privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை - ஒழிப்பதுமில்லை!

என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!

-

இயக்குநர் பெர்னாண்டோ மெய்ரலஸ் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ‘சிட்டி ஆஃப் காட்‘(CITY OF GOD). பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரா நகரத்தில் அரசால் உருவாக்கப்பட்ட எந்த அடிப்படை வசதிகளுமற்ற சேரிதான் சிட்டி ஆஃப் காட். அங்கே 1960 முதல் 1980கள் வரை இளங்குற்றவாளிகள் தோன்றுவதையும், பின்பு அவர்கள் நகரத்தை கட்டுப்படுத்தக்கூடிய தாதாக்களாக மாறுவதையும், இறுதியில் ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்டு சாவதையும் படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

தாதாக்களை மையமாகக் கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும் அவை மையமான நாயகன்-வில்லனை மட்டும் சுற்றிக் கொண்டு ஃபார்முலா சினிமா மரபை விட்டு விலகாமல் மசாலாப் படங்களாக நீர்த்துப் போகும். ஆனால் கடவுளின் நகரத்தில் முழுக்க முழுக்க அந்த சேரியின் மாந்தர்கள் விதவிதமான பாத்திரங்களாக வருகிறார்கள். கடவுளின் நகரத்தில் ஏழைச் சிறுவர்கள் எவ்வளவு இயல்பாக வன்முறையின் பக்கம் நகருகிறார்கள் என்பதை உயிரோட்டத்துடன் சித்தரித்திருப்பார் இயக்குநர்.

கடவுளின் நகரத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை பலர் கொல்லப்படுகிறார்கள். மரணம் அங்கே நிரந்தரமாக குடியேறி ஓய்வின்றி வேலை செய்வது போலவும் சொல்லலாம். சமூகத்தில் ஒரு மரணம் தோற்றுவிக்கும் அதிர்ச்சி, துக்கம், துயரம், ஆற்றாமை போன்ற நாகரீக உலகின் உணர்ச்சிகள் அங்கே பெரிய அளவில் இல்லை. அந்த வகையில் கடவுளின் நகரத்தைச் சேர்ந்த சேரிச் சிறுவர்களிடம் மரணபயம் இல்லை.

இப்போது சென்னை என்கவுண்டருக்கு வருவோம். இரு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 5 இளைஞர்கள் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு திட்டமிட்ட போலி மோதல் கொலை என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த இளைஞர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் மற்ற மாநிலங்களிலும் இவர்கள் கொள்ளையடித்தார்கள் என்று பல வழக்குகளை வேறு சேர்த்து வருகிறார்கள். புலனாய்வு செய்ய முடியாத வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பிணங்களைப் போல உதவும் நண்பன் இல்லை.

சென்னை-என்கவுண்டர்
என்கவுண்டர் செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்

பத்திரிகைகள் கொல்லப்பட்ட இளைஞர்களைப் பற்றி பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் உண்மை எது பொய்யெது என்று யாருக்கும் தெரியாது. எனினும் ஒரு வாதத்திற்க்காக இவையனைத்தும் உண்மையென கொள்வோம். கொல்லப்பட்ட இளைஞர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து வட மாநில தொழிலாளிகளும் போலிசிடம் அடையாளங்களை பதிய வேண்டும் என்பதில் ஆரம்பித்து, தற்போது சென்னையில் வாடகைக்கு குடிவைத்திருப்போரின் புகைப்படங்களையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் போலீசுக்குத் தரவேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மாநகர காவல்துறை. நடக்கின்ற எந்தவொரு குற்றத்தையும் தனது அதிகாரத்தையும் மக்கள் மீதான கண்காணிப்பையும் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறது அரசு. அரசு பாசிச மயமாகி வருவதைறியாத மக்களோ, இந்த போலி மோதல் கொலையை வீரசாகசம் போலக் கொண்டாடுகிறார்கள்.

பல நூறு கோடி வங்கிப்பணத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே கொள்ளையடிக்கும் கிங் பிஷர் முதலாளி விஜய் மல்லையாவை என்கவுன்டரில் கொல்லவேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை. ஆனால் வங்கியில் சில இலட்சங்களை கொள்ளையடித்த அந்த இளைஞர்கள் மக்கள் பார்வையில் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று பதிந்திருப்பதற்கு என்ன காரணம்? செயின் பறிப்பு, பீரோ புல்லிங், வழிப்பறி, வீடேறித் திருடுவது போன்ற பெட்டிகேஸ் திருடர்கள்தான் மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக வழிமறிக்கிறார்கள்.

பெருகி வரும் நகரங்களும், விரிந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வும், குறுக்கு வழியில் பணத்தை அள்ளத் தூண்டும் மறுகாலனியாக்க பண்பாட்டு சூழலும்  இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது. எனவே, நாட்டை கொள்ளையிடும் திருடர்களை விட வீட்டைக் கொள்ளையிடும் குற்றவாளிகள் குறித்துத்தான் மக்கள் அதிகம் கவலை கொள்கிறார்கள்.

தான் ஆட்சிக்கு வந்ததும் திருடர்களெல்லாம் பயந்து கொண்டு ஆந்திராவுக்கு ஓடி விட்டதாக கொக்கரித்த ஜெயாவின் பெருமைகளை இத்தகைய குற்றச் செயல்கள் பெருங்கேலி செய்கின்றன. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் திருடர்களெல்லாம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியல்லவா பாய்கிறார்கள்! சரிந்து விட்ட இமேஜை தூக்கி நிறுத்துவதும், குற்றத் தடுப்பு என்ற பெயரில் போலீசு ஆட்சிக்கு அங்கீகாரம் பெறுவதும், குற்றவாளிகளுக்கும் மரண பயத்தை ஏற்படுத்தலாம் என்ற அசட்டு நம்பிக்கையும் இந்தப் போலி மோதலுக்குக் காரணமாகத் தெரிகிறது.

அதன்படியே நடுத்தர வர்க்கம் இந்த என்கவுண்டரை போற்றிப் பாடுகிறது. வழக்கு, ஆனால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் பீகார் கிரிமினல்களுக்கு இந்தப் போலி மோதல் மரணபயத்தை ஏற்படுத்துமென்று யாரேனும் உறுதி அளிக்க முடியுமா?

சென்னை-என்கவுண்டர்இந்தியாவின் வறிய மாநிலங்களில் பீகாருக்கு முதலிடம். எட்டரை கோடி மக்களில் 58%பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். இதன் பொருள் பீகாரில் இளைமைத் துடிப்பு அதிகம் என்பதல்ல, சராசரி ஆயுள் குறைவு என்பதுதான். இந்தியாவின் ஆண்டு தனிநபர் வருமான சராசரி ரூ.60,000 என்றால் பீகாரில் அது 18,000. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் இந்திய சராசரி 22.15% என்றால் பீகாரில் 30.6%. இந்தியாவின் நகரமயமாக்கம் 27.8%, பீகாரில் வெறும் 10.5% மட்டுமே. நகர்ப்புறத்து வறுமை இந்தியாவில் 27.78% என்றால் அது பீகாரில் 32.91%ஆக இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களைத் தாண்டி நிலவுடைமை கொடுங்கோன்மை அதிகமுள்ள மாநிலமும் பீகார்தான். சாதி ஆதிக்கம், தலித் மக்கள் மீதான வன்கொடுமை, விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையடிமையாக வாழ்வது, பெண்கள் முன்னேற்றமின்மை, ரன்பீர் சேனா போன்ற ஆதிக்க சாதி ரவுடிப்படைகள், துப்பாக்கிகள் சரளமாகப் புழங்கும் சூழல் அனைத்தும் பீகாரில் நிலவுகின்றது. அங்கே ஒரு ஓட்டுக்கட்சியின் உள்ளூர் தளபதி கூட துப்பாக்கிகள் தூக்கிய அடியாட்களுடன்தான் வலம் வருகிறார்.

இப்படி வன்முறையும், ஏழ்மையும் நிரம்பி வழியும் இந்த மாநிலத்திலிருந்துதான் ஏழைகள் இந்தியாவெங்கும் பிழைப்பதற்கு செல்கின்றனர். அவ்வண்ணம் தமிழகத்திற்கும் வந்த வண்ணம் இருக்கின்றனர். தமிழகத்தின் ஆலைகளிலும் கட்டிடத்தொழிலிலும் கடுமுழைப்பு வேலைகளை பீகார் தொழிலாளிகள்தான் செய்கின்றனர். உழைப்பதற்கு அவர்கள் அஞ்சுவதில்லை. அவர்கள் அஞ்சுவது வாழ்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்புகளைக் கூட வழங்காத பீகார் மாநிலத்தின் யதார்த்தத்திடம்தான்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு பீகாரில் அதிகம் என்பதாலும், பண்ணைக் கொடுங்கோன்மை – வன்முறைக் கலாச்சாரம் சகஜம் என்பதாலும் அங்கே திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல் முதலான குற்றச் செயல்களெல்லாம் அன்றாட வாழ்வின் அங்கமாகவே ஆகிவிட்டன. கிரிமினல் கும்பல்களிடம் சேருவதும் ஒரு வேலை வாய்ப்பாக இருக்கிறது. சென்னையில் கொல்லப்பட்ட நபர்களின் தலைவர் மட்டும் தொழில்முறை கொள்ளையனாக, ஆடம்பரமாக ஊரில் வாழ்வதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் மிகவும் சாதாரணமானவர்கள். அவர்களில் கூலி வேலை பார்த்து பிழைத்தவர்களே அதிகம். மேலும் அதில் ஓரிருவர் என்ன ஏது என்று தெரியாமலேயே இந்த கொள்ளையர்களுக்கு இடம் கொடுத்து ஆதரவளித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

தமிழக கிரிமினல்களிடம் துப்பாக்கி என்பது இன்னமும் அபூர்வமான பொருளாகத்தான் இருக்கிறது. பீகாரில் அது எளிதில் கிடைக்கிறது. துப்பாக்கி குற்றத்தையும் உருவாக்குவதில்லை, குற்றவாளிகளையும் உருவாக்குவதில்லை. குற்றவாளிகளையும் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளிகளையும் தோற்றுவிக்கும் சமூகப் பின்னணிதான் நம் கவனத்துக்கு உரியது. அதனை தமிழக காவல்துறையால் என்கவுன்டர் செய்து ஒழிக்கமுடியாது.

ஆதிக்க கும்பல்களின் வன்முறைகளால் கொலைகள் சகஜமாகிப்போன அந்த மாநிலத்தின் மக்களுக்கு மரணம் குறித்தும் பெரிய அதிர்ச்சி இருக்கப் போவதில்லை. பீகாரிலிருந்து வரும் மக்கள் குறைந்த கூலிக்கும், கடுமுழைப்புக்கும் அஞ்சுபவர்களல்ல. அங்கிருந்து வரும் குற்றவாளிகளுக்கும் ஒப்பீட்டளவில் மரணபயம் குறைவாகவே இருக்கும். மரணத்தை அண்மையில் கண்டு பழகிய வாழ்க்கையை இத்தகைய என்கவுண்டர்களா மிரட்டிப் பணியவைக்கும்?

__________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012
_____________________________________

 வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்