செய்தி -75
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவை வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு சென்ற ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய ஓட்டுப் பொறுக்கி கட்சிகள்.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இதைத் தவிர இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. ‘கோவாவில் அதிகாரத்தில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி, வேதாந்தாவிடமிருந்து ரூ 400 கோடிக்கும் அதிகம் பணம் பெற்றதாக ஒத்துக் கொண்டிருக்கிறது’ என்கிறார் கோவாவைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் கிளாட் அல்வாரஸ்.
வேதாந்தா நிறுவனம் பல்வேறு பெயர்களில் இந்தியாவில் தனது ராஜ்யத்தை நடத்தி வருகிறது. உலகிலேயே மிகவும் அதிகமாக வெறுக்கப்படும் கார்பொரேட் நிறுவனம் என்று இன்டிபென்டென்ட் நாளிதழ் இந்நிறுவனத்தை அறிவித்திருக்கிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் பல கிரிமினல்/மோசடி குற்றங்களை செய்து வரும் வேதாந்தா குழும நிறுவனங்கள் இந்தியவை ஆளும் அமைப்புகளின் பிரியத்துக்குரியதாகவே இருக்கின்றன.
வேதாந்தாவின் சுரங்க நிறுவனங்களும், உலோக தொழிற்சாலைகளும் செய்த நாச வேலைகளின் பட்டியல் நீளமானது.
1. சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வேதாந்தா குழுமத்தின் சேசா கோவா இரும்பு ஆலையிலிருந்து வெளியான கறுப்பு தூசி 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் மூடியது.
2. 2009-ம் ஆண்டு சத்திஸ்கர் பால்கோ உருக்கு ஆலையில் நடந்த கட்டுமானப் பணியின் போது புகைபோக்கி உடைந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
3. லஞ்சிகர் என்ற இடத்தில் இருக்கும் அலுமினிய தாது சுத்திகரிப்பு ஆலை ஒரிசா மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
4. வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் நடத்தும் ஸ்டெர்லைட் செம்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாலும் தொழிற்சாலையை மூட வேண்டும்
என்று சென்னை உயர் நீதிமன்றம் 1998-ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று உத்தர விட்டது. ஆனால் தொடர்ந்து அனைத்து விதிகளையும் மீறி, சுற்றுச் சூழல் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் செம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சுற்றி உள்ள பகுதிகள் மாசுபட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மாசுப்பட்டால் கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. மேலும் இப்பகுதி மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. 2010-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்ற வரி ஏய்ப்பு மற்றும் பிளாட்டினம் கடத்தலை தமிழக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்தியாவிலேயே தாமிரப்பொருட்களுக்கு கடும் கிராக்கி இருப்பதால் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுமதி செய்யாமலேயே செய்ததாகக்கூறி வரிச் சலுகை பெற்று வந்தது. இதன் மூலம் மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடிக்கு அந்த நிறுவனம் இறக்குமதி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித் துறையினருக்கு தெரிய வந்தது. 2010-ம் ஆண்டு இத்துறை அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சோதனை செய்து வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
6. ‘வேதாந்தா சுற்றுப்புற சூழல் விதிகள், காடுகள் சட்டம் ஆகியவற்றை முற்றிலுமாக தனது சுரங்கத் திட்டத்தில் பின்பற்றவில்லை’ என்றும் ‘ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக இரண்டு வகை பழங்குடியினரின் வாழ்வினை பாழடித்தது இந்த தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது’ என்றும் நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது.
7. நிலக்கரி ஊழலில் ஆதாயம் ஈட்டிய நிறுவனங்களில் ஒன்றாக வேதாந்தாவையும் சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது
இப்படி கால் வைத்த இடங்களில் எல்லாம் நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கும் வேதாந்தாவிடம் கை நீட்டி கூலி வாங்கிக் கொண்டவர்கள்தான் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள்.
அதனால்தான் மத்திய அரசும் தமிழக அரசும் ஸ்டெர்லைட் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றன. சாக்சேனா குழு கூறியுள்ள குற்றச்சாட்டுக்களைப்பற்றியோ சிறிதளவும் கவலைப்படாமல் வேதாந்தா நிறுவனம் 665 கோடி டாலர் மதிப்பிற்கு கைரன் இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டினை கைப்பற்றும் அளவிற்கு பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்க முடிந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் சேசா கோவா, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களை இணைத்து சேசா ஸ்டெர்லைட் நிறுவனத்தை உருவாக்குவதாக அனில் அகர்வால் அறிவித்தார். தனியார் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு அடுத்து நாட்டை கொள்ளை அடிப்பதில் இரண்டாவது இடத்தை அப்படி இணைக்கப்பட்ட நிறுவனம் பிடித்திருக்கும் என்று அவர் பெருமைப் பட்டுக் கொண்டார்.
பீகார் தலைநகரான பாட்னாவின் தெருக்களிலிருந்து 1976-ல் மும்பை வந்து ஸ்கிராப் தொழில் ஆரம்பித்த வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் தகிடுதத்தங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வேதாந்தாவை நான்கு கண்டங்களில் பரந்து விரிந்து நிற்கும் $70 பில்லியன் (சுமார் ரூ 3.8 லட்சம் கோடி) மதிப்புடைய நிறுவனமாக வளர்த்திருக்கிறார்.
ஆகஸ்ட் 27-ம் தேதி கோவாவில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வேதாந்தாவின் சேசா கோவாவின் இரும்பு ஆலையை மூடக் கோரி தெருக்களில் இறங்கி போராடினர்.ஒரிசாவின் நியம்கிரி மலைகளில் அலுமினிய தாது தோண்டி எடுப்பதற்கான வேதாந்தாவின் திட்டத்தை எதிர்த்து பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர். நியம்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் லாஞ்சிகர் அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையை இழுத்து மூடக் கோரி பவானி பட்னாவிலும் லாஞ்சிகரிலும் ஆயிரக் கணக்கான கோண்டு பழங்குடியினர் விவசாயிகளுடனும் மற்ற கிராம மக்களுடனும் இணைந்து ஒன்று திரண்டனர். ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் நீதிமன்றங்களிலும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலும் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் ரிலையன்ஸ், டாடா, ஏர்டெல் போன்ற கார்ப்பரேட்டுகள் நீரா ராடியா போன்ற புரோக்கர்கள் மூலம் தமது கொள்ளை பணத்தில் அரசியல் வாதிகளுக்கு கமிஷன் கொடுத்து இந்திய ஜனநாயகத்தை வழி நடத்துகிறார்கள். எனில் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் யாருடைய நலனுக்காக செயல்படுகிறார்கள் என்பதை விளக்க வேண்டுமா என்ன?
இதையும் படிக்கலாம்
- Indian Politics: Power Play with Corporate Money
- Supreme Court orders joint probe by CPCB and TNPCB into Sterlite case
- Sesa Sterlite will generate $10 billion revenue every year: Anil Agrawal
- `Coalgate’ Stained VEDANTA Faces Protest in Goa and London
- வேதாந்தா ஸ்டெர்லைட் ப.சிதம்பரம்
_________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
- தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!
- வேதாந்தா – மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!
- கொள்ளை போகும் இந்திய வளங்கள்
- 800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!
- மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!
நீங்க இணையத்தில் சொல்றீங்க நாங்க தெரிஞ்சுக்குறோம் அவ்ளோதான். எங்களை விழிப்படைய வைப்பதை விட கிராம மக்களை எழுப்புவதுதான் மிகவும் முக்கியம். ஒரு கிரானைட் குவாரி அமைக்க வீ எ ஒ வருவாய் துறை ஆய்வாளர் ஊராட்சி தலைவர் மிக மிக முக்கியமாக பொதுமக்கள் ஆகியோரிடம் எதிர்ப்பில்லை என்று சான்றிதழ் வாங்க வேண்டுமாம்.கருங்கல்லுக்கே இப்படி என்றால் விலை உயர்ந்த உலோகங்களை போற போக்கில் வாரி விட்டு காசு பார்ப்பவன் நம்மிடம் ஒட்டு கேட்டு வரும் போதே ரெண்டாயிரம் ரூபாய் அதுக்கு தான் கொடுக்கிறான்.பழங்குடியினர் எதிர்த்தால் மாவோஸ்ட்ன்னு காலி பண்றான்.இவன் ஜெய்ச்ச உடனே ias ips அதிகாரிகள் ராணுவம் துணை ராணுவம் ரிசர்வ் போலிஸ் மாநில போலிஸ் என்னும் கூலிப்படையினரை வைத்து யாரை சுடணும்ன்னு லைன்ல நின்னா அவருக்கு ஒரே கெத்தா ஆயிடுது என்ன பண்ணறது மொதல்ல அதிகார வர்க்கத்து ஆப்பு வைக்கணும்.