Thursday, December 12, 2024
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்பத்தாண்டு தடை தகர்த்த வேலூர் ம.க.இ.க பொதுக்கூட்டம்!

பத்தாண்டு தடை தகர்த்த வேலூர் ம.க.இ.க பொதுக்கூட்டம்!

-

வேலூர் பொதுக்கூட்டம்
தோழர் இராவணன்

02.07.2012 அன்று மாலை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மின் வெட்டு – “மின் கட்டண உயர்வு – பெட்ரோல் விலை உயர்வு ஏன்?” என்கிற தலைப்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

1980-களில் நக்சல்பாரிகளின் செல்வாக்குமிக்க மாவட்டமாக வேலூர் மாவட்டம் திகழ்ந்ததால் காவல்துறையும் ஆளும் வர்க்கமும் நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினர். வேலூரில் செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் 1980 களின் தொடக்கத்திலிருந்தே நக்சல்பாரி அரசியலை பகிரங்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றது. இதைக்கண்டு அச்சமுற்ற காவல்துறை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறைகளை ஏவத்தொடங்கியது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் எடுக்கும் மைய இயக்கங்களையொட்டி பிரசுரம் விநியோகித்தாலும், சுவரொட்டி ஒட்டினாலும், சுவரெழுத்து எழுதினாலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகளைத் தொடுப்பதை ஒரு வாடிக்கையாகவே செய்து வந்தது வேலூர் காவல்துறை. குறிப்பாக தோழர் இராவணன் மீது மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ம.க.இ.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டே வந்தது. புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களை விநியோகிப்பதற்குக்கூட பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர் இத்தகைய அடக்குமுறைகளால் தோழர்கள் துவண்டுவிடவில்லை. பொய்வழக்குகளை எதிர்கொண்ட அதே நேரத்தில் துவண்டுவிடாமல் பல்வேறு வழிமுறைகளில் தொடர்ந்து தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிக்கக்கோரி பிரசுரம் விநியோகித்ததற்காக வேலூர் ம.க.இ.க தோழர்கள் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது ஜூன் மாத இறுதியில்தான் இவ்வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுதான் கடந்த பத்து ஆண்டுகால வேலூரின் நிலைமை. இத்தகைய சூழலில்தான் 02.07.2012 அன்று ம.க.இ.க வின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. அனுமதியைக்கூட எழுத்து மூலமாகத் தரவில்லை. கடைசி நேரத்தில் அனுமதியை மறுப்பதற்காகவே இத்தகைய உத்தியை சில இடங்களில் காவல்துறை கையாள்கிறது.

வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அலையாய் அலைந்து கொண்டேதான் இந்தப் பொதுக்கூட்ட ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். இதனால் சுவரெழுத்து ஆட்டோ பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியவில்லை.

எனினும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் மூலம் பொதுக்கூட்டப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மக்களிடம் நிதிகேட்டு சென்றபோது பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் தாராளமாக நிதி கொடுத்துள்ளதிலிருந்து மின் வெட்டு – மின் கட்டண உயர்வு – பெட்ரோல் விலை உயர்வினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிந்தது.

திட்டமிட்டபடி 02.07.2012 அன்று மாலை அண்ணா கலையரங்கம் அருகில் ம.க.இ.க வின் பொதுக்கூட்டம் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்றது.

வேலூரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகளையும், நோயாளிகளைப் பரிசோதிக்க எக்ஸ்ரே பிலிம்கூட இல்லாமல் ‘ஃபிலிம் காட்டும்’ மாவட்ட தலைமை மருத்துவ மனையின் அவலத்தையும், ஒருபக்கம் பளபளப்பான தங்க நாற்கரச் சாலை – மறுபக்கம் இருசக்கர வாகன ஓட்டிகளையும் ஆட்டோக்களையும் கவிழ்க்கும் உள்ளுர்ச்சாலைகளின் கேவலமான நிலைமைகளையும், பாதாள சாக்கடை அமைக்கிறேன் என்கிற பெயரில் நகரச் சாலைகளை ஆண்டுக்கணக்கில் நாசப்படுத்தியதையும் அம்பலப்படுத்தி ஒரு உழைப்பாளிக்கே உரிய மொழியில் பேசி அனைவரின் வரவேற்பையும் பெற்றார்.

வேலூர் பொதுக்கூட்டம்
தோழர் காளியப்பன்

மின் வெட்டு – மின் கட்டண உயர்வு – பெட்ரோல் விலை உயர்வு ஏன்? என்பதை விளக்கி ம.க.இ.க வின் மாநில இணைச்செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றியனார்.

“பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் இனி பேருந்துகளை இயக்க முடியாது – புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த முடியாது” என்று சொல்லி போக்குவரத்துக் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியதைப் போலத்தான் “நட்டத்தில் இருக்கும் தமிழ்நாடு மின்வாரியத்தை மீட்க வேண்டும்” என்று கூறி மின்கட்டணத்தை ஜெயலலிதா  மூன்று மடங்கு உயர்த்தியதால் அதன் சுமையை இப்போதுதான் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் என்பதையும் காளியப்பன் அம்பலப்படுத்தினார்.

1980 வரை இலாபத்தில் இயங்கிய தமிழ்நாடு மின்வாரியம் ரூ.55 000 கோடி நட்டத்தில் மூழ்கியதற்கு முக்கியக் காரணம் அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட தனியார்கள் நடத்தும் ஐந்து மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.17 வரை விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால்தான் தமிழ்நாடு மின்வாரியம் நட்டத்தில் மூழ்கியது என்கிற உண்மையை புள்ளி விவரங்களோடு தனது உரையில் குறிப்பிட்டார் காளியப்பன்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டதால் பெட்ரோலிய நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என மைய அரசு கூறுவது சுத்தப் பொய்;  சர்வதேசச் சந்தை என்பதே ஒரு மோசடி என்பதை அம்பலப்படுத்தினார். உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம் என்பதையும் பெட்ரோல் மூலமாக மைய அரசு ஆண்டுக்கு ரூ.1 50 000 கோடி வரை மக்களிடம் வரியாக கொள்ளையடிப்பதையும்; அதேபோல மாநில அரசுகள் வரியாக பல கோடி ரூபாய் கொள்ளையடிப்பதையும் மேலும் அம்பானி போன்ற முதலாளிகள் கொள்ளை இலாபமடிப்பதற்காகவே பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார். இத்தகைய கொள்ளைகளை தடுத்தி நிறுத்தினாலே ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.30 க்கும் கீழே மக்களுக்குத் தரமுடியும் என்பதையும் விளக்கமாக ஆதாரத்துடன் எடுத்துரைத்தார்.

மின்கட்டண உயர்வும் பெட்ரோல் விலை உயர்வும் மைய – மாநில அரசுகள் அமுல் படுத்தும் தனியார் மயத்தின் கோர விளைவுகள் என்பதையும் இனி இக்கொள்கையை  தண்ணீருக்கும் விரிவுபடுத்தவிருக்கும் மைய அரசின் புதிய தண்ணிர் கொள்கையையும் அம்பலப்படுத்தினார்.

விலை உயர்வை மட்டும் எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே வரிச்சுமையிலிருந்து மக்கள் மீண்டுவிட முடியாது; மாறாக இதற்குக் காரணமான தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையையும் அதை அமுல் படுத்தும் ஆளும் வர்க்கங்களை வீழ்த்தி ஒரு புதிய ஜனநாய அரசை அமைப்பதன் மூலமே – அதைத் தொடர்ந்து அமைய விருக்கும் சோசலிச அரசமைப்பின் மூலம் மட்டுமே மக்கள் இத்தகைய கொடுமைகளிலிருந்து மீள முடியும் என புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார் காளியப்பன்.

வேலூர் பொதுக்கூட்டம்
ம.க.இ.க மையக் கலைக்குழுவின் புரட்சிகர் கலைநிகழ்ச்சி

“வேலூருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது எல்லோரும் கை தட்டுங்கள்” என பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைத்ததைப் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிட்டு கலை நிகழ்ச்சியைத் தொடங்கினார் தோழர் கோவன்.

“ஏறுது ஏறுது விலைவாசி… என்ன காரணம் நீ யோசி…”,

“எங்கே தேடுவேன் …கரண்ட்ட… எங்கே தேடுவேன்…”

“இருட்டு…. கும் இருட்டு… இருட்டு…… கும் இருட்டு….”

”தாகத்துக்கா தண்ணி இலாபத்துக்கா… நம் தாயை வித்தால் அது தேசபற்றா”

போன்ற மக்கள் பிரச்சனைகளையொட்டி பாடப்பட்ட பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

“கம்யூனிசம் வெல்லும்…முதலாளித்துவம் கொல்லும்…”

என்கிற எழுச்சியான பாடலோடு கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

கிண்டலும் கேலியும் கோபமும் நிறைந்த இக்கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை ஒரு மணி நேரம் கட்டிப் போட்டதோடு புது உத்வேகத்தையும் அளித்தது.

படாடாபத்தோடு இலட்சக்கணக்கில் செலவு செய்தாலும் ஒரு ஐம்பது பேரைக்கூட திரட்டத் திணறும் ஓட்டுக் கட்சிகள் நடத்தும் கூட்டங்களை ஒம்பிடும் போது ம.க.இ.க வின் இந்தப் பொதுக்கூட்டம் மிகப்பெரிய வெற்றி என்பதற்கு நூற்றுக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டமே சாட்சியாய் அமைந்தது. உள்ளுர் மக்கள் மட்டுமல்ல பிற ஊர்களிலிருந்தும் புரட்சியை நேசிக்கும் பலர் தங்களது சொந்தச் செலவில் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டது மற்றுமொரு சிறப்பு.

மொத்தத்தில் இப்பொதுக்கூட்டத்தின் மூலம் வேலூர் அடுத்தகட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகிறது.

______________________________________________________

தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

  1. ”காளியப்பனின் பேச்சு – இப்படி ஒரு பேச்சை இதுவரை கேட்டதில்லை.

    கலை நிகழ்ச்சி – இப்படி ஒரு கலை நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை.

    கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் ஒரு நிகழ்ச்சியை இப்படி அமைதியாக உட்கார்ந்து கவனித்ததையும் இது வரை பார்த்ததில்லை.”

    தனது 61 வயது அனுபவத்தில் மேற்கண்ட மூன்றையும் ஒருங்கே பார்ப்பது இதுதான் முதன் முறை என மிகவும் நெகிழ்ச்சியோடு தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார் கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர்.

  2. பாவம் உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. மக்கள் அதிகமாக கூடினால் அவர்கள் எல்லாம் ஆதரிக்கிறார்கள் என்று பொருள் இல்லை! பொழுது போகாமல் வந்திருக்கிறார்கள்.
    சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் கருனாநிதிக்கும்தாம் கூட்டம் கூடியது! அவரால் வெற்றிபெற முடியவில்லையே!!
    கூட்டத்தைக் கண்டு மயங்காதீர்கள்.
    “ஏறுது ஏறுது விலைவாசி ஏறுது” என்றும் மற்ற பிற பாடல்களையும் நிரந்தரமாக போட்டு வைத்துக்கொள்ளுங்கள்! எப்போதும் பயன்படும்.
    இந்திய சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த கோசம் எல்லோராலும். ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
    ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்!
    இது நிரந்திரம்.முடிவு இல்லை!
    யாராலும் முடியாது!
    நீங்கள் மற்றும் உங்கள் இயக்கம் உள்பட!

    • பாவப்பட்ட நாட்ராயனுக்கு,

      ஆனந்த விகடனுல வர்ற 6 வித்தியாசத்த தவிர உங்களுக்கு வேறேதும் தெரியாது போலிருக்கு. சாராயத்திற்க்கும், பிரியாணிக்கும் கூடும் ஓட்டு கட்சி கூட்டத்திற்க்கும், மக்களின் பிரச்சனைக்களுக்காக போராடும் அமைப்பின் மக்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?,

      ”“ஏறுது ஏறுது விலைவாசி ஏறுது” என்றும் மற்ற பிற பாடல்களையும் நிரந்தரமாக போட்டு வைத்துக்கொள்ளுங்கள்! எப்போதும் பயன்படும். இந்திய சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்த கோசம் எல்லோராலும். ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.” என்கிறீர்.

      50 ஆண்டுக்கும்மேலா அதே நிலைமைதான் நீடிக்கிறதுனு சொல்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? காரணத்தைச் சொன்னதானே மாற்றத்தைத் தேட முடியும்? சோறு இல்லையினா, சொரனையும் இல்லாம இருக்கனுமா?

      தோழர்களின் 10 ஆண்டுகாலத் சளைக்காதப் போராட்டம், மலையைக் குடைந்த மூடக் கிழவனின் கதையை நினைவுப்படுத்தியது. தோழர். காளியப்பன் உரை, மின்சாரம், பெட்ரோல் விலை உயர்வின் இரகசியத்தை உடைத்தது. வாழ்த்துகள் தோழர்.

      • சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை கம்யுனிஸ்ட்டுக்கள் ஆடிய ஆட்டத்தை தான் குறிப்பிட்டேன். ரூபாயின் மதிப்பை வைத்து விலை வாசி ஏறிவிட்டது போல் பேசக்கூடாது.இப்போது கூலி நாள் ஒன்றுக்கு 300 ருபாயிக்கு மேல் ஆகிவிட்டது. எனக்குத்தெரிந்து வெறும் ஐந்து ரூபாயாக இருந்தது. ரூபாயின் மதிப்பு குறைந்து விட்டது. மற்றபடி வ்ளைவாசி ஏறிவிட்டது என்று கூறமுடியாது.

        • ‘சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரை கம்யுனிஸ்ட்டுக்கள் ஆடிய ஆட்டத்தை தான் குறிப்பிட்டேன்”.

          அப்படி என்ன ஆட்டம் போட்டாங்க? மற்ற கட்சிகள் அடக்கமா இருந்தாங்களா?! அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்க.

          பெங்களூரு பிஜேபி சந்தையில் வாரந்தோறும் நடக்கும் முதலமைச்சர் ஏலம் ஒருபுறம். மறுபுறம், தமிழ்நாட்டு சினிமா காமெடியெனின் ஒரு நாள் சம்பளமே ரூபாய் பத்து லட்சம்!…… இதுதான் இன்றைய இந்தியாவின் லட்சணம்.

          ஆனால் முண்ணூறு தின கூலிக்கு, குண்டடி, குண்டாந்தடி வாங்கிக்கொண்டு 3000 போராட்டம் நடத்தனும். இருக்கும் விலைவாசியில் இதை வைத்துக்கொண்டு நாக்கை தான் வழிக்க முடியும். உங்களமாதிரி நக்கலா பேச முடியுமா?

  3. //மற்றபடி வ்ளைவாசி ஏறிவிட்டது என்று கூறமுடியாது.// என்ன முட்டாள் ராயன் சாரி மு.நாட்ராயன், எங்களுக்கெல்லாம் விலைவாசி உயர்ந்து விட்டது. ஆனால் அதற்கு ஏற்ற படி சம்பளம் உயரவில்லை. 300 கூலிக்கு 5 மணிநேர பயணத்தில் சென்னைக்கு வெளியில் இருந்து வந்து போகவே 100 ரூபாய் முடிந்து விடுகின்றது. வீட்டு வாடகை பாதி போய் விட்டது. மிச்சத்தில் கஞ்சி குடிக்கின்றோம். ஆமாம் மாடி வீட்டு மைனரோ, துரை இன்பளனேஷன் பேசி மடையை மாற்றுது.

  4. //50 ஆண்டுக்கும்மேலா அதே நிலைமைதான் நீடிக்கிறதுனு சொல்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? காரணத்தைச் சொன்னதானே மாற்றத்தைத் தேட முடியும்? சோறு இல்லையினா, சொரனையும் இல்லாம இருக்கனுமா? // நல்லா சொன்னீங்க!
    //ரூபாயின் மதிப்பை வைத்து விலை வாசி ஏறிவிட்டது போல் பேசக்கூடாது.// என்ன நாட்றாயன் இது? நீங்க ஏதோ கொஞ்சமாச்சும் விவரம் தெரிஞ்சவரு, ‘சனியன் புடிச்ச சிகப்பு கலரு’ அலர்ஜின்ற தால பினாத்திட்டு இருக்கீங்கன்ல இதுவரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன்.
    அட போங்க நாட்றாயன்,,, உங்க வாயாலயே நீங்களே உங்கள வெளிச்சம் போட்டு காமிச்சிகிட்டப்புறம்,,, நான் என்னத்த…. சொல்ல!

  5. “தலைவலியோட கூட்டத்திற்கு வந்தேன். கூட்டத்திற்கு வந்து கலை நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தலை வலி எங்கே போனது என்றே தெரியவில்லை. கையில் காசு இருந்திருந்தால் ஒரு 500 ரூபாயை நன்கொடையாகக் கொடுத்திருப்பேன்.” தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பெண் தொழிலாளி தனது மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

    கலை நிகழ்ச்சி தலைவலியை மட்டுமல்ல இந்த நாட்டின் ‘தலை எழுத்தையே’ மாற்றவல்ல ஆற்றல் படைத்தது என்பதை நேரில் பார்த்தவர்களால்தான் உணர முடியும்.

  6. தொடர்ச்சியாக அடக்குமுறையை எதிர்கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

    களத்தில் மக்களோடு மக்களோடு இணைந்து நிற்கும் நக்சல்பாரிகளை அரசால் தனிமைப்படுத்தவும் முடியாது! வளர்ச்சியை தடுக்கவும் முடியாது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க