இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை !

ஆலைகள் தரவேண்டிய நிலுவை பாக்கி ஒருபக்கம், முறையான கொள்முதல் விலை கிடைக்காதது இன்னொருபக்கம் என விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியுள்ளது எடப்பாடி அரசு.

மிழக பட்ஜெட்டில் கரும்புக் கொள்முதல் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமுறை, குப்புறத் தள்ளிவிட்ட குதிரை குழியும் பறித்த பழமொழியை நினைவுபடுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை அரவைப் பருவம் தொடங்கும் முன்பாக, கரும்புக்கான கொள்முதல் விலையை (Fair and Remunerative Price) மைய அரசு அறிவிக்கும். சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தமிழகம், மகாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட மாநில அரசுகள், தங்களது மாநில நிலைமைகளுக்கு ஏற்ப கரும்புக்கான பரிந்துரை விலையை நிர்ணயித்து, அதனை மைய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையோடு கூட்டி, கரும்புக்கான இறுதிக் கொள்முதல் விலையைத் தீர்மானித்து வந்தன.

கரும்பு விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்குக் குறைந்தபட்சமாக ரூ.4,000/- என நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிவரும் நிலையில், மைய அரசோ இந்த ஆண்டுக்கு வெறும் 2,550/- ரூபாய்தான் கொள்முதல் விலையாக அறிவித்திருக்கிறது. தமிழக அரசு பரிந்துரை விலையுடன் சேர்த்து 3,200/- ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க.வின் பினாமி எடப்பாடி கும்பல் இந்த ஆண்டு முதல் பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் முறையைக் கைவிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையைத் தீர்மானிப்பதில் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளைச் செயல்படுத்தவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துத் தமிழகக் கரும்பு விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியிருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு பரிந்துரை விலையுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டிருந்த கொள்முதல் விலைக்கே (ரூ.2,750/-) கரும்பை ஆலைகளுக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கரும்பு உள்ளிட்டு விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்திருக்கும் பரிந்துரையின்படி தீர்மானிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில் தமிழக அரசோ தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களின் நலன்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கரும்புக் கொள்முதல் விலையைத் தீர்மானிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா ஆகிய மாநிலங்களும் பரிந்துரை விலை நிர்ணயிப்பதைக் கைவிட்டு, விவசாயிகளை வஞ்சிக்கும் புதிய நடைமுறைக்கு மாறிவிட்டன.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்திருக்கும் பரிந்துரையின்படி கரும்பின் கொள்முதல் விலையைத் தீர்மானித்தால், விவசாயிகளுக்கு (டன் ஒன்றுக்கு) ரூ.4,970 வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. விவசாயிகளோ அதனைவிட ஆயிரம் ரூபாய் குறைவாகவே கொள்முதல் விலையை நிர்ணயிக்கக் கோரிவருகிறார்கள். சர்க்கரை ஆலைகள் அடையும் இலாபத்தில் பங்கு என்ற மயக்கு வார்த்தைகளை முன்னிறுத்தும் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரை இந்த இரண்டு விலைகளுக்கும் பக்கத்தில்கூட வரப் போவதில்லை.

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன்

ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைப்படி மாநில அரசுகள் கரும்புக்குப் பரிந்துரை விலையை நிர்ணயிக்கக் கூடாது. சர்க்கரை ஆலைகள் மைய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை மட்டும் முதல் கட்டமாக வழங்க வேண்டும். அதன் பின், அந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை விற்றுக் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 70 சதவீதத்தை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பின் அளவுக்கு இணையான விகிதத்தில் பிரித்து, அந்தத் தொகையை இரண்டாவது கட்டமாக வழங்க வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2016-17 ஆம் ஆண்டில் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைப்படி கரும்புக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.3,100/- எனக் கணக்கிடப்பட்டது. இதில் அந்த ஆண்டிற்கு மைய அரசு நிர்ணயம் செய்த நியாய விலை 2,395/- போக, சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் தமது இலாபத்திலிருந்து விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டிய தொகை ரூ.705/-. இலாபப் பகிர்வுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலை, விவசாயிகள் கோரிவரும் கொள்முதல் விலையைவிட ரூ.900/- குறைவு என்பது ஒருபுறமிருக்க, இதனையும் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஒரே தவணையில் விவசாயிகளிடம் அளிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தனக்கு மூன்று தவணைகளில் சர்க்கரை ஆலைகள் ரூ.2,700/-ஐத் தந்திருப்பதாகவும், இன்னும் நானூறு ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் கூறுகிறார், மாலேகான் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி பாட்டீல்.

இந்த நானூறு ரூபாய் நிலுவை விவசாயிகளின் கைக்கு எப்போது கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, இலாபப் பகிர்வு அடிப்படையில் கணக்கிடப்படும் கொள்முதல் விலை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

மகாராஷ்டிராவில் 2013-ஆம் ஆண்டிலேயே ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஆனால், 2014-15 ஆம் ஆண்டில் இப்பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் தர வேண்டிய மொத்தக் கொள்முதல் தொகை, மைய அரசு அந்த ஆண்டிற்கு நிர்ணயித்த நியாய விலையைவிடக் குறைவாக இருந்ததால், அது கைவிடப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் சந்தையில் சர்க்கரை விலை கூடி ஆலைகளின் வருமானம் அதிகரித்தாலும், ஆலை நிர்வாகங்கள் நட்டக்கணக்குக் காட்டி, மைய அரசு நிர்ணயம் செய்த நியாய விலைக்கு மேல் ஒரு பைசாகூடத் தர மறுத்துவிட்டன.

பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் மாநில அரசுகளின் உரிமையை மட்டும் ரங்கராஜன் கமிட்டி ரத்து செய்யவில்லை. 1966-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்க்கரை கட்டுப்பாடு சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது. குறிப்பாக, ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை மைய அரசு ஏற்றுக்கொண்ட பிறகு, மைய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையை கரும்பை விவசாயிகளிடமிருந்து வாங்கிக்கொண்ட 15 நாட்களுக்குள் தந்துவிட வேண்டும் என்ற விதியைத் தனியார் ஆலை நிர்வாகங்கள் மதிப்பதேயில்லை. மாநில அரசுகள் பரிந்துரை விலை நிர்ணயிப்பதைக் கைவிடுவதற்கு முன்பே, அவற்றால் நிர்ணயிக்கப்பட்ட பரிந்துரை விலையைத் தரவும் மறுத்தன.

2014 -15 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி நாடெங்கிலுமுள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவை 20,100 கோடி ரூபாயாகும். தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவை ரூ.1,347/- கோடி ரூபாய். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய நிலுவை 236/- கோடி ரூபாய். விவசாயக் கடனைக் கட்டத் தவறும் விவசாயிகளை அவமானப்படுத்தி, அவர்களின் சொத்துக்களை அடாவடித்தனமாகப் பறிமுதல் செய்யும் அதிகாரவர்க்கம், விவசாயிகளின் பணத்தை ஏப்பம்விட்டுள்ள எந்த ஆலை முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் துணிந்திருக்கிறது? மாறாக, பரிந்துரை விலை நிர்ணயம் செய்யும் உரிமையைக் கைகழுவித் தனியார் ஆலைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறது.

இதுவொருபுறமிருக்க, சர்க்கரையையும் அதன் துணை விளைபொருட்களையும் விற்றுத் தனியார் சர்க்கரை ஆலைகள் அடையும் இலாபத்தைக் கணக்கிடும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதா? விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்பை எடை போடுவதிலேயே தில்லுமுல்லுகள் செய்து, அவர்களை ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகங்களுக்கு விற்பனையைக் குறைத்துக்காட்டி நட்டக் கணக்கு எழுதுவது எம்மாத்திரம்? விவசாயிகளுக்கு ஆலைகள் தர வேண்டிய நிலுவையையே பெற்றுத்தர துப்பில்லாத அரசு, ஆலைகள் அடையும் இலாபத்தில் ஒரு பகுதியை பெற்றுத் தந்துவிடுவார்கள் என நம்பமுடியுமா?

விவசாயிகள் உற்பத்தி செய்யும் கரும்பை, ஆலை முதலாளிகள் சந்தை விலைக்கு, அதாவது தாமே நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் மாநில அரசுகளின் உரிமையை ரங்கராஜன் கமிட்டி ரத்து செய்திருப்பதும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதனைக் கைவிட்டிருப்பதும் ஆலை முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் முதல் அடியாகும்.

– குப்பன்
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க