Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 697

அம்மா அருளாசியுடன் தமிழில் “தி இந்து” !

17

ஜெயாவின் அவதூறு வழக்குகளால் விஜயகாந்தும், கருணாநிதியும் மட்டும் அரண்டு போயிருக்கவில்லை, பத்திரிகைகளும்தான். ஏற்கனவே தி இந்துவின் மாலினி பார்த்தசாரதியை கைது செய்தே ஆக வேண்டும் என்று ‘அம்மா’ ஓட, ஓட விரட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதையடுத்து இந்து ராம் தலைமைச் செயலகம் சென்று பூச்செண்டு கொடுத்து அம்மாவை குளிர வைத்து சமாதானம் செய்தார். அதன்பிறகு ஆங்கில இந்துவில் மறந்தும் கூட ஜெயலலிதாவைப் பற்றி விமரிசனங்கள், குறைகள் ஏதும் வருவதில்லை.

இந்து ராம், ஜெயலலிதா
இந்து ராம், ஜெயலலிதா

இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெயாவை விமரிசித்தார்கள் என்ற செய்தியை போட்டதற்கே ஆங்கில இந்துவின் மேல் தமிழக அரசு அவதூறு வழக்கு போட்டது. அதன்பிறகு அத்தகைய செய்திகளும் இந்துவில் வெளிவருவதில்லை. இந்தப் பின்னணியில் தமிழில் வெளிவந்திருக்கும் ‘தி இந்து‘வைப் பார்க்க வேண்டும்.

ஆங்கில இந்து போல தமிழிலும் நாளிதழைக் கொண்டு வரவேண்டும் என்பது நூறு ஆண்டு காலக் கனவு என்று தலையங்கத்தில் குறிப்பிடுகிறார் அதன் ஆசிரியர் அசோகன். அரசுப் பேருந்துகளில் ரூ.10க்கு ஒரு லிட்டர் குடிநீர் கொடுக்கும் அம்மாவின் திட்டமே நூறாண்டு கடந்து வந்திருக்கும் கனவு இந்துவின் தலைப்புச் செய்தி. பொதுவில் செய்திகளில் கருத்தோ, கண்ணோட்டமோ தருவது தவறு என்ற கொள்கையை கொண்டிருக்கும் இந்து நாளிதழ் இதில் ஒரு மெல்லிய விமரிசனத்தை அல்லது கருத்தை தூவி விட்டிருக்கிறது.

அது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு கேடு என்று பிரச்சாரம் செய்யும் அரசு இந்தக் குடிநீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் பயன்படுத்துவது எங்ஙனம் என்று சுற்றுச் சூழலியவாதிகள் கேட்கின்றனராம். அதாவது இதைக்கூட தி இந்து கேட்கவில்லை. அதனால் அந்த பாட்டில்களை மீண்டும் மக்களிடமே ஒரு விலைக்கு வாங்கி மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாமே என்று பணிவாக முன்வைக்கிறது தி இந்து.

சரி, பிளாஸ்டிக்கை விட குடிநீரை காசு கொடுத்து வாங்குவது தனியார்மயத்தின் விளைவல்லவா, அதை ஊக்குவிப்பது போல அரசே செய்வது நியாயமா என்று இந்துவுக்கு தோன்றவில்லை. மேலும் அரசு கட்டிடங்கள், நிலையங்களில் இலவசமாக தரமான குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கம் அதை காசுக்கு விற்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அந்த அறிவாளிகளுக்குத் தோன்றவில்லை. இதெல்லாம் கருத்து வகைப்பட்டது என்றால் பிளாஸ்டிக் வேண்டாம் என்பது மட்டும் என்னவாம்? அம்மா என்றால் தி இந்துவுக்கும் பயம் பயம் எனும் போது அங்கே கருத்து, விமரிசனம், நடுநிலைமை எதற்கும் இடமில்லை. செப்டம்பர் 12 அன்று தண்ணீர் தனியார் மயம் குறித்து கட்டுரை வெளியிட்டிருக்கும் தி இந்து அதில் தண்ணீர் மக்களது அடிப்படை உரிமை என்று எழுதியிருக்கிறது. ஆனால் நான்கு நாட்களுக்குள் தலைப்புச் செய்தியில் அந்தக் கருத்து ஒளிந்து விட்டது.

இந்தக் குடிநீர் புரட்சி குறித்த படத்தை மட்டும் முதல் பக்கத்தில் போட்ட தினமணி, செய்தியை விரிவாக கடைசிப் பக்கத்தில் போட்டிருக்கிறது. இதனால் தினமணி விசுவாசி அல்ல என்பதல்ல. இன்று மோடிக்கு முதல் பக்கம் ஒதுக்கப்பட்டிருப்பதால் அம்மாவுக்கு கடைசி பக்கத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தினமணியைப் பொறுத்தவரை அம்மாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் அடியாள் என்பதால் இந்த நிலைமை. அப்பேற்பட்ட அம்மா விசுவாசத்தில் தினமணியையும் விஞ்ச வேண்டும் என்று தி இந்து முடிவு செய்திருக்கும் போலும். இதனால்தான் பத்து ரூபாய் குடிநீர் செய்தி முதல் பக்கத்தில். அதுவும் முதல் நாள் செய்தியாக.

இது போதாது என்று “முதல் நாள் இன்று” என்று 16 பக்க இணைப்பு கொடுத்திருக்கும் தி இந்து அதில் “முதலிடத்தை நோக்கி” எனும் கட்டுரையில் ஜெயாவின் “தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் – 2023”-ஐ பரந்து, விரிந்து, குனிந்து 16 பக்கத்திலும் பாராட்டுகிறது.

“எதிலும் முதலிடம். வறுமை இல்லாத வளமான தமிழகம். இதுவே தமிழக அரசின் தாரக மந்திரம். தமிழகத்தை இந்தியாவின் முதலீட்டுத் தலைநகராக, தென் கொரியா, தாய்லாந்து, மலேஷியா போன்ற நாடுகளுக்கு நிகராக மாற்றிக் காட்டுவதே எனது லட்சியம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிபடக் கூறியுள்ளார்” என்று ஆரம்பிக்கிறது அந்த சிறப்பு ஜால்ராக் கட்டுரை. ஆரம்பமே இப்படி என்றால் 16 பக்கங்களிலும் அது எப்படி கரைபுரண்டு ஓடுயிருக்கும் என்பதை நீங்களே ஊகிக்கலாம்.

அடுத்த வரும் பக்கங்களில் இந்த தொலைநோக்கு திட்டம் கல்வி, தொழில், காவல்துறை, பெண்மை, ஊராட்சி என்று தனித்தனி தலைப்புக்களில் போற்றப்படுகிறது. சரி, இது ஏதோ தமிழக அரசு விளம்பரங்களுக்காக போடப்பட்ட முன்னோட்டமோ என்று பார்த்தால் அதில் அரசு விளம்பரம் என்று குறிப்பு எதுவுமில்லை. ஒரு வேளை முதல் நாளே அம்மா கேட்காமலே இப்படி அசத்தினால் அருளாசி லம்பாக கிடைக்கும் என்று தொலைநோக்கும் கூடக் காரணமாக இருக்கலாம். தினமணியின் விழுப்புரம் பதிப்புக்கு வாழ்த்துச் சொன்ன அம்மா தி இந்துவுக்கும் சொன்னதாக வரும் நாட்களில் கண்டிப்பாய் வரும்.

இந்த வேளையில் தி இந்துவுக்கு – நீங்கள் எதாவது ஒரு செய்தியில் ஜெயலலிதாவை விமரிசக்க முடியுமா?, தில் இருக்கிறதா – என்று சவால் விட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள்? நோ நோ இதெல்லாம் எங்களது பத்திரிகை அறத்தில் வராது என்று பின்னங்கால் பிடதியில் அடிக்க ஓடி விடுவார்கள். நல்ல அறம்தான். என்ன ஜால்ரா சத்தம் கூட அறத்தில் சேர்ந்து விட்டதே என்று கொஞ்சம் அந்த தமிழ் வார்த்தை குறித்து பரிதாபம் வருகிறது.

அம்மாவின் விசுவாசி என்பது தமிழ் இந்துவின் ஒரு முகம். முக்கிய முகம் என்னவென்றால் செய்திகளை டைம்பாஸ் பாணியில் அல்லது பேஜ் 3 வடிவில் சொல்வது என்பதே இவர்களது இலக்கு போலும். முதல் நாள் செய்திகளை அட்டை டூ அட்டை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. இதை ஓரிரு வாரங்களுக்கு பிறகு விரிவாக பார்க்கலாம்.

ஆங்கில இந்துவில் அசோகனது தலையங்கத்தை முதல் பக்க விளம்பரத்தில் போட்டிருக்கிறார்கள். இரண்டாவது பக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள் அல்லது நிர்வாகிகளின் வாழ்த்துச் செய்திகளை விளம்பரங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். பதிலுக்கு அத்தனை நிறுவனங்களும் தி இந்துவின் தமிழ் நாளிதழில் விளம்பரங்களை குவித்திருக்கின்றனர். மற்றபடி தமிழ் அடையாளங்களைச் சுமந்த கட்சிகள், பிரமுகர்கள், அறிவாளிகள் யாரது வாழ்த்துச் செய்தியையும் அதில் காணோம். விளம்பரங்களில் வாழ்த்து கொடுத்தவர்களில் பச்சமுத்துவும், நல்லி குப்புசாமியும் உண்டு. தி இந்துவின் இணையத்தளத்தில் புதிய தலைமுறை ஆசிரியர் மாலனே வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முதலாளி விளம்பரத்தில் வாழ்த்து, ஆசிரியர் பின்னூட்டத்தில் வாழ்த்து!

இதிலிருந்து தி இந்துவை நிரப்பப் போகும் கார்ப்பரேட் விளம்பரங்களுக்கிடையில் நமக்கு சிலசெய்திகள் அதுவும் டைம் பாஸ் தரத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது.

சிறைக்குள் செல்போன் என்ற தலைப்பில் முதன்முதலாக புகைப்பட ஆதாரம் என்று வெளியிட்டிருக்கிறார்கள். அதில் சில கைதிகள் செல்பேசியில் பேசுவது, கேரம் போடு ஆடுவது, போஸ் கொடுப்பது எல்லாம் இருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கு முருகன் சந்தனப் பொட்டோடு இருக்கிறார் என்று ஒரு படமும் உண்டு. அவர் சந்தனப் பொட்டிலோ அல்லது சிலுவை டாலர் அணிந்தாலோ இவர்களுக்கு என்ன பிரச்சினை? மேலும் சிறையில் புழங்கும் இந்த தொழில் நுட்ப கருவிகளுக்கு காரணம் காக்கிச் சட்டை அணிந்த ரவுடிகளே என்பது கூட இவர்களுக்குத் தெரியாதா? அதை விடுத்து ஏதோ சிறையாளிகள் ஜாலியாக இருக்கிறார்கள் என்று மாபெரும் கண்டுபிடிப்பு போல காட்ட வேண்டிய அவசியம் என்ன? இல்லை போலீஸ் அதிகாரிகளது ஊழலையோ, ரவுடித்தனங்களையோ இது போல படங்களாக கொடுத்தால் போடுவார்களா?

தலையங்கத்தில் அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் இடம்பெறாது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதனால் ‘நாகரீக’மான அந்தரங்கச் செய்திகள் இடம்பெறும் என்று நம்பலாம். 3-ம் பக்கத்தில் அதற்கோர் சாட்சியம். “ஜெயலலிதாவுடன் சோ சந்திப்பு” எனும் செய்தியில் ஞாயிற்றுக்கிழமை அன்று இருவரும் சந்தித்தார்கள் என்பதைத் தாண்டி மற்றதெல்லாம் இவர்களே கற்பனையாக எழுதுவதுதான். இந்தச் சந்திப்பு குறித்து இருவரும் எதுவும் தெரிவிக்காத நிலையில் மோடி விவகாரம், தேர்தல் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுவதாக தி இந்து  குறிப்பிடுகிறது. யார் அந்த அரசியல் நோக்கர்கள்? ஆந்தையாரா இல்லை கழுகாரா? இதுதான் அந்தரங்கத்தில் நுழையாத நேர்மையா?

4-ம் பக்கத்தில் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 82 இலட்சம் பேர் என்பதை செய்தியாக்கியிருக்கும் தி இந்து அதற்கு காரணமான ஜெயலலிதா அரசாங்கத்தை இலவச இணைப்பில் வளமான தமிழகம் காணும் முதலமைச்சர் என்று போற்றுகிறது. இந்த செய்தியிலும் பூவைப் போன்ற விமரிசனங்கள் எதுவுமில்லை. மாறாக இளைஞர்கள் சொந்தமாக தொழில் செய்து பிழைத்திருக்கட்டும் என்று உபதேசிக்கிறார்கள். வினாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் என்ற செய்தியில் இந்து நிருபர் இந்து முன்னணி தொண்டர் போல தலைப்பு கொடுத்திருக்கிறார். மறந்தும் கூட இந்துமதவெறியர்களின் இந்த புது பாணி கலவர அணிதிரட்டல் குறித்து விமரிசனம் இல்லை. சோ பேசியதையெல்லாம் ஒட்டுக் கேட்பவர்களுக்கு இந்துமுன்னணி எதற்காக்க இந்த ஊர்வலம் நடத்துகிறது என்பது தெரியாதா? இல்லை பிளாஸ்டிக் பொருட்கள் சூழலுக்கு கேடு என்று உபதேசிப்பவர்கள் இந்த கலர் பிள்ளையார் பொம்மைகளை கடலில் கரைப்பது சூழலுக்கு நாசம் என்று கூடவா எழுத முடியவில்லை?

விழுப்புரம் அருகே ஒரு கோவில் மண்டபத்தில் நடந்த திருமணத்தில் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டதை அபச்சாரம் அபச்சாரம் என்று அதிர்ச்சி செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். போலீசும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக அதிர்ச்சியை தணிக்கிறது தி இந்து. கிராம மக்கள் கோவிலில் சிக்கன் பிரியாணியோ இல்லை மாட்டுக்கறி வறுவலோ போட்டால் இவர்களுக்கு என்னய்யா பிரச்சினை? இதில் தலித்துக்கள் மேல் அதிக கரிசனம் உள்ளதாக காட்டிக் கொள்வது எந்த விதத்தில் நீதி? அசைவ உணவின் மீது வெறுப்பு உள்ளவர்கள் தலித்துக்களுக்காக கண்ணீர் வடிப்பது நாடகமில்லையா?

திருவரங்கம் தொகுதியில் இரட்டைக் குவளை முறை என்ற செய்தியிலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் இந்த தீண்டாமையை நீக்கலாம் என்று மக்கள் கருதுவதாக தி இந்து கூறுகிறது. முதல்வர் தொகுதியிலேயே இரட்டைக் குவளை என்றால் முழு தமிழகத்திலும் இது எத்தனை செல்வாக்கோடு இருக்கும் என்று ஒரு விமரிசனத்தைக் கூட அவர்களது பேனாவோ இல்லை கீ போர்டோ எழுதத் தயாரில்லை.

நடுப்பக்கத்தில், ‘இவ்வளவு செய்திகள் எதற்கு‘ என்று ஆவேசப்படுகிறார் ஜெயமோகன். ஆவேசம் அளவுக்கு கட்டுரையில் சரக்கு எதுவுமில்லை. எனினும் 44 பக்கங்களில் வந்திருக்கும் தி இந்து இந்தக் கட்டுரை மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாகவும் கருதலாம். தனது தரப்பை உறுதி செய்யும் அளவுக்குத்தான் செய்திகளுக்கு அதுவும் ஒரு நாள் படிப்பில் 5 சதவீதம் மட்டும்தான் ஒதுக்கியிருக்கிறாராம் ஜெயமோகன். அண்ணா ஹசாரே குறித்து தேசிய ஊடகங்கள் உருவாக்கிய மயக்கத்தில் முக்குளித்தவர் செய்திகள் குறித்து நமக்கு வகுப்பெடுப்பது காலக்கொடுமை.

the-hindu-tamilபொருளாதாரப் பக்கத்தில் “ரகு வர, ரூபாய் எழ” என்று ஒரு தலைப்பில் கட்டுரை. ரூபாய் மதிப்பு சரிந்ததற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி சில முடிவுகளை அறிவித்த பிறகு இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய பணக்கொள்கையை அறிவிப்பதாக ரகுராம் ராஜன் கூறியிருக்கிறாராம். இது சிந்தனைத் தெளிவு என்று பேராசிரியர் இராம. சீனிவாசன் மூலம் பாராட்டுகிறது தி இந்து. அமெரிக்க அடிமைத்தனம்தான் சிந்தனைத் தெளிவு என்பதை ஒத்துக் கொண்டதற்கு நாமும் பாரட்டத்தான் வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட “எண்ணெமெல்லாம் எண்ணெய் – சிக்கல் புகழ் சிரியா” என்ற பத்தியை எழுதியிருக்கும் பா.ராகவனது GLOBE-ஜாமூன் பகுதிதான் தி இந்துவில் நமக்கு ஆத்திரத்தையும் அருவெறுப்பையும் அதிகம் தோற்றுவித்த பகுதி. எதுவானாலும் இனிப்பான நடையில் அளிக்கும் முயற்சிதான் இந்த பகுதி என்று அடை மொழி வேறு. பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு அமெரிக்காவின் வேட்டைக்காக காத்திருக்கும் அந்த அவல தேசத்தை இத்தகைய இனிப்பு நடையில் எழுதுவதென்பது மன வக்கிரம் கொண்டவர்கள் மட்டுமே செய்ய முடியும். இதிலும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அயோக்கியத்தனமான கிளு கிளு நடையில் எழுதியிருக்கும் பா. ராகவனையும் அந்த ஆளை எழுதச் சொன்ன தி இந்துவையும் நினைத்தால் இரத்தம் கொதிக்கிறது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் தினத்தந்திக்கு இருக்கும் சீரியஸ்னெஸ் கூட தி இந்துவுக்கு இல்லை. பேஜ் 3 பாணி செய்திகள் மூலம் இன்றைய இளம் தலைமுறையை அறிவுரீதியாக மேலும் ஊழல் படுத்தும் வண்ணம்தான் இவர்களது செய்திகள் அமைந்திருக்கின்றது. ஆள்வோரிடம் அடிமைத்தனம், வாசகர்களிடம் டைம் பாஸ் பாணி செய்திகள் தருவது இரண்டும் சரியான சேர்க்கையில் இருந்தால் தி இந்து. அல்லது குமுதம், விகடன், டைம்பாஸ், ஜூவி இந்த பத்திரிகைகளின் பக்கங்களை ஆங்காங்கே கிழித்து தினசரியின் வடிவமைப்பில் தொகுத்தால் அது இன்றைய தி இந்துவைப் போலத்தான் இருக்கும்.

தமிழால் இணைவோம் என்பதை முத்திரை வாக்கியமாக வைத்திருக்கும் தி இந்துவின் பெயரில் தமிழ் இல்லை. உண்மையில் நொறுக்குத் தீனி வாசிப்பில் இணைவோம் என்பதே சரியான முத்திரை வாக்கியமாக இருக்கும்.

இனி தினமணி, தினமலரோடு தி இந்துவையும் படித்து விமரிசிக்க வேண்டியிருக்கிறதே என்ற துக்கத்தைத் தாண்டி தி இந்துவின் தமிழ் நாளிதழில் மகிழ்ச்சியாக எதுவுமில்லை.

கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை

36

மிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களுக்கும் சில நாட்களுக்கு முன் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இனி ஆலயங்களுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது. மேலும் இந்து சமய வளர்ச்சிக்கு சம்பந்தப்படாத கொள்கையுடையவர்கள் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளையும் கோவில் வளாகங்களில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், பக்தர்களுக்கு உதவும் வகையில் அமைந்த நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்மேலும் இந்துக் கோவில்களுக்கு சொந்தமான இடத்திலேயே அவர்களை விமர்சித்து பேசுவது அவர்களது மத நம்பிக்கைக்கு எதிரானது என்றும், அப்படி பேச விரும்புவோர் பிற அரசு நிலங்களிலோ அல்லது தனியார் இடங்களிலோ கூடிப் பேசலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தின் கொரடச்சேரிக்கு அருகில் கண்கொடுத்த வனிதம் என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்றில் தி.க. தலைவர் வீரமணி தலைமையில் திராவிட விவசாயிகள் மற்றும் பகுத்தறிவு குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் நாத்திக கருத்துகள் பேசப்பட்டதாகவும், இதனால் மனம் புண்பட்டுவிட்ட உள்ளூர் மக்களின் சார்பாக முதல்வருக்கு இந்துமத வெறியர்கள் ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் என்ற பெயரில் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதனை ஏற்று ஜெயலலிதா இந்த உத்திரவை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த திருமண மண்டபங்களில் நடக்கும் விழாக்களில் மது, மாமிசம் போன்றவற்றை பரிமாறக் கூடாது என்றும் உத்திரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏறத்தாழ 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் வரக்கூடிய கோவில்களின் எண்ணிக்கை மட்டும் 234. பெரும்பாலும் இக்கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ளன. இவற்றில் வருமானம் கோடிகளைத் தாண்டும் பெருங்கோவில்கள் பல உள்ளன. கோவிலுக்கு சொந்தமான பல வணிக மற்றும் குடியிருப்பு பயன்பாட்டுக்கான இடங்கள் நீண்ட கால குத்தகைக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை நகரின் மையப்பகுதிகளில் உள்ள மயிலாப்பூர் பார்த்தசாரதி மற்றும் கபாலீசுவரர் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாகேஸ்வர ராவ்-க்கு சொந்தமான அமிர்தாஞ்சன் கம்பெனி, மயிலாப்பூர் கிளப், பாரதிய வித்யா பவன் மற்றும் பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் பள்ளி போன்ற பார்ப்பன முதலைகள் பலரும் பல பத்தாண்டுகளாக வாடகை சல்லிப்பைசா தராமல் அனுபவித்து வருகிறார்கள். இந்நிலங்களின் இன்றைய சந்தை மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களாகும். சிதம்பரம் தீட்சிதர்களோ தில்லை நடராசனின் விளைநிலங்களை சிவன் சொத்து குல நாசம் என்றெல்லாம் பார்க்காமல் பல ஏக்கர்களை பிளாட்டுகளாக தங்கள் பெயருக்கு மாற்றி விற்பனை செய்துள்ளனர்.

ஜெயேந்திரன்

இப்போதும் கோவில் நிலங்களை இந்துசமய அறநிலையத்துறை ஆய்வு செய்த போது முறையான வாடகைகள் அரசுக்கு வந்து சேரவில்லை என்பது தெரிய வந்ததுடன், கோவில் சொத்துக்களை பார்ப்பன மற்றும் ‘உயர்’சாதி தர்மகர்த்தாக்கள் திருடி விற்றதும் தெரிய வந்துள்ளது. திருடியவர்கள் அனைவருமே ஆத்திகர்கள்தான். தற்போது இந்தக் கொள்ளையில் பிற ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் திடீர் பணக்கார ரவுடிகளும் இணைந்துள்ளனர்.

சொத்துக்களை கைப்பற்றுவதற்காக திருவாடுதுறை ஆதினத்தில் பெரிய ஆதீனம் மீது சின்ன ஆதீனம் நடத்திய கொலை முயற்சி, காஞ்சி சங்கராச்சாரிகளின் பாலியல் முறைகேடுகள், கொலைகள், ஊழல்கள் போன்றன சந்தி சிரித்து நாறுகின்றன. மதுரை ஆதீனமும் நித்தியானந்தாவும் இதில் லேட்டஸ்டு வரவுகள். தங்களது வருமானம் போய்விடும் என்று தெரிந்தவுடன் சிதம்பரம் கோவிலில் உண்டியல் வைப்பதை எதிர்த்து தீட்சித பக்தர்கள் தீவிரமாக போராடியதை தொலைக்காட்சிகளில் தெளிவாக பார்க்க முடிந்தது. அதே தீட்சிதர்கள் பக்தன் தட்டில் போடும் காசுக்கேற்ப தீபாராதனையையும், திருநீற்றையும் சுருக்கியதைப் பார்த்து எந்த பக்தனின் மனமும் சுருங்கவில்லையே. அது ஏன்?

மக்கள் ஓரளவு கல்வியறிவும், விபரமும் பெற்றுள்ள இந்தக் காலத்திலேயே இவ்வளவு தூரம் ஆண்டவன் சொத்தை ஆட்டையைப் போடும் பார்ப்பனீய ‘உயர்’சாதி இந்துக்கள் 100 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள். இப்படி தமிழக கோவில்களை அறங்காவலர்கள் என்ற பெயரில் இவர்கள் சுருட்டிய ஊழல்கள் வந்து நாறவே இதனை கட்டுப்படுத்த முயன்ற ஜஸ்டிஸ் கட்சியின் பனகல் அரசரது ஆட்சியில் 1924-ல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆரம்பிக்கப்பட்டது. இந்துக் கோவில்களை பராமரிப்பது மற்றும் அதன் வருமானம், கணக்கு வழக்குகளை முறையாக நிர்வகிப்பது போன்றவை அதன் பணிகளாகும்.

பெரியார்

இந்து அறநிலையத்துறையின் கீழ் வந்த பிறகு ஆலயங்களை பராமரிப்பது முறையாக நடைபெற்றது. இறைவனின் பெயரால் முறைகேடான தரிசனங்கள் மற்றும் அர்ச்சனைகளுக்காக பார்ப்பனர்களால் அதுவரை வசூலிக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. ஏழை பக்தனும் பெரிய ஆலயங்களுக்குள் செல்வதும், சமமான முறையில் இறைவனிடம் வழிபடுவதும் சாத்தியமானது.

இன்றோ இந்து அறநிலையத் துறை ஆர்.எஸ்.எஸ்-ன் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆலயத்தின் வளாகத்தின் கடைகளுக்கு வரும் ஒவ்வொருவனும் தனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதை நிரூபித்தால் தான் உள்ளே வரலாம் எனில் அது சர்வாதிகார நடைமுறை அல்லவா?  கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடத்தும் பொது நிகழ்ச்சியையும் தடை செய்வது அடிப்படை ஜனநாயக உரிமைக்கும், மதச்சார்பற்ற அரசு என்பதற்கும் எதிரானதல்லவா?  கோவில் சொத்து கொள்ளையை அம்பலப்படுத்த முன்வருபவனை நாத்திகன் என்று முத்திரை குத்தி விட்டாலே கொள்ளையடிப்பது எளிதாகி விடும் இல்லையா?

கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் பக்தனின் பக்தியை விட நேர்மையாக நடந்து கொள்ளும் நாத்திகன் பேசும் இறை மறுப்பு கொள்கை யோக்கியமானதில்லையா? என்பதை நேர்மையான பக்தர்கள் தான் பரிசீலிக்க வேண்டும். பழனி முருகனின் நவபாஷண பின்புறத்தை ஒட்டச் சுரண்டியதும் அர்ச்சகர்களாக இருந்த பார்ப்பன பக்தர்கள் தானே.  அரசு கண்காணிப்பில் இருக்கையிலே திருடும் இவர்கள் இந்து முன்னணி கோருவது போல ஒரு சுயேச்சையான இந்து நிர்வாகத்தின் கீழ் வரும்பட்சத்தில் எப்படியெல்லாம் திருடுவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் நீசபாஷை எனச் சொல்லியே தேவாரம் கண்டெடுத்த தில்லை நடராசனின் திருச்சிற்றம்பலத்தில் தேவாரத்தை பாட விடாமல் தடுத்த பார்ப்பனக் கும்பலை விரட்டி தேவாரம் பாட வழிவகுத்தவர்கள் நாத்திகர்கள்தான். அதே கோவிலின் உட்பிரகாரங்களில இரவு நேரங்களில் சீட்டாட்டம், சாராயம், பெண்கள் என அரங்கேற்றியவர்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்த தீட்சித பக்தர்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரி முதல் தேவநாதன் வரை அனைவருமே கருவறையை பள்ளியறையாக, பார் ஆக மாற்ற எள்ளளவும் பயப்படாதவர்கள். இதைவிட கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடக்கும் மாமிச விருந்து எந்த வகையில் மோசமானது. கண்ணப்ப நாயனார் தந்த பன்றி மாமிசத்தை புசித்தவர்தானே சிவபெருமான் என்பதையும் பக்தர்கள் சிறிது யோசிக்க வேண்டும்.

முந்தைய ஜெயா ஆட்சியில் கிடா வெட்டு தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டு, கடுமையான எதிர்ப்புகள் வரவே அச்சட்டம் திரும்ப பெறப்பட்டது. இப்போது அதையே மெதுவாகவும், நாசூக்காகவும் மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார் ஜெயா. சாதி எதிர்ப்பாளர்களின், பகுத்தறிவாளர்களின், முற்போக்காளர்களின், பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் கூட்டம் கூடும் உரிமையை இந்த உத்திரவு பறிக்கிறது. தங்களுக்கு பிடிக்காதவர்களை அதிகாரிகளும், இந்துமத வெறியர்களும் இணைந்து நாத்திக முத்திரை குத்துவதும் இந்த உத்திரவு மூலம் எளிதானதாக மாறுகிறது. அந்த வகையில் கோவிலில் நடக்கும் கொள்ளைகளைப் பற்றி முன்னர் அஞ்சலட்டை மூலமாக பெட்டிஷன் போட்ட சங்கர் ராமன் போன்றவர்களை இனிமேல் சங்கராச்சாரி ஆள் வைத்து கொன்றெல்லாம் சிறைக்கு போக வேண்டிய அவசியமில்லை. சங்கர ராமனை நாத்திகன் என நிரூபித்தாலே சங்கராச்சாரிக்கு போதுமானது.

சங்கராச்சாரி, தேவநாதன்
கருவறை பள்ளியறையாக – சங்கராச்சாரி, தேவநாதன்

இந்து அறநிலையத் துறையானது மறுமணத்தை கோவில்களில் நடத்த அனுமதிப்பதில்லை. கோவில்களில் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வழிபடுவதற்கு ஏகப்பட்ட சிறப்பு முன் அனுமதியைப் பெற வேண்டியிருக்கிறது. கலைச் சிற்பங்களை ஆராய வரும் ஆய்வு மாணவர்களோ அல்லது கலை ரசிகர்களோ இனி தங்களை இந்துக்கள் என நிரூபித்தாக வேண்டி வரும். பல இந்துக் கோவில்கள் பௌத்த, சமண வழிபாட்டுத்தலங்களை கைப்பற்றி மாற்றப்பட்டதுதான் என்பது போன்ற ஆய்வுகளை இந்துமத வெறியர்கள் போலவே பாசிச ஜெயா அரசும் விரும்பவில்லை. இனி அந்த ஆய்வுகளுக்கெல்லாம் இடமில்லை.

ஏற்கெனவே இந்துசமய அறநிலையத் துறையில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது அவர்கள் நாத்திகர்களாக இருக்க கூடாது என்றும், பிற மதங்களை சேர்ந்தவர்களாக இருக்க கூடாது என்றும் விதி இருக்கிறது. ஆனால் தற்போது ஆலயங்களுக்கு சொந்தமான வேறு இடங்களில் இருக்கும் கடையை வாடகைக்கு எடுப்பவரின் பக்தியின்மை எப்படி அங்கு சரக்கு வாங்க வரும் பக்தனின் மன உணர்வை புண்படுத்தும் என்பதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் விளக்கவில்லை. வாங்கும் சரக்கு தரமாகவும், விலை மலிவாகவும் இருக்கிறதா என்றுதான் யாரும் பார்க்க முடியுமே தவிர, கடைக்காரன் நாத்திகனா, கிறிஸ்தவனா என்றெல்லாம் பார்த்து யாரும் சரக்கு வாங்குவதில்லை.

அதே போல கிறிஸ்தவ, முசுலீம் வியாபாரிகள் யாரும் தாங்கள் இந்து மதத்தை சாராதவர்கள் என்பதற்காக கோவிலுக்கு தர வேண்டிய வாடகை பாக்கியை தருவதற்கு மறுப்பதில்லை. அதே போல கோவில் நிலங்களில் பயிர்செய்யும் விவசாயி கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அது எந்த வகையில் பக்தனின் மன உணர்வை பாதிக்கும் எனத் தெரியவில்லை. அப்படி விளைந்து வருவதை பக்தர்கள் யாரும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறிக்கொண்டு இருக்க முடியாது.

ஆறுமுகச் சாமி
தில்லையில் தமிழில் பாட போராட்டம் – ஆறுமுகச் சாமி

எனவே கோவில் சொத்துக்களை ஏப்பம் விட்ட பார்ப்பன வியாபாரிகளை, நில அபகரிப்பு முதலைகளை காப்பாற்றவும், இனி தங்களில் ஒருவரே இதனை ஏப்பம் விடவும் பார்ப்பன பாசிச ஜெயாவும், இந்துமத வெறியர்களும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது மட்டும் தெளிவாக தெரிகிறது. கோவில் கொள்ளைக்கு மட்டுமின்றி பாஜக அடுத்த தேர்தலின் மூலம் நாட்டை கொள்ளை போடவும், தனது பாசிச கூட்டாளி மோடியை முன்னிறுத்தவும், தான் பேரம் பேசவும் ஜெயாவுக்கு இந்தக் கூட்டணி உதவும்

இந்து மத வளர்ச்சிக்கு உதவுவது என்ற அரசின் நோக்கம் மதச்சார்பற்ற அரசு என்ற அதன் சொல்லிக் கொள்ளும் வடிவத்துக்கு எதிரானது. இப் பிரச்சினை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள கி.வீரமணி, சார்வாகம் போன்றவற்றை பின்பற்றிய பழைய நாத்திகர்கள் ராமனுக்கு மந்திரியாக இருந்தார்கள் என்றும், நாத்திகம் என்பது இந்து மதம் ஏற்றுக் கொண்ட ஒன்றே என்றும் கூறியுள்ளார். அதாவது இந்து மதத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவரும், இல்லாதவரும் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், சுயமரியாதை திருமணச் சட்டமே இந்து சமய திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தம்தான் என்பதையும் கூறி,  ஆகவே கோவில் திருமண மண்டபங்களில் தங்களையும், சுயமரியாதை திருமணங்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வீரமணி சொல்வது போல நாத்திகமும் இந்து மதத்தின் அங்கம் எனக் கூறி உரிமை கோருவது மதம் மற்றும் அரசை தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கைக்கு எதிராக இருக்கிறது. அல்லது நாத்திகம் பேசுபவர்களெல்லாம் இந்துக்கள் என்று அவர்களது அணியில் சேருவதற்கு வழி செய்கிறது. கடவுள் மறுப்பு என்பது உலகெங்கும் உள்ள ஒரு ஜனநாயகக் உரிமை. அதை வைத்து எந்த ஒரு சிவில் உரிமையையும் மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

கருவறைக்குள் சூத்திரன் வந்தால் தீட்டு என்று கூறும் பார்ப்பனீய இந்துமதம் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் 206 சூத்திர மாணவர்களை சாதித் தீண்டாமையின் பெயரால் கோவிலுக்கு வெளியே நிறுத்தியிருக்கிறது. மரபு என்ற பெயரில் உச்சநீதி மன்றம் வரை அதை நியாயப்படுத்துகிறது. பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போராடிய காரணத்தால் இனி அந்த அர்ச்சக மாணவர்களும் நாத்திகர்களாகத்தான் அறிவிக்கப்படுவார்களோ?

ஏதாவது கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு இனி இந்து போலிசார்தான் வரவேண்டும் என்று விதியை மாற்ற முடியுமா? இல்லை அம்மாவட்டத்திற்கு ஒரு எஸ் பி முசுலீமாக இருந்துவிட்டால் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? கடவுளுக்கு வெட்டியாக செய்யப்படும் அபிஷேகத்திற்கு வரும் பாலை கறந்தவர்களில் நாத்திகர்கள் யார், ஆத்திகர்கள் யார் என்று பிரித்தறிய முடியுமா? கோவில் கட்டிடங்களை பழுது பார்க்கும் தொழிலாளிகளுக்கும் இந்த அளவு கோல் பொருந்துமா?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் உரிமை துவங்கி பெண்களின் சம உரிமை வரை நாத்திகர்கள் பலர் போராடியிருக்கிறார்கள். பெரியாரது இயக்கம், கம்யூனிச இயக்கமின்றி இன்றைய தமிழகத்தில் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு எந்த உரிமையும் கிடைத்திருக்காது. அந்த வகையிலும் பெரும்பான்மை ‘இந்து’க்களுக்காக போராடி உரிமை வாங்கிக் கொடுத்தவர்கள் நாத்திகர்கள்தான்.

எனவே அறநிலையத்துறை அறிவித்திருக்கும் இந்த இந்துமதவெறி உத்திரவை ரத்து செய்வதற்கு நாம் போராட வேண்டும்.

– வசந்தன்.

மேலும் படிக்க

ஜிம்பாவே கருப்பின மக்களின் நிலத்திற்கான போராட்டம் !

2

முற்றுப் பெறாத ஒரு ஆப்பிரிக்க புரட்சியிலிருந்து அறிக்கைகள் – அமன் சேத்தி

ஜிம்பாவேவின் பூர்வகுடிகளான கருப்பின மக்கள் தமது தாய் மண்ணை, நிலங்களை, விவசாயத்தை ஆக்கிரமித்த வெள்ளையின பண்ணையார்களிடமிருந்து கைப்பற்றிய போராட்டத்தை இந்தக் கட்டுரை சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதிபரின் முகாபேயின் கட்சியும் அரசும் இந்த போராட்டத்தை தமதாக்கிக் கொள்ள முயற்சித்தாலும் உண்மை அதுவல்ல. இது மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களினாலேயே சாத்தியமாயிருந்தது. மேலும் முகாபே அரசு இந்த போராட்டத்திற்கு பின்னர் கருப்பின மக்கள் விவசாயம் செய்வதற்கான எந்த உதவியும் செய்திருக்கவில்லை. நிலம் பெற்றாலும் அதில் கடன் வாங்கி செழுமையான விவசாயம் செய்வதற்கான வசதிகள் அம்மக்களுக்கில்லை. எனினும் காலனிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தாய் மண்ணை மீட்கும் இந்த போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

வினவு

____________________________

வெள்ளை இன பண்ணையார்களுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு ஜிம்பாப்வேயின் விவசாயத் தொழிலாளர்கள் நாட்டின் அனைத்து விவசாய நிலங்களில் நான்கில் மூன்று பகுதியை தமக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சுயேச்சையான இயக்கத்தை தனது கொள்கைகளின் பலன் என்று முன்நிறுத்துவது ZANU-PF கட்சியின் வெற்றியாக மாறியிருக்கிறது.

நினைவு தெரிந்த காலத்திலிருந்து, மொந்தொரோவின் ஷோனா இன மக்கள் சோளம் பயிரிடும் சுத்தமான சமூக நிலங்களை, வெள்ளை இனத்தவர் புகையிலை பயிரிடவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காட்டெருமை சுடவும் பயன்படுத்தினர். வெயிலில் காய்ந்து இறுகிப் போன தூசி பறக்கும் ஒரு பாதைதான் வேலியிடப்பட்ட பண்ணைகளையும் தனியார் வேட்டைக் களங்களையும் பிரிக்கும் எல்லையாகும்.

கறுப்பு சக்தி பண்ணை
கறுப்பின மக்களின் சக்தி.

ஜான் டெல், சாலிடிடுயூட், தம்வூரி போன்ற பண்ணைகளின் எல்லையை தாண்டி இளம் ஆண்களும் பெண்களும்  வேலை செய்யப் போனாலும், அத்து மீறி நுழைந்ததாக கைது செய்யப்படுவதை தவிர்க்க இருட்டுவதற்கு முன்பு அவசர அவசரமாக திரும்பி விடுவார்கள். சமூக நிலங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகள் வெள்ளை நிலங்களுக்குள் நுழைந்து பறிமுதல் செய்யப்பட்டு விடாமல் குழந்தைகள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். 1998-ம் ஆண்டு ஒரு இரவில், பணம் கொடுக்கும் விருந்தினர்களுக்கான காட்டு விலங்குகளை வேட்டையாடுகிறார் என்ற சந்தேகத்தில் ஜூலியஸ் என்ற இளைஞர் தம்வூரி வேட்டை ஒதுக்கிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் எல்லை உறவுகள் மோசமாக ஆரம்பித்தன என்கிறார்கள் கிராமவாசிகள்.

ஒரு ஆண்டுக்குப் பிறகு உலகெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்திய நாடு தழுவிய பண்ணை ஆக்கிரமிப்புகளின் ஒரு பகுதியாக மோந்தோரோவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் 32,000 ஏக்கர் பரப்பளவு வேட்டை ஒதுக்கிடமான தம்வூரிக்குள் கால் நடையாக நுழைந்தார்கள். அந்த நேரத்தில் நாடு முழுவதிலும் சுமார் 4,500 வெள்ளை இன பண்ணையார்கள் 1.2 கோடி ஹெக்டேர் நிலத்தை, அதாவது ஜிம்பாம்வேயின் அனைத்து விவசாய நிலங்களில் 35 சதவீதத்தை சொந்தமாக வைத்திருந்தார்கள். கறுப்பு இன மக்கள் சமூக நிலங்களில் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.

“சுதந்திரமடைந்து இருபது ஆண்டுகள் கழித்தும் நாங்கள்  காத்துக் கொண்டிருந்தோம். நிலம் எங்களுடையது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்கிறார் மொந்தொரோவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர். இன்றைக்கு 181 குடும்பங்கள் தம்வூரியில்  குடியேறி, பயிரிட்டு, கால்நடை வளர்த்து வாழ்கிறார்கள். வேலிகள் உடைத்து எறியப்பட்டு, உள்ளூர் மதுபானக் கடை, விளையாட்டு மேசை மற்றும் மளிகைக் கடையைச் சுற்றி ஒரு புதிய சமூகம் உருவாகி வருகிறது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஜிம்பாப்வே முழுவதும் 1.7 லடசம் குடும்பங்கள் 1 கோடி ஹெக்டேர் நிலங்களில் குடியேறியிருக்கிறார்கள்.

இந்த கதையாடலை மறுப்பவர்கள்

விமர்சகர்களைப் பொறுத்த வரை, ஜிம்பாப்வேயின் துரிதமான நிலச் சீர்திருத்தம், வன்முறை நிறைந்தது, அரசு ஆதரவிலான சொத்துத் திருட்டு, தேசிய பொருளாதாரத்தை நாசமாக்கியது என்பதாகும். அது அதிபர் ராபர்ட் முகாபேயை இரக்கமற்ற கொடுங்கோலனாக சித்தரிக்கும் மேற்கத்திய சித்திரத்தை உறுதிப்படுத்தியது. 1980 முதல் ஜிம்பாப்வேவை ஆட்சி செய்து வரும் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் – தேசபக்த முன்னணி (ZANU-PF)யில் உள்ள அதிபர் முகாபேயின் அடியாட்களுக்காக அரசாங்கம் நிலத்தை பறித்தது என்று பலர் வாதிட்டனர்.

ராபர்ட் முகாபே
7-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் அதிபர் ராபர்ட் முகாபே.

நில வினியோகத்தின் வீச்சு முன்பு அனுமானிக்கப்பட்டதை விட அது  பரவலான அடிப்படையை கொண்டது, ஆக்கபூர்வமானதானது என்று கருத இடம் அளிக்கிறது. ஹராரேவில் முகாபே உள்ளிட்ட ஒரு சிறு கும்பல் நில ஆக்கிரமிப்புகளை திட்டமிடப்பட்டது என்று சொன்னாலும் கிடைக்கும் அறிவுத் துறை ஆய்வுகள் அதை  மறுதலிக்கின்றன. ஆக்கிரமிப்பாளர்களது நடவடிக்கைகள் சுயேச்சையானவை என்றும், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக நடத்தப்பட்டவை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். விடுதலைப் போராட்டத்தின் போது மக்களை ஒன்று திரட்டிய முழக்கத்திற்கு எதிராக அரசாங்கம் சமரசம் செய்து கொண்டதாக ஆக்கிரமிப்பாளர்கள் கருதினார்கள்.

“நிலப் பிரச்சனையில் ZANU-PF மறு புரட்சிகரமாக்கப்பட்டது அல்லது கீழிருந்து புரட்சிகரமாக்கப்பட்டது, நில வினியோக நடைமுறையை ஜனநாயக பூர்வமாக்கி அதன் இயல்பை அடிப்படையிலேயே மாற்றி அமைத்தது,” என்கிறார் ஹராரேவில் உள்ள விவசாய ஆய்வுகளுக்கான ஆப்பிரிக்க கழகத்தின் செயல் இயக்குனர் சாம் மோயோ. பேராசிரியர் மோயோ கடந்த 10 ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, பரவலான ஆக்கிரமிப்புகளும் நில வினியோகமும் பெரும்பாலும் சமத்துவ அடிப்படையிலேயே நடந்தன என்று முடிவு செய்திருக்கிறார். உதாரணமாக, ஜிம்பாப்வேயின் ஏழை உழவர்கள் அனைத்து விவசாய நிலங்களில் 79 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள் என்று அவரது மிகச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது. 1980-ல் இது 49 சதவீதமாக இருந்தது.

“1890-ல் காலனியாக்கம் முதலாகவே எங்களது போராட்டங்களின் பொதுவான இழை நில விவகாரம் பற்றியதாகவே இருந்தது” என்கிறார் நீதித் துறை அமைச்சரும் ZANU-PF-ன் மூத்த உறுப்பினருமான பேட்ரிக் சினமாசா. இருப்பினும், நிலத்தைத் திரும்பப் பெறுவது, சுதந்திரத்தைத் திரும்பப் பெறுவதை போலவே கடினமானவே இருந்தது.

1979-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் ராபர்ட் முகாபேயின் விடுதலை போராளிகளுக்கும் இயன் ஸ்மித்தின் வெள்ளை குடியேற்ற அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை பேசி முடித்தது : இணங்கி வரும் விற்பனையாளர், இணக்கமான வாங்குபவர் என்ற அடிப்படையில் சொத்து உரிமைகள் 10 ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்படும்; கட்டாய கையகப்படுத்தல் எதுவும் செய்யப்படாது, நிலத்தை வாங்கி ஏழை உழவர்களுக்கு வினியோகிப்பதற்கு ஜிம்பாப்வே அரசாங்கத்துக்கு பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள் உதவி செய்யும். ஒரு ஆப்பிரிக்கத் தலைவர் பழிவாங்கலை கை விட்டு ஒத்துழைப்பை தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு சிறந்த உதாரணமாக இந்த ஒப்பந்தம் பரவலாக பாராட்டப்பட்டது.

டோனி பிளேர் - ராபர்ட் முகாபே
வெள்ளையின பண்ணையார்களுக்கு சாதகமாக நிலச் சீர்திருத்தம் செய்ய முயன்ற பிரிட்டன் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், ராபர்ட் முகாபே வுடன்)

ஆனால், வெள்ளை பண்ணையார்கள் விளிம்பு நிலை நிலங்களின் துண்டிக்கப்பட்ட பகுதிகளை மட்டும்தான் விற்க முன் வந்தனர். அர்த்தமுள்ள மறு குடியமர்த்தல் கொள்கைக்கு ஏற்றவாறு அவற்றை இணைக்க முடியாததால், திட்டம்  நடைமுறையில் முடங்கிப் போனது என்கிறார் சினமாசா கூறுகிறார். இருப்பினும் 1980-களில் 75,000 குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.

1990-ல் முகாபே அரசாங்கம் ஒரு தீர்மானமான திருப்பு முனையில் நின்றது. சுகாதாரத் துறையிலும், கல்வியிலும் செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் 90 சதவீதம் ஜிம்பாப்வேயினர் கல்வி அறிவு பெற்றிருந்தனர். ஊதிப் பெருத்த அதிகார வர்க்கம், ஊழல், தள்ளாடும் பொருளாதாரம் இவை அனைத்தும் சேர்ந்து அரசாங்கத்தை பெருமளவு பற்றாக்குறையில் இயங்க வைத்திருந்தன. 1991-ல் உலக வங்கி, ஐஎம்எஃப் மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி பரிந்துரைத்த ஐந்து ஆண்டு பொருளாதார கட்டமைப்பு சீர்செய்தல் திட்டத்திற்கு (ESAP) ஜிம்பாப்வே இணங்கியது.

ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் தரவுகளின்படி 1996-ல் ESAP முடிவடைந்த போது ஜிம்பாப்வேயின் நாணய மதிப்பு 50 சதவீதம் வீழ்ந்திருந்தது. வெளிநாட்டுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 44 சதவீதத்திலிருந்து 71 சதவீதமாக உயர்ந்திருந்தது, ஆரம்பப் பள்ளிச் சேர்க்கைகளும், கல்வி, மருத்துவத்துக்கான செலவழிப்பும் வீழ்ச்சியடைந்தன. தொழில் துறை 0.1 சதவீத வேகத்தில் வளர்ந்தது.

அதைத் தொடர்ந்து விரைவிலேயே ஜிம்பாப்வே, அங்கோலா, நமீபியா நாடுகள் காங்கோ ஜனநாயகக் குடியரசில் பற்றி எரிந்து கொண்டிருந்த ஒன்பது-நாடுகள் போருக்கு படை அனுப்ப முடிவு செய்தன. மோசமான அடிப்படையில் நடத்தப்பட்ட அந்த நடவடிக்கை நான்கு ஆண்டுகள் நீடித்து, ஏற்கனவே பெருமளவு கடன்பட்டிருந்த நாட்டுக்கு 1998-ல் மாதம் $13 லட்சம் என்ற அளவுக்கும், 1999-ல் மாதத்துக்கு $30 லட்சம் என்ற அளவுக்கும் பொருளாதார சுமையை அதிகரித்தது.

நாடு காங்கோ ஜனநாயக குடியரசில் பணத்தை இழந்து கொண்டிருந்த போது, விடுதலை போராட்டக் கால கொரில்லா வீரர்கள், முன்னாள் போர் வீரர் சங்கங்கள் ஏற்படுத்தி நிலம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான நீண்ட காலமாக நீடிக்கும் குறைகளை கையில் எடுத்தார்கள். பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போதும் முகாபே பதவி விலக மறுத்ததை எதிர்த்து நகர்ப்புற இளைஞர்கள், தொழிற்சங்கங்கள், வெள்ளை இன பண்ணையார்கள் மற்றும் தன்னார்வ குழுக்களின் கூட்டணி ஒன்று ZANU-PF-க்கு எதிராக உருவானது.

1999-ல் இந்த குழுக்கள் ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கமாக உருப்பெற்றன. இந்த எதிர்க்கட்சி மேற்கத்திய சக்திகளின் முன்னணி அமைப்பு என்று ZANU குற்றம் சாட்டுகிறது. பிரிட்டன் நில கையகப்படுத்தலுக்கு நிதி அளிப்பதை தொடர மறுத்து, எம்டிசி-க்கு தன் ஆதரவை வழங்கியது. பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சிக்கான பிரிட்டிஷ் அமைச்சர் கிளேர் ஷார்ட் ஜிம்பாப்வே அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில், ஜிம்பாப்வேவில் நிலச்சீர்திருத்தத்துக்கு பிரிட்டன் எந்த சிறப்பு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னார். “என்னுடைய சொந்த அடையாளம் ஐரிஷ், உங்களுக்கே தெரிந்தது போல நாங்களே காலனியாக்கம் செய்யப்பட்டவர்கள்தான், காலனியாக்கம் செய்தவர்கள் இல்லை”

பிரிட்டிஷ் மக்கள் சபையில், தொழிலாளர் கட்சி உறுப்பினர் எர்னி ரோஸ், அரிதாக ஏற்படும் ஒத்த கருத்துக்காக பிரிட்டனின் அரசியல் கட்சிகளை பாராட்டினார். “அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு ஜிம்பாப்வேவில் ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்துக்கு முக்கியமான உதவியை செய்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். “… சுதந்திரம் கிடைத்த பிறகு முதல் முறையாக, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு முறையான எதிர்க் கட்சி கிடைத்திருக்கிறது.”

கலகம்

போரில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நடந்த முறைகேடு ஜிம்பாப்வே அரசின் ஊழலை சிறப்பாக சித்தரிக்கிறது. மூத்த ZANU-PF தலைவர்களும், அவர்களது உறவினர்களும் சந்தேகத்துக்குரிய நிவாரண கோரிக்கைகளின் மூலம் பெருமளவிலான நிதியை பெற்றார்கள். முகாபேவின் மச்சான் ரேவார்ட் மருஃபுவுக்கு இடது முழங்காலில் உள்ள ஒரு தழும்புக்காகவும், புண்களுக்காகவும் கிட்டத்தட்ட $70,000 வழங்கப்பட்டது. முன்னாள் போர் வீரர்கள் சங்கத்தின் தலைவர் செஞ்சேரை “ஹிட்லர்” ஹன்ஸ்வி, செவிக் குறைபாடுக்காகவும், “தொடையில் ஏற்படும் குடைச்சலு”க்காகவும் கிட்டத்தட்ட $50,000-ஐ ஆட்டையை போட்டார். இந்த தகவல்கள் மார்டின் மெரிடித் எழுதிய “முகாபே : அதிகாரம், கொள்ளை மற்றும் ஜிம்பாம்பவேவின் எதிர்காலத்துக்கான போராட்டம்” என்ற புத்தகத்தில் வெளியாகியுள்ளன.

பெண் விவசாயிகள்
நிலக் கைப்பற்றல் மூலம் நிலம் ஈட்டிய பெண் விவசாயிகள் பயிரிடுதலைக் குறித்து விவாதிக்கின்றனர். தலைக்கு சுமார் 6 ஹெக்டேர் நிலத்துக்கு சொந்தமானவர்கள்.

பொருளாதார ரீதியாக திவாலாகி, வெளிநாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, உள்நாட்டில் பழிக்கப்பட்டு வந்த முகாபே, முன்னாள் போர் வீரர்கள் பண்ணைகளை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும் போது மிக பலவீனமான நிலையில் இருந்தார். அரசு அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தது, ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் கட்சியின் நீண்டகால பிழைத்திருத்தலுக்கு அத்தியாவசியமானவர்கள் என்று அரசாங்கம் உணர்ந்தது. இந்த பின்னணியில் பார்க்கும் போது நில ஆக்கிரமிப்புகள் முகாபேவுக்கு எதிரான கிளர்ச்சியாகவே தென்படுகின்றனவே தவிர அதிகாரத்தின் மீது அவரது உடும்புப் பிடியின் உதாரணமாக தென்படவில்லை.

தாம்வூரி வேட்டை பண்ணை, ஆறு முன்னாள் போர் வீரர்களின் ரகசிய குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டது. “முன்னாள் படைவீரர்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தனர். எந்த பண்ணையை எப்போது ஆக்கிரமிப்பது என்று அவர்கள் தீர்மானிப்பார்கள்” என்கிறார் ஒரு பங்கேற்பாளர்.

“ஒரு பண்ணையாரிடம் மூன்று பண்ணைகள் இருந்து, படைவீரர்கள் ஒன்றை கேட்டு, அவர் மறுத்து விட்டால் அவர்கள் மூன்றையும் எடுத்துக் கொள்வார்கள்” என்று ஒவ்வொரு பண்ணையும் எப்படி இலக்கு வைக்கப்பட்டன என்பதை விளக்கினார் இன்னொரு பங்கேற்பாளர். அதன் பிறகு மக்கள் முன்னாள் போர் வீரர்களை பின் தொடர்ந்து போக, உள்ளூர் கிராமத் தலைவர்கள் நிலத்தை பிரித்துக் கொடுப்பதற்கு உதவி செய்வார்கள்.

“1998-ல் எனது மகள் பிறந்த போது, எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, ஆனால் வேலை இல்லை, நிலம் இல்லை என்று உணர்ந்தேன்” என்கிறார் தாம்வூரியில் 6 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயியான டாம். “மேற்கு மாஷோனாலேண்டின் கிராமத் தலைவர்கள் நிலத்தை திரும்ப எடுத்துக் கொள்கிறார்கள் என்று சந்தைகளில் பேசிக் கொண்டார்கள்”

டாம் ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்து முறைசாரா நிலக் குழுவில் இணைந்து கொண்டார். அந்தக் குழு நிலங்களை பிளாட்டுகளாக பிரித்து உள்ளூர் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் பொறுப்பில் இருந்தது. “எங்களை வெளியேற்றுவதற்காக நிர்வாகம் போலீசை அனுப்பியது. போலீஸ் எல்லா வீடுகளையும் எரித்து விட்டது” என்று அவர் நினைவு கூர்கிறார். ஆக்கிரமிப்பாளர்களை வன்முறை மூலம் அரசாங்கம் அடக்க முயற்சித்த ஆரம்ப கால கட்டத்தை சுட்டிக் காட்டுகிறார். ZANU-PF-ன் இளைஞர் அணி உறுப்பினர் என்ற செல்வாக்கில் கவர்னரை சந்திக்க டாம் ஏற்பாடு செய்த பிறகு நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றப்பட்டது. ஆனால், இன்னொரு மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆதலால் அவருக்கு நிலம் கொடுக்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு தழுவிய ஆக்கிரமிப்புகள் ஆரம்பித்த போது, ஒரு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக அவர் தாம்வுரிக்கு போயிருந்தார். அப்போது வேட்டை பண்ணை சமீபத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை கண்டார். இந்த முறை மாவட்ட நிர்வாகி டாமை அங்கீகரித்து காத்திருப்போர் பட்டியலில் வைத்தார். “சில மாதங்களுக்குப் பிறகு எனக்கு 6 ஹெக்டேர்கள் கிடைத்தன” என்கிறார் டாம்.

“இது ஒரு நியாயமான அணுகுமுறை என்று நாங்கள்  முடிவு எடுத்தோம். ஆக்கிரமிப்பாளர்கள்தான் எங்களை விடுவித்தவர்கள், அரசாங்கமாக நாங்கள் தோல்வியடைந்த பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்தார்கள்” என்று ZANU-PF-ன் திடீர் கொள்கை மாற்றத்தை விளக்குகிறார் திரு சினமாசா. “நாங்கள் சட்டம் ஒன்றை  உருவாக்கி, ஆக்கிரமிப்புகள் தொடர்வதற்கு அனுமதித்தோம்” என்கிறார்.

இந்த திடீர் கொள்கை மாற்றம் அரசாங்கத்திலும் நிர்வாகத்திலும் நடந்து கொண்டிருந்த நிலக் கொள்கை குறித்த பரவலான விவாதத்தின் பிரதிபலிப்பாகும் என்கிறார் கிராசியன் முகோத்சோங்கி. அவர் மோந்தோரா எங்கேசியில் உள்ள ஒரு பகுதியில் நடந்த நிலச் சீர்திருத்தத்தை தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப் பொருளாக எடுத்திருக்கிறார். “நில ஆக்கிரமிப்புகள் எவ்வளவுக்கெவ்வளவு தேசிய கொள்கையின் விளைவுகளாக இருந்தனவோ அவ்வளவுக்கவ்வளவு உள்ளூர் அதிகார அமைப்புகளுடனான போராட்டத்தின் வெளிப்பாடாகவும் இருந்தன” என்கிறார் அவர்.

பேரழிவும், சீரடைவும்

வெள்ளை இன வணிக பண்ணையார்கள் நில சீர்திருத்தங்களை அப்பட்டமான திருட்டுடன் ஒப்பிடுகிறார்கள்.

“ஆட்கள் திடீரென்று உள்ளே வந்து எங்களை துரத்தி அடித்தார்கள். நீதிமன்றங்களில் முறையிட முடியாது, இழப்பீடு எதுவும் இல்லை, பயிர்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கால்நடைகள் திருடப்பட்டன” என்கிறார் வணிக பண்ணையார்கள் சங்கத்தின் தலைவர் சார்லஸ் டஃப்ஸ்.

ஸ்டூவர்ட் மாவே
“ஒற்றை வெள்ளையரிடம் ஏன் அனைத்து நிலமும் இருக்க வேண்டும்” என்று கேட்கிறார் முதுவா பண்ணையில் தனது மனைவியுடன் புகையிலை பயிரிடும் 40 வயதான ஸ்டூவர்ட் மாவே.

நிலச் சீர்திருத்தம் பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கி விட்டது என்கிறார் டஃப்ஸ். “நாட்டில் கொடுக்கப்பட்ட கடன்களில் எண்பத்தி ஐந்து சதவீதம் நிலத்தின் மீது கொடுக்கப்பட்டவை. வங்கித் துறையில் மாபெரும் தாக்கம் ஏற்பட்டது, அதன் விளைவாக சேவைத் துறையிலும், உற்பத்தித் துறையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது”

1998-க்கும் 2008-க்கும் இடையே ஜிம்பாப்வேவின் பொருளாதாரம் 45 சதவீதம் குறுகியது. பண வீக்கம் உச்சத்தில் 23.1 கோடி சதவீதமாக இருந்தது. தேசிய நாணயம் பல நாணய கட்டமைப்பினால் மாற்றியமைக்கப்படும் போது பரிமாற்ற வீதம் 1 அமெரிக்க டாலருக்கு ஜிம்பாப்வே டாலர் 35 குவாட்ரில்லியனாக (1-க்குப் பின்னால் 15 பூச்சியங்கள்) இருந்தது. அதற்குப் பிறகு பொருளாதாரம் மீட்சி அடைந்து 2009-க்கும் 2011-க்கும் இடையே 20 சதவீதம் வளர்ந்திருக்கிறது. விவசாய ஏற்றுமதிகள் 101 சதவீதம் அதிகரித்திருக்கின்றன.

“புதிய விவசாயிகள் அவர்களது நிலங்களுடன் இணைந்து கொள்ள சில ஆண்டுகள் ஆனதாக தரவுகள் தெரிவிக்கின்றன” எனகிறார் பேராசிரியர் மோயோ. “ஆனால் இப்போது, நாம் உற்பத்தி அதிகரிப்பை பார்க்கிறோம்.” குறிப்பாக புகையிலை விவசாயிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பெரிய வாடிக்கையாளர்கள் நிலையான விலைகளை உத்தரவாதப் படுத்திக் கொள்வதற்காக சிறு விவசாயிகளுக்கு கடன் கொடுத்தனர். இந்த ஆண்டு 80,000-க்கும் அதிகமான விவசாயிகள் புகையிலை வளர்க்க பதிவு செய்திருந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் சமீபத்திய நிலச் சீர்திருத்தங்களில் ஆதாயம் அடைந்தவர்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட $60 கோடி மதிப்பிலான புகையிலை விற்பனை செய்யப்பட்டது என்று புகையிலை சந்தைப்படுத்தும் வாரியம் தெரிவிக்கிறது.

மற்ற பயிர்கள் இந்த அளவு சிறப்பாக விளங்கவில்லை. “அரசாங்கம் எங்களுக்கு விதைகள், உரம் போன்றவற்றை வழங்கி ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் இந்தத் திட்டம் தோல்வி அடைந்து விடும்” என்கிறார் தாம்வுரியின் பருத்தி விவசாயியான ஜோசப். குடியேறியவர்களிடம் நிலத்துக்கான பட்டாக்கள் இல்லை, குத்தகை உரிமை மட்டும்தான் இருக்கிறது. “குத்தகையின் அடிப்படையில் வங்கிகள் கடன் கொடுப்பது இல்லை என்பதால் நாங்கள் விதைகள், டிராக்டர் அல்லது வேறு எதையும் வாங்குவதற்கு கடன் பெறுவது சாத்தியமில்லை”. ஜோசப் அவரது வயல்களை கால்நடைகளை கொண்டு உழுகிறார். ஆறு ஹெக்டேர் நிலத்தையும் பயிரிட முடியாமல் உள்ளார், “கடன் கிடைத்தால் இன்னும் அதிகமான நிலத்தில் பயிரிடலாம்” என்கிறார் அவர்.

விவசாயிகள் குத்தகை நிலத்தின் பேரில் நிறுவன கடனை பெறுவதற்கான முறையை அரசு உருவாக்கி வருவதாக திரு சினமாசா சொல்கிறார். ஆனால், வறட்சி ஏற்படக்கூடிய இந்த பகுதியில் ஒரு மோசமான பருவம் வந்தால் ஜோசப் போன்ற விவசாயிகள் தமது நிலத்தை கடன் கொடுத்தவர்களிடம் இழக்க வேண்டி வரும்.

இந்த கோடைக் காலத்தில் முகாபே தொடர்ச்சியான ஏழாவது அதிபர் பதவிக் காலத்துக்கு போட்டியிட்டார். குழப்பமான, தன்னிச்சையான நிலத்துக்கான போராட்டத்தை ZANU-PF கொள்கையின் வெளிப்பாடாக சித்தரித்து வெற்றி பெற்றார்.

அவரது எதிரி எம்டிசியின் மோர்கன் ட்சாவின்கிராய், தேர்தலை “மாபெரும் மோசடி” என்று உருவகித்தார். தேர்தல் நடைமுறையின் அனைத்து பிரிவுகளிலும் அப்பட்டமான மோசடிகள் நடந்ததாக கூறினார். இருப்பினும் ட்சாவின்கிராய் நில பிரச்சினை தொடர்பாக குழப்படி செய்ததற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியதாயிற்று. “நில்ம்தான் போருக்கான காரணம்” என்கிறார் ஹராரேவைச் சேர்ந்த வாக்காளர் அமீனா. “நாங்கள் எங்கள் வாழ்க்கையின் எஜமானர்களாக இருக்க விரும்பினோம். ஏதோ ஒரு பண்ணையில் தொழிலாளியாக இருக்க விரும்பவில்லை.”

– அமன் சேத்தி,
தமிழாக்கம் – அப்துல்.

நன்றி: தி இந்து

கண்ணீர் !

2

ன்னோட படிச்சதெல்லாம்
ஊக்கமா பொழைக்குதுங்க,
கச்சிக் கச்சியின்னு

கட்சிக்கட்டிக்கினு

அலையிரியே

சிஊழியர்த்தாகாட்டு வெறகுவெட்டி
செட்டிகுளம் தண்ணிமொண்டு,
செவ்வெண்ணெய் கூட்டினது
எந்தக் கட்சி?

வெய்யில் கானலுன்னு
பாக்காம,
கையும் காலையும்
தூக்கிக்கினு,
கூலிக்கு ஓடுன எடத்துல,
ஊத்துன கூழு கஞ்சிய
தூக்கியாந்து,
பள்ளிக்கோட வாசல்ல
உன்னையக்
குடிக்க வச்சிட்டு
கூட்டி முழுங்குன
நெஞ்சுடா!

மறக்க முடியுமா
அம்மா!

எல்லோரும்
புள்ள வளத்தது போலவா
வளத்தேன்,
போலீஸ் புடிச்சிப்போய்
இருக்குமாமே,
எந்த தெய்வம் வந்து
குறுக்க நின்னுச்சோ!

தெய்வமா’
அம்மா!

காது மூக்குல
கெடந்ததை உறுவி,
கால் வவுத்தக் காப்பாத்துன
கழனிக் காட்டையும்
கை கழுவிட்டு,
கையேந்த வச்சிட்டேன்ற
கர்வமாடா?

எனக்கா அம்மா?

*

தாய்
தாய் (மாக்சிம் கார்க்கியின் நாவலில்).

அம்மா நீ
பேசி முடித்து விட்டாயா,
அழுது தீர்த்துவிட்டாயா?

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்
காணாமல்
நீ பதுக்கிய திண்பண்டங்கள்
உரியில்
எனக்காக.

நீ காணாமல்
அண்ணி பதுக்கிய திண்பண்டங்கள்
உரியில்
அவள் பிள்ளைக்காக.

கஞ்சி கொடுத்தாய்
காதுத்தோட்டைக் கொடுத்தாய்
எனக்கு
உரி வேண்டாம் அம்மா.

பதுக்குவதற்கு ஒன்றுமில்லை
என்னிடம்
என்பதற்கா அழுகிறாய்?

*

தனக்கு மிஞ்சிதாண்டா
தான தருமம்
உன் குடும்பத்தைக் காப்பாற்று,
ஏழை பாழைக்கு
ஏதோ முடிஞ்சதைக் கொடு

உன்னையும் என்னையும் சேர்த்து
ஒரு வளையம் போட்டாய்.
எதிர்வீட்டு ஏகாம்பரம்
மனைவிக்கும் தனக்குமாய்
அந்த வளையத்தைச்
சுருக்கிக் கொண்டவுடன்

கொண்டவ தலையில
பூ சுமையும்
பெத்தவ தலையில
புல் சுமையும்
வச்ச பாவிபோறாம் பாரு
எனப் பொருமுகிறாய்.

நானும் ஒரு பாவியாகவில்லை என்றா
ஏங்குகிறாய்?

என் வளையம்
ரொம்பப் பெரியது.
அதில்
நீ உண்டு, அண்ணி உண்டு
ஏகாம்பரம் உண்டு, அவன் தாயு
முண்டு
நம் ஊரே உண்டு.

ஊர் காத்த அய்யனார்
நீ சொன்ன கதைதான்.
எட்டடிக் குச்சுக்குள்
அடங்குமா அம்மா
உன் அய்யனார் சிலை?

*

அம்மா
நீயும் அப்பாவும் அண்ணனும்
என்மீது கொண்ட
அன்பைச் சொல்ல
பாசம்’
என்ற சொல் உண்டு.

என்னுடைய அன்பை
எடுத்துச் சொல்ல – உன்
உரியில் இருக்கும் சொற்கள்
உதவாது.

உன் கண்ணீரைத் துடைக்க
உதவும் கைகள்
என் கண்ணீரைத் துடைக்க
உதவாது.

கோபப்படாதே அம்மா.
என் கண்ணீரை
இன்னும் நீ பார்த்ததேயில்லை

– நிதி. கோமேதகம்.
__________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 1999
__________________________________________________

ஆசிய பசிபிக் ஆண்களிடம் பாலியல் வன்முறை !

10

டந்த ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் ஓடும் பேருந்தில் கும்பலான பாலியல் வல்லுறவுக்குள்ளான மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளான இளைஞர்களுக்கு நீதிமன்றம் தண்டனைகளை அறிவிக்கவுள்ளது.

சமூகச் சூழல்
இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகச் சூழல்.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் நிர்பயா நிதி என்ற பெயரில் ரூ 1000 கோடியை ஒதுக்கி பெண்கள் மீதான தாக்குதலை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக ரூ.487 கோடியை ஒதுக்கி ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் சமநிலையை பேண நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் பார்வையை கற்று கொடுக்கும் பண்பாட்டு நிறுவனங்களை இந்த திட்டம் ஒன்றுமே செய்யாது என்பது ஒருபுறமிருக்கட்டும்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நடக்கும் இடங்களாக நகரங்கள், பெரு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் 94 இடங்களை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. ஜார்கண்ட் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவும் அரசு முடிவு செய்துள்ளது. ஏனெனில் பெண்கள் மீதான தாக்குதலுக்கு ஆண்கள் மது அருந்துவது ஒரு காரணம் என அரசு கருதுகிறது. இத்துடன் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் மனித உரிமை அமைப்புகளை, அதிகாரிகளை பாதிக்கப்பட வாய்ப்புள்ள பெண்கள் எளிதில் அழைக்கும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி கிடைக்க மத்திய அரசு இத்திட்டம் மூலம் முயலும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பாலியல் வல்லுறவு பாதிக்கப்பட்டவர்
பாலியல் வல்லுறவு – பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக நடத்தும் சமூகம்.

அண்மையில் மும்பை மாநகராட்சி எல்லைக்குள் சுகாதாரம் மற்றும் நலிவடைந்தவர்களுக்கான விசாரணை மையம் என்ற அமைப்பு 2008-12 காலகட்டத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்களில் உயிரோடிருக்கும் 94 பேரிடம் நடத்திய ஆய்வில் 47% பேர் உடனடியாக தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு விட்டதாகவும், 38% பேர் உடனடியாக குளித்து விட்டதாகவும், 28 சதவீதம் பேர் உடனடியாக பாலியல் வன்முறையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். வெளியில் உடனடியாக தெரிந்தால் அவமானம் என்றும், தங்களைத்தான் சமூகம் குற்றம் சொல்லும் என்ற பயத்தாலும், 24 மணி நேரத்திற்குள் அப்படியே மருத்துவரிடம் போய் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் அங்குள்ள நடைமுறைகளானது அவர்களை இழிவாக நடத்துவதும் சேர்ந்து பெண்களை இவ்வாறு செய்யத் தூண்டியுள்ளது. மேலும் வல்லுறவுக்குள்ளாக்கியவர்கள் எனப் பார்த்தால் அவர்களில் நால்வரில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களே. மூன்றில் ஒரு சிறுமிக்கு சாக்லேட், பொம்மை பரிசுப் பொருட்களை வாங்கித் தருவதாக கூறிதான் தெரிந்த, நெருக்கமான ஆண்கள் குழந்தைகள் மீது இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர்.

பாலியல் வன்முறைசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும், முனைவர் எம்மா ஃபுளூ-ம் இணைந்து ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் நடத்திய சர்வே ஒன்றின் படி நான்கில் ஒரு ஆசிய ஆண் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் எவ்வளவு நம்பகமானது என்று தெரியவில்லை. பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, இலங்கை, பபுவா நியூ கினியா ஆகிய 6 நாடுகளில் நடந்த இந்த ஆய்வில் பத்தில் ஒரு ஆண் தனது இணையருக்கு வெளியே மற்றொரு பெண்ணிடம் இக்குற்றத்தை நிகழ்த்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. உலகின் மக்கட்தொகையில் ஏறக்குறைய சரிபாதி பேர் இப்பகுதியில் வசிப்பதால் இதனை தங்களது ஆய்வு மையமாக தெரிவு செய்திருந்தனர். எனினும் இந்த விகிதத்தை விட அமெரிக்காவில் பாலியல் வன்முறையின் அளவு அதிகம் என்பதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.

18 முதல் 49 வயதுக்குட்பட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களிடமும், 3,100 பெண்களிடமும் 2010-13 ஆண்டுகளில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் பாலியல் சமத்துவம், முறையான பாலியல் உறவுகள், உறவுகளை பரஸ்பர மரியாதையுடன் அணுகுதல் போன்றவற்றுக்கான பயிற்சியை அளிப்பது போன்றனவும் இந்த ஆய்வின் தொடர் நிகழ்வாக வைக்கப்பட்டுள்ளது.

இப்பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் மனைவி அல்லது காதலியின் சம்மதமில்லாமல் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவு, சட்டத்தின்படி ஒரு குற்றமில்லை. உலகின் பல நாடுகளில் திருமணம் மட்டுமே பாலியல் உறவுக்கான லைசென்சு அல்ல என்று சட்டமியற்றிய பிறகும், ஐ.நா மன்றமே திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவுகளை குற்றமாக கருத வேண்டும் என வழிகாட்டிய பிறகும் பல நாடுகள் இதனை சட்டமாக்க முன்வரவில்லை. அதில் இந்தியாவும் ஒன்று.

திருமண உறவில் பாலியல் வன்முறைஸ்காட்லாந்தில் முதன்முதலாக 1982-ல் தான் திருமண உறவுக்குள் பெண்ணின் சம்மதமில்லாமல் நடக்கும் பாலியல் உறவை பாலியல் வல்லுறவு எனக் கருதும் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் பல முதலாளித்துவ நாடுகள் இதனை ஒரு குற்றச் செயலாகவே அங்கீகரித்தன. இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரான்சு, இசுரேல், முன்னாள் சோவியத் யூனியன் என பல நாடுகள் இதனை ஒரு குற்றமாகப் பாவித்து சட்டமியற்றின. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அங்குள்ள 50 மாநிலங்களில் 18 ல் மட்டும்தான் இது ஒரு குற்ற நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மண உறவுக்குள்ளான இத்தகைய சம்மதமற்ற பாலியல் நடவடிக்கைகளில் பெரும்பாலான சமயங்களில் சம்பந்தப்பட்ட பெண்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவதுடன், உடல்ரீதியாக காயங்களுடன் பல சமயங்களில் மரணத்தையும் தழுவியுள்ளனர். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒரு இந்தியப் பெண் இந்த வகையில் இறந்து போகிறாள். 2005-ம் ஆண்டு மாத்திரம் கணவனால் கொல்லப்பட்ட இந்தியப் பெண்களின் எண்ணிக்கை 6,787. மேலும் பாலியல் முறைகேடுகளால் உருவாகும் வியாதிகளை உடைய ஆண்கள் பெண்களை கட்டாயமாக உறவுக்குள்ளாக்கி நோய்களையும் கொடுத்து வருகின்றனர்.

பெண்ணுக்கு எதிரான  சமூக சூழல்இந்திய சட்டப்படி 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் வற்புறுத்தி உறவு கொள்ளும் கணவனை எந்த சட்டத்தின்படியும் வல்லுறவு குற்றம் சாட்ட முடியாது. சாதியும், ஆணாதிக்கமும் இணைந்த பார்ப்பனியத்தின் இந்திய சமூகத்தில் திருமண உறவுக்குள் நடக்கும் இத்தகைய வல்லுறவுகளை குற்றமாக மாற்ற ஜேஎஸ் வர்மா கமிட்டி தில்லி சம்பவத்துக்கு பின்னர் பரிந்துரை செய்ததை நமது கலாச்சாரத்தை காரணமாக காட்டி நாடாளுமன்ற நிலைக்குழு அங்கீகரிக்க மறுத்து விட்டது. உதிரப்போக்கு காலத்தில் தீட்டுகளை அறிமுகப்படுத்திய ஆணாதிக்க இந்தியர்கள் பாலியல் உறவில் தாங்கள் நுகரும் பொருட்களில் ஒன்றாகத்தான் தமது மனைவி, காதலிகளைப் பார்த்துள்ளனர். உலகளவிலும் ஆணாதிக்கவாதிகள் இப்படித்தான் பெண்களைக் கருதுகின்றனர்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நில உடைமை சமூக அமைப்பு விழுமியங்களின் காரணமாக பெண்களிடம் சம்மதம் பெற்றுத்தான் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பெரும்பான்மை ஆண்களால் (73%) ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 46 சதவீத ஆண்கள் ஏதாவது ஒரு வகையில் வன்முறையை பயன்படுத்தி தான் தங்கள் இணையர்களிடம் உறவு கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கடைப்பிடிக்கும் வேறுபாடுகள் போன்றவை அவர்களை பிற்காலத்தில் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நுகர்வு கலாச்சாரம்பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்களில் பாதிப் பேர் தங்களது பதின்ம வயதில் இக்குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய நுகர்வு கலாச்சாரம், காதலுக்கும் நட்புக்கும் இடையிலான கேர்ள் ஃபிரண்டு கலாச்சாரம், கட்டற்ற இணைய பாலுறவு காட்சிகள், டேட்டிங், இணையம் மற்றும் செல்பேசியின் பாலியல் அரட்டைகள் இவற்றை விரைவு படுத்துகின்றன.

பெருகிவரும் மாநகர சேவைத்துறை நிறுவனங்கள் போன்றவை தோற்றுவிக்கும் அதீத வேலை நேரங்கள் மற்றும் வார இறுதி நாட்களின் கொண்டாட்டங்கள், ஆண் – பெண் உறவில் தோற்றுவிக்கும் மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து பாலியல் உறவுகளை கட்டற்றதாக வரைமுறையில்லாமல் மாற்றி வருகிறது. எனினும் இதில் பாதிக்கப்படுவதும் விளைவுகளின் துயரங்களை சுமப்பதும் பெண்கள்தான்.

பெரும்பாலான இளைஞர்களிடம் மண உறவுக்கு வெளியே ஒரு உறவை தொடர்வது பெருமைக்குரிய விசயமாகவே பார்க்கப்படுகிறது. அலுவலகம், நட்பு போன்றவற்றில் இருக்கும் அதே நேர்மையின்மையை தங்களது மண உறவிலும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதனால் தான் திருமணத்துக்கு முன் ஒரு லிவிங் டுகெதர் என்பதை இந்த வகை இளைஞர் எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். இவையெல்லாம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் இதில் குறிப்பிட்ட சதவீத ஆண்கள் பாலியல் வன்முறை செய்யும் மனநிலைக்கு தயாராகின்றனர்.

பாலியல் சர்வே
படம் : நன்றி தி இந்து.

ஆய்வில் பாதியளவு ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக தெரிய வந்துள்ளது. ஆண்களின் மனநிலையில் பாலியல் வல்லுறவு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வன்முறையாகவும், பெண்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே இதனை ஆண்கள் கருதுவதும் தெரிய வந்தது. 72 முதல் 97 சதவீதம் வரையிலான பெண்கள் சட்டபூர்வமாக ஆண்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்பதையும் ஆண்கள் இப்படியும் புரிந்து கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போகிறது.

இந்தோனேசியா போன்ற நாடுகளில் 2004-ல் குடும்ப வன்முறை சட்டம் அமலுக்கு வந்தாலும் கடந்த 2012-ல் மட்டும் அங்கு 2,16,000 வழக்குகள் பெண்கள் மீதான வன்முறைக்காக மட்டும் பதிவாகி உள்ளன. சட்டம் இன்னமும் பழைய முறையில் ஆதாரங்களை தந்தால் மட்டும்தான் வழக்கு பதிவு செய்வதாலும், சமூகத்தில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் பெண்கள் வெளியே வந்து தமக்கு நேர்ந்ததை பெரும்பாலும் சொல்வதில்லை. அப்படி இருந்த போதிலும் தினசரி பதிவாகும் வழக்குகளின்படி நாளொன்றுக்கு 20 இந்தோனேசிய பெண்கள் வல்லுறவுக்குள்ளாகின்றனர். ஆனாலும் பிராந்தியத்தை ஒப்பிடுகையில் இந்தோனேசியா மற்றும் பங்களாதேசில் இத்தகைய வல்லுறவுகளின் எண்ணிக்கை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகத்தான் பதிவாகி உள்ளது.

பபுவா நியூ கினியா போன்ற பகுதிகளில் வல்லுறவுகளின் சதவீதம் மிகவும் அதிகமாக 62% வரை உள்ளது. ஒருபால் வல்லுறவுகளும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. பெருகி வரும் வறுமையும், அங்கு பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ள சேவைத் துறைகளின் வளர்ச்சியும் இவற்றை இன்னும் அதிகப்படுத்தலாம். குறிப்பாக தீவுகளை நோக்கி சுற்றுலாத் துறையும், விபச்சாரமும் பரவுவதை உலகமயமாதல் அதிகரிக்கவே உதவும். உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த பகுதிகளில் இத்தகைய வல்லுறவுகள் அதிகரித்த அளவில் இருக்கின்றன.

வங்க தேசத்திலும், இலங்கையிலும் பாலியல் வன்முறையை விட பிற வன்முறைகள்தான் அதிகமாக பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. சட்டப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்படாத நிலைமை இலங்கையில் தான் அதிகமாக (96.5%) இருக்கிறது. போருக்குப் பிறகான இலங்கையின் நிலைமையை பளிச்செனக் காட்டுகிறது ஆய்வு முடிவு.

பாலியல் வன்முறை குறித்த இந்த புள்ளி விவரங்கள் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நமக்கு அறியத் தருகின்றன. ஆனாலும் விளைவுகளின் வழியாக மட்டும் நாம் பாலியவல் வன்முறையை தடுத்து நிறுத்த முடியாது. அதைத் தோற்றுவிக்கும் பண்பாட்டு நிறுவனங்களையும் அதன் விழுமியங்களையும் எதிர்த்து போராடுவதோடு அதற்கு பலியாகியிருக்கும் மக்களிடமும் பாலியல் சமத்துவம் குறித்த விழுமியத்தை ஏற்கச் செய்ய வேண்டும். அதுவரை ஆசியா மட்டுமல்ல உலகெங்கிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதனால் சமூகத்திற்கும் நிம்மதியில்லை.

– வசந்தன்.

மேலும் படிக்க

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : பொறுக்கித் தின்பதில் போட்டி !

2

தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : ஆளும் வர்க்கப் பிரிவுகளுக்கிடையே பொறுக்கித் தின்பதில் போட்டா போட்டி !

ந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படுவதை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு உறுதி செய்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்படும் தெலுங்கானா மாநிலமும், ஆந்திராவின் கடலோர கிழக்கு மாவட்டங்களும் தெற்கேயுள்ள ராயலசீமா மாவட்டங்களும் அடங்கிய எஞ்சிய பகுதியாகிய சீமாந்திரா எனப்படும் மாநிலமும் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஐதராபாத்தை பொதுத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா போராட்டம்
தனித் தெலுங்கானாவுக்காக பற்றியெரிந்த போராட்டம் – அரசு சன்மானங்களை பங்கு போடுவதற்கான போட்டா போட்டியில் இறக்கி விடப்படும் மக்கள் (கோப்புப் படம்)

கடலோர கிழக்கு மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா – என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா பிராந்தியம் ஒப்பீட்டளவில் பெரியது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால் தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது.  கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு தெலுங்கானா இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தாலும், கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்தோர் பெரும்பான்மையாக இருப்பதாலும், தெலுங்கானா பிராந்தியத்தின் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்தினர் தனி மாநிலக் கோரிக்கையை இப்பிரச்சினைக்குத் தீர்வாக வைத்துப் போராடி வந்தனர். குறிப்பாக 1969-ல் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் தீவிரமடைந்து, ஏறத்தாழ 300 பேர் கொல்லப்பட்டு கடும் அடக்குமுறைக்குப் பின்னர் அப்போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

பின்னர், தனியார்மய – தாராயமயத்தைத் தொடர்ந்து தெலுங்கானா பிராந்தியத்தில் கருங்கல் குவாரி, நிலக்கரி, சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத் துறை,  சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் சூறையாடலுக்கான புதிய வாய்ப்புகள் திறந்து விடப்பட்டதும், ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கப் பிரிவுக்கும் தெலுங்கானாவின் ஆளும் வர்க்கப் பிரிவுக்குமிடையிலான போட்டா போட்டியின் காரணமாக மீண்டும் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் 2010-ம் ஆண்டில் தீவிரமடையத் தொடங்கியது. அதற்கெதிராக தெலுங்கானாவைப் பிரிக்கக் கூடாது என்று ஆந்திராவின் இதர பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. பின்னர் காங்கிரசு கூட்டணி அரசு தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டதோடு, 2014-க்குள் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதியளித்தது.

அதன்படியே இப்போது தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்படுவதை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு உறுதி செய்துள்ளது. பெரிய மாநிலங்களை உடைத்துச் சிறிய மாநிலங்களாக உருவாக்குவதை பா.ஜ.க. ஏற்பதால், தெலுங்கானா தனி மாநிலப் பிரிவினையை ஆதரிக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒ.எஸ்.ஆர். காங்கிரசு  கட்சியோ இப்பிரிவினையை எதிர்க்கிறது. தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள காங்கிரசு கட்சியினர் தனி மாநிலப் பிரிவினையை ஆதரிக்கும் அதே சமயம், சீமாந்திரா பிராந்தியத்தின் காங்கிரசு மற்றும் தெலுங்கு தேசக் கட்சியினர் இப்பிரிவினையை எதிர்த்து போராட்டங்களை நடத்துகின்றனர். வலது கம்யூனிஸ்ட் கட்சி தனித் தெலுங்கானாவை ஆதரிக்கும் அதே சமயம், மார்க்சிஸ்ட்  கட்சியோ பிரிவினையை எதிர்க்கிறது.

தனிமாநில அறிவிப்பைத் தொடர்ந்து, கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதி நீரில் கூடுதல் பங்கு கோருவதோடு, கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமாவில் பிறந்து தற்போது ஐதராபாத்தில் பணியாற்றும்  அரசு ஊழியர்கள் அனைவரும் தெலுங்கானா தனி மாநிலம் உருவான பிறகு வெளியேறிவிட வேண்டுமென்று எச்சரிக்கிறார், தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவரான சந்திரசேகர் ராவ்.  அவரது அறிவிப்பை எதிர்த்து, கடலோர ஆந்திரம்  மற்றும்  ராயலசீமாவின் அரசு அலுவலர்கள் போராட்டங்களில் இறங்கி தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்படுவதை எதிர்க்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் அரசு அலுவலகங்களும், பள்ளி – கல்லூரிகளும், சாலை போக்குவரத்தும் முற்றாக முடங்கிப் போயுள்ளன.

வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாகவும், பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தெலுங்கானா பிராந்தியத்தை இத்தனை காலமும் சீமாந்திரா பிராந்தியத்தினர் ஒடுக்கிச் சுரண்டியதாகவும் தெலுங்கானா தலைவர்கள் நியாயவாதம் பேசுகின்றனர். ஆனால் தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிமச்சுரங்கங்கள், காட்டு வளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்தும் புதுப் பணக்கார மாஃபியாக்களுக்கு எதிராக இத்தலைவர்கள் மக்களைத் திரட்டி இதுவரை எந்தப் போராட்டத்தையும் நடத்தியதேயில்லை.

தெலுங்கானாவைப் போலவே கோர்க்காலாந்து, போடோலாந்து தனி மாநிலக் கோரிக்கைகள் நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உத்திரப் பிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டுமென்று அம்மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அசாமிலுள்ள கர்பி மக்கள் தாங்கள் செறிவாக நிறைந்துள்ள அங்லாங் மாவட்டத்தைத் தனி மாநிலமாக்க வேண்டுமென்கின்றனர். மகாராஷ்டிராவில் விதர்பா, குஜராத்தில் சௌராஷ்டிரா, கர்நாடகத்தில் கூர்க், ஒடிசாவில் கோஷலாஞ்சல், பீகாரில் மிதிலாஞ்சல் – எனத் தனி மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.

தனியார்மய – தாராளமயமாக்கத்தைத் தொடர்ந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நான்குவழிச் சாலைகள், மேம்பாலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், புதுப்பணக்கார மேட்டுக்குடியினர் – என ஒரு சில நகர்ப்புற பகுதிகள் மினுக்குகின்றன. நாட்டின் சில பகுதிகளில் திடீர் ‘வளர்ச்சி’யையும், இதர பெரும்பாலான பகுதிகளின் பின்தங்கிய நிலையையும் மறுகாலனியாதிக்கம் மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான காரணத்தைப் பரிசீலிக்காமல், பிராந்திய ஏற்றத்தாழ்வை மட்டும் வைத்து தனி மாநிலக் கோரிக்கையை சந்திரசேகர ராவ் போன்ற ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் தூண்டுகின்றனர். பொதுச்சொத்துக்களைச்  சூறையாடுவதிலும், அரசு  சன்மானங்களைப் பங்கு போட்டுக் கொண்டு பொறுக்கித்  தின்பதிலும்  நடக்கும்  போட்டா போட்டியே தனி மாநிலக் கோரிக்கையாக வெளிப்படுகின்றன.

பிரிவினைக்கு எதிராக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதை எதிர்த்து, கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமாவைச் சேர்ந்த தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்

இந்த யதார்த்தத்தைக் காண மறுத்து, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை என்பது பிராந்திய அடிப்படையிலோ அல்லது பழங்குடியினத்தின் தனித்த அடையாளமாகவோ எந்த வடிவிலும் வெளிப்படலாம் என்றும், இது அம்மக்களின் நியாயமான ஜனநாயக உரிமைக்கான கோரிக்கையாக உள்ளதால், இத்தகைய தனி மாநிலப் பிரிவினையை ஆதரிக்க வேண்டுமென்றும் சில முதலாளித்துவ அறிவுத்துறையினர் வாதிடுகின்றனர். இதன் மூலம் மக்களை மாயையில் மூழ்கடிக்கின்றனர்.

தெலுங்கு தேசிய இனத்தின் தாயகமான ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பது சரியல்ல என்றாலும், தனி மாநிலம் கோரி தெலுங்கானா மக்கள் நீண்டகாலமாகப் போராடி வந்துள்ளதால், மக்களின் உணர்வுகளை மதித்து அதனை ஆதரிக்க வேண்டும் என்றும், ஒரே தேசிய இனத்தின் மக்கள் பிராந்திய அடிப்படையில் தனித்தனி மாநிலங்களாகப் பிரிவது தவறானதல்ல என்றும் சில தமிழினவாதிகள் தனித் தெலுங்கானாவை ஆதரிக்கின்றனர். மறுபுறம், இதேபோல தமிழகத்தையும் பிரிக்க வேண்டுமென சில சாதிய அரசியல்வாதிகள் கோருவதை ஆதரிக்க முடியாது என்றும், ஏனெனில் இது மக்கள் கோரிக்கையல்ல என்றும் விளக்கமளிக்கின்றனர். எந்த ஒரு கோரிக்கையும் ஒரு வர்க்கத்தின், சாதியின், இனத்தின் அல்லது பிராந்தியத்தின் அரசியல் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டு, பின்னர்தான் அது மக்கள் கோரிக்கையாக உருமாற்றம் பெறுகிறது. அந்த கோரிக்கையின் தன்மை என்ன என்பதிலிருந்து சரி  – தவறை பரிசீலிப்பதுதான் சரியான அணுகுமுறையாகும்.

ஆனால், தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை என்பது பிராந்திய ஏற்றத்தாழ்வை வைத்து ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் ஆட்சியதிகாரத்தில் பங்கு கோரும் போட்டா போட்டிதானே அன்றி, அது மக்களுக்கான அரசியல் – பொருளாதார கோரிக்கைகளின் அடிப்படையிலான போராட்டமோ, முற்போக்கான ஜனநாயகக் கோரிக்கையோ அல்ல. ஆளும் வர்க்கப் பிரிவுகளிடையே பொதுச் சொத்தைச் சூறையாடவும்,  அரசாங்க சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும் நடக்கும் போட்டா போட்டிக்காக தெலுங்கானா ஆதரவு – எதிர்ப்புப் போராட்டங்களில் மக்கள் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும். நேற்று வரை பல்வேறு ஓட்டுக் கட்சி பதவிகளில் இருந்துவரும் பிழைப்புவாதிகளில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு பிரிவினர்தான் இப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்குகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதால் மக்களின் வாழ்வில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும் என்பது மிகப் பெரிய மோசடி. இதற்கு ஜார்கண்டும், சட்டிஸ்கரும் எடுப்பான சான்றுகளாக உள்ளன. வளர்ச்சி என்ற பெயரில் உள்நாட்டு – வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் சூறையாடலும், மக்கள் மீது அறிவிக்கப்படாத இராணுவ ஆட்சியும்தான் அங்கு நீடிக்கிறது. இந்த உண்மைகளைக் காண மறுத்து தனி மாநிலக் கோரிக்கையைக் குருட்டுத்தனமாக ஆதரிப்பது அடிப்படையிலேயே தவறானதாகும்.

– குமார்.
__________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
__________________________________

சத்தான கீரை ! அவலமான வாழ்க்கை !

7

நாவில் நீர் சுரக்க சுவைக்கும் பல வகைக் கீரைகளும் நம் கைகளுக்கு எப்படி வந்து சேருகின்றன என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ? கீரை விற்கும் ஒரு பெண்மணி அரைக் கீரை, சிறு கீரை, முளைக் கீரை, பாலக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை என்று உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள்ளித்தரும் பத்துக்கும் மேற்பட்ட கீரை வகைகளை கூடைகளில் வைத்து இடுப்பிலும், தலையிலும் சுமந்து கொண்டு தெருத் தெருவாக விற்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

கூறு கெட்டி வைக்கப்பட்டுள்ள கீரைகள்
கீரைக்கு பேரம் பேசுபவர்களுக்கு தெரியாது இந்த வாழ்க்கை

”ரெண்டு ரூபாய் கொறைச்சுக் குடேம்மா..” என்றார் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்த அந்த நடுத்தர வர்க்க நபர். ” நான் நாற்பது வருசமா தெனமும் இதைத்தாம்பா கேட்டுட்டிருக்கேன். பத்துல ஒம்பது பேரு இப்படி தான் இருக்காங்க. நல்லா படிச்சவங்களும், இருக்கப்பட்டவங்களும் தாம்பா ஒரு ரூவா கொறைச்சுக் குடு, ரெண்டு ரூவா கொறைச்சுக் குடுன்னு கேக்குறாங்க. சாதாரண ஜனங்க அதிகமா இப்படி கேக்காதுங்க!” என்கிறார் ஜெபத்தாய்.

கீரை தமிழகம் முழுவதும் அன்றாடம் விற்கப்படும் பொருள் என்றாலும் சென்னையில் இதன் வர்த்தக மதிப்பும், நுகர்வும் அதிகம். கோயம்பேட்டில் வந்து இறங்குகின்ற கீரைகள் அனைத்தும் சென்னை முழுதும் சரிவிகிதத்தில் போய்ச் சேர்வதில்லை. குறிப்பாக நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினர் அதிகம் வாழும் தென் சென்னைக்குத் தான்  மிகப்பெரும் பகுதி போகிறது. ஏழைகள் அதிகம் வாழும் வட சென்னைக்கு மிகக் குறைவாகவே போகிறது.

கோயம்பேடு மொத்த விலை காய், கனி, பூ சந்தையில் கீரைக்காக ஒரு தனிப்பகுதி இருக்கிறது. குறிப்பிட்ட சில கீரைகள் கர்நாடகாவிலிருந்தும், ஏனைய கீரை வகைகள் தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்தும் வருகின்றன. இங்கே கீரைகளை சில்லறை வியாபாரத்துக்கு வாங்குபவர்கள்  இரண்டு கூடைகளில் அவற்றை நிரப்பி சுமந்து கொண்டு, சென்னை நகரின் தெருக்களில் இறங்கி ”கீரம்மா.. கீர..” என்று உச்ச ஸ்தாயியில் கத்தி விற்று வருகின்றனர். தோராயமாக 1300 க்கும் மேற்பட்டவர்கள் சென்னையின் தெருக்களில் கீரை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. அதிலும் பெண்களே அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெபத்தாய் 63 வயது மூதாட்டி. சென்னை சைதாப்பேட்டை தான் சொந்த ஊர். நாற்பது ஆண்டுகளாக கீரை விற்று வருகிறார். இத்தனை ஆண்டுகள் கீரை விற்பனை மூலம் அவர் சம்பாதித்தது என்ன? அவரே சொல்கிறார். ”நாப்பது வருசமா கீரதாம்பா வித்துனுருக்கேன். மார்க்கெட்ல ஒரு கட்டு பத்து ரூவான்னு எடுத்துனு வந்தா, அஞ்சி ரூவா வச்சி பதினஞ்சு ரூவாய்க்கு விக்கிறோம். அதுவும் வாங்கினு வர்ற எல்லாம் வித்துடாது.. இதுல என்னாப்பா லாபம் கீது..! ரேசன் அரிசிய வாங்கித் துன்னுற அளவுக்கு தான் இதுல லாபம் வருது. இத விட்டா வேற இன்னா பண்றதுன்னு தெரியாம தான் இத்தன காலமா இத்த செஞ்சினுருக்கேன். இதோ பாரு! ஒரு நல்ல சேல கூட கட்ட முடியாத நெலயில தான் கீறேன்” என்றார் நைந்து சல்லடையாகிப் போன தனது புடவையைக் காட்டி.

”தெனமும் விக்கிறீங்களா? இல்ல ஒரு சில நாள் மட்டுமா?”

”தெனமும் தாம்பா.. இத்த வித்தா தானே துன்ன முடியும். நைட்டு ஒரு மணிக்கு கீர மார்க்கெட்டு தெறக்கும். நான் நைட்டு பதினோரு மணிக்கே கௌம்பிருவேன். ரொம்ப தூரத்துல இருந்து வர்றவங்க, மடிப்பாக்கம், தாம்பரம் பக்கம் இருந்து வர்றவங்க எல்லாம் எட்டு, ஒம்போது மணிக்கே வீட்ட விட்டு கௌம்பிருவாங்க. அதுக்கப்புறம் பஸ் கெடைக்காது. ஆனா ஒரு மணிக்கு மேல தான் கூட்டம் அதிகமா இருக்கும்.

மார்க்கெட்ல நெறைய கடைங்க இருக்கு. ஒவ்வொரு கடையா ஏறி எறங்கி தான் வாங்கணும். கீரைங்கள மொத்தமா குவிச்சு போட்ருப்பாங்க. அதுல நல்ல கட்டா பாத்து தான் எடுக்கணும். எங்க கிட்ட பேரம் பேசுற மாதிரி நாங்க அங்க பேரம் பேச முடியாது. பத்து ரூவான்னா பத்து ரூவாய வைச்சா தான் கீர.”

”தெனம் எத்தன கட்டு வாங்குறீங்க?”

”ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி, கூடும் கொறையும். அது கையில இருக்க காசப் பொறுத்தும், கெழமய பொறுத்தும் இருக்கு. சனி, ஞாயிறு அதிகமா வாங்கினு வருவேன். ஒவ்வொரு கீரையிலயும் பதினைஞ்சு  கட்டு எடுப்பேன். கீரைங்க அதிகம் இல்லைன்னா ஒரே கீரையில அதிகமா எடுப்பேன். இப்ப கீரைங்க கம்மியா தான் வருது.”

”எத்தனை மணிக்கு மார்க்கெட்டை விட்டு கிளம்புவீங்க?”

”கீரைங்களை வாங்கி முடிக்க ரெண்டு மணிக்கு மேல ஆயிடும். ஆனா அப்ப கௌம்ப முடியாது. நாலு மணிக்கு தான் கௌம்புவோம். முன்னாடி பஸ் இருந்துச்சு, இப்ப அதுவும் இல்ல. அதனால ஆட்டோவுல தான் போவோம். நாலு மணிக்கு தான் வண்டிங்க கௌம்பும். அது வரைக்கும் இங்கேயே ரோட்டு ஓரமா படுத்துக்குவோம். சும்மா தான் படுத்திருப்போம். தூங்கினு இருந்தா கீரைங்க காணாம போயிரும். அப்புறம் விடிக்கால நாலு மணிக்கா தான் கௌம்புவோம்.”

”நீங்க எந்த ஏரியால விக்கிறீங்க?”

”நான் தெரு மேல விக்கிறது இல்லப்பா. முன்னாடி வித்துனு இருந்தேன், இப்ப முடியல. அதனால எம்.ஜி.ஆர் நகர்ல தான் ரோட்டோரமா போட்டு விக்கிறேன். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சி கஷ்டப்பட்டு இந்த கீரைங்கள வாங்கினு வந்தா, இங்க வர்றவங்க எல்லாம் ரெண்டு ரூவா கொறச்சுக்குடு, மூணு ரூவா கொறைச்சுக் குடுன்னு பேரம் பேசினிருப்பாங்க. அவங்களுக்கு பதில் சொல்லிச் சொல்லியே எங்களுக்கு பாதி மூச்சு போயிரும்.”

”எப்போ எல்லாத்தையும் வித்து முடிப்பீங்க?”

”நான் காலைல ஆறு மணிக்கெல்லாம் இங்க வந்து கடைய போட்ருவேன். அப்புறம் பத்து மணிக்கா நான் போயிருவேன், என் பொண்ணு வந்துடுவா. அவ தான் சாயந்திரம் வரைக்கும் இங்கேயே உக்காந்தினிருப்பா. எல்லா கட்டையும் வித்து முடிக்க ஏழு மணிக்கு மேல ஆயிரும். அதுக்கு மேலயும் விக்காதத பத்து ரூவாய்க்கு தான் விக்கணும். அப்படியும் சிலதுங்க மிஞ்சும், அத்த தூக்கி தான் வீசுவோம். அப்புறம் மறுபடியும் நான் மார்க்கெட்டுக்கு கௌம்பிருவேன்.”

”உங்க பொண்ணும் உங்களோட சேர்ந்து வேலை செய்றாங்களா? அப்படின்னா இது ரெண்டு பேர் வேலையா?”

”ஆமாப்பா.. நைட்டு முழிக்கிறதுனால நான் தூங்கப் போயிருவேன். பகல் முழுக்க அவ தான் பாத்துக்குவா.”

”உங்களுக்கு மொத்தம் எத்தன பிள்ளைங்க?”

”ஆறு புள்ளைங்க.. அஞ்சு பொம்பளை பிள்ளைங்க ஒரு பையன். வீட்டுக்காரர் சின்ன வயசுலயே இறந்துட்டாரு. அத்தனை பிள்ளைங்களுக்கும் நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன். எல்லாம் கீரை வித்தும், கடனை கிடனை வாங்கியும் தான் கரை சேத்திருக்கேன்..”

”இந்த வயசுல ஏன் வேலை செய்யணும்? உங்க பையன் உங்கள பாத்துக்க மாட்டாரா?”

”ஆமா.. நான் தான் அத பாத்துக்கணும். இப்ப தான் கொஞ்ச நாளா பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு போவுது. இத்தனை நாளா நான் வேலைக்கு போய் தான் சோறு போட்டுட்டு இருந்தேன். வயசு மட்டும் கழுத வயசு ஆச்சு. அவனுக்கு இப்போ நாப்பத்தியோரு வயசு.”

கோயம்பேடு சந்தையில்
கோயம்பேடு சந்தையில் நடக்கும் கீரை வியாபாரம்

கீரை விற்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் கணவனால் கைவிடப்பட்டவர்களாகவோ, விதவைகளாகவோ தான் இருக்கிறார்கள். அதிலும் பெரும்பான்மையானவர்கள் ஐம்பது வயதைக் கடந்தவர்கள். ஜெபத்தாய் சைதாப்பேட்டையிலிருந்து வருகிறார். 61 வயதாகும் கோதையம்மாளோ கிழக்கு தாம்பரத்திலிருந்து வருகிறார். அது இன்னும் வெகு தூரம். இவருக்கு நான்கு பெண்கள், நான்கு பேருக்கும் திருமணமாகி தனியாக இருக்கின்றனர். கணவர் இறந்து விட்டார்.

”பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாதுன்னுதான்யா தனியா இருக்கேன். ஏதோ என் செலவுக்கு என்னால முடிஞ்ச வேலய நான் பாத்துக்கிறேன். எனக்கு யார் தயவும் வேணாம்” என்கிறார். இவர் கோயம்பேடு போய் வருவதற்கான போக்குவரத்து செலவே முன்னூறு ரூபாய்க்கு மேல் ஆகி விடுகிறது. எனவே தினமும் போவதில்லை. தனது தேவைகளுக்காக மட்டும் வாரத்திற்கு நான்கு நாட்கள் போய் வருகிறார்.

மிகத் தொலைவிலிருந்து வருபவர்கள் பத்து அல்லது பதினோரு மணிக்கெல்லாம் சந்தைக்குள் வந்து விடுகின்றனர். அப்போது திறந்திருக்கும் ஒரு சில கடைகளில் தேவையான சில கீரைகளை வாங்கிக் கொண்டு அங்கேயே படுத்து விடுகின்றனர். பிறகு ஒரு மணிக்கு எழுந்து மொத்தக் கீரைகளையும் வாங்கிக் கொண்டு, மீண்டும் படுத்து எழுந்து அதிகாலை நான்கு மணிக்கு அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

மீஞ்சூர், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை போன்று தூரமான பகுதிகளிலிருந்து வருபவர்கள் கூட கீரை வாங்கி விட்டு தங்களது பகுதிகளுக்குத் திரும்பி காலையிலேயே கீரைகளை விற்கத் துவங்கி விடுகின்றனர். இடுப்பில் ஒன்றும், தலையில் ஒன்றுமாக இரண்டு கூடைகளை சுமந்து கொண்டு ஏழு மணிக்கெல்லாம் தெருவில் இறங்குபவர்கள், பதினோரு மணிக்குள் முடித்து விட்டு வீட்டிற்குச் செல்ல பன்னிரெண்டு அல்லது ஒரு மணியாகி விடுகிறது.

வீட்டிற்குள் நுழைந்ததுமே போய்ப் படுத்துக்கொள்ளும் நிலையிலும் இவர்கள் இல்லை. ஏனென்றால் அனைவரும் பெண்கள், சமையல் உள்ளிட்ட சில வேலைகளை முடித்த பிறகு தான் ஓய்வு, அதுவும் சற்று நேரமே. குடிகாரக் கணவனாக இருந்தால் அந்த ஓய்வும் கிடைக்காது. மீண்டும் இரவு கோயம்பேடு கிளம்புகின்றனர்.

”ஒரு கட்டுக்கு அஞ்சு ரூவா வச்சு விக்கிறீங்களே.. அப்படின்னா உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் இல்லையா..” என்று கே.கே. நகர் தெருக்களில் விற்றுக்கொண்டிருந்த ராஜத்திடம் கேட்ட போது, ”ஆயிரம் ரூவாய்க்கு வாங்கி வித்தா தான் சார் ஐநூறு ரூவா கெடைக்கும். ஆனா அந்த ஐநூறு ரூவாய்க்கு நாங்க எவ்வளோ கஷ்டப்படுறோம் தெரியுங்களா! நைட்டு பத்து மணிக்கு வீட்ட விட்டுக் கௌம்புனா அடுத்த நாள் ஒரு மணிக்கு தான் சார் வீட்டுக்கு போறோம். விடிய விடிய மார்க்கெட்லயே கெடந்து, விடிக்கால எழுந்து 200 ரூவாய்க்கு ஆட்டோவப் புடிச்சு, மத்தியானம் வரைக்கும் வேகாத வெயில்ல அலைஞ்சி திரிஞ்சு, கூவிக் கூவி வித்தா தான் ஐநூறு ரூவா கெடைக்கும்.

அப்படி விக்கும்போது நாலு கட்டுக்கு ஒருத்தர் பேரம் வேற பேசுவாங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்லிச் சொல்லியே தொண்டத் தண்ணி வத்திரும். இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு ஆயிரம் ரூவாய்க்கு வித்தா தான் சார் ஐநூறு ரூவா கிடைக்கும். அதுலயும் ஆட்டோ செலவு அது இதுன்னு நெறைய இருக்கு. இதுல என்னா சார் லாபம் இருக்குன்னு சொல்றீங்க!” என்றார் சோர்வு கலந்த சலிப்புடன்.

அனைவரும் கீரைகளை எடுத்துக் கொண்டிருந்த அந்த நள்ளிரவு நேரத்தில், வயது முதிர்ந்து கூன் விழுந்து விட்டிருந்த ஒரு மூதாட்டி கையில் சில பிளாஸ்டிக் பைகளை வைத்துக் கொண்டு கிழிந்துபோன சேலையும், பரட்டைத் தலையுமாக போய்க் கொண்டு இருந்தார். ஒரு கணம் நான் அவரை சந்தையில் திரியும் பிச்சைக்காரர் என்றே எண்ணினேன். ஆனால் அவர் கீரை விற்பவர். கீரை விற்கும் மற்ற பெண்களைப் போலவே அவரும் குனிந்து கீரைகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காட்சி மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. இந்தத் தள்ளாத வயதில் அவர் கீரைகளை வாங்கிச் சென்று அதை விற்று வயிற்றைக் கழுவுகிறார் என்பதை ஏற்கவே முடியவில்லை. அவருக்கு கிட்டத்தட்ட 65 வயதுக்கு மேல் இருக்கலாம். அருகில் நெருங்கி ”உங்க பேர் என்னம்மா?” என்றதும், ”ஏன் கேக்குற.. எதுக்கு..?” என்றார். ”இல்ல.. இந்த வயசுலயும் வேலை செய்றீங்களே.. அதான் தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்.” என்றதற்கு ”எந்த வயசுன்னா என்ன.. வேல செஞ்சா தானே சாப்புட முடியும்” என்றார்.

காமாட்சி பாட்டி
நமக்காக நள்ளிரவில் கீரை வாங்கும் பெண்மணிகள்

காமாட்சி, இந்த மூதாட்டி மயிலாப்பூரிலிருந்து வருகிறார், வயது 63. ”புள்ளைங்க கூட தான் இருக்கேன். புள்ளைங்க இருந்து என்ன பண்ண.. வேலை செஞ்சா தான் சோறு திங்க முடியும்” என்றார். மொத்தமே அவர் நானூற்று ஐம்பது ரூபாய்க்கு தான் கீரைகளை வாங்கியிருந்தார். ”ஏம்மா இவ்வளவு கம்மியா வாங்கியிருக்கீங்க?” எனக் கேட்டதற்கு, ”நெறைய வாங்குனா யாரு தூக்கிட்டு போறது. எனக்கு இதை வித்தாலே போதும்” என்றார். இதை முழுவதும் விற்றால் கூட 225 ரூபாய் தான் கிடைக்கும், அதற்காக மயிலாப்பூரிலிருந்து இவர் கிளம்பி வந்திருக்கிறார்.

மயிலாப்பூர் போகும் குட்டி யானை வண்டியில் இவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொள்கிறார். இவரிடம் மற்ற பெண்கள் காசு வாங்குவதில்லை. வாடகையை அவர்களே பகிர்ந்து கொடுத்து விடுகின்றனர். உழைத்துப் பிழைத்தால் தான் காசு என்றாலும், ஓய்வு பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் எதுவும் தராவிட்டாலும் இவர்களுக்கிடையே உதவி செய்வது மிகவும் இயல்பாக இருக்கிறது.

இவர்களது வாழ்க்கை கீரை எனும் இரும்புச் சங்கிலியோடு பிணைக்கப்பட்டு, சென்னை எனும் மாபெரும் நகரத்தில் சுமை தூக்கிய செக்கு மாடுகள் போல சுற்றிச் சுற்றி வருகிறது. எட்டு மணி நேரம் தொடர்ச்சியான தூக்கம், எட்டு மணி நேரம் ஓய்வு, வார விடுமுறைகள், தொலைக்காட்சித் தொடர்கள், சினிமா, பொழுது போக்கு எதுவும் இவர்களுக்குக் கிடையாது. அன்றாடச் செலவுகளுக்கு கீரை விற்று வரும் காசும், பெருஞ் செலவுகளுக்கும், கீரை கொள்முதலுக்கும் கந்து வட்டிக் கடனை வாங்கியும் வாழ்க்கை வண்டி ஓடுகிறது. தலைவலி, காய்ச்சல் இன்னபிற சுகவீனங்களுக்கு கூட விடுப்பு கிடையாது. நள்ளிரவில் விழித்து, நடுப்பகலில் கீரைக்கட்டுச் சுமையோடு சுற்றினால்தான் வயிற்றுக்கு கஞ்சி கிடைக்கும்.

இத்தகைய கடுமையான உழைப்பில்தான் இம்மக்கள் குடும்பத்தோடு வாழ்கிறார்கள். பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குகிறார்கள். இத்தகைய அவல வாழ்க்கை தான் கீரை விற்பனையால் இவர்களுக்கு கிடைத்திருக்கும் சொத்து, வருமானம். கீரை சத்தான, ஆரோக்கியமான உணவாக இருக்கலாம்; ஆனால் அதை விற்கும் பெண்களை  உருக்கி, இழைத்து, அடித்து விரட்டும் இந்த சமூக அமைப்பு அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை.

– புதிய கலச்சாரம் செய்தியாளர்.
___________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
___________________________________________   

படத் தொகுப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செல்லாக்காசாகிறது ரூபாய் ! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை !

17

டாலருக்கு எதிராக ரூபாய் உள்ளிட்ட பல நாட்டு நாணயங்களின் மதிப்பும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 2 டிரில்லியன் டாலர் நோட்டுகளை அடித்து தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முயன்ற அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ், உள்நாட்டு பொருளாதார நிலைமை ஓரளவு சீர்பட்டிருப்பதாக கருதுவதால் நோட்டு அடிப்பதை நிறுத்தவிருப்பதாக மே 22 அன்று அறிவித்தது. இது உலகச் சந்தையில் டாலருக்கான வேண்டலை (demand) அதிகப்படுத்தியதுடன் அமெரிக்காவில் வட்டி விகித உயர்வுக்கும் வழி வகுக்குமாதலால், சர்வதேச முதலீட்டாளர்கள் தமது முதலீட்டை அமெரிக்காவுக்கு மாற்றி வருகின்றனரென்றும், இதனால் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு டாலருக்கு எதிராக அந்நாட்டு நாணயங்களின் மதிப்பு குறைந்து வருகிறதென்று விளக்கமளிக்கப் படுகிறது. பொதுவில் பார்க்குமிடத்து இந்த விளக்கம் சரியே எனினும், மற்ற நாணயங்களைக் காட்டிலும் மிக மோசமான வீழ்ச்சியை ரூபாய் ஏன் சந்திக்கிறது என்ற கேள்விக்கும், ஏப்ரல் 2011 முதல் ஏப்ரல் 2013 வரையிலான காலத்திலேயே டாலருக்கு எதிராக கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மதிப்பை ரூபாய் ஏன் இழந்தது என்ற கேள்விக்கும் இதில் விடையில்லை.

பெருகி வரும் தங்க நகைக் கடைகள்
கார்கள், நகைக் கடைகள் போன்றவைதான் ஒளிரும் இந்தியாவின் சான்றுகளாக தனியார்மயதாசர்களால் காட்டப்பட்டன. அவைதான் இன்றைய நெருக்கடிக்கு காரணம் என்பதன் பொருள், இது மறுகாலனியாக்க கொள்கைகள் தோற்றுவித்துள்ள நெருக்கடி என்பதே.

ரூபாயின் வீழ்ச்சி குறித்து மக்களவையில் அறிக்கை வெளியிட்ட மன்மோகன்சிங், ”எண்ணெய் மற்றும் தங்கத்துக்கான பசியை மக்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று உபதேசித்திருக்கிறார். 2012-ஆம் ஆண்டின் மொத்த இறக்குமதி 488.6 பில்லியன் டாலர்கள். இதில் எண்ணெய் இறக்குமதி மட்டும் 155.6 பில்லியன் டாலர்கள். 1970-களில் தனது எண்ணெய்த் தேவையில் 30% மட்டுமே இறக்குமதி செய்த இந்தியா இன்று 70% இறக்குமதி செய்கிறது. காரணம், ஆட்டோமொபைல் முதலாளிகளின் லாபத்துக்காக பொதுப்போக்குவரத்தை அழித்து கார், இரு சக்கர வாகன விற்பனையை அதிகரிக்கும் கொள்கை, மறுகாலனியாக்க வளர்ச்சியின் அங்கமாகத் திணிக்கப்பட்டதுதான். நகைக் கடைகளின் திடீர் பெருக்கத்துக்கும், தங்க இறக்குமதி அதிகரிப்புக்கும் காரணம், மறுகாலனியாக்கத்தால் ஆதாயமடைந்த தரகு, அதிகார வர்க்க, அரசியல் பிழைப்புவாதக் கும்பல்களின் ஆடம்பரமும், அவர்கள் தமது கருப்புப் பணப் பதுக்கலுக்கும் ஊகபேர சூதுக்கும் தங்கத்தில் முதலீடு செய்ததுதான். கார்கள் நகைக்கடைகள் போன்றவைதான் ஒளிரும் இந்தியாவின் சான்றுகளாக தனியார்மய தாசர்களால் காட்டப்பட்டன. அவைதான் இன்றைய நெருக்கடிக்குக் காரணம் என்பதன் பொருள் இது மறுகாலனியாக்க கொள்கைகள் தோற்றுவித்துள்ள நெருக்கடி என்பதே.

இப்பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் விளக்கமளித்த ப.சிதம்பரம், முதன் முறையாக ஒரு உண்மையைக் ஒப்புக்கொண்டிருக்கிறார். ”2008-ஆம் ஆண்டில் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இந்தியத் தொழிலகங்களுக்கு ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த ஊக்கத் திட்டங்கள் இந்தியப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது. அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சி இந்தியாவைப் பாதிக்காமல் நம்மைப் பாதுகாத்தது. ஆனால் அதன் மற்றொரு விளைவாக நமது நிதிப் பற்றாக்குறையும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்தது” (தினமணி, 28.8.2013). மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள்தான் பற்றாக்குறைக்குக் காரணம் என்று இடையறாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரத்துக்கு நடுவே, தவிர்க்கவியலாமல் சிதம்பரத்தின் வாயிலிருந்து வெளிவந்திருக்கும் இந்த உண்மை, ஆளும் வர்க்கமும் அவர்களால் இந்த நாடு இழுத்துச் செல்லப்படும் மறுகாலனியாக்க ”வளர்ச்சி”ப் பாதையும்தான் தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என்ற உண்மைக்கு சான்று கூறுகின்றன.

”நமது பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக இருப்பதால் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்போம்” என்று கூறியிருக்கிறார் மன்மோகன் சிங். வளர்ச்சி சாத்தியமா என்பதைப் பரிசீலிப்பதற்கே, தற்போதைய வீழ்ச்சிக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

****

நமது பொருளாதாரத்தின் அடித்தளம் என்று கூறப்பட்ட விவசாயம், தொழில்துறை ஆகியவற்றில், விவசாயத்தின் புறக்கணிப்பையும் அழிவையும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தீவிரப்படுத்தியிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கான ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் தொழில்துறையும், அந்நாடுகள் பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்ததன் விளைவாக நலிந்து விட்டன. கடந்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் கண்டிருக்கும் வளர்ச்சி என்பது வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

2011-12-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆவறிக்கை, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத்துறை, விடுதிகள், வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில்கள்தான் நமது பொருளாதாரத்தின் முதன்மையான இயங்கு சக்திகள் என்று கூறுகிறது. மன்மோகன்சிங் கூறுகின்ற அடித்தளம் இதுதான்.

இந்த அடித்தளத்தை இயக்குவதும், நிதியளிப்பதும் பன்னாட்டு மூலதனம் என்பதே உண்மை. எனவே மேற்கூறிய இந்தத் துறைகளிலான வளர்ச்சி என்பது பன்னாட்டு நிதிமூலதனம் இந்தியாவுக்குள் வெள்ளமெனப் பாய்ந்ததனால் ஏற்பட்ட விளைவாகும். 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ”டாட் காம் குமிழி வெடிப்பு” என்று அழைக்கப்படும் பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக பன்னாட்டு நிதிமூலதன நிறுவனங்கள், ஒப்பீட்டளவில் அதிக இலாபம் தருகின்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கித் திரும்பின. இந்தியாவின் மலிவான உழைப்பைக் குறிவைத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறைகளின் அவுட்சோர்சிங் தொழிலும் வளர்ந்தது.

2003-இல் இந்தியாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 1%-ஆக இருந்த பன்னாட்டு மூலதனம் (நேரடி மூலதனம், நிதிக்கருவிகள், வங்கி கடன்கள் உள்ளிட்டவை)  2008-இல் 10% ஆக அதிகரித்தது. ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்தல் ஆகியவற்றில் 100% அந்நிய மூலதனம் அனுமதிக்கப்பட்டது. பிரைவேட் ஈக்விடி, ஹெட்ஜ் ஃபண்டு, வென்சர் காபிடல் போன்ற நிதி மூலதனம் மற்றும் நிதி சூதாட்டக் கருவிகள் அனைத்தையும் அந்நிய நேரடி முதலீடாகக் கருதி சலுகைகள் வழங்கப்பட்டன. அடையாளம் தெரியாத அந்நிய முதலீட்டாளர்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டனர். இந்தியத் தரகு முதலாளிகள் தங்களது கருப்புப் பணத்தை மொரிசியஸ், கேமேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களின் வழியாக அந்நிய முதலீடு என்ற பெயரில் உள்ளே கொண்டு வருவது அனுமதிக்கப்பட்டது. இந்தியத் தரகு முதலாளிகள் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நேரடியாக கடன் வாங்கிக் கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்றுமதிக்கு காத்திருக்கும் கார்கள்
ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹூண்டாய் கம்பெனி கார்கள் : சொகுசு கார் உற்பத்தி பெருகியது: நடப்பு கணக்குப் பற்றாக்குறை வீங்கியது !

இவையனைத்தும் பங்குச் சந்தை, நாணயச் சந்தை, ரியல் எஸ்டேட் போன்ற ஊகவணிகம் சார்ந்த துறைகளில்தான் முதலீடு செயப்பட்டன. இத்தகைய முதலீடுகள் புதிதாக எதையும் உற்பத்தி செயவில்லை. இருக்கின்ற நிலம், மனைகள் மற்றும் பங்குகளின் மதிப்பை மட்டும் உயர்த்தின. இந்த சோப்புக் குமிழிதான் வளர்ச்சி வீதத்தின் அதிகரிப்பு என்றும், பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் எகிறுகின்றன என்றும் கொண்டாடப்பட்டது. இத்தகைய மாய்மாலங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்தபோதே இந்தியாவின் அந்நியக் கடன், வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருந்தது.

****

பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இந்தியா வாங்கிய கடன் 2006-07 இல் 62.3 பில்லியன் டாலர் என்பதிலிருந்து டிச. 2012-இல் 376.3  பில்லியன் டாலராக உயர்ந்தது. இதில் குறுகிய காலக் கடன் மட்டுமே 159.6 பில்லியன் டாலர்கள். மார்ச் 2014-க்குள் 172 பில்லியன் டாலர் அந்நியக் கடனை இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த 172 பில்லியனில் 44 சதவீதத் தொகையானது இந்தியத் தரகுமுதலாளிகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருக்கும் கடனாகும்.

இந்தியாவின் முதல் பத்து தொழில் நிறுவனங்கள் வாங்கியிருக்கும் கடன் கடந்த 6 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்து தற்போது 120 பில்லியன் டாலராக உள்ளது. இவற்றில் பெரும்பகுதி பன்னாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் வாங்கப்பட்டிருக்கும் கடன்கள். 2007-இல் தொடங்கி இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் சீரழிந்து வருகிறது என்கிறார் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ருசிர் சர்மா (டைம்ஸ் ஆப் இந்தியா,28.8.13). ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம், முதலீடு செவதற்கான இந்தியாவின் தர மதிப்பீட்டை (investment rating) (BBB) என்ற ஆகத்தரம் தாழ்ந்த நிலையில் வைத்திருக்கிறது. ”குப்பை” என்ற இதற்கடுத்த நிலைக்குத் தாழ்ந்து விட்டால், பிறகு இந்திய அரசோ, தொழில் நிறுவனங்களோ பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது மிகவும் கடினமாகி விடும்.

ஆனால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%-ஆக உயர்ந்து விட்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைத்து, டாலர் கையிருப்பை அதிகரிப்பதற்கு, வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதையே ஒரு தீர்வாக அமல்படுத்துகிறது மன்மோகன் அரசு. இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் கடன் சந்தையில் மதிப்பிருக்குமென்பதால், அவர்களை வெளிநாட்டுச் சந்தையில் கடன் வாங்க வேண்டுமென்றும், அரசாங்கத்தைப் போலவே கடன் பத்திரங்கள் வெளியிட்டு டாலரைத் திரட்ட வேண்டும் என்றும், அந்த கடன் பத்திரங்களுக்கான வட்டியை அவர்களே கொடுத்து விட வேண்டும் என்றும் சென்ற மாதம் கூறியிருக்கிறார் ப.சிதம்பரம்.

”வருவாய் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு மானியங்களை வெட்டுவது, அந்நியச் செலாவணி இருப்பை மேம்படுத்துவதற்கு அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது – நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது, சுற்றுச் சூழல் பிரச்சினைகளாலும் நீதிமன்ற வழக்குகளாலும் தடைப்பட்டிருக்கும் நிலக்கரி, இரும்புச் சுரங்கங்களை இயங்க வைப்பது”  என்று அந்நிய முதலீட்டாளர்களை மனம் குளிரச்செய்யும்படியான பத்து அம்ச திட்டத்தை வெளியிட்டு அவர்களைக் கவர்ந்திழுக்க முயன்றிருக்கிறார் சிதம்பரம்.

ஒளிரும் இந்தியா கனவு
2000 ஆண்டுகளின் துவக்கத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ”டாட் காம் குமிழி வெடிப்பு” என்று அழைக்கப்படும் பங்குச்சந்தை வீழ்ச்சியின் காரணமாக பன்னாட்டு நிதிமூலதன நிறுவனங்கள், ஒப்பீட்டளவில் அதிக இலாபம் தருகின்ற இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கித் திரும்பின. இந்தியாவின் மலிவான உழைப்பைக் குறிவைத்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறைகளின் அவுட்சோர்சிங் தொழிலும் வளர்ந்தது.

மன்மோகனின் அறிக்கையோ வரவிருக்கும் இருண்ட காலத்துக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. ”ரூபாய் எவ்வளவு வீழ்ச்சியடைந்தாலும், அதன் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக வெளியேறும் அந்நிய மூலதனத்தைத்  தடுக்க மாட்டோம். தனியார்மய – தாராளமய கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம். கடந்த காலத்தில் செயப்பட்டவை சுலபமான சீர்திருத்தங்கள். ஓய்வூதிய நிதி மற்றும் காப்பீடு தனியார்மயம், மானிய வெட்டுகள், பொருள்கள் மற்றும் சேவை வரி போன்ற கடுமையான சீர்திருத்தங்கள் வரவிருக்கின்றன. எல்லாக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்” என்றவாறு ஆகஸ்டு 30 அன்று மக்களவையில் பேசியிருக்கிறார் மன்மோகன்.

எதைச் செய்தாவது அந்நிய மூலதனத்தை ஈர்த்தாக வேண்டும் என்ற வெறித்தனத்தின் விளிம்பில் அரசும் ஆளும் வர்க்கங்களும் நின்று கொண்டிருக்கின்றன. அந்நியக் கடன்கள், முதலீடுகள் பெருகப் பெருக, அவற்றுக்கான வட்டியும், இலாப ஈவுத்தொகையும் அதிகரித்த அளவில் வெளியேறுகின்றன. வெளியே செல்லும் இந்த டாலர்கள்  மீண்டும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கச் செகின்றன. இந்த நச்சுச் சுழல் நாட்டை திவால் நிலையை நோக்கி – முழு அடிமை நிலையை நோக்கிக் கொண்டு செல்கிறது. பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தற்போது எடுத்துச் செல்லும் இலாப ஈவுத்தொகையின் விகிதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்போது) பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தோடு ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது என்று கூறுகிறார் ஒரு ஆய்வாளர். (நிர்மல் குமார் சந்திரா, EPW, 5.4.2008)

ரூபாயின் வீழ்ச்சியானது, தனியார்மய-தாராளமய கொள்கைகள் குறித்த பிரமைகளை அகற்றி, மறுகாலனியாக்கத்தின் விகாரமான முகத்தை அம்பலமாக்கியிருக்கிறது. மன்மோகன் குறிப்பிடும் கடுமையான சீர்திருத்தம் என்பது கடுமையான அரசியல் ஒடுக்குமுறைக்கான முன் அறிவிப்பு. நிலப்பறிப்பு தொடங்கி ஜனநாயக உரிமை பறிப்பு வரையிலான எல்லா நடவடிக்கைகளும் தேசிய நலன் கருதி சர்வகட்சி ஒத்துழைப்புடன் நடக்கும். எனவே இதனை முறியடிக்க வேண்டுமானால், அதற்கான போராட்டத்தை நாடாளுமன்ற அரசியல் சட்டகத்துக்கு வெளியே, ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டமாகத்தான் நாம் நடத்த முடியும், நடத்த வேண்டும்.

– தலையங்கம்
_______________________________________

பெட்டிச் செய்தி

ரூபாய் வீழ்ச்சியின் விலையைக் கொடுப்பது யார்?

”உலகம் பொருட்களை உற்பத்தி செய்கிறது. அமெரிக்கா டாலர் நோட்டை உற்பத்தி செய்கிறது” என்றொரு கேலியான சொலவடை உண்டு. 2008 சப் பிரைம் நெருக்கடிக்குப் பிறகு, திவாலாகிப் போன அமெரிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றைக் கைதூக்கி விட்டு, பொருளாதாரத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்கு, நோட்டு அடிக்கத் தொடங்கியது அமெரிக்கா. 2007-இல் சுமார் 850 பில்லியன் டாலர்களாக இருந்த டாலர் புழக்கம் 3 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டும் வரை பெடரல் ரிசர்வ் தலைவர் பெர்ன் பெர்னென்கே அச்சு எந்திரத்தை நிறுத்தவில்லை போலும்! வேறு எந்த நாடாவது இப்படி நோட்டு அடித்திருந்தால், அந்த நாட்டின் பணம் மதிப்பிழந்து போயிருக்கும். ஆனால் இங்கோ டாலருக்கு எதிராக பிற நாணயங்களின் மதிப்பு தான் குறைந்து வருகிறது.

காரணம், டாலர் உலகச் செலாவணியாக இருக்கிறது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பித்தான் பல நாடுகளின் தொழில்கள் இயங்குகின்றன. அரசியல்-ராணுவ ரீதியாக அமெரிக்க மேலாதிக்கம் பெற்றுள்ள வலிமைதான் டாலரின் மதிப்பை தாங்கி நிற்கிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்பதன் பொருள் என்ன? இது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும். இந்த விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, நாம் செலுத்தும் கூடுதல் உழைப்பு, வாங்கும் கடன், பட்டினிச்சாவுகள், தற்கொலைகள் ஆகிய அனைத்தும், டாலருக்கு – அதாவது பன்னாட்டு மூலதனத்துக்கு நாம் கொடுக்கும் ரத்தப்பலி. ரூபாயின் மதிப்பு குறையக்குறைய, முன்னிலும் கூடுதல் உழைப்பையும் கூடுதல் வளங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு, குறைவான அந்நியச் செலாவணியே (டாலர்) கிடைக்கும். இது, அமெரிக்கா தனது நெருக்கடியை நம் மீது இறக்கி வைக்கும் சதி. உலக முதலாளித்துவம் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகள் எதிர்கொள்ளும் நெருக்கடியின் சுமையை, நம்மீது தள்ளுவது என்பது இதுதான்.
_______________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013

_______________________________________

பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !

46

1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது. அபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.

அபிராம் தாசு
அபிராம் தாசு : திருட்டு ராமர் சிலை வழக்கில் முதல் குற்றவாளி !

இந்திய வரலாற்றில் கருப்புப் பக்கமாகவும், கசப்பான நிகழ்வாகவும் மாற்றப்பட்ட அயோத்தி பிரச்சினையின் முக்கிய விதை விதைக்கப்பட்டது அந்த இரவில் தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணைப் பிரிவான இந்து மகா சபையின் நேர்த்தியான திட்டத்தால் அந்த இரவும், அந்த சம்பவமும் கமுக்கமாக மறைக்கப்பட்டது.

சமீபத்தில் தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களான கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜா ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து, அயோத்தியில் மசூதியை கைப்பற்ற முனைந்த அந்த இரவின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பார்ப்பன இந்து மதவெறி அடிப்படையிலான செயல்திட்டம் கொண்ட இந்து மகா சபையின் திட்டம், அதற்கு உதவி புரிந்த காங்கிரசு வலதுசாரிகள், இந்து வெறி அதிகாரிகள், வாய்ச் சொல்லில் மட்டும் மதச்சார்பின்மையைப் பேசி வந்த இந்திய அரசின் கையாலாகாத்தனம் என அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கும் புத்தகம்தான் ‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘ (Ayodhya : The Dark Night & The Secret history of RAMA’s appearance in babri Masjid).

புத்தகம் ஒரு வரலாற்று ஆவணத்துடன் தொடங்குகிறது – காலை 9.00 மணி, 23 டிசம்பர், 1949. உத்திர பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன் தாசு மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்  பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குவது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்கிறார்.

அந்த முதல் தகவலறிக்கையின் சுருக்கம் – காலை 7 மணியளவில் நான் (ராம் தியோ துபே) ஜன்ம பூமியை அடைந்தபோது, அங்கிருந்த மாதா பிரசாத் (காவலர் எண் 7) மூலம் தெரிந்து கொண்டது என்னவெனில், சுமார் 50 முதல் 60 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியினுள் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து ஒரு ராமர் சிலையை வைத்துள்ளனர். அதோடு மசூதியின் சுவற்றில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் ராமர், சீதை, அனுமான் படங்களை வரைந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவலுக்கிருந்த ஹன்ஸ் ராஜ் எனும் காவலர் தடுத்தும் யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.

இந்த குற்றத்தைச் செய்தவர்கள் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன தாசு இன்னும் அடையாளம் தெரியாத 50 முதல் 60 பேர். இவர்கள் மசூதியினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ராமர் சிலையை வைத்து கலகம் செய்துள்ளனர். அங்கு பொறுப்பில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் இதை நேரில் கண்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யபட்டுள்ளது.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது. ஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை; இரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.

இந்த இரண்டு பொய்களும் எப்படி திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றப்பட்டன என்பதையும் புத்தகம் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் விவரிக்கிறது.

1947-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரங்கள் நாடு முழுவதும் வெடித்தன. மத வெறியர்களால் இந்துக்களும், முசுலீம்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்து ராஷ்டிரத்தை தம் கனவாகவும், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அடிமைகளாக்கும் பாசிச திட்டத்துடனும் செயல்படத் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற அமைப்புகள் இந்தக் கலவரங்களை பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. இதன் ஒரு பகுதியாக அவர்கள் காந்தியை கொலை செய்துவிட்டு, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

காந்தி கொலையானது பெரும்பான்மை இந்துக்களிடமிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையை தனிமைப்படுத்தியது. கூடவே இந்திய அரசு இவர்களை தடை செய்தது; இந்து மகா சபையோ அரசியல் திட்டத்தை கைவிட்டதாக சொல்லிக் கொண்டு தன்னை இந்துக்களின் கலாச்சார அமைப்பாக வெளியில் காட்டிக் கொண்டது. இவர்களின் ஞானகுரு சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். எனினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கர் விடுதலை அடையவே, ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1949-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. காங்கிரசில் இருந்த பல வலதுசாரிகள் இந்து மகா சபையில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.

கிருஷ்ண ஜா-ன் புத்தகம்
அயோத்தியின் இருண்ட இரவுகள் பற்றிய கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜாவின் புத்தகம்

1947-ம் ஆண்டு பல்ராம்பூர் அரசர் ஒரு யாகம் நடத்தினார். அதற்கு தன் உற்ற நண்பர்களான பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயர், இந்து மகா சபையின் உத்திர பிரதேச தலைவரான திக் விஜய்நாத் ஆகியோரை அழைத்திருந்தார். அப்பொழுது நாயரிடமும், மன்னரிடமும் சாவர்க்கரின் திட்டம் ஒன்றை திக் விஜயநாத் விவரித்தார். இந்தியாவில் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களை மீட்பது; இதன் மூலம் மக்கள் மத்தியில் தாங்கள் வளருவது; அயோத்தியில் ராமர் கோவில், வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவது ஆகிய திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விளக்கினார் திக் விஜய்நாத். இந்தத் திட்டம் நிறைவேற, தான் எந்தவிதமான தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக நாயர் வாக்குக் கொடுத்தார்.

காந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகு, 1949 மே மாதம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உடனடியாக செய்ய வேண்டியவற்றைப் பற்றி சாவர்க்கரும், இந்து மகா சபையினரும் சேர்ந்து  திட்டமிடத் தொடங்கினர். அயோத்தியின் ராமர் கோவில் அவர்களுக்கு ஒரு பெரும் புதையலாக காட்சியளித்தது. அயோத்தியை மையமாகக் கொண்ட ராமாயண மகா சபை உருவாக்கப்பட்டது. அதற்கு பொறுப்பாளராக மகா சபையின் நகர தலைவர் ராமச்சந்திர தாசு பரமஹம்சு என்பவர் நியமிக்கப்பட்டார்.

பரமஹம்சு இந்தத் திட்டத்திற்கு இரண்டு பேரை தன் கூட்டாளிகளாக இருந்தவர்களில் தேர்ந்தெடுத்தார், ஒருவர் சந்நியாசி அபிராம் தாசு, மற்றொருவர் அச்சக உரிமையாளரும், பைசாபாத் மாவட்ட செயலாளருமான கோபால்சிங் விஷ்ராத். இன்னொரு புறம் பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயருடன் அயோத்தி நகர நீதிபதியும், நாயரின் சீடருமான இந்து மகா சபையின் ஆதரவாளர் குரு தத் சிங் என்பவரும் இந்தத் திட்டத்தில் மறைமுகமாக பங்கெடுத்தனர்.

அபிராம் தாசு ஒரு சந்நியாசி, அவரின் உண்மையான பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பீகாரில் உள்ள ரஹரி கிராமத்தை சேர்ந்த பார்ப்பனர். குடும்ப ஏழ்மை அபிநந்தனை நாடோடியாக்கியது. அவரின் குடும்பத் தொழிலான அர்ச்சகர் பணி சில இடங்களில் அவருக்கு உணவளித்தாலும், ப்ளேக் நோய் பரவல் அவரை பரதேசியாக அயோத்திக்கு அழைத்து வந்தது. அங்கு அனுமான் கர்ஹியைச் (அனுமான் கோவில்) சேர்ந்த துறவி சராயு தாசின் சீடரானார். சராயு தாசு மறைவுக்குப் பிறகு அனுமான் கர்ஹிக்கு அபிநந்தன் மிஸ்ரா பொறுப்பாளாரானார். சந்நியாசியாகி விட்ட பின் தன் பூர்வீகப் பெயரை துறந்தார்; அபிநந்தன் மிஸ்ரா அபிராம் தாசானார். ஆனால் துறவிக்கான நடைமுறைகளை மீறி, தன் உறவினர்களை அயோத்திக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். அவர்களுடனான குடும்ப உறவுகளை தொடர்ச்சியாக பேணி வந்தார்.

அபிராம் தாசுக்கு அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அது தனது மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கவசம் என்பதும் அவருக்கு புரிந்திருந்தது. கூடவே இசுலாமியர்கள் மீது நஞ்சு கக்குமளவு அவருக்கு இந்து மகா சபையுடன் நெருக்கம் வளர்ந்தது. அதன் ஒரு பகுதியாக பாபர் மசூதியை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார்.

பாபர் மசூதி அருகில் சுமார் 50 அடி தொலைவில் ஒரு ராமர் கோவில் இருந்தது. பாபர் மசூதியில் தொழுகை அழைப்பாளராக இருந்த முகமது இசுமாயிலும், ராமர் கோவில் அர்ச்சகர்களும் பரஸ்பரம் நல்லுறவையே பேணி வந்தனர்.

18-ம் நூற்றாண்டில் அயோத்தியில் இருந்த துறவிகளிடையே சில பிரிவுகள் இருந்தன. அவற்றில் முக்கியமான வகைகள் நிர்மோகி அகோரி, நிர்வாண அகோரி. அபிராம் தாசு நிர்வாண அகோரி பிரிவை சேர்ந்தவர். நிர்வாண அகோரிகள் இயல்பில் ஒரு ரவுடிகளைப் போன்ற துறவிகள் குழு. இவர்கள் அயோத்தியில் பலமாக இருந்த சைவ துறவிகளை அடித்து துரத்திவிட்டு  ஆஞ்சநேயர் கோவிலைக் (அனுமான் கர்ஹி) கைப்பற்றி, அதன் நிலங்களையும், உண்டியல், காணிக்கை பணத்தையும் அனுபவிக்கத் துவங்கினர்.  இன்னொரு பிரிவினர் நிர்மோகி அகோரி, இவர்கள் பாபர் மசூதி அருகில் இருந்த ராமர் கோவிலை நிர்வகித்து வருவதுடன் அதன் காணிக்கைகளையும் அனுபவித்து வந்தனர்.

அபிராம் தாசு பாபர் மசூதியை கைப்பற்றும் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, பாபர் மசூதியைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் அருகில் உள்ள ராமர் கோவிலை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, நிர்மோகி அகோரிகளை  ஒன்றுமில்லாதவர்களாக்குவது; இரண்டாவது, ராமஜன்ம பூமியின் காவலர் என்ற புகழைப் பெறுவது. இப்படி சாமியார் குழுக்களுக்கிடையே இருந்த சொத்துச் சண்டைகளும், கட்டைப் பஞ்சாயத்தும் பாபர் மசூதி பிரச்சினைக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்து மகாசபையும், ராமாயண மகா சபையும் அயோத்தியில் பல நிகழ்வுகள், திருவிழாக்கள், பூஜைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக நடத்தினர். பாரம்பரியமாக அயோத்தியின் துறவிகள் ராமர் பிறந்த தினமான ராம நவமியை கொண்டாடுவார்கள், ராமர் திருமணத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். சீதை பெண் என்பதனால் ஆண் துறவிகள் அவளை வணங்க கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் அவர்கள். ஆனால் 1949-ம் ஆண்டு ராமரது திருமண நாள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் அயோத்தியில் வலிந்து நடத்தப்பட்டன.

மசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர். மசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது. இசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள். இதனால் பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.

அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர். அயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.

அரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது. இசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர். இந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன. அச்சக உரிமையாளாரான விஷ்ராத், பரமஹம்சின் கூட்டாளியானதால் பிரசுரங்கள்  அயோத்தியெங்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டன.

டிசம்பர் 22-ம் தேதி அபிராம் தாசு ராமர் சிலையை மசூதியினுள் வைத்து விட்டார். மறுநாள் இந்து மகாசபை ஆதரவு பத்திரிகைகள், அயோத்தியில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும், அங்கு தன் பிறப்பிடத்தில் (மசூதியினுள்) ராமரது சிலை ஒன்று சுயம்புவாகவே தோன்றியுள்ளது என்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. இந்து மகாசபையால் திரட்டப்பட்ட மக்கள் மசூதியை நோக்கி படையெடுக்கவே,  பூசைகள், பாடல்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சிலையை அகற்றாமல் பிரச்சினையை தள்ளிப் போட்டார் மாவட்ட நீதிபதியான நாயர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தவறான தகவல்களை அறிக்கைகளாக கொடுத்ததுடன்,  கலவரங்கள் வராமல் தான் தடுப்பதாகவும் ஒரு பிம்பத்தை நாயர் ஏற்படுத்தினார். அதிகாரிகளோ மாவட்ட இணை ஆணையாளரும், நீதிபதியுமான நாயரின் அனுமதிக்காக காத்திருந்தனர். சிலையை அப்புறப்படுத்தலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தாலும் அதனால் பெரும் கலவரங்கள் வரும் என பயம் காட்டி தள்ளிப்போட்டார் நாயர். நாயரின் இந்த கடும் உழைப்பிற்கு சன்மானமாக 1967-ல் ஜன சங்கத்தின் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

காவல்துறையினர் இதை வெறும் குற்றவியல் வழக்காகவே பதிவு செய்தனர். நேருவின் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றிய விபரங்களை தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால் மாநில அரசோ அயோத்தி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக திரும்ப திரும்ப சொல்லி வந்தது. ராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படவேயில்லை. பல காங்கிரசுக்காரர்கள் மசூதி ஆக்கிரமிப்பை தாம் ஒரு இந்து என்கிற முறையில் வரவேற்கவே செய்தனர். மறுபுறம் சோசலிசம், மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்ட காங்கிரசின் சிறு பிரிவினர், இதனை மென்மையாகக் கையாண்டதன் மூலம் மறைமுகமாக உதவி புரிந்தனர்.

அக்ஷ்ய் பிரம்மச்சாரி
பாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி

காங்கிரசின் பைசாபாத் மாவட்ட செயலாளரும், காந்தியவாதியுமான அக்ஷய் பிரம்மச்சாரி இசுலாமியர்களுக்கு ஆதரவாக, குறிப்பாக அவர்களின் பயத்தைப் போக்க தொடர்ந்து போராடினார். ஆரம்ப கட்டத்தில் மாவட்ட நீதிபதி மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனக் கருதி பல புகார்களை அவரிடம் கொண்டு சென்ற அக்ஷய் பிரம்மச்சாரி மெல்ல நாயரை பற்றி புரிந்து கொண்டார். பின்பு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். ஆனால் இந்து மகாசபையின் ரவுடிகள் அவரை ஊரை விட்டே அடித்துத் துரத்தினர்.

ஆனாலும், அக்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லவும், பிரதமரிடமே எடுத்துச் செல்வதிலும் உறுதி காட்டினார். நேரு அவரை லால் பகதூர் சாஸ்திரியைப் பார்க்கச் சொன்னார். உத்திர பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரியோ அயோத்தியில் ஒரு பிரச்சினையும் இல்லை என சட்டசபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார். அக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த மோசமான காலகட்டத்தில் எண்ணற்ற அயோத்தி இசுலாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பியோட முனைந்தனர். தங்கள் சொத்துக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக கிழக்கு பாகிஸ்தானுக்கு ஓடினார்கள்.

அன்று முதல் இந்த மோசடி நிகழ்வின் அரசியல் ஆதாயங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள்  தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றன. மசூதியைக் கைப்பற்றிய பின் அது ராமர் கோவிலாகி விட்டது என்று சொல்கின்றனர். தூண் பூசை, கர சேவை,மசூதி இடிப்பு,செங்கல் பூசை என்று 1949-ல் விதைத்த விதைக்கான பலனை அறுவடை செய்யும் பணியில் சங்க பரிவார அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இசுலாமியர்களுக்கு சொந்தமான மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்து, அடுத்தடுத்து சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் இந்துத்துவா கும்பல்களை எதிர்த்து நின்று, அந்த இடத்தை அதன் உரிமையாளர்களான இசுலாமியர்களிடம் ஒப்படைப்பது தான் நியாயமானதாக இருக்க முடியும். ஆனால் அந்த நியாயத்தை செய்யும் வண்ணம் இங்கே எந்த ஓட்டுக் கட்சியும் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை. முதன்மையாக மதச்சார்பின்மை பேசும் காங்கிரசுதான் 1949-ல் மட்டுமல்ல, பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்ட 1992-ம் ஆண்டிலும் அதிகாரத்தில் இருந்தது.

இந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது. எனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.

இந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும்.

-ஆதவன்
__________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________________

வக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் !

5

வக்கீல் பரசும் – client சரசும்

நேரம் காலை 10.20.  வக்கீல் பரசு அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கிறார்.

Client சரசு :
அய்யா………… நான் கூடங்குளத்திலிருந்து வந்திருக்கேன், என் மகன் கையெழுத்து விசயமா!

வக்கீல்பரசு :
நானே காலங்காத்தால ரொம்ப அவசரமாக் கௌம்பிட்டுருக்கேன். சொல்லும்மா என்ன விசயம்?

கூடங்குளம்
போராடுறது குத்தமா? (கூடங்குளத்தில் போராடும் மக்கள்).

client சரசு : அய்யா எட்டு மாசமா என் மவன் கையெழுத்துப் போடுறான், போராட்டத்தன்னிக்கு வீட்ல காய்ச்சலா இருந்தவன பிடிச்சு, பொய் கேசு போட்டுட்டாங்க….. அவன் பொண்டாட்டி, பிள்ள பட்டினி கெடக்குது…… அந்த கண்டிசன் கையெழுத்த ரத்து பண்ணக் கூடாதா?

வக்கீல் பரசு : ஏம்மா, உன் சவுரியத்துக்குப் பண்ண முடியுமா, இந்த ஜட்ஜ் வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட்… நேரமாச்சும்மா கிளம்புங்க நான் பாத்துக்குறேன்!

வக்கீல் முரசு : என்ன பரசு சார்… வேகமாக் கிளம்புறேள்! 4வது கோர்ட்ல, 44 வது கேசுதான! 4.45 -க்குத்தான் வரும்! வாரும் கேண்டீனுக்கு போவோம்!

வக்கீல் பரசு : இல்ல சார்……! I HAVE CASES IN……

client சரசு : அய்யா, முகத்தை தொடச்சுகுங்க…… வேர்த்து ஒழுகுது! பிஆர்பி-ன்னு ஒருத்தருக்கு 44 திருட்டுக் கேசு இருந்தாலும், கண்டிசன் கையெழுத்தே இல்லாம முன்ஜாமீன் அய்கோர்ட் குடுத்திருக்கு… அப்புறம் விஜயகாந்துக்கும் குடுத்திருக்குன்னு தினகரன் பேப்பர்ல போட்டுருக்காங்கன்னு என் பேத்தி படிச்சுச் சொன்னாளே….

வக்கீல் பரசு : ஏம்மா, அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம், மெதுவாப் பேசும்மா….

clientசரசு : சட்டம் எல்லாருக்கும் ஒன்னுதான்னு சொல்றாங்களே! பெரிய இடம், சின்ன இடம்-ன்னு சொல்றீங்க!

வக்கீல் முரசு : யோவ், கேட்குறாங்கல்ல பதில் சொல்லும்!

வக்கீல்பரசு : ஏம்மா…. அதெல்லாம் அந்தந்த கேசப்பொறுத்து… நீ குடுத்த காசுக்கு நூறு கேள்வி கேட்குற? 506(ii) க்கே (மிரட்டல் கேஸ்) கண்டிசன் ரத்து பண்ண தண்ணி குடிச்சுட்டிருக்கோம்! 29 நாள் கையெழுத்துப் போட்டும் டிஸ்மிஸ் ஆகுது! நீ வேற!

client சரசு : அய்யா, திருடுறது குத்தமா? போராடுறது குத்தமா? வக்கீல்மாருக டெய்லி போராடுறீங்க, அது குத்தமா! அது மாதிரிதான என் மவனும்?

வக்கீல் முரசு : கரெக்டா கேட்டமா! நூறு ரூவா திருடினா பெரிய குத்தம்! ஆனா 16,000 கோடி ரூவா திருடினா…. அது திறம… அதுல எல்லாருக்கும் பங்கு….. புரிஞ்சுதாம்மா?

பி ஆர் பழனிசாமி
திருடுறது குத்தமா? (மதுரையில் திருடும் பி ஆர் பழனிசாமி)

வக்கீல் பரசு : யோவ், என்ன கிளையன்ட்ட எல்லாத்தையும் போட்டு உடைக்கிறீரு! கோர்ட்டோட டெக்கோரம் என்ன ஆகும்?

வக்கீல் முரசு : ஏன், உண்மையைச் சொன்னா என்னவாம்! அம்மா, இவர் இதயெல்லாம் கோர்ட்ல பேச மாட்டாரு….. இவரே அடுத்து சிஜேஐ (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி) பங்ஷன் நடத்தி அய்கோர்ட்டு ஜட்ஜ் ஆகப் போறாரு!

வக்கீல் பரசு : நல்லாச் சொல்லுமய்யா………….…. மெட்ராஸ்காரன் பங்ஷன் நடத்தி எல்லா போஸ்டிங்கும் வாங்கிட்டானுல்ல! மதுரக்காரனுக்கு என்ன எழவு தெரியும்! கொடி பிடிக்கவும்…. கோஷம் போடவும்….. நான் மெட்ராஸ்லயே இருந்திருக்கனும்……. இந்நேரம் ஜட்ஜ் ஆயிருப்பேன்!

வக்கீல் முரசு : யோவ், இந்தப் பொழப்புக்கு வேற ஏதாவது……

client சரசு : அய்யா, திருடனுக்கு சலுகை…….. ஏழைக்கு கஷ்டம்……….. எங்க உயிரைக் காப்பாத்த போராடின இடிந்தகரை ரோசலின் ………கண்டிசன் கையெழுத்து போடும் போது மதுரையில செத்தே போச்சு……….. இத்தன வக்கீல்க இருக்கீங்க இதக் கேட்க மாட்டீங்களா?……..

வக்கீல் பரசு : ஏம்மா…… உன் கேசுக்குக் கேட்டா, அடுத்த கேசுக்கு நான் போறதில்லையா? கிளம்பும்மா…. நான் கேண்டீன் போகணும்…. சீ….. கோர்ட்டுக்குப் போகணும்………..மென்சன் பண்ணனும்……

client சரசு : ஐயா, நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைங்களே!

வக்கீல் பரசு : உன்னோட பெரிய தொந்தரவாப் போச்சு…………… ஏம்மா, கோர்ட்ல நுழையும் போது பாத்தியா…. நீதி தேவதை சிலை, அத கண்ணக் கட்டி வச்சுருக்காங்க இல்ல!

client சரசு : ஆமாம்………

வக்கீல்பரசு : கண்ணைக் கட்டித்தான் நீதி சொல்லனுமுன்னு வெள்ளக்காரன் சட்டம்…… சரியா! கண்ணக் கட்டிட்டுச் சொல்றப்போ 1, 2 தப்பு நடக்கத்தாம்மா செய்யும்!

வக்கீல்முரசு : அட்ரா சக்க…. அட்ரா சக்க…. விளக்கம்னா இதாண்ணே விளக்கம்! உலகமகா விளக்கம்!!!

Clientசரசு : சரிங்கய்யா, படிச்சவங்க பொய் சொல்ல மாட்டீங்க…….….! இந்தாங்க 1,000 ரூவா….?

வக்கீல் பரசு : ஏம்மா…… பேச்செல்லாம் பேசுற! பிஆர்பி வக்கீலுக்கு 10 லட்சம் பீஸ், நீ 1000 குடுக்கிற! ஆர்டர் வேணுங்கிற!

client சரசு : ஏங்கய்யா, நிறைய காசு குடுத்தா சட்டம் மாறுமா?………….. தெரியாமக் கேட்குறேன்?

வக்கீல் முரசு : அண்ணே…….. பதில் சொல்லுங்கண்ணே!

வக்கீல் பரசு : ஆள விடும்மா தாயே……….. கிளம்பு…………. கிளம்பு…………நான் ஜட்ஜ் ஆகுறதக் கெடுத்திருவ போல………..!

————————————————————–
வழக்கறிஞர்கள்:
மனித உரிமைப்பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
150-இ, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-20. 9865348163.
—————————————————————————————————-

குறிப்பு : பார்க்க…CRL.O.P.No.11401, 11402, 12045 OF 2013 (கிரானைட் கிரிமினல் பிஆர்பி மற்றும் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஏதுமின்றி மதுரை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முன்ஜாமின் உத்தரவுகள்)

தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !

45

ப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி (வயது 49) கடந்த புதன்கிழமை இரவு தலிபான் மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். கொல்கத்தாவை சேர்ந்த இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜான்பஸ் கான் என்ற தொழிலதிபரைக் காதலித்து 1989-ல் திருமணம் செய்து கொண்டார்.

சுஷ்மிதா பானர்ஜி
சுஷ்மிதா பானர்ஜி

ஆப்கானிஸ்தானில் தனது கணவருடன் குடியேறிய அவருக்கு அங்கு சென்ற பிறகுதான் ஜான்பஸ் கானுக்கு ஏற்கெனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. மருத்துவரான சுஷ்மிதா பெண்களுக்கென தனியாக ஒரு டிஸ்பன்சரி-ஐ தனது வீட்டிலேயே தொடங்கி நடத்தி வந்தார். 1993-ல் தலிபான்கள் வரும்வரை வாழ்க்கை பிரச்சினைகள் ஏதுமில்லாமல் தான் போய்க் கொண்டிருந்ததாக பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சுஷ்மிதா பானர்ஜி, ஆப்கன் சென்ற பிறகு தனது பெயரை சயீத் கமலா என்று மாற்றிக் கொள்கிறார்.

1993-ல் தலிபான்கள் அவரது டிஸ்பன்சரியை மூடும்படி உத்திரவிடுகின்றனர். மேலும் அவரை ஒழுக்கம் கெட்டவள் என்றும் முத்திரை குத்துகின்றனர். 1994-ல் அங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக முயற்சித்த சுஷ்மிதாவை அவரது கணவரின் சகோதரர் நேரில் வந்து கூட்டிக் கொண்டு போய் தலிபான்கள் வசம் கொடுக்கிறார். அவரை விடுவித்து விடுவதாக முதலில் வாக்களித்த தலிபான்கள் பின்னர் அவரை வீட்டுச் சிறையில் வைத்ததுடன், தினமும் பலவாறாக துன்புறுத்துகின்றனர்.

1995-ல் வீட்டை விட்டு வெளியேறிய அவர் காபூலுக்கருகில் மீண்டும் தலிபான்களிடன் சிக்கிக் கொள்ளவே, தான் ஒரு இந்தியக் குடியுரிமை பெற்ற பெண் என்றும், வீட்டை விட்டு ஓடும் குற்றத்தின் கீழ் தன்னை கைது செய்யவோ, தூக்கிலிடவோ இயலாதென்றும் அவர்களிடம் வாதிட்டு பின் விடுதலையாகிறார். நாடு திரும்பிய அவர் பின்னர் கொல்கத்தாவில் தனது கணவருடன் வந்து இணைகிறார்.

1995-ல் இவர் எழுதிய ‘ஒரு காபூல்வாசியின் வங்காள மனைவி’ என்ற நாவல் தலிபான்களின் அடக்குமுறைகளைப் பற்றிப் பேசியதால் தலிபான்களின் எதிர்ப்பை மிகுதியாகவே சம்பாதித்துக் கொண்டார். தலிபான்களிடமிருந்து அவர் தப்பியது பற்றிய இந்நூல் பிறகு மணிஷா கொய்ராலா நடித்த இந்தி திரைப்படமாகவும் பாலிவுட்டில் 2003-ல் வெளியானது. இசுலாத்திற்கும் மதம் மாற அவர் மறுத்து விடவே தலிபான்கள் அவர் மீது மேலும் ஆத்திரமடைந்தனர்.

வடக்கு கொல்கத்தாவில் வசித்து வந்த அவர் இந்த ஆண்டு ஜனவரியில் தான் தனது கணவருடன் ஆப்கானிஸ்தானின் பாக்திகா பகுதியில் உள்ள கரானா என்ற இடத்திற்கு குடியேறினார். இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதுடன் எழுதவும், அப்பகுதி பெண்களின் வாழ்க்கையை படமாக்கவும் முயன்று கொண்டிருந்தார். தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கவும் திட்டமிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் பெண்களது வாழ்நிலைமையை முன்னேற்ற உறுதி பூண்ட அவருக்கு மட்டுமின்றி, அவரது கணவரின் குடும்பத்தாருக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே 1998-ல் அவுட்லுக் பத்திரிகையில் அவர் எழுதிய போது, தலிபான்கள் பெண்களை கடைக்கு கூட போக அனுமதிக்காததை, புர்கா அணிவதை கட்டாயமாக்கியதை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பாடல்கள் கேட்பதை தடைசெய்து ஆணை வெளியிட்டதை எல்லாம் அம்பலப்படுத்தியிருந்தார். சுஷ்மிதா பானர்ஜி உண்மையில் மிகவும் தைரியமாகவே இசுலாமிய அடிப்படைவாதிகளை ஆப்கனில் எதிர்கொண்டிருக்கிறார். அவர் வாழ்ந்த கிராமத்தில் எப்படி ஆயுதம் ஏந்திய வலதுசாரிக் கும்பலானது மக்களை தீவிரவாதிகளாக மாற்றிக் கொண்டிருந்தன என்பது பற்றியும் அவுட்லுக்கில் எழுதியிருந்தார்.

அவரது பால்ய கால நண்பரான தமல் பாசு கூறுகையில், சுஷ்மிதா உற்சாகமும், தைரியமும் உடைய பெண் என்றும், தங்களோடு நெருக்கமாக பழகியதாகவும், தனக்கு ஆயுதமேந்திய அடிப்படைவாத குழுக்களினால் விடுக்கப்படும் கொலை மிரட்டல்களைப் பற்றி அவ்வப்போது குறிப்பட்டதாகவும் கூறியுள்ளார். தலிபான்களைப் பற்றி மேலும் இரண்டு புத்தகங்களை சுஷ்மிதா எழுதியுள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு 1.30 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிட்ட தலிபான்கள் அவரது குடும்பத்தினரை ஒரு கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர். பிணத்தை அருகில் இருந்த இசுலாமிய கல்விக்கூடத்தின் அருகில் போட்டுவிட்டு சென்றனர்.

எனினும் தாலிபான்கள் இந்தக் கொலையை செய்யவில்லை என்று மறுத்திருக்கிறார்கள். வேறு அமைப்புகளும் இக்கொலைக்கு பொறுப்பேற்கவில்லை. பொதுவில் இத்தகைய கொலைகள் ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தும் எதிர்மறைக் கருத்தை தவிர்ப்பதற்காகவே தாலிபான்கள் இதை மறுப்பதை வழமையாக வைத்திருக்கிறார்கள்.

கண்டனம்
சுஷ்மிதா கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வங்க மொழி எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் தங்களது அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். ஒரு எழுத்தாளருக்கு 21-ம் நூற்றாண்டிலும் இப்படி நேர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார் மகாஸ்வேதா தேவி.  எழுத்தாளர் நபனீத சென் கூறுகையில், இச்செய்தியைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், நடந்த சம்பவத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

“அவர் எழுதிய பல விசயங்கள் தலிபான்களுக்கு உவப்பில்லாதவை. எனவே தான் அவர் இந்தியா திரும்ப நேரிட்டது. ஆனால் அவர் மீண்டும் ஆப்கன் திரும்ப முடிவு செய்தது அவரது தைரியத்தை காட்டினாலும், புத்திசாலித்தனமானதல்ல” என்று கூறிய சென், வேறு ஒரு கலாச்சாரத்தில் வாழ்ந்து அது பற்றி தனது கருத்துக்களை சுஷ்மிதா பானர்ஜி பதிவு செய்தமைக்காக ஒரு இந்தியப் பெண் என்ற முறையில் தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற வங்க மொழி எழுத்தாளர் சிருசேந்து முகோபாத்யாய கூறுகையில், “இரண்டாம்தர குடிமக்களாக, வீட்டு விலங்குகளாக ஆப்கானிஸ்தான் சட்டத்தின்படி நடத்தப்படும் பெண்கள், அப்படி இனி அவர்கள் வாழ முடியாது என்பதை விளக்கும் வகையில் சுஷ்மிதா எழுதியுள்ளார். அவர் ஒரு தைரியமான பெண்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“என்னைப் போலவே ஒவ்வொரு பெண்ணும் தலிபான்களை எதிர்த்து போராட வேண்டும்” என இருபது ஆண்டுகளுக்கு முன் சுஷ்மிதா பானர்ஜி கூறியுள்ளார். பெண்களால் வாழ முடியாத நிலைமையை இசுலாமிய அடிப்படைவாத குழுக்கள் பலவும் ஆப்கானிஸ்தானில் நடைமுறைப்படுத்துகின்றன. தற்போதைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக வாழ முடியவில்லை என்ற சூழலை இந்த ஆயுதக் குழுக்கள் கட்டியமைக்கின்றன. இந்த அடிப்படைவாத செயல்கள் அமெரிக்க ராணுவத்தின் செயல்களுக்கு ஒரு அடிப்படையை வழங்குகிறது. இசுலாமிய அடிப்படைவாதம் ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது சுஷ்மிதா பானர்ஜியின் படுகொலை. எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் சேர்ந்து இப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்தி வீழ்த்துவதன் முக்கியத்துவம், அமெரிக்காவை வீழ்த்துவதற்கான முக்கியத்துவத்துக்கு குறைந்த ஒன்றல்ல !

டெஸ்கோவிற்கு எதிரான இங்கிலாந்து மக்களின் போராட்டம் !

1

ஷெர்போர்ன் நகர சிறு வணிகர்களும், மக்களும் கேக்கையும் ஷாம்பெய்னையும் பரிமாறியபடி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அச்சிறு நகரத்தில் துவங்கப்பட இருந்த வால்மார்ட்டைப் போன்ற பகாசுர பன்னாட்டு நிறுவனமான டெஸ்கோவின் பல்பொருள் அங்காடி தொடங்கப்பட மாட்டது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் வந்த கொண்டாட்டம் தான் இது. ஷெர்போர்ன் நகர மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது.

ஷெர்போர்ன்
ஷெர்போர்ன் தெரு

இங்கிலாந்து நாட்டில் உள்ள சிறு நகரமான ஷெர்போர்ன் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் வணிக நகரம். வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள், தேவாலயங்கள், தனித்துவ கலாச்சார அடையாளங்களைக் கொண்ட ஷெர்போர்ன், சுற்றுலா பயணிகளை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை. இந்நகரத்தில் பல சிறு வணிகர்கள், ரோட்டோரக் கடைகள், சிறு விடுதிகள், இரண்டு மத்திய ரக பல்பொருள் அங்காடிகள் என சுற்றுலா பயணிகளை நம்பி இயங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக அங்காடித் தெரு (ஹைஸ்டிரீட்) மிகவும் புகழ் பெற்றது.

கடந்த வருடம் டிசம்பர் 12-ம் தேதி இங்கிலாந்தின் மிகப் பெரிய சங்கிலித் தொடர் சில்லறை விற்பனை நிறுவனமான டெஸ்கோ ஷெர்போர்ன் நகரத்தில் தன் புதிய கடையை திறக்கப் போவதாக அறிவித்தது. உலகின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான  வால்மார்ட்டுக்கு அடுத்த இடத்திலும், மொத்த வருமானத்தில் உலகின் மூன்றாவது பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமாகவும் டெஸ்கோ திகழ்கிறது.

டெஸ்கோவின் வருகை பல சிறிய வணிகர்களை அழித்துவிடும் என்பதை உறுதியாக அறிந்து கொண்ட ஷெர்போர்ன் நகர சிறு வணிகர்கள், கடை திறப்பைப் பற்றிய அறிவிப்பு வெளியான உடனே ஒன்று கூடி களத்தில் இறங்கினார்கள். அடையாளப் போராட்டங்களை கைவிட்டு புதுமையாக “தேவையில்லை, டெஸ்கோ” (No Thanks, Tesco) எனும் போராட்டத்தை துவங்கினார்கள். அவர்கள் அரசையும் நம்பவில்லை, அதிகாரிகளையும் நம்பவில்லை அதேநேரம் ஒன்றுபட்டு போராடினால் டெஸ்கோவை விரட்ட முடியும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

போராட்டம் தொடங்கியது. இரண்டே நாளில் ஒரு வலைத் தளம் தொடங்கப்பட்டது. தங்கள் தரப்பு வாதங்களையும், கருத்துகளையும் தெளிவாக பரப்புரை செய்தனர். சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி டெஸ்கோவிற்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடத்தினர், சுமார் 11 ஆயிரம் பேர் வரை இப்போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். இந்த எண்ணிகை ஷெர்போர்னின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமானது. டெஸ்கோ வந்தால் எப்படி சிறு வணிகர்களின் வணிகம் நொடிந்து போகும், எவ்வளவு பேர் வாழ்வை இழப்பார்கள் என்பதை விளக்க சில கடைகளை இழுத்து மூடியும், காலியாக்கியும் மக்களின் பார்வைக்கு காட்டினார்கள். போராட்டம் உள்ளூர் மக்களிடையேயும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் போரட்டத்தை பற்றி கருத்து தெரிவித்த திராட்சைத்தோட்டம் ஒயின் கடையின் (வைன்யார்ட் ஒயின் ஷாப்) உரிமையாளர் வில்கின்ஸ் “ஏற்கனவே இரண்டு பல்பொருள் அங்காடிகள் இருக்கும் இந்நகரத்தில் டெஸ்கோவின் வருகை எங்களை அழித்துவிடும்” என்றார்.

நிலைமை கை மீறி போன பின் தான் ஷெர்போர்னில் புதிய கடை திறக்கும் திட்டத்தை கைவிடுவதாக டெஸ்கோ நிர்வாகம் அறிவித்தது. தன் நிலையைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்ட டெஸ்கோவின் இங்கிலாந்து நிர்வாக இயக்குனர்  கிரிஸ் புஷ் “ஷெர்போர்ன் நகரத்தில் டெஸ்கோவின் கடைத் திறப்பு அந்நகரத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தியிருக்கும், வணிகம் பெருகியிருக்கும். ஆனால் வணிகர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் அங்காடி திறப்பு கைவிடப்படுகிறது” என்றார்.

தாங்கள் மக்கள் போராட்டத்திற்கு பணியவில்லை என்று, விழுந்து விட்டோம் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற பாணியில் சமாளிக்கிறது டெஸ்கோ. இது அந்நகர மக்களின் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதையும் கிரிஸ் புஷ் மறுத்தார். ”இந்த அங்காடி திறப்பு கைவிடப்பட்டதற்கும் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, மக்களின் போராட்டம் ஒன்றும் செய்யவில்லை, அங்கு கடையை திறக்க போதுமான போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லை” என்றார்.

ஆனால் இதைப் போராட்டக்காரர்கள் மறுக்கிறார்கள். ”கிரிஸ் புஷ் சொல்வது வேடிக்கையானது, டெஸ்கோ கடந்த வருடம் மே மாதம் முதல் ஷெர்போர்னில் அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்து, அனைத்து சாதக பாதகங்களையும் உறுதி செய்த பிறகு தான், டிசம்பர் 12-ம் தேதி அதிகார பூர்வமாகக் கடையைத் திறப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். அதனால் போக்குவரத்து வசதிகள் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறான வாதமாகும்” என்கிறார்கள்.

அதே நேரம் ஷெர்போர்ன் நகர சுற்றுலாவை டெஸ்கோ மேம்படுத்தும் என்பது பாமரத்தனமான வாதம். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்தை கொண்ட அந்நகரம் ஏற்கனவே கணிசமான சுற்றுலா பயணிகளை ஈர்த்திருக்கும் நிலையில் டெஸ்கோவின் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க தான் அந்நகருக்கு சுற்றுலாவுக்கு வருவார்கள் என்கிற கிரிஸ் புஷ்ன் வாதத்தை என்னவென்று சொல்வது?

டெஸ்கோவின் இந்த திட்டம் கைவிடப்பட்டது தனக்கு மிக பெரும் நிம்மதியை தருவதாக கூறினார், ஷெர்போர்ன் நகர கைவினைப் பொருள் கடையின் உரிமையாளார் அலிசன் நர்டன். கிரிஸ் புஷின் அறிக்கையை பற்றி கூறுகையில் ”அவர்கள் மக்கள்  போராட்டம் வென்றது என்று நிச்சயம் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், ஒப்புக் கொண்டு விட்டால் அவர்களின் பல சங்கிலி தொடர் கடைகளுக்கு மூடு விழா நடத்த அதுவே அச்சாரம் போட்டதாக ஆகிவிடும்” என்றார்.

இந்த நிகழ்வை பற்றிய கருத்துகளில் மிக முக்கியமான கருத்து எழுத்தாளரும், உணவுத் துறை பிரச்சனைகளின் நிபுணரும், இந்தப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆதரவாளருமான ஜோனா ப்ளித்மேன் தெரிவித்தது தான். “டெஸ்கோ மக்களின் மிகப் பெரிய தலைவலியாகிக் கொண்டிருக்கிறது, டெஸ்கோ கடைகளை மக்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள். இந்தப் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க போரட்டம், ஷெர்போர்ன் மக்களின் வெற்றி, நாட்டில் உள்ள பிற சிறு வணிகர்களுக்கும், பல குழுக்களுக்கும் சொல்லும் உறுதியான செய்தி, ஒன்று பட்டு போராடினால் டெஸ்கோவை துரத்தலாம் என்பது தான்”

ஷெர்போர்ன் மக்கள் மற்றும் சிறு வணிகர்களின் இந்த போராட்டம், இந்திய சிறு வணிகர்கள் மற்றும் இந்திய மக்களின் முன்னால் சமகால உதாரணமாக நிற்கிறது. இந்த போராட்ட அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டு நாமும் ஒன்றுபட்டு போராடினால் வால்மார்ட்டை விரட்டமுடியும் என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது. ஷெர்போன் நகரில் வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயம் இருந்தாலும் வணிகர்கள் தேவனை நம்பாமல் மக்களை நம்பி போராடியதால் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

மேலும் படிக்க

மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் – வன்சாரா !

25

குஜராத்தில் மோடியின் அரசியல் தலைமையும், உயர் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய ‘மோதல்’ கொலைகளுக்கு போலீஸ் அதிகாரிகள் மட்டும் பழி வாங்கப்படுகிறார்கள் என்றும் 30-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் இத்தகைய வழக்குகளில் சிறையில் வாடும் போது முதலமைச்சர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் சுதந்திரமாக உலாவுகிறார்கள் என்றும் குஜராத்தின் முன்னாள் டிஜிபி டி ஜி வன்சாரா குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் தலைநகர் காந்திநகரில் செயல்படும் குஜராத் அரசு உண்மையில் அகமதாபாத்தின் சபர்மதி மத்திய சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குத்தலாக பரிந்துரைத்துள்ளார்.

டி ஜி வன்சாரா
டி ஜி வன்சாரா

வன்சாரா 2002 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில் முதலில் அகமதாபாத் நகரின் துணை ஆணையராகவும், பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு படையின் துணை தலைமை ஆய்வாளராகவும் பணி புரிந்தவர். போலி மோதல் (என்கவுண்டர்) வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக அகமதாபாத்திலும், மும்பையிலும் சிறை வைக்கப்பட்டுள்ள வன்சாரா, தான் தெய்வமாக போற்றிய நரேந்திர மோடி தன்னையும், சக போலீஸ் அதிகாரிகளையும் காப்பாற்றாமல் கை விட்டு விட்டது குறித்து மனம் கசந்து எழுதியிருக்கிறார். தனது நம்பிக்கையை இழந்து விட்ட குஜராத் அரசுக்கு இனிமேலும் சேவை செய்ய விரும்பவில்லை என்று தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும், ஓய்வூதிய சலுகைகளையும் தியாகம் செய்வதாகவும் கூறியிருக்கிறார். போலி மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் ஏற்கனவே அவர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடியும், அமித் ஷாவும் தற்போது குஜராத்திலும் மும்பையிலும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்க முயற்சி செய்யாததோடு, தாம் வழக்கில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ளவும், அரசியல் ஆதாயம் தேடவும், போலீஸ் அதிகாரிகளை பலி கொடுக்கத் தயாராகி விட்டதாக வன்சாரா புலம்பியிருக்கிறார்.

சோராபுதீன் போலி மோதல் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்ட போது நாட்டிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை வைத்து சிபிஐ கீழமை மன்றம், உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் வரை போய் பிணை வாங்கிய மோடியின் குஜராத் அரசு, போலீஸ் அதிகாரிகள் எம் என் தினேஷ், நரேந்திர அமீன் போன்றவர்கள் தமது சொந்த முயற்சியில் பிணை வாங்கிய போது, அதை எதிர்த்து முறையீடு செய்து அதை ரத்து செய்திருக்கிறது. தம்மை பாதுகாத்துக் கொள்ள, போலி மோதல் வழக்கு விசாரணையை மும்பை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்ற அனுமதித்து போலீஸ் அதிகாரிகளை கைவிட்டதோடு சிக்கலில் தள்ளியுள்ளது. போலி மோதல் வழக்குகளை இணைத்து விசாரிக்கும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட வழி செய்து, வன்சாரா மீதான வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக மாற்றியிருக்கிறது, அதாவது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்குத் தண்டனை வழங்கக் கூடிய வழக்காக மாறியிருக்கிறது.

வன்சாரா காவலில்
மோடி போலீஸ் அதிகாரிகளை பலி கொடுக்கத் தயாராகி விட்டதாக வன்சாரா புலம்பியிருக்கிறார்.

இதனால் வன்சாரா முதலான போலிஸ் கிரிமினல்கள் யோக்கியவான்கள் என்பதல்ல. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ஆனால் இந்த கிரிமினல்களை தலைமை தாங்கிய மோடி இன்று கைவிட்டுவிட்டார் என்பதே வன்சாரா வகையறாக்களின் குற்றச்சாட்டு. பிரதமர் கனவில் இருக்கும் மோடிக்கு இத்தகைய போலிஸ் அதிகாரிகளெல்லாம் கிள்ளுக்கீரைகள் என்பது இந்த கிள்ளுக் கீரைகளுக்கு தெரியவில்லை.

இது எல்லாம் சேர்ந்து வன்சாராவின் உதாரான தைரியத்தையும் அதிகாரத்துவ கட்டுப்பாட்டையும் உடைத்து போட்டிருக்கிறது. குஜராத் அரசுக்கு அனுப்பியிருக்கும் தனது 10 பக்க ராஜினாமா கடிதத்தில் குஜராத்தில் நடத்தப்பட்ட போலீஸ் படுகொலைகளின் பின்னணியையும் வரலாற்றையும் விளக்குகிறார்.

2002-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை அவிழ்த்து விடப்பட்டது. இந்தச் சூழலில் “பாகிஸ்தானுடன் நீண்ட எல்லையைக் கொண்டிருப்பதால், குஜராத் காஷ்மீரைப் போல மாறிவிடாமல் தடுக்க, பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சகிப்பின்மை அற்ற கொள்கை’ அரசின் உச்ச மட்டங்களில் (அதாவது முதலமைச்சர் நரேந்திர மோடி) வகுக்கப்பட்டது” என்றும், அந்த கொள்கையின்படிதான் மோதல் கொலைகள் குற்றப் பிரிவு போலீசாராலும், பயங்கரவாத தடுப்பு போலீசாராலும் நடத்தப்பட்டன என்றும் வன்சாரா “திருத்தமாக, அழுத்தமாக” பதிவு செய்திருக்கிறார்.

மாநில உள்துறை அமைச்சகத்தின் உயர் மட்டங்களிலிருந்து தினமும் அவரை தொடர்பு கொண்டு விசாரித்துக் கொண்டிருப்பார்கள் என்றும், இப்போது அவர் சிறையில் அடைபட்டிருக்கும் நேரத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும், குஜராத் போலீசின் கடமை உணர்வும், ‘தேச பக்தி’யும் மோடி போன்றவர்களின் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் புலம்பியிருக்கிறார். நரேந்திர மோடியின் நம்பிக்கைகுகந்த நபராக இருந்து, மாநில நிர்வாகத்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமித் ஷா போலீஸ் அதிகாரிகளை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அப்படி என்ன செயல்களுக்காக வன்சாராவும் பிற போலீஸ் அதிகாரிகளும் மோடி அரசால் பயன்படுத்தப்பட்டனர் என்று பார்க்கலாம்.

இஷ்ரத் ஜஹான் குடும்பம்
போலி மோதலில் கொல்லப்பட்ட மும்பை மாணவி இஷ்ரத் ஜஹானின் குடும்பம்.

குஜராத்தில் இனப்படுகொலை நடந்த அடுத்த ஆண்டு, 2003 மார்ச் மாதம் மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டிய மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்து கிடந்தார். இவ்வழக்கு தொடர்பாக பொடா அடக்குமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் குஜராத் உயர்நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்து விட்டது.

ஹரேன் பாண்டியாவை கொன்றது யார் என்ற ‘மர்மம்’ நீடிப்பது ஒரு புறமிருக்க, மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும், ராஜஸ்தான் கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமாகிய சையத் சோராபுதீன் குஜராத் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டான். சோராபுதீனின் மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார். சோராபுதீன் கொல்லப்பட்ட போது உடனிருந்ததாக சொல்லப்படும் துளசிராம் பிரஜாபதி என்பவன் 2006-ம் ஆண்டு போலீசாருடனான மோதலில் கொல்லப்பட்டான்.

இவை மோடி அரசு ‘முஸ்லீம் பயங்கரவாதிகளை சகித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்து, குஜராத்தை அமைதி தவழும் மாநிலமாக பராமரிப்பதற்கு’ நடத்திய கொலைகளுக்கு உதாரணங்கள். ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்தது அவரது கொலைக்கான அரசியல் பின்னணி. ஹரேன் பாண்டியாவையும், அவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மோடியின் கையாள் சோராபுதீனையும், சோராபுதீன் கொலைக்கு சாட்சியாக இருந்த கவுசர் பீ மற்றும் துளசிராம் பிரஜாபதி இவர்களையும் கொலை செய்ததுதான் நரேந்திர மோடி அரசின் ஏவலில் நடத்தப்பட்ட வன்சாரா போன்ற போலீஸ் அதிகாரிகளின் ‘தேசபக்த’ பணியாக இருந்திருக்கிறது. குஜராத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த மோடி எடுத்த இந்த கொள்கை முடிவை செயல்படுத்தியது மட்டுமே தங்கள் பொறுப்பு என்றுதான் இப்போது வன்சாரா கூறுகிறார்.

இது போலவே குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையது மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மத்திய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர். அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது.

செப். 2009-ல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், “இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல் நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தீர்ப்பளித்தது. அது ஒரு போலி மோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் உறுதி செய்தது.

வன்சாரா சோராபுதீன் போலி மோதல் வழக்கு தொடர்பாக 2007-ம் ஆண்டு குஜராத் சிஐடியால் கைது செய்யப்பட்டார். 2012 வரை சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2012-ல் துளசிராம் பிரஜாபதி போலி மோதல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து சாதிக் ஜமால் போலி மோதல் வழக்கு, இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்கு இவற்றிலும் தொடர்புடையதாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

“சோராபுதீன், துளசிராம், சாதிக் ஜமால், மற்றும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்குகளில் இது தொடர்பான கொள்கையை உருவாக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும். அந்த மோதல் சம்பவங்களின் போது அரசியல் தலைமை தொடர்ந்து அதன் ஊக்குவிப்பு, வழி காட்டல், கண்காணிப்பை மிக நெருக்கமாக வழங்கி வந்தது.” என்று முழக்கமிடும் வன்சாரா,

வன்சாரா, மோடி
மரண வியாபாரி மோடியும், விற்பனை பிரதிநிதி வன்சாராவும்.

“யார் போலீசை பாதுகாக்கிறார்களோ அவர்கள் போலீசால் பாதுகாக்கப்படுகிறார்கள். இத்தகைய வழக்குகளில் பரஸ்பர பாதுகாப்பும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும்  போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உள்ள எழுதப்படாத சட்டம். அரசாங்கமும், போலீஸ் அதிகாரிகளும் ஒரே படகில் போகிறார்கள், சேர்ந்து மிதக்க வேண்டும் அல்லது சேர்ந்து மூழ்க வேண்டும். ஒரு தரப்பு இன்னொரு தரப்பை ஏமாற்றி, தான் மட்டும் மிதந்து மறு தரப்பை மூழ்கடிக்க முடியாது, அரசாங்கத்தினாலும் முடியாது, போலீஸ் அதிகாரிகளாலும் முடியாது.” என்று மோடிக்கு மிரட்டலும் விடுத்திருக்கிறார்.

குஜராத்தில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கவோ, அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்யவோ நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட மோடி பாணி வளர்ச்சிப் பணிகளுக்காகவோ, மக்கள் மத்தியில் எழக் கூடிய எதிர்ப்புகளை முடக்கி வைப்பதற்கு “இத்தகைய ‘பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்’ முக்கியமானவை. “நானும் எனது சக அதிகாரிகளும் செய்த தியாகம் மட்டும் இல்லை என்றால், தேசிய அளவில் மோடி தூக்கிப் பிடிக்கும் “குஜராத் வளர்ச்சி மாதிரி” சாத்தியமாகியிருக்காது.” என்கிறார் வன்சாரா. “மோடி இந்தியாவிற்கு தனது கடனை தீர்ப்பதாக சொல்லியிருக்கிறார். முதலில் தனக்காக உழைத்த போலீஸ் அதிகாரிகளுடனான தனது கடனை தீர்க்க வேண்டும்” என கழுத்தில் துண்டை போட்டு முறுக்கியிருக்கிறார்.

மரண வியாபாரி மோடியின் தலைமை விற்பனை பிரதிநிதி இப்போது வாய் திறந்திருக்கிறார். எதிர்க்கட்சிகளின் சதி, பத்திரிகைகளின் நாடகம், தன்னார்வலர்களின் சூழ்ச்சி என்று தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் மோடி, ஹரேன் பாண்டியாவை பேச விடாமல் செய்தது போல, குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்தும் போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா போன்றவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அடக்க முனைவது போல, வன்சாரா போன்ற கையாட்களை மௌனிப்பதற்கு என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

– அப்துல்

மேலும் படிக்க

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

puthiya-jananayagam-september-2013

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  1. “வகுப்பறையைக் கட்டு! வாத்தியாரைப் போடு!” – ஆகஸ்டு 15 அன்று கல்வி உரிமைக்கான போராட்டம்
  2. செல்லாக்காசாகிறது ரூபாய்! – திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை!
  3. ரூபாய் வீழ்ச்சியின் விலையைக் கொடுப்பது யார்?
  4. சிரியா : அடுத்த இராக்?
  5. மணற்கொள்ளையன் வைகுண்டராஜன் : தெற்கத்தி வீரப்பன்!
  6. எதிர்கொள்வோம் !
  7. வாடகைக் கருப்பைகள் : உலகிலேயே முதலிடம் மோடியின் குஜராத்துக்கு !
  8. தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : ஆளும் வர்க்கப் பிரிவுகளுக்கிடையே பொறுக்கித் தின்பதில் போட்டா போட்டி !
  9. டாஸ்மாக்கை மூடவைத்த மக்கள் போராட்டம் !
  10. வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிய வியாக்கியானம் !
  11. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  12. ஈழத்தமிழக் அகதிகள் மூவரையும் நாடு கடத்தாதே – புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
  13. இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு : அம்பானி ஆட்சி! கோதாவரியே சாட்சி!!
  14. போலி சுதந்திரத்தைத் திரைகிழித்து புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்!
  15. வாராக் கடன் : கோட்டு சூட்டு போட்ட கோமான்கள் நடத்திய கொள்ளை!
  16. சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம்: நல்லவர் மன்மோகனின் நயவஞ்சக முகம்!
  17. அட்டைகளின் ஆட்சி! பட்டினிச் சாவுகள்!!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

தங்க மீன்கள் : ஆனந்த யாழை கேட்பதற்கு முயற்சி செய்வோம் !

53

சில படங்கள் விமரிசிக்க தெரியாததால் இரசிக்கப்படுகின்றன. சில படங்களோ இரசிக்கத் தெரியாததால் விமரிசிக்கப் படுகின்றன. அதே நேரம் ஒரு படம் பெறும் பாராட்டு எல்லாம் உண்மையிலேயே ரசிப்பதிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பதில்லை. உரையாடலும் கருத்துருவாக்கமும் சம்பிரதாயமான சடங்குகளாக கற்றுத் தரப்படும் காலமிது. ஆனால் கூர்மையான விமரிசனமும், நுட்பமான ரசனையும் இரு துருவங்கள் அல்ல. ஒரு நேர்த்தியான கலையை அனுபவிக்கத் தெரிந்தோரே நேர்த்தியற்றதை சரியாக ஆராயவும் முடியும்.

சிறுமி செல்லம்மாவின் குளத்தில் மின்னும் தங்கமீன்கள் நம் கண்களுக்கு தெரியவில்லை. ஒரு குழந்தையின் உலகோடு சமகால வாழ்க்கையில் நீந்திக் கொண்டே பெரியவர்களின் மூடுதிரையை அகற்றிக் காட்டுகிறது தங்க மீன்கள். அதை வரித்துக் கொள்ள தடை போடும் நமது ரசனையை மாற்றிக் கொள்ள முடியுமா? முயன்று பார்ப்போம்.

________

தங்க மீன்கள்ரு சில காட்சிகளிலேயே செல்லம்மாவின் ஊரும், குளமும், மலையும், ரயிலும், வீடும், பகலிரவும், பள்ளியும், மனிதர்களும் நமக்கு மிகவும் பழக்கமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். கதையும் காட்சியும் அவ்வளவு வேகமாக நம்மை உள்ளிழுத்துக் கொள்கின்றன. பசுமையை விதவிதமான வடிவில் போர்த்திக் கொண்டிருக்கும் அந்த ஊரில் கல்யாண சுந்தரம் எனும் கல்யாணியின் பொருளியல் வாழ்க்கை வறண்டு போயிருக்கிறது. இடையிடையே அந்த வறட்சி நிலை குலைய வைத்தாலும் மகளோடு மீட்டும் நேரத்தில் அவன் அந்த ஊரின் பசுமையை விஞ்சுகிறான். மகளின் மகிழ்ச்சி தவிர அவனுக்கு வேறு தேவைகளோ கடமைகளோ முக்கியமில்லை.

அதனால் அப்பா மகள் உறவும் பாசமும்தான் இப்படத்தின் மையக் கதை என்று பலரும் நம்புகிறார்கள். காட்டப்படுவதை உணர்ந்த விதத்திலும், பழக்கப்படுத்தப்பட்ட உணர்ச்சியிலும் அவர்கள் அப்படி புரிந்து கொண்டாலும் கதையின் கரு அதுவோ அல்லது அது மட்டுமோ அல்ல. மகளுக்கான முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை, மகளோடு இருக்கும் அப்பாக்கள் பாக்கியசாலிகள் முதலான படத்தின் (கொஞ்சம் அபத்தமான) விளம்பர வாசகங்களும் கூட கதையை அப்படித்தான் தந்தை மகள் சட்டகத்திற்குள் திணிக்கின்றன.

சென்டிமெண்டை தவிர்த்து விட்டு எந்த ஒரு தமிழ் சினிமாவும் அளவிடப்படுவதில்லை என்பது கூட இந்த மயங்குதலை தோற்றுவிக்கலாம். இதனால் படத்தில் அப்பா மகள் பாசம் இல்லை என்பதல்ல. அது இவ்வளவு அதிகமாகவும் கொஞ்சம் மிகையாவும் இருப்பது ஏன் என்பதே முக்கியம்.

மூன்றாம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் செல்லமா ‘மந்தமான’ ஒரு சிறுமி. கற்றுக் கொள்வதில் சக மாணவர்களோடு மிகவும் பின்தங்கி இருப்பதாக வகுப்பு ஆசிரியைகளால் அவ்வப்போது எரிச்சலுடன் திட்டப்படுகிறாள். அந்த கணிப்பு பள்ளியோடு முடியாமல் வீடு வரை செல்வாக்கு செலுத்துகிறது. கல்யாணியின் பெற்றோரும், மனைவியும் கூட செல்லம்மா அப்படி இருப்பதை வைத்து வருத்தமோ, கோபமோ, எரிச்சலோ அடைகிறார்கள். இயலாமை அல்லது விதி என நினைத்து நொந்து கொள்ளவும் செய்கிறார்கள்.

தனது மகள் கற்றுக் கொள்வதில் குறைபாடு உடையவள் என்பதை கல்யாணி ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரம் அதை ஒரேயடியாக மறுக்கும் வண்ணம் நம்பிக்கையூட்டும் விதமாக வேறு எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை. அந்த தனியார் பள்ளிதான் தனது மகளுக்கு சிறப்பான கல்வி கொடுக்க முடியும் என்று ஆரம்பத்தில் அவனும் நம்புகிறான். இந்த முரண்பாட்டில் மற்றவரால் மந்தமானவள் என்று ஒதுக்கப்படும் மகளோடு கூடுதல் பாசத்துடன் பழகுகிறான். அவளது குழந்தை உலகிற்கு சென்று கதைகள் சொல்கிறான். சுற்றிக் காட்டுகிறான். விருப்பப்படும் அனைத்தையும் செய்கிறான். அவற்றில் சில்வர் மேன் போல சில கோமாளித்தனங்களாக இருந்தாலும் சரி.

அதே போல செல்லம்மாவும் தனக்கு நெருக்கமான மொழியில் பேசி, தான் விரும்பிய உலகை தேடிக் காட்டும் அப்பாவை மற்ற எவரையும் விட அதிகமாகவே விரும்புகிறாள். மற்றவரால் புறக்கணிக்கப்படும் மகளுக்கு கூடுதல் கவனம் கொடுக்கும் தந்தையும், மற்றவர்கள் செய்ய மறுத்ததை கூடுதல் அக்கறையுடன் செய்யும் தந்தையோடு மகளும் இயல்பாகவே அதிக பிணைப்புடன் பழகுகிறார்கள். அதனால் இது வெறும் தந்தை மகள் உறவு மட்டுமல்ல.

செல்லம்மாளாவது பரவாயில்லை, கொஞ்சம் படிப்பதில் சுணக்கம் உடையவள் என்பதோடு சமூகம் நிறுத்திக் கொள்கிறது. ஆனால் மன வளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனச் சிதைவு அடைந்தவர்கள், முதுமையால் படுத்த படுக்கையில் இருப்போர்கள் என்று சமூகம் ஒதுக்க நினைக்கும் மனிதர்களைக் கூட யாராவது ஒருவர் எப்போதும் தோளில் சுமந்துதான் வருகிறார்கள். குறிப்பாக மனவளர்ச்சி அற்ற குழந்தைகளை வளர்ப்போர் பதிலுக்கு அன்பையோ, பாசத்தையோ கூட தொட்டறியத்தக்க விதத்தில் பெற முடியாது. ஆனாலும் நமது நாகரீக கண்களைத் தாண்டி அந்த குழந்தைகள் அவர்களுடைய மொழிகளிலும் நடத்தையிலும் தம்மை பராமரிக்கும் பெற்றோரையோ காப்பாளரையோ அன்பு காட்டக் கூடும்.

தங்க மீன்கள்
இயக்குனர் ராம் கல்யாணியாக

வளர்ந்து ஆளாகும் வரை குழந்தைகளும் கூட இந்த அறிவறியா உலகில் இருந்தே வருகிறார்கள். காட்சிகளும், கற்பனைகளும், போலச் செய்தலும் மூலம் சுற்றுச்சூழலை உற்று நோக்கும் குழந்தைமையை புரிந்து கொள்வது ஒரு கலை. இதற்கு பெரிய படிப்போ, இல்லை ஆழ்ந்த அறிவோ தேவையில்லை என்றாலும் நிறைய பொறுமையும் குழந்தைகளோடு சலிப்பின்றி உரையாடும் அக்கறையும் வேண்டும். கிடைத்த சுற்றுச்சூழலை காட்சிகளாகவும் கதைகளாகவும் இணைத்து இயற்கையையும், சமூகத்தையும் அவற்றின் இயக்கத்தையும், மாற்றத்தையும் உணர்ச்சி நயங்களோடு பாடுவது போல பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

மூத்தோரெல்லாம் அதிகாரிகள், இளையோரெல்லாம் அடிமைகள் எனும் நமது நிலவுடமைப் பண்பாட்டில் காயடிக்கப்படும் எவரும் இத்தகைய குழந்தைமையை கண்டு குதூகலிப்பது கடினம். எல்லாக் குழந்தைகளையும் பார்பி பொம்மை போல ஒரு படித்தானதாக மாற்ற நினைக்கும் முதலாளித்துவ உலகிலும் குழந்தைமை ஒரு உணர்ச்சியற்ற சரக்கு போலவே கையாளப்படுகிறது. வறுமைக்கு காரணமான வர்க்க நிலையும் கூட குழந்தைகளோடு நேரம் செலவிடுவதை தீர்மானிக்கிறது.

உழைக்கும் வர்க்கமும் ஏழைகளும் தமது குழந்தைகளுக்கென்று தனிச்சிறப்பான வாழ்க்கையையோ இல்லை நேரத்தையோ வழங்கிவிட முடியாது. சித்தாளாக செல்லும் பெண் செங்கலை அதிக நேரம் சுமப்பது போல பிள்ளைகளைச் சுமக்க முடிவதில்லை. கட்டிடங்கள் அழகாக வளருவது போல அந்தக் குழந்தைகளின் உலகம் ஆசை ஆசையாய் நகருவதில்லை. மறுபுறம் நடுத்தர வர்க்கத்திற்கு தனது குழந்தைகளோடு செலவிட நேரம் இருந்தாலும் அவர்கள் வெற்றி பெறவேண்டிய ஒரு பந்தயக் குதிரையின் பயிற்சியாளனாகவே இருக்க விரும்புகிறார்கள். குதிரை வேகமாக ஓடுவதற்கு ஏராளமான பணத்தை செலவழிப்பதே தேவை என்று கருதுகிறார்கள்.

இவர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்தாலும் அது கத்திரிக்காயையும், காண்டா மிருகத்தையும் ஆங்கிலத்தில் சொல்லி அர்த்தமற்ற என்சைக்ளோ பீடியாவாக மாற்றும் குற்றச் செயலாகவே இருக்கிறது. குழந்தைகளை சித்திரவதை செய்யும் இந்தக் கொலைக் கலையை பெற்றோருக்கு சொல்லிக் கொடுப்பவை தனியார் ஆங்கில வழிப் பள்ளிகள். அந்த வகையில் பள்ளிகளின் நீட்சியாக வீடுகளும், ஆசிரியர்களின் அசிஸ்டெண்டுகளாக பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

இறுதியில் குழந்தைகளை வீடு, பள்ளி இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு சித்திரவதை செய்கின்றது. தோற்றத்தில் ஒரு போலவே இருக்கும் W, M இரு எழுத்துக்களை மாற்றி வரைகிறாள் என்று செல்லம்மாளை கடிந்துரைக்கிறாள் வகுப்பு ஆசிரியை. அதற்காகவே அவளை டபிள்யூ என்று பட்டப்பெயர் சூட்டி அழைக்குமாறு மற்ற குழந்தைகளுக்கு கட்டளையிடுகிறாள். ஆட்டமும், பாட்டமும், அபிநயங்களாகவும் இருக்கும் செல்லம்மாவுக்கு ஒரு ஆங்கிலப் பாடலுக்கு ஆடத் தெரியவில்லை என்றும் விரட்டுகிறாள் அந்த ஆசிரியை.

“அயம் பார்பி கேர்ள்” எனும் அந்தப் பாட்டிற்கு ஆடத்திணறும் செல்லம்மாவை “ஒரு குடம் தண்ணியெடுத்து” பாடலுடன் ஆடும் சிறுமிகள் ஊரில் வரவேற்கிறார்கள். தனது மகளுக்கா ஆடத்தெரியாது என்று ஆவேசத்துடன் வெள்ளேந்தியாக ஆசிரியையிடம் சண்டை போடுகிறான் கல்யாணி. நாமம் போட்ட பள்ளி தலைமையாசிரியரோ ஆயுள் தண்டனை கைதிகளின் இரக்கமற்ற வார்டன் போல குத்துகிறார். சகித்துக் கொண்டு கோபத்திற்கு மன்னிப்பு கேட்டு இறைஞ்சுகிறான் கல்யாணி.

தனது மகள் சரியானவள், இந்த பள்ளிதான் தவறானது என்று கல்யாணி உணரத் துவங்குகிறான். நல்லாசிரியர் விருதுடன் ஓய்வு பெற்ற அவனது தந்தை இதற்கு நேரெதிர். அந்த தனியார் பள்ளியில் படிக்கும் தகுதி இல்லை என்றாலும் பேத்தியை பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டு படிப்பு சொல்லித் தருகிறார்கள் என்றே அவர் கருதுகிறார். இதை ஏதோ கதை, கிதை சொல்லி மகளின் வாழ்வை நாசமாக்குகிறான் கல்யாணி என்பதை தந்தையின் அதிகாரத்துடனும் அவர் சொல்கிறார்.

தங்க மீன்கள்
படக்குழுவினர்

ஆசிரியர் பையன் என்றாலும் கல்யாணியே அப்படித்தான் ‘தற்குறி’யாக படிப்பைத் தொலைத்தவன். அவனது தங்கை உயர் கல்வி முடித்து ஆஸ்திரேலியாவிற்கு வாக்கப்பட்டவள். அவனோ உள்ளூரில் எவர்சில்வர் பாலீஷ் பட்டறையில் கரித்துகள் அலங்காரத்துடன் பிழைக்கிறான். சொல்லிக் கொள்ளுமளவு சம்பளமில்லை என்றாலும் மகளுடன் நேரத்தை செலவழிக்க அனுமதிப்பதால் மட்டுமே அந்த வேலையை விரும்புகிறான். காரும், சொந்த வீடும், ஓய்வூதியமும் இருக்கும் அப்பாவின் பராமரிப்பில்தான் கல்யாணியின் குடும்பமும் வாழ்கிறது. இந்த திரிசங்கு வாழ்வில் சிக்கிக் கொண்டவள் கல்யாணியின் மனைவி வடிவு.

படிப்பு வராத மகள் குறித்தும், வருமானம் இல்லாத கணவன் நிமித்தமும் கவலைப்படுவதிலேயே அவளது நாள் கழிகிறது. இப்படித்தான் பள்ளியின் விரிவாக்கமாக வீடும் செல்லம்மாளை துரத்துகிறது. குயிலின் இனிமையோடு பாடித்திரிய விரும்பும் அந்த சிட்டுக்குருவியை உயர் ரக பந்தயக் குதிரை போல பயிற்சி அளித்தால் தாங்குமா?

சிட்டுக்குருவியை சிறை பிடிக்க நினைக்கும் பள்ளி குறித்து கல்யாணிக்கும் தந்தைக்கும் சண்டை வருகிறது. வருமானமில்லாத நிலையில் சுயமரியாதையும் கொஞ்சம் பணத்தையும் ஈட்ட வேலை தேடி கொச்சி செல்கிறான். செல்பேசியில் மகளுடனான உரையாடலை தொடர்கிறான். ஆனாலும் பள்ளி சித்திரவதையின் நீட்சியாகவும் அதிலிருந்து காப்பாற்றுவதற்கு அப்பா வரவில்லை என்ற ஏக்கத்திலும் செல்லம்மா தற்கொலை செய்து கொண்டு தங்க மீனாக மாற முடிவு செய்கிறாள்.

வீட்டில் விட்டுச் சென்ற குழந்தையை எல்லோரும் சேர்ந்து கொலை செய்து விட்டீர்கள் என்று குமுறும் கல்யாணி இனி அந்த சித்திரவதை செய்யும் தனியார் பள்ளி தேவையில்லை என்று அரசு பள்ளியில் சேர்க்கிறான். அரசு பள்ளியில் ‘அறிவு’ வருகிறதோ இல்லையோ குறைந்த பட்சம் குழந்தைகளை துன்புறுத்த மாட்டார்கள் என்கிறான். ஆனாலும் அவனது அப்பாவும், தங்கையும் அரசுப் பள்ளிகளோடு வாழ்ந்து ஆளானவர்கள்தான் என்று நினைவு படுத்தவும் செய்கிறான்.

இதுதான் கதையின் சுருக்கம் என்றாலும் இதுவே முழுக்கதை அல்ல. வைரம் போன்ற சிறுகதைகள், கவித்துவமான காட்சிகள், குறியீட்டில் மறையும் விமரிசனங்கள், நினைவில் நீங்காத கவிதைகள் என்று இந்தப் படமும் கதையும் பல தளங்களில் விரிகின்றது. அதில் பத்மபிரியா நடித்திருக்கும் எவிட்டா மிஸ் அத்தியாயம் ஒரு கவிதை.

இந்தப் படத்தின் பாத்திரங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் நடிப்பை இரசித்து விட்டு அவர்களது காட்சிகளை அதிகப்படுத்தியதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். ஒரு அடிப்படைக் கதையின் பாத்திரங்களுக்கு உயிரூட்ட வந்தவர்களின் நடிப்பினால் கதை இன்னும் செழுமைப்படுத்தப்படுகிறது என்பது மண்டை வீங்கி படைப்பாளிகளால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதற்கு தன்னிலிருந்து நீங்கி மற்றதை ரசிக்கும் கற்றாய்ந்த பணிவு வேண்டும். சினிமா எனும் கூட்டு முயற்சிக் கலைக்கு இது இன்னும் பொருந்தும்.

ஆனாலும் நாயகனது முகத்தை விட்டு நீங்காத திரைக்கதை, அவனுக்கு பொழுது போக்க ஒரு நாயகி, அவனது வீரத்தை வெளிப்படுத்த ஒரு வில்லன், குஷிப்படுத்த ஒரு காமடியன், அவனுக்காகவே இசை, நடனம், காமரா என்று நாயகன் பின்னால் உயிருள்ளவையும், உயிரற்றவையும் அணிவகுத்து ஓடும் தமிழ் சினிமாவில் நாயகனை தவிர்த்து எதற்கும், எவருக்கும் மதிப்பில்லை.

நா முத்துக்குமார்
பாடலாசிரியர் நா முத்துக்குமார்

ஆனால் தங்கமீன்களில் குறைந்த பட்சம் ஒரு பத்து பாத்திரங்களாவது நமது சிந்தனைக்குள்ளே நுழைந்துவிட்டு நீங்காதபடி செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

இதற்காக ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பல காட்சிகளோ இல்லை பல பக்க வசனங்களோ இருந்திருக்குமோ என்று பார்த்தால் அப்படி இல்லை. ஒரு சில வார்த்தைகள், வார்த்தைகளை மீட்டி பொருள் விரிக்கும் காட்சி அமைப்புகள், நடிகர்களின் இயல்பு மாறாத துல்லியமான உடல் மொழி எல்லாம் சேர்ந்து மையக்கதையின் ஓட்டத்திற்கு அழுத்தமான பாதையை அமைத்து தருகின்றன. செல்லம்மாவின் தோழி ‘பூரி’ நித்ய ஸ்ரீ, வகுப்பு ஆசிரியை ஸ்டெல்லா மிஸ், அம்மா வடிவு, எவிட்டா மிஸ், அவளது கணவன், கேரளத்து நண்பன், பள்ளி தலைமையாசிரியர், கல்யாணியின் தந்தை அனைவரும் நடிப்பவர்களாகவே தெரியவில்லை. செல்லம்மாவின் உலகில் வாழும் நிஜ மாந்தர்களாகவே வருகிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல கதையின் முன்னுரையும், முடிவுரையும், இடைவெளியுமாய் இருக்கின்ற பசுமை நீர் நிரம்பிய குளம், உணர்ச்சிகளை நிறுத்துமாறோ, மறக்குமாறோ, திருப்புமாறோ, மீட்குமாறோ செய்யச் சொல்லும் ஓடும் ரயில், அன்பிற்கு நிகராக இந்த பரந்து விரிந்த மலையும் காற்றும் மேகங்களும் போதுமா என்று சவால் விடும் அச்சன் கோவில் மலை முகடு, செல்லம்மாவின் அறை, பள்ளிக்கூடத்தின் கடிகாரத்தில் இருக்கும் குயில் பொம்மை, அப்பாவின் ஓய்வறியா சைக்கிள், கொச்சின் படகு இல்லம் என்று இயற்கையும், பொருட்களும் கூட இந்தக் கதையின் மாந்தர்களை உரிய வெளிச்சத்தில், தருணத்தில் காட்டுகின்றன.

மாவட்ட ஆட்சித் தலைவர் மரணமடைந்ததால் பள்ளிக்கு விடுமுறை என்று அறிவிக்கும் போது செல்லம்மாள் கை தட்டி வரவேற்கிறாள். அதற்காக ஆசிரியைகளின் அறையில் முட்டி போட்டு தண்டிக்கப்படுகிறாள். புரியாத மரணத்திற்காக வரும் மகிழ்ச்சியான விடுமுறையை வரவேற்கும் அந்தக் குழந்தையிடம் “உனக்கு மிகவும் பிடித்தவர் யார்?” என்று கேட்டு செல்லம்மா பதில் கூறியதும் “உன் அப்பா இறந்தாலும் இப்படித்தான் கொண்டாடுவாயா” என்று குரூரமாக கேட்கிறாள் ஆசிரியை. அந்த இடத்தில் குழந்தையைக் காப்பாற்றும் தேவதையாக அறிமுகமாகிறாள் எவிட்டா மிஸ்.

இவ்வளவிற்கும் எவிட்டா மிஸ் நமது செல்லம்மாளுக்கு எந்த வகுப்பையும் எடுக்கவில்லை. என்றாலும் அந்தச் சிறுமியின் மனங் கவர்ந்த மிஸ் அவள்தான். திருமணம் காரணமாக எவிட்டா மிஸ் வேலையை விட்டு நீங்கி விட்டாள் என்று அப்பாவிடம் வருத்தப்படும் செல்லம்மாவிற்கு அந்த மிஸ்ஸிடம் பேச வேண்டும் என்று ஆசையிருக்கிறது.

அலைந்து திரிந்து எவிட்டா மிஸ் வீட்டைக் கண்டுபிடித்து கல்யாணி செல்லும்போது எரிச்சலடனும், சற்று சந்தேகத்துடனும் எவிட்டாவின் புதுக் கணவன் எதிர் நிற்கிறான். நள்ளிரவில் வந்த காரணம், குழந்தையின் ஆசை, தலை விரி கோலமாக நிற்கும் எவிட்டா தயங்கியபடியே செல்லம்மாளிடம் பேசுவது, இறுதியில் அந்த கோபக்கார கணவனே கல்யாணியை நட்புடன் வழியனுப்பி வைத்தது, பிறகு ஒரு காட்சியில் கணவன் இருக்கும்போதே கல்யாணியுடன் எவிட்டா பேசுவது, ” நான் இன்னும் கொஞ்சம் நல்ல மிஸ்ஸாக இருந்திருக்கலாம்” எல்லாம் ஒரு சில மணித்துளிகளில் வந்து போனாலும் அவை எழுப்பும் காட்சியின் வீரியம் காலத்தை தாண்டி நிற்கிறது.

ஒரேயடியாக கெட்டவன் அல்லது நல்லவன் என்று நாயகத்தனத்தின் பின்னே தறிகெட்டு ஓடும் தமிழ் சினிமாவில் ஒரு பாத்திரத்தையோ இல்லை ஒரு உணர்ச்சியையோ இப்படி பாலன்ஸ் செய்து இருமைகளோடு காட்டுவது அரிது. முக்கியமாக கதையின் மைய உணர்ச்சியோடு அதை இசைக்கத் தெரியும் கமகம் வேண்டும். இங்கே இயக்குநர் அதை லாவகமான நேர்த்தியுடன் செய்கிறார். இல்லையென்றால் இவை வெறுமனே நல்லொழுக்க உபதேசங்களாக காதை அறுத்துவிடும்.

அதை இப்படியும் யோசித்துப் பார்க்கலாம். ஒரு மனிதனிடம் நல்லது, கெட்டது இரண்டும் இருந்தாலும் அவனது கெட்டதை மட்டும் சொல்லி விரட்டுவதால் எந்தப் பலனுமில்லை. மாறாக அவனிடம் இருக்கும் ஒரு சிறிய நல்லதையாவது பற்றிக் கொண்டு மாற முயலும் ஆளுமையாக காட்டுவது சமூக நேயத்தை பொதுவான மனிதர்களிடையே துளிர்விடச் செய்யும்.

மக்கள் மோசமானவர்கள், இளைஞர்கள் ஊர் சுற்றிகள், பெண்கள் அடிமைகள், குழந்தைகள் பிரச்சினைகள், இலக்கியம் அழிந்து விட்டது என்று சலிப்புடன் வாழ்வதால் நாம் எதை அடையப் போகிறோம்? ஒரு மனிதனிடம் அவனுக்கு பிடித்ததை, தெரிந்ததை வைத்து சமூக நீரோட்டத்திற்குள் கொண்டு வருவதற்கு பொறுமையும் வேண்டும், திறமையும் வேண்டும். இதற்கு நேரெதிராக பயணிக்கும் தமிழ் சினிமாவிலிருந்து மாறுபடும் தங்க மீன்கள் அத்தகைய மாறத்துடிக்கும் நேயத்தை பனித்துளிகளாய் விடியலில் நம்பிக்கையுடன் விதைத்துச் செல்கிறது.

இதனால் எவிட்டா மிஸ்ஸின் கணவன் கூட இந்தப் படத்தில் நமக்கு நட்புடன் கூடிய நெருக்கத்தில் வர சம்மதம் தெரிவிக்கிறான். எவிட்டா மிஸ் எனும் அழகான, அன்பான கிளி ஒரு குரங்கிற்கு வாக்கப்பட்டிருக்கிறது என்ற ஆரம்பக் காரணத்திற்கு ஒரு ஆறுதலும் கிடைக்கிறது. எவிட்டாவைப் போன்ற ஆயிரக்கணக்கான பாமரர்களுக்கு தகுதியான வாழ்க்கையும், மகிழ்ச்சியும் வேண்டும் என்ற நமது விருப்பம் கடைத்தேறுவதற்கு வழியில்லைதான். கிடைத்தனவற்றில் வாழ்ந்து கொண்டு இருப்பனவற்றை எதிர் கொண்டு போராடுவதில்தான் விரும்பியவற்றை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது எப்படிப் பார்த்தாலும் சாதாரணமான ஒன்றில்லை.

கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கும் ஆஸ்திரேலிய தங்கச்சி ஒரு பணத்திமிர் கொண்டவளாக இருப்பாளோ என்றுதான் தமிழ் சினிமாவில் பயிற்சி எடுத்திருக்கும் நமக்கு தோன்றுகிறது. செல்லம்மாள் ஏதோ கிறுக்குத்தனமாய் ஆசைப்பட்டாள் என்பதற்காக 25,000 ரூபாய் கொடுத்து நாய் வாங்குவதா, அதற்கு ஏதாவது தங்கம் வாங்கி வைத்தாலாவது பின்னர் பயன்படும், அதனால் பணம் தரமாட்டேன் என்று அண்ணனிடம் கொஞ்சம் சீற்றத்துடன் பேசுகிறாள் அவள். சரி, உன் பணம் வேண்டாம், நானே பார்த்துக் கொள்கிறேன், உன் பையனை மாப்பிள்ளை என்று அழைத்ததால் சம்பந்தியாவானேன்று பயந்து விடாதே என்று விடைபெறும் கல்யாணி, தங்கையின் மகனுக்கு ஒரு சாக்லெட்டை கொடுக்கிறான்.

அடுத்த ஷாட்டிலேயே தனது அண்ணன் கொடுத்த சாக்லேட்டில் தனக்கும் பங்கு வேண்டுமென்று குழந்தை போல குழந்தையிடம் மல்லுக் கட்டுகிறாள் சாக்லேட்டின் தலைநகரங்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கும் தங்கை. அங்கே நிற்கிறார் இயக்குநர். பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகளோடு நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் எளிய மனிதர்களை சூழலோடு மாறுபடாமல் இப்படி இதயத்திற்கு நெருக்கமாக காட்டியிருப்பது கதையின் கருவிற்கு அளப்பறிய உணர்ச்சிகளுடன் சக்தியேற்றுகிறது.

கிட்டத்தட்ட வில்லி போல வகுப்பறையில் நடந்து கொள்ளும் ஸ்டெல்லா மிஸ் கூட அவளுடைய சொந்த விருப்பத்தின் பெயரிலா அப்படி நடந்து கொள்கிறாள்? “கம்மி சம்பளம், வேலைச்சுமை, அவங்களும் என்ன செய்வாங்க?” என்று தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கொண்டு உறுமும் வேலையை சம்பளத்திற்காக செய்யும் ஜீவன்களின் ‘நியாயம்’ கூட எவிட்டா மிஸ் மூலமாக நமக்கு சொல்லப்படுகிறது. இதனால் வெறுத்தே ஆக வேண்டிய நபர்களையும் இயக்குநர் அப்படி காட்டிவிடுவாரோ என்று பதறத் தேவையில்லை. நாமக்கட்டி தலைமையாசிரியரை பார்த்தாலே அடித்து விட வேண்டும் என்று தோன்றுவதில் எந்தக் குறையுமில்லை.

யுவன் சங்கர்ராஜா
இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா

இந்தப் படம் அப்பா, மகள் எனும் ஆண்களின் கோணத்தில் சொல்லப்படுவதால் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பெண்களை லேசாக மதிப்பிடுவது என்ற வாதம் கலைப்பூர்வமாகவும், கருத்து வகையிலும் இங்கே அபத்தமானது. ஒன்றைப் பற்றிச் சொல்லும்போது, ஒன்றின் வழியாக மற்றவைகளை அணுகும் போது மற்றதற்கு இங்கே இடமில்லையே என்று கேட்பது சரியல்ல. ஏனெனில் மற்றதின் மறைபொருளையும் இந்த ஒன்று கருவில் கொண்டிருக்கிறது எனும் போது நாம் அசட்டுக் கேள்விகளை அல்ல ஆழ்ந்த ரசனையை கைப்பெற வேண்டும் என்கிறோம்.

முதலில் சொன்னது போல செல்லம்மா ஒரு ‘மந்தமான’ சிறுமி. அவளை கல்யாணி தவிர யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதோடு அந்த சிறுமியிடம் பள்ளி அறிவை புரிந்தே ஆகவேண்டும் என்று துன்புறுத்தவும் செய்கிறார்கள். இதில் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு, அவர்களை இயக்கும் தனியார் மெட்ரிக் பள்ளியும் உண்டு. ரத்த உறவிலும், எதிர் பால் கவர்ச்சியிலும் சொல்லப்பட்டிருந்தாலும் இந்த அப்பா மகள் உறவு ஒரு வகையில் எளியோரை, ஒடுக்கப்பட்டோரை ஆதரிக்கும் நபர்களைப் பற்றியது. அதை ஒரு குறியீடாக நீங்கள் எடுத்துக் கொண்டால் அம்மா மகன், தந்தை மகன், நட்பு, தோழமை என்று விரித்துக் கொள்ளலாம். அல்லது இந்தப்படத்தை அதன் பொருளில் ரசிக்கும் பெண்கள் ஆண்களைப் போல உணர மாட்டார்கள் என்பதல்ல. ஒருவேளை பெண்கள் என்பதால் அவர்கள் இன்னும் கூர்மையாக, வலிமையாகக் கூட புரிந்து கொள்ளலாம்.

கல்யாணியின் மனைவியாக வரும் வடிவு கூட “நானும் செல்லம்மா போல்தானே” என்று சோர்வுடன் பேசுகிறாள். நள்ளிரவில் கணவனை அழைத்துக் கொண்டு ரயில் பாதையில் அமர்ந்து பேசுகிறாள். கூட்ஸ் வண்டி குறுக்கிடுகிறது. வேறு பல பிரச்சினைகளும் அன்றாடம் குறுக்கிடுகின்றன. தற்குறியாக இருக்கும் கல்யாணி 12-வது வகுப்பு படிக்கும் போது வடிவை இழுத்துக் கொண்டு வருவதாக பெற்றோரால் குத்திக் காட்டப்படுகிறான். இலை மறை காய் மறையாக தனது மகளின் மந்த கதிக்கு தான்தான் காரணமோ என்று வடிவு தூற்றப்படுகிறாள். இடையில் சுய பொருளாதாரமற்ற கணவனது நிலை சுய மரியாதையையும் தருவதில்லை.

சண்டை போட்டுவிட்டு வெளியேறச் சொல்லும் கல்யாணியோடு வெளியேறும் துணிவு அவளுக்கில்லை. ஆனால் அப்பாவின் கல்விக் கடனைத் தீர்க்க பள்ளியில் செல்லம்மா செய்யும் சின்ன சின்ன அர்த்தமற்ற திருட்டுக்களின் மூலம் அவளை திருடி என்று விளையாட்டாய் கேலி செய்யும் மாமனாரின் பேச்சை ரசிக்கவில்லை. அப்படி அழையாதீர்கள் என்று சீறுகிறாள். இதுதான் வடிவு. படிப்பதற்கே தள்ளாடும் தனது குழந்தை இள வயதில் வயதுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி அவளை நிலை குலைய வைக்கிறது. இவையெல்லாம் வழக்கமான தாய்மார்களின் கவலை என்றாலும் கணவனுக்கும் மகளுக்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே தத்தளிக்கும் அந்த அபலையின் நிலை ஒரு வேளை வளர்ந்த செல்லம்மாவின் கதையோ !

தான்தான் மகனது குடும்பத்தை பராமரிக்கிறோம் என்று நிலை மறந்த நேரங்களில் பேசும் தந்தைகூட கொச்சி சென்றிருக்கும் மகனைப் பற்றி “அவன் ரொம்ப நல்லவன், கொஞ்சம் கெட்டவனாகத்தான் திரும்பட்டுமே” என்று அழுகிறார். தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அளவு கோலில் தனது பேத்தியை வளர்க்க நினைக்கும் அந்த நல்லாசிரியரின் உறவும் கூட இருவேறான எதிர்மைகளின் மோதலில் அமைதியாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே அப்பா மகள் தாண்டி, அம்மா மகள், தாத்தா மகள், ஆசிரியை மாணவி, பூரித் தோழியுடன் மகள் என்று பல்வேறு உறவுகளின்  பாதையில் எளிய மனிதர்களின் வாழ்வை நமக்கு உணர்ச்சிகரமாக அறியத்தருகிறது தங்க மீன்கள். அந்த வகையில் ஒரு கதையை ஒரு வாக்கியத்தில் கூற முடியுமென்றால் அதை ஒன்றரை மணிநேர சினிமாவாக எடுக்க வேண்டிய தேவை கிடையாது எனும் இயக்குநரின் பார்வை நியாயம் பெறுகிறது. அதே நேரம் இந்தப் படத்தின் விளம்பர வாசகங்கள் மூலம் அந்த நியாயத்தை அவரே மீறியும் இருக்கிறார்.

தங்க மீன்கள் செல்லம்மாஒருவேளை ஒரு சினிமாவை ஒரு வாக்கியமாக சொல்ல முடியாது என்றாலும் ரசிகர்களின் பார்வையில் ஒரு உணர்ச்சியாக, உறவாக சொல்ல வேண்டிய தேவை இருக்குமோ? இந்தப் படத்தை சாதாரண உழைக்கும் மக்கள் உள் வாங்கிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கிறது. காரணம் அவர்கள் (மட்டுமா) மசாலா ரசனையில் சிக்கியிருக்கிறார்கள் என்பதல்ல. அவர்களது வாழ்க்கையில் இத்தகைய மிகையுணர்ச்சி அல்லது அதிக கவனிப்பு அப்பா மகள் பாசத்திற்கு இடமில்லை. ஒரு வேளை அது இருந்தாலும் இந்தப் படம் போலவும் இருப்பதில்லை. அது வேறு ஒரு தளம்.

அதே நேரம் இதைப் பார்க்கும் நடுத்தர வர்க்கமும் இதை எளிமைப்படுத்தப்பட்ட அப்பா மகள் பாசமாகவே எடுத்துக் கொள்ளும். மகள்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று கூட அவர்கள் உறுதி ஏற்கலாம். ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மகள்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுவார்களா என்று கேட்டால் முடியாது என்பார்கள். அதன்படி இவர்கள் தங்கள் மகள்களோடு நேரம் செலவழிப்பது என்ன? சினிமா, பீச், கேளிக்கை பூங்கா சுற்றுவது அல்லது சோனி பிளே ஸ்டேசன், ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி போன்றவற்றை திட்டாமல் வாங்கிக் கொடுப்போம் என்று முடிவு செய்வதா?

மாறாக, குழந்தைகளின் உலகில் மாயக் கதைகளோடு உறவாடுவது எப்படி, அந்தக் கதைகளை இயற்கை, சமூகக் காட்சிகளின் உதவியோடு காட்டுவது எங்ஙனம், திருத்தமான அறிவும் கல்வியும் குழந்தைகளுக்கான மொழியின் விருப்பத்தில் இசைப்பது எவ்வாறு என்பதை எத்தனை பேர்கள் உள்வாங்கிக் கொண்டார்கள்?

தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மகள்களோடு எந்த அப்பனும் தங்கமீன் பாணி உறவு வைத்திருக்க முடியாது என்று இந்தப் படம் அழகியலோடு ஆணையிட்டு சொல்வது எத்தனை பேருக்கு உரைக்கும்? அரசுப்பள்ளிகள் பந்தயக் குதிரைகளை வளர்க்கும் திறமையற்றவை என்றாலும் சிட்டுக்குருவியின் சுதந்திரத்தோடு யானை பலம் கொண்ட சமூக அனுபவத்தையும் அறிவையும் கற்றுத் தரும் என்பதை ஏற்பவர்கள் எத்தனை பேர்? தெரியவில்லை.

இந்தப் படம் திரையரங்கில் புறக்கணிக்கப்படுவதை வைத்தும் விமரிசனங்களில் முகதுதிக்காக பாராட்டிவிட்டு ஒதுக்கப்படுவதையும் வைத்துப் பார்த்தால் நமது சந்தேகங்கள் நியாயமற்றவை அல்ல. நாம் என்ன படம் எடுக்கிறோம் என்பதோடு யாருக்கு எடுக்கிறோம் என்பதும் முக்கியமானது. தனது கதையை செதுக்கிய இயக்குநர் இந்த முரணை வெற்றிகரமாக கையாளமுடியவில்லை என்றே தோன்றுகிறது.

மேலும் படத்தின் பின் பகுதியில் கதையின் விரிந்த தளம் மிகவும் சுருங்கி அப்பாவின் பாசப் போராட்டம் என்பதாக ஒடுங்கிக் கொண்டு கொஞ்சம் மிகையாகவும் சென்று விட்டது. நள்ளிரவில் ஊளையிடும் நாயை அடிக்கும் போது “இதக்கூட அடிக்காமல் வேற யாரை அடிக்கப் போறேன்” என்று இயலாமையோடு பேசும் கல்யாணி, வயநாட்டு மலைகளில் சூப்பர் மேன் சாகசங்கள் செய்வதாக காட்டத் தேவையில்லை. 25,000 ரூபாய் மதிப்புள்ள நாயை தனது மகளுக்காக வாங்க வேண்டும் என்ற அவனது முனைப்பை புரிந்து கொள்ளலாம். அது தவறுமில்லை. அதன் சரி தவறுகள் அவனது தங்கை மூலமாகவும் பேசப்படுகிறது.

ரெயின் மேக்கர் எனும் பழங்குடியினரின் கருவியை கொண்டு வந்தால் பணம் கிடைத்து நாய் குட்டியும் வாங்க முடியும். அதன் புகைப்படத்தை நான்காக மடித்து நாலாபுறமும் காட்டியதில் அது நான்காகவே கிழிந்து விடுகிறது. நாய் தேடலை இத்தகைய சில குறியீடுகளின் மூலமாக கூட காட்டி முடித்திருக்கலாம். மேலும் மகளின் உலகத்திலிருந்து அவனுக்கு புதிய வாழ்க்கையை தந்திருக்கும் கேரளத்திலிருந்து அவன் வேறு எதையும் கற்கவில்லையா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. இந்தக் கதைப்படி தங்கமீன்கள் தந்தைக்கு மதிப்பு மிக்க ரெயின் மேக்கரை கொடுத்து ஆதரித்தது சேட்டன்கள்தான் என்பது தமிழினவாதிகளுக்கு ரசிக்குமா தெரியவில்லை. மகளின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மலைவாழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வரும் அந்த நீண்ட குழல் இசைக்கருவியை கேட்பதை ‘கற்றது தமிழ்’ மரபை ஏற்கும் இயக்குநர் எப்படி சம்மதித்தார்?

அடுத்து ஒரு உணர்ச்சியை, உறவை ஆழமாக காட்டுவதற்கு அதனுள்ளே மட்டும் பயணிப்பது பாதிதான் பலனளிக்கும். மீதியை அந்த உறவோடு தொடர்புடைய புறநிலை வாழ்க்கையை விரித்தும், பரந்தும் அணுகி உரசிப் பார்ப்பது அவசியம். அந்த மீதிப்பாதி தங்கமீன்களில் போதிய அளவில் இல்லை என்பது எமது விமரிசனம். படத்தின் முதல் பாதியில் அது கொஞ்சம் இருந்தது என்றாலும் கதை பயணிக்க, பயணிக்க தந்தை மகள் உணர்ச்சியை மட்டும்தான் சிறப்பாக பார்ப்பேன் என்று சென்று விட்டது.

சில காட்சிகளில் செல்லம்மா அவளது இயல்புக்கு மீறியும் பேசுகிறாள். பூரித் தோழியிடம் (தான்) பத்து  பதில் வைத்திருக்கும் பிரில்லியண்ட் சிறுமி என்று செல்லம்மா பேசுவது, தற்குறியான கல்யாணி செயல்முறைக் கற்றலை சொல்லிக் கொடுப்பது இங்கேயெல்லாம் பாத்திரங்களை மீறி இயக்குநர் பேசுகிறார். சிறந்த படைப்பில் தேர்ந்த படைப்பாளியின் குரல் தெரியாது என்றாலும் இங்கே ஒரு சில காட்சிகள் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இயக்குநரை நாம் நேரடியாக சந்திக்கவில்லை. புத்தகப் பையை செல்லம்மா தூக்கி ஏறியும் அந்தப் பாட்டு கொஞ்சம் தமுஎகச பாணியில் ‘புத்தகங்களே எமது குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்’ என்ற என்ஜிவோ வகையிலும் இருக்கிறது.

எனினும் இந்த குறைகளை மீறி இந்தப் படம் ஒரு நல்ல படம். எளிமையான படம். ஆனால் நுட்பமான ரசனையை கோரி நிற்கும் படம்.

வாழ்க்கையில் அச்சன் கோவில் மலையை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்று ஏங்க வைக்கிறது ஒளிப்பதிவு. முக்கியமாக அந்த பரந்த மலையின் காற்றும், தனிமையும், நாம் இந்த இயற்கைத் தாயின் குழந்தைகள் என்பதை ஐம்புலன்களிலும் உணர்த்துகிறது. காட்சிகள், ஷாட்டுகளின் நேர்த்தி சில சமயம் கதையையும் தாண்டிவிடும் அழகியலை கொண்டிருக்கிறது. அந்த வகையில் கதைக்கு அவை அடக்கத்துடன் மெருகூட்டுகின்றன. உண்மையில் இந்த இயக்குநர் காட்சி மொழியின் கலை அறிந்தவர் என்பதை நம்மைப் போன்ற பாமரர்கள் சொன்னால் ஏற்பார்களா தெரியவில்லை.

பாடல்களில் ஆன்மாவை இசைத்துக் காட்டும் யுவன் பின்னணி இசையில் காட்சிகளுக்கு இணையாகவே இசைக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் காட்சிகளுக்கு எதிராகவோ, கிளையாகவோ, விமரிசனமாகவோ ஏன் மௌனமாகவோ அந்த இசை வந்திருக்கலாமோ என்று ஒரு தோழர் சொன்னார். இந்தப் படம் அதிகமும் பின்னணி இசை கோராத படம் என்பதால் அதை புரிந்து கொண்ட இளையராஜா தேவைப்பட்டிருப்பாரோ என்றும் ஒரு கருத்து உண்டு. ஆயினும் ஆனந்த யாழில் யுவன் சங்கர் ராஜா தந்தையைப் போலவோ இல்லை விஞ்சியோ பாய்கிறார் என்று மனந்திறந்து பாராட்டலாம்.

ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் காட்சிகளின் கட்டுப்பாட்டில் கதையின் ஓட்டத்தில் நம்மை சீராக கொண்டு செல்கின்றன. ஒரு ஃபிரேமை விட்டுக் கூட நமது சிந்தனை வேறு எங்கோ போக அவர்கள் அனுமதிக்கவில்லை. இயக்குநர் ராமிடம் 2.30 மணிநேரம் கதை கேட்ட இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் இறுதியில் தந்தை வேடத்தை ராம் நடிப்பதாக இருந்தால் படத்தை தயாரிக்க சம்மதம் என்று தெரிவித்தாராம். உண்மையில் இது நல்ல முடிவு. கல்யாணி வேடத்தில் இருக்கும் ராமுக்கு கொஞ்சம் ‘இன்டெலக்சுவல்’ தோற்றம் இருந்தாலும் கதைக்கு அதுவும் பலனளிக்கவே செய்கிறது. படத்தில் இயக்குநரின் அலைவரிசையோடு ஒன்றி நடித்திருக்கும் சிறுமி சாதனாவுக்கு படப்படிப்பின் போது ஏழரை வயது. படம் வெளியாகும் போது பத்து வயது.

இந்தக் கால இடைவெளியில் இந்த படக்குழுவினர் பட்ட படைப்பு அவஸ்தைகளை புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஒரு நல்ல படத்தை தந்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நமது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! பார்க்காத வாசகர்கள், தோழர்கள், பதிவர்கள், நண்பர்கள் அனைவரும் உடன் சென்று திரையரங்கில் படம் பாருங்கள்! ஒரு முறைக்கு மேல் பார்க்கும் போது இந்த படத்தை நீங்களும் ரசிக்க முடியும்.

அப்படி ரசிக்க முடிந்தால் நமது குழந்தைகளின் உலகில் உரையாடுவதற்கு நாம் தயார் என்று பொருள். இல்லையென்றால் நமது இரசனையை மேம்படுத்த வேண்டும் என்று பொருள். இரண்டையும் நிறைவேற்ற முயன்று பார்ப்போம் !

ஆனந்த யாழை கேட்பதற்கு முயற்சி செய்வோம் !