privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா?

வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா?

-

வழக்கு-எண்-18-9-விமர்சனம்

ஆழமில்லாத பாராட்டும் நிராகரிப்பும்!

க்தி வாய்ந்த ஒரு கலை தன்னை நாடி வரும் மனிதர்களை, அறிமுகமான வாழ்க்கையினூடாக பழக்கப்பட்ட உணர்ச்சிகளில் ஆழ்த்தி பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறிந்திராத முரண்பாடுகளில் சிக்க வைத்து புத்தம் புதிய உணர்வுகளில் கரை ஒதுக்கி, சமூக உணர்வின் அறத்தை மேம்பட்ட நிலையில் பருக வைத்து ஆற்றுப்படுத்தும். அதனால் அந்தக் கலையின் பாதிப்பிலிருந்து  வாழ்வை உள்ளது உள்ளபடி கொஞ்சம் உறுதியோடு எதிர் கொள்ளும் புத்துயிர்ப்பான உற்சாகத்தை பெறுகிறோம். அந்தக் கலையின் செல்வாக்கிலிருந்து புதிய ஆளுமையின் குருத்துக்கள் உரத்துடன் நம்மிடம் முளை விடத் தொடங்கும். அது சமூக வாழ்வின் புதிய எல்லைகளை எண்ணிறந்த முறையில் திறந்து விடுகிறது. களைப்பூட்டும் வாழ்வின் நெடும் பயணம் இத்தகைய கலை உணர்ச்சியால் சாகசமும், இனிமையும், தோழமையும், போராட்ட உணர்வும் கொண்ட பயணமாகிறது.

அப்படி ஒரு கலை உணர்ச்சியை கொஞ்சம் வலியுடன் உணர்த்துகிறது வழக்கு எண் திரைப்படம். சமீபத்திய ஆண்டுகளில் கலையழகும், பொருளாழமும் கொண்ட இப்படியொரு தமிழப் படத்தை பார்த்திருக்கவில்லை. ஆனாலும் என்ன? “OK.OK” போன்ற குப்பைகளுக்குக் கூட தகுதியற்ற கசடுகள் ஓடும் காலத்தில் வழக்கு எண் எனும் வைரக்கல்லின் ஒளி சிறைபட்டிருப்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

வழக்கு எண் திரைப்படம் பிடிக்கவில்லை என்போரை விடுங்கள், பிடித்திருப்பதாக  பாராட்டுபவர்களும் கூட மேலாட்டமான ஒரு மனித நேயம் என்பதாக மட்டும் முடித்துக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகக் கேட்பதாக இருந்தால் அப்படி பிடித்திருக்கிறது என்பவர்களும் வழக்கு எண் திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்புவார்களா?

***

வேலு அனாதையாக்கப்பட்ட ஒரு ஏழை. ஜோதி தந்தையை இழந்த சேரி மகள். ஆர்த்தி பள்ளிக்குச் செல்லும் நடுத்தர வர்க்க மாணவி. தினேஷ் ஆடம்பரத்தில் திளைக்கும் மேட்டுக்குடி மாணவன். நால்வரும் வயதில் விடலைப் பருவத்தினர் என்றாலும் வர்க்கத்தில் வேறுபட்டவர்கள். முதலிருவரும் வாழ்வதற்காக வேலை செய்கிறார்கள். பின்னிருவரும் வாழ்விருப்பதால் படிக்கிறார்கள். கூடவே களிக்கவும் செய்கிறார்கள். மாநகரத்தில் ஏழைகளும், பணக்காரர்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ வேண்டியிருக்கிறது. அந்தச் சார்பு பணத்தாலும், உழைப்பாலும் பறிமாறிக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் ஒரே பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமா?

முடியும் என்று பலவீனமாக சொல்பவர்களும், முடியாது என்று வேகமாக மறுப்பவர்களும் கொண்டிருக்கும் விசாரணையற்ற பொதுப்புத்தியை வாழ்க்கை எனும் உலைக்களத்தில் உருக்கி உண்மையை உணர்ச்சியுடன் உள்ளத்தில் ஏற்ற முனைகிறார் இயக்குநர். எனினும் இந்த படம் பொதுவில் உள்ளே நுழைவதற்கு சிரமப்படும். இது படத்தின் பிரச்சினையா, பார்ப்பவரின் பிரச்சினையா?

இது ஏழைகளின் படமென்றாலும் ஏழைகளுக்கு பிடிக்க வேண்டியதில்லை!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்கர வாழ்க்கையின் வழமையாகிப் போன ஆம்புலன்ஸின் அலறலோடுதான் படத்தின் டைட்டில் காட்சி துவங்குகிறது. வாடிக்கையாகிப் போன வாழ்க்கைத் தருணங்களில் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாக இயங்கும் மக்களின் ஓரிரு கணங்களையாவது இந்த துரித வண்டியின் அலறல் இடைமறிக்காமலில்லை. படத்தின் துவக்கத்திலேயே வாழ்வின் முடிவுக்கு முன்னுரையாக விளக்கும் ஆம்புலன்சின் வருகை கதையின் மர்மங்களுக்கு பீடிகை போடுகிறது.

உயரப் பார்வையிலிருந்து விரைந்தோடும் ஆம்புலன்சுக்கு அடுத்தபடியாக மருத்தவமனையின் நெருப்புக் காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதியின் மங்கலான தாழ்வாரத்தில் ஒரு தாயின் சக்தியற்ற வெடிப்பு அழுகையை நடுப்பார்வை காட்சியினூடாகக் கேட்கிறோம். சற்று தொலைவில் ஆர்த்தி பெற்றோருடன் பதட்டத்தோடும் விம்மலோடும் நிற்கிறாள். சூழ்நிலைகளின் உணர்ச்சிகளை ஈவிரக்கமின்றி ஒதுக்கிவிட்டு தொழில் நுட்ப கேள்விகளை தொடுக்கும் போலீசார். காவல் ஆய்வாளர் குமாரசாமியின் வருகைக்குப் பிறகு கதையின் ஓட்டம் காவல் நிலையத்திற்கு சென்று விடுகிறது.

அதிகாரமும், ஆணவமும், கேட்பார் கேள்வியின்றி குடி கொண்டிருக்கும் காவல் நிலையமும், காவல் ஆய்வாளரின் அறையும் மொத்தப் படத்தின் கதை சொல்லிக் களனாக, மேடையாக மாறுகிறது. அழைத்து வரப்படும் வேலு கறை படிந்த பற்களுடன், இனம் புரியாத தயக்கத்துடன், இருந்தே ஆக வேண்டிய பயத்துடனும் தனது கதையை ஆரம்பிக்கிறான். அனுசரணையான கேள்விகள் மூலம் குமாரசாமி முழுக் கதையையும் வெளிக் கொண்டு வருகிறார். நாற்காலியில் அமர்ந்திருக்கும் நாமும், அவரும், நின்று கொண்டிருக்கும் வேலுவின் பலவீனமான குரலிலிருந்து வரும் வரலாற்றினை கேட்கிறோம். நிற்க வைத்துக் கேட்கப்படும் கதை உட்கார்ந்திருப்பவர்களின் மனதை தைக்க வேண்டுமென்றால் நாமும் நிற்பவனோடு பயணிக்க வேண்டும்.

ஆம்புலன்சு, மருத்துவமனை, காவல் நிலையம் என்று நகரத்து வாழ்வின் இரகசியங்களை வெளிப்படையாக பறைசாற்றும் வேகமான காட்சிகளுக்குப் பிறகு, முடிவுகளின் புதிர்களை அவிழ்க்கும் வண்ணம் ஆரம்பத்திற்கு செல்கிறோம். வேலு அனாதையான கதை ஆரம்பிக்கிறது. இந்தக் கதை முடிவில் அவனது நிலை மாறிவிடவில்லை என்றாலும் அவனைப் போன்றதொரு உறவின் கை அவனோடு நட்பு பாராட்டுகிறது. முடிவும், ஆரம்பமும் மாறி மாறி நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கின்றன.

வழக்கு எண் ஒரு ஏழையின் கதை என்பதை விட பரம ஏழையின் கதை என்று சொல்வது பொருத்தமானது. பாதையோரம் வேலை செய்து, உண்டு, உறங்கி வாழும் தெருவோர மனிதர்கள் பொது வாழ்வின் நியதிகள் எதுவும் இல்லாமல் வாழ்பவர்கள். மூடுண்ட காரிலும், ஏ.சி அறையிலும் உலகை சிறை வைத்திருப்பவர்களுக்கு சாலையோர மனிதர்கள் என்ற ஜீவன்களுக்காக செலவில்லாமல் கொஞ்சம் கருணை காண்பிப்பார்களே ஒழிய அந்த உலகினுக்குள் நுழைந்து பார்க்கும் தைரியமோ தேவையோ அற்றவர்கள்.

இருப்பினும் இயக்குநரும், வேலுவும் அன்னிய வாழ்விலிருக்கும் விதேசி மனிதர்களை இழுத்து வந்து அந்த கையேந்தி பவனுக்குள் சாப்பிட அழைத்துச்  செல்கிறார்கள். அப்போது மூக்கை சுளிக்கிறோமா, முகத்தை, கண்களை, காதுகளை, நாக்கை கொடுக்கிறோமா என்பதிலிருந்து இந்தப் படத்தோடு நம்முடைய உறவு என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது.

தரும்புரி, வட இந்திய முறுக்குக் கம்பெனி, இறுதியில் சென்னையின் கையேந்தி பவன் என்று அலைக்கழிக்கப்படும் வேலு கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் மக்களின் ஒரு வகை மாதிரி. இடைவெளிக்கு முந்தைய பகுதியில் வேலுவின் கதையே அழுத்தமாகக் காட்டப்படுகிறது. விவேகமற்ற வேகத்தையும், கேலிக்குரிய திருப்பங்களையும், பொருளற்ற நகைப்புக்களையும், பெண்ணுடலை நுகர வைக்கும் குத்தாட்டத்தையும் கொண்ட ‘விறுவிறுப்பான’ படங்களில் சிக்குண்டிருக்கும் இரசிகர்கள் எவரையும் வேலுவின் கதை ஈர்ப்பது சிரமம்.

வழக்கு-எண்-18-9-விமர்சனம்வேலுவைப் போன்றே வாழ்வில் தத்தளிக்கும் வேலுக்களும் இந்தப் படத்தை இரசிப்பது கடினம்தான். ஏழைகளுக்கே இந்தப் படம் பெரிய அளவுக்கு பிடிக்காது என்ற உண்மையை ஆரம்பத்திலேயே சொல்லி விடுவோம். ஏழைகள் எவரும் தங்களது கதைகளை ஒரு சினிமாவில் காட்டப்படும் முக்கியத்துவம் கொண்டது என்று கருதுவதில்லை. நகரத்து பெப்சி-கோக் வாழ்வை உறிஞ்சிக் கொண்டே கிராமத்தில் இழந்த பதநீர் வாழ்வு குறித்து ஆட்டோகிராஃப் நினைவுகளாக பெருமையுடன் பீற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு ஊர் நினைவுகள் இனிக்குமென்றால் ஒரு ஏழைக்கு கசக்கவே செய்யும். அவனைப் பொறுத்த வரை ஊர் என்பது வாழ முடியாத, அன்னிய பிரதேசங்களுக்கு துரத்தியடிக்கும் ஒரு வெறுப்பான இருண்ட உலகம்.

அதனால்தான் ஒரு ஏழை, ஒரு பணக்காரப் பெண்ணை காதலிப்பது போன்ற படங்களையே உலகமெங்கும் காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து காமரூனின் டைட்டானிக் வரையும் இந்த ஃபார்முலாவே வெற்றிகரமான கதை மாதிரி. நகரத்து நெரிசலில் உதிரிப் பாட்டாளியாக பிதுங்கி வாழும் அந்த விரட்டப்பட்ட ஏழைகளுக்கு ஒரு சிம்புவோ, தனுஷோ சேரியிலிருந்து நிறைய சேட்டைகளுடன் பணக்கார உலகத்திற்கு மாறும் கதைகளையே அவர்கள் விசில் பறக்க இரசிப்பார்கள்.

சொத்துடைமை வாழ்வால் ஏற்றத் தாழ்வாக பிரிந்திருக்கும் இந்த உலகை ஒரு இயற்கையான அமைப்பு போல மாற்ற முடியாது என்று கருதும் ஏழைகளின் ஆழ்மனத்திலிருக்கும் வாழ்க்கை குறித்த ஆசை இத்தகைய அபத்தமான ‘கனவு’ படங்கள் மூலம் தன்னைத் தணித்துக் கொள்கிறது.

கூடவே மனித சாரத்தை உறிஞ்சிக் கொள்ளும் அவல வாழ்விற்கு மசாலா நிறைந்த குத்தாட்டப் படங்களே பொருத்தமான போதையாக சிந்தனையில் இறங்குகின்றன. ஏழைக்களுக்கென்று குறைந்த பட்ச வாழ்க்கையை கிடைக்கச் செய்யாமல் இந்த போதை ரசனையை மாற்ற முடியுமா? சீசன் காலங்களில் தொடர்ந்து இரவு பகலென்று உழைப்பதற்கு பான்பராக்கும், மதுவும் கை கொடுக்கும் போது அவர்களிடம் சென்று போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊட்ட நாம்  விரும்பினாலும் அதை நிறைவேற்றுவது சாத்தியமா?

எனினும் ‘மேன் மக்களின்’ இன்ப துன்பங்களையே கதையாக, செய்தியாக, நாட்டு நடப்பாக உணர்த்தப்படும் சூழ்நிலைக்கு இவர்களும் விதிவிலக்கல்ல. கஞ்சிக்கு வழியில்லை என்ற போதும் சீதையை மீட்க இராமன் கொண்ட துன்பங்களையும், திரௌபதியின் சபதத்தை நிறைவேற்றிய பாண்டவர்களும்தான் நெடுங்காலம் நமது மக்களின் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த அடிமைத்தன வரலாறு இன்றும் மாறிவிடவில்லை.

ஆனால் சற்று வசதிகள் நிறைந்த மேம்பட்ட வாழ்க்கையை வாழும் நடுத்தர வர்க்கம் கூட வேலுவின் கதையை இரசித்து விடுமா என்ன? வழக்கு எண் திரைப்படம் பொதுவில் ஏழைகளை நல்லவர்களென்றும், பணக்காரர்களை கெட்டவர்களாகவே சித்தரிப்பதாகவும், இது பொதுப்புத்தியை கைப்பற்ற நினைக்கும் மலிவான உத்தியென நடுத்தர வர்க்க ‘அறிவாளிகள்’ பலர் அலுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் இயக்குநரோ, படமோ அப்படி ஒரு ‘மலிவான’ உத்தியைக் கையாளவில்லை. இருந்திருந்தால் அது அனல் பறக்கப் பேசும் விஜயகாந்த் படங்களாக சரிந்திருக்கும். மாறாக இரு வர்க்கங்களும் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள், அறங்கள், சமூக உறவுகளை எப்படி உருவாக்கிக் கொள்கின்றது, பேணுகின்றது, அவற்றின் சமூக விளைவுகள் என்ன என்பதைத்தான் படம் இதயத்திற்கு நெருக்கமான குரலில் மறக்க முடியாத ஒரு பாடலைப் போல இசைக்கின்றது.

அந்தக் கவிதையை இரசிக்க முடியவில்லை என்ற பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினையோடு தொடர்புடையது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வர்க்கம்தான் ஒரு மனிதனுடைய வாழ்வையும், பண்பையும் தீர்மானிக்கிறது என்பதை, தன்னுடைய வாழ்க்கை தன்னுடைய அறிவால் மட்டும் உதித்த ஒன்று என்று பாமரத்தனம் கலந்த மேட்டிமைத்தனத்துடன் நம்பும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் இதை ஏற்க மாட்டார்கள். அல்லது தங்களது வாழ்க்கையை சமூகப் பேரியக்கத்தோடு ஒப்பிட்டு பார்த்து ஒரு மெல்லிய சுயவிமரிசனத்தைக் கூட அவர்களால் செய்ய முடியாது.

இதை படத்தோடும், குறிப்பான பாத்திரச் சித்தரிப்புகள் வரும் கதையோட்டத்தோடும் பரிசீலிப்போம்.

குடும்ப பாசத்தின் தரம், வர்க்கத்தில் வேறுபடுவது நிஜம்!

“தாயில்லாமல் நானில்லை” என்று ஓகேனக்கல் பாறையில் மேக்கப் போட்ட தாயை கிட்டப் பார்வையில் காட்டி, தூரப் பார்வையில் மலைகளின் பின்னணியில் எம்.ஜி.ஆர் பாடும் பாடல் நெடுங்காலம் செல்வாக்கு செலுத்திய தாய்மை குறித்த ஒரு சினிமா சித்திரம். உண்மையான தாய்மை, தந்தைமை குறித்து தமிழ் சினிமா இதுவரை சித்தரிக்கவில்லை. சித்தரித்ததெல்ல்லாம் பெற்றோரை தெய்வம் போல பணிந்து வணங்க வேண்டிய அடிமைத்தனமாகவும், மணிரத்தினம் போன்றோர் படத்தில் வயதுக்கு மீறிய அரட்டையடிக்கும் மேட்டுக்குடி குழந்தைகளின் செல்லத் தொந்தரவாகவும்தான்.

கந்து வட்டிக்கு கடன் வாங்கி விளையாத பயிரை வைத்துக் கொண்டு கடனை அடைக்க முடியாத அவலத்தில் வேலுவின் பெற்றோரை பார்க்கிறோம். கடனை அடைக்க வேலுவின் தாயாரை விபச்சாரத்தில் கூட ஈடுபடுத்த முடியாதபடி அசிங்கமானவள் என்று குதறும் கந்து வட்டியின் கோரமுகத்தைக் காண்கிறோம். கிட்னி விற்றாவது மானத்தை மீட்போம் என்கிறார் தந்தை. அதுவுமில்லை என்றால் விஷம் குடித்து மரிப்போம் என்பதோடு இது மகனுக்கு தெரியக்கூடாது என்றும் அந்த ஏழைப் பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்.

இவையெல்லாம் நாளிதழ்களில் நீர்த்துப் போகும் செய்தியாக கருதப் பழக்கப்படுத்தப்ட்டிருக்கும் வாசிப்பு மனங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தப் போவதில்லைதான். ஆனால் இத்தகைய சூழலில் குழந்தைப் பாசம், பெற்றோர் அரவணைப்பு என்பது எப்படி இருக்க முடியும் என்பதைக் கூட அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்தக் கவனிப்பு பின்னர் ஆர்த்தி, தினேசின் குடும்ப உறவுகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டியதற்கு முக்கியமானது.

பெற்றோரின் தற்கொலை பேச்சை தற்செயலாக கேட்கும் வேலு பள்ளி செல்லும் வயதென்றாலும் அழுதவாறு தானிருக்கும் போது அவர்கள் இறக்க நினைப்பது சரியா, தான் அந்தக் கடனை அடைப்பேன் என்று முறுக்கு கம்பெனி ஏஜெண்டிடம் தன்னை அடகு வைக்கிறான். கடனும் அடைக்கப்படுகிறது. ஆட்டு மந்தை போல வாழும் முறுக்குக் கம்பெனியின் அவலத்தை கடன், பெற்றோர் பாசம் பொருட்டு சகித்துக் கொள்கிறான்.

ஆர்த்தியை பிட்டுப் படமாக எடுத்து நண்பர்களிடம் தனது ஆண்மையை காண்பிக்க வேண்டிய ஹீரோ சாகசத்தில் இருக்கும் தினேஷ் தனது தாயிடம் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறான். தனது கணக்கில் 50,000 ரூபாய் போடுமாறு எரிச்சலுடன் உத்திரவிடுகிறான். தாயோ அப்பனைப் போல மகனும் காசு காசு என்று அலைகிறானென சலித்துக் கொள்கிறாள். அப்படி அவன் என்னதான் செலவு செய்கிறான் என்று வியக்கவும் செய்கிறாள். ஆனாள் அவளும் நன்கொடைக் கொள்ளை மூலம்தான் பள்ளி நடத்தும் பிரபலமான வாழ்கையை கட்டியமைத்திருக்கிறாள். தொலைக்காட்சி விவாதத்தில் தான் நன்கொடை வாங்குவதாக யாராவது நிரூபிக்க முடியுமா என்று சவாலும் விட்டு நடிக்கிறாள். அவர்களுக்கிடையே இருக்கும் உறவு எத்தகையது?

ஊழல் பணத்தை மேலிருந்து கீழ் வரை பங்கு போடும் ஒரு ஆர்.டி.வோ அலுவலக குமாஸ்தாக்களிடம் எத்தகைய நட்பு இருக்குமோ அப்படித்தான் தினேஷ், அவனது தாயின் உறவும் இருந்தாக வேண்டும். இங்கே இரத்த உறவு இருந்தாலும் அது மரபோடு மாசுகளடங்கிய உறவுதான். இரத்த உறவை வைத்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் ஆதிக்க சாதி வெறியர்கள் தங்களுக்குள் அன்னியோன்யமாய் இருப்பார்கள். அந்த அன்னியோன்னியத்தின் யோக்கியதை என்ன என்பது அவர்களது இரத்த உறவு கொண்ட பெண்ணை ‘கீழ்’ வகை இரத்தம் கலந்து கொள்ள முனையும் போது வெட்டிக் கொல்வதிலிருந்து தெரிய வரும். அது சாதிவெறியின் விளைவு என்றால் இது பொருள் வெறியின் விளைவு. இரண்டு விளைவுகளிலும் அடிப்படை மனித நேயம் இருப்பதில்லை. அதனாலேயே சொந்த உறவும் வெற்று ஜம்பத்தின் பால் வேர் கொண்டிருக்கும்.

தினேஷும் அவனது தாயும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள விரும்பாத வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் பணம் தேவை என்ற அளவில் அவர்களுக்கிடையே ஒத்த புரிதல் இருக்கும். தேவைப்பட்ட பணம் வந்த பிறகு அதன் விளைவு என்ன என்பதும் கூட நல்லறங்களின் பால் இருக்கவேண்டியதில்லை. ஆசிட் அடித்த மகனை காப்பாற்றுவதற்கு பள்ளி பிரமுகர் என்ற அந்தஸ்தோடு கொஞ்சம் தாய்ப்பாசமும் கூட இருக்கலாம். ஆனாலும் மகனது கிரிமினல் நடவடிக்கை ஊடகங்களில் வெளிவந்தால் தனது பள்ளியின் பெயர், தனது வி.ஐ.பி அந்தஸ்து எல்லாம் போய்விடும் என்றுதான் அவள் கவலைப்படுகிறாள். அந்த அந்தஸ்துதான் அவளுக்கென்று வசதியான ஒரு மேட்டுக்குடி வாழ்வை வழங்கியிருக்கிறது. எனில் இந்த ‘பாசத்தை’த் தீர்மானிப்பது எது?

கணவனை இழந்து வயதுக்கு வந்த மகளை வேலை செய்ய வைத்து சேரி வாழ்க்கைதான் என்றாலும் எப்போதும் சிடுசிடுத்தவாறு இருக்கிறாள் ஜோதியின் தாய். விதவை மகளென்றால் சமூகத்திலிருக்கும் காளை ஆண்கள் சுலபத்தில் அடக்க முடியும் என்று அலைவார்கள். அந்த சூழ்நிலையை தனது இரட்டை எச்சரிக்கை உணர்வு மூலம் எப்போதும் எதிர் கொள்கிறாள் அந்த தாய். தற்செயலாய் ஜோதியை சந்திக்கும் வேலுவை அவள் எப்போதும் பொறுக்கி என்றே வசைபாடுகிறாள்.

ஏழ்மை என்பதினாலேயே இங்கு தாய்ப்பாசம் எப்போதும் அன்பை வெளிப்படுத்த வேண்டுமென்பதில்லை. பாதுகாப்பற்ற சமூகத்தில் வசைகளே பாதுகாப்பாக இருக்குமென்பதை இந்தத் தாயின் மூலம் உணர்கிறோம். ஆனாலும் அந்த தாய் என்றாவது புன்முறுவலுடன் தனது மகள் வாழ்க்கை அழகை ஆராதிப்பாளா என்பது ஒரு புதிரான கேள்வி. ஜோதியுடன் குடும்பம் நடத்துவதாய் கனவு காணும் வேலுவின் குறு நாவலில் அந்தத் தாயின் சிரிப்பை ஒரு முறை மட்டும் காண்கிறோம். அதுவும் அவன் அவளைப் போல பொறுக்கி என்று பேசிக்காட்டி அந்த புன்முறுவலை தாய், மகள் இருவரிடமும் வரவழைக்கிறான்.

ஆர்த்தியின் நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை பெற்றோர் பாசம் என்பது மேற்கண்ட இரண்டு எதிர்மறை வர்க்கங்களின் கலவையும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்த ஒன்று. எனினும் அந்தக் கலவையில் மேலோங்கி இருக்கும் மதிப்பீடுகள் எந்த வர்க்கத்திற்குரியவை? மாதத்திற்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடும் தினேஷ், ஆர்த்திக்காகவும் கொண்டாடுகிறான். அவளோ, பார்ட்டிக்கு போகக் கூடாது என்று சினம் கொண்ட தந்தையின் சீற்றத்தால் வெறுப்படைகிறாள். 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அதுவும் மவுண்ட் ரோடு ஓட்டல் ஒன்றில் பார்ட்டி கொடுத்து தனது மகளையும் இரவில் அழைக்கிறான் என்று எல்லா அப்பாக்களையும் போல அவர் கோபப்படுகிறார். அவர் கோபப்பட்டு கத்துவதை ஒரு அநாகரீகமான செயலாக எண்ணி முகம் சுளிக்கிறார் ஆர்த்தியின் தாய்.

ஆர்த்தியோ தனது வயதினையொத்த பருவத்தினரின் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட பெற்றோர் புரிந்து கொள்வதில்லை என்பது போல எரிச்சலடைகிறாள். நவநாகரீகத்தையும், கேளிக்கைகளையும் எண்ணிறந்த முறையில் பெருக்கி வரும் மாநகரத்து வாழ்க்கையில் இந்த வேறுபாட்டின் விரிசல் அதிகரிக்குமா, மங்கிப் போகுமா?

தினேஷுடன் காதல் மலரும் நேரத்தில் அவனது திருட்டு கேமரா நடவடிக்கைகளால் அதிர்ச்சியுறும் ஆர்த்தி அதை தன்னுடன் நெருக்கமாக இருக்கும் தாயுடன் கூட பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தனது பிரமோஷனை இனிப்புடன் மகளிடம் பகிர்ந்து கொள்ளும் தாய், ஆர்த்தி 12-ம் வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்பு, அமெரிக்கா என்று கனவுகளை நனவாக்கும் மற்ற நடுத்தர வர்க்க தாய்கள் போலப் பாசம் கொண்டவள்தான். ஆனால் மேலே முன்னேறத் துடிக்கும் படிநிலை, வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளையும் அப்படி முன்னேற்றிச் செல்லாமல் வெளிப்படையான சுயநலத்தை மட்டும்தான் கற்றுக் கொடுக்கிறது. அதனால்தான் ஆர்த்தி தனது தவறினை, பிரச்சினையை, தினேஷின் ஆபாசத்தைக்கூட தாயிடம் நெருக்கமாக வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

வேலுவின் பெற்றோர் கூட தனது தற்கொலை முடிவை மகனிடம் மறைக்க வேண்டுமென்று கருதுகிறார்கள். வேலுவும் தனது பெற்றோர் முகங்களையே மறக்க செய்யும் அளவு நெடுங்காலம் முறுக்குக் கம்பெனியில் வேலை பார்த்த கொடிய வருடங்களை அதே பெற்றோரிடம் மறைக்கவே செய்கிறான். அவர்களும் கற்பாறைகளின் மத்தியில் கடுமுழைப்பு வேலை செய்வதை மறைக்கவே செய்கிறார்கள். இங்கே மற்றவர் நலத்திற்க்காக ஒருவருக்கொருவர் துன்பப்படுவதை மறைக்கிறார்கள். இந்த மறைத்தல் ஆர்த்தியின் மறைத்தலோடு வேறுபடுகிறது. ஆர்த்தியின் சுயநலத்தால் வரும் போலித்தனமும், வேலுவின் சுயநலமற்ற வாழ்வால் வரும் பொறுப்புணர்வையும் புரிந்து கொண்டால் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும்.

பள்ளிக் கல்வி, சமூகக் கல்வி – எது வலிமையானது?

ழக்கு எண் திரைப்படத்தின் பிரதான உணர்ச்சி எது? வேலுவின் காதலும் காதலின் அவலமும்தான் படத்தின் இறுதியில் பார்வையாளரை அதிகமும் சோகம் கொள்ள வைக்கும் உணர்ச்சி என்றால் மறுப்பதற்கில்லை. விடலைப் பருவத்தின் காதலை வியந்தோதும் படங்களை ஏராளம் பார்த்திருக்கிறோம். இங்கும் கூட அத்தகைய விடலைப் பருவத்தின் காதல்தான் வேலுவின் காதலும். ஆனால் இங்கே வழமையாக தமிழ் சினிமா சித்தரிக்கும் காதலின் அற்பவாதத்திலிருந்து வேறுபடும் ஒரு காதலை பார்க்கிறோம்.

கிராமத்து ஏழைகளும், நகரத்து சேரி மைந்தர்களும்  மிகு இளம் வயதிலேயே திருமணம் செய்து விடுகிறார்கள். அதனால் காதலும் கூட அத்தகைய வயதுகளில் சகஜம்தான். இதை வயதுக் கோளாறு என்று பார்ப்பதை விட வாழப் போராடும் துன்பத்தை தனியொருவனாக சுமப்பதை விட இருவராக எதிர்கொள்ளும் ஒரு தேவையும் இருக்கிறது. தருமபுரி வீட்டிலிருந்து விடைபெறும் போது வேலுவின் காதுக்கும், நம்முடைய காதுகளுக்கும் பள்ளியில் அடிக்கும் மணி ஒலிக்கிறது.

“தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்” என்று அவனது பள்ளித் தோழர்கள் பாடும் பாட்டைக் கேட்டவாறே முறுக்கு ஏஜெண்டின் இரு சக்கர வாகனத்தில் ஏக்கத்தோடு பயணிக்கிறான் வேலு. “பள்ளி செல்வோம் பயன்பெறுவோம்” என்ற பள்ளி சுவரெழுத்தை ஒரு எருமைமாடு கத்தி கேலி செய்கிறது. ஆயினும் இதை ஒரு குழந்தை உழைப்பாளர் பிரச்சினையாக மட்டும் பார்ப்போருக்கு படம் வேலு, தினேஷ் கதைகளின் மூலம் வேறு ஒன்றை உணர்த்துகிறது. வேலு பள்ளிக்கூடம் செல்லவில்லை என்றாலும் இந்த சமூகத்தின் பொறுப்பான குடிமகனாக வளர்கிறான். தினேஷ் பள்ளிக்கூடம் செல்வதால் ஒரு பொறுக்கியாகத்தான் உருப்பெறுகிறான். ஆகவே பள்ளிக் கல்வியை விட சமூகக் கல்வி என்பதுதான் முக்கியம். அதை வேலுவுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது, தினேஷுக்கு வாழ்க்கை கெடுத்து கற்பிக்கிறது. இரண்டு வாழ்க்கைகளின் அடிப்படை நியதிகளும் அப்படி வேறுபடுகின்றன.

ஆர்த்தியோ இந்த இரண்டுக்குமிடையிலான போராட்டத்தில் இருக்கிறாள். அவளது பள்ளி வாழ்க்கையும், தோழிகளின் நட்பும், புதிய செல்போன்கள் பற்றியும், அதை பரிசாகத் தரும் தினேஷின் அன்பையும் ஒட்டியே பேசப்படுகிறது. சைக்களில் செல்லும் ஆர்த்தி, காரில் செல்லும் தினேஷின் வாழ்க்கையை ஏக்கமாகக் கொண்டிருக்கிறாள். செல்பேசி வக்கிரத்தை கண்டிக்கும் பெற்றோர்கள் இந்த ஏக்கத்தினை நிச்சயம் தவறு என்று சொல்ல மாட்டார்கள்.

தாய்மைக் காதலும், வக்கிரக் ‘காதலு’ம்!

டத்தில் வேலுவின் காதல் வலிந்து திணிக்கப்படும் ஒன்றாக இல்லை. அந்த வகையில் இது காதலுக்காக தனிச்சிறப்பாக கட்டியமைக்கப்பட்ட கதை அல்ல. பெற்றோர் மரணத்தையே மறைத்துவிட்ட முறுக்கு கம்பெனி முதலாளியோடு சண்டையிட்டு சென்னை வரும் வேலுவை ரோஸி எனும் விலை மாது இரக்கம் கொண்டு ஒரு கையேந்தி பவனில் சேர்த்து விடுகிறாள். கையேந்தி பவனின் அன்றாட வேலைகளின் போது தற்செயலாக அவன் ஜோதியைச் சந்திக்கிறான். அவளது அம்மா ஒருசிடு மூஞ்சி என்றால் மகளோ உணர்ச்சிகளையும், வார்த்தைகளையும் காட்டாதபடி, அழுத்தமானவள். அவளுண்டு அவள் வேலையுண்டு என்று இருப்பவள். அந்த அமைதியான பெண்ணோடு ஏற்பட்ட தற்செயலான சந்திப்புகள் வேலுவை ஒரு பொறுக்கி போல காட்டி விடுகின்றன. இதனால் அவன் ஜோதியையும், அவளது தாயையும் ஒரு தொந்தரவு போலவே கருதுகிறான்.

கொஞ்ச நாட்களாக ரோஸி அக்காவைக் காணாமல் வருத்தப்படும் வேலு அவளைத் தேடி சேரிக்குச் செல்கிறான். அங்கு தற்செயலாக ஜோதியின் குடிசையைப் பார்க்கிறான். அவளோ அடுத்த வீட்டிலிருக்கும் மன வளர்ச்சியற்ற குழந்தையோடு அன்பாக பழகுகிறாள். அடுத்த காட்சியில் அவள் அந்தக் குழந்தையை சுமந்து சென்று பள்ளியில் விடுகிறாள். மனித உறவுகளில் மற்றவருக்கு பணிவிடை செய்யும் போது பதிலுக்கு நன்றியை முகத்திலோ, வார்த்தைகளிலோ, நடத்தையிலோ காட்டத் தெரியாதவர்கள் இந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள். அவர்களோடு உறவாடுவதற்கென்று ஒரு பெரிய மனம் வேண்டும். பலனை எதிர்பார்க்காத பெருங்கருணை இல்லாமல் அந்த உறவு சாத்தியமில்லை. ஜோதிக்கு அது இருக்கிறது என்பதை கண்டறியும் வேலு முதன்முறையாக அவளை நேசத்துடன் பார்க்கிறான்.

அப்போது நினைவுக் காட்சியில் அவனது அம்மா வந்து போகிறாள். மண் சரிந்து தருமபுரியில் புதையுண்ட தனது தாயை மீண்டும் கண்டெடுத்தது போன்ற ஒரு உற்சாகத்தை அடைகிறான். காட்சியின் கருப்பொருளை பார்வையாளர்கள் கண்டு கொள்ளாமல் போகும் அபாயம் இருக்குமென கருதும் இயக்குநர் பின்னர் இதையே வேலுவின் வார்த்தைகள் மூலம் மீண்டும் சொல்கிறார். “யாரு என்ன்னன்னு பாக்காம என் அம்மாவும் இப்படித்தான் பலருக்கும் உதவும், ஜோதி மட்டும்  கிடைத்தால் எனக்கு எங்கம்மாவே கிடைச்ச மாதிரி” என்று அவன் உடன் வேலை பார்க்கும் சின்னச்சாமியிடம் பகிர்ந்து கொள்கிறான். பிடிக்காத பெண் பிடித்துப் போகும் சூட்சுமத்தை அறிந்து கொண்ட சின்னச்சாமியும் உடனே காதலை தெரிவிக்குமாறு கூறுகிறான். ஆனாலும் அந்க் காதலை இறுதிக் காட்சிக்கு முன்பு வரை அவனே நேரிட்டு தெரிவிக்கவில்லை.

ஜோதியின் பேசாத விழிகளில் தனது தாயின் நேசத்தை அடையாளம் காணும் வேலுவின் காதல் தமிழ் சினிமாவுக்கு புதிதில்லையா? அழகு, ரசனை, அந்தஸ்து போன்றவற்றின் பொய்யானக் கற்பிதத்திலிருந்து கொசுக்களைப் போல உற்பத்தி செய்யும் தமிழ் சினிமா மற்றும் சமூகக் காதலிலிருந்து வேறுபட்டு, அந்த அலங்கார படிமங்களை உடைத்துக் கொண்டு மனித நேயத்தின் அழகிலிருந்து ஒரு காதல் உருப்பெறுகிறது என்பதை எத்தனை பேர் இரசித்திருப்பார்கள்?

வழக்கு-எண்-18-9-விமர்சனம்தினேஷூக்கு காதல் ஒரு பிரச்சினை அல்ல. வம்படியாக ஒரு பெண்ணை துரத்தி, அடிமைத்தனத்துடன் வற்புறுத்தி, காதலித்தே ஆகவேண்டுமென தெறிக்கும் தமிழ் சினிமாவின் டார்ச்சர் காதல் தற்போதைய விடலைகளிடம் கொஞ்சம் மாறி வெளிப்படுகிறது. எத்தனை பெண்களை வீழ்த்தினோம், மடியாத மாட்டை படிய வைத்த ஆண்மை என்று எண்ணிக்கையில் பெருமிதம் பார்க்கும் அவர்களை தொழில்நுட்பம் வேறு உசுப்பி விடுகிறது. விளைவு  செல்பேசிகளில் அவர்களது வேட்டை வக்கிரங்கள் படங்களுடன் தமது பேராண்மையை பறை சாற்றுகின்றன.

இத்தனை நாளைக்குள் ஆர்த்தியின் குளியலறை காட்சியை மட்டுமல்ல, படுக்கையறைக் காட்சியைக் கூட கொண்டு வர முடியும் என்பதிலிருந்து தினேஷின் ஆளுமை நிரூபித்துக் கொள்ளத் துடிக்கிறது. தாயிடம் எரிந்து விழும் தினேஷ், ஆர்த்தியிடம் அத்தனை நல்லவன் போல இங்கிதமாக நடிக்கிறான். அவளது தந்தை திட்டுவதைக் கூட சரியானது என்றே வலை வீசுகிறான். அவனது மலிவுத்தனத்தை காட்டும் விதமாக “மாமா நீங்க எங்க இருக்கீங்க” என்ற ஆர்த்திக்காக அவன் தெரிவு செய்திருக்கும் அழைப்பு ட்யூனே சொல்லி விடுகிறது.

ஆர்த்தியை வீழ்த்துவதற்கு காஸ்ட்லியான செல்போன், காஃபி ஷாப், ஹாட் அன்ட் கியூட் எம்.எம்.எஸ், பீச் ரிசார்ட் போன்றவையே அவனுக்கு போதுமானவையாக இருக்கின்றன. எல்லாம் காசை விட்டெறிந்தால் கிடைத்து விடும் சமாச்சாரங்கள். ஆர்த்தியின் கோணத்திலிருந்து பார்க்கும் போதும் இவையே அவள் அவன் மீது கொள்ளும் ஈர்ப்பு அல்லது காதலுக்கு போதுமானவையாக இருக்கின்றன. முதல் சந்திப்பிலேயே கெமிஸ்டிரி சந்தேகத்தோடு வரும் அவன் பேசும் காஸ்ட்லியான செல்போன் அவளது கவனத்தை ஈர்க்கிறது.

அவனது செட்டப் பிறந்த நாள் பார்ட்டிற்கு போக முடியவில்லை என்று வருத்தப்படும் ஆர்த்தியை அவளது தோழிகள் மேலும் குற்ற உணர்வு அடைய வைக்கிறார்கள். பின்னர் அவன் புத்தம் புதிய செல்பேசியை பரிசாக தரும்போது ஆர்த்தி மட்டுமல்ல, அவளது தோழிகளும் சரணடைந்து விடுகிறார்கள். ஆர்த்திக்கு ஆரம்பத்தில் சிறிது தயக்கம் இருக்கும் போது பழகிப்பாரு, பணக்க்காரன்தானே, நல்ல வாய்ப்பில்லையா, பிடிக்கவில்லை என்றால் பின்னர் உறவை முறித்துக் கொள் என்று ஆர்த்தியின் வகுப்புத் தோழி ஸ்வேதா ஆலோசனை கூறுகிறாள்.

ஆர்த்தியும், தினேஷும் சந்தித்துக் கொள்ளும்போது இருவரது மனக் கிடைக்கையும் என்னவென்று நாம் அவர்களது பின்னணிக் குரல் மூலம் அறிகிறோம். தினேஷின் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மீது ஆர்த்திக்கு சற்று அலுப்பு, ஆர்த்தியின் நல்லொழுக்க கவச நடவடிக்கைகள் மீது தினேஷுக்கு வெறுப்பு. ஆனாலும் கவன ஈர்ப்பு சாகசம் ஒரு நடுத்தர வர்க்க மாணவியை வீழ்த்திவிடப் போதுமானது. அதேநேரம் ஆர்த்தி ஒரு கெட்ட பெண் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

ஆனால் அவள் நல்ல விதமான பெண் என்பதற்கு என்ன முகாந்திரம்? படத்தில் வரும் இந்த செல்பேசி ஆபாசம் பார்வையாளர்களில் இருக்கும் நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு ஒரு பாடம் என்ற வகையில் தமது வாரிசுகளுக்கு எடுத்து சொல்லப் பயன்படலாம். அதை சாக்கிட்டு ஆர்த்தியின் விடலைக் காதல் ஒரு இன்பாச்சுவேசன் என்று உபதேசிக்கவும் வாய்ப்பு தரலாம். ஆர்த்தி கூட தினேஷின் செல்பேசி பொறுக்கித்தனத்தை கண்டுபிடித்த பிறகு மறக்கத்தான் முயற்சிக்கிறாள்.

இருப்பினும் அவள் எதிர்காலத்தில் கொஞ்சம் முதிர்ச்சியடைந்த வயதிலும் காதலிப்பதாகவோ, இல்லை மணமுடிப்பதாகவோ இருந்தால் என்ன மதிப்பீடுகளைக் கொண்டு முடிவெடுப்பாள்? இருக்கும் வாழ்க்கையை பொருளால் உயர்த்தும் எதுவும், அது ஒரு மணமகனாக இருந்தால் கூட சரிதாதான் என்ற அணுகுமுறை அப்போதும்தானே இருக்கும்? அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் நீதியை வெறும் ஒரு செல்பேசி விரசம் என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பது அத்தகைய நடுத்தர வர்க்கத்தினர் செய்யும் பிழை. அது பிழைதான் என்பதை எது சரி என்பதினூடாகவும் புரிந்து கொள்ள முடியும். அதற்குத்தான் வேலுவின் காதல் உதவி செய்கிறது.

ரோசி அக்காவுக்கு பணம் கொடுப்பதை தப்பான பொருளில் பார்த்து தன்னை கீழாக நினைக்கும் ஜோதியிடம் எப்படிக் காதலைத் தெரிவிப்பதென அவன் தயங்குகிறான். பின்னர் அவளது முகம் அமிலத்தால் குதறப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் காதலும், தாய்மையும் கலந்து அலறுகிறான். அவளது சிகிச்சைக்காக அந்த கொலைப் பழியை ஏற்றுக் கொள்ளுமாறு காவல் ஆய்வாளர் குமாரவேலு கூறும்போது மறுப்பேதுமில்லாமல் ஏற்றுக் கொள்கிறான்.

பின்னர் இந்தக் கதை தெரிந்ததும், குமாரசாமியின் கயமைத்தனத்தை அறியும் கையோடு ஜோதி, வேலுவின் மாசற்ற காதலை புரிந்து கொள்கிறாள். அதற்கு பணயமாக தனது வாழ்க்கையையும் அளிக்கிறாள். இறுதிக் காட்சியில் அவளது முகத்திரை பறந்து அமில வீச்சால் சிதறுண்ட முகம் தெரிகிறது. வேலு உடைகிறான். ஆனாலும் அங்கே காதல் முதல் முறையாக சிறைக்கம்பிகளுக்கு பின்னால் பறிமாறிக் கொள்ளப்படுகிறது.

தினேஷ் ஆர்த்தியின் காதல் ஜோடனையான விலையுயர்ந்த பொருட்களாலும், வாழ்க்கையாலும் கட்டியமைக்கப்படுகிறது என்றால் வேலு ஜோதியின் காதல் விலைமதிப்பில்லாத தன்னல மறுப்பு உணர்விலிருந்து முளை விடுகிறது. சமூகத்தின் பொறுப்பான குடிமக்களாக இருப்பதற்கு இதில் எந்த ஜோடி தகுதியைக் கொண்டிருக்கிறது என்பதும் அந்த தகுதி எதிலிருந்து வருகிறது என்பதும் முக்கியமானது. தன்னை மட்டும் ஆராதிக்க வேண்டும் என்று சுயநலத்திலிருந்து இயல்பாக எழும் காதல் எதன் பொருட்டு எழுகிறது, எதனால் கலைகிறது என்பதற்கு ஆர்த்தியின் காதலும், நீதிக்காக காதல் வாழ்க்கையையே பலிகொடுப்பது என்ற அளவில் ஜோதியின் காதலும் இரண்டு இலக்கணங்களை முன்வைக்கின்றன. இந்த இலக்கணங்களில் உரசிப் பார்த்துக் கொள்வது மூலம் நமது தரம் என்னவென்று பரிசீலிக்க முடியும்.

சமூக உறவுகளால் புடம் போடப்படும் நேயமும், நேர்மையும்!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்வேலு – ஜோதியின் காதல் தரம் இன்னதுதான் என்று அவர்களது காதலிலிருந்து மட்டுமல்ல அவர்களது ஏனைய சமூக இயக்கத்திலிருந்தும் அறிய முடியும்.

போலிஸ் ஸ்டேசன் விசாரணைக்காக நெடுநேரம் இருக்கும் வேலு தானில்லாமல் முதலாளி சிரமப்படுவார், அனுப்புங்கள் என்று கோருவான். அந்தக் கையேந்தி பவனுக்காக வேலை செய்ய சிறுவனாக வரும் சின்னச்சாமிக்கும் அவனுக்கும் மலரும் நட்பு ஒரு அழகிய கவிதை. உண்மையில் கூத்துக்குழுவில் நடித்திருக்கும் அந்த சிறுவனது நடிப்பை மனமாரப் பாராட்டுவதோடு சினிமாவிற்கும் முயற்சி செய்யுமாறு கூறி, புகைப்படம் எடுக்கவும் உதவுகிறான்.

பணத்துக்காக ரோசி அக்கா இழிவுபடுத்தப்படும் போது அவளைத் தேடிச் சென்று பணம் கொடுக்கிறான். தயங்கும் அவளிடம் தன்னை ஒரு தம்பி போல நினைத்துக் கொண்டு தேவைப்படும் போது கேட்கவும் சொல்கிறான். குடிக்காமல் ஏதாவது நல்லதா வாங்கிச் சாப்பிடச் சொல்லிவிட்டு சென்று விடுகிறான். பின்னாளில் ரோஸி அந்த தொழிலை தலை முழுகியும் தொந்தரவு குறையவில்லை என்பதால் ஊரை விட்டு செல்வதாகவும் அறிகிறான். வேலு பட்டினியால் மயங்கிய நிலையில் ரோஸிதான் அவனுக்கு இட்லி வாங்கிக் கொடுத்து வேலையும் வாங்கிக் கொடுக்கிறாள். எளிய மனிதர்களின் இயல்பான இத்தகைய நட்பு வேறு எப்படி இருக்கும்?

அம்மாவின் செகரட்டரி ஐம்பதாயிரம் ரூபாய் போடுவதா என்று கேட்கும் போது தினேஷ் சீறுகிறான். அவர் தனது செகரட்டரி, மரியாதையுடன் பேசு என்று கூறும் அம்மாவிடம் அதெல்லாம் ஆபிசோடு வைத்துக் கொள் என்று ஏறுகிறான். மொட்டை மாடியிலிருந்து கீழே வாட்ச்மேனிடம் பணத்தை விட்டெறிந்து குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுத்து விட்டு மீதியை வைத்துக் கொள் என்று ஆணையிடுகிறான். அந்த வாட்ச்மேன் தினேஷைப் பார்க்கும் போதெல்லாம் சல்யூட் வைக்கிறார். ஜோதியை பின்தொடர்ந்து அதே அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்கு வரும் வேலுவை அதே வாட்ச்மேன் பொறுக்கி என்று ஜோதியிடம் விசாரிக்கிறார்.

ஆர்த்தியோ தனது வயதினையொத்த ஜோதி தங்களது வீட்டுப் பணிகளை சலிக்காமல் பார்ப்பதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவள் படத்தில் ஜோதியை நேரடியாக இழிவுபடுத்தவில்லைதான். காணாமல் போன மோதிரத்தை கண்டெடுத்த ஜோதியை ஆர்த்தியின் தாய் கூட பலரிடம் பாராட்டுகிறாள். ஆனால் ஜோதி வீட்டு வேலை செய்யும் போது ஆர்த்தி முகக் கண்ணாடியில் அலங்காரம் செய்கிறாள், ஹெட்போனை மாட்டி விட்டுக் கொண்டு பாடல் கேட்கிறாள், குப்புறப்படுத்தவாறு தினேஷிடம் பேசுகிறாள். பொருளாதாரத்தால் விளைந்த இந்த சோம்பேறித்தனம் சமூக உறவுகளிலும் ஒரு வித மேட்டிமைத்தனத்தை உருவாக்கவே செய்கிறது.

மனித உறவுகளில் நாம் கொண்டிருக்கும் நேசம் என்பது எப்படி வெளிப்படுகிறது? சக மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக இத்தகைய உழைப்புகளை விற்கும் காலத்தில் அதை வாங்கும் வர்க்கம் இத்தகைய அடிப்படையை இழந்து விடுகிறது. நடுத்தர வர்க்கமோ, மேட்டுக்குடி வர்க்கமோ தங்களுக்கிடையில் உள்ள உறவை பணத்தால், பொருளால், படிப்புக் கனவுகளால் பரிமாறிக் கொள்கிறதே அன்றி உழைப்புச் சேவையினால் அல்ல. அதாவது அவர்களது வயதான தாயாரோ, தந்தையோ படுத்த படுக்கையில் இருந்தால் கூட முதியோர் இல்லமோ, காஸ்ட்லியான பிரைவேட் நர்சிங்கோதான் அவர்களால் செய்யக்கூடிய பெரிய உதவி. படுக்கையில் கழிக்கும் முதியவர்களை சொந்தக் கைகளால் சுத்தப்படுத்தும் பணியினை அவர்கள் செய்யாமல் பண வலிமையால் செய்யும் போது இந்த உறவில் நேசம் எந்த அளவுக்கு இருக்கும்?

வழக்கு-எண்-18-9-விமர்சனம்ஆக உழைப்பிலிருந்து அன்னியப்படும் அளவிற்கு சுற்றியிருக்கும் சமூக உறவுகளில் அகங்காரம் கலந்த போலித்தனமான பரிமாற்றமே சாத்தியமாகிறது. உழைப்பு என்பதன் பரிமாணத்தை உடலுழைப்பை வைத்து மட்டுமல்ல, மூளையுழைப்பையும் சேர்த்தேதான் சொல்கிறோம். தான் எழுதும் எழுத்தின் மூலம் அளவு கடந்த புகழ் கிடைக்கும் என்று செயல்படும் ஒருவனுக்கும், தனது எழுத்து மாறத்துடிக்கும் சமூகத்தின் ஒரிரு தருணங்களுக்காவது பயன்படட்டும் என்று கருதும் ஒருவருக்கும் பாரிய வேறுபாடுகளுண்டு.

வேலு காதலிலோ, தோழமையிலோ, மனித நேயத்திலோ, பெற்றோரிடத்திலோ அத்தகைய நேயத்தை ஏன் கொண்டிருக்கிறான் என்பதற்கும், ஆர்த்தியும், தினேஷும் அத்தகைய நேயத்தை ஏன் கொண்டிருக்கவில்லை என்பதோடு கொண்டதெல்லாம் பொருள்களின் மதிப்பால் வரும் வெற்று ஜம்பம் என்பதற்கும் அடிப்படை இதுவே.

அந்த வகையில் அமிலத்தால் சிதைக்கப்பட்ட இன்னமும் காதலை தெரிவிக்காத அந்த முகத்திற்காக தனது இளைமையின் பத்து வருடங்களை அர்ப்பணிக்க வேலுவால் முடிந்தது. செய்யாத குற்றத்தினை ஏற்கச் சொல்லி போலிசு மிருகவெறியுடன் அடிக்கும் போதும் அவனால் பணியாமல் உறுதியாக போராட முடிந்தது. ஆனால் மெமரி கார்டை எடுத்து விட்டு தனது வக்கிர முயற்சியை முட்டாளிக்கி விட்டாள் என்ற கோபத்திற்காக ஆர்த்தியின் முகத்தை அமிலத்தால் சிதைப்பதற்கு தினேஷால் நினைக்கவும், செய்யவும் முடிகிறது. அந்தக் கருணைக்கும், இந்த வெறுப்புக்கும் ஊற்று மூலம் எது?

உழைப்பிலும், செல்வத்திலும் வேறுபடும் வர்க்கங்கள் தாங்கள் கற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும் சமூக மதிப்பீடுகளிலும் மாறுபடும் என்பதை இதற்கு மேல் விரிக்கத் தேவையில்லை. இதனால் ஏழைகள் எல்லோரும் ‘நல்லவர்கள்’ என்றும் நடுத்தர வர்க்கம் முழுவதும் ‘கெட்டவர்கள்’ என்றோ பொருளல்ல. ஏழைகள் நடுத்தர வர்க்கத்தையும், நடுத்தர வர்க்கம் முதலாளி வர்க்கத்தையும் ரோல்மாடலாக கொண்டு இயங்குகின்றனர். குறுக்கு வழியில் பணத்தையும், கேளிக்கைகளையும் நுகரத்துடிக்கும் பாதைக்கு பழகியவர்கள் சேரியிலிருந்துதான் பின்னாளில் ரவுடிகளாக மாறுகிறார்கள். ஆனால் பெரும்பான்மை சேரி மக்கள் நேர்மையாக உழைத்து வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

போலவே நடுத்தர வர்க்கம் வாழ்க்கையளவில் தொழிலாளியின் தரத்தையும், இலட்சியத்தில் முதலாளியின் இடத்தையும் அடையத் துடிக்கிறது. பிரச்சினைகளது வீரியத்தின் முன்னால் தாக்குபிடிக்காத உண்மை நிலை அறியும் போது அவர்களும் சமூக விழுமியங்களை அறிய விரும்புகிறார்கள். இந்த நெடிய கட்டுரை முழுவதும் நடுத்தர வர்க்கத்தை நாம் விமரிசித்திருப்பது இந்தப் பார்வையிலிருந்துதான். சமூகத்தின் பொதுவான வகை மாதிரிகளையே மேலே விரிவாக பரிசீலித்தோம். அந்த வகையில் உழைக்கும் மக்கள் என்ற பிரிவில் நடுத்தர வர்க்கமும் வருவார்கள். மாய மானைப் போல மேலே போகத் துடிக்கும் அவர்களது கனவின் அபத்தத்தை கட்டுடைக்கும் அளவுக்கு அவர்களை மண்ணிற்கு இழுத்து வர முடியும். இந்த இழுத்து வருதல் ஒரு நல்ல விளைவு தரும் சிகிச்சை என்பதால் விமரிசனத்தை பொறுத்தருள்க.

படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்மௌனகுரு படத்தில் ஒரு அடாவடியான போலீசைப் பார்த்திருக்கிறோம். இங்கு நேர்மாறாக இங்கிதமாக பேசும் குமாரவேலைப் பார்க்கிறோம். உண்மையில் இவர்களிருவரும் போலிசு உலகத்தில் ஒரு நாணயத்தின் இருபக்கமாக உலவுபவர்கள். அறியாமை அச்சத்தோடு பிரச்சினைகளுக்கு தீர்வுமில்லாமலும் வரும் மக்களை ‘வழி’க்கு கொண்டு வருவது அடிதடியின் மூலம் மட்டுமல்ல, குமாரவேலு போன்ற அமைதியான மிருகங்கள் மூலமும் நடக்கும். இனிக்க இனிக்கப் பேசும் இத்தகையவர்கள் லத்தி இல்லாமலே காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.

தமிழக போலிசின் தத்ரூபமான சித்தரிப்பாக வரும் குமாரவேலுதான் கதையின் திருப்பங்களை முடிவு செய்கிறார். தினேஷின் தாய் தனது தொலைபேசியை துண்டித்து விட்டாள் என்றதும் அவரது சீற்றம் நைச்சியமாக வருகிறது. பின்னர் அவளிடம் பத்து இலட்சத்தை வாங்கிக் கொண்டதும், சாதி அபிமானம், இனி நேரடியாக தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று மனதுக்கு இனியவர் போல மாறுவது எல்லாம் கச்சிதமான உருவாக்கம். படத்தில் முகமற்று வரும் மந்திரி எல்லா மந்திரிகளையும் நினைவு படுத்துவதற்காக அப்படி வருகிறார் போலும்.

ஒரு நல்ல கால்பந்து வீரனுக்குரிய சக்தி எது? அவன் பந்தை வேகமாக அடிப்பதை விட எந்த வேகத்திலும் வரும் பந்தை கட்டுக்குள் கொண்டு வருவதையும், அணி வீரன் சுலபமாக பெறும் வகையில் அந்த பந்தை கட்டுப்பாடாக கடத்தும் கலையும்தான் முக்கியமானது. அதாவது பந்தை கட்டுப்படுத்தும் திறன். அது போல ஒரு நல்ல படத்தின் பாத்திரச் சித்தரிப்பு எல்லை தாண்டாமல் கச்சிதமாக கட்டுப்பாடாக பேசவிடுவது சவாலான ஒன்று. இந்த சவாலில் இயக்குநரும், படக்குழுவினரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதனால்தான் வழக்கு எண்  படத்தை பார்க்கும் போது நேரடியாக ஒரு வாழ்க்கையை பார்த்தது போல உணர்கிறோம். அந்த வகையில் நடிப்பு மிக மிக யதார்த்தமாக, சற்றும் மிகைப்படுத்தல் இல்லாமல் வெளிக் கொணரப்பட்டிருக்கிறது. இன்ஸ்பெக்டர் குமாரவேல், கையேந்தி பவன் உரிமையாளர், ரோஸி, சின்னச்சாமி, ஜோதியின் தாய், ஆர்த்தியின் தாய், தினேஷின் தாய் என்ற முக்கியமான துணைக் கதாபாத்திரங்களும் சரி, சின்ன சின்ன பாத்திரங்களாக வரும் ஸ்வேதா, கஞ்சா விற்பனையாளர், ரோசியின் தோழி, எல்லோரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மூன்று சக்கர சைக்கிளை லாகவமாக ஓட்டும் வேலு, வீட்டு வேலைப் பெண் போல ஜோதி, மேட்டுக்குடி மாணவனது உடல்மொழியை அனாயசமாக கொண்டு வரும் தினேஷ் அனைவரும் இயக்குநரின் கைவண்ணத்தில் ஜொலித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு அதிகமும் தேவைப்படும் குளோசப், மிட்ஷாட்டுகளுக்கு விஜய் மில்டன் பயன்படுத்தியிருக்கும் கேனன் 5D  கேமரா பொருத்தமாகவே இருக்கிறது. பின்னணி இசையும் படத்தின் கதையோட்டத்திற்கு இணையாக சற்று அடக்கமாகவே வந்து போகிறது. கையேந்தி பவன் காட்சிகளின் போது எஃப் எம் ரேடியோவை பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். முன்னும் பின்னும் வந்து போகும் கதை சொல்லலுக்கு இடையூறு இல்லாத அளவில் வேகமான படத்தொகுப்பும் துணை நிற்கிறது. இப்படி படக்குழுவின் ஒட்டு மொத்த ஆதரவையும் தனதாக்கிக் கொண்டு இயக்குநர் பாலாஜி சக்தி வேல் ஒரு நேர்த்தியான படத்தை நிறைவுடன் அளித்திருக்கிறார். அந்த நிறைவு பார்வையாளருக்கும் ஏற்பட வேண்டுமென்பது நமது அதிகப்படியான ஆசை என்றாலும் அது நிறைவேற முடியாத ஒரு கசப்பான உண்மை.

மாணவர்களின் செல்பேசி வக்கிரம் என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைனாக ஆரம்பித்தோமென இயக்குநர் கூறியிருப்பதாக நினைவு. ஆனால் அந்த ஒரு வரி பின்னர் முழு நீளப் படமாக நிலைநிறுத்திக் கொண்ட போது அதன் எல்லைகளும், வீச்சும் வேறு பட்ட களங்களோடு அதிகரித்திருக்கின்றன. குறிப்பிட்ட கதை, பாத்திரங்களோடு உண்மையாக பயணம் செய்யும் போது ஒரு கலைஞன் தான் ஆரம்பத்தில் நினைத்திராத களங்களையும், கண்டுபிடிக்கப்படாத யதார்த்தத்தையும் உணர்கிறான். கலைக்கு உண்மையாக இருக்கும் எவருக்கும் இது நடக்கும். ஆகவே இத்திரைப்படத்தை இயக்குநரின் எண்ணத்திற்கு அப்பாற்பட்டும் நாம் விரித்துப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு வழி கோலியவர் என்ற முறையில் அவரைப் பாரட்டுகிறோம்.

வழக்கு எண்ணை இரசிப்பதற்கு ‘பயிற்சி’ வேண்டும்!

வழக்கு-எண்-18-9-விமர்சனம்
இயக்குநர் பாலாஜி சக்திவேல்

ழக்கு எண் திரைப்படத்தோடு ஒன்றுவதற்கு கொஞ்சம் வாழ்க்கை குறித்த தத்துவக் கண்ணோட்டம் வேண்டும். ஆனால் அத்தகைய பயிற்சி கொண்டிருக்கும் எமது தோழர்களும் சற்று முங்கி விட்டு ஆழத்திற்கு போகாமல் களைப்புடன் மீண்டு விடும் அபாயம் இருக்கிறது. இதில் த.மு.க.எ.ச வினர் பாராட்டு விழா நடத்தி வருவதாக அறிகிறோம். சாதாரணமாக மணிரத்தினம், பாரதிராஜா, வீ.சேகர் போன்றோரது படங்களில் ஏதாவது மத நல்லிணக்கம், சிவப்புத் துண்டு என்று இருந்து விட்டால் இவர்களின் பாராட்டு நிச்சயம் உண்டு.

அப்படி இந்தப் படத்திலும் ஜோதியின் தந்தை தோழர் பாலன், அவரது கம்யூனிச நூல்கள் என்று ஒரு அடையாளம் இருக்கிறது. தோழர்கள் அதை வைத்துத்தான் பாராட்டியிருக்க மாட்டார்கள் என்றாலும், செல்பேசி வக்கிரம், குழந்தை வளர்ப்பு என்று பொதுவான ‘மதிப்பீடுகளை’ வைத்தும் பாராட்டியிருக்கலாம்.

ஆனால் படத்தில் வரும் தோழர் பாலன், லெனினது புத்தகங்கள் கொண்ட ஷாட்டின் குறியீட்டில் ஒரு யதார்த்த மீறல் இருக்கிறது. சிறு முதலாளிகள் தங்களது கடைப் பையன்களை சுறுசுறுப்புடன் வேலை வாங்குவதற்கு பயன்படுத்தும் உத்தி, அவர்களும் நாளைக்கு தனிக்கடை கண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாக வேண்டாமா என்று உசுப்பி விடுவதுதான். கையேந்தி பவன் உரிமையாளர் அப்படி சொன்னதும் அதை நினைத்தவாறு பூங்காவில் படுத்துறங்கும் வேலுவும் கனவு காண்கிறான்.

தாளமும், ஏனைய இசைக்கருவிகளுமற்று ஆண்குரல் மட்டும் பாடும் பாடலின் வரிகளோடு அந்த கனவுக்காட்சி விரிகிறது. அதில் ஜோதியுடன் திருமணம் ஆகிறது. திருமணத்தில் ரோஸி அக்கா, சின்னச்சாமி உள்ளிட்டு அத்தனை பேரும் புத்தாடை அணிந்து மலர்ச்சி பொங்க காட்சி அளிக்கிறார்கள். குழந்தையும் பிறக்கிறது. தனி கையேந்தி பவன் கூட ஆரம்பிக்கிறார்கள். குளித்து விட்டு தலையை துவட்டியவாறு வீட்டினுள் நுழையும் வேலு கதவுக்கருகில் இருக்கும் ஜோதியின் அப்பா தோழர் பாலன் என்ற புகைப்படத்தின் அருகில் இருக்கும் கம்யூனிசப் புத்தகங்களை எடுத்து யாருடையது என்று கேட்கிறான். அப்பாவினுடையது என்று கூறும் ஜோதி அதைப் பறித்து மீண்டும் அடுக்குகிறாள். தந்தையின் நினைவை அவள் அந்த புத்தகங்களின் வழியாக பராமரிக்கிறாள் போலும்.

இந்தக் கனவில் வரும் மற்ற காட்சிகளெல்லாம் அவனுக்குத் தெரிந்த விசயங்கள், பாத்திரங்கள் எனும் போது ஜோதியின் வீட்டில் நுழைந்தே இராத வேலு இந்த புத்தகங்களை பார்த்து யாருடையது என்று எப்படிக் கேட்கிறான்? உண்மையான இருப்பு, அதை அறிந்தே இராத கனவின் காட்சியில் வந்தது எப்படி? நல்லது இந்த எளிய மக்களைக் கடைத்தேற்றும் தத்துவம் கம்யூனிசமாகத்தான் இருக்கும் என்று இயக்குநர் ஒரு கவித்துவக் கனவை அழகோடு காட்ட விரும்பியிருக்கலாம். அந்த அழகினால் இந்த லாஜிக் மீறல் ஒரு கவிதை போல பொருள் பொதிந்ததாக இருக்கிறது.

இறுதிக் காட்சியில் இன்ஸ்பெக்டர் குமாரவேலுவிடம் தனது கடிதத்தை கொடுத்து படிக்கச் செய்கிறாள் ஜோதி. அதில் ஏழை என்பதால் எதுவும் செய்ய மாட்டார்கள், சகித்துக் கொள்வார்கள் என்றுதானே நீ நினைத்தாய், எனது அப்பா அப்படி வளர்க்கவில்லை, நீதிக்காக உயிரையும் துறக்குமாறு வளர்த்திருக்கிறார் என்று அமிலத்தை அவர் மீது வீசுவாள். அந்த சிறிய கடிதம் அளவான வார்த்தைகளால் திருத்தமாக எளிமையாக வெளிப்படையாக எழுதப்பட்டிருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் போராட்டக் குணத்தை விட்டுக் கொடுக்காத உழைக்கும் மக்களின் வீரமும், அந்த வீரத்தை அமைப்பாக்கி புரட்சி நடத்தும் அருகதை உள்ள தத்துவமும் ஜோதி எனும் சேரிமகளின் நடவடிக்கையில் இணைந்திருக்கின்றன.

படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் நன்றியும்.

___________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. திரைபடத்தை மீண்டும் பாத்தது போன்ற ஒரு உணர்வு. ஆழமான விமர்சனம் .. இது வரை இந்த படத்தை பார்க்காத நண்பர்கள் இந்த விமர்சனதுக்குப்பின் பார்ப்பது நிச்சயம். இது போன்ற படைப்புகளுக்கு நாம் கொடுக்கும் ஊக்கம் தான்

  2. மாறுபட்டதாகவும், ஆழமானதாகவும், நன்கு சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்த அருமையான
    விமர்சனம் – மிக்க நன்றிகள்!!!

  3. யோ மேரா இந்தியா – இது என் இந்தியா என்னும் இந்திப்படத்தின் விமர்சனத்தை வெளியிடவும்..

  4. அருமையான விமர்சனம். ஊன்றிப் படித்தேன். கண்டிப்பாக படம், தியேட்டருக்குப் போய் பார்க்க வேண்டும்.

  5. Dear Vianavu
    I saw the film. And I could see the depth of the film only after reading your article. very inteligent author who penned this article. my best wishes to the author.

  6. படம் வெளிவந்த போதே இப்படி ஒரு விமர்சனம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போதாவது இப்படி ஒருவர் எழுதினாரே என்று நிறைவாகத்தான் இருக்கிறது.

    இக் கட்டுரையை எழுதியவர், இதே போல ஒரு பத்துப் படங்களுக்கு (அவை நல்ல படங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை; சமூகத்தில் பாதகங்களை உண்டுபண்ணிய படங்களாகக் கூட இருக்கலாம்)விமர்சனம் எழுதி ஒரு புத்தகமாக வெளியிடலாம்.

    நன்றி! வாழ்க!

    • ராஜசுந்தரராஜன்
      புதிய கலாச்சாரம், வினவில் வெளிவந்துள்ள சினிமா விமரிசனங்கள் இது வரை இரண்டு புத்தகங்களாக ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன.

  7. //தான் எழுதும் எழுத்தின் மூலம் அளவு கடந்த புகழ் கிடைக்கும் என்று செயல்படும் ஒருவனுக்கும், தனது எழுத்து மாறத்துடிக்கும் சமூகத்தின் ஒரிரு தருணங்களுக்காவது பயன்படட்டும் என்று கருதும் ஒருவருக்கும் பாரிய வேறுபாடுகளுண்டு.// அருமை!!!

    இது புரியாம தான் தமிழ் கூறும் நல்லுலகு என்னை புறக்கணிக்கிறது, நான் இனி மலை/மேலை நாட்டுக்குதான் எழுதுவேன் என்று சிலர் சொல்லி திரி(க்)கின்றனர்!!!

  8. சிறந்த ஒரு படைப்பிற்கு சிறந்த ஒரு விமர்சனம். சமூகத்தின் குறுக்கு வெட்டை படம் பிடித்து, தனது படைப்பில் பிரதிபலித்துக் காட்டும் கலைஞராக, உழைப்பாளியாக பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் வெளிப்படுகிறார். இந்த படத்தின் உயிரோட்டத்தை வெளிச்சம் போடும் விமர்சனத்தின் மூலம் வினவு மீண்டும் ஒரு முறை வாழ்க்கை பற்றிய ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது.

    சில எண்ணங்கள்:

    1. கடைசி இருபது நிமிடங்கள் படம் நாடகத்தனமானது. கோர்ட்டுகளில் இவ்வளவு விரைவாக வழக்கு நடப்பதும் தீர்ப்பு வருவதும், தவறான தீர்ப்பு திருத்தப்படுவதும் நடைமுறைக்கு முரணானது. வேலு சிறைக்குப் போவது, இன்ஸ்பெக்டர் குமார வேல் அமைச்சருடன் பேசுவது, ஜோதி வேலுவை கொண்டு போகும் வேனை தொடர்ந்து போவதும் ஆகிய காட்சிகளோடு வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதன் பிறகு சினிமா ஆரம்பித்து விடுகிறது.

    2. சிலருக்கு மிகைப்படுத்தலாக தெரிந்த வேலுவின் சிறு வயது வாழ்க்கை, புலம் பெயர்ந்து வேலை செய்து வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கதைதான்.

    ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு போகிறோம், பொருட்களை வைக்கும் இடத்தில் சீருடை அணிந்த ஒரு பாதுகாவலர். அவரை கடந்து போய் விடுகிறோம். அவரிடம் பேசினால் அவருக்குப் பின்னால் பொய்த்துப் போன விவசாயம், கவனிக்காத குழந்தைகள் என்ற சோக பின் வரலாறு இருக்கும். அவருடன் ஒரு நாள் முழுவதும் இருந்து பார்த்தால் அவர் சாப்பிடுவதும், தூங்குவதும், வேலை செய்வதும் துயரக் காட்சிகளாக விரியும்.

    அப்படித்தான் கடன் வசூலிக்க வரும் கந்து வட்டித் தலைவர்களின் வெள்ளுடை, தரும்புரி கிராமத்து வறுமையின் மத்தியில் கார்ட்டூன் படத்தின் நடுவில் வரும் ரியல் கேரக்டர் போல தெரிவதும், முறுக்கு கம்பெனியில் பையன் வேலைக்குப் போவது, அப்பா அம்மா இறந்து வேலையை விட்டு ஓடி சென்னைக்கு வருவது என்று நடைபாதை உணவுக் கடையில் வேலை செய்யும் வேலுவைப் பற்றி காட்டுகிறார்கள் படத்தில்.

    2. சென்னையில் மயங்கி கிடப்பவனை தண்ணீர் தெளித்து எழுப்பி இட்லி வாங்கி கொடுக்கும் ரோஸி அக்கா, சாப்பாட்டு மூட்டைகளுடன் மதிய உணவை பற்றி கவலைப் பட்டுக் கொண்டு பசியில் மயங்கிக் கிடப்பவனை புறக்கணித்து தள்ளி போகின்றவர்கள், அவனை சாப்பாட்டுக் கடைக்காரரிடம் வேலைக்கு சேர்த்து விடும் ரோசி அக்கா, சாப்பாட்டுக் கடைக்காரர் என்று ஒவ்வொருவரும் சென்னையின் தெருக்களில் நாம் தினமும் சந்திப்பவர்கள்தான்.

    அருகிலுள்ள குடிசைப் பகுதியிலிருந்து அடுக்கு மாடி உயர் நடுத்தர வர்க்க குடியிருப்பு வீட்டில் வேலைக்கு வரும் ஜோதி, அவளுடன் உரசல்களில் மாட்டும் வேலு, ஜோதியின் அம்மா வசவுகளையே தனக்கும் தனது பெண்ணுக்கும் கவசமாக வைத்திருப்பது, ஜூனியராக வேலைக்குச் சேரும் சின்னச் சாமி என்று கதை ஜெட் வேகத்தில் சூடு பிடிக்கிறது. இதற்கு ஊடாக ஜோதி வேலை பார்க்கும் வீட்டின் +2 படிக்கும் மாணவின் முகம் வந்து போகிறது.

    வேலுவுக்கு வரும் காதல் வேலை செய்யும் ஜோதி மீதுதான். அதே பாதையில் தினமும் சைக்கிளில் கடந்து செல்லும் ஆர்த்தி மீது அவனுக்கு கவனமே திரும்புவதில்லை. அதே போல ஆர்த்திக்கும் தினேஷூக்கும் ஜோதியும் வேலுவும் அவர்கள் வாழும் அதே உலகத்தில் வாழும் மனிதர்கள் என்ற உணர்வே ஏற்படுவதில்லை.

    3. இந்தத் திரைப்படம் பற்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான இயக்குனர்களின் சிறப்பு நிகழ்ச்சியில் ஒரு இயக்குனர், அவர் ஊரிலிருந்து சென்னைக்கு ஓடி வந்த போது உணர்ந்த பாதுகாப்பின்மையை வேலுவின் மூலம் மீண்டும் உணர்ந்ததாக உணர்ச்சி வசப்பட்டு குறிப்பிட்டார். ‘நமக்கு என்ன நடந்தாலும் கேள்வி கேட்க யாரும் இல்லை’ என்ற பாதுகாப்பின்மை.

    இந்த திரைப்படத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேலும் மற்று போலீஸ்காரர்களும் அந்த நடைமுறையை தெளிவாக காட்டுகிறார்கள். சாப்பாட்டுக் கடை பையனை நிற்க வைத்து கதை கேட்டல், காத்திருக்கும் போது மூலையில் உட்கார வைத்தல், தேவைப்பட்டால் அழைத்து வந்து கட்டிப் போட்டு அடித்தல், ஜோதிக்கு உட்கார்ந்து கதை சொல்ல வாய்ப்பு, அதுவும் இன்ஸ்பெக்டர் விரும்பும் வரையில்தான், தினேஷ் அம்மா ஜெயலட்சுமி மீது கடுப்பான அவர் இரண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் செய்து அம்மாவை அடாவடியாக பேசி வெளியில் விரட்டி விட்டு பையன் மீது கொலை முயற்சி, தாக்குதல், ஆபாச படங்களை உலாவ விடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளுதல் என்று நாட்டின் சட்ட ஒழுங்கை தூக்கிப் பிடிக்கும் கடைசி அலகுகளான காவல் நிலையங்களின் செயல்பாடுகள்.

    அதன் பிறகு அமைச்சர் மூலமாக ஜெயலட்சுமியுடன் பேரம் பேசி 10 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு தினேஷை போக விட்டு விட்டு வேலுவை கொண்டு வந்து அடித்து, நயவஞ்சகமாக பேசி குற்றத்தை ஏற்றுக் கொள்ள வைக்கிறார்.

    4. சாப்பாட்டுக் கடை ஊழியர்களையும், மெட்ரோ ரயில் தொழிலாளர்களையும், பாலியல் தொழிலாளர்களையும், கல் குவாரியில் வேலை செய்பவர்களையும் விளிம்பு நிலை மனிதர்கள் என்று சொல்லி ஒதுக்கி விடுகிறார்கள் இலக்கிய வாதிகள். சமூகத்தில் இவர்கள்தான் 80% இருக்கிறார்கள். அவர்கள் மொழியில் பார்த்தால் விளிம்புகளே 80% பரவியிருக்கின்றன, 20% மையம் தடித்து வீங்கிப் போய் கிடக்கிறது.

  9. வர்க்கங்களின் வேறுபாட்டை அழகாக விரிக்கும் ஒரு படம். இந்த புரிதல் இல்லாமல் தான் பாராட்டுகளும், புறந்தள்ளி செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. நல்ல விமர்சனம்.

  10. சிறப்பான விமர்சனம் என்று சம்பிரதாயமாக சொல்லிக் கடந்து போக முடியவில்லை. விமர்சனத்தின் பல இடங்களில் ‘அட இதை நாம் கவனிக்கலையே’ என்கிற உணர்வு தோன்றுகிறது. படித்து முடித்ததும் மிக அழகான வாசிப்பின்பத்தில் திளைத்த மகிழ்ச்சியோடு ‘ஏன் இந்தக் கோணங்கள் நமக்குத் தோன்றாமல் போனது?’ என்கிற கேள்வி அரிக்கிறது.

    // சக்தி வாய்ந்த ஒரு கலை தன்னை நாடி வரும் மனிதர்களை, அறிமுகமான வாழ்க்கையினூடாக பழக்கப்பட்ட உணர்ச்சிகளில் ஆழ்த்தி பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அறிந்திராத முரண்பாடுகளில் சிக்க வைத்து புத்தம் புதிய உணர்வுகளில் கரை ஒதுக்கி, சமூக உணர்வின் அறத்தை மேம்பட்ட நிலையில் பருக வைத்து ஆற்றுப்படுத்தும்//

    அறிமுகமான வாழ்க்கையை அறிந்திராத முரண்பாடுகளினூடாய் முன்வைக்கும் ஒரு படைப்பின் பல்வேறு சூட்சுமமான பக்கங்களைப் புரிந்துகொள்ளும் திறனில்லாத மூளைகளுக்கு இந்த விமர்சனம் பக்கத்திலிருந்து பயிற்சியளிக்கிறது. ஒரு படைப்பை எப்படிப் பார்ப்பது, வர்க்கக் கண்ணோட்டம் பெறுவது என்று கையைப் பிடித்து கூடவே அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைக்கிறது.

    //கலையின் செல்வாக்கிலிருந்து புதிய ஆளுமையின் குருத்துக்கள் உரத்துடன் நம்மிடம் முளை விடத் தொடங்கும். அது சமூக வாழ்வின் புதிய எல்லைகளை எண்ணிறந்த முறையில் திறந்து விடுகிறது//

    வாழ்த்துக்கள் வினவு.

    மாசியின் பின்னூட்டமும் மிக அருமை.

  11. மிக‌ ச‌ரியாக‌ சொன்னீர்க‌ள் ந‌ண்ப‌ரே…அழ‌கான க‌லை க‌ண்ணோட்ட‌ம்…த‌ங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம்…

    பாராட்ட‌ வார்த்தைக‌ளே இல்லை….

  12. நானும் படம் பார்த்தேன். வினவைப் படித்தபின் மீண்டும் படம் பார்த்த உணர்வு. வர்க்க முரண்பாட்டை துல்லியமாக சித்தரிக்கும் அற்புதமான தமிழ்ப்படம்.

    படம் முடிந்த பின்…. ஒரு குரல் – “சீரியல் பாத்த மாதிரி இருக்குடா”. இன்னும் பலர் அலுத்துக்கொண்டும் உச்சுக்கொட்டிக்கொண்டும் வெளியேறினர். எனக்கும் கூட ஒருவித வெறுப்புணர்வு. அந்த வெறுப்புக்கு காரணம் உண்டு. படம் படமாக இல்லாமல் உண்மையான வாழ்க்கையில் பயணிக்கிறது. யதார்த்த வாழ்க்கை கசப்பானதாகத்தானே இருக்கிறது.

    உண்மையில், இயக்குநருக்கு இந்தப் பார்வை இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு பாத்திரத்தையும் வினவு நனறாக அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறது. நல்லதொரு விமர்சனம். வினவுக்கு பாராட்டுக்கள்.

  13. அறுவைப் படத்துக்கு அதைவிட அறுவையாக விமர்சனம்! நாலைந்து வார்த்தைகளில் சொல்லிவிடலாம் – ‘இயக்குனருக்கு நல்ல நோக்கம்தான், படம்தான் படு போர்.’

    நேற்று இரவு ஜெயா மூவீஸ்ல ‘செந்தமிழ்ப்பாட்டு’ படம் போட்டான். 20 வருஷத்துக்கு அப்புறம் கூட படம் பார்க்க சூப்பர்! முந்தா நாள் ராஜ் டிஜிடல்ல வசந்த் 20 வருஷம் முந்தி எடுத்த ‘நீ பாதி நான் பாதி’ போட்டான். படம்னா அது படம். இதுல பாரு, பி.வாசுவோ, வசந்தோ சமூகத்தை திருத்துரதுக்காகப் படம் எடுக்கிறதில்ல. இந்த ‘சமூக அக்கறை’ இயக்குனர்கள் அடிக்கிற கூத்துதான் சகிக்க முடியல.
    ஐயா, எங்களுக்கு அட்வைஸ் வேணும்னா, திருக்குறள், நாலடியார் இல்ல பாரதியார் படிச்சுக்கிறோம். அதுக்கு டிக்கெட் வாங்கி தியேட்டருக்கு எதுக்கு வரப்போறோம்?!

    இதுல படம் மொக்கைன்னு விமர்சனம் பண்ணா அடிக்க வேற வர்றானுக. வெளங்கிடும்!

    • நிற்க வைத்துக் கேட்கப்படும் கதை உட்கார்ந்திருப்பவர்களின் மனதை தைக்க வேண்டுமென்றால் நாமும் நிற்பவனோடு பயணிக்க வேண்டும்.

    • விவேகமற்ற வேகத்தையும், கேலிக்குரிய திருப்பங்களையும், பொருளற்ற நகைப்புக்களையும், பெண்ணுடலை நுகர வைக்கும் குத்தாட்டத்தையும் கொண்ட ‘விறுவிறுப்பான’ படங்களில் சிக்குண்டிருக்கும் இரசிகர்கள் எவரையும் வேலுவின் கதை ஈர்ப்பது சிரமம்.

  14. Nice movie. Detailed review. Well written.

    A true incident is slightly touched in this movie. Inspector will catch Dinesh’s friends having sex clips of a lady. One of the friend will say his father is a singer.

    This actually happened in 2005. Singer Mano’s son Shakir and his friends took nude clips of a lady and blackmailed her. They were caught by police and arrested. Like all influential people, Singer Mano used his influence with CM and closed it.

    Now the same son Shakir is debuting as a hero in Tamil movie. This is the fate of Justice in Tamil Nadu.

  15. சென்ற வாரம் தான் இப்படத்தைப் பார்த்தேன். இது பற்றி இதுவரை வந்த விமர்சனங்களில் மிகவும் நேர்த்தியாக படத்தின் ஆழமான தன்மையை அலசியிருக்கும் விமர்சனம் இது. மற்றவர்கள் எல்லாம் வெறும் விமர்சனம் என்கிற அறிவு ஜீவிப் பார்வையில் மட்டுமே இதை பாராட்ட அல்லது திட்ட செய்தார்கள். அதை சமூகப் பார்வையில் மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு வர்க்கங்களின் பார்வையில் நீங்கள் அலசியது அருமை.

    வழக்கு எண் 18 ஐ பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காண்பிக்கப் படவேண்டிய படம்.

    இதை முடிந்த அளவு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். நன்றி.

  16. அருமையான படம். அட்டகாசமான விமர்சனம். நான் படத்தில் தவறவிட்ட பல காட்சிகளை விளக்கியுள்ளிர்கள், நன்றி. விமர்சனத்தை படித்துவிட்டு மீன்டும் ஒரு முறை படம் பார்க்க வேண்டும்.

  17. நானும் இந்த திரைப்படத்தை கண்டுரசித்தேன் , ஆனால் இது போன்ற விமர்சனத்தை படித்ததே இல்லை. இயக்குனருக்கே இந்த காட்சிக்கு இந்த பொருள் தான் கொடுக்கும் என்று இயக்கி இருப்பாரோ என்பது சந்தேகம்தான்!!!!!

  18. epic bore!!! oru karumandhiramamum illa indha padathula.. indha pannadaiga ralitynnra perula edukkura innoru kuppai subramaniapuram, samudhrakani padam, bala cheran, ameer, myskkin kuppai madhiri inoru mokka padam

  19. One of the Best movies among the world cinemas. The best review from Vinavu. Deeper analysis when compared with reviews in ‘cinema thirai vilahumbodhu’.
    kudos to Vinavu.

  20. “வேலு பள்ளிக்கூடம் செல்லவில்லை என்றாலும் இந்த சமூகத்தின் பொறுப்பான குடிமகனாக வளர்கிறான். தினேஷ் பள்ளிக்கூடம் செல்வதால் ஒரு பொறுக்கியாகத்தான் உருப்பெறுகிறான். ஆகவே பள்ளிக் கல்வியை விட சமூகக் கல்வி என்பதுதான் முக்கியம். அதை வேலுவுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது, தினேஷுக்கு வாழ்க்கை கெடுத்து கற்பிக்கிறது. இரண்டு வாழ்க்கைகளின் அடிப்படை நியதிகளும் அப்படி வேறுபடுகின்றன”.

    இயக்குனருக்கும்,பட குழுவினருக்கும், சரியான கோணத்தில் விமர்ச்சித்த வினவிர்க்கும் நன்றிகள் பல.

  21. http://manathiluruthivendumm.blogspot.in/2012/06/vs.html#comment-form
    மனுஷ்யபுத்திரன் VS அறிவுமதி…பத்திரிக்கையாளனுக்கு அருகதை இருக்கிறதா?

    மேற்கண்ட பதில் இட்ட பின்னூட்டம்

    இந்த மனுஷ்யபுத்திரனின் புலம்பல் தான் ஒரு படத்தின் வெற்றியை பாதிக்கப்போகிறதா என்ன ?

    மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பிரச்சினை என்றால் அவர் இப்போது ஒரு கம்பெனிக்கு முதலாளி. முதலாளி யார் மாதிரி சிந்திக்க முடியும் ? முதலாளிகள் மாதிரி தான் சிந்திக்க முடியும் !

    ’ஒவ்வொரு சொல்லுக்கு செயலுக்கும் பின்னல் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது’ என்று மார்க்ஸ் சொன்னாரே அது இதைத் தான்.

    பாலாஜி சக்திவேல் என்கிற நேர்மையான மனிதன் இந்த கேடுகெட்ட தமிழ் சினிமாவிற்குள்ளிருந்து கொண்டு சமூகத்திலுள்ள வர்க்க முரண்பாட்டை பிரச்சார நெடியின்றி அழகான ஒரு கலைப் படைப்பாக்கியிருப்பது இந்த ’முதலாளி’க்கு பிடிக்கவில்லை. இவருடைய புலம்பலுக்கு அது தான் காரணம்.

    ஏழைகள் என்றால் நல்லவர்கள் பணக்காரர்கள் என்றால் கெட்டவர்களா என்று கேட்கிறார் மனுஷ். ஆம் எழுத்தாளரே ஏழைகள் என்றால் நல்லவர்கள் தான். பெரும்பான்மை ஏழை மக்கள் நேர்மையாக உழைத்து வாழும் நல்லவர்கள் தான். சிறுபான்மை ஏழைகள் தவறானவர்களாக இருப்பதற்கும் பணக்கார கூட்டம் தான் காரணம். பணக்காரர்களின் நலன்களைக் காப்பதற்காகவே இருக்கும் இந்த முதலாளித்துவ சமூகம் தான் அந்த சிறுபான்மை ஏழைகளையும் தவறான வழிகளில் தள்ளிவிடுகிறது.

    அதே போல பணக்காரர்கள் மோசமானவர்கள் தான் ஏமாற்றுப்பேர்வழிகள் தான் அதில் என்ன உங்களுக்கு சந்தேகம். சோற்றுக்காக ஏழைகள் உழைத்துத் தின்கிறார்கள். எந்த பணக்காரன் உழைக்கிறான். ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி தான் தின்கிறான். உழைப்பைச் சுரண்டுபவன் உங்களுக்கு நல்லவனாக தெரிகிறானா ?

    இவர் பணக்காரர்களுக்காக பரிந்து பேச காரணம் இவரும் ஒரு பணக்காரர் என்பதே.

    இவரும் ஏழை மக்களை பற்றி ஒன்றும் எழுத மாட்டார், பேசவும் மாட்டார். மாறாக சூக்கும கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பார்.பாலாஜி சக்திவேல் போன்ற சில அரிய படைப்பாளிகள் இது போன்ற சிறந்த படைப்புகளை செய்துவிட்டால் அதைப்பற்றியும் புலம்புகிறார் என்றால் அதற்கு பின்னால் இருப்பது இவருடைய பணக்காரத்தனமும், பணக்கார வர்க்கத்திற்கே உரிய ‘பயமும்’ தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. இது போன்ற கலைப்படைப்புகள் ஏழைகளை பற்றிக்கொண்டால் அடுத்து என்னவாகும் என்கிற ஆளும் வர்க்கத்தின் ’பயம்’ அது !

    வழக்கு எண் பற்றிய ஒரு சரியான பார்வை
    https://www.vinavu.com/2012/06/13/vazhakku-enn-18-9-movie-review/#comments

  22. குங்குமத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியதை விமர்சனம் என்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம்.

    தமிழ் சினிமாவை சீரழிக்கும் கழிசடைகளை எல்லாம் தன்னுடைய விளம்பரத்திற்காக, வியாபாரத்திற்காக மேடை ஏற்றி பயன்படுத்திக்கொள்ளும் நமது ’எழுத்தாளர்’ அவர்களோடு முரன்பட்டுக்கொள்ளாமல்,அதாவது அவர்களைப் பற்றியோ அவர்களுடைய படங்களை பற்றியோ விமர்சனமாக எதையும் எழுதிவிடாமல் கவனமாக தவிர்த்துக்கொள்ளும் நமது எழுத்தாளர் வழக்கு எண்ணோடு முரண்படுவது ஏன் ?

    நமது எழுத்தாளர் படித்த பத்து புத்தகங்களில் ’பிடித்த’ ஒரு புத்தகம் மூலதனம் !!! மூலதனத்தை படித்ததில் பிடித்ததாக கொண்டிருக்கும் ஒருவருக்கு தமது கூலியுழைப்பால் மூலதனத்தை பெருக்கும் ஏழை மக்களை பற்றிய சித்திரம் ஏன் பிடிக்காமல் போனது ? எல்லாவற்றுக்கும் மூலதனம் தான் காரணம் !

    வழக்கு என்னோடு மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பிரச்சினை ? இந்த படத்தை பற்றி இவர் என்ன தான் விமர்சனம் செய்திருக்கிறார் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை, ஒரே புலம்பல். அவருடைய பிரச்சினை வேறு. மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பிரச்சினை என்றால் அவர் இப்போது ஒரு கம்பெனிக்கு முதலாளியாக இருக்கிறார். முதலாளி யார் மாதிரி சிந்திக்க முடியும் ? முதலாளிகள் மாதிரி தான் சிந்திக்க முடியும் !

    ’ஒவ்வொரு சொல்லுக்கு செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது’ என்று மார்க்ஸ் சொன்னாரே அது இது போன்ற வார்த்தைகளைத் தான்.

    பாலாஜி சக்திவேல் என்கிற ஒரு நேர்மையான மனிதன் இந்த கேடுகெட்ட தமிழ் சினிமாவிற்குள்ளிருந்து கொண்டு சமூகத்திலுள்ள வர்க்க முரண்பாட்டை பிரச்சார நெடியின்றி அழகான ஒரு கலைப் படைப்பாக்கியிருப்பது இந்த ’முதலாளி’க்கு பிடிக்கவில்லை. அது தான் விசயம். எழுத்தாளர் பெருந்தகையின் புலம்பலுக்கு அது தான் காரணம்.

    ஏழைகள் என்றால் நல்லவர்கள் பணக்காரர்கள் என்றால் கெட்டவர்களா என்று கேட்கிறார் மனுஷ். ஆம் எழுத்தாளரே ஏழைகள் என்றால் நல்லவர்கள் தான். பெரும்பான்மை ஏழை மக்கள் நேர்மையாக உழைத்து வாழும் நல்லவர்கள் தான். சிறுபான்மை ஏழைகள் தவறானவர்களாக இருப்பதற்கும் பணக்கார கூட்டம் தான் காரணம். பணக்காரர்களின் நலன்களைக் காப்பதற்காகவே இருக்கும் இந்த முதலாளித்துவ சமூகம் தான் அந்த சிறுபான்மை ஏழைகளையும் தவறான வழிகளில் தள்ளிவிடுகிறது.

    அதே போல பணக்காரர்கள் மோசமானவர்கள் தான் ஏமாற்றுப்பேர்வழிகள் தான் அதில் என்ன உங்களுக்கு சந்தேகம். சோற்றுக்காக ஏழைகள் உழைத்துத் தின்கிறார்கள். எந்த பணக்காரன் உழைக்கிறான். பணக்கார கூட்டம் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி தான் தின்கிறது. அப்படி உழைப்பைச் சுரண்டுபவன் உங்களுக்கு நல்லவனாக தெரிகிறானா ?

    இவர் பணக்காரர்களுக்காக பரிந்து பேச காரணம் இவரும் ஒரு பணக்காரர் என்பதே.

    இவர் ஏழை மக்களை பற்றி ஒன்றும் எழுத மாட்டார், பேசவும் மாட்டார். மாறாக சூக்கும கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பார். பாலாஜி சக்திவேல் போன்ற சில அரிய படைப்பாளிகள் இது போன்ற சிறந்த படைப்புகளை செய்துவிட்டால் அதைப்பற்றியும் புலம்பித்தள்ளுகிறார் என்றால் அதற்கு பின்னால் இருப்பது இவருடைய பணக்காரத்தனமும், பணக்கார வர்க்கத்திற்கே உரிய ‘பயமும்’ தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. இது போன்ற கலைப்படைப்புகள் ஏழைகளை பற்றிக்கொண்டால் என்னாவது என்கிற ஆளும் வர்க்கத்தின் ’பயம்’ தான் அது !

    ஹரன் பிரசன்னா பதிவில் இட்ட பின்னூட்டம்
    http://www.haranprasanna.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86.html#comment-2246

    வழக்கு எண் பற்றிய ஒரு சரியான பார்வை
    https://www.vinavu.com/2012/06/13/vazhakku-enn-18-9-movie-review/#comments

  23. nalla padaipu…ungal vimarsanthil tha.mu.eka.sa vai vambuku izhuthu en nu therila?? gouravam padam samanthama vaaaaayaaaaaaa therakala eannnnnn???????

Leave a Reply to kumaran பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க