பொறியியல் கல்லூரிகள் : பால் பழம் பன்னீர் சீஸ் உணவு வகைகளுடன் விடுதி வசதியாம் !

ஏ.சி.யா? நான் ஏ.சி.யா? சவுத் இந்திய உணவா? நார்த் இந்திய உணவா? இல்ல, ஸ்பெஷல் உணவா? எது தேவையோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் உயரும்” என்று பிசிறில்லாமல் ஒப்பித்தார் அந்தப் பிரதிநிதி.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஏப்ரல் – 7 மற்றும் 8 ஆம் தேதியன்று இந்து பத்திரிகை குழுமத்துடன் இணைந்து, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம், புனித பீட்டர்ஸ் தொழில்நுட்பக்கல்லூரி, இந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை சாஸ்தா பல்கலைக்கழகம், அமிட்டி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய, பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தேர்வு எழுதிய மாணவர்களிடம் பொறியியல் உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளவும், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி அறிந்து கொள்ளவும் கல்விக் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தன.

மருத்துவ படிப்பு இல்லாமல், பொறியியல் மற்றும் இளநிலை பட்டப்படிப்பான கலை மற்றும் அறிவியல் பிரிவு படிப்புகளுக்கு பல்வேறு அளவுகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமாக ஐம்பதாயிரத்தில் இருந்து மூன்று லட்சமும், விடுதிக்கட்டணமாக ஆண்டுக்கு ஐம்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பல்வேறு தரங்களில் உள்ளது என்ற பேக்கேஜுடன் மாணவர்கள் சேர்க்கைக்கு  ஆட்கள் பிடித்துக் கொண்டிருந்தனர்.

முதலில் உள்ளே நுழைந்ததும் வரவேற்றது வி.ஐ.டி. பலகலைக்கழக அரங்கம். அரங்கில் இருப்பவர்களிடம் சென்று, “பிளஸ் டூ தேர்வு எழுதிய என் தம்பி பையனுக்கு கல்லூரி பார்க்க வந்துள்ளோம்” என்றதும், பையனுக்கு எதில் விருப்பம் என்றனர். கட்டிடக்கலை என்றோம்.

“ஆண்டுக்கு மூன்று லட்சம் ஐந்து ஆண்டுக்கு பதினைந்து லட்சம் ஆகும். இது வெறும் கல்விக்கட்டணம் மட்டும். ஹாஸ்டலில் சேர்க்க ஆண்டுக்கு ஒரு லட்சம் கூடுதலாக செலவாகும். இரண்டு பேர், நான்கு பேர், ஆறுபேர் தங்குவதற்கு ஏற்றவாறு பல்வேறு தரங்களில் உள்ளது. அதற்கு ஏற்றவாறு செலவும் வேறுபடும். ஆறு பேர் தங்குவது வேணுமா? இரண்டு பேர் தங்குவது வேண்டுமா? ஏ.சி.யா? நான் ஏ.சி.யா? சவுத் இந்திய உணவா? நார்த் இந்திய உணவா? இல்ல, ஸ்பெஷல் உணவா? எது தேவையோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் உயரும்” என்று பிசிறில்லாமல் ஒப்பித்தார்.

ஸ்பெஷல் உணவு என்றால் என்ன? என்று கேட்டதற்கு, பால், பழம், சீஸ், பன்னீர், இவற்றை உள்ளடக்கியது. இது அனைத்தும் முதல் தரமான ஊட்டச்சத்து உணவு. எது தேவையோ தேர்ந்தெடுத்துக்கலாமென்று சொல்லிட்டு, உங்க போன் நம்பர் கொடுங்க நாங்க கூப்பிடுறோம்னு நம்மை வழியனுப்பினார்.

அடுத்து பாரத் இன்ஜினியரிங் கல்லூரியிலும் இதே கேள்வியை கேட்டோம், ‘’நாங்கள் ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக இரண்டரை லட்சம்,  தங்கும் விடுதி கட்டணம் ஆண்டிற்கு அறுபது ஆயிரம். பையன் சராசரியா தான் படிப்பான் என்றால்  NATA தேசிய நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்து குறைந்தபட்ச மார்க்காவது வாங்கினால் தான் எப்படியாவது சேர்த்துக் கொள்ள முடியும். இல்லனா சிவில் எஞ்சினியரிங் படிக்க வைங்க, அதுக்கு ஜஸ்ட் பாஸ் பண்ணா போதும். அதுக்கு வருசத்துக்கு ஒரு லட்சம் தான் கல்விக்கட்டணம்’’ என்றனர்.

அடுத்து, வேல்ஸ் யுனிவர்சிட்டி. டாக்டர் வனிதா, கம்பியுட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியை. இவரைப் போன்றே துறை சார்ந்த பெண் பேராசிரியைகள் மாணவர்களை பிடிப்பதற்கென்றே அமர்ந்திருந்தனர். ‘‘எங்க கல்லூரியில  ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபா இருந்தா பி.இ. படிக்கலாம். முப்பத்தி ஐந்தாயிரத்துல இருந்து நாங்க விடுதிக் கட்டணம் வாங்குறோம். ஒரு வகுப்புக்கு அறுபது பேர் தான் மாணவர்களை சேர்க்கிறோம். ஹாஸ்டல்ல சேர்க்கணும்னு கட்டாயம் இல்ல. நீங்க ரயில்லையே வரலாம்’’ என்று விடாமல் பேசினார்.

அடுத்து எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி. மருத்துவம், பொறியியல்,  பல் மருத்துவம், கலை அறிவியல், நர்சிங், கல்வியியல், ஓட்டல் மேனேஜ்மென்ட் என்று பல்வேறு பிரிவுகள் கல்லூரியில் இருப்பதாக கூறினார்கள். ஆனால், ஆர்க்கிடெக்,  இஞ்சினியரிங் துறைக்கு வருடாந்திர கல்விக் கட்டணம், தங்கும் விடுதிக்கட்டணம் என எதுவும் கூற மறுத்தனர். ‘‘உங்கள் போன் நம்பரை கொடுத்து விட்டு சென்றால் உங்களுக்கு அதற்குரிய தகவலை தெரிவிப்போம்’’ என்றனர். ‘‘தொகை தெரியாமல் எப்படி சேருவது’’ என்று கேட்டதற்கு அதே பதில் தான் வந்தது,  “உங்கள் போன் நம்பர் கொடுங்கள் காண்டாக்ட் செய்கிறோம்”.

அடுத்தடுத்து நாம் ஏறி இறங்கிய சவிதா, அப்போல்லோ, அமிட்டி ஆகிய கல்லூரிகளிலும் இதே போன்று பல்வேறு வாக்குறுதிகளை அளவே இல்லாமல் அள்ளி வீசினார்கள்.

உண்மையில், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருவதால், இந்தாண்டும் மேலும் 80 ஆயிரம் காலியிடங்கள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் சேராத காரணத்தால் நாடு முழுவதும் 200 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொறியியல் கல்லூரிகளில்  சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2012 – 2013-ஆம் ஆண்டில் இருந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உண்மையை தெரிந்துகொள்ள விரும்பாத நடுத்தர வர்க்கம் விட்டில்பூச்சிகளாய் மீண்டும் மீண்டும் கல்விக் கொள்ளையர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். கார்ப்பரேட் ஊடகங்கள் அதற்கு தீயாய் வேலை செய்கின்றன.

வேலை கிடைக்காத பொறியியல் படிப்புக்கு கட்டணம் உயர்கிறது !

பொறியியல் படிப்பு படிக்காதீங்க – மாணவர்கள் நேர்காணல்

– வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க