Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 699

பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !

51

எதிர்கொள்வோம் – 3 !

“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப் பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரபூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

சமரன் வெளியீடு
சமரன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் என்ற நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் (கோப்புப் படம்).

இக்கேள்வியில் குறிப்பிடப்படும் நூலுக்குப் பதில் சொல்ல அவசியம், அதிலுள்ள அரசியல் பாமரத்தனம். ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாக ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் இந்த அரசியல் பாமரத்தனம் காரணமாகவே எழுகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலரிடமும் காணப்படும் இந்த அரசியல் பாமரத்தனத்தைச் சந்தைப் படுத்துகின்றன, ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற கிசுகிசு ஏடுகள். தமது அரசியல் பாமரத்தனத்தைக் கோட்பாடாக்குகின்றனர், சமரன் வெளியீட்டகத்தின் கட்டுரையாளர்கள். நம் மீதான விமர்சனங்கள் அனைத்துக்கும் ஏற்கெனவே பலமுறை நாம் பதில் சொல்லியாகிவிட்டது. நமது பதில்களும் நிலைப்பாடுகளும் எவ்வளவு சரியானவை என்று நடைமுறையும் நிரூபித்து விட்டது. ஆனாலும், புலிகளின் ஆதரவாளர்களில் பலரும் எப்போதும் போல உண்மையை எப்படி இடித்துரைத்தாலும் பொய்மைப் போதையிலிருந்து விடுபட மறுக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் ஈழத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் வெளியிலுள்ள சமரன் கட்டுரையாளர்கள் போன்ற அறிவு நாணயமற்றவர்கள்.

“1983-ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழவிடுதலையை ஆதரித்து” (1983-இல் எத்தனை ஆண்டுகள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!) வெளியிட்ட அரசியல் பிரச்சார பிரசுரங்களின் தொகுப்பாகும்” என்று சொல்லிக் கொண்டு “ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற ஒரு நூலை விழா நடத்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதில் வறட்டுக் கோட்பாடுகளும் சுயமுரண்பாடுகளும் தவறான செய்திகளும் நிரம்பி வழிவது அவ்விழாவில் பங்கேற்றுப் பாராட்டியவர்களுக்கு ஏனோ தெரியாமல் போனது! ஈழ விடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்து எழுதிய சமரன் குழுவுக்கு ஈழத்தில் இறுதிக்கட்டப் போரும் ஈழ இனப் படுகொலையும் எப்போது நடந்தது என்பதுகூடத் தெரியவில்லை!

2005-ஆம் ஆண்டு நவம்பரில் இராஜபக்சே தலைமையிலான சிங்கள, பௌத்தப் பேரினவாத பாசிச அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்தது. 2006 ஜூலையில் “பேச்சுவார்த்தை எனும் பேரில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடும் யுத்தத்தை நடத்திவருகிறது” என்று சமரன் குழு எழுதியது. அதன்பிறகு, இராஜபக்சே – புலிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிந்து, இராஜபக்சேவின் பாசிச அரசு நடத்தி வந்த இனவெறிப் போர், முள்ளிவாய்க்கால் – நந்திக் கடலோரம் 2009 மே மாத மத்தியில் ஈழத் தமிழினப் படுகொலையோடு முடிவுக்கு வந்தது. ஈழ இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டு, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, விழித்துக் கொண்ட சமரன் குழு 2011 ஜூலையில் கீழ்க்கண்டவாறு (பக். 320) எழுதியது.

“2009-ஆம் ஆண்டு இறுதியிலும் 2010-மே மாதம் வரையிலும் நடைபெற்ற கடைசிக் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இனஅழிவு குறித்து உலகத் தமிழர்கள்……” என்று 2011-ஆம் ஆண்டு சமரன் குழுவினர் எழுதியிருந்ததாக “ஈழமும் தேசிய இனப் பிரச்சி னையும்” என்ற நூலில் (பக்.320) பதிவு செய்துள்ளார்கள். கடைசிக் கட்டப்போரும் இனப் படுகொலையும் ஈழத்தில் எப்போது நடந்தன என்றுகூடத் தெரியாத இவர்கள், ஈழத் தமிழர்க்கெதிராக சிங்கள இராணுவம் நடத்திய ஈழத் தமிழினப் படுகொலையை “ஏற்பட்ட இனஅழிவு” என்று தன்னியல்பான நிகழ்வைப் போலவும் சித்தரிக்கின்றனர்.

யாழ் நூலகம்
1981, ஜூன் மாதம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறியர்களால் நடத்தப்பட்ட படுகொலை மற்றும் கலவரத்தின் பொழுது எரிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட யாழ் நூலகம் (கோப்புப் படம்).
குறிப்பு : புதிய ஜனநாயகம் அச்சுப் பிரதியில் 1983 ஜூலை மாதம் என்று தவறுதலாக அச்சாகியுள்ளது.

2006 ஜூலை – 2011 ஜூலை ஆகிய இந்த ஐந்தாண்டு முக்கியக் காலகட்டத்தில், சமரன் குழு சொல்லுவதைப் போல “சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழினத்தைப் பூண்டோடு அழித்துவிடும் யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த” போதும், அதிலும் குறிப்பாக 2009 மே மாதத்தில் ஈழத் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டபோதும் அதன்பிறகு இரண்டாண்டுகளாகவும், சமரன் குழு என்ன செய்தது என்பதற்கான பதிவு எதுவும் அந்நூலில் கிடையாது. ஈழத் தமிழினப் படுகொலை நடத்தப்பட்டபோதும் அதன் பிறகும் இவ்வாறுதான் பெரும்பங்கு தமிழகமும் வெறும் பார்வையாளனாக அமைதி காத்தது. ஒருசில தமிழினவாதக் குழுக்கள், ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அவற்றின் தலைமையிலிருந்த இருந்த மாணவர்கள், வழக்குரைஞர்கள் மட்டுமே ஈழத் தமிழருக்காக இங்கே குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் முயற்சியால், ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கை, அமெரிக்கத் தீர்மானம் ஆகியன வந்தன; அதையொட்டி ஈழத்தின்பால் தமிழக மக்கள் கவனம் திரும்பிய பிறகுதான் சமரன் குழுவும் விழித்துக் கொண்டது. இதுதான் தமிழீழத்தின் மீதும், ஈழத் தமிழர்கள் மீதும் சமரன் குழுவுக்குள்ள அக்கறை. ஆனால், ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழீழத்துக்கு எதிரானவை போலவும் சமரன் குழுதான் தமிழீழ விடுதலைக்கு தத்துவார்த்தத் தலைமை அளித்து வந்ததாகவும் கூசாமல், வெட்கமின்றி அந்நூலில் புளுகப் பட்டிருக்கிறது. இதற்குத் தமிழினவாதக் குழுக்கள் வழக்கம்போல மழுப்பாமலும், ஈழத் தமிழர்கள் தவறாமலும் கருத்துக் கூறவேண்டும்.

மார்க்சியம்-லெனினியம்- மாவோ சிந்தனையைத் தனது சித்தாந்த வழிகாட்டியாக சமரன் குழு கூறிக்கொள்கிறது. “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிய வேண்டும்” என்று மாவோ வலியுறுத்தினார். ஆனால், சமரன் குழு இவ்வாறு செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இலங்கை மற்றும் ஈழம் குறித்து சமரன் குழு முன்வைக்கும் அல்லது அறிந்துள்ள விவரங்களில் பலவும் உண்மையானவைகளே அல்ல என்பதற்கு அவர்களின் இந்த நூலே தக்க ஆதாரமாக விளங்குகிறது.

எடுத்துக்காட்டாக, “1947 போலிச் சுதந்திர அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின்………” (பக். viii) என்று குறிப்பிடுவதன் மூலம் 1947-ஆம் ஆண்டில் இலங்கையில் அதிகார மாற்றம் நடந்ததாக சமரன் குழு எழுதுகிறது. பிறகு அதே நூலில் 1948-ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது அமைந்த இலங்கை அரசு, இரு இனங்களுக்கும் சம உரிமையின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒன்றியம் அல்ல. (சிங்கள இன – தமிழின ஐக்கியம் மக்கள் விரும்பித் தாங்களாகவே முன்வந்து செய்து கொண்டதல்ல).” (பக்.37) இவ்வாறு இலங்கை எப்போது சுதந்திர நாடானதென்பதில் தெளிவற்ற சமரன் குழு, அந்நாட்டின் தேசிய இனப் பிரச்சினையை ஆதியிலிருந்து ஆய்வு செய்வதாகக் கருதிக் கொண்டு பிதற்றியுள்ளது.

இதோடு, இசுலாமிய வர்த்தகர்களுக்கு எதிராக 1915 -இல் தாக்குதல் நடத்திய சிங்களவர்களை ஆதரித்து பிரித்தானிய மகாராணியிடம் முறையீடு செய்த சர்.பொன் இராமநாதனை சிங்களவர்கள் தேரில் இழுத்து வந்து கௌரவித்ததை சமரன் குழு குறிப்பிடுகிறது. (பக்.vii)

காலனிய இந்தியாவில் நடந்ததைப் போலவே இலங்கையிலும் நடந்தது. ஆங்கிலக் கல்வி சட்டம் பயின்ற பார்ப்பன மற்றும் பிற மேல்சாதி, மேட்டுக்குடியினர் காலனிய அரசின் நிர்வாக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டு இங்கிலாந்து முடியரசுக்குச் சேவை செய்தனர். அதைப் போலவே, இலங்கையிலும் சிங்கள பௌத்த மேட்டுக் குடியினரும் யாழ்ப்பாண வேளாள சாதி மேட்டுக் குடியினரும் ஆங்கிலக் கல்வி சட்டம் பயின்று, காலனிய இலங்கையில் அரசின் நிர்வாக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டு இங்கிலாந்து முடியரசுக்குச் சேவை செய்தனர். இந்தவகையில் சிங்கள டான் சேனநாயகா, அவரது மகன் டட்லி சேனநாயகா குடும்பமும் ஈழத்தின் பொன்னம்பலம் அருணாச்சலம், அவரது மகன் பொன்னம்பலம் இராமநாதன் குடும்பமும் ஒன்றுபட்டுத் தலைமை வகித்தன. சிங்கள – ஈழத் தமிழ் சமூகங்களின் சார்பாக இவர்கள் ஒன்றுபட்டு நிறுவிக் கொண்டதுதான், அனைத்து இலங்கை தேசியக் காங்கிரசு கட்சி. இக்கட்சிக்கு தலைமையேற்றிருந்த பொன்னம்பலம் இராமநாதன் (இப்பெயர் சமரன் குழு சொல்வதைப்போல இராமநாதன், பொன்னம்பலம் என்ற இரண்டு நபர்களைக் குறிப்பதில்லை, ஒரே நபர்தான்) இசுலாமியர்கள் மீதான 1915 தாக்குதலில் சிங்களவருக்கு வக்காலத்து வாங்கியதில் சிறப்பு ஏதுமில்லை.

யாழ் மேட்டுக்குடி
யாழ்ப்பாண வேளாள சாதி மேட்டுக்குடியைச் சேர்ந்த பொன்னம்பலம் அருணாச்சலம் (இடது), இராமநாதன் பொன்னம்பலம்.

காலனிய காலத்திலிருந்தே தமிழீழத்துக்கான உணர்வும் முன்னெடுப்புக்கான முயற்சியும் நிலவியதாக வரலாற்றுத் தரவுகளைக் கண்டுபிடிப்பதில் சமரன் குழு இறங்கியுள்ளது. இதனால், “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவது” என்ற பாட்டாளி வர்க்க நெறிமுறையைக் கைவிட்டு விட்டது.

இந்தியாவைப் போன்று காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராக காந்தி-காங்கிரசு தலைமையிலான தரகு முதலாளிகளின் சமரசப் போராட்டங்களோ, உண்மையான விடுதலைக்கான மக்கள் போராட்டங்களோ இலங்கையில் நடைபெறவில்லை. காலனிய அரசு நிர்வாகத்தில் பங்கேற்று ஆதாயம் அடைவதற்கான போட்டிதான் சிங்கள மற்றும் ஈழ(உண்மையில் கொழும்பு/யாழ்ப்பாண)த் தரகு முதலாளிகளின் பிரதிநிதிகளிடையே நடந்தது.

“காலனித்துவ நாடாக இருந்த இலங்கை, ஒரு அரைக்காலனித்துவ நாடாக மாறியபோது அந்நாட்டின் அதிகாரம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சிங்கள-தமிழினத் தரகு முதலாளித்துவ அரை நிலப்பிரபுத்துவக் கூட்டுத் தலைமையிடம் மாறிற்று. பேரினமாகிய சிங்கள இனத்தின் அதிகார வர்க்கத் தரகு முதலாளித்துவமும் அரைநிலப்பிரபுத்துவச் சக்திகளும் அந்நாட்டின் (அரசு இயந்திரத்தை தமது பிடிக்குள் கொண்டுவர விரும்பி) அதிகாரத்தை முழுவதுமாக அபகரித்துக் கொள்ள விரும்பின. இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பல திட்டமிட்ட நடவடிக்கைகளை அவை மேற்கொண்டன” (பக்.37) என்கிறது, சமரன் குழு.

சரிதான்; இதன்படி சிங்கள-தமிழினத் தரகு முதலாளிகளுக்கிடையே அதிகாரப்போட்டியால்தான் ஈழ, மலையகத் தமிழர்களுக்கெதிரான குடியுரிமைப் பறிப்பு, மொழி உரிமைப் பறிப்பு, சிங்களக் குடியேற்றம் மூலம் வாழ்வாதாரப் பறிப்பு, கல்வி – மற்றும் அரசு வேலைவாய்ப்புப் பறிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஆளும் சிங்களத் தரகு முதலாளிகள் ஈடுபட்டது. அதே சமயம், தமிழினத் தரகு முதலாளிகளோ தமது அதிகாரத்தைத் தக்க வைத்து கொள்வதற்காகவே தமிழினப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கேடாகப் பயன்படுத்தினர்.

இலங்கையின் சுதந்திரப் பிரகடனத்தின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் ஈழப் போராளிக் குழுக்கள் தோன்றி, அவை ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுக்கும்வரை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு, இலங்கை அரசிடம் பேரங்கள் நடத்தி ஆதாயங்கள் அடைந்தவர்கள், ஆளும் சிங்கள இனவெறிக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டு, அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள், இலண்டனில் சட்ட உயர்கல்வி பயின்ற, வடக்கின் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் கிழக்கின் மக்களையும் கீழானவர்களாகக் கருதிய யாழ் மையவாத, யாழ்ப்பாண ஆதிக்க வேளாள சாதித் தலைவர்கள்தாம்.

கிறித்தவத் தொண்டு நிறுவனங்களின் பலனாய் பெருமளவு கல்வி பயின்ற ஈழ நடுத்தர வர்க்கத்தினர் காலனிய காலத்திலிருந்தே உயர்கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் 60 விழுக்காடிற்கு மேல் பிடித்துக் கொண்டிருந்தனர். சிங்கள மக்கள் இதை ஈழத்தமிழர் ஆதிக்கமாகப் பார்த்தனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிங்களத் தரகு முதலாளிகளின் கட்சிகள் சிங்களப் பேரினவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டன. ஈழத் தமிழரின் நியாயமான பொருளாதார, அரசியல், பண்பாட்டு உரிமைகளைக்கூடப் பறிப்பதிலும், அவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதில் சிங்களத் தரகு முதலாளிகளின் கட்சிகள் போட்டிபோட்டன. அந்நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் கடுமையாகவே, அவை சிங்கள சமூகத்திற்கே எதிரான பாசிசக் கட்சிகளாக பரிணமித்தன. இனவாதத்தின் தீவிரவாதம் பாசிசம்!

50-க்கு 50 விழுக்காடு கோரிக்கை பிரபலம் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரசுக் கட்சி, கூட்டாட்சிக் கோரிக்கை பிரபலம் செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி (தமிழில்தான் இந்தப் பெயர், ஆங்கிலத்தில் அதன் பெயர் கூட்டாட்சிக் கட்சி) ஆகிய இரண்டுமே வட்டுக்கோட்டை மாநாட்டு தனியரசுத் தீர்மானம் வரை இப்படித்தான் இருந்தன. அதன்பிறகும் ஈழத்தில் தனியரசு அமைப்பதற்கான திட்டமோ முயற்சியோ எதுவும் அவற்றிடம் கிடையாது.

வவுனியாவிற்குத் தெற்கே தமது வர்க்க நலன்களையும் தமது சொந்தத் தொழிலையும் கொழும்பில் குவித்திருந்த தலைமையினருக்கு செல்வத்தையும் பாதுகாக்க ஒரு அரசியலும், வவுனியாவிற்கு வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களிடம் ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலும் தேவைப்பட்டன. அதற்கேற்பவே இவ்விரண்டு கட்சிகளும் தமிழீழச் சிக்கலைக் கையாண்டன.

சேனநாயகா
சிங்கள பௌத்த மேட்டுக் குடியைச் சேர்ந்த டான் சேனநாயகா (இடது) மற்றும் அவரது மகன் டட்லி சேனநாயகா.

ஆனால், காலனிய காலத்திலிருந்தே தமிழீழத்துக்கான உணர்வும் முன்னெடுப்புக்கான முயற்சியும் நிலவியதாக வரலாற்றுத் தரவுகளைக் கண்டுபிடிப்பதில் சமரன் குழு இறங்கியுள்ளது. இதனால், “உண்மை விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவது” என்ற பாட்டாளி வர்க்க நெறிமுறையைக் கைவிட்டு விட்டது.

1958 முதல் 1983 வரை தமிழீழத் தேசத்தின் மீது 25 ஆண்டுகள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்ட ‘கலவரம்’ என்கிற ஆயுதத்தைப் பின்வருமாறு சமரன் குழு பட்டியலிடுகிறது.

“1961-இல் சிறீ எதிர்ப்புக் ‘கலவரம்’, 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான ‘கலவரம்’, 1981-இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான படுகொலை, 1983-இல் இலங்கை தழுவிய இனப் படுகொலை…….. ”

“இதனால் வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் சமரசவாதத் தலைவர்களான செல்வா தலைமையில் சமஷ்டிக் கட்சி, பின்னாளில் தமிழர் கூட்டணி, தனித் தமிழீழத் தீர்மானத்தை 1976-ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றியது; 1980 தேர்தலில் ஈழத் தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது” (பக்.viiiix)

இங்கே பல தவறான விவரங்களை சமரன் குழு முன்வைக்கிறது:

(1)”1961-இல் சிறீ எதிர்ப்புக் ‘கலவரம்’” நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது. மோட்டார் வாகன இலக்கத் தகடுகளில் ‘சிறீ’ என்று ஆங்கிலத்தில் இருந்ததை சிங்களத்தில் எழுத வேண்டும் என 1958-ஆம் ஆண்டு புகுத்தப்பட்டது. இதை எதிர்த்து ‘சிறீ’ என்பதற்கான தமிழ் வடிவத்தைப் பயன்படுத்தும் போராட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்தியது.

அதற்கு முன்னதாக வேலையை இழப்பதாக இருந்தாலும் அரசு ஊழியர்களாக உள்ள தமிழர்கள் சிங்களம் கற்கக் கூடாது; வடமாகாணப் பாடசாலைகளில் சிங்களத்தை விருப்பப் பாடமாகக் கற்பிப்பதை நிறுத்துமாறும் தமிழரசுக் கட்சி பிரச்சாரம்; இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தப்படி குடியேற்றத் திட்டங்களில் தமிழருக்கு உரிமை, மாவட்ட சபைகளில் சுயாட்சி உரிமை, சிங்களத்தோடு தமிழையும் அரச கரும மொழியாகக் கொள்வது ஆகிய ‘சலுகைகள்’ கிடைத்தன.

ஆனால், ‘சிறீ’ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து வாகன இலக்கத் தகடுகளில் மட்டுமல்ல; ஊர்கள், கடைகள், தெருக்களின் பெயர்ப் பலகைகளிலுள்ள தமிழ் எழுத்துக்களைத் தார்பூசி சிங்கள வெறியர்கள் அழிக்கும் இயக்கத்தைத் தொடங்கி முடிவில் 1958-இல் முதலாவது நாடளாவிய இனப் படுகொலையை நடத்தினர். ஏற்கெனவே, “தனி சிங்களச் சட்டம் – 1958 கலவரம்” என்று சொன்னதையே மீண்டும் 1961 – இல் சிறீ எதிர்ப்புக் கலவரம் என்று கணக்குக் காட்டுகிறது, சமரன் குழு.

(2) 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான கலவரம் நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது : 1977-இல் நடத்தப்பட்டது, சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான கலவரம் அல்ல. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தனது 1976 வட்டுக்கோட்டை தனியரசு தீர்மானத்தை முன்வைத்து 1977-இல் நடந்த இலங்கை நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டது. தேர்தலுக்கு முன்னதாக ஒரு வாரம் போலீசுக்கு விடுமுறை கொடுத்த ஜெயவர்த்தனே அரசு, குண்டர்களை ஏவி சிறீலங்கா சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகள் மீது கொலைவெறியாட்டம் போட்டது. லங்கா சம சமாஜக் கட்சியைச் சேர்ந்த 9000 குடும்பங்களை விரட்டி வீடுகளை அழித்தது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஈழத்தில் 35 விழுக்காடு வாக்குகள் பெற்று நியமன உறுப்பினர்களோடு 18 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சியானது. அதைத் தொடர்ந்து தனியரசு அமைக்கப் போவதாக வதந்தி பரப்பப்பட்டு ஈழத் தமிழர்கள் மீது கொலை வெறியாட்டம் நடந்தது.

பதவிக் காலம் முடியவிருந்த இலங்கை நாடாளுமன்றத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு 1982-இல்தான் நடந்தது. சர்வஜன வாக்கெடுப்பையும் அதில் ஜெயவர்த்தனே அரசின் தீர்மானத்தையும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உட்பட இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்த்தபோதும் கலவரம் எதுவும் இலங்கையில் நடைபெறவில்லை.

(3) “1981-இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான படுகொலை” நடந்ததாக சமரன் குழு எழுதுவது பிழையானது : முதலாவதாக 1981 -இல் மாகாண சபைத் தீர்வு எனும் ஒன்றை யாரும் வைக்கவேயில்லை. செல்வநாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சனுக்கும் ஜெயவர்த்தனேவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேரங்களின் விளைவாக உள்ளூராட்சிக்குரிய அதிகாரமே கொண்ட மாவட்ட அபிவிருத்தி சபைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மனமுவந்து ஏற்றுக்கொண்டது. ஆனால், விடுதலைப் புலிகள் போன்ற போராளிக் குழுக்கள் ஏற்கவில்லை. ஓரிரு ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 1981-இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் அரசு அப்பட்டமான முறைகேடுகளிலும் மோசடிகளிலும் ஈடுபட்டது. யாழ்ப்பாணத்தில், 1981-மே 31 அன்று தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நடத்திய பேரணியின்போது சிங்களப் போலீசார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஒருவர் படுகாயமுற்றார்.

அன்று இரவிலிருந்து மூன்று நாட்கள் சிங்களப் போலீசும் துணை ராணுவமும் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாட்டம் போட்டன. தமிழர் பலர் கொல்லப்பட்டனர்; த.ஐ.வி.கூ. தலைமையகம், அக்கட்சி எம்.பி. வீடு, ஒரு இந்துக் கோவில், ஈழநாடு பத்திரிகை அலுவலகம் ஆகியன தாக்கி அழிக்கப் பட்டன. ஜூன் 1 அன்று புகழ்பெற்ற யாழ் பொது நூலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

(4) 1983-இல் இலங்கை தழுவிய இனப் படுகொலை என்று இங்கே குறிப்பிடும் நிகழ்வை “தன்னியல்பான தமிழீழ மக்களின் 1983 எழுச்சி” (பக். xxviii) என்றும் பீற்றிக் கொள்கிறது சமரன் குழு. ஈழத்தின் வரலாற்றில் “கறுப்பு ஜூலை” என்று முதலாளிய அறிவுஜீவிகளே குறிக்கும் கோரமான, துயரமான ஒரு நிகழ்வை எழுச்சி என்று எப்படி அதனால் கருத முடிகிறது?

(5) 1983 ஜூலை இனப்படுகொலை காரணமாக வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றியது; “1980 தேர்தலில் ஈழத்தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது” என்கிறது, சமரன் குழு. முதலாவதாக 1980 -இல் சமரன் குழு குறிப்பிடுவதைப் போலத் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. 1977-இல் தான் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடந்தன. 1982, 1983 ஆகிய பிற்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் முற்காலத்திலேயே செயல்படுவது (1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் வந்தது என்பது போன்ற) சிந்தனை சமரன் குழுவைப் போன்ற புரட்சிக் கோட்பாட்டாளர்களுக்குத்தான் தோன்றும்! வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை சமஷ்டிக் கட்சி என்ற ஒரு கட்சி மட்டுமே நிறைவேற்றியது; அதுவே அத்தீர்மானத்தை முன்வைத்து, அந்தத் தேர்தலில் 100 சதவீத இடங்களைப் பிடித்தது என்பதும் உண்மையல்ல. ஒரு கட்சி மட்டும் தமிழர் கூட்டணி ஆகிவிடுமா என்றுகூட சமரன் குழு சிந்திக்கவில்லை!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 100 விழுக்காடு ஈழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்; அதுவே இப்போதும் தமிழீழத்தையும் புலிகளின் தலைமை யையும் ஒருமனதாக ஈழத் தமிழர்கள் ஏற்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்று புலிகளும் புலி ஆதரவாளர்களும் நீண்ட காலமாகக் கூறிவருகிறார்கள். இதுவும் உண்மையல்ல. வடக்கிலுள்ள யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களும் கிழக்கிலுள்ள திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களும் சேர்ந்தவைதாம் தமிழீழம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து த.ஐ.வி.கூட்டணி சந்தித்த 1977 பொதுத் தேர்தல்களில் மேற்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்கள் உத்தேசத் தமிழீழத்தில் மொத்தம் 23 தொகுதிகளைக் கொண்டவை. அவற்றில் த.ஐ.வி. கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களைக் கொண்ட வடக்கில் மட்டுமே 100 விழுக்காடு-அதாவது அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களைக் கொண்ட கிழக்கில் மொத்தம் 10-இல் 3 தொகுதிகளில், அதாவது 30 விழுக்காடு மட்டுமே த.ஐ.வி. கூட்டணி பெற்றது. வாக்கு எண்ணிக்கைப்படி பார்த்தால் வடக்கில் 41 விழுக்காடு, கிழக்கில் 26 விழுக்காடும் மொத்தமாகப் பார்த்தால் தமிழீழத்தில் 35 விழுக்காடும் வாக்குகள்தாம் த.ஐ.வி. கூட்டணி பெற்றது. ஆகவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஈழத் தமிழர் ஆதரவு குறித்து சமரன் குழு உட்பட புலிகளும் புலி ஆதரவாளர்களும் உரிமை பாராட்டி கொள்வது தவறான அடிப்படையிலானது.

இவ்வாறு இலங்கை மற்றும் ஈழத்தைப் பற்றிய உண்மை விவரங்களையே அறியாத சமரன் குழுதான், ஈழ விடுதலைக்குத் தத்துவார்த்தத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொண்டு வந்திருக்கிறது!

(தொடரும்)
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

0

டந்த ஆகஸ்டு 21-ம் தேதி இரவு 9 மணிக்கு புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் வளாகத்திற்கு வெளியே அந்த சம்பவம் நடைபெற்றது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ABVP) சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். தாக்குதலுக்கு காரணமாக ஏபிவிபி சொன்னது, மாணவர்கள் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கபீர் கலா மஞ்ச் போன்ற தேசவிரோத, நக்சலைட்டுகளுக்கு மேடை அமைத்து தருகிறார்கள் என்பதுதான்.

கபீர் கலாமஞ்ச் - நிவேதா
கபீர் கலாமஞ்ச் (கோப்புப் படம்)

சினிமா உலகமே வியந்தோதும் புனே திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து ஒரு சில விதிவிலக்குளைத் தவிர்த்து பிரபலமான சினிமா படைப்பாளிகள் எவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதே நேரம் தில்லி தேசிய நாடகப் பள்ளி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள் தமது எதிர்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பதிவு செய்துள்ளனர்.

மூடநம்பிக்கை மற்றும் சாதி எதிர்ப்பு போராளியான நரேந்திர தபோல்கர் அதற்கு முந்தைய தினம் தான் புனே நகரத்தில் தனது காலை நடைப்பயிற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அதனை கண்டித்து நகரத்தில் அன்று பல கட்சிகளும் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. எனவே புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களும், யுக்பத் என்ற சமூக விவாத அரங்கும் இணைந்து முன்னரே திட்டமிட்டிருந்த ஆனந்த் பட்டவர்த்தனின் ஜெய் பீம் காம்ரேடு ஆவணத் திரைப்படத்தின் திரையிடலை தள்ளிவைக்குமாறு பல்வேறு முற்போக்கு அமைப்புகள் அவர்களிடம் கோரிக்கை வைத்தன. ஆனால் இத்திரையிடல் மற்றும் அதற்கடுத்து கபீர் கலா மஞ்ச் அமைப்பின் சாதித் தீண்டாமைக்கெதிரான சில கலைநிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததால், அந்த நிகழ்ச்சியை நடத்துவதுதான் தபோல்கருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனக் கருதிய அம்மாணவர்கள் நிகழ்ச்சியை தள்ளி வைக்காமல் அன்றே நடத்த முடிவு செய்தனர்.

கூட்டம் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து எட்டு மணிக்கு கபீர் கலா மஞ்ச் அமைப்பினரின் கலை நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது. பத்திரிகையாளர்களும், போலீசாரும் வெளியே சென்ற பிறகு, வந்திருந்த 12 ஏபிவிபி நபர்கள் மாணவர்களை அணுகி, எப்படி நக்சலைட்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களை நீங்கள் மேடையேற்றலாம் எனக் கேட்கிறார்கள். “நீங்களெல்லாம் கூட நக்சலைட்டுகள் தான்” என்றும் கூறுகிறார்கள். மஞ்ச் அமைப்பினரின் கலைநிகழ்ச்சியானது சாதிக்கு எதிராக இருந்ததாகவும், எனவே அவர்கள் தேச விரோத சக்திகள் தான் என்றும் ஏபிவிபி யினர் கூறினார்கள்.

காயமடைந்த மாணவர்
தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஸ்ரீராம் ராஜா (படம் : நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

ஏற்கெனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசின் கடுமையான ஒடுக்குமுறை கபீர் கலா மஞ்ச் உறுப்பினர்கள் மீது இருந்து வந்த சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மேடையேறிய மஞ்ச் கலைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை மாணவர்கள் பாதுகாப்புடன் வெளியேற்ற முயலும் போது, ஏபிவிபி ரவுடிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கருதி ‘ஏபிவிபி வாழ்க’ என்றும், ‘நக்சல்பாரியே ஓடிப் போ’ என்றும் முழக்கமிட்டுள்ளனர். முன்னதாக கலை நிகழ்ச்சியின் போது தாங்கள் நக்சல்பாரிகளின் வாரிசுகள் என கபீர் கலா மஞ்ச் அமைப்பினர் தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டனர்.

அத்துடன் முன்னணியில் நின்ற கிஸ்லே திவாரி என்ற மாணவரை ஏபிவிபி யினர் தாக்கவும் ஆரம்பிக்கின்றனர். ஸ்ரீராம் ராஜா என்ற மாணவரை ஹெல்மெட்டால் தலையில் தாக்குகின்றனர். அவர் தலையில் ரத்தம் வர ஆரம்பித்தவுடன் “ஜெய் நரேந்திர மோடி”, “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டதுடன் மாணவர்களையும் அப்படி முழக்கமிடவும் வற்புறுத்தி இருக்கின்றனர். அப்படி சொல்லாதவர்கள் எல்லாம் நக்சலைட்டுகள்தான் என்றும் தீர்மானமாகக் கூறியுள்ளனர். தாங்கள் கலைஞர்கள் என்றும், கட்சி அரசியலை சாராதவர்கள் என்றெல்லாம் மாணவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறிய போதிலும் அதையெல்லாம் ஏபிவிபி யினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மதவெறி போதையால் ஆடும் வானரங்களிடம் வார்த்தைகளுக்கோ இல்லை வாய்மைக்கோ என்ன மதிப்பிருக்கும்?

அஜயன் அதத், அன்சர் ஷா, சமீன் ஆகிய இன்னும் 3 மாணவர்களும் தாக்கப்பட்டனர். தாக்குதலை வளாகத்திற்கு வெளியே வந்த பிறகுதான் இந்து மதவெறியர்கள் துவக்கியுள்ளனர். அதுவரை வாய்ச்சண்டை போட்ட படியே மாணவர்களை வெளியே வர வைத்து, கொண்டு வந்திருந்த கொடி என்ற பெயரிலான குண்டாந்தடிகளால் அவர்களைத் தாக்கியுள்ளனர். சிவிலியன் உடையில் வந்த போலீசுக்காரர் ஒருவர் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலைஞர்களை நோட்டமிட்டு விட்டு, பின்னர் தாக்குதல் நடக்கும்போது ஏபிவிபி அமைப்பினருடன் இருந்திருக்கிறார். ஆனால் மாணவர்கள் மீது அவர்கள் நடத்திய தாக்குதலை அவர் தடுக்க முற்படவில்லை. இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்கள் மீதான வழக்கில் அவர்கள் சட்ட விரோதமாக கூடியிருந்ததாகவும், கலவரம் செய்ததாகவும் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்தாக்குதலில் இந்துமத வெறியர்களுக்கு ஆதரவாகத்தான் போலீசே செயல்பட்டுள்ளது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சங்கம், “நாங்கள் எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்தவர்கள் அல்ல. இசை, நடனம், திரைப்படம் என ஊடகங்கள் வழியாக எங்களது கருத்துக்களை சொல்ல சுதந்திரம் உள்ளதாக நம்பும் படைப்பாளிகள் நாங்கள். மைய நீரோட்டத்தில் கலக்காத, அதை எதிர்த்து செயல்படும் தனிநபர் அல்லது அமைப்பை தேச விரோத சக்தி என வரையறுக்க ஆரம்பித்தால் எப்படி பாசிசம் வளரும் என்பதற்கு சரியான உதாரணம் தான் தபோல்கரது படுகொலை. இக்கொலைக்கும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் எதிராக அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

கண்டன ஊர்வலம்
மாணவர்கள் நடத்திய கண்டன ஊர்வலம் (படம் : நன்றி dnaindia.com)

இதற்கிடையில் கடந்த ஆகஸ்டு 25-ம் தேதி மாலையில் இத்தாக்குதலை கண்டித்து மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் புனே திரைப்படக் கல்லூரியில் இருந்து தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்ட ஓம்கரேஸ்வரர் பாலம் வரை ஊர்வலம் செல்ல திட்டமிட்டனர். காவல்துறை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. சமூக விரோத சக்திகள் ஊர்வலத்தில் புகுந்து மாணவர்களை தாக்கும்போது தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது எனக் கூறி அனுமதியை மறுத்தது காவல்துறை. மாணவர்கள் வீதியில் இறங்க தயாரான பிறகு கடைசியில் காவல்துறை அனுமதி தர வேண்டியதாயிற்று.

பாசிச சக்திகளுக்கு எதிராக ஜனநாயக உரிமையை நிலைநாட்டிட, தபேல்கரின் கொலை மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மௌன ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பல ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் இறுதியில் பேசிய மாணவர் கிஸ்லே திவாரி, பிறரது கருத்துக்களை வெளியிட விடாமல் தடுக்கும் முயற்சியில் வலதுசாரிகள் இருப்பது நாடறிந்த உண்மை என்றும், அவர்களது அடாவடித்தனத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறினார். இது போன்ற சிறிய தாக்குதலை எதிர்க்க தவறினால் தபோல்கர் போன்றவர்களை நாம் இழக்க வேண்டியதிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

தபோல்கரை போன்றவர்களை இழப்பது மட்டுமின்றி, சாமான்ய இந்து பக்தர்களை தீவிரவாத பீதியூட்டி மதவெறியர்களாக மாற்றி வருவதன் ஒரு அங்கம்தான் இந்த தாக்குதல். மக்களுக்காக போராடும், தேச விடுதலைக்காக போராடும் ஜனநாயக சக்திகளை, சாதியை எதிர்ப்பதால் தேச விரோதி என்றும், நரேந்திர மோடி வாழ்க எனச் சொல்லாவிட்டால் தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி பிரச்சாரம் செய்யும் சங் பரிவார கும்பலின் முயற்சிதான் இந்த தாக்குதல்.

கடந்த வாரம் அகமதாபாத் நகரில் நடந்த பாகிஸ்தான் ஓவியர்களின் கண்காட்சி மீதான தாக்குதல் சம்பவம், தலித் பேராசிரியர் ஒருவர் சாதிரீதியான ஒடுக்குமுறையை விமர்சித்து வகுப்பறையில் பேசியதற்காக வெளியே தாக்கப்பட்டது, பால் தாக்கரே மரணத்திற்கு பிந்தைய தங்களது முகநூல் கருத்துக்காக இரு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டது என இந்து மதவெறியர்களும், காவல்துறையும் தொடர்ந்து நடத்தி வரும் பாசிச கூட்டணியின் விளைவுகளில் ஒன்றுதான் இந்த ஏபிவிபி தாக்குதல். இத்தகைய தாக்குதலின் ஒரு அங்கமாகத்தான் இந்துமத வெறியர்கள் தற்போது உத்திர பிரதேசத்தில் ஆடத் துவங்கியுள்ள ராமர் கோவில் கட்டுதற்கான யாத்திரையாகும்.

எனவே மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஓட்டுச்சீட்டு அரசியலின் மூலம் இந்துமத வெறியர்களை தனிமைப்படுத்தலாம் என்று நினைத்தால் அது இத்தகைய தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது. ஏனெனில் இந்துமத வெறியர்கள் எக்காலத்திலும் ஜனநாயகம், நீதிமன்றம், சட்டம் போன்றவற்றை மயிரளவிலும் மதிப்பதில்லை. ஆகவே இந்தியாவை பிளக்கும் இந்த மதவெறியர்களை வீதியில் இறங்கி நேருக்கு நேர் எதிர் கொண்டு தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று கூறும் புரட்சிகர சக்திகளின் வழிமுறைதான் காலம் கோரும் வழிமுறை.

– வசந்தன்.

மேலும் படிக்க

நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !

48

சிகாகோ பல்கலைக் கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுத் துறையில் படிக்கும் மிகேலா கிராஸ் என்ற அமெரிக்க மாணவி சென்ற ஆண்டு தனது படிப்பின் ஒரு பகுதியாக இந்தியா வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறித்து எழுதியிருக்கிறார்.

மிகேலா கிராஸ்
மிகேலா கிராஸ்

பெண்கள் அனைவரையும் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையில்லைஎன்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. நீலி வழிபாட்டிற்கும் தேசபக்திக்கும் உள்ளொளி இணைப்புள்ளதாக இந்து ஞான மரபின் உபன்னியாசர்கள் கதை விடுகிறார்கள்.  பொய்யான இந்த போற்றுதல்கள் மற்றும் வருணணைகளின் பின்னே பெண்ணடிமைத்தனத்தின் ஆதாயம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை எவரும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும்.

இப்படி நம் நாட்டின் பார்ப்பனிய இந்து மதத்தின் பிற்போக்கு கலாச்சாரமும், பின்னர் வந்த மேற்கத்திய நுகர்வுக் கலாச்சாரம் வளர்த்து விட்டிருக்கும் பாலியல் வக்கிரங்களும் இந்தியச் சூழலை பெண்களுக்கு நரகமாக மாற்றியிருப்பதை மிகேலா கிராஸ் அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் அவரும் கூட இந்தியாவை மாபெரும் ‘ஞானிகளின்’ நாடு என்று அசட்டுத்தனமாக நினைத்திருப்பாரோ தெரியவில்லை.

இந்திய பெண்கள் பிறந்ததிலிருந்தே இந்த சூழலில் வாழ்வதால் அதை சமாளித்து வாழப் பழகிக் கொள்வதோடு, மனதளவிலான பாலியல் துன்புறுத்தல்களை பெரும்பாலும் புறக்கணித்தும் போகிறார்கள். வெளியிலிருந்து வந்த மிகேலா கிராஸ் இந்த நச்சுச் சூழலால் பாதிக்கப்பட்டு மனவியல் சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதே நேரம் பாரதமாதாவின் கருணையற்ற முகத்தை உலகு அறியவேண்டும் என்று அதை அனைவருக்கும் அறியத் தருகிறார். எனினும் இதை ஒரு காலனியாதிக்க அடிமைத்தனத்தின் சதி என்று சங்க பரிவார அம்பிகள் புறக்கணிக்கலாம். அதனால் உண்மை சுடாமல் போய்விடுமா என்ன? இதோ ‘பெருமை’ வாய்ந்த இந்து ஞான மரபின் இழை அறுபடாத பாரதத்தை தரிசியுங்கள் !

– வினவு

————–

ந்தியாவிற்குப் போன எனது அனுபவத்தைக் குறித்து யாராவது கேட்கும் போது எப்போதுமே குழப்பத்துக்குள் சிக்கிக் கொள்கிறேன். கடந்த சில மாதங்களாக என் வாழ்க்கையை குதறிக் கொண்டிருக்கும் ஒரு முரண்பாட்டை சுருக்கமாக ஒரு வரியில் எப்படி விளக்குவது?

“இந்தியா அற்புதமானது,” என்று ஆரம்பித்து, “ஆனால் பெண்களுக்கு மிகவும் அபாயகரமானது” என்று முடிக்கிறேன். இது குறித்து மேலும் கேள்விகள் வருமோ என்று என் மனதின் ஒரு பக்கம் நடுங்குகிறது, இன்னொரு பக்கம் மேலும் கேள்விகள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. உண்மையின் சக்தியில் நம்பிக்கை வைத்து நான் சொல்ல விரும்புவற்றுக்கும், கேட்பவர்கள் எவ்வளவு தாங்குவார்கள் என்பதை முடிவு செய்வதற்கும் இடையே நான் திணறுகிறேன்.

ஒரு பாதி இனிய கனவாகவும், மறு பாதி கொடூர சொப்பனமாகவும் இருந்த எனது மூன்று மாத இந்திய பயணத்தை எப்படி விவரிப்பது. எந்தப் பாதியை நான் சொல்ல வேண்டும்?

மிகேலா கிராஸ்
பூனே கணேசா திருவிழாவிற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்.

இந்தியாவிற்கு போய்ச் சேர்ந்த முதல் நாள் பூனேவின் விநாயகர் திருவிழாவில் நாங்கள் நடனம் ஆடியதை சொல்லி விட்டு அத்தோடு விட முடியுமா? அல்லது அமெரிக்க பெண்கள் ஆட ஆரம்பித்ததும் திருவிழாவே நின்று போய் விட, ஒரு பெரிய ஆண்கள் கூட்டமே எங்கள் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தோம் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா?

ஒரு சில டாலர்கள் விலையிலான அழகான புடவைகளை பேரம் பேசி வாங்குவதற்கான  கடைகளைப் பற்றி குறிப்பிடும் அதே நேரம், எங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆண்கள், எங்களை இடித்துக் கொண்டு, மார்பையும் அடி வயிற்றையும் தொட்டும் தாக்கியும் சென்றதை சொல்லாமல் விட முடியுமா?

என்னுடைய அழகிய இந்திய செருப்புகளை புகழும் ஒருவரிடம், அவற்றை நான் வாங்கிய பிறகு 45 நிமிடங்களுக்கு என்னைப் பின் தொடர்ந்து வந்த மனிதனைப் பற்றிச் சொல்லி பெரும் கூட்டத்தின் மத்தியில் அவனை முகத்துக்கு நேராக திட்டி துரத்திய பிறகுதான் விலகினான் என்பதையும் பேச வேண்டும் அல்லவா?

கோவாவில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் குறித்த எனது ஆழமான நினைவு, என் அறை தோழியை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்த ஹோட்டல் ஊழியர், அறை தொலைபேசியில் மீண்டும் மீண்டும் மூச்சிரைக்க அழைத்துக் கொண்டிருந்த போது அவன் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் வந்து விடக் கூடாது என்ற பயத்தில் கதவை தாழிட்டு விட்டு, கைகளில் ஒரு கத்தரிக்கோலை இறுகப் பற்றிக் கொண்டு, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததாக இருக்கும் போது அந்த ஹோட்டலின் அழகைப் பற்றி நான் எப்படி விவரிக்க முடியும்?

மிகேரா கிராஸ்

இவற்றை எல்லாம் ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில் எப்படி பேச முடியும்? ஆனால், எனது நண்பர்கள், உறவினர்கள், கிறிஸ்துமஸ் மரம் இவை அனைத்தையும் விட பேருந்தில் என்னைப் பார்த்து சுய இன்பம் கண்ட ஒரு மனிதனின் பிம்பம் வலுவாக மனதை ஆக்கிரமித்திருக்கும் போது நான் வேறு எதைப் பற்றி பேச முடியும்? தங்கள் கேள்விகளுக்கான உண்மையான பதில்களை தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள் அந்த நல்ல மனிதர்கள்.

ஒரு ஆண்டுக்கு முன்பு நான் இந்தியாவுக்கு போன போது அந்தச் சூழலில் வாழ நான் தயார் செய்து கொண்டதாகத்தான் நினைத்தேன். நான் இதற்கு முன்பே இந்தியாவுக்கு போயிருக்கிறேன்; தெற்கு ஆசிய துறையில் படிக்கிறேன்; ஓரளவு இந்தி பேசுவேன். ஒரு வெள்ளை இனப் பெண்ணான நான் பாலியல் வெறி பிடித்தவளாக பார்க்கப்படுவேன் என்றும், பாலியல் ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டிய பொருளாக கருதப்படுவேன் என்றும் நான் அறிந்திருந்தேன். சிகாகோ பல்கலைக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி, கவனத்தை ஈர்க்காத உடைகள் அணியவும், பொது இடங்களில் அன்னியர்களை பார்த்து புன்னகை செய்யாமலும் இருக்க மனதளவில் தயாராக இருந்தேன். என் செந்நிற கேசமும், வெண்ணிற சருமமும், நீல நிற கண்களும் தூண்டக் கூடிய குறுகுறுப்பை எதிர் கொள்ள என்னை தயாரித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், இவ்வளவுக்கும் பிறகும் அந்த சூழலுக்கு நான் தயாராகியிருக்கவில்லை.

அந்தக் கண்களை எதிர் கொள்வதற்கு யாராலும் தயார் படுத்திக் கொள்ள முடியாது. எனது உடலை தமக்கு சொந்தமாக பார்க்கும் கண்கள்; நான் அவர்களது பார்வையை சந்திக்கிறேனா இல்லையா என்பதை பற்றிக் கவலைப் படாமல் என் உடலை சொந்தம் கொண்டாடும் கண்களை எதிர் கொள்வதற்கு எப்படி தயாரித்துக் கொள்வது? பழக் கடைக்கோ, தையல் கடைக்கோ போகும் வழியில் குத்திக் கிழித்த பார்வைகள் என்னை செதில் செதிலாக செதுக்கி சிதைத்தன. என்னுடைய நடை, உடைகள் பாலியல் சைகைகளாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க தயாரித்திருந்தேன். ஆனால் அந்த நாட்டில் பாலியல் சைகைகள் என்ற விஷயமே இல்லை,  பெண்களின் உடல்கள் அனைத்துமே ஆண்களால் சொந்தமாக்கிக் கொள்ளப்பட வேண்டியவை அல்லது ஆண்களால் மறைத்து பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகியிருக்கவில்லை.

நான் என் உடலை போர்த்திக் கொண்டேன், ஆனால் மறைத்துக் கொள்ளவில்லை. எனவே, ஒவ்வொரு கண்ணாக, ஒவ்வொரு படமாக நான் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டேன். நான் நடக்கும், திட்டும், துரத்தும் எத்தனை புகைப்படங்கள் இந்தியாவிலும் இணையத்திலும்  உலா வருகின்றன என்று யாருக்குத் தெரியும். என்னுடைய, என் தோழிகளுடைய உருவத்தை எத்தனை அன்னியர்கள் பாலியல் பிம்பங்களாக பயன்படுத்தினார்கள் என்று யாருக்குத் தெரியும்? என்னால் முடிந்த அளவுக்கு நான் பலவற்றை அழித்தேன், ஆனால் நான் அழித்தது அந்த பெருங்கடலில் ஒரு துளி மட்டும்தான். அவர்கள் எடுத்துக் கொண்ட ஒவ்வொன்றையும் திரும்பி பெறுவதற்கு  வாய்ப்பே இல்லை.

மிகேலா கிராஸ்மூன்று மாதங்களாக நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன். இருந்தும் நான் நினைத்துப் பார்த்திராத பல நல்ல அனுபவங்களை பெற்றேன். என்னுடைய அந்த கெட்ட கனவு வீடு திரும்பும் போது விமான நிலைய ஓடுகளத்தில் முடிவுக்கு வரும் என்று நம்பினேன். ஆனால் உண்மையில் அங்குதான் வதை ஆரம்பமானது.

ஊருக்குத் திரும்பிய பிறகு, குங்குமத்தின் ரத்தச் சிவப்புக்கு பழகிய கண்களுக்கு கிறிஸ்துமசின் சிவப்பு நிறம் வெளிறியிருந்தது. உணவு காரசாரமற்று சப் என்று இருந்தது. எனது வலியும், மற்ற அனைத்து சத்தங்களையும் மூழ்கடிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டு என் ரத்தத்தில் ஓடிக் கொண்டிருந்த கோபமும் நண்பர்கள், குடும்பத்தினர், கல்லூரி வகுப்புகள், மருத்துவர் ஆலோசனைகள் எதையும் விட நிஜமாக இருந்தன. சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பி விட்டது குறித்த உற்சாக உணர்வை தாண்டிய சில மாதங்களுக்குப் பிறகு, என்னைத் துரத்தும் நினைவுகளிலிருந்து நகர்ந்து விட்டதாக நினைத்த போது ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று காலையில் செத்து விடும் ஆசையோடு கண் விழித்தேன்.

கல்லூரியின் மனோதத்துவ ஆலோசகர்கள் எனக்கு “ஆளுமை முறைகேடு” ஏற்பட்டிருப்பதாக முடிவு செய்து பரிந்துரைத்த மாத்திரைகளை நான் சாப்பிட மறுத்தேன். பொது இடத்தில் நடந்த ஒரு கலாட்டாவுக்குப் பிறகு என் விருப்பத்துக்கு எதிராக ஒரு மனநோய் இல்லத்தில் பிடித்து அடைக்கப்பட்டேன். கல்லூரியிலிருந்து “மன நோய்க்கான விடுமுறை” எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும் என்ற நிபந்தனையோடு விடுவிக்கப்பட்டு சில நாட்கள் அம்மாவுடன் போய் வாழ்ந்தேன். என் சித்தம் கலங்கி விட்டது என்று நினைத்தேன்.

மிகேலா கிராஸ்இது எதையும் நான் இந்திய அனுபவங்களுடன் தொடர்புபடுத்தவில்லை – அந்த அனுபவங்களிலிருந்து நான் நகர்ந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் ஒரு மனவியல் நிபுணர் எனக்கு பிடிஎஸ்டி (கடும் பாதிப்புக்குப் பிறகான மன அழுத்த முறைகேடு) இருப்பதாக கண்டறிந்த போதுதான் நான் அந்த அனுபவங்களிலிருந்து சிறிதளவு கூட விடுபட்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். நான் அந்த காலகட்டத்தில் உறைந்து போயிருக்கிறேன்; விழுந்து விட்டிருக்கிறேன்; சிதறி விட்டிருக்கிறேன்.

ஆனால், நான் மட்டும் தனி இல்லை. பிடிஎஸ்டி வந்து மனநோய் இல்லத்தில் அடைக்கப்பட்ட, செத்துப் போக நினைத்த நபர் நான் மட்டும் இல்லை. சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து என்னுடன் பயணம் செய்தவர்களில் மனநோய்க்கான விடுப்பு எடுத்துக் கொண்டு, வகுப்புகளை விட்டுச் சென்ற பெண் நான் மட்டும் இல்லை.

எனது வலியை புரிந்து கொண்டது, அதை போக்க உதவா விட்டாலும் ஏற்றுக் கொள்ள உதவியது. “மன அழுத்த முறைகேடு” என்பது பொருத்தமற்ற சொல்லாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு முறைகேடு என்றால் அதை சரி செய்ய முடிய வேண்டும். ஆனால், நிதர்சனத்தை நேருக்கு நேர் சந்தித்ததற்கான, ஒருவரது மனிதம் பறிக்கப்படுவதை மூன்று மாதங்களாக உணர்ந்ததற்கு என்ன தீர்வு? இந்தியாவில் நான் பெற்ற அனுபவங்களுக்கும் எனக்குக் கிடைத்த ஏமாற்றங்களுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உண்மை ஒரு பரிசு, ஒரு சுமை, ஒரு பொறுப்பு. அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவைப் பற்றி என்னிடம் கேட்ட நீங்கள் கேட்க விரும்பாத கதை இது. ஆனால், உங்களுக்குத் தேவையானது இந்தக் கதைதான்.

தமிழாக்கம் : அப்துல்

படங்கள், கட்டுரை – நன்றி:  சிஎன்என் CNN

மறதி வரும் நேரம் !

7
நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்
அனில் அம்பானிக்கும் ஞாபக மறதி நோய் வந்திருக்கிறது.

“இங்க அடிபட்டிருக்கும், இங்கதான் மெடுலா ஆப்லங்கேட்டா இருக்கு. இங்க அடிபட்டா ஷாக்ல டெம்ப்ரரி மெமரி லாஸ் வரும்.” கிரிக்கெட் விளையாடி, கால் ஸ்லிப் ஆகி கீழே விழுந்து விட்ட “நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்” நாயகனுக்கு இப்படியாக குறுகிய கால ஞாபக மறதி நோய் வந்து விடுகிறது. அதோ போல, அனில் திருபாய் அம்பானி குழும முதலாளி அனில் அம்பானிக்கும் நீண்ட கால ஞாபக மறதி நோய் வந்திருக்கிறது.

ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனி இருப்பதே நினைவில்லை என்றும் தனக்குச்  சொந்தமான ரிலையன்ஸ் டெலிகாம் ஸ்வான் டெலிகாமில் முதலீடு செய்தது பற்றி எதுவும் தெரியாது என்றும் 2G அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.

இப்படி மெமரி லாஸ், அதாவது ஞாபக மறதி வரணும்னா, என்ன நடந்திருக்கணும்?

அதைப் புரிந்து கொள்ள இன்னொரு மெமரி லாஸ் நபரை பார்க்கலாம். திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் டிவி இயக்குனருமான தயாளு அம்மாளுக்கு வயோதிகம் காரணமாக மறதி வியாதி வந்திருப்பதாகவும் அதனால் டெல்லிக்கு வந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2G அலைக்கற்றை ஊழல் என்னும் பிரம்பை வைத்து திமுக-தலைமையை “ஆட்றா ராசா ஆடு”ன்னு ஆட வைப்பதற்கு காங்கிரஸ் சிபிஐயை பயன்படுத்துகிறது. ஆ ராசாவும், கனிமொழியும் திகார் சிறை நிரப்பி திரும்பிய பிறகு நாடகத்தில் அடுத்ததாக தயாளு அம்மாள் சாட்சி சொல்லும் படலம் நடத்தப்பட்டு வருகிறது.

தயாளு அம்மாள்
தள்ளாத வயதிலான தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்று கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் சாதிக்கின்றன.

வயோதிகத்தால் ஞாபக சக்தியை இழந்து, ஆங்கிலத்தில் பேசக் கூட முடியாத தயாளு அம்மாள்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஸ்வான் டெலிகாமிடமிருந்து நடந்த பணப் பட்டுவாடா தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று சிபிஐ அடம் பிடிக்கிறது. அப்படிப்பட்ட தள்ளாத வயதிலான தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்று கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் சாதிக்கின்றன.

தயாளு அம்மாளின் உடல்நிலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல், அதை அடுத்து அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு, எய்ம்ஸ் மருத்துவக் குழு சென்னைக்கு வந்து தயாளு அம்மாளை பரிசோதனை செய்தது என்று ஊழல் ஒழித்தலை நோக்கிய சட்டத்தின் பயணம் வேகமாக நடை போட்டு வந்தது.

எய்ம்ஸ் மருத்துவர் குழு தயாளு அம்மாளின் வயோதிக நிலை குறித்தும் நீண்ட தூரம் பயணம் செய்ய அவரது உடல்நிலை ஒத்துழைக்காது என்றும் அறிக்கை கொடுத்தது. ஒரு முறை நீதிமன்றத்தில் எழுந்து நின்றாலே லட்சங்களில் கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்களின் கார சாரமான வாதங்களுக்குப் பிறகு தயாளு அம்மாளின் சாட்சியத்தை பதிவு செய்ய சென்னையில் ஒரு நீதிமன்ற குழுவை  நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி எஸ் சிங்வி, கே எஸ் ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அரசியல் லாவணி சண்டைக்காக காங்கிரஸ் களத்தில் இறக்கியிருக்கும் சிபிஐயும், திமுக களத்தில் இறக்கியிருக்கும் தயாளு அம்மாளும் நடத்தும் இழுபறி, 2ஜி ஊழல் விசாரணை தேர்தல் கூட்டணி முடிவாகும் வரை தொடரும். ஊழல் செய்த கார்ப்பரேட் கம்பெனி கிரிமினல்கள் வழக்கம் போல தமது தொழிலை தொடர்வார்கள்.

அனில் அம்பானி
அனில் அம்பானி. (படம் : நன்றி தி இந்து)

இப்படிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் மூலம் ஊழலை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கும் அதே சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், அதே நீதிபதியின் முன்பு வழக்கு விசாரணைக்குப் போகும் போதுதான் அனில் அம்பானியை ஞாபக மறதி வியாதி தாக்கியிருக்கிறது. ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல வேண்டும் என்றதும் 54 வயதிலேயே அம்பானிக்கு ஞாபக மறதி நோய் வந்து விட்டிருக்கிறது.

சென்ற வியாழக் கிழமை சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ பி சைனி முன்பு 2 மணி நேரம் நடந்த விசாரணையில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனராக தான் ஒரு காலத்தில் இருந்திருப்பது வரை அவருக்கு நினைவிருக்கிறது. ஆனால் அது எந்த கால கட்டத்தில் என்பது மறந்து போயிருக்கிறது. 2007-ம் ஆண்டில் அதன் இயக்குனராக இருந்தாரா என்பதும் நினைவில் இல்லை.

2007-ம் ஆண்டில்தான் ரிலையன்ஸ் டெலிகாம் ஷாகித் பால்வா என்பவருக்கு சொந்தமான ஸ்வான் டெலிகாம் என்ற பினாமி நிறுவனத்தில் ரூ 900 கோடி அளவுக்கு முதலீடு செய்து அதன்  மூலமாக 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடாக கூடுதல் உரிமங்களை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தது என்று சிபிஐ குற்றம் சாட்டியிருக்கிறது. இதே ஸ்வான்தான் அலைக்கற்றை ஒதுக்கலுக்கு கட்டணமாக தயாளு அம்மாளின் (மற்றும் கனிமொழியின்) கலைஞர் டிவிக்கு பணம் அனுப்பியது என்றும் சிபிஐ குற்றம் சாட்டியிருக்கிறது.

ரிலையன்ஸ் டம்மி நிறுவனங்களின் வலைப் பின்னல்களை உருவாக்கி அலைக்கற்றை உரிமம் வாங்க முயற்சித்தாலும், ரிலையன்ஸ் முதலாளி அனில் அம்பானி மீது குற்றம் சாட்டாமல் நிறுவன அதிகாரிகள் கௌதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்தர் பிபாரா ஆகிய 3 பேர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது சிபிஐ. அவர்கள் மீதான வழக்கில் சாட்சி சொல்வதை ஒட்டிதான் அனில் பாயின் மறதி இழப்பு நிகழ்ந்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட கௌதம் தோஷி  தன்னை சந்தித்து ஸ்வான் டெலிகாமின் ரூ 1 மதிப்புள்ள பங்குகளை ரூ 1000 விலையில் வாங்குவது குறித்து விவாதித்ததாக சிபிஐ விசாரணையில் அனில் அம்பானி கூறியிருந்தார். கௌதம் தோஷி மீதான வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியமாக அனில் அம்பானி அழைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்துக்கு வர முடியாது என்று பல முறை முரண்டு பிடித்து உச்சநீதி மன்றம் வரை மனு தாக்கல் செய்தார் அம்பானி. தயாளு அம்மாள் போல, வயது அவருக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் உச்சநீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல மறுத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தனது முன்னாள் ஊழியர்கள் மீதான வழக்கில் அரசுத் தரப்புடன் ஒத்துழைக்காமல், பிறழ் சாட்சியாக மாறியிருக்கிறார். ஒரு வேளை, மிரட்டல் அல்லது உயிருக்கான அச்சுறுத்தல் காரணமாக அவரது நினைவுத் திறன் குளறுபடி செய்கிறதோ என்று விசாரித்த நீதிபதியிடம் அப்படி எல்லாம் இல்லை என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் அம்பானி. நீதிமன்றத்தில் தவறான வாக்குமூலம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரியுமா என்று நீதிபதி கேட்ட போது, அதையும் அம்பானி மறந்து விடவில்லை என்பது தெரிய வந்தது. ஆகவே இது குறுகிய கால நினைவு இழப்பு இல்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவு இழப்பு (செலக்டிவ் அம்னீசியா). தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு ஜெயலலிதா டான்சி நிலபேரத்தில் உள்ளது தன கையெழுத்தையே நினைவில்லை என்று சொன்னவர். ஆனால் அத்வானிக்கு வந்ததாக அவர் சொன்னது செலக்டிவ் அம்னீசியா நோய் என்பது நல்லதொரு நகைமுரண்.

ஸ்வான் டெலிகாம் ரிலையன்சின் பினாமி கம்பெனி என்றோ, அந்த கம்பெனி 2007-ல் ஜம்மு&காஷ்மீர் சேவை வட்டாரத்தின் உரிமம் வேண்டி விண்ணப்பித்தது என்றோ, தனக்கு சுத்தமாக தெரியாது என்று கூறுகிறார் அம்பானி. முன்பு சிபிஐ-யிடம் கொடுத்த அத்தகைய தனது வாக்குமூலம் பற்றி எந்த நினைவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

ஸ்வான் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்தின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு விண்ணப்ப படிவத்தில் ஒட்டப்பட்டுள்ள கணக்கை பயன்படுத்துபவர்களின் புகைப்படமும்,  கையொப்பமும் தன்னுடையதும், தனது மனைவி டினா அம்பானியுடையதும்தான் என்று அவர் ஏற்றுக் கொண்டார். இரண்டு பேரின் வருமான வரி கணக்கு அட்டைகளின் நகலையும் அவர் அடையாளம் கண்டு கொண்டார். ஆனால், ஸ்வான் கன்சல்டன்ட்ஸின் தலைமை நிறுவனம் ரிலையன்ஸ் எனர்ஜி என்றும், அதன் உரிமையாளர்கள் தானும் தன் மனைவியும் என்றும் பிரமாணம் செய்யும் வங்கி ஆவணத்தைப் பற்றி தான் கேள்விப்பட்டதே இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

ஸ்வான் டெலிகாம் கூடுதலாக 13 சேவை வட்டாரங்களின் 2G அலைக்கற்றை உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்ததும் அப்படி விண்ணப்பிக்க கூடுதல் முதலீடு தேவைப்பட்டதால்தான் ரிலையன்ஸ் ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதா என்றும் சட்டத்தை ஏமாற்றுவதற்காக அந்த பங்குகளின் அளவு 9.9 சதவீதத்தை தாண்டாமல் பார்த்துக் கொண்டோமா என்பதும் தனது நினைவில் இல்லை என்று சொல்லியிருக்கிறார் அனில் அம்பானி. ஸ்வான் டெலிகாம் உண்மையில் யாருக்கு சொந்தம் என்பதை மறைக்கும் வண்ணம் அதன் பங்குகள் பிரித்துக் கொள்ளப்பட்டனவா என்றும் தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அனில் அம்பானி பல ஆண்டுகளாக இவ்வளவு மோசமான நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.

டைகர் டிரேடர்ஸ் (புலி டிரேடர்ஸ்), ஜீப்ரா கன்சல்டன்ட்ஸ் (வரிக்குதிரை கன்சல்டன்ட்ஸ்), பேரட் கன்சல்டன்ட்ஸ் (கிளி கன்சல்டன்ட்ஸ்), ஸ்வான் கன்சல்டன்ட்ஸ் (அன்னம் கன்சல்டன்ட்ஸ்) போன்ற பல வகை விலங்கினங்கள் பெயர் கொண்ட தொழில் முனைவு நிறுவனங்கள் இருக்கின்றனவா என்பதும் அவற்றின் இயக்குனர் கூட்டங்களில் தான் கலந்து கொண்டோமா என்பதும் அவரது நினைவுப் பதிவுகளிலிருந்து மறைந்து விட்டிருக்கின்றன. நூற்றுக் கணக்கில் புதுப்புது கம்பெனிகள் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் போது அவற்றுக்கு பெயர் பஞ்சம் ஏற்படுவதும் இயற்கை, அப்படி புதுசு புதுசாக உருவாக்கிய பெயர்களை நினைவில் வைத்திருக்க செய்யும் முயற்சியில் மறதி வியாதி ஏற்படுவதும் இயற்கைதான் போலிருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்துக்கு போய் பல மணி நேரம் சிபிஐ விசாரணை அதிகாரிகளுடன் பேசியது உண்மைதான் என்றாலும் அங்கு என்ன பேசினோம் என்பது மறந்து விட்டதாகவும், அவர் சொன்னதை சிபிஐ பதிவு செய்ததா என்பதும் நினைவில் இல்லை என்றும் அம்பானி சொல்லியிருக்கிறார். நல்ல வேளையாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் அனில் அம்பானிக்கு நினைவு இருக்கிறது. அவர்களது புகைப்படங்களை காட்டிய போது அடையாளம் சொல்ல முடிந்திருக்கிறது. ஆனால், அவர்கள் என்ன பதவி வகித்தார்கள் என்பது மறந்து போயிருந்தது.

அனில் அம்பானி
தொழில் முனைவர்களான அனில் அம்பானி போன்றவர்கள் சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்கள்தான்.

அதாவது, அனில் அம்பானியின் நிறுவனத்தில் வேலை செய்யும் இந்த மூன்று கிரிமினல்களும், அவருக்குத் தெரியாமல் அவரை ஏமாற்றி ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனியில் முதலீடு போட்டு, அதன் மூலம் அகில இந்திய 2G அலைக்கற்றை உரிமங்கள் வாங்கி லாபம் சம்பாதிக்க முயற்சித்திருக்கிறார்கள். அனில் அம்பானி இதைப் பற்றியெல்லாம் தெரியாத ஏமாளியாக இருந்திருக்கிறார் அல்லது அவரது ஞாபக மறதி வியாதி அவ்வளவு கடுமையாக இருந்திருக்கிறது.

கூடவே, தம்முடைய கடும் உழைப்பால் இந்திய பொருளாதாரத்தையே தலை தெறிக்க வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் தொழில் முனைவர்களான அனில் அம்பானி போன்றவர்கள் சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்கள்தான் என்றும் இதை புரிந்து கொள்ளலாம். ஆனால், அத்தகைய  ‘தொழில் முனைவுகளின்’ ஆதாயங்களை பல ஆயிரம் கோடிகளாக அறுவடை செய்வதற்கு மட்டும் அவர்களது நினைவு தப்புவதில்லை.

அனில் அம்பானியைத் தொடர்ந்து அடுத்த நாள் (வெள்ளிக் கிழமை) சாட்சியம் சொல்ல வந்த அவரது மனைவி டினா அம்பானிக்கு இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லை. “நான் ஒரு குடும்பப் பெண், பல சமூக சேவைகள் செய்து வருகிறேன். ஒரு மருத்துவமனை நடத்தி வருகிறேன், எனக்கும் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் செயல்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.

சாட்சி சொல்வதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பே நீதிமன்ற வளாகத்துக்கு வந்து விட்டார் முன்னாள் பாலிவுட் நடிகையும் இன்னாள் அம்பானியுமான டினா.  55 வயதான டினாவின் வருகையை முன்னிட்டு நீதிமன்றத்தின் முன்பு பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆட்டோகிராஃப் கேட்டு முண்டிய வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்திருக்கிறார் டினா அம்பானி. அனில் அம்பானியைப் பார்க்க வந்த கூட்டத்தை விட டினா அம்பானிக்கு அதிக கூட்டம் கூடியதாக வணிகப் பத்திரிகைகள் புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

டினா அம்பானி
ஆட்டோகிராஃப் கேட்டு முண்டிய வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்திருக்கிறார் டினா அம்பானி. (படம் : நன்றி தி இந்து)

நிறுவன மேலாளர்கள் ஆவணங்களை தயாரித்துக் கொண்டு வந்தால் அவற்றில் கையெழுத்து போடுவதுதான் தன் வேலை என்றும், அவற்றை சந்தேகித்தது இல்லை என்றும், அதற்கு மேல் விபரங்கள் தெரியாது என்றும் அவர் ஒத்துக் கொண்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறு நிறுவனங்களின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாக நினைவில்லை, ஆனால் தான் கலந்து கொண்டதாக கூட்டத்தின் குறிப்புகளில் (மினிட்ஸ்) எழுதியிருந்தால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் இயக்குனர்கள் கூட்டங்களை தான் தலைமை ஏற்று நடத்தியதும், அவற்றில் பங்குகளை வினியோகிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதும், அது போலவே உண்மையாகத்தான் இருக்க வேண்டும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது குறித்து தனக்கு எதுவும் நினைவில்லை என்றும் சொல்லி விட்டிருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று ரிலையன்ஸ் அதிகாரிகளில் இரண்டு பேரை தெரியவே தெரியாது என்றும் கௌதம் தோஷியை மட்டும் தெரியும் என்று சொல்லியிருக்கிறார் டினா. அவருடன் நேரடியாக பழக்கம் இல்லா விட்டாலும், தன் வீட்டில் நடக்கும் தீவாளி விருந்துகளில் அவரை பார்த்திருப்பதாக கூறியிருக்கிறார்.

டினாவைப் பொறுத்த வரை அவர் எளிய குடும்பத் தலைவி, சமூக சேவைகளில் காலத்தைக் கழித்து வருபவர்.  அந்த சேவைகளின் ஒரு பகுதியாக அம்பானி குழுமம் பன்றிக் குட்டிகளைப் போல பெற்றுப் போடும் பினாமி நிறுவனங்களுக்கு இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டு நீட்டிய ஆவணங்களில் கையெழுத்து போட்டிருக்கிறார். டினா போன்ற முன்னாள் சினிமா நடிகையை, இன்னாள் எளிய குடும்பத் தலைவியை இயக்குனராக வைத்துக் கூட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இயங்க முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது

டினாவின் சாட்சியத்தைக் கேட்டு மன நிறைவு பெற்று விட்ட நீதிபதி சைனி “யே அம்பானி சாப் சே பெட்டர் ஹை (இவர் அம்பானி சாரை விட நல்லா பதில் சொல்றார்)” என்று டினாவை பாராட்டியிருக்கிறார். அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடம் நன்றாக வேலை செய்திருக்கிறது என்ற திருப்தியில் “அதனாலதான் அவங்க அவரோட பெட்டர் ஹாப்” என்று டயலாக் அடித்திருக்கிறார் அம்பானி தரப்பு வக்கீல்களில் ஒருவர்.

டினா அம்பானி
நீதிபதி சைனி “யே அம்பானி சாப் சே பெட்டர் ஹை (இவர் அம்பானி சாரை விட நல்லா பதில் சொல்றார்)” என்று டினாவை பாராட்டியிருக்கிறார். (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)

இறுதியாக “நீங்க எங்க ஆஸ்பத்திரிக்கு கண்டிப்பா வரணும். அது நல்ல ஆஸ்பத்திரி, 107 படுக்கைகள் இருக்கு. நான் மனசார உங்களை அழைக்கிறேன். நீங்க ஆஸ்பத்திரிக்கு சிறப்பு விருந்தினரா வரலாம்” என்று டினா நீதிபதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதைக் கேட்டு நீதிபதி சைனி புன்னகை மட்டும் செய்தாராம். சீக்கிரம் கை, காலை ஒடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று டினா அழைத்ததாக யாரும் தப்பாகப் புரிந்து கொண்டு விடக் கூடாது என்று,  “டினா, நீதிபதியை சிறப்பு விருந்தினராகத்தான் வரச் சொன்னார்” என்று ரிலையன்ஸ் சார்பாக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே விளக்கம் அளித்திருக்கிறார். நாட்டின் தலை சிறந்த வழக்கறிஞரின் அறிவு, அனில் அம்பானி போன்ற கிரிமினல்களின் ஊழல்களை சட்டப்படி நியாயப்படுத்துவதோடு, ஒரு முன்னாள் பாலிவுட் நடிகையின் உளறல்களுக்கு கோனார் உரை எழுதுவதற்கும் பயன்படுகிறது.

தனக்கு செலக்டிவ் அம்னீசியா ஏற்பட்டிருப்பதாக வாதிட்டு ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க முயற்சித்த ஜெயலலிதா மீதான டான்சி நில வழக்கில் குற்றம் நடந்திருப்பது தெரிந்தாலும், சட்டப்படி நிரூபிக்கப்படாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்ததை உச்ச நீதிமன்றமே உறுதி செய்தது. அது போல சிபிஐ விசாரணை, சிறப்பு நீதிமன்றம், உச்சநீதி மன்ற கண்காணிப்பு அனைத்தும் அம்பானி போன்ற கார்ப்பரேட் தரகர்களின் நலன்களை எப்போதுமே பாதுகாத்து நிற்கும் என்பது இன்னும் ஒரு முறை தெளிவாகிறது.

– பண்பரசு

மேலும் படிக்க

கல்வி உரிமை கோரி உசிலையில் ஆர்ப்பாட்டம் !

2
  • காற்றில் பறக்குது கல்வி உரிமை
  • ஆசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடுது அரசு பள்ளிகள்
  • ஆட்டிப் படைக்கிறது ஆங்கில மோகம்
  • கொள்ளையடிக்கிறான் கல்வி வியாபாரி
  • அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து !
  • தனியார் கொள்ளையைத் தடுத்து நிறுத்து !

உசிலையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் !

ன்பார்ந்த பெற்றோர்களே !

“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” – என்றார் திருவள்ளுவர். கல்வி என்பது கண்ணுக்குச் சமம். ஆனால், அந்தக் கல்வியை மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு தனது கடமையிலிருந்து பின் வாங்கிக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளை அம்போ என்று அனாதையாக விட்டு விட்டு தனியார் பள்ளிகளைச் சீராட்டி வளர்க்கிறது. என்ன கொடுமை இது!

தனியார் பள்ளிதனியார் கல்வி நிறுவனங்களின் குறிக்கோள் தரமான கல்வி அல்ல. மாறாக கோடி கோடியாகப் பணம் பறிப்பதே அவர்களது நோக்கம். 3 வயது பச்சிளம் குழந்தைக்கு படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்கு மிக சாதாரண பள்ளிகளில் கூட ரூ 25 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். பிற வகுப்புகளுக்கு லட்சக் கணக்கில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. அரசோ அதை ஆதரிக்கிறது. நீதிமன்றமோ அதை ஆமோதிக்கிறது. பெற்றோர்களோ பணத்துக்காக அல்லாடுகிறார்கள். ஏன் இந்த அவலநிலை?

14 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டாய இலவசக் கல்வியை அரசே வழங்க வேண்டும் என்று நம்முடைய அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால், அந்த உரிமை இன்று முற்றிலும் மறுக்கப்படுகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் கொண்டு வந்துள்ள எல்லாம் தனியார் மயம் என்ற கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை கல்வியிலும் அமல்படுத்தத் துடிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். எனவேதான் கல்விக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வரவு,செலவு திட்டத்தில் 6 விழுக்காடு நிதி ஒதுக்கி வந்த அரசு இப்போது 2 விழுக்காடு மட்டுமே நிதி ஒதுக்குகிறது. இதனால் அரசுப் பள்ளிகள் சவலைப் பிள்ளைகள் போல் நலிந்து வருகின்றன. இதைத் தட்டிக் கேட்பதற்கு பெற்றோர்களாகிய நாம் முன் வருவதில்லை.

அரசு புள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. கட்டிட வசதி இல்லை. குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானம், நூலகம் போன்ற வசதிகள் இல்லை. உடற்கல்வி, ஓவியப் பயிற்சி, கைவினைப் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. நம்முடைய பாடத் திட்டத்தோடு அதனைக் கற்பிக்கும் திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை. திட்டங்கள் எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. மழலையர் கல்வி, தொடக்கக் கல்வியில் அரசு பள்ளிகளிலோ, அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ, தாய் மொழி தமிழ் வழியிலே கல்வி கற்க தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் முன் வராத அவல நிலையை அரசு உருவாக்கி வருகிறது. அதாவது அரசு பள்ளிகளின் அடித்தளம் தகர்க்கப்பட்டு அது தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

தாய்மொழி வழிக் கல்வி தான் மிகச் சிறந்த கற்பித்தல் முறை என்பது உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தாலும் தமிழ் நாட்டில் மட்டும் அது மறுக்கப்படுகிறது. ஆங்கில வழியில் படித்தால்தான் பெருமை, கவுரவம், நல்ல எதிர்காலம் என்று கருதும் போலித்தனம் மக்களிடையே பரப்பப்பட்டுள்ளது. அதைத்தான் இன்று தனியார் கல்வி வியாபாரிகள் காசாக்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகிறார்களே தவிர, சுயமாக சிந்திக்கும் ஆற்றலையும், துணையின்றி இயங்கும் துணிச்சலையும் இழந்து விடுகின்றனர். ஏனென்றால் அவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்ற வகையிலே வேலை செய்யும் இயந்திரங்களாக உருவாக்கப்படுகின்றனர். இந்தியாவை ஆண்ட போது கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய கூலிகளைக் கடல் கடந்து கொண்டு போனார்கள். இப்போது கம்ப்யூட்டர் கூலிகளைக் கொண்டு போகிறார்கள்.

கடுமையான போட்டியின் விளைவாகவும், தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் ஆட்குறைப்பு நடவடிக்கை தீவிரமாக இருக்கிறது. பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வி பயின்ற பலர் இன்று மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும்படி தள்ளப்பட்டுள்ளனர். தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் வந்து ஏராளமான ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக கழித்துக் கட்டுகிறது அரசு. மனித ஆற்றலை, உழைப்பை விற்பதில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியின் காரணமாக சம்பளம் குறைக்கப்படுகிறது. இந்த உண்மையை உணராத மக்கள் ஆங்கிலம் படித்தால் எதிர்காலம் வளமாகி விடும் என்று அப்பாவித் தனமாக நம்புவதால், கல்வி வியாபாரிகளின் கல்லா நிரம்பி வழிகிறது. ஆனால், தாய் மொழியைத் தவிர வேறு மொழியே தெரியாத பலர் சமூக நிலைமைகளைப் புரிந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதைப் பரவலாகப் பார்க்கிறோம்.

இப்போதும் கூட ஆரம்பக் கல்வி தவிர்த்த இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இன்னமும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்தான் 75 விழுக்காடு மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆனால், அரசுதான் அதன் தேவைகளை நிறைவு செய்ய கட்டாயமாக மறுத்து வருகிறது. தம்முடைய பிள்ளைகளின் படிப்புக்காக, எதிர்காலத்திற்காக – எல்லாவற்றையும் இழக்கத் தயாராகி தனியாருக்குக் கொட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தி, சீரமைக்கக் கோரி போராடினால் அது நல்ல பயனைத் தரும்.

மாணவர்களின் கல்வித் திறனை சோதிப்பதற்காக பைசா (PISA) என்ற அமைப்பு மேற்கொண்ட முயற்சியில் 74 நாடுகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் 73-வது இடத்தைப் பிடித்தவர்கள் ஆங்கில வழிக் கல்வி பயின்ற இந்திய மாணவர்கள். முதல் இடத்தைப் பிடித்தவர்கள் தங்கள் தாய் மொழியில் கல்வி பயின்ற  சீன மாணவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால், கேள்விகளுக்கான விடைகளை எளிதில் கண்டு பிடிக்கும் ஆற்றல் அவர்களிடம் இருந்ததற்குக் காரணம் அவர்கள் தாய்மொழியில் சிந்திப்பது, படிப்பதுதான்.

எனவே பெற்றோர்களாகிய நாம் நமது தாய்மொழியின் மீது நம்பிக்கை வைத்து நம்முடைய பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கவும் அப்பள்ளிகளின் தரம் உயர்த்தவும் போராட முன்வர வேண்டும்.

தமிழக அரசே,

  • அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மொழிக் கல்விதான் வேண்டும்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கற்பித்தலை உடனே நிறுத்த வேண்டும்.
  • ஆங்கிலத்தை மொழிப்பாடமாக மட்டும் கற்பிக்க வேண்டும். அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்பித்தல் கூடாது.
  • அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அவர்களுக்கு தனிப் பயிற்ச அளிக்க வேண்டும்.
  • கழிப்பறை, குடிநீர், நூலகம், விளையாட்டரங்கம் இதர தனிப் பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும்.
  • தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் பள்ளிகளை சோதித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி ஒரே வகையான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
  • பொதுப் பள்ளிகள், அருகாமை பள்ளிகளை உருவாக்க வேண்டும்.
  • உசிலையில் சட்ட விரோதமாக கட்டணம் வசூலிக்கும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, டி.இ.எல்.சி. நாடார் மேல்நிலைப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உசிலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும்.
  • சமச் சீர்க் கல்வி அமலில் உள்ளதால் மெட்ரிக் என்று பெயர் வைப்பதை தடை செய்ய வேண்டும்.
  • தாய்மொழி வழிக் கல்வியின் மேன்மையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
உசிலை பேருந்து நிலையம் முன்பு 30.08.13 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை.

தலைமை :
திரு மு ஜெயப்பாண்டி, செயலாளர், மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம், மதுரை

கருத்துரை
வழக்கறிஞர் திரு மு திருநாவுக்கரசு, உயர்நீதிமன்றம், மதுரை
தலைவர் மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம், மதுரை மாவட்டம்

திரு ம லயனல் அந்தோனி ராஜ்,
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

வழக்கறிஞர் திரு சே வாஞ்சிநாதன், உயர்நீதிமன்றம்,
துணை செயலர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

தோழர் கதிரவன்,
ம.க.இ.க மாநில செ.கு. உறுப்பினர்,

தோழர் குருசாமி,
செயலர், வி.வி.மு. உசிலை

வழக்கறிஞர்கள் வெங்கடேசன், சி ராஜசேகரன், சி மன்மதன்,
ம.உ.பா மையம், மதுரை.

நன்றியுரை :
திரு ப ரவி,
ம.உ.பா. மையம் உசிலை

தகவல் :

மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டம்
தொடர்புக்கு : 98431 71026, 94434 71003

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல !

32

சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி பா.ஜ.க.வின் மாநிலப் பொதுச் செயலாளரான ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி, இக்கொலைக்கு முஸ்லிம் தீவிரவாதிகளே காரணம் என்று இந்துவெறியைக் கிளறிவிட்டுப் பெருங்கூச்சல் போடுகின்றன இந்துத்துவ பரிவாரங்கள். ரமேஷ் கொலை மட்டுமின்றி, கடந்த ஈராண்டுகளாகத் தங்களது தலைவர்களையும் பிரமுகர்களையும் இசுலாமிய கூலிப்படையினர் குறிவைத்துக் கொன்று வருவதாகப் பட்டியலிடும் இக்கும்பலின் கோயபல்சு பிரச்சாரத்துக்குப் பக்கமேளம் வாசித்து, மரண பீதியில் இந்து தலைவர்கள் தவிப்பதாக கிசுகிசு பத்திரிகைகள் பீதியூட்டுகின்றன.

ஆடிட்டர் ரமேஷ்.
பிணத்தைக் காட்டி தூண்டப்படும் இந்துவெறி : மர்ம நபர்களால் கொல்லப்பட்ட பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ்.

வீட்டுமனை, கந்துவட்டி, சினிமா, சாராயம், காண்டிராக்ட், கட்டப் பஞ்சாயத்து போன்ற பணம் கொழிக்கும் தொழில்களை நாடெங்கும் அனைத்து ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களும் நடத்தி வருகின்றனர். இவை தவிர கிரானைட், மணற்கொள்ளை போன்ற பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதிலிருந்து, தனிநபர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பது வரை புதிய பொருளாதாரக் கொள்கையால் கொழுத்துவரும் தரகு முதலாளிகள் – நிலப்பிரபுகளின் கூட்டாளிகளாக இருந்து பொறுக்கித் தின்னும் கும்பல்களாக ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களும் தலைவர்களும் சீரழிந்துள்ளனர். இந்துத்துவ பரிவாரங்கள் ஆளும் குஜராத்திலே 49 எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல்களாக அம்பலப்பட்டுள்ளனர். நாடெங்கும் மாஃபியாக்களும் கூலிப் படைகளும் வளர்ந்துள்ளதோடு, பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இத்தொழில்களில் ஏற்படும் மோதல்கள் படுகொலைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு இரகசிய உலகமும் ஓட்டுக்கட்சி அரசியலும் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு ஓட்டுக்கட்சிகளைச் சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு சில கொலைகளைத் தவிர பிற அனைத்துக்கும் அரசியல் காரணங்களோ, மதரீதியான காரணங்களோ இல்லை என்பதும் போலீசு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்பைக் கிளறிவிட்டு, இக்கொலைகளை வைத்து இந்துவெறி பரிவாரங்கள் ஆதாயமடையத் துடிக்கின்றன. இதன்படியே, ரமேஷ் கொலையையொட்டி நடத்தப்பட்ட கடையடைப்புப் போராட்டத்தின் போது பேருந்துகள் மீதான தாக்குதலும், வேலூரில் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் சுவரொட்டிப் பிரச்சாரமும்,கோவை துடியலூரில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலும் இந்துவெறியர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன.

பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர் அரவிந்த் ரெட்டியின் கொலைக்குக் காரணம் பணம் – பெண் விவகாரம். நாகப்பட்டினம் புகழேந்தி கட்டப்பஞ்சாயத்து அடாவடிகளில் ஈடுபட்டு வந்த ஒரு ரவுடி. பரமக்குடி பா.ஜ.க. கவுன்சிலர் முருகன், பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காகடை முருகன் ஆகியோரின் கொலைகளுக்குக் காரணம் நிலத்தகராறு. சென்னை கோயம்பேட்டில் கந்து வட்டித் தொழில் நடத்தி வந்த விட்டல் என்ற பா.ஜ.க. பிரமுகர், கடன் வாங்கியவரது வீட்டிலுள்ள பெண்களை ஆபாசமாகத் திட்டியதாலேயே கடந்த ஆண்டு ஏப்ரலில் கொல்லப்பட்டார். இக்கொலைகளையொட்டி, கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே இந்துக்கள்தான். ஆடிட்டர் ரமேஷ் யாரால், எதற்காகக் கொல்லப்பட்டார் என்பதற்கான தடயமும், அவரது தீவிர ஆதரவாளராகச் சித்தரிக்கப்படும் பா.ஜ.க. மாநிலத் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ராஜராஜேஸ்வரி மறுநாள் தீக்குளித்து மாண்டதற்கான காரணமும் இன்னும் தெரியவில்லை.

நொறுக்கப்பட்ட பேருந்து.
இந்துவெறிக் கும்பல் ஆற்றியுள்ள ‘ஜனநாயகக் கடமை’ : ரமேஷ் கொலையையொட்டி நடத்தப்பட்ட கடையடைப்புப் போராட்டத்தின் போது நொறுக்கப்பட்ட பேருந்து.

ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று ஒருபுறம் கூறும் போலீசு, மறுபுறம் அத்வானி மதுரைக்கு வந்த போது பைப் வெடிகுண்டு வைக்க முயன்றதாகச் சொல்லப்படும் தலைமறைவு முஸ்லிம் குற்றவாளிகளைத் தேடுவதாகவும், அவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இக்கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு முக்கியத்துவமளிக்கிறார். விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே மொத்த சந்தேகத்தையும் முஸ்லிம்கள் மீது திருப்பிவிட்டு, திட்டமிட்டே முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை அரசும் ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.

தமிழகத் தேர்தல் அரசியல் கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் உள்ள இந்துவெறி பா.ஜ.க., மக்களிடையே இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு தமிழகத்தில் காலூன்றும் நோக்கத்துடனேயே இத்தகைய கொலைகளைக் காட்டி, கொல்லப்பட்டவர்களை இந்துக்களின் தலைவர்களாகவும் தேசத்துக்காக உழைத்த மாபெரும் தியாகிகளாகவும் சித்தரித்து, மற்ற ஓட்டுக் கட்சிகளுக்கு இல்லாத தனிச் சிறப்பான அடையாளமாகவும், தங்களை இந்துக்களின் பிரதிநிதிகளாகவும் காட்டிக் கொள்கிறது. இந்துவெறி கும்பலின் இச்சதியை அம்பலப்படுத்த முன்வராமல், தமிழகத்தில் கொலைகள் பெருகி வருவதாக ஓட்டுக்கட்சிகள் அறிக்கை வாசிக்கின்றன. இந்துவெறி பாசிசப் பரிவாரங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு வன்னிய சாதிவெறிக் கட்சியான பா.ம.க. ஆதரவு தெரிவித்து, சாதி-மதவெறி அணிதிரட்டலை முன்தள்ளுகிறது. பெரியார் பிறந்த மண்ணில் காலூன்றத் துடிக்கும் இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளின், சாதிவெறியர்களின் சூழ்ச்சிகள்- சதிகளை விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிப்பதே இன்றைய அவசர அவசியக் கடமையாகியுள்ளது.

– மனோகரன்

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

டுகெதர் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்​போம்​!​

1

​​​கோவை கணுவாய் அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள டுகெதர் டெக்ஸ்டைல்ஸ் இண்டியா பிரைவேட் என்னும் ஆயத்தஆடை தயாரிக்கும் நிறுவனம் 16 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்றது. இந்த நிறுவனத்தில் சிஐடியு, பிஎம்எஸ் என்ற இரண்டு தொழிற் சங்கங்கள் இருந்து வந்துள்ளன.  இந்த தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டு வந்தன.  அதனால் அதிருப்தி அடைந்த 69 தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கத்தை துவங்கினார்கள்.

இதனை சகித்துக் கொள்ளாத நிர்வாகம் தொழிலாளர்களை அடக்குவதற்காக சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு வழங்கியது. இதை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கத் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனை நிர்வாகம் மறுத்தது.

  • அனைவருக்கும் வழங்கியது போல் எங்களுக்கும் 1000 ருபாய் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
  • பிரதி மாதம் ஊதியம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதியில் வழங்கவேண்டும்.

என்ற இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து சங்க முன்னணியாளர்கள் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் அதை மறுத்த நிர்வாகம் தொழிலாளர்களை போராட்ட நிலைக்கு தள்ளியது.

அதன் காரணமாக தொழிலாளர்கள் 10.08.2010 தேதியில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். நிர்வாகம் தொழிலாளர்களை கண்டு கொள்ளாமல் மேலும் அடக்க நினைத்து காவல்துறையை ஏவிவிட்டு 14.08.2010 தேதியில் தொழிற்சாலைக்கு செல்லும் மின்சார இணைப்பை துண்டித்ததாக பொய் வழக்கு தொடுத்து 69 தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் தள்ளியது. கோவை நீதி மன்றத்தில் தொழிலாளருக்கு ஜாமீன் கொடுக்க கூடா து என்று நிர்வாகம் எதிர் மனு செய்தது. இதன்காரணமாக கோவை நீதி மன்றத்தில் ஜாமீன் கிடைக்காமல் சென்னை உயர் நீதி மன்றத்தின் மூலம் ஜாமீன் கிடைக்க 27 நாட்கள் ஆகிவிட்டது.

மீண்டும் தொழிலாளர்கள் ஆலைக்கு செல்லும் போது நிர்வாகம் பணி வழங்க மறுத்து பகுதி கதவடைப்பு செய்ததாக கூறிவிட்டது.

அதன்பின்பு தொழிலாளர்கள் எங்களுக்கு வேலை வேண்டும் என்று கேட்டதற்கு நீங்கள் சிறைக்கு சென்றுவந்தவர்கள் , உங்கள் மீது குற்ற வழக்கு உள்ளது ஆகையால் உள் விசாரணை நடத்தவேண்டும் என்று கூறி விசாரணையை துவக்கியது நிர்வாகம். இரண்டு வழக்குரைஞர்களை வைத்து உள் விசாரணையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது நிர்வாகம்.

அதற்கிடையில் தொழிலாளர்கள் நிரபராதிகள் என்று கோவை நீதிமன்றம் 29.09.2011 தேதியில் தீர்ப்பு வழங்கியது. அதை பொறுத்துக் கொள்ளாத நிர்வாகம் மீண்டும் கோவையில் வழக்கை மேல் முறையீடு செய்தது. அதிலும் தொழிலாளர்கள் நிரபராதிகள் என்று 13.03.2013 தேதியில் தீர்ப்பு வழங்கியது. அதையும் ஏற்காத நிர்வாகம் மீண்டும் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

தொழிலாளர்கள் மீது , தொடர்ச்சியான நிர்வாகத்தின் அடக்கு முறையைக் கண்டித்து ஆலைவாயில் முன்பாக 17.08.2013 தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து வடவள்ளி காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி கோரியிருந்தோம். ஆனால் காவல்துறை ஆய்வாளர் 14.08.2013 தேதி இரவு சட்டஒழுங்கு சீர்குலையும் என்பதால் உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது என்று கூறிவிட்டார்.

தொழிலாளர்கள் திட்டமிட்டபடி கைது செய்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்ற முனைப்புடன் 17.08.2013 தேதியில் மாலை 4.30 மணியளவில் தங்களது குடும்பத்தாருடன் தொழிற்சாலை நோக்கி செல்லும்போது காவல் துறையினர் அரை கிலோ மீட்டருக்கு முன்னதாக உள்ள காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தை காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடத்த ஆரம்பித்துவிட்டோம்.

தலைமை தாங்கிய டுகெதர் கிளை தலைவர் தோழர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். 69 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது செல்லாது. தொழிலாளர்கள் நிரபராதிகள் என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்று தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்து, வழக்குகளை திரும்பப்பெறு! தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்று பேசினார்.

மாவட்ட துணைத்தலைவர் தோழர் ஜெகநாதன் தனது உரைவீச்சில் கோவையில் தொழிலாளர்கள் படும் துன்பம் , ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை முதலாளிகளிடம் கேம்பஸ் கூலி , சுமங்கலி திட்டம் போன்றவற்றின் மூலமாக அடிமைப்படுத்துவதை பற்றி பேசினார் .

மாவட்ட இணைச் செயலாளர் தோழர் கோபிநாத் டூகதர் தொழிற்சாலையில் சங்கம் துவங்கிய தொழிலாளர்கள் நிர்வாகத்தின் அடக்கு முறையை தொடர்ந்து எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதையும் முதலாளித்துவம் நடந்து கொள்ளும் முறைகளையும், அவற்றை எப்படி எதிர் கொள்ளுவது என்பதையும் பற்றி பேசினார்.

கிளை துணைச்செயலாளர் தோழர் வேல்முருகன் பேசும்போது பொது மேலாளர் ரவிசெட்டியின் தொழிலாளர் விரோதப்போக்கை பற்றி பேசினார்.

மாவட்ட செயலாளர் தோழர் விளைவை ராமசாமி முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றியும் தனியார்மயம் , தாராளமயம் , உலகமயம் கொள்கையினால் தொழிலாளர்கள் வேலை இழப்பு பொருளாதார பின்னடைவு போன்றவற்றின் மூலம் உழைக்கும் வர்கத்தை எப்படி பாதிக்கின்றது என்பதைப் பற்றியும் பேசினார்.

டுகெதர் தொழிலாளர்களின் போராட்டத்தில் மற்ற கிளை பு.ஜ.தொ.மு சங்கங்களான SRI , NTC ,CRI ,CPC , போன்றவற்றில் இருந்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்

நன்றி உரை  ஆற்றிய கிளை துணைத் தலைவர் தோழர் நடராஜன் புஜதொமு மற்ற ஆலை தோழர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 240 தொழிலாளர்கள் பங்கேற்றனர் .

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.]

தகவல் :புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை

காட்டு வேட்டை: சோனி சோரி மீதான பொய் வழக்குகள் !

0

“நீங்கள் எங்களோடு இல்லையென்றால், அவர்களோடு இருக்கிறீர்கள்!” – இப்படியொரு எச்சரிக்கையை, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு போர்களைத் தொடங்கி வைத்த பொழுது அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்தார். அமெரிக்க மேலாதிக்க வல்லரசால் ஆப்கானியர்களுக்கும், இராக் மக்களுக்கும் எதிராக விடப்பட்ட இந்த மிரட்டலை, இந்திய அரசு சத்தீஸ்கரிலும் ஜார்கண்டிலும் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு எதிராக விடுத்து வருகிறது. இதனை, சத்தீஸ்கர் மாநிலம் – தண்டேவாடா மாவட்டத்திலுள்ள சமேலி கிராமத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான சோனி சோரி என்ற பழங்குடியினப் பெண்ணின் மீதும், அவரது சகோதரனின் மகன் லிங்காராம் கோடோபியின் மீதும் புனையப்பட்ட வழக்குகள் நிரூபிக்கின்றன.

சோனி சோரி
சிறையில் நடந்த சித்திரவதைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனி சோரி (கோப்புப் படம்).

சோனி சோரியையும் லிங்காராமையும் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி வரும் சத்தீஸ்கர் அரசு, சோனி சோரி மீது எட்டு கிரிமினல் வழக்குகளையும் லிங்காராம் மீது இரண்டு கிரிமினல் வழக்குகளையும் தொடுத்து, அவர்கள் இருவரையும் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறை வைத்திருக்கிறது. “அவர்கள் இருவரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் எஸ்ஸார் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து 15 இலட்ச ரூபாயைப் ‘பாதுகாப்புப் பணமாக’ (Protection Money)ப் பெற்று மாவோயிஸ்டுகளிடம் கொடுக்கும் தரகர்களாகச் செயல்பட்டனர்” என்பது இருவர் மீதும் போடப்பட்டுள்ள முக்கிய வழக்காகும். இவ்வழக்கில் தங்களுக்குப் பிணை வழங்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், “குற்றத்தின் கொடிய தன்மை கருதியும் ஆழமான சாட்சியங்களைக் கருதியும்” பிணை வழங்க முடியாதெனக் கூறிவிட்டது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த சோனி சோரிக்கும் லிங்காராமுக்கும் பிணை மறுத்திருக்கும் உயர் நீதிமன்றம், இதே வழக்கில் இவர்களோடு சேர்த்துக் கைது செய்யப்பட்ட வேறு இருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு பிணை வழங்கியிருக்கிறது. அவர்களுள் ஒருவர் எஸ்ஸார் நிறுவனத்தின் பொது மேலாளர் வர்மா; மற்றொருவர் அந்நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் பி.கே.லாலா. அவர்கள் இருவரும்தான் 15 இலட்சரூபாய் பணத்தை சோனி சோரியிடமும் லிங்காராமிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தனர் என்றும், பணத்தை அவர்களிடமிருந்துதான் கைப்பற்றியதாகவும் குற்றஞ்சுமத்தியிருந்தது, போலீசு. ‘கையும் களவுமாக’ப் பிடிக்கப்பட்ட அவ்விருவருக்கும் பிணை வழங்கியபோது, நீதிபதிகள் குறிப்பிடும் குற்றத்தின் கொடிய தன்மை எங்கே ஓடி ஒளிந்து கொண்டது? ஆழமான சாட்சியங்களைக் காணவிடாமல் நீதிபதிகளைத் தடுத்தது எது? இப்படி பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது கார்ப்பரேட் கால மனுநீதி போலும்.

லிங்காராம்
இரண்டு பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யபட்ட லிங்காராம்.

சோனி சோரி தாக்கல் செய்த பிணை மனு விசாரணைக்கு வருவதற்குச் சற்று முன்னதாகத்தான், அவர் மீது போடப்பட்டிருந்த எட்டு வழக்குகளில் ஆறு வழக்குகளிலிருந்து அவர் அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டார். குறிப்பாக, சத்தீஸ்கர் மாநில போலீசு மீது வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் எஸ்ஸார் நிறுவனத்தின் வாகனங்களுக்குத் தீயிட்ட வழக்குகளுக்கும் சோனி சோரிக்கும் தொடர்பேயில்லை எனக் கூறி விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இவ்வழக்குகள் சோடிக்கப்பட்டவை; அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட சாட்சியங்கள் போலீசு தயாரித்த பொய் சாட்சியங்கள் என்பது இந்த வழக்குகளில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் எஸ்ஸார் நிறுவனத்திடமிருந்து மாவோயிஸ்டுகளுக்காகப் பணம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், போலீசு காட்டியுள்ள ஆழமான சாட்சியங்களை நம்பி பிணை வழங்க முடியாது எனக் கூறியிருப்பது நகைப்புக்குரியது.

இத்தனை பொய் வழக்குகளை மூன்று குழந்தைகளுக்கான தாயான சோனி சோரி மீது ஏன் போட வேண்டும்? சோனி சோரியும் லிங்காராமும் போலீசின் ஆட்காட்டிகளாகச் செயல்பட மறுத்தனர் என்பது தவிர இதற்கு வேறு காரணம் எதுவும் கிடையாது. மூன்றாண்டுகளுக்கு முன்பு லிங்காராமைக் கடத்திச் சென்ற சத்தீஸ்கர் போலீசு, அவரைச் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து, சல்வாஜுடும் குண்டர்படையில் சேரச் சொல்லி சித்திரவதை செய்தது. லிங்காராம் போலீசாரால் கடத்தப்பட்டதை அறிந்த சோனி சோரி, சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு, போலீசின் சட்டவிரோதக் காவலில் இருந்து அவரை விடுவித்தார். சத்தீஸ்கர் போலீசு அந்தச் சமயத்தில் லிங்காராமை விடுவித்து விட்டாலும், அவரையும் அவரது குடும்பத்தாரையும் தொடர்ந்து மிரட்டி வந்தது. சத்தீஸ்கர் போலீசிடமிருந்து லிங்காராமைக் காக்க எண்ணிய சோனி சோரி, அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்ததோடு, பத்திரிகையாளர் படிப்பிலும் சேர்த்துவிட்டார்.

இச்சமயத்தில்தான் சத்தீஸ்கர் போலீசும் துணை இராணுவப் படைகளும் இணைந்து தர்மேட்லா, மோர்பள்ளி, திம்மாபுரம் ஆகிய மூன்று கிராமங்கள் மீது 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் மிகக் கொடூரமான தாக்குதலைத் தொடுத்தன. மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த 76 போலீசாரை மாவோயிஸ்டுகள் கொன்றொழித்ததற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் இது. பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றிருந்த லிங்காராம் இத்தாக்குதல் குறித்துப் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகப் பேட்டி கண்டு முக்கியமான ஆதாரங்களைத் தொகுத்து வைத்திருந்தார். இத்தாக்குதல் குறித்த விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் டி.பி.ஷர்மா கமிசனை ஜூன் 11, 2011-இல் நியமித்தது. இக்கமிசனிடம் போலீசு நடத்திய அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை லிங்காராம் தருவார் எனச் சந்தேகித்த சத்தீஸ்கர் போலீசு, அதனைத் தடுக்கும் முகமாக, அவரையும் அவருக்கு ஆதரவாக இருந்துவரும் சோனி சோரியையும் செப்.2011-இல் கைது செய்து, அவர்கள் இருவரும் மாவோயிஸ்டுகளின் தரகர்களாகச் செயல்படுகிறார்கள் என்பது உள்ளிட்டுப் பல பொய் வழக்குகளை அடுத்தடுத்து அவர்கள் இருவர் மீதும் புனைந்தது.

மாணவர் ஆர்ப்பாட்டம்
சோனி சோரியையும், லிங்காராமையும் விடுதலை செய்யக் கோரி அனைத்திந்திய மாணவர் சங்கம் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

சிறைச்சாலையில் சோனி சோரிக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது பிறப்புறுப்பில் இரண்டு கற்களும், ஆசன வாயில் பகுதியில் ஒரு கல்லும் திணிக்கப்பட்டு பாலியில்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லி-எய்ம்ஸ் மருத்துவர்கள் சோனி சோரியைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபொழுது, அவர் மீது நடத்தப்பட்ட இம்மனித உரிமை மீறல்கள் அனைத்தும் அம்பலமாகின.

பழங்குடியின மக்களுக்கு எதிராகக் காட்டு வேட்டையை நடத்திவரும் அரசுக்கும் போலீசுக்கும் ஆட்காட்டியாக நடந்துகொள்ள மறுத்துவரும் சோனி சோரியைச் சட்டப்படித் தண்டிக்க முடியாது என்பதால், அவருக்குப் பிணை வழங்க மறுப்பதன் மூலம் சட்டவிரோதமாக, அநீதியான முறையில் தண்டித்து வருகிறது, ஆளுங்கும்பல். இப்படி அநீதியான முறையில் சோனி சோரி மட்டுமல்ல, அவரது மாநிலத்தில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களும், ஜார்கண்டில் 5,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களும் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அப்பழங்குடியின மக்களுக்கு இந்தி மொழி தெரியாது; தனியாக வக்கீல்களை வைத்து வழக்கை நடத்துமளவிற்கு அவர்களுக்கு வசதி கிடையாது என்பதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்குப் பிணைகூட வழங்காமல், காராகிரகத்தில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து வருகிறது, இந்திய அரசு.

ஓட்டுக்கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு ஆகியவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை இழந்துவிட்ட மக்களுக்கு நீதிமன்றங்கள் மட்டும்தான் கடைசிப் புகலிடமாக இருந்து வருகிறது எனத் தேசிய பத்திரிகைகளும், சோ போன்ற பார்ப்பனக் கும்பலும் கூறிவருகின்றனர். இந்த வாதம் மோசடியானது என்பதையும், நீதிமன்றங்களும் ஆளுங்கும்பலின் கைத்தடிகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன என்பதையும் சோனி சோரி மீதும் அப்பாவி பழங்குடியின மக்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளும், விசாரணைகளும் நிரூபித்துக் காட்டவில்லையா?

– குப்பன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

இளவரசன் மரணம் : ‘சமூக நீதி’ அரசியலின் சாதிவெறி முகம் !

10

கொலையா தற்கொலையா என்பதுதான் மையமான கேள்வி என்கிற வகையில் சுருக்கப்படுகிறது இளவரசனின் மரணம் குறித்த பிரச்சினை. திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதன் விளைவாகத் தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் விளைவுதான் நத்தம் காலனி எரிப்பு என்று தங்கள் வெறியாட்டத்துக்கு பா.ம.க. சாதிவெறியர்கள் நியாயம் கற்பித்தது நினைவிருக்கிறதா?

இளவரசன் மரணம்
இருப்புப் பாதை அருகே கிடக்கும் இளவரசனின் சடலத்தைக் கட்டியணைத்துக் கதறியழும் அவரது தாய் மற்றும் உறவினர்கள்;

அதே நியாயத்தினை இளவரசன் தற்கொலைக்கும் பொருத்தலாமல்லவா? இது தற்கொலை என்றே வைத்துக் கொண்டாலும், இளவரசனின் மரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும், சாதி மறுப்பாளர்கள் மத்தியிலும் தோற்றுவித்திருக்கும் நியாயமான கோபத்துக்கு யாரைத் தீக்கிரையாக்குவது என்ற கேள்விக்கு சாதி வெறியர்கள் பதில் சோல்ல வேண்டும். இவ்வாறு கேட்பது பழிக்குப் பழி வாங்கும் எதிர்வினை அல்ல, தர்க்கரீதியாக எழும்பும் எதிர் வினா.

இது கொலையானாலும் தற்கொலையானாலும் அதனைத் தூண்டிய குற்றவாளிகள் பா.ம.க. சாதிவெறியர்கள்தான். ஆதிக்க சாதி பெண்களால் காதலிக்கப்படும் தலித் இளைஞர்கள் மிரட்டப்படுவதும், கொல்லப்படுவதும் தமிழகத்தில் வழமையாகி வருகிறது. நத்தம் காலனி எரிப்புக்குப் பின்னர், சேத்தியாதோப்பு கோபாலகிருஷ்ணன் என்ற தலித் இளைஞன் வன்னிய சாதிப் பெண்ணைக் காதலித்த குற்றத்துக்காக கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டான். பதிவுத் திருமணம் செய்து கொண்ட விமல்ராஜ் என்ற தலித் இளைஞனையும் செந்தமிழ்ச்செல்வி என்ற வன்னியப் பெண்ணையும் பிரிப்பதற்கு காடுவெட்டி குருவின் வக்கீல்கள் மேற்கொண்ட முயற்சியை, குடந்தையைச் சேர்ந்த சில வழக்குரைஞர்களும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் ராஜுவும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்திற்கு நேரில் சென்று முறியடித்திருக்கின்றனர். இருப்பினும் உயிருக்குப் பயந்து விமல்ராஜும் செந்தமிழ்ச்செல்வியும் தலைமறைவாக வாழ்கின்றனர். இவையனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதொரு சாதிவெறிப் பயங்கரவாத அச்சுறுத்தல் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதற்கான சான்றுகள்.

இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரிப்பதற்கு பா.ம.க. தலைமையைச் சேர்ந்த தருமபுரி டாக்டர் செந்தில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பாலு ஆகியோர் நேரடியாக ஈடுபட்டதும், “வன்னியப் பெண்ணைத் தொட்டால் வெட்டு” என்று காடுவெட்டி குரு பேசியதும் நாடறிந்த உண்மைகள். இருப்பினும் இளவரசன் மரணம் குறித்த புலன் விசாரணையை கொலை என்ற கோணத்தில் நடத்த மறுப்பது மட்டுமின்றி, தற்கொலைதான் என்ற பொதுக்கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டே காய் நகர்த்தி வருகிறது போலீசு.

சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், இளவரசனின் வழக்குரைஞர்கள் சங்கர சுப்பு, ரஜினி மற்றும் இளவரசனின் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், போலீசின் இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை அம்பலப்படுத்தியிருக்கின்றனர். எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே, தற்கொலைதான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாகப் பத்திரிகைகளுக்குச் செய்தியைக் கசிய விட்டது, இளவரசன் எழுதியதாக கூறப்படும் கடிதம் கைக்கு கிடைத்தவுடனேயே, “இது தற்கொலைதான்” என்று மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் அறிவித்தது, இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தாரென்று அவரது நண்பர்களே வாக்குமூலம் அளித்துவிட்டதாக வதந்தி பரப்பியது போன்ற பல விவரங்களைக் கூறி, இந்தப் புலன் விசாரணையின் நம்பகத்தன்மையை அவர்கள் கேள்விக்குள்ளாக்கினர். ஆடிட்டர் ரமேசு கொலையைத் தொடர்ந்து, இந்து மதவெறியர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்துவரும் போலீசு, இளவரசன் மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சோல்லவில்லை.

பாமக
இளவரசனின் மண வாழ்க்கை முறிந்து போனதற்கும், அவர் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்து போனதற்கும் காரணமான குற்றவாளிகள் : ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு, மற்றும் பா.ம.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் செந்தில்.

இளவரசன்-திவ்யா காதல் திருமணம் என்பது, வன்னிய மக்கள் மத்தியில் சாதிவெறியைக் கிளப்புவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரைத் திரட்டுவதற்கும் ராமதாசு பயன்படுத்திய துருப்புச் சீட்டு. நத்தம் காலனி எரிப்பு தொடங்கி, மரக்காணம் தாக்குதல், மாமல்லபுரம் சாதிவெறிக் கொண்டாட்டம், ராமதாசு கைதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடத்தப்பட்ட பொதுச்சொத்து அழிப்பு, அப்பாவிகள் கொலை, இளவரசனிடமிருந்து திவ்யாவைப் பிரித்தது, இறுதியாக இளவரசன் மரணம் போன்றவையனைத்தும் தனித்தனிக் குற்றங்கள் அல்ல. இவை ராமதாசு நடத்தி வரும் சாதிவெறி அரசியல் எனும் கொடும் குற்றத்தின் வெவ்வேறு விளைவுகள்.

குஜராத், அயோத்தி, மும்பை படுகொலைகளில் மோடி, அத்வானி, தாக்கரே ஆகியோரின் பாத்திரம் என்னவோ அதுதான் இளவரசன் கொலை, நத்தம் காலனி எரிப்பு மற்றும் மரக்காணம் தாக்குதலில் பா.ம.க. தலைமையின் பாத்திரம். இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள். திவ்யாவின் தந்தை நாகராஜின் பிணத்தை வைத்துக் கொண்டு மூன்று கிராமங்களைச் சுடுகாடாக்கிய பா.ம.க. வின் கிரிமினல் நடவடிக்கை, கோத்ராவின் பிணங்களைக் காட்டி முஸ்லிம் மக்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்ட மோடியின் குற்றத்திலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல. நியூட்டன் விதியைக் கூறி குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்திய நரமாமிச மோடிக்கும், நத்தம் காலனி சூறையாடலை நாகராஜின் மரணத்துக்கு எதிர்வினை என்று நியாயப்படுத்திய ‘அன்பு’ மணி வகையறாக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சிறுபான்மை தலித் மக்களுக்கு எதிராக வன்னியர்களை மட்டுமின்றி, பார்ப்பனர் உள்ளிட்ட எல்லா ஆதிக்க சாதிகளையும் அணிதிரட்டும் ராமதாசின் அயோக்கியத்தனம், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்து பெரும்பான்மையைத் திரட்டும் இந்துவெறியர்களின் குற்றத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.

திவ்யா
பா.ம.க.வின் வழக்குரைஞரும் வன்னிய சாதி வெறியனுமான பாலுவின் ‘பாதுகாப்போடு’ நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும் இளவரசனின் காதல் மனைவி திவ்யா.

எனினும், இளவரசனின் மரணத்துக்குக் காரணமான முதல் குற்றவாளி ராமதாசு உள்ளிட்ட பா.ம.க. வின் தலைமையினர்தான் என்ற உண்மையை வேண்டுமென்றே பூசி மறைக்கிறது ஜெ அரசு. தன்னுடைய அரசு அதிகாரத்தின் மேலாண்மையை நிறுவும் பொருட்டு, பொதுச்சொத்துக்கு சேதம் போன்ற குற்றங்களுக்காக பா.ம.க. வினர் மீது வழக்குகளைப் போட்டிருக்கும் ஜெ.அரசு, அந்த நடவடிக்கைகளையே சாதிவெறிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகச் சித்தரித்து தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது.

இளவரசன் மரணத்தையொட்டித் தாழ்த்தப்பட்ட மக்களும், சாதி மறுப்பாளர்களும் திரளுவதைத் தடுக்க திட்டமிட்டே தருமபுரி மாவட்டம் முழுதும் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருமாவளவனுக்குத் தடை, தில்லியிலிருந்து வந்த எஸ்.சி – எஸ்.டி. கமிசனைச் சேர்ந்தோருக்கும் தடை, நத்தம் காலனிக்குள் நுழைவதற்கு ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவு, அனைத்துக்கும் மேலாக இளவரசனும் திவ்யாவும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் கொண்ட பானர்களை போலீசே முன்நின்று அகற்றியது போன்ற நடவடிக்கைகளின் மூலம், சட்டம் – ஒழுங்கின் பெயரால், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சாதி மறுப்பாளர்களைத்தான் ஜெ.அரசு ஒடுக்கியிருக்கிறது.

இந்து முன்னணி வெள்ளையப்பன், பா.ஜ.க. ரமேசு ஆகியோரின் கொலை தொடர்பாக போலீசு மேற்கொண்டிருக்கும் அணுகுமுறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். வெள்ளையப்பனின் உடலை ஊர் ஊராக கொண்டு செல்ல அனுமதிக்கப் படுகிறது. பா.ஜ.க. வின் அனைத்திந்தியத் தலைவர்கள் வரிசையாக வந்து இறங்கி மதவெறியைக் கக்குகின்றனர். கடையடைப்பு என்ற பெயரில் தமிழகமெங்கும் இந்து மதவெறியர்கள் காலித்தனம் செய்கின்றனர். ரமேஷ் கொல்லப்பட்டவுடனே இந்து மதவெறியர்களுக்கு ஆயுத போலீசு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அனைத்துக்கும் மேல், புலன் விசாரணை தொடங்கும்போதே கொலையாளிகள் இசுலாமியர்கள்தான் என்ற கருத்தை போலீசே உருவாக்குகிறது. இந்து மதவெறியர்களின் கோரிக்கைப்படி சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுவிட்டது.

ஒச்சம்மாள், பார்த்திபன்
எதிர்ப்புகளை மீறி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒச்சம்மாளைக் காதல் திருமணம் செய்து கொண்டதால், கழுத்து அறுக்கப்பட்டும், ஆணுறுப்பு வெட்டப்பட்டும் கொல்லப்பட்ட பெரம்பலூர் – ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் பார்த்திபன். (நன்றி : ஜூ.வி.)

அதேநேரத்தில் நத்தம் காலனி எரிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 50,000 தரப்பட்டது. “எரிந்த, திருடப்பட்ட பொருட்களின் மதிப்பான 7 கோடி ரூபாயைத் தமிழக அரசுதான் கொடுக்கவேண்டும்” என்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது இளவரசன் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற ம.உ.பா. மையத்தின் மனுவும் தமிழக அரசால் இழுத்தடிக்கப்படுகிறது.

அரசும் போலீசும் மட்டுமல்ல, உயர் நீதிமன்றமும் சட்ட விரோதமான முறையில் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறது. தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் விருப்பப்பட்டுத்தான் இளவரசனை மணந்ததாகவும் திவ்யா தெளிவாகக் கூறிவிட்ட போதிலும், இளவரசன்-திவ்யா திருமணத்தை முன்வைத்து நவம்பர் 2012 முதல் தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் அரங்கேற்றி வரும் சாதிவெறியாட்டங்கள் பற்றி தெரிந்திருந்த போதிலும், திவ்யாவை பா.ம.க. வினரின் பிடியில் ஒப்படைத்து அந்தப் பெண்ணை இளவரசனிடமிருந்து பிரிப்பதற்குத் துணை நின்றது உயர் நீதிமன்றம்.

தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் முதல் தமிழினவாத அமைப்புகள் வரையிலான அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக சம்பிரதாயக் கண்டனத்துடன் நிறுத்திக் கொண்டனர். வன்னியர்கள் மத்தியிலேயே வீழ்ச்சியடைந்து வரும் தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்கு ராமதாசு மேற்கொள்ளும் கீழ்த்தரமான முயற்சி என்று என்று திருமாவளவன் போன்றோர் இதனை விளக்குகின்றனர். அரசு எந்திரம், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவற்றின் ஆதிக்க சாதிச்சார்புக்கும், மற்ற ஓட்டுக் கட்சிகளின் மவுனத்துக்குமான விளக்கம் இதில் இல்லை.

எளிமையாகச் சோல்வதானால், வன்னிய சாதியில் பிறந்த அடிப்படை வர்க்கத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண், சாதியைத் தேவையற்றதாவும், நிராகரிக்க வேண்டியதாகவும் கருதியிருக்கிறாள். நத்தம் காலனியிலேயே அவளைப் போன்ற பல பெண்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை மணந்து கொண்டு, அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். நத்தம் காலனி எரிப்புக்குப் பின்னரும்கூட செந்தமிழ்ச்செல்வியைப் போன்ற பெண்கள் வன்னியகுல சத்திரிய போதைக்கு ஆட்படவில்லை. மாறாக, அவர்கள் சாதியை நிராகரிக்கிறார்கள்.

“வழக்குரைஞர்கள் சமூகநீதிப் பேரவை” வைத்திருக்கும் பா.ம.க. வின் வக்கீல் பாலுவுக்கும், டாக்டர்கள் ராமதாசு, அன்புமணி, செந்திலுக்கும், இன்னும் வன்னிய சாதியைச் சேர்ந்த பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி வள்ளல்கள், கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், அதிகார வர்க்கத்தினர், நீதிபதிகள், அறிவுஜீவிகள் ஆகியோருக்கும்தான் சாதி தேவைப்படுகிறது.

ஏற்கெனவே சமூகரீதியில் ஒரு ஆதிக்க சாதி என்ற முறையில் பெற்றிருக்கும் அதிகாரத்துடன், அரசியல் கட்சி, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை போன்றவற்றிலும் இத்தகைய இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடி வர்க்கங்கள் பெறுகின்ற அதிகாரம் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக மட்டுமின்றி, சொந்த சாதி உழைக்கும் மக்களுக்கும் எதிராக இருக்கிறது. அந்த வகையில் நாடாளுமன்ற அரசியல் சாதியைப் பாதுகாப்பதற்கான நிரந்தர ஏற்பாடாக ஆளும் வர்க்கத்திற்குப் பயன்படுகிறது.

வர்க்கப் போராட்டத்திற்கு மாற்றாகவும், சாதியை ஒழிக்கும் பொருட்டு இந்திய மண்ணுக்காகவே தயாரிக்கப்பட்ட வழிமுறையாகவும் முன்வைக்கப்பட்ட சமூக நீதி அரசியல் என்ற பெயரிலான சாதிய அடையாள அரசியல்தான் மக்கள் மத்தியில் மங்கி வரும் சாதி உணர்வை புளி போட்டு விளக்கிப் புதுப்பித்து, “பல்லவனே வா, பாண்டியனே வா, சேரனே வா!” என்று அரிவாள் எடுத்துக் கொடுக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் – தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை பற்றி பேசித் திரிந்த எல்லா சாதியப் பிழைப்புவாதிகளின் சாயமும் வெளுத்து விட்டது. மாயாவதி நடத்திய பார்ப்பனர்களின் சாதிச்சங்க பேரணிக்குப் போட்டியாக முலாயம் கட்சி பார்ப்பனப் பேரணி நடத்த முயற்சிக்க, சாதிச்சங்க பேரணி நடத்தக்கூடாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க, “சாதிப் பேரணி நடத்துவது ஜனநாயக உரிமை; சாதி இருக்கலாம், ஆதிக்கம்தான் இருக்க கூடாது” என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விளக்கமளிக்க, சாதி ஒழிப்பு கூடாது என்கின்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையே சமூகநீதிக் கொள்கை என்பது விளக்கமாகியிருக்கிறது.

– அஜித்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு !

2

வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு

பரீஸ் கர்பாதவ்
கதாசிரியர் பரீஸ் கர்பாதவ்

வெள்ளரி நிலத்தில் சங்கடம் நேர்ந்து விட்டது. வெள்ளரி நிலம் என்பது ஆர்க்டிக் (வடதுருவக்) கடலில் எங்கோ தொலைவில் தன்னந்தனியாக இருக்கும் ஒரு தீவு. உலக வரைபடத்தில் இந்தப் பெயரைத் தேடுவது வீண் முயற்சியாகும். வரைபடத்தில் இந்தச் சிறு புள்ளிக்கு உள்ள பெயர் இன்னொலியும் கவிநயமும் கொண்டது. ஆனால் துருவப் பரப்பிலுள்ள வானொலி இயக்குநர்கள் இதை வெள்ளரி நிலம் என்றே பிடிவாதமாக அழைத்துவருகிறார்கள். அவர்கள் கருத்தை மாற்றுவது முடியாத காரியம்! இந்த வானொலி இயக்குநர்களே இப்படித்தான். ஒரே கிண்டல் பேர்வழிகள். சிறிய அறைகளுக்குள் அடைபட்டிருப்பதால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டிருக்கலாம்!

ஆயினும் இந்த விந்தைப் பெயருக்கும் ஒரு வரலாறு உண்டு. தீவு சமீபத்தில் தான், மிக அண்மையில் தான், கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல் குழுத் தலைவன் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தின் வரைபடத்தை விரைவாகத் தயாரித்து (பனி உடைக்கும் கப்பலைச் சுற்றிலும் விடாது படிந்த பனிக்கட்டி அவனை அவசரப்படுத்தியது), அக்கணமே இப்படி அறிக்கை அனுப்பினான்: “புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தீவு வெள்ளரிக்காய் வடிவாக இருக்கிறது”. அந்தப் பகுதிகளில் எந்த விஷயம் ஆனாலும் வானொலி இயக்குநர்கள் வாயிலாகத் தான் சொல்ல வேண்டும். ஆகவே அவர்கள் ஆர்க்டிக் தீவுக் கூட்டத்தின் இந்தப் புது பகுதிக்கு வெள்ளரி நிலம் என்று பெயர் வைத்தார்கள்.

மிகவும் தொலை வடக்கில் இருந்த இத்தீவு விரைவிலேயே அதிக முக்கியத்துவம் பெற்றது. பனிக் கட்டி மூடிய ஆர்க்டிக் பெருங்கடலின் பல இரகசியங்களை இனித் துருவி ஆராயத் தங்களால் முடியும் என்று மனநிறைவுடன் ஆய்வாளர்கள் கைகளைத் தேய்த்துக்கொண்டார்கள். தங்கள் ஆய்வுக்கு இன்னொரு நிலையம் கிடைத்த மகிழ்ச்சியில் பருவ நிலை முன்னறிவிப்பாளர்களும் இது குறித்துப் பெருமூச்சு விட்டார்கள். இளம் துருவ ஆராய்ச்சியாளர்கள் காதலியைப் பற்றிக் கனவு காண்பது போல வெள்ளரி நிலத்தையும் அதன் ஒப்பற்ற கவர்ச்சிகளையும் பற்றிக் கனவு கண்டார்கள். அங்கே சென்று அதை வெற்றி கொள்ள எத்தகு துணிகரச் செயல்களையும் புரியத் தயாராக இருந்தார்கள். “டிக்ஸன், திக்ஸீ, செல்யூஸ்க்கின் இவை பற்றி என்ன சொல்ல! அவை முழுதும் ஆராயப் பட்டு விட்டன. அங்கே போவதும் ஒன்றுதான், வீட்டில் இருப்பதும் ஒன்றுதான்” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, “இதுவோ… இது வேடிக்கையில்லை… எழுபத்து எட்டாவது அட்சமாக்கும்…” எனக் கிளர்ச்சி பொங்கக் கிசுகிசுப்பார்கள்.

இவ்வாறாக, வெள்ளரி வடிவில் அமைந்த அத்தீவில் மக்கள் குடியேறினார்கள். கன்னி வெண்பனி மீது, கிண்ணங்கள் போன்று வளைவான கரடிகளின் பெரிய அடித் தடங்களுக்கு அருகே மாந்தர்களின் மனவுறுதியைக் காட்டும் கூர்ந்த காலடிச் சுவடுகள் தென்பட்டன. கட்டடங்கள் எழுந்தன. பனித் திடல்களில் வாழ்வு தளிர்த்தது. மக்களின் பழக்க வழக்கங்களும், களியும், கவலையும். கிளர்ச்சியும் ஏற்கெனவே நிலை பெற்று விட்டன. பள பளக்கும் செப்புக் காப்பிப் பானையில் காப்பி கொதிக்கும்; இரவு நேரத்தில் சதுரங்க ஆட்டம் மும்முரமாய் நடந்தது… ஆனாலும் சங்கடமும் வந்து சேர்ந்தது. பார்க்கப்போனால் உண்மையில் அது இன்பந்தான். ஆம், அது இன்பந்தான்!… ஆனால் விளைவு என்ன ஆகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. விஷயம் இதுதான். ஒரு பெண் பயங்கரமாக, காட்டுக்கத்தாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே நின்ற வெளிறிய கொழுத்த ஆடவனது கரங்கள் செய்வகையறியாது நடுங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள் உருண்டோடின.

சோவியத் ஆர்க்டிக் பிரதேசங்களில் தொலை தூரத் தீவுகளில் வசிப்பவர்கள், தன்னந்தனியாக, அண்டை அயலாரைப் பற்றிய தகவல் எதுவுமின்றி வாழ்கிறார்கள் என்று நினைப்பது தவறு. மிக அண்மையில் உள்ள அயலார்களுக்கிடையே, அக்கம் பக்கத்துத் தீவுகளுக்கிடையே இருக்கும் தொலைவு ஆயிரம் கிலோமீட்டர்கள், அதுவும் எத்தகைய பிரதேசத்தில் என்பது உண்மையே! ஆயினும் வானொலி இயக்குநர்கள் இருக்கிறார்களே! தொலையிலுள்ள வெள்ளரி நிலத்தில் ஒரு பெண் பிரசவ வேதனையால் துடித்ததை ஆர்க்டிக் முழுவதிலும் பரப்பி விட்டார்கள். ஆர்க்டிக் வாசிகள் அனைவரும், நார்த்விக் சுரங்கக்காரர்கள், செல்யூஸ்க்கின் விஞ்ஞானிகள், டிக்ஸன் வானொலி இயக்குநர்கள், திக்ஸீ துறைமுகக் கொத்தர்கள், பேலிய் தீவில் வாழ்பவர்கள் ஆகிய, கடுகடுப்பும் அச்சமின்மையும் கொண்ட இம்மனிதர்கள் எல்லாரும், தாங்களே கர்ப்பிணியின் படுக்கைக்கு அருகே, இருமுவதற்குக் கூட அஞ்சியவர்களாய், குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கி, அதன் முதலாவது அதிகாரக் கத்தலைக் கேட்டு, தந்தையர் போன்று முறுவலிக்கக் காத்திருப்பவர்கள் போன்று, இந்தப் பிரசவத்தின் முடிவை மூச்சுக்கூட விடாமல் எதிர்பார்த்திருந்தார்கள்.

“என்ன சேதி? என்ன ஆயிற்று?” என்று காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் ஒருவரையொருவர் விசாரித்த வண்ணமாயிருந்தார்கள்.

கர்ப்பிணியோ கூச்சலிட்டவாறு இருந்தாள். அவளது கூக்குரல்கள் ஆர்க்டிக் பிரதேசம் முழுவதிலும் சென்று ஒலிப்பது போலத் தோன்றியது. அவளுடைய கணவன், இத்தகைய சந்தர்ப்பத்தில் எல்லா ஆண்களும் நடந்து கொள்வது போலவே, செய்வது அறியாது அவளருகே நின்று கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தான். மருத்துவரோ, ஒன்றும் செய்ய முடியாமல் பதற்றத்துடன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார். அவர் பேறு காலம் பார்க்கும் மருத்துவர் அல்ல. அத்துடன் குழந்தையும் கருப்பையில் குறுக்காகக் கிடந்தது – இது அசாதாரண பிரசவம்.

அன்றைய தினம் உளத் தவிப்பு நிறைந்த செய்தி ஒன்று வெள்ளரி நிலத்திலிருந்து வானொலி மூலம் ஒலி பரப்பட்டது.

“காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்! ஏதாவது செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினான் அவளுடைய கணவன்.

என்ன செய்வது? செய்தியைப் பெற்றுப் பதிவு செய்த வானொலி இயக்குநர் வேதனையுடன் முகத்தைச் சுளித்து, ரிசீவரைக் கழற்றி வைத்துவிட்டு, நிலையைத் தலைவனிடம் சொன்னான்: “என்ன செய்யலாம்? பாவம் நிறைமாத கர்ப்பிணி… குழந்தை வேறு ஆபத்தில் இருக்கிறது…”

நிலையத் தலைவனும் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளனும் அவளுக்கு எப்படி உதவலாம் என்பது பற்றி ஆலோசித்தார்கள்… மருத்துவரை விமானத்தில் ஏற்றி அனுப்பவும் வகையில்லை. நிலையத்தில் ஒரு விமானம் கூடக் கிடையாது. அத்துடன் குளிர்காலம் வேறு. வடதுருவ இரவு. பறக்கத்தான் முடியுமா? கட்சிச் செயலாளன் புருவத்தைச் சுளித்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றான்.

arctic-2மருத்துவரின் பெயர் ஸெர்கேய் மாத்வேயிச். அவரைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான மருத்துவர். எதிலும் வியப்போ, மனத்தாங்கலோ, அச்சமோ அடையாத வகை ஆட்களில் ஒருவர். அவரது தோற்றமும் மிகச் சாதாரணமானது: அளவான வயிறு; அறுவை மருத்துவருக்கு இயல்பான பெரிய சிவப்புக் கரங்கள்; நல்லியல்பு தொனிக்கும் கட்டைக் குரல்; வழுக்கைத் தலையை மறைத்து வாரி விடப்பட்ட அருகிய முடி; கொம்புப் பிரேம் போட்ட கறுப்பு மூக்குக் கண்ணாடி; உடை, கைகள் எல்லாவற்றிலும் கார்பாலிக் அமிலம், மருந்துகள், மருத்துவ மனை வாடை – ஆக ஒரே வார்த்தையில் சொன்னால், மருத்துவருக்கு உரிய தோற்றம், எனவே, தங்க ஜரிகையில் நங்கூரச் சின்னம் பொறித்த கடற்படை உடுப்பு அணிந்து அவர் பொது அறையில் காணப்பட்டால், “இவர் ஏன் வெள்ளை மருத்துவ உடுப்பு அணியவில்லை?” என்று பார்ப்பவர்கள் நினைப்பதுண்டு.

அவரிடம் இருந்த ஒரே அசாதாரண இயல்பு என்னவென்றால் அவர் ஆர்க்டிக் பிரதேச மருத்துவரான போதிலும் மிகச் சாதாரணமாக இருந்தார் என்பதே. இருப்பினும் ஆர்க்டிக் மருத்துவர், ஒரு வகையில் கவிதைப் பாங்கு கொண்டவர் ஆயிற்றே. வரைபடத்தைச் சற்றே உற்றுப் பார்த்தால், வடதுருவ ஆராய்ச்சிப் பயணிகளின் நினைவுச் சின்னங்களாக வரைபடத்தில் விளங்கும் பெயர்களில் மருத்துவர்களின் பெயர்களையும் காணமுடியும்: டாக்டர் ஸ்தாரகாதொம்ஸ்க்கிய் தீவு, டாக்கர் இஸாச்சென்கோ முனை என்பன போல. டிக்ஸன் தீவில், அடக்கம் வாய்ந்த வட துருவ வீரரான உதவி மருத்துவர் விளாதீமிரவின் கல்லறையைச் சுற்றிக் காட்டுவார்கள்; அதற்கு வணக்கம் செலுத்துவோம். வ்ராங்கெல் தீவை அடைந்ததும், ஆர்க்டிக் பிரதேசத்தில் மக்களுக்குத் தீச்செயல் புரிந்து வந்தவனான ஒருவனுடன் போராடி உயிர்துறந்த வீர மருத்துவர் வுல்ப்ஸனின் சமாதியை பயணிகளே எல்லாவற்றுக்கும் முன்பு தேடிக்கண்டு அஞ்சலி செலுத்துவார்கள்.

ஆனால் ஸெர்கேய் மாத்வேயிச்சிடமோ இத்தகைய கவிதைப் பாங்கு மருந்துக்குக் கூடக் கிடையாது. அவர் சர்வ சாதாரணமான, விவகாரப் போக்குள்ள மருத்துவர். பனிப்பாளங்கள், புயல்கள், ஆடிக் குலுங்கும் கப்பல் மேல் தளம், டப்பா உணவு, கடலின் உவர் நாற்றம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் துணிச்சலான கப்பல் மருத்துவர்கள் போல் கூட இல்லை அவர். ஒருவேளை அவர் மருத்துவ ஆராய்ச்சியாளரோ, விஞ்ஞானியோ?

அண்மைக் காலத்தில் மருத்துவ விஞ்ஞானிகள் வடதுருவப் பிரதேசங்களுக்கு விருப்பத்துடன் செல்லுகிறார்கள். உயிரியல், ஓரளவு விலங்கியல், தாவர இயல் ஆகியவற்றில் எதிலாவது ஈடுபாடு உள்ளவர்கள். இவர்களில் சிலர் இறால்களையும், விசித்திர நிலநீர் உயிர்களையும், பல்லிகளையும் சேகரித்து, ஸ்பிரிட் குப்பிகளில் இட்டு வைத்திருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்; வேர் முதல் முடி வரை உள்ளங்கை அளவான குட்டை வில்லோ மரங்களை உலர்த்தி ஆல்பத்தில் பொருத்தி வைத்துக் கொள்வார்கள் வேறு சிலர்; இன்னும் சிலரோ, வட துருவச் சூழ்நிலையில் நோய்கள் பற்றியும், மக்களின் நடத்தை, உளப்போக்கு பற்றியும், நோய் தொற்றுவதற்குரிய வாய்ப்புக்கள் பற்றியும், துருவ இரவு, துருவப் பகல் ஆகியவை மனிதன் மீது விளைக்கும் தாக்கம் பற்றியும் ஆராய்ச்சி செய்வார்கள்…

ஸெர்கேய் மாத்வேயிச், இறால்களை ஸ்பிரிட்டில் இடவுமில்லை, பாசிக் காளான்களை உலர்த்தவும் இல்லை. தமது நாட்குறிப்பில் “மருத்துவத் தொழில் சம்பந்தமான அக்கறைக்குரிய சிறு குறிப்புக்களை”க் கூட எழுதி வைத்துக்கொள்ளவில்லை. ஒரு தரம் ஏதோ செய்ய முயன்றார், ஆனால்… நேரமின்மையால் விட்டுவிட்டார்: நோயாளிகள், கவலைகள், மருத்துவமனை. அவர் ஆர்க்டிக்கில் ஆண்டுகளைக் கழிப்பதனால் விஞ்ஞானம் புதிய கண்டுபிடிப்புகளால் அதிக வளம் அடையாது என்பது எல்லாருக்கும் தெளிவாகப் புலப்பட்டது.

Communismகாந்த இயல் அறிஞனான மோதரவ் என்ற இளைஞன் கப்பலிலேயே ஸெர்கேய் மாத்வேயிச்சைச் சந்தித்தான். அறிவியலின் பொருட்டே அத்துறையில் ஊக்கம் காட்டுபவர்களும், வட துருவ நிலையங்களில் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு மிகுதியும் ஏற்ற வாய்ப்பு உண்டு என்று கருதுபவர்களும் ஆகியவர்களில் மோதரவும் ஒருவன். குதூகலப் புன்னகையுடன் மருத்துவரிடம் சொன்னான்:

“உங்கள் நோக்கு எனக்குப் புரிகிறது. வடதுருவத்தில் வேலை செய்கிற எங்கள் அனைவரையும் பற்றிய உங்கள் கருத்தும் எனக்குப் புரிகிறது. உங்கள் கண்களுக்கு நாங்கள் எல்லாரும் சோதனை விலங்குகள் தாம். எங்களை ஆராயப் போகிறீர்கள், அப்படித்தானே? அவசர வேலைக்கு முன்பும் பின்பும் எங்கள் நாடித் துடிப்பைக் கணக்கெடுப்பீர்கள், துருவ இரவின் போதும் பகலின் போதும் எங்கள் இருதயங்கள் எப்படி அடித்துக்கொளுகின்றன என்று கேட்பீர்கள். பின்னர் அறிவியல் ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிடுவீர்கள், இல்லையா? சரிதானே விலங்காகப் பயன்படத் தயாராக இருக்கிறேன்!”

ஸெர்கேய் மாத்வேயிச் அவனை மிரண்டு நோக்கினார், குழம்பினார், பின்பு இது மாதிரி ஏதாவது செய்வதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாகக் குழற்றினார். ஆனால் அவர் அப்போது தவித்த தவிப்பைக் கண்ட மோதரவு, ‘சோதனை விலங்கு’கள் பற்றியோ அறிவியல் ஆய்வு பற்றியோ அவரிடம் மறுபடி பேசவே இல்லை. நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வது, கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் பார்ப்பது, பல் பிடுங்குவது, மூலத்திற்கு அறுவை செய்வது ஆகியன மட்டுமே அவர் இங்கு வந்ததன் ஒரே நோக்கம் என்று தெரிந்தது.

இவற்றிற்காக அவருக்கு மருத்துவமனை தேவைப் பட்டது. மருத்துவமனை இல்லாத மருத்துவன் “கப்பல் இல்லாத கொலம்பஸ்” மாதிரி என்று அவர் சொல்வதுண்டு. அதுவும் ஏனோ தானோவென்று பெயரளவிற்கு அது இருந்தால் அவருக்குப் போதவில்லை. ஆர்க்டிக்கோ ஆர்க்டிக் இல்லையோ, நோயாளிகுத் தக்க முறையில் சிகிச்சை அவசியம் என்று கருதினார். அதனால் தான் கப்பல் கரை சேர்ந்து சாமான்கள் இறக்கப்பட்டதோ இல்லையோ மருத்துவப் பெட்டிகளை அவரே தனது முதுகில் சுமந்து சென்றார். யாராவது உதவிக்கு வந்தால், “கவனமாக, பார்த்து! உடைத்து விடாதீர்கள்” என்று கோபத்துடன் இரைந்தார்.

தானே ரம்பத்தையும் இழைப்புளியையும் கொண்டு சட்டங்கள் தயாரித்தார், தச்சர்களின் வேலையை ஓடியாடி மேல் பார்த்தார், சுவர்களுக்கு வெள்ளை எண்ணெய்ச் சாயத்தை இவரே அடித்தார். தரையில் தார்ப்பாயைத் தம் கைப்பட விரித்தார். ஆட்கள் குறைவு, வேலை நெரிந்தது. வானொலிச் செயதி நிலையம் கட்டப்பட்டது, துறைமுகத்தில் நிலக்கரிக் கிட்டங்கி நிறுவுவதற்காகத் தரை வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு – ஆர்க்டக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் ஆய்ந்த ஆண்டு. பனிக்கடலின் வெறிச்சோடிய கருங்கற்கரைகள் மீது கட்டடங்களும் துறைமுகங்களும் தொழிற் கூடங்களும் சுரங்கங்களும் அப்போதுதான் மந்திரத்தால் உண்டாக்கப்பட்டன போன்று தோன்றலாயின.

மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டது. சிறியது, ஐந்தே படுக்கைகள் கொண்டது, எனினும் முற்றிலும் போதுமானது. ஸெர்கேய் மாத்வேயிச் எந்த மாதிரி மருத்துவ மனைகளில் தலை நரைத்து வழுக்கை விழுந்து, அயோடின் மணமும் கார்பாலிக் அமில வாடையும் நிரந்தரமாக வீசும் அளவிற்கு வேலை செய்திருந்தாரோ, அந்த மாதிரியான மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் எல்லாம் இதில் இருந்தன. வார்னிஷ் பூசப் பெற்ற வெண் சுவர்கள் அம்மாதிரியே பளிச்சிட்டன, கண்ணாடி அலமாரிகளில் இருந்த நிக்கல் கருவிகள் மீதும் ஜாடிகள் மீதும் சூரிய ஒளி பட்டு மின்னியது. ஒரே துப்புரவு. ஒரே நிசப்தம். கார்பாலிக் அமிலத்தின் வாடை. நோயாளிகள் வந்தார்கள், பெரும்பாலும் பெண்களே. தொலையிலுள்ள கூட்டுறவுத் தொழிற் பண்ணைகளிலிருந்து, நாய் இழுத்த ஸ்லெட்ஜுகளில் ஏறி நூற்றுக் கணக்கான கிலோமீடர் தூரத்தைக் கடந்து, பேறு காலத்திற்கு ஒரிரு மாங்களுக்கு முன்பாகவே வந்தார்கள். பாத வெடிப்பு, மூலம், குளிரில் மரத்த விரல்கள், எலும்பு முறிவு, பல்வலி ஆகியனவற்றிற்கு மருந்துவம் செய்து கொள்ள ஆண்களும் வந்தனர். ஸெர்கேய் மாத்வேயிச் பல் மருத்துவமும் பார்த்தார், பல் துளைகளை அடைத்தார். ஊரில் பற்களைச் செவ்வைப்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாது போனவர்கள், ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் பற்களைச் சரி செய்து கொண்டார்கள். ஆனால் அவர் அடிகடி சொல்வது இதுதான்:

“அடடா! இவ்வளவு மோசமாக இருக்கும் இந்தச் சொத்தைப் பல் உனக்கு எதற்காக? ஊம்? பிடுங்கிவிடுகிறேன், சரியா?”

பல் பிடுங்குவதற்கு முன்பு நோயாளிக்குத் துணிவு வருவதற்காக முப்பது மில்லி சாராயம் குடிக்கக் கொடுப்பார். இது அவருடைய வழக்கம். ஆனால் ஆட்கள் தன்னை ஏமாற்றுவதைப் பின்னர் அவர் கண்டுகொண்டார். சாராயத்தைக் குடித்துவிட்டு, பல் பிடுங்கிக்கொள்ள மறுத்து விடுவார்கள். “அதாவது, டாக்டர், பல் வலி இப்போது குறைந்துவிட்டது. அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம்” என்பார்கள். அது முதல் அவர் பல் பிடுங்கிய பிறகு சாராயம் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொண்டார்.

தொழிலிலும் மனப் போக்கிலும் அறுவை மருத்துவர் ஆகையினால் அவர் மருந்து கொடுப்பதைவிட அறுவை செய்வதையே எப்போதும் அதிகம் கையாண்டு வந்தார். அவருடை நண்பர்கள் வேடிக்கையாகச் சொன்னது போல, யாரையாவது “அறுக்க” வாய்ப்பு கிடைத்தால் அவரது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

“இதோ பார், கொஞ்சம் போல நறுக்குவோம், எல்லாம் சரியாகிவிடும். ஆ, அவ்வளவுதான்! நறுக்கிவிட்டோம். இதோடு தொலைந்தது உன் நோய்” என்பார்.

உள் நோய்களை அவர் சந்தேகக் கண்ணோடு நோக்கினார்.

“இந்தா, உள்ளுக்கு மருந்து சாப்பிடுவது என்பது வெட்டிப் பணக்காரர்கள் செய்யும் வேலை. உங்களுக்கு இந்த நோய்கள் எல்லாம் எதற்காக வரவேண்டும், வெறுங்குப்பை!” என்று ஆரம்பித்து, “இவற்றை இயற்கையின் போக்கில் விடுங்கள்… இயற்கை இருக்கிறதே, எல்லாவற்றையும் விட விவேகம் நிறைந்தது. பீடைகள் தாமே போய் விடும்… இங்கேயோ பருவநிலை அற்புதம்… உடல் நலத்துக்கு ஏற்ற பருவநிலை, இல்லையா?” என்று நோயாளிக்கு ஆறுதல் கூறுவார்.

நண்பர்களுக்கு இது நிலையான வேடிக்கை ஆகிவிட்டது. சாப்பாட்டு வேளையில் ஒருவன் டாக்டரே விளித்து, “இதோ பாருங்கள், டாக்டர், இன்று எனக்கு ஏனோ ஒரே தலைவலி. தானே சரியாகிவிடும்? ஊம்? என்று கேட்பான்.

“சரியாகிவிடும், சரியாகிவிடும்” என்று நிச்சயத்துடன் சொல்லுவார்.

இத்தகைய மிகச் சாதாரண மருத்துவராகிய ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் புரியாத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது அவர் ஆர்க்டிக்கிற்கு எதற்காக வந்தார் என்பது மட்டுமே.

அவரைப் பொருத்தவரை, ஆர்க்டிக்கை அவர் பார்க்கவே இல்லை. மருத்துவமனை, பொது அறை, ஆர்க்டிக்குக்கு வந்திருப்பவர்களின் வீடுகள் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்தார்… ஒரு முறை வேட்டைக்குப் போகத் திட்டமிட்டார், ஆனால் அது செயல்படவில்லை. தொலைவிலுள்ள வேட்டைக்காரர் கூட்டுறவுப் பண்ணைகளுக்குப் போய்வர நினைத்தார், ஆனால் மருத்துவமனைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் இல்லை- எத்தனையோ மாதர் பிரசவத்துக்குக் காத்திருந்தார்கள் (வியப்பளிக்கும் விஷயம் என்னவென்றால் ஆர்க்டிக்கில் நிறையப் பெண்கள் குழந்தைகள் பெற ஆரம்பித்திருந்தார்கள் என்பது) ஆகவே தொலை தூரப் பண்ணைகளுக்கு உதவி மருத்துவன்தான் போய் வந்தான். ஒரே ஒரு தடவை மட்டுமே, இலையுதிர் காலத்தில், வெண் திமிங்கிலங்கள் கிளம்பும் தருவாயில், மருத்துவர் இளைஞர்களுடன் வேட்டைக்குச் சென்றார். ஆனால் அவர் செய்ததெல்லாம், அனைவருக்கும் இடைஞ்சலாயிருந்ததும், சொட்டச் சொட்ட நனைந்ததும், வலையைத் தவறவிடப் பார்த்ததும் தான். நீரில் நனைந்து ஊறிய போதிலும் மிகுந்த திருப்தியுடன் கரை திரும்பினார். திமிங்கிலத்தைத் தம் கத்தியால் அறுத்தார். (“திமிங்கிலத்திற்கு மூலநோய் இருக்கிறதா என்று பார்க்கிறார்” என்று வாலிபர்கள் சிரித்தார்கள்.) பழகிய கைத்தேர்ச்சியுடன் திமிங்கிலத்தின் உள்ளுறுப்புக்களை அறுத்து, அதன் நுரையீரலையும் வயிற்றையும் எல்லாருக்கும் காட்டினார். “இவை அனைத்தும் மனித உறுப்புக்களைப் போலவே இருக்கின்றன, பார்த்தீர்களா!” என்றார்.

ஒரு நாள் மாலை காப்பி அருந்திய பின், பொது அறையில் கதகதப்பும் வசதியும் வாய்ந்த நிலையில் காந்த இயல் ஆராய்ச்சியாளன் மோதரவ் மருத்துவரின் அருகே அமர்ந்து, “ஒன்று கேட்கிறேன், தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நீங்கள் எதற்காக ஆர்க்டிக்குக்கு வந்தீர்கள், சொல்லுங்கள்” என்றான்.

ஸெர்கேய் மாத்வேயிச் கூச்சத்துடன் கைகளை விரித்தார்.

“இதை எப்படி விவரிப்பது” என்று முணுமுணுத்தார். “எங்கும் ஆர்க்டிக்கைப் பற்றியே பேச்சாய் இருந்தது, நாமும் போவோமே என்று நினைத்தேன். நான் கிழவனாகிவிடவில்லை. என்ன சொல்லுகிறீர்கள்? நான் ஒன்றும் கிழவன் இல்லை, சரியா?” என்று இளவட்டம் போன்று மீசையை முறுக்கினார். “அப்புறம் எங்கள் மருத்துவமனைக்குப் புதிய மருத்துவர் ஒருவர் வந்து சேர்ந்தார். அப்போதுதான் வடக்கேயிருந்து திரும்பியவர். அளவிட முடியாத உற்சாகம் அவருக்கு. ஆர்வமிக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற விரிவான களம் அது என்றார். ஆகவே அங்கே வேலை செய்ய என் பெயரைக் கொடுக்கக் கூடாது என்று எண்ணினேன். நான் போர்முனைக்கும் போனவன் தான்… எல்லாவற்றையும் அநுபவித்து விட்டேன்… தவிர…” இவ்வாறு கூறியபடியே, நேர்மை ததும்பும் நீல விழிகளை மற்றவன் பக்கம் திருப்பி, எளிமையுடன் தொடர்ந்தார்: “இத்துடன் பணமும் கைநிறையக் கொடுக்கிறார்கள். இரண்டு ஆண்டை இங்கே கடத்திவிட்டால் கணிசமான தொகை சேர்ந்து விடும், இல்லையா! மாஸ்கோவுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன வீடு வாங்குவதாக எண்ணம். அதாவது, சிறு தோட்டம், பூப்பாத்திகள், எல்லாவற்றுடனும். நாஸ்டர்ஷியம் மலர்கள் என்றால் எனக்கு உயிர். சன்னலுக்குக் கீழே ஆர்க்கிடு செடி வளர்க்கவும் எனக்கு ஆசை.”

இந்த உரையாடலுக்குப் பிறகோ, மருத்துவர் முன்னிலும் சலிப்பூட்டும் வறண்ட பேர்வழி என்று எல்லாரும் நினைக்கத் தொடங்கினார்கள்.

பெரிய சிவப்புக் கரங்களும், மேலங்கிக்குள்ளே தொப்பையும், கார்பாலிக் அமிலம், அயோடின் இவற்றின் நெடியுமாக இலகிய இந்த மனிதர் என்னதான் சுவையோ கவர்ச்சியோ அற்றவராயினும், வெள்ளரி நிலத்து மாதுக்கு வடதுருவ நிலையம் முழுவதிலும் கஷ்டப் பிரசவத்தில் உதவக் கூடிய ஒரே ஆள் அவர் தான். அவர் இதில் எப்படி உதவ முடியும் என்பதுதான் ஒருவருக்கும் விளங்கவில்லை.

கட்சிச் செயலாளன் மருத்துவமனைக்கு வந்த மருத்துவருடன் அவரது அறையில் உரையாடினான்.

“எபடியாவது உதவி செய்ய வேண்டும்” களைத்த விழிகளால் டாக்டரை நோக்கியவாறே சொன்னான்.

மருத்துவர் வியப்படைந்து, “பொறுங்கள், பொறுங்கள், ஐயா! உதவ வேண்டும் என்கிறீர்கள். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நோயாளியை இங்கே அழைத்து வாருங்கள். தாராளமாக. எங்கேயோ, ஊம்… வான வெளியில் நிகழும் பிரசவத்தில் நான் எப்படி மருத்துவம் பார்க்க முடியும்?” என்றார்.

“இருந்தாலும் நாம் உதவத்தான் வேண்டும்” என மீண்டும் வற்புறுத்தினான் கட்சிச் செயலாளன்.

“ஆக, அற்புதந்தான் போங்கள்!” என்று டாக்டர் கைகளை உயரே ஆட்டியவாறு கெக்கலித்தார். “ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள கைகள் எனககுக் கொடுங்கள்- கர்ப்பிணிவரை எட்டும்படி. அதோடு தொலைநோக்கி விழிகளும் தாருங்கள்- ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளதைப் பார்க்க வசதியாக. அப்போது நான் சேவைக்குத் தயாராயிருக்கிறேன், ஆயத்தமாயிருக்கிறேன்.”

“ரொம்ப சரி. அம்மாதிரிக் கரங்களும் கண்களும்கூடத் தங்களுக்கு அளிக்கிறோம், டாக்டர். அப்போது…”

“நீங்கள் சொல்வது விளங்கவில்லையே… எம்மாதிரிக்கைகள்? எவ்விதக் கண்கள்?”

வானொலி. கர்ப்பிணியின் நிலைமையையும், மருத்துவர்கள் சொல்வது போலக் கருப்பையில் குழந்தையின் கிடக்கையையும் பற்றி அங்கிருந்து தகவல் தெரிவிப்பார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் இங்கிருந்து சொல்லி நடத்தி வையுங்கள்.”

ஸெர்கேய் மாத்வேயிச் எழுந்தார், மேலங்கியை அணிந்து கொண்டார், உறுதியான தோரணையில் வாயிலை நோக்கி அடி எடுத்து வைத்தார்.

“கர்ப்பிணியைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்” என்றார் திடீரென நின்று, “ஆனால், இதற்கு மேலங்கி எதற்காக? கிடக்கிறது, எல்லாம் ஒன்றுதான். உலகத்தில் எத்தனையோ விந்தைகள் நிகழ்கின்றன. இம்மாதிரி… ம்ம்… அஞ்சல் மூலம் பிரசவம் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல் தடவையாகக் கிடைத்திருக்கிறது… அதாவது வானொலி மூலம் பிரசவ மருத்துவம். என் சக மருத்துவர்கள் இதைக் கேட்டு எவ்வளவு வியப்பு அடைவார்கள் என்பதைக் கற்பனை செய்துகொள்கிறேன்… போகட்டும், எல்லாம் ஒன்றுதான். வாருங்கள், போகலாம்” என்றார்.

வெள்ளரி நிலத்துடன் வானொலித் தொடர்பு கிடைத்தது. “வெள்ளரி நிலத்துடன் வானொலித் தொடர்பு வெகு நேரம் நீடிக்கவிருப்பதால், பிரசவம் ஆகும் வரை மற்ற எல்லா நிலையத் தொடர்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன” என வானொலி இயக்குநர் அறிவித்தான்.

“நல்லது, ஆரம்பிக்கலாம்” என்று மேலங்கி பைக்குள் கைகளை நுழைத்துக்கொண்டு கூறத் தொடங்கியவர், மேலே என்ன சொல்வதென்று தயங்கினார். “இன்றைக்கு உடம்பு எப்படியிருக்கிறது உங்களுக்கு?” என்று வழக்கம் காரணமாகக் கேட்க வாயெடுத்தவர், தனக்கு எதிரே நோயாளி இல்லை என்பதை நினைவுகூர்ந்து அடக்கிக் கொண்டார். எதிரே இருந்தது வெறுமை. ஆகாயம். ஒரு விதத்தில்… வானவெளி.

­­­­­­­­­­­­­அவரது அவரது சங்கடமான சூழ்நிலை தெளிவாகப் புலப்பட்டது. தான் வேலை செய்து பழகிய சூழ்நிலை, தனக்கு இன்றியமையாத நிதானத்தை ஏற்படுத்த இல்லாததை உணர்ந்தார். கர்ப்பிணியைக் காண்பது, அவளது முனகல்களையும் முறையீடுகளையும் கேட்பது, அவளுடைய வலியைப்பற்றி அனுதாபம் தெரிவிப்பது, பேசினில் இரத்தத்தைப் பார்ப்பது, கருவை, அந்தச் சின்னஞ்சிறு, வழவழப்பான, நிர்க்கதியான பிஞ்சு மேனியைத் தம் கைகளால் தொட்டு உணர்வது அவருக்கு அவசியமாயிருந்தது.

இப்போதோ, இவற்றில் எதுவுமே இல்லை. குண்டுமாரி பொழிகையில் கலங்காத படைவீரன், மறை குழியின் பயங்கர மௌனத்தில் நடுநடுங்குவது போலவும், எந்திர இரைச்சலில் அமைதியாகத் தூங்கும் அரைவை மில்காரன், சந்தடி அடங்கியதுமே திடுக்கிட்டு விழித்துக் கொள்வது போலவும் தமது நிலைமை இருப்பதை உணர்ந்தார்.

labourஇங்கே, வானொலி நிலையத்தில், அவரது நிலை கரையில் எறியப்பட்ட வெண் திமிங்கிலம் போல இருந்தது. கிறீச்சிட்டது. வேறு சந்தடியே இல்லை. நோயாளி கிடையாது, முனகல்கள் கிடையாது, வேதனை கிடையாது.

வேதனை கிடையாதா? ஆனால் அவள் எங்கேயோ வானவெளியில் வேதனையை உணர்ந்து, உதவியை எதிர்நோக்கியிருந்தாள். மருத்துவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய நாற் புறமும் மற்ற எல்லாரும் ஆவலாகக் காத்திருந்தார்கள்.

வானொலி இயக்குநரின் பக்கம் குனிந்தார்.

“பாரு, குழந்தை எந்த வாகில் கிடக்கிறது என்று மருத்துவரிடம் கேளேன்” என்றார்.

தமது சொற்கள் சிதறும் பட்டாணிக் கடலைகள் போலப் புள்ளிகளும் கோடுகளுமாகத் தெறித்து வானில் மிதந்து செல்வதை ஆவலுடன் நோக்கினார். சில நிமிடங்களில் பதில் வந்தது.

அதைப் படித்துவிட்டு நெற்றியைச் சுருக்கிக்கொண்டார். இவ்வாறு தொடங்கியது இந்த அசாதாரணமான “அஞ்சல் மருத்துவம்.”

“ஹும். குழந்தை குறுக்காகக் கிடக்கிறதாக்கும். ஊம். கஷ்டமான பிரசவம்தான், ஆமாம்” என்று தமது எண்ணங்களை வாய்விட்டுச் சொல்லி விட்டு வானொலி இயக்குநரைப் பார்த்து, “இந்தா, என் துணை மருத்துவரிடம் கேள், பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் முறைப்படி குழந்தையைத் திருப்புவது அவருக்குத் தெரியுமா, அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாரா என்று” எனக் கூறினார்.

“ஆனால் அவருக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? இளைஞர், போதாக்குறைக்கு மருத்துவச் சிகிச்சையாளர் வேறு” என்று நினைத்துக்கொண்டார்.

எல்லா அறுவை மருத்துவர்களையும் போலவே மருத்துவச் சிகிச்சையாளர்களிடம் அவருக்கு அவநம்பிக்கை.

ஸெர்கேய் மாத்வேயிச் எதிர்பார்த்ததே போன்ற பதில் வந்தது: “கேள்விப்பட்டிருக்கிறேன், இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று தயங்காமல் எனக்குச் சொல்லுங்கள்.”

“ஸ்பிரிட்டாலும் அயோடினாலும் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள். விரல்களில் எல்லாம் அயோடின் பூசிக் கொள்ளுங்கள். கைகளைப் பத்து நிமிடம் தொடர்ந்தாற் போலக் கழுவிக்கொண்டிருங்கள்” என்றார் டாக்டர். ஏதோ புண்ணியமான தொண்டில் துணை செய்வது போன்ற பாவனையுடன் வானொலி இயக்குநர் அவரது சொற்களை எல்லாம், முனகல்கள் உள்பட, அஞ்சல் செய்தான்.

கைகளை முறைப்படி கழுவிக் கொண்டாகிவிட்டது என்று வெள்ளரி நில மருத்துவர் பணிவுடன் அறிக்கை செய்தார்.

“சரி” என்று திருப்தியுடன் தலை அசைத்தார் ஸெர்கேய் மாத்வேயிச். “இப்போது, கர்ப்பிணிக்கு நோயணு நீக்கம் செய்வது எப்படி என்று சொல்கிறேன்.” இவ்வாறு கூறி, விவரமான குறிப்புக்களைக் காகிதத்தில் எழுதி வானொலி இயக்குநரிடம் கொடுத்தார். தமது மூளைக்குள் ஒரு நிமிடத்துக்கு முன்வரை மறைந்திருந்த எண்ணங்கள் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் மாய வித்தை போல அனுப்பப்படுவதை ஆவலும் வியப்பும் ததும்ப மீண்டும் கவனித்தார் ஸெர்கேய் மாத்வேயிச். வானொலி இயக்குநர் மீது அவர் உள்ளத்தில் முதன் முதலாக மரியாதை பிறந்தது.

சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தால் கிளர்ச்சியுற்ற இயக்குநர் தன் முயற்சி காரணமாக இறுக்கமடைந்து முகமெல்லாம் சிவந்து போனான். தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் அவன் ஒவ்வோர் எழுத்தையும் அழுத்தி அடித்தான். பதிலைக் குறித்துக் கொள்ளும் போதும் இயல்புக்கு ஏற்பக் கிறுக்கித் தள்ளாமல், சிந்தனையுடன் நிறுத்தி எழுதினான்.

“மெல்லச் சொல்லு. ஓர் எழுத்து தப்பானாலும் குழந்தையும் தாயும் ஆபத்துக்கு உள்ளாகிவிடுவார்கள்” என்று வெள்ளரி நிலத்து வானொலி இயக்குநரை எச்சரித்தான்.

“ஆயிற்றா? இப்போது உள் சோதனை தொடங்குங்கள். இடது கையை நுழையுங்கள்…” என்று சொல்லிக் கொண்டு போனார் டாக்டர்.

உறுதியான இறுதிக் கணம் நெருங்கிவிட்டது.

“கருப்பையின் வாய் போதிய அளவு திறந்திருக்கவில்லை என்றால்…” மருத்துவர் கவலையுடன் சிந்தித்தார். “நான் மட்டும் அருகே இருக்க முடிந்தால்! கண்ணால் பாராத ஒன்றுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது அல்லவா?”

பதிலுக்காகக் காத்திருக்கையில் அவர் ஒருபோதுமில்லாதவாறு பதற்றமடைந்தார். நிதானத்துக்கு வர சன்னல் அருகே சென்று தெருவில் பார்வையைச் செலுத்தினார். தெருவா? அங்கே ஏது தெரு? சன்னலுக்குக் கீழே வெண்பனி குவிந்திருந்தது. அதற்கு அப்பால் களஞ்சியம், விரிகுடா. இன்னும் தொலைவில் கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரே வெண்பனி மயம். கிட்டங்கிகளின் முகடுகள் மேலும், விரிகுடா மீதும், தூந்திர வெளியிலும் எங்கும் வெண்பனி. பசுமை படிந்த வெண்பனியும் நிலவும்.

“நெடுந் தொலைவு வந்திருக்கிறாய், அல்லவா, ஸெர்கேய் மாத்வேயிச்?” எனத் திடீரென்று எண்ணும் போதே வியப்பில் மூழ்கினார். தாம் இவ்வளவு தூரம் வந்திருப்பது பற்றிய நினைவு அவரை மலைக்க வைத்தது. ஏதோ இந்த எண்ணம் முதன் முதல் இப்போதுதான் உதித்தது போலவும், தாம் இங்கே கழித்திருப்பது இரண்டு ஆண்டுகள் அல்ல, முதல் நாள்தான் போலவும் பிரமித்தார்.

“ஸெர்கேய் மாத்வேயிச்!” என்று யாரோ தணிந்த குரலில் அழைத்தார்கள்.

சடக்கெனத் திரும்பியவர் இரண்டு மாதரைக் கண்டார். ஒருத்தி வானொலி இயக்குநரின் மனைவி, மற்றவள் புவிப்பௌதிகயியலரின் வீட்டுக்காரி.

“டாக்டர் ஐயா, என்ன சேதி?” என்று, அவர்களில் அதிகத் துணிச்சல் உள்ளவளான வானொலி இயக்குநரின் மனைவி பதற்றத்துடன் கேட்டாள்.

soviet-peopleமருத்துவருக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன சேதியாவது கீதியாவது? உங்கள் வீட்டுக்காரரிடம் கேளுங்கள். அதோ வானொலிப் பெட்டியருகே ஏதோ மாயம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என்னைவிட அதிகமாக அவருக்குத்தான் தெரியம். நானோ எதையும் கண்ணால் பார்க்கவே இல்லை… எதையுமே பார்க்கவில்லை… வெண்பனியைத் தவிர” என்றார்.

“நாங்கள் என்ன சொல்ல வந்தோம் என்றால்…” என்று சங்கோசத்துடன் இழுத்தாள் புவிப்பௌதிகயியலரின் மனைவி. “விஷயம் என்னவென்றால் எனக்கு ஒரு தோழி இருந்தாள். அவளும் இதே மாதிரித்தான் குழந்தை பெற்றாள், நிலைமையும் இது போலத்தான் இருந்தது. அந்தப் பிரசவத்தின் விவரம் எல்லாம் எனக்குத் தெரியும்… சொல்லட்டுமா? ஒருவேளை உங்ளுக்கு உதவியாயிருக்கும்!”

மருத்துவர் முகத்தைச் சுளித்தார்.

“ஏனம்மா, உங்களுக்கு என்ன வந்தது? பிரசவிப்பவள் உங்கள் தோழி அல்லவே! நீங்கள் எதற்காக இப்படி? என்றார்.

“அதற்காக இப்படியா? ஏன் இந்த மாதிரிப் பேசுகிறீர்கள்?” என்று அப்பெண் வியப்புடன் சொன்னாள்.

“இதற்குள் வானொலி இயக்குநர் வெள்ளரி நிலத்திலிருந்து வந்த பதிலைக் குறித்துக் கொண்டு வந்து கொடுத்தான். செய்தி நல்லதா, கெட்டதா என்பது அவனுக்குத் தெரியாது. மருத்துவச் சொற்கள் அவனுக்கு விளங்கவில்லை. எனினும் பதில் கெட்டது எனப் புரிந்து கொண்டவன் போல அதற்குள்ளாகவே சஞ்சலப்படலானான்.

மருத்துவர் படித்துப் பார்த்துவிட்டு முறுவலித்தார். “ஓகோ, அப்படியா? கருப்பை வாய் இரண்டரை விரற்கிடை திறந்திருக்கிறதா, பரவாயில்லை, அதற்கென்ன? பிராக்ஸ்டன்-ஹிக்ஸ் முறைப்படி குழந்தையைத் திருப்பிவிடுவோம்” என்றார்.

வானொலிப் பெட்டிக்கு அருகே வந்தார். யாரோ ஒருவன் அவர் உட்கார்வதற்காக நாற்காலியை நகர்த்தினான். உறுதியான கணம் வந்துவிட்டது என்று எல்லாரும் எப்படியோ உடன் அறிந்து கொண்டார்கள். இயக்குநரின் முகம் வெளிறியது. நிறைய ஆட்கள் குழுமியிருந்த போதிலும் அறையில் ஒரே நிசப்தம், ஆச்சரியமூட்டும் மௌனம் நிலவியது. ஆயினும் கட்சிச் செயலாளன் “உஷ்” என்று சீறினான். நம்பிக்கையும் அச்சமும் கவலையும் கொண்ட விழிகளுடன் அனைவரும் மருத்துவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் மனத்தில் இந்த எண்ணம் பளிச்சிட்டது: “எங்கிருந்து எனக்கு இவ்வளவு துணிவு, இவ்வளவு அதிகாரம் வந்தது? இங்கே நான் பேசுவேன், அங்கே அவர் என் சொற்படி எல்லாவற்றையும் செய்வார். எல்லாம் நலமே நிறைவுறக் கூடும் ஒருவேளை. இதைச் செய்விப்பவன் நான்… நான்!…”

“வலக்கை விரல்கள் இரண்டை நுழைத்து, குழந்தையின் பாதத்தைப் பற்ற முயலுங்கள்” என உரக்கக் கூறினார்.

வானொலிப் பெட்டியன் ஒலிக் கருவி கிறீச்சிட்டது, புள்ளிகளும் கோடுகளும் சிதறின, மருத்துவரது மூளையிலோ வேறு எண்ணங்களே இல்லை. பிரசவிப்பவளை அவர் தமது கண்ணெதிரே கண்டார். இதோ, அவர்தாம் விரல்களை நுழைக்கிறார். பிரசவிப்பவள் ஓலமிடுவதைக் கேட்கிறார். குழந்தையின் காலை, செயலற்ற காலைத் தொட்டு உணர்கிறார்…

“உன்னிப்பாய்க் கவனியுங்கள்!” என்று மருத்துவர் கத்தியதைப் பணிவுடன் அஞ்சல் செய்தான் வானொலி இயக்குநர். “கையைக் கால் என்று தவறாக நினைத்து விடாதீர்கள். குதிகாலை நெருடிக் கண்டுகொள்ளுங்கள். குதிகாலை, தெரிந்ததா? நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் குழந்தையின் கையைப் பற்றி இழுத்து விடப் போகிறீர்கள்… அம்மாதிரி நடப்பது உண்டு…” தொடர்ந்தார் மருத்துவர்.

வெள்ளரி நிலத்திலும் மக்கள் வானொலி இயக்குநரைச் சுற்றிக் கவலையுடன் குழுமியிருந்தார்கள். பிரசவிப்பவளின் கணவன், உடல் வியர்த்து வடிய, அலங்கோலமான ஆடைகளுடன் வானொலிப் பெட்டிக்கும் மனைவியின் படுக்கைக்கும் இடையே போய்வந்தபடி இருந்தான். வானொலி மூலம் வந்த உத்தரவுகளை மருத்துவரிடம் கொடுப்பது அவருடைய பதிலை வாங்கிக்கொண்டு, ஏதேனும் சொல்ல விட்டு விடவோ, தவறு செய்து விடவோ கூடாது என்பதற்காக அதை வாய்க்குள்ளாகப் படித்தவாறு வானொலிப் பெட்டியருகே திரும்பி ஓடுவதுமாக இருந்தான்.

மருத்துவர் பதற்றமடைந்திருந்தார் எனினும் ஸெர்கேய் மாத்வேயிச்சின் ஆதரவு அவருக்குத் தெம்பு அளித்தது. பிரசவிப்பவளின் கண்ணீரும் வேதனையும் பொங்கும் விழிகள் தம்மையே உற்று நோக்குவதை அவர் கண்டார்.

வேலை செய்தவாறே அவர் முணுமுணுத்தார்:

“ஒன்றுமில்லை, கவலைப்படாதீர்கள். ஸெர்கேய் மாத்வேயிச்சும் நானும் உங்களுக்கு ஒத்தாசை செய்கிறோம்… கவலைப்படாதீர்கள்… இதோ குதிகால்… பட்டுப் போல…”

“காலைப் பற்றிக் கொண்டு விட்டேன்” என்ற செய்தியைப் படித்தார் ஸெர்கேய் மாத்வேயிச்.

“ஆகா! காலைப் பற்றிக்கொண்டு விட்டான். அருமை” என்று உரக்கக் கூறினார்.

மகிழ்ச்சி நிறைந்த, அடங்கிய முணுமுணுப்பு அறையில் தவழ்ந்தது: “காலைப் பிடித்துவிட்டார். காலைப் பிடித்துவிட்டார்” என்று எல்லாரும் அசைந்தார்கள், முறுவலித்தார்கள், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக் கூறத் தயாராகிவிட்டார்கள். ஆனால் ஸெர்கேய் மாத்வேயிச்சின் முகம் மறுபடியும் உர்ரென்று ஆகிவிடவே அனைவரும் மௌனமானார்கள்.

“நல்லது, இப்போது பாதத்தைப் பற்றியபடியே குழந்தையைத் திருப்புங்கள். மற்றக் கையால்…” என்று மருத்துவர் உத்தரவிடத் தொடங்கினார்.

தொலைவு பற்றிய நினைவே அவருக்கு இல்லை. பிரசவிப்பவளின் படுக்கையருகே நின்றவாறு உதவி மருத்துவருக்குச் சுருக்கமாக உத்தரவிடுவது போல அவருக்குத் தோன்றியது. “அவன் கெட்டிக்காரன், கெட்டிக்காரன்! மருத்துவச் சிகிச்சையாளன்தான் என்றாலும் பிரமாதமானவன். அருமை!” என்று உதவி மருத்துவரைப் பற்றி நினைத்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வரவர அதிகரித்தது. முழு வெற்றி கிடைக்கும் என்ற உறுதி முன்னமேயே தமக்கு இருந்தது என இப்போது அவருக்குப் பட்டது. அதாவது வேலையில் நிதானம் அவருக்கு முடிவில் வந்து விட்டது. மறுபடியும் வழக்கமான சூழ்நிலையில் இருந்தார்.

யுகம் போலத் தோன்றிய கணங்கள் கழிந்தன. ஸெர்கேய் மாத்வேயிச் முதல் செய்தியை அனுப்பி ஒரு மணி ஆகிவிட்டது.

“எல்லாவற்றையும் யோசித்துத் திட்டம் செய்து விட்டேனா? எதிர்பாராதது ஏதேனும் இப்போது நிகழக்கூடுமோ? இந்த ஆள் ஈடு கொடுப்பானா? ஏன்தான் நான் அங்கே இருக்க முடியாமல் போயிற்று? அவனை ஏதாவது கேட்க மறந்துவிட்டேனோ?”

ஒலி பெருக்கியிலிருந்து இக்கேள்விகளுக்குப் பதிலை நேராகக் கேட்க முடியும் போல அதையே நோக்கினார். அவருக்குக் கேட்டவையோ, புள்ளிகள், கோடுகள், புள்ளிகள், கோடுகள்… அவ்வளவுதாம். அவையோ விளங்காப் புதிர்கள்.

இயக்குநரின் தோளுக்கு மேலாகக் குனிந்து, அவன் எழுதும் போதே படித்தார்: “பத்திரமாகத் திருப்பி விட்டேன்”.

“பத்திரமாக! “என்று அடக்கமாட்டாமல் கூவினார் இயக்குநர்.

“பத்திரமாக, பத்திரமாக!” என்று உயிர்ப்புற்று நிமிர்ந்தனர் அறையிலிருந்தவர்கள் எல்லாரும். “டாக்டர்! ஸெர்கேய் மாத்வேயிச்! அன்பார்ந்த டாக்டர்!”

“குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!” என்று சீறினார் மருத்துவர்.

வானொலி மூலம் வந்த பதிலைக் கேட்டுக் கிளர்ச்சியுற்றதற்காக, முதலாண்டு மாணவன் போல, முதல் அறுவையின் போது துணை மருத்துவன் போல நடந்து கொண்டதற்காக அவருக்குத் தன் மீதே கோபமுண்டாயிற்று.

“வெட்கம், வெட்கம், டாக்டர்! அவமானம்!”

“குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!” என்று இன்னொரு முறை கத்தினார். இயக்குநர் அச்சொற்களை அவசரத்துடன் அஞ்சல் செய்தான்.

baby“பிரசவம் இன்னும் நடந்தாகவில்லை. ஆமாம், அதற்குள் நடந்து விடாது” என்று பொதுவாக அறையிலிருந்தவர்களை நோக்கிக் கடிந்துகொள்ளும் தோரணையில் கூறினார் மருத்துவர். மீண்டும் அறையில் மௌனம் குடிகொண்டது. “அதற்குள் நடந்து விடாது” என்று மறுமுறை தணிந்த குரலில் முணுமுணுத்துவிட்டு, ஒலி பெருக்கியை உறுத்துப் பார்க்கலானார்.

திடீரென அவர் உள்ளத்தில் ஓர் ஆசை, அடக்கமுடியாத ஆசை எழுந்தது. குழந்தை உயிரோடு பிறக்க வேண்டும் என்ற ஆசை. உயிரோடு, அதுவும் ஆணாகப் பிறக்க வேண்டும். சுருட்டை மயிருடன்… தானே குழந்தையின் தகப்பன் போன்று அதை விழைத்தார். தாய்க்கு இனி ஆபத்து இல்லை. ஆனால் குழந்தை, குழந்தை…

“இதயத் துடிப்பு துலக்கமாக, தெளிவாகக் கேட்கிறது” என்ற பதிலைப் பிடித்தார் இயக்குநர்.

ஆனால் மருத்துவர் கேட்டது இயக்குநரின் சொற்களை அல்ல, இன்னும் தாயின் கருப்பையிலிருந்த குழந்தையின் இதயத் துடிப்பையே. இன்னும் உலகில் உதிக்காத மானிடனின் இதயத் துடிப்பு அது. ஆனால் அவன் இதோ பிறந்து விடுவான், வெற்றி முழக்கம் செய்து தனது உரிமைகளை வலியுறுத்துவான். அவன் இதயம் எப்படிப் பட்டதாயிருக்கும்? தான் உயிருடன் பிறந்ததன் பொருட்டு தாய்நாட்டிற்கு – வானொலி இயக்குநர்கள் அனைவருக்கும், இதோ சுங்கான் புகைத்துக் கொண்டிருக்கும் கட்சிச் செயலாளனுக்கும், மருத்துவச் சிகிச்சையாளனுக்கும் (அவன் பாராட்டுக்குரியவன், கெட்டிக்காரன்!), ஸெர்கேய் மாத்வேயிச்சுக்கும் கடமைப்பட்டுள்ள இந்த மனிதனின் இதயம் எத்தகையதாயிருக்கும்? அவர் வாய்விட்டுச் சிரித்தார். அதற்கு முன் ஒருபோதும் சிரிக்காத விதத்தில் நகைத்தார். அவரது நகைப்பில் வெற்றியோ, கர்வமோ, திருப்தியோ இல்லை. அவருக்கே இன்னும் விளங்காத ஏதோ ஒன்றுதான் அதில் இருந்தது.

கர்ப்பிணிக்கு வலியெடுக்கத் தொடங்கியது. வெள்ளரி நிலத்திலிருந்து செய்திக்கு மேல் செய்தியாக மளமளவென்று வரத் தொடங்கின. பிரசவிப்பவளின் நிலைமை பற்றியும் வலிகளுக்கு நடுவிலுள்ள இடைநேரம் பற்றியும் அங்குள்ள மருத்துவர் சுருக்கமான அறிக்கைகள் விடுத்துக்கொண்டிருந்தார். அவளது கணவனோ, “பயங்கர வேதனைப்படுகிறாள்… மகா கோரமாகக் கூச்சலிடுகிறாள்… என்ன செய்வது? என்ன செய்வது, டாக்டர்? ஐயோ, என்ன வேதனைப்படுகிறாள், பாவம்! ஏதாவது செய்யுங்கள். இந்தக் கதறலை என்னால் பொறுக்க முடியவில்லை!” என்று தானாகவே சேர்த்துக் கூறினான்.

பிரசவிப்பவளின் கோரக் கூச்சல் இங்கே, ஒலிபெருக்கி மூலம் கேட்பது போலப் பிரமை உண்டாயிற்று. கட்சிச் செயலாளன் சுங்கானை வலிவாகக் கடிப்பதையும் அவன் முகம் சாம்பலாக வெளுத்துவிட்டதையும் ஸெர்கேய் மாத்வேயிச் கண்டார்.

“நீங்கள் என்ன இப்படி? ஏன், ஐயா, உங்களுக்கு என்ன? உங்கள் மனைவி பிரசவிக்கவில்லையே, ஊம்?” என்றார்.

கட்சிச் செயலாளன் சோர்வுடன் முறுவலித்து, “உண்மைதான், அவள் என் மனைவி இல்லை. ஆனால் தாயும் சேயும், எப்படி உங்களுக்குச் சொல்வது, நம்மவர்கள் அல்லவர்?” என விடையளித்தான்.

தனது முட்டாள்தனமான கேள்விக்கும் கட்சிச் செயலாளனின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறியதோடு அவன் மனத்தைப் புண்படுத்தி விட்டதற்கும் ஸெர்கேய் மாத்வேயிச் வெட்கமுற்றுத் தம்மையே நொந்து கொண்டார். ஆனால் இதைப் பற்றிச் சிந்திக்கவே இப்போது நேரமில்லை.

“குழந்தையின் இதயத் துடிப்பைக் கவனியுங்கள்!”

…மூன்று மணி நேரம் கழிந்துவிட்டது. வானொலிப் பெட்டியின் அருகே அவர் உட்கார்ந்தது மூன்று மணிக்கு முன்பு. இப்போது ஒருபோதுமில்லாத களைப்பும், உரலில் இடிக்கப்பட்டது போன்ற தளர்வும் அவரைக் கவ்விக் கொண்டது. சீக்கிரத்தில், சீக்கிரத்தில் முடியுமா இதெல்லாம், வானொலி மூலம் நடக்கும் இந்த அசாதாரணப் பிரசவம்?

“பையன்! பையன்! ஆமாம். இதோ! பையன்!” என்று வானொலி இயக்குநர் மகிழ்ச்சியுடன் கூவியது திடீரென அவர் காதில் பட்டது. ஆப்பரேட்டர் வானொலிச் செய்தியை ஸெர்கேய் மாத்வேயிச்சிடம் நீட்ட அவர் அதை உரக்கப் படித்தார்:

“டாக்டர், தோழர்களே, நண்பர்களே! எனக்கு ஆண் மகவு பிறந்திருக்கிறது, மகன், பையன். நன்றி, நீங்கள் செய்த எல்லாவற்றுக்காகவும் உங்களுக்கு நன்றி. ஸெர்கேய் மாத்வேயிச், நன்றி. நீங்கள் அருமையான மனிதர். உங்களுக்கு நன்றி!”

எல்லாரும் மருத்துவரின் கையைப் பற்றிக் குலுக்க விரும்பினார்கள். உளமார்ந்த, நட்பு ததும்பும், உணர்ச்சி பொங்கும் கைகுலுக்கல்கள். எல்லாரும் அவரை வாழ்த்தினார்கள், புகழ்ந்தார்கள், அவருக்கு நன்றி கூறினார்கள். கட்சிச் செயலாளன் நீண்ட நேரம் அவர் கையை ஆர்வத்துடன் குலுக்கி, “ஆகா, ஸெர்கேய் மாத்வேயிச்! நீங்கள் உண்மையான போல்ஷெவிக்கைப் போலச் செயல்பட்டீர்கள்!” என மீண்டும் மீண்டும் கூறினான்.

மருத்துவரோ, மலைப்புடன் திடீரென ஒரேயடியாகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தார். எல்லாரையும் ஒன்றும் புரியாமல் நோக்கினார். செய்தியைப் படித்தார், ஆனால் விளங்கிக் கொள்ளவில்லை. ஆட்கள் வாழ்த்துவதைக் கேட்டாரே தவிர அவர்கள் சொல்லுவது அவருக்குப் பிடிபட வில்லை. அவர் மூளை குழம்பியது. அறுவை மருத்துவர் தனது நிதானத்தை இழந்துவிட்டார்.

தமது வாழ்வு முழுவதும், தாமும், தமது தொழிலும், மாணவராயிருக்கையில் தாம் கண்ட கனவுகளும், தாம் செய்தவை, செய்பவை, செய்யக் கூடியவை அனைத்துமே திடீரென அவருக்குப் புதிய, எதிர்பாராத ஒளியில் தென்பட்டன.

அமைதி நிறைந்த முதுமைப் பருவத்தைப் பற்றி, சிறு வீடு, நாஸ்டர்ஷியம் பூப்பாத்திகள், சன்னலுக்குக் கீழே ஆர்க்கிட் செடிகள், இவை பற்றி நேற்றுக் கனவு கண்டது அவர் தானா?

– பரீஸ் கர்பாதவ்

ராதுகா பதிப்பகம் வெளியிட்ட ருஷ்ய அமர இலக்கிய வரிசை – சோவியத் சிறுகதைகள் – 4 என்று நூலிலிருந்து

முலாயம் சிங் யாதவ் – அசோக் சிங்கால் சந்திப்பு எதற்கு ?

3

பாரதிய ஜனதா கட்சி இந்த முறை எப்படியாவது மத்தியில் ஆட்சியைப் பிடிக்க பல தகிடுதத்தங்களை செய்து வருகிறது. அதற்கு உதவியாக சங்க பரிவாரத்தை சேர்ந்த விசுவ இந்து பரிஷத், ” ராமர் கோவிலை கட்டுவோம்” என்பதை முன்னிறுத்தி அயோத்தி நோக்கி ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. முசுலீம்களின் காவலன் என தன்னைத்தானே பீற்றிக் கொள்ளும் முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சியும் அரசியல் ஆதாயம் கருதி இந்துமத வெறியர்களுக்கு சாதகமாகவே காய்களை நகர்த்தி வருகிறது.

விஎச்பி யாத்திரை
விசுவ இந்து பரிஷத், ” ராமர் கோவிலை கட்டுவோம்” என்பதை முன்னிறுத்தி அயோத்தி நோக்கி ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

தற்போது ஆகஸ்டு 25 முதல் செப்டம்பர் 13 வரை அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட வலியுறுத்தி 84-கோசி பரிக்ரமா என்ற 84 மைல் பேரணி ஒன்றுக்கு விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டிருக்கும் சூழலில், முலாயம் சிங்கை கடந்த ஆகஸ்டு 17 அன்று விசுவ இந்து பரிஷத்-ன் அகில உலக பொதுச்செயலாளர் அசோக் சிங்கால் சந்தித்திருக்கிறார்.

இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு முலாயம் சிங்-ன் சகோதரரும், மாநில் பொதுப்பணித் துறை அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவ், “ஜனநாயக நாட்டில் யாரும் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்” என்று சந்தர்ப்பவாதத்துக்கு ஜனநாயக விளக்கம் சொல்லியிருக்கிறார்.

பைசாபாத், அம்பேத்கர் நகர், பாஸ்தி, பஹ்ரைச், கோண்டா, பரபான்கி ஆகிய மாவட்டங்களின் வழியாக சுமார் 300 கிமீ தூரம் வரை செல்ல திட்டமிட்டுள்ள இப்பேரணியின் போது 40 பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும், எல்லா மாநிலங்களிலிருந்தும் தலா 150 சாமியார்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அயோத்தியில் முடிவடையும் இந்த யாத்திரையில் பல லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014 பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பாஜக-வின் தேர்தல் அரசியலுக்காக அயோத்தியில் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த யாத்திரை, ஒரு திட்டமிட்ட கலவரத்தை உள்நோக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் புதிய தலைவலிகளை விரும்பாத மாநில அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிறோம் என்று பேரணிக்கு தடையை விதிப்பதாக ஆகஸ்டு 19-ல் அறிவித்துள்ளது. அதற்கு காரணமாக மே 9, 2011-ல் அலகாபாத் உயர்நீதி மன்றம் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் எதுவும் புதிதாக செய்யக் கூடாது என தீர்ப்பளித்திருப்பதையும், உச்சநீதி மன்றம் அதனை வழிமொழிந்ததையும் மாநில அரசின் முதன்மை செயலர் (உள்துறை) ஆர்.எம்.ஸ்ரீவஸ்தா சுட்டிக்காட்டி உள்ளார். இருந்த போதும் தடையை மீறி யாத்திரை நடக்கும் என்று விஎச்பி அறிவித்துள்ளது.

விஎச்பி இன் மூத்த தலைவர் சுவாமி சின்மாயனந்த், “தடை விதித்தால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும்” என அரசை எச்சரிக்கிறார். “முதலில் அனுமதி தந்துவிட்டு அமைச்சர் ஆசம் கானின் தலையீட்டால் தடை விதிக்கிறார்கள்” எனக் முலாயம் சிங் மீது குறை கூறி உள்ளார். இவரது கூற்றை ஆதரித்து பாஜக-ன் வெங்கையா நாயுடுவும், எதிர்த்து ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

தங்களது சந்திப்பில் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட உதவும் வகையில் இசுலாமிய அமைப்புகளுடன் பேச ஏற்பாடு செய்து தருமாறு முலாயம் சிங்கை அசோக் சிங்கால் கேட்டுக் கொண்டார். இதற்கு முலாயம் சிங்கும் சம்மதித்திருக்கிறார். ஆகஸ்டு 19-ம் தேதி அமைச்சர் ஆசம் கான் கோபமடைந்து, “பாபர் மசூதியை இடித்ததற்கு பொறுப்பேற்க வேண்டியவர் அசோக் சிங்கால்” என்பதை முலாயமுக்கு நினைவுபடுத்தினார். மேலும் “முசுலீம்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென்றால் இடிக்கப்பட்ட மசூதியை திரும்ப கட்டுவது பற்றி பரிசீலிக்கப்பட வேண்டும்” என திட்டவட்டமாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில் ஆசம் கானின் கூற்றைப் பற்றி கேட்டதற்கு, “ஆசம் கான் கோபமாக எல்லாம் இல்லை. பிரச்சினைகளை எங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம்” எனவும் முலாயம் சிங்கின் சகோதரர் கூறியிருக்கிறார்.

அசோக் சிங்காலின் வகுப்பாத அரசியலின் காரணமாக அவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக சிவ்பால் சிங் யாதவ் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் 20 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இசுலாமியர்களுக்காக ஒதுக்கப்படுவதாக முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

விஎச்பி
விஎச்பி யாத்திரை (கோப்புப் படம்) : நன்றி என்டிடிவி)

தூங்கிக் கொண்டிருந்த அயோத்தி பிரச்சினையை இதன் மூலம் தூசி தட்டி வெளியே எடுத்து கலவரம் செய்ய காத்திருக்கிறார்கள் சங் பரிவாரங்கள். அதற்கு துணை போகின்றார்கள் உ.பி.-ன் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகள். சமாஜ்வாதிக் கட்சியைப் பொறுத்தவரை ‘இந்துக்கள்’ மற்றும் இசுலாமியர்கள் இரு பிரிவினரது வாக்குகளையும் எப்படி கவர்வது என்ற முறையில் செயல்படுகிறது. பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரு கிரிமினல் குற்றம், இந்துமதவெறியர்களின் யாத்திரை கலவரத்தை தூண்டும் என்பதை இந்துக்கள், முசுலீம்கள் வாக்குப் பிரச்சினையாக கருதுவதால் இரு பிரிவினரையும் திருப்தி படுத்துவது என்பதே அவர்களது கவலை.

இதன் ஒரு அங்கம் தான் உத்திரபிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மாவட்ட துணை ஆட்சியர் துர்கா சக்தியின் பணி இடை நீக்கம். அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த மசூதியின் சுற்றுச்சுவரை கடந்த மாதம் இடிக்க உத்திரவிட்டதன் மூலம் மதக்கலவரம் ஏற்பட வழிவகுத்த காரணத்துக்காக இந்த இடைநீக்கம் என அரசு தரப்பு கூறியது. ஆனால் தாங்களே ஒத்துக்கொண்டு தான் சுவரை இடித்ததாக மசூதி தரப்பே கூறிய பிறகும், மாநில இசுலாமிய தலைவர்களை வைத்து அவர்களது வாயை அடைக்க வைத்தார் அகிலேஷ் யாதவ். வேண்டுமானால் எல்லா ஐஏஎஸ் அலுவலர்களையும் மத்திய அரசே அழைத்துக் கொள்ளட்டும், எங்களால் தனியாக நிர்வாகம் செய்ய முடியும் என்று மத்திய அரசுக்கு சவால் விட்டார்.

இப்படி இசுலாமிய காவலனாக காட்ட வேண்டிய அவசியம் அதற்கு முன் இந்துமத வெறியன் ஒருவனுக்கு மாநில அரசு சட்டத்தை மீறி கருணை காட்டியதால் தான். வேறு யாருமல்ல, நேருவின் குலக்கொழுந்து வருண் காந்திதான் அது. அப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாயும் போலும். மிசா காலகட்டத்தில் புது தில்லியில் இசுலாமியர்களை கொடூரமாக துன்புறுத்திய சஞ்சய் காந்தியின் அருமந்திர புத்திரன் 2009 தேர்தலில் பிலிபத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். “இந்துக்களுக்கு எதிராக எவனாவது பேசினால் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன்” என்றெல்லாம் திமிராகப் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவே அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பர்க்கரோ நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது அவர் நடத்திய வன்முறை கலவரம் பற்றியும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பிலிபித் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கவும் பட்டார். இந்த வழக்குகளில் இருந்து பிலிபித் நீதிமன்றத்தால் இவர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

முலாயம்
இவர்கள் இந்துமதவெறியர்களது மறைமுக கூட்டாளிகளாகவும் இருக்கிறார்கள்.

போலீசும், அரசு வழக்கறிஞர்களும் அனைத்து சாட்சிகளையும் மிரட்டி அனைவரையும் பிறழ் சாட்சிகளாக மாற்றி விட்டனர். அப்போது வருணுக்கு பாதுகாப்பு அளித்த போலீசு அதிகாரி தனது சாட்சியத்தில் “வருண் அப்படி பேசிய எதனையும் தான் கேட்கவில்லை” என்று பல்டி அடித்தார். தனது குரல் மாதிரியை நீதிமன்றத்துக்கு தர வருண் மறுத்து விட்டார். அவரது ஒலிப்பதிவை ஆய்வு செய்த அதிகாரி நீதிமன்றத்துக்கு நேரில் வரத் தேவையில்லை என்று கூறிவிட்டார் அரசு வழக்கறிஞர். 2012ல் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தவுடனே இந்த வழக்குகளை இழுத்து மூட முயற்சித்தபோது முசுலீம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வேறு வழியில்லாமல் வழக்கை நடத்தியது அரசு. ஆனால் அந்த லட்சணம் தெகல்கா அம்பலப்படுத்திய பிறழ் சாட்சியங்கள் பற்றிய கட்டுரைகளில் கடந்த மே மாதம் வந்து சந்தி சிரித்தது. இதனால் ஆத்திரமடைந்த இசுலாமிய மக்களை திசைதிருப்ப ஒரு பலிகடா தேவைப்பட்டது. அதற்கு தோதாக கிடைத்தவர்தான் துர்கா சக்தி என்ற ஐஏஎஸ் அதிகாரி.

இப்படி தொடர்ச்சியாக மாற்றி மாற்றி ஊதி விடுவதன் மூலம் மதவெறிக்கு எண்ணெய் ஊற்றும் வேலையை தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதில் முலாயம் சிங் முதன்மையானவர். சமூக நீதிக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் இப்படித்தான் பித்தலாட்டம் செய்கிறார்கள். இவர்களது அணுகுமுறைதான் இந்துமதவெறியர்களை சித்தாந்தரீதியில் பலமாக்குவதற்கு உதவி செய்கிறது. அந்த வகையில் இவர்கள் இந்துமதவெறியர்களது மறைமுக கூட்டாளிகளாகவும் இருக்கிறார்கள்.

வருண்காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது !

12

“இது கை அல்ல. தாமரையின் சக்தி. முசுலிம்களின் தலைகளை வெட்டி எறியும்” என்றும், “இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது ஆணையாக அந்தக் கையை வருண் வெட்டுவான்” என்றும் 2009 மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் பிலிபித் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்ட வருண்காந்தி மேடை தோறும் பேசியதை நாடெங்கும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. கோடிக்கணக்கான மக்கள் அதனைப் பார்த்தார்கள். அந்தத் தேர்தலில் வருண்காந்தி வெற்றியும் பெற்றார்.

வருண் காந்திஇம்மதவெறிப் பேச்சுக்காக அன்றைய உ.பி. அரசு வருண் காந்தி மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வருண்காந்தி தாக்கல் செய்த மனுவையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனே பர்க்கரோ நீதிமன்றத்தில் சரணடையப் போவதாகக் கூறி, மதவெறிக் காலிகளின் படையைத் திரட்டிக் கொண்டு வருண் காந்தி நடத்திய பேரணி, தீவைப்பிலும் கல்வீச்சிலும் முடிந்தது. 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக மற்றுமொரு வழக்கும் பதிவானது.

நாடறிய இழைக்கப்பட்ட இந்தக் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று வருண் காந்தி பிலிபித் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சட்டத்தின் ஆட்சியைப் பற்றியும், நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையைப் பற்றியும் பேசுவோர் இவ்வழக்கின் விசாரணை எப்படி நடைபெற்றது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக அனைத்து சாட்சியங்களும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன. சிலரது வாக்குமூலங்களை வருணுக்குச் சாதகமாக அரசு வழக்குரைஞர்களே மாற்றி எழுதினார்கள். நீதிபதி நீதிமன்றத்தில் இல்லாத நிலையிலும் சில சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. நீதிபதிகள் இரண்டே நாட்களில் பதினெட்டு சாட்சியங்களை ஆய்வு செய்திருக்கின்றனர். சில சாட்சிகள் மாற்றுக் கருத்துகளைச் சொன்னபோதும் அரசு வழக்குரைஞரோ, நீதிமன்றமோ அவற்றைப் பொருட்படுத்தவேயில்லை.

வருணின் பாதுகாப்புக்குத் தலைமை வகித்த போலீசு அதிகாரி, வருண் பேசியதாகக் கூறப்படும் பேச்சு எதையும் தாம் கேட்கவில்லை என்று கூறினார்.போலீசும் அரசு வழக்குரைஞர்களும் மிரட்டியிருந்ததால், சாட்சிகள் அனைவருமே விசாரணையின்போது பிறழ்சாட்சியம் அளித்தனர். ஒரு வழக்கில் சாட்சிகள் அனைவருமே பிறழ்சாட்சியம் தந்தால் அவ்வழக்கை மறுபடியும் விசாரித்தாக வேண்டும் என நூற்றுக்கணக்கான முன்னுதாரணத் தீர்ப்புகள் இருந்த போதிலும், இவ்வழக்கை மீண்டும் விசாரித்திட நீதிபதி உத்தரவிடவில்லை.

வருண் பேச்சின் ஒலிப்பதிவை ஆவு செய்த அதிகாரி நீதிமன்றம் வந்து சாட்சி சோல்லத் தேவையில்லை என்று வழக்கை நடத்திய அரசுத் தரப்பே கோரியது. வழக்கின் முக்கிய ஆதாரமான குரல்மாதிரியைக் கொடுக்க முடியாது என்று வருண் காந்தி மறுத்தார். அனைத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்த வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்தவர்களை “தெகல்கா” பத்திரிகை பேட்டி எடுத்திருக்கிறது. சாட்சியங்களை மாற்றிச் சொல்லும்படி பிலிபித் போலீசு அதிகாரி அமித் வர்மாவாலும் பிற அதிகாரிகளாலும் தாங்கள் மிரட்டப்பட்டதையும் தங்களுக்கு இலஞ்சம் தரப்பட்டதையும் பெரும்பான்மையான சாட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவையனைத்தையும் தெகல்கா ரகசிய கேமிராக்களில் பதிவு செய்திருக்கிறது.

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தால் செய்யக்கூடிய எல்லா விதமான கிரிமினல் வேலைகளையும் செய்து வருண் காந்திக்கு விடுதலை பெற்றுத் தரும் சாதனையைச் செய்திருப்பது முஸ்லிம்களின் காவலனாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் சமாஜ்வாதி கட்சியின் அரசுதான். 2012-இல் ஆட்சிக்கு வந்தவுடனேயே, இவ்வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு சமாஜ்வாதி அரசு முயன்றிருக்கிறது. முஸ்லிம் அமைப்புகள் கடுமையாக எதிர்த்ததால், வழக்கை நடத்துவதாகப் போக்குக் காட்டி ஊத்தி மூடியிருக்கிறது.

மதச்சார்பின்மை சவடாலை வைத்து முஸ்லிம்களை ஏத்து வரும் ஒரு கட்சி, நீதித்துறை, போலீசு, அதிகாரிகள் உள்ளிட்ட அரசமைப்பு முழுவதையும் வருண்காந்தி என்ற ஒரு தரங்கெட்ட பொறுக்கியாலேயே விலை பேச முடியும் போது, கொலைகாரன் மோடி பிரதமர் நாற்காலியை நம்பிக்கையுடன் குறி வைப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

– அன்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

ஆதலால் காதல் செய்வீர் : அனாதையும் ஆணுறையுமா பிரச்சினை ?

19

லைமையேற்க முடியாமல் தேம்பி விழுந்த தலைவாவின் காலத்தில் வந்த படமிது. இங்கேயும் தேம்புதலுக்கு குறைவில்லை. இப்படத்தில் காதலுக்கு ஆட்படும் இன்றைய தலைமுறை குறித்து முதல் பாதியில் ‘கிண்டலும்’ பிற்பாதியில் அவர்களை அச்சுறுத்தும் விதத்தில் பாசமலர் உணர்ச்சியுமாய் வந்து போகிறது. படம் பார்த்தவர்கள் இயக்குநர் சொல்லியிருக்கும் கருத்தை என்னவாய் உள் வாங்கிக் கொண்டார்கள்? இயக்குநர் சொல்லியிருக்கும் கருத்துதான் என்ன?

முதலில் கதை.

ஆதலினால் காதல் செய்வீர்ஸ்வேதாவும் கார்த்திக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்கள். இருவருமே ஒரே நண்பர்கள் குழுமத்திலிருக்கிறார்கள். கதை நடக்கும் காதல் களம் சமகாலம் என்பதாலும், காதலின் ‘காலம்’ ராமதாசு வகையறாக்களின் துன்புறுத்தலில் இருப்பதாலும் காதல் இங்கே பேசுபொருளாக இருக்கிறது. இந்த நண்பர் வட்டத்தின் உள்ளேயும், வெளியேயும் அவர்கள் புழங்கும் உலகில் காதல் மிக எளிதாக கிடைக்கும் வஸ்துவாக விளங்குகிறது.

கார்த்திக்கின் நண்பன் ஜெய் நவீன காதலர்களின் ஞானகுருவாக இருக்கிறான். பார்த்தவுடன் ’பிக்கப்’ செய்வது, ’பிக்கப்’ செய்ததை ’பேக்கப்’ செய்வது, பேக்கப் செய்ததை டிராப் செய்வது உள்ளிட்டு ஏராளமான அரிய தகவல்களின் கலைக்கலைஞ்சியமாகவும் அதை நடைமுறைப்படுத்தும் மெக்கானிக்காகவும் விளங்குகிறான். இப்படி ஒரு நண்பன் உடனிருக்கும் போது கார்த்திக் காதலித்தே ஆக வேண்டுமல்லவா? காதலிக்கிறான்.

சொல்லப் போனால் இந்த நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் ஸ்வேதாவை காதலிப்பதற்காகவே அவன் இந்த குழுமத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறான். இது ஒரு எதிர்பாராத திருப்பம். தோழியின் காதல் தோல்வியினால் காதலிப்பது கூடாது என்று இருக்கும் ஸ்வேதா – இது அடுத்த எதிர்பாராத திருப்பம். பார்வையாளர்கள் இந்த இரண்டு எதிர்பாராத திருப்பங்களுக்கிடையே திண்டாடிக் கொண்டிருக்கும்  போதே காதல் குறித்து ஜெய் முன் வைக்கும் ஏராளமான தத்துவ விசாரணைகளைக் கடந்து கார்த்திக் தனது காதலை ஸ்வேதாவிடம் தெரிவிக்கிறான்.

தமிழ் சினிமா என்பதால் அதன் நாயகிகளுக்கு உரிய அதே ஃபார்முலா படி ஸ்வேதா துவக்கத்தில் கார்த்திக்கின் காதலை ‘தயக்கத்துடன்’ மறுக்கிறாள். பின், அவனது தற்கொலை முயற்சிக்காக ‘மனதை’ப் பறிகொடுக்கிறாள். இடைவேளைக்கு முன்பே உடலையும் விரும்பிக் கொடுக்கிறாள். காதலர்கள் காதலிக்க ஆரம்பித்து, கடற்கரை, காபி ஷாப் திசையில் மகாபலிபுரம் சென்று தனி அறையில் சேர்கிறார்கள். பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் தங்கை பாத்திரம்தான் இப்படி ஒரு விரைவுப் பாதையில் ‘கற்பி’ழப்பார்கள். தற்போது அது நாயகர்களுக்கே நடக்கிறது என்ற வரையில் தமிழ் சினிமா ‘முன்னேறி’யிருக்கிறது.

மகாபலிபுரம் எபிசோடுக்கு முன்பேயே மனசாட்சியை பறி கொடுக்கிறாள் நாயகி. தனது காதலை வீட்டாரிடம் மறைக்க விழையும் ஸ்வேதா வாயைத் திறந்ததும் காற்றையும் ஒலியையும் முந்திக் கொண்டு பொய்கள் ஒரு ஆசுகவியின் ‘கவிதை’யாய் வந்து விழுகின்றன. எந்தத் திட்டமிடலோ யோசனையோ இன்றி அவள் தாயிடம் பொய் சொல்லும் வேகம் அசாத்தியமானது. ஆனால் இயக்குநரோ, இல்லை பார்வையாளர்களோ இதை காதல் தோற்றுவிக்கும் ஒரு விடலைப் பருவ பொய் என்று மட்டும் முடிவு செய்கிறார்கள்.

இல்லை, இது ஒரு இளந்தலைமுறையின் ஆளுமையிலிருந்து விளைவது. அந்த ஆளுமை இத்தகைய கிரிமினல் தனங்கள், பொய்கள், சதிகள், சமாளிப்புகள் சகிதம் எப்படி வளர்கிறது என்பதே நாம் கவனம் கொள்ள வேண்டிய அக்கறை. ஏனனெனில் இத்தகைய விழுமியங்களோடு வளரும் இளைய தலைமுறைதான் நாளை தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், போலிசு- இராணுவ பதவிகள், ஊடக-சினிமா வாய்ப்புகள் என்று அனைத்திலும் கீழிலோ இல்லை மேலாகவோ ஆக்கிரமிக்கப் போகிறார்கள். அவர்களது சமூகப் பார்வை அத்தகைய பதவிகளில் என்னவாய் நடந்து கொள்ளும் என்று பார்த்தால் அதற்கு இந்தக் காதல் கதை ஒரு பானையில் இருக்கும் ஒரு சோறு.

அத்தகைய பார்வையில் இந்தப் பாத்திரங்களும், கதையும் கொண்டு செல்லப்பட்டிருந்தால் உண்மையிலேயே ஒரு நல்ல படம் கிடைத்திருக்கும். ஆனால் லொள்ளு சபா காமடி, பா வரிசைப்பட சென்டிமெண்ட் இரண்டிலும் விழுந்திருக்கும் இயக்குநருக்கு அதைத் தாண்டி பார்க்கவே, பேசவோ, காட்டவோ முடியவில்லை.

இதற்குள் இடைவேளை விடும் நேரம் வந்து விட்டது என்பதால் இன்னுமொரு எதிர்பாராத திருப்பம் தேவைப்படுகிறது, ஸ்வேதா கருவுறுகிறாள். இடைவேளைக்குப் பின் காதலைப் போலவே கர்ப்பத்தையும் மறைக்க முயற்சிக்கிறாள். வீட்டுக்குத் தெரியாமல் கர்ப்பத்தைக் கலைக்க காதலனோடும் அவனது நண்பன் ஜெய்யோடும் சேர்ந்து முயற்சித்துப் பார்க்கிறாள். ஆனால் தமிழ் சினிமாவுக்கு ஸ்வேதா புதிது என்பதால் மசக்கை வாந்தியை மறைப்பதில் உள்ள சிக்கல்களை அறியாதவளாகவே இருக்கிறாள் – எனவே ஒரு சந்தர்ப்பத்தில் தன் அம்மாவிடம் வாயும் வாந்தியுமாக மாட்டிக் கொள்கிறாள்.

நிலைமையை எதிர்கொள்ள முடிவெடுக்கும் ஸ்வேதாவின் நடுத்தர வர்க்க பெற்றோர் எப்படியும் கார்த்திக்கோடு அவளுக்குத் திருமண ஏற்பாட்டை செய்து விட முயற்சிக்கிறார்கள். கார்த்திக்கின் நடுத்தர வர்க்கப் பெற்றோர் தவிர்க்கப் பார்க்கிறார்கள். ஆங்… அவ்வப்போது கார்த்திக்கின் அப்பா அவனை ’உருப்படாத பயலே’ என்று ஏசியவாறே அடிக்கிறார் என்பதையும் சேர்த்துச் சொல்லி விடுகிறோம்.

பெண்ணின் வயிற்றில் கருவளர்ந்து கொண்டிருப்பதால் திருமணத்திற்கு மறுப்பது சட்டரீதியில் தொல்லையாக கைது, சிறையாக முடிந்து விடும் என்று அஞ்சும் பையன் வீட்டார் சில சமயம் ஒப்புக் கொள்வது போல் பேசுகிறார்கள், சில சமயம் பெண்ணின் ஒழுக்கத்தை அவளது தந்தையின் முன்பு வைத்தே கேலி பேசுகிறார்கள். இதை எதிர் கொண்டு போராடத் தெரியாத கார்த்திக் திருமணத்தை வலியுறுத்தி தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல்கிறான். பேருந்தில் இருந்து விழுந்து காதலியின் மனம் கவர்ந்த கார்த்திக் மணிக்கட்டை அறுத்ததன் மூலம் பெற்றோரை ‘வழிக்கு’ கொண்டு வருகிறான்.

இறுதியாக திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளும் கார்த்திக்கின் பெற்றோர், திருமணத்திற்கு முன்பே ஸ்வேதா தனது கருவைக் கலைத்து விட வேண்டும் என்கிறார்கள். கார்த்திக்கின் கருத்தும் அதுதான். ஆனால், இதற்குள் அந்தக் கரு கலைக்க கூடிய நாட்களைத் தாண்டி விட்டது. இனி கலைத்தால் உயிருக்கு ஆபத்து. அதை நம்பாத கார்த்திக், தனது வீட்டாரை திருப்திப்படுத்த கலைத்துவிடச் சொல்லி வலியுறுத்துகிறான். ஸ்வேதா யாரோ சொல்லிக் கொடுத்து பொய் சொல்லுவதாகவும் விமரிசிக்கிறான்.

இதற்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தை ஒன்றில் ஸ்வேதாவின் அப்பாவிடம் “கூப்பிட்டதும் வந்து படுத்தவ தானே உங்க மக?” என்று கார்த்திக்கின் உறவினர்கள் ஏசுகிறார்கள். வெகுண்டெழும் ஸ்வேதாவின் அம்மா கார்த்திக்கின் வீடு தேடிப் போய் ஏக வசனத்தில் சண்டையிடுகிறார். இந்தச் சண்டை ஒரு பெண்ணைப் பெற்ற தாயின் தார்மீக கோபத்தில் எதார்த்தமாகவே நடக்கிறது. என்றாலும் அதில் ‘காய’ப்படுத்தப்பட்ட அல்லது ஸ்வேதாவின் காயத்தைக் கண்டு பதறாத கார்த்திக் இப்போது முழுதாக தனது வீட்டாரின் நிலைப்பாட்டை ஆதரித்து நிற்கிறான். ஸ்வேதா அவனை சுயநலவாதி என்று சாடி விட்டுப் பிரிகிறாள். போலிஸ், வழக்கு ஏதும் தேவையில்லை என்று தனது பெற்றோரிடம் சமாதானப்படுத்துகிறாள்.

இறுதிக் காட்சி. வெளியூரிலிருக்கும் பெயர் தெரியாத மருத்துவமனை ஒன்றில் ஸ்வேதா ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அவளது தந்தை அந்தக் குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறார். ஒரு சோகப்பாட்டு. அந்தக் குழந்தை கொஞ்சுவாரின்றி சிரிக்கிறது. அரவணைப்பு இன்றி அழுகிறது. ஊட்டுவாரின்றி சாப்பிடுகிறது. வெயில் சூடு பொறுக்காமல் அலறுகிறது. பார்வையாளர்கள் உள்ளம் பதறுகிறார்கள். கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த ஆண் குழந்தையின் முகம் மங்கி மறைகிறது.

அடுத்த காட்சியில் ஸ்வேதா மணப்பெண் கோலத்தில் யாரோ ஒரு ’அமெரிக்க மாப்பிள்ளையின்’ முன் எதுவும் நடக்காத மாதிரி சிரித்தவாறு அமர்ந்திருக்கிறாள். இரசிகர்களில் ஒரு சிலர் அந்த அமெரிக்க மாப்பிள்ளையிடம் ஸ்வேதா கதை தெரிவிக்கப்பட்டிருக்குமா என்று ‘ஜனநாயகமாக’ யோசிக்கிறார்கள். ஒரு சிலர் அவனை ‘தியாகி’ என்று கொண்டாடவும் வாய்ப்பிருக்கிறது. கார்த்திக் காஃபி ஷாப் ஒன்றில் புதிய காதலியோடு அமர்ந்திருக்கிறான். இதிலிருந்து கார்த்திக் யாரை கல்யாணம் செய்வான் என்று இயக்குநருக்கு நிச்சயமாகத் தெரியவில்லை என்பதால் இங்கே கல்யாணக் காட்சிகள் இல்லை போலும்.

***

இறுதிக் காட்சியில் நிகழ்த்தப்பட்ட இந்த அதிரடி சென்டிமெண்ட் தாக்குதலில் இருந்து மொத்தப் படத்தையும் மதிப்பிட்டு சிலாகிக்கிறார்கள் இரசிகர்கள். முதல் பாதியில் தாங்களே இரசித்துச் சிரித்த ஸ்வேதாவின் சின்னச் சின்ன பொய்களும், கள்ளத்தனங்களும் இந்த குழந்தைச் சிறுவனின் சிரிப்பில் வந்து நிறைவுற்றதை அவர்களால் ஜீரணித்திருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் இப்படி அனாதைக் குழந்தைகளை உருவாக்கக் கூடாது என்று நினைக்கும் அவர்கள் முதல் பாதிக் காட்சிகளின் நகைச்சுவைகளையும் விரும்புகிறார்கள். இரண்டுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்திய அந்த அனாதைக் குழந்தை மட்டும் இல்லையென்றால் யாருக்கும் பிரச்சினை இல்லை. கண்ணீரோ, கருவோ தராத வரை காதலில் ஜாலியாக, காமடியாக ஏன் காமமாக இருப்பது தவறில்லை எனும் இந்தக் கருத்தின் பின்னணி என்ன?

அல்லது அனாதைக் குழந்தையின் அவலத்தை பார்த்து விட்டு வெளியேறும் இரசிகர்கள் என்ன மனநிலையில் செல்கிறார்கள்? வேறு ஒன்றுமில்லை, கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு ‘பேசாம காண்டம் யூஸ் பண்ணியிருக்க வேண்டியது தானே’ என்றவாறு திரையரங்கை விட்டு வெளியேறுகிறார்கள். விடலைக் காதல், முதிர்ச்சியற்ற காதல்களின் பிரச்சினைக்கு ஐந்து ரூபாய் காண்டத்தில் தீர்விருக்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படம் சிந்தனையில் வேறு பரிமாணங்களில் நுழையவே வாய்ப்பில்லை.

ஆனால், எதார்த்தத்தில் “கலவி கொள்ளலாம் வா” என்று அழைக்கும் காதலனை மறுக்க முடியாத அளவுக்கு துணிவும், அதற்காக வீட்டில் பொய் சொல்லி விட்டு மகாபலிபுரம் கிளம்பும் அளவுக்கு தைரியமும் கொண்ட ஸ்வேதா ஆணுறையின் அவசியம் அறியாத அளவுக்கு அப்பாவியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கதை நடப்பது எங்கோ குக்கிராமத்தில் அல்ல. கதையின் பின்னணியும் வயல்காடும் அல்ல, கதையின் நாயகி கொத்து வேலை செய்பவரும் அல்ல.

மேலும் படத்தில் காட்டப்படுவது போல கருக்கலைப்பு ஒன்றும் அவ்வளவு கடினமானதாக யதார்த்தத்தில் இல்லை. திருட்டுத்தனமாக கருக்கலைப்பு செய்யும் பெண்கள் பலர் இறந்து போகிறார்கள் என்ற அனுபவத்திற்கு பிறகு அரசே இப்போது கருக்கலைப்பை எளிதாக மாற்றியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் கூட பெரிய தடைகள் ஏதுமின்றி யாரும் கலைப்பு செய்து கொள்ள முடியும். பாதுகாப்பாக உறவு வைத்துக் கொண்டால் எய்ட்ஸ் கிடையாது என்று யாருடனும் உறவு வைக்கலாம் அளவுக்கு அரசு மாறியிருப்பது இயக்குநருக்கு தெரியாது போலும். தாராளமயமாக்கலின் அரசை அவர் லைசன்ஸ் கோட்டா ராஜ்-ஆக புரிந்திருக்கிறார்.

காதல் குறித்த பிரச்சினைகளை காமம், குழந்தை தொடர்பானவையாக மட்டும் ஒருவிதமான ஒழுக்கவாதப் பார்வையுடன் பார்க்கும் இத்திரைப்படம் சாத்தியமற்ற எதிர்மறை மிரட்டல் மூலம் பார்வையாளரிடம் பேசுகிறது. இதனால் நேர்மறையில் காதல் குறித்து பரிசீலிக்கும் பண்பையோ, பார்வைகளையோ நாம் பெற முடியாது.

ஸ்வேதாவை ஒரு பெண் என்ற முறையில் பரிசீலித்தால் அவளது தடுமாற்றங்களும், அச்சங்களும் அவளை ஒழுக்கம் கெட்டவள் என்று கார்த்திக்கின் உறவினர்கள் பேசும் போதும் ஆணாதிக்க சமூகத்தினால் பாதிக்கப்படுவது பெண்தான் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து போராடும் வழியையோ இல்லை அவலத்தையோ கூட ஸ்வேதாவின் பாத்திரம் கொண்டிருக்கவில்லை. அவள் சடுதியில் நட்பு, கோபம், காதல், பிரிவு கொள்ளும் ஒரு பாத்திரம் மட்டுமல்ல, தனது பிரச்சினைகளை தீர்க்க முடியாத போது சாலையில் குதித்து தற்கொலை செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறாள்.

ஒரு பெண் நேர்மறையில் இந்த சமுதாயத்தில் வாழ முடியாது என்பதைக் காட்ட வேண்டும் என்றால் அதன் எதிர்மறைகளின் அயோக்கியத்தனத்தையாவது உணர்த்த வேண்டும். இங்கோ அதை ஒரு அனாதைக் குழந்தையின் கண்ணீர் எடுத்துக் கொண்ட படியால் படம் பார்க்கும் பெண்கள் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுவாக மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மாறாக வாழ்க்கை என்பது எப்போதும நீதிக்கான போராட்டத்தில் விடுதலையாகும் என்பதே அடிமைகளாக விதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு தேவையான ஒன்று.

இதனால் விடலைப்பருவ மாணவி ஒருத்தியை போராளியாக காட்ட முடியாது. ஆனால் அவள் போராடத் தேவை உள்ளதை உணர்த்துவதையே நாம் இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

அப்படி ஒரு பார்வை இருந்தால் தனது காதலுக்கு கிரிமினல் போல யோசிக்கும் ஸ்வேதாவை பொருத்தமாக இடித்துரைக்கும் பார்வையை பார்வையாளர்கள் பெற்றிருப்பார்கள். ஏனெனில் ஸ்வேதாவின் ஆளுமையில் காதல் என்பது ஒரு அம்சம்தான். அந்த ஒரு அம்சம் காதல் வயப்பட்டிருக்கும் காலத்தில் ஏனைய நேர்மறை பண்புகளை காதலின் பொருட்டாவது கொண்டு வந்திருக்கும். ஆனால் காதலின் பொருட்டு இருக்கும் நேர்மையும் பறிபோகிறது என்றால் இங்கே ஸ்வேதாவை வளர்க்கும் பெற்றோரும், பள்ளியும், கல்லூரியும், சமூகமும் யார், என்ன விழுமியங்களை கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது.

அதனால்தான் மீண்டும் சொல்கிறோம். இது வெறும் அனாதைக் குழந்தை குறித்த பிரச்சினை அல்ல. ஸ்வேதா, கார்த்திக் போன்ற காரியவாதிகளை உருவாக்கும் நடுத்தர வர்க்கம் குறித்த பிரச்சினை இது. மகன் கேட்டவுடன் என்ன எதற்கு என்று கேட்காமல் அதன் தேவை பற்றி ஆராயாமல் பைக் வாங்கிக் கொடுக்கும் கார்த்திக்கின் அப்பா, பிற்பகுதியில் தலையில் அடித்துக் கொள்கிறார். என்றாலும் ஸ்வேதாவை எப்படியாவது வெட்டி விடுவது என்பதில் கருத்தாக இருக்கிறார். இந்த கிரிமினல்தனம் நடந்த சம்பவங்களின் விளைவுகளில் இருந்து மட்டும் வந்ததல்ல; அது மகனின் மேல் எந்தக் கண்காணிப்பும் அற்று அவன் ஊதாரியாய்த் திரிய ஏதுவான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் போதே முளைவிடத் துவங்கியது தான்.

விடலைப் பருவ காதலில் தனது மகன் தவறிழைத்து விட்டான். எனினும் அது ஒரு பெண்ணுக்கே அதிக பிரச்சினைகளை கொண்டு வரும். இந்நிலையில் தனது மகனது எதிர்காலம், அந்த பெண்ணினது எதிர்காலம் இரண்டுக்குமான போராட்டத்தில் நீதியுடன் இருப்பதை கார்த்திக்கின் தந்தை விரும்பவில்லை. எப்படியாவது மகனை வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்றே அவரும், உறவினர்களும் குறியாக இருக்கிறார்கள். இந்த ஊழலை விடவா கார்த்திக்கின் காமம் தீயது? இங்கு முதிர்ச்சியற்று இருப்பது பெற்றோரா, பையனா? ஒரு தீய விளைவை அகற்றுவது பிரச்சினையல்ல, அதை நேர்மறையான போராட்டத்துடன் எதிர் கொள்கிறோமா என்பதே அடிப்படையானது.

தனது வாரிசுகளுக்கு எல்லா வசதிகளையும், ஆடம்பரங்களையும், செலவுகளையும் அனுமதிக்கும் நடுத்தர வர்க்கம் பதிலுக்கு தனது வாரிசுகள் இலட்சுமணன் கோட்டை மட்டும் தாண்டக் கூடாது என்று எதிர்பார்க்கிறது. அந்த கோடு என்பது சாதி, கௌவரம், அந்தஸ்து, சொத்து சம்பந்தமானது. அதனால் காதல் கூட அதற்கு உட்பட்டு பிரச்சினையில்லாமல் வந்தால் சரி. அல்லது கணக்கு பார்த்து வரும் காதலால் தனக்கு ஆதாயமென்றால் பெற்றோருக்கு பிரச்சினை இல்லை. இங்கே ஸ்வேதா ஒரு கோடிசுவரப் பெண் என்றால் கார்த்திக்கின் பெற்றோர் அதை கொண்டாடியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மாற்றிப் போட்டால் ஒரு பணக்காரனோடு நாம் போராட முடியாது என்று ஸ்வேதாவின் பெற்றோர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு கடக்க முயற்சி செய்வார்கள்.

சுருங்கக் கூறின் இன்றைய படித்த நடுத்தர வர்க்கம் தனது இளைய தலைமுறையினரை உழைக்கக் கற்றுக் கொடுத்து, சமூக உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தி, தேவையற்ற வசதிகளை புறக்கணிக்கச்சொல்லியெல்லாம் வளர்ப்பதில்லை. கடைந்தெடுத்த காரியவாதிகளாகவே வளர்க்கிறார்கள். அதனால்தான் இளைய தலைமுறையின் காரியவாதமும், பெற்றோரின் காரியவாதமும் சில நேரங்களில் முரண்பட்டாலும் பல நேரங்களில் ஆச்சரியப்படும் விதத்தில் ஒன்றுபடுகிறது.

ஸ்மார்ட் போன், பைக், காபி ஷாப், மகாபலிபுரம் போன்றவையெல்லாம் இன்றைய நாகரீகத்தின் மைல்கற்களாகிவிட்டன. நுகர்வுக் கலாச்சாரத்தில் பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக பிள்ளைகள் தேவையின்றி கேட்டாலும் பெரியவர்கள் தேவை கருதியும் மறுப்பதில்லை. மனிதர்களினூடாக பண்பட வேண்டிய விடலைப் பருவம் பொருட்களினூடாக அலைந்து திரிந்து ஆட்டம் போடுகிறது.

விடலைப் பருவத்தின் காதலை மட்டுமல்ல முதிர்ந்த பருவத்தின் காதலையும், வாழ்க்கையையும் பண்படுத்த வேண்டுமென்றால் நமது ஆய்வு காதல் குறித்து மட்டும் இருப்பதில் பலனில்லை. அதனால் இந்தப் படமும் பலனில்லாமல் கடந்து போகிறது.

பீகார்-குழந்தைகள் சாவு : கிரிமினல் அரசமைப்பே குற்றவாளி !

0

மதிய உணவுடந்த ஜூலை 16-ஆம் தேதி பீகார் மாநிலம், சரண் மாவட்டம், தர்மசதி கண்டவான் கிராமத்தில் உள்ள பள்ளியில் மதிய உணவருந்திய 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவு நஞ்சாகிப் போனதால் சிறிது நேரத்தில் வயிற்றுவலியால் துடித்தும் வாந்தி எடுத்தும் மயங்கி விழுந்து, சிகிச்சையளிக்கும் முன்னரே பெற்றோரின் கைகளிலேயே 23 குழந்தைகள் துடி துடித்து மாண்டுபோன சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை மாநில அரசுகள் நடை முறைப்படுத்த வேண்டுமென்று 2001-இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போதிய நிதியோடு அடிக்கட்டுமானங்களை உருவாக்காமல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதால் அலட்சியமும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடுகின்றன. பல மாநிலங்களில் தன்னார்வக் குழுக்களின் (அரசு சாரா நிறுவனங்களின்), மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொறுப்பில் சத்துணவுத் திட்டம் விடப்பட்டுள்ளது. அதனைப் பெயரளவில் மேற்பார்வையிடுவதோ அதிகார வர்க்கம். ஊழல் மலிந்துள்ள நாட்டில் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்குப் பொறுப்பாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. 2011-இல் ஒரிசா அமைச்சரான பிரமீளா மல்லிக் மதிய உணவுத் திட்டத்தில் பல கோடி ஊழல் செய்த விவகாரமும், மதிய உணவுத் திட்ட ஊழல்களை விசாரிக்க 2012 -இல் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் இத்திட்டத்தில் புழுத்து நாறும் ஊழல் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன.

குழந்தைகள்குழந்தைகளைப் பலி கொண்ட பள்ளியின் மதிய உணவில் ஆர்கானிக் பாஸ்பரஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததற்குத் தலைமையாசிரியையின் பொறுப்பின்மைதான் காரணம் என்று குற்றம் சாட்டி கைது செய்தும், கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள கல்வி அதிகாரியை பணி நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காட்டுகிறது, பீகார் அரசு. நெய்வேலியில் மதிய உணவில் கெட்டுப் போன முட்டைகளை உண்டு மாணவிகள் மயக்கமடைந்த விவகாரம் பரபரப்பானதும், பள்ளியின் தலைமையாசிரியரும் சமையலாளரும் முதலில் சாப்பிட்ட பிறகே குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமென்று உத்தரவு போடுகிறார் ஜெயலலிதா.

ஊடகங்களின் பரபரப்பும், அரசின் விசாரணையும், காரணமானவர்களைப் பணி நீக்கம் செய்து தண்டித்து விட்டு, இனி எல்லாம் முறையாக நடக்கும் என்பதாகப் பிரமையூட்டும் இத்தகைய தொடர் நிகழ்வுகள், இன்றைய அரசியலமைப்பு முறையின் படுதோல்வியையே மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. மீண்டும் இத்தகைய கொடூரங்கள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஏனெனில் இத்தகைய திட்டங்களை மக்கள் கண்காணிக்கவோ, முறைகேடுகளைத் தடுக்கவோ அதிகாரமில்லை. ஊழல்-மோசடிகளில் ஈடுபடும் அதே அரசு சாரா நிறுவனங்களிடமும், அதிகார வர்க்க, போலீசு, நீதி, நிர்வாக அமைப்பு முறையிடம்தான் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்படுகிறது.

பீகாரில் மாண்டுபோன குழந்தைகளைக் கையிலேந்திக் கொண்டு பெற்றோர்களான அடித்தட்டு மக்கள் கதறிய காட்சியும், அக்குழந்தைகளின் உடல்களை அப்பள்ளியின் முன்னேயே புதைத்துப் பொதுக் கல்லறை எழுப்பியிருப்பதும் மாளாத்துயரமாக நெஞ்சைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூரங்களும், துயரங்களும் இனியும் தொடராதிருக்க வேண்டுமானால், தற்போதைய அரசியலமைப்பு முறையின் தோல்வியை அம்பலப்படுத்தும் வகையில், மக்களின் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் புதியதொரு அரசியலமைப்பு முறையை நிறுவும் திசையில் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். இதுதான் உண்மையான மக்கள் பணி; அரசியல் பணி.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி ! போலி சோசலிசத்தின் படுதோல்வி !!

4

ழைக்கும் மக்களின் தெருப் போராட்டங்களால் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள இயற்கை வளமிக்க மிகப் பெரிய நாடான பிரேசில், கடந்த இரு மாதங்களாக குலுங்கிக் கொண்டிருக்கிறது. பிரசில்லா, ரியோ டி ஜெனிரோ, சாவோபோலோ, சால்வடார் – எனப் பெருநகரங்களில் உழைக்கும் மக்கள் இலட்சக்கணக்கில் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் சாலை மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆளும் கும்பலுக்கும் போலி சோசலிச ஊழல் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்துக்கும் எதிரான இப்போராட்டத்தின் மீதான போலீசின் தாக்குதலை எதிர்த்து மக்கள் வீதிகளில் வீரப்போர் புரிகின்றனர். பல பகுதிகளில் அரசு அலுவலகங்களும் பெரும் வர்த்தக அங்காடிகளும் வங்கிகளும் சூறையாடப்பட்டன. தொழிலாளர்கள், விவசாயிகள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், பெண்கள் -என அனைவரும் அணிதிரண்டு சாலையை மறித்து பல நாட்களாகத் தொடர்ந்து போராடுகின்றனர். அங்கேயே உணவு தயாரித்துக் கொண்டு தங்களுக்குள் விநியோகித்துக் கொள்கின்றனர். இசைக்கருவிகள் ஒலிக்க, ஆடல்-பாடல்களுடன் இரவு பகலாகப் போராட்டம் தொடர்கிறது.

13-brazil-mapபேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துத் தொடங்கிய இப்போராட்டம், பின்னர் மக்கள் மீதான வரித் திணிப்பு, சூறையாடல், சமத்துவமின்மை, அதிகார முறைகேடுகள், புரையோடிக் கிடக்கும் ஊழல், மருத்துவ – சுகாதார வசதியின்மை, இலவசக் கல்வி இல்லாமை – என அனைத்துக்கும் எதிரான போராட்டமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, வருமாண்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிக்காக 12 பெருநகரங்களில் விளையாட்டரங்கங்களை நவீனப்படுத்த பல்லாயிரம் கோடிகளை ஆட்சியாளர்கள் வாரியிறைப்பதை எதிர்த்து இப்போராட்டம் முன்னேறி வருகிறது. “எங்களுக்குத் தேவை கால்பந்து விளையாட்டுக் கேளிக்கையல்ல. கல்வி, மருத்துவ வசதி, சுகாதார வசதிகள்தான். பொதுப்பணத்தை எடுத்து விளையாட்டுப் போட்டி என்ற பெயரில் சூறையாடுவதை நிறுத்தாதவரை எங்கள் போராட்டம் ஓயாது” என்று எச்சரித்தார், விளையாட்டரங்கங்களை முற்றுகையிட்டு நடக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு இளம்பெண்.

இது உலகமயத்தால் கொழுத்துப் போயுள்ள கோடீசுவர கும்பலுக்கும் அவர்களின் அரசுக்கும் எதிரான ஏழைகளின் போர். எல்லா ஓட்டுக் கட்சிகளும் மக்கள் விரோதிகள். “இது ஒரு தொடக்கம்தான். இன்றைய அரசமைப்பு முறையை மாற்றியமைப்பதுதான் எங்கள் போராட்டத்தின் நோக்கம்” என்று அறிவித்தார், வேலையின்றித் தவிக்கும் ஒரு இளைஞர்.

பிரேசிலின் பொருளாதாரம் வளமாக உள்ளது, தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு நாடு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, ரேசன் கடைகளுக்குப் பதிலாக உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது, வேலையின்மையும் வறுமையும் குறைந்துவிட்டது – என்றெல்லாம் முதலாளித்துவ ஊடகங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்தன. 21-ஆம் நூற்றாண்டுக்கான புதிய வகைப்பட்ட சோசலிசப் பாதையில் பிரேசில் முன்னேறி வருவதாக போலி சோசலிஸ்டுகள் உச்சி முகர்ந்தனர். அவையெல்லாம் வடிகட்டிய பொய்கள் என்பதை 1992-க்குப் பிறகு நடக்கும் இம்மாபெரும் மக்கள் திரள் எழுச்சி நிரூபித்துக் காட்டிவிட்டது.

தொழிலாளர் கட்சி (பி.டி.), சோசலிச சுதந்திரக் கட்சி (பி.ஓ.எஸ்.எல்.), பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (பி.சி.பி.), சுதந்திரத் தாயகக் கட்சி (பி.பி.எல்.), ஐக்கிய சோசலிசத் தொழிலாளர் கட்சி (பி.எஸ்.டி.யு.), தொழிலாளர்களுக்கான கட்சி (பி.சி.ஓ.) – என பிரேசிலில் உள்ள பல வண்ண போலி சோசலிசக் கட்சிகள், தனியார்மய – தாராளமயமாக்கலுக்கு எதிரான மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் வெற்றியைச் சாதித்து, நாடாளுமன்றத்திலும் செனட்டிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றின. இடதுசாரி சாயல் கொண்ட மையவாத பி.எம்.டி. போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தன. இக்கட்சிகளும் அவற்றின் கூட்டணி அரசாங்கமும் ஆளும் வர்க்கத்துடன் இணக்கமாகவே நடந்து கொண்டன.

பிரேசில் உழைக்கும் மக்கள் போராட்டம்
உலகமயத்தால் கொழுத்துப் போயுள்ள கோடீசுவர கும்பலுக்கும் அவர்களின் அரசுக்கும் எதிரான போராட்டத்தில் பிரேசில் நாட்டு உழைக்கும் மக்கள்.

போலி சோசலிசத் தொழிற்சங்கத் தலைவராக இருந்து, பின்னர் பிரேசிலின் அதிபரான தொழிலாளர் கட்சியைச் (பி.டி.) சேர்ந்த லூலா, ஐ.எம்.எஃப். கட்டளையிடும் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவதாக உத்திரவாதம் அளித்த பின்னரே அரசுத் தலைவராக்கப்பட்டார். கீழிருந்து வரும் மக்களின் அதிருப்திக்கு ஒரு வடிகாலாகவும், புரட்சிக்கு எதிரான பாதுகாப்புக் கவசமாகவும் பி.டி. கட்சி மாறிப் போனது.

பிரேசிலில் போலி சோசலிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் நோக்கத்திற்காகவே ஏகாதிபத்தியங்களும் தன்னார்வக் குழுக்களும் “உலக சமூக மன்றம்” (WSF) என்ற அமைப்பை உருவாக்கின. ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கங்களிலிருந்து முகிழ்ந்த முன்னணியாகச் சித்தரிக்கப்பட்ட உலக சமூக மன்றத்தில் பிரேசில் தொழிலாளர் கட்சியும் அப்போதைய பிரேசில் அதிபர் லூலாவும் தலைமைப் பாத்திரமாற்றினர். “இன்னொரு உலகம் சாத்தியமே”, “மாற்றுகள் இருக்கின்றன” – என்று இப்போலி சோசலிசப் பித்தலாட்டத்தையே ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக போலி கம்யூனிஸ்டுகளும் போலி சோசலிஸ்டுகளும் சித்தரித்தனர். ஆனால், எந்த நாட்டில் கருவாகி உருவாகி உலக சமூக மன்றம் வளர்ந்ததோ, அந்த நாட்டிலேயே அது குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டுள்ளதை தற்போதைய மக்களின் எழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

டில்மா ரோவ்செஃப்
பிரேசிலின் போலி சோசலிசப் பெண் அதிபர் டில்மா ரோவ்செஃப்

லூலாவின் பதவிக் காலத்துக்குப் பின்னர், இதர போலி சோசலிச – மையவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து 16 கட்சி கூட்டணி அரசை அமைத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த போலி சோசலிசப் பெண் அதிபரான டில்மா ரோவ்செஃப், அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் அடிக்கட்டுமானப் பணிகளைச் செய்வதை விட, தனியார் நிறுவனங்கள் மூலம் செய்வதுதான் செலவு குறைவானது என்று விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தார். அவரது அமைச்சர்கள் பலரும் ஊழல் பெருச்சாளிகளாக அம்பலப்பட்டுப் போயுள்ளனர். அவரது பி.டி. கட்சியின் விவசாயத் துறை அமைச்சராக இருந்த மிகுவல் ரோசெட்டோ, நிலப்பிரபுக்களின் விசுவாசியாகவே மாறிப் போனார். இப்போலி சோசலிசக் கூட்டணி அரசின் தொலைத்தொடர்பு அமைச்சரோ அலைக்கற்றை ஊழலில் சிக்கி நாறிப் போனார். மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு ஒரு சோசலிச முகமூடியை அளித்ததைத் தவிர இப்போலி சோசலிசக் கட்சிகளால் வேறெதையும் சாதிக்க முடியவில்லை.

பிரேசிலின் தற்போதைய அரசியலமைப்பு முறையே மோசடியானது. அது பெருமுதலாளிகளுக்கும் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்வதற்கானது. பல்வேறு போலி சோசலிசக் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதிலும், அவை பொதுச் சொத்தைச் சூறையாடும் முதலாளிகளுக்குச் சேவை செய்து பொறுக்கித் தின்னும் கட்சிகள்தான். பொய் நெல்லைக் குத்தி பொங்க முடியாது. உலகமயத்துடன் இசைந்து போகும் போலி சோசலிசத்தால் பெயரளவிலான மக்கள்நலத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும்கூட நிறைவேற்ற முடியாது – என்ற அரிய படிப்பினைகளை உலகிற்கு வழங்கியுள்ள பிரேசில் மக்களின் எழுச்சி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும் சாலை மறியலுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், போராட்டத்தை சரியான திசையில் வழிநடத்திச் செல்ல ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாததால், பிரேசில் மக்களின் மகத்தான இப்போராட்டம் தொடர்ந்து முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

– தனபால்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________