privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்நீதி வேண்டுமா, ஆயுதமேந்து!

நீதி வேண்டுமா, ஆயுதமேந்து!

-

ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை.

ரூபம்-பதக்
ரூபம்-பதக்

பீகார் மாநிலத்திலுள்ள புருனியா சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. உறுப்பினர்  ராஜ் கிஷோர் கேசரி மரணமடைந்த வழக்கில், அவரது மரணத்துக்குக் காரணமான 35 வயதான ரூபம் பதக் என்ற பெண்ணுக்கு, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின்  கீழ் ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.  ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன?  இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!”

ராஜ் கிஷோர் கேசரியும், அவரது உதவியாளர் பி.என்.ராய் என்பவனும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, ரூபம் பதக்கை 2007ஆம் ஆண்டு தொடங்கியே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி வந்தனர்.  இக்கொடுமையை இனிமேலும் சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ரூபம் பதக், கடந்த 2010ஆம் ஆண்டு, ராஜ் கிஷோர் மற்றும் பி.என். ராய் மீது பாலியல் வல்லுறவு குற்றஞ்சுமத்தி போலீசிடம் புகார் அளித்தார். ஆனால், போலீசோ அப்புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் ரூபம் பதக்கை அலைக்கழித்தது.  தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடக் கோரி அவர் நீதிமன்றத்தில் முறையிட்டும்கூட, புகாரும், வழக்கும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன.

இதற்கிடையே பீகார் சட்டசபைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.  ராஜ் கிஷோர் மீண்டும் புருனியா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தான்.  ரூபம் பதக் கொடுத்திருக்கும் புகார் தனது வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்பதால் அப்புகாரையும் வழக்கையும் திரும்பப் பெறும்படி ரூபம் பதக்கை நிர்பந்தித்த ராஜ் கிஷோர், “இதற்கு மறுத்தால் உனது மகளைக் கடத்துவேன்” என மிரட்டினான்.  இதனால் வேறு வழியின்றிப் புகாரையும் வழக்கையும் திரும்பப் பெற்றார், ரூபம் பதக்.

ரூபம் பதக்கிற்கு நீதி மறுக்கப்பட, ராஜ் கிஷோரோ தேர்தலில் வென்று மீண்டும் எம்.எல்.ஏ., பதவியைக் கைப்பற்றினான்.  ரூபம் பதக் மனதை நம்பிக்கையின்மையும் ஆத்திரமும் ஒருசேர ஆக்கிரமித்தன.  இந்நிலையில்,  ராஜ் கிஷோர் வீட்டிற்குச் சென்று அவனைச் சந்தித்த ரூபம் பதக், தன்னை, தனது வாழ்வைச் சீரழித்த அந்தக் கயவனை, சமையலறைக் கத்தியால் குத்திச் சாய்த்தார்.  ராஜ் கிஷோரைத் தான் கத்தியால் குத்தியதை ரூபம் பதக் மறுக்கவில்லை; அதே சமயம், தான் குத்தியதால் அவன் இறந்துபோய்விட்டான் என்பதையும் அவர் அறியவில்லை. ரூபம் பதக்கை சம்பவம் நடந்த இடத்திலேயே கைது செய்த போலீசு, ரூபம் பதக்கிடம் எம்.எல்.ஏ. இறந்துவிட்டதாகத் தெரிவித்தபொழுது, “அவன் சாத்தான்; இறந்திருக்கமாட்டான்” என்றுதான் பதில் அளித்திருக்கிறார்.

ரூபம் பதக் அளித்த தண்டனையால் செத்துப்போன காமக் கொடூரனான ராஜ் கிஷோரை உத்தமனாகவும், 1974இல் நடந்த மாணவர் இயக்கத்தின் ஹீரோவாகவும்; ரூபம் பதக்கை நடத்தை கெட்டவளாவும் சித்திரிக்கும் பிரச்சாரத்தை பா.ஜ.க., மட்டுமின்றி, அனைத்து ஓட்டுக்கட்சிகளும், நிதிஷ்குமார் அரசாங்கமும் முன்னின்று நடத்தின.  ஓட்டுக்கட்சிகளின் இந்தப் புளுகுத்தனத்தை, அவதூறை அம்பலப்படுத்தியும், வழக்கு விசாரணையை முறையாகவும் நடத்தக் கோரி பெண்ணுரிமை அமைப்புகள் போராடியதையடுத்து, வேறு வழியின்றி இவ்வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது, நிதிஷ்குமார் அரசு.

ஆனால், மையப் புலனாய்வுத் துறையோ ராஜ் கிஷோர் மீதான ரூபம் பதக்கின் பாலியல் புகாரை ஒதுக்கி விட்டு, இதனை வெறும் கொலை வழக்காக மட்டும் கருதி விசாரணை நடத்தியது. ராஜ் கிஷோரின் உதவியாளனாக இருந்த பி.என். ராயைக் கைது செய்யக்கூட சி.பி.ஐ., முன் வரவில்லை என்பதிலிருந்தே, அதனின் விசாரணை எந்தளவிற்கு ஒருதலைப்பட்சமாக நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு விடலாம்.  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் வழக்கின் காரண காரியங்களை ஆராயாமல், ரூபம் பதக்கிற்கு ஆணாதிக்க வக்கிரப் பார்வையிலிருந்து ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது.

நீதி பெறுவதற்கு ரூபம் பதக் ஆயுதம் ஏந்தியது சரிதான் என்பதே இந்தத் தீர்ப்பிலிருந்து பெறப்படும் நீதி.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: