privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி ! போலி சோசலிசத்தின் படுதோல்வி !!

பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி ! போலி சோசலிசத்தின் படுதோல்வி !!

-

ழைக்கும் மக்களின் தெருப் போராட்டங்களால் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள இயற்கை வளமிக்க மிகப் பெரிய நாடான பிரேசில், கடந்த இரு மாதங்களாக குலுங்கிக் கொண்டிருக்கிறது. பிரசில்லா, ரியோ டி ஜெனிரோ, சாவோபோலோ, சால்வடார் – எனப் பெருநகரங்களில் உழைக்கும் மக்கள் இலட்சக்கணக்கில் வீதிகளில் திரண்டு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் சாலை மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆளும் கும்பலுக்கும் போலி சோசலிச ஊழல் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்துக்கும் எதிரான இப்போராட்டத்தின் மீதான போலீசின் தாக்குதலை எதிர்த்து மக்கள் வீதிகளில் வீரப்போர் புரிகின்றனர். பல பகுதிகளில் அரசு அலுவலகங்களும் பெரும் வர்த்தக அங்காடிகளும் வங்கிகளும் சூறையாடப்பட்டன. தொழிலாளர்கள், விவசாயிகள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், பெண்கள் -என அனைவரும் அணிதிரண்டு சாலையை மறித்து பல நாட்களாகத் தொடர்ந்து போராடுகின்றனர். அங்கேயே உணவு தயாரித்துக் கொண்டு தங்களுக்குள் விநியோகித்துக் கொள்கின்றனர். இசைக்கருவிகள் ஒலிக்க, ஆடல்-பாடல்களுடன் இரவு பகலாகப் போராட்டம் தொடர்கிறது.

13-brazil-mapபேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்துத் தொடங்கிய இப்போராட்டம், பின்னர் மக்கள் மீதான வரித் திணிப்பு, சூறையாடல், சமத்துவமின்மை, அதிகார முறைகேடுகள், புரையோடிக் கிடக்கும் ஊழல், மருத்துவ – சுகாதார வசதியின்மை, இலவசக் கல்வி இல்லாமை – என அனைத்துக்கும் எதிரான போராட்டமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, வருமாண்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிக்காக 12 பெருநகரங்களில் விளையாட்டரங்கங்களை நவீனப்படுத்த பல்லாயிரம் கோடிகளை ஆட்சியாளர்கள் வாரியிறைப்பதை எதிர்த்து இப்போராட்டம் முன்னேறி வருகிறது. “எங்களுக்குத் தேவை கால்பந்து விளையாட்டுக் கேளிக்கையல்ல. கல்வி, மருத்துவ வசதி, சுகாதார வசதிகள்தான். பொதுப்பணத்தை எடுத்து விளையாட்டுப் போட்டி என்ற பெயரில் சூறையாடுவதை நிறுத்தாதவரை எங்கள் போராட்டம் ஓயாது” என்று எச்சரித்தார், விளையாட்டரங்கங்களை முற்றுகையிட்டு நடக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு இளம்பெண்.

இது உலகமயத்தால் கொழுத்துப் போயுள்ள கோடீசுவர கும்பலுக்கும் அவர்களின் அரசுக்கும் எதிரான ஏழைகளின் போர். எல்லா ஓட்டுக் கட்சிகளும் மக்கள் விரோதிகள். “இது ஒரு தொடக்கம்தான். இன்றைய அரசமைப்பு முறையை மாற்றியமைப்பதுதான் எங்கள் போராட்டத்தின் நோக்கம்” என்று அறிவித்தார், வேலையின்றித் தவிக்கும் ஒரு இளைஞர்.

பிரேசிலின் பொருளாதாரம் வளமாக உள்ளது, தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு நாடு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, ரேசன் கடைகளுக்குப் பதிலாக உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது, வேலையின்மையும் வறுமையும் குறைந்துவிட்டது – என்றெல்லாம் முதலாளித்துவ ஊடகங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்தன. 21-ஆம் நூற்றாண்டுக்கான புதிய வகைப்பட்ட சோசலிசப் பாதையில் பிரேசில் முன்னேறி வருவதாக போலி சோசலிஸ்டுகள் உச்சி முகர்ந்தனர். அவையெல்லாம் வடிகட்டிய பொய்கள் என்பதை 1992-க்குப் பிறகு நடக்கும் இம்மாபெரும் மக்கள் திரள் எழுச்சி நிரூபித்துக் காட்டிவிட்டது.

தொழிலாளர் கட்சி (பி.டி.), சோசலிச சுதந்திரக் கட்சி (பி.ஓ.எஸ்.எல்.), பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (பி.சி.பி.), சுதந்திரத் தாயகக் கட்சி (பி.பி.எல்.), ஐக்கிய சோசலிசத் தொழிலாளர் கட்சி (பி.எஸ்.டி.யு.), தொழிலாளர்களுக்கான கட்சி (பி.சி.ஓ.) – என பிரேசிலில் உள்ள பல வண்ண போலி சோசலிசக் கட்சிகள், தனியார்மய – தாராளமயமாக்கலுக்கு எதிரான மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் வெற்றியைச் சாதித்து, நாடாளுமன்றத்திலும் செனட்டிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றின. இடதுசாரி சாயல் கொண்ட மையவாத பி.எம்.டி. போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தன. இக்கட்சிகளும் அவற்றின் கூட்டணி அரசாங்கமும் ஆளும் வர்க்கத்துடன் இணக்கமாகவே நடந்து கொண்டன.

பிரேசில் உழைக்கும் மக்கள் போராட்டம்
உலகமயத்தால் கொழுத்துப் போயுள்ள கோடீசுவர கும்பலுக்கும் அவர்களின் அரசுக்கும் எதிரான போராட்டத்தில் பிரேசில் நாட்டு உழைக்கும் மக்கள்.

போலி சோசலிசத் தொழிற்சங்கத் தலைவராக இருந்து, பின்னர் பிரேசிலின் அதிபரான தொழிலாளர் கட்சியைச் (பி.டி.) சேர்ந்த லூலா, ஐ.எம்.எஃப். கட்டளையிடும் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவதாக உத்திரவாதம் அளித்த பின்னரே அரசுத் தலைவராக்கப்பட்டார். கீழிருந்து வரும் மக்களின் அதிருப்திக்கு ஒரு வடிகாலாகவும், புரட்சிக்கு எதிரான பாதுகாப்புக் கவசமாகவும் பி.டி. கட்சி மாறிப் போனது.

பிரேசிலில் போலி சோசலிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் நோக்கத்திற்காகவே ஏகாதிபத்தியங்களும் தன்னார்வக் குழுக்களும் “உலக சமூக மன்றம்” (WSF) என்ற அமைப்பை உருவாக்கின. ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கங்களிலிருந்து முகிழ்ந்த முன்னணியாகச் சித்தரிக்கப்பட்ட உலக சமூக மன்றத்தில் பிரேசில் தொழிலாளர் கட்சியும் அப்போதைய பிரேசில் அதிபர் லூலாவும் தலைமைப் பாத்திரமாற்றினர். “இன்னொரு உலகம் சாத்தியமே”, “மாற்றுகள் இருக்கின்றன” – என்று இப்போலி சோசலிசப் பித்தலாட்டத்தையே ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக போலி கம்யூனிஸ்டுகளும் போலி சோசலிஸ்டுகளும் சித்தரித்தனர். ஆனால், எந்த நாட்டில் கருவாகி உருவாகி உலக சமூக மன்றம் வளர்ந்ததோ, அந்த நாட்டிலேயே அது குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டுள்ளதை தற்போதைய மக்களின் எழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

டில்மா ரோவ்செஃப்
பிரேசிலின் போலி சோசலிசப் பெண் அதிபர் டில்மா ரோவ்செஃப்

லூலாவின் பதவிக் காலத்துக்குப் பின்னர், இதர போலி சோசலிச – மையவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து 16 கட்சி கூட்டணி அரசை அமைத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த போலி சோசலிசப் பெண் அதிபரான டில்மா ரோவ்செஃப், அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் அடிக்கட்டுமானப் பணிகளைச் செய்வதை விட, தனியார் நிறுவனங்கள் மூலம் செய்வதுதான் செலவு குறைவானது என்று விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தார். அவரது அமைச்சர்கள் பலரும் ஊழல் பெருச்சாளிகளாக அம்பலப்பட்டுப் போயுள்ளனர். அவரது பி.டி. கட்சியின் விவசாயத் துறை அமைச்சராக இருந்த மிகுவல் ரோசெட்டோ, நிலப்பிரபுக்களின் விசுவாசியாகவே மாறிப் போனார். இப்போலி சோசலிசக் கூட்டணி அரசின் தொலைத்தொடர்பு அமைச்சரோ அலைக்கற்றை ஊழலில் சிக்கி நாறிப் போனார். மறுகாலனியாதிக்கச் சூறையாடலுக்கு ஒரு சோசலிச முகமூடியை அளித்ததைத் தவிர இப்போலி சோசலிசக் கட்சிகளால் வேறெதையும் சாதிக்க முடியவில்லை.

பிரேசிலின் தற்போதைய அரசியலமைப்பு முறையே மோசடியானது. அது பெருமுதலாளிகளுக்கும் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கும் சேவை செய்வதற்கானது. பல்வேறு போலி சோசலிசக் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதிலும், அவை பொதுச் சொத்தைச் சூறையாடும் முதலாளிகளுக்குச் சேவை செய்து பொறுக்கித் தின்னும் கட்சிகள்தான். பொய் நெல்லைக் குத்தி பொங்க முடியாது. உலகமயத்துடன் இசைந்து போகும் போலி சோசலிசத்தால் பெயரளவிலான மக்கள்நலத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும்கூட நிறைவேற்ற முடியாது – என்ற அரிய படிப்பினைகளை உலகிற்கு வழங்கியுள்ள பிரேசில் மக்களின் எழுச்சி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும் சாலை மறியலுமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், போராட்டத்தை சரியான திசையில் வழிநடத்திச் செல்ல ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாததால், பிரேசில் மக்களின் மகத்தான இப்போராட்டம் தொடர்ந்து முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

– தனபால்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________