தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் !

காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

காவிரி விவகாரத்தில், மைய பா.ஜ.க. அரசு – கர்நாடக காங்கிரசு அரசு – உச்சநீதி மன்றம் ஆகிய மூன்று அதிகார உறுப்புகளின் கூட்டுச் சதிக்கு எதிராகவும், எடப்பாடி கும்பலின் துரோகம்-அடிவருடித்தனத்திற்கு எதிராகவும் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், நம் மீது கொத்துக் குண்டுகளை வீசியெறிவதைப் போல, காவிரிப் படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கான திட்டங்களைத் தயாரித்து, இக்கிணறுகளுக்கான உரிமங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் வாரிக் கொடுக்கும் முடிவையும் எடுத்திருக்கிறது, இந்திய அரசு.

இக்கிணறுகளைக் குத்தகைக்கு எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, அங்கு கச்சா எண்ணெய் முதல் மீத்தேன், ஷேல் கேஸ் வரை எதனையும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் அனுமதி வழங்கப்படும்.

இதுவொருபுறமிருக்க, நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் நோக்கில், அப்பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும்படி எடுபிடி எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது, மோடி அரசு. இந்த விரிவாக்கத்திற்கு ஏற்ப புதிய கச்சா எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டும் அபாயமும் எழுந்து நிற்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் எத்துணை கிணறுகள் உள்ளன, அவற்றுள் எத்துணை கிணறுகளில் உற்பத்தி நடைபெறுகிறது என்பதே மர்மமாக உள்ள நிலையில், இயக்கப்படும் எந்தவொரு கிணற்றுக்கும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

”நாங்கள் அளிக்கும் விண்ணப்பத்திற்கு மூன்று மாதங்களுக்குள் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்கவில்லை என்றால், உரிமம் வழங்கியதாகக் கருதப்படும் என்று எங்களது விதிமுறைகள் தெரிவிக்கின்றன” எனப் பதில் அளித்து, இந்த நாட்டாமைத்தனத்தை நியாயப்படுத்தியிருக்கிறார், ஓ.என்.ஜி.சி.யின் காரைக்கால் யூனிட் நிர்வாக இயக்குநர் குல்பீர் சிங். தமிழகக் காவிரிப் படுகை இனி ஓ.என்.ஜி.சி.யின் காலனி என்பதுதான் இந்த விளக்கத்தின் பொருள்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் கச்சா எண்ணெய்-ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்றப்படும் அபாயகரமான நிலையில், பா.ஜ.க.வின் பினாமி எடப்பாடி அரசு காவிரிப் படுகையில் புதிதாக 9 மணல் குவாரிகளைத் திறக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தமிழகமெங்கும் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடுமாறு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றம் சென்று; இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி இந்த 9 மணல்குவாரிகள் உள்ளிட்டுப் புதிதாக 21 மணல் குவாரிகளைத் திறக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இந்தப் புதிய மணல் குவாரிகளோடு, பழைய குவாரிகள் உள்ளிட்டு அனைத்தையும் இயக்கும் பொறுப்பை முழுமையாகத் தனியாரிடம், அதாவது தமது பினாமிகளிடம் ஒப்படைக்கும் முடிவையும் சந்தடி சாக்கில் எடுத்திருக்கிறது, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். கொள்ளைக்கூட்டம்.

இவையும் போதாதென்பது போல, நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தைத் திறக்கும் அனுமதியையும் அளித்து, தமிழக மக்களின் மீது இன்னொரு இடியை இறக்கியிருக்கிறது, இந்திய அரசு. நியூட்ரினோ திட்டத்திற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்துப் புதிதாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மட்டுமே புதிய அனுமதியைத் தமிழக அரசிடமிருந்தும் மைய அரசிடமிருந்தும் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப்போட்டுவிட்டு, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து குறுக்கு வழியில் புதிய அனுமதியை அளித்திருக்கிறது, மோடி அரசு.

மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் சட்ட விதியின் ஒரு பிரிவு, கட்டிடங்கள் கட்டுவதற்குச் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டியதில்லை எனச் சலுகை அளிக்கிறது. இந்தச் சட்டபூர்வ ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் கட்டிடம்தான் கட்டப் போவதாகக் கூறி, அதனால் புதிய ஆய்வு நடத்த வேண்டியதில்லை என மறுத்து நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.

நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையை, 1,000 டன் எடையுள்ள ஜெலட்டின் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்க வைத்து, அதன் மூலம் 11 இலட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளைத் தகர்த்துதான் இந்த ஆய்வகத்துக்கான குகையை அமைக்கவிருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், அங்கே கட்டிடம்தான் கட்டப் போவதாக மோடி அரசு கூறியிருப்பது அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தமிழக மக்களைக் கிள்ளுக்கீரைகளைவிடக் கேவலமாக எண்ணும் அதனின் திமிரையும் வெளிப்படுத்துகிறது.

”நியூட்ரினோ ஆய்வு புதிய திட்டமல்ல” எனக் கூறி, மைய அரசின் அனுமதிக்கு ஒத்தூதியிருக்கும் எடப்பாடி அரசு, தன் பங்குக்கு தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை 640 ஏக்கர் பரப்பில் விரிவாக்கும் திட்டத்திற்குப் பகுதி மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய காகிதச் சட்ட நடைமுறையைக்கூடப் புறக்கணித்துவிட்டு ஒப்புதல் அளித்திருக்கிறது.

மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலை, விரிவாக்கத்திற்குப் பிறகு ஊருக்கு மிக அருகாமையில், 150 மீட்டர் தொலைவில் அமையும் எனப் பொதுமக்கள் கூறிவரும்போது, எடப்பாடி அரசோ ஆலையின் விரிவாக்கம் சிப்காட் வளாகத்திற்குள்தான் அமையவுள்ளது எனத் துணிந்து பொய் சொல்லி, அதனால் பொதுமக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை எனக் கூறிவிட்டது.

இந்த நாசகார ஆலை சுற்றுப்புறச் சூழல் விதிகளைத் துடைத்துப்போட்டுவிட்டுதான் இயங்கி வருகிறது என்பதைப் புதிதாக நிரூபிக்க வேண்டியதில்லை. விஷவாயுக் கசிவு, ஆலைக்குள் நடந்த விபத்துக்கள், தோல் நோய், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் என ஸ்டெர்லைட் உருவாக்கியிருக்கும் நாசத்திற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்தக் குற்றங்களுக்காக 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்து, ஆலை நிர்வாகத்திற்குப் பொதுமன்னிப்பு அளித்து, ஆலையை இயங்க அனுமதி அளித்த யோக்கிய சிகாமணிகள்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

இந்த விரிவாக்கத்திற்கு எதிராக குமரரெட்டியாபுரம், பதியம்புத்தூர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 40 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்டு எட்டு பேர் மீது பொய்வழக்குப் போட்டு, அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை ஒடுக்குகிறது, தமிழக அரசு.

காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவைத் தனித்தனிப் பிரச்சினைகள் அல்ல. அனைத்திலும் சட்டம், விதிகள், மரபுகள் அனைத்தையும் அலட்சியமாக மீறி, ஆணவமாகத் தூக்கியெறிந்துவிட்டுத் தமிழகத்தின் மீது ஒரு போரைத் தொடுத்திருக்கிறது மோடி அரசு.

இந்தப் போரில் இந்து மதவெறிக் கும்பலின் காலாட்படையாகச் செயல்படுகிறது, எடப்பாடி அரசு. இதுவொரு போர் என்ற உண்மையைத் தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். போரை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ, அப்படி இதனை எதிர்கொள்ள வேண்டும்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க