மார்பகப் புற்றுநோய் - கீமோதெரபி தேவையில்லை
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு - மாதிரிப் படம் - நன்றி - தின்க்ஸ்டாக்

புற்றுநோய் என்பது நோயாளிகளின் வாழ்வை மட்டுமல்ல, அவர்களது மனதையும் சுக்குநூறாக நொறுக்கவல்லது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் அவர்களின் உலகையே அடியோடு நொறுக்கிவிடுகிறது. மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையான ’கீமோதெரபி’ மற்றும்  அதன் பக்க விளைவுகளும் அவர்களை அச்சுறுத்துகின்றன.

உடலை ரணப்படுத்துவதோடு முடி உதிர்தல், வாந்தி போன்ற பக்கவிளைவுகளால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் கீமோதெரபி சிகிச்சை முறையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு  70% பேருக்கு இருப்பதாக கடந்த ஞாயிறு (ஜூன் 3, 2018) அன்று வெளியான ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய அந்த ஆய்வின் பெயர் ‘டெய்லர்க்ஸ்’ (Tailorx) ஆய்வு.

புற்று நோய்க்கான சிகிச்சைமுறைகள் மற்றும் அதன் பக்கவிளைவுகளின் துன்பத்திலிருந்து நோயாளிகளை விடுவிக்க எடுக்கப்பட்ட விரிவான முயற்சியின் ஒரு பகுதியே இந்த டெய்லர்க்ஸ் ஆய்வு.

இந்த ஆய்வைப் பொறுத்தவரையில் அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் ஆயிரம் இடங்களிலிருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வு ”ஆன்கோடைப் டி.எக்ஸ்” (Oncotype DX) என்ற ஒரு வகை சோதனையை அடிப்படையாகக் கொண்டது. இந்த சோதனையில், நோயாளியின் உடலின் திசுக்களில் இருந்து 21 மரபணுக்கள் எடுக்கப்பட்டு, அவை எந்த அளவு செயல்துடிப்போடு இயங்குகின்றன என்பதை சோதித்தறிவர்.

கடந்த ஜூன் 1, 2018 முதல் ஜூன் 05,2018 வரை அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்று வரும் ”புற்றுநோய் மருத்துவத்துக்கான அமெரிக்க சமூகம்- 2018” (American Society of Clinical Oncology – 2018) சந்திப்பில், கடந்த ஞாயிற்றுக் கிழமை (03-06-2018) டெய்லர்க்ஸ் ஆய்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் முடிவுகள், 70% மார்பகப் புற்றுநோய் நோயாளிகளால் கீமோதெரபியைத் தவிர்க்கமுடியும் என்று குறிப்பிடுகின்றன.

எட்டு ஆண்டுகளாக நடத்தபட்ட டெய்லர்க்ஸ் ஆய்வில் எடுக்கப்படும் 21 மரபணு ஆய்வினால் பொது வகை மார்பகப் புற்றுநோயின் மீள்வருகை குறித்து முன்னனுமானிக்க முடியும்.

ஈஸ்டிரோஜன் மற்றும் ப்ரோஜஸ்டீரோன் ஆகிய ஹார்மோன் ஏற்பானின் இருப்பு, நிணநீர் முடிச்சுகளில் புற்று நோய்க் கட்டி இல்லாமலிருப்பது, ‘HER2’ வகைப் புரதம் இல்லாமலிருப்பது, கட்டியின் அளவு 4 செ.மீ. அளவிற்கும் குறைவாக இருப்பது ஆகியவை இந்த ஆய்வில் சோதிக்கப்படுகின்றன. ஹார்மோன் ஏற்பானின் இருப்பு, ஹார்மோன்தெரபி மூலம் புற்று நோயை சரி செய்வதற்கு வசதி ஏற்படுத்தித் தரும்.

மார்பகப் புற்றுநோய் மருத்துவர்
கேத்தி அல்பேன்

இந்த சிறப்புமிக்க ஆய்வின் முடிவுகளைக் கொண்டு சுமார் 70% மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு கீமோதெரபியை தவிர்க்கமுடியும் என்கிறார், இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், அமெரிக்காவின் லயோலா பல்கலைக்கழக மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவருமான கேத்தி அல்பேன்.

இந்த ஆய்வின் அடிப்படை சோதனையான ”ஆன்கோடைப் டி.எக்ஸ்”  (Oncotype DX)-ன் அடிப்படையில் புற்றுநோயின் மீள்வருகைக்கான மதிப்பு பூச்சியத்திலிருந்து நூறு வரை கொடுக்கப்படும். மதிப்பெண் அதிகரிக்க அதிகரிக்க, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அச்சமயத்தில் புற்று நோயின் மீள்வருகைக்கான அபாயத்தை கீமோதெரபி குறைக்கிறது.

இந்த அடிப்படை சோதனையில் பெறப்படும் மதிப்பெண் நடுமதிப்பில் அமையும் பட்சத்தில் அது மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தது. பழைய ஆய்வின் படி 10-க்கு குறைவான மதிப்பெண் கொண்ட பெண்களுக்கு கீமோதெரப்பி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது. 25-க்கும் மேல் மதிப்பெண் இருக்கும் பட்சத்தில்தான், கீமோதெரப்பி நலன் பயக்கக் கூடியதாக இருந்தது. மதிப்பெண் 11-க்கும் 25-க்கும் இடையில் உள்ளவர்களுக்கு, கீமோதெரப்பி அவசியம் கொடுக்கப்பட வேண்டுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. தற்போது புதிய ஆய்வில் இந்த நடுமதிப்பு மதிப்பெண் கொண்ட பெண்களையே பெரும்பான்மையாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அதனடிப்படையிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டில்லியில் உள்ள இந்தரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையால் ’’ஆன்கோடைப் டிஎக்ஸ்’’ சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளில் 30% முதல் 40% வரையிலான நோயாளிகளின் மதிப்பெண், 11-க்கும் 25-க்கும் இடையிலேயே அமைந்துள்ளது என்கிறார் அதன் புற்றுநோயியல் மருத்துவர் ரமேஷ் சரின்.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நீலம் குப்தா – படம் : நன்றி லின்சே அடாரியோ – நியூயார்க் டைம்ஸ்

மார்பகப் புற்றுநோய் இந்தியப் பெண்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. ஒரு இலட்சம் பெண்களுக்கு 25.8 பேர் என்ற கணக்கில் இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. ஒரு சில வளர்ந்த நாடுகளை விட இது குறைவுதான் என்றபோதிலும், மார்பகப் புற்றுநோயினால் ஏற்படும் மரண விகிதம் (ஒரு இலட்சம் பெண்களுக்கு 12.7 பேர்) ஒப்பீட்டளவில் மேற்குலக நாடுகளுக்கு சரி சமமாக உள்ளது. இதற்கு முக்க்கியக் காரணம், காலம் தாழ்ந்து புற்றுநோயைக் கண்டுபிடிப்பதுதான்.

இந்தியாவில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதன் அதிகரிப்பு விகிதம் 0.46% முதல் 2.56% வரையில் இருந்து வருகிறது. ”ஆன்கோடைப் டி.எக்ஸ்” சோதனை செய்வதற்கான வசதிகள் இந்தியாவில் எங்கும் இல்லை. இதனாலேயே, சோதனைக்காக மாதிரிகளை வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டியது அவசியமாகிறது. இது ஒரு அதிகக் கட்டணம் கொண்ட சோதனை. ஒருமுறை சோதனை செய்ய ரூ2.5 இலட்சம் முதல் செலவு செய்யப்பட வேண்டியது இருக்கிறது.

இந்தியாவில் புற்றுநோய் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு என்றுமே எட்டாக்கனியாகவே உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் பல வந்தாலும், அது பணக்காரர்களின் ஆயுளை நீட்டிப்பதற்காகவேதான் பயன்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் நோய்களின் கோரப் பிடியிலிருந்து படிப்படியாக அவனை மருத்துவ அறிவியலாளர்கள் விடுவித்துக் கொண்டிருக்கின்றனர்.  முதலாளித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து அறிவியலை விடுவித்து அதனை சமூகம் முழுவதற்குமானதாக மாற்ற வேண்டிய கடமை நம் அனைவரின் முன்னும் காத்திருக்கிறது.

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க