privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -3

கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -3

-

வோடாபோன் தீர்ப்பைத் தொடர்ந்து ‘வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதிகள்‘ (General Anti-Avoidance Rules) என்றொரு புதிய சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக நிதி மசோதாவை அறிமுகப் படுத்திய பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

வரி ஏய்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வரியில்லா சொர்க்கத் தீவுகளில் தொடங்கப்படும் நிறுவனங்கள் மீதும், வரி ஏய்ப்புக்காகவே செய்யப்படும் பரிவர்த்தனைகள் மீதும் வரி விதிக்கும் அதிகாரத்தை வருமானவரித்துறை ஆணையர்களுக்கு வழங்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அரசு கூறியது. இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஒரு பெயர்ப்பலகை கம்பெனியைத் தொடங்கி, அதன் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து விட்டால், தானாகவே வரிச்சலுகை கிடைத்து விடும் என்பதே தற்போதைய நிலை. இதனை மாற்றி,  இத்தகைய நிறுவனங்கள் உண்மையிலேயே அந்த நாட்டில் இருக்கின்றனவா, அல்லது அவை வெறும் பெயர்ப்பலகைகளா என்று ஆராயும் அதிகாரத்தை இந்தப் புதிய விதி வருவாய்த்துறை ஆணையருக்குத் தருகிறது.

அது மட்டுமின்றி, பன்னாட்டு நிதி நிறுவனங்களும், இந்தியக் கறுப்புப் பணப் பேர்வழிகளும், தங்களுடைய முகத்தை மறைத்துக் கொண்டு பணத்தை மட்டும் பங்குச்சந்தையில் இறக்கி வரும் வழியான, ‘பார்ட்டிசிபேட்டரி நோட்‘ என்ற முகமூடியணிந்த முதலீடுகள் விசயத்திலும், இந்த விதி “மூக்கை நுழைக்கிறது’’. வருமான வரித்துறை ஆணையர் கோரும் பட்சத்தில், வரி தவிர்ப்புக்கு அப்பாற்பட்ட பிற வணிக நோக்கங்களுக்காகவும்தான், பார்ட்டிசிபேட்டரி நோட் மூலம் முதலீடு செய்கிறோம் என்பதை முதலீட்டாளர்கள் நிரூபிக்கவேண்டும் என்று கூறுகிறது இந்த விதி.

இதனை அறிமுகப்படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, ‘சட்டத்திற்கு விளக்கமளிக்கவும் தீர்ப்பளிக்கவும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதென்றால், அந்தத் தீர்ப்பினை திருத்தும் வகையிலான சட்டத்தை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரமிருக்கிறது‘ என்று முழங்கினார். உடனே, நீதிமன்றத்துக்கு எதிராகத் தமது தன்மானம் நிலைநாட்டப்பட்ட பெருமிதத்தில் மேசையைத் தட்டினார்கள் உறுப்பினர்கள்.

‘அந்நிய முதலீட்டை ஈர்க்கவேண்டும் என்பதற்காக, இந்தியாவை வரியில்லா சொர்க்கமாக நாம் அறிவித்து விட முடியாது. நினைவிருக்கட்டும். அந்நிய முதலீடுகள் வராத காலத்தில் நாம் ஒன்றும் பல்லிகளைத் தின்று உயிர் வாழவில்லை. இன்று வரை நமக்குத் தேவைப்படும் மூலதனத்தின் கணிசமான பகுதி, உள்நாட்டு சேமிப்பின் மூலம்தான் பெறப்படுகிறது. ஆகையினால், 120 கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டை கே மேன் தீவுகளைப் போலவோ, வர்ஜின் ஐலேண்டு போலவோ நடத்த முடியாது. அப்படிப் பரிதவிக்கும் நிலையில் நாம் இல்லை. நம்மை அவர்களோடு ஒப்பிட முடியாது. இங்கே வரியைக் கட்டுங்கள், அல்லது நாங்கள் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாட்டைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தால், அங்கே வரியைக் கட்டுங்கள்‘ என்றார் முகர்ஜி.(தி இந்து, மே 8, 2012)

வோடாபோன் வழக்கின் தோல்வியைத் தொடர்ந்து கார்ப்பரேட் உலகின் நகைப்புக்குள்ளான ஓர் அமைச்சரின் உதார் என்பதற்கு மேல் இதில் சரக்கேதும் இல்லை.

ஏனென்றால், பிரைவேட் ஈக்விடி என்ற நிதிக்கருவியின் மூலம் இந்தியாவில் முதலீடு செய்யும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு, 10% மூலதன ஆதாய வரி குறைப்பு, ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு வரி விலக்கு, சுங்கவரி ஏய்ப்பு பிணையில் விட முடியாத கிரிமினல் குற்றமல்ல என்ற சட்டத்திருத்தம், தாங்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று நிரூபிக்கும் பொறுப்பிலிருந்து கார்ப்பரேட்டுகளை விடுவித்து, வரி ஏய்ப்புக் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை வருவாய்த்துறையின் தோள்களுக்கு மாற்றியது .. என்பன போன்ற பல சலுகைகளை கார்ப்பரேட் வர்க்கத்திற்கு பிரணாப் முகர்ஜி அருளியிருந்தார்.

இருந்த போதிலும், இந்தியாவின் நிதியமைச்சர் பன்னாட்டு மூலதனத்தின் முகத்தைப் பார்த்து பேசும் சூழல் குறித்து “கவலையடைந்த” அமெரிக்க அரசின் நிதித்துறை செயலர் டிமோதி கெய்த்னர், “அந்நிய மூலதனத்தை இந்தியா வரவேற்கிறதா,  இல்லையா என்பதைத் தெளிவுபடுத்துமாறு” பிரணாப்பை மிரட்டினார்.

“வரி தவிர்ப்புக்கெதிரான பொது விதிகள்” வரப்போகிறது என்பதால், சுமார் ஒரு மாத காலத்தில் 1000 கோடி டாலர் பன்னாட்டு நிதி முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பை இந்தியா இழந்து விட்டதாக அலறின முதலாளித்துவப் பத்திரிகைகள். பங்குச் சந்தைக் குறியீட்டு எண் வீழ்ந்தது. உடனே, இப்பிரச்சினையை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்வதற்கு அவகாசம் வேண்டியிருப்பதால், இதன் அமலாக்கம் ஓர் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்து விட்டார் பிரணாப் முகர்ஜி.

தான் அறிமுகப்படுத்திய ‘வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதிகளை‘ கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்றுதான் பிரணாப் முகர்ஜி கூறினார். என்ற போதிலும், இதற்கெதிராக ஆத்திரம் கொண்டு வெடிப்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகள்தான் என்பது கவனிக்கத்தக்கது.

கறுப்புப்-பணம்

கறுப்புப் பணம் என்பது தீவிரவாதிகள் மற்றும் குற்றக் கும்பல்களின் பணம் என்றும் 2007-இல் இந்திய பங்குச்சந்தைக் கொழிப்புக்கு அதுதான் காரணமாக இருந்தது என்றும் கூறினார் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் இன்றைய மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன். சுவிஸ் வங்கி போன்றவற்றில் போட்டு வைக்கப்பட்டிருக்கும் பணமெல்லாம் ஊழல் அரசியல்வாதிகளுடையவை என்பது ஊடகங்கள் பரப்பியிருக்கும் பொதுக்கருத்து.

ஆனால், குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி என்ற அமைப்பின் இயக்குநர் ரேமண்டு பேக்கர் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, உலகளவிலான மொத்தக் கறுப்புப் பணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருடைய இலஞ்ச ஊழல் பணம் வெறும் மூன்று சதவீதம்தான்.

மூன்றில் ஒரு பகுதி, அதாவது 33%, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் சார்ந்தது. மூன்றில் இரண்டு பங்கு, அதாவது சுமார் 64 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பிறப்பிடமும் இருப்பிடமும் பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள்தான்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுவதாகவும், மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது என்றும் கூறுகிறார் “இந்தியாவின் கறுப்புப் பொருளாதாரம்” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார்.

மேற்கூறிய பணத்துக்கு கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலாளிகளும் முறையாக வரி கட்டுவார்களேயானால், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 7.5 இலட்சம் கோடி ரூபாய் வரி வசூலாகும் என்றும், இந்தத் தொகையானது தற்போதைய (2009-10) மொத்த வரி வசூலான 6.4 இலட்சம் கோடி ரூபாயைக் காட்டிலும் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். கறுப்புப் பணமென்பது கார்ப்பரேட் பணமே என்று நிறுவுகின்றன மேற்கூறிய ஆய்வுகள்.

கார்ப்பரேட்டுகள் மீதான “அநியாய” வரிவிதிப்புதான் வரி ஏய்ப்பைத் தூண்டி, கறுப்புப் பணத்தை அதிகரிக்கச் செய்கிறது என்ற வாதம் பொய் என்பதும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது. “1948 முதல் 2008 வரையிலான காலத்தில் இந்தியாவிலிருந்து வெளியேறிய கறுப்புப் பணம் குறித்த ஆய்வு” என்ற கட்டுரையில், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பின்னர், அதாவது 1991 முதல் முதலாளிகள் மீதான நேர்முக வரிகள் படிப்படியாக குறைக்கப்படத் தொடங்கிய பின்னர்தான், வரி ஏய்ப்பும் கறுப்புப் பண வெளியேற்றமும் (outflow of illicit capital) அதிகரித்தன என்று கூறுகிறார், குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி நிறுவனத்தின் ஆய்வாளர் தேவ்கார். (எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, ஏப்ரல் 9, 2011)

“பொருளாதார சீர்திருத்த காலத்தில், வேகமான பொருளாதார வளர்ச்சி வேகமான கறுப்புப் பண வெளியேற்றத்தைத் தோற்றுவித்திருக்கிறது; கறுப்புப் பண வெளியேற்றம் எந்த அளவுக்கு அதிகரித்ததோ அந்த அளவுக்கு சமூக ஏற்றத்தாழ்வும் அதிகரித்திருக்கிறது. 2000க்குப் பின்னர் இந்த கறுப்புப் பண வெளியேற்றம் பெருமளவு அதிகரித்துவிட்டது. இதையொட்டி மீப்பெரும் கோடீசுவரர்களும் இந்தியாவில் அதிகரித்திருக்கிறார்கள்;  நிதி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பைத் தளர்த்தியதும், கட்டுப்பாடுகளை அகற்றியதும் எங்ஙனம் பல மோசடிகளுக்கு வழி செய்து கொடுத்தன என்பதை நாம் வால் ஸ்டிரீட்டில் கண்டோம். தாராளமயக் கொள்கைகள் ஏற்றுமதி-இறக்குமதி மோசடிகளுக்கான வாய்ப்பை வழங்கி மூலதன வெளியேற்றத்தை (அதாவது கறுப்புப் பணத்தை) ஊக்கப்படுத்தியிருக்கின்றன” என்று அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் தேவ்கார்.

அதாவது கறுப்புப் பணம் என்று அழைக்கப்படும் மூலதன வெளியேற்றம், தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தில் நேர்ந்த பிறழ்வோ முறைகேடோ அல்ல, மாறாக அதன் தவிர்க்கவியலாத விளைவு என்பதையே மேற்கூறிய விவரங்கள் நிரூபிக்கின்றன.

“வெளிநாட்டு வங்கிகளிலிருந்து கறுப்புப் பணத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரவேண்டும்” என்று கோரிக்கையை முன்வைத்து, சென்ற ஆண்டு அத்வானி யாத்திரை நடத்திக் கொண்டிருந்த போது, அக்டோபர் 2011-இல் கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சிவ் பிரசாத், சுனிதா பல்தாவா, அமித்குமார் ஆகியோர் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டனர். 2009-10இல் 38 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவிலிருந்தான எஞ்சினியரிங் பொருட்களின் (ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட) ஏற்றுமதி 2010-11இல் 68 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருந்தது. ஆனால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் எஞ்சினியரிங் நிறுவனங்களின் கணக்கினைப் பரிசீலித்துப் பார்த்தபோது, ஏற்றுமதி வெறும் 1.38 பில்லியன் டாலர் மட்டுமே அதிகரித்திருந்தது. அப்படியானால் எஞ்சிய 28.62 பில்லியன் டாலர் எப்படி வந்தது?

அதேபோல, 2009-10இல் 8500 கோடி ரூபாய்க்கு நடந்த செம்பு ஏற்றுமதி, 2010-11இல் 36,700 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. செம்பு இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவிலிருந்து இவ்வளவு செம்பு எப்படி ஏற்றுமதியாக முடியும் என்ற கேள்விக்கும் விடை இல்லை.

2010-11இல் அந்நிய நிதி நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்குள் வந்த தொகை 22 பில்லியன் டாலர்கள். ஆனால், சர்வதேச நிதிநிறுவனங்களின் முதலீடுகள் குறித்து உலகளவிலான புள்ளிவிவரங்களைப் பராமரிக்கும் நிறுவனமான இ.பி.எஃப்.ஆர் (Emerging Portfolio Fund Research) போன்ற நிறுவனங்கள் திரட்டியிருந்த விவரங்களின் படி, 2010-11இல் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நிதி நிறுவன முதலீடு வெறும் 4.5 பில்லியன் டாலர் மட்டுமே. மீதமுள்ள 17.5 பில்லியன் டாலர்கள் எங்கிருந்து வந்தன என்ற கேள்விக்கு விடை இல்லை.

அக்டோபர் 21, 2011 அன்று எகனாமிக் டைம்ஸ் நாளேடு “புதிர்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டது. 2008-இல் 22 இலட்சம் டாலர்களாக இருந்த பஹாமா தீவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, 2010-இல் 280 கோடி டாலர்களாகத் திடீரென்று உயர்ந்திருப்பதைக் காட்டி இதெப்படி சாத்தியம் என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. இந்தப் புதிருக்கான விடை சில நாட்களுக்குப் பின்னர் பிசினஸ் ஸ்டாண்டர்டு ஏட்டில் வெளியானது. ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள் பஹாமா தீவுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ததாகக் கணக்கு காட்டியிருந்தனர். வெறும் 3.5 இலட்சம் மக்கட்தொகை கொண்ட அந்தத் தீவில் உள்ளவர்கள் பெட்ரோலில் குளித்து, தாகத்துக்கும் பெட்ரோலையே குடித்திருந்தாலும்கூட அவ்வளவு பெட்ரோலைப் பயன்படுத்த முடியாது என்பதால், இது கறுப்பை வெள்ளையாக்கும் கள்ளக்கணக்கு என்பது அம்பலமானது.

கறுப்புப்-பணம்

பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் கனிம வளக் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய கர்நாடகா லோகாயுக்தா கீழ்க்கண்டவாறு கூறியது. “ஏற்றுமதிக்கான சுங்கத்தீர்வைகள் விதிக்கப்படுவது குறித்த சுங்கத்துறையின் கணக்கையும், அந்த ஏற்றுமதிகள் குறித்த வங்கிக் கணக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஏற்றுமதியும் ஏற்றுமதி வருவாயும் உண்மைதானா என்பதைக் கண்காணிப்பது ரிசர்வ் வங்கியின் கடமை. ரெட்டி சகோதரர்கள் 2006 முதல் 2010 வரை மொத்தம் 5000 முறை வெளிநாடுகளுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்துள்ளதாக சுங்கத்துறையின் கணக்கு கூறுகிறது. இவற்றில் 1000 ஏற்றுமதிகளுக்கான வங்கிக் கணக்குகள் மட்டுமே ரிசர்வ் வங்கியிடம் உள்ளன.

மீதமுள்ள 4000 ஏற்றுமதிகளில் நடந்திருப்பது என்ன? கறுப்புப் பணம் உருவாக்கப்பட்டிருக்கிறதா அல்லது கறுப்பு வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறதா என்பது ரெட்டிகளுக்கு மட்டுமே வெளிச்சம்!

கோடக் மகிந்திரா நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்ற விவரங்களின்படியே, 2010-11இல் மட்டும் அந்நியச் செலாவணி வரவு என்ற பெயரிலும், அந்நிய மூலதனம் என்ற பெயரிலும் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் டாலர்களாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது.

“மொரிசியஸ் போன்ற நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு நோக்கத்துக்காகவே தொடங்கியுள்ள பெயர்ப்பலகை முதலீட்டு நிறுவனங்களின் மூலம் அவர்களுடைய கறுப்புப் பணம் அந்நிய முதலீட்டாளர்கள் என்ற முகமூடியணிந்து உள்ளே நுழைந்திருக்கிறது இரண்டாவதாக, பெட்ரோல், ஆட்டோமொபைல், உலோகங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யாமலேயே, செய்ததாகக் கணக்குகாட்டி, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் தங்களுடைய கறுப்புப் பணத்தையே டாலராக அனுப்பி வைத்து, அந்நியச் செலாவணி வரவாக கணக்குக் காட்டியிருக்கின்றனர்” என்று இந்த 2 இலட்சம் கோடி குறித்த தமது ஐயங்களை அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

கோடக் மகிந்திராவின் சில ஊழியர்களால் கண்டுபிடிக்க முடிந்த இந்த உண்மை, மன்மோகன், அலுவாலியா உள்ளிட்ட மாபெரும் வல்லுநர்களுக்குத் தெரியவில்லையா? “2010-11ஆம் ஆண்டைக் காட்டிலும் 2011-12இல் இந்தியாவின் ஏற்றுமதியை 20% அதிகரிக்க முடிந்தால் அதுவே பெரிய அதிருஷ்டம்தான்” என்று 2011ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதிப்பிட்டார் வர்த்தக அமைச்சகத்தின் செயலர் ராகுல் குல்லார். ஆனால், ஏற்றுமதியோ இந்தக் காலகட்டத்தில் 53% அதிகரித்தது. எனினும் இந்தப் “புலிப்பாய்ச்சலின்” இரகசியம் என்ன என்ற கேள்வி அவருக்கு எழவில்லை.

“சென்செக்ஸ் உயர்ந்தால் பொருளாதார வளர்ச்சி; வீழ்ந்தால் பின்னடைவு” என்பதுதான் புதிய தாராளவாதக் கொள்கையின் மூலமந்திரம். அந்நியச் செலாவணியாகவும், அந்நிய முதலீடாகவும் வேடமணிந்த கறுப்புப் பணம், டாலராக அவதரித்து இந்தியாவுக்குள் நுழைந்து வெள்ளையாக மாறியிருக்கிறது என்பதையே நாம் இதுவரை கண்ட விவரங்கள் காட்டுகின்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், கருப்பை வெள்ளையாக்குவதற்கு அம்பானிகளும் டாடாக்களும் பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொண்ட தில்லுமுல்லுகள் சென்செக்ஸ் புள்ளிகளை உயர்த்தியதால், அதையே முன்னேற்றமெனச் சித்தரித்திருக்கிறது மன்மோகன் அரசு. கறுப்பை வெள்ளையாக்கும் (money laundering) இந்தக் குற்றத்தை முன்னேற்றமாகச் சித்தரித்துக் கொண்டே, கறுப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கையையும் சமர்ப்பித்திருக்கிறது.

(தொடரும்)

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்