privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஎன் பார்வையில் வினவு - வளவன்

என் பார்வையில் வினவு – வளவன்

-

என் பார்வையில் வினவு – 11 : வளவன்

முதலில், ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவுக்கு என் வாழ்த்துகள்!

வேர்ட்பிரஸ் நிலையில் இருந்து வினவை தொடர்ந்து வருகிறேன். பதிவுகள் ஒன்றிரண்டாய் இருந்த சமயத்தில் அனைத்தையும் படித்தேன். பிறகு பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், நேரம் இருக்கும்போது படிப்பது, குறிப்பான காரணத்துடன் கட்டுரைகளைத் தேடிப் படிப்பது என்பதாக வினவுடனான எனது உறவு தொடர்கிறது.

நான் கல்லூரி படித்த காலத்தில் எங்கள் ஊரின் ஒரு சில கடைகளில் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் விற்பார்கள். எல்லாப் புத்தகங்களையும் வாசிக்கும் ஆர்முள்ள நான், இவற்றையும் வாங்கிப் படிப்பேன். அப்போது எதுவும் புரியாது. ஆனாலும் புரியும் வரை படிப்பது என்ற எண்ணத்துடன் தொடர்ந்து நூல்களை வாசிக்கும்போது ஒவ்வொன்றாக‌ பிடிபட்டது. அப்போது தோன்றிய எண்ணம், ‘இவர்கள் எல்லோரும் தப்பு; எல்லாம் தப்பு என குற்றம் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்’ என்பதுதான். சில காலத்தில் இதர புத்தகங்கள் மிக மேலோட்டமாக அணுகிய பல விசயங்களை, புதிய கலாச்சாரம் உடைத்து நொறுக்கியபோது மேற்கண்ட எண்ணம் மாறத் துவங்கியது.

தெரசா
எங்கள் பாவங்களை போக்கிக்கொள்வதற்காக ஏழைகளைப் படைத்த இறைவனுக்கு நன்றி

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. உதவும் கரங்கள் பற்றிய பு.க. கட்டுரை ஒன்று… அதில் அன்னை தெரஸா பற்றிய விமர்சனமும் இருந்தது. “நாங்கள் தொண்டூழியம் செய்து எங்கள் பாவங்களை போக்கிக்கொள்வதற்காக ஏழைகளைப் படைத்த இறைவனுக்கு நன்றி” என்று அன்னை தெரஸாவின் மேற்கோள் ஒன்று அக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. காந்தி, அன்னை தெரஸா போன்ற புனிதர்களை பற்றி மேன்மையான எண்ணங்கள் மட்டுமே அதுவரை இருந்ததால் அந்த வாக்கியம் எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. பல பிம்பங்கள் உடைபட்டன. (பிறகு சில ஆண்டுகள் கழித்து, அதே அன்னை தெரஸா, கிறிஸ்தவ திருச்சபைக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து ‘தேவன் இல்லை – ஆன்மா இல்லை -இயேசுவே …. நீரும் இல்லை‘ என்று ஒரு கட்டுரை பு.க.வில் வெளியானது).

இந்த வகையில்தான் எனக்கு வினவும் அறிமுகமானது. எனினும், வினவு கட்டுரைகளின் அரசியல் நேர்மை மற்றும் எழுத்து வன்மை, சற்றே பிரமிப்பூட்டி ஒதுங்கியிருக்க வைத்தது. ஒரு மறுமொழி எழுத நினைக்கும்போது, அதற்குரிய தகுதி எனக்கில்லை என்ற எண்ணம் மனதின் முன்னே பெரும் பூதமாக உருவெடுத்து தடுத்து நிறுத்தியது. இவ்வகையில் சில ஆண்டுகள் ஒரு பார்வையாளராகவே இருந்துள்ளேன். பிறகு எழுதி, எழுதி பழகி, நானும் சற்று எழுதக் கற்றேன். ‘புதிய கலாசாரத்தில் எழுதுவது போல என்னால் எழுத முடியுமா?’ என்று பிரமித்த காலத்தில் இருந்து, வினவு கட்டுரையாளர்கள் பட்டியலில் என் பெயரும் வந்தது. மேலே சொன்னது எனது சொந்த அனுபவம். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த ஆறு ஆண்டுகளாக இணையதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவன் என்ற அடிப்படையில், வினவின் வருகையும், வளர்ச்சியும் சரியான கோணத்தில் இருந்து மதிப்பிடப் பட வேண்டும் என கருதுகிறேன். மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்த இணைய எழுத்துலகிற்கு, ஓர் காத்திரமான அரசியல் உள்ளடக்கம் கொண்ட பாதையை வகுத்தளித்தது வினவுதான். ஒருவருக்கொருவர் பின்னூட்ட காவாளித்தனம் செய்துகொண்டு, தமிழ்மணத்தில் முன்னணியில் இருப்பதற்காக வெறுமனே ஸ்மைலிகளை பின்னூட்டமாக‌ போட்டுக்கொண்டு திரிந்தவர்களை, அரசியல் ரீதியாக வினையாற்றும்படி நிர்பந்தித்தது வினவு. வினவில் நேரடியாக பங்கேற்காதவர்களிடமும் ஒரு தார்மீக கட்டுப்பாட்டை; ஒழுங்கை வினவின் செயல்பாடுகள் உருவாக்கின; அப்படி ஓர் நிர்பந்தத்தை ஏற்படுத்தின. (இதைத்தான் ‘வினவு, இணையப் போலீஸ்காரனைப் போல் நடந்துகொள்கிறது’ என்கிறார்கள் லீனா மணிமேகலை மற்றும் பி.ந. குரூப்ஸ்).

வினவின் மீதான வாசகர்களின் மதிப்பு, அதன் கட்டுரைகளின் தரத்தில் இருந்து மட்டும் வருவதாக நான் எண்ணவில்லை. மாறாக குறிப்பான சில பிரச்னைகளில் வினவு எடுத்த நிலைபாடு மற்றும் உறுதியான செயல்பாடுதான் இதை சாதித்துள்ளது. உதாரணமாக சந்தனமுல்லைக்கு வந்த பிரச்னையைக் குறிப்பிடலாம். பொறுக்கித்தனமாக  நர்சிம் எனும் பதிவர், ‘பூக்காரி’ என புனைக்கதை எழுதி சந்தனமுல்லையை அவமானப்படுத்தியபோது, வினவு அதை போர்க்குணத்துடன் எதிர்கொண்டது. இணையத்தில் பெண்களுக்கு நேரும் இத்தகைய வசைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக அதைப் பயன்படுத்தியது. வினவின் இந்த நடவடிக்கைக்கு வாசகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு வந்ததும், அது மெய்யுலகில் எதிரொலித்து நர்சிம் ஓரம்கட்டப்பட்டதும் அனைவரும் அறிந்த உண்மை. சமரசம் செய்துகொள்ளாத அந்த குணம் வேறு சில பிரச்னைகளிலும் எதிரொலித்தது.

பின் நவீனத்துவம்
காதில் வளையம் போட்டால் தொன்மம், கையில் வளையம் போடுவது நவீனத்துவம், மூக்கில் போட்டால் அதுதான் பின்நவீனத்துவம்!

லீனா மணிமேகலை கவிதை என்ற பெயரில் வாந்தி எடுத்தபோதும், சன் டி.வி. அகிலா பணிநீக்கம் செய்யப்பட்டபோதும், இதோ இப்போது இளவரசனின் மரணத்தின்போதும் உறுதியான நிலைபாட்டுடன் துணிந்து முன் நிற்கிறது வினவு.

சமூக ஒழுக்கங்களை ‘கட்டுடைத்து’, பிழைப்புவாதத்தை புதிய அறமென விதந்தோதி, என்.ஜி.ஓ.க்களுடன் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு, மதவாதிகளுடன் கை குலுக்கும் பின்நவீனத்துவ அறிவாளிகளை அம்பலப்படுத்துவதில் வினவு ஆற்றிவரும் பாத்திரம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

குறிப்பாக லீனா மணிமேகலை பிரச்னையின்போது, ‘என் கவிதைக்கு எதிர்ப்பு என்று பெயர் வை’ என்று கவித்துவ தலைப்புடன் கட்டுரை எழுதி, அந்த ஆபாசக் குப்பையை கருத்துரிமை என சித்தரித்து, அந்த கருத்துரிமைக்கு கேடு வந்துவிட்டதாக எகிறிக் குதித்தார்கள் பி.ந.வாதிகளும், கருத்துரிமை காவலர்களும். அதற்காக ஒரு கூட்டம் நடத்தி வாய் கிழிய கூப்பாடு போட்டார்கள். ஆனால் அதே லீனா மணிமேகலை, ‘தேஜஸ்வினி’ என்ற பெயரில் தண்டகாரன்யா பழங்குடி பெண்களின் துயரக் கதையை டாடாவிடம் புராஜெக்ட் போட்டு விற்றார். அது ஆதாரத்துடன் அம்பலமானதும், ”ஆமாம் நான் புராஜெக்ட் போட்டு படம் எடுத்தேன். இனியும் செய்வேன்” என்று திமிருடன் பேசினார் கவிதாயினி.

முந்தைய ஆபாச குப்பையை கருத்துரிமை என ஆதரித்தவர்களுக்கு, பழங்குடி துயரத்தை காசாக்கிய இந்த அயோக்கியத்தனம் ஆபாசமாக தெரியவில்லை. கடைசிவரை வாய் திறக்கவில்லை. இதைப்பற்றி ‘சைலேன்ஸ்‘ என்ற தலைப்பில் வந்த வினவு கட்டுரை மிக அற்புதமாக எழுதப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையைப் படித்தப் பின்னரேனும் இந்த பிழைப்புவாத பி.ந.வாதிகள் வினைபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை அமைதி காக்கிறார்கள். வாசகர்கள் எத்தனையோ பேரை வினவின் கட்டுரைகள் மெல்ல, மெல்ல எழுத வைத்துள்ளன. ஆனால் இந்த அறிவாளிகளோ… மேலும், மேலும் சூழ்ச்சிக்காரர்களாக இறுகிப்போகிறார்கள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் தொடர்பான தமிழ்க் கட்டுரைகளை இணையத்தில் ஒருவர் தேடத் துவங்கினால், அவரால் வினவை புறக்கணித்து கடந்து செல்ல முடியாது. அந்த அளவுக்கு கட்டுரைகள் மிகுந்துள்ளன. அனைத்தும் செறிவுடன் எழுதப்பட்டிருக்கின்றன. நான் அடிக்கடிப் படிக்கும் வினவின் கட்டுரை ஒன்றில் இருந்து, சில வரிகளுடன் நிறைவு செய்கிறேன்….

தான் கொண்டிருக்கும் சமூகப்பொறுப்புணர்வின் அளவுக்கே ஒரு மனிதன் சுதந்திரமானவனாக இருக்கவியலும். சமூகப் பொறுப்பின்மையை (சுயநலத்தை) சுதந்திரமாகவும், பொறுப்புணர்வை கட்டுப்பாடாகவும் (சுதந்திரமின்மை) பார்க்கும் தலைகீழ்ப் பார்வைக்கு இது பிடிபடாத புதிராகத்தானிருக்கும். கம்யூனிச ஒழுக்க நெறிகளும், அதனடிப்படையிலான விதிமுறைகளும் மகிழ்ச்சியாக வாழும் உரிமைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளாகத் தான் இத்தகைய பேர்வழிகளுக்குத் தோன்றும். எனினும் புரட்சியின் ஒழுக்க நெறிகளும், விழுமியங்களும் விதிமுறைகளால் வார்த்தெடுக்கப்படுபவை அல்ல. அவை ஒரே மனிதனுக்குள் உறைந்து கிடப்பவையும் அல்ல. மாறாக, அவை வர்க்கப் போராட்டமெனும் உலைக்களத்தில் உருவாக்கப்படுபவை, சுதந்திரமான மனிதர்களின் தனித்தன்மையினால் வளர்த்தெடுக்கப்படுபவை.

போராட்டமே மகிழ்ச்சி என்று வாழும் போராளிகள் ஒவ்வொருவரும் ஒரு கலைஞனைப் போல வாழ்க்கையின் புதிய பரிமாணங்களை, புதிய அழகுகளைப் படைத்துக் காட்டுகிறார்கள். தூக்குமேடையில் உயிர் துறந்த போராளிகள் ஏராளம். பகத்சிங்கும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தான். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்படுவதற்குமுன் அவனுடைய கடைசி ஆசையைக் கேட்டபோது, “என் கண்களை மறைத்திருக்கும் கருப்புத் துணியை அவிழ்த்து விடு; என் தாய் மண்ணைப் பார்த்தபடி நான் மறைகிறேன்” என்றான்.

அது மரணத்திற்கு முன் அவன் தந்த படைப்பு; அவன் சொன்ன கவிதை.

– வளவன்

குறிப்பு : வளவன் எழுதிய சில கட்டுரைகள் தொடர்புடைய இடுகைகளில்.