மூக வலைத்தளங்களில் ஒரு பெண்ணையோ, ஆணையோ பழிவாங்கும் விதமாக அவருடைய ஆபாசப்படங்களைப் பகிர்வதைத் தடுப்பது குறித்து ஃபேஸ்புக் பாதுகாப்பு விதிமுறைகளுக்கான அலுவலகரீதியான முகநூல் பக்கத்தில் அந்நிறுவனம் கூறியிருக்கும் தீர்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தமது புகைபடங்களில் எவையெல்லாம் சமூகவலைத்தளங்களில் மேலும் பகிரப்படாமல் தடுக்கப்பட வேண்டுமோ (அது அந்தரங்க, நிர்வாணப் படமானாலும்) அவற்றை முகநூல் நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்தால் முகநூல், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் போன்ற இணையதளங்களில் அவை பரவாமல் தடுத்துவிடுவோம் என்கிறது ஃபேஸ்புக். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.

இது குறித்து முகநூல் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஆண்டிகோன் டேவிஸ் கூறுகையில் ”நாங்கள் எங்கள் பயனாளர்களின், அந்தரங்கத் தகவல் பாதுகாப்பு வசதிக்காக சில நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம். அதன்படி அதிபாதுகாப்பு வளையங்கள் கொண்ட நிறுவனங்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் தகவல்கள் எங்களுடைய சர்வரில் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்படும்” என்றார்.

சர்வரில் பயனர்களின் அந்தரங்கப் புகைப்படங்களைப் ’பாதுகாக்குமாம்’ ஃபேஸ்புக். கேப்பையில் நெய் வடியும் கதைதான் இது.

இவ்வாறு செய்வதன் மூலம் ஒருவர் முகநூலின் மீது தனது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வைத்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஆனால் முகநூலின் உண்மையான முகம் எப்படியிருக்கிறது? தன்னுடைய 5 கோடி வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல்களை ’கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற நிறுவனத்திடம் அளித்த  செய்தி அம்பலப்பட்டு அமெரிக்கப் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்தது. இதற்குப் பிறகுதான் மார்க் ஸூக்கர்பெர்க் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, இங்கு பிரச்சினையே ஃபேஸ்புக்கும், அதன் வணிக நலனும் எனும்போது இடையில் அவர்கள் தரும் பாதுகாப்பு வளையங்களால் என்ன பயன்?

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஆபாசப் படங்கள் வெளியிடுவதைத் தடுக்கும் ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்ட ஃபேஸ்புக், இப்போது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் தனது திட்டதை விரிவுபடுத்தியுள்ளது. பிரிட்டனில் இதற்காக ‘ரிவென்ஜ் போர்ன் ஹெல்ப்லைன்’ என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்ட நபர் ’ரிவென்ஜ் போர்ன் ஹெல்ப்லைன்’ நிறுவனத்தை அணுகி முறையிடும் போது இந்த நிறுவனம் உடனடியாக ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவரின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும். அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபருக்கு பிரத்தியேகமான ஒரு ரகசிய ’லிங்க்’-ஐ அனுப்பி வைக்கும். அதில் பாதிக்கப்பட்டவர் தடுக்கப்பட வேண்டிய தனது அந்தரங்க புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். ஃபேஸ்புக் தகவல் பாதுகாப்புத் துறையில் உள்ள முக்கியமான ஐந்து நபர்களால் மட்டுமே அப்புகைப்படம் நிர்வகிக்கப்படும். அதன் பிறகு அந்தப் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ’பத்திரமாக’, சர்வரில்  சேமித்து வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்ட அந்த நபரின் ஆபாசப் புகைப்படத்தை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், அல்லது மெசெஞ்சரில் பதிவேற்றம் செய்ய முயற்சிக்கும் போது எளிதில் தடுத்து விடலாம் என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

ஆனால் நடைமுறையில் அதே புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, வேறு பெயர்களில் பதிவேற்றம் செய்யப்படும் போது ஃபேஸ்புக் நிறுவனத்தாலும் அதன் மென்பொருளாலும் அதைத் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. அதை விட முக்கியமாக, மற்றுமொரு ’கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’-விடம் அந்த பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் போகாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக ஃபேஸ்புக் கவலைப்படுகிறது, அதற்காக ஏதேனும் ஒரு வழிமுறையை ஏற்படுத்துகிறது என்பதை உண்மை என்றே நம்புவோம். ஆனால் பயனர்களின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் மூன்றாவது தரப்பிற்கு கொண்டு போய்ச் சேர்த்தது தெரியாமல் செய்த தவறு என்று பாவ மன்னிப்பு கோரியது ஃபேஸ்புக். ஆனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வணிகநலனும் அதன் நடத்தை விதிகளுமே ஃபேஸ்புக்கின் செயல்பாட்டை வடிவமைக்கும் போது இறுதியில் அந்தரங்க உரிமை என்பதற்கு என்ன மரியாதை இருக்கும்? பேஸ்புக்கின் அறிவிப்பில் என்ன நம்பகத்தன்மை இருக்கும்?

படக் கலைஞரான ரிச்சர்டு ஹெச். பெர்ரி  தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கையே அழித்து விட்டு “குற்றங்களோடு பயணிக்கும் ஃபேஸ்புக் தனது பயனர்கள் நலன் குறித்து அக்கறைப்பட்டதே இல்லை” என்று கூறியது தான் நினைவுக்கு வருகிறது.

– வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க :
Send us your nudes: Facebook’s bizarre strategy for fighting revenge porn

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க