கடலூர் மின் துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : கொள்ளையே கூட்டணிக்குக் ‘கொள்கை’ !

மின் துறையில் பு.ஜ.தொ.மு.-வின் இணைப்பு சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி கடந்த ஆண்டு, மார்ச் மாதம் உதயமானது.

மின் துறை தொழிலாளர்கள், ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் அதே நேரம், மின் துறையில் மட்டுமல்லாது, பரந்துபட்ட அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான காரணங்களை விளக்கியும், அது தொடர்பான போராட்டங்களை நடத்தியும், தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு  வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு மே 07 அன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்தது.

கடலூர் கோட்டத்திற்கு உட்பட்டு நடந்த தேர்தலில், பு.ஜ.தொ.மு. சங்கத்தின் சார்பில் NDLF-அணியாக களமிறங்கினோம். மொத்தம் உள்ள 11 இடங்களுக்கான தேர்தலில் 07 இடங்களில் தனித்துப் போட்டியிட்டோம்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சி.ஐ.டி.யூ., ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட இடதுசாரி சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒரு அணியாகவும், தொ.மு.ச. ஒரு அணியாகவும், அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிட்டன.

ஐ.என்.டி.யூ.சி (காங்கிரசு), பி.எம்.எஸ் (பி.ஜே.பி.), தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் (தே.மு.தி.க.) மற்றும் அண்ணா தொழிற்சங்கம் இணைந்து உருவாக்கியுள்ள “கொள்ளை கூட்டணி”

இதில் வேடிக்கை என்னவென்றால், அண்ணா தொழிற்சங்கம் (அ.தி.மு.க.), ஐ.என்.டி.யூ.சி (காங்கிரசு), பி.எம்.எஸ் (பி.ஜே.பி.), தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் (தே.மு.தி.க.) ஆகிய சங்கங்கள் இணைந்து கூட்டணி அமைத்ததுதான்.

கொள்கையிலே எதிரும், புதிருமாக காட்டிக் கொண்டு, ஆட்சியில் மக்களை பணத்தைச் சூறையாடவும், சங்கத் தேர்தல் என வந்தால் கூட்டு வைத்துக் கொண்டு தொழிலாளர் பணத்தைக் கொள்ளையிடவும் செய்கின்றனர்.

அதாவது, எதிரில் இருந்தாலும், சேர்ந்து இருந்தாலும், கொள்ளையடிப்பது தான் ‘கொள்கையாகக்’ கொண்டு வலம் வந்தனர்.

தொ.மு.ச. அணியோ பல லட்சங்களைச் செலவு செய்து, 100 ரூபாய் பணம், குவாட்டர், கோழி பிரியாணியுடன் வாக்காளர்களை வேன் வைத்து அழைத்து வந்தனர்.

குவாட்டர் நெடியுடன், ஓட்டுப் போடச் சென்ற வாக்காளர் ஒருவர், தான் காலையில் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் ஓட்டுப் போட்டதாகவும், மற்றவர்களுக்கு ஓட்டுப் போட, ஓட்டுப் பெட்டியிலே போட்ட வாக்குச் சீட்டை எடுத்துக் கொடுக்குமாறு குடிபோதையில் தகராறு செய்தார். குவாட்டர் ஓட்டு, செல்லாத ஓட்டு என்ற கதையாகிப் போனது.

தொழிலாளர்களை நேரில் சென்று சந்திக்கும் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி (NDLF அணியினர்) தோழர்கள்.

கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிளைகளுக்கு நேரடியாகச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.

சிவப்பு என்றாலே அது பு.ஜ.தொ.மு. தான் !

எங்கு சென்றாலும் சிவப்பு சட்டை சகிதமாக நமது தோழர்கள் வலம் வந்ததால், மின் துறையில் சிவப்பின் அடையாளமாக இருந்த சி.ஐ.டி.யூ. அணியினர். சிவப்பு சட்டை போட முடியாமல் நெளிந்தனர்.

சிவப்பு சட்டை அணிய முடியாது போனதால் சிவப்பு துண்டுடன் பிரச்சாரம் செய்யும் சி.ஐ.டி.யூ.-வினர்.

தப்பித் தவறி யாராவது போட்டாலும், அவர்களை NDLF அணியா என்று தொழிலாளர்கள் கேட்க ஆரம்பித்ததால், சிவப்பு சட்டை போடுவதை ஒட்டு மொத்தமாக நிறுத்திக் கொண்டனர்.

சிவப்பு என்றாலே அது நாம் தான் என்ற அடையாளத்தை தோழர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதனால், சிவப்புத் துண்டிற்கு மாறி, அதைப் பற்றியும் தொழிலாளர்கள் கேட்க ஆரம்பித்ததால், சிவப்பையே பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர் சி.ஐ.டி.யூ. அணியினர்.

நமது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வாக்குச்சாவடியாக உள்ள நகராட்சிப் பள்ளி வாயிலில் நமது சுவரொட்டியை மறைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. அணியினர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு, சுவரொட்டியை மறைக்கச் செய்தனர்.

மறைக்கப் பட்ட பு.ஜ.தொ.மு. -வின் சுவரொட்டி.

மற்ற அணியினர், கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு நிர்வாக, சீர்திருத்தங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசிக் கொண்டிருந்த பொழுது, நேர்மையான நிர்வாகம் என்ற ஒற்றை வாக்குறுதியுடன் களமிறங்கினோம். நமது தோழர்கள் அனைவரும்.

தொழிலாளர்களை நேரடியாக சந்தித்தது முதல், தேர்தலுக்கான விளம்பர பேனர்களை வைக்கிற வரை, பல்வேறு வேலைகளில் தோழர்களே முன் நின்று கடும் வேலைகளை செய்தது, பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை விட, நேர்மையான சங்கம் தேவை என்பதை தொழிலாளர்களை உணர வைத்ததில் நமது NDLF அணி வெற்றிபெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கடலூர் கோட்டம். தொடர்புக்கு: 95977 89801.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க