும். அப்படி ஒரு போட்டி நிலவினால் தான் ஊதியத்தைக் குறைக்க முடியும். நூறு பேரிலிருந்து திறமையான பத்து பேரைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மற்றவர்களைக் கழிவு என்று தள்ள முடியும்” என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள முதலாளி வர்க்கத்தின் பார்வை.
ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட அமெரிக்க ஐ.டி ஊழியர்களின் வேலையைப் பறித்து, அதனை இந்தியர்களுக்கு கொடுப்பதற்கு காரணம், அமெரிக்கர்களை விட இந்தியர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது என்பதல்ல, அவர்களை விட இந்தியர்களின் கூலி குறைவு என்பது தான்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கை காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான வேலையாட்களை உருவாக்குவதற்கு ஏற்ப நமது நாட்டின் கல்விக் கொள்கையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்படுவதும் தாய் மொழி வழிக் கல்வி புறக்கணிக்கப்படுவதும் வெறும் மொழி சார்ந்த பிரச்சினைகள் அல்ல.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை உற்பத்தித் துறையிலோ, சேவைத் துறையிலோ, அறிவுத் துறையிலோ தமக்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுப்பதற்கான ஊழியர்களை உருவாக்கித் தரும் பட்டறைகள்தான் கல்வி நிலையங்கள். மாணவர்களுக்கு தத்தம் மொழி சார்ந்த இலக்கியங்கள், பண்பாட்டு மரபுகளைக் கற்றுக் கொடுப்பது, சனநாயக உணர்வையும், சமத்துவக் கண்ணோட்டத்தையும், சமூக உணர்வையும் கற்றுத் தருவது, சுய சிந்தனையை ஊக்குவிப்பது போன்றவையெல்லாம் உலக முதலாளித்துவத்துக்கு தேவையில்லாதவை. சொல்லப் போனால் இடையூறானவை.

ஆங்கில வழிக்கல்வி - அறிவு வளர்ச்சியின் மீது செலுத்தப்படும் வன்முறை !
ஆங்கில வழிக்கல்வி – அறிவு வளர்ச்சியின் மீது செலுத்தப்படும் வன்முறை !

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் 2000 ஆண்டில் அம்பானியும் பிர்லாவும் இணைந்து வெளியிட்ட கல்வித்துறை சீர்திருத்தத்திற்கான கொள்கைச் சட்டகம் என்ற அறிக்கையில் காணப்படும் கருத்துகள் இவை – கல்வியை சமூக முன்னேற்றத்தின் ஒரு கருவியாகப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தை அடிப்படையிலேயே மாற்றியமைக்க வேண்டும். .. புதிய திறமைகளை விரைந்து கற்றுக் கொள்ளக் கூடிய, சந்தையின் போட்டி போடக் கூடிய, நிலைமைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளக் கூடிய தொழிலாளிகளை நாம் உருவாக்க வேண்டும். .. அமெரிக்காவுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முதலிடத்தில் இருப்பது விமான ஏற்றுமதியோ, ஆட்டோமொபைல் ஏற்றுமதியோ அல்ல; பொழுதுபோக்கு சாதன ஏற்றுமதிதான். .. மூளை உழைப்பாளர்களை உருவாக்குவதில் கல்விக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது

இதுதான் கல்வி குறித்த ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டம். இந்திய மக்களின் மூளை உழைப்பையும், உடல் உழைப்பையும் மலிவு விலைக்கு உலகச் சந்தையில் விற்று காசு பார்க்கும் இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்கும், ஏகாதிபத்தியங்களின் அடிமையாக தன்னைப் பிரகடனம் செய்துகொள்வதற்கு கூச்சப்படாத இந்திய அரசுக்கும் தாய்மொழிக் கல்வி வேப்பங்காயாய் கசப்பதில் வியப்பில்லை.

நாட்டுப் பற்றோ, மக்கள் நலனில் பற்றோ இல்லாத, சொந்த மண்ணைச் சேர்ந்த மக்களுடைய மொழியையோ, வாழ்க்கையையோ, மரபையோ அறியாத, பண்பாட்டு ரீதியாக இந்த மண்ணோடும், மக்களோடும், அவர்களுடைய உணர்வோடும் எந்த விதத்திலும் ஒட்டாத தெர்மாகோல் மனிதர்களை உருவாக்குவதே தாய்மொழிக் கல்வி அழிப்பின் நோக்கம்.

தாய்மொழி வழிக் கல்வி என்பதுதான் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கான ஒரே வழி. தாய்மொழிக் கல்வி மறுப்பு என்பது பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்றது. அவர்கள் மத்தியிலிருந்து உருவாகக் கூடிய திறமைசாலிகளை கருவிலேயே கொலை செய்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு கல்வியை மறுத்த மனுநீதியை வேறு வடிவத்தில் மீண்டும் அமலாக்குகிறது.

ஆங்கில வழிக் கல்வி என்பதும், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் போன்றவையும் இந்திய சமூகம் “ஒளிரும் இந்தியா – வாடும் இந்தியா” என்று இரண்டாகப் பிரிந்து கிடப்பதற்கான நிரூபணம். ஒளிரும் இந்தியா ஆங்கிலத்தில் பேசுகிறது. உலகளாவிய வாய்ப்புகளை பெறும் நிலையில் உள்ளது. வாடும் இந்தியா இந்திய மொழிகளில் பேசுகிறது, கடுமையாக சுரண்டப்படுகிறது.

பல்வேறு வர்க்கங்களையும் சேர்ந்த குழந்தைகள் சேர்ந்து படிக்கும் பொதுப் பள்ளிகள், அருகமைப் பள்ளிகள் இப்போது இல்லை. வீட்டுக்கு அருகில் நடந்து போகும் தொலைவில் அரசுப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ இருந்தாலும் தம் பிள்ளைகளை நடுத்தர வர்க்கத்தினர் அங்கே சேர்ப்பதில்லை. தம் தகுதிக்கு ஏற்ப ‘தரமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளிலேயே’ சேர்க்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட, தம் தலையை அடகு வைத்தாவது பிள்ளைகளை இத்தகைய பள்ளிகளில் தான் சேர்க்க விரும்புகிறார்கள்.

இந்தப் பள்ளிகள் மறுகாலனியாக்கம் உருவாக்கி வரும் நவீன அக்கிரகாரங்களாகவும், அரசுப் பள்ளிகள் எனப்படுபவை நலிந்து வரும் சேரிகளாகவும் மாறி வருகின்றன. “அருகமைப் பள்ளிகள் – இலவசக் கல்வி – தாய்மொழி வழிக் கல்வி” என்பதை அமல்படுத்துவது தான் இந்தப் பிரிவினையை ஒழிப்பதற்கான வழி. மாறாக, சேரிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதன் மூலம் அவற்றையும் அக்கிரகாரங்களாக்கி விட முடியும் என்று ஆசை காட்டுவதுதான், அம்மா அறிவித்திருக்கும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற இந்தத் திட்டம்.

-பண்பரசு
___________________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
___________________________________________________________

பள்ளிகளின் இறைவழிபாட்டை எதிர்த்துப் போராடும் சஞ்செய் சால்வே !

39

காராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் இருக்கிறது சாவித்திரி பாய் பூலே சீனியர் செகண்டரி பள்ளி. இங்கு ஆங்கில உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார் சஞ்சய் சால்வே (வயது 41). அவரது பள்ளியில் நடக்கும் இந்து மத வழிபாட்டில் கைகூப்பி நிற்காத காரணத்துக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2009 முதல் அவருக்கு பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. உடன் வேலை பார்த்த பிற ஆசிரியர்களும் இந்த பிரச்சினைக்கு பிறகு அவருடனான உறவைத் துண்டித்துக் கொண்டனர்.

சஞ்செய் சால்வே
சஞ்செய் சால்வே

இதனைத் தொடர்ந்து அரசிடம் நிதி உதவி பெற்று நடத்தப்படும் கல்வி நிலையங்களில் திணிக்கப்படும் மத வழிபாடுகளை எதிர்த்து நீதிமன்றம், உயர்கல்வி அதிகாரிகள் என பலரிடமும் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போராடி வருகிறார் சஞ்செய் சால்வே. சமீபத்தில் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் தபோல்கரும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என்பது வாசகர்கள் அறிந்ததே.

சுமார் 1,600 மாணவ மாணவிகள் படிக்கும் நாசிக் நகரப் பள்ளியில் நடக்கும் காலை நேர மத வழிபாட்டில் புறங்கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காரணத்துக்காக, அதனை ஒழுங்கீன நடவடிக்கை என ஜூன் 2007-ல் பிரச்சினையை கிளப்புகிறது பள்ளி நிர்வாகம். ” நாத்திகனான நான் கடவுளை எப்படி கைகூப்பி தொழ முடியும் ?” என்று கேள்வியெழுப்புகிறார் சால்வே. தலைமையாசிரியர் மதூக்கர் பச்சாவ் இதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்கிறார். “நான் ஒரு நாத்திகன். நான் நம்பாத ஒரு மத வழிபாட்டிலும் கலந்துகொள்ள இயலாது. கலந்துகொள்ள வலியுறுத்துவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று பதிலளிக்கிறார் சால்வே.

“இந்த ஒழுங்கீனத்தை நாங்கள் கவனிக்க தவறியிருந்தால் மற்றவர்களிடமும் இது பரவியிருக்கும். இந்த ஒழுங்கீன நடவடிக்கையின் பேரில் அவரது வேலைகளில் திருப்தியில்லை என முடிவு செய்தோம். எனவே அவருக்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது” என்று கூறுகிறார் தலைமையாசிரியர். 2008-09-ம் ஆண்டுக்கான பணி ரகசிய குறிப்பேட்டில் அவரது வேலையில் திருப்தியில்லை என பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டு விடவே, பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அவருக்கு தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

பல முறை அரசு அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. 2010-ல் மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றம் சால்வேயின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாசிக் மாவட்ட கல்வியதிகாரிகளுக்கு உத்திரவிட்டது. அவர்களும் இரண்டாண்டுகளாக பல்வேறு முறைகளில் பள்ளி நிர்வாகத்திடம் சொல்லிப் பார்த்தார்கள். நிர்வாகமோ கண்டு கொள்ளவேயில்லை. அவர்கள் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் கண்டு கொள்ளவில்லை. அரசின் நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவோம் என்ற அவர்களது மிரட்டலை எல்லாம் பள்ளி நிர்வாகம் சட்டை பண்ணவேயில்லை. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் மிரட்டலுடன் மாத்திரம் நிறுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார் சஞ்சய் சால்வே. பிரிவு 45(9) குறிப்பிடுவது போல பள்ளிகள் தேசிய கீதம் தவிர்த்து பிற வழிபாட்டு பாடல்களை பாடக் கூடாது என வலியுறுத்துகிறார். “சால்வே என்னிடம் அனுமதி கேட்டிருந்தால் நானே வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விடுப்பு தந்திருப்பேனே” என்கிறார் தலைமையாசிரியர். “இதற்காகவெல்லாம் ஏன் அனுமதி வாங்க வேண்டும். கடைசி வரை போராடுவேன். பணம் மட்டுமல்ல, என்னுடைய சுயமும் இதில் அடங்கியுள்ளது” என்கிறார் சால்வே.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பள்ளிக் கல்வியை கூட முடிக்காத பெற்றோரின் மகனாகப் பிறந்த சஞ்சய் சால்வே 1996 முதல் இந்தப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். புத்தரின் கருத்துக்களில் நம்பிக்கையுடைய சால்வே “பள்ளி மாணவர்களிடம் இன்னமும் தேசிய கீதம் தான் மதிக்கத்தக்கதாக திகழ்கிறது” என்றும் குறிப்பிடுகிறார். இந்து மத பிரார்த்தனையை தவிர்த்துவிட்டு தேசிய கீதத்தை மட்டுமே பாடவேண்டும்  என்று இவர் முன்வைத்திருப்பதால் மராட்டிய சங்பரிவார கும்பல்கள் எரிச்சலடைந்திருப்பது அதிசயமல்ல. சில உறவினர்கள் வழக்கை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினாலும், வீட்டில் உள்ளவர்கள் ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். கடந்த மாதம் பகுத்தறிவாளரும், சமூக போராளியுமான தபோல்கர் படுகொலை செய்யப்பட்ட பிறகு உறவினர்கள் இவரை எச்சரித்த வண்ணமே உள்ளனர்.

19-ம் நூற்றாண்டு மராட்டியத்தில் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும், முதல் ஆசிரியையுமான சாவித்திரி பாய் பூலேவின் பெயரில் அமைந்த இப்பள்ளியில் இச்சம்பவம் நடந்திருப்பது ஒரு முரண் தான். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் திடலில் அல்லேலுயா கூட்டங்கள் வீரமணியால் அனுமதிக்கப்படுவதைப் போலத்தான் இதுவும். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த சாவித்திரிபாய் பூலேவின் கணவர் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே ஆவார்.

ஜோதிராவ் பூலே
ஜோதிராவ் பூலே

திருமணத்திற்கு பிறகுதான் படிக்க ஆரம்பித்த சாவித்திரியை பள்ளி சென்று விட்டு வரும் வழியில் பிற ஆதிக்க சாதியினர் கல்லால் அடிப்பார்களாம். கேவலமாக திட்டுவார்களாம். இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் படித்து முடித்து பெண் கல்விக்கு தனியாக பள்ளிகளெல்லாம் ஆரம்பித்தார் சாவித்திரி. கிணறுகளில் தண்ணீர் சேந்த அனுமதிக்கப்படாத அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியாக கிணறு வெட்டினர் இத்தம்பதிகள். ஆணாதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண் கல்வி, விதவை மறுமணம் என 19ம் நூற்றாண்டின் மராட்டிய மாநில சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னணியாளர்களாக இத்தம்பதியினர் விளங்கினர். 1860களில் ‘உயர்’சாதி விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்க மாட்டோம் என்ற இயக்கத்தை நாவிதர்கள் சங்கம் மூலமாக பம்பாய் மற்றும் புனே நகரங்களில் நடத்திக் காட்டியவர்கள். இப்பேர்ப்பட்ட சமூக சீர்திருத்தவாதிகளின் பெயரில் அமைந்த பள்ளியில்தான் சஞ்செய் சால்வே எனும் தாழ்த்தப்பட்டவருக்கு மதத்தின் பெயரில் ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

பார்ப்பனியத்திற்கு எதிராக பூலே விழிப்புணர்வு ஊட்டிய சூத்திர சாதிகள் இன்று இந்துமதவெறியின் செல்வாக்கில் உள்ளன என்பதற்கு இந்த மாநில கல்வித்துறை மற்றும் பள்ளிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

வரும் 6-ம் தேதி உயர்நீதி மன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்கு வருகிறது. சால்வே முன்வைத்துள்ள அரசியலமைப்பு சட்டம் 28(3) ஆனது, கல்வி நிறுவனங்களில் நடக்கும் மத விழாக்களில் எவரையும் கலந்துகொள்ள சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என்றும், சிறுவர் எனில் பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றும் கூறுகிறது.

பெரும்பாலான இந்திய மொழிகளின் பாடப் புத்தகங்களில் கூட மதரீதியான பாடல்கள் பல இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இந்து மதம் சார்ந்த பாடங்கள்தான் அதிக அளவில் இருக்கின்றன. அதே நேரத்தில் அந்த பாடப் புத்தகங்களில் நாத்திகம் பற்றிய சிறு குறிப்பு கூட இருப்பதில்லை. பாஜக ஆட்சியில் பாடநூல்களை தயாரிக்கையில் வரலாற்றையே திரிக்குமளவுக்கு மாறி இருந்தது. பல்கலைக்கழகத்திலேயே பார்ப்பனப் புரட்டான ஜோசியத்தை பாடத் திட்டமாக கொண்டு வந்தவர்கள்தான் இந்துமதவெறியர்கள்.

ஆரோக்கியமான கல்விக் கூடங்களில், பாடப் புத்தகங்களில் மதரீதியான பாடங்களை, பாடல்களை புறக்கணிக்கக் கோருவது தான் சரியானது. அதுதான் மதச்சார்பற்ற கல்விக்கு அடிப்படை. அதற்கு வெறும் சட்டப் போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியாது. ஏனெனில் இந்துமத வெறியர்கள் சட்டம், பாராளுமன்றத்தை கால் தூசுக்கு கூட மதிப்பதில்லை. சஞ்செய் சால்வேயின் போராட்டத்தை ஆதரிப்போம். இந்துமதவெறியை கருவறுப்போம்.

மேலும் படிக்க

கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !

10

னியார்மயத்தை நியாயப்படுத்துவதற்கு நம் நாட்டு முதலாளிகளும், அரசும் அதிகம் சிரமப்படத் தேவையில்லாத சூழலை உருவாக்கிக் கொடுத்த பெருமை அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையே சாரும். தொலைபேசி, மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் போன்ற சேவைத் துறைகள் தொடங்கி கல்வி வரையில் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை.

ஒருபுறம் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதன் மூலம் அரசுப் பள்ளிகளை அரசே திட்டமிட்டு ஒழித்து வருகிறது. அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு அந்தப் பணியை பல ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். துணைத் தொழில்கள், வட்டிக்கு விடுவது, தனியார் டியூசன், தாமே தனியார் பள்ளிகளைத் துவங்கி நடத்துவது என்று அனைத்து வகை அயோக்கியத்தனங்களையும் கூச்ச நாச்சமின்றி செய்பவர்களாக ஆசிரியர்கள் பலர் உருவாகியிருக்கின்றனர். தமிழ் வழிக் கல்வியாகட்டும், சமச்சீர் கல்வியாகட்டும், கல்விக்கான மானிய வெட்டாக இருக்கட்டும் எந்த ஒன்றையும் எதிர்த்து பெயரளவுக்குக் கூட ஆசிரியர் சங்கங்கள் போராடுவதுமில்லை.

இத்தகைய பாலைவனத்தில் சோலைகளைப் போல ஆங்காங்கே சில அற்புதமான மனிதர்கள், ஆசிரியப் பணிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். பணமில்லாதவனுக்கு கல்வி இல்லை என்பது ஒரு விதியாகவே மாறி வருகின்ற இன்றைய சூழலில், அதனை மறுப்பதற்கான நம்பிக்கையை இத்தகைய ஆசிரியர்கள்தான் நமக்கு வழங்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல. அத்தகைய நம்பிக்கை நட்சத்திரங்களை நாடறியச் செய்வதன் மூலம் கல்வி தனியார்மயத்துக்கு எதிரான போராட்டத்திற்கு வலுச் சேர்க்க இயலும் எனக் கருதுகிறோம்.

மிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளின் நிலைமை பல ஆண்டுகளாக எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்த நோயாளிகளைப் போல் பரிதாபகரமானதாகவே உள்ளது. இந்த நம்பிக்கையற்ற சூழலில், இருண்ட கானகத்தின் மத்தியில் மருத்துவ உபகரணங்களோ வசதிகளோ இன்றி இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிகரானதொரு சாதனையை சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள். அத்தகையதொரு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம்.

சுமார் 150 குடும்பங்களைக் கொண்ட கவரப்பட்டு கிராமம் சிதம்பரம் நகரில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வாண்டையார் குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு மாளிகைகளைத் தவிர பெரும்பாலும் ஓலைக் குடிசைகளே கண்ணில் தட்டுப்படுகின்றன. வளமாக விவசாயம் நடக்கும் பகுதி. பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். வேலை இல்லாத நாட்களில் அரசின் நூறு நாள் வேலைக்கும் செல்கிறார்கள். ஊரில் இரண்டு மளிகைக் கடைகள். கொஞ்சம் பெரிதாகத் தெரிந்த கடையின் ஒரு நாள் வியாபாரம் 300 ரூபாயாம். இதுதான் அவ்வூர் மக்களின் பொருளாதார நிலைமை.

கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். சுற்றுவட்டாரத்தில் உள்ள வீரன் கோவில் திட்டு, சிவபுரி, அம்பிகாபுரம், வடுகத்திருமேடு கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்த உயர்நிலைப் பள்ளிக்குத்தான் படிக்க வருகிறார்கள். தலைமையாசிரியர் பழனிவேல் இந்தப் பள்ளிக்குப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆவதாகச் சொன்னார். திருத்தமான கட்டிடங்கள் அழகாகப் பராமரிக்கப்பட்டு வருவதைக் காண முடிந்தது. ஒவ்வொரு வகுப்பறையும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரத்தோடு கடமை முடிந்தது என்று கருதி கூலிக்கு மாரடிக்கும் பல அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்தியில், கவரப்பட்டு தலைமையாசிரியர் பழனிவேல் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

வகுப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பண்பை மாணவர்களுக்கு கற்றுத் தர சுழற்கோப்பை ஒன்றை அவர் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாதமும் தூய்மையான வகுப்பு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வகுப்புக்கு சுழற்கோப்பை பரிசளிக்கப்படும். சுழற்கோப்பையைப் பரிசாகப் பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டு பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாதந்தோறும் ஒட்டப்படும். சுழற்கோப்பை பரிசு பெற்ற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பழனிவேல் தனது சொந்த முயற்சியில் மாணவர் அடையாள அட்டை ஒன்றை வழங்குகிறார். இந்த அடையாள அட்டையைப் பெறுவதோடு, கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற ஆசையில் எல்லா வகுப்புகளும் அவ்வளவு தூய்மையாக மாணவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மாலையில் பள்ளி முடிந்த பின் துப்புரவுப் பணிக்கான நேரம் தொடங்குகிறது. வகுப்பறைத் தூய்மை மாத்திரமல்ல, மாணவர்களும் நேர்த்தியாக சீருடை அணிந்திருக்க வேண்டும் என்பதில் பழனிவேல் கவனமாக இருக்கிறார்.

“எங்க பசங்க நல்லா விளையாடும் ஆர்வம் கொண்டவங்க சார். விளையாட்டிலே சில நேரம் சட்டை பொத்தான்கள் அறுந்து விடும், அல்லது கால் சட்டை கிழிந்து விடும். அதற்காக இங்கே ஒரு பழைய தையல் இயந்திரத்தை நானே பழுது பார்த்து வைத்திருக்கிறேன். கால் சட்டை கிழிந்து தைக்க நேர்ந்தால், இடைப்பட்ட அந்த நேரத்தில் அணிந்து கொள்ள மாற்று உடைகளும் ஒரு தனியறையில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். மாணவர்கள் அவர்களே தங்கள் உடைகளைத் தைத்துக் கொள்ளலாம்”

தனது பள்ளியின் சின்னச் சின்ன செயல்பாடுகளைப் பற்றி விவரிக்கும் போதும் பழனிவேல் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகத்தோடு பேசுகிறார். மாணவிகளின் மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, பள்ளியில் ஒரு பெண் ஆசிரியையின் பொறுப்பில் இலவச சானிடரி நாப்கின்கள் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளன.  மாணவர்களுடைய சைக்கிள் சக்கரத்தில் காற்று போய் விட்டால் காற்று நிரப்ப அடி பம்ப் ஒன்றும், பஞ்சராகி விட்டால் பழுது பார்த்துக் கொள்ள தேவையான உபகரணங்களும் பழனிவேலின் சொந்த முயற்சியில் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளன.

“பசங்களுக்கு பஞ்சர் ஒட்டத் தெரிஞ்சிருக்கணும் சார். சொந்தமா ஒரு வேலை கத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு, தன்னோட சைக்கிளை தானே சரி செய்த மாதிரியும் ஆச்சு. தங்களோட கிழிந்த சீருடைகளைத் தைக்க எளிமையாக தையல் போடவும் கற்றுக் கொள்கிறார்கள் சார். நானே எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்ல மாட்டேன் சார். பசங்களுக்கு வழியைக் காட்டிட்டா அப்புறம் அவங்க கற்பூரம் போல பிடிச்சுக்குவாங்க” என்று சொல்லும் பழனிவேல், பள்ளி நேரம் முடிந்த பின்னும் இரவு எட்டு, ஒன்பது மணி வரை பள்ளியிலேயே தான் இருக்கிறார்.

”கல்வி போதிப்பது மட்டுமல்ல, மாணவர்களுக்கு அறிதலின் மேல் ஒரு ஆர்வமும், அக்கறையும் வரவழைப்பது தான் பள்ளியின் கடமை” என்கிறார் பழனிவேல். கவரப்பட்டு பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிற்கும் மாணவர் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பொறுப்பில் செய்திப் பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. தினசரி தமிழ் நாளிதழ் ஒன்று தலைமையாசிரியரின் ஏற்பாட்டின் பேரில் எல்லா வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் மாணவர்கள் செய்தித் தாளில் இருந்து சில முக்கியச் செய்திகளை வாசிக்க, மாணவர் தலைவர் அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திக் குறிப்புகளை செய்திப் பதிவேட்டில் குறித்துக் கொள்கிறார்.

பள்ளியில் அறிவியல் மன்றம், தமிழ் மன்றம், கணித மன்றம், சமூக அறிவியல் மன்றம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளில் பாட நூலில் இல்லாத ஒரு கேள்வி அன்றாடம் கேட்கப்படுகிறது. இதற்கான பதிலை மாணவர்கள் நூலகத்திலிருந்து தேடி எடுத்து, அதற்கான கரும்பலகையில் எழுத வேண்டும். சரியான பதிலை முதலில் எழுதுபவரின் பெயர் அடுத்த நாள் காலை மாணவர் கூடலின்போது அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

இது தவிர, ‘நூலகத்தில் இன்று நான் அறிந்து கொண்டது’ என்கிற வகையினத்தில் கரும்பலகை ஒன்றும், ‘இன்றைய செய்தியிலிருந்து’ என்கிற வகையினத்தில் இன்னொரு கரும்பலகையும் பள்ளியில் பராமரிக்கப்படுகிறது. மாணவர்கள் அன்றைக்கு கற்றுக் கொண்டதிலிருந்து சில குறிப்புகளை அந்தக் கரும்பலகையில் எழுதலாம். மேலும் புகார் பெட்டியும், ஆலோசனை பெட்டிகளும் மாணவர்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. நல்ல குறிப்புகளை எழுதும் மாணவர்களுக்கும், நல்ல ஆலோசனைகளைச் சொல்லும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி பள்ளியில் தவற விடப்பட்ட பொருட்கள் கிடைத்தால் ஒப்படைக்கும் மாணவர்களுக்கும் கூட காலைக் கூட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தலைமை ஆசிரியர் பழனிவேல் அளிக்கும் பரிசு 50 பைசா மிட்டாயாக இருக்கலாம், அல்லது பள்ளியின் இலச்சினை பொறிக்கப்பட்ட சின்ன பேட்ஜாகவும் இருக்கலாம். அதை எல்லோர் முன்னிலையிலும் அறிவித்து மனம் நிறைந்த பாராட்டுக்களோடு வழங்குகிறார்.

“விலை மதிப்பு ஒரு பிரச்சினை இல்லை சார். மற்ற மாணவர்கள் முன்னிலையில் பாராட்டுக்களைப் பெறுவதும், அங்கீகாரம் கிடைப்பதும் தான் முக்கியம். பசங்க தங்களை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று தாங்களே கருத வேண்டும்.  அதற்காக நான் செய்வதெல்லாம் சின்னச் சின்ன ஊக்குவிப்புகள், அவ்வளவுதான்” என்கிறார் பழனிவேல்.

நாங்கள் பள்ளி முடிந்ததும் அங்கேயே அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த சில மாணவிகளிடம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் தங்கள் பள்ளியையும் ஆசிரியர்களையும் உணர்வுப்பூர்வமாக நேசிப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அவர்கள் ஏழு  அல்லது எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவிகள். பொது அறிவைச் சோதிக்கும் சில கேள்விகளோடு, இறுதியாக ”வாழ்க்கையில் நீங்கள் எல்லோரும் என்னவாக வேண்டும் என்று லட்சியம் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டோம். சிலர் மருத்துவராகப் போவதாகவும், கலெக்டர் ஆகப் போவதாகவும் சொன்னார்கள்.

கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள்
உற்சாகமாய் கவரப்பட்டு மாணவிகள்

இன்னும் சில மாணவிகள் ஆசிரியைகள் ஆவோம் என்றனர். அவர்களிடம் காரணம் கேட்டோம், “நானும் டீச்சர் ஆகி, எங்க ஹெச்.எம் போல யாரையும் அடிக்காம நல்லா பாடம் நடத்துவேன் சார்” என்பதாக இருந்தது அவர்களின் பதில்கள்.

மாணவிகளோடு பேசி விட்டு தலைமையாசிரியர் பழனிவேலின் அறைக்கு வந்தோம். சரியாக அந்த நேரம் பார்த்து ஒரு மாணவி தனது தந்தையோடு வந்திருந்தாள்.

“சார், இந்த பாரத்தை நிரப்பத் தெரியல. கொஞ்சம் நிரப்பிக் கொடுக்க முடியுமா?” அந்தப் பெண்ணின் தந்தை தயங்கியவாரே அறை வாசலில் நின்றார்.

“உள்ளே வாங்க சார்” என்றவர், “இவள் பெயர் மன்மதா. எங்க பள்ளியின் மாணவி தான். இந்த வருசம் நடந்த பொதுத்தேர்வில் எங்க பள்ளியிலேயே அதிக மதிப்பெண் வாங்கிய பெண் இவள் தான். இப்போ பதினோராம் வகுப்பில் சேர சிதம்பரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விண்ணப்பிக்கப் போறாங்க” என்று எங்களிடம் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணின் தந்தையிடம் இருந்து விண்ணப்பப் படிவத்தை வாங்கி விவரங்களைக் கேட்டு நிரப்பத் துவங்கினார்.

நிமிர்ந்து பார்த்தோம். தலைமை ஆசிரியர் நாற்காலிக்கு மேல் “இந்த ஆண்டின் சாதனையாளர்கள்” என்ற தலைப்பிட்டு பெரிய வழவழப்பான தாளில் மாணவி மன்மதாவின் புகைப்படமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த மற்ற மாணவர்களின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் பெண்ணின் ஏழைத் தந்தை தனது மகளின் பெயர் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு கண்ணில் நீர்மல்க நின்று கொண்டிருந்தார். நாம் அவரை நோக்கித் திரும்பியதும் நாம் ஏதும் கேட்காமலேயே பேசத் துவங்கினார்.

“சார், நான் சிதம்பரத்தில் ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கேன். நம்மள மாதிரி கஷ்டப்படாம நம்ம பிள்ளைங்களாவது நல்லா இருக்கணும் சார். எங்க ஹெச்.எம் வந்த பின்னாடி தான் இந்தப் பள்ளிக்கூடமே இவ்வளவு நல்லா நடக்குதுன்னு எழுதிக்கங்க சார்”. மன்மதா 96 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். இரண்டாம் இடம் பிடித்திருந்த ராபின் ராஜ், அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.

தலைமையாசிரியர் பழனிவேல், மன்மதா, ஆட்டோ ஓட்டுநரான தந்தை
தலைமையாசிரியர் பழனிவேல், மன்மதா, ஆட்டோ ஓட்டுநரான தந்தை

பழனிவேல் இந்தப் பள்ளிக்கு வருவதற்கு முன்னர் வேலை பார்த்துக் கொண்டிருந்த பள்ளியிலும் இதே போன்ற முன்முயற்சியோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். பணிமாற்றம் செய்யப்படுகிறார் என்ற செய்தி பரவியதும் மாணவர்கள் கண்ணீருடன் அவரைத் தடுத்திருக்கிறார்கள். பெற்றோர்கள் சாலை மறியல் செய்திருக்கிறார்கள். பின்னர் பழனிவேல் தானே தலையிட்டு அவர்களை சமாதானம் செய்திருக்கிறார். மக்களால் கண்ணீரோடு விடையளிக்கப்பட்டு இங்கே வந்திருக்கிறார்.

மெல்ல இருள் கவியத் தொடங்கி விட்டது. கவரப்பட்டிலிருந்து சிதம்பரம் செல்வதற்கான கடைசிப் பேருந்தைப் பிடிக்க வேண்டும்.

“நீங்க கிளம்புங்க சார். இங்கே பத்தாவது படிச்ச பசங்க இப்ப வேற பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படிக்கிறவங்க டியூசனுக்கு வருவாங்க. நான் அடிப்படையில் அறிவியல் ஆசிரியர்” என்றார் பழனிவேல். இந்த இலவச டியூசனுக்குப் பின்னர், இரவு ஒன்பது மணிக்குத்தான் அவரது வேலை நாள் முடிவடைகிறது.

“இந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமான ஆர்வம் எப்படி சாத்தியமாயிற்று?” என்ற கேள்விக்கு லேசாகப் புன்னகைத்துக் கொண்டார்.

“நீங்க பெரிய வார்த்தைகள் எல்லாம் போடறீங்க. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறேன்; அவ்வளவு தான். எங்களைப் போன்ற ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைங்கள அனுப்பறாங்க. அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்வது என்னுடைய கடமை. அதைச் செய்கிறேன். அவ்வளவு தான்”  என்றார்.

அவர் சொல்வது எளிய உண்மையாகத்தான் இருக்கிறது. எனினும் அது தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அளவுக்கு அரிதாக இருக்கிறதே!

–    புதிய கலாச்சாரம் செய்தியாளர்
________________________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
________________________________________________________________

புகைப்படத் தொகுப்பு [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இப்படியும் வளர்கிறார்கள் !

7

ம் அன்றாட வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகளை கடந்து செல்கிறோம். சில நிகழ்வுகள் நாம் பார்த்த கணத்தில் பல விதமான எண்ணங்களை கொண்டு வரும். ஒரு சில நிகழ்வுகள் சில மணி நேரம் வரை நிழலாடும். பின்பு மறைந்து விடும். ஒரு சில நிகழ்வு மட்டும் நம் மனதில் ஆணி அடித்தாற்போல் பதிந்து விடும். அவற்றில் குழந்தைகள் பற்றிய விசயத்திற்கு நிச்சயம் இடமுண்டு.

குழந்தை என்றாலே அது ஒரு வரப்பிரசாதம், தவமாய் தவமிருந்தாலும் குழந்தைச் செல்வம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது என்பது சமூகத்தில் குடிகொண்டிருக்கும் ஆழமான கருத்து. அப்படி அபூர்வமாக கொண்டாடிதான் குழந்தையை வளர்ப்போம், ரசிப்போம். தரையில நடக்க விடமாட்டோம். ஒரு தடவைக்கு நாலு தடவை வீட்டை சுத்தம் செஞ்சு குழந்தையை விளையாட விடுவோம். குளிக்க வைக்கிறது, பவுடர் பூசறது, சட்ட மாத்துறதுன்னு பாத்து பாத்து வளர்ப்போம். ஆனால் பல குழந்தைகள் எப்படியெல்லாம் வளர்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை யோசிக்கத் தூண்டும். அப்படி நான் பார்த்த சில நிகழ்வுகள்தான் இவை.

1. உழைக்கும் தாய்வீட்டுக்கு பக்கத்துல ஒரு கோயில் இருக்கு. அங்கு ஏதோ திருவிழா நடந்தது. வேடிக்கை பார்க்க என் குழந்தையுடன் போயிருந்தேன். கோயில் வாசல்ல ஒரு அம்மா கைக்குழந்தைய வச்சுகிட்டு நெய் எடுத்து அகல் விளக்கில் நிரப்பி  வித்துகிட்டு இருந்தாங்க. ஒரு வயசுகூட நிரம்பாத அந்த குழந்தையை பக்கத்துல துணிய விரிச்சுப் போட்டு அதுல குழந்தைய உக்கார வச்சுட்டு, குழந்தை கையில இரண்டு அகல் விளக்கை விளையாட கொடுத்துட்டு தன் வியாபாரத்துல கவனமா இருந்தாங்க.

நேரம் பாத்து குழந்தை கக்கா போய் வச்சிருச்சு. அவசர அவசரமா யாரும் பாக்றதுக்குள்ள துணிய எடுத்து தொடச்சு சுத்தம் செஞ்சுட்டு, சாமிக்கு புரியும் நம் சிரமம் என்பது போல், அந்த பீயெடுத்த கையால நெய்யெடுத்து அகல் விளக்குல நிரப்புற தன் வேலையில ஈடுபட ஆரம்பிச்சாங்க. நான் பாத்தத தெரிஞ்சுகிட்ட அவங்க சினேகமா சிரிச்சாங்க.

2. பக்கத்து வீட்டுல முதல் மாடி கட்டிட வேலை நடந்துகிட்டு இருக்கு. ஒப்பந்த முறைப்படி கட்டிட்டு இருக்காங்க, சித்தாள் வேலை செய்பவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்கள். அதுல இரண்டு வயது நிரம்பாத ஒரு குழந்தையை வச்சுக்கிட்டு ஒரு அம்மா வேலை செய்றாங்க, பிள்ளைய இடுப்புல வச்சுகிட்டு சிமெண்ட் பூசப்பட்ட இடத்துக்கு தண்ணி ஊத்துறாங்க. கொத்தனாருக்கு செங்கல் எடுத்து தலைக்கு மேல கொடுக்குறாங்க, இடுப்புல இருக்குற குழந்தை எடுக்கறதையும் கொடுக்குறதையும் பாத்துகிட்டே இருக்கு. சாக்க விரிச்சுப் போட்டு குழந்தைய உட்கார வச்சுட்டு சிந்துற சிமெண்ட பெருக்கி அள்றாங்க. கனத்த மனதுடன் பார்த்துக் கொண்டிருந்த நான், இறக்கி விட்டஎன் குழந்தை அழுததும் தான் உணர்ந்தேன் குழந்தையை தூக்கி வைத்திருப்பதால் வரும் இடுப்பு வலி அந்த பெண்ணுக்கில்லையா?

3. வேலை காரணமா ஒரு பைண்டிங் ஆபீஸ்சுக்கு போயிருந்தேன். அந்த பைண்டிங் செய்ற இடம், பத்துக்கு பத்துல ஒரு அறையும், கிச்சன் போல சின்னதா ஒரு அறையுமா இரண்டு அறைகள் கொண்டதா இருக்கும். அதுல பைண்டிங் உரிமையாளரையும் சேர்த்து ஏழு தொழிலாளிகள் இருப்பாங்க. தேவையான மிஷின்களும் இருக்கும். சொந்த அச்சகம் இல்லாத பத்திரிகைகள் பலவும் அங்கதான் பைண்டிங் செய்றாங்க. பைண்டிங் தொழில் சொந்தக்காரருக்கு ஆறு வயசு, அஞ்சு வயசுல இரண்டு பிள்ளைகள் இருக்காங்க. அவங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை முடிச்சுட்டு, பசங்க திரும்பி வந்தா சாப்பிட சாப்பாடு எடுத்துக் கொண்டு அவங்களும் ஒரு தொழிலாளியா வேலைக்கு வந்தர்ராங்க.

பள்ளிக்கூடம் முடிஞ்சு நேரா பைண்டிங் செய்ற இடத்துக்குத்தான் அந்த குழந்தைகள் வர்ராங்க. அங்கேயே சாப்பிட்டு விட்டு, பேப்பர் தூசிய சுவாசிச்சுகிட்டே, ஓடுற மிஷின்களுக்கு மத்தியில் புகுந்து விளையாடுறாங்க, பைண்டிங் செய்து வெட்டிப் போட்ட காகித துண்டுகளுக்கு நடுவுல, வெட்டப்படாத முழு ஃபாரத்தை எடுத்துப்போட்டு, அந்த குப்பைகளுக்கு நடுவுலயே தூங்குறாங்க.

4.ஏழை குழந்தை இடுப்புல குழந்தைய வச்சுகிட்டு ஒரு அம்மா, தலையில தொடப்பத்த சுமந்துகிட்டு வித்துகிட்டு வந்தாங்க. அபார்மெண்டு குடியிருப்பு பகுதியில் நிறுத்தி தொடப்பத்தோட விலையை விசாரிச்சாங்க மாடி வீட்டு மகராசிங்க. “ஒரு தொடப்பம் நாப்பத்தி அஞ்சு ரூபா, இடுப்புல குழந்தைய வச்சுக்கிட்டு தலையில சுமை தூக்க முடியல, அதுவும் தவிர குழந்தை பாலுக்கு அழுவுது அதனால ரெண்டா எடுத்துக்கங்க எண்பது ரூபா கொடுங்க” என்றார். ‘’இது நல்லா கூட்டுமா, இல்ல எல்லாம் கொட்டி போகுமா, இரு கொட்டுதான்னு பெருக்கிப் பாப்போம், சரவணா ஸ்டோர்ல நின்னு கிட்டே கூட்டலாம் அந்த அளவு நீட்டமா இருக்கும். கொட்டவும் கொட்டாது அவங்களே நாப்பது ரூபாய்க்குதான் குடுக்குறாங்க. நீ என்னா ஒரு அடி நீளத்த வச்சுக்கிட்டு இவ்வளவு விலை சொல்ற’’ என்று வாங்கும் எண்ணம் இல்லாமல் பொழுது போக்காக அரட்டை அடித்தார்கள்.

அவள் குழந்தைக்குப் பசியாத்தும் மன நிலையில், “கொடுக்கறத கொடுத்துட்டு எடுத்துக்கங்கம்மா” என்றார். அவள் சுமையை குறைக்கும் விதமாக நான் போய் ஒரு துடப்பம் வாங்கினேனே தவிர அவள் உழைப்புக்கு மரியாதை கொடுத்து, மற்றவர்களை விமர்சிக்க தயங்கிய நானும் அவளது துன்பத்தை எந்த அளவுக்கு புரிந்து கொண்டேன் ?

5. வீட்டோட தங்கி வேலை செய்யும் ஒரு பெண், தன்னோட ஒன்றரை வயசு குழந்தையை இரண்டாவது மாடியில் தனி அறையில் விட்டுட்டு, பக்கத்தில் ஒட்டுனாப் போல இருக்கும் முதலாளியின் வீட்டுக்கு வேலை செய்ய போய்விடுவாள். துணி துவைப்பதற்கும், காயப் போடுவதற்கும் மாடிக்கு வரவேண்டும். அப்படி வரும்போது இந்த குழந்தை சன்னல் வழியாக பார்த்தால் அம்மா முதலாளி வீட்டு மாடியில் வேலை செய்வது தெரியும். முதலாளியின் பேரப்பிள்ளையை வேடிக்கை பார்த்துக் கொண்டு சாப்பிடுவதற்காக மாடிக்கு அழைத்து வருவார் முதலாளியம்மா.  வீட்டு வேலை செய்யும் பெண்ணோ இந்த குழந்தைக்கு ஆடிப் பாடி விளையாட்டு காண்பிக்க வேண்டும். அம்மா ஆடிப்பாடுவதை சிரித்த முகத்துடனும், நமக்காக அம்மா ஒரு போதும் இப்படி செய்யவில்லையே என்ற ஏக்கத்தோடும் அம்மாவின் புடவையை அணைத்துக் கொண்டு சன்னல் வழியாக பார்க்கும் அந்த பிஞ்சு நெஞ்சம்.

6. பணக்கார குழந்தைஇது ஒருபுறம் மனதை கலங்கடிக்க, மறுபுறம் இதற்கு எதிரான வேறு ஒரு உலகத்தோடு புழங்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
என் தோழிக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் பேரப்பிள்ளையின் வருகையை கொண்டாடும் விதமாக, கோவிலுக்கு நான்கு லட்சம் செலவு செய்து உள்ளார்கள். அன்னதானம், நெய் அபிசேகம், பாலபிசேகம்னு, கண்டது கடையதுமான வேண்டுதலையும் செய்துருக்காங்க, சாமிக்கிட்ட நல்லா ரெக்கமெண்ட் பண்ணச் சொல்லி, ஐயருக்கு பல்க்கா மொய் கொடுத்தும் கவனிச்சாங்க. அந்த குழந்தை உட்கார்ந்து டி.வி பார்ப்பதற்க்கு மட்டும் குழந்தைகள் சோபா செட் அம்பத்தி அஞ்சாயிரத்துக்கு வாங்கி இருக்காங்க. இன்னும் ஆறு மாசம் போனா அதை பயன்படுத்த முடியாது. அவ்வளவு சின்னதா இருக்கும்.

7. அந்த வீட்ல நாலு வயசுல இன்னெரு பெண் குழந்தையும் இருக்கு. அந்த குழந்தையை பார்த்துக்கறதுக்கு பதினஞ்சு வயசுல ஒரு வேலைக்கார குழந்தையும் இருக்கு. அந்த குழந்தை, மத்தியானமும், இரவும் சாப்பிடுவதற்காக வேலைக்கார குழந்தைதான் ஒரு கிலோமீட்டர் தொலைவுல உள்ள பார்க்குக்கு கூட்டிட்டு போகனுமாம். வீட்டிலேயே பாதாம், பிஸ்தான்னு விலை உயர்ந்த தின்பண்டங்கள் இருந்தாலும் தினமும் ஐஸ்க்ரீம், லேஸ், குர்க்குரே, இப்படி வாங்கிக் கொடுக்க நூறு ரூபா கொடுப்பாங்களாம். சொல்றத கேட்காம குழந்தை நடந்துக் கொண்டால், வேலை செய்யும் பெண் ஒரு வார்த்தை கடிந்து பேசக் கூடாதாம். நாம் எது செய்தாலும் வேலைக்கார பெண்ணைத் தான் திட்டுவாங்க என்பதை நன்கு உணர்ந்துக் கொண்ட குழந்தை, பொழுது போக்கு போல அந்த பெண்ணை போட்டுக் கொடுத்து திட்டு வாங்க வைத்து ரசிக்குமாம். பெரியவர்கள் நடந்து கொள்ளும் பண்பில்தான் குழந்தையும் வளர்வார்கள்.

குழந்தைகளுக்கான நுகர்வுஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் குழந்தைக்கு பிறந்த நாள் விழா. வீடெல்லாம் பலூன் கட்டி, கலர் பேப்பர் கட்டி கோலாகலமாக காட்சியளித்தது. உணவு வகைகளிலேயே அவர்கள் ‘பாசம்’ தெரிந்தது. சாப்பிட்ட பிறகு குழந்தையின் அப்பா பேச ஆரம்பித்தார். “என் குழந்தை இது வேணும், அது வேணும் என்று கேட்க தேவையில்லை. எதை பார்க்குதோ அதை உடனே வாங்கி கொடுத்துடுவேன். நாம் ஒன்னு ஆசைப்பட்டு கிடைக்கலயே என்ற ஏமாற்றம் குழந்தைக்கு வந்துட கூடாது. இந்த வயசுக்கே என் பொண்ணுக்கு மட்டும் அம்பது பவுன் நகை வாங்கி போட்டிருக்கேன். எந்த ஒரு விசேசம் என்றாலும் குழந்தைகளுக்கு புது ட்ரெஸ்சுதான் எடுப்பேன். ஒரு விசேசத்துக்கு போட்ட ட்ரெஸ்ச மற்றொரு விசேசத்துக்கு போடமாட்டாங்க. அவளே இது ஏற்கனவே போட்ட ட்ரெஸ்சு டாடின்னு கரைக்டா சொல்லிருவா.” என்றார்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் சிறிது நேரத்துக்கு முன்தான் அந்த குழந்தை அந்த உடையை அவுத்துப் போட்டுவிட்டு ஜட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தது. மூன்று கிலோவுக்கு குறையாமல் இருக்கும் அந்த உடை. குடை வடிவில் விரித்தாற் போல் இருந்தது. மணிகள், கற்கள், கண்ணாடி என்று உடம்பை உறுத்தும் அனைத்தும் அதில் இருந்தது. அடுக்கடுக்கா ஏழு எட்டு துணி வகைகளை கொண்டதாகவும் இருந்தது. ஓடி ஆடி விளையாடும் குழந்தை எப்படி இவ்வளவு வெயிட்டை தூக்கிக்கொண்டு இருக்கும். ஆடம்பரத்துக்காக குழந்தைக்கு பொருந்தாத ஒரு உடையை போட்டுவிட்டால் அது எப்படி அணிந்து கொள்ளும். அவுத்துப் போட்டுட்டு அம்மணமா திரியுது.

ஒரு புறம் இப்படி அதிக செல்வாக்குடன் தேவைக்கு அதிகமாக கொடுத்து வளர்க்கப் படும் குழந்தைகள். மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள்.

உழைக்கும் பெண்செல்வாக்குடன் வளர்க்கப்படும் குழந்தைகள், பொருட்கள் மீது அதிக ஆவல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தியற்றவர்களாக ஆக்கப் படுகிறார்கள். பணத்தை முன்னிலைப் படுத்திதான் எந்த முடிவும் எடுக்கிறார்கள். நம்ம சம்பாதிப்பது எல்லாம் குழந்தைகளுக்கு தான் அதுங்க ஆசைப்படுவதெல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியா வச்சுக்கிறதுதான் நல்ல வளர்ப்பு முறை என்று பலரும் கருதுகிறார்கள். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து ஓவர் செல்லம் கொடுப்பதன் விளைவு தன்னைத் தவிர நம் பெற்றவர்களுக்கு எதுவும் பெரிதல்ல என்ற மன நிலையைத் தந்து குழந்தையின் சிந்தனையையும் செயலையும் முடமாக்கி விடும்.

மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள். சிறுவயதில் கிடைக்க வேண்டிய தாயின் அரவணைப்பும், விளையாட்டும் பறி கொடுத்து விட்டு, பெற்றவர்களின் உழைப்பை வேடிக்கை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த பெற்றவர்கள் குழந்தைக்கு கார், பங்களா என்று பெருசு பெருசாக சொத்து சேர்ப்பதற்க்காக உழைக்க வில்லை. ஒரு வேள சோத்துக்காக. அள்ளி அணைத்து கொஞ்சி விளையாடி மகிழ வேண்டிய குழந்தைப் பருவத்தை, அனுபவிக்க முடியாமல் வறுமையின் சுமை குழந்தைகளுக்கும் சேர்த்து தண்டனை தருகிறது. குழந்தை பருவத்து மகிழ்ச்சியை விரயமாக்கி, வாழ்க்கையின் யதார்த்த இன்னல்களை சந்திக்க, ஆரம்ப பாடசாலையாக நினைத்துக்கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்துக் கொண்டு சமூக மனிதர்களை வேடிக்கை பார்க்கின்றது.

குழந்தைக்கு அடுத்த வேளை சாப்பாட்டுத் தேவைக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் இந்த மனிதர்களின் முக்கிய பிரச்சனை. வியர்வை சிந்தும் வேலைகளுக்கு நடுவில் பெற்றவர்களுக்கு குழந்தையின் மகிழ்ச்சியை பற்றி நினைத்துப் பார்க்க கூட முடிவதில்லை என்பதுதான் யதார்த்தம். எனினும் இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் சமூகத்திற்கு பொறுப்பானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நானே கண்டிருக்கிறேன். வாழ்க்கை பிரச்சினைகள், துயரங்கள், கொடிய வறுமை அனைத்தையும் இவர்கள் எதிர் கொள்ளும் நம்பிக்கையினை பெறுகிறார்கள். மறுபுறம் எல்லா வசதிகளும் தேவைக்கு அதிகமாய் இருந்தும் வசதி படைத்த குழந்தைகள் சுய நம்பிக்கை, தைரியமற்று இருப்பதோடு சின்னச் சின்ன விசயங்களுக்காகக் கூட அடுத்தவர்களை எதிர்பார்ப்பதும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள பணம் தேவை என்று கருதுவதும் என்று கோளாறாக வளர்கிறார்கள்.

எல்லாத்துக்கும் என்னவோ அதுதான் நமக்கு என்ற கூட்டுத்துவ உணர்வை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது ரொம்ப முக்கியம். இது ஏழை பாழைங்கள் கத்துக் கொடுக்க முடியும். ஆனா நடுத்தர வர்க்கத்துக்கு காசு பணம் நிறைய இருந்தாலும் குழந்தைகளுக்கு இதை கத்துக் கொடுக்கிறது ரொம்ப கஷ்டம்.

– சரசம்மா

ஆனந்த் நகரத்தின் வாடகைத் தாய்மார்கள் !

1

குஜராத் மாநிலத்தில் பால் உற்பத்தியை மையமாக வைத்த ‘வெண்மைப் புரட்சி’க்கு பிரபலமான ஊர் ஆனந்த் நகரம். இப்போது வாடகைத் தாய் விசயத்திலும் இந்திய அளவில் முதலிடத்தை பெற்றிருக்கிறது இந்த நகரம். இந்தியாவின் ஏழைத் தாய்மார்கள் பிழைப்பதற்கு வேறு வழியின்றி சுமக்கும் இந்த வாடகைத் தாய் முறை உண்மையில் அவர்களை ஏழைகள் என்பதால் பொருளாதார முறையிலும், பெண்களென்பதால் பாலின முறையிலும் ஒரு சேர சுரண்டுகிறது.

வாடகைத் தாய்
இரண்டு குழந்தைளை சுமக்கும் வாடகைத் தாய் சுமன் (தனது சொந்த குடும்பத்துடன்).

மருத்துவர் நயினா பட்டேல் என்ற பெண்மணி நடத்தும் சத் கைவால் மருத்துவமனை மற்றும் அகங்ஷா செயற்கை கருத்தரிப்பு மையம் ஆகியன ஆனந்த நகரில் முக்கியமான வாடகைத் தாய்களின் இருப்பிடம். இங்குதான் நாடு முழுதுமிருந்து பணம் தேவைப்படும் ஏழைத் தம்பதியினரும், டாக்சியில் வந்திறங்கும் குழந்தை தேவைப்படும் வெளிநாட்டு, உள்நாட்டு வசதியான தம்பதியரும் சந்திக்கின்றனர். 2005 முதல் இந்த தொழிலில் ஏராளம் இடைத் தரகர்களும் உலாவுகின்றனர். ஏறக்குறைய ரூ. 3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வாடகைத் தாய் முறைக்கு கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தொகை அமெரிக்காவில் ரூ.35 லட்சம் என்பதால் அங்கிருந்தும் குழந்தை தேவைப்படும் நடுத்தர வர்க்கத்தினர் இங்கு வருகிறார்கள்.

இங்கு வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டும் தான் இந்திய குழந்தைகள். மற்றொரு பங்கு வெளிநாடு வாழ் இந்திய தம்பதியினருக்கானது, மற்றொரு பங்கு 34 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதிகளுக்கானது. ஒரு லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மருத்துவமனை  ஒன்றை புறநகர் பகுதியில் வரும் மார்ச் 2014-ல் டாக்டர் நயினா பட்டேல் திறக்கவுள்ளார். அதில் குழந்தை பெற விரும்பும் தம்பதிகள், வாடகைத் தாய்கள், பிறந்த குழந்தைகளுக்கான வசதி, ஐ.வி.எஃப் வசதி ஆகியன இருக்கும்.

மாதமொன்றுக்கு ரூ.2000 வரை மட்டுமே தினசரி வீட்டு வேலைகள் மூலம் சம்பாதிக்கும் இளவயதுப் பெண்கள் கடும் விலைவாசி உயர்வுக்கு ஈடுகட்ட இந்த வேலையை தேர்வு செய்கின்றனர். இது போன்ற மருத்துவமனைகள் 21 வயது முதல் 35 வரை உள்ள பெண்களையே தேர்வு செய்கின்றனர். காச நோய், புற்று நோய் போன்ற நோய்கள் இல்லாமலிருக்க வேண்டும் என்பதற்காக சோதனை செய்கிறார்கள். ஊட்டச்சத்து கொடுத்து மெலிந்திருக்கும் அந்த ஏழைப் பெண்களை தயார் செய்வார்கள். மூன்று முறைதான் அதிகபட்சமாக ஒருவர் வாடகைத் தாயாக இருக்க முடியும். ஒரு முறைக்கும் அடுத்த முறைக்குமிடையில் அவசியம் 2 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் அந்த சட்டமும் இங்கே வசதியானோருக்காக வளைந்து கொடுக்கின்றது.

600-வது குழந்தை
சத் கைவால் மருத்துவமனையில் பிறந்த 600-வது குழந்தை.

பெரும்பாலும் குழந்தை பேற்றுக்காக வரும் தம்பதியினரிடமிருந்து பெறப்படும் தொகையில் நான்கில் ஒரு பங்குதான் வாடகைத் தாய்க்கு தரப்படுகிறது. வறுமை, கணவனது பொறுப்பற்ற தனம், அல்லது விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட நிலைமை போன்ற காரணங்களால் தான் பெரும்பாலான ஏழைப் பெண்கள் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வருகின்றனர். இவர்களுக்கென தனியாக இல்லங்களை அமைத்து அங்கே தங்க வைத்து பராமரிக்கின்றனர். பத்து மாதம் முடியும் வரை அவர்கள் தங்களது குடும்பத்தினரை சந்திப்பதில்லை. குடும்பமாக இருப்பவர்கள் கணவரிடம் அனுமதி பெற்றுத்தான் வர வேண்டும் என சட்டமே சொல்கிறது. சொந்தமாக ஒரு குழந்தையாவது இருப்பவர்கள்தான் வாடகைத் தாயாக வர இயலும்.

வாடகைத் தாய் முறையில் பிறந்த பிறகு தங்களது பிள்ளை என்றெல்லாம் உரிமை கொண்டாட கூடாது. குறிப்பாக பிறந்த குழந்தையை தாயின் கண்களில் கூட காட்டுவதில்லை. தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு மருத்துவமனை சார்பில் சீமந்தமும் நடக்கிறது. அதற்கு குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் பாதி செலவை ஏற்றுக் கொள்கிறார்கள். இது ஒருவகை தனிமை சிறைதான் என்று பலரும் விமரிசித்தாலும் டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.

தாய்க்கு உணவு
வாடகைத் தாயான தன் மனைவிக்கு உணவு கொண்டு வரும் கணவர்.

தங்கியிருக்கும் கர்ப்பகால தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தை தங்களுடையது இல்லை எனத் தெரிவதால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகளுக்கு மருத்துவமும் எடுத்துக்கொள்கிறார்கள். இடையில் கருவைக் கலைக்க முடிவு செய்தால் தகுந்த மருத்துவ காரணத்தை நிரூபிக்க முடியாவிட்டால் செலவான தொகை அனைத்தையும் அந்த ஏழைத் தாய்மார்கள்தான் தர வேண்டும் எனச் சொல்கிறது சட்டம்.

உண்மையான தாயின் கர்ப்ப பையானது பிள்ளைப் பேறுக்கு மருத்துவரீதியில் தகுதியற்றதாக இருக்கும் போது வாடகைத் தாய் முறையை தேர்வு செய்கின்றனர். ஆய்வகத்தில் உண்மையான தந்தையின் உயிரணு மற்றும் தாயின் கருமுட்டையை இணைத்து கருவை உருவாக்கி அதன்பின் வாடகைத் தாயின் கர்ப்பப் பையில் வைத்து பத்து மாதம் வரை வளர்த்து வரச் செய்வர். இப்படி கர்ப்ப பையை வாடகைக்கு விடுவதற்கு பெயர்தான் வாடகைத் தாய் முறை.

பத்து மாத காலங்களில் ஏற்படும் வலி உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் சிசுவை தன் குழந்தை போல பாதுகாப்பாக பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. தான் சுமப்பது தன் குழந்தையா பிறர் குழந்தையா என்ற மனக்குழப்பம், தகுந்த காரணமில்லாமல் கருவை கலைக்க நேருமளவு தான் நடந்து கொண்டால் அடைக்க முடியாத பத்து லட்சம் ரூபாய், உண்மையான குழந்தைகளை ஓராண்டுக்கு பிரிந்து இருப்பது, சமூகத்தின் கேவலமான பார்வை இதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் வாடகைத் தாய்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.

பெரும்பாலும் இவற்றில் நார்மல் டெலிவரிக்கு வாய்ப்புகள் குறைவு. எனவே அறுவைச் சிகிச்சையின் தழும்புகளும், சிரமங்களும் காலம் முழுக்க இருக்கும். ஒரே பிரசவத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டும் என வரும் தம்பதிகளின் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யப்படுமாம்.

கருவாக்கம்
கரு தாயின் உடலில் பொருத்தப்படுதல்.

இந்திய இளம் பெண்களின் கர்ப்பப் பையின் வாடகை குறைவு என்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் இங்கு படையெடுக்கிறார்கள். மருத்துவ சந்தையோ இப்பெண்களை பிள்ளை பெறும் எந்திரமாகத்தான் பாவிக்கிறது. அந்த எந்திரத்தின் ஒரு பக்கமாக ஊட்டச்சத்துக்களை வழங்கி தங்களுக்கு தேவையான ஆரோக்கியமான குழந்தையை வசதியான தம்பதிகள் எந்த வலியும் இல்லாமல் பெற்றுக்கொள்கிறார்கள். வாடகைத் தாய்மார்களோ தம்மை விட வலியாரின் வலிகளை, உடல் உபாதைகளை பணத்துக்காக ஏற்றுக் கொள்கிறார்கள். பெண்களின் துயரங்களையும் கூட விற்பனைப் பொருளாக்கியிருக்கிறது முதலாளித்துவம்.

வாடகைக்கு குடி வந்து போன அந்த முகம்தெரியாத அந்நிய நாட்டுக் குழந்தைகளில் ஒரு சிலர் நிகழ்காலத்தில் அப்பெண்களுக்கு கஞ்சி குடிக்கவும், சொந்தமாக ஒரு சிறியளவு வீடு கட்டவும் உதவி விட்டுப் போகிறார்கள். இந்த வாய்ப்பு எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை.

குழந்தைப் பேறு இல்லாத வசதியான தம்பதியினரும் தாய்மையை வாடகைக்கு எடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மருத்துவ அறிவியல் சாத்தியமாக்கியிருக்கிறது. அத்தகைய தாய்மையை வாடகைக்கு கொடுத்துத்தான் வாழ முடியும் என்ற அவலத்தை வாழ்க்கையாக கொண்ட பெண்களை இந்த சமூக அமைப்பு பற்றாக்குறையின்றி வழங்குகிறது. இருவரையும் இணைக்கும் மருத்துவமனைகள் இதை ஒரு பெரும் தொழிலாக மாற்றியிருக்கின்றது.

ஏழைகள் தாய்மையை மட்டும் கொடுக்கவில்லை, இந்தியாவின் பல சிறுநகரங்களில் இன்றும் கிட்னி தானத்தை அவர்கள்தான் வழங்கி வருகின்றார்கள். இவர்களது தானத்தை பெற்றுக்கொள்ளும் வர்க்கமோ இந்த மக்களின் வறுமை குறித்து கவலைப்படாத வாழ்க்கையையும், பண்பாட்டையும் பெற்றிருக்கிறது.

இள வயதில் மூன்று முறை வாடகைத்தாய் முறையில் குழந்தைகளை பெற்றுக் கொடுத்து விட்டு தனது மீதி காலத்தை தள்ளும் அந்த பெண்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

படங்கள் : நன்றி இந்தியா டுடே

மேலும் படிக்க

பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?

17

ஆயத்த ஆடைகள் – ஒப்பந்தப் பணிகளும் தொழிலாளர் பற்றாக்குறையும் – 1

  • சில நாட்களுக்கு முன்னால் எங்கள் தொழிற்சாலையில் நடந்த மூன்றாம் தரப்பு ஆய்வொன்றில் ஃபினிஷிங் பணியாளர்களுக்கு இடம் போதுமானதாக இல்லை என எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.
    குறிப்பு : அன்றைக்கு அத்துறைப் பணியாளர்களில் 40 சதவிகிதம் பேர் சற்றே தொலைவிலிருக்கும் எங்களது துணி கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள்.
  • ஆயத்த ஆடைசென்ற வாரத்தில் எனது சக பணியாளர் ஒருவர் தனது மகளுக்கு அடிக்கடி உடல் நலமில்லாது போவதால் மந்திரிப்பதற்காக தர்காவுக்கு தனது மனைவி மகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
    குறிப்பு : அவர் சம்பளம் ரூ 8,500. அவர் குடியிருக்கும் பகுதிக்கும் செல்லும் தர்கா இருக்கும் பகுதிக்கும் அடிக்கொரு பேருந்து இருக்கிறது.
  • இரு நாட்களுக்கு முன்னால் தலா ரூ 500 விலையில் மூன்று ஜீன்ஸ் கால்சட்டைகள் வாங்கினேன். அவை ஒப்பந்தத்தைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டதால் ஸ்டாக் லாட் விற்பனைக்கு அனுப்பப்பட்டவை.
    குறிப்பு : இந்தியாவின் உயர்தர பிராண்டாக கருதப்படும் அந்த கால்சட்டை ஒன்றின் விற்பனை விலை ரூ 3,499. விற்ற நிறுவனம் தவிர்த்து கூடுதலாக இரண்டு நபர்களுக்கு லாபமளித்த பிறகு அவை ரூ 500 ரூபாய்க்கு என்னிடம் விற்கப்பட்டிருக்கின்றன.

மேற்சொன்ன தகவல்கள் தொடரவிருக்கும் கட்டுரையை புரிந்துகொள்ள உதவியாக இருக்கலாம் என்பதால் முதலில் குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் விலையுயர்ந்த ஆடைகளை மட்டுமே வாங்குபவர் எனில் அவை தரமானவைதான் என நம்புகிறீர்களா? அல்லது அவை நியாயமான கூலியை கொடுத்து உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என கருதுகிறீர்களா?

ஆயத்த ஆடை தொழிலாளர்கள்
நீங்கள் விலையுயர்ந்த ஆடைகளை மட்டுமே வாங்குபவர் எனில் அவை தரமானவைதான் என நம்புகிறீர்களா? அல்லது அவை நியாயமான கூலியை கொடுத்து உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என கருதுகிறீர்களா?

நான் 13 ஆண்டுகளுக்கு முன்னால் ஆயத்த ஆடைத் துறைக்கு வந்தபோது, முதலில் வேலை செய்தது ஆண்களுக்கான ஏற்றுமதி சட்டைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில். முழுமையாக குளிரூட்டப்பட்ட அந்த ஆலையில் எல்லா ஊழியருக்கும் ESI, PF பிடித்தம் செய்யப்பட்டது. பாதுகாப்பு விதிகள் கறாராக பின்பற்றப்பட்டன. எந்திரங்களுக்கிடையே போதுமான இடைவெளி இருந்தது. சரியாக 11 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் ஆண்கள் சட்டைகளுக்கான ஒப்பந்தங்களை கையாளத் துவங்கியிருக்கிறேன். ஆனால் இப்போது நிலைமை முற்றாக மாறியிருக்கிறது. எங்கள் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் ஒப்பந்தப் பணியார்கள், அவர்களுக்கு ESI, PF கிடையாது. தையல் எந்திரங்கள் மிக நெருக்கமாக பொருத்தப்பட்டிருக்கின்றன, வெடிக்கும் சாத்தியமுள்ள நீராவி பாய்லர்கள் அவற்றினிடையே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவசர கால வழி மட்டுமல்ல சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் ஏதேனும் ஒரு பொருள் அடைத்துக் கொண்டிருக்கிறது.

தையற்கூடத்தில், தொழிலாளர்கள் கைகள் அதிகமாக துணியில் படும். ஆகவே ஆடையில் வியர்வை ஒட்டுவதை தவிர்க்க முதலில் குறிப்பிட்ட ஆலை குளிரூட்டப்பட்டிருந்தது. அங்கே வரும் இறக்குமதி நிறுவன ஆய்வாளர்கள் ஹாங்காங் கிளையை சேர்ந்தவர்கள், அதிகபட்சமாக இல்லையென்றாலும் குறைந்த அளவில் பாதுகாப்பான பணிச் சூழலை எதிர்பார்ப்பவர்கள். உண்மையான அதிகபட்ச பாதுகாப்பை எதிர்பார்த்தால் அவர்களுக்கே வேலை இருக்காது என்பது எல்லா முதலாளிகளுக்கும் தெரியும்.  ஒருமுறை வந்த ஆய்வாளர் தீயணைக்கும் கருவியை தூக்கிப் பார்த்து, இவை தூக்க கடினமானவையாக இருக்கிறது. ஆகவே இங்கே அதிக எண்ணிக்கையில் பணியிலுள்ள பெண்களும் சுலபமாக கையாளுமளவு எடை குறைவான கருவிகளை வையுங்கள் என குறிப்பு எழுதினார். ஆனால் தீயணைப்பானின் எடையை பார்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு கிடையாது. அப்படிப்பட்ட நபர்களுக்கு பயந்தே அந்த ஆலையில் பாதுகாப்பு அம்சங்கள் ஓரளவு கடைபிடிக்கப்பட்டன.

ஆயத்த ஆடை விற்பனை கடை
அதிக விலையுடைய பொருட்கள் தரமானவை எனும் நினைப்பு ஆகப் பெரும்பாலானவர்களுக்கு உண்டு.

ஒரு தொழிலாளியின் எதிர்கால சேமிப்பு, நிகழ்காலத்துக்கான பணிப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் இவற்றை இல்லாமல் செய்வதன் வாயிலாக சேமிக்கப்படும் பணமே நாம் வாங்கும் மலிவான ஆடைகளுக்கான அடிப்படை. தொண்ணூறுகளின் இறுதியில் ஒரு ஏற்றுமதி ஆடைக்கு தரப்பட்ட விலை இப்போது கிடையாது. எந்த ஒரு மூலப்பொருளும் விலை குறையாதபோது இந்த விலைக் குறைப்பு தொழிலாளர்களுக்கான நிதியை குறைப்பதன் வாயிலாகவே சாத்தியமாகிறது. சப் காண்ட்ராக்ட் எனும் பெயரில் இந்த உழைப்புச் சுரண்டல் எல்லா தொழிலிலும் வியாபித்திருக்கிறது.

ஆடை உற்பத்தியின் சகல படிநிலையிலும் செலவுக் குறைப்புக்கான ஒரே ஆதாரமாக தொழிலாளர்களின் ஊதியமும் அவர்களுக்கான பிற வசதிகளும்தான் இருக்கின்றன. சில பெங்களூர் நிறுவனங்கள் தங்கள் ஆடைகளை வங்காள தேசத்தில் உற்பத்தி செய்கின்றன. காரணம், அங்கே ஒரு தொழிலாளியின் சராசரி ஊதியம் 2,100 ரூபாய் (பெங்களூரில் ரூ 5,500). மும்பை தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தை மூடியதற்கான காரணமாக சொன்னது ஒன்றை மட்டுமே “மும்பையில் ஒரு டெய்லருக்கு ரூ 9,000 சம்பளம் தரவேண்டியிருக்கிறது”. அங்கே பிளாட்பார்மில் வசிக்கவே அந்த சம்பளம் போதாது என்பதைப் பற்றி அவருக்கு எந்த அக்கறையும் இல்லை.

ஒருவேளை நீங்கள் பேண்டலூன் போன்ற விலையுயர்ந்த ஆடைகளை மட்டும் வாங்குபவர் எனில் இந்த பதிவு உங்களுக்கே மிகவும் அவசியமானது. அதிக விலையுடைய பொருட்கள் தரமானவை எனும் நினைப்பு ஆகப் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. ஆடை விசயத்தில் அந்த கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். 1,500 ரூபாய் விற்பனை விலையுடைய லீ கூப்பர் சட்டை மற்றும் 800 ரூபாய் விலையுடைய ஜான் மில்லர் சட்டை இவ்விரு ஆடைகளுக்குமான விலை வேறுபாடு சற்றேறக் குறைய இரண்டு மடங்கு. ஆனால் இவற்றின் துணி விலையில் இருக்கும் வேறுபாடு அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கலாம். இந்த இரண்டு வகையான சட்டைகளும் ஒரே தளத்தில் ஒரே குழுவினரால் தைக்கப்படுகிறது. இரண்டு ஆடைகளுக்கான தையற் கூலியும் சற்றேறக் குறைய சமம்தான். அப்படியெனில் நீங்கள் கூடுதலாக கொடுக்கும் பணம் எதற்காக? மனதை தேற்றிக் கொள்ளுங்கள்… அது வெறும் லேபிளுக்கான தொகை மட்டுமே. கீழே தரப்பட்டுள்ள ஒரு ஒப்பீட்டை கவனியுங்கள்.

பிராண்ட் விற்பனை விலை

உற்பத்திக்கான கூலி

லீ கூப்பர் 1499 ரூபாய் 90 முதல் 105 ரூபாய் 20 ரூபாய்க்கான சலவை, 21 ரூபாய்க்கான எம்ராய்டரி மற்றும் சில கூடுதல் ஆடை பாகங்கள் உண்டு.
இண்டிகோ நேஷன் 1299  மற்றும் 1399

56 முதல் 61 ரூபாய்

சட்டைப் பையின் உள்ளே கூடுதலாக ஒரு காஜா மற்றும் இரண்டு தையல், பேக்கிங் பொருட்கள் விலை சற்று அதிகம். சலவை கிடையாது.
ஜான் மில்லர் 799 55 ரூபாய் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை. சாதாரண சட்டைகள்.

மேலேயுள்ள தரவுகள் ஒரு உதாரணம். இதில் எல்லா ஆடைகளுக்குமான தையற் கூலி கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதை உணரலாம். ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஒரு சட்டை உருவாக குறைந்த பட்சம் அறுபது பேர் வேலை செய்தாக வேண்டும். வாங்கப்படும் பொருட்கள் தவிர்த்து ஒரு சட்டைக்கு 45 முதல் 60 ரூபாய் வரை கூலி பெறப்படுகிறது. ஆக நீங்கள் வாங்கும் 1,500 ரூபாய் சட்டையின் உற்பத்திக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகையை கொடுக்கிறீர்கள். (நூல்கண்டு வாங்குவது முதல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சரியான முகவரிக்கு சென்று சேர்ப்பது வரையான வேலையை செய்யும் என்னையும் சேர்த்து). கருணைக்கு நன்றி. ஆனால் அந்த சட்டையின் ஒட்டுமொத்த உற்பத்தி விலையான 300 ரூபாயை 60 நாளுக்கு முதலீடாக போட்ட கடமையை மட்டும் செய்த எனது முதலாளிக்கு நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் லாபமாக தருகிறீர்கள். அதனை விற்பனை செய்யும் ஆதித்ய பிர்லா மற்றும் ஃபியூச்சர் குழுமத்தின் லாபம் குறிப்பிட்டு சொல்ல இயலாதது.

// அலுவலக நிர்வாகம் மற்றும் உற்பத்தியில் உண்டாகும் இழப்பு ஆகியவற்றுக்கும் தனியே தொகை நிர்ணயிக்கப்பட்டு அது விலையில் சேர்க்கப்படும். ஆகவே இவை லாபத்தில் இருந்து செய்யவேண்டிய செலவல்ல//

ஆயத்த ஆடை தொழிற்சாலை
தையல் எந்திரங்கள் மிக நெருக்கமாக பொருத்தப்பட்டிருக்கின்றன.

வேலையில்லாத தருணங்களில் சில உள்ளூர் தயாரிப்பு ஆடைகளை உற்பத்தி செய்வோம். ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் சராசரியாக 325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அந்த சட்டைகளுக்கும் இதே உற்பத்திக் கூலிதான் தரப்படுகிறது (உணவகங்களில் தேசையை பார்சல் செய்வது மாதிரி அவை சுருட்டிய வடிவில் பேக்கிங் செய்யப்படும்.. ஒரே வேறுபாடு அது மட்டும்தான்). ஆகவே பிளாட்பார்மில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் பகட்டான ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் ஒரு உற்பத்தி தொழிற்சாலை ஊழியனாக எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு சாலையோர விற்பனை சட்டைக்கு உண்டான அலட்சியத்துடனோ அல்லது உயர்தர !! ஆடையுற்பத்திக்கான அக்கறையோடோ வேலை செய்வது ஊழியரின் விருப்பத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. இப்போதிருக்கும் வேலை அழுத்தத்தில் அக்கறையோடு வேலை செய்வதற்கான சாத்தியம் பூஜ்ஜியமே.

ஆடைகளை கொள்முதல் செய்கிற நிறுவனங்களுக்கு தெரியாமல் இவை நடப்பதாக நீங்கள் எண்ணி விட வேண்டாம். அவர்களுக்கு தெரிந்தேதான் இவையெல்லாம் நடக்கின்றன. படு குப்பையான ஆடைகளை, உலகின் அதிசிறந்த மூன்றாம் தரப்பு ஆய்வக ஊழியர்களின் ஆய்வுக்குப் பிறகு எவ்வித சிக்கலுமின்றி ஏற்றுமதி செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கான ஆடைகளை ஆய்வு செய்து ஒப்புதல் தரும் பணியிலுள்ள என் கல்லூரி நண்பர், முறையான விதிகளின்படி ஆய்வு செய்தால் ஒரு பெட்டியைக் கூட ஏற்றுமதி செய்ய இயலாது என்கிறார். ஐரோப்பிய இறக்குமதி நிறுவனங்களுக்காக எட்டாண்டு காலம் பணியாற்றிய (என்னுடைய) அனுபவத்தில் பார்த்தால் அக்கருத்து 90% சதவிகிதம் உண்மையே.

பிளாட்பார்ம் விற்பனை.
பிளாட்பார்மில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் பகட்டான ஒரு கடையில் விற்பனை செய்யப்படும் ஆடைக்கும் ஒரு உற்பத்தி தொழிற்சாலை ஊழியனாக எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆய்வக சோதனையில் தேறாத மூன்று ஆடை ஒப்பந்தங்களுக்கு ஒற்றை மின்னஞ்சல் வேண்டுகோளில் ஏற்றுமதி ஒப்புதல் பெற்றிருக்கிறோம். ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் பாலியஸ்டர் ஆடைகளில் பெருபாலானவை எலக்ட்ரோ ஸ்டாடிக் பிஹேவியர் சோதனையில் தேறுவதில்லை, ஆனால் ஏற்றுமதி எக்காலத்திலும் தடைபட்டதில்லை. தரமான ஆடை உற்பத்திக்கான கட்டமைப்பு, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யும் ஏராளமான சான்றிதழ்கள் இப்போது ஏற்றுமதிக்கு கட்டாயமாகியிருக்கிறது (FWF, OKOTEX,  SA8000 – அவற்றுள் சில). ஆனால் அந்த சான்றிதழ்கள் வெறும் சம்பிரதாயமே, அவற்றை நோகாமல் பெற்றுத்தர பல முகவர்கள் இருக்கிறார்கள்.

வாடிக்கையாளர் மத்தியில் ஆடைகளை வாங்கிக் குவிக்கும் மனோபாவத்தை வளர்க்க மட்டுமே ஆடை விற்பனை நிறுவனங்கள் மெனக்கெடுகின்றன. சரியான நேரத்துக்கு ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்படுவதுதான் இன்றைக்கு அவர்களது இலக்கு. குறைவான ஊதியம், நெருக்கடியான மற்றும் பாதுகாப்பற்ற பணியிடம், அதீத பணிச்சுமை ஆகியவை ஆடைகளின் தரத்தை குறைத்து விடும் என்பது எல்லா இறக்குமதியாளர்களுக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் தரமில்லாத ஆடை விற்றதற்காக கோபம் கொள்ளாமல் அடுத்த ஆடை வாங்கி ஸ்டைல் அப்டேட் செய்துகொள்ளும் நமது புத்திசாலித்தனத்தையும் காசாக்கிக் கொள்ளவே அவர்கள் தரக்குறைவை மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள்.

[படங்கள் உதாரணம் காட்டுவதற்காக மட்டுமே]

– வில்லவன்

அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?

13

தை ஒரு வகுப்பறை என்று சொல்ல முடியாது. சில வகுப்பறைகளின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும். பெரிய கூடம் ஒன்றின் சுவர்களில் மூன்று கரும்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கரும்பலகையின் முன்பும் சில பெஞ்சுகள் போடப்பட்டு அதில் சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர். சுமார் பத்திலிருந்து இருபது மாணவர்கள் கொண்ட ஒவ்வொரு குழுவும் ஒரு வகுப்பு. அது தான் மொத்த பள்ளிக் கூடமும். சுமார் 150 மாணவ மாணவிகளின் மத்தியில் ஒற்றை ஆளாக அங்குமிங்கும் ஓடி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியை பத்மினி. அது சிதம்பரம் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி!

நாங்கள் அந்தப் பள்ளிக்கு மதிய உணவு வேளையின் போது சென்றடைந்தோம்.

சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி
சிதம்பரம் நகரத்தின் மையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி

“சார், ஒரு பத்து நிமிசம் காத்திருங்க. உணவு இடைவேளை துவங்கியதும் நாம் பேசலாம்” என்று எங்களிடம் கத்தரித்துக் கொண்ட ஆசிரியை பத்மினி, வகுப்புகளின் இடையே ஓடியாடுவதைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் உணவு இடைவேளைக்கான மணி அடிக்கப்பட்டது. உரையாடத் தொடங்கினோம்.

“இங்கே நீங்கள் மட்டும் தான் ஆசிரியையா?”

“இன்னும் சில ஆசிரியைகள் இருக்காங்க. இப்ப அவங்கெல்லாம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க சார்” என்றவர், பின்பக்கமாகத் திரும்பி தனது உதவியாளரிடம் “எல்லாரையும் வரிசையா உக்கார வச்சி சாப்பாடு போடத் துவங்குங்க. நான் இதோ வந்துடறேன்” என்றார்.

“ஏன் ரவுண்ட்ஸ் போக வேண்டும்?”

“ஒரு காலத்துல ரொம்ப நல்லா நடந்த பள்ளிக்கூடம் சார் இது. பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. இப்போ பலரும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை சேர்க்கிறாங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க. மதிய உணவு சமயத்தில எங்க ஆசிரியைகள் இந்தப் பகுதியில் இருக்கும் ஏழைப் பெற்றோர்களைப் பார்த்து எப்படியாவது பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பச் சொல்லிக் கேட்கப் போயிருக்காங்க”

பெற்றோர்கள் அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு கௌரவம் பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்பட்ட பத்மினி, தனியார் பள்ளிகளில் உடல் ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், இங்கே தாங்கள் அப்படியான பாகுபாடுகள் பார்ப்பதில்லை என்றும் சொன்னார். தனது பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவருமே ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

“போன வாரம் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை என்கிட்டே வந்து தொண்டை வலிக்குதுன்னு சொல்லி அழுதிச்சு சார். சாப்பிட்டியான்னு கேட்டேன். முந்தைய நாள் மதியம் இங்கே சாப்பிட்ட சத்துணவுக்குப் பின் எதுவும் சாப்பிடலைன்னு சொல்லிச்சி சார். மனசு கஷ்டமா போயிடிச்சு. நாங்க சாப்பிட வச்சிருந்ததை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னோம் சார்… பெரும்பாலான பெற்றோர்களுக்கு பிள்ளைகளை ஏன் படிக்க அனுப்பறோம்னே தெரியலை. மாணவர்களுக்கும் ஏன் படிக்க வர்றோம்னு தெரியலை. இங்கே சுத்து வட்டாரத்தில் நிறைய கவரிங் பட்டறைகள் இருக்கு. திடீர்னு படிப்பை நிப்பாட்றவங்க, அந்தப் பட்டறைகளுக்கு வேலைக்குப் போயிடறாங்க. நாங்க அவங்க பெற்றோர்கள் கிட்டே கெஞ்சிக் கூத்தாடி பள்ளிக்கு அனுப்பச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்கிறோம் சார்.”

ஆசிரியை பத்மினி தழுதழுக்கும் குரலில் சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவரது கவனம் முழுக்கவே குழந்தைகள் சாப்பிட்டார்களா என்பதிலேயே இருந்தது. இடையில் அவகாசம் கேட்டுக் கொண்டு குழந்தைகள் சாப்பிடுவதைக் கண்காணிக்கச் சென்று விட்டார். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

மதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி பள்ளிக் குழந்தைகள்
மதிய உணவு சாப்பிடும் சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள்

அந்த மாணவர்களில் பலரும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை என்று தெரிந்தது. பல மாணவர்களின் பெற்றோர்கள் இருவருமே கூலி வேலைகளுக்குச் செல்பவர்களாகவே இருந்தனர். மாணவர்களும் ஒரு சில நாட்கள் பள்ளிக்கும் பெரும்பாலான நாட்கள் கூலி வேலைகளுக்கும் செல்வதாகத் தெரிவித்தனர். தங்கள் அப்பா அம்மாவுக்கு வயதாகி விட்டதால் அவர்களுக்கு கூலி வேலை கிடைப்பதில்லை என்றும், எனவே தாங்கள் வேலைக்குப் போவது தவிர்க்க முடியாது என்றும் சிலர் தெரிவித்தனர்.

சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் நேரில் பார்த்த அரசுப் பள்ளிகளின் நிலைமை அநேகமாக இப்படித்தான் இருந்தது. பல நடுநிலைப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே தினமும் பள்ளிக்கு வருகின்றனர். ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பாடம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அநேகமான பள்ளிகளின் நிலைமைகள் வாழ்ந்து கெட்ட குடும்பங்களை நினைவூட்டுவதாக இருந்தன. சந்தித்த அனைவருமே முன்னொரு காலத்தில் மாணவர்கள் நூற்றுக்கணக்கில் அணியணியாக பள்ளிக்கு வந்து சென்றதையும், இன்றைக்கு சில பத்து மாணவர்களோடு காற்றாடுவதையும் நினைத்து வேதனைப்பட்டனர்.

உலக வங்கியின் கடன்  பெற்று நடத்தப்படும் தேசிய இடைநிலைக் கல்வித்திட்டத்தின் சார்பில் 2012-13 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தின் 2253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருப்பது தெரிய வந்தது. 83,641 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படிக்கிறார்கள். 16,421 பள்ளிகளில் இரண்டே ஆசிரியர்கள்தான். 16 பள்ளிகளில் ஆசிரியரே இல்லை. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது அரசே நிர்ணயித்திருக்கின்ற விகிதமாகும். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் நான்கரை இலட்சம் மாணவர்களைப் பொருத்தவரை, நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைதான் உள்ளது.  21, 931 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அவை நிரப்பப்படாமலேயே நீடிப்பதுதான் இந்த நிலைக்கு காரணம். கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்வது,  தனியார் கல்விக் கொள்ளையை ஊக்குவிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் அரசுப் பள்ளிகளை அரசே சீரழிக்கிறது.

அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய தூண்கள் தான் மாணவ சமுதாயத்தை தாங்கி நிற்கின்றன. எனவே இவை மூன்றையும் சேர்த்துத்தான் பரிசீலிக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் இமையம்.

ஆசிரியர்களுக்குப் முறையான பயிற்சியளிக்காமல் விடுவது, போதிய நிதி ஒதுக்காமலிருப்பது, காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் விடுவது என்பதோடு சேர்த்து எந்த வரைமுறையுமின்றி தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதியளித்துக் கொண்டிருக்கிறது அரசு. தனியார் கல்வி வியாபாரிகள், ஊருக்கு வெளியே – மக்கள் வாழ்விடங்களுக்குத் தொடர்பில்லாத இடங்களில் – சில பத்து ஏக்கர்கள் அளவுள்ள நிலத்தை வளைத்துப் போட்டு தங்கள் கல்வித் தொழிற்சாலைகளைத் திறக்கிறார்கள்.

50 கிலோ மீட்டர்கள் வரை கூட பள்ளிப் பேருந்துகளை அனுப்பி மாணவர்களை அள்ளி வரும் இவர்கள், மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிமான வசதிகளைக் கூட பள்ளிகளில் செய்து கொடுப்பதில்லை. தமிழகமெங்கும் நச்சுக் காளான்கள் போல் பரவியிருக்கும் தனியார் பள்ளிகளில் சுமார் 1500 பள்ளிகளுக்கு அங்கீகாரமே இல்லை. தனியார் பள்ளிகளின் கல்வி முறையோ, பட்டியில் போட்டு பன்றிகளை வளர்ப்பதற்கு ஒப்பாக மாணவர்களை அணுகுவதாய் இருக்கிறது. எந்த சமூக அறிவோ, பொறுப்போ இல்லாத தக்கை மனிதர்களையே தனியார் பள்ளிகள் சமூகத்திற்குப் பரிசளிக்கின்றன.

கட்டணக் கொள்ளை அடிப்பது ஒருபுறமிருக்க, படிக்காத மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது, ஊனமுற்ற மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மறுப்பது, மாணவர்களுக்கு விளையாட்டை மறுப்பது, அதிகப்படியான வீட்டுப்பாடங்கள் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய ஓய்வு நேரத்தைக் கூடக் கூடக் களவாடுவது என்று அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரானவைகளாக தனியார் பள்ளிகள் இருக்கின்றன. எனினும் பெற்றோர் அப்பள்ளிகளைத் தான் நாடுகின்றனர். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதை கௌரவக் குறைச்சல் என்று கருதுகிறார்கள்.

அரசும் ஆசிரியர்களைக் கண்காணிப்பதிலோ, அவர்களை தரமுயர்த்துவதிலோ எந்த அக்கறையும் காட்டுவதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சியாளர்கள் குறைவு என்பதோடு இருப்பவர்களும் எந்தவித வகுப்பறை அனுபவமும் இல்லாதவர்கள் என்கிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன். உதாரணமாக ஒரு பாடத்தைப் பற்றிய சிந்தனை வரைபடம் (Mind map) தயாரித்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆற்றலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய இவர்களுக்கே அது தொடர்பான அனுபவ அறிவு இல்லை என்கிறார் அவர்.

“ஆசிரியர்களில் பலரும் முப்பது வருசம் முன்னே படிச்சதை வச்சிகிட்டு இன்னும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களை ஒரு ஆசிரியர் மேலாண்மை செய்ய வேண்டுமென்றால், முதலில் அவருக்கு நடப்பு உலகின் நவீன மாற்றங்களைப் பற்றிய அறிவும், அவற்றை சமூகத்தோடு பொருத்திப் பார்த்து விளக்கும் ஆற்றலும், அந்த வகையில் கல்வியை சமூகக் கண்ணோட்டத்தோடு போதிக்கும் திறனும் அவசியம். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது அறிவை கால மாற்றத்துக்கேற்ப வளர்த்தெடுக்கத் தவறுகிறார்கள்” என்கிறார் இமையம்.

அரசுப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து விட்டால் பணி ஓய்வு வரை எந்தத் தொல்லையும், நெருக்கடியும் இன்றி காலத்தை ஓட்டிக் கொள்ளலாம்; அரசு சம்பளத்தை ஒரு நிலையான வருமானமாக வைத்துக் கொண்டு தனியே வட்டிக்கு விடுவது, தனியார் டியூசன்கள், தனியார் பள்ளிகளில் பங்குதாரராக சேர்ந்து கொள்வது என்று பல்வேறு வழிகளில் சம்பாதிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்கிற பிழைப்புவாத கண்ணோட்டமே பல ஆசிரியர்களிடமும் நிலவுகிறது. சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியை பத்மினி போன்றவர்கள் அபூர்வமான  விதிவிலக்குகள்.

சிதம்பரம் நகராட்சி பள்ளியின் தலைமையாசிரியை பத்மினி
சிதம்பரம் நகராட்சி பள்ளியின் மதிய உணவு நேரத்தின் போது – தலைமையாசிரியை பத்மினி

”முதலில் அரசுப் பள்ளி என்பது ஒரு பொதுச் சொத்து, நமது சொத்து என்கிற அறிவு எல்லோருக்கு வரணும். இது நம்முடைய பள்ளி என்று ஆசிரியர்களும் நினைக்க வேண்டும். ‘எவன் கட்டிய மடமோ எனக்கென்ன வந்தது’ என்பது போன்ற நினைப்பு தான் இவர்களுக்கு இருக்கிறது?” என்கிறார் இமையம். “அரசு நிதி ஒதுக்கல, கட்டிடம் கட்டித் தரல என்று குற்றம்சாட்டுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், இருப்பதைக் கூட எந்த லட்சணத்தில் பராமரிக்கிறோம் என்பதும் முக்கியமானதில்லையா?” இங்கே இருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் ஆயிரத்துக்கும் மேல் மாணவர்கள் படிக்கிறார்கள். 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். அந்தப் பள்ளியின் முக்கிய கட்டிடத்தில் காக்கை எச்சம் போட்டு அரச மரச் செடி ஒன்று முளை விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பிடுங்கிப் போட கருணாநிதியும், ஜெயலலிதாவுமா நேரில் வரணும்? ஏன் அந்தப் பள்ளிக்கு தினசரி வந்துபோகும் ஒருத்தன் கண்ணிலுமா அது தென்படல?” என்று கேட்கிறார்.

மேலும், “மாணவர்களின் வாழ்க்கைக்கான ஆசான்களாகவும், முன்னுதாரணங்களாகவும் இருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை. முன்பு ஆசிரியர் என்பவர் பள்ளிக்கு அருகாமையில் வசிக்க வேண்டும் என்கிற விதி கறாராகப் பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக வகுப்பறைக்கு வெளியேயும் மாணவர்கள் ஆசிரியர்களைச் சந்திப்பதற்கும், ஆசிரியர்கள் மாணவர்களின் பள்ளிக்கு வெளியேயான செயல்பாடுகளைக் கவனிப்பதற்கும், அவர்களின் குடும்பத்தின் சமுகப் பொருளாதாரப் பின்னணி குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் இருந்தது. தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளி அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 30 அல்லது 40 கிலோ மீட்டர் தூரத்தில், தள்ளி வசிப்பவர்களாக இருக்கிறார்கள்.“

“மாணவர்களின் மீது எந்தவிதமான உணர்வுப்பூர்வமான பிடிப்புமற்று ஆசிரியப் பணியே கூலிக்கு மாரடிப்பது என்கிற அளவுக்குச் சுருங்கிப் போயிருக்கிறது. மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, ஏன் வருவதில்லை என்பது பற்றியும் ஆசிரியர்களுக்கு எந்தப் புரிதலும் கிடையாது. மாணவர்களின் சமுக செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய அறிவற்ற ஆசிரியர்களால், அவர்களின் வகுப்பறைச் செயல்பாடுகளின் மீது எந்த வகையான மேலாண்மையையும் செலுத்த முடிவதில்லை” என்று நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் இமையம்.

“சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளியொன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நான்கு மாணவிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் விதமாக வகுப்பறையிலேயே பீர் குடித்துள்ளனர். 12-ம் வகுப்பு மாணவர்கள் பீர் குடிக்கலாம் என்பது ஒரு பொதுக் கலாச்சாரமாக வளர்ந்து வருகிறது. இணையம், செல்போன் உள்ளிட்ட நவீன விஞ்ஞான சாதனங்கள் மூலம் தனியார் பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியில் வெகு வேகமாக சீரழிகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டாஸ்மாக்” என்று  மாணவர்களிடையே பரவும் கலாச்சாரச் சீரழிவை சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளரும், ஆசிரியருமான கரிகாலன்.

தனியார் பள்ளி மாணவர்கள் பட்டியில் அடைத்து பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மறுபுறம் அரசுப் பள்ளி மாணவர்களோ கட்டுப்பாடற்றவர்களாக சீரழிவதற்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த சமூகப் பண்பாட்டு பின்புலத்தில், கல்வியை அரசு புறக்கணித்து வருவதன் விளைவுதான் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி. சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்து போயிருப்பதையும், மாணவர் சேர்க்கை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே போவதையும் இந்தப் பின்னணியில் வைத்துதான் பரிசீலிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் அவல நிலைமையை தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கொள்ளையடித்துக் கல்லா கட்டத் துவங்கியுள்ளன. இந்தக் கொள்ளைக்கு உதவும் விதத்தில் ஆண்டு தோறும் தமிழக அரசே கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கிறது. சென்னையில் ஒரு மழலையர் பள்ளிக்கான ஆண்டுக் கட்டணத்தை ரூ. 30,000 க்கு மேல் என்று அரசே நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறது.

இதுவும் போதாதென்று அரசு நிர்ணயித்த கட்டணத்தைப் போல பன்மடங்கு கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றன தனியார் பள்ளிகள். எந்தவித கணக்கோ, ரசீதோ இல்லாமல் பள்ளி முதலாளிகள் நடத்தும் இந்தக் கொள்ளைக்கு வழக்கம் போல கல்வித்துறை, அதிகார வர்க்கம் துணை நிற்கின்றன. கட்டணக் கொள்ளையைத் தட்டிக்கேட்ட பெற்றோர் சங்கத்தினரை காசுக்கு அழைத்து வரப்பட்ட கூலிப்பட்டாளத்தை வைத்து மிரட்டியிருக்கிறார், சிதம்பரம் வீனஸ் பள்ளியின் முதலாளி.

”தற்போது அரசுப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது” என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபால்.  1947 க்கு முன் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுப் பள்ளிகள் பின்னர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அவசரநிலைக் காலம் வரையில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மதிய உணவு திட்டத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கேர் என்கிற என்.ஜி.ஓ நிதி வழங்கியது. அரசு வருடாந்திரம் ஒதுக்கும் நிதியானது புதிய பள்ளிகள் துவங்கவும், கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அவசர நிலைக் காலத்துக்குப் பின்னர் அமெரிக்க நிதியின் வருகை நின்றது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசு நிதி சத்துணவுத் திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டு, உள்கட்டமைப்பு மற்றும் புதிய பள்ளிகள் கட்டுவது குறைக்கப்பட்டது. தனியார் முதலாளிகளுக்கு புதிய கல்வி நிறுவனங்கள் துவங்குவதற்கான உரிமங்களை அரசு வழங்கத் துவங்கியது. இப்படி துவங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் தான் இன்று ஆக்டோபஸ் போல வளர்ந்து தமிழகத்தை சுற்றி வளைத்துள்ளது. இன்று தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகளில் அடிப்படை வசதிகளோ, உள்கட்டமைப்புகளோ இல்லை என்கிறார் எஸ்.எஸ். ராஜகோபால். மேலும், இந்த தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் உரிய தகுதியற்றவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கும் மக்கள், அரசுப் பள்ளிகள் நம்முடையவை என்பதையும், கல்வி என்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதையும், கல்வியளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதையும் உணர வேண்டியது அவசியம் என்கிறார் ராஜகோபால். மேலும், மக்கள் சாதாரணமாக வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கான விலையிலும் கல்விக்கான 2 சதவீத வரியும் சேர்ந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகள் சீரழிகின்றது என்பதன் பொருள் தமது சொந்தப் பணம் பறிபோவது தான் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதையும், மக்கள் அனைவருக்கும் அதனை வழங்குவது அரசின் கடமை என்பதையும் மக்களே மறந்து போகும் அளவுக்கு தனியார்மயக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதில் அரசும், ஆளும் வர்க்கமும் வெற்றி பெற்றிருக்கின்றன. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது போய் பாட்டில் பத்து ரூபாய் அம்மா வாட்டர், அனைவருக்கும் இலவச மருத்துவம் என்பதற்குப் பதில் இன்சூரன்சு திட்டம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதற்குப் பதில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு என்று எல்லாத் துறைகளிலும் தனியார்மயமே நியதி என்று ஆக்கப்பட்டு வருகிறது.

இதனை விரைந்து சாத்தியமாக்கும் நோக்கத்துடன்தான் அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்படுகின்றன. கடலூர் மாவட்டப் பள்ளிகளில் நாம் பார்த்த நிலைமைகள்தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நிலவுகிறது. சென்னையிலும் கூட மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய மிக மோசமான சூழலிலும், தங்களது அளப்பறிய ஈடுபாட்டின் காரணமாக சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மிகக் கடுமையாக உழைத்து அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றி வருகிறார்கள்.

இருப்பினும் கல்வி உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு இன்று தேவைப்படுவது ஒரு போராட்டம். தனியார் கல்வி முதலாளிகளையும், அவர்களது புரவலரான இந்த அரசையும் எதிர்த்த போராட்டம். மொத்தத்தில் தனியார்மயக் கொள்கைக்கு எதிரான போராட்டம்!

 – புதிய கலாச்சாரம் செய்தியாளர்
____________________________________________________________
புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 2013

____________________________________________________________

சொற்களும் கண்ணீரும் வேறல்ல – ஒரு சிரியக் கவிதை !

6

வரைகலையில் ஒரு பாடம் நிசார் கப்பானி

ண்ணக் கரைசல் பெட்டியை
எடுத்து வந்த என் மகன்
ஒரு பறவை வரையச் சொன்னான்.
சாம்பல் நிறத்தில் முக்கிய தூரிகையால்
பூட்டும், கம்பிகளுமாய்
ஒரு கூண்டினை வரைந்தேன்.
ஆச்சரியம் மின்னுகிறது
அவன் விழிகளில்.

“… ஆனால் அப்பா, இது சிறையாயிற்றே,
பறவையை வரைவது எப்படியென்று
உங்களுக்கு தெரியாதா?”
நான் சொன்னேன்:
“மகனே, என்னை மன்னித்து விடு.
பறவைகளின் உருவங்களை
நான்
சிந்தனையில் தொலைத்து விட்டிருக்கிறேன்”.

பிறகு
வரைகலை புத்தகத்தை எடுத்து வைத்து
ஒரு கோதுமைக் கதிரையாவது
தீட்டு என்றான்.
சரியென்று நானும்
கையில் ஏந்திய பேனாவால்
ஒரு துப்பாக்கியை தீட்டினேன்.
பொறுமையிழந்தவன்
என் அறியாமையை அதட்டுகிறான்,
“கோதுமை கதிருக்கும், துப்பாக்கிக்கும்
வித்தியாசம் தெரியாதா அப்பா உங்களுக்கு?”

நான் அவனிடம்
பொறுமையாக புரிய வைத்தேன்,
“மகனே,
ஒரு காலத்தில் கோதுமை கதிர்கள்
நான் அறியாததல்ல,
உணவுக் கவளத்தின்
வடிவமும் அறியாதவனல்ல,
நிச்சயமாய்
மலர்களின் வடிவும் தெரிந்தவன்தான்.

ஆனால்
உறைந்து இறுகிய
இந்தக் காலத்தில்
காட்டு மரங்கள்
ஆயுதப் படையினருடன்
அணி சேர்ந்திருக்கின்றன.
மலர்கள்
குதூகலமற்ற சீருடைகளை வரிக்கின்றன.
ஆயுதம் தரித்த கோதுமை கதிர்கள்,
ஆயுதம் தூக்கிய பறவைகள்,
ஆயுதம் எடுத்த கலாச்சாரம்,
ஆயுதத்தில் கரைந்த மதம்,…

இக்காலப் பெருவெளியில்
ஒரு சிறிய துப்பாக்கி
ஒளிந்திராத
ஒரு உணவுப் பொட்டலத்தைக் கூட
உன்னால்
பார்க்க முடியாது.
முகத்தை கீறிப் பார்க்கும்
முட்களை தவிர்த்து விட்டு
வயல்களில் பூத்துக் கிடக்கும்
மலர் ஒன்றை
உன்னால் பறிக்க முடியாது.
விரல்களுக்கிடையே
வெடித்துச் சிதறாத
ஒரு புத்தகத்தையேனும்
உன்னால்
வாங்க முடியாது”

பிறகு என் மகன்
படுக்கையின் விளிம்பில் அமர்ந்து கொண்டு
ஒரு கவிதையேனும் சொல் என்றான்.
என் விழிகளிலிருந்து
ஒரு சொட்டு கண்ணீர்
தலையணையில் விழுகிறது.
அவனோ
அதை நாக்கல் தீண்டி விட்டு,
“அப்பா, இது கவிதையல்ல,கண்ணீர்!”
வியப்புடன் கூவினான்.

நான் அவனிடம்
“மகனே!
நீ வளர்ந்த பிறகு,
அரேபியக் கவிதைகளில்
அலைபாயும் போது
சொற்களும் கண்ணீரும்
ஒட்டிப் பிறந்தவை என்று
கண்டு கொள்வாய்.
அரேபிய கவிதை என்பது
எழுதும் விரல்கள்
சிந்தும் கண்ணீறன்றி வேறில்லை
என்று அறிந்து கொள்வாய்”

இறுதியாய் என் மகன்
கூர்மையான பேனாக்களையும்,
வண்ணமயமான பென்சில்களையும்
போட்டுவிட்டு
நமது தாய்நாட்டை வரை என்றான்.

தூரிகையைத் தூக்கிய
என் கை நடுங்குகிறது
நான் விசும்பியபடி வீழ்கிறேன்.

– நிசார் கப்பானி

தமிழாக்கம்: செழியன்

நிசார் கப்பானிபின் குறிப்பு: நிசார் கப்பானி, சிரியாவின் டமாஸ்கசில் 1923-ம் ஆண்டு மார்ச் 21 அன்று பிறந்தவர். முழு நேர எழுத்தாளர் ஆவதற்கு முன்பு சிரிய வெளியுறவுத் துறையில் பணி புரிந்தவர். அவரது படைப்புகளில் 24 கவிதைத் தொகுப்புகளும், அல் ஹயத் செய்தித் தாளில் எழுதிய கட்டுரைகளும் அடங்கும். 1998-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி லண்டனில் தனது 75-வது வயதில் காலமானார்.

ஆங்கில மூலம் :

My son places his paint box in front of me
and asks me to draw a bird for him.
Into the colour gray I dip the brush
and draw a square with locks and bars.
Astonishment fills his eyes:
“… But this is a prison, Father,
Don’t you know how to draw a bird?”
And I tell him: “Son, forgive me.
I’ve forgotten the shapes of birds.”

My son puts the drawing book in front of me
and asks me to draw a wheat-stalk.
I hold the pen
and draw a gun.
My son mocks my ignorance,
demanding,
“Don’t you know, Father, the difference between a
wheat-stalk and a gun?”

I tell him, “Son,
once I used to know the shapes of wheat-stalks
the shape of the loaf
the shape of the rose
But in this hardened time
the trees of the forest have joined
the militia men
and the rose wears dull fatigues
In this time of armed wheat-stalks
armed birds
armed culture
and armed religion

you can’t buy a loaf
without finding a gun inside
you can’t pluck a rose in the field
without its raising its thorns in your face
you can’t buy a book
that doesn’t explode between your fingers.”

My son sits at the edge of my bed
and asks me to recite a poem,
A tear falls from my eyes onto the pillow.
My son licks it up, astonished, saying:
“But this is a tear, father, not a poem!”
And I tell him:
“When you grow up, my son,
and read the diwan of Arabic poetry
you’ll discover that the word and the tear are twins
and the Arabic poem
is no more than a tear wept by writing fingers.”

My son lays down his pens, his crayon box in
front of me
and asks me to draw a homeland for him.
The brush trembles in my hands
and I sink, weeping.

அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத் கோபமெல்லாம் உண்மையல்ல !

3

இரண்டு தனிச்சிறப்பான செய்திகளின் கதைமாதவன்குட்டி பிள்ளை

மும்பையில் பெண் பத்திரிகையாளர் மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவத்துக்கு அடுத்த நாள், தொலைக்காட்சி நிலையங்களில் ஒலித்த ஆவேச குமுறல்களுக்கும், இடி முழக்க கண்டனங்களுக்கும் நடுவே, டைம்ஸ் நவ் சேனலில் ராஜ் தாக்கரே அவரது “குற்றச் செயல்களுக்கான இரு மாநில கோட்பாடு” பற்றியும், என்டிடிவி சேனலில்அமிதாப் பச்சன் இந்த சம்பவத்தின் “கொடூரத்தை”ப் பற்றியும் பேசுவதை பார்க்க நேரிட்டது.

அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத்
அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத்

ராஜ் தாக்கரே வாயை திறக்கும் போதெல்லாம் வந்து விழும் திட்டமிடப்பட்ட வெறுப்பும், வாய் வீச்சும் யாரையும் ஆச்சரியப்படவோ, கோபப்படவோ செய்ய முடியாத நிலையை அடைந்திருக்கிறது. அர்னாப் கோஸ்வாமியுடனான நேர்முகத்தில் அவர் மும்பையில் நடக்கும் குற்றச் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் உத்தர பிரதேசம், பீகாரிலிருந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது சுமத்தினார். முந்தைய நாள் நடந்திருந்த பாலியல் வன்முறை சம்பவத்தின் குற்றவாளிகள் அந்த மாநிலங்களை சேராதவர்களாக இருந்தால் என்ன செய்வது என்பதற்காக தான் அந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பாக பேசவில்லை என்ற வாக்கியத்தையும் சேர்த்துக் கொண்டார். “அவர்களை” கட்டுப்படுத்துவதற்கு மகாராஷ்டிராவை ஆளும் பொறுப்பை தன்னிடம் தர வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால், இதை ஒரு தேர்தல் பிரச்சாரமாக பயன்படுத்தவில்லை என்றும் சொல்லிக் கொண்டார். அது ஒரு விசித்திரமானதொரு நேர்முகமாக இருந்தது.

பொதுவாக தனது விருந்தினர்களின் ஒவ்வொரு கருத்துக்கும் 40 உணர்ச்சிகளையும், எதிர் கருத்துக்களையும் கொட்டும் அர்னாப் கோஸ்வாமி, அவரை விட பெரிய அடாவடி பேர்வழியை நேருக்கு நேர் சந்தித்த போது ஒரு சுண்டெலியைப் போல பயந்து, பூனையைப் போல கமறிக் கொண்டிருந்தார். இந்த நேர்முகத்தின் நோக்கம் பாலியல் வன்முறை குற்றம் பற்றி விவாதிப்பது அல்ல என்பதும் தனது கட்சியின் இரத்தத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும் மாற்று இனத்தவர் மீதான வெறுப்பை கொட்டுவதுதான் ராஜ் தாக்கரேவின் நோக்கமாக இருந்தது என்பதும் தெளிவானது. பின்னர் அந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது. தாக்கரே அதை எதிர்பார்த்து தப்பிக்கும் வாக்கியத்தை சேர்த்துக் கொண்டிருந்தாலும், கோஸ்வாமி இது குறித்து கேள்வி கேட்டு அவரை ஒரு போதும் குடையப் போவதில்லை.

பாலியல் வன்முறை சம்பவம் நடந்த அடுத்த நாள் அமிதாப் பச்சன் என்டிடிவியில் பர்கா தத்துக்கு நேர்முகம் அளித்தார். பர்கா தத்தின் “த பக் ஸ்டாப்ஸ் ஹியர் (பொறுப்பு இங்கு நிற்கிறது)” நிகழ்ச்சியின் சிறப்பு பகுதியில் அமிதாப் பச்சனின் நேர்முகம் ஒளிபரப்பானது. 45 நிமிடங்களுக்கு பர்கா தத்தும் அவர் திரட்டியிருந்த விவாதக் குழுவினரும் பாலியல் வன்முறை குறித்து வெளிப்படுத்திய கோபத்துக்கும், கொதிப்புக்கும் பிறகு இந்த நேர்முகம் ஒளிபரப்பானது. அமிதாப் பச்சன் திரைக்கு வந்த பிறகு, ஆரம்பத்திலிருந்தே பர்கா தத்தின் எல்லா கேள்விகளும் ‘சத்யாக்ரஹா’ என்ற சொல்லோடு கோர்க்கப்பட்டிருந்தன என்பதை கவனிக்க முடிந்தது. அது அமிதாப் பச்சன் நடித்து வரவிருக்கும் திரைப்படத்தின் பெயர் என்பது தற்செயலானதில்லை.

அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளின் பகுதிகள் இவை :

“அமிதாப் பச்சன், திரைப்படத்தின் மைய பாத்திரமான நீங்கள்….”

“டெல்லி கூட்டு பாலியல் வன்முறையைப் பற்றி பேசும் போது சத்யாக்ரஹா எப்படி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று குறிப்பிட்டீர்கள். இப்போது உங்கள் நகரத்தில் ஒரு 22 வயது பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவர் தன் பணி நிமித்தமாக வெளியில் சென்ற போது இது நடந்திருக்கிறது. மக்கள் மத்தியில் கோபம் பொங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தமது சத்யாக்ரஹத்தை நடத்துகிறார்கள் என்று கருதலாம். மும்பையில் நேற்று இரவு நடந்ததற்கும் உங்கள் சினிமாவில் நீங்கள் சொல்ல வருவதற்கும் ஒரு இசைவு இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா…”

‘‘உங்கள் திரைப்படம் ஆய்வு செய்யும் சாதாரண மனிதரின் கோபத்தை இப்போது நீங்கள் சமூகத்தில் பார்க்கிறீர்களா? அது ஆரோக்கியமானதா அல்லது அராஜகமானதா? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?”

ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவது அதன் வசூலை அதிகரிப்பதற்கான சந்தை நடவடிக்கை. அதன்படி சத்யாக்ரஹா திரைப்படத் தயாரிப்பாளர்களின் லாப வேட்டையை, பாலியல் வன்முறைக்கான செய்தி விவாதத்துடன் இணைப்பதுதான் நடந்திருக்கிறது. இது புரிந்தவுடன், அதுவரை வழக்கமான ஒரு நேர்முகமாக தோற்றமளித்தது கேவலமான ஒன்றாக மாறி விட்டது.

இவை நியாயமான ஆசிரியர் குழு முடிவுகள் என்று அர்னாப் கோஸ்வாமியும், பர்கா தத்தும் கருதியிருக்கலாம். மற்ற எந்த சமயத்திலும் அது உண்மையாகவும் இருந்திருக்கலாம். ராஜ் தாக்கரேவை நேர்முகத்துக்கு வர வைப்பது ஒரு ஆங்கில சேனலுக்கு சிரமமான வேலைதான், அவர் என்ன சொன்னாலும் அது பரபரப்பான செய்தியாகும் என்பதும் இருக்கிறது. அது போல, சூப்பர் ஸ்டார்கள் அவர்களது திரைப்படங்கள் வெளியாகும் போது மட்டும், அதைப் பற்றி பேசுவதற்கு மட்டும்தான் கிடைப்பார்கள். இந்த இரண்டு ஆளுமைகள் தமக்கு ஆதாயம் இருந்தால்தான் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வார்கள். அது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

ஆனால் இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் பாலியல் வன்முறையை தொடர்ந்த நாட்களில் சமூகம், அறம், தர்மம் என்று கதறிக் கொண்டிருந்தவர்கள். ஒவ்வொரு நிமிடமும் தார்மீக குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தமது சுயநலம் என்று வந்தவுடன், தமக்கு மட்டுமான பிரத்தியோகமான செய்தி என்ற வாய்ப்புக்கு முன்பு அந்த தார்மீக அறங்களை பின் தள்ளியிருக்கிறார்கள்.

இது போன்ற உணர்ச்சி பூர்வமான சூழலில், ஒரு தார்மீக ஆவேசத்துடன் பேசுவதை செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் செய்வதில்லை. அதிர்ச்சி, அவலம், கோபம் ஆகியவற்றின் நிழலில் சமூகமே சொத்தையாக தெரியும் போது உங்களுடைய தனிப்பட்ட குறைகளை நீங்கள் எப்படி உணர முடியும்?

சமூக கோபத்தின் குரலாக நீங்கள் இருக்கும் போது, பாலியல் வன்முறை மீதான விவாதம் என்ற போர்வையின் கீழ் ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்த முயற்சிப்பது வேறு எதையும் விட கேவலமானது. ஒரு வேளை அப்படி இல்லையோ? புலம் பெயர்ந்த தொழிலாளர்களை குற்றப் பிரிவினர் என்று முத்திரை குத்தும் அரசியல்வாதிக்கு தளம் ஏற்படுத்திக் கொடுப்பது அதை விட கேவலமானது என்று வைத்துக் கொள்ளலாம்.

நன்றி: மாதவன்குட்டி பிள்ளை – ஓபன் மேகசீன்
தமிழாக்கம்: அப்துல்

மீண்டும் எரியக் காத்திருக்கிறது கோவை !

52

ண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒன்றும் புதிதில்லை தான். ஆனால் சமீபத்தில் கோவையில் கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. சேலத்தில் செத்துப் போன ஆடிட்டர் ரமேசுக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் “இந்து மக்கள் மக்கள் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள்” சார்பாக அஞ்சலி செலுத்தப்படுவதாக அச்சிடப்பட்டிருந்தது. புறநகர்ப் பகுதிகளில் ‘கோவைபுதூர் / சின்னியம்பாளையம் / நரசிம்மநாய்க்கன் பாளையம்” என்று அந்தந்த ஊரின் பெயர்களை அச்சிட்டிருந்ததைக் காண முடிந்தது.

கலவரம் - ஆர்எஸ்எஸ்
கலவரத்தைத் தூண்டி விடும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்.

கோவை ப்ரிக்காலில் நண்பர் ஒருவரைப் பார்த்து வரச் சென்றிருந்த போது அதே போன்ற கண்ணீர் அஞ்சலிப் போஸ்டர்கள் பெரியநாய்க்கன் பாளையத்திலும் ஒட்டப்பட்டிருப்பதைக் காண நேர்ந்தது.

ப்ரிக்கால் கேட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் வரும் வழியில் ஆங்காங்கே மோடி, அத்வானி , பாரதமாதா போன்ற பாரதிய ஜனதா தலைவர்களின் படங்களைக் காண முடிந்தது. தேனீருக்காக ஒரு கடையில் நின்ற போது கேட்டோம்.

“அண்ணா, இந்த ஆர்.டி.ஓ ஆபீஸ்ல புரோக்கரா இருந்தாப்லயே ரமேசு, அவரு தானே இங்கே பி.ஜே.பி செயலாளரு?” டீக்கடைக்காரரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தேன். எப்படியும் ஊருக்கு நாலைந்து ரமேசும் சுரேசும் இருந்தாக வேண்டும் தானே?

“ராமேசா… அப்பிடி யாருமே இல்லீங்களே. பிஜேபிக்கு இங்கெ யார் தலைவருன்னே தெரிலீங்க. போஸ்டர் மட்டும் ஒட்டிக்கிறாங்க” பதில் சொல்லி விட்டு ‘நீ யார்’ என்பது போலப் பார்த்தார்.

“நமக்கு பழனி பக்கம்ங்க. அப்பப்ப, கோயமுத்தூருக்கு வருவனுங்க. முன்னாடியெல்லா ரமேசு பேர்ல தான் போஸ்டர் போடுவாங்க, இப்ப ஊர் மக்கள்னு போட்ருக்காங்களேன்னு கேட்டனுங்க”

”ஓஹோ… இது சம்பத்து கட்சிக் காரங்க போட்ட போஸ்டருங்க” சம்பத்து கட்சியெனப்பட்டது இந்து மக்கள் கட்சி “இந்த _____ (முசுலீம்) பசங்க சும்மாவே இருக்க மாட்டீங்கறாங்க பாத்தீங்களா.. எல்லா ஊர்லயும் பிஜேபி காரங்கள கொன்னுட்டே இருக்காங்களாமா?” உங்க ஊர் நிலவரம் என்னவென்பதைப் போல பார்த்தார்.

“இன்னும் போலீசு வெசாரிச்சே முடிக்கலீங்க. அதுக்குள்ளாற இன்னாருன்னு எப்படீங்க சொல்றது? ஏற்கனவே இவிங்க கட்சிக்காரங்க காசு மேட்டருக்கும் லேடீஸ் மேட்டருக்கும் தான் அடிச்சிட்டு செத்துப் போயிருக்காங்க. இப்பவே அவசரப்பட்டு பாய்ங்க மேல பழியப் போடக் கூடாதில்லீங்க?” எனது பதில் அவரைத் தவறான இடத்தில் சீண்டியிருக்க வேண்டும். நேரடியான பதிலைத் தவிர்த்து விட்டு சுற்றி வளைக்கத் துவங்கினார்,

”அதில்லீங்க.. இந்த ____ (முசுலீம்) பசங்க பாத்தீங்கன்னா நம்மள மாதிரி இல்லீங்க; அவிங்களுக்குள்ளாற ஒன்னா சேந்துக்குவாங்க. அடிதடின்னா துணிஞ்சி நிக்கறாங்க, போலீசு கேசுன்னு ஒரு பயமும் இல்லீங்க. ஒருத்தன் பிரச்சினைன்னு உள்ள போனா மத்தவிங்க அந்த குடும்பத்தையே பாத்துக்கறாங்க. இப்ப கோயமுத்தூர்ல திரும்பவும் ஆட்டம் போட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு மின்ன ஆத்துப்பாலத்துல ஒரு பிரச்சினை நடந்தது கேள்விப்பட்டிங்களா?”

”இல்லீங்களே”

“அதாவதுங்க, நம்ம கெம்பட்டிக்காலனி பையன் ஒருத்தன் வண்டில குனியமுத்தூருக்கு போயிட்டிருந்திருக்கானுங்க. செக்போஸ்ட்டு கிட்டெ பாலக்காட்டு கார் ஒன்னு மேல லேசா ஒரசிருக்கானுங்க. காருக்காரன் மலையாளி பாய்ங்களாமா. இவிங்க ரண்டு பேரும் என்ன ஏதுன்னு பேசிட்டு இருக்கறதுக்குள்ளார கரும்புக்கட பக்கத்தாப்டி இருந்து ஒரு அம்பது பாய்ங்க வந்திருக்காங்க. பாலக்காட்டுக்காரன் தாடி வச்சிருக்கங்காட்டியும் அவிங்காளுன்னு தெரிஞ்சிக்கிட்டாங்களாமா. ஒடனே இந்தப் பையன் கிட்ட பஞ்சாயத்து பேச வந்திருக்காங்க. பேச்சு முத்தி இவன் _______நாயிங்களான்னு திட்டிருக்கான். ஒடனே சுத்தி நின்னு அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அந்தப் பையன் ஓடிப் போயி போலீசு பீட்டுக்குள்ளாற ஒளிஞ்சிருக்கானுங்க. வெளிய ___ (முசுலீம்) ஒன்னாச் சேந்து அந்தப் பய்யனோட புது வண்டிய போட்டு அடிச்சி நொறுக்கிருக்கானுக. அப்பறம் கெம்பட்டிக்காலனிக்கு போன் பண்ணவும் இந்து மக்கள் கச்சிக்காரங்க பத்தம்பது பேரு கெளம்பி வந்து பஞ்சாயத்துப் பேசி அந்தப் பையன காப்பாத்தி கூட்டிட்டு போயிருக்காங்க” எனது பதிலை எதிர்பார்த்தார்.

”சரிங்க.. இது ஏதோ வாய்த்தகராறுங்க. இவனெதுக்கு நாயி பேயின்னு வாய் உடோனும்? அவிங்க அத்தன பேரு இருந்துட்டு அவங்க எட்த்துலேயே பேச்சு வாங்கிட்டு சும்மாப் போவாங்களா?”

”அதுக்கு சொல்லலீங்க தம்பீ… (முசுலீம்) பசங்க எப்படி ஒன்னு கூடிக்கறாங்க பாத்தீங்களா?. நம்மாளுக இந்த மாறி ஒத்துமயா இருக்க மாட்டீங்கறாங்களே?”

சுற்றிச் சுற்றி இப்படியே பேசிக் கொண்டிருந்தார். ஒருவழியாக அவருக்குப் புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றானது. கடைசியாக கேட்டேன்,

“இத்தன சொல்றீங்களே.. அடுத்த எலெக்சனுக்கு தாமரைக்காண்ணா ஓட்டுப் போடப் போறீங்க?”

”தம்பி, நமக்கு இப்ப அம்பது வயசாச்சுங்க. இத்தினி வருசமா ரெட்டெலைக்குத் தான் ஓட்டு குத்தி இருக்கனுங்க. பளக்கத்த மாத்த முடியாதில்லீங்களா?

கிளம்பினேன். கோவையில் பலரிடமும் பேசியதில் இது போன்ற எண்ணற்ற கதைகளைக் கேட்க முடிந்தது. எங்கோ நடந்த அல்லது நடந்தேயிராத சம்பவங்களை அரைகுறையாக கேட்டு அதற்கு கண் காது மூக்கு வைத்து விரித்து விரித்துப் பேசினர்.

”சுந்தராபுரத்துல ஒரு பிஜேபிகாரனைக் கொன்னு குறிச்சி குளத்துக்குள்ளார பொணத்த வீசீட்டாங்களாம்”

“செலுவபுரத்துல பூட்டி வச்சிருந்த நம்மாளுங்க கடைக்குள்ளே ராத்திரி பெட்ரோலை ஊத்தி எரிச்சிட்டாங்களாம்”

“__(முசுலீம்)களுக்கு எங்கிருந்தோ பணம் வந்துட்டே இருக்காம்”

இது போன்ற கதைகள் புதிதல்ல; சொல்லப் போனால் இந்த உரையாடல் கோவையின் பழைய நினைவுகளை மீட்டும் ஒன்றென சொல்லலாம்.. 96-லிருந்து 2000 வரை கோவை இப்படித்தான் இருந்தது. 98-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பையும் அதற்கு முந்தைய கலவரங்களையும் பார்த்தவர்கள் இப்போதைய கோவையை நினைவு கூரலாம்.

96-ம் ஆண்டு இறுதியிலிருந்தே கோவையின் வீழ்ச்சி மெல்ல மெல்லத் துவங்கி விட்டது. பெரும்பான்மையானோருக்கு வேலை கொடுத்து வந்த தங்கப் பட்டறைகளும், பஞ்சு மில்களும் கொஞ்சம் கொஞ்சமாக நசிவடையத் துவங்கியிருந்தன. தங்க இறக்குமதியின் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மற்றும் சங்கிலித் தொடர் நகை மாளிகைகளின் வரவு போன்றவை தங்க நகைத் தொழிலை பாதிக்கத் துவங்கியிருந்த காலம் அது. உள்ளூர் அளவில் சுயேச்சைத் தன்மையோடு இயங்கி வந்த பட்டறைகள் மூடத் துவங்கியிருந்தன. எஞ்சிய பட்டறைகள் பீஸ் ரேட்டுக்கு (குறைவான கூலிக்கு) பெரிய கடைகளுக்கு நகைகள் செய்து கொடுக்கத் துவங்கியிருந்தன. ஏறக்குறைய அதே காலத்தில் சீனப் பஞ்சின் வருகை கோவை மில்களை பாதிக்கத் துவங்கியிருந்தன.

தொழில் வாய்ப்புகள் குறுகிப் போனது வியாபாரிகளிடையே கடுமையான கழுத்தறுப்புப் போட்டியைத் தோற்றுவித்திருந்தது. நகரில் மார்வாடிகளுக்கும் முசுலீம் வியாபாரிகளுக்கும் போட்டி மிகவும் இறுக்கமடைந்திருந்த அதே காலகட்டத்தில் தான் ஓட்டுப் பொறுக்க என்னத்தையும் செய்யத் தயார் என்று இந்துத்துவ கும்பல் களமிறங்கியிருந்தது. இந்துத்துவ கும்பலுக்கு இயல்பாகவே மார்வாடி வியாபாரிகளின் ஆதரவு கிடைத்தது. மார்வாடிகளின் ஆதரவில் இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்கள் விறுவிறுப்பாக செயல்பட்ட காலம் அது.  அந்தக் காலகட்டத்தில் தான் இசுலாமிய வெறுப்புக் கிசுகிசுப் பிரச்சாரத்தை இந்துத்துவ கும்பல் தீவிரமாக முன்னெடுத்து வந்தது.

“கோட்டைமேட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றுகிறார்கள்”

”பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெயித்ததை கொண்டாடுவதற்காக கோட்டைமேடு முசுலீம்கள் மணிக்கூண்டு பஸ்டாண்டில் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”

“கோட்டைமேட்டுக்குள் முசுலீம் அல்லாதவர்கள் நுழையவே முடியாதாம்”

”இந்துக்களை ஆத்திரமூட்டுவதற்காகவே முசுலீம்கள் தங்கள் முகங்களை எதிர் கடிகாரச் சுற்றில் கழுவுவார்கள்”

“இந்துக் கோயிலைப் பார்த்தால் கீழே துப்பி வைத்து விட்டுப் போக வேண்டும் என்று குரானில் எழுதிருக்கிறதாம்”

மேலே உள்ளதெல்லாம் சில உதாரணங்கள் மட்டும் தான். இது போன்ற எண்ணற்ற கட்டுக்கதைகள் அன்று புழக்கத்தில் இருந்தன. வேறு ஒருவர் சொல்லக் கேட்பவர், தன் பங்குக்கு சில கற்பனைகளை சேர்த்து அடுத்தவரிடம் சொல்வார். ஒரு கதை ஏழெட்டு சுற்று வந்தபின் அந்தக் கதையில் வரும் முசுலீம் ஒரு மாபெரும் டைனோசராக உருமாறியிருப்பார். இந்தப் பரப்புரைகள் இறுதியாக 97-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் காவலர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்த கலவரத்தில் வந்து முடிந்தது. அந்தக் கலவரத்தில் 17 முசுலீம்கள் கொல்லப்பட்டதோடு கோவை நகரில் முசுலீம் வர்த்தகர்களின் அடித்தளம் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டது.

இந்து முன்னணி இயக்கத்தின் மூலம் லும்பன்களையும் கிரிமினல்களையும் அணிதிரட்டி வைத்திருந்த இந்துத்துவ கும்பல், காவல்துறையின் நேரடியான ஆதரவோடு இசுலாமிய மக்களுக்கு எதிரான கலவரங்களை கட்டவிழ்த்து விட்டனர். செல்வராஜ் கொலையைத் தொடர்ந்த இரண்டு நாட்கள் கோவையில் நடந்த கொள்ளைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு மாளாது. ஒப்பனக்கார வீதியில் ஜிம்சன் கடை உடைக்கப்பட்டு கடிகாரங்கள் பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டது; கனி ரேடியோஸ் உடைக்கப்பட்டு மின்னணுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டது; ஷோபா துணிக்கடை முற்றிலுமாக எரித்து தரைமட்டமாக்கப்பட்டது. ராஜவீதி, வைசியால் வீதி குறும்பர் சந்து போன்ற பகுதிகளில் இருந்த முசுலீம் வர்த்தகர்களின் கடைகள் சூறையாடப்பட்டன.

97 நவம்பர் கலவரத்துக்கு எதிர்வினையாக 98 பிப்ரவரியில் அல் உமா நிகழ்த்திய குண்டுவெடிப்பு கோவையின் பொருளாதார இயக்கத்தை சுமார் ஒரு வார காலத்துக்கு உறைய வைத்தது. அல் உமாவைத் தவிர்த்து ஏராளமான, நூற்றுக்கணக்கான முசுலீம் அப்பாவிகள் பல ஆண்டுகளாய் சிறை வைக்கப்பட்டனர். இந்தக் கலவரங்களின் பாதிப்பிலிருந்து இன்று வரை அந்த நகரம் முழுமையாக மீண்டெழவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் இசுலாமிய வெறுப்பை முன் வைத்து ஓரளவு செல்வாக்கையும் இரண்டு எம்.பி தேர்தல் வெற்றியையும் சம்பாதித்திருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெகுசீக்கிரத்திலேயே அம்பலப்பட்டு அதே கோவை மக்களால் குப்பையில் தூக்கி வீசியெறிப்பட்டனர். இந்துத்துவ இயக்கங்களும் துண்டுத் துண்டாக சிதறிப் போயின.

தற்போது ஏறக்குறைய 96-ம் ஆண்டில் நடந்ததை ஒத்த நச்சுப் பிரச்சாரங்களை இந்து பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்டிருப்பதைக் காண முடிகிறது. கோவையின் புறநகர்ப் பகுதிகளெங்கும் ஆடிட்டர் ரமேசுக்கு இந்து மக்கள் கட்சி வைத்துள்ள போஸ்டர்களின் நோக்கமும் சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு இசுலாமியர்கள் குறித்த வதந்திகள் பரப்பப்பட்டு வருவதும் இதைத் தான் உணர்த்துகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை உத்தேசித்து ஒருபுறம் குஜராத் வளர்ச்சி குறித்த பொய்களைத் திட்டமிட்ட ரீதியில் பிரச்சாரமாக முன்னெடுத்து வரும் பாரதிய ஜனதா, இன்னொருபுறம் தனது பயங்கரவாதப் பிரிவான விசுவ இந்து பரிக்சத் அமைப்பைக் களமிறக்கி மீண்டும் அயோத்தி பிரச்சினையைக் கிளற முயற்சித்து வருகிறது. இவற்றோடு பிராந்திய அளவில் இசுலாமிய வெறுப்பை முன்வைத்துக் கலவரங்கள் நடத்துவதன் மூலம் ஓட்டுக்களைப் பிரித்து அறுவடை செய்யவும் திட்டமிட்டிருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

காங்கிரசு கும்பல் ஒருபக்கம் பொருளாதார ரீதியில் நாட்டை ஓட்டாண்டியாக்கியுள்ளது என்றால் இந்துத்துவ கும்பல் இன்னொரு பக்கம் வேட்டைக்காடாக மாற்ற முயல்கிறது. கோவை மக்கள் தங்களது வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது.   இந்து மதவெறியர்களை முறியடிக்காமல் கோவைக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் நிம்மதியில்லை.

வினவு செய்தியாளர்.

மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !

2

ள்ளிப் பேருந்தின் சக்கரத்தில்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறங்கள்.
துளிர்களின் பிராண வாயுவில்
தனியார் பள்ளியின் துருக்கள்.
பள்ளியின் கட்டளைகள்,
பிள்ளையின் ஒப்பனைகள்,
எல்லா புத்தகங்களும் கவனம் வரும்..
பிள்ளையின் இதயம் மறந்து போகும்.

பள்ளிக்கூடம்அவசர அவசரமாய் கிளம்புகையில்
அம்மாவின் முத்தத்திற்கு
கன்னத்தில் இடமில்லை,
நூடுல்ஸ் நுழையவும்
பிள்ளைக்கு நேரமில்லை.
பறக்கின்றன பள்ளி வாகனங்கள்.

ஒரு லோடு எல்.கே.ஜி.
இரண்டு லோடு ப்ரீ கே.ஜி.
எல்லா திசையிலிருந்தும்
கொண்டு வந்து கொட்டப்படுகின்றன
குழந்தைகள்.

பிள்ளைக் கனியமுதில்
கல்விச் சாறெடுக்க
இன்னும் தருகிறேன்,
என்னவோ செய்து
எங்களுக்கு ‘ஃபர்ஸ்ட் மார்க்கை’
பிழிந்து தாருங்களென
தனியார் பள்ளிக்கு
கரு வளர்க்கும் பெற்றோர்கள்.

பிழியப்படும் தலைகளின் வரவில்
கற்றனைத்தூறும் லாபம்
கல்வி முதலாளிக்கு.

யூனிஃபார்ம், கோட்டு, டை…
அவனே துணி வியாபாரம்.
ஷூ, பெல்டு, ஸ்கவுட்டு…
அவனே செருப்பு வியாபாரி.
நோட்டு, புத்தகம்…
அவனே ஜெனரல் மெர்ச்சன்ட்!
பேருந்து, வேன், ஆட்டோ…
அவனே மோட்டார் முதலாளி.
ஆயா, வாட்ச்மேன், கேசியர்..
எல்லாம் அவன் ஏற்பாடு.

ஒத்துக் கொள்கிறான்
அம்மா, அப்பா மட்டும் நம் ஏற்பாடு.
பணம் கட்ட மட்டும்
ஆள் வந்தால் போதும்.
மற்றபடி பெத்த தாயே ஆனாலும்
பிரேயருக்கு பிறகு
உள்ளே விட மாட்டார்கள்..
அவ்வளோ ‘ஸ்ட்ரிக்டாம்’ தனியார்.
பிள்ளையைப் பறிகொடுத்தவனுக்கு
பெருமை வேறு!

படித்து
பெற்றவர்களுக்கு சம்பாதிக்கிறானோ இல்லையோ,
படிப்பதற்காக
முதலாளிக்கு சம்பாதித்துக் கொடுக்கும்
இந்தத் ‘தரம்’ முட்டாள்தனம்.

எச்சரிக்கை, தனியார் பள்ளிகள்ஐம்பொறிகளையும்,
மனிதனின் உடல் துவாரங்களையும் கூட
தனது லாபத்திற்கான வாசலாக்கி விட்ட
தனியார்மயத்தைத் தகர்ப்பதே நமது முதல் பாடம்.

இழுத்து வைத்து கழுத்தறுப்பதைப் பார்த்து
மெட்ரிக் பள்ளி பக்கம்
மேயப் போவதில்லை கோழிகள்.
தனியார் பள்ளி தாளாளரைப் பார்த்தால்
காம்புகளைக் காட்டுவதில்லை எருமைகள்.

காக்கை எச்சமிட்டால் திட்டுகிறாய்.
‘கரஸ்பாண்டென்ட்’ எச்சமிட்டால்
மெச்சுவதா?

“அனைத்து தனியார் பள்ளிகளையும்
அரசுப் பள்ளியாக்கு”!
இதைத் தெரிந்து கொள்வது தான்
அறிவு உனக்கு!
இதை வீதிப்பாடமாய் வெளியில் நடத்து!
கல்விக் கண் திறக்கும் தானாய் நமக்கு!

– துரை.சண்முகம்
__________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________________________

செயற்கை இறைச்சி சுற்றுச்சூழலை காப்பாற்றுமா ?

5

கஸ்ட் 5-ம் தேதி இலண்டன் மாநகரத்தின் செய்தியாளர் கூட்டத்தில் செயற்கையான மாட்டிறைச்சியால் செய்யப்பட்ட பர்கர் (Burger) முதல் முறையாக பரிமாறப்பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் மார்க் போஸ்ட் உருவாக்கிய இந்த செயற்கை மாட்டிறைச்சி, பசுவின் ஸ்டெம் செல்லை கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டதாகும். இனி இறைச்சிக்காக விலங்குகளை கொல்ல வேண்டியதில்லை, ஆய்வகத்தில் தனியாக இறைச்சி-தசையை மட்டும் வளர்க்க முடியுமாம்.

செயற்கை இறைச்சிஒரு உயிரினத்தின் உடலில் எலும்பு, இரத்தம், திசு, தசை, மூளை, இதயம் என பல்வேறு செல் வகைகள் உள்ளன. ஸ்டெம் செல்கள் என்பவை எந்த செல் வகையாகவும் மாறும் திறனுள்ள மாஸ்டர் செல்களாகும். உதாரணமாக மனித உடலில் 200-க்கும் மேற்பட்ட செல்வகைகள் உள்ளன. தாயின் கருப்பைக்குள் பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும், ஒன்றிணைந்து முதலில் ஒரேயொரு செல் தான் உருவாகிறது. அவ்வொரு செல்லே பல்கி பெருகி முளைக் கருவாகி பின்னர் வெவ்வேறு வகை செல்களாக மாற்றமடைகிறது. முளைக் கருவிலுள்ள செல்களே ஸ்டெம் செல்கள் எனப்படுகின்றன.

ஸ்டெம் செல்களை கொண்டு செயற்கையாக உடலுறுப்புகளை உருவாக்குவதன் மூலம் தீர்க்கமுடியாத பல நோய்களையும், குறைபாடுகளையும் சரி செய்ய முடியுமென்று மருத்துவ உலகில் பல ஆய்வுகள் நடந்துவருகின்றன. இவற்றின் உதவியால் செயற்கையாக செய்யப்படும் வெளி உறுப்புகளும், உள் உறுப்புகளும் மருத்துவ விஞ்ஞானத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்துவது சாத்தியமாகலாம். உதாரணமாக, செயற்கை கருவிழி அல்லது சிறுநீரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சி வெற்றி அடைந்து விட்டால், கருவிழி பொருத்துவதன் மூலம் கண் பார்வை பெறும் நிலையில் இருப்பவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மகத்தான உதவியாக இருக்கும். அதே நேரம் இந்த புரட்சி ஏழை மக்களுக்கு பலனளிப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

மேலும், இத்தகைய ஆராய்ச்சிக்கு பல கட்ட சோதனைகள், தடைகள், கடும் முயற்சிகள் தேவைப்படும். அந்த சில பத்தாண்டுகள் வரை பிடிக்கக் கூடிய நிச்சயமற்ற வெற்றியை நோக்கிய ஆராய்ச்சிக்கு நிதி ஆதரவை வணிக நிறுவனங்கள் வழங்க முடியாது. மேலும் பல ஆராய்ச்சிகளுக்கான சந்தை தேவை பெருமளவு இல்லாமல் போகலாம். உதாரணமாக அரிதாக, சிறு எண்ணிக்கையிலானவர்களுக்கே வரும் நோய்களுக்கான ஆராய்ச்சிக்கு ஆகும் உடனடி செலவில், மிகச் சிறிதளவே வரும் மொத்த வருமானம் மூலம் திரும்பப் பெற முடியலாம்.

எனவே, மருத்துவம் என்பது வணிகமல்ல, மக்களுக்கான சேவை எனும் பார்வை கொண்ட பொதுத் துறை அல்லது அரசு ஆதரவில்தான் இத்தகைய ஆராய்ச்சிகள் நடக்க முடியும். நீண்ட கால அறிவியல் வளர்ச்சி, மனித குல மேம்பாடு என்ற நோக்கத்தில் இத்தகைய ஆராய்ச்சிகளை நடத்த வேண்டியிருந்தாலும் இன்றைய முதலாளித்துவ உலகில் இது கடினமான ஒன்றே.

இந்தச் சூழலில்தான் ஒரு பசுவின் முளைக்கருவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம் செல் தசை (திசு) செல்லாக மாற்றப்பட்டு பின்னர் பசுவின் ரத்ததிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சீரத்தில் (உயிர்க் கரைசல்) இட்டு, ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களின் துணையுடன் இறைச்சியாக வளர்க்கப்பட்டுள்ளது. சுமார் எட்டு வாரங்கள் வரை இச்செயல்முறையில் வளர்க்கப்பட்ட இந்த இறைச்சியில் கொழுப்பு அறவே இல்லை என்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த மார்க் போஸ்ட், உலகின் அதிகரித்து வரும் உணவுத் தேவையை ஈடுசெய்யவும், அதிகரித்துவரும் சுற்றுசூழல் மாசடைவதை குறைப்பதற்காகவும் இந்த ஆய்வில் தாம் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

மாடுகள் சுமார் 100 முதல் 150 கிராம் தாவர புரதத்தை உண்டு 15கிராம் புரதத்தை தமது உடலில் உருவாக்குகின்றன. அதாவது மாடுகளுக்கு உணவளிப்பதில் 15% மட்டுமே மனிதர்களுக்கு திரும்ப கிடைக்கிறது என்றும் இந்த வகையில் நாம் 85% உணவை இழக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2050-ம் ஆண்டில் உலகின் இறைச்சி தேவை தற்போதைய தேவையை விட 70%-க்கும் மேல் அதிகமாக இருக்குமென்று ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மதிப்பீடு தெரிவிக்கிறது என்றும் இப்போதே உலகின் 70%-க்கும் மேற்பட்ட விளைநிலம் கால்நடை தீவன நிலமாக இருப்பதையும், உலகின் பசுமைக்குடில் வாயுக்களில் 5% கரியமில வாயுவையும், 40% மீத்தேன் வாயுவையும் கால்நடைகள் வெளியேற்றுவதன் மூலம் புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருப்பதையும், அவர் சுட்டிக்காட்டினார்.

மார்க் போஸ்ட்
செயற்கை இறைச்சி பர்கருடன் விஞ்ஞானி மார்க் போஸ்ட்

கோட்பாட்டளவில் ஒரேயொரு ஸ்டெம் செல்லிருந்து 20,000 டன் வரை செயற்கை இறைச்சி உற்பத்தி செய்யமுடியுமாம். செயற்கை இறைச்சியை பெருமளவில் உற்பத்தி செய்வதன் மூலம் மீத்தேன் வெளியேற்றத்தை 95%, கால்நடை தீனி நிலத்தை 98% குறைக்க முடியுமென்றும், அதன் மூலம் உலகின் உணவுப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியுமென்றும் 2011-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலை கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

காலையில் அரைத்த தேங்காய் சட்டினி கெட்டுப் போகாமல் இருக்கும் நுட்பத்தையோ, அதிகமாக விளைந்த தக்காளி அழுகி நாசமாகாமல் போகும் நுட்பத்தையோ கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் செயற்கை இறைச்சியில் பர்கர் தயாரிக்கும் ஆராய்ச்சி தலைப்புச் செய்திகளை பிடித்திருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இந்த செயற்கை இறைச்சி ஆய்வு திட்டத்தின் மொத்த செலவான 250,000 யூரோக்களை கூகிள் இணை நிறுவனர் செர்கே பிரின் நிதியளித்துள்ளார். இந்நிகழ்வு ஸ்டெம் செல் ஆய்வுகளுக்கு நிதியளிக்க முதலீட்டாளர்களை ஈர்க்குமென்பதாலும், இதன் மூலம் செயற்கையாக மனித / விலங்கு உறுப்புகளை வளர்க்க முடியுமென்பது நிரூபித்துள்ளதாலும் அறிவியியலில் இது முக்கியமானதொரு நிகழ்வென்று அவர்கள் கருதுகின்றனர்.

அடிப்படை அறிவியியல் ஆய்வுகளுக்கு நிதியளிப்பதை பெரும்பாலான அரசுகள் குறைத்துக்கொண்ட நிலையில், ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளுக்கு நிதியை ஈர்க்க இத்தகைய வணிகரீதியிலான, கவர்ச்சியான செயல்முறைகளை விளம்பரப்படுத்த வேண்டியுள்ளது.

ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உணவுப் பற்றாக்குறைக்கான காரணம் விளைச்சல், உற்பத்தி குறைவு என்பவற்றை விட, அவற்றுக்கான தொழில் நுட்பத் தடைகளை விட, அரசு கொள்கைகள், வர்த்தக தடைகள் போன்ற முதலாளித்துவ வணிக நடைமுறைகளே காரணமாக உள்ளன. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் விவசாயம் மேற்குலகின் தேவைகளுக்காக பணப்பயிர்களின் உற்பத்திக்கு மடை மாற்றப்பட்டு, வளர்ந்த நாடுகளில் அரசின் மானியம் பெற்று உற்பத்தி செய்யப்படும் விவசாய-உணவு பொருட்கள் இறக்குமதியுடன் போட்டியிட முடியாமல் உணவு உற்பத்தியில் தற்சார்பு அழிக்கப்படுகிறது.

மேலும் ஒரு அமெரிக்கன் போலவோ இல்லை ஐரோப்பியன் போலவோ ஏழை நாடுகளின் மக்கள் இறைச்சியை அதிக அளவில் உட்கொள்ள முடியாது. காரணம் ஆட்டுக்கறி கிலோ ரூ. 500 விற்கும் போது சாதாரண மக்கள் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை இங்கே இருக்கிறது. எனவே இறைச்சி, முட்டை போன்றவை நுகரக்கூடிய தேவை ஏழைகளுக்கு இருந்தாலும் அவை அவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. இதன்படி இன்றைய உலகில் இறைச்சிக்காக அழியும் சுற்றுச் சூழல் என்பது மேற்கத்திய நாடுகளில்தான் இருக்க முடியும்.

பூமியின் சுற்றுச் சூழலை அழிப்பதில் முதலாளித்துவ நாடுகளும், நிறுவனங்களுமே முதன்மைக் காரணமாக இருக்கும் போது அவர்களால் பணியமர்த்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், குண்டு பல்பை எரிக்காதீர்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று நம்மிடம் உபதேசம் செய்தவது போலத்தான் இந்த இறைச்சி சுற்றுச்சூழல் நேசமும்.

இந்த உணவுப் பற்றாக்குறைக்கு செயற்கை இறைச்சி தீர்வாக இருக்க முடியாது. செயற்கை இறைச்சியை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை வளர்த்து, தொழிற்சாலை அமைத்து வணிக ரீதியான செயல்முறைக்கு கொண்டுவர 10 முதல் 20 ஆண்டுகள் வரை பிடிக்கலாம். இதற்கான தொழில் நுட்பத்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு பயன்படாமல் விலை உயர்த்தப்பட்டு விடும். இந்தியா போன்ற நாடுகளில், காப்புரிமை பெறப்பட்ட செயற்கை இறைச்சியை அறிமுகப்படுத்தி இறைச்சிக்கு மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும். மேலும் உணவுப் பற்றாக்குறைக்கு ஏற்றத்தாழ்வான நுகர்வும், அந்த நுகர்வைத் தீர்மானிக்கும் முதலாளித்துவ பொருளாதாரமே அடிப்படைக் காரணம். அதை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றிவிடாது.

கரியமில வாயு போன்ற சுற்றுச் சூழலை பாதிக்கும் வாயுக்களை வெளிப்படுத்தும் வாகன உற்பத்தி, நச்சு வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலை நுட்பங்கள் இவற்றுக்கு மத்தியில் கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால் செயற்கை இறைச்சிக்கான ஆராய்ச்சி தேவை என்று சொல்வதும் பொருத்தமற்றதாகவே இருக்கிறது.

மத்தியகாலத்தில் மதத்திடம் கட்டுண்டுகிடந்த அறிவியலை விடுதலை செய்ய வேண்டியிருந்தது. தற்போதும், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திடம் கட்டுண்டிருக்கும் அறிவியியலை விடுதலை செய்வதே உணவு பற்றாக்குறைக்கும், சூழல் மாசடைவதற்கும் மட்டுமின்றி அனைத்து அறிவியல் முன்னேற்றத்திற்கும் தீர்வாக இருக்க முடியும்.

– மார்ட்டின்

படங்கள் : நன்றி சையின்டிஃபிக் அமெரிக்கன்

மேலும் படிக்க

கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !

6

கல்வி என்பது சேவையே! வியாபாரப் பண்டமல்ல!
தமிழ் என்றால் தன்மானம்! 
ஆங்கிலம் என்றால் அடிமை புத்தி!

  • அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து!
  • அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கு!
  • பொதுப்பள்ளி – அருகமைப் பள்ளி முறையை அமுல்படுத்து!
  • அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு!

கருத்தரங்கம் – பேரணி – ஆர்ப்பாட்டம்!
தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!

ன்பார்ந்த மாணவர்களே – பெற்றோர்களே,

போதிய வகுப்பறை இல்லை, வாத்தியார் இல்லை, கழிவறை, குடிநீர் வசதிகள் எதுவுமே இல்லை. இதுதான் அரசுப்பள்ளிகளின் இன்றைய அவல நிலைமை. சுமார் 1 கோடியே 30 லட்சம் ஏழை மாணவர்களின் புகலிடமாக இருக்கும் இந்த அரசுப்பள்ளிகளை அழியவிடாமல் காப்பது நம் அனைவரின் கடமை.

தரமான கல்வி, ஆங்கிலவழிப் பயிற்சி எனும் விளம்பரங்களைக் காட்டி தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருகுவதால், அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால், உண்மை என்ன தெரியுமா? 2011 ம் ஆண்டு 10 – வது பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்தவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் (ஆதாரம் :  மே,27-2011,  தினமணி ).

விளையாட்டுத்துறை, கலாச்சாரத்துறை, மொழி ஆளுமை, விசயங்களைப் புரிந்துகொள்வது, பிரச்சனைகளை எதிர்கொள்வது என எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருபவர்களும் அரசுப்பள்ளி மாணவர்கள்தான். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்களின் கடுமையான உழைப்பினால் கீழ்நிலையில் உள்ள மாணவர்கள் தரம் உயர்வதோடு, முதல் மதிப்பெண்ணும் எடுக்கிறார்களே, இதுதான் உண்மையான சாதனை!

இத்தகைய அரசுப்பள்ளிகள் சீரழிவதற்கு யார் காரணம்? கல்வியைத் தனியார் மயமாக்கும் அரசின் கொள்கைதான். பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுமென்றே போதிய நிதி ஒதுக்குவதில்லை. இதன் காரணமாக சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ஏழை மாணவர்களின் ஒரே வாய்ப்பான அரசுப்பள்ளிகள் நாள்தோறும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை தமிழக அரசு. மாறாக, தனியார் பள்ளிகள் கேட்கும் பணத்தைக் கட்டணமாக நிர்ணயித்து பகற்கொள்ளைக்கு காவல் நிற்கிறது.

சிறப்புப் பயிற்சிகள், ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மோசடி, தரமற்ற ஆசிரியர்கள், 10 ஆம் வகுப்பு பாடங்களை 9-வதிலும், 12ஆம் வகுப்பு பாடங்களை 11-ம் வகுப்பிலும் நடத்துவது, அரசு பொதுத் தேர்வின்போது டிஜிட்டல் பிளக்ஸ் பேனரில் விடைகளை எழுதிப் பிடிப்பது, இதுதான் தனியார் பள்ளிகளுடைய தரத்தின் யோக்கியதை. அரசுப்பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேடிப்பிடித்து, தங்கள் பள்ளியில் சேர்த்துக்கொண்டு அவர்களை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கும் தில்லுமுல்லுக்குப் பெயர் சாதனையா? வெட்கக்கேடு. இது பெற்றோர்களை ஒட்டச் சுரண்டுவதற்கான கிரிமினல் வேலை.

கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை அமுல்படுத்த விடாமல் முடக்க முயன்று தோற்றுப்போன பார்ப்பன பாசிச ’ஜெயா’, இன்று தமிழை மெல்ல மெல்ல அழிக்கும் சதித் திட்டத்துடன் ஆங்கிலவழிக் கல்வியை அரசுப்பள்ளிகளில் திணித்துள்ளார். ஆங்கிலவழியில் படித்தால் அறிவாளியாகலாம்; எங்கு போனாலும் வேலை கிடைக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. கணிதமேதை ராமானுஜம், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில் தழிழ்வழியில் படித்து புகழ் பெற்றவர்கள்தானே, இன்று அரசுத்துறையிலுள்ள அதிகாரிகள், பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள் போன்றோர் தமிழ் வழியில் படித்து வேலை பெறவில்லையா? ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, பொறியியல் பட்டம் பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி வீதிக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர் என்ற செய்திகளை பார்க்கவில்லையா? ஆங்கில வழியில் படித்தால்தான் வேலை என்பது ஒரு மாயை என்பதை புரிந்துகொள்வோம்.

ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்பது வேறு, ஆங்கில வழியில் கல்வி என்பது வேறு. ஒருபுறம் அமெரிக்கா மீதான அடிமை மோகத்தை பெருமையாக ஏற்றுக்கொள்ளச் செய்வது, மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஆங்கிலம் படித்த தொழில் நுட்பக் கொத்தடிமைகளை அதிகமாக உருவாக்குவது, இப்படிப்பட்ட புதிய மெக்காலே கல்வித் திட்ட வழிகாட்டுதலின் கீழ் கல்வித்துறை இயக்கப்படுகின்றது. தாய் மொழியில் இன்றி ஆங்கில வழியில் கல்வி என்பது சுய சிந்தனை, நாட்டுப்பற்று, தாய்மொழிப் பற்று, சமூக உணர்வு ஆகியவற்றை அறுத்தெறியும் அபாயகரமானது என்பதை உணருவோம்.

பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, பின்லாந்து என உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால், வளர்ந்துகொண்டிருக்கின்ற, பல்வேறு சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நம் நாட்டில் இவை கல்வியாளர்களின் கனவாகவே மட்டுமே உள்ளது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசங்கள் இன்றி அனைவரின் பிள்ளைகளும் ஒரே இடத்தில், ஒரே மாதிரியானக் கல்வி பெற பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறைதான் சிறந்தது, அதுதான் நம் அனைவரின் தேவை. ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்றுமுறை, ஒரே தேர்வுமுறை, ஒரே தரமான கட்டுமான வசதிகளைக் கொண்டு பொதுப்பள்ளி (அரசுப்பள்ளி) இயங்க வேண்டும். மாணவர்கள் சோர்வின்றி, விருப்பப் பூர்வமாக, பாதுகாப்பாகச் சென்று படிக்க ரேசன் கடையைப்போல் அந்தந்த வட்டாரத்திலேயே அருகமைப் பள்ளி முறையில் செயல்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வியில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் ஒழித்து சமத்துவமான கல்வியை அனைவருக்கும் வழங்க முடியும்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக நம் நாட்டில் புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக இன்று கல்வி பண்டமாக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. கல்வி தனியார்மயம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காசு உள்ளவனுக்கே கல்வி என்ற புதிய பார்ப்பனிய குலக்கல்வி முறை அமுலாக்கப்படுகிறது. அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வியை கொடுக்க வேண்டிய அரசு, தன் பொறுப்பில் இருந்து முழுமையாக விலகி வருகிறது. கல்வி தனியார்மயக் கொள்கையை வீழ்த்தாமல், ஏழை மாணவர்களின் இலவச கல்வி உரிமையை நிலைநாட்ட முடியாது. அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக்கவும், அனைவருக்கும் இலவசமாக – கட்டாயமாக தாய்மொழியில், விஞ்ஞானப்பூர்வமான கல்வியைத் தரமாக அரசே கொடுக்கப் போராடுவோம். இதனை சாதிக்க மாணவர்கள்-பெற்றோர்கள்- ஆசிரியர்கள் ஓர் அணியில் திரள்வோம்!

தமிழக அரசே!

  • தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டுமே அரசுப் பணியில் அமர்த்து!
  • வழக்காடு மன்றங்கள் முதல் எல்லா அரசு அலுவலகங்களிலும் முற்றிலும் தமிழிலேயே அலுவல்களை நடத்து!
  • மாணவர் சங்கங்களை எல்லாப் பள்ளிகளிலும் இயங்க அனுமதி!
  • மாணவர்களுக்கு உரிய ஜனநாயக உரிமைகளை வழங்கு!
  • மாணவர்களின் கலை, இலக்கிய, விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரவும், ஊக்கப்படுத்தவும் உரிய வசதிகளை செய்துகொடு!
  • மறுகாலனிய அடிமை மோகத்தை திணிக்கின்ற புதிய மெக்காலே கல்வி முறையை தூக்கியெறி!
  • மனித மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களும், நாட்டுப் பற்றும் கொண்ட விஞ்ஞானபூர்வமான கல்வியை வழங்கு!

மாணவர்களே !

  • தனியார் கல்வி நிறுவனங்கள் என்றால் தரமானக் கல்வி என்ற பித்தலாட்டத்தை தோலுரிப்போம்!
  • ஆங்கிலவழிக் கல்வி பயின்றால் அறிவு வளரும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற மடமையை கொளுத்துவோம்!
  • மாணவர்கள், இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நுகர்வுவெறி, ஆபாசச் சீரழிவு கலாச்சாரம், டாஸ்மாக் போதை வெறி ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவோம்!
  • நாட்டுப்பற்று, சமூகப்பற்று, ஜனநாயக உணர்வு ஆகியவற்றை ஓங்கச் செய்வோம்!
  • மாணவர் – ஆசிரியர் – பெற்றோர்கள் ஓர் அணியில் திரள்வோம்!
  • கல்வி வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
  • அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம் !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.