“காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!” என்கிற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபயணம், பொதுக்கூட்டம், தெருமுனைக்கூட்டம் என, தொடர் பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

உடுமலை

உடுமலையில் 14-05-18 அன்று நடைபெறுவதாக இருந்த மக்கள் அதிகாரத்தின் பொதுக்கூட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அதே நாளில், பெரிய கடைவீதி கொங்கு திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டமாக நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா தலைமையில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில், தமிழ்நாடு திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர் நாகராஜன், கணக்கம்பாளையம் ஆரசு ஊழியர்கள் – ஓய்வூதியர் குடியிருப்போர் நல சங்கத்தின்  திரு விவசாயபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் ரவிக்குமார், திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தோழர் தம்பி பிரபாகரன், தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார், கொங்கு மண்டல ஆய்வு மையத்தின் திரு ரவிக்குமார், மற்றும் ராமி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி திரு நாச்சிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.

“மக்கள் மத்தியில் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறீர்கள், சரியான கோணத்தில் பிரச்சனைகளையும், தீர்வையும் முன் வைக்கிறீர்கள், மக்கள் அதிகாரத்தோடு தொடர்ந்து நாங்களும் பயணிப்போம், போராடுவோம்” என்றனர்.

மக்கள் அதிகாரத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளர்  தோழர் ராஜு , தனது உரையில், நீதி மன்றத்தின் வஞ்சக தீர்ப்பு, மத்திய மாநில அரசின் மெத்தன போக்கு, தமிழகத்தின் மீதான வன்மம், டெல்டாவை  சுடுகாடாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகாரத் திட்டங்கள், விவசாயத்தை அழிக்கும் அரசின் தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்திய அவர், எம்மை போன்ற ஒன்றிரண்டு அமைப்புகள் மட்டும் போராடினால் தீர்வு கிடைக்காது, பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் போராட்டங்களாக உருவெடுக்க வேண்டுமென்றார்.

கூட்டத்தின் இடையே ம. க. இ. க.-வின் கலைநிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.

“இந்த அரசு விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யாது என தெரியும். ஆனால் ஏதோ ஒரு ஓரத்தில் நல்லவன் வந்தால் நடக்கும்  என நம்பியிருந்தேன். அது தவறு. போராடாமல் தீர்வு கிடைக்காது என்ற தெளிவை இந்தக்கூட்டம் தமக்கு வழங்கியதாக” தெரிவித்தார் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர்.

இதற்கு முன்னதாக மக்கள் அதிகாரத்தின் தோழர்கள், மக்கள் மத்தியில் காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் தேவையை விளக்கி குடியிருப்பு பகுதிகளிலும், கடைவீதிகளிலும், ரயில், பேருந்து, ஆட்டோ என விரிவான அளவில் பிரச்சாரம் செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
உடுமலை. தொடர்புக்கு : 97885 58526

_____________________________________________________________________

தருமபுரி

ருமபுரியில் 08.05.2018 அன்று காலை10:00 மணி அளவில் பி.அக்ரகாரத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தோழர் ராஜா தனது உரையில், “காவிரிப் பிரச்சினையில் மோடி அரசு தமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. தன்னுரிமைக்கான போராட்டத்தை கட்டியமைப்பதுதான் ஒரே தீர்வு” என பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் வழக்கறிஞர் ஜானகிராமன் , “கிருஷ்ணராஜசாகர் அணையில் துணை இராணுவத்தை அனுப்பி தண்ணீர் கொடுக்க வக்கற்ற மத்திய அரசு டெல்டாவில் துணை இராணுவத்தை இறக்கி போராடும் விவசாயிகளை பயமுறுத்துகிறது.” என மோடி அரசின் ஓரவஞ்சணையையும், திமிர்த்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.

இனியும் வேடிக்கை பார்க்காமல், அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு: 81485 73417

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க