ங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் குவாட்ரில்லா என்ற நிறுவனம் கார்ப்பரேட் நீரியல் விரிசல் முறையில் மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் இரசாயனக் கூட்டுப் பொருட்கள் துரப்பணவு செய்துவருகிறது. இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டுவரும் சிறு சிறு நிலநடுக்கங்களுக்கு  இந்நீரியல் விரிசல் தொழில்நுட்பம்தான் காரணம் எனக் கண்டறிந்த இங்கிலாந்து அரசு, கடந்த ஆகஸ்டு மாதத்தில் இத்தொழில்நுட்பமுறைக்குத் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டது.

பூமியைத் துளையிட்டு, நிலத்தடி நீரை வெளியேற்றி, மணல் மற்றும் பல்வேறு இரசாயனக் கலவைகளைப் பூமிக்கடியில் அழுத்தத்துடன் செலுத்தி, அடிப்பகுதியில் வெடிப்புகளை ஏற்படுத்தி மீத்தேனையும், படிமப் பாறைகளிலிருந்து ஷேல் கேஸையும் விடுவித்துப் பிரித்தெடுப்பதே நீரியல் விரிசல் முறை. இத்தொழில்நுட்பம் நிலநடுக்கம் உள்ளிட்டுப் பல்வேறு சுற்றுச்சூழல் பேராபத்துக்களை உருவாக்கக்கூடியது எனச் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் சமூக இயக்கங்களும் கூறிவருவது உண்மைதான் என்பதை இங்கிலாந்து நாட்டு அனுபவம் நிரூபித்திருக்கிறது.

“நீரியல் விரிசல் முறையை மனித குலத்துக்குக் கிடைத்துள்ள மாபெரும் வரம் என்றும் ஷேல்வாயு தேடலில் எதையும் மிச்சம் வைக்க வேண்டாம்” என்றும் கூறிவந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் அமைந்திருக்கும் அரசுதான் தற்பொழுது இத்தொழில்நுட்பத்திற்குத் தற்காலிகத் தடையுத்தரவை விதித்திருக்கிறது.

“நீரியல் விரிசல் முறையால் இனி எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் இல்லை” என்று நிரூபிக்கும் வரை இந்தத் தொழிட்நுட்ப முறைக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டிருக்கிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். “இத்தடையை நிரந்தரமாக்க வேண்டும்” எனப் பரிந்துரைத்திருக்கிறார், இங்கிலாந்தின் தொழில் மற்றும் திறன் செயலாளர் ஆண்ட்ரியா லீட்சன்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை !
♦ காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

எதிர்வரவுள்ள தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இங்கிலாந்து அரசு இத்தடையை விதித்திருப்பினும், இங்கிலாந்தில் ஷேல் கேஸ் எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம் (Oil and Gas Authority) அளித்திருக்கும் அறிக்கையில், “லங்காஷயர் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்கு ஆபத்தான நீரியல் விரிசல் முறை தான் உடனடிக் காரணம்” என்பதை அறிவியல் ஆதாரங்களோடு உறுதிப்படுத்தி, இத்தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

“தற்காலிகமானது எனினும், இங்கிலாந்தின் செல்வாக்குமிக்க புதைபடிவ எரிபொருள் தொழிற்கழகங்களுக்கு எதிராக உள்ளூர் மக்களால் கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் வெற்றி இத்தடையுத்தரவு” என்கிறார் புவியின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் க்ரைக் பேனட்.

இங்கிலாந்து அரசு இந்தத் தொழில்நுட்பத்திற்குத் தடை விதிப்பதற்கு முன்பாகவே ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆபத்துக்கள் நிறைந்த தொழில்நுட்பம் தடை செய்யப்பட்டுவிட்டது.

நீரியல் விரிசல் முறையால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் சுற்றுப்புறச் சூழல் கேடுகளும் கைப்புண் போல நிரூபணமான பிறகும்கூட, இந்திய அரசு இத்தொழில்நுட்பத்திற்குத் தடை விதிக்க மறுக்கிறது.  குறிப்பாக, தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் இத்தொழில்நுட்ப முறையைக் கமுக்கமாகப் புகுத்தி, 271 இடங்களில் நீரியல் விரிசல் முறை மூலம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவை ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இழிபுகழ்’ அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பரங்கிப்பேட்டைலிருந்து வேதாரண்யம் வரையிலும், விழுப்புரம் மரக்காணம் முதல் கடலூர் வரையிலும் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தாவிற்கும், சிதம்பரத்தை ஒட்டிய 731 சதுர கி.மீ. பரப்பளவில் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கும் நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி  ஹைட்ரோகார்பனை துரப்பணவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 32 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுப்பதும், அதன் பிறகு 100 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுப்பதும் தான் இத்திட்டங்களின் முழுநோக்கமாகும்.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் நீரியல் விரிசல் முறையின் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரியும், அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களும், முற்போக்கு அறிவுத்துறையினரும் இத்தொழில்நுட்பம் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

படிக்க:
ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
♦ அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?

எனினும், மைய பா.ஜ.க. அரசும், அதனின் அடிவருடியான தமிழக அ.தி.மு.க. அரசும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என அவதூறு செய்துவருவது மட்டுமின்றி, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளா?” என எகத்தளமாகப் பரிகாசம் செய்தும் வருகின்றன.

நீரியல் விரிசல் முறைக்காக அரசு உருவாக்கியிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் சட்டபூர்வமாகச் செல்லாது என்று 2019-இல் தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம், “நீரியல் விரிசல் முறைக்கு எதிராக உள்ள அறிவியல்பூர்வமான ஆதாரங்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை” என்றும் அத்தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதேசமயம் தமிழக நீதிமன்றங்களும், நீதியரசர்களும் மக்களுக்கும் அறிவியல்  உண்மைகளுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய அறத்தைக் கைவிட்டு, நீரியல் விரிசல் முறை குறித்த பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகளுக்குப் பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை விதித்து, உண்மைகள் மக்களைச் சென்றடைந்துவிடாமல் தடுக்கும் அயோக்கியத்தனங்களில் இறங்கியுள்ளன.

இத்தகைய சூழலில்தான் இங்கிலாந்தில் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் நீரியல் விரிசல் முறைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது உண்மை மக்கள் பக்கம் தான் இருக்கிறது  என்பதை நிறுவியிருப்பதோடு, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீரியல் விரிசல் முறை ஆகியவற்றுக்கு எதிராகத் தமிழக மக்களும் டெல்டா மாவட்ட விவசாயிகளும் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஒரு தார்மீக உத்வேகத்தையும் அளித்திருக்கிறது.


மேகலை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க