அந்தத் துறையிலிருந்து ஓய்வு பெற்று சென்ற பேராசிரியர் துறைத் தலைவரை சந்திக்க வந்திருக்கிறார். அறைக்குள் வரும் ஒரு சக பெண் ஊழியர், “சார், ரிட்டையர்மென்ட் வாழ்க்கை உங்களுக்கு நல்லா ஒத்து வருது சார், பார்க்க மிடுக்காகிட்டீங்க” என்று உபச்சாரமாக சொல்கிறார்.
“அப்படியாம்மா, ஹிஹி. இது மாதிரி ஏற்கனவே 2 பேரு எங்கிட்ட சொல்லிட்டாங்க. அப்படி சொன்னவங்க எல்லாருமே பொண்ணுங்கதான். இதுக்கு அர்த்தம் என்ன?” ஹெ ஹெ என்று சிரிக்கிறார்.
அந்த பெண் ஊழியர், தர்ம சங்கடத்தோடு துறைத் தலைவரின் அறையை விட்டு அவசர அவசரமாக வெளியேறுகிறார்.
‘குடும்பம், கணவன்–மனைவி உறவு, பாலியல் ஒழுக்கம் எல்லாம் பத்தாம் பசலித்தனம். அதை எல்லாம் கட்டுடைக்க வேண்டும். பின் நவீனத்துவ சகாப்தத்தில் யார் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம். இருவரும் சம்மதித்தால் அதில் தலையிட வேறு யாருக்கு உரிமையிருக்கிறது.’
இப்படி ஒரு தத்துவத்தை முன் வைத்து கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை தூக்கிப் பிடிப்பதுதான் இன்றைய கார்ப்பரேட் மற்றும் இலக்கிய மேட்டுக்குடியினரின் ஒழுக்கத்திற்கெதிரான கலகமாம்.
இதில், ‘பெண்கள் தமது விருப்பத்தை முதலில் சொல்ல மாட்டார்களாம். ஆண்தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும்’ என்றும் அவர்களாகவே அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
பெண் மறுத்தாலும், மேலும் மேலும் வற்புறுத்துவது தமது பாலியல் உரிமை, தனது மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் பாலியல் உரிமை என்று பெண்ணுரிமையையும் தூக்கிப் பிடிக்கிறார்கள். இந்த கேவலமான தத்துவத்துடன் அதிகாரமும் சேரும் போது ஆண்களின் கையில் அது ஒரு பயங்கரமான ஆயுதமாக மாறி விடுகிறது.
தன் மீது கொண்ட அக்கறையாகவும், அரை நகைச்சுவையாகவும் அதிகாரத்தில் உள்ளவர்கள் வைக்கும் சொல்லாடல்களை கார்ப்பரேட் உலகில் எதிர் கொள்ளும் பெண் என்ன செய்ய வேண்டும்?
1999-ம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகையில் வேலை செய்த ஒரு பெண் பத்திரிகையாளரின் இடுப்பு தெரியும் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றுக்கு விடுகிறார் சக ஊழியர் ஒருவர். அது குறித்து நிர்வாகத்துக்கு பாலியல் துன்புறுத்தல் புகார் அனுப்புகிறார் பாதிக்கப்பட்ட பெண். பொறுப்பில் இருந்த ஷோமா சவுத்ரி, ‘இப்படிப்பட்ட புகார்களை நிர்வாகம் விரும்புவதில்லை, சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து மன்னிப்பு பெற்றுக் கொண்டு விஷயத்தை முடித்துக் கொள்’ என்று அறிவுறுத்துகிறார். பாதிக்கப்பட்ட பெண் வேறு வழியில்லாமல் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறார்.
ஆனால் 3 மாதங்களுக்குள் குற்றம் செய்த நபருக்கு பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது. வெறுத்துப் போய் தன் வேலையையும், பத்திரிகைத் துறையையும் விட்டு விலகினார் அந்த பத்திரிகையாளர். ரகேஜா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமாக வினோத் மேத்தாவை ஆசிரியராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அவுட்லுக் பத்திரிகையின் அப்போதைய நிர்வாக ஆசிரியராக இருந்தவர் தருண் தேஜ்பால்.
அதிகாரம் எப்படி வேலை செய்கிறது, அதிகாரத்துக்கு கீழ் வருபவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறித்த ஆழமான அறிவு பெற வாய்ப்பிருக்கும் சூழலில் வளர்ந்தவர் தருண் தேஜ்பால். அவரது தந்தை இராணுவ அதிகாரியாக பணியாற்றிய பெங்களூரு, பரேலி, ஜோர்ஹத், மும்பை என்று இராணுவக் குடியிருப்புகளில் வளர்ந்தார். பஞ்சாபில் படித்து சண்டிகரிலும் தில்லியிலும் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டுடே, பைனான்சியல் எக்ஸ்பிரஸ், கடைசியாக அவுட்லுக் பத்திரிகைகளில் வேலை செய்யும் போது இலக்கிய வட்டங்களிலும், பத்திரிகையாளர் வட்டங்களிலும் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
தெகல்கா ஆரம்பித்த பிறகு துணிச்சலான புலன் விசாரணை அறிக்கைகளுக்கான பணிகளைச் செய்த அனிருத்தா பகால், ஆஷிஷ் கேத்தான் போன்ற பத்திரிகையாளர்களுடன் இந்த கால கட்டத்தில் தொடர்பு கொண்டார். 2000-ம் ஆண்டு தெகல்கா இணைய தளத்தை ஆரம்பித்தார்.
2000-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஹன்சி குரோன்யே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட விபரங்கள் வெளியானதை அடுத்து, அப்போதைய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை வைத்து கிரிக்கெட் அதிகாரிகள், விளையாட்டு வீரர்களுடனான உரையாடல்களை பதிவு செய்து முகமது அசாருதீன், அஜய் ஜடேஜா, அஜய் ஷர்மா போன்ற வீரர்களின் சூதாட்ட தொடர்புகளை அம்பலப்படுத்தியது தெகல்கா.
2001-ம் ஆண்டு வெஸ்ட் கேட் என்ற பாதுகாப்புத் துறை உபகரணங்களை விற்கும் லண்டன் நிறுவனமாக நடித்து பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்போதைய பாஜகவின் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமணன் போன்றவர்களை லஞ்ச குற்றச்சாட்டில் சிக்க வைத்து பதவி விலகச் செய்தது தெகல்காவின் புலன் விசாரணை. அப்போதிருந்தே பாஜகவுக்கு தெகல்கா மீது வஞ்சம் வந்து விட்டது. தெகல்கா காங்கிரஸ் கட்சியின் கைக்கூலி பத்திரிகை என்று குற்றம் சாட்டி வந்தார்கள்.
2007-ம் ஆண்டு குஜராத் நரோடா பாட்டியா கலவரங்களில் தாம் நடத்திய கொலை வெறிச் செயல்களை விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஊழியர்களை சொல்ல வைத்து அந்த வீடியோக்களை வெளியிட்டது தெகல்கா. அந்த ஆண்டு தெகல்கா பத்திரிகையாக வெளி வர ஆரம்பித்தது. 2009-ம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் வணிக ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தயாநிதி மாறன் லஞ்சம் வாங்கியதை அம்பலப்படுத்தியது.
ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்காக, கொள்ளையடிக்கும் கார்ப்பெரேட்டுகளுக்கு எதிராக தெகல்கா செயல்பட்டது. அதில் ஆஷிஷ் கேத்தான், அனிருத்தா பகால் போன்ற பத்திரிகையாளர் முன்னணி வீரர்களாக இந்த ரகசிய நடவடிக்கைகளை செய்து அரசியல் வாதிகள் மற்றும் கார்ப்பொரேட்டுகளின் மக்கள் விரோத, ஊழல் செயல்பாடுகளை அம்பலப்படுத்தினார்கள்.
தெகல்கா பத்திரிகையாளர்களின் தீரமிக்க புலனாய்வு பணிகள் அனைத்தும் தருண் தேஜ்பாலின் காலடியில் வைக்கப்பட்டு அவற்றின் புகழ் அவருக்கு மகுடமாக சூட்டப்பட்டது. 2007-ம் ஆண்டு தி கார்டியன் – அவரை இந்தியாவில் செல்வாக்கு வாய்ந்த நபர்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. 2009-ம் ஆண்டு பிசினஸ் வீக் பத்திரிகையின் “சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில்” ரத்தன் டாடாவுக்கு அடுத்து, சச்சின் டெண்டுல்கரை முந்தி 47-ம் இடத்தைப் பிடித்திருந்தார்.
தெகல்கா தூக்கிப் பிடித்த சமூக அறச் சீற்றங்களையும், தனக்கு நிதி தருபவர்களின் சமூக விரோதச் செயல்களையும் பிரித்துப் பார்ப்பதில் தருண் தேஜ்பால் சமர்த்தராக இருந்தார்.

ராமன் கிர்பால் எழுதிய கோவாவின் இரும்புத் தாது மாபியா குறித்த கட்டுரையை வெளியிடாமல் தெகல்கா இருட்டடிப்பு செய்தது. கோவா மாநிலத்தின் பொதுக் கணக்குக் குழுவின் மதிப்பீட்டின்படி மாநில அரசுக்கு ரூ 3,000 கோடி இழப்பை ஏற்படுத்திய ஊழல் அது. ராமன் கிர்பால் தெகல்காவை விட்டு வெளியேறி பர்ஸ்ட் போஸ்டு இணைய இதழுக்கு மாறிய பிறகு அந்த கட்டுரை வெளியிடப்பட்டது.
வேதாந்தாவின் பத்திரிகை செய்தியை லாஞ்சிகர் மற்றும் நியமகிரியில் அதன் நிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் பற்றிய கட்டுரையாக தெகல்கா வெளியிட்டது. அதை எழுதியதாக குறிப்பிட்டிருந்த நிருபர், பின்னர் “தான் அதை எழுதவில்லை” என்று வெளிப்படையாக அறிவித்தார்.
2011-ம் ஆண்டு தெகல்காவின் சார்பில் திங்க் (சிந்தனை) என்ற நிகழ்வு கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. தெகல்காவின் திங்க் 2011 திருவிழாவுக்காக தெகல்காவின் பதிப்பாளரும் தருண் தேஜ்பாலின் சகோதரியுமான நீனா தேஜ்பால் கோவா முதல்வர் திகம்பர் காமத்தை சந்தித்தார். கோவாவின் பம்போலின் கடற்கரையில் உள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் திங்க் நிகழ்வு நடத்தப்பட்டது. ராமன் கிர்பாலின் கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்ட சுரங்கத் தொழில் முதலாளிகளும் அந்த ஹோட்டலின் பங்குதாரர்களாக இருந்தனர். அந்த ஹோட்டல் கடற்கரையில் கட்டிடங்கள் கட்டுவதற்கான விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது.
திங்க் 2011 நிகழ்வின் புரவலர்களாக எஸ்ஸார் குழுமம், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. நீனா தேஜ்பால் “எஸ்ஸாருக்கும் தெகல்காவுக்கும் ஒரே அறங்கள்தான்” என்று கூறினார். நியமகிரியிலும், ஒடிசாவிலும் பழங்குடி மக்களின் நிலங்களை பறிப்பது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், தொலைதொடர்புத் துறை ஊழல் என்று உச்சி வரை ஊழல் சேற்றில் மூழ்கியிருந்த அந்த கார்ப்பரேட்டுகளின் நிதியில் தெகல்கா தனது ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை தொடர முடிவு செய்திருந்தது.
குஜராத்தின் அதானி குழுமம், யுனைட்டட் பாஸ்பேட், கோகோ கோலா போன்ற கார்ப்பரேட்டுகளும் தெகல்காவின் புரவலர்கள் பட்டியலில் இருந்தனர்.

கர்நாடகா சுரங்க ஊழலில் அரசுக்கு ரூ 890 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட, எடியூரப்பாவின் மகனுக்கு ரூ 20 கோடி நன்கொடை செலுத்திய ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் தெகல்காவின் புரவலர் பட்டியலில் இருந்தது. மேதா பாட்கர், பியான்கா ஜேக்கர், முன்னாள் மாவோயிஸ்ட் புரட்சியாளர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வை வழங்கியது இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு போர்க் கப்பல்களை வழங்குவதற்கான ரூ 920 கோடி ஒப்பந்தம் போட்டிருந்த பிபாவவ் என்ற ஆயுத தரகு நிறுவனம்.
திங்க் நிகழ்வில் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தவர்களில் ஒடிசாவின் சுரங்க மற்றும் கேபிள் டிவி அதிபர் மற்றும் பிஜேடி நாடாளுமன்ற உறுப்பினர் பாய்ஜெயந்த் ஜெய் பாண்டா, மேவரிக் மொகல் என்று வர்ணிக்கப்பட்டு ‘திப்புசுல்தானின் வாளை கொண்டு வந்தவர், மகாத்மா காந்தியின் கண்ணாடியை மீட்டு வந்தவர், ஆண்டு தோறும் கவர்ச்சிகரமான மாடல்களை வைத்து காலண்டர் வெளியிடுபவர்’ என்று போற்றப்பட்ட விஜய் மல்லையா ஆகியோர் அடங்குவர்.
லீனா மணிமேகலை டாடாவின் பணத்தை வாங்கிக் கொண்டு ஏழை பெண்களின் கதையை சொன்னது போல ‘இது எல்லாம் ஏழைகளின் கதைகளை சொல்வதற்குத்தான்’ என்று நியாயப்படுத்தினார், தெகல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி.
இந்த ஆண்டு நவம்பர் 8 முதல் 10ம் தேதி வரை நடந்த மூன்றாவது திங்க் நிகழ்வில்தான் தருண் தேஜ்பால் தனது கார்ப்பரேட் அதிகார, ஆண் உரிமையை பயன்படுத்திக் கொண்டு உடன் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் மீது பாலியல் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார். தெகல்கா கார்ப்பரேட்டுகளின் தயவோடு நிலை நின்ற பிறகு தருண் தேஜ்பாலிடமும் அத்தகைய கயவாளித்தனம் வெளிவருகிறது.
திங்க் விழாவின் ஆரம்ப விழா இரவில் முதல் தாக்குதல் நடந்திருக்கிறது. ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோவையும் அவரது மகளையும் வழி நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்த அந்த பெண் பத்திரிகையாளர் நவம்பர் 7-ம் தேதி முழுவதும் அவர்கள் கோவாவை சுற்றிப் பார்க்கும் போது உடன் இருந்திருக்கிறார். இரவில் அவர்களை ஹோட்டல் அறையில் விடுவதற்கு தேஜ்பாலும் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரும் சென்றிருக்கின்றனர்.
அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையிலிருந்து கீழே மின் தூக்கியில் இறங்கும் போது தேஜ்பால் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியிருக்கிறார். அதை எதிர்த்து தடுத்த பாதிக்கப்பட்ட பெண், தான் தேஜ்பாலின் மகளின் நெருங்கிய தோழி என்பதையும் தமது குடும்பங்களின் நெருங்கிய நட்பையும் சிறு குழந்தையாகவே தன்னை தேஜ்பாலுக்கு தெரியும் என்பதையும் நினைவூட்டியிருக்கிறார். எதுவும் தேஜ்பாலின் காதில் விழவில்லை. லிஃப்ட் தரைத்தளத்துக்கு வந்த பிறகு பாதிக்கப்பட்ட பெண் அவசர அவசரமாக தப்பி ஓடியிருக்கிறார்.

தன்னை விட்டு ஓடிப் போய்க் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து தேஜ்பால் “இதுதான், உன் வேலையை தக்க வைத்துக் கொள்ள மிக எளிதான வழி” என்று மிரட்டியிருக்கிறார். ஒரு டாக்சி பிடித்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிய பாதிக்கப்பட்ட பெண் தன் நண்பர்களிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார். லிஃப்டுக்குள் தேஜ்பால் தன்னை கைகளால் அத்து மீறியதாக அந்தப் பெண் தன் தோழிகளிடம் பின்னர் கூறியிருக்கிறார். நள்ளிரவுக்குப் பிறகு தேஜ்பால், லிஃப்டில் நடந்த தாக்குதலை நினைவூட்டி “விரல் நுனிகள்” என்ற வார்த்தைகளுடன் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.
அடுத்த நாள் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பணிகளை தொடர்ந்திருக்கிறார். டி நீரோ, அவரது மகள், சர் வி எஸ் நாய்பால் மற்றும் சீமாட்டி நாய்பால் மற்றும் தேஜ்பாலின் மனைவியுடன் கோவா ஆளுனர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பாலின் மனைவியிடம் நடந்ததை சொல்லவில்லை.
நீரோவையும், அவரது மகளையும் அமிதாப் பச்சனின் நிகழ்வுக்கு அழைத்துச் செல்லும்படி தேஜ்பால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். அவர்களை அமிதாப் பச்சனின் நிகழ்வு நடந்த அரங்கில் விட்டு விட்டு தனது ஹோட்டலுக்கு திரும்பிய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேஜ்பால் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இன்னொரு தெகல்கா ஊழியரின் எண்ணிலிருந்து தொலைபேசியில் அழைத்து உடனடியாக மைய நிகழ்வு நடக்கும் ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருக்கிறார்.
நீரோ தனது அறையிலிருந்து எதையோ எடுத்து வரச் சொன்னதாகக் கூறி அவரது அறைக்கு போக பாதிக்கப்பட்ட பெண்ணை தன்னுடன் வரச் சொல்லியிருக்கிறார் தேஜ்பால். தேஜ்பாலுடன் லிஃப்டில் நுழைய மறுத்த அவரை தேஜ்பால் வலுக்கட்டாயமாக லிஃப்டுக்குள் செலுத்தி, அவரது மறுப்புகளுக்கு நடுவே மீண்டும் பாலியல் ரீதியாக தாக்கியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தேஜ்பாலிடமிருந்து விடுவித்துக் கொண்டு மின் தூக்கியிலிருந்து வெளியேறி தனது தோழி ஒருத்தியிடம் நடந்ததை சொல்லியிருக்கிறார்.
பாதிக்கப்பட்டப் பெண் அவரது தோழியான தேஜ்பாலின் மகளை சந்தித்து நடந்ததை சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தேஜ்பாலின் மகள், தேஜ்பாலை திட்டியிருக்கிறார். டி நீரோ பற்றிய செய்தி ஒன்றை சொல்லப் போன பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தேஜ்பால், “நீ என் மகளிடம் நடந்ததை சொன்னது தவறு” என்று கூறியிருக்கிறார்.
தனது நண்பர்களிடம், தாயிடமும் நடந்ததை சொன்ன பாதிக்கப்பட்ட பெண் தனக்கு எப்படியும் வேலை போய் விடும் என்று கூறியிருக்கிறார். அடுத்த நாளும் தனக்கு இடப்பட்டிருந்த டி நீரோ, மற்றும் அவர் மகளுடன் உடன் செல்லும் பணியை தொடர்ந்திருக்கிறார். அப்போது தேஜ்பாலிடமிருந்து வரிசையாக குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

தன் மகளிடம், இருவருக்கிடையே “நடந்தது வெறும் குடிகார கலாட்டாதான்” என்று சொல்லி விடுமாறு ஒரு குறுஞ்செய்தி, “வெறும் கலாட்டாவைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று சொல்லுமாறு அடுத்த குறுஞ்செய்தி, “இது போன்ற ஒரு அற்பமான விஷயத்தைப் போய் என் மகளிடம் சொல்வாய் என்று நம்பவே முடியவில்லை. தந்தை-மகள் உறவைப் பற்றி உனக்கு எந்த புரிதலும் இல்லை” என்று குறுஞ்செய்திகள் அணிவகுத்தன.
நவம்பர் 9-ம் தேதி தேஜ்பாலுடன் டி நீரோவின் திட்டங்களைப் பற்றி தொலைபேசியில் பேசினாலும், பொதுவாக அவரிடமிருந்து விலகியே இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தனது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். நவம்பர் 9-ம் தேதி டி நீரோவையும், அவரது பெண்ணையும் விமான நிலையத்தில் அனுப்பிய பிறகு தேஜ்பாலுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நவம்பர் 16-ம் தேதி மீண்டும் குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தன என்றும் தனது நண்பர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்.
முதலில் தன் மகளிடம் அவர் பேசி விட்டாரா, அவர் சமாதானமாகி விட்டாரா என்று விசாரிக்கும் குறுஞ்செய்தி.
“தனது நெருங்கிய தோழியை தனது தந்தை பாலியல் ரீதியாக தாக்கியது குறித்து அவர் எப்படி சமாதானமாக முடியும்”.
“ஏன் இப்படி எல்லாம் கடுமையாக பேசுகிறாய்?”
“எனக்கு இதற்கு மேல் எந்த செய்திகளும் அனுப்பாதீர்கள். நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும்”
“அப்படியா? உன்னை எப்போதும் என்னுடைய மிகச் சிறந்த ஊழியர்களில் ஒருவராகத்தான் நடத்தி வந்தேன். ஒரு குடி போதை கலாட்டாவை வைத்துக் கொண்டு நீ இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பேசுகிறாய்”.
“ஒரு தடவை இல்லை, இரண்டு தடவை நடந்தது தருண். அது நிச்சயம் குடிபோதை கலாட்டா இல்லை. நீங்கள் எனக்கு செய்தவை கொடூரமானவை. நான் எந்த போதையிலும் இருக்கவில்லை. உங்களை நிறுத்தும்படி பல முறை சொன்னேன்”.

இது தொடர்பாக ஷோமா சவுத்ரிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் தேஜ்பால் அவரை இரண்டு முறை பாலியல் ரீதியாக தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளார். தன்னை தாக்கியது தான் பல ஆண்டுகளாக பெருமளவு மதித்த, வியந்த தருண் என்பதை ஜீரணித்துக் கொண்டு புகார் சொல்வதற்கு நேரம் பிடித்ததாகவும் அவர் தனது மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் மன்னிப்பு கடிதம் அனுப்பியிருக்கிறார். தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி, தனது சக பத்திரிகையாளரின் மகளாகவும், பின்னர் சக பத்திரிகையாளராகவும் அறிந்த பெண்ணின் நம்பிக்கையை உடைத்ததற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். தன்னுடைய எடை போடும் திறனில் ஏற்பட்ட பிறழ்வுக்காக வருந்துவதாக சொல்கிறார். இந்த பிறழ்வுக்கு பரிகாரமாக காந்தி போல, ஆறு மாதங்கள் தெகல்கா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி இருப்பதாகவும் தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டிருக்கிறார்.
நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக கருத்து சொல்லும் போது, பிரதமர் மன்மோகன் சிங், “நிலக்கரி வயல்களை தனியார் மயமாக்குவது என்ற கொள்கையில் எந்த தவறும் இல்லை. ஓரிரு விண்ணப்பங்கள் தொடர்பாக முடிவு எடுப்பதில் சில தவறுகள் நடந்திருக்கலாம்” என்று சொன்னது போல, ‘தனது நடத்தை, கருத்து எதிலும் தவறு இல்லை, பெண்களுடனான தனது நடத்தையில் பிரச்சனை இல்லை. இந்த முறை முடிவு எடுப்பதில் தவறு நேர்ந்து விட்டது’ என்று வருந்துகிறார் தருண் தேஜ்பால்.
இந்தத் தகவலை ஷோமா சவுத்ரி தெகல்கா ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்புகிறார். தேஜ்பால் மற்றும் சோமாவின் நடத்தையை எதிர்த்து ரேவதி லவுல் என்ற பெண் பத்திரிகையாளர் தெகல்காவிலிருந்து பதவி விலகியிருக்கிறார். பல தெகல்கா ஊழியர்கள் தேஜ்பால் மற்றும் ஷோமா சவுத்ரியின் அயோக்கியத்தனத்தை சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
தேஜ்பால் நடத்திய தெகல்கா பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிகையாளர்களால் தமது ஊழல், கொலைகார, முகமூடிகளை கழற்றப்பட்டதால் கொலை வெறியில் இருந்த இந்துத்துவ பரிவாரங்கள் இப்போது தருண் தேஜ்பாலோடு சேர்த்து மொத்த தெகல்காவையும் வில்லனாக்க முயற்சிக்கின்றனர்.
தருண் தேஜ்பாலின் ‘முடிவு எடுப்பதில் பிறளல்’ அவர் மீது பாஜகவுக்கு இருக்கும் கடுப்பினால் நாடு தழுவிய செய்தியாகியிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான பெண்கள் பணியிடங்களில், இது போன்ற இரு பொருள் நகைச்சுவை, வார்த்தை சீண்டல்கள், பணி வாழ்வில் முன்னேற கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை, வெளிப்படையான மிரட்டல் இவற்றுக்கு நடுவில் வாழ்கிறார்கள். எந்த கட்டத்தில் முறித்துக் கொள்வது, முறித்துக் கொள்வதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள், அல்லது பிரச்சனையை அம்பலப்படுத்துவது, அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் என்று இருதலைக் கொள்ளி எறும்புகளாக திகைக்கிறார்கள். இந்த நிலையை பயன்படுத்திக் கொள்ளும் அந்த மனித மிருகங்கள் தமது வேட்டையை தினம் தினம் நடத்தி வருகின்றன.
குற்றவியல் பிரிவு 376 (வல்லுறவு), 372(2)- தனது அதிகார பாதுகாப்பில் உள்ள பெண்ணின் மீது வல்லுறவு, 354 – பெண்ணின் மதிப்பை களங்கப்படுத்துவது ஆகிய பிரிவுகளில் தேஜ்பால் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 50 வயதாகும் அவர் இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைக்கு அனுப்பப்படலாம்.
ஆனால், தேஜ்பால் வசம் இருக்கும் பண பலமும், தொடர்புகளின் பலமும் அவருக்கு எதிரான சட்ட போராட்டத்தில் தனக்கு நீதி கிடைப்பதை சாத்தியமற்றதாக்கி விடும் என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். வெள்ளிக் கிழமை தேஜ்பாலின் குடும்பத்திலிருந்து ஒருவர் தாக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குப் போய், அவரது அம்மாவிடம் தேஜ்பாலை பாதுகாக்கும்படி சொல்லியிருக்கிறார். ‘அந்தப் பெண்ணுக்கு என்னதான் வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். ‘யாரிடமிருந்து சட்ட உதவி பெறுகிறார்’ என்றும் அவர் விசாரித்திருக்கிறார். இது தம்மை அச்சுறுத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதனால் தெகல்கா அம்பலப்படுத்திய ஊழல்களும், இந்துமதவெறியர்களின் இரத்த வெறி சாட்சியங்களும் இல்லை என்று ஆகிவிடாது. ஆனால் அத்தகைய நேர்மையின் தீவிரத்தை தருண் தேஜ்பாலின் வக்கிரம் அரிப்பதும் உண்மைதான்.மோடியின் நரவேட்டையை ஆவணமாக்கிய தெகல்கா பத்திரிகை மீது இந்துமதவெறியர்கள் கொண்டிருக்கும் ஜன்மப் பகை அனைவரும் அறிந்த ஒன்றுதான். மற்றபடி பாலியல் வக்கிரங்களை மதங்களிலும், புராணத்திலும், கட்சியிலும் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தருண் தேஜ்பாலை கண்டிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை.
தெகல்கா காங்கிரசை ஆதரித்தது, காங்கிரசு தெகல்காவை ஆதரித்தது என்ற கூற்றின் உண்மை என்ன? தெகல்கா ஆவணமாக்கிய குஜராத் படுகொலைகளை மிகப்பெரும் ஆயுதமாக்கி இந்துமதவெறியர்களை ஒடுக்குவதற்கு காங்கிரசு முன்வரவில்லை. மாறாக இசுலாமிய மக்களிடம் ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டுமே அதை பயன்படுத்திக் கொண்டது.
தெகல்கா பத்திரிகை கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படுவதில் இருக்கும் வீழ்ச்சியும் தருண் தேஜ்பாலின் வீழ்ச்சியும் வேறு வேறு அல்ல. குற்றமிழைத்தது ஒரு தவறு என்றால் அந்த குற்றத்தை “முடிவு கணிப்பதில் ஏற்படும் தவறு” என்று நியாயப்படுத்தவது மாபெரும் தவறு. கார்ப்பரேட் பலம் கொண்ட மனிதர்கள் செய்யும் எந்த கொடுமைக்கும் இத்தகைய வியாக்கியானம் கொடுக்க முடியும்.
கார்ப்பரேட் பத்திரிகைளில் வேலை பார்த்துக் கொண்டே இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்று மனப்பால்குடிக்கும் பத்திரிகையாளர்கள் தருண் தேஜ்பாலின் வீழ்ச்சியிலிருந்து மட்டுமல்ல, தெகல்காவின் கார்ப்பரேட் அடிமைத்தனத்திலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
தருண் தேஜ்பாலாவாது இத்தகைய பகிரங்கமான கண்டனத்திற்கும், விமரிசனங்களுக்கும் ஆளாகி உள்ளார். ஆனால் சன் டிவியில் அகிலாவை துன்புறுத்திய ராஜாவைக் கண்டிப்பதற்கு தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பயந்து ஒடுங்கினார்கள். குறைந்த பட்சம் இத்தகைய பாலியல் கொடுமைகளை அதிகாரத்தின் ஆணவத்துடன் செய்யும் நபர்களையும் அவர்களுக்கு வக்காலாத்து வாங்கும் நிறுவனங்களையும் கண்டிப்பதற்காவது பத்திரிகையாளர்கள் முன்வரவேண்டும். அதை விடுத்து தருண் தேஜ்பால் வடக்கே உள்ள ஆபத்தில்லாத ஆசிரியர் என்பதால் கண்டிக்கும் தைரியம் எந்த முன்னேற்றத்தையும் வழங்கி விடாது.
– அப்துல்
மேலும் படிக்க
- Tehelka editor facing sexual assault allegations
- Tarun Tejpal’s email to young journalist: Full text
- Tehelka’s moment of hubris
- Tejpal family trying to intimidate me: Tehelka journalist
- Mr Moral’s Meltdown
- Sexualized workplaces, predatory men and the rage of women
- The Unbearable Stench of Blood Money is #STiNK2013
why there were no complaints made to Police station immediately apart from the individual complaint as per their office procedure?
Tarun Tejpal is a big guy and he can intimidate the victim.
தொடர்ந்து செய்தியாகிக்கொண்டிருக்கும் ஒரு கயமைத்தனத்தை அற்புதமாக கிழித்து தொங்கவிட்ட தோழர் அப்துலுக்கு வாழ்த்துக்கள்
This is the time to begin our Now cultural revaluation along with New Democratic Revolution against the corporate supporting gov and this womanizers like Tarun Tejpal
//‘குடும்பம், கணவன்-மனைவி உறவு, பாலியல் ஒழுக்கம் எல்லாம் பத்தாம் பசலித்தனம். அதை எல்லாம் கட்டுடைக்க வேண்டும். பின் நவீனத்துவ சகாப்தத்தில் யார் யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம். இருவரும் சம்மதித்தால் அதில் தலையிட வேறு யாருக்கு உரிமையிருக்கிறது.’
இப்படி ஒரு தத்துவத்தை முன் வைத்து கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை தூக்கிப் பிடிப்பதுதான் இன்றைய கார்ப்பரேட் மற்றும் இலக்கிய மேட்டுக்குடியினரின் ஒழுக்கத்திற்கெதிரான கலகமாம்.//
Communist Manifesto (Chapter 2)
The bourgeois family will vanish as a matter of course when its complement vanishes, and both will vanish with the vanishing of capital.
Do you charge us with wanting to stop the exploitation of children by their parents? To this crime we plead guilty.
KARL MARX
http://www.marxists.org/archive/marx/works/1848/communist-manifesto/ch02.htm
Chapter II. Proletarians and Communists
டேகள்க ஒரு கங்க்ரெஸ் எஜண்ட்,குஜராத் கலவரத்துக்கு மூளுக்க சங்க பரிவார்கள் மட்டும்தான் காரணம் என்று கொங்க்ரெஸ்சை தூக்கி பேசும் கூட்டம்.ஆனால் கலவரத்துக்கு பிறகு கலவரத்துக்கு காரணமான சில சங்க பரிவார் வெறியர்கள் ஒண்ணும் தெரியாத பாப்பா போல் காங்கிரஸில் இணைந்து ஓரை ஏமாற்றுவதை டெகேல்க கூறுவதில்லை.