privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்

மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்

-

வெள்ளாறு எங்கள் ஆறு! மணல் கொள்ளையனே வெளியேறு!

கொட்டும் மழையிலும் நடந்த பல கட்ட பேச்சு வார்த்தையில், “அதிகாரிகள் மக்கள் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும், 20-12-14 அன்று மக்கள் முன்பாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது வரை குவாரியை தற்காலிகமாக மூட வேண்டும்” என முடிவு செய்யப்பட்டு முற்றுகை போராட்டம் இரண்டாம் நாள் (16-12-2014) மாலை 3-00 மணியளவில் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

வெள்ளாறு எங்கள் ஆறு
“அதிகாரிகள் மக்கள் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும், 20-12-14 அன்று மக்கள் முன்பாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது வரை குவாரியை தற்காலிகமாக மூட வேண்டும்”

வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் தர வேண்டிய ஆவணங்கள்

  1. 2-12-14 அன்று நடந்த முற்றுகைப் போரட்டத்தின் விளைவாக மணல் குவாரியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மூடியதற்கான உத்தரவு நகல்
  2. மேற்படி உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை ஆகியோர் அடங்கிய விசாரணை க்குழுவின் அறிக்கை.
  3. மீண்டும் மணல் குவாரி இயங்கும் என மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு நகல்.
  4. மாநில சுற்றுச் சூழல் ஆணையம் கார்மாங்குடி மணல் குவாரிக்கு வழங்கிய தடையில்லாச் சான்றிதழின் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உத்தரவு நகல்.
  5. மேற்கண்ட உத்தரவுகளின் அடிப்படையில் குவாரி துவங்கிய நாள் முதல் இன்று வரை எடுக்கப்பட்ட மணலின் அளவு, லாரி லோடுகளின் எண்ணிக்கை, அரசுக் கருவூலத்தில் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை விபரம் – மாத வாரியாக.
  6. கார்மாங்குடி ஊராட்சியில் மேற்படி மணல் குவாரியில் அள்ளப்பட்ட மணலின் மூலம் வந்த மொத்த வருமானம் – மாத வாரியாக
  7. கார்மாங்குடி மணல் சேமிப்புக் கிடங்கில் (யார்டில்) இருந்து குவாரிதொடஙகியதிலிருந்து இன்று வரை சென்ற மணலின் விபரம் மற்றும் வழங்கப்பட்ட பெர்மிட்டுகள் விபரம் – நாள் வாரியாக.
  8. குவாரியில் பயன்படுத்தபட்ட ஜே.சி.பி.எந்திரங்களுக்கு பி.டபிள்யூ.டி அல்லது அரசு மூலம் வழங்கப்பட்ட மொத்தத் தொகை, எந்த ஒப்பந்ததாரர்களுகக்கு வழங்கப்பட்டது – நாள் வாரியாக.
  9. கார்மாங்குடி ஊராட்சியில் மணல் குவாரி ஒப்புதலுக்காக இயற்றப்பட்ட தீர்மான நகல்
  10. கருவேப்பிலங்குறிச்சி தேவங்குடி சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பு திட்ட மதிப்பீடு என்ன? கால நிர்ணயம் எனன்?
  11. மாவட்டம் மற்றும் வட்ட அளவில் அரசாணை எண் 135-ன் படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கை – மாத வாரியாக.
  12. கார்மாங்குடி வெள்ளாற்று மணல் குவாரி சர்வே எண் 398/1-ல் குவாரி தொடங்குவதற்கு முன் இருந்த
    அ) மணலின் அளவு விபரம்
    ஆ) குவாரி தொடங்கிய பிறகு எடுத்த மொத்த மணலின் அளவு
    இ) இன்னும் எடுக்கப்பட வேண்டிய மணலின் அளவு என்ன?
வெள்ளாறு எங்கள் ஆறு
தற்போது நடைபெறும் குவாரி சட்டத்துக்கு புறம்பானது என ஏற்கப்பட்டால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.

மேற்கண்ட விபரங்களைத் தந்து அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது நடைபெறும் குவாரி சட்டத்துக்கு புறம்பானது என ஏற்கப்பட்டால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை மக்கள் மத்தியில் விளக்கி மக்கள் ஒப்புதலை பெற்றபோது மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜு பேசியவற்றிலிருந்து

மணல் குவாரி நிரந்தரமாக மூடப்படும் வரை நாம் இங்கிருந்து போக மாட்டோம் என அறிவித்து போராடிக் கொணடிருக்கிறோம். நேற்று மாலை 4 மணிக்கு வந்து பேசிய அதிகாரிகள், இன்று காலை 8-00 மணிக்கே வந்து விட்டனர். கடலூர் மாவட்ட போலீசாருடன், விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் பல வாகனங்களில் போலீசார் வந்துள்ளனர். ஆற்றுக்கு வரும் மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பெண் போலீசார் வீடு வீடாகச் சென்று போராட்டத்திற்கு போகாதீர்கள் என தடுத்து பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுளள்னர். கடும் மழை விட்டு விட்டு பொழிகிறது.

காவல் துறை, “எங்களுக்கு வேறு வழியில்லை நீங்கள் எதாவது ஒரு முடிவு எடுத்துதான் ஆக வேண்டும்” என முழு பலத்தோடு வந்து நிற்கிறார்கள்.

  • நேற்று நாம் கேட்ட ஆவணங்களை, “பொதுப்பணித்துறையில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறியவர்கள் இன்று “நாங்களே தருகிறோம்” என்கிறார்கள்.
  • நேற்று “குவாரியை மூடமுடியாது” எனச் சொன்ன கோட்டாட்சியர், “இன்று தற்காலிகமாக மூடுகிறேன்” எனக் கூறுகிறார்.
  • முன்பு நம்மை கலக்காமல் குவாரியை திறந்தார்கள். இன்று, “உங்களோடு பேசிவிட்டுதான் மீண்டும் திறப்போம்” என்கிறார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களோடு சேர்ந்து விவாதித்து முடிவு எடுக்க விரும்புகிறோம். அது அவசியமான தேவை. எந்த போராட்டத்திலும் மக்களின் முழு ஒத்துழைப்பும்,  எடுக்கும் முடிவைப் பற்றி மக்கள் சிந்திப்பதும் அவசியமானது.

மக்கள் தரப்பிலிருந்து ”தற்காலிகமாக மூடுவது ஏமாற்று, அமைதி பேச்சு வார்த்தை என்பது மக்களை குழப்பவும் போராடுபவர்களை ஏமாற்றவும் அதிகாரிகள் செய்யும் நடவடிக்கை, அதனால் எந்த பயனும் ஏற்படாது. மக்கள் வெயிலிலும், மழையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் ஏன் வரக்கூடாது? மக்கள் கலைந்து சென்று விட்டால் மீண்டும் எப்படி அணி சேர்ப்பது? எனவே குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று பலர் பேசினர். தற்போது நடத்தப்படும் போராட்டம் வரலாற்று போராடடம் எனக் குறிப்பிட்டார்கள்.

வெள்ளாறு எங்கள் ஆறு
உங்களில் எத்தனை பேர் ஓடாமல் கைதாவதற்கு தயார்” எனக் கேட்டோம். பெரும் பகுதி மக்கள், “நாங்கள் தயார் தயார்” என உற்சாக முழக்கமிட்டனர்.

“நாம் அவர்கள் சொல்லும் சமரசத்தை ஏற்காவிட்டால் அனைவரும் கைது செய்யப்படுவோம், உங்களில் எத்தனை பேர் ஓடாமல் கைதாவதற்கு தயார்” எனக் கேட்டோம். பெரும் பகுதி மக்கள், “நாங்கள் தயார் தயார்” என உற்சாக முழக்கமிட்டனர்.

காவல் துறை கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்து, மாலை விட்டுவிடுவார்கள். நாம் மீண்டும் மக்களை திரட்டித்தானே ஆக வேண்டும். மக்கள் கலைந்து விடுவார்கள் என்பதுதான் அரசின், மணல் கொள்ளையனின் எதிர்பார்ப்பு. திரும்பி வரமுடியாது என்றால் ஏன் அவர்கள் மணல் குவாரியை மூட வேண்டும்.

பேச்சு வார்த்தைக்கு நான்கு நாட்கள் இருக்கிறது. அதற்குள் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்துக்கு அனைத்து கிராமங்களிலும் கிளைகளை அமைப்போம், அனைவரையும் உறுப்பினராக சேர்ப்போம். நமது இயகக்ததின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். இன்று ஆயிரமாக முற்றுகையிட்டதை பல ஆயிரமாக பெருக்குவோம். பேச்சு வார்த்தையில் பெரும் திரளாக கலந்து கொள்வோம். அது வரை இயங்கிக் கொண்டிருந்த குவாரியை மூடிவிட்டுத் தானே செல்கிறோம்.

மணல் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து இந்த குவாரியை மூடும் வரை நாம் போராட்டத்தை விடப்போவதில்லை. பேச்சுவார்த்தையில் வெற்றி பெறுவோம் என நம்பி நாம் போராட்டத்தை விலக்கவில்லை. மீண்டும் மக்களைத் திரட்ட வேண்டும், திரட்ட முடியும், திரளுவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் இந்த முடிவை எடுக்கிறோம்.

வெள்ளாறு எங்கள் ஆறு
திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடமே நாம் இதை எல்லாம் பேசப் போகிறோம். வேறு வழியில்லை. குவாரி மீண்டும் இயங்கினால் அடுத்த கணம் ஆயிரக்கணக்கில் நாம் ஆற்றில் இறங்க வேண்டும்.

பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆற்று மணல் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது சில ஆயிரம் பேரின் சில நாள் போராட்டத்தால் முடியும் என்பது இயலாத காரியம். மணல் குவாரியை மூட 20 கிராம மக்கள் ஒன்றிணைந்து இரவு முழுவதும் இங்கு தங்கி போராடியது, எதற்கும் வராத மக்கள் இன்று திரண்டிருக்கிறார்கள் என்றால் நம்மை மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள், இவர்கள் சோரம் போக மாட்டார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.  நம் ஆற்றை, நீர் ஆதாரத்தை நாம் காக்காவிட்டால் யார் காப்பார்கள் என்ற உணர்வை நமது தொடர்ந்த பிரச்சாரம் ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுப்பணித்துறை 1,91,000 cu.m (1.9 லட்சம் கன மீட்டர் – சுமார் 68000 யுனிட் மணல் அதாவது11300 லாரிகள்) மணல் மட்டும்தான் எடுக்க வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளார்கள்.  நாள் ஒன்றுக்கு 300 லாரிகள் என மதிப்பிட்டால் 37 நாட்களில் அவர்கள் எடுக்க வேண்டிய மொத்த மணலையும் எடுத்து விட்டார்கள். மேலும் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி வந்து விட்டார்கள் என்பதையும் நாம் ஜி.பி.எஸ்.வைத்து நிரூபிக்க முடியும். 10 மாதங்கள் கணக்கில் வராமல் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மணலை கொள்ளையடித்துள்ளார்கள். அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். கொள்ளையில் பங்கு வாங்கியுள்ளனர். அதற்குத்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கேட்கிறோம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடமே நாம் இதை எல்லாம் பேசப் போகிறோம். வேறு வழியில்லை. குவாரி மீண்டும் இயங்கினால் அடுத்த கணம் ஆயிரக்கணக்கில் நாம் ஆற்றில் இறங்க வேண்டும்.

வெள்ளாறு எங்கள் ஆறு
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள், ஆற்றின் இரு கரையிலும் புரட்சிகர பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்தனர்

இன்றைய போராட்டத்தில் உங்களை இங்கு அழைத்து வர மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள், ஆற்றின் இரு கரையிலும் புரட்சிகர பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்தனர்.

மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது இன்னும் பல வழக்கறிஞர்கள் பல மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து உங்களிடையே தங்கி நீங்கள் கொடுத்த உணவை பெற்று பிரச்சாரம் செய்தனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் விருத்தாசலம் நகரம் முழுவதும் வீடு வீடாகப் போய், “இது கிராம மக்கள் போராட்டம் மட்டுமல்ல, அனைத்து மக்களின் போராட்டம்” என பிரச்சாரம் செய்தனர்.

மருங்கூர் பஞ்சமூர்த்தியும், மேலப்பாளையூர் சசிக்குமாரும், சீ.கீரனூர் ராஜ வன்னியனும், கார்மாங்குடி கோபால கிருஷ்ணன், அறிவரசன், பன்னீர் செல்வம், இளையராஜா, சிவப்பிரகாசம், நேமம் சுப்பிரமணியன், கருவேப்பிலங்குறிச்சி இளங்கோ என அனைவரும் உங்களை பல நாட்கள் வலியுறுத்தி ஒவ்வொரு முறையும் அழைத்து வருவது சிரமமான காரியம்.

நமது வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தை அனைத்து கிராமங்களிலும் கிளையாக உருவாக்கி, அறிவிப்பு கொடுத்தால் அனைவரும் வர வேண்டும். மணல் அள்ள இயந்திரம் ஆற்றில் இறங்கினால் உடனே மறிக்க ஏதுவாக அமைப்பு பலம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கனிம வளக் கொள்ளைக்கு எதிரான இந்த போராட்டம் நீண்ட காலம் தொடர்ந்து நடத்த வேண்டிய போராட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளாறு எங்கள் ஆறு
கனிம வளக் கொள்ளைக்கு எதிரான இந்த போராட்டம் நீண்ட காலம் தொடர்ந்து நடத்த வேண்டிய போராட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கார்மாங்குடி கிராம போராட்டத்தை இன்று தமிழகம் தழுவி அறியப்பட்ட போராட்டமாக மாற்றியிருக்கிறோம். பிற பகுதி மக்கள் தாமாக வந்து இங்கு கலந்து கொண்டுள்ளார்கள். பல இளைஞர்கள், பெண்கள் தங்கள் பெயரை செல் நம்பரோடு கொடுத்து சென்றுள்ளனர். மக்கள் பெருமளவில் வரத் தயாராக இருப்பதாக முன்னணியாக வேலை செய்தவர்கள் இங்கு சொல்கிறார்கள். இதுதான் நமது முன்னேற்றம், வெற்றி.

மத்திய மாநில அரசுகளின் தனியார்மய கொள்கையின் கீழ் மணலை மட்டும் தனியார் கொள்ளையடிக்கவில்லை. இயற்கை எரிவாயு, தாதுமணல், கிரானைட், பாக்சைட் (அலுமினியத் தாது), இரும்புத் தாது, நிலக்கரி வயல் என இயற்கை மனித குலத்திற்கு வழங்கிய அனைத்துக் கொடைகளையும் லாப வெறிக்காக சூறையாடுகிறார்கள்.

மேலும் விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், ரயில்வே, சாலை, போக்குவரத்து, மின்சாரம் என அனைத்தையும் தனியார் கொள்ளையடிக்க அனுமதித்திருக்கிறார்கள். பாராளுமன்றம், சட்டமன்றம் இதை ஏற்று கொண்டிருக்கின்றன. அதில் பங்கு பெறும் கட்சிகள், பங்கு பெறவிரும்பும் கட்சிகள் ஆதரிக்கின்றன். அதிகாரிகள் அனைவரும் இதை சிறப்பாக செய்து முடிக்கவே உள்ளார்கள்.

இந்த நிலையில்தான் நாம் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக மணல் குவாரியை மூடு என போராடுகிறோம்.

நாம் மட்டும் போராடி இந்தப் போரில் வெல்ல முடியாது. நமது உறுதியான போராட்டம் பிற பகுதி மக்களையும் போராடச் சொல்லும். பிற வர்க்கப் பிரிவினரை இதற்கு ஆதரவாக போராடச் சொல்ல முடியம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனவ கிராம மக்கள் போராடுகிறார்கள். பல மாதங்கள் பல ஆயிரம் பேர் போராட்ட திடலில் வரிசையில் நின்று கஞ்சி குடித்து போராடியுள்ளனர். பல நாட்கள் தொழில் முடக்கம் செய்துள்ளனர். வருமானம் இழந்துள்ளார்கள். அது, உலக அளவில் அணு உலை தேவையில்லை என்ற கருத்து பிற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அது போல் ஆற்று மணல் கொள்ளைக்குஎதிராக பல ஊர்களில் மக்கள் போராடி வருகிறார்கள். அனைத்து போராட்டங்களுக்கும் நமது போராட்டத்தை முன்மாதிரியாக, நம்பிக்கையளிக்கும் போராட்டமாக மாற்றிக் காட்டுவோம்.

என உரையை நிறைவு செய்தார்.

வெள்ளாறு எங்கள் ஆறு
மைய கலைக்குழு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த புமா இமு, விவிமு தோழர்களின் உற்சாகமான பாடல்கள் மக்களுக்கு உணர்வூட்டிக் கொண்டிருந்தன.

அதிகாரிகளுடன் பேசுவது, போராட்டக் கமிட்டி விவாதிப்பது, ராஜு பேசுவது என நேரம் நீண்டு கொண்டே செல்கையில் மழை கனமாகப் பெய்யத் தொடங்கியது. மக்கள், உடனடியாக, கீழே அமரப் போட்டிருந்த நெகிழி பாயை (சீட்) உயர்த்திப் பிடித்து, தற்காலிகமான டோம் அரைக்கோள வடிவிலான விவாத அரங்கமாக மாற்றினர். ஒரு துளி மழை நீர் கூட உள்ளே சிந்தாமல், அனைத்து மக்களும் உற்சாகமாக உரையை கேட்டனர். பாடல்களை ரசித்தனர். மக்கள் அரசியல் உணர்வு பூர்வமாக திரண்டு விட்டால் எதையும் நினைத்த மாத்திரத்தில் மாற்றியமைக்க முடியும் என்பதற்கு இது சிறந்த சான்று.

அதே போல சமையல் செய்யுமிடத்திலும் சிலர் பெரிய நெகிலி பாயை (சீட்) உயர்த்திப் பிடித்தனர். மழை பெய்யும் உணர்வின்றி சமையலும் விவாதங்களும் நடந்தன. நமது குடையில் காவல்துறையினரும் வந்து மழைக்கு ஒதுங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடையிடையே மைய கலைக்குழு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த புமா இமு, விவிமு தோழர்களின் உற்சாகமான பாடல்கள் மக்களுக்கு உணர்வூட்டிக் கொண்டிருந்தன.

17-dinamani

போலீசின், தாசில்தார் போன்ற உயர் நிர்வாக அதிகாரிகளின் மமதையும், திமிரும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்ற உண்மை மக்கள் மனதில் ஆழப் பதியுமளவு தரவுகள் தோழர்களால் தரப்பட்டுக் கொண்டே இருந்தன.

உப்பு விலை ஏறிப் போச்சண்ணே“, “கரும்புத் தோட்டத்திலே” என்ற பல பாடல்களுக்கு மக்கள் கைதட்டியதோடு, தன்னெழுச்சியாக வாயசைத்துப் பாடுவதையும் காண முடிந்தது.

இறுதியாக, மக்கள் அனைவரின் ஒப்புதலுடன் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, ஆவணங்களைப் பற்றிப் பரிசீலிப்பதும், 20-ம் தேதி மக்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்துவதும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. மணல் குவாரி மூடப்படும் வரை உறுதியாகப் போராடுவது என்ற மன உறுதியுடன் மக்கள் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர்.

மதியம் தயாரிக்கப்பட்ட உணவை உண்டு மக்கள் புறப்படும் சமயம் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்து கொண்டே மக்களும் தோழர்களும் வழக்கறிஞர்களும் புறப்பட்டுச் சென்றனர். மணல் குவாரி நிரந்தரமாக மூடப்படும் என்ற நம்பிக்கை அப்பகுதி விவசாயிகளிடம் உறுதியாக உள்ளது.

vellaru-siege-141214-25

  • கடுமையான உச்சி வெயிலிலும், கடுமையான இரவு பனிக் குளிரிலும், கொட்டும் மழையிலும் கலையாத மக்களின் உறுதியான போராட்டம்தான், “கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தருகிறோம். உங்களோடு பேசி சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பின்பே மணல் குவாரியை இயக்குகிறோம்” என மந்திரிச்ச கோழி போல மைக்கு முன்பாக, உணர்ச்சியற்ற மனிதனாய் வருவாய் கோட்டாட்சியரைப் பேச வைத்தது.
  • முதல் நாள் இரவு வரை நடந்த பேச்சு வார்த்தையில், “மணல் அள்ளுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவர்களிடம் தான் நீங்கள் வாங்க வேண்டும். மணல் குவாரியை மூட முடியாது” என எந்திரமாக பணயக் கைதி போல பேசிய வருவாய்க் கோட்டாட்சியரின் குரல் மறுநாள் மாறியதற்குக் காரணம், வெள்ளாற்று கரையோர கிராம மக்களின் போராட்டம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்ததுதான்.
  • என்ன செய்ய முடியும் என ஏங்கிய மக்களின் ஆதங்கத்திற்கு உரிய செயலாக இந்த முற்றுகைப் போராட்டம் அமைந்தது. இரவு சமையலில் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டதும், ஒரே தட்டில் இருவர் சாப்பிட்டதும், சாப்பிட்ட பேப்பர் தட்டைக் கழுவி மீண்டும் சாப்பிட்டதும் சாதி பாராமல், வயது வித்தியாசம் பாராமல், ஆண்-பெண் பாராமல் மணல் கொள்ளையை முறியடிக்க வேண்டும் என உத்வேகம் போற்றுதலுக்குரியதாக, கற்றுக் கொள்ளுவதற்குரியதாக கண் கொள்ளாக் காட்சியாக விளங்கியது.
  • உள்ளூரில் வீடிருந்தும், பல ஏக்கர் நிலமிருந்தும் போராட்டத்திற்கு உண்மையாக வெட்ட வெளியில் ஆற்று மணலிலே பாகுபாடில்லாமல் படுத்துறங்கிய காட்சி எத்தகைய அநீதியையும் எதிர்த்து வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
  • ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் போதும் காவல் துறையின் அதிகாரத்தையும், வருவாய் கோட்டாட்சியர் மூலம் மணல் கொள்ளையர்களின் சதித் தனத்தையும் முறியடிக்கும் வகையில் அறிவு பூர்வமான வாதங்களை நமது வழக்கறிஞர்கள் அடுக்கிய போது, அதிகார வர்க்கம் அதை எதிர் கொள்ள முடியாமல் புறமுதுகிட்டு ஓடியதை மக்கள் ஆரவாரம் செய்தது அதிகார வர்க்கத்தின் மீது மக்களுக்குள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.

போராட்டம் ஆரம்பித்த பல மணி நேரம் ஆன பிறகும் அதிகாரிகள் யாரும் பேச வராத போது கோபமுற்ற முன்னணியாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மிரட்டலாம், பாதையை வெட்டி இடையூறு ஏற்படுத்தலாம் எனக் கூறிய போது, நாங்கள்

vellaru-siege-141214-04

“உறுதியான, நீடித்த மக்கள் போராட்டம் தான் அரசைப் பணிய வைக்கும், பரபரப்பான செயல்பாடுகளில் அதிகார வர்க்கம் என்றைக்கும் பணியாது, நம்மில் யார் இறந்தாலும் அவர்கள் வருத்தப்படமாட்டார்கள். ஆகவே இன்னும் அதிக மக்களைத் திரட்டுவோம், அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யுங்கள், நீர் வழங்குங்கள், வெயிலுக்குப் பந்தல் அமையுங்கள், இரவு வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், மக்களைப் பாதுகாக்க, பராமரிக்க உரிய நடவடிக்கை எடுங்கள். ஒரு நாள் போராட்டத்திலேயே அரசு உங்களுடன் பேசும் என எதிர்பார்க்காதீர்கள், அரசு பேசும் வரை நாம் போராடுவோம்” என்பதை விளக்கிச் சொன்னதும், மந்திரக் கோலுக்குக் கட்டுப்பட்ட மனிதர்களாக அனைவரும் செயலில் இறங்கினர்.

  • ஒருவர் வீட்டிலிருந்து, டிஷ் எடுத்து வந்து, இரவுச் செய்திகளை ஒளி-ஒலி பரப்பியதும், இரவு முழுவதும் செய்திகளையும், நகைச்சுவை காட்சிகளையும் தூங்காமல் பார்த்து ரசித்ததுடன் தூங்கிய மக்களை பாதுகாத்ததும் மறக்க முடியாத நினைவுகள்.
  • முதல் நாள் உச்சி வெயிலில் குடிநீர் தடைபட்டு நா வறண்ட போது அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் விளைந்த கரும்புகளை உடைத்து பலருக்கு உணவாகக் கொடுத்ததும், அதில் சிலவற்றை பெண் காவலர்களுக்கு கொடுத்ததும், பலமைல் தூரம் ஆற்றில் பயணித்து அனைவருக்கும் தேநீர் விற்ற அந்தத் தொழிலாளியும், கார் போகவே சிரமப்படும் ஆற்றுப் பாதையில் சைக்கிளைத் தள்ளி அந்த உச்சி வெயிலில் ஒரு தொழிலாளி ஐஸ் விற்றதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
  • 70 வயதைக் கடந்த ஒரு முதிய பெண்மணி சிவத் தொண்டில் ஈடுபாடுடையவர், பல ஏக்கருக்கு சொந்தக்காரர், போராட்டத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னணியில் நின்றதுடன், போராடியவர்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் வீட்டிற்கழைத்து குளிக்க வைத்து, உணவு கொடுத்து, காபி, பிஸ்கட், தின்பண்டங்கள் என சளைக்காமல் கொடுத்தார். “ஆற்று மணல் கொள்ளைக்கு எதிரான எல்லா போராட்டங்களுக்கும் நான் வருவேன், ஜெயிலுக்கும் வருவேன், வெள்ளாற்றைக் காக்க இரவு முழுவதும் ஆற்றில் படுத்துப் போராடும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியது உண்மையான அன்பின், போராட்ட உணர்வின் வெளிப்பாடாக அமைந்தது.

vellaru-siege-141214-02

இந்தப் போராட்டம் வெள்ளாற்று பகுதி கிராம மக்களிடையே மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • நாமா இரண்டு நாட்கள் கடும் வெயில், குளிர், கொட்டும் மழை என போராடினோம்!
  • நூற்றுக்கணக்கான போலீசார் அணிவகுதது எதிரே நிற்க நாமா போராடினோம்!
  • நாமா அது என்று வியக்கும் வண்ணம் உலகம் முழுவதும் பார்க்கும்படி கார்மாங்குடி மணல் குவாரி போராட்டம் தொலைக்காட்சியில் வந்தது !
  • அனைத்துப் பத்திரிகைகளிலும் அரைப்பக்க செய்தி புகைப்படத்துடன் வெளியாகின. மணல் பள்ளத்தாக்கில் மக்கள் வெள்ளமாக நாமா அது!

என போராட்ட வரலாற்று கண்ணாடிகளில் தம்மைப் பார்க்க மக்கள் கற்றுக் கொண்டார்கள். கற்றுக் கொடுத்திருக்கிறோம்

அந்த பிம்பங்கள் அதிகரிக்கும் போது அதிகார வர்க்கத்திற்கு போராடும் மக்கள் உத்தரவு போடுவார்கள். அந்த நாளை நோக்கி நாங்கள் மட்டுமல்ல அனைவரும் பயணிப்பார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
மனித உரிமை பாது காப்பு மையம்
கடலூர் மாவட்டம்
தொடர்பு 9360061121

முந்தைய பதிவுகள்

_____________________

விழிப்போடு மீண்டும் போராட ….

கழுத்தும் மார்பும் அறுபட்டு
வல்லுறவுக்கு ஆளாகிக் கிடக்கிறது
வெள்ளாறு….

மணற் கொள்ளையரின்
லாபவெறி நகங்கள் கிழித்து
மணற்சதை தாண்டி
களிமண்வரை ரத்தம் கசிகிறது

நெல்லுக்கும் கரும்புக்கும்
எங்கள் தொண்டைக்கும்
உயிர்நீரை ஊட்டும்
நதியின் மார்புகள்
கிழிக்கப்பட்டுக் கிடக்கின்றன

ஆற்றோடும் மணலோடும்
எமக்கிருந்த உறவறுந்து
கரையில் நிற்கிறோம்

ஆழப்படுத்தி ஆழப்படுத்தி
பெருமூச்சை மட்டுமே இறைக்கின்றன
எங்கள் இறவை எந்திரங்கள்

இரவிலும் பகலிலும்
மணலை அள்ளிச்செல்லும் டாரஸ்ஸுகள்
எங்கள் நெஞ்சில்தான்
தினமும் ஏறிப்போகின்றன

ஆற்றைச் சுரண்டி
ஏற்றிச் செல்லும் லாரிகள்
வாழ்வையும் எங்கள் வழியையுங்கூட
சிதைத்துவிட்டன.

நாய்கள்கூட நடக்காத
பவழங்குடி ரோட்டில்
நாங்கள் தினமும் சென்று ஒடிகிறோம்

இன்று முடிவாய்…

காக்கியும் வெள்ளையுமாய்
மணற்கொள்ளையரின் அறனாய் அந்த
மதிற்சுவரோடு மோதுவதென்று
ஆற்றுக்குள் இறங்கிய பாதைகளை
அடைத்து நின்றன காக்கி வேலிகள்

மலையின் நிலச்சரிவாய்
மணல் குவாரிக்குள் இறங்கின
எங்கள் கிராமங்கள் !

மணலை விரிப்பாக்கி
இரவை போர்வையாக்கி
ஆற்றை வீடாக்கி தொடர்ந்தது போராட்டம்

குவாரிகள் மூடப்பட்ட
இரண்டு நாளாய்
உறங்குகிறோம்…

விழிப்போடு மீண்டும் போராட…

– கோவன்