இசுலாமிய வெறுப்புணர்வு நோய் என்பது வெறுமனே வெறுப்பு என்பதைத் தாண்டி முசுலீம்கள் மீதான இன ஒடுக்குமுறையை குறிக்கும் பரந்துபட்ட பொருளை எதார்த்தத்தில் கொண்டிருக்கிறது.

”இசுலாமிய வெறுப்புணர்வு நோய் (Islamophobia) என்பது விவாதங்களை நிறுத்துவதற்கான புனைக் கதை” என்று தி டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் மெலனி பிலிப்ஸ் (Melanie Phillips) எனும் பத்திரிகையாளர் கண்டனம் செய்திருந்தார். அதற்கு முந்தைய வாரம், பி.பி.சியின் ஞாயிறு அரசியல் நிகழ்ச்சியில் அவரது புலம்பல் இரட்டிப்பாகியிருந்தது. அதில் முசுலீம் மக்கள் மீதான எந்த ஒரு  விமர்சனமும் இசுலாமிய வெறுப்பாக கருதப்படுவதாகக் கூறி அச்சொற்பதத்தையே நிராகரித்திருந்தார்.

மற்றவர்களும் கூட அச்சொற்பதத்தின் பயன்பாட்டை எதிர்த்திருக்கின்றனர். “நான் முசுலீம்களை பற்றிப் பேசவில்லை. நான் இசுலாத்தை பற்றிதான் பேசுகிறேன்” என்று தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன்(Tommy Robinson) முசுலீம்களுக்கு எதிரான தன்னுடைய சகிப்பின்மைக்கு முட்டுக் கொடுக்கிறார். விவாதத்தை முடக்குவது போன்ற போலியான வாதங்களை வைப்பதன் மூலம் “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்ற பதம் மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்படுவதை நாம் இங்கே பார்க்கிறோம்.

இது போன்ற சொற்பொருள் விளையாட்டுகளால் ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” எனும் பதத்தை மீண்டும் மீண்டும் நிராகரிப்பதன் மூலம் உண்மையான பிரச்சினைகளை இவர்கள் திசை திருப்புவது மலைப்பூட்டுகிறது. ஆனால் மெலனியின் கருத்துக்களுக்கு நெருக்கமானவர்களான ரோட் லிடில்(Rod Liddle) மற்றும் பிரெண்டன் ஒ’நெய்ல்(Brendan O’Neil) போன்றவர்கள் தங்களது இசுலாமிய வெறுப்பை வெளிப்படுத்துவதற்கான களத்தை மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பி.பி.சி நிறுவனம் வழங்கியிருப்பதுதான் உண்மையில் கவலைக்குரியதாகும்.

மெலனியின் சகிப்புத்தன்மையற்ற வாதம் யூதர்கள் மற்றும் முசுலீம்களால் சரியாக விமர்சிக்கப்பட்டிருந்தாலும், ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ என்ற பதத்தின் சரியான பொருள் நோக்கம் என்ன என்று அதைப்பற்றி நன்கறிந்த தாராளவாதிகள் கூட கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

இது போன்ற சொற்கள் தன்னளவில் முழுமைத்தன்மை பெற்றிருப்பது அரிது அல்லது அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் பல்வேறு வார்த்தைகள் எந்த ஒரு சராசரி வெறியுணர்வாளர்களிடமும்  சிறிய தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன.

“யூத – அரேபிய எதிர்ப்பு”(anti semitism) என்ற சொல்லை நாம் எடுத்துக் கொள்வோம். அகராதி விளக்கப்படியே மத்தியக் கிழக்கில் உள்ள அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையின்மையை இது குறிக்கிறது. ஆனால் இது பரவலாக யூத எதிர்ப்பு என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. சமூகத்தில் யூத அரேபிய இன எதிர்ப்புகளும் சகிப்பின்மையும் பரவலாக இன்னும் இருக்கிறது என்று அது மேலும் கூறுகிறது. யூத – அரேபிய இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஒரு அரேபியருக்கு யூத எதிர்ப்புணர்வு இருக்காது என்று ஒருவர் கூறமுடியாது.

இதே போலதான் நல்லெண்ணம் கொண்ட பெரும்பாலான மக்கள் அகராதி விளக்கத்தைத் தாண்டி இசுலாமிய வெறுப்புணர்வு என்பதை ஒரு கருத்தாகவோ அல்லது சமூக நிகழ்வாகவோ புரிந்து கொண்டுள்ளனர்.

“இசுலாமிய வெறுப்புணர்வு நோய் – இஸ்லாம் ஃபோபியா” என்ற சொல்லை 1997-ம் ஆண்டு வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில் ரன்னிமேடே(Runnymede ) அறக்கட்டளை தான் முதன்முதலாக பிரபலப்படுத்தியது. முசுலீம்கள் மீதான வெறுப்பை குறிப்பதற்கு ஒரு சொற்பதம் தேவைப்பட்டதன் பின்னணியில் இது புழக்கத்தில் வந்தது. முதலில் “முசுலீம்களுக்கு எதிரான அடிப்படையற்ற வெறுப்பு, பின்னர் அதுவே அனைத்து முசுலீம்கள் மீது பயம் அல்லது வெறுப்பு” என்ற அடிப்படையில் ‘[அடிப்படையற்ற] அதீத பயம் அல்லது சமநிலை குலைந்த மனநோய்’ (“phobia” ) என்ற பின்னொட்டு சேர்க்கப்பட்டது.

“இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்ற சொற்பதம் இசுலாம் மீதான விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ கண்டனங்களையோ வெளிப்படுத்தக்கூடாது என்று கூறவில்லை என்று தெளிவாகவே ரன்னிமேடே அறிக்கை கூறியிருந்தது. இதை புரிந்து கொள்ளாமல் இருப்பது போல பாசாங்கு செய்வது மிகவும் முட்டாள்தனமானது.

எனினும் இந்த பதம் குறித்த விளக்கத்தின் மீது சந்தேகத்தை உருவாக்க, இப்பதத்தின் எதிர்ப்பாளர்கள், அதன் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் மீதான பரந்துபட்ட பகையுணர்ச்சியோடு, நம்பிக்கையின் மீதான விமர்சனத்தையும் இட்டுக்கட்ட முயற்சிக்கின்றனர்.

“குறைந்த இசுலாம்தான் தீவிரவாதத்திற்கான தீர்வு” என்ற கோட்பாட்டை முன்வைத்த டக்லஸ் முரே போன்ற சிலர் “இசுலாம் மீதான விமர்சனம்” என்ற போர்வையில் தங்களது எதிர்ப்புணர்வை சட்டபூர்வமாக்க முயல்கின்றனர். இங்கே இசுலாம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தியதன் அடி ஆழத்தில் பிரிட்டிஷ் கடற்கரைகள் பாதுகாப்பாக இருக்க முசுலிம்கள் குறைவாக இருக்க வேண்டும் என்ற பொருள் தேங்கியுள்ளது. முசுலிம்களை இன அழிப்பு செய்யாமலோ அல்லது ஒட்டுமொத்தமாக நாடு கடத்தாமலோ எப்படி இந்த குறிக்கோளை அடைய முடியும் என்பதை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. இது கண்டிப்பாக இசுலாமின் மீதான விமர்சனம் அல்ல. மாறாக இது “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்”க்குள் கச்சிதமாக அடங்குகிறது.

மேலும் ”இசுலாமிய வெறுப்புணர்வு” என்ற சொற்பதத்தை சட்டபூர்வமாகவே காயடிப்பதற்கு முசுலீம் விரோத வெறுப்பு (anti-Muslim hatred) என்ற சொற்பதத்தை நைச்சியமாகப் பயன்படுத்துகிறார்கள். “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்பது வெறும் வெறுப்பு என்பதைத் தாண்டி பரந்த பொருளை கொண்டுள்ளது. முசுலீம் விரோத வெறுப்பு என்ற சொற்பதம் பரவலான இன ரீதியான ஏற்றத் தாழ்வுகளை எதிரொலிக்கவில்லை.

முசுலீம்கள் இங்கிலாந்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்று 31% பிரிட்டிஷ் சிறுவர்கள் உண்மையில் கருதுகிறார்கள்; அதே போல முசுலீம்களின் எண்ணிக்கையை குறைக்கும் கட்சிக்கு 37% பிரிட்டிஷ் மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எதார்த்தத்தில் சக வெள்ளை இன கிறுத்துவர்களை விட முசுலீம் மக்களுக்கு 76% குறைவாகவே வேலை கிடைக்கிறது. மேலும், இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய 10% பகுதிகளில் தான் 50% முசுலீம் மக்கள் வாழ்கின்றனர். இச்சூழ்நிலைகள் அனைத்தும் வெறுமனே வெறுப்பு என்ற வார்த்தைக்குள் அடங்காது. இவை இசுலாமிய வெறுப்புணர்வு என்ற பரந்துபட்ட பொருள் கொண்ட வார்த்தைக்குள்ளே கச்சிதமாக அடங்குகின்றன.

மேலும் ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ என்பது அதன் விரிந்த பொருளில் முசுலீம் இன வெறுப்புதான் என்பது தற்போது நன்கு நிறுவப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் மக்கள், காவல் துறையினர், ஊடகங்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரதமரையும் தாண்டி உலகம் முழுதும் இதன் பயன்பாடு பரவியிருக்கிறது. மேலும் அனைவருக்கும் அந்த வார்த்தை என்ன சொல்ல வருகிறது என்றும் தெரிந்திருக்கிறது.

’இசுலாமிய வெறுப்புணர்வு நோய் ‘ இருப்பது உண்மை. அது நம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் அவற்றின் அனைத்து பரிமாணங்களோடும் வளர்ந்து வருகிறது. ’இசுலாமிய வெறுப்புணர்வை நோய்’ ஆட்கொண்டவர்களும் ’இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ நிலவுவதை மறுப்பவர்களும், நமது தெரிவான  ‘இசுலாமிய வெறுப்புணர்வு’  எனும் பதத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து நகைப்பிற்குரியது. ஏனெனில் வெறும் வார்த்தை மாற்றம் அவர்களது வெறுப்புணர்வை ஒருபோதும் மாற்றப் போவது இல்லை.

வெறும் வார்த்தையைப் பிடித்து தொங்கி கொண்டிருப்பவர்கள் நடைமுறையில் முசுலீம்கள் மீதான விரோதப்போக்கு, வன்முறை மற்றும் இனவெறியை விட  அப்பதத்தின் சொற்பொருளைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார்கள். அவர்களது ஆர்ப்பரிக்கும் மதவெறியை அவர்களது சொல் விளையாட்டுகள் மறைக்கும் என்றே கருதுகிறார்கள். ஆனால் அது அவர்களால் முடியாது. நாமும் பார்க்கத்தானே போகிறோம்.

-வினவுச் செய்திப் பிரிவு

கார்டியன் தளத்தில்  எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்