நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பான விவகாரம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு விற்கவுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் (என்.எல்.சி.) 3.6 சதவீதப் பங்குகளை ரூ. 500 கோடிக்கு வாங்கலாம் என்று இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து 13 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து நடந்த தொழிலாளர்களின் போராட்டம்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் 2012-13-ம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ. 1,479 கோடி. இது சென்ற ஆண்டைவிட 3.5 சதவீதம் அதிகம். அப்படியிருந்தும் மைய அரசு ஏன் பங்குகளை விற்க வேண்டும்?
தொழில் நிறுவனங்களை அரசு நடத்தக்கூடாது; அனைத்தையும் சந்தைகளின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் – என்பதுதான் தனியார்மயக் கொள்கையின் தாரக மந்திரம். இதன்படி, நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலிருந்து அடுத்தடுத்து வந்த ஆட்சிகள் அனைத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் சொத்துக்களையும் அரசுத்துறை நிறுவனங்களையும் அடி மாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்த்தன. இதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே என்.எல்.சி. நிறுவனத்தின் 6.44 சதவீதப் பங்குகள், பங்குச் சந்தையில் விற்கப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக்கப்பட்டது.
ஊழல் அரசியல்வாதிகள்தான் நாட்டின் வறுமைக்கும் பின்தங்கிய நிலைக்கும் காரணம்; எனவே தொழில் நிறுவனங்களையும் அவற்றின் சந்தை வர்த்தக நடவடிக்கைகளையும் நாடாளுமன்றமோ, அரசாங்கமோ கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கக் கூடாது; மாறாக தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்களை அறிந்துள்ள அதிகார வர்க்க நிபுணர்களிடம், துறை சார்ந்த வல்லுநர்களிடம் அதிகாரத்தை அளிப்பதன் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் – என்பதுதான் புதிய தாராளமயக் கொள்கையின் அடிப்படை விதி. இதன்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் – என அடுத்தடுத்து உருவாக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் அனைத்தும் ஏற்கெனவே பெயரளவில் இருந்த அரசாங்கக் கண்காணிப்புகளை ஒழித்துக்கட்டி, முழுவதும் தனியார் முதலாளிகளின் சூறையாடலுக்கு ஏற்ப இயங்க ஆரம்பித்தன. இந்த ஒழுங்குமுறை ஆணையங்களும் வாரியங்களும் தீர்மானிக்கும் விதிகளைத்தான் யார் பிரதமராக இருந்தாலும், எந்தக் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் பின்பற்ற வேண்டும்; அதை எதிர்க்கவோ, மீறவோ கூடாது என்பதே எழுதப்படாத சட்டமாகியது.
குடிநீர் விநியோகம், குப்பைகளையும் கழிவுகளையும் அகற்றுதல், மின்சாரம், விவசாயம், கல்வி, தொழில் – என அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் இத்தகைய வல்லுநர்களிடமும் தொழில்முறை அமைப்புகளிடம் விடப்படுகின்றன. பங்குச் சந்தை மோசடிகள் புழுத்துப் போனபோது, பங்குச் சந்தையைக் கண்காணிக்க ஏற்கெனவே இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியத்தை (செபி) அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தும் சூப்பர் அரசாங்கமாக இத்தகைய ஆணையங்களும் வாரியங்களும் நிபுணர் குழுக்களும் திணிக்கப்பட்டு, அம்மணமான கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின் ஆட்சியை புதிய தாராளமயக் கொள்கை நிறுவி வருகிறது.
இதன்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுமக்களின் (அதாவது தனியார் முதலாளிகளின்)பங்கு மூலதனம் கட்டாயம் இருந்தாக வேண்டும்; தனியார் நிறுவனங்களில் 25 சதவீத அளவுக்கும், பொதுத்துறை நிறுவனங்களில் 10 சதவீத அளவுக்கும் இருக்க வேண்டும் – என மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கெடு விதித்தது. அதை நிறைவேற்றாவிட்டால் ஏதோ உலகமே அழிந்துவிடப் போவதைப் போல அரசும் ஊடகங்களும் பரபரப்பூட்டின. ஆனால் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் கெடு விதிக்கப்பட்டும் கூட நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப் பற்றி இவை வாய் திறப்பதில்லை.
பொதுமக்களின் பங்கு மூலதனம் 10 சதவீதத்தில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் மட்டுமல்ல, செபி விதித்துள்ள நிபந்தனையால் 12 பொதுத்துறை நிறுவனங்களும் இதே சிக்கலில் உள்ளன. நடப்பு நிதியாண்டில் ஏறத்தாழ 5 லட்சத்து 28 ஆயிரத்து 163 கோடிகளை தனியார் முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக அள்ளிக் கொடுத்துள்ள மைய அரசு, வெறும் 466 கோடிகளைத் திரட்டுவதற்காக என்.எல்.சி.யின் பங்குகளை தனியாரிடம் விற்கத் துடிப்பதிலிருந்தே ஆட்சியாளர்களின் தனியார்மயமாக்க வெறியைப் புரிந்து கொள்ள முடியும். இப்படித்தான் மாருதி நிறுவனத்தில் 50 சதவீதப் பங்குகளைக் கொண்டிருந்த இந்திய அரசு, பா.ஜ.க. ஆட்சியின்போது எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாத போதிலும் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கிறோம் என்ற பெயரில் ஜப்பானிய ஏகபோக சுசுகி நிறுவனத்திடம் விற்றது. இப்போது முழுக்கவும் சுசுகியின் ஆதிக்கப் பிடிக்குள் மாருதி சென்றுவிட்டது.
தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக என்.எல்.சி.யின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் மைய அரசு கையைப் பிசைந்து கொண்டிருந்த நிலையில், எதிர்ப்புகளைச் சமாளிக்க இப்பங்குகளை தமிழ்நாடு அரசு நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளும் திட்டத்தை நயவஞ்சகத் தந்திரத்துடன் ஜெயலலிதா முன்வைத்துள்ளார். இதன்படி, என்.எல்.சி.யின் பங்குகளை வாங்கும் தமிழக அரசுத்துறை நிறுவனங்கள் அவற்றைப் பங்குச் சந்தையில் விற்கவோ, ஒரு ஆண்டுக்குப் பிறகு வேறு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விற்கவோ எந்தத் தடையும் கிடையாது. இதை என்.எல்.சி. நிர்வாகம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. எனவே, தற்போது பங்குகளை தமிழக அரசுத்துறை நிறுவனங்கள் வாங்கியிருந்தாலும், அவை தனியார் முதலாளிகளின் கைகளுக்குப் போகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாளையே தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை என்று காரணம் காட்டி, இந்தப் பங்குகளை ஜெயலலிதா விற்பனை செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது.
ஏற்கெனவே தமிழக காகித ஆலை நிறுவனத்தின் (டி.என்.பி.எல்.) பங்குகளை தனியாருக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், அரசியல் ஆதாயத்துக்காகவே இப்படி சூரத்தனம் காட்டுகிறார். இம்மோசடியை மூடிமறைத்து, “எனது தலைமையிலான அரசின் தொடர் நடவடிக்கையாலும், எனது தனிப்பட்ட முயற்சியாலும் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர் போராட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” என்று தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். அதற்கு ஆமாம் சாமி போட்டு, செபி போன்ற ஆணையங்களின் – நிபுணர் குழுக்களின் உத்தரவுகளை மீற முடியாது என்று கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குப் பக்கமேளம் வாசிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள். இம்மறுகாலனியாதிக்கச் சதியைத் திரைகிழித்து, தனியார்மய-தாராளமயத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே போராடும் மக்களின் இன்றைய மையக் கடமையாகியுள்ளது.
– குமார்.
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________
லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வேதாந்தா அலுமினியத்தின் பாக்சைட் (அலுமினிய தாது) எடுக்கும் திட்டத்தை ஒடிசாவின் நியமகிரி மலைப் பகுதி மக்கள் நிராகரித்திருக்கின்றனர்.
ராயகடா மாவட்டத்தின் ஜராபா கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் (படம் : நன்றி தி இந்து)
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜராபாவில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வேதாந்தா திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ராயகடா மாவட்டத்திலும் காலஹந்தி மாவட்டத்திலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட 12 கிராம சபை கூட்டங்களில் இது கடைசிக் கூட்டமாகும். அனைத்து கிராம சபைகளும் வேதாந்தா-ஒடிசா அரசின் கூட்டு முயற்சியை 12-0 என்ற கணக்கில் நிராகரித்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து சுரங்கம் தோண்டுவதற்கு மாற்று இடங்களை ஒதுக்கும்படி ஒடிசா மாநில அரசின் மீது வேதாந்தா அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
நியமகிரியிலிருந்து பாக்சைட் (அலுமினிய தாது) எடுப்பதற்கான ஒப்பந்தம் ஸ்டெர்லைட்டுக்கும் (இப்போது வேதாந்தா அலுமினியம் என்று பெயர் மாற்றப்பட்டது) ஒரிசா சுரங்க கழகத்துக்கும் இடையே 2003-ம் ஆண்டு போடப்பட்டது. லாஞ்சிகர் என்ற இடத்தில் ரூ 4,500 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் அலுமினியம் சுத்திகரிக்கும் ஆலையை வேதாந்தா உருவாக்கியது. அதற்குத் தேவையான தாதுவை நியமகிரி மலைகளிலிருந்து எடுத்து வழங்கும் பொறுப்பு அரசு நிறுவனமான ஒடிசா சுரங்க கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
நியமகிரி மலை சுமார் 8,000 டோங்கரியா கோண்டு பழங்குடியினரும் நூற்றுக் கணக்கான குட்டியா கோண்டு பழங்குடியினரும் வசிக்கும் பகுதியாகும். தமது வாழ்விடத்தை அழிக்கும் வேதாந்தாவின் திட்டங்களுக்கு அம்மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஒடிசா மாநில அரசு மக்கள் போராட்டங்களை முடக்குவதற்கு தொடர்ந்து முயற்சித்தது.
நியமகிரி மலைகளில் சுரங்கம் தோண்ட அனுமதி வழங்க உத்தரவிடும்படி ஒரிசா சுரங்க கழகம் தொடர்ந்த வழக்கில் பழங்குடி கிராம மக்களின் வழிபாட்டு உரிமை, தனிநபர் உரிமை, சமூக உரிமைகளை இந்த திட்டம் பாதிக்கிறதா என்பதை பற்றி அந்தப் பகுதி கிராம சபைகளிடம் கருத்து கேட்டு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 18-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
வேதாந்தா அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை.
அதன்படி, ஒடிசா மாநில அரசு மலைச் சரிவில் அமைந்துள்ள 12 கிராமசபைகளிடம் மட்டும் கருத்து கேட்க முடிவு செய்து, தன் விருப்பப்படி கிராமங்களை தேர்ந்தெடுத்தது. பழங்குடி மக்கள் தமது கடவுளான நியம் ராஜாவின் இருப்பிடமாக கருதும் ஹூண்டால்ஜி என்ற இடம் சுரங்கம் தோண்டத் திட்டமிட்டுள்ள பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் மக்களை தமக்கு சார்பாக முடிவு எடுக்க வைத்து விடலாம் என்று வேதாந்தாவும், ஒடிசா சுரங்க கழகமும் திட்டமிட்டிருந்தன. அரசு தனது ஆதரவாளர்கள் மூலமும், மிரட்டல்கள் மூலமும் சாதகமான தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அத்தகைய அழுத்தங்களை தாண்டி கடந்த 2 மாதங்களாக நடந்த கிராம சபை கூட்டங்களில் ஒன்றன் பின் ஒன்றாக 12 கிராம மக்களும் வேதாந்தாவின் திட்டங்களை நிராகரித்து விட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும், வன உரிமைகள் சட்டத்தின்படியும், ஒரு கிராமசபை திட்டத்தை நிராகரித்தாலும் திட்டத்தை ரத்து செய்து விட வேண்டும் என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருக்கிறார். ஆனால், கிராம சபைகளின் முடிவுகளை ஏற்க முடியாது என்றும், இன்னும் பரவலான கருத்து கேட்டல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஒடிசா அரசு கூறியிருக்கிறது. தன்னார்வக் குழுக்களும், வேதாந்தாவை எதிர்த்து போராடும் நியமகிரி சுரக்ஷா சமிதியினரும் கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்தை சூழ்ந்திருந்தனர் என்று ஒடிசா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். கிராம மக்கள் அச்சுறுத்தல்கள் இன்றி முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவின் உணர்வுக்கு இது எதிரானது என்று வேதாந்தா ஆதரவு அமைப்பான லாஞ்சிகர் விகாஷ் பரிஷத் தலைவர் ஷ்ரீதர் பேஸ்னியா கூறியிருக்கிறார்.
“வேதாந்தாவின் லாஞ்சிகர் சுத்திகரிப்பு ஆலையில் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் தாதுவை பயன்படுத்தி 60% உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. மாநிலத்துக்கு வெளியிலிருந்து வரும் தாதுவை நம்பி நீண்ட காலத்துக்கு செயல்பட முடியாது. அப்படி கொண்டு வருவதால் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ 600 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே நியமகிரியிலிருந்து அலுமினிய தாது தருவதாக அளித்த வாக்குறுதியின்படி அதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை” என்று வேதாந்தாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
லண்டனில் நடந்த பங்குதாரர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஒரு வேதாந்தா அதிகாரி, “ஒடிசாவில் அலுமினிய சுரங்கம் தோண்டா விட்டால் வேறு எங்கு தோண்டுவது” என்று கேட்டிருக்கிறார். “நியமகிரியில் இல்லா விட்டால், குர்லாபேட்டா, சன்பார்மல்லி, போஃப்ளமல்லி, சந்தால்கிரி, கொடிகி டோங்கார் அல்லது நியமகிரிக்கு அருகில் உள்ள மற்ற மலைகளில் எங்காவது சுரங்கம் தோண்டும் உரிமத்தை வேதாந்தா வாங்கி விடும்” என்று அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
என்ன செய்தாவது, வந்தாரை வாழ வைத்து விட வேண்டும் என்ற அளவுக்கு ஒடிசா அரசின் கடமையுணர்வு.
“பாக்சைட் தாது எடுப்பதற்கு மாற்று இடம் கோரும் வேதாந்தாவின் 26 விண்ணப்பங்களும் பரிசீலனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. கர்லாபட் பாக்சைட் படிமங்களை எங்களுக்கு ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம்.” என்று வேதாந்தாவின் விசுவாச ஊழியராக ஒடிசா சுரங்க கழகத்தின் இயக்குனர் தீபக் மொகந்தி கூறியிருக்கிறார். கர்லாபட் சுரங்கத்திலிருந்து வேதாந்தாவுக்கு பாக்சைட் எடுத்து கொடுக்கலாம் என்பது ஒடிசா சுரங்க கழகத்தின் திட்டம். என்ன செய்தாவது, வந்தாரை வாழ வைத்து விட வேண்டும் என்ற அளவுக்கு ஒடிசா அரசின் கடமையுணர்வு இருக்கிறது.
நீதிமன்றங்களிலும் நிர்வாக அமைப்புகளிலும் தற்காலிகமாக மக்கள் நலனுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வருவது வரை அடுத்தடுத்து மேல் முறையீடு செய்யப்பட்டு அவர்களது திட்டம் நிறைவேற வசதி செய்து கொடுக்கப்படும் என்பதுதான் இதுவரையிலான அனுபவமாக இருக்கிறது.
உதாரணமாக, தூத்துக்குடியை மாசுபடுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், தேசிய பசுமை தீர்ப்பாயம் என்று தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் வரையில் வழக்கு நடைபெறும் இடத்தை மாற்றிக் கொண்டது வேதாந்தா. ஆலையை மூடுவதற்கான உயர்நீதி மன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து ரத்து செய்து கொண்டது.
இத்தகைய பெயரளவு உரிமைகளைக் கூட கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் அந்த பகுதி கிராம சபைகளுக்கு உச்சநீதிமன்றம் கூட வழங்க முடியாது என்பது நிதர்சனம். இந்திய அணுசக்தி கழகத்தின் திட்டங்கள் மக்கள் முடிவுக்கும், பரிசீலனைக்கும் அப்பாற்பட்ட மூடு மந்திரங்கள் என்பதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது.
இதன்படி வேதாந்தாவும் அதன் அடியாளான ஒடிசா அரசும் மாநிலத்தின் வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளை பல்வேறு வழிகளில் மீண்டும் தொடர்வார்கள் என்பது தெளிவு. எனினும் ஒடிசாவின் பழங்குடி மக்கள் இந்த பன்னாட்டு நிறுவனத்தை இறுதி வரை எதிர்ப்பார்கள். அதில் வெற்றியும் பெறும் வரை தொடர்ந்து போராடுவார்கள்.
அமெரிக்க அரசின் ஒட்டுக்கேட்பு மற்றும் இணையதளக் கண்காணிப்பு சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய ஸ்னோடெனை வேட்டையாடுகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஸ்னோடென் ரசிய விமான நிலையத்தில் இருந்து கொண்டு, தனக்குத் தஞ்சம் கொடுக்க மறுத்த நாடுகளின் முகங்களை ஒவ்வொன்றாகத் தோலுரித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் முகத்திலோ அமெரிக்க அடிமையின் சாயல் அப்பட்டமாகத் தெரிகிறது.
ரசியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள ஸ்னோடன்
பிரிசம் என்னும் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்பு வளையம் உலக நாடுகள் அனைத்தையும் வேவு பார்க்கிறது என்ற உண்மையை ஸ்னோடென் அம்பலப்படுத்தியவுடன், “இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டிருப்பின், அதனை நம்மால் ஏற்றுக்கொள்ளவியலாது” என்று ஜூன் 12 அன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினார், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி அக்பர்தீன். அமெரிக்காவால் அதிகம் வேவு பார்க்கப்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்ற செய்தி அடுத்து வெளியானது. “இது கவலையளிக்கிறது. ஆச்சரியமளிக்கிறது. எனினும், அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வருவதற்கு இந்தியா தயாராக இல்லை” என்று நெளிந்தார் அந்த அதிகாரி.
அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகம் உட்படமொத்தம் 37 தூதரகங்களில் இருந்து அனுப்பும் தொலைநகல்கள், அசாதாரண வேவு பார்க்கும் கருவிகளால் வேவு பார்க்கப்படுகின்றன என்று, ஜூன் 30 அன்று கார்டியன் நாளேடு (ஸ்னோடெனிடமிருந்து தகவலைப் பெற்று) அம்பலமாக்கியது. “அமெரிக்கா யாரையும் உளவு பார்க்கவில்லை, தொலைபேசி உரையாடல்கள் மற்றும் குறுந்தகவல்களின் வகைமாதிரியை மட்டுமே பகுப்பாய்ந்திருக்கிறது” என்று ஜூலை 1-ஆம் தேதியன்று வெட்கமே இல்லாமல் சப்பைக் கட்டினார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். இது அவருடைய சொந்தக் கருத்தல்ல; அமெரிக்க அரசுச் செயலர் ஜான் கெர்ரியின் கூறிய கருத்தையே இந்திய அரசின் கருத்தாக வாந்தியெடுத்தார் குர்ஷித்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அரசியல் தஞ்சம் கேட்டு கோரிக்கை வைத்தார் ஸ்னோடென். இந்திய அரசின் மிச்சம் மீதியிருந்த மானத்தையும் வாங்கிவிட்டது இந்தக் கோரிக்கை. ஆத்திரம் தலைக்கேறிய குர்ஷித், “தஞ்சம் வேண்டுவோர்க்கெல்லாம் கொடுக்க இது ஒன்றும் திறந்த வீடல்ல” என்று சீறினார்.
2009-ஆம் ஆண்டு இலண்டனில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்ட, ஜி-20 தலைவர்கள் கூட்டத்தின் போதும், அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த நிதி அமைச்சர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்ட அயல்நாட்டு உறுப்பினர்களை, பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு நிறுவனங்கள் சேர்ந்து வேவு பார்த்த செய்தியும் அடுக்கடுக்காக வெளிவந்தன. இதற்கு இந்திய அரசிடமிருந்து ஒரு எதிர்வினைகூட வரவில்லை. ஜெயலலிதாவின் அமைச்சர்களைப் போல கூச்சநாச்சமே இல்லாமல் அமெரிக்காவின் முன் இந்தியா வளைந்து நெளிவது அப்பட்டமாக அம்பலமாகவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் காறி உமிழத் தொடங்கின. அதற்குப் பிறகுதான், “வரவிருக்கும் இணையப் பாதுகாப்பு கூட்டத்தில் அமெரிக்காவிடம் இவ்விசயம் பற்றிப் பேசப்படும்” என்று சமாளித்து ஒரு அறிக்கை விட்டார் சல்மான் குர்ஷித்.
அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி ஸ்னோடனை ஆதரிக்கும் பொலிவியா அதிபர் ஈவா மோரேல்ஸ்
ஒரு நாட்டின் தூதரகத்தை வேவு பார்ப்பதென்பது அந்நாட்டின் மீதே போர் தொடுப்பதற்கு ஒப்பான செயலாகும். ஆனால் அரசியல்,பொருளாதாரம், இராணுவம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அமெரிக்க அடிமையாகவும், ஓடும் பிள்ளையாகவும் ஆகிவிட்ட இந்தியா, அதைப் பற்றியெல்லாம் ஏன் கவலைப்படப் போகிறது? “தூதரகம் மட்டுமல்ல; விருந்தினர் விடுதிகள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் வேவு பார்ப்பது சகஜமான விசயம்” என்று கூறி குர்ஷித்துக்கு வக்காலத்து வாங்கினார் முன்னாள் அமெரிக்கத் தூதர் ரோனேன் சென். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விமர்சித்த அரசியல் கட்சிகளைத் “தலையறுபட்ட கோழிகள்” என்று தெனாவெட்டாகப் பேசியவர் ரோனேன் சென். தற்போது இவர் டாடா மோட்டார்ஸின் இயக்குநர். இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் அரசின் அமெரிக்க அடிமைத்தனத்துக்கு இதற்கு மேலும் விளக்கங்கள் தேவையில்லை.
உலக மேலாதிக்க சக்தியான அமெரிக்காவை எதிர்த்து நிற்க அஞ்சி, பல நாடுகளும் ஸ்னோடெனின் அடைக்கலக் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். எனினும், இந்தியாவின் அடிமைத்தனம் விசேடமானது. “இது திறந்த வீடல்ல” என்ற குர்ஷித்தின் திமிர்த்தனமான பேச்சில், அடிமைத்தனத்தையே பெருமிதமாகக் கருதும் ஒரு அடியாளுக்குரிய அகம்பாவம் வெளிப்பட்டது. இந்திய நாட்டை மட்டுமின்றி, இந்தியக் குடிமக்களின் படுக்கையறையையும், இந்திய அரசின் தூதரகத்தையும் திறந்த வீடாகக் கருதி உள்ளே புகுந்து உளவு பார்க்கும் அமெரிக்க அரசிடம் “இது திறந்த வீடல்ல” என்று கூறும் துணிவு இந்திய அரசுக்கு இல்லை. தனியொரு மனிதனாக அமெரிக்க வல்லரசை எதிர்த்து நிற்கும் ஸ்னோடெனின் வீரத்தைக் கண்டு நடுங்கிக் குரைத்தது மன்மோகன் அரசு.
இந்தியாவைப் போன்ற ஒதிய மரங்களுக்கு இல்லாத துணிவை சின்னஞ்சிறிய தென்னமெரிக்க நாடுகள் வெளிப்படுத்தின. பொலிவியா, நிகரகுவா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் ஸ்னோடெனுக்கு அரசியல் தஞ்சம் தருவோம் என்று கூறி அமெரிக்க மேலாதிக்கத்தினை எதிர்த்து தலைநிமிர்ந்து நிற்கின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட அமெரிக்க அரசு, ரஷ்யாவில் நடந்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பும் பொழுது, பொலிவிய அதிபர் ஈவா மோரேல்ஸ் தன்னுடைய தனி விமானத்தில் ஸ்னோடெனை ஒளித்து வைத்திருக்கிறார் என்று வதந்தியைப் பரப்பியது. அமெரிக்க அரசின் கட்டளைக்குப் பணிந்து பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான் வழியே அவ்விமானத்தை அனுமதிக்க மறுத்தன.
ஆஸ்திரியாவில் விமானம் இறங்கியவுடன், அமெரிக்க உளவுத்துறையின் தூண்டுதலின் பேரில், சர்வதேச விதிமுறைகளுக்கு விரோதமாக விமானத்துக்கு உள்ளே புகுந்து சோதனை நடத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் அமெரிக்க அடிவருடித்தனத்தை அம்பலப்படுத்தியிருப்பதோடு, ‘பேரரசர்’ அமெரிக்காவோடு கைகோர்த்துக் கொண்டு தென்னமெரிக்க நாடுகளை இன்னும் தங்கள் காலனிகளாக நடத்தும் ஐரோப்பிய நாடுகளின் முகத்திரையையும் கிழித்தார் மோரேல்ஸ். அமெரிக்கத் தூதரகத்தைத் தன் நாட்டிலிருந்து வெளியேற்றவும் தயங்கப் போவதில்லை எனவும் எச்சரித்தார்.
ஐரோப்பிய நாடுகள், ஈவா மோரேல்ஸை அவமானப்படுத்தியதைத் தென்னமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பும் கடுமையாக கண்டித்தது. வர்த்தக ஒப்பந்தங்களைக் காட்டி ஸ்னோடெனுக்கு புகலிடம் கொடுக்கக் கூடாது என அமெரிக்கா மிரட்டியபோது, “மனித உரிமைகள் வர்த்தக நலன்களுக்கும் மேலானவை” என்று கூறி மனித உரிமைக் காவலன் வேடமிடும் அமெரிக்காவின் முகத்தில் கரிபூசின தென்னமெரிக்க நாடுகள்.
அமெரிக்க போர்வெறி எந்திரத்தின் உதிரி உறுப்பாக மாறிவிட்டது இந்தியா. அரசியல், பொருளாதாரம், இராணுவத் துறைகள் அனைத்திலும் இறையாண்மையையும் சுயேட்சைத் தன்மையையும் இழந்த முழு அடிமையாக நடந்து கொள்வதே தனது நலனுக்கு உகந்தது என்று இந்திய ஆளும் வர்க்கம் கருதுகிறது. அமெரிக்காவுடன் முரண்படாதிருப்பதே நல்லது என்று கருதும் ஐரோப்பிய வல்லரசுகளும்கூட அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நடவடிக்கையைச் சம்பிரதாயமாக மட்டுமே எதிர்க்கின்றன. சொந்த நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி தமது அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் நாடுகள், அவை எவ்வளவு சிறியவையாக இருந்தாலும், அவை மட்டும்தான் தமது இறையாண்மையையும் தமது மக்களின் ஜனநாயக உரிமையையும் பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்காவை எதிர்த்து நிற்கின்றன. ஒரு தனி மனிதனும்கூட அவ்வாறு எதிர்த்து நிற்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் ஸ்னோடென்.
– சுப்பு
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________
ரம்ஜானுக்கு வெளியாக வேண்டிய தலைவா திரைப்படம் ஒரு வழியாக இன்று ஆகஸ்டு 20 ஆவணி அவிட்டமன்று வெளியாகி விட்டது. அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று இனி யாரும் கேட்க முடியாது. ஆயினும் ஊடகங்களில் இந்த வெற்றி குறித்த பரபரப்பு செய்திகள் அதிகமில்லை. ஏற்கனவே இந்த பரபரப்பில் சண்டை, சச்சரவு என்ற விறுவிறுப்பு இல்லாமல் சரணடைவு, கண்ணீர் எனும் சோகங்கள் மட்டுமே திகட்டுமளவு இருந்ததால் ஊடகங்களின் கவனம் அதிகமில்லையோ என்னமோ.
படம் வெளியாவது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக அரசை சர்வாதிகார அரசு, இங்கு கருத்து சுதந்திரமில்லை, ஒரு நடிகருக்கே இங்கே வாழ்வுரிமை இல்லை என்று ஏகப்பட்ட கோணங்களில் ஜனநாயகம் பேசியவர்களின் கருத்தையெல்லாம் கட்டுக்கதை என்று ஒரே போடாக வெட்டி விட்டார் விஜய். பாவம், சிறைக்குச் செல்லும் வெள்ளைக் காலர் கிரிமினல்கள் தங்களது முகத்தை மறைப்பது போல நமது கருத்துரிமை கந்தசாமிகளின் நிலை ஆகிவிட்டது. இனியாவது ஜனநாயகம் எனும் உரிமையை காஸ்ட்லியான நட்சத்திரங்களின் தயவில் காப்பாற்ற முடியாது என்று அந்த அறிஞர் பெருமக்கள் திருந்தட்டும்.
உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதி மறுத்த பிறகு தயாரிப்பாளர் நெஞ்சுவலி வந்து மருத்தவமனை சேர்ந்தார் என்ற செய்தியின் மூலம் கண்ணீர் விடு தூது விட்டார்கள். இந்த கண்ணீர் உண்மையாகவும் இருக்கலாம். இன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியின் படி “நான் இந்தப் படத்தின் ஊழியன் மட்டுமே, அதில் நடித்துக் கொடுப்பதோடு எனது பணி முடிவடைந்து விட்டது. இனி தயாரிப்பாளர் பாடு, எனினும் அவர் எடுக்கும் எந்த முயற்சிக்கும் துணை நிற்பேன்” என்று விஜய் தெரிவித்தாராம்.
ஆனால் படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக்கையெல்லாம் தயாரிப்பாளரா வைத்தார்? அதற்கு மட்டும் நட்சத்திரங்களின் இமேஜ் என்று ஏதாவது சாக்கு சொல்லி அரசியல் கனவுகளுக்கு இடம் கொடுக்கும் விதத்தில் காட்சிகள் வைக்குமாறு ஆணையிடுவார்கள். எது எப்படியோ விஜய் இப்படிச் சொன்ன பிறகு தயாரிப்பாளருக்கு கண்ணீர் என்ன ரத்தமே கூட வந்திருக்கும்.
ஜெயலலிதா, விஜய், எஸ் ஏ சந்திரசேகர். சென்ற தேர்தலின் போது நடந்த சந்திப்பு
ஜெயலலிதாவுக்கும், விஜய்க்கும் ஆதரவாக இருக்கும் குமுதம் போன்ற பத்திரிகை முதலாளிகள் கூட தூது போய் விசயத்தை பேசி முடித்திருக்கலாம். இதையும் கூட ஒரு கிசுகிசுவாக குமுதம் ரிப்போர்ட்டரே வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் தரப்பு துக்ளக் சோவைப் பார்த்தாகவும், இந்த மாதிரி சினிமாவில் அரசியல் பேசுவது தனக்கு உடன்பாடில்லை, தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் கசிந்தன. ரஜினிக்கு இத்தகைய இடம் இருப்பதாக கொளுத்திப் போட்டதில் சோவுக்கு முக்கிய பங்குண்டு. அதில் பட்ட காயமோ இல்லை நண்டு, குஞ்சு, குளுவானெல்லாம் ஒவ்வொன்றாக இப்படி வருகிறதே என்ற கவலையோ, இல்லை தனது இந்துமதவெறி அரசியலுக்கு தோதான ஆள் பார்த்து சோ செய்கிறாரோ தெரியவில்லை.
எது எப்படியோ இளைய தளபதி தரப்பும், புரட்சித் தலைவி தரப்பும் ஏதோ டீல் பேசி முடித்திருக்கிறார்கள். அது என்ன என்பது உடனடியாக தெரியாது என்றாலும் பின்னால் தெரிய வரலாம். நன்கொடையா, தேர்தல் பிரச்சாரமா, அரசியல் ஆசை துறந்ததா, இல்லை காலில் விழும் மன்னிப்பா என்று அதை யூகிப்பது ஒன்றும் கடினமில்லை.
இதற்கு ஆதரமாக படத்தின் சுவரோட்டியில் இருந்த டைம் டூ லீட் எனும் வாசகத்தை தூக்கியிருக்கிருக்கிறார்கள். அதே போல படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக்குகளையும் மியூட் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே மொக்கை படமென்று விமரிசன உலகில் வாங்கிக் கட்டியிருக்கும் தலைவா படத்திற்கு இத்தகைய எடிட்டிங்குகள் எந்த காயத்தையும் ஏற்படுத்திவிடாது. ஆனாலும் திருட்டு விசிடி மூலம் அதிகம் பேர் பார்த்திருக்க வாய்ப்பிருப்பதால் திரையரங்கு வந்து எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியெல்லாம் கிடையாது.
ஜெயலலிதாவுக்கு இருக்கும் பல்வேறு வேலை நெருக்கடிகளுக்கு இடையில் தலைவா பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பதாக விஜய் கூறுகிறார். ஜெயலலிதாவுக்கு இருக்கும் வேலை ‘நெருக்கடியை’ நாம் அறிவோம். ஆனால் அவர் தீர்த்து வைத்த பிரச்சினை என்ன என்பதுதான் தெரியவில்லை. ஏற்கனவே அரசும் சரி, போலிசும் சரி தலைவா படத்திற்கு தங்கள் தரப்பில் இருந்து எந்த தடையோ இல்லை உத்திரவோ எதுவும் கிடையாது என்றும் இது முழுக்க முழுக்க சினிமா உலகப் பிரச்சினை என்றே தீர்க்கமாக தெரிவித்திருந்தனர்.
சரணாகதி
குண்டு வைப்பதாக மிரட்டல் கடிதம் அனுப்பிய அந்த மாணவர் அமைப்பினருக்கு பயந்துதான் திரையரங்க முதலாளிகள் வெளியிட மறுத்தனர் என்பதை இன்று பிறந்த குழந்தை கூட நம்பாது. ஆனாலும் தலைவா படத்தை முடக்கிய வகையில் அந்த மாணவர் ‘அமைப்பினர்’ வரலாற்றில் இடம் பெற்றுவிட்டனர். அரசு, போலீசு ஆதரவு இருந்தால் எந்த ‘அமைப்பும்’ இப்படி வரலாற்றில் வந்து போகலாம்.
விஜய் தரப்பின் அரசியல் ஆசையும் அதன் பொருட்டு அவர்களுக்கும் அதிமுக தரப்பிற்கும் எழுந்த ஈகோ பிரச்சினையைத் தாண்டி வேறு பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை என்பதை நிறைய பார்த்திருக்கிறோம். இதைத் தீர்க்க விஜய் எழுத்தாலும், பேச்சாலும், மனதாலும் தாழ்படிந்து மன்னிப்பு மன்னிப்பு என்று பலமுறை தெரிவித்து விட்டாலும் அம்மா அத்தனை சீக்கிரம் கருணை காட்டவில்லை. 11 நாட்களுக்குப் பிறகுதான் படம் வெளியாகியிருக்கிறது.
ஆனால் முப்பதாம் தேதி வெளியாக வேண்டிய பிரியாணி படத்தின் பாடல்கள் இணையத்தில் சில நாட்களுக்கு முன்பாகவே வெளியாகி விட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் மீடியா வெளிச்சம் புடை சூழ கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு இருக்கும் பல்வேறு வேலை நெருக்கடிகள் என்பது சினிமாக்காரர்களது பிரச்சினையை பார்ப்பது பேசுவது தீர்ப்பதாகத்தான் இருக்கும் போலும்.
நம்மைப் போன்ற பாமரர்கள் சென்றால் கமிஷனர் அலுவலகத்து நாய் கூட சீண்டாது. சினிமா நட்சத்திரங்களுக்கோ உடனுக்குடன் நடவடிக்கை. இருப்பினும் நடிகர் கார்த்தி அந்த புகார் அளித்து விட்டு போனசாக அறம் பாடியிருக்கிறார். அதாவது பலபேர் உழைத்து உருவாக்கும் பாடல்களை, படத்தை இப்படி மனசாட்சியே இல்லாமல் இணையத்தில் வெளியிடுகிறார்களே, அதையும் ரசிகர்கள் தரவிறக்கி பார்க்கிறார்களே, மாரல் எத்திக்ஸ் எல்லாம் எங்கே போயிற்று என்று கேட்கிறார்.
5 அல்லது 10 ரூபாய் கொடுத்து பார்க்க வேண்டிய ஒரு படத்தை சில பல நூறுகள் கொடுக்க வைத்து அல்லது பிடுங்கி வயிறு வளர்க்கும் தமிழ் சினிமா முதலாளிகளின் எத்திக்சோடு ஒப்பிட்டால் திருட்டு விசிடி எத்திக்செல்லாம் எம்மாத்திரம்? கார்த்தியை வெள்ளையும் சொள்ளையுமாக காட்டுவதற்கு சூடான் மின்விளக்கை ஏந்தி நிற்கும் லைட் மேனுக்கு ஒருநாள் சம்பளம் 400 என்றால் கார்த்தியின் ஒரு நாள் சம்பளம் சில பல இலட்சங்கள். இது இரண்டுமே உழைப்பு என்றால் சம்பளம் மட்டும் அப்படி வேறுபடுவது ஏன்?
நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க முதலாளிகள் என்று தமிழ் சினிமாவின் வலைப்பின்னல் முதலாளிகளால் ஆனது. இவர்கள்தான் சினிமாவால் கோடிகளை சம்பாதிக்கிறார்கள். இந்த கோடிகளை தரும் தமிழக மக்கள்தான் சினிமா மாயையால் சினிமா மாந்தர்களுக்கு அரசியல் ஆசையை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கிறார்கள். எனவே மற்ற தொழிலைப் போல சினிமாவையும் ஒரு தொழில் என்றோ இல்லை கலை என்றோ வரையறுக்க முடியாது. அது சட்டபூர்வமான சூதாட்டம். ஆனால் உணர்ச்சிகரமான ஆட்டமாகவும் இருப்பதால் அது எப்போதும மிகை உணர்ச்சியோடு மக்களிடம் பேசுகிறது. அதை நம்ப வைக்கவும் செய்கிறது.
போகட்டும், தலைவா படப் பிரச்சனை தீர்ந்த பிறகு ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன?
இனி படங்களுக்கு முத்திரை மொழி வைக்கும் சினிமா படைப்பாளிகள் Time to lead-kill-act என்றெல்லாம் வைக்காமல் Time to fun-bun-sin இது மாதிரி வைப்பார்கள்.
அரசியல் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமல்ல, பஞ்ச் டயலாக்குகளே இனி இருக்காது என்பது நிச்சயம். இந்த குத்து வசனங்கள் போய் கெட்டதைப் பார்க்காதே, கேட்காதே மாதிரியான காந்தியின் அகிம்சை பாணியிலான வசனங்கள் வரும்.
அயர்னிங் மிஷன், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றின் விற்பனை குறையும்.
இனி நட்சத்திரங்களின் பிறந்த நாள் அமெரிக்காவிலோ இல்லை ஆஸ்திரேலியாவிலோ அடக்கமாக, கமுக்கமாக கொண்டாடப்படும். இல்லையென்றால் பிறந்த நாள் கொண்டாட்டமே இருக்காது.
ரசிகர் மன்றங்களின் பொறுப்பாளர்களுக்கும் வருங்கால வட்டம், அமைச்சர், வாரியம் போன்ற கனவுகள் இருக்காது. இதனால் ரசிகர் மன்றங்கள் கைக்காசை போட்டு செலவழிக்கும் முதலீட்டை நிறுத்துவார்கள். ரிடர்ன்ஸ் இல்லையென்றால் யார் முதல் போடுவார்கள்?
அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை அரசியல் கலந்த தமிழ்ப்படங்களை பார்க்கவே முடியாது. ஏற்கனவே அப்படி ஒன்று இல்லை என்பது வேறு விசயம்.
இனி வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்கள் வியாழக்கிழமையே போயஸ் தோட்டத்தின் அனுமதியைப் பெற வேண்டியிருக்கும்.
அதே போன்று பேட்டி கொடுக்கும் நட்சத்திரங்களும் அரசியல், கோபம், கனவு, சமூக அக்கறை, உபதேசம் போன்ற அட்வைசு மொக்கைகளை புறந்தள்ளி விட்டு அஜால், குஜால், சில்பான்சு, ஙா…போன்ற உலக தத்துவங்களை மட்டும் பேசுவார்கள்.
ஜெயலலிதாவை விமரிசக்கும் பத்திரிகைகளை பாதுகாப்பு காரணம் கருதி கடையில் விற்க கடைக்காரர்கள் மறுப்பு எனும் செய்தியும் வந்தாலும் வரும்.
நட்சத்திரங்கள் ரசிகர்கள் உறவு மாறுவதால் பிளக்ஸ், சுவரொட்டி நிறுவனங்களுக்கு வருவாய் குறையும்.
அமெரிக்க புஷ்ஷைக் கூட ஆதரிப்பேனே அன்றி தமிழ் சினிமா நட்சத்திரங்களை ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன் என்று பின் நவீனத்துவ அறிஞர் பெருமக்கள் முடிவெடுப்பார்கள்.
ஏற்கனவே ஆளும் வர்க்க அடிமையாக இருக்கும் தமிழ் சினிமா இனி அம்மாவின் அடிமை எனும் கூடுதல் பணியையும் சேர்த்து செய்ய வேண்டும்.
நட்சத்திரங்களின் இமேஜுக்கு கதை எழுதும் படைப்பாளிகள் இனி அது அம்மாவின் கோபத்திற்கு ஆளாகாமல் எழுதுவது எப்படி என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்வார்கள்.
இறுதியாக அடுத்த தேர்தலில் முழு சினிமா நட்சத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் அதிமுகவிற்கு ஆதரவோ இல்லை அறிக்கையோ இல்லை பிரச்சாரமோ செய்ய வேண்டும். மறுத்தால் பிழைப்பு நடக்காது.
தனியார்மய காலகட்டம் ஆரம்பித்த கடந்த இருபது ஆண்டுகளில் ஊழல்களின் மதிப்பு ஆயிரம் கோடிகளில் இருந்து லட்சம் கோடிகளுக்கு மாறியிருக்கிறது. ஊழலின் பரிமாணமும் சகல துறைகளிலும் கால் பதிப்பதாக மாறியிருக்கிறது. அப்படி ஒரு பெரிய மோசடி ஹரியானா மாநிலத்தின் ஆளும் வர்க்க அதிகாரிகள், முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடைய கூட்டு முயற்சியால் சாத்தியமாகி உள்ளது.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமும், டி.எல்.எஃப் என்ற கட்டுமான நிறுவனமும், ஹரியானா காங்கிரசு தலைவர் ஒருவரின் ஓங்காரேஸ்வரர் நிறுவனமும் இணைந்து இந்த ஊழலை நடத்தியுள்ளன. 2012 அக்டோபரில், இதனை அம்பலப்படுத்திய மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா மீது இட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இம்முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழு கெம்காவின் நடவடிக்கைகளுக்கு உள்நோக்கம் இருப்பதாக சொல்லி அவரை விசாரணைக்கு அழைக்காமலேயே அவரது உத்திரவுகளை ரத்து செய்தது. இப்போது கெம்கா பொதுவில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து 100 பக்க அளவில் கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த ஊழலின் மூலம் வதேரா அடைந்த வருமானம் மட்டும் குறைந்தது ரூ 3.5 லட்சம் கோடி வரை இருக்கும் என கெம்கா கணக்கிட்டு சொல்லியிருக்கிறார்.
பிளேபாய் வதேரா
நிலக்கரி ஊழலுக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்த ஊழலின் கதாநாயகன் ராபர்ட் வதேரா. பரம்பரை பணக்காரர்கள் என்று போற்றப்படும் நேரு குடும்பத்தின் மருமகன். ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காவை திருமணம் செய்வதற்கு முன் டெல்லி பகுதியில் ஒரு ப்ளே பாயாக (நம்ம ஊர் மொழியில் சொன்னால் மைனராக) ஆடம்பர மேல்நாட்டு மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தவர் என பத்திரிகைகள் பலமுறை செய்திகளை புகைப்படங்களோடு வெளியிட்டும் கூட அதைப் பற்றி பெயருக்கு கூட ஒரு மறுப்பும் சொல்லாதவர். ஏதோ தொழில் செய்கிறார் என்று பூடகமாக பேசப்பட்டவர். இப்படிப்பட்டவர்கள் நமது சமூகத்தில் கடந்த இரு பத்தாண்டுகளில் கடைசியாக வந்து சேரும் தொழில் ரியல் எஸ்டேட். கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்பதற்கேற்ப அந்த இடத்திற்கு வதேரா வந்து சேர்ந்ததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
வந்தவர் தோளில் துண்டும், கையில் ஒன்றுமில்லாமல் இருந்தாலும் வாயிலேயே வடை சுடும் வீடு புரோக்கர் வேலையைக் கூட திறமையாக செய்ய இயலவில்லை. இப்படி பெரிய வீட்டு மருமகன் அல்லாடுவதைப் பார்க்க பொறுக்காத ஹரியானா காங்கிரசு அரசின் முதல்வர் பூபேந்தர்சிங் ஹூடா தலைமையிலான அமைச்சரவை சகாக்கள் சேர்ந்து அவருக்கு உதவ முன் வருகின்றனர்.
விவசாய நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஏதாவது ஒரு காங்கிரசு தரகருக்கு குறைந்த விலைக்கு கொடுப்பது மற்றும் கொடுக்க வைப்பது முதல் வேலை. சில சமயம் அப்படி வாங்கப்படும் நிலம் நகர வளர்ச்சிக்காக திட்டமிடப்பட்ட பகுதியாகக் கூட இருக்கும். அதன் பிறகு வணிக அல்லது குடியிருப்பு பயன்பாட்டுக்கான நிலம் இருப்பதாக பெரிய ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு அந்த தரகர் தூது அனுப்புவார்.
வதேராவின் சேவையில் ஹரியானா முதல்வர் ஹூடா
விவசாய நிலத்தை வணிக பயன்பாட்டிற்கானதாகவோ அல்லது குடியிருப்பு பயன்பாட்டிற்கானதாகவோ மாற்றுவதற்கு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்துள்ள நிறுவனம் குறிப்பிடப்பட்டிருக்கும் பயன்பாட்டிற்கு ஏற்றபடி நிலத்தை பயன்படுத்துவதற்கு தகுதியானதா என்பதை கண்டறிவதுடன் அவர்களது ஆண்டு விற்பனை மதிப்பு, எத்தனை ஆண்டுகளாக சந்தையில் செயல்படுகின்றனர் என பல காரணிகளை ஆய்வுக்குட்படுத்தி, அந்த பகுதிக்கான அரசின் நீண்ட கால வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிலத்தின் பயன்பாட்டை மாற்றுவதற்கு தேவை இருக்கிறதா என்பதை பரிசீலித்த பிறகு பயன்பாடு வகையை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி அனுமதிப்பதைப் பற்றி முடிவு செய்யும்.
கடந்த இருபது ஆண்டுகளில் வெட்டப்படும் தொகைக்கேற்ப பயன்பாடு மாற்றம் நடக்கும் என ஆகி விட்டதால் இடைத்தரகர்கள் பெருமளவு வளர்ந்து வந்தனர்.
இந்த இடத்தில் தான் வதேரா வருகிறார். அவரது ஸ்கைலைஃப் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் பயன்பாட்டு மாற்ற அனுமதி மறுக்கப்படும் இடங்களுக்கு தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அனுமதி பெற்று அதன் பிறகு நிலத்தை கூடுதல் விலையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்று விடும். நிறுவனங்கள் நேரடியாக அனுமதி கோரும் போது மறுக்கப்படுவதும், வதேராவின் நிறுவனத்துக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்த பிறகு ஒரு சில மாதங்களிலேயே அதே நிலத்தின் பயன்பாட்டு மாற்றம் வழங்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. உரிமத்தையும், நிலத்தையும் வதேரா ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றிக் கொடுத்து விடுவார்.
தரகர் ‘இனத்தின்’ முதன்மை இந்தியக் குடும்பம்.
இந்த பரிவர்த்தனையில் வதேரா சார்பில் பணம் ஏதும் முதலீடு செய்யப்படாமலேயே நிலமும், அதற்கான பரிவர்த்தனை பணமும் அவரது நிறுவனத்தின் சொத்தாக சில ஆண்டுகளுக்கு இருக்கின்றன. அது பற்றிய விபரங்களை அரசின் பத்திரப் பதிவுத் துறைக்கும், நிறுவனம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கும், நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவு கணக்கின் மூலமாக வருமான வரித் துறைக்கும் அனுப்பியுள்ளார்.
2005 முதல் இத்தகை நில பயன்பாட்டு மாற்றம் தொடர்பான ஊழல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக கடந்த ஆண்டு டி.எல்.எஃப் உடன் நடத்திய முறைகேட்டை அசோக் கெம்கா அம்பலப்படுத்தியுள்ளார்.
தொழில் துறையில் கொடிகட்டிப் பறக்கும் குர்கான் பகுதியில் உள்ள சிகோக்பூர் கிராமத்தில் உள்ள 3.53 ஏக்கர் நிலத்தை ஓங்காரேஸ்வரர் நிறுவனத்திடமிருந்து வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மார்ச் 12, 2008-ல் வாங்குகிறது. வாங்கியதற்கான பதிவுப்பத்திர எண் 4928-ல், நிலத்தின் விலைக்காக கொடுத்தாக காட்டப்பட்டிருந்த கார்ப்பரேசன் வங்கியின் காசோலை (செக்) எண் 607251 வதேராவுடன் சம்பந்தப்பட்டதே இல்லை. 7.95 கோடி ரூபாய் கைமாறியதாக பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஸ்கைலைட், ஓங்காரேஸ்வரர் நிறுவனங்களுக்கிடையில் உண்மையில் பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை. அதாவது, காங்கிரசு அமைச்சரின் ஓங்காரேஸ்வரர் நிறுவனம் தனது எஜமான் வீட்டு கன்றுக்குட்டிக்கு சும்மா தூக்கிக் கொடுத்த நிலம்தான் என்பதை பதிவுகள் நிரூபிக்கின்றன.
நேரு குடும்ப மருமகன் முன்பு சட்டங்கள் கை கட்டி நிற்கும்.
அப்படியானால் வதேராவுக்கு இது அன்பளிப்பாக தரப்பட்டதாக அர்த்தம். அதற்கான சிறப்பு வருமான வரியை வதேரா முறைப்படி கட்டியிருக்க வேண்டும். விற்பனை என்ற பெயரில் பதிவு செய்த இம்மோசடியில் முத்திரைத்தாள் கட்டணத்தையும் (ஏறக்குறைய ரூ.45 லட்சம்) நிலத்தை விற்பவரே தந்திருப்பதாக காட்டியிருக்கிறார்கள். 2008 மார்ச் இறுதியில் ஆண்டு முடிப்பு கணக்கு வெளியிட்ட ஸ்கைலைட் நிறுவனம் தனக்கு வங்கி தரக்கூடிய தற்காலிக கடன் வசதி (ஓவர் டிராப்ட் தொகையின் வரம்பு) ரூ 7.5 கோடி என பதிவு செய்திருக்கிறது. அந்த கால கட்டத்தில் நிறுவனம் அந்த அளவுக்கு வணிகம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லாமலேயே வங்கி கடன் கொடுத்திருப்பதாக காட்டியிருக்கிறார்.
2008, ஜூன் மாதம் டி.எல்.எஃப். இந்த 3.53 ஏக்கர் நிலத்தை வதேராவிடமிருந்து ரூ.58 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறது. அப்போது நிலவிய சந்தை மதிப்பை விட இரு மடங்கு மதிப்பின் அடிப்படையில் பத்திரப்பதிவு நடந்தது. அதற்கு முன்தொகையாக ரூ 50 கோடி வதேராவுக்கு தரப்பட்டது. அப்பணத்திலிருந்து 7.92 கோடி ரூபாய் பணத்தை நிலம் வாங்கிய விலையாக ஓங்காரேஸ்வரர் நிறுவனத்திற்கு தருகிறார் வதேரா. அதாவது, வெறுங்கையில் நிலம் வாங்கி, அதை சுமார் 7 மடங்கு அதிக விலைக்கு விற்று கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தான் வாங்கிய விலையாக கொடுத்திருக்கிறார்.
டிஎல்எஃப் முதலாளி குஷல் பால் சிங்
ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நிலத்தை வணிக பயன்பாட்டுக்கானதாக மாற்றக் கோரி மாநில அரசின் நகர்ப்புற, கிராமப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் டி.எல்.எஃப் விண்ணப்பிக்கிறது. டிஎல்எஃப்புக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், நவம்பர் 2008-ல் தான் டி.எல்.எஃப் உடன் இணைந்து நிலத்தை வணிகத்துக்கு பயன்படுத்தப் போவதாக வதேரா விண்ணப்பித்தவுடன் அவரது நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கப்படுகிறது.
உரிமம் கிடைத்த பிறகு உடனடியாக நிலத்தை டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு மாற்றினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் காத்திருந்து 2012 ஏப்ரலில் உரிமத்தையும், செப்டம்பரில் மொத்த நிலத்தையும் டிஎல்எஃபின் பெயருக்கு மாற்றி உள்ளார் வதேரா.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் இப்படி மாற்றிக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் அரசின் நில அளவை மற்றும் புள்ளிவிபரத் துறையின் தலைவராக இருந்த கெம்காவுக்கு இது தொடர்பாக சந்தேகம் வரவே 2012 அக்டோபர் 8-ம் தேதி இம்முறைகேடு பற்றி விசாரிக்க துவங்குகிறார். அக்டோபர் 11-ம் தேதி அவருக்கு இடமாற்றல் உத்திரவு வருகிறது. டி.எல்.எஃப் உடனான வதேராவின் விற்பனை ஒப்பந்தத்தை விசாரணைக்குட்படுத்தி, நிலத்தின் பயன்பாட்டு மாற்ற உரிமத்தை ரத்து செய்து அக்டோபர் 15-ல் உத்திரவிடுகிறார் கெம்கா.
ஜமாய் ராஜா (மருமக ராஜா)
எதிர்க்கட்சிகளான லோக் தள் கட்சியும், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஊழலுக்கெதிரான அமைப்பும் போராட துவங்கிய பிறகு நிதித்துறை ஆணையர் க்ருஷண் மோகன், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலர் கே.கே.ஜாலன் ஆகியோரை உள்ளடக்கிய மூவர் விசாரணைக் குழு ஒன்றை மாநில முதல்வர் ஹூடோ அமைத்தார். ஊழல் நடைபெற்ற இரு துறையின் தலைவர்களும் விசாரணை நடத்துவார்கள் எனக் கூறிய காங்கிரசு முதல்வரின் இச்செயல் விசாரணை கமிசன்களின் யோக்யதையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவர்களும் வதேரா குற்றமற்றவர் என்றும், குற்றமே நடக்கவில்லை என்றும் கூறியதோடு, பரிவர்த்தனையை ரத்து செய்த அசோக் கெம்காவுக்கு சட்டமே சரியாக தெரியவில்லை என்றும், அவருக்கு உள்நோக்கம் இருந்ததாகவும் கூறி கெம்காவின் உத்திரவை ரத்து செய்து விட்டனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாதிகளாகவோ, பிரதிவாதிகளாகவோ, அல்லது குறைந்தபட்சம் சாட்சிகளாகவோ கூட முன்வராத நிலையில், தடையை நீக்க கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில், எதற்காக கமிசன் தானே முன்வந்து அவர்களது பரிவர்த்தனையை அங்கீகரித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்கிறார் கெம்கா. இது சாமான்ய மக்களுக்கு சாத்தியமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.
இதற்கிடையில் அர்விந்த் கேஜ்ரிவாலின் அமைப்பைச் சேர்ந்த நுதன் தாக்குர் என்பவர் வதேராவின் மோசடி பற்றி விசாரணைக்கு உத்திரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் அது தொடர்பான விபரங்கள் அரசு ரகசியம் என்று கூறி விபரங்களை தர மறுத்துள்ளது. அலகாபாத் குடும்பம் ஆட்டையைப் போட்டால் கூட அது அரசாங்க ரகசியம்.
பெரிய இடத்து தம்பதியினர் பிரியங்கா-வதேரா (தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுடன்).
தற்போது கெம்காவின் 100 பக்க ஆதாரங்கள் மற்றும் கேள்விகள் வெளியான பிறகு மாநில அரசின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அதற்கு பதிலளித்துள்ளார். “டிஎல்எப், ஸ்கைலேட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திடம் நிலம் வாங்கியது இரு தனிப்பட்ட நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை, அரசு எப்படி அதில் தலையிட இயலும்” என்றும், “எங்களது வேலை 1975-ம் ஆண்டு விதிகளின்படி உரிமம் வழங்குவதுதான். அதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.
“உரிமத்தை வதேராவின் நிறுவனத்தின் பெயரிலிருந்து டிஎல்எஃப்புக்கு மாற்றியதில் எந்த சட்ட மீறலும் நடக்கவில்லை. சட்ட நடைமுறைகளை கறாராக பின்பற்றி உள்ளோம்” என்றும், “தனியார் நிலம் வாங்குகையில் அரசுக்கு செலுத்தும் பல்வேறு கட்டணங்களை தாண்டி, அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டம் லாபகரமாக இருக்கிறது என்பதை மட்டுமே காரணம் காட்டி அது பொது நலனுக்கு எதிரானது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்றும், “அத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபம் அபிவிருத்தி உரிமம் வழங்கும் அரசுத் துறையின் வழிகாட்டலை மீறாமல்தான் ஈட்டப்படுள்ளது” என்றும், “வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் தான் நிறுவனத்தின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்றும், “அரசின் நிதியுதவி ஏதுமின்றி பொது, வணிக, குடியிருப்பு என ஒருங்கிணைந்த முறையில் தொழிற் பேட்டைகளை அமைக்க முடிகிறது என்பதை பார்க்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.
அதாவது, “சட்டப்படி நடக்கிறோம், தேசத்தை முன்னேற்றுகிறோம், எங்களது லாபத்துக்கு சரியாக வரி கட்டி விட்டோம், இதை விட முக்கியம் அரசே செய்ய வேண்டிய அடிப்படை கட்டுமான வசதிகளை நாங்களே ஏற்படுத்துகிறோம். அப்படியிருக்க ஏன் தேவையில்லாமல் ஊழலை பெரிது படுத்துகிறீர்கள்” எனக் கேட்கிறார். ஒரு முதலாளியின் மக்கள் தொடர்பு அதிகாரி பேசுவதை அரசு அதிகாரி பேசுவது போல படுகிறதா?
வேகமான ‘முன்னேற்ற’ப் பாதையில் வதேரா
கெம்கா ஹரியானாவில் 2005-ல் மட்டும் இது போல 21,000 ஏக்கர் வரை உரிமம் தரப்பட்டதாக கூறியிருப்பதைக் குறித்து, அதில் 8,000 ஏக்கர் மட்டும்தான் குர்கான் பகுதி போன்ற நகரப் பகுதிகளில் தரப்பட்டதாகவும், மீதி 13,000 ஏக்கருக்கான உரிமங்கள் சிறு நகரப் பகுதிகளுக்கு தரப்பட்டதாகவும், இவற்றை ஒரே மாதிரியாக கணக்கிட்டதால் தான் 3.5 லட்சம் கோடி ரூபாய்கள் இழப்பு என்று சொல்கிறார் என்றும் அரசு தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது. அரசு கணக்குப்படியே பார்த்தால் கூட 8,000 ஏக்கருக்கு 1.13 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதுடன் கூடவே, மீதமுள்ள 13,000 ஏக்கருக்கு குறைந்த விலையில் கணக்கிட்டால் கூட மொத்தம் எப்படியும் ரூ. 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுகிறது.
கடந்த ஆண்டு வதேராவுக்கு தாராளமாக கடன் கொடுத்த விவகாரம் வெளிவந்தபோது கைமாற்றப்பட்ட உரிமங்களை வாங்கிய கட்டுமான நிறுவனங்களும் நட்டமடைவதில்லை என்றுதான் டி.எல்.எஃப் கூறி வந்தது. அப்படியானால் வதேரா சூறையாடிய பணம் யாருடையது?
அதாவது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள டி.எல்.எஃப் போன்ற நிறுவனங்கள் வதேரா போன்ற இடைத்தரகர்களுக்கு பல கோடி ரூபாய் கமிஷன் கொடுத்த பிறகும் தாம் கட்டும் கட்டிங்களை நிறுவனங்கள், குடியிருப்புகள் போன்றவற்றுக்கு லாபம் வைத்து சந்தையில் விற்கின்றன. அவற்றை வாங்குவதற்கு நிறுவனங்களும், தனிநபர்களும் வங்கிகளை நாடி கடன் வாங்குகிறார்கள். இதன் மூலம் சாதாரண மக்களுக்கு நிலத்தின் விலையும், வீட்டு விலையும் அதிகரிப்பதோடு, கட்டுமானத் துறைக்கான வங்கிக் கடன்கள் வதேரா போன்ற தரகர்களின் லாபத்துக்கு உரம் போடுவதாகவும் முடிகின்றன.
ஊழலை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா அத்துறையில் 80 நாட்கள் மட்டுமே பணியாற்றினார். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி குறைந்தபட்சம் ஒரு பதவியில் இரு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இதில் மீறப்பட்டிருக்கிறது. 80 நாட்களில் அவர் கண்டறிந்த நில பேர ஊழல்களில் பலவும் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு பற்றியதாகவும், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் பற்றியதாகவும் தான் பெரும்பாலும் இருந்தன. அதன் பிறகு பணியிட மாற்றம் செய்யப்பட்ட காலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விவசாய இடுபொருள் மற்றும் ரசாயன உரத்தை வாங்குவதில் இருந்த அமெரிக்க நிறுவனத்தின் லாபியை அம்பலப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் அவரது தீர்வு சிறிய அரசு மானியங்களையே ஆதார் அட்டை மூலமாக கண்காணிக்க முடியுமானால் பெரிய பணப் பரிமாற்றம் பற்றி ஏன் கண்காணிக்க முடியாது என கேள்வி எழுப்புவதாகத்தான் முடிகிறது.
இவ்வாறாக 2G ஊழல், நிலக்கரி ஊழல் இவற்றை எல்லாம் மிஞ்சி இந்திய ஊழல் வரலாற்றில் ஒரு தனிநபர் அடித்த தொகையில் முதலிடத்தை ராபர்ட் வதேரா தட்டிச் செல்கிறார்.
சட்டப்படி ராபர்ட் வதேரா குற்றவாளி இல்லை. ஏனென்றால் அவர் செய்த தரகு வேலை என்பது புதிய பொருளாதாரத்தின் சேவைத்துறை சார்ந்த தொழில். அதாவது நீரா ராடியா நடத்தியது போல கன்சல்டன்சி. என்ன ஒரே ஒரு வித்தியாசம் என்றால் வதேரா நடத்தியது கன்சல்டன்சி உடன் இணைந்த ரியல் எஸ்டேட் என்ற டூ இன் ஒன் பிசினஸ் (இரண்டில் ஒன்று வணிகம்). இதுவும் சட்டப்படி தவறு இல்லை. எனவே இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூட யாராலும் பதிவு செய்ய முடியாது. வதேராவை சட்டத்தின் முன் குற்றவாளியாகக் கூட நிறுத்த முடியாது. அப்படி ஒருவேளை அரசியல் அழுத்தங்கள் ஏற்பட்டால் முத்திரைத்தாளில் நடந்த மோசடிக்காக வேண்டுமானால் சில கோடிகளை அபராதமாக விதிக்கலாம் அல்லது நிரூபிக்கப்படும் பட்சத்தில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கலாம்.
ராஜஸ்தானிலும் இதுபோல மாநில காங்கிரசு அரசு ஏழை மக்கள் 722 பேருக்கு இலவசமாக வழங்க வைத்திருந்த நிலத்தை வதேராவுக்கு பட்டா போட்டு விட்டதாக குற்றச்சாட்டை பிஜேபி முன்வைத்துள்ளது. காங்கிரசு ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்த வகை ஊழல் வதேராவால் நடத்தப்பட்டிருக்கின்றது என்று பாராளுமன்றத்தில் பாஜக-ன் யஸ்வந்த் சின்ஹா கூறியிருக்கிறார். கூடவே எந்த பிசினஸ் பள்ளியிலும் படிக்காமலேயே லட்சம் கோடிகளில் எப்படி சம்பாதிக்க முடியும் என கற்றுத் தந்திருக்கிறார் என நக்கலடித்திருக்கிறார். இதைவிட அதிசயம் குர்கான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரசின் இந்தர்ஜித் சிங், வதேரா மீது சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரியிருப்பது காங்கிரசு வட்டாரத்திலேயே பீதியைக் கிளப்பி வருகிறது.
லைசான் ஆபீசர்கள் (ஒருங்கிணைப்பு அதிகாரிகள்) என டெல்லி தெற்கு பிளாக்கில் (பிரதமர் அலுவலகம்) பல பேர் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அதாவது நம்ம ஊர் ஆர்டிஓ ஆபீசு தரகர் நமக்கு செய்வது போல அம்பானிக்கும், டாடாவுக்கும், பிர்லாவுக்குமாக நிற்பவர்கள். இவர்கள் எல்லாம் நிறுவனத்தின் சம்பளத்துக்கும், சொற்ப கமிசனுக்கும் குழைபவர்கள். வதேரா அடுத்த கட்டத்திற்கு வருகிறார். இங்கு கமிசன் அதிகம். தரகர் சொந்தமாக அலுவலகம் வைத்திருப்பார். தொழிலதிபர்களும், தொழில் முனைவோர்களும் அவரிடம் வந்து குழைந்து கொண்டிருப்பார்கள். ராடியாவின் அடுத்தக் கட்ட வளர்ச்சி தான் ராபர்ட் வதேரா.
எது எப்படியோ நேரு பரம்பரை என்பது பராம்பரிய பணக்காரர்கள் பரம்பரை என்பதையும் அந்த பாரம்பரியத்தின் இரகசியம் என்ன என்பதையும் வதேரா நிரூபித்து விட்டார்.
இன்றைக்கு வெங்காய விலை என்ன ? என்று கேட்பதுதான் பெரும்பான்மை மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை அவர்களே உரசிப் பார்க்கும் அளவுகோல். சத்தான உணவோ, காய்கறிகளோ கிடைக்காமல் போனால் கூட சாதாரண மக்கள் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் வைத்து ஒரு ரூபாய் ரேசன் அரிசியைப் பொங்கி நாளை ஓட்டி விடுவார்கள். ஆனால் அந்த வெங்காயத்தின் விலையோ கடந்த வாரம் கிலோவுக்கு ரூ 80 வரை உயர்ந்து தற்போது ரூ 100-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உரிக்கும்போது வரும் கண்ணீரை விட விலையை கேட்கும் போது வருவதாக அனைத்து ஊடகங்களும் ஒன்று போல தெரிவிக்கின்றன.
1998-ல் டெல்லி யூனியன் பிரதேச தேர்தலில், ஆட்சியிலிருந்த பாஜக வை மண்ணைக் கவ்வ வைத்த வெங்காய விலை உயர்வை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். (அதனால்தானோ என்னவோ டெல்லியிலுள்ள அரசு விற்பனையகங்களில் கிலோ வெங்காயம் ரூ 50-க்கு விற்கப்படுகையில், கிலோ ஒன்றுக்கு ரூ 25 என வெங்காய விற்பனையை பாஜக துவங்கி உள்ளது).
இன்று வெங்காய உற்பத்தியானது கனமழை மற்றும் ஏற்ற இறக்கம் நிறைந்த கொள்முதல் விலையினால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஏற்றுமதிக்கு நாட்டின் கதவு தாராளமாக திறந்து விடப்பட்டுள்ளதாலும் வெங்காய விலை ஏற்றம் நடக்கிறது. உள்நாட்டு சந்தையின் தேவையை விட மிகவும் குறைவான அளவே வெங்காய வரத்து இருப்பதால் விலை அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை வெங்காயத்தை அழுகச் செய்துள்ளது. வெங்காய மொத்த வியாபாரிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதனை பதுக்கவும் செய்கின்றனர்.
வெங்காயம் ஒரு குறுகிய காலப் பயிராகும். வெங்காய சாகுபடிக்கு குறைந்த அளவே நீர் தேவைப்படுகிறது. பெரிய அளவில் வேலைகளைக் கோராத வெங்காய பயிரிடலில் 60 முதல் 90 நாட்களுக்குள் விளைச்சலை எடுத்து விடலாம். ஆனால் அதற்கு பிறகு அதனை பக்குவமாக சேமிப்பது என்பது மிகவும் வேலை பிடிக்க கூடியது. வெங்காயம் மற்றும் தக்காளி போன்றவற்றின் விலை நிலையற்றதாக இருப்பதால் விவசாயிகள் இதனை பெரும்பாலும் பயிர் செய்ய விரும்பவதில்லை. தமிழகத்தின் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஓரளவு பயிர்செய்யப்பட்டாலும் தமிழகத்தின் 80 சதவீத வெங்காயத் தேவையை பூர்த்தி செய்வது மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டம்தான். ஏறக்குறைய இந்திய தேவையான ஆண்டுக்கு 100 லட்சம் டன் வெங்காயத் தேவையில் கால் பங்கு இங்கிருந்துதான் செல்கிறது. 2002-ல் அரசு இந்த மாவட்டத்தை திட்டமிட்டரீதியில் வெங்காய விவசாயத்திற்காக தேர்வு செய்தது.
அம்மாவட்டத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏறக்குறைய 400 சதுர கி.மீ பரப்பளவில் வெங்காயம் விளைகிறது. அங்கு ஜனவரி முதல் மே மாதம் வரையிலும், மத்திய பிரதேசத்தில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் செப்டம்பர் வரையிலும் சாகுபடி செய்யப்படும் வெங்காயம் இந்தியா முழுக்க செல்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக வெங்காய கொள்முதல் விலை கட்டுபடியாகாத காரணத்தால், இந்த ஆண்டு நாசிக் மாவட்டத்தில் வேறு பயிர்கள் மற்றும் கனிகள் உற்பத்திக்கு விவசாயிகள் மாறி விட்டனர். குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் கேசார் மாம்பழ விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.
கூடவே கடும் வறட்சியும், விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடும் வெங்காய விளைச்சலை கடுமையாக பாதித்தன. விளைந்து வந்த வெங்காயத்தை சமீபத்தில் பெய்த கனமழை அழுகச் செய்யவே சந்தைக்கு வரத்து குறைந்து, விலை கடுமையாக உயர்ந்தது. கர்நாடகாவில் சித்திரதுர்கா பகுதியிலிருந்து இந்த ஆண்டு வர வேண்டிய 50 லட்சம் மூட்டைகளில் பாதியளவே தமிழகத்திற்கு வந்துள்ளது என்கிறார் கோயம்பேடு மொத்த விற்பனையாளர் சங்க ஆலோசகர் வி.ஆர். சௌந்திரராசன்.
விலை உயர்வுக்கு மத்திய அரசு தாராளமாக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்த்தும் ஒரு காரணம் என்கிறார் அவர். 2010-ல் இப்படி அதீத ஏற்றுமதியால் உள்நாட்டுத் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பிறகு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்து சரி செய்தோம் என்கிறார். பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டிருப்பதும் வெங்காய விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்றாலும், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் மட்டும் 7 லட்சம் டன் வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது சீனா, ஈரான், மலேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து நிலைமையை அரசு சமாளிக்க வாய்ப்பிருந்தாலும், அதற்கு அருகி வரும் அந்நிய செலவாணியை கொஞ்சம் இழக்க வேண்டியிருக்கும். ரூபாயின் மதிப்பு வேகமாக சரிந்து வருவதற்கு வெங்காய இறக்குமதியும் தன் பங்கிற்கு கொஞ்சம் அழவைக்கும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வின் காரணமாக பங்களாதேஷில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தின் விலையை டன் ஒன்றுக்கு 400 டாலரில் இருந்து 650 டாலர் வரை உயர்த்தி விட்டனர். இதனால் அந்நாட்டு மக்களும் சொந்த தேவைகளுக்கு வெங்காயம் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் வெங்காயம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. பதுக்கலும் கணிசமாக இருப்பதால் செப்டம்பர் மாதம் ஆந்திரத்திலிருந்து வெங்காயம் வரத் துவங்குவதற்குள் பதுக்கல்காரர்கள் இருப்பிலுள்ள வெங்காயத்தை சந்தையில் விட்டு காசாக்கி விடுவர். அதன் பிறகு வரும் ஆந்திர விவசாயிகளின் வெங்காயம் அதிக வரத்து காரணமாக அடிமாட்டு விலைக்கு (அதாவது கிலோ ஒன்றுக்கு ரூ 10 வரை) கொள்முதல் செய்யப்படும்.
நாடு முழுக்க ஒரே சீரான கொள்முதல் நிர்ணய விலையை அரசு வெங்காயத்திற்கு நிர்ணயிக்கவில்லை. அதிகம் வெங்காயம் விளையும் நாசிக் பகுதியில் வெங்காயத்திற்கான கொள்முதல் விலை கடந்த மாதம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2400 வரை இருந்தது. ஆனால் உற்பத்தி 47.6 லட்சம் டன் (அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் 16% குறைவு) குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இப்போதுதான் கடுமையான விலை உயர்வு வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ளது.
வெங்காயம் விலை உயர்வு மற்றும் மிளகாய் விலை உயர்வு போன்றவை அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக ஏழை எளியவர்களை கடுமையாக தாக்கும் பிரச்சினை.
சரி, கூட்டிக்கழித்துப் பார்த்தால் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்ன? இதற்கு இயற்கை சதியோ இல்லை நுகர்வு பெருக்கோ காரணமல்ல. முதலாளித்துவ சந்தைதான் விலையை தீர்மானிக்கும் என்ற அராஜக நிலைமையே விலை உயர்வைத் தோற்றுவிக்கிறது.
ஓராண்டிற்கு இந்திய மக்களுக்கு எவ்வளவு வெங்காயம் வேண்டும், அதை எங்கெல்லாம் எப்போதெல்லாம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மையப்படுத்தப்பட்ட உற்பத்தியோ திட்டமோ இங்கில்லை. மாறாக மறுகாலனியாக்கத்திற்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யலாம், விலையை சந்தையின் கையில் அளிக்கலாம், உற்பத்தியை மாற்றலாம் என்று ஏராளமான அராஜக செயல்பாடுகள் வெங்காயத்தின் சருகுகளில் மறைந்துள்ளன.
இந்திய விவசாயத்தின் தற்போதைய நிலையும், போக்கும் பன்னாட்டு முதலாளிகளால்தான் தீர்மானிக்கப்படும் என்றான பிறகு நீங்கள் ஆம்லேட்டிற்கு வெங்காயத்தை எதிர்பார்க்க முடியாது.
மருத்துவர்களுக்கும் பரிசோதனை நிலையங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையேயான சட்டவிரோதமான உறவுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிகிச்சையின் தரத்தின் அடிப்படையில் இல்லாமல் கையாளும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மருத்துவர்களை மதிப்பிடுவது இத்தகைய சட்ட விரோத சிகிச்சை நடைமுறைகளை ஊக்குவித்து இந்த உறவுக்கு வலு சேர்க்கிறது. கேரளாவில் எனது சொந்த அனுபவமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் ஆரம்பத்தில் அமெரிக்காவிலும், பின்னர் பல ஆண்டுகள் கேரளாவிலும் மொத்தம் 40 ஆண்டுகளாக குழந்தை மருத்துவராக செயல்பட்டு வருகிறேன்.
கொச்சிக்கு அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தேன். அந்தப் பகுதியில் வசிக்கும் ஒப்பீட்டளவில் ஏழை வாடிக்கையாளர்களின் புற நோயாளி மற்றும் உள் நோயாளி தேவைகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் அங்கு இருந்தன. கவனமான மருந்தக சோதனைகள், வரம்புக்குட்பட்ட ஆய்வக சோதனைகள், குறைந்த பட்ச மருந்துகள், நியாயமான கட்டணத்தில் உள்நோயாளிகளை அனுமதிப்பது என்று நான் சேவை வழங்கி வந்தேன்.
இந்த நிலையில் மருத்துவமனையின் நிதிநிலையை ஆய்வு செய்ய எம்பிஏ படித்த ஒரு மேலாண்மை நிபுணர் வந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை, ஆய்வக பணிகள், எக்ஸ்-ரேக்கள், மருந்துகள், உள் நோயாளிகள் எண்ணிக்கை குறித்த தரவுகளை தனது கணினியில் திரட்டினார். மற்ற மருத்துவமனைகளில் இதே எண்ணிக்கையிலான நோயாளிகளை ஒப்பிடும் போது, நான் ஆய்வகம், எக்ஸ்ரே, மருந்தகம், மருத்துவமனை படுக்கை போன்றவற்றை குறைந்த அளவே பயன்படுத்துவதாக அவர் முடிவு செய்தார்.
அதாவது, எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; அதனால், என்னுடைய வணிக மாதிரி தவறானது; எல்லாவற்றையும் கணினி விரிதாள் தெளிவாகக் காட்டியது. மருத்துவமனையின் இயக்குனருடன் நான் இதைக் குறித்து பேசி முடிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மருத்துவத் துறையின் தார்மீக பொறுப்பு பற்றிய வாதங்கள், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தோற்றுப் போயின. அதற்குப் பிறகு நான் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறுவதற்கு அதிக காலம் பிடிக்கவில்லை.
எனது அடுத்த அனுபவம் அதே நகரத்தில் உள்ள இன்னும் பெரிய, இன்னும் புகழ்பெற்ற மருத்துவமனையில் நிகழ்ந்தது. நிர்வாகிகளுக்கு தெரிந்து அவர்களது சம்மதத்துடனோ அவர்களால் கண்டு கொள்ளாமலோ அங்கு நடப்பவற்றைப் பார்த்து நான் கடும் அதிர்ச்சியடைந்தேன். அற்பமான குழந்தை நோய்கள் கூட பல சோதனைகள், தேவையில்லாத சிகிச்சைகள், காரணமில்லாமல் மருத்துவமனை சேர்ப்புகள் தேவைப்படும் தீவிர பிரச்சனைகளாக வகைப்படுத்தப்பட்டன.
மெலிதான வைரஸ் காய்ச்சலும் சிறிது மூட்டு வலியும் வந்த குழந்தைகளுக்கு எந்த விதமான நெறிமுறைகளும் இல்லாமல், சோதனை மூலம் உறுதி செய்து கொள்ளாமல் கடுமையான எலும்புக் காய்ச்சல் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. சாதாரணமான வைரஸ் காய்ச்சலும் இருமலும் வந்த குழந்தைகளுக்கு எந்த விதமான ஆதாரங்களும் இன்றி காச நோய் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. பல மாதங்களுக்கு, பல ஆண்டுகளுக்குக் கூட தேவையற்ற, தீங்கு விளைக்கக் கூடிய எக்ஸ்-ரேக்களுக்கு அந்த குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். அவ்வப்போது இருமல் வரும் பல குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதாக முடிவு செய்யப்பட்டு தேவையில்லாத மருந்துகள் கொடுக்கப்பட்டன.
இந்தக் குழந்தைகளுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை என்றும் அவர்கள் மருத்துவமனைக்கு இனிமேல் வர வேண்டிய தேவை இல்லை என்றும் பெற்றோர்களை ஏற்றுக் கொள்ள வைப்பதே பெரும்பாடாக இருந்தது.
உண்மையிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களை முறை கேடாக கையாண்டது ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தேவையற்ற சிகிச்சைகள் வழங்குவதை விட மோசமான ஒன்று. குழந்தைகளுக்கான மிதமான மற்றும் தீவிரமான ஆஸ்துமாவிற்கு உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிகிச்சை ஸ்டீராய்டுகளை மூக்கு வழியாக சுவாசிப்பதுதான். ஆனால், அத்தகைய பல குழந்தைகள், “கடுமையான ஆஸ்துமா” தாக்குதல்களுக்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அறிந்து நான் வியப்படைந்தேன். நான் ஸ்டீராய்ட் சுவாசிப்பை பரிந்துரைத்த பிறகு பெரும்பாலான குழந்தைகளின் நிலைமை மேம்பட்டு ஆஸ்துமா தாக்குதல்கள் குறைந்தன. அதன் விளைவாக வெளி நோயாளிகளாக வருபவர்கள் குறைந்து, உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.
இத்தோடு இந்த மருத்துவமனையிலும் எனது நாள் குறிக்கப்பட்டு விட்டது.
குறைவான சோதனைகள், மருந்துகள் என்று குழந்தைகள் முன்பை விட ஆரோக்கியமாக வாழ்ந்தாலும், மருத்துவமனைக்கு வருமானம் குறைந்ததால் நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. கூடுதல் வருமானத்திற்கான தேவை, எனது தார்மீக பொறுப்பு பற்றிய அக்கறையை மீண்டும் ஒரு முறை முறியடித்தது. நான், இந்த மருத்துவமனையை விட்டு வெளியேறவும் அதிக காலம் பிடிக்கவில்லை.
மருத்துவர்களின் திறமையை, அவர்கள் வழங்கும் சேவையின் தரத்தை வைத்து இல்லாமல் அவர்கள் பார்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடுவது அவர்களது தார்மீக கடமையை அச்சுறுத்துலுக்கு உள்ளாக்குகிறது. எந்த வழியிலாவது லாபத்தை அதிகரிப்பது என்ற அணுகுமுறையின் இன்னொரு வெளிப்பாடு இது. பெருநிறுவன மருத்துவமனைகளில் மட்டுமின்றி, தர்மம்தான் தமது முக்கிய நோக்கம் என்று அறிவித்து செயல்படும் அறக்கட்டளை மருத்துவமனைகள் என்று சொல்லப்படுபவற்றிலும் இதே நிலைமைதான்.
– மருத்துவர் அலெக்ஸ் மாத்யூஸ், அமெரிக்க குழந்தை மருத்துவ வாரியத்தின் பட்டயப் படிப்பு படித்தவர்.
தவறானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன் வைத்து சரியான கொள்கைகளை ஆதரிக்குமாறு கோரினால் தவறானவர்களை தண்டித்த அநீதியான நடவடிக்கையே மேல் என்று மக்கள் முடிவு செய்யக் கூடும்.
சான்றாக ஊர் மக்கள் பலரை கொன்று போட்ட ஒரு நாடறிந்த ரவுடியை ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக போலி மோதலில் போலிஸ் கொல்கிறது. பொதுவில் போலி மோதலை எதிர்ப்பது வேறு, இந்த ரவுடியின் ஜனநாயக உரிமையை முன் வைத்து எதிர்ப்பது வேறு. பின்னதை நாடினால் மக்கள் பாசிசமே மேல் என்று முடிவு செய்வார்கள். எனவே சாதாரண மக்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயகவாதிகள், புரட்சியாளர்கள் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை வைத்தே போலிசின் காட்டுமிராண்டி தர்பாரை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் போலிசு குறித்த உண்மையை உணர வைக்க முடியும்.
தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திருக்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா?
தற்போது ‘தலைவா’ படப் பிரச்சினையை முன் வைத்து சிலர் ஜனநாயக உரிமை பேசுகிறார்கள். சினிமா எனும் முதலாளிகளின் தொழிலை முன் வைத்துதான் ஒரு நாட்டின், சமூகத்தின் ஜனநாயக உரிமை பேசப்படும் என்றால் அந்நாட்டில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே உரிமை இல்லை என்று பொருள். அதன் பொருட்டே சிட்னி நகரில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிடுவதற்கு கருத்துரிமை இல்லை என்று பேச முடிகிறது. விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் நம் பார்வைக்கு வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளம் என்றால் இப்பேற்ப்பட்ட கருத்துரிமையே நமக்கு வேண்டாம்.
விஜயை பிடிக்கவில்லை என்றாலும், அவரது அசட்டுத்தனமான படங்களை விரும்பவில்லை என்றாலும் அவரது படத்தை வெளியிடும் ஜனநாயக உரிமை அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்த கருத்துரிமைக் காவலர்கள் சீறுகிறார்கள். இதனால் விஜயை ஆதரிக்கிறேன், தலைவா படம் வெளியிடப்பட வேண்டும் என்று இணையத்தில் பிரச்சாரமும் செய்கிறார்கள். சரி இவர்களுக்காக இவர்களே உருவாக்கி வைத்திருக்கும் வாத வழிப்படியே கருத்துரிமையின் இலட்சணத்தை புரிய வைப்போம்.
முதலில் விஜயின் தலைவா படம் ஏன் வெளியிட முடியவில்லை? அதற்கு, ஜெயலலிதாவின் தலைமையில் உள்ள தமிழக அரசுதான் காரணம் என்பது உலகறிந்த விசயம். அதை நாமும் மறுக்கவில்லை. இந்த மறைமுகத் தடைக்கு என்ன காரணம்? அது ஏதோ தனிப்பட்ட ஈகோ சார்ந்த காரணங்கள். இருக்கட்டும். இந்நிலையில் விஜயை ஆதரிப்போர் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசை எதிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் தமிழக அரசை எதிர்க்க முடியுமா? இல்லை அவர்கள் தரும் ஆதரவை நடிகர் விஜய்தான் பயன்படுத்திக் கொள்ள முடியுமா?
முதலில் தன் படத்தை தமிழக அரசுதான் மறைமுகமாக தடை செய்திருக்கிறது என எங்கேயாவது விஜய் சொல்லியிருக்கிறா? இல்லை அவரது தந்தை, தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பினர்தான் சொல்லியிருக்கிறார்களா? இல்லையே! உயிரோடிருப்பவன் செத்துவிட்டான் என்று சொல்லி எப்படி ஐயா அழ முடியும்? அவர்கள் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, என்ன சொன்னார்கள் என்பதும் முக்கியம்.
தலைவா படப் பிரச்சினைக்காக விஜய் தரப்பு கொடநாட்டிற்கு சென்று ஜெயாவை பார்க்க முடியவில்லை. பிறகு ஜெயா சென்னை திரும்புகிறார் என்றதும் அடித்துப் பிடித்து, “அம்மா ஆட்சியின் மகிமைகள்” என்று விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டாரே! அது ஏன்? ஜெயலலிதா எப்படி மறைமுகமாக தடை செய்திருக்கிறாரோ அது போல விஜயும் செய்த பாவத்துக்கு மன்னியுங்கள் என்று மறைமுகமாக இறைஞ்சுகிறார். இப்படி அவர்களது சண்டையும், மன்னிப்பும், சமாதானமும் அந்தரங்க, கிசுகிசு, மறைபொருள் வழியில் இருக்கும் போது இங்கே ஜனநாயக உரிமைக்கு எங்கே இடம்?
வெளிப்படையாக இருப்பது உண்மையான ஜனநாயகத்தின் விதிகளில் ஒன்று. மறைமுகமாக பேசுவது என்பது சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் முதலாளிகளுக்கு உரியது. விஜய் தரப்பினர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது கூட தமிழக அரசை திட்ட முடியாதவர்கள். ஆனால் திட்டும் விருப்பம் உள்ளவர்கள். அதனாலேயே வெளிப்படையாக தினமும் அம்மா பஜனையை செய்து வருபவர்கள். அதிலும் நடிகர் விஜய், புரட்சித் தலைவியின் சாதனைகளை பட்டியல் போட்டு தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக வைத்திருக்கிறார் என்று தீர்ப்பே அளித்து விட்டார். இப்பேற்பட்டவரை யாரய்யா ஆதரிக்க முடியும்?
ஒருவேளை விஜய் வெளிப்படையாக பேச இயலாத சூழ்நிலையில் இருக்கிறார், அதனால்தான் இப்படி சரணடைந்து பேசுகிறார் என மேற்கண்ட கருத்துரிமைக் காவலர்கள் சொல்லக்கூடும். சரி, அவர் என்ன ‘அல்கைதா’வின் பணையக் கைதியாகவா இருக்கிறார்? ஏன் வெளிப்படையாக பேச முடியவில்லை? விஜயின் ரசிகர்கள் கூட அப்படி வெளிப்படையாக பேசக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப உத்தரவாகவே போட்டு வருகிறார்களே அது ஏன்? தன்னால்தான் முடியவில்லை என்றால் மற்றவர்களை வைத்துக் கூட பேச முடியாதபடி உங்களை யார் பிடித்து வைத்தது?
“வடிவேலுக்கு நடந்தது போல விஜய்க்கும் நடக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரமாட்டார்கள், இது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்”
சில இடங்களில் விஜய் ரசிகர்கள் இருக்கும் உண்ணாவிரதத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று விஜய் தரப்பு போலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று பதிவு செய்கிறது. ஏனிந்த பயம்? இத்தனைக்கு பிறகும் அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்க வில்லை என்பதால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் காமரா முன்னால் கண்ணீர் விட்டு வேறு பார்க்கிறார். படம் வெளியாகவில்லை என்றால் இவர் நடுத்தெருவுக்கு வந்துவிடுவாராம். இதென்ன சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் வேலை, வசதிகளை இழந்து வாடுபவர் போலவா?
இந்த தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டும் என்று யாராவது அழுதார்களா? இல்லை 50 கோடி தயாரிப்பில் விஜய் விரலை அசைத்து பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்று எவராவது தவமிருந்தார்களா? ஏதோ சமூகத்திற்கு மாபெரும் சேவை செய்வது போலவும், அந்த சேவை நிறுத்தப்பட்டது போல அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் இவர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ‘நன்றாக’ நடிக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். இல்லையென்றால் இந்த சமூக சேவகர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த தலைவா படத்திற்கு விஜயுக்கு கருப்பும் வெள்ளையுமாக எவ்வளவு கொடுத்தார் என்ற உண்மையையாவது சொல்ல முடியுமா? அவருக்கு கடன் கொடுத்தவர்கள் கருப்பில் எவ்வளவு கொடுத்தார்கள் என்று சான்றிதழைத்தான் காட்ட முடியுமா?
இல்லை பாடல் உரிமை, சாட்டிலைட் உரிமை, தமிழகம் தவிர்த்த ஏனைய ரிலீஸ் இவற்றில் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை சொல்வாரா? இத்தனை கோல்மால் இருந்தும் இவர்கள் அழுகாச்சி புராணத்தின் மூலமாவது ஏதாவது சிம்பதி கிடைக்குமா என்று வெறியுடன் அலைகிறார்கள். இடையில் விஜய் தரப்பு, தலைவா படத்தை வெளியிடக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி. அதுவும் போலிஸ் அனுமதி கொடுத்தால், தானும் கலந்து கொள்வதாக விஜய் தெரிவித்திருக்கிறாராம். ஏன் அனுமதி கொடுக்க வில்லை என்றால் மீறி இருக்க மாட்டீர்களா? அப்படி இருந்தால் கைது செய்வார்கள் என்று பயமா?
முதலில் அந்த உண்ணாவிரதம் யாரை எதிர்த்து? தலைவா படத்தை யார் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமலேயே யாரை எதிர்த்து இந்த அறப் போராட்டம்? ஒருவேளை சத்யம் திரையரங்க புரஜெக்டர் எந்திரம்தான் எங்கள் தலைவா படத்தை டிஸ்பிளே செய்ய மறுக்கிறது என்றாவது சொல்லித் தொலையுங்களேன்! உங்களது ஜனநாயகப் போராட்டத்தின் தரம் என்ன என்பதை இதற்கு மேலும் விளக்கினால் அந்த ஜனநாயகமே அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஓடிவிடும்.
சரி, விஜய்தான் சூழ்நிலைக் கைதி நாங்கள் களத்துக்கு வருகிறோம் என்று ஏனைய நாயகர்கள் எவராவது களத்திற்கு வந்தார்களா? வெந்த ஸ்டார், விளக்கெண்ணை ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொள்வதில் உள்ள வீரம் இங்கே ஜெயாவை எதிர்ப்பதற்கு ஏன் வரவில்லை? ரஜினி, கமல், அஜித், சிம்பு, எல்லாரும் வம்பு எதற்கு என்று ஏன் ஒளிய வேண்டும்? கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு சினிமாக்காரனுக்கு இன்னொரு சினிமாக்காரனே போராட மாட்டான் என்றால் மக்கள் மட்டும் என்ன எழவுக்கு போராட வேண்டும்? விஜயை ஆதரிக்கும் அப்பாவிகள் பதில் சொல்லட்டும்.
ஜெயலலிதா நினைத்தால் ஒரு படத்தைக்கூட வெளியிட அனுமதிக்க மாட்டார், வடிவேலுக்கு நடந்தது போல விஜய்க்கும் நடக்கும், அவரை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரமாட்டார்கள், இது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றெல்லாம் இதற்கு பொழிப்புரை போடுகிறார்கள்.
இங்கேதான் மீண்டும் அந்த கேள்வியை நினைவுபடுத்துகிறோம். சினிமா வழியாகத்தான் உங்களுக்கு ஜனநாயக உணர்வும் அதன் உரிமை குறித்த கவலையும் நினைவுக்கு வருமா? அதுவும் தலைவா படத்தை எந்தப் பிரச்சினையுமின்றி அனுமதித்திருந்தால் ஜெயலலிதா மாபெரும் ஜனநாயகப் போராளி என்று இவர்களே நம்மிடம் சண்டைக்கும் வருவார்கள்.
“தலைவா படத்தை எந்தப் பிரச்சினையுமின்றி அனுமதித்திருந்தால் ஜெயலலிதா மாபெரும் ஜனநாயகப் போராளி”
கூடங்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்கு, தருமபுரியில் நேற்று போலி சுதந்திரம் என்று பிரசுரம் வினியோகித்த எமது தோழர்கள் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி சிறையிலடைப்பு, பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கி சூடு என்று ஜெயலலிதா இந்த ஆட்சிக் காலத்திலேயே தனது ஜனநாயக ரிக்கார்டுகளை ஏராளம் பதித்துத்தான் வைத்திருக்கிறார். ஆகவே நம்மைப் பொறுத்த வரை இந்த அரசு சர்வாதிகாரமாகத்தான் செயல்படுகிறது என்பதற்கு தலைவா படம் தேவையில்லை. அன்றாடம் நமது வாழ்க்கையிலேயே அதை சந்தித்து வருகிறோம்.
தமிழ் சினிமா என்பது கருப்பு பணத்தில் தயாரிக்கப்பட்டு, மக்களின் பணத்தை சட்டபூர்வ பிக்பாக்கெட் கொள்ளையுடன் ஓரிரு வாரங்களில் பறிமுதல் செய்யும் ஒரு அநீதியான தொழில். இதற்கு அரசும் உடந்தை என்பதும், அரசியல் கட்சிகள் சினிமா நட்சத்திரங்களை பிரபலம் காரணமாக தமக்கு பயன்படுத்திக் கொள்வதும், பதிலுக்கு சினிமா முதலாளிகள் கேளிக்கை வரி ரத்து, படம் வெளியாகும் போது டிக்கெட் விலைக்கு வரம்பில்லாமல் கட்டணம் வைக்கலாம் என்று சலுகைகள் பெறுவதும் கண்கூடு.
எனவேதான் தமிழகத்தில் அரசியல் விவாதம், உரிமைப் போராட்டம் அதிகம் நடக்காமல் மக்கள் மீது திணிக்கப்படும் சினிமாவில் வாரம் முழுவதும் கழிக்கிறார்கள். மக்களின் இந்த போதையை பயன்படுத்திக் கொண்டுதான், ரெண்டு சைக்கிள், மூன்று அயனிங் மிஷன், நான்கு தையல் எந்திரத்தை கொடுத்து விட்டு அடுத்த முதல்வர் என்ற எரிச்சலூட்டும் வரியை அலறவிடும் நட்சத்திரங்களின் ஊளையை அடிக்கடி எதிர்கொள்கிறோம்.
ஆகவே அதன் பொருட்டு அதாவது உண்மையான ஜனநாயகம் வளர விரும்புவோர் தலைவா படத்தில் இரண்டு தரப்பும் அடித்துக் கொள்வதை ஆதரிக்க வேண்டும். எத்தரப்பையும் ஆதரிப்பதோ இல்லை கருத்துரிமையின் பாற்பட்டு பேசுவதோ அபத்தம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமாவின் மாயையிலிருந்து விடுபடுவதும், பாசிச ஜெயாவின் அரசியலை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல. ஆளும் வர்க்கங்களுக்குள் சண்டை நடக்கும் போது நாம் அதில் ஒரு தரப்பை ஆதரிக்க முடியாது என்பது இங்கேயும் பொருந்தும். தலைவா படத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போர் எக்காலத்திலும் பாசிச ஜெயவை எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு எது ஜனநாயக உரிமை, எது கருத்துரிமை என்பதே தெரியாது.
இன்றைய தினமணியின் மூலையில் வந்த செய்தியொன்றை எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் தெரியவில்லை. மூலையில் வந்தாலும் இந்த செய்தியின் நாயகர்கள் அதிகார அளவில் மையத்தில் இருப்பவர்கள். செய்தி என்ன?
பச்சமுத்து (படம் : நன்றி தினமணி)
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் டி.ஆர் பச்சமுத்து, அதாவது புதிய தலைமுறை, வேந்தன் மூவிஸ் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் முதலாளி, ‘சுதந்திர’ தினமன்று கமுக்கமாக புதுதில்லி சென்றிருக்கிறார். இங்கே வேட்டி, பனியன், மண்வெட்டியோடு பிளக்ஸ் பேனரில் போஸ் கொடுக்கும் ‘உழைப்பாளி’ அங்கு விக்டோரியன் கோட்டு சூட்டு டை சகிதம் பாஜக தலைமை அலுவகம் சென்று தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்திருக்கிறார்.
இது ஏதோ காமோ சோமோ சந்திப்புதானே, இதற்கு என்ன முக்கியத்துவம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது சாதாரண சந்திப்பு அல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதால் பத்திரிகையாளர்களும் உடனே பச்சமுத்துவை சந்திருக்கின்றனர். புதுதில்லியில் இருக்கும் செய்தியாளர்கள் இத்தகைய சந்திப்புகளையெல்லாம் கவர் செய்யுமளவு அவலத்தில் உழலுகிறார்களா இல்லை இது உண்மையிலேயே ‘கவர்’ சம்பந்தப்பட்டதா தெரியவில்லை.
போகட்டும், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பச்சமுத்து உதிர்த்த கருத்துக்களைப் பார்ப்போம்.
இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன.
“இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளித்தது. இவ்விரண்டு கட்சிகளின் கொள்கைகளும், நோக்கங்களும் ஒன்றுதான்.
அக்டோபரில் நடைபெறவுள்ள, எங்கள் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அழைப்பதற்காக தில்லி வந்தேன்” இவைதான் பச்சமுத்து கூறிய கருத்துக்கள்.
பிறகு பச்சமுத்து அவர்கள் ஏதாவது நட்சத்திர ஓட்டல்களில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து கொடுத்தாரா என்பதெல்லாம் நாளிதழ்களில் வரவில்லை. ஆனால் இந்த செய்தியையெல்லாம் கவர் செய்வதற்கு விருந்து, மருந்து, வைட்டமின் ப அனைத்தும் அவசியம் என்பதை எந்த பத்திரிகையாளரும் மறுக்க மாட்டார்.
இனி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அகாலிதளம் வரிசையில் பச்சமுத்துவின் கட்சியும் வலம் வரலாம். இந்தக் கூட்டணியின் மேடைகளில் மற்ற தலைவர்களின் தோளோடு தோள் நின்று பச்சமுத்துவும் கை தூக்கி ஆசிர்வாத போஸ் கொடுப்பார். அது புதிய தலைமுறை வார இதழ் அட்டைப்படக் கட்டுரையாக வருமென்பதும் நிச்சயம்.
“என்ன இருந்தாலும் தமிழன்டா”
வயலில் மண்வெட்டியுடன் வேலை செய்யும் தமிழன் தில்லியில் தனது ‘திறமையால்’ புலிக்கொடி நாட்டிவிட்டான் என்று சீமான் கூட இதை ஆதரிக்கலாம். இந்த உறவை வைத்து தமிழ் ஈழத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டிருக்கும் சீனத்து அபாயத்தை அழித்து விடலாம் என்று அய்யா நெடுமாறன் உற்சாகம் பொங்க தினமணியின் நடுப்பக்கத்தில் எழுதும் கட்டுரையையும் எதிர்பார்க்கலாம். “என்ன இருந்தாலும் தமிழன்டா” என நிலைத் தகவல்கள் பேஸ்புக்கில் பேய் மழை போல பெய்யலாம். இந்த நேரத்தில் அறம் சிறுகதை தொகுப்பிற்கு எஸ்ஆர்எம் அறக்கட்டளை விருது வழங்கப்படுவதால், பச்சமுத்துவின் இலட்சியவாதம் – மண்டியிடாத அறம் எனும் காவியக் கட்டுரை ஜெயமோகனது தளத்தில் கண்டிப்பாக வெளியாகும். இவையெல்லாம் உப விளைவுகள்தான். நாம் முக்கிய விளைவுகளைப் பார்ப்போம்.
தமிழகத்தில் இந்தக் கூட்டணியின் மகத்துவம் என்ன? சரத்குமார் அல்லது டி. ராஜேந்தர் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு விகிதம் கூட நமக்கில்லையே எனும் அவலமான நிலையில் பாஜக இங்கே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் போன்ற கொலைகளை வைத்து ஏதும் கிளப்ப முயன்றாலும் அவை வாக்குகளாக மாறிவிடாது என்பது பாஜகவிற்கு தெரியுமளவுக்கு விருப்பமில்லாத உண்மைதான். ஆனால் மறுக்க முடியாத உண்மை.
மோடி ஜெயா நட்பை வைத்து ஏதாவது ஓரிரண்டு சீட்டுக்களை தேற்ற நினைத்தாலும் அம்மா தேர்தலுக்கு பின்புதான் ஏதாவது அருள் பாலிக்க முடியும் என்பதால் தேசியத் தலைமையே அடக்கி வாசிக்கிறது. திமுக, இடதுசாரிகள் கூட சேர முடியாது என்றால் மிச்சமிருப்பவர்கள் வைகோ, ராமதாஸ், சீமான்தான். இவர்களும் தேர்தல் நேரத்தில் அம்மா கூடவோ இல்லை ஐயா கூடவோ இரண்டு பேரும் துரத்தி விட்டால் தனியாகவோ நிற்க கூடும். அந்தத் தனிமையை போக்கும் விதத்தில் பாஜகவுடன் சேர வாய்ப்புண்டு. ஆனால் அது வாக்குப் பதிவுக்கு முந்தைய தினத்துக்கு முந்தின நாள்தான் தெரியும் என்பதால் பிரசாதம் கையில் விழுந்தும் நக்க முடியாத நிலையில் பாஜக இருக்கிறது.
பச்சமுத்து அவர்கள் அம்பானி வரிசையில் வருவார். மோடியின் கிச்சன் கேபினட்டிலும் நுழைவார்.
இப்பேற்பட்ட சதுரங்க ஆட்டத்தில்தான் பச்சமுத்து பாஜக கூட்டணி மகிமை மறைந்திருக்கிறது. இந்த கூட்டணி தமிழகத்தில் வெல்லாமல் போனாலும் வேறு கோணங்களில் ஆதாயங்களை நிறையவே அடையும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஒருக்கால் பாஜக கூட்டணி வென்று மோடி பிரதமரானால் என்ன நடக்கும்? இந்தியா முழுவதும் எஸ்ஆர்எம் கல்லூரிகள், போக்குவரத்து, குடிநீர், சினிமா, டிவி என அனைத்து தொழிலும் பச்சமுத்து அன் கோவினால் பரந்து விரிக்கப்படும். பிறகு பச்சமுத்து அவர்கள் அம்பானி வரிசையில் வருவார். மோடியின் கிச்சன் கேபினட்டிலும் நுழைவார்.
அதே போல தமிழகத்து பாஜகவிற்கு புதிய தலைமுறை டிவி, புதிய தலைமுறை வார இதழ் இரண்டும் கட்சிப் பத்திரிகை போல செயல்படும். மாவட்ட, மைய அளவில் உள்ள பாஜக தலைவர்களுக்கு எஸ்.ஆர்.எம் சீட்டுக்கள் கோட்டா முறையில் இலவசமாய் ஒதுக்கப்படும். தற்போது புதிய தலைமுறை பத்திரிகைக்கு சந்தா கட்ட நிர்ப்பந்திக்கப்படும் மாணவர்கள் இனி விஜயபாரத்திற்கும் (ஆர்.எஸ்.எஸ் வார இதழ்) கட்டுமாறு ‘அன்புடன்’ கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இப்படி பரஸ்பர ஆதாயம் இரு தரப்பிற்கும் ஏராளம் இருக்கின்றன.
இப்போதே டி.ராஜேந்தர் கட்சியோடு போட்டியிடும் தமிழக பாஜக தலைவர்கள் அனைவரும் முறை வைத்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தினமும் பேசும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள். இனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற ‘ஆய்வாளர்கள்’ அனைவரும் புதிய தலைமுறையை இந்து தலைமுறையாக மாற்றுவார்கள். இது போல வார இதழிலும் மாலன் அவர்கள் பிய்த்து உதறுவார். பச்சமுத்து தனது இந்திய நிறுவனங்களை மேற்பார்வையிட சொந்தமாக விமானமே வாங்குவார்.
அடுத்த மாதம் பச்சமுத்து கட்சியின் நான்காண்டு தொடக்க விழாவிற்கு ராஜ்நாத் சிங் வரும் போது இவையெல்லாம் டீலாக பேசப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில் எஸ்ஆர்எம் அறக்கட்டளை பாஜகவிற்கு அளிக்கும் தேர்தல் நன்கொடை கணக்கில் கொள்ளப்படாது.
ராஜ்நாத் சிங் – பச்சமுத்து சந்திப்பு. பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் இருக்கிறார்.
பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் கொள்கையும், நோக்கமும் ஒன்றுதான் என்று பச்சமுத்து கூறியிருப்பதுதான் முக்கியம். அதன்படி ராமர் கோவில், இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் வெறுப்பு, அமெரிக்க அடிமைத்தனம், மதவெறிக் கலவரங்கள், இந்து ராஷ்டிரக் கனவு அனைத்திலும் பச்சமுத்து ஒன்றுபடுகிறார். நடுத்தர வர்க்கத்தின் தாலியறுத்து அவர் சேர்த்திருக்கும் சில பல ஆயிரம் கோடிகள் கொண்ட தொழிலும் அப்படி தொழில் செய்யும் முனைப்பும் பாஜகவிற்கு பொருத்தமானவையே.
ஆகவே உண்மையை உடனுக்குடன் அளிக்கும் புதிய தலைமுறை டி.வி, வார இதழ் போன்ற காவி ஊடங்களை இனியும் நடுநிலைமையான ஊடகங்கள் என்று கருதப் போகிறீர்களா, இல்லை செருப்பால் அடிக்கலாம் தப்பில்லை என்பீர்களா?
இந்தியச் சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் பல்ஸர் பைக்குகளை உற்பத்தி செய்யும் பஜாஜ் தொழிற்சாலையில் 50 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் புதன் கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. புனேவின் சக்கன் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் ஜூன் 25 முதல் விஷ்வ கல்யாண் காம்கார் சங்கடனா என்ற தொழிற்சங்கத்தின் தலைமையில் நடந்த இந்த வேலை நிறுத்தம் 50 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆண்டுக்கு ஆண்டு வேகம் பிடிக்கும் பஜாஜின் உற்பத்தி நகர் மேடை (அசெம்ப்ளி லைன்) தொழிலாளர்களின் உயிரை உறிஞ்சுகிறது.
வேலை நிறுத்தத்தை நீக்கிக் கொள்ளா விட்டால் உற்பத்தியை வேறு இடத்துக்கு மாற்றி விடுவதாக மிரட்டி ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரு வாரக் கெடு கொடுத்த பஜாஜின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கெடு முடிந்ததும், அதை இன்னும் 4 நாட்களுக்கு நீட்டித்திருந்தார். இதற்கிடையில் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கத்துக்கும் இடையே பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
இந்து நாளிதழில் வெளியான அறிக்கையின்படி 2007-ம் ஆண்டு 42 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற வேகத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த அசெம்ப்ளி லைனின் (கார் உற்பத்தியின் அடுத்தடுத்த வேலைகளை தொழிலாளர்கள் வரிசையாக செய்ய உதவியாக நகரும் மேடை) வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அடுத்த 6 ஆண்டுகளில் 28 விநாடிகளில் ஒரு பைக் உற்பத்தி என்ற மட்டத்துக்கு வந்திருந்தது. இந்த கணக்குப் படி 8 மணி நேர ஷிப்டில் சுமார் 700 பைக்குகள் என்ற உற்பத்தி எண்ணிக்கை 1000 பைக்குகள் என்று அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் பைக்குகளின் உற்பத்தியையும் விற்பனையையும் கணிசமாக அதிகரித்து லாபம் சம்பாதிக்கிறது பஜாஜ். கடந்த 5 ஆண்டுகளில் (2008-09 முதல் 2012-13 வரை) பஜாஜ் நிறுவனத்தின் அனைத்து வகை வாகனங்களின் மொத்த விற்பனை மதிப்பு ரூ 9,423 கோடியிலிருந்து ரூ 19,488 கோடியாகவும் (சுமார் 2 மடங்கு) வரிக்குப் பிறகான நிகர லாபம் ரூ 656 கோடியிலிருந்து ரூ 3,044 கோடியாகவும் (கிட்டத்தட்ட 4.6 மடங்கு) அதிகரித்துள்ளது.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் உற்பத்தி அணியில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளியும், ஒரு நாளைக்கு 2007-ம் ஆண்டில் செய்ததைப் போல 150% வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார். இது தொழிலாளர்களின் உடல் நலத்திலும் வேலைச் சூழலிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அசெம்ப்ளி லைனில் கழிப்பறைக்கு செல்லவோ, தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ ஒரு தொழிலாளர் போகும் போது அவரது இடத்தில் வேலை செய்வதற்கான மாற்று தொழிலாளர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டது. 72 தொழிலாளர்கள் கொண்ட ஒரு தொகுப்புக்கு 7 மாற்று தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்ற வரையறையை 6,5,4 என்று குறைத்து 3 ஆக குறைத்து விட்டனர். இப்படி உழைக்கும் தொழிலாளர்களை சித்திரவதை செய்வது ஜப்பானிய கைசன் நிர்வாக முறை என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார் ராஜீவ் பஜாஜ்.
இதன் விளைவாக நேரத்துக்கு சிறுநீர் கழிக்காமல், தண்ணீர் குடிக்காமல் பலவிதமான நோய்கள் தொழிலாளர்களை தாக்க ஆரம்பித்தன. தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் 50 தொழிலாளர்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் கொடுத்து விட்டு கூடுதலாக அரை நாள் உழைப்பைத் திருடும் பஜாஜ் நிர்வாகத்தின் பயங்கரவாதத்த்தை எதிர் கொள்வதற்காக தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க முடிவு செய்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மகாராஷ்டிரா மாநிர தொழிலாளர் நலத் துறையின் மூலம் ஆக்ருதி தொழிற்சாலையில் செயல்பட்டு வந்த விகேகேஎஸ் தொழிற்சங்கத்தில் சக்கன் தொழிலாளர்களும் இணைந்தனர்.
2010-ம் ஆண்டு தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்ற பிறகு நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 12%, 8%, 8% ஊதிய உயர்வு என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கிடையில் உற்பத்தி வேகமாக்கலும், அதனால் தொழிலாளர் மீது ஏற்றப்படும் சுமையும் தொடர்ந்து அதிகரித்து வந்தன.
தொழிலாளர் வாழ்வை சூறையாடும் பஜாஜ் விற்பனை கட்டமைப்பு
ஆகுர்தி தொழிற்சாலை மூடப்பட்டதை தொழிற்சங்கம் எதிர்த்த போதும், 2012-ல் பந்த் நகரில் தொழிற்சங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளின் போதும் நிர்வாகம் தொழிற்சங்கத்தின் மீதான நிலைப்பாட்டை கடுமையாக்கியது. சட்டவிரோதமான எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது குறித்து தொழிற்சங்கம் தொழிலாளர் துறைக்கு புகார் அளித்திருந்தது. இவற்றால் பஜாஜ் முதலாளிகள் கடும் ஆத்திரம் கொண்டனர்.
கேட்பாரற்ற உழைப்புச் சுரண்டல் மூலம் அளவற்ற லாப வேட்டை நடத்தத் தடையாக நிற்கும் தொழிற்சங்கத்தை உடைப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்தனர். ஒப்பந்தப்படி 3-ம் ஆண்டுக்கான 8% சம்பள உயர்வை தராமல் இழுத்தடித்தனர். பணிச் சுமையை தாங்க முடியாமல் முறையீடு செய்து போராடிய தொழிலாளர்களை பழி வாங்க ஆரம்பித்தனர். 22 தொழிலாளர்கள், உற்பத்தியை குலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். வரம்புக்கு மீறி உழைக்க வைத்து, தொழிலாளர்களின் உடலையும், வாழ்நாட்களையும் குலைத்து வந்த முதலாளிகளுக்கு தண்டனை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மாறாக, கூடுதல் உற்பத்தி, கூடுதல் விற்பனை என்று கொழுத்து வந்த பஜாஜ் முதலாளிகளின் திமிர்தான் அதிகமாகி வந்தது.
தங்களது வாழ்க்கையை சிறுகச் சிறுக திருடுவதோடு நில்லாமல் சக தொழிலாளர்கள் 22 பேரை அநியாயமாக வேலை நீக்கம் செய்ததையும் கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தனர் தொழிலாளர்கள். கூடவே அதிகரித்து வரும் வேலைப் பளுவுக்கேற்ற நியாயமான ஊதியம் கோரியும், முதலாளி அப்படி கொடுக்க மறுக்கும் நிலையில் நிறுவனத்தின் பங்குகளை தொழிலாளர்களுக்கு வினியோகிக்கச் சொல்லியும் வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது
வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர மகாராஷ்டிரா தொழிலாளர் நலத் துறையின் உதவியுடன் பல முறை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்ட அனைத்து 21 ஊழியர்களும் வேலையில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் ஊதிய உயர்வு, பங்கு வழங்குதல் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் வலியுறுத்தியது. ஆனால், இருசக்கர வாகனங்களின் விற்பனை மந்தமடைந்திருந்த நிலையில் நிர்வாகம் திமிராக இந்த நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்க மறுத்தது.
தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலின் மூலம் வெளிவரும் பளபளக்கும் பைக்குகள்.
வேலை நிறுத்தத்தால் பாதிப்பு இல்லை என்றும் பயிற்சி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிலாளர்கள் உள்ளிட்ட 900 தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறார்கள் என்றும் சவடால் அடித்தது நிர்வாகம். 2,000 பைக்குகள் சக்கன் ஆலையில் தினமும் உற்பத்தி ஆவதாகவும், கூடுதல் 1,000 பைக்குகள் உற்பத்தியை பந்த்நகர் தொழிற்சாலைக்கு மாற்றியிருப்பதாகவும் சொன்னது. பல்சர், அவெஞ்சர், கேடிஎம் பிராண்டுகளின் 100% தேவையை நிறைவு செய்ய முடிகிறது என்று நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், இப்போது வேலை நிறுத்தத்தின் காரணமாக 20,000 பைக்குகள் விற்பனை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது.
இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக பிரச்சாரம் செய்து தொழிலாளர் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் முறியடிக்கவும் முயன்று வந்தது பஜாஜ் நிர்வாகம். ஆகஸ்ட் 12-க்குள் வேலைக்குத் திரும்பா விட்டால் பாதி உற்பத்தியை சக்கன் தொழிற்சாலையிலிருந்து மாற்றி விடப் போவதாக மிரட்டியிருந்தும் 12-ம் தேதி அன்று வேலை நிறுத்தம் முடிவுக்கு வராத போது காலக்கெடுவை நீட்டித்து தமக்கு லாபம் சொரியும் தொழிற்சாலையை தக்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டனர்.
இறுதியாக செவ்வாய்க் கிழமை தொழிலாளர்கள் நடத்திய கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இப்போது, விகேகேஎஸ் தொழிற்சங்கம் நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டுள்ளதாகவும், பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்றும் அடித்து விடுகிறார் ராஜீவ் பஜாஜ்.
இரண்டு மடங்கு விற்பனை அதிகரிப்பு, 4.5 மடங்கு லாப அதிகரிப்பு கிடைத்தாலும், தொழிலாளர்களின் நியாயமான ஊதிய கோரிக்கைகளை கூட நிறைவேற்ற மறுப்பதுதான் முதலாளித்துவ அறம். எல்லாப் பிரிவு தொழிலாளர்களும் தொழிலாளி வர்க்கமாக ஒருங்கிணைந்து மறுகாலனியாக்க அடக்குமுறையை எதிர்ப்பதுதான் முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துவதற்கு ஒரே வழியாகும். மாருதி மானேசர் முதல் பஜாஜ் சக்கன் வரை நடந்து வரும் உழைப்புச் சுரண்டலை முறியடிப்பதற்கு இதுதான் ஒரே வழி.
போராட்டம் இது போராட்டம்
மாணவர்களுக்கான போராட்டம்
வாத்தியார் கேட்டு போராட்டம்
வகுப்பறை கேட்டு போராட்டம்
hrpc போராட்டம், பெற்றோர் சங்கப் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்
வாத்தியார போடு வாத்தியாரபோடு
தமிழக அரசே வாத்தியாரபோடு
அரசுப்பள்ளிகளில் வாத்தியார போடு
வகுப்பறை கட்டு வகுப்பறைகட்டு
தமிழக அரசே வகுப்பறை கட்டு
மரத்தடியில் மாணவர்கள்
உடனடியாக வகுப்பறை கட்டு
நூலகம் இல்லை, மைதானம் இல்லை
பந்தும் இல்ல, பி.டியும் இல்லை
மயக்கம் ஏன்? மயக்கம் ஏன்?
கல்வி துறையே மயக்கம் ஏன்?
வாத்தியார் இல்லை வகுப்பறை இல்லை
நூலகம் இல்லை நூலும் இல்லை
ஆரம்பப்பள்ளியும் ஆடிக்கிடக்குது
கிராமப்பள்ளியும் கிடந்து தவிக்கிது
அனுமதியோம் அனுமதியோம்
தனியாருக்கு தாரைவார்க்கும்
அரசுப்பள்ளிகளை அழிக்க நினைக்கும்
தனியார்மயத்தை அனுமதியோம்.
முறியடிப்போம் முறியடிப்போம்
அரசுப்பள்ளிகளை அழிக்க வரும்
தனியார்மயத்தை முறியடிப்போம்.
சுதந்திரதின கொண்டாட்டமா
60 ஆண்டு பெருமை பேசுறான்
குடிநீருக்கு வழியில்ல
சிறுநீருக்கும் வழியில்ல
மரத்தடியில் மாணவர்கள்
மதிய உணவில் பல்லி கிடக்குது
யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்
சாராயம் வித்த பொறுக்கி யெல்லாம்
கல்வி வள்ளல் ஆகிட்டான்
கல்வி கொடுத்த அரசாங்கம்
சாராயம் விக்கிது சாராயம் விக்கிது
துணை போகுது துணை போகுது
தமிழக அரசே துணை போகுது
தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையை
பாதுகாக்க துணை போகுது
தமிழக அரசே துணைபோகுது
முறியடிப்போம் முறியடிப்போம்
அரசுப்பள்ளிக்கு வேட்டு வைக்கும்
தனியார் பள்ளிக்கு ரேட்டு பேசும்
தனியார்மயக் கொள்கையை
முறியடிப்போம் முறியடிப்போம்
கல்வி கற்பது மாணவன் உரிமை
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை
கல்வி என்பது சேவையடா
கல்வி என்பது சேவையடா
அனுமதியோம் அனுமதியோம்
கல்வியை விற்பதற்கு
அனுமதியோம் அனுமதியோம்
கட்டபொம்மன், திப்புசுல்தான்
சின்னமலை, மருதுபாண்டி
தியாகத்திற்கு பதில் சொல்
தமிழக அரசே பதில் சொல்
தனியார்மயத்தை ஆதரிக்கும்
அரசியல் கட்சிகளே பதில் சொல்
ஏமாத்துறான் ஏமாத்தறான்
சுதந்திரம்னு சொல்லி சொல்லி
மிட்டாய் கொடுத்து ஏமாத்தறான்
யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்
அரசுப்பள்ளியில் படித்தவன் எல்லாம்
ஐ.ஏ.ஏஸ்.ஆகியிருக்கான்
தாய்மொழியில் படித்தவர் எல்லாம்
தலைமைப்பதவிக்கு போயிருக்கான்
பெற்றோர்களே பெற்றோர்களே
துள்ளி விளையாடும் பிள்ளைகளை
மார்க்கெடுக்கும் எந்திரமாக
மனப்பாடம் செய்யும் மெசினாக
தனியார்பள்ளி மாத்துறான், கட்டணக்கொள்ளை அடிக்கிறான்.
புறக்கணிப்போம், புறக்கணிப்போம் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்
பாதுகாப்போம் பாதுகாப்போம் அரசு பள்ளிகளை பாதுகாப்போம்
முறியடிப்போம் முறியடிப்போம்
தனியார்மயக் கல்வியை
முறியடிப்போம் முறியடிப்போம்
என்று முழக்கங்களுடன் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய பேரணி ஆகஸ்ட் 15-ம் தேதி விருத்தாச்சலத்தில் நடைபெற்றது. பேரணியில் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் [படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மக்கள் பேரணியின் பின் தொடர்ந்து வாகனங்கள் அணிவகுத்தன, கடை வீதியெங்கும் கடைகளில் முதலாளிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என வெளியே வந்து கையசைத்து ஆதரவு தெரிவித்தது நீரோட்டத்தில் கிளை ஆறுகள் கலக்க தயாராக இருப்பது போல் இருந்தது. காவல்துறை செய்வதுறியாது திகைத்தது.
துவக்கத்தில் பேரணிக்கு அனுமதி இல்லை, மேலிடத்தின் உத்திரவு, மாவட்டம் முழுவதும் யாருக்கும் அனுமதி இல்லை என காவல்துறை தடுத்தது.
“நாங்கள் உங்களிடம் அனுமதி கேட்கவில்லை, தகவல்தான் தெரிவித்தோம். கல்வி உரிமைக்காக, அரசுப்ப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், வகுப்பறைக்காக போராடுகிறோம். பெற்றோர்களுக்கும் அரசின் செவிட்டு காதுகளுக்கு கேட்கவே சுதந்திர தினத்தில் பேரணி மறியல் என மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்து இன்று நடத்துகிறோம். பெரும்பான்மையான மக்களுக்கான சுதந்திரம் இல்லை. அதனால்தான் இன்று செய்கிறோம். பேரணிக்கு அனுமதித்தால் சுமுகமாக கைதாவோம், தடுத்தால் காவல்துறைக்கு ஒத்துழைக்க மாட்டோம்” என காவல்துறையிடம் கறாராக பேசினோம்.
“மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன்” என காவல் ஆய்வாளர் பேசினார். பிறகு அங்கு வந்து ஏதும் பிரச்சினை வராதே என அச்சமுடன் கேட்டுக் கொண்டு பேரணிக்கு காவல்துறை அனுமதித்து.
மனித உரிமை பாது காப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு பேரணியை துவக்கி வைத்து பேசினார். சிதம்பரம் நகரத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் முஜுப்பூர், பெரியண்ணன், செல்வக்குமார் கலையரசன் மற்றும் பலர் வேன் வைத்து கொண்டு வந்து கலந்து கொண்டனர். அது போல் சேத்தியாதோப்பு கிளையில் இருந்து பா லு மகேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தமிழரசன், வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் செந்தில் குமார் அருள், செந்தில், புஷ்பதேவன், சுசீந்திரன், விருத்தாசலம் கிளையில் இருந்து செந்தாமரைக்கந்தன், செல்வக்குமார், செல்வம், குணசேகரன், குமார் அய்யா வெங்கடேசன், மாணவர்கள் பழனியப்பன், பாலாஜி, மணிவாசகம், முருகானந்தம், கதிர்வேல், ஆசிரியர் மாசிலாமணி மற்றும் பலர் கடந்த 20 நாட்களாக கிராம்ம் தோறும் துண்டு பிரசுரம் கொடுத்தது, போஸ்டர் ஒட்டியது, பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தது, மாணவர்களை பார்த்து அழைத்தது என இடைவிடாது செய்த கடுமையான உழைப்பால் ஆகஸ்ட் 15 அன்று அனுமதி இன்றி காவல்துறை தடையை மீறி நடந்த பேரணி மறியலில் இவ்வளவு மக்கள் கலந்து கொண்டனர்.
வாத்தியார போடு, வகுப்பறையை கட்டு, கல்வி என்பது சேவையே, வியாபாரம் அல்ல, அரசுப்பள்ளிகளை அழிக்க வரும் தனியார்மயக் கல்வியை அனுமதியோம் என்ற முழக்கத்தை மக்கள் தங்கள் சொந்த பிரச்சினையின் வெளிப்பாடாக ஏற்றுக் கொண்டனர்.
பேரணியில் பள்ளி மாணவர்கள், வழக்கறிர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர் தங்கள் சொந்த காரியம் போல் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டனர். காவல் ஆய்வாளர் நமது வழக்கறிஞரிடம், “வழக்கமாக ஊர்வலம் பெரிதாக இருக்கும், 50 பேர்தான் கைதாவார்கள். இன்று இவ்வளவு கைது என்றால் நான் எப்படி சாப்பாடு தயார் செய்வது, ராயர் கடையில் ஏற்கனவே 1,700 பாக்கி வைத்திருக்கிறோம்” என புலம்பினார்.
கைது செய்யப்பட்ட மக்கள் [படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
மண்டபத்தில் பள்ளி மாணவர்களின் பாடல், நகைச்சுவை, கதை சொல்லுதல், அனுபவங்கள், ஆசிரியர்களின் அறிவுரைகள், வழக்கறிஞர்களின் உரைகள், பெண்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது என நாள் முழுவதும் களை கட்டியது. அனைவரும் போலீசு காவலில் இருக்கிறோம் என்ற அச்சம் சிறிதும் இல்லாமல் வெற்றி விழா போல் கவலையற்று மகிழ்ச்சியாக இருந்தனர். கல்லூரி, பள்ளி மாணவர்கள், அனைவருக்கும் பெற்றோர் சங்கத்தினர் பேனா வழங்கினர். பெற்றோர் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர்.
ஜவஹர்லால் நேருவின் ‘சோசலிச’ பொருளாதாரத்திலிருந்து இந்திரா காந்தியின் “ஹரிபி ஹடாவோ” (வறுமையை ஒழிப்போம்) காலத்தைத் தாண்டி, ராஜீவ் காந்தியின் உலகமயமாக்கல், நரசிம்மராவ்-மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் தாராளமயமாக்கல், பாஜக தலைமையிலான அரசில் தனியார் மயமாக்கல் என்று இந்திய பொருளாதாரம் வெகு தூரம் வந்து விட்ட பிறகும் இன்றும் வறுமை குறித்து விரிவான விவாதங்கள் நடக்கின்றன.
‘சோசலிஸ்ட்’ நேரு
“புள்ளிவிபரங்கள் எப்படி இருந்தாலும் 1980-களில் இருந்ததை விட வறுமை குறைந்துதான் இருக்கிறது, அப்போ எல்லாம் கிழிந்த சட்டை போட்டிருப்பாங்க, இப்போ எல்லோரும் நல்ல சட்டை போடுகிறார்கள்” என்று தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளால் ஆதாயம் அடைந்த மேட்டுக்குடியினர் புகழ் பாடுகிறார்கள். அந்த நல்ல சட்டையை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம், நிலையான வாழ்வாதாரங்களை மறுப்பதுதான் அவர்கள் பார்க்கத் தவறும் மறுபக்கம்.
‘ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் யாரும் பட்டினியால் சாகவில்லை. அதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு என்று பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழிப்பது முட்டாள்தனம். உயர்தர ஓட்ஸ் கஞ்சி குடித்தாலும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ 50-தான் செலவாகிறது, கிராமப் புறங்களில் சுமாரான ஏழைகள் தலைக்கு ரூ 12-க்கு ஒரு நாள் சாப்பாட்டை முடித்து விடுகிறார்கள்’ என்று புள்ளி விபரங்களை எடுத்து விடுகிறார்கள் பொருளாதார பார்வையாளர்கள்.
1997-ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசில் நிதியமைச்சராக இருந்த போது ப சிதம்பரம் அளித்த பேட்டியில். தன்னுடைய குடும்பத்தில் எப்போதும் பட்ஜெட் போடத் தேவை இருந்ததில்லை எனவும், தேவைப்படும் பணத்தை தேவைப்படும் நேரத்தில் எடுத்து செலவழிப்பதுதான் நடைமுறை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் (இந்தப் பேட்டி கடந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கிறது).
அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் மூலம் ஏழ்மையை எதிர் கொள்ளும் உழைக்கும் மக்களைப் போல் இல்லாமல் ப சிதம்பரம் போன்ற மேட்டுக்குடியினரும் வேறு ஒரு விதத்தில் வறுமை குறித்து கவலைப்படுகின்றனர்.
பிரெஞ்சு மக்கள் புரட்சி
பிரெஞ்சு புரட்சியின் போது ‘ஏழைகள் சாப்பிடுவதற்கு ரொட்டி கிடைக்கவில்லை என்றால் கேக் சாப்பிடலாமே’ என்று சொன்னதாக வரலாற்றில் இடம் பிடித்தத பிரெஞ்சு ராணியின் கதியைப் பார்த்து பாடம் கற்றுக் கொண்டனர் பல நாடுகளின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள். அதனால் தம்மை வளப்படுத்தும் பொருளாதார அமைப்பை உருவாக்கும் ஏழைகள் அதிகம் கலகம் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வறுமை நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
நவீன உலகில் தாம் தொண்டு செய்வதற்கு ஏழைகளைப் படைத்த இறைவனுக்கு நன்றி சொன்ன அன்னை தெரசா போல உலகெங்கும் மக்களை சுரண்டி பணம் குவிக்கும் ‘இளகிய மனம்’ படைத்த பில் கேட்ஸ்களும், வாரன் பபெட்டுகளும் அறக்கட்டளைகள் ஏற்படுத்தி வறுமையை ஒழிக்க முயற்சிக்கிறார்கள்.
ஒரு பக்கம், உணவு வினியோகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் அரசு தலையிட்டு சந்தையின் செயல்பாட்டை சீர்குலைக்கக் கூடாது என்ற தாராளவாத முதலாளித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு வறுமையை போக்குவதில் அரசின் தலையீட்டை தடுக்கிறது. இன்னொரு பக்கம், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சந்தையில் பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களுக்கு ஏதோ கொஞ்சம் உணவு, சுமாரான கல்வி, ஒண்டுவதற்கு வாழ்விடம் ஏதாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல் இவர்களது உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் ஆதாயம் அடைய முடியாது.
அதாவது பெரும்பான்மை மக்கள் சரிவர சாப்பிடக் கூட வழியில்லாமல், முறையான கல்வி பெற முடியாமல் போய் விட்டால் தொழிற்சாலைகளில், வணிக நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஆரோக்கியமான, கல்வி கற்ற ஆட்கள் கிடைக்காமல் போய் விடுகிறார்கள்.
சந்தையில் தலையிடக் கூடாது, அதே நேரம் முதலாளித்துவ உற்பத்திக்கு தேவைப்படாதவர்கள் செத்து விடுவது வரை குறைந்த பட்சம் சோறு போட்டு பராமரிக்க வேண்டும். எனவே வறுமை என்பதற்கு ஒரு கட்-ஆப் கோடு வரைய வேண்டியிருக்கிறது. வருமானத்துக்கு ஒரு வரம்பு ஏற்படுத்தி அந்த வரம்புக்கு மேல் உள்ளவர்கள் சந்தையின் கருணையிலும், அதற்கு கீழ் உள்ளவர்கள் அரசு ஆதரவிலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட வறியவர்களுக்கு கஞ்சித் தொட்டியோ, பிரியாணி சென்டரோ அல்லது ரொட்டி வரிசைகளோ ஏற்படுத்தி வயிற்றுப் பசியை ஆற்றுவதற்கு ஏற்பாடு செய்ய முடியும். அந்த அளவுக்கு அரசு தலையீட்டை முதலாளித்துவ சிந்தனையாளர்கள் சகித்துக் கொள்வார்கள்.
தாதாபாய் நவ்ரோஜி
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கான அளவீடு முதன்முதலில் இந்தியாவின் முதுபெரும் தாத்தா என்று அழைக்கப்பட்ட தாதாபாய் நவ்ரோஜியால் “இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் ஆட்சியும்” என்ற அறிக்கையில் 1876-ம் ஆண்டு முன் வைக்கப்பட்டது. 1867-68ம் ஆண்டின் விலைவாசியின் அடிப்படையில் இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர் பயணம் செய்யும் போது ஓய்வில் இருக்கும் போது, ஒரு நபருக்கு ஆண்டிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரூ 16-லிருந்து ரூ 35 வரை வருமானம் கிடைக்கா விட்டால் அவரை வறியவர் என்று கணக்கிட்டிருந்தார். இந்த வருமானத்தில் உயிர் பிழைத்திருக்க முடியுமே தவிர வேலை செய்வதற்கான ஆற்றல் தேவைகளும், மற்ற அடிப்படை செலவினங்களும் இதில் அடங்காது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
1939-ம் ஆண்டு வறுமையை கணக்கிடுவதற்கு காங்கிரஸ் கட்சி “சோசலிச” நேரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவின் செயலாளரான கே டி ஷா அளித்த அறிக்கையில் வறுமைக் கோட்டின் அளவீடாக ஒரு மாதத்திற்கு தனிநபர் வருமானம் ரூ 15 லிருந்து ரூ 20 என மதிப்பிட்டிருந்தார். ஒரு வயது வந்த தொழிலாளிக்கு 2,400-லிருந்து 2,800 கலோரி வரை ஆற்றல் தேவை பூர்த்தி செய்ய முடிந்தால்தான் அவர் வறுமையிலிருந்து தப்பித்தவர் என்று கருத வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
1960-61ல் திட்டக்கமிசன் தலைவர் திரு பிதம்பர் பந்த் என்பவரை உள்ளடக்கிய பணிக்குழு வறுமைக் கோட்டை தனிநபர் வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ 20 நகர்ப் புறங்களுக்கு ரூ 25 என நிர்ணயம் செய்தது. அதாவது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகப் போரின் போதும், அதற்கு பின்னையதுமான பணவீக்கங்களுக்குப் பிறகு வறுமைக் கோட்டை கிட்டத்தட்ட அதே அளவில் முடிவு செய்திருந்தார்கள்.
1979-ல் வறுமையை கணக்கிட திட்டக்கமிசன் நியமித்த பணிக்குழு தனது அறிக்கையை அளித்தது. தேசிய மாதிரி கணக்கீடு துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு ஒரு தனிநபருக்கு கிராமப்புறங்களில் 2,400 கலோரி, நகர்புறத்தில் 2,100 கலோரி ஆற்றல் தேவைப்படுவதாகவும் அது 1973-74 விலைவாசியின் அடிப்படையில் மாத நுகர்வு கிராமப்புறங்களுக்கு ரூ 49, நகர்புறங்களுக்கு ரூ 56 என்றும் அது முடிவு செய்திருந்தது. அன்றிலிருந்து 1973-74ம் ஆண்டின் விலைவாசிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் விலைக் குறியீட்டு எண் உயர்வின் (பணவீக்கத்தின்) அடிப்படையில் அதிகரித்து வறுமையின் அளவீடு நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும், 1973-1993 வரை தேசிய மாதிரி கணக்கீட்டின் ஆய்வு முடிவுகளுக்கும், தேசிய கணக்கியல் புள்ளிவிபரங்களின் (NAS) முடிவுகளுக்குமிடையிலான வேறுபாட்டைக் கொண்டு திட்டக்கமிசன் வறுமையில் உள்ளவர் எண்ணிக்கையை சரிப்படுத்தி (Adjust) வந்தது. தேசிய மாதிரி கணக்கீட்டு ஆய்வில் மக்கள் பொருட்கள் நுகரும் அளவு மதிப்பிடப்படுகிறது. தேசிய கணக்கியல் புள்ளி விபரம் கணக்கிடும் நாட்டின் மொத்த நுகர்வை கணக்கிடுகிறது. மொத்த நுகர்வு, மாதிரி கணக்கீட்டு அளவை விட அதிகமாக இருந்ததால், மாதிரி கணக்கீட்டின் நுகர்வு மதிப்பீட்டை அந்த அளவுக்கு உயர்த்தி வந்தது.
உதாரணமாக 1977-78ன் சரிப்படுத்துதலுக்கு முன்பான வறியவர்களின் வீதம் 57.16%. NAS தரவுகளுக்கு சரிப்படுத்திய பிறகு வறியவர்களின் எண்ணிக்கையை முறையே 43%-மாகவும், 48%-மாகவும் குறைத்து காட்டி வந்தது.
1993-94-ல் தேசிய மாதிரி ஆய்வில் கிடைத்த தரவுகளை விட கணக்கியல் மதிப்பீடுகள் பெருமளவு அதிகரித்திருந்தன. அந்த அடிப்படையில் திட்டக் குழு 1987-88-ம் ஆண்டில் 25.5 சதவீதமாக இருந்த வறுமை 1993-94-ல் 19 சதவீதமாக குறைந்து விட்டதாக அறிவித்தது. 1990-களின் மத்தியில் திட்டக்குழு தலைவராக வந்த மது தண்டவதே இந்த மோசடியை அம்பலப்படுத்தி வறுமையை கணக்கிடும் இந்த போலியான வழிமுறையை தூக்கி எறிந்தார்.
வறுமைக் கோட்டின் வரலாறு (படம் : நன்றி http://thealternative.in)
அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான மரபுசாரா தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் மொத்த மக்கட் தொகையில் 77% பேர் நாளொன்றுக்கு ரூ 20-க்கும் குறைவாக வருமானமீட்டுபவர்களாக வறுமையிலிருப்பதாக தெரிவித்திருக்கிறது. என்.சி.சக்சேனா குழுவோ இந்தியாவில் 50% மக்கள் வறுமையிலிருப்பவர்களாக கூறுகிறது.
சுரேஷ் டெண்டூல்கர் கமிட்டி வறுமைக் கோட்டின் அளவை தனிநபர் வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ 356.30, நகர்ப்புறங்களுக்கு ரூ 538.6 என்று நிர்ணயித்தது. இது 1876-ல் நவ்ரோஜியின் மதிப்பீட்டிலிருந்து 188 மடங்காகும். இடைப்பட்ட 137 ஆண்டுகளின் சராசரி பணவீக்கம் 5%-க்கும் மேல், விலை உயர்வும் அதிகம். அதனால் 2004-05 ஆண்டு மதிப்பீடு நவ்ரோஜியின் மதிப்பீட்டை விட மிக மிகக் குறைவு. நவ்ரோஜியின் வார்த்தைகளில் சொல்வதானால் இந்த வருமானத்தைக் கொண்டு ஒருவர் உயிர் வாழக்கூட முடியாது.
இந்தியாவின் பெரும்பாலான மக்கள் 1,700 கலோரிக்கும் குறைவாகத் தான் உணவு உட்கொள்கிறார்கள், அதனால் 2,100, 2,400 கலோரிகள் மிக அதிகமென்று வறுமையின் அளவை கிராமப்புறங்களுக்கு 1,999 கலோரியாகவும் நகர்ப்புறங்களுக்கு 1,770 கலோரியாகவும் குறைத்து வரையறுத்தது டெண்டூல்கர் கமிட்டி. இதன் மூலம் 2004-05ல் 37.2 சதவீதமாக இருந்த வறுமையின் வீதம் 2009-10ல் 29.8 சதவீதமாக குறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சுரேஷ் டெண்டூல்கர் கமிட்டி (படம் : நன்றி தி ஹிந்து)
மருத்துவ அறிவியல் படி ஓய்வில் இருப்பவருக்கே உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமே 1,220 கலோரி தேவைப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கைப் படி மிதமான வேலை செய்யும் ஆணுக்கு 2,730 கலோரியும், பெண்ணுக்கு 2,230 கலோரி உணவும் தேவைப்படும். 10 வயதிலிருந்து 17 வயது சிறார்களுக்கு சராசரியாக 2,450 கலோரியும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சராசரியாக 1360 கலோரியும் தேவைப்படும். கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு சராசரியை விட 350 கலோரிகள் அதிகமாகவும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சராசரியை விட 600 கலோரிகள் அதிகமாகவும் தேவைப்படும்.
தமிழகத்திலிருக்கும் வீடில்லாத, குடும்பமில்லாத உழைக்கும் தொழிலாளி ஒருவர் மிகக்குறைவான செலவில் உணவு உட்கொள்வதாக இருந்தால், அவர் ‘அம்மா உணவகத்தை’ நாடலாம். ரூ 33-க்குள் வயிற்றை நிரப்பிக்கொள்வதாக இருந்தால் என்ன சாப்பிடுவார்?
காலை 10 ரூபாய்க்கு 10 இட்லி, மதியம் 10 ரூபாய்க்கு இரண்டு ஐந்து ரூபாய் சாத வகை, இரவு கையேந்தி பவனில் 12 ரூபாய்க்கு மூன்று புரோட்டா, ஆக ரூ.33. இந்த உணவு மெனுவில் அவருக்கு எவ்வளவு கலோரி கிடைக்கும்? 10 இட்லி – 1,000, 1/2 கப் சாம்பார் – 70, 2 கப் அரிசி சாதம் – 240, 3 பரோட்டா – 450 ஆக மொத்தம் 1760 கலோரிகள். 33 ரூபாய்க்கு டெண்டுல்கரின் 1,770 கலோரியை கூட இவரால் பெற முடியாது. ஆனால், அவரது ஒரு நாள் தேவை 3,000 கலோரியை விட அதிகம்.
உழைப்பவரின் கையில் செல்வம் இருக்கும் போது தேவைக்கு பசியாறுவது ஒரு பிரச்சினை இல்லை.
2012 ஐ.நாவின் மனித வள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 136-வது இடம் வகிக்கிறது. 1992-ல் இது 122-வது இடமாக இருந்தது. உலக பசியிலுள்ளோர் குறியீட்டெண்ணில் இந்தியா 119-ம் இடம் வகிக்கிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கியின் கணக்கீட்டின் படி உலகின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள, எடை குறைவான குழந்தைகளில் 49 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இது ஆப்பிரிக்க நாடுகளை விட இரு மடங்காகும். இப்படி மெய்யுலகில் ஏழ்மை மக்களை அழுத்திக் கொண்டிருக்கும் போது இந்திய அரசின் அறிக்கைகளில் வறுமை காணாமல் போய்வருகிறது. விலைவாசி உயர்வை குறைத்து மதிப்பிட்டும், மக்களின் ஆற்றல் தேவைகளை குறைத்து மதிப்பிட்டும் வறுமை வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டு வருகிறது.
வறுமைக்கோடு குறித்த இந்த அளவுகோல் சரியானதா, ரூ.32-க்குள் ஒருவர் வாழ இயலுமா என்றும் வறுமைக் கோட்டைத் தீர்மானிக்கும் அளவை குறைத்து நிர்ணயித்திருப்பதுதான் பிரச்சனை என்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகளும், ஊடகங்களும் விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன, பல பொருளாதார மேதைகளும் அறிஞர்களும் அரசையும் திட்டக் கமிசனையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
வறுமைக் கோட்டை நிர்ணயித்து, ஏழைகளுக்கு உதவும்படியான சூழலை உருவாக்கும் பொருளாதாரக் கொள்கையின் அபத்தத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. 300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும் முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்திலும், அதன் இப்போதைய தலைமையகமான அமெரிக்காவிலும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியாதிருப்பது ஏன் என்று முதலாளித்துவத்தை கேள்விக்கு உட்படுத்துவதில்லை.
பெரும்பான்மை மக்கள் இந்த கேள்விகளை எழுப்பி தம்மை அழுத்திக் கொண்டிருக்கும் ஆளும் அமைப்புகளை நிராகரித்து சோசலிச சமூகத்தை கட்டுவதுதான் ஏழ்மையை ஒழிப்பதற்கான ஒரே வழி. புள்ளி விவரங்களின் மோசடியால் ஏழைகளின் எண்ணிக்கையை ஒழித்து வறுமைக் கோட்டை குறைக்கும் வழி அத்தகைய சமூகத்தில் தேவையற்றுப் போகும். ஏனெனில் உழைப்பவரின் கையில் செல்வம் இருக்கும் போது தேவைக்கு பசியாறுவது ஒரு பிரச்சினை இல்லை. இதன்றி வறுமையையும், வறுமைக் கோட்டையும் ஒழிப்பதற்கு வேறு வழிகளோ இல்லை குறுக்கு வழிகளோ இல்லை.
ஏ.கே.-47 துப்பாக்கியை உருவாக்கிய மிகயில் கலாஷ்னிகோவ்
93 வயது முதியவர் அவர். தன் வாழ்நாள் முழுவதும் பொறியியல் துறையில் வேலை செய்து இப்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வேலையான துப்பாக்கி வடிவமைப்பு பரிசோதனைகளின் போது தொடர்ந்து உரத்த சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்ததால் காது செவிடாகி விட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக அவரது நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்கள் அவரைப் பெரிதாக ஏதும் பாதித்திருக்கவில்லை.
அவர்தான் 1947-ம் ஆண்டு ஏகே 47 என்ற துப்பாக்கியை வடிவமைத்தவர். அவரது வடிவமைப்பில் உருவான துப்பாக்கி பின்னர் அவரது பெயராலேயே ஏகே 47 (அவ்டோமாட் கலாஷ்னிகோவ் மாடல் 1947) என்று அழைக்கப்படுகிறது. அவர் பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்த மிகயில் கலாஷ்னிகோவ்.
இப்போது சோவியத் யூனியனின் போலி சோசலிச குடியரசுகள் வீழ்த்தப்பட்டு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரம் ரசியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தில், கலாஷ்னிகோவ் என்ற பெயரின் வணிக மதிப்பு $1000 கோடி (சுமார் ரூ. 60,000 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இஜ்மாஷ் என்ற ரசிய நிறுவனம் அவரது பெயரை பயன்படுத்திக் கொள்வதற்காக பல கோடி ரூபாய் உரிமத் தொகையாக அளிக்க முன்வந்த போது அவர் அதை மறுத்து விடுகிறார். தன் வாழ்நாள் முழுவதுமான உழைப்பும், அதன் விளைவுகளும் தன்னை உருவாக்கி, வளர்த்து, பராமரிக்கும் சமூகத்திற்குத்தான் சொந்தம், தனிப்பட்ட முறையில் தனக்கு அதன் மீது எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி விட்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் 65 வயதான ஒரு நிறுவனம். அந்நிறுவனம் 1998-ம் ஆண்டு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்ற பாடலுக்கான காப்புரிமையை (சொத்துரிமையை) கைப்பற்றியது. ஒரு திரைப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அந்தப் பாடலை பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு கட்டணமாக $1500 (ரூ. 90,000) ஐ அந்த நிறுவனம் வசூலிக்கிறது. கட்டணம் செலுத்தாமல் பாடலைப் பயன்படுத்தினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து $1,50,000 (ரூ. 90 லட்சம்) வரை அபராதமாக வசூலிக்கிறது.
இத்தனைக்கும் அந்தப் பாடல் வரிகளையோ, இசையையோ உருவாக்கியது அந்த நிறுவனம் இல்லை. அந்த மெட்டு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பேட்டி ஹில், மில்ட்ரெட் ஹில் என்ற இரு சகோதரிகளால் உருவாக்கப்பட்டது. வரிகள் அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டன. இதை ஆங்கிலம் தெரிந்த மக்கள் உலகமெங்கும் பாடி வருகிறார்கள். இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கு காப்புரிமை பெற்றிருக்கும் அந்த அமெரிக்க நிறுவனத்தின் பெயர் வார்னர் மியூசிக்.
வார்னர் மியூசிக் 2012-ம் ஆண்டு திரட்டிய மொத்த விற்பனையின் மதிப்பு $270 கோடி (சுமார் ரூ. 14,000 கோடி). இதன் பெரும்பகுதி பல்வேறு இசைக் கலைஞர்களின் படைப்புகளை தனக்கு ‘சொந்தமாக்கி’, அந்த சொத்துடைமையை அங்கீகரிக்கும் முதலாளித்துவ சட்டங்களை பயன்படுத்திக் கொண்டு குவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் உருவாக்கிய படைப்பை தனது சொத்து என்று ஒரு நிறுவனம் உரிமை கொண்டாடும் வண்ணம் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை நேரடியாகவும், வளைத்தும் பயன்படுத்தி வார்னர் போன்ற நிறுவனங்கள் உலக மக்களைச் சுரண்டி வருகின்றன. ‘இது எங்கள் சொத்து. இதற்கு எங்களிடம் உரிமை இருக்கிறது’ என்ற முதலாளித்துவ அறத்தின் மூலம் அதை நியாயப்படுத்துகின்றன.
ஹேப்பி பர்த்டே பாடல் வரிகளுக்கும், இசைக்கும் காப்புரிமை தன்னிடம் இருப்பதாகச் சொல்லி வார்னர் நிறுவனம் இது வரை $15 கோடி (சுமார் ரூ. 900 கோடி) சம்பாதித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சோவியத் சோசலிசம் உருவாக்கிய சமூக மனிதர் மிகயில் கலாஷ்னிகோவ். அமெரிக்க முதலாளித்துவம் உருவாக்கிய சமூக சுரண்டல் நிறுவனம் வார்னர் மியூசிக். போர்களில் மனிதர்களை கொல்லப் பயன்படும் துப்பாக்கியின் அதி நவீன வகையைக் கண்டுபிடித்தவரின் இதயத்தில் சமூக உணர்வு நிறைந்திருக்கிறது. பிறந்த நாள் வாழ்த்து எனும் மெல்லிய உணர்ச்சியை விற்பனை செய்யும் வார்னர் மியூசிக்கின் இதயத்தில் சமூக விரோதம் நிறைந்திருக்கிறது.
கம்யூனிசம் என்றால் என்ன, முதலாளித்துவம் என்றால் என்ன என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமோ?
– அப்துல்
_________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
_________________________________________________
இந்தியப் பொருளாதாரம் மீட்க முடியாத புதை மணலில் சிக்கியுள்ளது. பொருளாதார சரிவை மீட்டு நிலைப்படுத்தும் பொறுப்பில் இருப்பதற்கு யாரும் விருப்பம் இல்லை. எனினும் அத்தகைய நிபுணர்களும் கூட, அடுப்புக்கு விறகு இல்லை என்றால் வீட்டுக் கூரையை முறித்து பயன்படுத்தச் சொல்லும் அறிவாளிகளாக இருக்கிறார்கள். இருக்க முடியும்.
தொழில் துறை முடக்கம், முதலீடுகள் வீழ்ச்சி, ஏற்றுமதி அதிகரிப்பு (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)
ஜூன் மாதத்தில் தொழில் துறை சென்ற ஆண்டு ஜூன் மாதத்தை விட 2.2 சதவீதம் சுருங்கியிருக்கிறது. 1.6 சதவீதம் சுருக்கம் என்று அறிவிக்கப்பட்டிருந்த மே மாதத்துக்கான புள்ளிவிபரம் 2.8 சதவீதம் என்று திருத்தப்பட்டிருக்கிறது. சந்தை ஆய்வாளர்கள் ஜூன் மாதம் 1.6 சதவீதம்தான் வீழ்ச்சி இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
கார்களின் விற்பனை 7.4 % வீழ்ச்சியடைந்து 1.34 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 1.41 லட்சம் கார்கள் விற்பனையாகியிருந்தன. வணிக வாகனங்களின் மொத்த விற்பனை 14.93 சதவீதமும், கனரக வாகனங்களின் விற்பனை 19.88 சதவீதமும் குறைந்திருந்தன.
வங்கிக் கடன், ஐடி துறை ஊதியங்கள் என்று ஊதிப் பெருக்கப்பட்ட பொருளாதாரத்தில் விற்பனை சூடு பிடித்திருந்த போது, பல ஆயிரம் கோடி ரூபாய்கள் லாபம் குவித்த நிறுவனங்கள், விற்பனை வீழ்ச்சியின் சுமையை தொழிலாளர்களின் தலையில் ஏற்றி தப்பிக்க முயற்சிக்கின்றன. மாருதி சுசுகி தனது மானேசர் டீசல் எஞ்சின் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை கால வரையற்ற விடுமுறையில் போகச் சொல்லியிருக்கிறது. டோயோட்டா கிர்லோஸ்கர் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை புதுப்பிக்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.
இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல்-மே-ஜூன்) பாரத ஸ்டேட் வங்கியின் வாராக் கடன்கள் ரூ 9,702 கோடி அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டு (ஜனவரி-பிப்ரவரி-மார்ச்) அளவை விட இது 19% அதிகம். இது வங்கி கொடுத்துள்ள மொத்தக் கடன்களில் 5.56% ஆகும். இந்த காலாண்டில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்களின் மதிப்பு சென்ற ஆண்டை விட 51% உயர்ந்து ரூ 1.2 லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறது.
வாகனங்கள் விற்பனையில் வீழ்ச்சி தொடர்கிறது. (படம் : நன்றி தி ஹிந்து)
இந்திய தொழில், வணிக நிறுவனங்களின் நிதி நிலைமை தொடர்ந்து சீர்குலைந்து வருவதை இது காட்டுகிறது. ஸ்டேட் வங்கியின் கடன்களில் இந்த காலாண்டில் ரூ 13,766 கோடி மதிப்பிலான கடன்கள் வாராக் கடன்களாக வீழ்ச்சியடைந்திருந்தன. முந்தைய வாராக் கடன்களில் ரூ 1,519 கோடியை மட்டுமே மீட்க முடிந்திருக்கிறது.
ஆனால், வங்கியின் லாப வீழ்ச்சிக்கு, ஊழியர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதிய செலவு அதிகமானதுதான் காரணம் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் பிரதீப் சவுத்ரி கூறியிருக்கிறார். வங்கி ஊழியர்களின் வாழ் நாட்கள் 76 வயதிலிருந்து 81 வயதாக அதிகரித்திருப்பதால் இந்த நிலை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். செலவைக் குறைத்து லாபத்தை அதிகப்படுத்த விலைவாசி உயர்வுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 2010-லிருந்து ரத்து செய்யப்பட்டது. இனி ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் எப்படி சீக்கிரம் செத்துப் போவார்கள் என்று கணக்கு போடக் கூட ஆரம்பிப்பார்களே ஒழிய, முதலாளிகளின் லாபத்தில் கை வைக்கத் துணிய மாட்டார்கள்.
படம் : நன்றி livemint.com
வாராக் கடன்களில் பெரும்பான்மை சிறு தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும் கொடுத்தவையாக இருந்தாலும் பெரு நிறுவனங்களுக்கு கொடுத்த மொத்த கடன்களில் 1.7% வாராக் கடன்கள். பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நடுத்தர அளவு நிறுவனங்களில் 9.47% வாராக் கடன்கள். அதாவது பல நூற்றுக் கணக்கான சிறு தொழில்களும், சிறு விவசாயிகளும் நொடித்துப் போயிருப்பதோடு பெரு நிறுவனங்கள் செலுத்த மறுக்கும் கடன்களின் அளவு கணிசமாக அதிகரித்திருக்கிறது.
தொழில் துறை வளர்ச்சி வீழ்ச்சியடைந்திருப்பது வாராக் கடன் வீதத்தை மேலும் அதிகப்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த நிதியாண்டின் இறுதியில் வாராக் கடன்களின் வீதம் மொத்தக் கடன்களில் 3.9% ஆக அதிகரிக்கும் என்றும் 2015-ம் ஆண்டில் அது 4.4%-ஐ தொட்டு விடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்தியாவில் முதலீடு செய்திருந்த அன்னிய நிறுவனங்கள் தீப்பிடித்த கப்பலிலிருந்து பறந்து சென்று விடும் பறவைகள் போல, தமது லாப வேட்டையை பையில் போட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்திருக்கின்றன.
இந்திய ரூபாயின் மதிப்பு பாதாளத்தை நோக்கி பாய்கிறது. (படம் : நன்றி எகனாமிக் டைம்ஸ்)
ஜூன், ஜூலை மாதங்களில் 1,050 கோடி டாலர் (ரூ 62,000 கோடி) பணத்தை மாற்றி எடுத்துச் சென்றிருக்கின்றன. ரூ 45,000 கோடிக்கும் அதிகமான பணம் கடன் சந்தையிலிருந்தும் ரூ 17,000 கோடிக்கும் அதிகமான பணம் பங்குச் சந்தையிலிருந்தும் அள்ளிச் செல்லப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2-ம் தேதி நிலவரப்படி 1,756 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் 6,402 துணைக் கணக்குகள் இயக்கப்படுகின்றன.
இதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகமாகியிருக்கிறது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது. ஜூலை 8-ம் தேதி 1 டாலருக்கு ரூ 61.21 மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்த ரூபாயின் மதிப்பு இன்னும் பாதாளத்தை நோக்கி பாய தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஜூலை மாதம் ஏற்றுமதியின் அளவு சென்ற ஆண்டை விட 11.64 % வளர்ந்து 2,500 கோடி டாலர் (சுமார் ரூ 1.5 லட்சம் கோடி) மதிப்பை எட்டியிருக்கின்றது. ரூபாயின் மதிப்பு 10% வீழ்ச்சியடையும் போது ஏற்றுமதிக்கான டாலர் விலைகள் குறைவதால் ஏற்றுமதிகள் அதிகரிப்பதன் வாய்ப்பு ஏற்படுகிறது. இது போக கருப்புப் பணத்தை உள்ளிருந்து வெளியில் அனுப்பவும், வெளியிலிருந்து உள்ளே கொண்டு வரவும் வெளிநாட்டு வர்த்தகம் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான ஆய்வுகள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.
இந்தச் சூழலில் அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறவும், இந்திய ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்தவும் இந்திய நிறுவனங்களை வெளிநாட்டுக் கடன் வாங்க ஊக்குவிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர் ப சிதம்பரம். இந்த ஆண்டு சுமார் 1,100 கோடி டாலர் மதிப்பிலான அன்னிய நிதியை கொண்டு வருவதற்காக இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் வாங்குவதை ஊக்குவிப்பதாகவும், தங்கம், வெள்ளி போன்ற அத்தியாவசியமில்லாத பொருட்களின் இறக்குமதிக்கான சுங்க வரியை உயர்த்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ப சிதம்பரத்தின் நச்சு மருந்து.
2012-13ம் ஆண்டு இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் 100 கோடி டாலர், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், இந்தியா இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி ஆகியவை தலா 150 கோடி டாலர் ஆக மொத்தம் 400 கோடி டாலர் (சுமார் ரூ 25,000 கோடி) கடன் பத்திரங்கள் மூலம் திரட்ட உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 175 கோடி டாலர், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை தலா 100 கோடி டாலர் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தமது சுழலும் மூலதனத்துக்காக கடன் வாங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்துடன் வர்த்தக நிதி திரட்டலையும் சேர்த்து ஆக மொத்தம் 400 கோடி டாலர் (சுமார் ரூ 25,000 கோடி) இந்த கணக்கில் கடன் வாங்கப்படும்.
அதாவது, ரயில்வே, மின் உற்பத்தி, உள் கட்டமைப்பு துறையில் முதலீடு செய்ய, லாபகரமாக இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் மூலதனம் கைவசம் இருந்தாலும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்குவதன் மூலம் பணம் திரட்டப் போகிறார் சிதம்பரம். அதன் மூலம் நமது உற்பத்தி பற்றாக்குறையை சமாளிக்கப் போகிறார்களாம். இந்தக் கடன்களை தரப் போவது யார்?
அன்னிய நாட்டு அரசு நிதியங்கள் இந்த கடன் பத்திரங்களை வாங்க அனுமதிக்கப் போவதாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய கிளை நிறுவனங்கள் தமது தலைமை நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்க அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார் சிதம்பரம். பிற பராமரிப்பு தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கடன்களையும் சேர்த்து 200 கோடி டாலர் கிடைத்து விடும் என்றும் வெளிநாட்டு இந்தியர்களின் வைப்பு பணத்தின் மூலம் 100 கோடி டாலர் கிடைத்து விடும் என்றும் கூறியிருக்கிறார்.
சிதம்பரத்தின் திட்டப்படி தற்காலிகமாக பிரச்சினையை சமாளித்து விட்டாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாங்கிய கடனுக்கு வட்டியாக தமது லாபத்தை வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டி வரும், அப்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறை இன்னமும் மோசமாகும். ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடையும்.
பருவ மழை நன்கு பெய்து விவசாய விளைச்சல் செழித்தால் இந்த நெருக்கடிகளை ஓரளவுக்கு மட்டுப்படுத்தலாம் என்றும் கிராம மக்களின் வாங்கும் சக்தி அதிகமாவதன் மூலம் ஆண்டின் இரண்டாவது பாதியில் வளர்ச்சி மீட்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இந்திய பொருளாதாரத்தின் நலன் விவசாயத்தையே சார்ந்திருக்கிறது என்பதை இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. ஆனால் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக இந்திய விவசாயத்தை திட்டமிட்டு அழித்து வருவதால் இவர்கள் நினைக்கும் அளவுக்கு கிராம மக்களின் வாங்கும் சக்தி உயரப்போவதில்லை. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினால் ஏற்கனவே செய்யப்பட்ட நுகர்வின் அளவு கூட மேலும் குறைந்து வருவதுதான் யதார்த்தம்.
உள்நாட்டு விவசாயம், உள்நாட்டு தொழில்கள் இவற்றை வளர்ப்பதற்கான கொள்கைகளை செயல்படுத்தாமல் கடன் வாங்கி குடும்பம் நடத்தும் ஊதாரியைப் போல அன்னிய நிதி மூலதனத்தை சார்ந்து நாட்டை மேலும் மேலும் புதைகுழிக்குள் கொண்டு செல்வதுதான் இன்றைய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரக் கொள்கையாக இருக்கிறது. இந்தப் பொருளாதாரச் சுமை முதலாளிகளின் தலைகளுக்கு போய்விடக்கூடாது என்பதில்தான் அரசும், வங்கிகளும் கவனமாக இருக்கின்றன. அதனால்தான் விலைவாசி உயர்வு, குறைந்த சம்பளம், வேலையின்மை, அதிக உழைப்பு என்று மக்களின் கழுத்தை சுருக்குகிறது இந்த பொருளாதார நெருக்கடி!
தென் கொரியாவில் இயங்கும் அணு உலைகளில் தரமற்ற பாகங்களை அனுமதிக்க அந்நாட்டு அணு சக்தி கழக அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது அம்பலமாகி உள்ளது. தரமற்ற பாகங்கள் பொருத்தப்பட்ட 3 அணு உலைகள் மூடப்பட்டுள்ளன, இன்னும் பல மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் நாடு என முதலாளிகளால் உச்சி முகரப்படும் சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு தென் கொரியா. அங்கு பன்னாட்டு முதலாளிகளின் மின்சார தேவையை மலிவாக பூர்த்தி செய்ய உருவாக்கிய அணு உலைகளில் தான் இந்த ஊழல் நடந்துள்ளது.
படம் : நன்றி நியூயார்க் டைம்ஸ்
அணு உலைக்கு தேவையான பாகங்களை தயாரித்து வழங்கும் தனியார் நிறுவனங்கள், தரமற்ற பாகங்களுக்கு போலியான சோதனை முடிவுகளை தாக்கல் செய்து, அந்த பாகங்கள் தரமானவை என ஏமாற்றி உள்ளன. அவை போலியான சோதனை முடிவுகள் என்று தெரிந்தும், அணு உலை திட்டக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த பாகங்களை அணு உலைகளில் பொருத்த அனுமதி அளித்துள்ளனர். அவை கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை அனுப்பும் கருவிகள் போன்ற அணு உலையின் மிக முக்கிய பாகங்களாகும்.
தென் கொரியாவில் மொத்தம் 23 அணு உலைகள் இயங்குகின்றன. அவற்றில் 14 அணு உலைகளில் தரமற்ற பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. 3 அணு உலைகள் இயங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின் மேலும் அணு உலைகள் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி கருத்து தெரிவித்த சியோல் பல்கலைகழகத்தின் அணுப் பொறியியல் பிரிவு பேராசிரியர் குன் ஷூ “இப்பொழுது வெளியாகி இருக்கும் ஊழல் ஒரு சிறிய பகுதி மட்டும் தான், இன்னும் பல முக்கிய உண்மைகள் மறைந்திருக்கின்றன” என கவலை தெரிவிக்கிறார். அணு உலை பாகங்கள் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 1.2 லட்சம் சான்றிதழ்களை ஆய்வு செய்து அவற்றில் போலிகளை கண்டு பிடிக்க வேண்டுமாம்.
விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டதில் தான் உள்ளது. அதற்குள் பெரிய ஊழல்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. விசாரணை முழுமை பெறும் போது இன்னும் நிறைய அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரிய வரும் என நம்பப்படுகிறது.
உதாரணமாக, இந்த ஊழல் பற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக கொரியா ஹைட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவரின் வீட்டில் சோதனை செய்த போது பல லட்சம் டாலர்கள் பணம் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்த போது ஹூயுண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பணம் போலி ஆய்வு சான்றிதழ்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்தாலும் ஹூயுண்டால் ஹெவிக்கு ஒப்பந்தங்களை வழங்க கொடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து அனாமதேய தகவல் ஒன்றை வைத்து விசாரித்ததில் இந்த கிரிமினல் ஊழல்கள் அம்பலமாகியுள்ளன. அணு உலை விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், அரசு உதவி பெறும் அணு உலை நிறுவனங்கள், அணு உலை பாகம் தயாரிக்கும் தனியார் நிறுனங்கள், அவற்றை சோதனை செய்யும் நிறுவனங்கள் என அனைத்தும் தம்முள் ஒரு வலைப் பின்னால் அமைத்துக் கொண்டு ஊழல் புரிந்துள்ளன. தென் கொரியாவின் மிக முக்கிய மாஃபியா வலைப்பின்னல் என அந்நாட்டின் பிரதமரே கருதும் அளவு அது சக்தி வாய்ந்ததாக இருக்கின்றது.
சியோல் நகரத்தில் விசிறிகளை பயன்படுத்தி சூட்டை தணித்துக் கொள்ளும் ஊழியர்கள். (படம் : நன்றி நியூயார்க் டைம்ஸ்)
அணு உலைகள் இயக்கம் நிறுத்தப்பட்டதும் பெரும் மின்சார பற்றக்குறையை அந்நாடு சந்தித்து வருகிறது. தென் கொரியா தன் மொத்த மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை அணு உலைகளிலிருந்தே பெறுகிறது, மாற்று திட்டத்தை பற்றி அவர்கள் யோசித்தது கூட இல்லை. பல அணு உலைகளில் உற்பத்தி முடக்கி வைக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் பொருளாதாரத்தையும், வெளிநாட்டு முதலீடுகளையும் பாதிக்கும் என அரசு அஞ்சுகிறது.
அணு உலைகள் செயலிழந்து இருப்பதால் அந்நாட்டின் பிரதமர் மக்களை மின் சக்தியை சேமிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கல்லூரிகள், நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் குளிரூட்டிகளை அணைத்து விட்டனர். கடந்த மாதம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பேர்கிற்கு அளித்த சிறப்பு விருந்தில் பிரதமரே குளிரூட்டும் வசதிகளை நிறுத்த வேண்டி இருந்தது.
இதைத் தொடர்ந்து பன்னாட்டு முதலாளிகளின் நெற்றியில் வழியும் வியர்வை தென் கொரிய அரசை கிலி பிடிக்கச் செய்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின், தான் ஆக்கிரமித்திருந்த கொரிய பகுதிகளை ரஷியாவிற்கு தலைவலியை ஏற்படுத்தவும், கிழக்கு ஆசியாவில் பலமாக காலுன்றவும் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. இதனால் கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதி அமெரிக்காவின் வேட்டைக்கான தளங்களில் ஒன்றானது. அமெரிக்க உதவியுடன் தென் கொரியா தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் அடிவருடிகள் அங்கு பிரதமராக்கப்பட்டார்கள். 1960-ல் ராணுவ கலகம் மூலம் ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்தப்பட்டு அடுத்த 20 ஆண்டுகளுக்கு ராணுவ ஜெனரல்களின் இரும்புப் பிடியில் முதலாளித்துவ வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. உலகெங்கும் ‘ஜனநாயகத்தை’ப் பரப்பும் கடமையை வரித்துக் கொண்டுள்ள அமெரிக்கா அங்கு தன் ராணுவ தளங்களை அமைத்து உலக ‘சமாதானத்தை’ பராமரித்துக் கொண்டிருந்தது.
1980-களுக்குப் பிறகான ஓட்டுக் கட்சிகளின் ஜனநாயகத்தில் நிலையான அரசு அமையாதது, 1988 ஒலிம்பிக் போட்டிகள், 1996-ல் உலக முதலாளித்துவ நாடுகளின் கூட்டமைப்பில் (OECD) சேர்ந்தது இவை அனைத்தும் சேர்ந்து 1997 ஆசிய பொருளாதார நெருக்கடியில் தென் கொரியாவை நேரடியாக சிக்க வைத்தன. தென் கொரியாவின் பொருளாதாரம் சரிவிலிருந்து தற்காலிகமாக மீண்ட பிறகும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய அரசுகளுக்கு சேவை செய்யும் நாடாக தென் கொரியா தொடர்ந்து மாற்றப்பட்டு வந்தது.
பன்னாட்டு முதலாளிகளின் நேரடி முதலீடுகள் குவிந்தன, அவர்கள் உடல் நோகாமல், குறைந்த செலவில் உற்பத்தி பொருள் செய்து கொள்ள மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட வேண்டியிருந்தது. கூடவே, குறைந்த செலவில் அணு உலைகளை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை நடைமுறையாக்கினால், அணு உலைகளை வெளிநாடுகளுக்கு விற்று நிறைய சம்பாதிக்கலாம், பொருளாதாரத்தை பெருக்கலாம், விக்ரமன் படத்தில் வருவது போல் ஒரு பாட்டு முடிவதற்குள், தென் கொரியாவை வல்லரசு ஆக்கி விடலாம் என கனவு கண்டார்கள். மின்சார உற்பத்தி செய்ய உடனடி செலவு குறைவாக பிடிக்கும் அணு உலைகள் பெருமளவு அமைக்கப்பட்டன. அவற்றினால் ஏற்பட உள்ள நீண்ட கால செலவுகளைப் பற்றி முதலாளிகளுக்கோ, தென் கொரிய அரசுக்கோ கவலை இல்லை, தென் கொரிய மக்கள்தான் கவலைப்பட்டிருக்க வேண்டும்.
தென் கொரியாவில் அரசு நிறுவனமான கொரியா நீர் மற்றும் அணுசக்தி கழகம் அனைத்து அணு உலைகளை கட்டுப்படுத்துகிறது. அணு உலைகளின் கட்டுமானம் மற்றும் திட்ட வரைவுகளுக்கு கெப்கோ பொறியியல் மற்றும் கட்டுமான கழகம் உதவி புரிகிறது. அணு உலைகளுக்கு தேவையான பாகங்களை தயாரிக்கவும், அதை பரிசோதிக்கவும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
அரசு அணு சக்தி கழகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகள், அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் ஏதேனும் ஒரு தனியார் அணு உலை பாகம் தயாரிப்பு நிறுவனத்திலோ, அல்லது பாகங்களை பரிசோதிக்கும் நிறுவனத்திலோ அதிக சம்பளத்துடன் மேலாளர் வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். சில அதிகாரிகள் கூட்டாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதை அரசு அணு சக்தி கழகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துவிடுவார்கள். அவ்வளவு தான். ஊழல் வலைப் பின்னல் தயார். அதிகாரிகள், மற்றும், தனியார் நிறுவன மேலாளர்களின் சொந்த ஊர், ஒரே கல்லூரி, பள்ளி நட்புகள் போன்றவை அவர்களுக்குள் ஒரு கூட்டணி அமைக்க உதவியுள்ளன. இந்த நட்புக்கரம் இந்த வலைப்பின்னலை எளிதாக்கிவிட்டது. அது இல்லை என்றாலும் வலைப் பின்னல் கொஞ்சம் சிரமத்துடன் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஊழல் அம்பலமாகியுள்ளதை அடுத்து அரசு தன் வல்லரசு கனவில் மண் விழுந்திருப்பதை சோகமாக நினைத்து புலம்பி வருகிறது. ஹன்யாங் பலகலைக் கழகத்தின் பேராசிரிய கிம் யுன் சூங் இதை பற்றி கருத்து தெரிவிக்கையில் “இது தெரியாமல் நடந்த தவறல்ல, நாட்டை பாதுகாக்க வேண்டியவர்கள் திட்டமிட்டு புனைந்த கதை. இவர்களால் நமக்கு அணு சக்தி நிறுவனங்களின் மேல் இருந்த நம்பிக்கை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது” என்கிறார்.
இந்த ஊழலைப் பற்றி கருத்து தெரிவித்த தென் கொரியாவின் வணிகம் தொழிற்சாலை மற்றும் சக்தி துறையின் அமைச்சகம், “கடந்த 30 ஆண்டுகளாகவே தனது வெளிப்படையாக இல்லாமல் பாதுகாப்பு காரணங்களுகாக மறைமுகமாக இயங்கிவந்தது. இந்த மூடு திரை இப்பெரும் ஊழலுக்கு முக்கிய காரணமாகி விட்டது” என ஒப்புக்கொண்டுள்ளது. தென் கொரிய அணு சக்தி கழகம், தன் துறையில் புரையோடி போய் இருக்கும் ஊழல்களை களைந்து கொள்ளப் போவதாகவும், இனி இது போன்ற தவறுகள் நடக்காது எனவும் தெரிவித்துள்ளது.
தேசியப் பாதுகாப்பு என்ற ஒற்றை காரணத்தைக் காட்டி அணு சக்தி கழகத்தை யாருக்கும் பதில் சொல்ல கடமையற்றவர்களாக ஆக்கியது, எவ்வளவு பெரிய ஊழல் புரிய துணை புரிந்துள்ளது என்பதை தென் கொரிய அணு உலை ஊழல்கள் மிக துல்லியமாக எடுத்துக்காட்டியுள்ளது.
பன்னாட்டு முதலாளிகளுக்கு அடி வருடுவது, மாற்று மின்சக்தி தேவைக்கான திட்டங்களை புறக்கணித்தது, அதிகாரிகளை கண்காணிக்க தவறியது, தனியார் முதலாளிகளை தாராளமாக அனுமதித்தது என்று ஒரு தவறு அதை பலமாக்க இன்னொரு தவறு என தொடர்ச்சியாக தவறுகள் செய்ததில் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் விட்ட தென் கொரியாவின் மக்கள் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அணு உலைகள் இழுத்து முடிவிட்டதால் அதன் ஆபத்து போய்விட போவதில்லை, அது தயரித்து வைத்திருக்கும் அணுக் கழிவுகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு கதிர்வீச்சை துப்பப் போகின்றன, அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான பாகங்களும் ஊழல் கொள்ளைக்குட்படுத்தப்பட்ட தரமற்றவையாக இருக்கும் என்பது உறுதி. பணம் சம்பாதித்த பன்னாட்டு முதலாளிகளும், கொரிய முதலாளிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிப் போய் விட அதன் பாதகங்களை அனுபவிக்க போகிறவர்கள் தென் கொரியாவின் மக்கள் தான்.
கொரியாவிலேயே இதுதான் நிலைமை என்றால் இந்தியாவின் அணு உலைகள் குறித்து சொல்லவே வேண்டாம். ஊழலில் முன்னணி நாடான இந்தியாவில் அணு சக்தித் துறை மட்டும் விதிவிலக்கா என்ன? கூடங்குளம் அணு மின்நிலையம் மின் உற்பத்தியை ஆரம்பிக்கப் போகிறது. ஊழல் செய்திகளோ, அழிவு செய்திகளோ என்று வரப்போகிறது என்று நாம் காத்திருக்க வேண்டுமா?