பிளேபாய்-1
பிளேபாய் பந்நிகளுடன் நிறுவனர் ஹெப்னர்

வாங்கும் சக்தியுள்ள நடுத்தர வர்க்கம் கணிசமாக இருக்கும் இந்தியாவின் பாக்கெட்டை ஆட்டையை போட இந்தியாவுக்குள் பாய்ந்து கொண்டிருக்கும் பிராண்டுகளின் வரிசையில் லேட்டஸ்ட் நுழைவுதான் “பிளேபாய்”!

பிளேபாய் என்றவுடன் ஏதோ விளையாடும் பொம்மைகள் பற்றியது என்று நினைத்து விடாதீர்கள். அது ஊதாரித்தனமாக பெண், போதை என கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ‘மைனர் குஞ்சு’களை குறிப்பது. இவர்களை குறிவைத்து பிரத்யோகமாக அமெரிக்காவில் துவங்கப்பட்டவை தான் வரலாற்றுப் புகழ்பெற்ற ‘பிளேபாய்’ புத்தகம், இரவு விடுதிகள், ஓய்வகங்கள் மற்றும் பிராண்ட் பொருட்கள்.

பாலுணர்வுத் தூண்டல், பெண்களின் அரை – முழு நிர்வாண படங்கள் போன்ற பின்னடித்து பாக்கெட்டில் தொங்கவிடப்படும் ஆண்களுக்கான பிரத்தியேகமான மூன்றாம்தர பத்திரிக்கையான பிளேபாய்  1953 முதல் இன்றும் மவுசு குறையாமல் தடை செய்யப்பட்ட சில நாடுகளைத் தவிர உலகத்தின் பல நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பிளேபாய் பத்திரிகை தடை செய்யப்பட்டிருந்தாலும், அன்னிய முதலீட்டிற்காக நாட்டை ஹோல்சேலில் விற்பனை செய்யும் அரசும், முதலாளிகளும், நிழலை விடுத்து நிஜத்தை அரங்கேற்ற தயாராகியிருக்கின்றனர்.

மனிதகுலத்துக்கான தனது 52 வருட ‘பணி’யில் உலகம் முழுவதிலும் 44 இரவு விடுதிகளை நடத்தும் பிளேபாயை இந்தியாவில் சந்தைப்படுத்த ‘பிளேபாய் லைஃப் ஸ்டைல்’ என்ற மும்பை நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் பிளேபாய் கிளப் கோவாவின் காண்டோலிம் கடற்கரையில் 22,000 சதுர அடி பரப்பளவில் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘அது உலக அளவில் பிளேபாயின் முதல் கடற்கரை கிளப்பாக விளங்கும்’ என்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சஞ்சய் குப்தா. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் 120க்கும் மேற்பட்ட நைட் கிளப்புகளையும், உணவு விடுதிகளையும், சில்லறை விற்பனைக் கடைகளையும் தொடங்குவதாக இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிளேபாய் கடைகள் டாஸ்மாக் பார்களை போல மட்டுமின்றி “பிளேபாய் பந்நி (முயல் குட்டி)” என்ற பெயரில் கவர்ச்சியுடையில் மேசைப் பணிப்பெண்களை வைத்து நடத்தப்படுகின்றன. அதற்காக வேலைக்கு அமர்த்தப்படும் பெண்கள் பெயருக்கேற்றபடி பணக்கார பொறுக்கிகளின் விளையாட்டுப் பொம்மைகளாக நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

பிளேபாய்-1
பிளேபாய் பந்நிகளுடன் நிறுவனர் ஹெப்னர்

இந்த பிளே பந்நிகளுக்கான கவர்ச்சி உடை பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘கோர்செட்’’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உள்ளாடை வகையை சாட்டின் போன்ற பளபளக்கும் துணியில் வெளியாடையாக அணிந்துகொண்டு, நெட் துணியால் ஆன காலுறை,  சாட்டினால் செய்யப்பட்ட முயலைப்போல நீண்ட  காதுகள், பின்புறத்தில் முயலுக்கு இருப்பதைப்போல பருத்தி வால், கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு உடுத்தி, பெயர் அட்டையை இடுப்பில் தொங்கவிட்டுக்கொண்டு அரை நிர்வாண கோலத்தில் வலம் வர வேண்டும். இந்தச் சீருடை மட்டும் $10,000 (சுமார் ரூ 5 லட்சம்) அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது.

விடுதிக்கு வரும் மேட்டுக் குடி ஆண்களுக்கு மது பரிமாறும் வேலையைச் செய்வது இந்த பெண்களின் கடமை. கதவைத் திறந்து விடுவதிலிருந்து, சிகரெட் பற்ற வைப்பது, ஒவ்வொருவரின் தேவை அறிந்து சேவைகளை செய்வது, நடன கூட்டாளியாக இருப்பது போன்ற பணிகளையும் இந்தப் பணிப்பெண்கள் செய்வார்கள். தவிர பார்ம் ஹவுஸ்களில் நடக்கும் பிரைவேட் பார்ட்டிகளுக்கும் சென்று சேவை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு விடுதியிலும், இவர்களை மேய்ப்பதற்காகவே பந்நி அன்னை என்பவர் தலைமை வகிப்பார். அவர் வேலை நேரங்களை ஒழுங்கு செய்வது, பணிக்கு அமர்த்துவது, பணிநீக்கம் செய்வது, பயிற்சி தருவது போன்றவற்றை கையாளுவார். ‘முதலாளித்துவ ஒழுக்கத்தில் அதெல்லாம் கறாராக இருக்கும்’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அழகு, இனிய குரல், மற்றும் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற குணங்கள்தான் இங்கு முக்கியம். இவர்கள் எல்லோருக்கும் பொறுப்பாக இருக்கும் மேனேஜர் தினமும் வேலைக்கு வரும் பணிப்பெண்களின் எடையை நிறுத்துப் பார்க்கவேண்டும். எடை குறைவு அல்லது ஏற்றம் இரண்டும் கம்பெனியின் வரையறையை மீறினால் அவர்கள் உடனே வேலையை விட்டு நீக்கப்படுவார்கள்.

இப்படியாக, பளபளக்கும் விளக்குகள் மாட்டி, ஊழியர்களுக்கு சிறப்பான சீருடை அணிவித்து, பல மடங்கு விலையில் உணவுப் பொருட்களை விற்கும் மெக்டொனால்டு-கே.எப்.சி போன்ற உணவகங்களைப் போல “பிளேபாய்” என்ற பிராண்டுக்கும் தனித்துவம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஏற்கனவே பெரு நகரங்களில் உரிமமில்லாத இரவு விடுதிகள் பல போலீஸ் அதிகாரிகளின் ‘ஸ்பெஷல்’ கவனிப்பில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது இதில் என்ன பெரிய அதிசயம்’ என்று நீங்கள் நினைக்கக் கூடும். எலியைப்பிடிக்க மசால் வடையை வைப்பது போல இந்திய ‘அழகிகள்’ கிடைக்கும் வரை இறக்குமதி செய்யப்பட்ட பாரின் அழகிகளையல்லவா பணிக்கு அமர்த்தப்போகிறார்கள். ‘மேட் இன் அமெரிக்கா என்றால் பால்டாயிலையும் கூட ‘ஆசம் டியூட்’ என குடிக்க தயாராக உள்ள கூட்டத்தை நம்பியல்லவா இறங்கியிருக்கிறார்கள்.

மேலும் நிழல் உலகுக்குள் பயந்து போகத் துணியாத டீசன்ட் ஜென்டில்மேன் மற்றும் எக்ஸ்கியூஸ் மீ பார்ட்டிகளெல்லாம் இந்த அரசு அங்கிகாரம் பெற்ற கேளிக்கை விடுதிக்குள் தயங்காமல் செல்லலாமே… இந்த அடிப்படையில் பிளேபாய் கிளப்புகள் இந்திய நடுத்தர வர்க்க பொழுதுபோக்கு உலகை புரட்டிப் போட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது ‘கேஎப்சி போய் வருகிறேன்’ என்று சொல்வதைப் போல ‘பிளேபாய் கிளப் போகிறேன்’ என்று கௌரவத்துடன் போய் வரலாம்.

‘இதனால் இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து போகுமே’ என்று முண்டா தட்டுபவர்களுக்கு ‘இந்தியாவில் பந்நிகள் அம்மணக்கட்டையாக வலம் வரமாட்டார்கள் இந்திய கலாச்சார அறங்களை நாங்கள் மதித்து நடப்போம்’ என முழுக்க நனைந்திருந்தாலும் முக்காடு உண்டு என்ற உத்தரவாதம் அளிக்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சஞ்சய் குப்தா. இப்படி இந்து ஞான மரபு சர்டிபிகேட்டையும் வாங்கியதோடல்லாமல், அறத்தின் அறங்காவலராகவும் தன்னை நியமித்துக்கொண்டுள்ளது பிளேபாய்.

இந்த விடுதிகளில் நுழைந்து பார்த்து விட நினைக்கும் கூட்டம் ஏராளமாக இருந்தாலும் பெரும் பணம் இருப்பவனுக்கு மட்டும் தான் அங்கு அனுமதி கிடைக்கும். அனுமதி மறுக்கப்படும் நபர்களின் நுகர்வு வெறியைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? ஏற்கனவே பைக் வாங்குவதற்காக கொலை, செல்போன் செலவுக்காக கொலை, பார்ட்டிக்காக கொலை, சூதாட்டத்திற்காக கொலை என்று சக மனிதர்களின் உயிரையும் துச்சமாக மதிக்கும் போக்கு மலிந்துள்ள நிலையில் மேலும் இது போன்ற குற்றங்கள் பல்கிப் பெருகும். காணும் பெண்களையெல்லாம் பந்நிகளாக கருதத்துவங்கி ஏற்கனவே அபாய நிலையில் இருகும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரிக்கும்.

இந்தச் சூழலில்தான் இந்தியாவில் கால் எடுத்து வைக்கிறான் பிளேபாய். ‘உங்களில் யார் பிளேபாய் ஆக விரும்புவீர்கள்’ என்ற சதவீத கணிப்பை கொண்டு இரத்தின கம்பளத்தை விரித்திருக்கின்றனர். அதன் சமூக விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப் படப் போவதில்லை. பாலியல் உணர்வில் மனிதத் தன்மையை துறந்து வெறும் விலங்குணர்ச்சியாக வெறியேற்றும் ப்ளேபாயின் பாலுறவு விற்பனை தந்திரம் அவர்களைப் பொறுத்தவரை இலாபம் மட்டுமே.  ஆனால் நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் சிக்கி  ‘எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும்’ என்ற வெறி மேட்டுக்குடி மட்டுமின்றி மேல்நடுத்தர இளைஞர்களிடமும் பரப்பப்பட்டு வருகிறது. ‘சமூக மிகுதியின் விளைவே குற்றம்’ (Crime is a product of social excess) என்று தோழர் லெனின் சொன்னது நம் நகரங்களில் இன்று நிஜமாகி வருகிறது.

படிக்க

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க