இளவரசன் மரணம் : திவ்யாவின் தாலியறுத்த பா.ம.க சாதி வெறியர்கள் !

130

ன்று காலை தருமபுரி கலைக்கல்லூரிக்குப் பின் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது கொலையா தற்கொலையா என்பது விசாரிக்கப்படவேண்டும்.

இது தற்கொலையாகவே இருந்தாலும், தற்கொலை என்று கருதத் தக்கதல்ல. இது அப்பட்டமான சாதிவெறிக் கொலை.

இளவரசன்
இளவரசன்

இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய கொலையாளிகள பா.ம.க வின் சாதிவெறியர்கள்.

திவ்யாவின் தந்தையுடைய மரணத்துக்கும் இவர்கள்தான் காரணம். ஒரு கலவரம் நடத்துவதற்காகவே திவ்யாவின் தந்தையை மரணத்துக்குத் தள்ளியவர்கள் இந்த கொலைகாரர்கள்.

நேற்று திவ்யாவை உயர்நீதி மன்றத்துக்கு அழைத்து வந்து “நான் சேர்ந்து வாழ விரும்வில்லை” என்று பேட்டி கொடுக்க வைத்தார்கள். அதை மிகவும் பெருமையாக பிரசுரித்து மகிழ்ந்தார் பசுமைப்பக்கங்கள் அருள்.

இன்று “வினவு முகத்தில் கரி பூசிய திவ்யா” என்று தலைப்பிட்டு பசுமைப்பக்கங்கள் அருள் மிகவும் சந்தோசமாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அவருடைய மட்டற்ற மகிழ்ச்சிக்கு காரணம், குரல் தழுதழுக்க திவ்யா அளித்திருக்கும் தொலைக்காட்சி பேட்டி. அவர் வெளியிட்டிருக்கும் அந்த பேட்டியில் திவ்யா கூறியிருந்தது இதுதான்.

“விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டேன். அம்மாவும் வேணும் அவுங்களும் வேணும்னுதான் இவ்வளவு நாள் வரையிலும் இருந்திட்டிருந்தேன். ஆனா மேற்கொண்டு எனக்கு என்னுடைய அப்பாவோட நினைவுகள் இருந்துகிட்டே இருக்கிறதுனாலே எனக்கு சேர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலையே இல்லை. நான் எப்போதும் சேர்ந்து வாழத் தயாராவே இல்லை. நான் அம்மாவோட முடிவுப்படி வாழத் தயாராயிட்டேன். இதைத்தான் நான் நீதிபதிகிட்டேயும் சொன்னேன். ஆனா ரஜனி சார், அம்மா இளவரசன ஏத்துகிட்டா நான் சேர்ந்து வாழத்தயாரா இருக்கிறதா தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டதனால, இன்னிக்கி நான் யாரோட ஆதரவுமே இல்லாம தனிமையில நிக்கிறேன். நான் வந்ததே என்னுடை பேரண்ட்சோட எதிர்பார்ப்புக்காகத்தான், அவுங்க கூட வாழணும். எனக்கு நீங்கதான் முக்கியம். நான் செஞ்சது தப்பு அப்பிடிங்கிறத உணர்ந்து நான் வந்தேன். ஆனா அவுங்க ஒரு தவறான செய்திய வெளியிட்டதனால, எல்லார் மத்தியிலயும் எனக்கு ஒரு ஆதரவு கிடைக்காம இன்னக்கி நான் தனிமையில நிக்கிறேன். அத விளக்குறத்துக்காகத்தான் நான் இன்னிக்கி கோர்ட்டுக்கு வந்தேன்”

“தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார் “ என்று நாம் சென்ற பதிவில் எழுதியிருந்தோம். “நான் அப்படி சொல்லவே இல்லை” என்று தெளிவுபடுத்துவதற்காக திவ்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் சத்திரியர்கள்.

இந்த ஒரு வரியைக் காட்டி வினவின் முகத்தில் திவ்யா கரி பூசிவிட்டதாக கொக்கரித்திருந்தார் அருள்.

“விருப்பப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டேன்” என்று சொல்லத் தொடங்கி, “வாழத்தயாராக இல்லை” என்று கூறி முடிக்கும், பரிதாபத்துக்குரிய ஒரு பெண்ணின் கண்ணீரில் மகிழ்ச்சியடையும் மனவக்கிரம் பிடித்த இந்த மிருகங்களை என்ன செய்வது?

கண்ணகி, முருகேசன் கொலை ஒரு ரகம். இது ஒரு ரகம்.

நேற்று திவ்யாவின் கழுத்திலிருந்து தாலியை அகற்றினார்கள். இன்று தாலி கட்டிய கணவன் அகற்றப்பட்டு விட்டான்.

மீண்டும் சொல்கிறோம். தற்கொலையே ஆனாலும் இது கொலைதான். இதற்கு முழுப்பொறுப்பு பா.ம.க.

ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!

திவ்யாவை உடனே அவரது குடும்பத்தினரிடமிருந்தும் சாதி வெறிக் கும்பலிடமிருந்தும் விடுவிக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில் திவ்யாவையும் இளவரசனையும் மிரட்டியவர்கள் யார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உடனே திவ்யாவை விடுவிக்காவிட்டால், தங்களுடைய குற்றங்களை மறைக்கும் பொருட்டு, சாதிவெறியர்கள் அந்தப் பெண்ணையும் கொலை செய்து விட்டு, தற்கொலை என்று முடித்து விடுவார்கள்.

சாதி வெறியர்களின் முகத்தில் காறி உமிழ்வோம்! சாதிக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்!