privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி!

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி!

-

அரசுப்பள்ளிகள்: ஆங்கிலவழிக் கல்வி வந்தது முன்னே!

தனியார்மயம் நுழையும் பின்னே!!

மிழகத்தில்  சுமார் 320 அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டில் இருந்து ஆங்கிலவழிக் கல்வி அமல்படுத்தப்படும் என அரசு அண்மையில் அறிவித்திருந்தது. ஏற்கெனவே ஆங்கிலவழிக் கல்வி ஒருசில அரசுப் பள்ளிகளில் மட்டுமே இருந்த நிலையில், மாவட்டந்தோறும் 10 பள்ளிகள் வீதம், 24 ஆயிரம் மாணவர்களைத் தமிழ்வழிக் கல்வியில் இருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றி, அரசு உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றின்  தேவைக்காக என்றும், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்றும் அரசு இதற்குக்

ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகள் என அறிமுகமாகியுள்ள ஆங்கிலவழிக் கல்வி, வெகுவிரைவில் தமிழ்வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளிலிருந்து ஒழித்துக்கட்டப் போகிறது. அரசின் நடவடிக்கை ஆங்கிலவழிக் கல்வியை வலிமைப்படுத்தி தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு இடமில்லாமல் செய்துவிடும் என்ற கோணத்தில் இருந்து குமரி அனந்தன், பொன்வைக்கோ போன்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலவழிக் கல்வி என்பது மொழிப் பிரச்சினை மட்டும் அல்ல. அரசுப் பள்ளிகளில் வீழ்ச்சியடைந்து வரும் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்திக் காட்டி, அப்பள்ளிகளைத் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும்  நயவஞ்சகத் திட்டத்தின் ஒருபகுதிதான் இது.

இந்நயவஞ்சகத் திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு பெயர்களில் இயங்கிவந்த அப்பள்ளிகளை “சென்னைப் பள்ளி” என மாற்றி,  70 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்தனர். பின்னர் தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்  உதவியுடன் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி,  மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரித்தனர். அவற்றில் 10 பள்ளிகளைத் தேர்வு செய்து தனியார் வசம் ஒப்படைப்பது என்பது அரசின் திட்டம். தற்போது அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்கியிருப்பதும் தனியார்மயமாக்கலை நோக்கமாகக் கொண்டதுதான்.

தனியார்துறை  பொதுத்துறை கூட்டு என்பது உலகவங்கியால் வழிகாட்டப்படும் தனியார்மயத்தின் ஒரு வடிவம். இது முழுமையான தனியார்மயத்தைக் காட்டிலும் நயவஞ்சகமானது. சுகாதாரம், துறைமுகம், விமானத்தளம், ரயில்வே, கல்வி போன்றவற்றை பொதுத்துறை  தனியார் துறை கூட்டு எனும் வடிவத்துக்கு மாற்றவேண்டுமென்று 11ஆவது ஐந்தாண்டுத் திட்டம் கோருகிறது. மத்திய மனிதவளத்துறையும், நாடெங்கும் பொதுத்துறைதனியார்துறை கூட்டு முறையில் உயர்நிலைப்பள்ளிகளை உருவாக்க பொதுக்கொள்கையை வகுத்துள்ளது.

அரசுப்-பள்ளி

தனிநபர்களோ, அறக்கட்டளைகளோ பள்ளிக் கட்டடங்களைக் கட்டி, ஆசிரியர்களை நியமிப்பதும், அப்பள்ளிகளைக் குறிப்பிட்ட சில காலம் நடத்திய பின்னர், அரசு அவற்றை ‘அரசு உதவிபெறும்’ பள்ளிகளாக அங்கீகரித்து ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்குவதும்தான் இதுவரை இருந்த நடைமுறை.

இதை அப்படியே தலைகீழாக்கியுள்ளது, புதிய கொள்கை. இதன்படி, அரசே பள்ளிகளைக் கட்டிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஏற்று நடத்தச் சொல்லும். ரூ.25 இலட்சம் முன்பணம் செலுத்தும் வசதிகொண்ட எந்த நிறுவனமும் இதற்குத் தகுதிபடைத்ததாகும். நாடெங்கும் 3000 பள்ளிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியும் சுயமாகவே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளும்.  ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் அப்பள்ளிகளே தீர்மானிக்கும். பாடத்திட்டம் ஒன்று இருந்தாலும், பள்ளி நேரம் முடிந்த பின், தனியார் முதலாளிகள் தமக்குத் தேவையான துறைகளில் தேவையான மாணவர்களைப் பயிற்றுவித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். காலப்போக்கில் பாடத்திட்டத்தையும் தனியார் முதலாளிகளே முடிவு செய்வதை நோக்கிச் செல்வதற்கான முதல் படியாகும் இது.

‘அரசுப் பள்ளிகள்’ என்றே அழைக்கப்படும் இந்தப் பள்ளிகள் ஏழை மாணவர்களிடம் மாதம் ரூ.25ம், பிற மாணவர்களிடம் மாதம் ரூ.1000மும் வசூலிக்கலாம். இதில் ஏழை மாணவர்களுக்கான மானியத்துக்கு அரசு டோக்கன்களை வழங்கிவிடும். பள்ளி ஒன்றுக்கு 1000 மாணவர்களுக்கு டோக்கன் தர 2017ஆம் ஆண்டுவரை அரசு ரூ.10ஆயிரம் கோடி வரை செலவிட உள்ளதாகக் கூறுகிறது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளை வாழ வைப்பதைப் போல, இந்தப் பணம் பள்ளிகளை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மானியமாகவே இருக்கும். அதற்கு மேல் கட்டணம் செலுத்துமாறு ஏழை மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இல்லையேல் ஒதுக்கப்படுவார்கள். தற்போது தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு தரும் கல்வி உரிமைச் சட்டம் அமலாகும் யோக்கியதையிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

இப்படி கரையான் புற்றெடுத்து கருநாகத்திடம் ஒப்படைக்கும் இந்த அற்புதத் திட்டத்தில் தலைநகர் தில்லிதான் முன்னிலை வகிக்கிறது. அரசுப் பள்ளிகளை தாங்கள் ஏற்று நடத்த வேண்டுமானால், அக்கட்டிடத்தை தங்களது வணிக நோக்கத்துக்கு  பயன்படுத்திக் கொள்வோம் என்று கூறுகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆரம்பத்திலேயே இவ்வாறு செய்வது அரசாங்கத்தை அம்பலப்படுத்திவிடும் என்பதால், இது இன்னும் நடைமுறைக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

நகரின் மையப் பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிக் கட்டிடங்களைத் தனியாரிடம் தருவது மட்டுமின்றி, பள்ளியை நடத்தப்போகும் முதலாளிகளுக்கு இலாபம் கிடைக்கும் வகையில் மாணவர் எண்ணிக்கை இருப்பதையும் அரசு உத்திரவாதப்படுத்த வேண்டியிருக்கிறது. தற்போது அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கைவிகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களே வராத பள்ளியை ஏற்பதற்கு எந்த கார்ப்பரேட் நிறுவனந்தான் ஒப்புக்கொள்ளும்? எனவே சேர்க்கை வீதத்தைக் கூட்ட, மாணவர்களை ஈர்த்தாக வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கிறது அரசு.

அரசுப்-பள்ளி

கல்வி தனியார்மயமாவதும், தாய்மொழிக் கல்வி புறக்கணிக்கப்படுவதும் ஒன்றோடொன்று இணைந்தவை. தாய் மொழி என்பது  ஒரு சமூகத்தின் பண்பாடு, விழுமியங்கள், பாரம்பரிய அறிவு, வரலாற்று உணர்வு ஆகியவற்றோடு தொடர்பு கொண்டதாகும். சுயசார்புப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகம்தான் தனது உற்பத்தி மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கு உகந்தவாறு, மக்களுக்கு தாய்மொழியிலேயே கல்வியைக் கொடுக்கும்.

தற்போதைய உலகமயமோ, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்குச் சேவை செய்யும் உள்கட்டமைப்பையே இங்கு உருவாக்குகிறது. அமெரிக்க  ஐரோப்பிய முதலாளிகளுக்கான  அவுட்சோர்ஸிங் மையமாக இந்தியப் பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதால், அதற்கு ஆங்கிலம் அறிந்த, அடிமைத்தனமான, தமிழ் மண்ணின் வாசனை அற்ற மூளைகளே தேவைப்படுகின்றன.

எனவே, கல்வியின் நோக்கமும் மாறுகிறது. சொந்த மண்ணையும் மக்களையும் பற்றித் தெரியாத, அவர்களுடைய வாழ்க்கையை  பண்பாட்டைப் புரிந்து கொள்ளக்கூட முடியாத ஒரு கூட்டம் உருவாக்கப்படுகிறது. தேசிய உணர்வு, மொழியுணர்வு, பண்பாடு, வரலாற்றறிவு, சமூகப் பொறுப்புணர்ச்சி, குடிமை உணர்வு போன்ற மனிதத்தன்மைகள் ஏதுமற்றவர்களாக இளைஞர்களைப் பயிற்றுவிப்பதே தமது எதிர்காலத்துக்கு நல்லது என்று பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும் கருதுகின்றனர்.

ஒருபுறம் ஆங்கில மோகம், இன்னொருபுறம் தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற அச்சம்  இரண்டும் பிடித்தாட்டுவதால், மக்கள் ஆங்கிலவழிக் கல்வியில் விழுகிறார்கள். இந்த அடிமை மோகத்தை எதிர்த்து விடாப்பிடியாக நாம் போராடித்தான் ஆகவேண்டும்.

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: