பெட்ரோல் டீசல் விலை உயர்வு: தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன் நேர்காணல்!

ர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணை விலைக்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஒட்டி அன்றாடம் விலையை தீர்மானிப்பது என இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால் அன்றாடம் எரிபொருள் விலை உயர்வினால் மக்களின் துன்பதுயரங்கள் அதிகரித்து வருகின்றன.  தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.77.43. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். கடந்த 2013  செப்டம்பர் 14-ம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்துள்ளது. இதுவே வரலாறு காணாத உயர்வாகும்.

அதை நோக்கி பெட்ரோல்  விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை ரூ.4.94 அதிகரித்துள்ளது. ஏற்கனவே வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விட்ட டீசல் விலை முதல் முறையாக ரூ.70ஐ நெருங்கயிருக்கிறது.  ஒரு லிட்டர் டீசலின்   இன்றைய விலை ரூ.69.56. கடந்த ஜனவரி 1ம் தேதி டீசல் விலை ரூ.62.90 என இருந்த நிலையில், இதுவரை ரூ.6.66 உயர்ந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலையுயர்வுஒரு மாதத்தில் டீசல்- ரூ.3 அளவிலும், பெட்ரோல் ரூ.2.30 அளவிலும் அதிகரித்துள்ளது. கண்ணுக்கு தெரியாமல் சிறிய அளவில் தினமும் கூடி பெரிய அளவில் விலை உயர்ந்து வருகிறது. “ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு அனைத்து பொருட்களும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்” பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். இவர்களைப் பற்றி அரசுக்கு கவலையும் இல்லை.

லாரி உரிமையாளர்கள்
தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன்

பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக, இவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது நிதியமைச்சகம். வேண்டுமானால்  மாநிலங்கள் தங்கள் வாட் வரியை குறைக்கலாம் என்று கூறி நழுவிக்கொண்டது.

எரிபொருள் விலை உயர்வு குறித்து இதுகுறித்து தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன் தொலைபேசி மூலம் வினவு தளத்திற்கு அளித்த நேர்காணல்:

வரலாறு காணாத இந்த பெட்ரோல் டீசல் எண்ணெய் விலையேற்றத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

மத்திய அரசின் இந்த விலையேற்றத்தால் எங்கள் தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இது மத்திய அரசின் கையாலாகாதத் தன்மையால் நேர்ந்த விளைவு.  ஜி.எஸ்.டி வரி விதிப்பின் போதே நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வை சொல்லி டீசல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.. இதையே காங்கிரசு அரசு செய்யும்போது எதிர்த்த பிஜேபி இப்போது உயர்த்தும் வேலையைச் செய்கிறது. இது எங்களுக்கும், எங்கள் தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோவ் பாய்சன் (மெல்லக் கொல்லும் மருந்து) என்று தான் பார்க்கிறோம்.

விலை உயர்வு எந்த வகையில் உங்கள் தொழிலை பாதிக்கிறது?

இது எங்களை மட்டும் பாதிக்கக் கூடியது இல்லை. நாட்டு மக்கள் பிரச்சனை என்றுதான் பார்க்கிறோம். தற்போது இருக்கக்கூடிய லாரிகளுக்கு டிரைவர்கள் பற்றாக்குறையாக உள்ளது. கிட்டத்தட்ட நாற்பது சதவீத லாரிகள் ஓட்டுனர்கள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க  டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் உயர்வு, டயர் விலையேற்றம், இன்சுரன்ஸ் பிரிமியம் தொகை அதிகரித்திருப்பது, டோல்கேட் கட்டணம் என்று செலவு அதிகரிக்கிறது.பெட்ரோல் டீசல்

நாளுக்கு நாள் ‘வாழ்வாதார சுமைகள்’ கூடிக்கொண்டே போகிறது எங்களால குடும்பம் நடத்த முடியல.  விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை பண்ணிகிறாங்க.  இந்த விவசாயத்துக்கு நிகரான தொழில் எங்களோடது. இதனால், நாங்கள் செத்து பிழைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

நீங்கள் சந்திக்கும் குறிப்பான பிரச்சனை வேறு என்ன?

எப்பொழுதுமே கடன் பெரும் பிரச்சனையா இருக்கு. நாங்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனைக்கூட கட்ட முடியவில்லை. கட்டாதபட்சத்தில்  வண்டியை பறிமுதல் செய்து கொள்கிறார்கள். மேற்கொண்டு இருக்கும் தொகையை வசூலிக்க வழக்கும் போட்டு விடுகிறார்கள். எங்களுக்கு கடன் கொடுக்கும்  நிதி நிறுவனங்கள் தேதி போடாமல், தொகையை குறிப்பிடாமல் வெறும் கையெழுத்து மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். நாங்களும் அந்த நிலைமையில் அதனையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பணம் கிடைத்தால் போதும் என்ற சூழல்தான் உள்ளது.

பெட்ரோல் டீசல்வாங்கிய கடனை கட்டவில்லை என்றால் 138 செக் மோசடி வழக்கு போட்டு விடுகிறார்கள். இந்நிலையில் பிள்ளைகளை படிக்க வைக்கக் கல்விக் கடன் கூட பெறமுடிவதில்லை.  இந்த பிரச்சனையால மனமுடைந்த உரிமையாளர்கள் பலபேர்  தற்கொலை பண்ணி இறந்திருக்காங்க. இது வெளியில் தெரிவது இல்லை. காரணம் நாங்கள் இந்த பிரச்சனையில் இருப்பதால் யாரும் முன் வந்து கடன் கொடுக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் இதனை வெளியில் சொல்வது கிடையாது. வாழ்க்கையே கேள்விகுறியாக மாறிக்கொண்டிருக்கிறது.

எண்ணெய் விலையேற்றம் என்பது சர்வதேச அளவில் தீர்மானிக்கப்படுகிற ஒன்று. எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் போது இந்தியாவில் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?

கார்ப்பரேட்களின் லாபத்துக்கு தான் வழி திறந்து விடுகிறது மோடி அரசு. விலையை நிர்மாணிக்கும் பொறுப்பை அரசே செய்திருக்க வேண்டும். அப்படியில்லாமல்  ‘தினமும் விலையை நிர்ணயித்துக் கொள்ள’ எண்ணெய் நிறுவனங்களிடம் விட்டு விட்டது. இவர்கள் மொத்த மக்களையும் சுரண்டுகிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்தைத் தான் பார்ப்பார்கள்.

பெட்ரோல் டீசல்பதினைந்து நாளைக்கு ஒரு முறை – மாதத்திற்கு ஒருமுறை  விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கூறியபோது நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இன்றும் போராடுகிறோம். இது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பெரும் அவமானம். மோடியின் கையாலாகாத தனத்துக்கு கிடைத்த வெகுமதி.

பொருளாதாரத்துக்கு அவமானம் என்கிறீர்கள். ஆனால் வரி விதிப்பின் மூலம் அரசுக்கு வருவாய் வருவதால் இதுதான் வளர்ச்சி என்கிறார்களே?

எது வளர்ச்சி? 70 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது எப்படி வளர்ச்சி ஆகும்? இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மக்களை பாதிக்கக் கூடியது எவ்வாறு வளர்ச்சி ஆகும்? சரக்கு போக்குவரத்து கடல் வழியோ, வான் வழியோ நடைபெறவில்லை. லாரிகளில் தான் ஏற்றி செல்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.

லாரிகள்
கோயம்பேடு காய்கறி சந்தையில் விவசாய விளைபொருட்களை இறக்கக் காத்திருக்கும் லாரிகள் (மாதிரிப் படம்)

விவசாயத்தை எடுத்துக் கொள்வோம். விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், உரம் உள்ளிட்ட அனைத்தும் லாரிகளில் தான் கொண்டு செல்கிறோம். அதற்கு ஏற்றவாறு வாடகையை நாங்கள் உயர்த்தினால், விவசாயிக்கு இடுபொருட்களின் விலை உயரும். பிறகு விவசாயம் எப்படி செய்ய முடியும்? விவசாய உற்பத்தி முற்றிலும் முடங்கி விடும்.

அப்படியே உற்பத்தி நடந்தாலும் விளைந்த பொருட்களை சந்தைக்கு ஏற்றி செல்லும் வாடகையை கணக்கில் கொண்டு தான் விவாசாயிடம் இருந்து கொள்முதல் செய்வார்கள். இதனால் விவசாயி உற்பத்தி செய்த  பொருட்கள் விலை கடுமையாக குறைந்து விடுகிறது. நீங்கள் எந்த வகையில் பார்த்தாலும் விவசாயம் கடுமையான வீழ்ச்சியடையும். மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கலால் வரியை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக உள்ளது. ஆனால் முடியாது என்கிறது அரசு. இதற்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?

விவசாயத்துக்கு அடுத்தபடியா தரை வழிப்போக்குவரத்து தான் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பா இருக்கு. இப்போ இதோட இயக்கத்தையே நிறுத்தக் கூடியதா இருக்கு அரசின் கொள்கை.  தற்போது எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து அரசே விலையை தீர்மானிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் விலை  தீர்மானிப்பதை நிரந்தரமாக்க  வேண்டும்.

அதே அரசு விபத்து தடுப்பு என்ற பெயரில் படிக்காத தொழிலாளிக்கு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்கிறது. ஏற்கனவே ஓட்டுனர் பற்றாகுறையால் தொழில் திண்டாடுகிறது, நசிவடைகிறது. இச்சூழலில் ஆண்டுக்கு நான்கு லட்சம்  கனரக வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது. அதற்கு அனைத்து வகையான வரியையும் வங்கிக் கொண்டு உற்பத்திக்கு அனுமதியளிக்கிறது அரசு. ஆனால் சாலை மேம்பாட்டை கைவிட்டு விடுகிறது. அந்த வாகனங்கள் செல்வதற்குரிய கட்டமைப்பை ஏற்படுத்துவதில்லை. இதனாலேயே விபத்து ஏற்படுகிறது. அரசுக்கு எதிலெல்லாம் வருமானம் கிடைக்கிறதோ அதற்கு எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கிறது. அந்த வகையில் குறைந்தபட்சம் கலால் வரி, வாட் வரியை குறைக்க முன்வருவதில்லை. இந்த தவறான கொள்கையை கைவிட வேண்டும்.

-வினவு செய்தியாளர்.

1 மறுமொழி

  1. பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி பேசுவதற்கு வினவு கூட்டங்களுக்கு தகுதியில்லை. நெடுவாசல் போன்ற இடங்களில் பெட்ரோல் எடுக்க கூடாது என்று போராட்டம் எல்லாம் நடத்தி மக்களுக்கு தொல்லை கொடுத்த வினவு இன்று பெட்ரோல் விலையேற்றத்தை பற்றி பேசுவதற்கு தார்மிக உரிமையில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க