ஓட்டுனரை தற்கொலைக்குத் தள்ளிய சான் அகாடமி பள்ளி !

சென்னை சான் அகாடமி பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தவர் அன்பு. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். அவரை நிர்வாகம் எப்படி தற்கொலைக்குத் தள்ளியது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இச்செய்தி!

சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரம் பகுதியில் இயங்கிவரும் சான் அகாடமி  பள்ளியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தவர் அன்பு. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொதுவில் இதுபோன்று பணியிடங்களில் தற்கொலைகள் நடக்கும் பொழுது, தற்கொலைக்கான காரணத்தை போலீசுதான் விசாரிக்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ஆனால், இங்கே தலைகீழாக போலீசு வேலையை பள்ளி நிர்வாகமே மேற்கொண்டது. புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தில் அவரைச் சேரச்சொல்லி வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றஞ் சுமத்தியது.

பள்ளி முதல்வரும், போக்குவரத்து நிர்வாகியும், மற்ற ஒட்டுநர்கள் மற்றும் பணியாளர்களையும் கூட்டிவைத்து “சங்கத்தில் சேர வற்புறுத்தப்பட்டதன் காரணமாகத்தான் அன்பு தற்கொலை செய்துகொண்டதாகவும், இந்த சம்பவத்தை பற்றி யாரும் வெளியில் பேசக்கூடாது. குறிப்பாக அந்த சங்கத்தினரோடு யாரும் பேசக்கூடாது, தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது”, என்று கட்டளையிட்டு பத்து நிமிடத்தில் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக பள்ளியை விட்டு வெளியேறுமாறு மிரட்டப்பட்டனர்.

அதற்கு முன்னதாக, அத்தொழிலாளர்களிடம் “யாரிடமும் சொல்லமாட்டோம்” என்று சத்தியம் வேறு வாங்கியிருக்கிறார்கள். “சத்தியத்தை மீறினால், வேலை போய்விடும்” என்றும் எச்சரித்திருக்கின்றனர்.

இதே பள்ளியின், வேளச்சேரி கிளையில் ஓட்டுநராகப் பணியாற்றும் தெய்வீகன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய இரண்டு தொழிலாளிகளை அழைத்து “அன்புவின் சாவுக்கு நீங்கள்தான் காரணம், உங்களது சங்கத்தில் சேரச்சொல்லி அவரை மிரட்டியதால்தான் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார், எனவே, நீங்களாகவே விலகல் கடிதம் கொடுத்துவிட்டு கிளம்புங்கள்” என்று மிரட்டினார், பள்ளியின் நிர்வாக அதிகாரி அர்ச்சனா.

இந்த விசாரணை மிரட்டல்கள் எல்லாம், அன்பு இறந்துவிட்டதாக தகவல் தெரிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடந்து முடிந்திருக்கிறது, என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

ஜேப்பியாரின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்தும் பு.ஜ.தொ.மு. வின் சுவரொட்டி. (கோப்புப் படம்)

கொத்தடிமைகளுக்கும் கீழான நிலையில் நடத்தப்பட்ட தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டி, பள்ளி நிர்வாகத்தின் ஆண்டைத்தனத்திற்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியானப் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறது, புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம்.

சங்கத்தில் செயல்படும் முன்னணியாளர்களை மிரட்டிப் பணியவைப்பது; தொழிலாளர்கள் மத்தியில் கருங்காலிகளை உருவாக்குவது; சங்கத்தை விட்டு வெளியேறினால் சலுகைகள் உண்டு என ஆசை காட்டுவது; உறுதியுடன் நிர்வாகத்தை எதிர்க்கும் தொழிலாளர்களை பணியிடமாற்றம் செய்வது, போலீசு உதவியுடன் பொய்வழக்குப் போட்டு அலைக்கழிப்பது என பல்வேறு வகைகளில் பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வந்தது, பள்ளி நிர்வாகம். தற்போது, அன்புவின் தற்கொலையைம் தனது பழிவாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டது.

தமக்கு தொடர்ந்து ‘சங்கம், உரிமை’ என்று குடைச்சல் கொடுத்துவரும் வாகன ஓட்டுநர் சங்கத்தின் நடவடிக்கையை முடக்க வேண்டும் என்ற நோக்கில், தொழிலாளர்களுள் சிலரை கருங்காலிகளாக உருவாக்க திட்டமிட்டது நிர்வாகம்.

அத்திட்டத்தையொட்டிதான், அன்புவிடமும் நிர்வாகம் பேசியிருக்கிறது. சங்கத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறும் மிரட்டியிருக்கிறது. மேலும், கியூ பிரிவு போலீசை கூட்டி வந்தும் அன்புவிடம் விசாரித்திருக்கின்றனர். சங்க நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்டிருக்கின்றனர். தாம் அச்சங்கத்தை விட்டு ஓராண்டுக்கு முன்னரே விலகி வந்துவிட்டதாகப் பலமுறை சொல்லியும் மீண்டும் மீண்டும் விசாரணை என்ற பெயரில் அவரை மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கின்றனர். நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, கடந்த ஒரு மாதமாகவே, அவர் பணிக்கு வரும்பொழுதே குடித்துவிட்டுதான் வந்தார் என்றும் இதனை உறுதிபடுத்துகின்றனர், சக தொழிலாளர்கள். இந்தப் பின்னணியில்தான் அன்பு தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்.

‘’ சங்கத்தில் இருப்பது தெரிந்தால் வேலையை விட்டு விரட்டிவிடுவோம் என்ற பள்ளி நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்து சங்கத்திலிருந்து ஓராண்டுக்கு முன்னரே விலகியும் விட்டார். அவரை நேரில் பார்த்து ஒரு வருடங்களுக்குமேல் ஆகிறது; அவரோடு தொலைபேசியில் பேசி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது.’’ என்று அவ்விரு தொழிலாளர்களும் விளக்கமளித்த போதிலும் அதனை காதில் கூட வாங்கிக்கொள்ளாமல், கொலைக்குற்றவாளிகளை போலீசு கையாள்வதைப் போல கதவை அடைத்து வைத்துக்கொண்டு அவர்களை விசாரித்தது, பள்ளி நிர்வாகம்.

இதன் நோக்கம், உளவியல் ரீதியாக அவர்களை பலவீனமடையச் செய்ய வேண்டுமென்பதுதான். ”நிர்வாகம் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல்தான் அன்பு தற்கொலை செய்து கொண்டார்” என்ற உண்மையை சங்கம் அம்பலப்படுத்திவிட்டால், பள்ளியின் பெயர் அடிபட்டு கல்லா கட்டமுடியாமல் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், நயவஞ்சகமான முறையில் சங்கத்தின் மீதே பழியை போட்டது, பள்ளி நிர்வாகம்.

இதற்கிடையில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாரை கைக்குள் போட்டுக்கொண்ட பள்ளிநிர்வாகம்,  போலீசை வைத்தே அன்புவின் மனைவியிடம் பேரம் பேசியது. ”பணம் வாங்கித் தருகிறேன், ஏதாவது வேலை வாங்கித் தருகிறேன், இப்போதைக்கு பிரச்சினை இல்லாமல் ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்துவிடுங்கள்” என்று நைச்சியமாக பேசி அவசரம் அவசரமாக அன்புவின் உடலை அவரது மனைவியிடம் ஒப்படைத்து அவரது ஊருக்கு அனுப்பிவைத்தது, போலீசு.

அன்புவின் இறுதிச் சடங்கில் தொழிலாளர்கள் யாரும் பங்கேற்கக்கூடாதென்று விடுமுறை வழங்கவும் மறுத்துவிட்டது பள்ளி நிர்வாகம். சற்றுநேரம் வரையில் தன்னோடு சேர்ந்து பணியாற்றிய அன்புவை இழந்துவிட்ட துயரத்தில் அவரது முகத்தையாவது பார்த்துவிடவேண்டுமென்ற ஆற்றாண்மையில் மருத்துவமணையில் குவிந்தனர் சக தொழிலாளர்கள்.

பிணவறையில் கிடத்தப்பட்டிருந்த அன்புவின் சடலத்தைக்கூட சக தொழிலாளர்கள் பார்க்கவிடாமல் விரட்டியடித்தது, போலீசு. “உன் மீதுதான் சந்தேகமாக இருக்கிறது”, ”உன் அட்ரசைக் கொடு”, ”உன் செல்போனைக் கொடு”  என  அவர்களைப் பயமுறுத்தி விரட்டியது. பள்ளி நிர்வாகத்தின் அப்பட்டமான அடியாளாகவே செயல்பட்டது, பள்ளிக்கரணை போலீசு. அக்கம்பக்கமாக வசித்து வரும் அவரது உறவினர்களுக்குக் கூடத் தெரியாத வகையில் பள்ளி நிர்வாகம் ஏவிய வேலையை கச்சிதமாக முடித்தும் கொடுத்தார் போலீசு இன்ஸ்பெக்டர் சிவக்குமார்.

வேளச்சேரி பள்ளிக் கிளையின் முதல்வரும் போக்குவரத்து நிர்வாகியும், ஓட்டுனர்கள் தெய்வீகன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய இருவரையும் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். விசாரணை என்ற பெயரில் அழைத்து, ”பிரச்சினை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்றும் இல்லையென்றால் சிறைக்குத்தான் செல்லவேண்டியதுவரும்” என்றும் கூறி மிரட்டியுள்ளனர். ”குற்றத்தை ஒப்புக்கொண்டு தாமாக பணியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதி தரும்வரையில் வெளியில் விடப்போவதில்லை” என்று கூறி அறையின் கதவை மூடினர். இயற்கை உபாதைகளுக்காகக்கூட அவர்கள் வெளியே செல்ல முடியாதவாறு, காவல் காத்தனர்.

பள்ளிநிர்வாகத்தால் சட்டவிரோதமான முறையில் தாம் சிறைவைக்கப்பட்டிருக்கும் தகவலை  குறுஞ்செய்தியாக தமது குடும்பத்தினருக்கும், சங்க முன்னணியாளர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

வாகன ஓட்டுநர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அப்போதே எதிர்த்திருக்கிறது, சங்கம். (கோப்புப் படம்)

இதனைத்தொடர்ந்து, ”பள்ளி நிர்வாகம் கடத்தி சென்ற தனது கணவரை மீட்டுத் தருமாறு” வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார் தெய்வீகனின் மனைவி வெண்ணிலா. புகாரைத் தொடர்ந்து வெண்ணிலாவுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றது, வேளச்சேரி போலீசு.

அன்பு தற்கொலை செய்துகொண்டது பள்ளிக்கரணை பள்ளிக் கிளையில். விசாரணை நடப்பது வேளச்சேரி கிளையில். பள்ளிக்கரணை போலீசு என்றால், பிரச்சினை இல்லை. இது வேளச்சேரி போலீசு. இதனை சற்றும் எதிர்பார்க்காத, அர்ச்சனாவும் பள்ளி முதல்வரும், அங்கிருந்த அனைத்து ஊழியர்களையும் பின்வாசல் வழியாக 5 நிமிடத்தில் அவசரமாக வெளியேற்றிவிட்டு, முன் கேட்டைப் பூட்டிவிட்டு போலீசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ‘தங்களது தொழிலாளர்களிடம் வெறுமனே விசாரித்துக் கொண்டிருப்பதாக’ தடாலடியாக கூசாமல் புளுகினார், பள்ளி நிர்வாகி அர்ச்சனா.

”நீங்கள் அடைத்து வைத்துள்ளதாக புகார் வந்துள்ளது. நீங்கள் 5 மணிக்கு இன்ஸ்பெக்டரை வந்து பாருங்கள். இவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறோம்.” என இருவரையும் அழைத்துச் சென்றது போலீசு. ஸ்டேஷனுக்கு வந்ததும் இருவரையும் தாங்கள் பத்திரமாக இருப்பதாக எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுமாறு கூறியது.

நடந்த சம்பவத்தை பதிவு செய்யும்பொழுது, பள்ளி நிர்வாகத்தால் தெய்வீகன் மிரட்டப்பட்டார் என்றோ, சட்டவிரோதமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்றோ பதிவு செய்ய மறுத்தது, வேளச்சேரி போலீசு.

‘’புருசனை காணோம் னு கம்ப்ளைன்ட் கொடுத்த, உன் புருசனை கூட்டி வந்திட்டோம்ல.. அப்புறமென்ன’’ என்று எகத்தாளமாக பதிலளித்தார் ஒரு போலீசு ஏட்டு. புகார் அளித்தவர் என்ற அடிப்படையில் தெய்வீகனின் மனைவியிடம் கணவரை மீட்டுக் கொடுத்துவிட்டதாகவும் கூறி அவர்களே எழுதிய கடிதமொன்றில் கையொப்பம் வாங்கியுள்ளனர். அக்கடிதத்தின் நகலைக் கேட்டதற்குக் கொடுக்கவுமில்லை. ”அய்யாகிட்ட பேசிக்கோ” என்றிருக்கிறார், அந்த ஏட்டு.

ஏட்டு சொன்ன ‘அய்யா’வான, வேளச்சேரி இன்ஸ்பெக்டர் வேலுவிடம் தொலைபேசியில் முறையிட்டபோது, ‘’நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்’’ என்று வசனம்தான் பேசினாரேயன்றி, விசயத்துக்கு வரவில்லை. “ஸ்டேஷனுக்கு வந்ததும் பேசுகிறேன்” என்றார்.

இதனைத்தொடர்ந்து, அன்று இரவு சங்கத்தின் ஆலோசகரும், பாதிக்கப்பட்ட தெய்வீகனும் ஸ்டேசனுக்கு சென்று அவரது மனைவியிடமிருந்து எழுதி வாங்கிய கடிதத்தின் நகலைக் கேட்டும், தம்மை சட்டவிரோதமாக கடத்தி மிரட்டிய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இன்ஸ்பெக்டர் வேலுவிடம் முறையிட்டனர்.

ஸ்ட்ரிக்டு போலீசான இன்ஸ்.வேலு, ”உங்களை பூட்டியெல்லாம் வக்கலைன்னு ஸ்கூல்ல சொல்றாங்க… நீங்க பொய் சொல்றீங்க” என்று தெய்வீகனிடமே திருப்பினார். சங்க ஆலோசகர் உடனிருந்து, சம்பவத்தை விளக்க முற்பட்டபோது, ‘’ நீங்க இப்போ அங்கே வேலை செய்யலைல.. நீங்க வெளியில போங்க’’ என்று எகிறினார், இன்ஸ்.வேலு.

மேலும், ”ஒரு நிர்வாகத்தின் மேல் உங்கள் இஷ்டத்துக்குப் புகார் கொடுப்பீங்களா. அதுக்கு நாங்க அப்படியே வேலை செய்வோமா?” என ஆத்திரம் தலைக்கேற கத்தினார்.

சொந்தப் பிரச்சினைகளுக்காக மட்டுமல்ல; பொதுப்பிரச்சினைக்காகவும் வீதிக்கு வந்திருக்கிறது, சங்கம். (கோப்புப் படம்)

”கொடுத்தப் புகாருக்கு ஒப்புகைச் சீட்டும் கொடுக்க முடியாது; தெய்வீகன் மனைவியிடம் போலீசே எழுதி வாங்கிய கடிதத்தின் நகலையும் வழங்க முடியாது; முடிந்ததைப் பார்த்துக்கொள்” என்று பேட்டை ரவுடியைப் போல மிரட்டி அனுப்பியது வேளச்சேரி போலீசு.

திரில்லர் சினிமா ஒன்றின் திரைக்கதையைப் போல, திகிலும் திருப்பங்களும் நிறைந்திருக்கிறது, அன்புவின் தற்கொலைச் சம்பவம். பள்ளி நிர்வாகத்தோடு போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு நாடகமாடுகிறது என்பது அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. எனினும், இதனைத் தாண்டியும் சில கேள்விகள் உள்ளன.

1) அன்பு ஏன் பள்ளிக்கூடத்தில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

2) ஓராண்டுக்கு முன்னரே, சங்கத்திலிருந்து விலகிய ஒருவரிடம் சங்க நடவடிக்கைகள் குறித்து கியூ பிரிவு போலீசை வைத்து விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

3) யார் கொடுத்த புகாரின் பேரில் அல்லது யாருடைய தூண்டுதலில் பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர்  சிவக்குமாரும் கியூ பிரிவு போலிசும் அன்புவிடம் விசாரணை நடத்தினர்  ?

4) அன்பு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக செய்தியறிந்த அடுத்த அரை மணிநேரத்திற்குள் அனைத்துத் தொழிலாளர்களிடமும், ‘’இதை வெளியில் சொன்னால், வேலை கிடையாது’’ என்று ஏன் சத்தியம் வாங்க வேண்டும்?

5) சங்கத்தில் சேரச்சொல்லி அன்புவை மிரட்டியதால்தான் அவர் இறந்துவிட்டார் என்றால், அதனை வெளிப்படையாகவே அறிவித்திருக்கலாமே? அவ்வாறே, போலீசிடமும் புகார் கொடுத்திருக்கலாமே? மடியில் கனமில்லாத பள்ளி நிர்வாகம் தற்கொலை செய்தியையே மூடி மறைக்க மெனக்கெட்டது ஏன்?

6) பள்ளிக்கரணை போலீசும், வேளச்சேரி போலீசும் சொல்லி வைத்தாற் போல அப்பட்டமாக பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதற்குரிய பின்னணி என்ன?

7) அன்புவின் ஆறு மாத அலைபேசி தொடர்பு பட்டியலையும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்ற ஆய்வும் ஏன் இதுவரை நடத்தப்படவில்லை?

8) பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி போலீசு இன்ஸ்பெக்டர்களும் மற்றும் கியூ பிரிவு போலீசும் தம் சொந்த வழக்காக எடுத்துக்கொண்டு இதில் இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?

என்பது போன்ற பல்வேறு கேள்விகளை சந்தேகமாக எழுப்புகின்றனர், சக தொழிலாளர்கள்.

சங்கத்தைப் பழிவாங்கும் நோக்கில், சங்க முன்னணியாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதற்காக நிர்வாகம் வகுத்த திட்டத்திற்கு அன்பு உடன்பட மறுத்ததாகவும், அவரைத் தொடர்ந்து டார்ச்சர் செய்ததாலேயே அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக பகிரங்கமாக நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் சக தொழிலாளர்கள்.

சாராய ரவுடி – ‘கல்வி தந்தை’, ஜேப்பியார் !

இவற்றையெல்லாம், வாகன ஓட்டுநர் சங்கம் அம்பலப்படுத்திவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், போலீசை கைக்குள் போட்டுக்கொண்டு, சங்க முன்னணியாளர்கள் மீதே கொலைப் பழிசுமத்தி கூட்டு நாடகமாடுகிறது, பள்ளி நிர்வாகம். என்கின்றனர், இத்தொழிலாளர்கள்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது இடது கரமாக வலம் வந்த முன்னாள் சாராய வியாபாரியும்  இந்நாள் கல்வி வியாபாரியுமான ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலை வளாகத்துக்குள்ளேயே, அவரை எதிர்த்து சங்கக்கொடி ஏற்றியவர்கள் இந்த சங்கத்துக்காரர்கள்.

கருங்காலிகளைக் கொண்டு கொலைவெறித்தாக்குதல் நடத்தியபோதும் அஞ்சாதவர்கள். வேலையை விட்டு துரத்தினாலும் அதற்கு அசராதவர்கள். தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டு விரக்தி கொள்ளாமல் மன உறுதியோடு தொடர்ந்து எதிர்த்து நிற்பவர்கள்.

வாகன ஓட்டுநர்கள் என்று பணியமர்த்திக் கொண்டு, தோட்ட பராமரிப்பு முதல் கக்கூசு கழுவுவது வரையில் எந்த வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்ய வேண்டுமென்று பழக்கப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் இன்று, தொழிலாளர் சட்டம், தொழிலாளர் உரிமை என்று பேசுவதை சகித்துக்கொள்ள முடியாமல் போனதன் வெளிப்பாடுகள் இவை.

பள்ளி நிர்வாகம் – போலீசின் மூர்க்கத்தனமான அடக்குமுறைக்கு இதைத்தாண்டி வேறு காரணம் இருக்க முடியுமா, என்ன?

– புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம், சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க