ஜி.டி.பி மாயை : மதிப்புக் கூட்டலும் மதிப்பு கைப்பற்றலும் – ஜான் ஸ்மித்

பாகம் :4

ஜான் ஸ்மித் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல், அரசியல் பொருளாதாரம், மனித உரிமைகள், இனப்படுகொலை துறைகளின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஏகாதிபத்தியமும் உலகமயமாக்கலும் பற்றிய அவரது எதிர்வரும் புத்தகத்தை மன்த்லி ரிவியூ பிரஸ் வெளியிடவிருக்கிறது.

ஒரு கோப்பை காஃபி

லகளாவிய சரக்கு வர்த்தகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்றாவது முத்திரைப் பொருளாக ஒரு கோப்பை காஃபியை எடுத்துக் கொள்வோம். உலகளாவிய உற்பத்தி நடைமுறை பற்றிய இந்த சித்திரத்தை அது முழுமையடையச் செய்கிறது. கையில் ஒரு கோப்பை காஃபியுடன் இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கலாம். (இதைப் படித்த அதிர்ச்சியில் காஃபியை உங்கள் சட்டையிலோ, ஸ்மார்ட் ஃபோனிலோ சிந்தி விடாதீர்கள்!).

coffee farmers
காஃபியை பயிரிட்டு அறுவடை செய்பவர்கள் இறுதி விற்பனை விலையில் 2 சதவீதத்தை விடக் குறைவாகவே பெறுகின்றனர்

பிற பொருட்களுடன் ஒப்பிடும் போது காஃபிக்கு குறிப்பிடத்தக்க சிறப்புத் தன்மை ஒன்று உள்ளது. பெரிய அளவில் சர்வதேச வர்த்தகம் செய்யப்படும் விவசாயப் பொருட்களில் காஃபி மட்டும்தான் – ஹவாயில் வளர்க்கப்படும் மிகச் சிறிய அளவைத் தவிர – எந்த ஏகாதிபத்திய நாடுகளிலும் விளைவதில்லை. எனவே, பருத்தி, சர்க்கரை போன்ற பொருட்களுக்கு ஏகாதிபத்திய நாடுகள் வழங்கும் வர்த்தகத்தை திசைதிருப்பும் மானியங்களால் காஃபிக்கு வழங்கப்படுவதில்லை, எனவே அதன் சந்தைவிலை இதனால் பாதிக்கப்படுவதில்லை.

இருப்பினும் காஃபி விவசாயிகளின் வாழ்க்கை நிலைமை பிற விவசாயப் பண்டங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் அளவுக்கு மோசமாக அல்லது அவர்களை விட மோசமாகத்தான் உள்ளது. உலகத்தின் காஃபியில் பெரும்பகுதி சிறிய குடும்பப் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றது. சுமார் 2.5 கோடி விவசாய குடும்பங்கள் காஃபி விவசாயத்தைச் சார்ந்து உள்ளனர். அதே நேரம் இரண்டு அமெரிக்க மற்றும் இரண்டு ஐரோப்பிய நிறுவனங்கள் (சாரா லீ, கிராஃப்ட், நெஸ்லே, ப்ராக்டர் & கேம்பிள்) உலக காஃபி வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. காஃபியை பயிரிட்டு அறுவடை செய்பவர்கள் இறுதி விற்பனை விலையில் 2 சதவீதத்தை விடக் குறைவாகவே பெறுகின்றனர்.18 சர்வதேச காஃபி நிறுவனத்தின் தரவுகளின் படி 2009-ம் ஆண்டு காஃபி வறுத்தல், சந்தைப்படுத்தல், விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் உலகின் ஒன்பது முக்கிய காஃபி இறக்குமதி செய்யும் நாடுகளின் ஜி.டி.பி-ல் $3,100 கோடி சேர்க்கப்பட்டது. இது, காஃபி உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளின் மொத்த ஏற்றுமதி வருமானத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகம்.

பிற சர்வதேச வர்த்தக பண்டங்களைப் போலவே, ஒரு காஃபி கோப்பைக்கான விலையில் காஃபி அருந்தும் நாடுகளில் கணக்கிடப்படும் மதிப்புக் கூடுதல் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. அவற்றில் மிகப் பிரமிக்கத்தக்க உதாரணமாக பிரிட்டனை எடுத்துக் கொள்ளலாம். 1975-க்கும் 1989-க்கும் இடையே காஃபியின் இறக்குமதி விலை சில்லறை விற்பனை விலையில் சராசரியாக 43 சதவீதம் இருந்தது. 2000-க்கும் 2009-க்கும் இடையே இந்த சராசரி 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.19

branded coffee
ஸ்டார்பக்ஸின், அல்லது கஃபே நீரோவின் லாபத்தின் ஊற்றுவாய் எது?

எவ்வாறு ஆப்பிளின் லாபத்தில் ஒரு பைசா கூட சீன தொழிலாளர்களிடமிருந்து வரவில்லை என்றும், எவ்வாறு H&M-ன் லாபத்துக்கு அதீதமாக சுரண்டப்படும் வங்கதேச தொழிலாளர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் பொருளியலாளர்களும், கணக்கியலாளர்களும் கூறுகின்றனரோ, அதைப் போல ஸ்டார்பக்ஸின், அல்லது கஃபே நீரோவின் லாபங்கள் அவற்றின் சொந்த சந்தைப்படுத்தல், வணிக முத்திரை நடவடிக்கைகள் மற்றும் சில்லறை விற்பனை நிபுணத்துவத்திலிருந்து எழுவது போல தோன்றுகிறது. அதில் ஒரு பைசா கூட கையால், “பசுமையான காஃபி கொட்டைகளை” பறிக்கும் காஃபி விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டது இல்லை என்கின்றன அவை. நமது உலகளாவிய பரிமாற்ற பண்டங்களுக்கான மூன்று உதாரணங்களிலும், மொத்த லாபம், அதாவது அவற்றின் உற்பத்திச் செலவுக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையேயான வேறுபாடு 50 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. அது ஏகாதிபத்திய நிறுவனங்களின் லாபங்களை அதிகப்படுத்திக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய நாடுகளின் ஜி.டி.பி-யையும் அதிகரித்துக் காட்டுகின்றது.20

சீனா மட்டுமில்லை…

ஸ்மார்ட் ஃபோன்கள், சட்டைகள், காஃபி கோப்பைகள் ஆகியவை பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்துபட்ட மாற்றங்களை தொகுத்து பார்ப்பதோடு இந்தப் பகுதியை நிறைவு செய்கிறோம்.

உற்பத்திப் பொருட்களின் முக்கியமான ஏற்றுமதி நாடான சீனாவின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், 1990-க்கும் 2004-க்கும் இடையே இன்னும் 40 “வளரும் நாடுகளின்” ஏற்றுமதி வளர்ச்சியில் உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தது. அவற்றின் மொத்த மக்கள்தொகை சீனாவின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு. அவற்றில் மூன்றாம் உலகநாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 76 சதவீதத்தைக் கொண்ட, 10 அதிக மக்கள் தொகை கொண்டுள்ள நாடுகள் உள்ளிட்ட 23 நாடுகள், 2004-ம் ஆண்டு தமது பாதிக்கும் அதிகமான ஏற்றுமதி வருவாயை ஆலை உற்பத்திப் பொருட்கள் மூலம் ஈட்டின21

workers
1990-க்கும் 2004-க்கும் இடையே இன்னும் 40 “வளரும் நாடுகளின்” ஏற்றுமதி வளர்ச்சியில் உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தது.

இவற்றுடன் கூடவே, மேலும் பல சிறிய நாடுகள், தமது பொருளாதாரங்களை உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியை சார்ந்து இருக்கும்படி மாற்றும் சாகச முயற்சியில் இறங்கின. அதற்காக, அவற்றின் தேசிய பொருளாதாரங்களில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கும் உற்பத்தி சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தமது நாட்டில் அனுமதித்துள்ளன. மூன்றாம் உலக நாடுகளில் தொழில்துறை வளர்ச்சி மிகவும் சமனற்ற வகையில் பரவியுள்ளது என்பது உண்மைதான். ஆனால், அது மிகவும் பரவலாக உள்ளது என்பது ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களின் (EPZ-கள்) எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பல மடங்கு வளர்ச்சியின் மூலம் தெரியவருகிறது. புள்ளிவிபரங்கள் கிடைக்கும் கடைசி ஆண்டான 2006-ஐப் பொறுத்தவரை, 130 நாடுகளில் உள்ள 2,700 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக 6.3 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைகளில் நுகர்வதற்கான பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். 23

பல பத்து கோடி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நிலத்திலிருந்து அல்லது பாதுகாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து “விடுவித்ததன்” மூலம், புதிய தாராளவாத உலகமயமாக்கம் மூன்றாம் உலக நாடுகளில் அதீத சுரண்டலுக்குள்ளாகத் தயாரான உழைப்பாளர்களின் எண்ணிக்கையை பெரும் அளவில் விரிவுபடுத்தியிருக்கிறது. இதைப் பயன்படுத்தி அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நிறுவனங்கள் தமது உற்பத்தியை குறைகூலி நாடுகளுக்கு பெருமளவில் இடம் மாற்றியிருக்கின்றனர். அது அந்நிய நேரடி முதலீடு (FDI) வழியிலாகவோ, அல்லது நேரடி தொடர்பில்லாத வழங்கல் நிறுவனங்களுடன் கைக்கெட்டிய உறவின் மூலமாகவோ செய்யப்படுகிறது. இதன் விளைவாக தோன்றிய அயலக உற்பத்தி நிகழ்முறை ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரங்களை மாற்றியமைத்திருக்கின்றது; அவற்றின் ஜி.டி.பி-ல் உற்பத்தித் துறையின் பங்களிப்பு குறைவதை வேகப்படுத்தியிருக்கின்றது. சர்வதேச உழைக்கும் வர்க்கத்தை மிக முக்கியத்துவம் வாய்த்ததாக உருமாற்றியிருக்கிறது :

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் உலக நாடுகளின் தொழில்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கை “தொழில்மயமான நாடுகளின்” தொழிலாளர் எண்ணிக்கைக்கு சமமாக இருந்தது. இப்போது உலகத் தொழிலாளர் படையில் 80 சதவீதம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். “தற்போதைய உலகமயமாக்கலின் அதிகக் கவனத்தைக் கவரும் ஒரு தன்மை பல உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளின் உழைப்பாளர் படையில் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களின் பங்கு மேலும் மேலும் அதிகரித்து வருவது ஆகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், உலகின் தொழில்துறை உற்பத்தியின் ஈர்ப்பு மையம் உலகப் பொருளாதாரத்தின் வடக்கிலிருந்து தெற்குக்கு நகர்ந்திருக்கிறது.” என்று கேரி கெரஃபி கூறுகிறார்.24

workers
130 நாடுகளில் உள்ள 2,700 ஏற்றுமதி உற்பத்தி மண்டலங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக 6.3 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைகளில் நுகர்வதற்கான பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்

2004-ம் ஆண்டு மன்த்லி ரிவியூ ஆசிரியர்கள் கூறியது போல, “புவியியல் ரீதியாக நகர முடியாததாகவும், அதனால் ஒன்று கலக்க முடியாததாகவும் உள்ள தொழிலாளர் திரள்கள் மேலும் மேலும் வலி மிகுந்த போட்டியில் ஈடுபடும்படி பன்னாட்டு மூலதனம் செயல்படுகிறது. அதற்கு சர்வதேச சமனற்ற நிலைகளை ஆதாயமாகக் பயன்படுத்திக் கொள்கிறது”25 இந்த “உலகளாவிய சமநிலையின்மை”க்கு மையமாக இருப்பது, எல்லை தாண்டி சுதந்திரமாக தொழிலாளர்கள் நகர்வற்கு போடப்பட்டுள்ள தடைகள் ஆகும். ஏகாதிபத்திய நாடுகளின் நிரந்தரமாக பராமரித்து வரும் பெரும் ராணுவ, அரசியல் கட்டமைப்பு மூலம் இது அமல்படுத்தப்படுகிறது. இனவாதம் மற்றும் தேசிய ஒடுக்குமுறைக்கான பரந்துபட்ட கட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் இந்த அணிதிரட்டல் உள்ளது. இந்தச் சமநிலையின்மைகள் தொழிலாளர்கள் ஒரு சர்வதேச இயக்கத்தில் இணைவதற்கு தடை போடுகின்றன. மேலும் இந்த நிலைமை மூன்றாம் உலக நாடுகளில் பெருமளவு அதிகரித்துள்ள உழைப்பாளர் பட்டாளத்தை பயன்படுத்தி சர்வதேச கூலி வேறுபாடுகளை பிரமிக்கத்தக்க அளவு அதிகரிக்கச் செய்துள்ளது. அனைத்து விதமான பிற சர்வதேச சந்தைகளில் விலை வித்தியாசங்களை விட இது மிக அதிகமாக உள்ளது.

இதன் விளைவாக ஏகாதிபத்திய மற்றும் மூன்றாம் உலக பொருளாதாரங்களில் கூலிகளுக்கிடையே வேறுபாடு பெருமளவு அதிகரிக்கிறது. இது ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரிக்க இரண்டு வேறுபட்ட வழிகளை வழங்குகின்றது:
(1) உற்பத்தி நிகழ்முறைகளை குறைகூலி நாடுகளுக்கு மாற்றி, அதன் அனைத்துக் கட்டங்களிலும் குறைகூலி தொழிலாளர்கள் மீதான சுரண்டுதலை விரிவுபடுத்துவது
(2) “சொந்த நாட்டில்” குறைகூலி புலம் பெயர் தொழிலாளர்களை அதீத சுரண்டலுக்கு உள்ளாக்குவது.

ஐ.எம்.எஃப்-ன் “உலகப் பொருளாதார கண்ணோட்டம் 2007” இந்தத் தொடர்பை “வளர்ந்த பொருளாதாரங்கள் சர்வதேச தொழிலாளர் படையை இறக்குமதி மூலமாகவோ, புலம் பெயர்தல் மூலமாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று கூர்மையாக முன்வைக்கிறது. மேலும், “நாடு விட்டு நாடு புலம் பெயர்தல் பல நாடுகளில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், வர்த்தகம்தான் ஒப்பீட்டளவில் முக்கியமான, வேகமாக விரிவடையும் பாதையாக உள்ளது.” என்பதை சுட்டிக் காட்டுகிறது26. மார்கன் ஸ்டான்லியைச் சேர்ந்த மூத்த பொருளாதாராவியல் நிபுணர் ஸ்டீபன் ரோச், இந்த புதிய தாராளவாத உலகமயமாக்கலை இயக்கும் உந்து சக்தி எது என்பதை, பொதுவில் அரிதாகவே காணக் கிடைக்கும் கூர்மையான வடிவில் வெளிப்படுத்துகிறார்: “மிகை உற்பத்தி சகாப்தத்தில் முன்னெப்போதும் இல்லாத முறையில் நிறுவனங்கள் தமது பொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கும் சக்தியை இழந்திருக்கின்றன. எனவே, அவை புதிய திறன் மேம்படுத்தல்களை (அதாவது குறைகூலி உற்பத்தி முறைகளை) தேடுவதில் விடாப்பிடியாக இருக்க வேண்டும். வளரும் நாடுகளின் குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து மதிப்பைக் கறக்கும் அயலக உற்பத்தி முறை மூலமாகத்தான் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலைமை மேலும் மேலும் வலுப்பெறுகிறது.27

18. Karen St Jean-Kufuor, Coffee Value Chain, 2002, http://maketradefair.com.
19. Denis Seudieu, Coffee Value Chain in Selected Importing Countries, International Coffee Council, March 2011, http://dev.ico.org . The nine coffee-importing countries are France, Germany, Italy, Japan, Netherlands, Spain, Sweden, United Kingdom, and the United States.
20. Galina Hale and Bart Hobijn calculate that “on average, of every dollar spent on an item labelled ‘Made in China’, 55 cents go for services produced in the United States.” See their “The U.S. Content of ‘Made in China’,” FRBSF Economic Letter, Federal Reserve Bank of San Francisco, August 8, 2011, http://frbsf.org.
21. The twenty-three nations are Argentina, Bangladesh, Brazil, China (including Hong Kong), Egypt, India, Indonesia, Malaysia, Malta, Mauritius, Mexico, Morocco, Pakistan, Philippines, Singapore, South Africa, South Korea, Sri Lanka, Taiwan, Thailand, Tunisia, Turkey, and Vietnam. See Table 4.4 “Structure of Merchandise Exports” in World Bank, World Development Indicators 2006 (Washington, DC: Development Data Center, World Bank, 2006), http://books.google.co.uk.
22. The ILO reports that “Women make up the majority of workers in the vast majority of zones, reaching up to 90% in some of them.” Employment and Social Policy in Respect of Export Processing Zones (EPZs) (ILO: Geneva, March 2003), http://ilo.org, 6.
23. To put this in perspective, 150 million industrial workers were employed in the Triad countries. See “EPZ Employment Statistics” in Jean-Pierre Singa Boyenge, ILO Database on Export Processing Zones (Revised), Sectoral Activities Programme Working Paper WP.251, April 2007, http://ilo.org, 1.
24. Gary Gereffi, The New Offshoring of Jobs and Global Development, ILO Social Policy Lectures (Geneva: ILO Publications, 2006), 5.
25. John Bellamy Foster, Harry Magdoff, and Robert W. McChesney, “The Stagnation of Employment,” Monthly Review 55, no. 11 (April 2004): 11.
26. IMF, World Economic Outlook 2007—Spillovers and Cycles in the Global Economy, International Monetary Fund, Washington, D.C, 2007, http://imf.org,180.
27. Stephen Roach, Outsourcing, Protectionism, and the Global Labor Arbitrage, Morgan Stanley Special Economic Study, November 11, 2003, http://neogroup.com, 5–6.

(தொடரும் …)

முந்தைய பாகங்கள்:

  1. ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
  2. ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?
  3. ஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா – ஜெர்மனி !

மொழிபெயர்ப்பு : குமார்
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review

நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க