போராட்டம் இது போராட்டம்
மாணவர்களுக்கான போராட்டம்
வாத்தியார் கேட்டு போராட்டம்
வகுப்பறை கேட்டு போராட்டம்
hrpc போராட்டம், பெற்றோர் சங்கப் போராட்டம்

வெல்லட்டும் வெல்லட்டும்

வாத்தியார போடு வாத்தியாரபோடு
தமிழக அரசே வாத்தியாரபோடு
அரசுப்பள்ளிகளில் வாத்தியார போடு

placards

வகுப்பறை கட்டு வகுப்பறைகட்டு
தமிழக அரசே வகுப்பறை கட்டு
மரத்தடியில் மாணவர்கள்
உடனடியாக வகுப்பறை கட்டு

நூலகம் இல்லை, மைதானம் இல்லை
பந்தும் இல்ல, பி.டியும் இல்லை
மயக்கம் ஏன்? மயக்கம் ஏன்?
கல்வி துறையே மயக்கம் ஏன்?

வாத்தியார் இல்லை வகுப்பறை இல்லை
நூலகம் இல்லை நூலும் இல்லை
ஆரம்பப்பள்ளியும் ஆடிக்கிடக்குது
கிராமப்பள்ளியும் கிடந்து தவிக்கிது

அனுமதியோம் அனுமதியோம்

தனியாருக்கு தாரைவார்க்கும்
அரசுப்பள்ளிகளை அழிக்க நினைக்கும்
தனியார்மயத்தை அனுமதியோம்.

முறியடிப்போம் முறியடிப்போம்

அரசுப்பள்ளிகளை அழிக்க வரும்
தனியார்மயத்தை முறியடிப்போம்.

சுதந்திரதின கொண்டாட்டமா
60 ஆண்டு பெருமை பேசுறான்
குடிநீருக்கு வழியில்ல
சிறுநீருக்கும் வழியில்ல
மரத்தடியில் மாணவர்கள்
மதிய உணவில் பல்லி கிடக்குது
யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்

சாராயம் வித்த பொறுக்கி யெல்லாம்
கல்வி வள்ளல் ஆகிட்டான்
கல்வி கொடுத்த அரசாங்கம்
சாராயம் விக்கிது சாராயம் விக்கிது

துணை போகுது துணை போகுது
தமிழக அரசே துணை போகுது
தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையை
பாதுகாக்க துணை போகுது
தமிழக அரசே துணைபோகுது

முறியடிப்போம் முறியடிப்போம்
அரசுப்பள்ளிக்கு வேட்டு வைக்கும்
தனியார் பள்ளிக்கு ரேட்டு பேசும்
தனியார்மயக் கொள்கையை
முறியடிப்போம் முறியடிப்போம்

கல்வி கற்பது மாணவன் உரிமை
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை
கல்வி என்பது சேவையடா
கல்வி என்பது சேவையடா
அனுமதியோம் அனுமதியோம்
கல்வியை விற்பதற்கு
அனுமதியோம் அனுமதியோம்

கட்டபொம்மன், திப்புசுல்தான்
சின்னமலை, மருதுபாண்டி
தியாகத்திற்கு பதில் சொல்
தமிழக அரசே பதில் சொல்
தனியார்மயத்தை ஆதரிக்கும்
அரசியல் கட்சிகளே பதில் சொல்

வித்துபுட்டான் வித்துபுட்டான்
நாட்டையும், வீட்டையும்
கேக்காம வித்துபுட்டான்
எல்லாத்தையும் வித்துபுட்டான்

ஏமாத்துறான் ஏமாத்தறான்
சுதந்திரம்னு சொல்லி சொல்லி
மிட்டாய் கொடுத்து ஏமாத்தறான்
யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்
அரசுப்பள்ளியில் படித்தவன் எல்லாம்
ஐ.ஏ.ஏஸ்.ஆகியிருக்கான்
தாய்மொழியில் படித்தவர் எல்லாம்
தலைமைப்பதவிக்கு போயிருக்கான்

பெற்றோர்களே பெற்றோர்களே
துள்ளி விளையாடும் பிள்ளைகளை
மார்க்கெடுக்கும் எந்திரமாக
மனப்பாடம் செய்யும் மெசினாக
தனியார்பள்ளி மாத்துறான், கட்டணக்கொள்ளை அடிக்கிறான்.
புறக்கணிப்போம், புறக்கணிப்போம் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்
பாதுகாப்போம் பாதுகாப்போம் அரசு பள்ளிகளை பாதுகாப்போம்
முறியடிப்போம் முறியடிப்போம்
தனியார்மயக் கல்வியை
முறியடிப்போம் முறியடிப்போம்

என்று முழக்கங்களுடன் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய பேரணி ஆகஸ்ட் 15-ம் தேதி விருத்தாச்சலத்தில் நடைபெற்றது.  பேரணியில் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் [படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மக்கள் பேரணியின் பின் தொடர்ந்து வாகனங்கள் அணிவகுத்தன, கடை வீதியெங்கும் கடைகளில் முதலாளிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என வெளியே வந்து கையசைத்து ஆதரவு தெரிவித்தது நீரோட்டத்தில் கிளை ஆறுகள் கலக்க தயாராக இருப்பது போல் இருந்தது. காவல்துறை செய்வதுறியாது திகைத்தது.

துவக்கத்தில் பேரணிக்கு அனுமதி இல்லை, மேலிடத்தின் உத்திரவு, மாவட்டம் முழுவதும் யாருக்கும் அனுமதி இல்லை என  காவல்துறை தடுத்தது.

“நாங்கள் உங்களிடம் அனுமதி கேட்கவில்லை, தகவல்தான் தெரிவித்தோம். கல்வி உரிமைக்காக, அரசுப்ப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், வகுப்பறைக்காக போராடுகிறோம். பெற்றோர்களுக்கும் அரசின் செவிட்டு காதுகளுக்கு கேட்கவே சுதந்திர தினத்தில் பேரணி மறியல் என மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்து இன்று நடத்துகிறோம். பெரும்பான்மையான மக்களுக்கான சுதந்திரம் இல்லை. அதனால்தான் இன்று செய்கிறோம். பேரணிக்கு அனுமதித்தால் சுமுகமாக கைதாவோம், தடுத்தால் காவல்துறைக்கு ஒத்துழைக்க மாட்டோம்” என காவல்துறையிடம் கறாராக பேசினோம்.

“மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன்” என காவல் ஆய்வாளர் பேசினார். பிறகு அங்கு வந்து ஏதும் பிரச்சினை வராதே என அச்சமுடன் கேட்டுக் கொண்டு பேரணிக்கு காவல்துறை அனுமதித்து.

மனித உரிமை பாது காப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு பேரணியை துவக்கி வைத்து பேசினார். சிதம்பரம் நகரத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் முஜுப்பூர், பெரியண்ணன், செல்வக்குமார் கலையரசன் மற்றும் பலர் வேன் வைத்து கொண்டு வந்து கலந்து கொண்டனர். அது போல் சேத்தியாதோப்பு கிளையில் இருந்து பா லு மகேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தமிழரசன், வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் செந்தில் குமார் அருள், செந்தில், புஷ்பதேவன், சுசீந்திரன், விருத்தாசலம் கிளையில் இருந்து செந்தாமரைக்கந்தன், செல்வக்குமார், செல்வம், குணசேகரன், குமார் அய்யா வெங்கடேசன், மாணவர்கள் பழனியப்பன், பாலாஜி, மணிவாசகம், முருகானந்தம், கதிர்வேல், ஆசிரியர் மாசிலாமணி மற்றும் பலர் கடந்த 20 நாட்களாக கிராம்ம் தோறும் துண்டு பிரசுரம் கொடுத்தது, போஸ்டர் ஒட்டியது, பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தது, மாணவர்களை பார்த்து அழைத்தது என இடைவிடாது செய்த கடுமையான உழைப்பால் ஆகஸ்ட் 15 அன்று அனுமதி இன்றி காவல்துறை தடையை மீறி நடந்த பேரணி மறியலில் இவ்வளவு மக்கள் கலந்து கொண்டனர்.

வாத்தியார போடு, வகுப்பறையை கட்டு, கல்வி என்பது சேவையே, வியாபாரம் அல்ல, அரசுப்பள்ளிகளை அழிக்க வரும் தனியார்மயக் கல்வியை அனுமதியோம் என்ற முழக்கத்தை  மக்கள் தங்கள்  சொந்த பிரச்சினையின் வெளிப்பாடாக ஏற்றுக் கொண்டனர்.

பேரணியில் பள்ளி மாணவர்கள், வழக்கறிர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர்  தங்கள் சொந்த காரியம் போல் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டனர். காவல் ஆய்வாளர் நமது வழக்கறிஞரிடம், “வழக்கமாக ஊர்வலம் பெரிதாக இருக்கும், 50 பேர்தான் கைதாவார்கள். இன்று இவ்வளவு கைது என்றால் நான் எப்படி சாப்பாடு தயார் செய்வது, ராயர் கடையில் ஏற்கனவே 1,700 பாக்கி வைத்திருக்கிறோம்” என புலம்பினார்.

கைது செய்யப்பட்ட மக்கள் [படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மண்டபத்தில் பள்ளி மாணவர்களின் பாடல், நகைச்சுவை, கதை சொல்லுதல், அனுபவங்கள், ஆசிரியர்களின் அறிவுரைகள், வழக்கறிஞர்களின் உரைகள், பெண்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது என நாள் முழுவதும் களை கட்டியது. அனைவரும் போலீசு காவலில் இருக்கிறோம் என்ற அச்சம் சிறிதும் இல்லாமல் வெற்றி விழா போல் கவலையற்று மகிழ்ச்சியாக இருந்தனர். கல்லூரி, பள்ளி மாணவர்கள், அனைவருக்கும் பெற்றோர் சங்கத்தினர் பேனா வழங்கினர். பெற்றோர் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தனர்.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்