றுபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் உயர்கல்வி அமைப்பான யூ.ஜி.சி. (UGC) என்ற பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க முன்வரைவுச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம். இதன் மூலம் பெரும்பான்மை மாணவர்களின் உயர் கல்வி கற்கும் வாய்ப்பை அடியோடு ஒழித்துக்கட்ட முடிவு செய்துவிட்டது மோடி அரசு.

நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் 1956 –இல் நாடாளுமன்ற சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுதான் பல்கலைக்கழக மானியக்குழு. புதிய பல்கலைக்கழகங்களை, உயர்கல்வி நிறுவனங்களை எந்தவொரு மாநிலத்தில் தொடங்குவதற்கும் 60% நிதி உதவி செய்து வருகிறது யூ.ஜி.சி. இதுமட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து நிதி உதவியும் செய்கிறது. பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கும் இந்த நிதி உதவி கிடைக்கும். கல்வியாளர்களை அதிகப்படியாக கொண்ட யூ.ஜி.சி, உயர்கல்வி நிறுவனங்களை நேரடி ஆய்வுகள் மூலம் மதிப்பீடு செய்து தரத்தை உத்திரவாதப்படுத்தும் கடமையும், பொறுப்பும் கொண்ட தன்னாட்சி பெற்ற  அமைப்பு. இதனால்தான் அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளால் கடந்த காலங்களில் தரமான கல்வியை கொடுக்க முடிந்தது.

அரிகவுதம், முன்னாள் யூ.ஜி.சி தலைவர்.

கல்வியில் தனியார்மயத்தை புகுத்தி வியாபாரமாக்கப்பட்ட பின்பு, யூ.ஜி.சி யை இடையூறாக பார்க்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். 18 ஆண்டுகளுக்கு முன்பே யூ.ஜி.சி யை கலைத்துவிட முயன்றது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பி.ஜே.பி அரசு. 2000 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் உயர் கல்வி சீர்திருத்தத்திற்காக கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா – அம்பானி தலைமையில் குழு அமைத்தார்கள். அந்தக் குழு “உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூ.ஜி.சி நிதி வழங்கக் கூடாது, கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியோடு அந்தந்த பல்கலைக்கழகங்களே நிதி திரட்டிக்கொள்ள வேண்டும்’’ என்று யூ.ஜி.சி யை கலைக்க தூபம் போட்டது. மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததும் 2015-இல் முன்னாள் யூ.ஜி.சி தலைவர் அரிகவுதம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு யூ.ஜி.சியை கலைத்துவிட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிக்கை கொடுத்தது. அதனடிப்படையில்தான் இன்று மோடி அரசு யூ.ஜி.சி யை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை ஏற்படுத்த சட்டம் கொண்டு வருகிறது. நம் கையை முறித்து நமக்கே சூப் வைத்து தருகிறார்கள்.

’தரத்தை’ உயர்த்தவே உயர்கல்வி ஆணையம் கொண்டுவரப்படுகிறது என்கிறார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர். இதே காரணத்தைச் சொல்லி கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தரத்தின் லட்சணம் என்ன? தனியார்பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரம் என்ன? பல நிர்மலாதேவிகளையும், மோசடி செய்ததற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட செல்லதுரை போன்ற கிரிமினல் துணைவேந்தர்களையும்தான் உருவாக்க முடியுமே தவிர வேறெதையும் கிழிக்க முடியாது. உன்னதமான சேவையான கல்வியை இலாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். இலஞ்சம், ஊழல், முறைகேடு என ஒட்டுமொத்த கல்வித்துறையும் கிரிமினல் மாஃபியாக்கள் பிடியில் சிக்கியிருக்கிறது. இவர்களால் எப்படி தரமான கல்வியை தரமுடியும்? இதை நம்ப நாம் என்ன கேனைகளா?

ஜவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

கல்வியின் மீதான மாநில அரசுகளின் உரிமையை முழுமையாக பறித்து மையப்படுத்துவது. அதை அப்படியே கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பது. இது தான் மோடி அரசின் மாஸ்டர் பிளான். இதை செய்வதற்கான அமைப்புதான் உயர் கல்வி ஆணையம்.

உயர்கல்வி ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 8 பேர்  மத்திய அரசு உயரதிகாரிகள். இதன் தலைவர் அதிகாரிகளால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் வெளிநாடுவாழ் இந்தியராகவும் இருக்கலாம். அப்படியென்றால், கொலைகார ஸ்டெர்லைட்டின் அனில் அகர்வால்கூட இதன் தலைவராகலாம். ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தையும் மூடும் அதிகாரம் ஆணையத்திற்கு உண்டு. அரசு செலவீனங்களை குறைப்பது என்ற பெயரில் அரசு உயர்கல்வி நிறுவனங்களை எல்லாம் நிச்சயமாக மூடி விடுவார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களை நடத்துவார்கள்.

பல நூறு அரசு பல்கலைக்கழகங்களுக்கும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும், ஐ.ஐ.டி-க்கள், ஐ.ஐ.எம்-களை நடத்துவதற்கும் நிதியை நீங்களே கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என தன்னாட்சியாக்கப்படுகின்றன. ஆனால், இன்னும் ஒரு செங்கல்லைக்கூட வைத்து கட்டப்படாத, வெறும் பேப்பரில் மட்டும் பிளானாக இருக்கும் அம்பானியின் ’ஜியோ பல்கலைக்கழகத்திற்கு’ மேன்மைதகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கி 5 ஆயிரம் கோடியை அள்ளிக்கொடுக்கிறார் மோடி.

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அரசு இதுவரை வழங்கி வந்த ஸ்காலர்ஷிப் (அரசாணை.92 அடிப்படையிலானது) நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்காலர்ஷிப் குறைக்கப்படுகிறது. இவைகளெல்லாம் உயர்கல்வியை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஒழித்துக்கட்டுவதன் வெளிப்பாடுகள்தான். ஏற்கனவே நீட் தேர்வை திணித்து மருத்துக்கல்வியை பறித்துக்கொண்டார்கள். பொறியியல் கல்வியும் இல்லை, ஏதாவது ஒரு டிகிரியை வாங்கி முன்னேறிவிடலாம் என நினைக்கும் ஏழை – நடுத்தர வர்க்க மாணவனின் கனவையும் அடித்து நொறுக்குகிறார்கள். தனியார்பள்ளியில் என்னதான் செலவு செய்து படித்தாலும் இனி +2 தாண்ட முடியாது.

ஒருபக்கம், உயர்கல்வியை கார்ப்பரேட் கழுகுகள் சூறையாடப்போகிறார்கள். இன்னொரு பக்கம், தரத்தின் பெயரால் பணக்கார மேட்டுக்குடிகளான ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் உயர்கல்வி, ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரான பெரும்பான்மையினருக்கு உயர்கல்வியை மறுப்பது சட்டப்பூர்வமாகப்போகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்? ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவராமல் போனதன் விளைவை இன்று நம் மாணவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டுமொரு அநீதியை சகித்துக்கொண்டு செல்லக்கூடாது. கலை, அறிவியல் கல்லூரி, சட்டம், பொறியியல், மருத்துவம், பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒன்றுசேர்வோம். பேராசிரியர்கள், பெற்றோர்களையும் ஒன்றிணைப்போம். கல்வி கற்கும் உரிமையை பறிக்கும் உயர்கல்வி ஆணைய முன்வரைவு சட்டத்தை தகர்க்கும் முன்னுதாரணமான களமாக தமிழகத்தை மாற்றுவோம்.

 கண்டன ஆர்ப்பாட்டம்

ஜூலை 25, 2018 காலை 11 மணி,                        வள்ளுவர்கோட்டம்.

தலைமை:

தோழர்.வா.சாரதி,
மாநகர செயலர், பு.மா.இ.மு.,சென்னை.

கண்டன உரை:

பேரா.ப.சிவக்குமார்,
முன்னாள் முதல்வர், குடியாத்தம் அரசுக்கல்லூரி.

பேரா.அ.கருணானந்தன்,
வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்,
விவேகானந்தா கல்லூரி.

தோழர். தினேஷ்,
மாநில செயலாளர்,
அகில இந்திய மாணவர் பெருமன்றம்.

தோழர்.பிரின்ஸ் என்னாரசு பெரியார்,
மாநில செயலாளர்,
திராவிடர் கழக மாணவரனி.

வழக்கறிஞர்.தோழர்.கு.பாரதி,
செயலாளர்,
ஜனநாயக வழக்கரிஞர்கள் சங்கம்.

பேரா.சாந்தி,

தோழர்.த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

தகவல்:

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை -95, 94451 12675.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க