Friday, August 19, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் வேடிக்கை பார்த்தால் வெள்ளாறு செத்துவிடும் !

வேடிக்கை பார்த்தால் வெள்ளாறு செத்துவிடும் !

-

vellaru-devankudi-notice

டலூர மாவட்டம், விருத்தாசலம் அருகிலுள்ள வெள்ளாற்றுப் பகுதியில் மணல்கொள்ளையால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக மாறிய தேவங்குடி, பவழங்குடிக்கு செல்லும் சாலையைப் பராமரிக்காத, புதிதாக சாலை போடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

  • வெள்ளாற்று மணல் கொள்ளையில் ரூ 150 கோடி மோசடிக்கு உடந்தையான அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது கிரிமினல் வழக்குப் போடு-சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடு

என்பதை வலியுறுத்தியும் கடந்த 26-12-2014 வெள்ளியன்று காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை கருவேப்பிலங்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vellaru-demo-1வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து டிராக்டர்களில் திரண்டு வந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இவை தவிர அங்கு கூடிய பிற பகுதி மக்களும் ஆர்வமாக ஆர்ப்பாட்ட உரைகளையும் முழக்கங்களையும் கேட்டனர்.

vellaru-demo-3

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.உ.பா.மைய மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் புஷ்பதேவன் தலைமை ஏற்றார். வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மருங்கூர் பஞ்சமூர்த்தி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், நேமம் சுப்பிரமணி, கார்மாங்குடி அறிவரசன், கோபாலகிருஷ்ணன், சிவபிரகாஷ், மேலப்பாலையுர் சசிகுமார், கீரனூர் ராஜவன்னியன், மருங்கூர் பாலமுருகன் ஓய்வுபெற்ற ஆசிரியர் இராஜகோபால், மதகளிர்மாணிக்கம் தமிழரசன், விருத்தாசலம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் முருகானந்தம், பவழங்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் சிறுத்தொண்ட நாயனார், உழவர் மன்றத்தைச் சேர்ந்த தெய்வக்கண்ணு  ஆகியோர் பேசினர்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 11 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மக்கள் கூடி நின்று கலையாமல் உரைகளைக் கேட்டனர்.

vellaru-demo-4இறுதியாக ம.உ.பா.மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உரையாற்றினார்.

மணல்கொள்ளையர்களுக்கு அதிகார வர்க்கம் எப்படி துணைபோகிறது, கொள்ளையைத் தடுக்க வேண்டிய கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே எப்படி உடந்தையாகச் செயல்படுகிறார்கள் என்பதையும், இவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டிப்பதற்கு இவர்களிடமே மனு கொடுத்து நாம் போராட வேண்டியிருக்கிறது என்பதையும் விளக்கியதுடன் அதிகார வர்க்க்மும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு தேவையற்ற சதைப்பிண்டங்களாக இருப்பதோடு, நமக்கு எதிராகவும் செயல்படுகின்றனர் என்பதை எளிமையாக விளக்கிப் புரிய வைத்தார்.

“இவர்கள நம்பிப் பயனில்லை. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை எஸ்.பி. வனத்துறை, கனிம வளத்துறை, வருவாய்த்துறை என மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்த அதிகார வர்க்கமோ மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்” என்பதை விளக்கிப் பேசியபோது மக்கள் கைதட்டி ஆரவாரித்து ஆதரவளித்தனர்.

“மந்திரி வருகிறார் என்றால் சாலைகளைச் சரிசெய்யும் அதிகாரிகள் லட்சக்கணக்கான மக்கள் போகும் சாலைகளைச் சரிசெய்யாத்து ஏன்? மந்திரிகளால் மக்களுக்கு ஏதாவது பலனுண்டா? எம்.எல்.ஏ., எம்.பிக்களால் மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்த்துண்டா? மக்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்கவாவது செய்கின்றார்களா?” எனக் கேள்வி எழுப்பி, இந்த மக்கள் விரோத அரசமைப்பை அம்பலப்படுத்தினார்.

“ரோடு போடவில்லை எனில் அடுத்த கட்டமாக நெடுஞ்சாலைத்துறையை முற்றுகையிடுவோம்” என்று விளக்கிப்பேசினார்.

மணல் அள்ளுவதில் நடக்கும் சட்டவிரோதச் செயல்களையும் இதற்குத்துணைபோகும் அதிகாரிகளின் தேசத்துரோகத்தையும் தோலுரித்து, உடனடியாக வழக்குப் பதியவும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவும் வேண்டியதை விளக்கிப் புரிய வைத்தார்.

vellaru-demo-2ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவசாயிகள் “வெள்ளாறு எங்கள் ஆறு என்பதை அடிக்கடி சொல்லிப்பாரு. இது நமது பகுதியில் ஓடுகிறது. இதற்கு நாம்தான் உரிமையாளர்கள். நாம்தான் பயனடைகிறோம். ஆற்று மணல்கொள்ளையால் ஆற்றுநீர் பாதிப்படைகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. இதன் காரணமாக கடல்நீர் உள்ளே வரும். விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் கிடைக்காது. எனவே நாம் எச்சரிக்கையடைந்து மணல்குவாரியை மூடியே ஆக வேண்டும். மணல்குவாரியை நிரந்தரமாக மூடும்வரை நாம் போராடியே தீரவேண்டும்” என ஆதங்கத்துடன் பேசினர்.

ஆறு சாகிறதே என விவசாயிகளின் தனது வேதனைகளை அங்கே வார்த்தைகளில் வடித்தனர். இது, தொடர்ச்சியான மக்களது போராட்டத்தின் வீச்சு.

ஆர்ப்பாட்டத்திற்கு நிதி கொடுங்கள் என்று அறிவித்தவுடனே பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது பெயரையும் ஊரையும் சொல்லி 50, 100 என கையில் உள்ளதை அள்ளித்தந்தனர்.

வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கமும் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கமும் மனித உரிமை பாதுகாப்பு மையமும் ஒவ்வொரு கிராமத்திலும் பிரச்சாரம் செய்ததை ஒட்டி கிராம மக்களும், பெருமளவில் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

vellaru-devankudi-banner

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

முந்தைய பதிவுகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க