சென்னை பல்லாவரத்தை அடுத்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது  திருநீர்மலை பேரூராட்சி. இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட  உழைக்கும் மக்கள் வாழும் புறநகர் பகுதி. பேரூராட்சியின் 13-ஆவது வார்டுக்குட்பட்ட ‘திருமங்கையாழ்வார்புரம்’ தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ளது. இப்பகுதியில்  தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. கருங்கல் குவாரியும், சென்னை புறநகரின் குப்பைகளும் மலையாக குவிந்துள்ளன.

இங்கு பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களும், ஆண்களும் சென்னையை நோக்கி நாற்புறமாய் பறக்கின்றனர். செக்யூரிட்டி, கட்டிட வேலை, தலைச்சுமை வியாபாரம் என்று கிடைத்த வேலையை செய்து வயிற்றை கழுவுகின்றனர். கூலித் தொழிலாளிகளின் வீட்டுப் பெண்கள் கற்குவாரிகளில் மண்ணோடு மண்ணாக வாழ்ந்து மடிகின்றனர். கடந்த நாற்பது ஆண்டுகளாக அந்த மக்களின் வாழ்க்கை இது தான்.

கழிவுநீர் கலந்த ஓடையின் ஒருபக்கம் விவசாயமும் மறுபக்கம் குப்பைக்கிடங்கும்

ஓடை தண்ணீர் சீர்கெட்டு கிடக்கிறது.  தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஏரி நீரில் கலந்து ஏரி முழுவதும் ஆகாயத் தாமரைகள் படர்ந்து தண்ணீரை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. “தூர்வார மனு கொடுத்தோம். அரசு கண்டுகொள்ளவில்லை.  ஆறு வார்டுகள் அடங்கிய பகுதிக்கு ஒரேயொரு ரேசன் கடை மட்டுமே உள்ளது. கட்டிமுடிக்கப்பட்ட கடை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதையெல்லாம் கேட்டும் கொடுக்காத அரசு, டாஸ்மாக் கடையை திறந்து இளைஞர்களை வீணடிக்க பார்க்கிறது” என்கிறார்கள் மக்கள்.

தண்ணீர் பற்றாக்குறையால் தனியார் லாரியில் பணம் கொடுத்து வாங்கப்படும் தண்ணீர்.

கல்குவாரியின் புழுதி மண்டலத்துக்குள் மூழ்கி மூச்சுத் திணறி வாழும் இப்பெண்கள் திருமங்கையாழ்வார்புரத்தின் டாஸ்மாக் எதிர்ப்பு  போராட்டக் களத்தில் போலீசையே திணற வைத்தனர்.  தங்களின் வாழ்நிலையையும், போராட்டத்தைப் பற்றியும் அவர்களேசொல்கிறார்கள்.

மோகனா, மருமகளுடன் கைதானவர், “நா.. பொறந்து வளந்தது எல்லாமே இந்த இடம் தான். இங்க நாப்பது வருஷமா குடியிருக்கோம். இந்த ஏரியாவுக்கு வரதுக்கு ஒரு வழி மட்டும் தான் இருக்கு. அதிலயும் மழை பெஞ்சா ஊருக்குள்ள வரவே முடியாது. இங்க எல்லோரும் வார சம்பளம், நாள்கூலி, கம்பனியில வேலை செய்யிரவங்க.எங்களுக்கு எதுக்கு சாராயக்கடை?” என்று கேட்கிறார்.

வலதுபுறம் இருப்பவர் ராணி

மீன் வியாபாரியான ராணி “எட்டு வயசு முஸ்லிம் பொண்ண ஆறுநாளா ஊசி போட்டு மோசம் பண்ணியிருக்கானுங்க. டி.வி.யில போட்டு போட்டு காட்டுறான்.  தெளிவா இருந்தாலே பொம்பள பசங்கள கிண்டல் பண்றானுங்க. இதுல குடிச்சிட்டா என்ன நடக்கும்னு தெரியும். என்ன ஆனாலும் பரவாயில்ல இந்த கடைய திறக்க விட மாட்டோம். போலீசு ஜெயிலுக்கு எல்லாம் பயந்தவங்க நாங்க இல்ல.. அவ்ளோ பெரிய குவாரி ஓனர் ஜே.கே. குமாரையே எதிர்த்து போராடி குவாரிய மூடிட்டோம். அதுக்காக இரண்டு மாசம் ஜெயிலுல போட்டாங்க. பத்து வருசமா கேசு நடக்குது. “மணி அடிச்சா சோறு, மயிறு மொளச்சா மொட்ட” இதான் ஜெயிலு என்கிறார் உறுதி குலையாமல்.

மாலதி மற்றும் மையுராவுடன் கைதான பெண்கள்

மையுரா மற்றும் மாலதியுடன் கைதானவர்கள்,  “இந்த இடத்துல கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும்போதே ஏதோ கடை கட்டுராங்கன்னு நெனச்சோம். கொத்தனார் கிட்ட கேட்டதுக்கு ஓட்டல்னு சொன்னதால விட்டுட்டோம். டாஸ்மாக்குக்கு இடம் கொடுத்தவரு  தி.மு.க. இளைஞரணி செயலாளர் ஏர்போர்ட் ராஜா. அவரோட பையன் திலீப், “இந்த இடத்துல டாஸ்மாக்- பார் வரப்போகுது. கட்டிடம் கட்டி முடிச்சதும் கவர்மென்ட் அப்ரூவல் கெடச்சிடும்”னு அவனோட நண்பர்கள் கிட்ட பேசிட்டிருந்தான். அப்போதான் எங்களுக்கு தெரிய வந்துச்சி. அப்ப இருந்தே கடைக்கு எதிரா போராட ஆரம்பிச்சிட்டோம்.

மக்கள்கிட்ட கையெழுத்து வாங்கி மார்ச் மாசம் 22-ஆம் தேதி கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். ஆனா கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கல.  எங்க தொகுதியோட தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதி  ஊரு பஞ்சாயத்து போர்டுக்கு வந்தப்ப அவரை சந்திச்சி கலெக்டர்கிட்ட கொடுத்த மனுவோட நகலை அவர்கிட்டயும் கொடுத்தோம். “ஓட்டுகேட்டு வரும்போது எங்களை கும்பிட்டிங்க. இப்ப நாங்க உங்களை கும்பிடுறோம்” தயவு செஞ்சி இந்த கடையை மூடுங்க. உங்க கட்சிகாரர்தான் இடம் கொடுக்கிறார். இவர்கிட்ட நீங்க சொல்லுங்க என்றோம். எம்.எல்.ஏ. பக்கத்துலயே ராஜா இருக்காப்புல. எதுவுமே பேசாம “கடையை திறந்தா உடைச்சிடுங்கன்னு” சொல்லிட்டு ராஜாவ காருல ஏத்திகிட்டு போயிட்டாரு. நாங்க இங்கயும் அங்கயுமா வெயில்ல அலைஞ்சோம்.

22-ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு வேன்ல சரக்கை கொண்டுவந்து திருட்டுத்தனமா இறக்கினாங்க. வண்டிய எடுக்கச் சொன்னோம் கேட்கல. ஷட்டரை மூடினோம். அப்பவும் அவங்க போகல. அதன் பிறகுதான் எல்லாத்தையும் உடைக்கவே ஆரம்பிச்சோம்.

‘’நாங்க கலெக்டர், எம்.எல்.ஏ. எல்லார்கிட்டயும் பாதுகாப்பு கேட்டோம். யாரும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கல. எல்லோரையும் கையெடுத்து கும்பிட்டோம். எதுவும் நடக்கல.  நீங்க ஓட்டல் கடை வச்சா நாலு இட்லி வாங்கி சாப்பிடுவோம், மளிகை கடை வச்சா காய்கறி வாங்குவோம்.  அதுக்கு ஒத்துழைப்போம். நாங்க அந்த பக்கமே வந்திருக்க மாட்டோம்.  கோவில் கட்டினா கையெடுத்து கும்பிடலாம் –  ஹாஸ்பிட்டல் கட்டினா கால்ல விழுந்து வணங்கலாம். குடும்பத்த கெடுக்கிறவன எப்படி ஆதரிக்க முடியும். சொந்தகாரனா இருந்தாலும் ஆதரிக்க முடியாது.’’ என்கிறார்கள் ஆவேசமாக.

‘’குடிச்சிட்டு வர பசங்கள அம்மா தான் கேள்விக் கேக்கணும், அப்பா கேட்டா மொறக்கிரானுங்க. அந்த வேதனை எங்களுக்குத் தான் தெரியும். கடை இருந்தா தானே இந்த பிரச்சனை. அதான் கடைய ஒடச்சோம். பாதி பேர் கடைய ஒடச்சாங்க. மீதிபேர் ஊர்ல இருக்க எல்லோரையும் கூட்டிட்டு வர போனோம். அப்போதான் போலிசு வந்து எங்கள மடக்கிச்சி. கைது பண்றோம்னு சொன்னாங்க. நாங்க எதுக்கும் பயப்படல. நாங்களே வண்டியில ஏறி உக்காந்துட்டோம். நைட்டி,துண்டு மட்டும் தான் இருந்துச்சி. அதையெல்லாம் பத்தி நாங்க கவலைபடவே இல்ல.’’

‘’கடைய தொறந்துட்டா கடப்பேரி, பர்மாகாலனி, பெரியமலை, லட்சுமிபுரம்னு எல்லாரும் குடிக்க வருவானுங்க. வண்டிய வழியிலேயே நிறுத்துவான். வண்டிய எடுடான்னா சண்டை வரும்……. ஸ்கூல் வேன், பொம்பள புள்ளைங்க எல்லோரும் ஒயின்ஷாப் எதிரதான் நிக்கும். எவ்ளோ பிரச்சனையதான் சந்திக்கிறது. இனிமே எங்க உயிரே போனாலும் ‘எங்கள அரஸ்ட் பண்ணி கொண்டு போயி தூக்குல போட்டாலும்’ கடைய தொறக்க விடமாட்டோம்’’ என்கிறார்கள் ஒரே குரலாக.

நித்யகல்யாணி – லட்சுமி- ராஜேஸ்வரி.

நித்யகல்யாணி – லட்சுமி – ராஜேஸ்வரி கற்குவாரியில் வேலை செய்யும் தினக்கூலிகள்.  “இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சாராயக் கடையைக் கூட எங்க வீட்டு ஆம்பளைங்க விடாம தினமும் குடிக்க போறானுங்க. இப்போ வீட்டு வாசப்படியிலேய சாராயக்கடையை திறந்தாங்கன்னா அங்கேயே போய் படுத்துக்குவானுங்க. அவனுங்கள நாங்க தான் தினமும் வீட்டுக்கு தூக்கினு வரணும். குடிச்சிட்டானுங்கன்னா அவனுங்க பண்ற அலம்பல் உங்களுக்கு சொன்னா விளங்காது. எங்கள மாட்டை அடிக்கிற மாதிரி அடிப்பானுங்க. வாரத்துக்கு நாலாயிரம் சம்பாதிச்சா இரண்டாயிரம் குடிச்சியே அழிச்சிடுவாங்க.

தினமும் இரவு ஏழு மணிக்கு நாங்க வேலைய முடிச்சிட்டு பயந்து பயந்து தான் எங்க வீட்டுக்கு வருவோம். அவனுங்க தூங்கற வரைக்கும் எங்க உயிரை எடுத்துடுவானுங்க. தினமும் இப்படி குடிச்சியே அழிச்சா சோத்துக்கு இன்னா பண்றதுன்னு கேட்டா அதுக்கும் அடிப்பானுங்க. அப்படி அடிவாங்கிய உடம்பு முடியாம போயிடுது, அடிச்சி கைய ஒடச்சிடுவாங்க. அதுக்கு மருத்துவ செலவு வட்டிக்கு வாங்கி தான் பாக்குறோம். எங்களால வட்டிகட்ட முடியல கடன் கொடுத்தவன் எல்லாம் வீட்டுல வந்து அசிங்கமா திட்டிட்டு போறாங்க.

வீட்டில இருக்க ஆம்பளை பசங்க அம்மாவ அடிக்கிறதை பார்க்க முடியாம அப்பன அடிக்கிறானுங்க. வயசு பொம்பள பசங்க தினமும் சண்டையை பார்க்க முடியாம மனசு நொந்து தூக்கு மாட்டினு செத்து போவுதுங்க. நாங்க இந்த கொடுமையை எல்லாம் யாருகிட்ட சொல்றது. இதுக்கு பிறகும் இந்த கவர்மெண்டு இங்க கடையை திறந்தா நாங்க எங்களை பலி கொடுக்கிறதை தவிர வேறு இல்ல. சாராயக் கடை எதிரிலேயே கிருஷ்ணாயில் ஊத்திக்கினு மொத்தமா செத்துருவோம் என்கிறார்கள் கண்ணீருடன்.

இந்த எளிய மக்கள் அன்றாட செலவுகளுக்கே பெரும் போராட்டம் நடத்துபவர்கள், டாஸ்மாக்கையும் எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களுக்கு உதவ யாருமில்லை, ஆனால் அவர்களது உழைக்குவர்க்க கோபமும், இழப்புக்கு அஞ்சாத உறுதியும் இந்த வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.

– வினவு களச் செய்தியாளர்கள்